Wednesday, May 9, 2018

அம்புப் படுக்கை - டேவிட் வாசிப்பு - 2

(நண்பர் டேவிட் அனுப்பிய வாசிப்பு. சென்ற பதிவின் தொடர்ச்சி)

பொன் முகத்தை பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்::

மெல்ல மெல்ல தன் இருப்பிற்கான அவசியம் மறைந்துகொண்டே வரும்போது ஏற்படும் பயம் ,இல்லை இப்ப தேவையில்லை என்று உணர்த்தப்ப்படும்போது ஏற்படும் வெறுமை ,
இதிலிருந்து விடுதலை செய்து, நமக்கென்று உள்ள இடத்தை உறுதி செய்து கொடுப்பவரை கண்ணீர் மல்க நன்றியுடன் பார்ப்போமே ,
அப்படித்தான் அறுபது வயது நாவன்னா லேனாவுக்கு, ஆறுமாத பேத்தி வள்ளியால் இப்படி ஒரு இடம் கிடைக்கிறது.ஷ்ரத்தா என்று டாடி மம்மியால் அழைக்கப்படும் ,ஆனால் ஆச்சியின் பெயர் சூட்டப்பட்ட வள்ளி எனும் ஷ்ரத்தா.

நவீன பிரச்சனைகளில் ஒன்று , பெரியவர்கள் குழந்தைகள் பீத்துணி மாற்றவும்,அவர்களுக்கும் வீட்டிற்கும் காவலாகவும் இருக்க வைக்கப்பட்டு போவது.  வயதான பின்பு மகனை நம்பி வாழும்,அதுவும் கணவனை இழந்த தாய் அல்லது மனைவியை இழந்த தந்தையின் அடையாளச்சிக்கல், வழி சொல்லி விட முடியாத பாதை. ஆனால் அடிப்படையான மனித உணர்வு , மரத்துப்போன சுயநலமிக்க செயல்களை தனது மகன், மகள் செய்யும்போது, அதில் பாதிக்கப்படும் அப்பா, எதுவும் செய்ய முடியாத நிலையில் எதிர்வினை ஆற்ற முடியாத உயிரின் நிலையில் மட்டுமே வாழமுடியும்.
கதைக்கு வருவோம்.

இங்கு பேத்தி பிறந்ததிலிருந்து கூடவே இருந்து பார்த்துக்கொள்ளும் அப்பா. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் நிலை.
பாட்டு பாடி பாட்டு பாடி வள்ளியை தூங்க வைக்கும் தாத்தா , பாட்டின் ஒரு சில வரிகளை மாற்றிப்போட்டு , சொந்தமான பாடலில் ராகம் போட்டு பாடி தூங்க வைக்கிறார்.

விசுவாசம் என்னும் வார்த்தையை யார் உபயோகப்படுத்துகிறார், யாரிடம் உபயோகப்படுத்துகிறார் என்பதை பொறுத்து அதன் மதிப்பு மாறுபடுகிறது.
பொதுவாக இதற்கு முந்தைய தலைமுறை வரை , தான் வேலை செய்யும் இடத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளும் , பொருட்களும் , மறந்து போன சின்ன சின்ன செயலும் அதன் விளைவுகளும் , எல்லாவற்றிலும் முக்கியமாக ஒரு மரியாதையான வாழ்க்கை ஏற்பட உதவிய முதலாளி என்பவரின் மீது நினைவுகள் எப்போதும் எண்ணங்களுக்குள் சுழன்றபடி இருக்கிறது அது விசுவாசம் என்ற பெயருடன் சொல்லப்படுகிறது.

வாழ்க்கையின் சிரமமான பகுதியில், வறுமையில் இருந்து மீண்டு மூன்று வேளை சாப்பிடவும் , குடும்பம் என ஒன்றை ஏற்படுத்தவும் உதவியாக இருக்கும், நியாயமான முதலாளி என்பவரை நன்றியுடன் நினைக்கும் நியாயமான மனசு வாய்த்தவரை சந்திப்பதே மிகவும் குளிர்ச்சியான , நிகழ்வு.

அப்படிப்பட்டவர் நாவன்னா லேனா .
தன முதலாளியை , அவர் உடல் நிலை சரியில்லாததை கேள்விப்பட்டு , ஊருக்கு போய் பார்க்க நினைக்கிறார். இவர் போய் பார்ப்பதை அவரால்  அறியக்கூட முடியாத நிலை அவருக்கு. ஆனாலும் அவர் இறப்பிற்கு முன் போய் பார்க்க வேண்டும் என்பது நாவன்னா வின் விருப்பம். இந்த இரண்டு நிலைகளை மட்டும் பார்ப்போம். இவைதான் இந்ந்த சிறுகதையின் முரண். இதுதான் ரொம்ப எளிமையான , இதிலென்ன என்று கடந்து போய் விடும் மனநிலையை  நிறுத்தி வைத்து , இலக்கிய தரத்தை ஏற்படுத்துகிறது.இந்த முரண் , 

நிலை ஒன்று 
அதாவது தன் மகனிடம் , மனைவி இறந்த பிறகு , சார்ந்து வாழும் நிலை, அதுவும் தன குழந்தையை பராமரிக்க அவர் தேவை என்ற நிலையில் வாழும் மனிதர். அவருக்கு வேறு வழியில்லை. மகனோடுதான் இருக்க முடியும். ஆதரவற்றவர். ஆனால் வள்ளியை பார்த்துக்கொள்வதின் மூலம் இன்றியமையாத ஒருவராக தன்னை மாற்றிக் கொள்கிறார்.அதன் வழியே தன்னுடைய சுய மரியாதையை, இருப்பை காப்பாற்றிக்கொள்கிறார்.

நிலை இரண்டு
இவ்வளவு நாள் தனக்கு சோறு போட்ட முதலாளி , சாக கிடக்கிறார் என்ற செய்தி , ஒருமுறை அவரைப் போய் பார்க்க நினைக்க வைக்கிறது. உந்தி தள்ளுகிறது. இரண்டு நாள் கழித்து போகலாமே என்ற மகனின் வார்த்தை அவர்களுடைய வசதியை பொறுத்து என்பதை தாண்டி, உடனே ஊருக்கு போக வேண்டும் , முதலாளியை பார்க்க வேண்டும் என நினைக்கிறது. இது தன்னுடைய சார்பு நிலையையும் மீறி , தான் ஊருக்கு போவதால் ஏற்படும் தன நிலை மீதான அபாயத்தின், நிலையில்லா தன்மையையும் மீறி ,
போய் பார்க்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார்.அது அறம் சார்ந்த முற்றிலும் சுயமான முடிவு.

இந்த இரண்டு நிலைகளுமே இந்த சிறுகதையின் அழகு.

இந்த முரண்பாடு., அறத்தின் மீது கட்டமைக்கப்பட்டு உள்ளதாலேயே இந்த சிறுகதை முக்கியத்துவம் பெறுகிறது.

சாதாரணமான சூழல்தான், இது தரும் பாதை நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்ற சிந்தனையை தூண்டாவிடில் , நாமும் நாவன்னாவின் மகன்களே.

மற்றபடி,

ஐநூறு ரூபா போனை கையோடு கொண்டு போகச் சொன்னான் நானா.

“அவசர அவசரமா இப்படி விழுந்தடிச்சு வரணுமா என்ன? இன்னும் ரெண்டுநாள் இருந்திட்டு திங்ககிழமை வந்திருக்கலாமே”

எந்த பொம்மையும் வள்ளி ஒரு வாரத்திற்கு மேல் திரும்பிக்கூட பார்த்ததில்லை.தான் இத்தனை மாதம் தாக்கு பிடித்ததே அதிசயம் என எண்ணிக்கொண்டார். 

மேனாட்டு கக்கூசில் உட்கார்ந்து கொண்டு , கண்களில் நீர் கோர்க்க , பேச்சு வராமல் , இவருக்கு முன் இறந்த மனைவியை நினைத்துப் பார்க்கும் மனிதன். 

மேல் சொன்ன வரிகளும், கக்கூஸ் காட்சியும் யாரையும் உலுக்கிப் போடும்.

உணர்வுள்ள மனிதர்கள் ஆக ஆக்கும் , இந்த “பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும் “ 

முரண்களால் ஆன வாழ்வில் , எந்த பாதையை எப்படி தேர்வு செய்கிறோம் என்பதை பொறுத்து மனிதம் வாழ்கிறது. மனிதம் என்பது அவரவர் மனசு என்பதும் , மனசுபோல செயல், செயல் போல வாழ்க்கை என்பதும்,

சுனீல் கிருஷ்ணன் சொல்கிறார்.

அம்புப் படுக்கை

புத்தக தலைப்பின் சிறுகதை. மரணக் குறிகளில் தேர்ந்த தாத்தா ,நாடி பார்த்து வைத்தியம் சொல்லும் தலைமுறையின், ஆயுர்வேதம் படித்த சுனீல் கிருஷ்ணன் இல்லை இல்லை சுதர்சன், வாழ்வின் மீது ஏற்படும் பெரும் விழைவும்,வாஞ்சையும் ஒரு பக்கம் , வாழ்வின் மீதான பிடிப்பை ஒவ்வொரு விரலாக நெகிழ்த்தி வாழ்வை கை விடச்செய்ய வைக்கும் வெளிப்புற நிகழ்வுகள், மறு பக்கம், எனும் நிலையில் வாழ்வின் நினைவுகளை மீட்டியபடி , விடை தேட முனைபவராக ஆனா ரூனா செட்டியார் இருக்கிறார்.

பர்மாவில் சேர்த்த பொருளை பத்திரமாக , கொண்டு வந்து சேர்த்தவர்.தன்  வயதை விட மிக குறைவான பர்மீய ஆச்சியையும் இந்தியா கொண்டு வந்து சேர்த்தி , பாத்திரக்கடை வைத்து செழிப்புடன் வாழ்ந்தவர்.

சுதர்சனுடைய  தாத்தாவிடம் பல வகைகளில் மரண அபாயத்தில் இருந்து  தான் தப்பித்த கதைகள் சொல்பவர்.

நம்மள குறி வச்சிகிட்டே இருக்கு.. எப்படியோ ஆறுமுகசாமி அருளால இம்புட்டு நாளா இன்னும் தல தப்பி இருக்கேன் என்பதும், அந்தளவுக்கு எல்லாம் இல்ல,குத்துமதிப்பா அம்பு மாரி தான்...முடிவு பண்ணியாச்சுன்னா அவ்ளவ்தான். மத்தபடி ஒவ்வொரு நாளும் எல்லோருக்கும் இதே கதைதான்..என்று தாத்தா பதில் வைத்தார்.ஆனால் இது அன்றாட வாழ்வின் எல்லோருக்குமான கதை இது.

இதோ தலை போயிருக்கும் , புத்திசாலித்தனத்தால தப்பிச்சேன் என்பதும்,கொஞ்சம் லேட் ஆகியிருந்தா என் பொணத்தை தான் பார்த்திருப்பே என்று பெருமை பேசுவதும், தொண்டைக் குழியிலேயே நிற்கிறது. உனக்கு நேரம் வரல தம்பி னு சொல்லலாம்.ஆனா அப்படியும் முழுசா சொல்லிட்டு உட்கார்ந்துட முடியாது. வலியை குறைத்து , வலியை தவிர்த்து என்பதே சரின்னு நினைக்கிறேன். ஆனாலும் மரணம் என்பது தவிர்க்க முடியாதது.தவிர்க்க போராடுவது இயல்பு.இயல்பிலேயே அதிக போராட்டம் மரணத்துக்கு எதிராக நிகழ்த்திய ஆனா ரூனா செட்டியார் ,

அவ்வளவு  சீக்கிரம் மூச்சை நிறுத்தவில்லை. மகன் போனில் நான்கு நாளில் காரியம் எல்லாம் முடிந்து திரும்பி விடுவேன் என யாருக்கு வேற்று உறுதி தருகிறான்.மற்ற உறவு எல்லாம் காத்திருக்கிறது, ஆனா ரூனாவின் காரியத்திற்கு. மனதுக்குள் சொல்லிப் பார்த்துக்க்கொள்கிறான்,

“வாதம், பித்தம், கபம் - ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல்”  என்று ஆயுத பூஜைக்கு ஆயுர்வேத கல்லூரியில் சேர்ந்து ,தீபாவளிக்கு லீவில் வந்திருக்கும் சுதர்சன்.  ஆனா ரூனாவின் நாடி அலையை போல எழுகிறது நீண்ட நேரத்திற்கு பிறகு,சீக்கிரம் இறந்து விடுவார் என்பதை தெரிந்தாலும் சுதர்சன் ஆனா ரூனா விடமும் ,சொந்தங்களிடமும் போய் சொல்லுகிறார்.
ஒன்று ஆனா ரூனா வின் எதிர்ப்பு சக்தியை,பாராட்டும் வகையில் பதிலை  தந்ததால், எந்த பாதிப்பும் இல்லை என்ற நினைப்பில் , பூரிப்பில் மூச்சை நிறுத்தி விடுகிறார். இங்கு சுதர்சன் தந்திரவாதி .

இரண்டு
நாடி பார்த்து மரணக்குறி சொல்லும் பழக்கத்தை எதிர்க்கும் மனது அவனுடையது.எல்லோரும் சூழ்ந்து நின்று உயிரின் பிரிவை எதிர் நோக்கும் போது, அந்த வீரியமான உயிர் இன்னும் வீம்போடு இழுத்துப் பிடித்துக்கொண்டு இருக்கிறது. தன்னுடைய பொய்யால் , அவர்களின் மரணக்குறி நம்பிக்கையையும் உடைக்கிறார். இங்கும் சுதர்சன் தந்திரவாதி.
இப்படி சொன்னால் அது ஆனா ரூனாவின் சிந்தனைப்படி இருக்கும். இப்படி சொன்னால் அது ஆனா ரூனாவின் சிந்தனைப்படி இருக்கும்.\ வாழ்நாள் முழுதும் , தான் ஏமாற்றி வந்ததாக நினைத்துக் கொண்டிருக்கும், அந்த சாவை , ஏமாற்றி அவரிடம் தந்துவிட்டான் சுதர்சன். ஆனால் சுதர்சன் மனசுப்படி, அவனுடைய தாத்தா சொல்வதுதான் சரி. அம்பு மாரி வரும்போது நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இங்கு சுதர்சனும் ஒரு அம்புதான். இறுதி அம்பு. எப்போதும் தத்துவம் ஒன்று இலக்கியத்துக்குள் பொதிந்து வரும்.
அம்புப்படுக்கை ஆரம்பம் முதல் சாவு தத்துவம் சொல்கிறது. 

குருதிச் சோறு

பழைய,மருவி வந்த செவி வழி அன்னபூரணிக் கதை. அதற்கு ஆதாரமாக  இருக்கும் பதினோரு கருமையான வழவழப்பான கற்கள். குருதிச் சோறு படைக்கப்படும் காளியம்மன் திருவிழா. மேற்சொன்ன கதையை காளியம்மன் திருவிழாவின் கடைசி நாள் பிராமண பாட்டி சொல்லும் வழக்கம். அரசர் காலத்தில் நடந்த அறம் மறந்த ராஜாவின், வறுமைக்காலத்தில் பசியை போக்கிய அன்னபூரணி, தனது பத்து குழந்தைகளையும் தந்து மக்கள் அனைவரின் பசி போக்கிய தெய்வம் அவள்.
அப்புறம்  புதுக்கோட்டை மகராஜா காலத்தில் , வறுமை வறுமை அப்படி ஒரு வறுமை, இறப்பை மீறிய பசி .அரிசி திருடி பசி போக்கியவளை குடிசையோடு,குழந்தைகளோடு கொளுத்திய கதை. பஞ்சம்.புதுக்கோட்டை.நல்லவளின் சாபம்.

இது ஒரு பக்கம் .,அப்புறம் அவளுக்கு குருதிச் சோறு படைத்து , அவளுடைய பசியை போக்கும் நடை முறை. யாருமே எக்காலத்திலும் மறந்து போக கூடாத ,வழமையாக தலைமுறைகளுக்கு சொல்லி வளர்க்கப்படும் திருவிழா நேர்த்திக்கடன். அன்னபூரணிக் கதையின் காளியம்மன் பற்றியும் ,பிள்ளைக்கறி பற்றியும் உள்ள தொடர்பு , தத்துவார்த்தமானது. அறம் போதனை செய்கிறது. திருவள்ளுவரும் அழகாக சொல்லியிருக்கிறார்.
ஏனென்றால் எல்லோருக்கும் பொதுவாக கொடுமையான பஞ்ச கால கட்டம், குடிகளை அழித்து ஒழித்திருக்கிறது. சுனீல் கிருஷ்ணன் இதை ஒரு மர்மக்கதை போல எழுதினாலும் , குருதிச் சோறு நல்ல குறும்படத்திற்கான அத்தனை அம்சங்களும் உடைய  அறம் சார்ந்த நம்பிக்கையை தரும் கதை. 


காளிங்க நர்த்தனம்.

வைணவ கதைகளில் ஒன்று காளிங்க நர்த்தனம். காளிங்கன் என்பது ஐந்து தலை நாகம் , அதை வெற்றி கொண்டு கிருஷ்ணன் அதன் தலை மேல் ஆடிய நடனம் காளிங்க நர்த்தனம். ரொம்ப எளிமையான இதன் தத்துவம் முன்னோர்களின் அனுபவ குறிப்பு. கண்-பார்வை , காது-கேட்டல் , மூக்கு- நுகர்தல் , வாய்- பேசுதல் ,கைகளும்கால்களும் – தொடுதல் என விளக்க வேண்டியதில்லை என்றாலும்... ஒருவர் ஐந்து புலன்களும் அடக்கி ஆள வேண்டும்.

