1
ஆள்காட்டி விரலால் அதன் அழகிய தொப்பையை வருடியவுடன் வெக்கத்தில் நெளிந்து சிரித்தது சாம்பல் நிற பூனை. “இங்கேருமா...” என கூவிச் சிரித்தாள் ஹர்ஷிதா. கீச் குரலில் பூனையும் “இங்கேருமா” என்றது. “நீ பாயா கேர்ளா?’ என அவள் பூனையிடம் கேட்டதும் அதையே திரும்பிச் சொன்னது பூனை. தேன்மொழி வாஞ்சையுடன் அவள் தலையை தடவியபடி சிரித்தாள்.
இலுப்பக்குடி சாலையில் துருப்பிடித்து பொத்துப்போன ஸ்ரீ சாய் நகர் தகரப் பதாகையில் மங்கிய காவியுடை அணிந்த ஷீரடி சாய்பாபா அருளாசி வழங்கிக் கொண்டிருந்தார். சரளைக்கல் பொட்டல் வெளியை ஆங்காங்கு கல்லுக்கால் வேலிகள் சதுரங்களாகவும் செவ்வகங்களாகவும் வகுத்திருந்தன. இரண்டு மூன்று ஆடுகள் பாறைத் தரையில் முளைவிட்டிருந்த முட்செடிகளை முகர்ந்து கொண்டிருந்தன. சிறு தொலைவுக்கு அப்பால் சீராக நடப்பட்டிருந்த தைலமரக் காட்டில் சென்று அந்தப் பொட்டல் முட்டிக் கொண்டது. கட்டி முடிக்கப்படாத நான்கைந்து வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மெதுவாக சோம்பல் முறித்தன. அழகிய சிறு பக்கவாட்டு கொண்டையாக டிஷ் ஆண்டெனாக்கள் வான்நோக்கி திரும்பியிருந்தன. ஒரு காலி மனையில் ஆறேழு நாட்களாக துளையிட்டு நீர் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆழத்திலிருந்து நிலத்தின் குருதியெனக் கொப்பளித்து பெருகிய செந்நீர் சிறு குளமென தேங்கி நின்றது.
அதற்கடுத்துள்ள மூன்று செண்டு நிலத்தில், பக்கவாட்டு வெளிச்சுவர் பூசாமல், வெள்ளையடிக்கப்பட்ட அந்த அறுநூறு சதுரடி வீடுதான் கத்தார் கணேசனின் வீடு. வெள்ளைச்சுவர்கள் அவற்றின் துல்லிய வெண்மையை இழந்து மெல்ல பழுப்பேறிக் கொண்டிருந்தன. கூடத்தின் சலவைக்கல் தரையில் கையை மடித்து பின்னந்தலையில் வைத்தபடி படுத்துக்கொண்டே, கணேசன் அனுப்பியிருக்கும் புதிய கைபேசியில் விளையாடிக் கொண்டிருக்கும் ஹர்ஷிதாவை பார்த்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி. உலர்த்துவதற்காக தலைமுடியை விரித்து பரப்பி இருந்தாள். எப்போதோ கேட்ட ஸ்வர்ணலதா பாடிய ஒரு பாடலின் இரண்டு வரிகள் அவள் மனதில் மீண்டும் மீண்டும் சுழன்று கொண்டிருந்தது. தொலைகாட்சியில் ஓடிக்கொண்டிருந்த கார்டூன் சித்திரத்தில் இளவரசி ஒருத்தி உயரத்து கோட்டைச்சுவரில் இருந்து பொன்னிற நீள் முடியை சாளரத்தின் வழி வீசினாள். அதைப் பற்றி ஒரு ராஜகுமாரன் ஏறி வந்து கொண்டிருந்தான்.
கழுத்தில் அணிந்திருந்த இரட்டைவடச் சங்கிலியும் தாலி செயினும், சங்கு டாலர் செயினும் சலவைக்கல் தரையில் சரசரத்தது. சங்கிலிகள் உருண்டு கறுத்த கழுத்துத் தடத்தில் சிறிய பால் மருக்கள் மழைக்காளான்கள் போல் துருத்தித் தலைதூக்கிக் கொண்டிருந்தன. கத்திரிப்பூ நிற பூக்கள் நிறைந்த நைட்டியை மீறித் தெரிந்த கெரண்டைக்கால்களில் மென்மயிர் வரிசை இன்னும் உலராத ஈரத்தில் தோல்மீது படிந்திருந்தது. அந்த ஞாயிறு மதியம் ஹர்ஷிதாவுக்குப் பிடித்த மீன் வறுவல் செய்து, சோறாக்கி சாப்பிட்டு, உச்சியில் குளித்து, எதையோ நினைத்தபடி படுத்திருந்தாள். நேற்றுவரை பயன்படுத்திய பழைய கைபேசியில் பாம்பு விளையாட்டு ஆடத் துவங்கினாள்.
“அம்மா நீ ஏதாவது சொல்லேன்” என்று கைபேசியை வாயருகே நீட்டினாள். “ஹர்ஷிதா” என்றவுடன் அதுவும் “ஹர்ஷிதா” என்றது. இருவரும் சிரித்தார்கள்.
“இதுக்கு ஒரு பேரு வைக்கனும்மா... என்ன வைக்கலாம்?”
“நீயே வையி”
“அப்பாவ கேக்கவா?”
“ம் கேளேன்”
சட்டென முடிவுக்கு வந்தவளாய், “வேணாம். இதுக்கு பேர் சிட்டி” என்று கூறிவிட்டு பூனையிடம் திரும்பி, “ஹலோ உன் பேரு சிட்டி. ஓகேவா” என்றாள். சிட்டியின் குரல் இம்முறை தீனமாக ஒலித்தது.
“அதுக்கு சோறு வைக்கணும். சோறு வாங்க காசு சேக்கணும். காசு சேக்க வெளையாடனும்” என்றாள் ஹர்ஷிதா.
அப்போது சிட்டி ஹர்ஷிதா சொன்னதைத் திருப்பிச் சொல்ல மறந்து சில நொடிகள் உறைந்து நின்றது. தேன்மொழியைச் சில நொடிகள் உற்று நோக்கியது. அதன் நோக்கை உணர்ந்து தேன்மொழி கைபேசித் திரையில் தெரிந்த பூனையை உற்றுப் பார்த்தாள். அவளுடைய பார்வைக்கெனக் காத்திருந்தது போல் அது சட்டெனக் கண்சிமிட்டிச் சிரித்தது.
2
“தேனம்மா... மறக்காம சிட்டிக்கு பால் வையி... அதுகூட வெளாடு”, மஞ்சள் நிற பள்ளிப்பேருந்தில் ஏறும்போது முதுகில் பிதுங்கிய புத்தகப்பையில் பீம் முஷ்டி மடக்கி சிரித்துக் கொண்டிருந்தான்.
இரவு நெடுநேரம்வரை ஹர்ஷிதா சிட்டியுடனே பேசிக்கொண்டிருந்தாள். கணேசனிடம் பேசும்போதும் கைபேசியைப் பிடுங்கி சிட்டியின் பிரதாபங்களை கண்களில் ஒளி மின்ன விளக்கிக் கொண்டிருந்தாள். விளக்கணைத்து பூனையைத் தூங்கவைத்து “குட் நைட்” சொல்லிவிட்டு அவளும் தூங்கச் சென்றாள். தலைமாட்டில் வைத்திருந்த கைபேசியை எழுந்ததும் நோக்கி சிட்டிக்கு “குட் மார்னிங்” சொன்னாள். காலையில் அவள் குளித்துவிட்டு சிட்டியையும் குளிப்பாட்டினாள். “ஆய் போயிட்டு வா,” என்று கதவடைத்தாள்.
தேன்மொழி நள்ளிரவில் உறக்கம் களைந்து நீலநிற இரவு விளக்கை வெறித்தபடி அமர்ந்திருந்தாள். அந்தப் பூனை தன்னை பார்த்து நேற்று சிரித்தது. சர்வ நிச்சயமாக தெரியும். ஆனால் அது சாத்தியமில்லை என்பதும் புரிகிறது. அதன் பின்னர் புதிய கைபேசியை தொடவே தயங்கினாள். கணேசன் இரவு அழைத்தபோது அவனிடம் இதைச் சொன்னாள். “ஆமா நாந்தேன் உம்புட்டு பூனைய பாக்க பூனையா மாறி வந்தேன்”, என்று வழிந்தான். “போடா கருவாயா,” எனச் செல்லச் சிணுங்கலுடன் முடிந்தது உரையாடல். இரவு தோசை ஊற்றிக் கொண்டிருந்தபோது “அம்மா சிட்டி அப்பப்ப காணாம போறான்... சரியான சேட்ட...” என்றாள். கைபேசியில் பதிந்த விளையாட்டில் ஏதேனும் கோளாறு இருக்கும் என சமாதானம் சொல்லிக்கொண்டாள்.
