Monday, August 12, 2024

புக் பிரம்மா இலக்கிய விழா

 

சில மாதங்களுக்கு முன் எழுத்தாளர் பாவண்ணன் ஆகஸ்ட் 9, 10, 11 தேதிகளில் பெங்களூரில் புக் பிரம்மா இலக்கிய விழா நடக்க இருப்பதாகவும் சிறுகதை அமர்வில் பேச முடியுமா என்றும் கேட்டார். ஒப்புக்கொண்டேன். இலக்கிய சந்திப்புகளில் பங்கேற்பது எனக்குப் பிடிக்கும். வேறெதைப் பற்றிய  சிந்தனையுமின்றி   இலக்கியத்திற்குள்ளேயே ஊறிக் கிடப்பது. இரவுகளில் உறங்க முடியாது. உருபெறாத சொற்களும் கருத்துக்களும் மூளைக்குள் ரீங்காரமிடும் இனிய அவஸ்தை பீடிக்கும். இலக்கியத்தை பேசுவதும் கேட்பதும் அசைபோடுவது ஒரு அலாதியான லாகிரி.  விஷ்ணுபுர விழாக்களில்  காவிய முகாம்களில் அத்தகைய அனுபவத்தை‌ வேண்டியே தவறாமல் செல்வேன். அண்மைய காலத்தில் ஏலகிரி புரவி கூடுகை இத்தகைய தீவிர அனுபவத்தை அளித்தது. 


எட்டாம் தேதி இரவு புறப்பட்டு ஒன்பதாம் தேதி காலை பேருந்தில் சென்று சேர்ந்தேன். எனக்காக அவர்கள் பதிவு செய்தது குளிர்சாதன வசதியும்  படுக்கை வசதியும் கொண்ட பேருந்து. ஆனால் வாரம் மூன்று நாட்கள் மட்டுமே குளிர்சாதன பேருந்து இயக்கப்படுவதாக சொல்லிவிட்டார்கள். மடிவாலாவில் கமலாலயன் என்னுடன் இணைந்து கொண்டார்.  கோரமங்களா செயின்ட் ஜான்ஸ் கலையரங்கத்தில் நிகழ்வு நடந்தது. வளாகத்தில் உள்ள விடுதியில் தங்குமிடம் ஒதுக்கப்பட்டிருந்தது.  மல்லிப்புரம் ஜெகதீஷ் குமாருடன் அறையை பகிர்ந்து கொண்டேன். ஜெகதீஷ் சவரா பழங்குடி இனத்தைச் சேர்ந்த தெலுங்கு எழுத்தாளர். அவர்கள் ஓரிஸா, ஆந்திரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள காட்டுப் பகுதியில் வாழ்கிறார்கள். பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறார். அவரது மகள் ஆயுர்வேதம் பயில்வதாக சொன்னார். 