காந்தியின் குரங்குகள் நினைவுக்கு வராமல் இருக்காது. அவரும் ராம் தான். காந்தி ராம்.  மனம் என்பது பாம்பு.சும்மா நெளிந்து நெளிந்து அலை பாய்ந்து கொண்டே இருக்கும் , இந்த ஃபேஸ்புக் காலத்தில் மனசும் பாம்பும் ஒண்ணுனு சொன்னா சுலபமா புரிஞ்சுடும்.

இந்த ஐந்து வகை புலன்களும் தொடர்பு  கொண்ட மனப்பாம்பு , தலைகளை தட்டி வைத்து அடக்கி வைக்க தெரிந்திருக்க வேண்டும்.இல்லன்னா கிருஷ்ணர் மாதிரி யாரவது வந்து கட்டுப்பாட்டிற்கு இல்லாத புலன்களை தட்டி வைப்பார்கள்.

அதனால்தான் அலை பாயுதே கண்ணா என , அவரை வந்து நர்த்தனம் ஆடி அடக்கி வைக்க கூப்பிடுகிறார்கள். இசையில் காலிங்க நர்த்தன தில்லானா என்று ஒன்றும் வைத்திருக்கிறார்கள்.யமுனா நதியில் அழிச்சாட்டியம் பண்ணிய , காளிங்கனை அடக்கிய கண்ணனே வா என்று அதில் வரும்...கேட்க நல்லா இருக்கும். ஒரு கோபமான , கேட்கும்போதே ஆட வேண்டும்போல இருக்கும். 

சரி போதும் புராணங்கள் ,
அப்புறம் பதஞ்சலி முனிவர் பற்றியும் சொல்லணும். அவர் பாணினி மொழியில், யோகா , மருத்துவம் , இலக்கணம் வகுத்து கொடுத்திருக்கிறார் . இரண்டு நாக பாம்புகளுக்கு மேல் உட்கார்ந்திருக்கும் சிலைகள் கோவிலில் இருக்கும். பனிரெண்டு சைவ சித்தர்களில் ஒருவர். அவரைப்போன்ற சித்தர் முறுக்குசாமி ,அரியக்குடி ஊத்துக்கோட்டை கோவிலில் இருக்கிறார்.

கோவிலுக்கு சென்றால் அவர் பேசுவதை கேட்காமல் ,ஞானச்சிதறலை கேட்காமல், திரும்பாத மாணிக்கம்.,தானும் ஒரு நாள் விஷ காய்ச்சலில் விழுகிறான். ஏனென்றால் அது பரம்பரை சாபம். இவ்வளவுதான் கதை.

ஆனால், நாக தோஷம் என்னும் பேச்சு ,தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் தண்டனையாகவே இருக்கிறது. மாணிக்கம் என்னும் பெயரே , பாம்பின் வாயிலிருந்து அதன் விஷம் காத்து அதனால் உருவாகும் கல் என்று தானே சொல்கிறோம். அப்படித்தான் இந்த கதை நாயகன் மாணிக்கம் கூட குற்றம் குறை இல்லாதவன். ஆனால் அவனையும் சாபம் விடவில்லை. 

இது உண்மையா, மாணிக்கத்தின் பூட்டி செய்த தவறுக்கு ,முப்பாட்டன் செய்த தவறுக்கெல்லாமா இப்ப தண்டனை வரும்...ஆம்மாம்...என்கிறார் சுனீல் கிருஷ்ணன். அறிவியலாக புரிந்து கொள்ள முற்சி செய்யலாம், தன மன பாம்பை அடக்கி ஆள தவறிய, ஏதோ ஒரு புலன்களின் தூண்டுதலால் மீளாத்தவறு செய்த முன்னோர் , ஜீன் இப்போதும் நமக்குள் ஒளிந்திருக்கிறது.
அது வெளியே வரும். கண்ணன் போல ஏதோ ஒன்றின் மூலம் தண்டிக்கப்படும்...ஆமா...மாணிக்கம் மாதிரி விஷம் உபயோகப் படுத்தாத , உயர்ந்த கல்லுக்கு ஏன்?

அதுக்கு விளக்கம் தெரியல..எனக்கு சாபம்னு சொல்லிட்டு போறத தவிர..அப்படித்தான் நடக்கிறது என ஜோதிட சாஸ்திரம் கூட சொல்கிறது.இதில் உண்மையில்லை என்றெல்லாம் சொல்ல முடியவில்லை.முழுக்க கட்டுக்கதை என்று ஒதுக்க முடியவில்லை.
ஏதோ இருக்கு ...,எனக்கு தெரியல. 



வாசுதேவன்

தொகுப்பின் முதல் கதை.

வெறும் எலும்புகளுக்கு மேல் யாரோ தோலை உருக்கி ஊற்றியது போல வாசுதேவன்,மண்டையில் முடி ஒட்ட வெட்டி, வலது பக்க மண்டையோட்டின் ஒரு பகுதி இல்லாமல்,பள்ளத்தாக்கு போல இருக்கும் ஏறக்குறைய சாவின் விளிம்பில்.,உயிருள்ள பிணம்.ஆக்ஸிடென்ட் ல் தலையில் அடி நான்கு வருடங்களாக கட்டில் பிணம்.

அங்கு ஆயுர்வேத பேராசிரியர் கொடுத்த சிகிச்சை முறைகள் படி தினமும் வாசுதேவனுக்கு மருத்துவம் செய்ய சென்ற இரண்டு ஆயுர்வேத மாணவர்கள்.அது கிழி,பிழிச்சல்,வஸ்தி,மூக்கு குழாய் வழியே தங்க பஸ்பம் என பல வகை சிகிச்சை முறைகள்.

முதல் நாள் முதல் டீ காபிக்கு பதில் பூஸ்ட் வாங்கி குடிக்கும் மாணவர்கள்.
பேராசிரியர் பணத்திற்காக செய்ய சொல்கிறார் என்பதை அறிந்தும் வாசுவின் மேல் அருவருப்புடன் சிகிச்சையை ஆரம்பிப்பவர்கள்,பத்து பதினோராவது நாள் கடந்த பிறகு அப்படி ஒன்றும் அருவருப்பாக வாசு அவர்களுக்கு தெரியவில்லை.

ஒரு நாளைக்கு ஆயுரத்தைநூறு செலவாக்கும் அப்பா அம்மாவின் முகம் பார்த்து, உண்மையை சொல்ல நினைத்து, வாசுவுக்கு எந்த வைத்தியமும் சரியா வரும்னு தோணலை, என்பதை கொஞ்சம் கொஞ்சமாக அம்மாவிடம் சொல்ல, இந்த சுத்து சிகிச்சை, ஒரு மாதமாக செய்ததுடன் முடித்து கொள்வதாக அப்பா சொல்ல வெளியேறுகிறார்கள்,அதே நாள்,

கணவன் ஆர்மியில் இருந்து இறந்துவிட்ட , வாசுவின் சகோதரி குழந்தையுடன் வேலை மாற்றம் காரணாமாய் , வாசு வீட்டிற்கே வருகிறாள். 
மூன்றாம் நாள் வாசு இறந்து விட்ட செய்தி வருகிறது.  குழந்தை வைத்திருக்கும் பொம்மையின் கை கால்களை பிடுங்கி திருகி கழுத்தை திருகி விளையாடிக் கொண்டிருக்கிறது. என்று முடிக்கிறார்.  

சரியா, இப்ப வண்ணநிலவனுடைய எஸ்தர் சிறுகதையையும் வாசித்துவிடுங்கள். இரண்டு பேரும் சொல்வது , கருணைக்கொலை பற்றியது. அந்த சூழல் , கடுமையான , திரும்பி வரவே முடியாத மரணப் பாதையில் , இருக்கும் நெருங்கிய உறவு , உயிர் பிரிய நாம் கண்ணை மூடிக்கொள்வது. இங்கு மாணவர் சுனீல் செய்ததும் அதுவேதான், அவரின் அன்பும் மெல்லிய மனதும் அந்த அம்மா அப்பாவின் செலவை தாண்டி, பொய்யான நம்பிக்கையை இந்த சிகிச்சை தருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதற்கு மேல், வாசுவுடன் அந்த குறைந்த நாட்களில் ஏற்படும் உறவு, உயிர் படும் வதை, உயிர் இச்சை மட்டும் இருக்கும் வாசு, சுனீலின் கண்களில் எதையோ எதிர்பார்த்து பேச தேடும் , உணர்வை , சுனீல் புரிந்து கொள்கிறார்.
மனதோடு பேசவும் செய்கிறார். தன்னுடைய சிகிச்சை பற்றி நம்பிக்கை தருகிறார்.

ஆனால் சுனீலுக்கும் தெரிகிறது வாசுவுக்கும் புரிகிறது, வாசுவின் உடலில் எந்த முன்னேற்றமும் நடக்க போவது இல்லை என , வெறும் காசுக்காக ,சிகிச்சை அளிப்பதை வெறுக்கிறார் சுனீல். உண்மையை சொல்லிவிட்டு நகர்ந்து கொள்வது , ஒருவகையில் அந்த கடைசி நம்பிக்கையையும் ,கைவிடுவது போலத்தானே.வலியுடன் அதை கடக்கிறார்.

உண்மையிலேயே சுனீல் வாசுவின் மூச்சை நிறுத்திவிடுவதாக முதலில்  எழுதி இருப்பாரோ என, எனக்கொரு எண்ணமிருக்கிறது.பிறகு அவருடைய தொழிலுக்கு அது சரிப்பட்டு வராது என மாற்றி இருந்திருக்கலாம். பிறகு வாசுவின் சகோதரியின் குழந்தை மூலம், நடப்பதாகவே மறைமுகமாய் சொல்லி முடிக்கிறார்.

அழகான முரண் கருணைக்கொலையில் காலம் கடந்து எப்போதும் வாழ்கிறது.,வேறு வார்த்தைகள் தேடுகிறேன், அன்பின் அடிப்படையில் உயிரைப் பிரித்தல்னு வச்சுக்கலாம். முரண் , என்னன்னா , உயிர் பிரித்துவிடலாம் அல்லது மருத்தவத்தை நிறுத்திவிடலாம் எனும் முடிவை இந்த உலகத்திலேயே மிகவும் நேசிப்பவர்தான் எடுக்கிறார் , இப்போதைய நிலையை ,அந்த ஆன்மா படும் வதையை உணர்ந்தவர் மட்டுமே முடிவை எடுக்கிறார்.

உயிரின் மீது காட்டும் அன்பு எப்படி உயிரை பிரிக்கிறது என்பதுதான் , இதன் மையம். உயிர்த்தன்மை வாய்ந்தது அன்பு. அது பாதுகாக்கும், உணவு தரும், ஆறுதல் தரும், கோபப் படாது ,பொறாமை கொள்ளாது, தன்னை வருத்திக் கொள்ளும், மரியாதையை தரும், உணர்வுகளை சிந்தனை வழியே பேசிக்கொள்ளும்,

அது எப்படி ஒரு உயிரை பிரிக்கும்?
ஆம் அன்பு உயிரை பிரிக்கும் வேலையையும் செய்யும்.அந்த சூழ்நிலை மிகவும் துயரமானது, அன்பை பெறுபவர் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்வார்கள். அன்பை தருபவருக்கு , காலங்கள் சென்றாலும் அது மனதை விட்டு நீங்காது.ஒருவித குற்ற உணர்ச்சியுடன் இருப்பார்கள்.

உயிர் பிரியும் அந்த ஆன்மா அவர்களை விட்டு பிரியவே பிரியாது. இது ஏதோ ஆன்மீக கருத்து இல்லை, எண்ணங்கள் மூலம் , அந்த முடிவு தந்த வலி, மீண்டும் மீண்டும் சுற்றி சுற்றி வரும். நினைவுகளில் அன்புக்குரியவர் வாழ்ந்து கொண்டே இருப்பார். ஆன்மா மகிழ்வுடன் இருக்கும். அப்படித்தான் இந்த உணர்வு வாழும்.

அறம் சார்ந்த இந்த நிலைப்பாடு மிகவும் தனிப்பட்டதே தவிர யாராலும் பொதுமைப்படுத்திவிட முடியாது.சட்டங்கள் சில நாடுகளில் இருந்தாலும், உயிர் விடுதலை அளிப்பவர் உயர்வான அதே சமயம், மிகவும் பாரமான நிலையில் இருக்கிறார். இங்கு அந்த பாரத்தையும்,உயர்வையும் குழந்தையின் மேல் சுமத்தி விட்டு சுனீல் தப்பி விட்டார். குழந்தைதான் அந்த தெய்வம் என்று முடித்துவைக்கிறார்.

Tuesday, May 8, 2018

அம்புப் படுக்கை - டேவிட் வாசிப்பு

(நண்பர் டேவிட் நீயா நானா படப்பிடிப்பில் பழக்கமானவர். தற்போது தனியாக திரைப்படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறார். அம்புப் படுக்கை தொகுப்பை வாசித்து அதில் அவரைக் கவர்ந்த ஐந்து கதைகளைப் பற்றி எனக்கு தனித்தனியாக மடல் செய்தார். அவற்றை இங்கே ஒன்றாக தொகுத்து உள்ளேன். நன்றி டேவிட்)

ஆரோகணம் :;
அவரோகணத்தில் ஆரம்பிக்கிறேன்.
எந்த உயர்வையும் புனிதப்படுத்தாத நிலையில் இருந்து பார்க்கிறேன். ஒவ்வொரு முறை படித்து முடியும்போதும் சுனிலின் கதை தொகுப்பின் மையத்தைபற்றி வாசித்துவிட்டு வருகிறேன். சுவை கூடுகிறது.

காந்தியின் அம்புப்படுக்கை இது. அதாவது இறப்பின் கடைசி நிமிடங்கள் . அந்த சூழலில் என்ன நினைத்திருப்பார். வாழ்க்கை வாழ வேண்டுமென்றா இல்லை வேண்டாமென்றா என்ன நினைத்துகொண்டிருப்பார். இறந்த பிறகு எல்லோரும் சொல்வது போல அவர் சுவர்க்கத்திற்கு போயிருப்பாரா..
அங்கே அவருக்கென்ன வேலை?

அவர் நரகத்தில் இருப்பதையும் அங்கும் போய் பணிவிடை செய்வதையும்தான் விரும்புவார். அதுதான் காந்தி. எழுத்தாளன் வாசகனின் கவனத்தை கோருவது, இதுபோன்ற படைப்புகளில் தான். காந்தியின் கோட்பாடுகளை திரும்ப திரும்ப நினைவூட்ட வேண்டிய காலகட்டத்தில்
இருக்கிறோம்.
$
காந்தியின் கொள்ளுப்பேத்தி நீலம் பாரிக் எழுதிய புத்தகத்தின் மேற்கோள் வருகிறது. தன் மகன் ஹரிலாலுக்கு அநீதி செய்துவிட்டதாக நினைப்பார் என்பதும் , இங்கிலாந்து செல்ல அவரை அனுமதித்து, தன் அன்பை தன் கொள்கைகளை திணிக்காமல் இருந்திருக்கலாம் எனவும் , ஒரு
தலைவனின் மகன் அடையும் துன்பம் உணர்ந்தவராகவும் , கடைசி நிமிடங்களில் வருந்துகிறார்
காந்தி.
$
காலமும், தேசமும்,தொலைவும் எதுவும் அவருக்கு தெரியவில்லை.அவர் கண் முன் வெண் பனி கடல் இருப்பதாக சொல்கிறார் சுனீல்.
என்னவொரு சர்ரியலிஸ்டிக் கற்பனை.
காந்தி எந்த காலத்திற்கும் பொருத்தக்கூடியவர். காந்தி எல்லா தேசத்திற்கும் பொருந்தக்கூடியவர். காந்தி எல்லையில்லா தொலைவிற்கு உங்களை கூட்டி செல்வார். அவருக்கு அவர் கண்களுக்கு தெரிந்தது எல்லாம் தூய்மையானது மட்டுமே. அவர் பார்வை நல்லதையே பார்க்கிறது,நல்லதையே கேட்கிறது, நல்லதையே பேசுகிறது.
$
மனைவியை பற்றி நினைக்கிறார். காமம் பற்றியும் அன்னையாக பார்க்கிறேன் என்று சொன்னேனே என்றும் முரண்படுகிறார். இந்த மனசாட்சியே காந்தியின் அடையாளம். இந்த கேள்விகளும் அதன் பதில்களுமே அவர் நம் முன் உயர்ந்து நிற்க காரணம்.