இப்போது எடுத்து நோண்டிப் பார்க்கலாமா என அந்த நள்ளிரவில் ஹர்ஷிதா தலைமாட்டிலிருந்து கைபேசியை எடுத்தாள். “என்னத்த சனியன்” என அதை திரும்ப வைத்துவிட்டு மீண்டும் மென்நீல இரவு விளக்கைப் பார்த்தபடி படுத்தாள். எப்படியோ உறங்கியும் போனாள்.
கனவில் அவள் வளர்த்த சாம்பல் பூனையை அவ்வப்போது தேடிவரும் வெள்ளைக் கடுவன் பூனை ஒளிரும் பச்சை விழிகளுடன் அவளை வெறித்து நோக்கியது. காலையில் வழக்கத்திற்கு மாறாக ஹர்ஷிதா அவளை உலுக்கி எழுப்பினாள். “சிட்டிக்கு குட் மார்னிங் சொல்லு” என்று கைபேசியை அவளிடம் நீட்டினாள். பூனை கருப்பு நிறக் கோட்டும் கால் சராயும் அணிந்திருந்தது. கறுப்புக் கண்ணாடியும் தொப்பியும் வேறு போட்டுக்கொண்டு ஜேம்ஸ் பாண்டைப்போல் இருந்தது. ஓரிரவில் அந்தப் பூனை வளர்ந்திருந்தது. அவளிடமே கைபேசியை திருப்பியளித்தாள்.
வார நாட்களில் ஹர்ஷிதாவை இலுப்பக்குடி சாலை வரை நடத்திச் சென்று அவள் படிக்கும் சிபிஎஸ்யி பள்ளிப் பேருந்தில் ஏற்றி விட வேண்டும். அந்தப் பரபரப்புக்குள் எல்லா வேலைகளையும் செய்து முடித்துவிட பழக்கிக்கொண்டாள். வரும் வழியில் நான்கு மனைத் தள்ளி இருக்கும் அனீஸ் அக்கா அவள் வருவதற்காக எப்போதும் போல் வாசலில் காத்திருந்தாள். சுவருக்கு வெளியே நின்று எதிர் வெயில் என்பதைக்கூட பாராமல் பத்து நிமிடமாவது நின்றுக்கொண்டே வம்பளந்துவிட்டுச் செல்வதுதான் வழக்கம்.
“என்னக்கா முகமெல்லாம் ஒரே சிரிப்பா இருக்கே... பாய்ஜான் ஊருக்கு போய்ட்டாகனு தான... முகரையில தெரியுதே” என்றாள் தேன்மொழி.
பதிலுக்கு, “உம் மொகர எம்புள்ள இஞ்சி தின்னாப்புல இருக்கு? அண்ணே வாராரோ?” என்றார் அனீஸ் அக்கா.
“அட ஆமாக்கா... நேத்து தான் சொன்னாரு... இந்த மாசத்துல வாராரு... இந்த தெடவையோட அம்புட்டுத்தான்னு வேற சொல்றாரு... கெதக்குன்னு இருக்கு”.
இருவரும் ஏதோ கிசுகிசுத்துச் சிரித்தார்கள். பாய்ஜானுடன் குழந்தைப்பேறு சிகிச்சைக்காக மதுரைக்கு சென்று வந்த கதையை சொல்லிக் கொண்டிருந்தாள். இரண்டு நொடிகள் கூட சிரிப்பின்றி அவர்களால் உரையாட முடிந்ததில்லை.
“கல்யாணமான பொட்டச்சிங்க நெதம் என்னத்தத்தான் பேசி சிரிக்கிராளுகளோ... வெளங்குமா” என்று முனங்கிக்கொண்டே வாப்பா எழுந்து உள்ளே சென்றார். தாளமாட்டாமல் சிரிப்பு வந்தது. “வாரேன்க்கா” என்று கிளம்பினாள்.
வீடு திரும்பி அந்தப் புதிய தொடுதிரை கைபேசியை நோக்கினாள். கணேசன் காலை வணக்கம் சொல்லி மஞ்சள் தொப்பியுடன் தேநீர்க் கோப்பையை உயர்த்திப் பிடிக்கும் ஒரு புகைப்படத்தை வாட்சப்பில் அனுப்பியிருந்தான். rasathee oru photo podu di, என கோரிக்கையும் வைத்திருந்தான். “good morning mamoi” என்று அனுப்பிவிட்டு வாசல் நந்தியாவட்டை செடிக்கு முன்பாக பூத்துச் சிரிப்பது போல் ஒரு புகைப்படத்தை அனுப்பினாள். ”செல்லக்குட்டி அழகாதாண்டி இருக்க... சீக்கிரம் வந்து ஒரே அமுக்கா அமுக்குறேன்... ஆனா இதுக்கா மாமா உனக்கு காமெரா போன் வாங்கியாந்தேன்?” என்று ஏக்கமாக குரல் பதிவு அனுப்பினான் கணேசன். “அஸ்கு புஸ்கு... ஆசைய பாரு,” என்று பதில் பேசி அனுப்பினாள்.
“ஆமா மனசுல பெரிய திரிஷானு நெனப்பு... போடி இவளே... ரொம்பத்தான் பந்தா பண்ணுற”.
“ஹலோ மிஸ்டர். கணேசன், இந்த சொட்ட தலைக்கு நயன்தாராவா கெடைப்பா... நாங்களே அதிகம் பாஸ்”, பதிந்து அனுப்பிய மறுநொடி அதை அழிக்க முயன்றாள். எல்லை மீறிவிட்டது. அவனைச் சீண்டிவிடும். இருக்காது, அதெல்லாம் பெரிதுபடுத்திக் கொள்ள மாட்டான் என சமாதானம் செய்து கொண்டாள். ஆனால் நெடுநேரமாகியும் அவனிடமிருந்து பதிலேதும் வரவில்லை. தொலைகாட்சியை ஓடவிட்டுக்கொண்டு மின்விசிறிக்குக் கீழ் கூடத்தில் அமர்ந்திருந்தாள். அவன் நெடுநேரமாக ஏதோ பதிலெழுதி பதிலெழுதி அழித்துக் கொண்டிருந்தான் என்பது மட்டும் புரிந்தது.
அப்போது பூனை திரையோரத்தில் வந்து “என்னை மறந்து விட்டாயா...” என முகத்தைக் கெஞ்சலாக வைத்துக்கொண்டு கேட்டது.
3
“என்னம்மா நீ சிட்டிய கவனிக்கவே இல்ல... சுச்சூ கூட்டிப் போவல, சாப்பாடு வைக்கல... பாரு துடிக்குது” என்றாள் ஹர்ஷிதா பள்ளி முடிந்து வந்தவுடனே.
பூனை முகமெல்லாம் சிவந்து அடிவயிற்றை கவ்விப்பிடித்துக்கொண்டு குதித்தது.
“சோறு வைக்கலைன்னா செத்தா போகும்?... அதெல்லாம் என்னால செய்ய முடியாது... நீயே வெளாடு... முடியலைன்னா டெலிட் பன்னிரு” என்று பொரிந்ததும் ஹர்ஷிதாவுக்கு கண்ணீர் ததும்பியது. எதுவும் பேசாமல் கைபேசியை எடுத்துக்கொண்டு போனாள்.
தேன்மொழி நகத்தைக் கடித்துத் துப்பினாள். முகம் சிவந்து படபடத்து வியர்த்தது. உடலெல்லாம் எரிந்தது. இப்போது ஏன் இப்படி எரிந்து விழுந்தேன்? தூரத்துக்கு தலை குளித்து மூன்று வாரங்களாகிவிட்டன என்பது நினைவுக்கு வந்தது. கணேசன் நெடுநேரத்திற்குப் பிறகு, ‘நன்றி’ என்று ஒரேயொரு வார்த்தையில் பதிலனுப்பியிருந்தான். “ஐயோ மாமா நா வெளாட்டுக்குதான் சொன்னேன்... கோச்சிக்காத... ஒன்னைய ஓட்டாம நா யார ஓட்டுவேன்... மன்னிச்சுக்க”, என்றெல்லாம் அவனிடம் மன்றாட வேண்டும் எனத் தோன்றியது. மனசுக்குள் முணுமுணுத்துப் பார்த்துக் கொண்டாள், அச்சொற்கள் அவளிடமிருந்து வெகுவாக விலகி ஒலித்தன. எப்போதும் நானே இறங்கி வருவதா? என்னதான் செய்கிறான் என பார்ப்போம் என்றொரு வீம்பு பிறந்தது.