தமிழகத்திலிருந்து ஒரு பட்டாளமே வந்திருந்தது. எழுத்தாளர் கமலாலயன், கவிஞர் சுகிர்தராணி, நாவலாசிரியர் பா. கண்மணி, கவிஞர் சுஜாதா செல்வராஜ் ஆகியோரை முதன் முறையாகச் சந்தித்தேன். எழுத்தாளர் அபிலாஷும் பல்லவியும் இரண்டு நாட்கள் வந்திருந்தார்கள். பெங்களூரில் வசிக்கும் யாத்ரா நீலா எனும் பெயரில் எழுதி வரும் மனோஜ், நண்பர் ஸ்ரீ சங்கர் கிருஷ்ணா ஆகியோருடன் கொஞ்சம் உரையாட முடிந்தது. ஸ்டாலின் ராஜாங்கம் பல நாட்களாக கேட்டு துரத்திக் கொண்டிருந்த புத்தகத்தை கொண்டுவந்து கொடுத்தார். நாவலுக்கு வேண்டிய சில ஆவணங்கள் குறித்து அண்ணனுடன் உரையாடினேன். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்யும் ஜனனி கண்ணன், சியாமளா, ராதிகா, ப்ரியம்வதா, சுசித்ரா, ஐஸ்வர்யா  ஆகியோருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஏறத்தாழ ஒரு இயக்கம் போல தமிழ் ஆக்கங்கள் ஆங்கிலத்தில் சென்றடையும் காலம் வெகு தொலைவில் இல்லை எனும் நம்பிக்கை ஏற்பட்டது. ஜனனியும் ராதிகாவும் தொழில்முறை ஆர்க்கிடெக்டுகள். ஐஸ்வர்யா கல்லூரி பேராசிரியர் என்பதால் வண்டி வைத்து முப்பது மாணவர்களை அரங்கிற்கு அழைத்து வந்திருந்தார். சுசித்ரா விஞ்ஞானி, பிரியம்வதா பட்டய கணக்காளர். வெவ்வேறு தொழில் பின்புலம் கொண்டவர்கள் மொழியாக்கத்தை ஈடுபாட்டுடன்  செய்து வருகிறார்கள். எழுத்தாளர் சர்வோத்தமன் வந்திருந்தார். பிள்ளை வளர்ப்பு சார்ந்த பிலாக்கணங்களை பகிர்ந்து ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதல் சொல்லிக் கொண்டோம். மொழிபெயர்ப்பாளர் கே. நல்லதம்பியுடன் அவர் மொழியாக்கம் செய்த ‘ஓடை’ நாவல் குறித்து பேசினேன். அண்மையில் வாசித்த சிறந்த நாவல்களில் ஒன்று. பைரப்பாவின் ‘வம்ச விருக்ஷம்’ ஜீரோ டிகிரி வெளியீடாக வந்துள்ளது. பணி ஓய்வுக்கு பின் மொழியாக்கம் செய்யத் தொடங்கி பத்தாண்டுகளுக்குள் ஐம்பத்தி மூன்று நூல்கள் தமிழிலிருந்து கன்னடத்திற்கும் கன்னடத்திலிருந்து தமிழுக்குமாக செய்திருக்கிறார். இது ஐயமின்றி ஒரு சாதனை. இப்போது சொந்தமாக நாவல் எழுத விரும்புவதால் மொழியாக்கத்தை நிறுத்தி வைத்துள்ளதாக கூறினார். தீபு ஹரி, எம். கோபாலகிருஷ்ணன், கார்த்திக், சு. வேணுகோபால், கயல் ஆகியோருடன் அமர்ந்து தமிழில் நடக்கும் இலக்கிய போட்டிகள் பற்றி ஒரு விவாதம் நடந்தது. தமிழ் சினிமாவில் நீதிபதியாக நடிக்கத்  தொடங்கினால் சாகும்வரை அதே பாத்திரம்தான். அந்த நிலைமை சு. வேணுகோபாலுக்கு ஏற்பட்டுவிடுமோ எனும் அச்சம் ஏற்பட்டது. அத்தனை போட்டிகளுக்கு நடுவராக உள்ளார்.‌ நண்பர் ‘பாகேஸ்ரீ’ எஸ். சுரேஷ் இந்துஸ்தானி இசையை பின்புலமாக கொண்ட ‘கரானா. எனும்  நேரடி ஆங்கில நாவலை எழுதியுள்ளார். இந்நாவல் எழுதும்போது இதன் வடிவம் சார்ந்து சிலமுறை உரையாடியிருக்கிறேன். கீதா ராமசாமியின் ‘ஹைதராபாத் புக் ட்ரஸ்ட்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. முதல் பிரதியை கீதாவிடமிருந்து பெற்றுக்கொண்டேன். எஸ். சுரேஷ் முதல்நாள் வந்திருந்தார். சாகித்திய அகாதமியில் முக்கிய பங்காற்றும் நண்பர் ராஜ்மோகன் அவர்களை இரண்டாம் நாள் மதியம் சந்தித்தேன். பெரிதாக உரையாட முடியவில்லை. கனிஷ்கா குப்தா, கண்ணன், பெருமாள் முருகன் ஆகியோருடன் கொஞ்ச நேரம் பேசினேன். நண்பர்கள் கார்த்திக்,  சுரேஷ் பிரதீப், காளி, ஜீவா, இரம்யா. சாம்ராஜ் ஆகியோருடன் நிறையவே பேச முடிந்தது. சேர்ந்து அமர்வுகளுக்கு சென்றோம். எழுத்தாளர் விஷால் ராஜா, ஓவியர் ஏ.வி. மணிகண்டன், கிருஷ்ணபிரபா ஆகியோர் வந்திருந்தனர். என்னுடன் யுவ புரஸ்கார் வாங்கிய கன்னட எழுத்தாளர் பத்மநாப பட், பல ஆண்டுகளுக்கு முன்  சந்தித்த கன்னட எழுத்தாளர் விக்ரம ஹத்வாரா ஆகியோரைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. மும்பை கேட்வே இலக்கிய விழாவில் என் அறைத் தோழராக இருந்த வேம்பள்ளி ஷெரீபும் வந்திருந்தார். ஷெரீப் ‘ஜும்மா’ என்றொரு சிறுகதை தொகுதி எழுதியுள்ளார். ராயலசீமா பகுதியைச் சேர்ந்தவர். இப்போது பத்திரிக்கையாளராக பணியாற்றுகிறார். இஸ்லாத்தின் உள்ளூர் பண்பாட்டு வேர்களைப் பற்றி பேசுவதால் ஜாகிர்ராஜாவுடன் ஒப்பிடத்தக்க எழுத்தாளர் என புரிந்துகொண்டேன். ஜீரோ டிகிரி ராம்ஜியுடன் ஆங்கில பதிப்பு சூழல் குறித்து உரையாடினோம். நம்பிக்கை தருவதாக ஏதுமில்லை. நம் பணி எழுதுவதே என்பதை நினைத்துக்கொண்டேன். 