மனைவி உயிரோடு இருந்திருந்தால் தன்னை காப்பாற்ற குறுக்கே வந்து விட்டிருப்பாள், என்பது சுகமான கற்பனை. காந்தி நினைத்திருப்பாரா தெரியாது. ஆனால் எழுத்தாளன் கூட்டிப்போகும் பாதை , காந்தி தன் மனைவியை நேசித்தார் என்பது, அன்னை தன் மகவை காப்பது போல காத்திருப்பார் என்பது, இறுதி மூச்சின் போதும் கஸ்தூரி பாயை நினைத்து பார்த்திருப்பார், என்பது.
$
ஒவ்வொரு வரிகளும் சர்ரியலிஸ்டிக் தன்மையுடன் வாசகன் கற்பனை செய்து பார்க்க தூண்டுகிறது.
“பனிச்சிகரத்தின் சரிவு மேலும் குறுகியது”
“வெண் பனிக்காட்டு பரப்பிலிருந்து துருத்திக்கொண்டு தனித்து உயர்ந்து நின்றது கறுத்த நெடுமரம்.”
$
மூளையின் செயல்பாடுகளைப் பற்றி ,மனிதன் அந்த நாகத்தை அடக்குவது பற்றி யோசிக்கிறார். உறக்கம் வராது போக வைக்கும் நிகழ்வுகள் தெரிகிறது. அவர் விரும்பிய அதாவது காந்தியின் ராம் பற்றி நினைக்கிறார். காந்தியின் ராம் வேறு அல்லவா அவர் அன்னை கற்று தந்த உறக்கமற்ற இரவுகளை கடக்கும் மந்திரங்கள் சொல்லும் சிறுவனை போல் காந்தியை நினைத்துப்பார்க்கவே அழகாக இருக்கிறது, சுனீலின் மனம் போல.
$
காலன் என்னும் உலக நியதியை, அவர் பழக்கி வைத்த நாயை போல கூடவே தன் சொல் பேச்சு கேட்க வைத்திருந்ததையும் அழகாக காட்சிப்படுத்துகிறார். காந்தியின் பயணம் முழுதும் தொடர்ந்து வரும் கருப்பு நாயாக சாவை அழைத்து வருகிறார். ஒரு இடத்தில் காந்தி “ நல்ல வழித் துணைவன் நீ “ என்று கூறுகிறார். மனிதா நீ இறக்கப்போவதை
நினைத்துக்கொள் , உன் அகங்கார மமதையை அடக்கு என்கிறார் சுனீல். ஏனென்றால் காந்தி அதை செய்து காட்டியிருக்கிறார்.
$
அப்புறம் முழுமையும் முழுமையின்மையும் பற்றி பேசுகிறார் காந்தி. முழுமையை எம்பி குதித்து எட்டிபிடிக்கவே தன வாழ்நாள் முழுவதும் முயன்று இறுதியில் தோற்று விட்டதாகவே காந்தி நினைக்கிறார். முழுமையற்ற மனிதனாக தன்னை உணருகிறார்.

சுனீல் கூட கைலாஷ் மானசரோவர் போய்விட்டு வந்திருக்கிறார் என நினைக்கிறேன்.அந்த சூழலில் விம்மி வெடிக்கும் அழுகையும் மனிதத்தின் முழுமையற்ற தன்மை மீது வரும் நேசமும், காந்தியின் எண்ணமாக எழுதி இருக்கிறார்.
$

கதை ஆரம்பத்திலேயே காந்தி சுடப்படுகிறார் , பட் பட் என்று , கதை இறுதியில் அதாவது தர்மர் என்னும் யமன் கூட்டிப்போக வரும் இடைப்பட்ட நேரத்தில் இவ்வளவு சிந்தனைகள். தர்மர் அவரிடம் பட் பட் பட் என்று மூன்று குண்டுகள் சுடப்பட்டன என்று உறுதிப் படுத்துகிறார். சுனீல் நினைக்கிறார் இரண்டாவது குண்டில் அவர் உடல் வலியிலிருந்து விடுபட்டிருக்கும் என்றும் மேலும் நான்காவது குண்டு பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்றும் நமக்கு கூறுகிறார்.
அத்தனையும் காந்தித்தனம் , காந்தி டுடேவின் டேக் லைனே அதுதானே ,
என் வாழ்க்கையே என் செய்தி ...என்பதுதானே அது.

திமிங்கிலம்

திமிங்கிலம் பற்றிய செய்திகள் அனைத்தும் நன்மையை பிரதிபலிப்பதாக இருந்தது இதுவரை. ஓ இப்படி ஒரு உயிர் இருக்குமா என்றால் அதற்கு முழு தகுதியும் திமிங்கிலத்திற்கு இருக்கிறது. ஆம்.உலகமே அழியப்போகிறது.உலகின் முதல் மனிதனைப் பற்றி வாசித்திருப்போம். ஆனால் கடைசி மனிதன் யார் , அவன் யாராக இருப்பான்
என அறிய முயன்றிருக்கிறார்.

உலகின் கடைசி மனிதன் திமிங்கிலமாகத்தான் உருவகப் படுத்தப் படுவான்.
ஏனென்றால் திமிங்கிலம் எல்லோரையும் விட நீண்ட நாள் வாழமுடியும்.
மற்ற மீன்களை , சக உயிரை உண்டு வாழும். நிலத்திலிருந்து நீருக்குள் வாழ பழகிக்கொண்ட மிருகம். மிகப்பெரிய பாலூட்டி . அப்ப கதையும் ஃப்யூச்சர்ல நடக்கற மாதிரி தான யோசிக்க முடியும். ஸோ சயின்ஸ் ஃபிக்ஸன்
கதையாக இருக்க, அம்புப்படுக்கை கான்செப்ட் படி , அந்த கடைசி மனிதனின் கடைசி நிமிடங்கள். அவன் என்றே வச்சிக்குவோம் , அந்த கடைசி மனிதனின் குணம், அவன் மனைவி பற்றி, அவன் தான் வாழ்வதற்காக என்னவெல்லாம் செய்வான். என்று யோசித்திருக்கிறார்.

ஆரம்பமே கனவில் துவங்குகிறது. வரிசையில் எரிபொருள் வாங்குவதற்கு க்யூ நிற்கிறார்கள் வளர்ப்பு பிராணியை தேடும் பாட்டி... எரிபொருளுக்காக மனித எலும்புகளை உபயோகிப்பதால் எங்கும் பிண வாடை. மனிதன் தன் நிலைத்த பாதுகாப்பான வாழ்வுக்கான தேடல்.

2020 ல் முதலாம் பெரு நிகழ்வு முதல், 3000 ல் எட்டாம் பெரு நிகழ்வு வரை உலகம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகிறது. பெருநிகழ்வு ஒவ்வொன்றும் ஒரு அழிவை தருகிறது. புதுப்பிக்கவியலா எரிசக்தி காலாவதியாகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளே மானுடத்திற்கு எதிரி என்பதை நிறுவுகிறார் சுனீல். அடிப்படை அறிவியல் தவிர. அவன் ஆராய்ச்சியாளனாக இருக்கிறான். அவனுடைய அறிவியல் ஆராய்ச்சியும் ராணுவமும் சேருவதை அவன் மனைவி விரும்பவில்லை.
பிரிகிறாள். ஹோமோ ரீகாம்பினன்ட், ம்யூடன்ட் கார்டிஃபோலியா, பிரகிருஸ்தான் (பிராக்) ,குமிழ் வடிகட்டி, கார்ப்சோ கார்பன், பிணப்பொறுக்கிகள், மனித மூளையை நிலைகுலைய செய்யும் நுண்ணுயிரி, சயனோ பாக்டீரியம் என்று ஆராய்ச்சியில் இருக்கும் விஷயங்களோடு கற்பனையை கலந்து கட்டி முழு நீள ஹாலிவுட் ஆங்கில படத்திற்குண்டான விஷயங்களை தருகிறார்.

2018 ம் ஆண்டு என்ன சமூக தீமையை பற்றி பேசுகிறோமோ அதேதான், எந்த மாற்றமுமில்லை, இன்னும் பட்டவர்த்தனமாக உலகின் ஒவ்வொரு உயிரும் உணரும் ராட்சஷ நிமிடங்கள் கற்பனை செய்திருக்கிறார். அவன் -திமிங்கிலம் – ஹீப்ரு -தற்போதைய இஸ்ரேலியன்/யூதன் . அவள் –வாத்துகுட்டி - அரேபிய பெண் -தற்போதைய ஈராக்கி.

இறுதியாக அவன் தன்னை உணருகிறான். ஆனாலும் மாற்றிக்கொள்ள இயலா தூரத்திற்கு போய்விட்ட அவனால் எதையுமே மாற்றமுடியவில்லை.
அவனுடைய கண்டுபிடிப்புகளே அவனை தற்சார்புடைய, தோல் மூலம் சுவாசிக்கும் உயிரினமாக , கடலுக்குள் சென்று விடுகிறான். எனக்கென்னவோ அவன் இந்த உலகின் கடைசி உயிரினமாகவே இருப்பான் என்று தோன்றுகிறது.

மனிதம் மீது அக்கறையற்ற உலகமாக மாறிவரும் சூழலில், நடக்கபோகும் நிகழ்வுகளை பேசுகிறார் சுனீல்.மனிதன் மாபெரும் சல்லிப்பயல் என்று ஜி.நா சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது.

கூண்டு
மந்திரக்கூண்டு செய்ய சொல்கிறான் அரசன். கொல்லன் ஒரு தேர்ந்த ரசவாதி. அந்த நாடு காரணமில்லாமல் வஞ்சிக்கப்பட்டவர்கள் கொண்ட நாடு. இந்த பின்னணியில் ஒரு ஃபாண்டஸி கதை. இன்று முழுக்க முழுக்க நியாயம் கேட்டல் ,நீதியை நிலை நாட்டல் , அதர்மத்தை அழித்தல் என்ற
கோரிக்கைகள் முதலாளித்துவத்துக்கு எதிராக ,கார்ப்பொரேட்டுக்கு எதிராக, சுரண்டலுக்கு எதிராக கேட்கும் எல்லா குரலும் ஆள்பவர்களின் தவறை நோக்கியே இருக்கும்.

அதுதான் இந்த கூண்டு. கூண்டு = நீதி ; கொல்லன் = நீதி,காவல் துறைகள். இந்த நாட்டிலும் ஒரு மாயக்கூண்டு செய்ய அரசன் கொல்லனிடம் சொல்கிறான். கொல்லனும் பதினான்கு ஆண்டுகள் மேலாக உழைத்து உருவாக்குகிறார். பதினான்கின் முக்கியத்துவம் பற்றி புராணங்களில் சொல்லப்படுவன பற்றி நான் யோசிக்கவில்லை. ஆனால் அது ஆயுள் தண்டனைக்காலம் என்கிறேன். அந்த கூண்டை வைத்து தவறு செய்பவர்களை, அரசுக்கு துரோகம் செய்பவர்களை பிடித்து விடலாம். என்று அதன் மேல் எதிர்பார்ப்பு அதிகமாகிறது. கூண்டு இரக்கமற்ற இயந்திரம் என்ற பயம் மக்கள் மனதில் இருந்தது கூண்டு வரப்போகிறது என்பதாலேயே சின்ன சின்ன திருட்டுகள் குறைந்தது. ஒருநாள் கூண்டும் வந்தது. என்ன செய்தது? அரசனும் மக்களும் என்ன ஆனார்கள்?
அந்த மாயக்கூண்டிலிருந்து அதன் பிடியிலிருந்து யார் தப்ப முடியும்.
ஏனென்றால் இங்கு யார் குற்றவாளிகள் இல்லை?

பேசும் பூனை
தனிமை. வெறுமை.
மொபைல் போனில் வித விதமாக வரும் விளையாட்டுக்கள் தொடர்ந்து பரவலாக புழங்க என்ன காரணம்? தனிமை. வெறுமை. இந்த தலைமுறையின் மிக முக்கியமான பிரச்சனையை பேசும் பூனை., கோபக்கார பறவைகள், ஓடுவது துரத்துவது, பறவையை கொல்லுவது, மறைந்திருந்து மனிதர்களை கொல்லுவது என்று இப்போது நீலத்திமிங்கிலம் என்பது வரையான விளையாட்டுகளில் பார்க்கலாம்.

மொபைல் விளையாட்டுகள் அல்ல பிரச்சனை , மனித மனமே பிரச்சனை.
அகச்சிக்கலில் தொலைந்து போய்க்கொண்டிருக்கிறோம். மிகவும் நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவேறாத பெண் தேன்மொழி. வயது வித்தியாசம் மட்டுமில்ல கணவனின் செயல்களும் அவளை விலகிப்போக செய்கிறது. இது மொபைல் விளையாட்டில் கவனத்தை மாற்ற ,காரணமாகிறது. ஒருமுறை அதன் போதை அறிந்து விட்டால் அதற்குள்,அதற்குள் மீண்டும் மீண்டும் இழுத்துக்கொண்டு போகிறது. இங்கு பேசும் பூனை தேன்மொழிக்கு இன்னொரு மெய்நிகர் நண்பனாக மாறுகிறது. புத்திசாலித்தனமாக உரையாடுகிறது. அவளுடைய வேலை பழு குறைக்க புதிய பொருள்களை வாங்கி குவிக்கிறது.

இங்கு தனிமைக்கு ஆட்படாத ஆளே இல்லை எனலாம். எல்லாம் இருக்கும் ஆனால் ஒரு வெருமையில் வாழ்கிறார்கள். சுனீல் கூட தனிமை உணர்ந்து தான் எழுத்தாளராக மாறி இருக்கிறார். உலகத்துடன் தொடர்புடன் இருத்தல், தன்னை சமூகத்துடன் தொடர்பு படுத்திக்கொள்வது எல்லோருக்கும் வாய்க்காது. 
எழுத்தாளனுக்கு,பத்திரிக்கையாளனுக்கு,இயக்குனருக்கு,அரசியல்வாதிக்கு மிக சுலபமாக தொடர்பு ஏற்பட்டுவிடும்.மொத்த சமூகத்தையும் அவன்
பார்க்கிறான். இங்கு மிக அதிகமான எண்ணிக்கையில், இறுக்கமான சூழல், அவரவர் வாழ்க்கையினால் ஏற்படுகிறது. வாழ்க்கை முறையினால் ஏற்படுகிறது. எம்பத்தி குறைந்து கொண்டே வருகிறது. அடுத்தவர் மனதை அறிந்து கொள்வதே இல்லை , சூழ்நிலையை புரிந்து நடந்து கொள்ளும் தன்மை இல்லை.

மரக்கட்டைகளாக, நுண்ணுணர்வற்றவர்களாக , உணர்வு வறட்சியுடன்
பொருள்களை நோக்கிய வாழ்வு வாழ்கிறோம். இன்றைய மத்திய வர்க்க பிரச்சனையை பேசுகிறார்.ஓடுவது யாருக்கென்று புரியாமல், பிறகு களைத்து போய் சாவு கேட்கும் மக்கள். வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நாமே முன்வந்து ஏற்படுத்தும் இன்னொரு சிக்கலே மீள முடியாத தூரத்திற்கு, பிரிவிற்கு கூட்டிப்போகிறது.

தனிமையும்,வெறுமையும் நம்மை தாக்காதவாறு அல்லது அதிலிருந்து வெளியேற என்ன செய்ய முடியும் , இந்த மனிதன். ஆயிரம் பதில்கள் தரலாம்.
உள்ளிருந்து அவனவனுக்கு வரும் பதில்கள் பொறுத்தே நிச்சயிக்கப்படுகிறது மீதி வாழ்க்கை. பெரும்பாலும் குடி,போதைக்கு தஞ்சமடைவார்கள்.அவர்களுக்கு சொல்ல ஒரு பழைய கண்ணீர்
கதை இருக்கும். மனம் சார்ந்த பிரச்சனைகளை வெளியே சொல்லும் சூழலே இங்கில்லை. திருமணம் ஆன பெண்களுக்கு சுத்தமாக இல்லை. திருமணம் ஆன ஆண்களுக்கு போதை விடுதிகளே அடைக்கலம். இதுதான் நிலை. இதைத்தான் பேசும் பூனை பேசுகிறது.

2016

ஒரு புனைவு கதாபாத்திரம் இறப்பதற்கு சில நொடிகள் முன்னதாக பேட்டி எடுக்கிறார் சுனீல் அதாவது நரோபா என்ற அவர் புனை பெயரில். ஜார்ஜ் ஆர்வெல் பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்த எழுத்தாளார்., பத்திரிக்கையாளராக அறியப்பட்ட விமர்சகர், சர்வாதிகாரத்திற்கு எதிராக தனது புனைகதைகளிலும்,கட்டுரைகளிலும் எழுதியவர். அவரது 1984 என்ற நாவலின் முக்கிய பாத்திரத்தை மையமாகவும், அந்த நாவலில் இருந்து ஆங்கிலத்தில் உபயோகப்படுத்திய அத்தனை புதிய வார்த்தைகளும் அதன் செயல்களையும் உபயோகப்படுத்தி ஒரு சிறுகதை.

முதல்ல 1984 படிச்சுட்டு வரத்தோணும்படி ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டது. நரோபாவும் வின்ஸ்டன் ஸ்மித்தும் உரையாடும்போது பெரியண்ணன்,சிந்தனை காவலர்கள், அரை எண் 101, சிந்தனைக்குற்றம் போன்ற ஆர்வெலின் ஐடியாக்களை அலசுகிறார்கள்., . இன்னும் சில நிமிடங்களில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்மித் பின் மண்டை வழியே சுடப்பட்டு
இறக்கப்போகிறார் வாய்மையுடன் இருந்த குற்றத்திற்காக. நீங்கள் கண்காணிக்கப் படுகிறீர்கள். உங்கள் சிந்தையில் வாய்மையை சுமந்தாலும் தெரிந்துவிடும் அவர்களுக்கு , நீங்கள் கலகக்காரர் என்று. ரகசியம்,அந்தரங்கம் என்று ஒன்றில்லை.உண்ணும் உணவும்,பிறப்புறுப்பின் மச்சம் கூட அவர்களுக்கு தெரியும். நீங்கள் கண்காணிக்கப் படுகிறீர்கள். நரோபா பேட்டிக்கு முன் திபெத்தியனுடன் பேசுவதாகவும், பின்னதாக ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கன் ஸ்மித்திற்காக காத்திருப்பதாகவும் சொல்கிறார்.