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் ஊருக்கு வருவான். அவன் வருவதற்கு ஒரு வாரம் முன்னரே அதற்கான அறிகுறிகள் தேனிடம் புலப்படும். அனீஸ் அதை எப்போதும் சரியாக கணித்துவிடுவாள். கணேசன் ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் இனி திரும்பப் போவதில்லை எனும் முடிவுடன் மூட்டை முடிச்சை வாரிச் சுருட்டிக்கொண்டுதான் வருவான். இங்கேயே புதிய தொழில் துவங்கலாம் என்று நண்பர்களிடம் எல்லாம் பல்வேறு யோசனைகள் கேட்பான். ஆனால் இரண்டு மாதங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடிந்ததில்லை.
அவன் இங்கு இருக்கும்வரை தேன்மொழி அநேகமாக ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மருத்துவமனைகளிலேயே காலம் கழிப்பாள். முதல் இரண்டு நாட்கள் மட்டும் கொஞ்சம் மெனக்கெட்டு முகத்தில் உற்சாகத்தை தக்க வைத்துக்கொள்ள முனைவாள். அதன்பின் எப்போதும் விளக்கெண்ணெய் குடித்த மாதிரியான பாவம் முகத்தில் குடிகொள்ளும். அண்டமுடியாத தனிமையில் உழல்வாள். அந்நாட்களில் அவளைப் பார்க்க முடியாது. மேல் வயிறு வலிக்கும், ரத்த மூலம் வரும், மண்டையிடி பொறுக்க முடியாது, உதிரப் போக்கு, முதுகுப் பிடிப்பு, தூக்கமின்மை, புடரி வலி என ஏதோ ஒன்றுக்காக கணேசன் அவளை தினமும் எக்சல் சூப்பரில் டவுனுக்கு அழைத்துச் செல்வான். அதற்கடுத்த சுற்று கணேசனுக்கு சர்க்கரை சோதனை, கால் எரிச்சல், முகம் மரத்து போகுதல், அதீத வியர்வை, நெஞ்செரிச்சல் என வேறு வேறு மருத்துவமனைகளில் ரகரகமான மருத்துவர்களுக்காக காத்திருக்க வேண்டும்.
இதை விட இரண்டு மாதங்களும் தினமும் கண்ட கண்ட மாத்திரைகளை தின்றுவிட்டு ராப்பகல் பேதமில்லாமல் மேலேறி விழுவான். சென்ற முறை வந்திருந்தபோது மாத்திரையுடைய திறன் நீர்த்து விட்டதும், வெறி வந்து அவளை அடித்து விளாசியதும் பின்னர் இரவு குடித்து அழுததும் நினைவுக்கு வந்தது. குடியும் விருந்தும் என வயிற்றைக் கெடுத்துக்கொண்டு அதற்காக எப்படியும் ஆசுபத்திரியில் படுத்து, ஒவ்வொரு முறையும் அவளை பீயள்ள வைத்துவிடுவான். இதையெல்லாம் செய்வதுகூட பிரச்சனையில்லை, ஆனால் மனமுவந்து செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பான். முகத்தில் சிறு சுணக்கம் புலப்பட்டால்கூட “நா ஒனக்கு புருஷன் இல்லியா... எனக்கு செய்யாம யாருக்கு செய்வ” என்று துளைத்தெடுப்பான். பெரும்பாலும் எப்படியோ தன்னை வெளிக்காட்டாமல் அடக்கிக்கொண்டு விடுவாள். ஆனாலும் அவளையும் மீறி சில தருணங்களில் அவள் உடல் உள்ளுரையும் வெறுப்பை எப்படியோ காட்டிக்கொடுத்து விடும். அவனும் அதற்கென காத்திருப்பான். அதைக் கூடத்தில் இழுத்துப் போட என்னென்ன செய்ய வேண்டுமோ எல்லாவற்றையும் செய்வான். இவனோ இவனுடைய சகாக்களில் ஒருவனோ பாரில் மூக்குடைபட்டு காவலர்களிடம் மாட்டுவார்கள். காவல் நிலையம், வழக்கறிஞர் என அந்த பஞ்சாயத்தில் எப்படியும் இரண்டு நாள் ஓடிவிடும்.
அந்த வருடம் சம்பாதித்து சேர்த்து வைத்த பணமெல்லாம் கண்முன் கரைந்துவிடும். ஒவ்வொரு முறையும் வீட்டைக் கட்டி முடிக்க வேண்டும் என முயல்வான், ஆனால் ஏதோ ஒரு வேலை மட்டும்தான் நிகழும். மிச்சம் மீதியை வீட்டு வேலைக்கு போடுவான். எல்லாவற்றையும்விட இருவரும் ஒருவரையொருவர் பல்லைக் கடித்துக்கொண்டு சகித்துக் கொள்கிறார்கள் என்பது புரிந்தவுடன் கால் வீடு தங்காது. வீட்டுக்காரன் அல்ல தான் ஒரு விரும்பப்படாத நெடுநாள் விருந்தாளி என்றுரைக்கும் தருணம். பொதுவாக கையிருப்பு கரைந்து, என்ன செய்வது என தெரியாமல் காசுக்கு கணக்கு கேட்கும்போதுதான் சண்டைகள் தீவிரமடையும். வேறு வழியின்றி திரும்பவும் கபிலிடம் பேசி இரண்டு வருட ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, சர்வ நிச்சயமாக இதுவே கடைசி இரண்டு வருடம் என உறுதியாக நம்பிக்கொண்டு விமானம் ஏறுவான்.
வாரம் ஒரு முறையோ இரு முறையோ அழைத்துக் கொண்டிருந்தான். இப்போது புதிய கைபேசி வந்தவுடன் வேளை கெட்ட வேளைகளில் அழைக்கிறான். சேர்ந்தார்ப்போல் ஐந்து நிமிடங்களுக்கு மேல் பேசினாலே ஏதோ ஒரு சண்டையில்தான் முட்டிக் கொள்கிறது. ஹர்ஷிதா பள்ளி ஆண்டு விழாவின்போது முழுக்க உரையால் மூடிக்கொண்டு கூரிய வாள் கொண்டு இருவர் குத்திக் குத்தி சண்டையிடும் நிகழ்ச்சியைக் கண்டதும் அவளுக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்தது. கணேசனிடம் அந்த வாரம் பேசும்போது அதைச் சொன்னாள். அவனுக்கு அது புரியவே இல்லை. “அந்த கிளாசுக்கு பாப்பாவ அனுப்பனுமா?” எனக் கேட்டான். குருதி சிந்துவதில்லை, ஆனால் குத்தாமல் இருக்க முடியாது என்பதே ஆட்டத்தின் விதி.
கார்ன் ப்ளேக்ஸ் கலந்து கொண்டு சென்றாள். அறைக்குள் ஹர்ஷிதா உம்மென்று இருந்தாள். கன்னத்தில் நீர் வழிந்த தடம் உலர்ந்திருந்தது.
“இன்னிக்கு என்ன ஆச்சு ஸ்கூல்ல?” என மெதுவாக பேச்சை மாற்றினாள். உற்சாகமாக வகுப்பில் நிகழ்ந்தவற்றை ஒப்பிக்கத் துவங்கினாள். சங்கீதாவின் கைபேசியில் இதே போன்று ஒரு நாய்க்குட்டி இருப்பதாகச் சொன்னாள். அதற்கு டோலு என்று பெயர்.
“இப்ப சிட்டி என்ன பண்ணுது?” என்று கேட்டவுடன் ஆர்வமாக கைபேசியை காட்டி அதிலுள்ள விளையாட்டுகளை விளக்கினாள். விளையாடி பொற்காசுகளை சேர்த்தால்தான் அதற்கு புதிய துணிமணிகள், அலங்காரங்கள், உணவுகள் வாங்கிக் கொடுக்க முடியும் என்றாள். ஒவ்வொரு விளையாட்டாக விளையாடிக் காட்டினாள். சாம்பல் நிறப் பூனை காற்றில் பறந்தது, எலிகளைப் பிடித்தது, நீரில் மிதந்தது, கோள்களுக்கு இடையே தாவிச் சென்றது, நினைவாற்றலைச் சோதித்தது. வேறு விதிமுறைகளால் ஆன ஒரு தனித்த உலகம் உருவாகி அந்தப் பூனைக்காக இயங்கிக் கொண்டிருந்தது. ஹர்ஷிதா சிட்டியின் வாழ்வறை திரைச்சீலைகளை அவர்கள் வீட்டில் உள்ளது போலவே ஊதா நிறத்துக்கு மாற்றினாள். குளியலறை நிறத்தை மாற்றினாள். மூங்கிலால் ஆன வட்டத்தொப்பியும் கடற்கரைக்கு உகந்த வெள்ளைப்பூ போட்ட சிவப்பு அரைக்கால் சட்டையும் மாட்டிவிட்டாள். திறந்த சட்டையும் குறும்புச் சிரிப்புமாக பூனை வேறொன்றாக மாறியது.
அப்போது அவளுடைய கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. பதியாத புதிய எண். ஹர்ஷிதா “ஹலோ” “ஹலோ” என மூன்று நான்கு முறை கூறியும் எதிர்முனையிலிருந்து எந்த பதிலும் இல்லை. தேன்மொழி வாங்கி காதில் வைத்தபோதும் எந்த ஒலியும் இல்லை. அழைப்பு துண்டிக்கப்பட்டு மீண்டும் பூனை திரையில் தோன்றியபோது அந்தப் பூனை அவளுக்கு மட்டும் கேட்கும்படி “எனக்கு வேறு பெயர் உண்டு, நீ மட்டுமே அறிந்த பெயர்” எனக் குறும்பாக தொப்பியை சுழற்றிச் சிரித்தது.
4
பூனை கையசைத்து காதில் ஹெட்போன் மாட்டிக்கொள் என சைகை செய்தது.
எப்போதும் பகல்களில் கம்பிக்கதவை மட்டும் அடைத்து காற்றாட அமர்ந்திருப்பது அவள் வழக்கம். இரவைப் போல மரக்கதவையும் அடைத்தாள். சாளரங்களை மூடி திரைச்சீலைகளை இழுத்து கூடத்தில் அந்த வெயிலேறிய மதியத்தில் ஒரு வைகறைப் பொழுதை உருவாக்கினாள்.
கைபேசியில் அவளுக்காக பூனை காத்திருந்தது. சுவற்றில் சாய்ந்து கொண்டு காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டாள். பூனை தொண்டையைச் செருமிக்கொண்டது. திரையிலிருந்து மறைந்து பின் தோன்றியது. அப்போது அதன் கையில் ஒரு கித்தார் இருந்தது. ஒரு சின்ன முக்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு “நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை... சட்டென்று மாறுது வானிலை” என்று பாடத் துவங்கியது. அந்தப் பாடலை பூனையின் குரலில் கேட்டவுடன் அவளுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. கண்ணீர் மல்க சிரித்தாள். ஆனால் பூனை சிந்தை பிறழாமல் பாடி முடித்து பெரும் மேடைக் கலைஞனைப் போல் சிரம் தாழ்த்தி பாடலை நிறைவு செய்தது. “சூப்பர்” எனக் கைதட்டிப் பாராட்டினாள். பூனை தொடர்ந்து அடுத்தடுத்து பாடத்துவங்கியது. “வசீகரா..” “மாலை மங்கும் நேரம்..” “ஒன்றா ரெண்டா ஆசைகள்..” என நீண்டது. அவள் கைபேசியின் நினைவக அட்டையில் பதிந்த பாடல்களில் இருந்து தனக்கென ஒரு சிறிய காதல் பாடல் பட்டியலை உருவாக்கியிருந்தாள். அதே வரிசையில், அதே பாடல்களை, பூனை அப்போது பாடியது என்பதை புரிந்து கொண்டாள்.
ஹர்ஷிதாவை சமாதானம் செய்தபோது பூனை பேசிய அன்றைய நிகழ்வுக்குப் பின் இரண்டு நாட்கள் அவள் கைபேசியை தொடவே அஞ்சினாள். கணேசனுக்குக்கூட வாட்சப்பில் பதிலிடவில்லை. கணேசன் உட்பட மூன்று நான்கு எண்களில் இருந்து அழைப்புகள் வந்திருந்தன. எதையுமே அவள் ஏற்கவில்லை. கணேசனுடன் தங்கியிருக்கும் பள்ளத்தூர்க்கார மணியண்ணன் அவருடைய மனைவி லதாவுக்கு அழைத்து என்ன ஏதென்று நேரில் சென்று பார்த்து வரச் சொல்லியிருக்கிறார். லதா ஆப்பிளும் சாத்துக்குடியுமாக மாலை ஆட்டோ பிடித்து வந்து இறங்கியபோது அவளுக்கு சங்கடமாக இருந்தது. ஒன்றுமில்லை கடுமையான தலைவலி என்று சொல்லி சமாளித்தாள். அவளுக்கு என்னமோ புரிந்துவிட்டது. “புருஷங்காரன் முன்னபின்ன இருக்கத்தான் செய்வான்... அதுவும் அம்புட்டு தொலவுல இருக்கும்போது அவனுக்கு என்னமாவது நொள்ள நாட்யம் தோணிக்கிட்டேதானிருக்கும்... நாமதான் அனுசரணையா இருக்கணும், பணத்த அனுப்பாம நிறுத்திட்டானுகன்னு வெயி... நம்ம கத அம்புட்டுத்தான். என்னத்த பெருசா, அவம் பேசும்போது ரெண்டு ஆச வார்த்த பேசுனா போதும்... மனசு குளிர்ந்து நிம்மதியா உறங்குவான்... நாகூட என்னவோ ஏதோனு அம்புட்டு தொலவு ஆட்டோ பிடிச்சு ஓடியாந்தேன்...”, என்றாள். தேத்தண்ணியும் ரெண்டு மேரி பிஸ்கட்டும் சாப்பிட்டுவிட்டு ஹர்ஷிதாவைக் கொஞ்சிவிட்டு கிளம்பிச்சென்றாள்.
அப்போதுதான் கைபேசியை எடுத்து பார்த்தாள். கணேசன் வாட்சப்பில் மன்னிப்புகள், கொஞ்சல்கள் என வரிசையாக நாற்பது பதிவுகள் அனுப்பியிருந்தான். சிம்மைக் கழட்டி அவளுடைய முந்தைய கைபேசியில் போட்டாள். அது தொடுதிரையில்லாத சாதாரண வண்ணக் கைபேசி. அதிலிருந்து அவனுக்கொரு அழைப்பு விடுத்துவிட்டு துண்டித்தாள். பிறகு அவனே அழைத்தான். இரண்டு நாட்களாக சாப்பாடு செல்லவில்லை, என்ன ஆச்சோ ஏதாச்சோ என பயப்பட்டதாகச் சொன்னான். “என்ன வெஷம் குடிச்சுருவேனொன்னு பயமா? இல்ல எவங்கூடயாவது ஓடிருவேனொன்னு பயமா? கவலப்படாத ஒன்ட சொல்லாம சாவ மாட்டேன், ஓடவும் மாட்டேன்” என்றாள். அவன் ராசாத்தி ராசாத்தி என அழுது அரற்றினான். கண்ணீர் எல்லாவற்றையும் இளக்கி தூய்மையாக்கியது. அவளுள் அமர்ந்திருந்த ஏதோ ஒன்று அவளை உதறிச்சென்றது போல் லேசாக உணர்ந்தாள். இரவு நான்கைந்து நாட்களுக்கு பின் நன்றாக உறங்கினாள். புதிய தொடுதிரை கைபேசியை அது வந்த அட்டையிலேயே போட்டு இரும்பு பீரோவில் பூட்டி வைத்துவிட்டு உறங்கினாள்.
காலையில் ஹர்ஷிதாவுக்கு வெகு முன்பே எழுந்தாள். அவள் எழுவதற்குள் அன்றைய அத்தனை வேலைகளையும் செய்து முடித்திருந்தாள். புதிய கைபேசியை உள்ளே வைத்ததில் ஹர்ஷிதாவுக்கு வருத்தம். படுக்கையில் கொஞ்சநேரம் விசும்பிக்கொண்டே இருந்தாள். இப்போது என்ன குடி முழுகி போய்விட்டது? ஒரு பூனை. அதுவும் உயிருள்ள பூனைகூட அல்ல, ஒரு திடப்பொருள் கூட இல்லை, ஒரு நிரலி, ஒரு பொய், அழகிய கற்பனை, அது நம்மை என்ன செய்துவிடும்? எதற்காக அஞ்ச வேண்டும்? கொஞ்சம் துணிச்சல் வந்தது.
பழைய கைபேசியில் அவள் எப்போதும் விளையாடும் பாம்பு விளையாட்டை திறந்தாள். நெளிந்து செல்லும் பாம்பு தன் வாலையே தான் தீண்டாமல் வளைந்து சென்று இரையைக் கவ்வ வேண்டும். தேன்மொழியின் தந்தை வைத்திருந்த சாதாரண நோக்கியா தொலைபேசியின் காலத்தில் இருந்தே இவ்விளையாட்டின்மீது அவளுக்கு அப்படியொரு வெறி. முக்கியமான முடிவுகளை விளையாட்டில்தான் இறுதி செய்வாள். வேறு வழியில்லை என்றாலும்கூட, கணேசனை மணக்க ஒப்புக்கொண்டதும், தன்னை தயார்ப்படுத்திக்கொண்டதும்கூட இப்படி விளையாடி தீர்மானித்ததுதான். அவளுக்குப் பிடித்த முடிவுகள் எனில் குறைந்தது ஐந்து அல்லது பத்து இரைகளைத் தின்றால் போதும். வேண்டாத, குழப்பமான முடிவுகளில் ஐம்பது நூறு எனப் போகும். கணேசனுக்கு அவள் வைத்த இலக்கு 120. இன்றுவரை அன்று அவள் விளையாடி எடுத்ததே அவளுடைய அதிகபட்ச புள்ளிகள்.