எங்கெல்லாம் காலனி ஆதிக்கம் இருந்ததோ, அங்கெல்லாம் ஸ்மித்களுக்கான தேவை இருக்கிறது என்கிறார். நீங்கள் வாழ நினைக்கும் வாழ்வை வாழ முடியாது , நீங்கள் ஆர்வெலின் உலகத்தில் அல்ல, உங்களை சுற்றி பாருங்கள் எந்த நாட்டுக்கும் பொருந்தும். நீங்கள் கண்காணிக்கப் படுகிறீர்கள்.

Sunday, May 6, 2018

நானும் என் படைப்பும் - ஏன் எழுதுகிறேன்?

(இந்த மாத கணையாழியில் வந்த கட்டுரை)

பள்ளிக்கு செல்லத் துவங்கிய முதல் நாளில் இருந்தே அன்றைய நிகழ்வுகளை அம்மாவிடம் ஒப்புவிக்கும் வழக்கம் எனக்குண்டு. நிகழ்வுகளின் ஊடாக கதைகளும் இயல்பாக எப்படியோ நெய்யப்படும். சித்ரா மிஸ்சும் ஹனி மிஸ்சும் பாத்திரங்களாக இருக்கும் தினத்தில் நடனமிடும் பல்லிகளும் பேசும் மேசைகளும் கூடச் சேர்ந்துகொள்ளும். அம்மாவிடம் சொல்லும் கதைகள் திட்டமிட்டு யோசித்து உருவாக்கியவை அல்ல. சொல்லச் சொல்ல ஊற்றெடுப்பவை. இன்றுவரை என் கதையின் வடிவம் என இதையே சொல்லலாம். ஒரு சிறிய பொறி அல்லது காட்சி அல்லது கனவு வருடக்கணக்காக ஆழத்தில் துயில் கொள்ளும், ஏதோ ஒன்று விழித்து மேலெழும்பி என்னை வெளிக்கொணர் என கோருகிறது. அதை மட்டுமே வழித்துணையாக கொண்டு, தீர்மானமான இலக்கற்ற வெளியில் துழாவிச் சென்று எங்கோ ஒரு புள்ளியில் இருள் நீங்கும் ஒளியை கண்டு கொள்கிறேன். எழுதி முடித்த பின்னரே நான் கதையாக்குகிறேன். 

நினைவில் அமிழ்ந்த ஒரு மனிதரைப் பற்றி எழுதத் துவங்கி அவர் மீது வேறு பல மனிதர்களின் சாயை கவிந்து முற்றிலும் வேறொருவராக உருமாறுவதை ஆச்சரியத்துடன் காண்கிறேன். ‘அம்புப் படுக்கை’ கதையில் வரும் வைத்தியர் தாத்தா- எனது அப்பா வழி தாத்தாவிற்கு துண்ணூறு கொடுத்து நோய் தீர்க்கும் வழக்கம் எல்லாம் இல்லை. அடிகளார் போல் நீண்ட தாடியுடன் மந்திரித்து துண்ணூறு பூசியவர் அம்மா வழி தாத்தா. ‘காளிங்க நர்த்தனத்தின்’ மாணிக்கம் நானறிந்த நான்கு நபர்களின் கலவை. ஒரு மனிதனுக்குரிய தோற்றமும், வெவ்வேறு மனிதர்களின் இயல்புகளும் எப்படி ஒரு பாத்திரத்தில் உருக்கொள்கிறது என்பது பெரும் புதிர். தொடர்பற்றவையும் தொடர்புள்ளவையும் என எதையெதையோ மனித அகம் தொடுத்து விளையாடுகிறது. இந்த சுவாரசியம், இந்த விளையாட்டு, இந்தப் புதுமை என்னை எழுத வைக்கிறது. கதைகள் வாசிப்பதும் எழுதுவதும் வாழ்வை சுவாரசியமாக ஆக்குகின்றன. வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்ள எனக்கு கதைகளை விட மேலான வேறு காரணங்கள் ஏதும் அகப்படவும் இல்லை.   

வாழ்க்கையும் இலக்கியமும் என்னை சம அளவில் பாதிக்கின்றன. அப்படிச் சொல்வதேகூட அபத்தம்தான், தாக்கம் நிகழ வேண்டும், நிகர் வாழ்வு வாழ வேண்டும் எனும் விழைவுதானே வாசிக்கவே வைக்கிறது. ‘வாசுதேவன்’ என்னை எழுத்தாளன் ஆக்கிய கதை. என்னை என் கனவுகளில் துரத்திய ‘வாசுதேவனின்’ முகத்தை எழுதித்தான் கடந்தேன். காஃப்காவின் க்ரேகர் சம்சாவை அறிந்து கொண்ட பிறகுதான், அவன் கனவிலிருந்து கதைக்குள் குதித்து எனக்கு மீட்பளித்தான். அவனை உயிர் பிழைக்க வைக்க முடியவில்லை என்றாலும் கதை வழியாக வெளிப்பட்டு தன்னை அவன் ‘அமரனாக’ ஆக்கிக் கொண்டான். புனத்தில் குஞ்சத்துல்லா எழுதிய நாவல் ‘கன்யா வனம்’, அதன் முன்னுரையில் ‘காலமும் காமமும் மனிதர்களை எப்போதும் அலைக்கழிக்கின்றன’ என்று எப்போதோ வாசித்தது, அரியக்குடி கோவிலில் புடைப்புச் சிற்பமாக பிணைந்து கிடக்கும் ரெட்டை நாகங்களை கண்டதும் நினைவில் எழுந்தது. இந்திய குறியீட்டுவியலில் காலமும் காமமும் நாகமாகின்றன. அந்த நாகத்தில் ஏற முயன்று வழுக்கியவர்கள் வாசலில் இருக்க, நாகத்தில் உறங்குபவன் உள்ளிருக்கிறான், ஒரு கள்ளம் கபடமற்ற பாலகன் காலமற்ற வெளியில் அதன் தலையில் ஏறி நின்று ஆடுகிறான். காமம் பிரபஞ்சத்தின் அளவுக்கே, பிறிதொருவர் இல்லாத நிலைக்கு விரியும்போது காமமற்றவனாகவும் ஆகிறான். அந்தக் கதை அங்கேயே உருபெற்றது. கதைமாந்தர்கள் எல்லோரும் பின்னர் சேர்ந்து கொண்டார்கள். ஆர்வெல்லின் 1984 நாவலுக்கு நூதன முறையில் புத்தக அறிமுகம் எழுதலாம் என்று எழுத ஆரம்பித்து இரண்டாவது பக்கத்தில் கதைசொல்லியின் குணாதிசயம் புலப்பட துவங்கியதுமே கதையாக மாறிவிட்ட கதை தான் 2016. 

நானும் என் அண்ணனும் எங்கள் சொந்த ஊர் திண்ணையில் அமர்ந்து ‘ட்ரேட்’ ஆடியபோது தாய உருளையில் ‘ஆறு’ விழுந்த போதிலும், ஐந்துதான் விழுந்தது என்று சிரமட்டார் காளி மீது பொய் சத்தியம் செய்து பயந்து நடுங்கிய கதையை எழுத வேண்டும் என துவங்கியதே ‘குருதிச் சோறு’ ஆனால் இரண்டாம் பத்தியிலேயே கதை தன் போக்கில் வளர்ந்து கட்டற்று சென்றது. முதல் மற்றும் மூன்றாம் பகுதியை ஒரே நாளில் எழுதி முடித்தேன். ஏறக்குறைய ஓராண்டிற்கு பின் இரண்டாம் பகுதியை எழுதினேன். வாழ்வளித்த முகமறியாத மூதாதைக்கு செலுத்தும் நன்றியாக கதை மாறிவிட்டிருந்தது. 

‘பொன் முகத்தை பார்ப்பதற்கும்...’ ஏறத்தாழ என் கதைதான். எனக்கும் என் பிள்ளைக்குமான பிணைப்பை ஊடறுக்கும் கைபேசியின் மீதான வருத்தம். பெரியவர் அழுவதோடு முடிந்திருக்க வேண்டிய கதை, மன்னை சாதிக், கல்பனா அக்கா, சாம் ஆண்டர்சன்களின் புண்ணியத்தால் வேறொரு முடிவை எட்டியது. தொழில்நுட்ப படையெடுப்பை திறன் கொண்டும் எதிர்கொள்ளலாம், அல்லது கோமாளியாக்கியும் தன் இருப்பை தக்க வைத்துகொள்ளலாம். ‘திமிங்கிலம்’ ஒரு போட்டிக்காக ஆங்கிலத்தில் எழுதிய அறிவியல் புனைவு. மனிதர்கள் எரிபொருளாக ஆகும் சாத்தியத்தை அச்சத்தை மையமாகக் கொண்ட ஒரு கனவின் மீது எழுதப்பட்ட கதை. ஆனால் எங்கோ நிறைவடையாமல் தொக்கி நின்றது. எழுதி முடிக்காத மற்றொரு கதையில் இருந்து ஜெமீமா எனும் பாத்திரமும், பிராகிருதிஸ்தான் எனும் கற்பனை நிலப்பரப்பும் இந்தக் கதையுடன் கலந்ததும் இதன் வண்ணமும் வீச்சும் மாறியது. தொன்மங்கள் மீது பெரும் காதல் உண்டு. தொன்மங்கள் மனித மனங்களின் கூட்டு நெசவு. மகாபாரதத்தின் ‘சுவர்க்க ஆரோகண பருவத்தின்’ தாகத்தில் உருவான கதை ஆரோகணம். ‘குருதி சோறு’ கதையின் தொன்மம் நானறிந்த பல்வேறு நாட்டார் கதைகளின் கலவையில் உருவானது. ‘காளிங்க நர்த்தனமும்’ கூட ஒரு தொன்மத்தை சமகாலத்தில் பொருள் கொள்ளும் முயற்சி என சொல்லலாம். ‘பேசும் பூனையை’ கூட ஒரு தேவதை கதையாக வாசிக்க முடியும். 

என் கதைகளில் சில கேள்விகளை பின்தொடர்ந்து செல்கிறேன். எது விடுதலை? அதை அடைவது எப்படி? தீர்மானமான விடைகளை அடையவில்லை என்றாலும் பயணம் தொடர்கிறது. வஞ்சமும் குரூரமும், பேரன்பும், தியாகமும் என எல்லாமும் ஒரே மனிதனுள் எப்படி குடிபுகுகிறது? கணக்கற்ற ஆச்சரியங்கள் நிறைந்த வாழ்வில் சிலவற்றை புனைவுகளாக்கி விசாரணைக்கு உட்படுத்துகிறேன், அல்லது அந்த விந்தைக்கும் குரூரத்திற்கும் சாட்சியாகிறேன். ஒரு வாசகனாக நிலமற்ற காஃப்காவையும் நிலத்தின் கரிப்பை உணர்த்தும் கி.ரா.வையும் நேசிக்கிறேன். கதைக்காரனாகவும் நான் என்னை குறுக்கிக் கொள்ள விரும்பவில்லை. நிலத்தின், அதன் மாந்தர்களை கதையாக்கும் அதே நேரத்தில் புதிய நிலத்தை கற்பனையில் உருவாக்கியோ அல்லது நிலமே அற்ற வெளியிலோ கதைகளை உலவ விட விழைகிறேன். 

முதல் தொகுப்பிற்கு பின்பான கதைகள், ‘அம்புப் படுக்கை’ தொகுப்பின் பொதுவான விசனங்களில் இருந்து தற்காலிகமாகவேனும் திசை மாறி இருக்கிறது. அதிகமும் குறுங்கதைகள், அதுவும் எழுத்து வாழ்வின் அபத்தங்களைச் சொல்லும் பகடி கதைகளை எழுதி வருகிறேன். இவை ஏதோ ஒரு வகையில் அகச் சமநிலையை ஏற்படுத்த முயல்கிறது. கவிதைக்கு நெருக்கமான வடிவில் உள்ள கதைகள் எனச் சிலவற்றை குறிப்பிடலாம். அல்லது கவிதையாக முடியாமல் தோற்றவை என்றும்கூட. 

கதைகளே அதிகாரத்தை உருவாக்குபவை, நிலைநிறுத்துபவை, அவை நிறுவிய அதிகாரத்தை கதைகளைக் கொண்டுதான் எதிர்கொள்ள முடியும். கதைகளே அதிகாரத்தை உருக்குபவை, நிலைகுலையச் செய்பவையும் கூட. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் கதை ஓர் அரசியல் செயல்பாடு. ஆகவே கதை எழுதுவது எனக்கு சமூக கடப்பாடாகவும் ஆகிறது. அவை நம் நனவிலியில் பலவீனமாகவேனும் அலையெழுப்பிச் செல்கின்றன. 
கதை ஒரு ஆன்மீகச் சாதனையும்கூட. எல்லாவற்றினிலும் மேலாக, கதைகளினூடாக நான் அமரனாகிறேன் எனும் நம்பிக்கை எனை எழுதச் செய்கிறது. என்றேனும் கதைகளில் முழு பூஜ்ஜியத்தை எழுதி விட வேண்டும், ஒருவேளை அதற்கு பிறகு கதை எழுதாமல் போகவும் கூடும். 
அதுவரை எனக்கு நானே சொல்லிகொள்வது. 
ஆகவே கதை புனைக. 

Saturday, April 14, 2018

மக்கள் மொழியில் மகாபாரதம் - பூமணியின் கொம்மை

இன்றைய தமிழ் தி இந்துவில் (15/4/2018) எழுத்தாளர் பூமணியின் 'கொம்மை' நாவலைப் பற்றி எழுதியிருக்கும் சிறிய அறிமுகக் கட்டுரை வெளியாகியுள்ளது. சற்றே சுருக்கப்பட்டு வெளியாகி இருக்கும் கட்டுரையின் விரிந்த வடிவம் இது. 
--

வில்லி பாரதம் துவங்கி பாரதியின் பாஞ்சாலி சபதம், எம்.வி. வெங்கட்ராமின் நித்திய கன்னி, எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உப பாண்டவம்’, ஜெயமோகனின் ‘வெண் முரசு’ நாவல் வரிசை என தமிழகத்தில் மகாபாரதம் படைப்பாளிகளை எக்காலத்திலும் வசீகரித்தபடியே தான் உள்ளது. இந்திய அளவிலும் எம்.டி வாசுதேவ நாயர், பைரப்பா, காண்டேகர் என பல எழுத்தாளர்களும் பாரதத்தின் கதைகளை எடுத்தாண்டுள்ளார்கள். பாரதத்தை மீளுருவாக்கம் செய்யும் மரபு என்பது மாகவி காளிதாசனில் இருந்தே துவங்குகிறது. சாகுந்தலம் அத்தகைய முயற்சியே. அ.கா பெருமாள் ‘அர்ஜுனனின் தமிழ் காதலிகள்’ என்றொரு தமிழக நாட்டரியல் பாரத கதைகளின் தொகுப்பையும் கொண்டு வந்துள்ளார். பிராந்திய நாட்டாரியல் தொன்மங்கள் வியாச பாரத கதையுடன் இணைந்து ஒரு கதை பெருவெளியை உருவாக்குகிறது. யட்ச கானம், தெரு கூத்து, நாடகங்கள், தொலைக்காட்சி தொடர்கள், உபன்யாசங்கள், திரைப்படங்கள் என பல்வேறு வடிவங்களில் மகாபாரதம் இந்திய மக்களின் வாழ்வுடன் நெருக்கமாக பின்னிப் பிணைந்து கிடக்கிறது. இவ்வரிசையில் எழுத்தாளர் பூமணியின் கொம்மையும் இணைந்து கொள்கிறது. 

மகாபாரதம் ஏன் மீள மீள எழுதப்படுகிறது, வாசிக்கப்படுகிறது என்பதற்கு ஒற்றைப்படையான பதில் ஏதும் இல்லை. ஆன்மீக நூலாக, கதை மாந்தர்களும் அவர்களின் அகங்காரங்களும் மோதி சிதறும் பெரும் மானுட நாடகமாக, மாயாஜால குழந்தை கதையாக, வெவ்வேறு மெய்யியல் மரபுகள் பொருதும் களமாக, அரசியல் பிரதியாக, பெண்ணிய பிரதியாக என பலவாறாக பல நோக்கங்களுக்காக வாசிக்கப் படுகிறது.  ஒவ்வொரு வாசிப்பிற்கும் அதற்குரிய தனிச்சையான வசீகரம் உண்டு. மறுகுரலில் மகாபாரதம் எனும் அடிக்குறிப்புடன் வெளியாகியுள்ள ‘கொம்மை’ பெண்களின் துயர நாடகத்தை மையப் படுத்தும் பிரதியாக மக்கள் மொழியில் தனித்தன்மையுடன் உருவாகியுள்ளது. 