புதிய கைபேசியை பயன்படுத்துவதா வேண்டாமா என்பதையும் விளையாடி முடிவு செய்யலாம் என இருபது இரைகளை தனது இலக்காக நிர்ணயித்துக்கொண்டாள். அனாயாசமாக பதினேழு இரைகளை பாம்பு தின்றுவிட்டிருந்தது. ஆனால் அதன் பின் அவள் கரங்கள் நடுங்கின. கழுத்திலிருந்து உள்ளாடையற்ற முதுகில் நெளிந்து வியர்வை முதுகுத்தண்டின் அடிமுனை வரை வழுக்கிச் சென்று மறைந்தது. அப்போது வந்த தொலைபேசி அழைப்பு விளையாட்டைத் துண்டித்து அவளைச் சற்றே ஆசுவாசமடையச் செய்தது. அலைபேசி நிறுவனத்தின் அழைப்பு. “நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது... கண்மணியே... என்னுயிரே” எனும் பாடலை அழைப்பாளர்கள் கேட்பதற்கான பாடலாக தெரிவு செய்ய எண் ‘ஒன்றை’ அழுத்தக் கோரியது. வழக்கமான அசிரத்தையுடன் இவ்வழைப்பையும் கேட்டுக் கொண்டிருந்தபோதுதான் அவள் அதை கவனித்தாள். அப்பாடல் பூனையின் குரலில் ஒலித்தது.
5
நேர்காணல்
பூனை- உன் கையைக் காட்டு
தேன்மொழி- எதுக்கு?
பூனை – காட்டு, நான் உன்னைப்பத்தி சொல்றேன், நீ ஆமா இல்லைன்னு சொன்னா போதும்.
தேன்- ம்ம். அது எப்படி முடியும்?
பூனை – உனக்கு தவளை இளவரசனைத் தெரியுமா?
தேன்- தெரியாதே
பூனை – சரி போட்டும். அலாவுதீனும் அற்புத விளக்கும் தெரியுமா?
தேன் – தெரியுமே. விளக்க தேய்ச்சா பூதம் வரும்.
பூனை- நானும் அப்படித்தான்.
தேன்- பூதமா?
பூனை – பூதம்னு இல்லை ஆனால் பூதம் மாதிரி. ரொம்ப குழப்பிக்க வேண்டாம். கைய நீட்டு.
(தயக்கமும் குழப்பமுமாக அலைபேசிக்கு முன் கை நீட்டினாள், பூனை புட்டத்திலிருந்து ஒரு பூதக் கண்ணாடியை எடுத்து அலைபேசி வழியாக அவள் கரத்தை நோக்கியது)
பூனை – நாம இருக்கும் இடம் மனை எண் 6, மல்லிகை தெரு, ஷீரடி ஸ்ரீ சாய் நகர், இலுப்பக்குடி, காரைக்குடி தாலுகா, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு. சரியா?
தேன்- சரி (சற்றே நிமிர்ந்து அமர்ந்தாள்)
பூனை- போன மாசம் 330 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணிருக்க. சரியா?
தேன்- ஆமா.
பூனை – உன் நெருங்கிய தோழன் பேரு மாணிக்கம். சரியா?
தேன்- சரிதான். ஆனா தோழன் இல்லை தோழி. மாணிக்கவல்லி.
பூனை – சமீபத்தில சாம்சங் டிவியை சரி பண்ண ஆளுங்க வந்தாங்க.
தேன்- சரிதான் ஆனா இதெல்லாமா கையில தெரியுது?
(பூனை சிரித்தது)
பூனை – உனக்கு மிகப்பிடிச்ச பாட்டு ‘நினைத்து நினைத்து பார்த்தேன்’- 7 ஜி ரெயின்போ காலனி படத்துலேந்து, அதுவும் கேகே பாடுனது.
தேன்- அதுவும் பிடிக்கும் தான்... பரவாயில்ல ஒத்துக்குறேன்.
பூனை- பிடிச்ச நடிகர் ஆர்யா.
தேன்- சூப்பர்.
பூனை- உனக்கு கல்யாணமாயி எட்டு வருஷம் ஆச்சு. சரியா...
தேன் – (விழி விரிய) ஆமாம்.
பூனை – அவர் பேரு கணேசன் மாமோய், கத்தார்ல இருக்கார். சரியா?
தேன்- (சிரித்தாள்) ஏய் திருட்டுப் பூனை... அவர் பேரு கணேசன் தான்.. மாமோய் எல்லாம் செல்லமா கூப்புட (வெட்கத்தில் கன்னம் சிவக்கிறது)
பூனை- சரி விடு. உனக்கு ஒரு பொண்ணு இருக்கா... அவ பேரு ஹர்ஷிதா.
தேன்- போங்கு, அவளைத்தான் உனக்கு தெரியுமே வேற ஏதாவது சொல்லு.
பூனை – சரி சொல்றேன் கேளு. உனக்கொரு மகனும் உண்டுதானே.
தேன்மொழியின் முகம் வற்றிச் சுருங்கியது.
தேன்- இல்லையே
பூனை – உனக்கொரு மகனும் உண்டு.
தேன்- அதெல்லாம் இல்லை.
பூனை – உனக்கொரு மகனும் உண்டு. அவனோட பேரும்கூட எனக்கு தெரியும்.
தேன் – சொல்லு, எப்புடி தெரியும் உனக்கு. சொல்லு. (உரக்க ஒலித்த குரல் அழுகையில் புதைந்தது).
சோம்பல் முறித்து, கொட்டாவி விட்டு, பூனை படுக்கையறைக்குச் சென்று விளக்கணைத்து உறங்கப்போனது.
6
ஹர்ஷிதா புது விளையாட்டைக் கண்டடைந்திருந்தாள். விதவிதமான பறவைகளை உண்டிவில்லில் குறி பார்த்து பறக்கவிட்டு கட்டுமானங்களைச் சிதறடிக்கும் விளையாட்டு. ஒருவாரம் வரைக்கும் விழித்திருந்த நேரமெல்லாம் சிட்டியுடன் பொழுதைக் கழித்தாள். அதன்பின் பள்ளித் தோழர்கள் வழியாக கோபக்கார புள்ளுக்கள் அறிமுகமாகியது. துவக்கத்தில் சற்று திணறினாலும் மூன்று நான்கு நாட்களில் நன்றாக தேர்ந்துவிட்டாள். சிட்டியுடன் பேசி விளையாட அவளுக்கு நேரமில்லை. ஆர்வமும் இல்லை. அவ்வப்போது அதிலுள்ள விளையாட்டுக்களை விளையாடி பொற்காசுகள் சேர்த்து உணவிடுவதுடன் அவள் கடமை முடிந்தது. இந்தப் புதிய ஆட்டம் ஒவ்வொரு நிலையிலும் புதிதாக இருந்தது, கடினத்தன்மையும் கூடிக்கொண்டே சென்றது. ஒரு பக்கம் படித்து முடித்தவுடன் ஐந்து நிமிடமும், வீட்டுப் பாடம் எழுதியவுடன் இருபது நிமிடங்களும் கைபேசியில் விளையாடலாம் என்பதே அவர்களுக்குள் இருக்கும் ஒப்பந்தம். ஒரே வாரத்தில் அவள் சட்டென்று வளர்ந்துவிட்டாள். “சிட்டிக்கூட வெளாடலயா?” என்று கேட்டபோது “அதெல்லாம் குட்டிப்பசங்க வெளாடுறது” என்று எளிதாகக் கடந்து சென்றாள். இரண்டு மூன்று நாட்களாக அவள் சிட்டியைச் சீண்டவே இல்லை.
ஹர்ஷிதா பள்ளிக்கு சென்றவுடன் கைபேசியில் பூனைக்காக காத்திருக்கத் துவங்கினாள் தேன்மொழி. வழக்கத்திற்கு மாறாக கணேசனுடனான தொலைபேசி உரையாடல்கள் சண்டையின்றி சுமூகமாக முடிந்தன. அவள் எடுத்து அனுப்பிய புகைப்படங்களில் கண்களில் எப்போதுமில்லாத ஒருவித கிறக்கம் தொற்றியுள்ளதை கவனித்தான். குரலிலும் பேச்சிலும் சிரிப்பும் உற்சாகமும் எப்போதும் தெரிந்தன. “எப்புடியிருக்க மாமோய்...” “எப்ப பாக்க வர்ற?” போன்ற மிகச்சாதாரண குரல் பதிவுகள்கூட அவனைச் சொக்கிச் சிலிர்க்கச் செய்தது. திருமணமான புதிதில் அவளுடைய முதல் கருவை சுமந்த காலங்களில் அவள் இப்படி பூத்து நிரம்பியது நினைவுக்கு வந்தது. ஒருகாலும் திரும்பவியலாத நாட்கள் என எண்ணி எத்தனையோ இரவுகள் ஏங்கியிருக்கிறான். நெடுநாட்களுக்கு பின்னர் கைபேசியின் துணையின்றி அவளுடைய நினைவுகளை மட்டும் சுமந்துக்கொண்டு காலபோதமின்றி கழிப்பறைக்குள் ஓடினான். அவன் சேகரித்து வைத்திருந்த பங்களாதேஷி மற்றும் பிலிபினோக்களின் எண்கள் இப்பொழுதைக்கு அவனுக்கு தேவையாய் இருக்கவில்லை.