நாவலை ‘ஆதிக்கத்தால் அலைக்கழியும் அபலைகளுக்கு’ தான் அர்ப்பணித்துள்ளார் பூமணி. சத்தியவதி, குந்தி, காந்தாரி, திரௌபதி, இடும்பி, உத்தரை என விழைவுகளின், விதியின் விசையில் துன்புறும் பெண்களின் கதைகளை கரிசனத்துடன் அணுகி இருக்கிறார் பூமணி. காந்தாரி போருக்கு முன் தான் கண்ணை கட்டி திரட்டிய தவ ஆற்றலை மகனுக்கு செலுத்துவதற்காக கட்டை அவிழ்த்து துரியனை காண்பது தான் நாமறிந்த பாரத கதை ஆனால் ‘கொம்மையில்’ குருக்ஷேத்திரத்தில் கவுரவர்கள் மாண்டுபோன பின்னர் அப்போதவாது அவர்களின் முகத்தை இறுதியாக காண வேண்டும் என்பதற்காக கண் கட்டை அவிழ்க்கும் போது அந்த துயரத்தின் வீச்சு முந்தைய வடிவத்தை காட்டிலும் பன்மடங்கு உக்கிரமாக நம்மை சூழ்கிறது. 

நாமறிந்த பாரத கதையிலிருந்து விலகி சில புதிய கதைகளை பூமணி சொல்கிறார். தெரு கூத்து, நாட்டாரியல் தளங்களில் இருந்து எடுத்தாண்டிருக்கலாம் அல்லது அவரே உருவாக்கியும் இருக்கலாம். அதற்கான சுதந்திரத்தை பாரதம் எப்போதும் படைப்பாளிகளுக்கு அளித்தே உள்ளது. அதன் காரணமாகவே இந்திய துணைகண்டம் முழுவதும் விரவி பரவ அதனால் இயன்றது. பீஷ்மனை வதைக்க புறப்படும் அம்பையின் தவத்திற்கு முருகன் இறங்கி வருகிறான். அவனொரு மாலையை அளிக்கிறான். அதை அணிபவன் பீஷ்மனை வீழ்த்த முடியும் என ஆசிர்வதிக்கிறான். விதுரனின் தாய் சிவை ஒரு சூதர்குல சேடி என்பதற்கு அப்பால் நாம் ஏதும் அறிவதில்லை. ஜெயமோகனின் வெண் முரசிலும் சிவை ஒரு பாத்திரமாக விரிவாக வருகிறார். ‘கொம்மையில்’ சிவைக்கு கடம்பன் என்றொரு கணவன் இருந்ததாகவும், அந்தப்புரத்து காவலுக்கு அவன் மாற்றப்பட்டதால் காயடிக்கப்பட்டு குழந்தை இன்றி இருந்ததாக பூமணி எழுதுகிறார். அதேப்போல் கம்சன் வசுதேவருக்கும் தேவகிக்கும் பிறக்கும் எல்லா குழந்தைகளையும் பிறந்தவுடன் கொல்வான் என்பதாக இல்லாமல் ஐந்து குழந்தைகள் தப்பித்து பிழைத்திருந்ததாக சொல்கிறார். கிருஷ்ணனின் துனைவிகளில் ஒருவரான நக்னஜித்தி தான் நப்பின்னை என்பதும் புதிய கோணம் தான். அரவானின் மரணத்திற்கு பின் அவளுடைய தாய் உலூபி அர்ஜுனனின் மற்றொரு மனைவியான சித்திராங்கதையுடன் சேர்ந்து வாழ்கிறாள். பீமனை நெறித்து கொல்ல திருதாஷ்டிரன் முயலும் போது பீமன் அவன் காதில் முணுமுணுத்து மிரட்டுகிறான். அதன் பின்னே அவனுடைய பிடி நெகிழ்கிறது. இது போன்ற தருணங்கள் பூமணியின் கற்பனைக்கு சான்று. ஏகலைவன் குரு காணிக்கையாக கட்டைவிரலை அளித்தபின்னர் வாய்பூட்டு போடபட்டிருந்த பசித்த வேட்டை நாய் வாய் கட்டு அவிழ்ந்தவுடன் அந்த கட்டை விரலை தூக்கிக்கொண்டு ஓடுவது போன்ற உணர்சிகரமான இடங்களில் பூமணி முழுமையாக வெளிப்படுகிறார்.. 

உரையாடல்கள் வட்டார வழக்கில் மிளிர்கின்றன. கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்குமமான உரையாடல்கள் இரண்டு அணுக்க நண்பர்கள் பேசிகொள்வதாக இருப்பது அவர்களை நமக்கு நெருக்கமாக்குகிறது. அர்ஜுனன் கிருஷ்ணனை கறுத்த மச்சான் என்றே அழைக்கிறான். கர்ணனின் மனைவி பொன்னுருவி பற்றிய கதை நாட்டார் மரபில் உள்ளது. கண் தெரியாத ராதை புளிய மரத்தை ‘ஒங்கிட்ட காய்க்கிற பழம் அதிகமா வாடாமலும் முழுக்கப் பழுக்காமலும் ஆகட்டும்’ என்று சபிப்பதும் கூட நாட்டார் தன்மை கொண்ட கதை தான். யதார்த்த கதையாக சுருக்கிவிடாமல் பாரதத்தின் மாயத்தன்மையையும் தக்கவைத்தபடி இரண்டிற்கும் இடையில் சமநிலை பேண முயன்றுள்ளார். அவ்வப்போது நாவலில் சில பஎளிய பாடல்கள் வருகின்றன, அவற்றில் சில ரசிக்கும் படியாகவும் சில துருத்தலாகவும் தென்பட்டன. சாமானிய மனிதர்களின் கதை எனும் தளத்தில் பயனிப்பதாலேயே, பூமணி ஏற்றுக்கொண்ட பேசு பொருளுக்கு இணங்க, கீதை உபதேசம், பீஷ்மரின் அம்புப் படுக்கை உபதேசம் போன்ற தத்துவ பகுதிகள் எதிர்கொள்ளப்படாமல் கடக்கப் படுகிறது.

ஒட்டுமொத்தமாக  600 பக்கங்களில் முழு மகாபாரதத்தையும், கதை மாந்தர்களின் மோதல்களையும், வீழ்ச்சியையும் அவருடைய கோணத்தில், மக்கள் மொழியில் உணர்ச்சி பூர்வமான காவியமாக படைத்திருக்கிறார் பூமணி. 

கொம்மை
பூமணி
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு 

Thursday, April 5, 2018

அம்புப் படுக்கை தொகுப்பு- ரமேஷ் கல்யாண் கடிதம்


அன்புள்ள சுனில் கிருஷ்ணன்,

உங்கள் அம்புப்படுக்கை தொகுதி வாசித்தேன். ஆரோக்கியமான துவக்கம். ஒன்றை சொல்லிவிடவேண்டும்.முதலில் நான் வாசகன். பிறகுதான் அபிப்ராயம் சொல்பவன். விமர்சனம் என்பது பெரிய வார்த்தை. அது இன்று படாத பாடு படுகிறது. நேர்மையான வாசகன் என்பவன்தான் எழுதுபவரின் தெம்பு. படிக்கும்போது விமர்சகனுக்கு இருக்கும் ஆளுமையின் கனம் வாசகனுக்கு இல்லை. அவனுக்கு அது ஒரு குழந்தையை தூக்கி கொஞ்சி பிறகு விட்டுவிடுவது போல. அப்படித்தான் நான் நினைக்கிறேன். ஒருவன் விமர்சகனுக்காக எப்படி எழுதுவது இல்லையோ அப்படி நான் வாசிக்கையில் விமர்சகனாக இருப்பதில்லை. அதுவே படைப்புக்கு செய்யும் நேர்மை. பிறகு வரும் அபிப்ராயங்கள் அதனளவில் முக்கியமானவை.

உண்மையாக சொல்வதானால் அம்புப்படுக்கை கதை எனக்கு  லேசான சோர்வை அளித்தது. கதையில் இருக்கும் (அல்லது அப்படி எனக்கு தோன்றிய ) ஜெயமோகனின் வாசனை ஒரு காரணம். அம்புப்படுக்கை பீஷ்மர்,  லாசராவின் உத்தராயணம் போன்றவற்றை அறிந்தபின் இந்த கதை போதிய உந்துதலை எனக்கு தரவில்லை. ஒருவேளை  எனது எதிர்பார்ப்பு மேலதிகமானதாக இருந்திருக்கவும் கூடும். 

பீஷ்மர் நீங்கள் சொல்வது போலவே பற்றற்றவர் இல்லை. அதீத பற்று கொண்டவர். பற்று என்பது நியாயம் என்பதற்கு எண்ணையில் நீர் நிலைமை. அதில்தான் அவர் இருந்தார். அது தாமரை இல்லை தண்ணீர் விஷயம் அல்ல. ராஜ்யத்தின் மேல் இருந்த பற்று (சுயம் சார்ந்த ஒன்று அல்ல) போரையே கொண்டுவந்தது. ஆனால் அம்புப்படுக்கை ஒரு வலிமை. தனது முடிவை தான் விரும்புகையில் ஏற்பது என்பதற்கு மாபெரும் மனோவலிமை வேண்டும். தற்கொலையின் கோழைத்தனம் இதிலிருந்து எவ்வளவு தூரம் என்பதை அறிய முடியும். இதற்கிடையில் தனது இருப்பை தனது நியாயங்கள் தராசில் தானே இட்டுக்கொண்டு மிதக்கும் நிலையே அம்புப்படுக்கை. அது இம்சை அல்ல. அது ஒரு பெருவலிமை. இந்த கதையில் கிழவரைப் பற்றிய விவரணைகள் அருமை. இறுதியில் மருத்துவன் அவர் பிழைப்பார் என்று சொல்லி வந்த சில நிமிடங்களில் பின்னால் அழுகுரல் கேட்பது என்பது வாசகன் தனக்குள் பேசிக்கொள்ளும் இடத்தை அளிப்பது கதைக்கு வலு சேர்க்கிறது.

ஆனால் ஆரோகணம் நிறைவளிக்கும், தொகுப்பின் மிக நல்ல கதை. மறுபடி அதை வாசித்தேன். கதை சொல்லியிருக்கும் விதம் அருமை. பனி படர்ந்த வெளியை பக்கங்களில் விரவ விட்டிருக்கிறீர்கள். பனிப்பரப்பில் நடக்கும் கிழவர் யார் என்பதை மெதுவாக ஊகிக்க விட்டிருக்கிறீர்கள். இந்நேரம் பா இருந்தால் என்று சொல்லும் வரியில். காந்தியடிகளின் ஆளுமை நம்பற்கரிய ஒன்று. அவரை வெறுக்கவோ எள்ளிப்பேசவோ மறுக்கவோ அதிகம் பிரயாசைப் பட வேண்டியதில்லை. ஆனால் அவரை அறிந்துகொள்ளத்தான் பிரயாசைப் படவேண்டும். காந்தி எனும்  திராட்சைக் கொடியில் உள்ள இனிப்புகளை அடைய புளிப்புகளை தாண்டி செல்லவேண்டும். அந்த முனைப்பு இல்லாத போது அவர் புளிக்கவே செய்வார். கோட்ஸே தனது புத்தகத்தில், முதல்நாள் குண்டு வெடிப்பு முயற்சி தோற்றபோது, அந்த இடத்தில் பதட்டமும் பரபரப்பும் இருந்தபோது, அதை பற்றிய துளி அச்சமும் இல்லாமால் - எதுவுமே நடவாதது போல கூட்டத்தில்  தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த காந்தியின் தைரியம், கோட்ஸேவை ஆச்சரிய படுத்தி இருக்கிறது. நாம் கொல்லப்போவது ஒரு சராசரி மனிதனை அல்ல என்ற உண்மை கோட்ஸேவுக்கு தெரிந்திருந்தது. 
அதுதான் காந்தி. 
அதனால் கோட்ஸே.
காந்தி என்ற மனிதராக இல்லாமல் ஒரு பண்பின் உருவமாக கதையில் உலவ விட்டிருக்கிறீர்கள். முன்னும் பின்னும் பனி படர்ந்து நீளும் அமானுஷ்யப் பரப்பில், எத்தனை தூரம் கடந்து வந்தாலும் கடந்தது போலவே இல்லை என்று சொல்லும் வரி, அது பாதையே இல்லை. ஒரு விரிவு என்று சொல்கிறது. ஆகாயத்தில் பாதை இல்லாதது போல பூமியில் ஒரு பனி ஆகாயம்.  பிரமிள் எழுதிய ஒரு கதையில் ஒருவன், நடந்து செல்லும் ஒரு புத்த பிட்சுவை (சரியாக நினைவில்லை) பார்த்து அவரை பிடிக்க ஓடுவான். ஆனால் அவர்களிடையே இருக்கும் தூரம் எப்போதும் குறையாது.  ஏறக்குறைய அப்படி ஒரு உணர்வை இந்த வரி தந்தது. பனிப்புயலில் கிழவர் தடுமாறும்போது நாய் மட்டும் சாதாரணமாக ஒரு பாறையின் மேல் அமர்ந்து அவரைப் பார்த்துக்கொண்டிருக்கும். மிக நல்ல ஒரு குறிப்புணர்த்து வரி. அந்த நாய் என்ன என்பது போகப்போக புரிய ஆரம்பிக்கிறது. ஆனால் அது என்ன என்று நீங்கள் உடைத்து சொல்லி விட்டீர்கள். அப்படி சொல்லாமல் விட்டிருந்தால் கதை இன்னும் ஒரு படி மேலே மிதக்கும். கதையின் இறுதியில் எவ்வித கிளர்ச்சியும் இல்லாமல் கால தேவனை அவர் சாமான்யமாக பார்க்கும் இடத்தில் நன்றி என்று ஒரு வார்த்தையை மட்டும் உதிர்க்கும் இடத்தில்  , குண்டு வெடித்த சப்தம் கேட்டு பதறாத மோகன்தாஸ் தெரிந்தார். சொர்க்கத்தில் எனக்கென்ன வேலை என்று கேட்கும் இடத்தில் மோகன்தாஸ் காந்தி மகாத்மா காந்தியாக மாறும் இடம்.  இதோ நீங்கள் விரும்பும் இடம் என்று காட்டும்போது அங்கே வருந்துபவனும், அதற்கு மருந்து ஈடுபவனும், எரியூட்டுபவனும், சாம்பலாபவனும் என எல்லோரும் தன்னுடைய உருவத்தை போலவே இருப்பவனாக இருப்பது என்பதை கதையின் உச்சம். இந்த கதையின் வெற்றி என்பது காந்தியின் பெருமையாக மாறிவிடும் - மாற்றிவிடுவது அல்ல, மாறிவிடுவது - இந்த புள்ளியில் கதை ஓங்கி நிற்கிறது. ஆரோகணம் என்ற பெயர்ப்பொருத்தம்! 

பேசும் பூனை - ஒரு மிக நல்ல சமகால நவீன கதை. இவைதான் தற்போது தேவை. மொபைலில் பூனை அப்ளிகேஷன் விளையாட்டைப் பற்றி தெரியாதவர்கள் இந்த கதைக்குள் நுழைய முடியாது. அந்த விளையாட்டை விளையாடியதைப் பார்த்தவர்கள் இன்னும் எளிதாகவும், தானே விளையாடிப் பார்த்தவர்கள் அதைவிட இன்னும் எளிதாகவும் நுழையலாம். ப்ளூ வேல் அபாயங்களை மிருதுவாக பூனை வழியாக நுழைந்துவிட்டது சாமார்த்தியத்தின் அழகு. தற்போதைய துடுப்பாட்ட வாழ்வுச் சூழலை சொல்வதில்தான் இந்த கதை மெருகு பெற்றுள்ளது. சுருக்கமாக - பண வசதி இருக்கும்போது, வீட்டு நபர்கள் தொலைவில் இருக்கையில், நேரம் நமது கையில் அதிகமாக புரளும்போது, நமது அறிவு என்பது எவ்வளவு முக்கியமான உபகரணம் என்பதை இக்கதை சொல்கிறது. குழந்தை லயித்து விளையாடும் பூனை விளையாட்டு பெரியவர்கள் விளையாடுகையில் வேறொரு பூனை ஆகிறது. அவள் அதற்கு அடிமையாகி அது சொல்லும்படியெல்லாம் நடப்பதும், வீட்டு தேவைகள் அனைத்தையும் அதுவே கண்காணித்து, நிர்வகிக்க ஆரம்பித்து அது அடையும் இடம் ராட்சசமான இடம். கணிப்பொறிகளும் கைப்பேசிகளை என்னவெல்லாம் செய்யக்கூடும் என்பது அதிர்ச்சியூட்டும் உண்மை. இதில் ஒரு நகைச்சுவையான நிஜம் என்ன என்றால் - அவள் தனது குழந்தையிடம் பூனைக்கு சோறு வைக்கவில்லையா என்னு கேட்க - அது ..அட போம்மா.. அது சின்ன பசங்க விளையாட்டு என்று சொல்லி வேறொரு விளையாட்டுக்கு மாறி விட்டிருப்பாள். உண்மையில் இவை குழந்தைகளை விட பெரியவர்களுக்குதான் ஆபத்து. இதன் நடுவே அவள் கணவன் வெளிநாட்டில் இருந்து பேசுவதை, வீடியோவில் பேசுவதை சொல்லி - இப்போதெல்லாம் பிலிப்பைன்ஸ் நண்பர்கள் எண்கள் தேவையாய் இருக்கவில்லை என்ற ஒரு வரியில் அவனது வாழ்க்கை தேவையை சொல்லிக் கடக்கும் சூட்சுமம் நன்றாக இருக்கிறது.  இறுதியில் அந்த பாடல் கூட பூனையை குரலில் ஒலிப்பதாக முடித்திருப்பது, புதிய கவலையை சூசகமாக காட்டி சென்றுவிடுகிறது. ஒரே ஒரு திருத்தம். அவனுக்கு ஒரு செய்தியை வாட்சப்பில் அனுப்பிவிட்டு, பிறகு அதை நீக்க முடியாம போவதாக ஒரு வரி வருகிறது. அதனால் கொஞ்சம் பிணக்கு போன்ற நிலைமையும் உருவாகிறது என கதை நகர்கிறது. ஆனால் அனுப்பிய வரியை நீக்கும் வசதி இப்போது வந்து விட்டது. அதற்கு தகுந்தபடிகதையில் சிறிய  காஸ்மெட்டிக்  மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும்.(அடுத்த தொகுப்பில்). நவீன கதைகளுக்கான கரு இப்படி சாதாரண விஷயங்களில் உள்ள அசாதாரணங்களில் இருந்தே எழவேண்டும். வாழ்த்துக்கள் சுநீல்! 