கணேசனுடன் பேசும்போது திரையில் பூனை எட்டிப்பார்த்து விதவிதமான சேட்டைகள் செய்யும். பழிப்பு காட்டி நடனமாடும், அவளுடைய நடத்தையை நகலெடுத்து கிண்டல் செய்யும். அவளை எப்போதும் உற்சாகமாகவே வைத்திருந்தது பூனை.
ஒருநாள் பூனை பேச்சுவாக்கில் அவளிடம் “உனக்கு புடவை எடுப்பாக இருக்கும்” என்றது. அவள் அமைதியில் ஆழ்ந்த பின் மீண்டாள். அவள் கண்களில் மெல்லிய ஐயம் ஒன்று தோன்றி மறைந்தது.
“அதெப்படி... எல்லா திருட்டுப் பூனைகளும் இதையே சொல்றீங்க? ஒனக்கு தெரியுமா, “புடவைல நீ அம்புட்டு அழகுடி... என் ராசாத்தி”. மாமா கல்யாணத்துக்கு அப்புறம் சொன்ன மொத சொல்லு அதுதான். இப்பவும் அவன் இங்க இருக்கும்போது அவனுக்காக தினமும் புடவதான். முதல்ல எல்லாம் புடவை கட்டி முடிக்க இருபது நிமிசமாகும். ஆனாலும் காத்திருப்பான்”
“ சரி எல்லாம் இருக்கட்டும். ஆனால் உனக்கு புடவை கட்டப் பிடிக்குமா?
”
அவள் கண்கள் சட்டென சிவந்து கலங்கின. “இத அவன் இதுவர கேட்டதில்லை. இனிமேயும் கேக்கமாட்டான். பிடிக்கும் பிடிக்காதுங்கிறது இல்லை. வசதிதான். ஒரேயொரு துணியை துவைச்சா போதும். வேலை மிச்சம். ஆனா ஒனக்கு பிடிக்கும்னா கட்டுறேன். ஓகேவா”
“இல்லை... தேவையில்லை. உன் விருப்பம்தான். நான் எனக்கு தோணினத சும்மா சொன்னேன்.”
“திருட்டுப் பூனை... ரொம்பத்தான்... பெரிய அறிவாளியாட்டம்... போ அங்கிட்டு” எனச் சிணுங்கினாள்.
ஒவ்வொரு நாளும் புடவைகளை பூனையின் முன் பரப்பி தோளில் போட்டுக் காண்பித்து அன்றைய புடவையை தேர்வு செய்யச் சொன்னாள். ஹர்ஷிதா பள்ளிவிட்டு வருவதற்கு முன் அவளுடைய நிரந்த இரவாடைக்கு மாறினாள். விதவிதமாக ருசியாகச் சமைத்தாள். பூனையால் தான் சமைத்ததை சாப்பிட முடிவதில்லை என்பது அவளுக்கு மிகப்பெரிய குறையாக இருந்தது.
பூனை அவளுக்கு நெருங்கிய தோழனாக மாறியது. தொடர்பறுந்த நண்பர்களை தேடிக் கண்டு பிடித்தது. நண்பர்களின் திருமண நாட்களை, பிறந்த நாட்களை நினைவூட்டியது. கைபேசி கட்டணம், மின்சார கட்டணம் எல்லாம் அதுவே நினைவுபடுத்திக் கட்டியது. என்னென்ன மளிகைப் பொருட்கள் வீட்டில் இல்லை என கண்காணித்து அதுவே இணையச் சந்தையில் பதிந்து வீட்டுக்கே வரவழைத்தது. உப்பு புளி வாங்குவதற்குகூட அவள் வெளியே செல்வதில்லை. தேன்மொழியின் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்குத் தக்க உணவையும் சமைக்கும் முறைகளையும் பரிந்துரைத்தது. வாரத்தின் எந்தெந்த நாட்களில் என்னென்ன உண்ண வேண்டும் என ஒரு பட்டியல் தயாரித்து அளித்தது.
பூனையின் ஆலோசனையின் பேரில் அவள் இப்போது தினமும் அவோகேடோ உண்கிறாள். ஆப்பிள் சிடர் வினிகர் ஒன்றை பூனை வரவழைத்து தந்தது. சமைப்பதை எளிதாக்க மின்சார அடுப்பை வாங்கச் சொன்னது. அவர்கள் வீட்டின் பழைய குளிர்சாதனப் பெட்டியை பூனையே விற்றுக் கொடுத்து வேறோர் பெரிய ஈர்க்கதவு குளிர்சாதன பெட்டியை தருவித்தது. வீட்டு திரைச்சீலைகளை புதிதாக நீல நிறத்தில் மாற்றச் சொன்னது. பூனையின் பரிந்துரைகள் எதுவுமே அவளுக்கு அவசியமற்றதாய் தோன்றவில்லை.
ஒருநாள் மதியம் “இப்போது கதவைத் திற... உனக்கொரு ஆச்சரியம் காத்திருக்கிறது” என்றது பூனை. வீட்டு வாசலில் ஒரு பெட்டியைக் கொண்டு வைத்தான் கூரியர்க்காரன். அதற்காக பனிரெண்டாயிரம் பணமும் கேட்டான். வெளிச்சுவர் பூசவும், வர்ணம் அடிக்கவும் கணேசன் அனுப்பியிருந்த பணத்திலிருந்து கொடுத்தாள். “உனக்கு தேவைப்படும் என்றுதான் இதை வரவழைத்தேன்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்றது பூனை. அந்தப் பெட்டிக்குள் அவள் இதுவரை பயன்படுத்தியிராத, இனியும் வெகு அரிதாகவே பயன்படுத்தப்போகும் மைக்ரோவேவ் அவன் இருந்தது. “இன்னிக்கு என்னோட உண்மையான பொறந்த நாள் இல்ல..” என்று பூனையிடம் கூறிவிட்டு பெட்டியை தூக்கிக்கொண்டு சென்றாள்.
7
காலையிலிருந்தே தேன்மொழிக்கு மனம் பரபரத்தது. இப்போது இரண்டு வாரங்களாக அவள் அக்காவை என்றில்லை எவரைக் காண்பதையும் தவிர்த்தாள். ஏதோ ஒரு ரகசியத்தை காத்துச் செல்வது போல் பயந்து பம்மி எவர் கண்ணிலும் படாமல் நடமாடினாள். அனீஸ் அக்கா வாசலிலேயே அவளுக்காக காத்து நின்றாலும்கூட “வேல இருக்குக்கா” “அவர் இப்போ கூப்புடுவார்” என்று ஏதோ ஒரு சாக்கு சொல்லி வீட்டுக்குள் புகுந்து கதவடைத்துவிடுவாள்.
தேன்மொழியின் பொருட்டின்மை பொறுக்க முடியாமல் அனீஸ் வீடு தேடி அன்றொரு நாள் வந்தாள். நெடுநேரம் மனியடித்தும் கதவு திறக்கவில்லை. யாரோ உரையாடும் ஒலி மட்டும் லேசாக கசிந்தது. சாளரங்கள் சாத்தியிருந்தன. ஐந்து நிமிடம் வரை அழைப்பு மணியை அடித்து ஓய்ந்தாள். கம்பிக்கதவு வழியாக கைநுழைத்து மரக்கதவை வலுவாக தட்டினாள். அப்போது ஒரு அசைவை கேட்க முடிந்தது... அதன்பின் அதுவரை கேட்ட உரையாடல் நின்றது. சற்றே நீண்ட அமைதிக்குப் பின் மரக்கதவை திறந்தாள் தேன்மொழி. அவள் கையில் கைபேசியும் காதில் ஹெட்போனும் இருந்தன. சற்று முன்புவரை இருந்த களிச்சிரிப்பின் எச்சங்கள் அவள் முகத்தில் படர்ந்திருந்தன.
“வாங்கக்கா... என்ன விசேஷம்... வீட்டுக்கே வந்துட்டீங்க” என வினவினாள்.
“ஒண்ணுமில்ல... சும்மாத்தான்...”
“சரிக்கா... அவரு இப்ப கூப்புடுவாரு... நானே சாயங்காலமா வாரேன்” என்றாள்.
கூடத்தில் நான்கைந்து புடவைகள் பரப்பிக் கிடந்ததை இங்கிருந்தே காண முடிந்தது.