கூண்டு என்ற கதையும் ஒரு மாய யதார்த்த வகையில் இருக்கிறது பல வருடங்களாக கூண்டு செய்யப்படும்போது மக்களின் எதிர்பார்ப்பு ஒரு பிரம்மாண்டமான ஒன்று. ஆனால் வருவதோ சாதாரண ஒன்று. ஆனால் அது நிகழ்த்தும் ஆச்சரியம் மிகப் பிரமாண்டம். ஆனால் இதில் கூண்டுக்கு வெளியே இருப்பவர்கள் தாம் சுதந்திரமாக இருப்பதாக என்னும்போது அடுத்த சுற்று கூண்டு எழுகிறது. பிறகு அதை சுற்றி மற்றொன்று. இந்த மாயத்தன்மையில் நாம் ஏதோ ஒருவகையில் வேறொரு கூண்டுக்குள் அடைபட்டபடியேதான் இருக்கிறோம் என்பதை சொல்கிறது. இயக்கம் சார்ந்த சமூக மனிதன் இதிலிருந்தும் விடுபட முடிவதில்லை. அப்படி விடுபடுவதும் வேறொரு தளைக்குள் நுழைவதே. ஒரு கவிதையின் படிமத்துக்கு உரிய விஷயம் ஒன்றை கதையாக எழுதி இருக்கிறீர்கள்.

பூ முகத்தை பா போ மு பெ.. கதையை ஒரு நடைமுறைச்சூழலின் ஒரு பக்கம். ஒரு ஆல்பத்தை புரட்டும்போது கண்ணில் படும் ஒரு புகைப்படம்.

வாசுதேவன் ஆயுர்வேத சிகிச்சை முறை சார்ந்த மற்றொரு கதை. ஆனால் இந்த கதையின் உயிர் என்பது அந்த மருத்துவரின் வார்த்தையில் இருக்கிறதாக உணர்கிறேன். பல வருடமாக சுயநினைவற்று கிடைக்கும் வாசு பிழைத்துவிடுவான் என கடைசி நொடிவரை நம்பி காத்திருக்கும் அந்த அப்பா-அம்மா அருமை. நாம பேசறது அவனுக்கு கேக்கும். நல்லதா நாலு வார்த்தை மனசார நினைச்சுகிட்டு நம்பிக்கையோட செஞ்சு பாருங்க.. என்ற அதுதான் இன்றைய மருத்துவத்தில் காணாமல் போயிருக்கும் வஸ்து. உண்மையை சொல்லிவிடலாம் என்று மருத்துவ அறிவும், அனுபவமும் சேர்ந்த உண்மையை அந்த அம்மாவிடம்  சொல்லும்போது, இந்த உலகில் அவனது உயிர்பிழைத்தலுக்கு ஒருவேளை சாத்தியமாகி இருக்க கூடிய ஒரே நம்பிக்கை இழையும் பலமிழக்கிறது. அது அவன் அப்பாவையும் தொற்றிக்கொள்கிறது. இனி நம்பிக்கை என்பது மறைந்து போகும்போது அவனது இறப்பு நிகழ்கிறது. இந்த இடம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் சன்னமாக கதையில் நிகழ்கிறது. என்னை சற்றே இம்சித்த கதை. அசைவற்று கிடைக்கும் வாசுவின் கண்களில் துளிர்த்து வழியும் கண்ணீருக்கு என்ன பொருள்? அதுதான் மருத்துவத்தின் சவால். அறிவியலைத் தாண்டி நிகழும் விஷயங்களுக்கு நாம் அறிவியல் காரணங்களால் அர்த்தம் தேட முயல்வதும், அளவிட முயலும் அபத்தமும்  நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  என்னுடைய கிராமத்தில் ஒரு ஆள். கட்டை குட்டை. சிக்ஸ் பேக் என்று பெயரிடப்படாத ஆனாலந்த திண்மை. தலைமுடிகள் கருப்பு போலோ மிட்டாய்களை குவித்தது போலிருக்கும். மரம் வெட்டும் வேலை. அவனுக்கு சுகவீனம் என்று வந்து அதிகம் பார்த்ததில்லை. அவன் சொல்வான் காய்ச்சல் வந்ததுன்னா போத்திகிட்டு படுக்க மாட்டேன். விடிய காலைல சூரியன் வரும் முன்னாடியே குளத்தில் போய் முழுக்கு போடுவேன். அப்படியே வந்து துர்கை கோவிலை பதினெட்டு முறை சுத்துவேன். அந்நேரத்துக்கு சூரியன் எழுந்துவிடும். அன்று ஒரு நாள் அசைவம் சாப்பிடாமல் ஒரு வேலை கஞ்சி. மறுநாள் வேலைக்கு போயிடுவேன் என்பான். அந்த சூத்திரத்துக்கு எந்த அறிவியல் விளக்கமும் இன்றுவரை எனக்கு தெரிந்ததில்லை. 

திமிங்கிலம் கதை சுவாரசியமான ஒன்று. தொழில் நுட்பம் என்பதே ஒரு திமிங்கிலம். அது தன் இனத்தையே தானே தின்று  கொழுக்கும் உயிரி. குறிப்பாக தற்போது  இணைய ஊடகத்தில் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களை பார்க்கும்போது இதன் தாக்கமும் ஆழமும் புரியும். பஸ்மாசுரன்கள்தான் நாம். சில வருடங்கள் முன்பு - மனிதர்கள் இயந்திரமாகி வருவதைப் பற்றி கவலை இல்லை. இயந்திரங்கள் மனிதர்களாகி வருவதே ஆபத்து என்று ஒரு சுண்டல் காகிதத்தில் படித்தேன். இன்று அதை நினைத்துக் கொள்கிறேன். அறிவும் அது உண்டாக்கும் வெற்றியின் வெளிச்சமும் மயக்கமும் மனிதர்களை மனிதர்களிடம் இருந்து பிரித்து விடுகிறது. ஆனால் இது பற்றிய பிரஞை இருவரிடமும் இல்லை என்பதே சோகம். எல்லாமே அறிவின் கண்கொண்டு பார்க்கப்படுகிறது. மனிதர்கள் திரும்பவும் குழுவாகவும், தனித்த உயிரியாகவும் திரும்புகிறானோ என்று தோன்றியது.  

"கனவு நினைவில் இருக்கிறது என்றாலே அதை நீ புனைகிறாய் என்றுதானே பொருள்" "பிணப் பொறுக்கிகள்" (எனது உடல் அரசுக்கு உரியது என்று எழுதி வாங்கிக்கொண்ட பின்பே மருத்துவத்துக்கு அனுமதி) "உனது கண்களில் நான் அதை கண்டுகொண்டேன். நீ என்னை வெற்றி கொண்டுவிட்டாய். இந்த நிறைவுடன் நாம் பிரிவோம்" போன்ற நல்ல வரிகள் உள்ள சற்று தேவைக்கு அதிகமாக நீண்டுவிட்ட கதை.

குருதிசோறு ஒரு விசேஷ முடிச்சுள்ள கதை. கிராமத்தது நம்பிக்கைகள் வெறும் கட்டுக்கதையாக இல்லை.வேறு ஏதோ அதற்குள் இருக்கிறது. அது மூடி இருக்கும் உள்ளங்கை. மூடி இருக்கும்போது அதில் உள்ளதாக நம்பியது திறக்கும்போது இருப்பதில்லை. மருளாளி, சுடலை,கதைசொல்லி, பாலாயி, வறட்சி, நோய்,இறப்பு, என பல இடங்களை தொட்டுச்செல்லும் கதை யாருமே பார்க்காத கிராமத்து பூஜை  ஒன்றை இரு சிறுவர்கள்  பார்ப்பதும், அதனால் இருவரும் இருவரும் உடல் நலம் குன்றி விழுவதும், தேறி எழுவதும், படையல் நடக்கும் இடத்தில் இருக்கும் கற்கள் பதினொன்று என்று கதையை முடிப்பதுமாக  நன்றாக அமைந்த கதை. தொகுப்பிலேயே அதிக பக்கங்கள் கொண்ட கதை. ஆனால் நீளம் அதற்கு தடையாக இல்லை என்பதே கதையின் வெற்றி என்பேன். 


வாழ்த்துக்கள்.

வாய்ப்பு கிடைப்பின் சந்தித்து பேசுவோம்.

அன்புடன் 
ரமேஷ் கல்யாண்



ரமேஷ் கல்யாண் அவர்களுக்கு நன்றி. 

Friday, March 30, 2018

சம்பை ஊற்று பாதுகாப்பு

நேற்று (29/3/18) கண்ணதாசன் மணிமண்டபத்தில் சம்பை ஊற்று மற்றும் சமூக பாதுகாப்பு இயக்கம் நடத்திய இரண்டாம் ஆண்டு உலக தண்ணீர் தின கருந்தரங்கில் பார்வையாளாராக கலந்துகொண்டேன். 

சம்பை ஊற்று காரைக்குடியின் முக்கியமான நீராதாரம். artesian spring என்று சொல்வார்கள், அவ்வகையான இயற்கை ஊற்று. அரியவகையிலான இவ்வகை ஊற்று இந்தியாவிலேயே இப்பகுதியில் மட்டுமே உள்ளது என்கிறார்கள். சம்பை ஊற்று தாழ்வான பகுதியில் உள்ளது. அதை மையமாக கொண்ட பதினைந்து கிமீ வட்டம் மேடான பகுதிகள். மழைநீர் வந்து சேரும் பகுதியாகவும் உள்ளது. சம்பை ஊற்றை ஒட்டி மூன்று கண்மாய்கள் உள்ளன. அவை வேளாண்மைக்கு பாசன நீர் அளிக்கின்றன. பல வருடங்களுக்கு முன் கடப்பாரை வைத்து குத்தினாலே நீர் பீறிடுமாம். இப்போது சுமார் முன்னூறு அடி ஆழத்திலிருந்து நீர் உறிஞ்சி காரைக்குடிக்கு அளிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு சுமார் ஒருலட்சம் லிட்டர் நீர் இரண்டு லட்சம் பேர் வசிக்கும்  காரைக்குடியின் தேவைக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது. 

அண்மையில் மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் நிகழ்த்திய ஆய்வில் சம்பை ஊற்று நீர் 180 அடிவரை மாசடைந்ததாக அறிக்கை அளித்துள்ளது. இதற்கு இரு முக்கிய காரணிகள் அங்கு பேசியவர்களால் அடையாளம் காட்டப்பட்டன. முதலாவதும் முக்கியமானதுமான காரணம் கோவிலூர் தமிழ்நாடு கெமிக்கல்ஸ் ப்ரைவேட் லிமிடட் எனும் வேதிப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலை. நாளொன்றுக்கு சுமார் இருபது லட்சம் லிட்டர் தண்ணீரை சம்பை ஊற்றிலிருந்து எடுத்துக்கொண்டு கழிவை வெளியே விடுகிறது. அக்கழிவு கோவிலூர் கண்மாயை பாழ்படுத்தி நிலத்தடி நீரையும் மாசாக்கியுள்ளது. அண்மைய ஆண்டுகளில் இரண்டு மூன்று முறை ஏதோ வாய்வு கசிவு ஏற்பட்டு அப்பகுதியில், சுற்றியுள்ள பள்ளிகளில் மூச்சு திணறல் ஏற்பட்டது. கருத்தரங்கில் பேசிய முன்னாள் ஊராட்சி தலைவர் பாதரக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் கோவிலூர் வாசிகளுக்கு நிகழும் உடல் உபாதைகளைப் பற்றி குறிப்பிட்டு பேசினார். குறிப்பாக பெண்களுக்கு கரு சிதைவு அதிக அளவில் ஏற்படுகிறது என்றார். உதயகுமார் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுகிறது என்றார். இவற்றுக்கெல்லாம் போதிய ஆதாரம் உள்ளதா என்பது வேறு விஷயம். ஆனால் இந்த வேதியல் ஆலை சர்வ நிச்சயமாக பெரும் சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை. பசுமை தீர்ப்பாயம், வழக்குகள் என்று அலைந்தும் கூட இந்த ஆலையை மூட இயலவில்லை. காரணம் இது ராமச்சந்திர உடையார் அவர்களின் நிறுவனம். மேலும் ஆலை உள்ள பகுதியை மட்டும் தொகுதி மறுசீரமைப்பின் போது சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவிலூரில் இருந்து பிரித்து சங்கராபுரம் ஊராட்சியில் கொண்டு சேர்த்துள்ளார்கள். இந்த ஆலைக்கு எதிராக இன்று வரை சங்கராபுரம் ஊராட்சி தீர்மானம் இயற்றவில்லை. 

இரண்டாவது காரணம் காரைக்குடி நகராட்சியின் அலட்சியம். காரைக்குடியின் கழிவு நீர் மொத்தமும் ஊற்றுக்கு அருகே உள்ள காரைக்குடி பெரிய கண்மாயில் சென்று சேர்கிறது. இப்போது பாதாள சாக்கடை திட்டம் வேறு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நீரை எங்கே சென்று வெளியேற்ற போகிறார்கள் என தெரியவில்லை? 

ஒட்டுமொத்தமாக தீர்வுகள் என யோசிக்கும் போது கீழ்வரும் புள்ளிகள் முக்கியமாகின்றன 
1. தமிழ்நாடு வேதிப்பொருள் ஆலையை இங்கிருந்து அகற்றுவது. அதற்கு காரைக்குடி முழுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வெகு மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல வேண்டியது அவசியம். 

2. நகராட்சியின் செயல்களை சீர் செய்தல். குறிப்பாக கழிவுகளை திசை  திருப்பி, சுத்திகரித்து, மறு சுழற்சியில் பயன்படுத்த வேண்டியது அவசியம். 

3. சம்பை ஊற்றை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று அரசானை இருந்தும் அது மீறப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 

4. கண்மாய்களை தூர்வார வேண்டும். நீர் வரத்து பகுதிகளை கண்காணித்து சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 

5. காரைக்குடியில் புதிய குடியிருப்புகள் பெருகுகின்றன. தான்தோன்றித்தனமாக ஆழ்துளை கிணறுகளை போட்டுக்கொண்டு செல்கிறார்கள். நிலத்தடி நீரை பாதுகாக்க உடனடியாக புதிய ஆழ்துளை கிணறுக்கு அனுமதி அளிப்பதை நகராட்சி நிர்வாகம் நிறுத்த வேண்டும்.

குடிநீர் ஆதாரம் சார்ந்து மிக முக்கியமான சிக்கலாக இது வரும் நாட்களில் வெடிக்கும். சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும். 

Sunday, March 25, 2018

சிறுகதை குறிப்பு - 3- வேட்டை- யூமா வாசுகி

முன்னரே இக்கதையை வாசித்திருந்தாலும், இன்றைய மரப்பாச்சி இலக்கிய வட்ட கூடுகைக்கு இக்கதையை பேசுவதாக தீர்மானம் செய்துகொண்டதால் மீண்டும் இக்கதையை வாசித்தேன். எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களால் தமிழின் சிறந்த கதைகளில் ஒன்றாக அடையாளபடுத்தபடும் கதைகளிலொன்று. எனது வாசிப்பையும், கூடுகையில் நிகழ்ந்த வாசிப்பையும் தொகுத்து விளக்கிகொள்ளும் முயற்சி இக்கட்டுரை.

கதை குடகை களமாக கொண்டது. குடகின் கூர்கி மக்களின் வாழ்வை சொல்வது. இந்து இஸ்லாமிய மதங்கள் இருந்தாலும் கூர்கிகளாக, அண்ணன் தங்கையாக உறவுள்ளவர்களாக உள்ளார்கள். கூர்கி சமூகம் ஏறத்தாழ பழங்குடி சமூகம்போல தொன்மையான வழமைகளை கொண்டது. உஸ்மானி, பொனச்சா, பினு, ராசய்யா, ஷகீலா என கலவையான அடையாளங்களை சுட்டும் பெயர்கள். மத அடையாளம் பின்னுக்கு தள்ளப்பட்டு பிராந்திய இனக்குழு அடையாளத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் சமூகம். இனக்குழு சார்ந்த பெருமிதமும் வெளிப்படுகிறது. தன் மகனை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும் கூட மற்றொரு கூர்கியை தான் தங்கை மகள் தேர்கிறாள் என்று உஸ்மானி ஆசுவாசம் கொள்கிறார். 

நிகழ்கால திருமண நிகழ்வும், அதற்கு முன்பான மகனுடனான உரையாடலும் ஊடுபாவாக பின்னிசெல்கிறது. துவக்கத்திலேயே குடகின் பெருமைகளை யாரும் பேணுவதில்லை எனும் வருத்தம் உஸ்மானிக்கு வருகிறது. அப்பர் கொடவா பிரிட்ஜ் எழுத்துக்கள் அழிந்து போயிருக்கிறது. "கூர்க் ஆச்சாரப்படி நடப்பவன் எவனைப் பார்க்க முடிகிறது. சண்டை சச்சரவின் போது ஒருத்தருக்கொருத்தர் வெட்டிக் கொல்லும்ம்போதுதான் மூதாதைகளின் வேட்டைப் புத்தி தெரிகிறது. மற்றபடி நிஜ கூர்க் என்று எவனுமில்லை. கல்யாணம் கருமாதின்னு வரும்போது செய்கிற சடங்குகளெல்லாம் கூட கொஞ்ச நாளைக்குத்தான். பிள்ளைகளை வெளிநாடு, வெளி மாநிலம்னு படிக்க அனுப்பிவிடுகிறார்கள். அதுகள் படிக்கப் போனபோது கத்துக்கிட்ட பழக்கத்தையெல்லாம் இங்கேயும் நடத்த ஆரம்பிச்சாச்சு. எதுவானாலும் ராசையா, இந்த மடிக்கேரி மண்ணில் கூர்க்கியா பொறந்த ஒருவர் எந்த நிலையிலேயும் வாக்குத் தவறக்கூடாது" என்று அங்கலாய்க்கிறார். பண்பாட்டு கலப்பு குறித்து கவலை கொள்கிறார். இந்த வரிகளில் உஸ்மானியின் பாத்திரம் துலக்கம் அடைந்து விடுகிறது.மேலும் கதைக்கான முக்கிய முடிச்சும் புலப்பட்டு விடுகிறது. தான் விரும்பிய பெண் கிடைக்காத விரக்தியில் மகன் உடைந்து போயிருக்கிறான். இதற்கெல்லாம் உடைந்து விடலாமா? இத்தனை பலவீனமாக வளர்த்து விட்டேனா? "நீ அழுகின்ற பாவம் அவளைத் தொட வேண்டாம். போகட்டும் விடு. போகிற இடத்தில் நல்லா இருக்கட்டும்..." என்று ஆறுதல் சொல்கிறார். அவனுடைய உற்சாகம் வற்றி, அவள் நன்றாகவே இருக்கட்டும், நாம் அங்கிருந்து வெளியேறி வேறு இடத்திற்கு குடி பெயரலாம் என்கிறான். தந்தையை திருமணத்திற்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கிறான். மீறி சென்றால் தான அங்கு இருக்க மாட்டேன் என்கிறான். தந்தை அவனை தேற்றுகிறார்.  

திருமண விழா விரிவாக சித்தரிக்கப்படுகிறது. கூர்க் திருமண வழக்கங்கள், அதன் கொண்டாட்டங்கள்,மது விருந்து என பண்பாட்டு சித்தரிப்பு வலுவாக உள்ளது. உஸ்மானி முழு மனதோடு கொண்டாட்டங்களில் உற்சாகமாக பங்கு கொள்கிறார். கொண்டாட்டத்திற்கு ஏதுவாக மூத்திர பையையும் தூக்கிக்கொண்டு வருகிறார். தந்தை மன்னிக்கும் பரந்த மனமுடையவர்,மகன் குறுகிய மனமுடைய இறுக்கமானவன் எனும் சித்திரமே கதையின் இறுதி முடிச்சு வரை தென்படுகிறது. இறுதி நிகழ்வின் வழியாக இந்த சமன்பாடு அப்படியே தலைகீழாகிறது. ஒரு அதிர்ச்சிகரமான திருப்பத்துடன் கதை முடிகிறது. 

விமலாதித்த மாமல்லன் இக்கதை குறித்து எழுதியுள்ள சிறு விமர்சன குறிப்பை வாசித்தேன். அதில் இந்த இறுதி திருப்பத்தை சுட்டிக்காட்டி ஒரு விமர்சனத்தை வைத்திருந்தார். இறுதி திருப்பத்திற்கான குறிப்புகள் கதையில் இல்லாததால் இது மேலான கதையாக இல்லை என்று வரையறை செய்திருந்தார். இந்த விமர்சனத்தில் நியாயம் இல்லாமல் இல்லை. இப்போது எழுப்பிக்கொள்ள வேண்டிய கேள்வி உஸ்மானி கொலைக்கான திட்டமிடலுடன் தான் வீட்டிலிருந்தே கிளம்பினாரா? அல்லது கணப்பொழுதில் நிகழ்ந்ததா? முந்தையதாக இருந்தால் மாமல்லனின் விமர்சனம் ஏற்புடையதே. ஆனால் 'சண்டை சச்சரவுகளின் பொது விழிப்பு கொள்ளும் மூதாதையின் வேட்டை புத்தி' சட்டென எதிர்பாராமல் அவரையும் மீறி வெளிப்பட்ட தருணமாக இறுதி நிகழ்வை கொண்டோம் என்றால் மாமல்லனின் விமர்சனத்தை ஏற்க வேண்டியதில்லை. இரண்டாவது வாசிப்பிற்கான குறிப்புகளே கதையில் உள்ளது என்று எண்ணுகிறேன். 

மேலும் உஸ்மானி யாரை கொல்கிறார் எனும் தேர்வில் இக்கதையின் தலைப்பும் முடிச்சும் உள்ளது என்றே எண்ணுகிறேன். மலைவாழ் வேட்டை சமூகம், இன உணர்வும் மேட்டிமையும் உண்டு. அன்னியரை எதிரியாக காண்கிறது. ஆகவே மகனை கைவிட்ட தன் உறவினரான தங்கை மகளை விட்டுவிட்டு அவள் தேர்ந்தெடுத்த கணவனை கொல்கிறார். இதுவே வேளாண் சமூகமாக இருந்தால் சாதி ஆணவ படுகொலையே நிகழ அதிக வாய்ப்பு. பழைய கூர்கிக்கும் நவீன கூர்கிக்கும் இடையிலான மோதல்.அல்லது நவீனத்திற்கு எதிரான பழமைவாதத்தின் பிடிவாதம் என்று வெவ்வேறு கோணங்களில் இக்கதையை அணுக முடியும். 

"விளக்கிலிருந்து தவறி விழுந்த வெட்டுக்கிளியொன்று மதுவிற்குள் தத்தளித்தது." எனும் வரிக்கு அடுத்த் வரியாக "பாதி நிரம்பிய பன்னீர்ப் பானையை தலையில் வைத்துப் பிடித்திருந்தாள். பானைக்குள் ரோஜா இதழ்கள் மிதந்தன." என்று வருகிறது. இவ்வரிகள் இக்கதையை கவிஞனின் கதையாக்குகிறது. ஒருவகையில் இக்கதையை இவ்விரு உருவகங்களின் முரணாக காணமுடியும் என்றே எண்ணுகிறேன். யூமாவின் படைப்புலகே கூட மென்மைக்கும் குரூரதிற்குமான முரணில் உருவாகுபவை என்று தோன்றுகிறது. கவித்துவமான விவரணைகளும் உக்கிரமான உணர்வுகளும் சங்கமிக்கும் நல்ல கதைகளிலொன்று.  



x

Thursday, March 22, 2018

ரத்த உறவு - நாவல் வாசிப்பு

சில வருடங்களாக வாசிக்க விரும்பிய நாவல். தற்போது அச்சில் இல்லை என்பதால் கிடைப்பதற்கு அரிய நாவலும் கூட. யூமா வாசுகி தன் கையெழுத்து போட்டு நண்பர் காளி பிரசாத்திற்கு அளித்த அவருடைய பிரதியை கடன் பெற்று வாசித்து முடித்தேன்.

தமிழ் நாவல் வரிசையில் 'ரத்த உறவிற்கு' மிக முக்கியமான இடமுண்டு. இயல்புவாத எழுத்தில் ஒரு மைல்கல். எனது வாசிப்பின் எல்லையில் தமிழில் குடும்ப வன்முறையை இத்தனை அப்பட்டமாக இந்நாவல் சித்தரித்த அளவிற்கு வேறு எந்த நாவலும் சித்தரித்ததில்லை. ரத்த உறவுடன் ஒப்பிடத்தக்க நாவல் என்றால் பைரப்பாவின் ' ஒரு குடும்பம் சிதைகிறது' நாவலை சொல்லலாம். எனினும் கதாபாத்திரங்களின் பன்முகத்தன்மை காரணமாக குடும்பம் சிதைகிறது ரத்த உறவை காட்டிலும் மேம்பட்ட நாவலாக மதிப்பிடுவேன்.

ஒன்றாக வசிக்கும் மூன்று சகோதரர்களின் குடும்பத்தில், இரண்டாமவரின் குடும்ப கதை ரத்த உறவு.  தினகரனின் மூத்த மகனின் காமாலை மரணத்துடன் துவங்குகிறது நாவல். மகனின் மரணத்திற்கு தந்தையின் அசட்டைத்தான் காரணம் என கொந்தளிக்கிறாள் அன்னை. தினகரன் குடியும் வன்முறையுமாக சீரழிகிறான். மகளை துரத்தி துரத்தி அடிக்கிறான், தம்பியுடன் சேர்ந்து மனைவியின் புடவையை உருவி அடித்து மண்டையை பிளக்கிறான், மகனை ஆல மரத்தில் கட்டிபோட்டு சாத்துகிறான், சிறிய மகனை வெயிலில் பிரட்டுகிறான், திருக்கை எலும்பை கொண்டு ரத்த விளாரை ஏற்படுத்துகிறான். இதே தீனன் தான் தன் மகன்களை கைபிடித்து அலுவலக விழாவிற்கு அழைத்து செல்கிறான். சாராயக்கடையில் தன் மகளையொத்த வயதுடைய பெண்ணை பார்த்து மருகுகிறான், அவளுக்கு மாமன் சடங்கு செய்கிறான். எல்லோரின் மரியாதைக்குரியவனாகவும் இருக்கிறான். அவ்வகையில் தீனன் நமது தந்தைகளின் பிரதிநிதி. இந்திய ஆண்களின் விந்தையான இரட்டை நிலையின் சான்று. அவன் மீது அத்தனை வெறுப்பு பொங்கினாலும் அவனுடைய மரணம் நம்மை வதைக்கிறது. ஓட ஓட விரட்டி அடித்தாலும், முகத்தில் காறி உமிழந்தாலும் கூட சாலையில் விழுந் கிடக்கும் அவனை மகள் சுமந்து வருகிறாள். அழாமல் விளையாடிக்கொண்டிருக்கும் தம்பியிடம் அழ சொல்லி வற்புறுத்துகிறாள்.

தீனனுக்கு எதிர்மாறாக அவருடைய அண்ணனின் பாத்திரம். பொறுப்பற்ற குடிகாரனாக மனைவியிடம் மிதிபட்டு புண்பட்டு இறக்கிறார். குழந்தைகளுக்கு பிரியமானவர். அவருடைய வீழ்ச்சி மனதை வதைக்கிறது. சித்தப்பா குடிக்காதவர் (ஒரேயொரு முறை குடிக்கிறார்) கிராம கணக்குபிள்ளை. அவருக்கும் அவருடைய மனைவிக்குமான உறவு சுமூகமாகவே செல்கிறது.ஆனால் அண்ணனின் பலவீனத்தை பயன்படுத்திகொள்ளும் சந்தர்ப்பவாதியாக இருக்கிறார். கடன் கணக்கை பொய்யாக எழுதி வீட்டை எழுதி வாங்குகிறார். போதையின் துணை இல்லாமலேயே அவரால் அடித்து துன்புறுத்தவும் முடிகிறது.  பூடகமாக தீனனுக்கும் அவருடைய தம்பி மனைவிக்கும் இடையிலான உறவு சொல்லப்படுகிறது.  மனைவியின் ஆதிக்கம், இணக்கம், கணவனின் ஆதிக்கம் என   மூன்று சகோதரர்களின் குடும்பங்களின் வழியாக மூன்று விதமான குடும்ப இயல்பை காட்டுகிறார் யூமா. நியாயமாக இணக்கமான தம்பதிகளின் மீது நேர்மறை பார்வை எழ வேண்டும் ஆனால் அவர்கள் சூழ்ச்சி மிகுந்தவர்களாக, சுரண்டுபவர்களாக இருக்கிறார்கள் எனும் போது இந்த தேர்வுகள் பொருளற்றவையாக ஆகின்றன. ஒழுக்க நடத்தைக்கும் உள்மன விரிவுக்குமான தொடர்பு கற்பிதம் என்பது இலக்கியத்தின்  வலுவான பேசுபொருள். 

ஒவ்வொரு அத்தியாமும் பெரும் பதைப்புடனே கடக்க முடிந்தது. எப்போது யார்? என்னவிதமான துன்புறுதலுக்கு ஆளாவார்கள் என பதறியது? வாசுகியோ, சின்னவனோ, பெரியவனோ அல்லது ரமணி அம்மாளோ இப்போது இறந்து விடுவார்களோ எனும் அச்சத்துடனே வாசித்தேன். சின்னவனின் கனவுப் பகுதிகள் கவித்துவமானவை, அபார கற்பனைகளால் நிறைந்தவை. நாவலின் மைய ஓட்டத்திற்கு இது தேவையற்ற தடை என்றொரு விமர்சனம் உள்ளதை அறிகிறேன். நேர்மாறாக எனக்கு இவை நாவலின் மிக முக்கியமான, உயிர்த்துடிப்பான அங்கமாக தோன்றியது. பிள்ளைகளின் உளநிலையில் குடும்ப வன்முறை செலுத்தும் பாதிப்பை வேறு எப்படி சொல்லிவிட முடியும்? வேறொன்றையும் அந்த கனவுகள் நிகழ்த்தின, தொடர் குரூரங்களில் இருந்து தேவையான பெரும் ஆசுவாசத்தையும் அளித்தன. மேலும் இந்த கனவு பகுதிகள் நாவலை யதார்த்தவாத தளத்திலிருந்து வேறு தளங்களுக்கு உயர்த்தி செல்கின்றன. நாவலின் இறுக்கத்தை மீறி பீறிடும் அபத்த நகைச்சுவை பகுதிகள் என பாட்டி மொட்டையிடம் குறி கேட்கும் பகுதி, சித்தப்பா தற்கொலை முயற்சியின் போது அண்டைவீட்டு பாய் கிணற்றில் குதித்து தடுக்க முயலும் கூத்து, பஞ்சாயத்தை குலைக்க பாட்டி முன்னெடுக்கும் யுத்தி, போன்ற பகுதிகளை சொல்லலாம்.

இந்த குடும்ப வன்முறை சுழலை எப்படி உடைக்க முடியும்? யாரேனும் மனம் திருந்தி விடுவார்களா? மரணம் மட்டுமே மீட்பளிக்க முடியும் என்பதும் புரிகிறது. சீக்கிரம் வந்து தொலைந்து இவர்களை மீட்டு தொலைக்க கூடாதா என்று கூட தோன்றியது. நாவலின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்று ரமணி அம்மாள் காவல்துறையை நாடும் இடம். காவலர் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்த பிறகு சகோதரர்களின் உடல்மொழி முழுதும் மாற்றம் அடைகிறது. வெறுப்பும் கூட உடல்ரீதியான துன்புறுத்தலாக வெளிபடாமல் மட்டுபடுகிறது. ஆனால் அண்டைவீட்டார் அவர் மீது கொண்ட பரிவு சுத்தமாக காணாமல் போகிறது. அவர் மீதான வன்முறையை எவ்வித தயக்கமும் இன்றி, 'போலீஸ் ஸ்டேஷன் போனவ' எனும் ஒற்றை புள்ளியில் புறம் தள்ளுகிறது. ஏனெனில் ரமணி அம்மாள் அங்கு ஒரு முன்மாதிரியை வைக்கிறார். குடும்ப வன்முறைக்கு காவல்துறையை நாடுவது என்பது அந்த கிராமத்தில் இல்லாத வழக்கம். அந்த புள்ளியில் அவரை அத்தனை ஆண்களும் எதிரியாக வரிந்து கொள்கிறார்கள். வாசுகி அக்காவும் ரமணியம்மாவும் எனக்கு குடும்பம் சிதைகிறது நாவலின் பார்வதியையும் நஞ்சம்மாவையும் நினைவுபடுத்தினார்கள். மனித உறவுகளின் வினோத நடத்தைகளை தீர்ப்பெழுதாமல் யதார்த்த தொனியில் சொல்லி செல்கிறார் யூமா. பெரியம்மாவின் வன்மமும் அவளுடைய மாறுதலும், அத்தனை அவமானத்திற்கு பின்னும் தீனன் மீது வாசுகியும், அம்மாவும் கொண்டிருக்கும் பற்றும், அந்த வீட்டிலேயே இருக்க வேண்டும் என விழைவது ஆச்சரியம் தான்.