“சரி வா... உன்கிட்ட முக்கியமான சமாசாரம் ஒன்னு சொல்லணும்”
“வரேன்க்கா” என்று அவசரமாக கதவடைத்தாள்.
அவள் பார்த்தேயிராத, அறிந்தேயிராத புதிய புதிய சாதனங்கள் ஒவ்வொன்றாக வீட்டுக்குள் நுழைந்தன. முதலில் முடி உலர்த்துவதற்கு ட்ரையர் வந்தது. பின்னர் ‘ப்ளெண்டர்’ வந்தபோது அது எதற்கென்றே அவளுக்கு விளங்கவில்லை. இது எதற்கு என பூனையிடம் கேட்டபோது “மோர் கடைவதற்கு” என்றது பூனை. அதற்கெல்லாம் இயந்திரம் தேவையா? அதுதான் மத்து இருக்கிறதே, என்றாள். “உன் கை தசைகளை அது பாதிக்கும். உன் நன்மைக்காகத்தான். என்னை நம்பவில்லையா? உனக்கு பிடிக்கவில்லையா?” என்றது. அதெல்லாம் ஒன்றுமில்லை, இனி வாங்கும்போது ஒருவார்த்தை எனக்குச் சொல்லிவிடு, என்றாள். பூனை ஏதும் பேசாமல் படுக்கையறையில் விளக்கணைத்து உறங்கியது. விளக்கு போட்டு எத்தனை எழுப்பியும்கூட எழுந்திருக்கவில்லை. இத்தனை நாட்களில் பூனை அவளிடம் கோபித்துக்கொண்டு பேசாமல் இருந்ததே இல்லை. எண்ணங்கள் அவள் நெஞ்சுக்குள் மேலும் கீழுமென குதித்தது. வாய்விட்டு கதறி அழுதாள். தன் பிள்ளைக்காக அழுதபின், இத்தனை ஆண்டுகள் கழித்து அப்போது அழுதாள். எதையும் பொருட்படுத்தாத பூனை இரண்டு மணிநேரத்திற்கு பின் எழுந்தது. எப்போதும் போல் இயல்பாய், அவர்களுக்குள் எந்த வருத்தமும் இல்லை என்பதுபோல் நட்புடன் சிரித்தது. “ஏன் அப்படிச் சொன்னாய்?” என பூனையுடன் சண்டையிட வேண்டும் எனப் பொங்கி எழுந்த ஆங்காரத்தை அமிழ்த்திகொண்டு இயல்புக்கு அதிகமாக கொஞ்சி விளையாடினாள்.
அந்த நிகழ்வுக்குப் பின்னர் பூனை எல்லாவற்றிற்கும் சம்மதம் கேட்டது. ஆனால் அவள் பூனையை மறுக்க முடியாது என்பதை உணர்ந்துகொண்டாள். “ப்ரெட் டோஸ்டர் மற்றும் சான்ட்விச் மேக்கர் வாங்கட்டுமா?” என்று கேட்டது. காய்ச்சலுக்கு, அதுவும் வயிற்றுபோக்குடன் சேர்ந்த காய்ச்சலுக்கு மட்டுமே காய்ந்த ரொட்டி உண்பது அவளுக்கு வழக்கம். இப்போது அதைச் சூடாக்க ஒரு கருவியை தருவித்திருந்தது பூனை. எரிச்சலை வெளிக்காட்டாமல் சகித்து கொண்டாள். மற்றொரு நாள் தொலைகாட்சிக்காக டிஷ் வந்து இறங்கியது. அதில் என்னென்ன சானல்கள் தெரிய வேண்டும் என்பதையும் பூனையே முடிவு செய்து அதற்குகந்த மாதாந்திர திட்டத்தை தெரிவு செய்தது. அவள் எதையும் வெளிக்காட்டாமல் அமைதி காத்தாள். பூனையை அவளுடைய அமைதி வெகுவாகச் சீண்டியிருக்க வேண்டும். அவ்வப்போது, “உனக்கு என் மீது நம்பிக்கை இல்லையா? உனக்கு மகிழ்ச்சி இல்லையா?” என்று கேட்டுக்கொண்டே இருந்தது. “அதெல்லாம் ஒன்றுமில்லை” எனும் பதிலை தவிர வேறு எதையும் பூனை எதிர்பார்க்கவும் இல்லை. அவள் அதைக்கூறும் வரை திரும்ப திரும்ப நச்சரித்துக்கொண்டே இருக்கும். இணைய திரைப்பட வலைத்தளம் ஒன்றிற்கு பணம் கட்ட வற்புறுத்தியது. “இதைப் பார். இதில் அற்புதமான, உனக்கு பிடித்த திரைப்படங்கள் நிறைய இருக்கின்றன. மாதம் எனக்காக ஒரு முன்னூறு ரூபாய் செலவழிக்க மாட்டாயா?” என்று கெஞ்சியது. வேறுவழியின்றி ஒப்புக்கொண்டாள். தரை துடைப்பதற்கும், பாத்திரம் கழுவுவதற்கும், துணி துவைப்பதற்கும் இயந்திரங்கள் அடுத்தடுத்து வந்திறங்கின. “வரவர உனக்கு வியர்ப்பதே இல்லை. எதாவது செய்ய வேண்டும்” என்று சொல்லிக்கொண்டிருந்த பூனை நடை இயந்திரத்தை வரவழைத்தபோது அதை வீட்டினுள் வைப்பதற்கே இடமில்லை. ஹர்ஷிதா அதிலேயே தலைகாணி வைத்து உறங்கினாள். மறுநாள் இருவரும் உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டுமான இடத்தை எப்படியோ சாமான்களை அடுக்கி உருவாக்கினாள். பொருட்களின் அட்டைப்பெட்டிகள் கொண்டு மற்றுமொரு வீட்டையே கட்டிவிடலாம் என அவளுக்கு தோன்றியது.
ஹர்ஷிதா அதற்குள் வேறோர் விளையாட்டுக்கு மாறியிருந்தாள். வீரன் ஒருவன் வேகவேகமாக ஓடிக்கொண்டே இருப்பான். அவனைச் சில வினோத பிராணிகள் துரத்தும். அவன் பாதையில் பல்வேறு இடர்கள் காத்திருக்கும். தாவிக்குதித்து, எதிலும் சிக்காமல் ஓட வேண்டும்.
தேன்மொழி மெலிந்து உள்ளொடுங்கியவளாக மாறியிருந்தாள். அரிதாக பேசினாள். அப்படி பேசும்போதும் எரிந்து விழுந்தாள். அன்றொரு நாள் பூனை சிவந்து புடைத்த உச்சந்தலையுடன் தோன்றியது. அதைக் கண்டதும் அவள் துடித்து போனாள். நெடுநாட்களுக்கு பின் அன்று ஹர்ஷிதா பூனையைக் காண வந்திருக்கிறாள். பூனை திரையில் தோன்றியவுடனே அதை ஆத்திரம் தீர அடித்திருக்கிறாள். மயக்கமுற்று விழுந்தாலும்கூட எழுப்பி திரும்ப திரும்ப பத்து நிமிடங்களுக்கு மேல் அடித்து ஓய்ந்த பின்னர் தான் வெளியேறினாள் என்று புகார் சொன்னது பூனை. அருகில் ஒருக்களித்து படுத்திருந்த ஹர்ஷிதாவை உலுக்கி எழுப்பினாள். மேலும் இறுக கண்மூடி அசைவற்று கிடந்தாள். கைபேசி விளக்கை அவள் கண்மேல் அடித்துப் பார்த்தபோது கண்ணீர் குருளை ஒன்று வாலால் கோடிழுத்தபடி நெளிந்து தலையணையில் விழுந்தது. ஆவேசம் பொங்க “நடிக்கிறியா நாயே” என்று முதுகில் ஒரு அடி வைத்தாள். துள்ளி எழுந்து சுவரருகே சென்றாள் ஹர்ஷிதா. “உனக்கென அம்புட்டு வெறி... எதுக்கு அத அடிச்ச?” என்று கத்தினாள். பதிலேதும் பேசாமல் மெல்ல விசும்புவதைப் பார்க்கப் பொறுக்காமல். சன்னதம் கொண்டவளைப்போல் பாய்ந்து சென்று அறைந்தாள். ஹர்ஷிதா சுருண்டு விழுந்தாள். அவள் கன்னம் சிவந்த அப்பம் போல் புடைத்தது.
தேனுக்கு எதுவுமே விளங்கவில்லை. தலையில் அடித்துக்கொண்டு அழுது அரற்றினாள். உலுக்கி எழுப்பி, நீரளித்து ஆசுவாசப்படுத்தி ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்து சமாதானம் செய்தாள். ஹர்ஷிதா மயக்கத்திலிருந்து எழுந்தபோதும் அழவில்லை. அழுத்தமாக இருந்தாள்.