 குறிப்பிட்டு கவனப்படுத்த வேண்டியது பாட்டியின் பாத்திர சித்தரிப்பு. முழுக்க சுயநலவாதியாக உலவுகிறார். இந்த சித்தரிப்பும் கூட என ஒரு குடும்பம் சிதைகிறது கங்கம்மாவை நினைவுபடுத்தியது. ஆனால் இவர் அவரை விடவும் ஈரமற்றவர். சொந்தமகன் இறந்த போதும் கூட அவன் விட்டு சென்ற சிறிய கடனை எப்படி வசூலிப்பது என மருகிக் கொண்டிருப்பார். பேரன் பேத்திகளின் மீது அணுவளவும் ஈர்ப்போ பாசமோ அற்றவர். மகன்களுக்கு சமமாக அமர்ந்து குடித்து அவர்களை தூண்டிவிடுபவர். தமிழ் இலக்கிய உலகில் பெண்களின் வழமையான தாய்மை, கருணை சித்தரிப்பை உடைத்த முதல் படைப்பு என்று ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாவை குறிப்பிடுவார்கள். எதிர்மறைத்தன்மை கொண்டவரை நாவலின் முக்கிய பாத்திரமாக ஆக்கி எழுதப்பட்ட நாவல். ரத்த உறவில் பாட்டி மைய பாத்திரம் அல்ல. அவரிடம் கனிவோ அல்லது இனிமையோ புலப்படும் தருணம் வராதா என மனம் துழாவி சலித்தது. நாவலின் மீதான விமர்சனமாக இந்த ஒற்றைப்படைத்தன்மை வாய்ந்த சித்தரிப்புகளை சொல்லலாம். மொத்த குடும்பமும் தீணனின் மனைவி மக்களை மட்டும் வஞ்சிப்பதாக உள்ளது. ஒருவகையில் தீணனின் தந்தையின் மரணத்திற்கு ரமணியம்மாவின் சகோதரர் காரணம் எனும் வன்மம் தான் இவர்களின் இந்த வஞ்சத்தின் முதல் கங்கு என தோன்றியது. இப்படி ஒரு சமநிலை பேணப்பட்டாக வேண்டுமா? அப்படி இருந்தால் தான் மேம்பட்ட இலக்கியமாகுமா? என்றொரு துணை கேள்வியை கேட்டுகொண்டால், அவசியமில்லை, அத்தகைய நிர்பந்தங்கள் ஏதுமில்லை. வலிய எழுதி அடையப்படும் சமநிலையை காட்டிலும் அகசான்றுக்கு நேர்மையாக திகழும் ஒற்றைப்படைத்தன்மை மேலானது. நாவலின் இறுதி பகுதி அளிக்கும் நிம்மதி அலாதியானது.

அன்பிற்கான ஏக்கத்தை கலையாக்கிய மிக முக்கியமான நாவலாக ரத்த உறவை குறிப்பிடலாம். விரைவில் மறுபிரசுரம் வரும் என எதிர்பார்க்கிறேன்.








Wednesday, March 14, 2018

காமமெனும் வாதை – லோலிதாவும் அபிதாவும்


Lolita, light of my life, fire of my loins. My sin, my soul. Lo-lee-ta: the tip of the tongue taking a trip of three steps down the palate to tap, at three, on the teeth. Lo. Lee. Ta. – Lolita, Vladimir Nabokov
அபிதா, அ – சிமிழ் போன்ற வாயின் லேசான குமிழ்வில், பி- உதடுகளின் சந்திப்பில், தா- நாக்கின் தெறிப்பில். – அபிதா, லாசரா.
இரு முன்னோடிகள், இருவரும் மொழியின் அழகியலை முன்னெடுத்தவர்கள், அதன் இசைத்தன்மையை, லயத்தை நம்பியவர்கள். நபகோவ் ருஷ்ய எழுத்தாளர். லா. ச. ரா தமிழகத்தின் லால்குடியில் பிறந்தவர். நபகோவ் 78 ஆண்டுகளும் லா. ச. ரா 91 ஆண்டுகளும் வாழ்ந்தவர்கள். நபகோவின் லோலிதா 1955 ஆம் ஆண்டு வெளியானது. இன்றுவரை மிக முக்கியமான ஆக்கமாக விமர்சகர்களால் அடையாளப்படுத்தப்படுகிறது. லா.ச.ராவின் அபிதா 1970 ஆம் ஆண்டு வெளியானது தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இன்றுவரை வாசிக்கவும் படுகிறது. அபிதாவின் மொழி இன்று வாசிக்கையில் கூட காலாவதி ஆகாமல் புதிதாகவே இருக்கிறது.
சாலமன் அரசனின் இளமையை மீட்க/ தக்கவைத்துக்கொள்ள இளம் கன்னியர்களை அவருடன் உறங்க செய்யும் கதை பைபிளில் உள்ளது. இதன் நேர் நீட்சியாக லோலிதாவையும் அபிதாவையும் காண முடியும். அபிதாவை ஒரு காயகல்பம் என்றே ஓரிடத்தில் சுட்டுகிறார்.
இரு நாவலிலும் 'தன்மையில்' கதை சொல்கிறார்கள். லோலிதாவின் நாயகன் ஹம்பர்ட் அன்னையை இழந்தவன், பெரும் செல்வந்தரின் குடும்பம். தந்தையை அவ்வப்போது தான் காண்கிறான். கண்டிப்பான உறவினர் வீட்டில் தான் வளர்கிறான். அபிதாவின் கதை சொல்லி ஏழை பிராமணன். தந்தை திருமணம் செய்தவுடன் நகையை தூக்கிக்கொண்டு மனைவியையும் வயிற்றில் வளரும் பிள்ளையையும் கைவிட்டு ஓடிவிடுகிறான். தனியாளாக அம்மாவிடம் வளரும் போது அவளும் மரணிக்கிறாள். விதிவசமாக உறவினர் வீட்டில் வளர்கிறான். ஹம்பர்ட்டுக்கு ஒரு அண்ண பெல் என்றால் இவனுக்கொரு ‘சகுந்தலை’. இழந்த காதல்கள். அண்ண பெல் அவளுடைய பன்னிரெண்டாம் வயதிலேயே டைபஸ் காய்ச்சல் வந்து இறக்கிறாள். ஹம்பர்டின் பதின் பருவ பெண்களுக்கான வேட்கையை இதைக்கொண்டே புரிந்து கொள்ள முடியும். பிற்காலத்தில் லோலிதாவிடம் அவன் ஈர்க்கப்படவும் இது தான் காரணம். அவன் அவளிடமும் அண்ண பெல்லைத்தான் தேடுகிறான். லோலிதாவில் அண்ணபெல் மிக சிறிய பாத்திரம். ஓரு அத்தியாயத்திற்கு மேல் அவளுக்கு இடமில்லை. ஆனால் அபிதாவின் சக்கு என்கிற சகுந்தலை பெரும் பாத்திரமாக வளர்கிறாள். நொண்டி குருக்கள் பெண்ணாக அவளுடைய குறுகுறுப்பும், திருமண வாழ்வும், திருவேல நாதனை தழுவிக்கொண்டு இறக்கும் அவளுடைய மரணமும் என விரிகிறாள். லோலிதாவிடம் அண்ணபெல்லின் சாயலைத்தான் தேடுகிறான் ஹம்பர்ட். அபிதா சக்குவின் மகளாக, இழந்த நினைவுகளின், கடந்த வாழ்வின் உருவாக அப்படியே வருகிறாள். ஹம்பர்ட் லோலிதாவை அடையும் முயற்சியில் அவளுடைய அன்னையும், அழகியும், செல்வந்தருமான சார்லட்டை திருமணம் செய்து கொள்கிறான். அபிதாவில் முதலாளியின் மகள் ‘சாவித்திரியை’ திருமணம் செய்து புலிக்கூண்டுக்குள் வாழ்வது போல் இருவரும் வாழ்கிறார்கள். சார்லடின் மரணத்திற்கு கூட ஏதோ ஒரு வகையில் ஹம்பர்ட் காரணமாயிருக்கிறான். அவனுக்கு அவளுடைய பணத்தை பயன்படுத்துவதிலோ செலவழிப்பதிலோ எந்த நாணமும் இல்லை. ஆனால் அபிதாவின் நாயகன் முதலாளியின் மகளை திருமணம் செய்து கொண்டதை எண்ணி வெட்கி தலை குனிகிறான். அவனுக்கு ‘நாணயம்’ பறிபோன உணர்வே மேலிடுகிறது.
சார்லட் ஹம்பர்ட்டின் பிறழ் காமத்தை அறிந்து முகாமில் இருக்கும் மகளை எச்சரிக்க முயல்கிறாள். சாவித்திரி தனது கணவனின் பிறழ் காமத்தை அறிந்து ஆத்திரம் கொள்கிறாள். தொடுத்த பூக்களை எல்லாம் அபிதாவிற்கு சூட்டி மகிழ்கிறாள். இரு நாவல்களிலும் ஊழின் நெசவு வலுவாக வெளிப்படுகிறது. ஹம்பர்ட்டின் மீது ஆத்திரம் கொண்டு மகளை எச்சரிக்க கிளம்பும் போது விதிவசத்தால் விபத்தில் இறந்து போகிறாள் சார்லட். நாவலின் இறுதியில் பூவிதழ் விழ விபத்தில் அபிதா இறந்து போகிறாள்.  
ஒரு பொறி, தன் மகளை ஒத்த வயதுடைய பெண்ணின் மீதான காமத்தை எப்படி எதிர்கொள்வது? இதுவே இருவரையும் கிளர்த்துகிறது. நவீன மனமும், இந்திய தத்துவங்களில் திளைத்த மரபான மனமும் இப்படி உதித்த அசந்தர்ப்பான காமத்தை எப்படி எதிர்கொள்கின்றன. லோலிதாவுடன் பயணிக்கிறான், வாழ்கிறான், உறவு கொள்கிறான், அவளை தன் கட்டுபாட்டில் வைத்துகொள்ள முயல்கிறான். லோலிதா அவனிடமிருந்து தப்பி க்வில்டியை அடைகிறாள். அவன் விதவிதமான பாலியல் தேவைகளுக்கு அவளை நிர்பந்திக்கிறான். லோலிதாவை மீட்க வரும் மீட்பரான க்வில்டி ஹம்பர்டை விட இழிவானவனாக இருக்கிறான். ஆனால் அபிதாவின் இரட்சகனான அம்பியோ பெரு மதிப்பிற்குரியவன், உழைப்பால் உயர்ந்தவன், தன்னை போல் ஒருவன் அல்லது தன்னை விடவும் மேலானவன், அபிதாவிற்கு உகந்தவன் எனும் எண்ணம் கதை சொல்லிக்கு திகழ்கிறது. சிற்றன்னையும் தந்தையும் சம்மதிக்க அம்பியுடன் மோட்டார் சைக்கிளில் செல்வதே அவளுக்கு கிடைத்த உச்சபட்ச கிளர்ச்சி.
ஹம்பர்ட் – லோலிதா உறவு ஐயமும், வன்முறையும், சுரண்டலும் நிறைந்தது. அவள் அவனிடமிருந்து தப்ப விழைகிறாள். தப்பவும் செய்கிறாள். அவளை தேடி அலைகிறான். இறுதியில் மிக சாதாரண வாழ்வில் அவளுடைய பதின்மத்தை இழந்து, அழகை இழந்து வயிற்றில் பிள்ளையோடு வாழ்கிறாள். லோலிதா நாவலின் உயரத்திற்கு இந்த பகுதி மிக முக்கியமான காரணம். அத்தனை அலைச்சலுக்கு பின் அவனுக்கு காத்திருப்பது ஒரு பெரும் கனவின் கலைதல். அந்த கனவு கலைந்த பின்னும் காதல் எஞ்சியிருக்கிறது என்று புரிந்து கொள்கிறான். அந்த கனவை அவனிடமிருந்து தட்டிப்பறித்த க்வில்டியைத் தேடி பழி தீர்க்கிறான் ஹம்பர்ட். அபிதாவில் கதைசொல்லியின் கனவு கலைத்துவிடாமல் ஊழால் பாதுகாக்கப் படுகிறது. அழகின்மையை, அதன் வீழ்ச்சியை, சாதாரணத்தை அறிவதற்கு இடமின்றி அபிதா மரித்துபோகிறாள். கற்பனாவாத உச்சம். லோலிதா ஒரு பாரபோலா என்றால் அபிதா ஒரு வட்டம். இங்கே சக்குவிற்கு நிகழ்ந்தது அபிதாவிற்கும் நிகழ்கிறது. கதை சொல்லியும் அம்பி, அபிதாவின் மாமனும் அம்பி என்றொரு இணை வைப்பு வருகிறது. இரு அம்பிகளுமே நினைவுகளின் கரிசனத்தில் எஞ்சிய நாட்களை உயிருடன் கழிக்க சபிக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள்.  
லோலிதாவில் ஹம்பர்ட் லோலிதாவின் அழகை இழந்த பின்னும் தன்னுள் அவள் மீதான காதல் எஞ்சி இருக்கிறது என்று உணரும் தருணம் முக்கியமானது. அதன் பொருட்டே அவன் பழி தீர்க்க போகிறான். அவனுடைய காமம் காதலாக உன்னதமாகிறது. அபிதாவில் அபிதா கடந்தகால சக்குவாக ஆகி, சக்கு அபிதா, சாவித்திரி என எல்லாம் மறைந்து அன்னையின் வடிவாகிறார்கள். ஒரு கட்டத்தில் அவருடைய காமத்திற்கு அபிதாவே தேவையில்லை என உணர்கிறார். கண்ணிக்குளம், எண்ணெய் குளியல் என மீள் பிறப்பெடுத்து வருகிறார். இவ்விடங்கள் அபிதாவிற்கு ஒரு இந்தியத்தன்மையை, ஆன்மீக பிரதியாக வேறு பொருளையும் அளிக்கிறது. கரடிமலை, சிவலிங்கத்தை கட்டிக்கொண்டு மரணித்த சக்கு, நொண்டிக் குருக்கள் என எல்லாமே குறியீடுகளாக வாசிக்க சன்னமான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி அளிக்கிறது.
நபகோவின் கேள்வியை தனதாக்கிக்கொண்டு நபகோவ் அளித்த விடையிலிருந்து, தனது பண்பாட்டு பின்புலத்தில் முற்றிலும் வேறோர் விடையை நோக்கிப் பயணித்திருக்கிறார் லா.ச.ரா. ஆனால் ஒரு இலக்கிய ஆக்கமாக எனக்கு லோலிதா அபிதாவைக் காட்டிலும் பலவகையில் மேம்பட்டதாக தோன்றுகிறது. பண்பாட்டு காரணிகள், நெருக்கடிகள் கூட காரணமாய் இருக்கலாம். காமம் கொண்ட மனதின் தீவிரம், கதை முடிச்சு, காமத்தின் அலைக்கழிப்பு, லோலிதாவின் சித்தரிப்பு என்று பெரும் வாழ்வை சித்தரித்து காட்டி இருப்பார். ஆனால் க்வில்டியை அதீத பிறழ்வு கொண்டவனாக காட்டி தனது பிறழ்வை சிறிதாக்கி நியாயபடுத்தி தப்பிக்கும் யுத்தி நெருடலாக இருக்கிறது. அவ்விதத்தில் லா.ச.ராவின் கற்பனாவாத முடிவு, ஒருவகையில் தப்பித்தல் என்று தோன்றினாலும் கூட, நேர்மையாக உள்ளதாக தோன்றுகிறது.

Monday, March 12, 2018

How to confront hate in social media?

Though i have quit facebook seems it has never left me totally. I get screen shots, then some links to the posts. Somehow i stumbled upon a 2015 year post which called names on me for a write up on the Roy Moxham's Karaikudi visit. I recorded what he told, and whether he was right or wrong i was not sure and recorded them with doubt. I was shocked to read the post, it claimed me as a Nair, called me as an secret agent (of what). Of course Jeyamohan had his course of slander in the post. The absurdity was so striking i took it lightly at the onset, but it did not fade away that easily. It lingered for a long moment, so long that i am making the post. 

So what would you do when you are confronted with hate in the social media or virtual world? 
Either become a man of tao, live with it sail over it, give back and move away. If you want attention and enjoyed the popularity then be ready for getting branded and defamed. This is part and parcel of social media life. Never mind them. Take them also in the right spirit of attention. Social media bigwigs develop this numbness as they grew in stature. It is not easy to pin them down. They are masters at bullying. They comeback at you pouncing with vengeance and vigor. They have an inflated super ego, that guards them from casual injury. They become opinion makers. They are their in the soc media round the clock, commenting on every other issue.

This is a brave social life but a vain one too. Our thinking become conditioned, sometimes when you are not moved by an incident and did not want to react you do not have that freedom. You are forced to maintain your stature and gradually this takes toll on the sensitivity. We have inherent biases. Our true selves, we react selectively, whether we acknowledge it or not, not all news affects us. Social media becomes a grand stage for theatrics. Whether you believe it or not, whether you are moved or not does not matter. Hence we start faking righteousness and justice to satisfy something transient, in the way losing our true self and identity. I have succumbed to them couple of times myself. Gradually our virtual selves become bigger than our true selves and we start believing the virtual self as the real one too. 

The other way is to become a saint, just become a spectator, do not indulge in anything. Just like whatever you see, wish good morning to whoever you come across, No one expects you to react. Can live happily ever after. The stark indifference is again a buffer to guard us from affecting. The former have a moral highness though a hypocritical one, in this case we have nothing else left other than the inert selfishness. We end up hypersensitive to even trivial criticisms and end up losing mental peace which we maintained desperately. I had tried this mode too. A grand failure. 

Here I am, out of facebook, this is the plausible method i found working. This space allows me to be selectively reactive instead of inertness, without the urge of proving anything to anyone.