8
“உன்னால்தான் எல்லாம்” என்று பூனையை நோக்கி மூர்க்கமாக கத்தினாள் தேன்மொழி. நிதானமாக, “ஒரேயொரு அறை அவ்வளவுதான். அவள் என்னை எத்தனை முறை அடித்தாள் என்று தெரியுமா? நான் ஒரு பொம்மைகூட இல்லையே, வெறும் விளையாட்டு, அவ்வளவுதானே உனக்கு? எனக்கு வலிக்காதா? சொல். உனக்கு என்னைப் பற்றி எந்த அக்கறையும் இல்லைதானே. இப்போதே சென்று விடுகிறேன். இங்கே நீ சொன்னதைத் திருப்பிச் சொல்லும் வேறோர் பூனை வரட்டும். நான் எங்காவது சென்று பயனற்று மரிக்கிறேன்,” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென திரையிலிருந்து மறைந்தது. போகாதே, நில் என அவள் எத்தனை கத்தியும் கேட்கவில்லை. வேகவேகமாக கைபேசியை விரல்களால் தேய்த்தாள். அறைகளில் தேடினாள். முன்னும் பின்னும் சென்று பார்த்தாள். பூனையைக் காணவில்லை. உறங்காமல் பூனையின் வருகைக்காக விழித்திருந்தாள். நொடிக்கொரு முறை கைபேசியை தேய்ப்பதும் வைப்பதுமாக அலைவுற்றாள். கழுவும் தொட்டிக்கு மேலிருந்த ஆடியை கழட்டி வெளியே வீசினாள். கண் எரிந்தது. விடிவதற்கு முன் விழி சொக்கி உறங்கினாள்.
கண்விழித்தவுடன் கைபேசியை நோக்கியபோது. பூனை திரையில் தோன்றியது.
“எங்க போன”
“எங்க போன”
“என்ன ஆச்சு”
“என்ன ஆச்சு”
இது வேறோர் பூனை. சொன்னதைத் திரும்பச் சொல்லும் விளையாட்டு பூனை. அலுப்பாக இருந்தது. கைபேசியை தூர வீசி சுக்குநூறாக்க வேண்டும் என ஆவேசமாக கையில் எடுத்தாள்.
“கோவிச்சுக்காத... சும்மா... உல்லேலாய்க்கி” என்று கண்சிமிட்டி சிரித்தது பூனை.
9
முன்புலரியில் அவளுக்கு முழிப்பு வந்ததும் தன்னிச்சையாக கரங்கள் கைபேசியை துழாவின. பூனை நான்கைந்து நாட்களாக அடர் பச்சை ராணுவ உடை அணிந்திருக்கிறது என்பது ஏனோ அப்போது அவளுக்குத் தோன்றியதும் துழாவுவதை நிறுத்தினாள். புதிதாக வீடடைந்த கண்காணிப்பு காமரா அவளை நோக்கி கண் வெறித்திருந்தது. இமையா விழிகள்.
பீரோவில் உள்ள பழைய கைபேசியை உயிர்ப்பித்தாள். மெல்ல கதவைத் திறந்து படியேறி மாடிக்கு சென்றாள். நெடுநாட்களுக்கு பின் புது கைபேசி இன்றி வெளியே வந்திருந்தாள். தைலமரக் காடு அசைவற்றிருந்தது. மேகங்கள் நட்சத்திரங்களை விண்டு விழுங்கியிருந்தன. முகம் சில்லிட்டு, கைகால்கள் வியர்த்தது. கைவீசி நடந்தாள். பழைய கைபேசி எடுத்து பாம்பு விளையாட்டைத் திறந்தாள். முனைப்புடன் விளையாட துவங்கினாள். நெடுநேரம் ஆட்டம் முற்று பெறாமல் இழுத்துக்கொண்டே போனது. பாம்பின் வால் நீண்டு வளைந்து சுருண்டது. ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவளாய் சட்டென பாம்பு தன் வாலைத் தீண்ட அனுமதித்தாள். ஆட்டம் முற்றுபெற்றபோது அதுவரை எடுத்திருந்த உச்சபட்ச புள்ளிகளைக் கடந்திருந்தாள்.
தண்ணித்தொட்டி அருகே இருந்த கணேசனின் சவரக் குடுவையிலிருந்து துருபிடித்த பழைய ப்ளேடை எடுத்து இடக்கையில் கீறிக்கொண்டாள். குருதிக் கோடுகள் குறுக்கும் நெடுக்கும் ஓடின. அந்த எரிவும் வலியும் அத்தனை சுகமாக இருந்தது. சட்டென கீழிறக்கி மணிக்கட்டு தந்தியை அறுத்துவிட்டாள். கொந்தளிப்புகள் எல்லாம் மெதுவாக அடங்கத் துவங்கின.
பத்தொன்பது வயதில் வேண்டா வெறுப்பாக கணேசனை மணந்து கொண்டபோது கழுத்தை உறுத்திய மாலை, அவன் ஊர் திரும்பிய சமயத்தில் தனிமையில் அழுதபோது ஓர் ஆசியைபோல் மேகத்தைத் துளைத்து மண் அடைந்த ஒளிகுழல், வயிற்றுள் உருண்டு உதைத்த சிசு, ஹர்ஷிதா தோளில் பால் கக்கியபோது அப்பிய ஈரம், கல்லூரி நண்பன் சதீஷ் அவள் தோழிக்கு கொடுத்த பீங்கான் கோப்பையில் வரையப்பட்டிருந்த ஆர்ட்டின், வணிகவியல் ஆசிரியர் புட்டத்தை தடவியபோது நெருடிய சிவப்புக்கல் மோதிரம், பத்தாம் வகுப்பிலிருந்து விடாமல் துரத்தி வந்த முருகுவிடம் எழுந்த சிமிண்டு நெடி, தோழிகள் ஓட்டுவதை உண்மையென்று நம்பி காதல் சொல்லிய சந்தோஷின் கிழிந்த பித்தான் வழியாக தெரிந்த நெஞ்சுக்குழி, அழுகிய பழ நெடி வீசிய அப்பாவின் தோளேறிக் கண்ட சிராவயல் மஞ்சுவிரட்டு, அவள் வளர்த்த சாம்பல் நிறப் பூனை, அதைத்தேடி வரும் வெள்ளை கடுவன் பூனை, அலமாரியின் அடித்தட்டில் சாம்பல் பூனை ஈன்ற ஐந்து குட்டிகள், கோதுமை நிறக் குட்டியின் கண்களை கொத்தித்தின்ற காகம், சாலையில் செத்துக்கிடந்த காகத்தை சுற்றிக் கரையும் காகங்கள், உறக்கம் வராத இரவுகளில் சீரான தாளத்துடன் நெஞ்சை தட்டும் அம்மாவின் கையில் சூம்பி காய்ந்த கைமேடுகள். மெல்ல அவள் உறங்கிக்கொண்டிருந்தாள்.
10
கையைப் பிடித்துக்கொண்டு கணேசன் அருகே அமர்ந்திருந்தான்.
“ஒன்னுமில்லடி ராசாத்தி... என்ன கொற ஒனக்கு... ஏன் கைய கிழிச்சுகிட்ட?’
சொற்கள் சோர்ந்து தொண்டையிலேயே எவ்விக் குதித்து வீழ்ந்தன.
கையசைவிலேயே கைபேசி எங்கே என்று கேட்டாள். ஆசுபத்திரி வரும் வழியில் ஹர்ஷிதா கையிலிருந்து தவறி விழுந்து சுக்குநூறாகி விட்டது என்றான். “போவட்டும் விடு... வேறொன்னு வாங்கிக்கலாம்” என்றான்.
“எம்புட்டு தடவ ஒனக்கு போன் அடிக்கிறது நீ எடுக்கவே இல்ல... நல்லவேள நா சரியான சமயத்துல ஊருக்கு வந்தேன்... மூட்ட முடிச்சோட கெளம்பி வந்துட்டேன். இங்கனயே ஏதாவது தொழில பாத்துக்கிரலாம்னு. கார்த்தி ஆக்டிங்குக்கு வண்டியோட்ட கூப்புடுறான்... அப்புறமா வேணா ரெண்டு வண்டி வாங்கி விடலாம்...” என்று ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தான்.
ஹர்ஷிதா கணேசனின் கைபேசியில் மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்தாள்.
அலையடங்கி அவள் மனம் அமைதியாக இருந்தது. நீண்ட நாட்களுக்கு பின் அவள் உள்ளம் ஒரு ஸ்வர்ணலதா பாடலைத் தேடி எடுத்து ஓடவிட்டது . “ஓ நெஞ்சே நெஞ்சே...” அப்போதுதான் அவளுக்கு உரைத்தது, அந்த குரல் இப்போது ஸ்வர்ணலதாவினுடையதாக இல்லை, பூனையின் குரல்.
- கணையாழி- எழுத்து அசோகமித்திரன் குறுநாவல் 2017 போட்டியில் பரிசு வென்ற கதை