       

‘புக் பிரம்மா’ நிகழ்வின் முதன்மை அனுபவம் என அவர்கள் ஏற்பாடு செய்த நிகழ்த்துக்கலைகளைச் சொல்லலாம். முதல் நாள் மானஸி சுதிர் குழுவினர் கன்னட கவிதைகளை நடித்தும் பாடியும் காட்டினார்கள். தென்னக மொழிகளில் கன்னடமே கவனிக்கச் சிரமமாக உள்ளது என்பதை கண்டு கொண்டேன். எனினும் இசையும் நடிப்பும் சிறப்பாக இருந்தது. கன்னடத்திலும் மராத்தியிலும் வலுவான நவீன நாடக மரபு உண்டு. நடிகர் பிரகாஷ் ராஜ் நிர்திகந்தா எனும் நாடகப் பள்ளியை மைசூரில் நடத்தி வருகிறார். டாக்டர் ஸ்ரீபாத் பட் கவிதைகளுக்கு இசையமைத்து அரங்கேற்றினார். முதல்நாள் டாக்டர் பட் இன்னொரு குழுவினரைக் கொண்டு வசன கவிதைகள், கன்னட இலக்கியத்தின் வெவ்வேறு காலகட்டத்தின் கவிதைகளை ‘கன்னட காவிய காஞ்சா’ எனும் நிகழ்ச்சியில் நிகழ்த்திக் காட்டினர். அதில் பாடிய பெண்ணின் குரல் அணன்யா பட்டின் குரலையும் வீச்சையும் நினைவுப்படுத்தியது. ‘பரா பரா பரா பிரம்மராக்ஷசா’ எனும் கோரஸ் குரல் இப்போதும் மனதில் உள்ளது. நானும் கார்த்திக் பாலசுப்பிரமணியனும் நிகழ்த்துக்கலை எவற்றையும் தவறவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். கடைசி நாள் மதியம் பரதநாட்டியம் மட்டும் தவறவிட்டோம். 


இரண்டாம் நாள் சுரேஷ் பிரதீப்பும் இணைந்து கொண்டார். இரண்டாம் நாள் காலை பிந்து மாலினியின் இசை நிகழ்ச்சி. தன்னை உஸ்தாத் ரஷீத்கானின் சீடர் எனக் கூறினார். அவரது கணவர் தான் பாடகர் வாசு தீக்ஷித் என  அறிந்துகொண்டேன். வாசு பாடிய ‘ராகி தந்திரா’ எனக்கு பிடித்தமான பாடல்களில் ஒன்று. வெவ்வேறு மொழிகளில் இருந்து இசைத்தார். ‘அருவி’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாரதியின் ‘பகைவனுக்கருள்வாய் நன் நெஞ்சே’ பாடலை நான் இதுவரை கேட்டிராத புதிய மெட்டில் பாடினார். 


உள்ள நிறைவிலோர் 

கள்ளம் புகுந்திடில்

உள்ளம் நிறைவாமோ?-நன்னெஞ்சே

தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்

சேர்த்தபின் தேனாமோ?-நன்னெஞ்சே! 


வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது

வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே!

தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற

சாதிரங் கேளாயோ?-நன்னெஞ்சே!

தின்ன வரும்புலி தன்னையும அன்பொடு

சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே!

அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்

அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே! 



இவ்வரிகளை அவர் பாட கேட்ட போது வெளியே இருக்கும் பகைவர்களை விட உள்ளே இருக்கும் பகைவனை அருள்வழி மீட்க கோருகிறார் பாரதி எனப் புரிந்துகொண்டேன். அத்வைத  வேதாந்தியாக பாரதியின் பாடலை இப்படியும் பொருள் கொள்ள இடமுண்டு. தனது இழிவுகளை கருணையுடன் அணுகுவது அத்தனை எளிதல்ல. நிகழ்வு முடிந்ததும் அவரிடம் ஓரிரு நிமிடங்கள் பேசினோம். பெங்களூரிலும் சென்னையிலுமாக இருப்பதாக சொன்னார். முன்னரே மொழிபெயர்ப்பாளர் செங்கதிரின் கபீர் கவிதை வெளியீட்டு விழாவில் இவர் முழுக்க முழுக்க கபீர் பாடல்களை பாடியதாக எம். கோபாலகிருஷ்ணன் நினைவுகூர்ந்தார். ஏகதாரா போன்ற ஒரு தந்தி வாத்தியத்தை மீட்டியபடி வேறெந்த பக்கவாத்தியங்களும் இல்லாமல் அபாரமாக பாடினார். மதியம் கிடார், பாஸ் கிடார், டிரம்ஸுடன் ஒரு கவிதை நிகழ்த்துக்கலை அரங்கை நிர்திகந்தா வழங்கினார்கள். மூன்றாம் நாள் பிரகாஷ்ராஜ் இதே குழுவினருடன் கவிதை வாசிப்பு ஒன்றை நிகழ்த்தினார். தமிழில் இருந்து ஆதவன் தீட்சன்யா, முகுந்த நாகராஜன், விடுதலை சிகப்பி ஆகியோரின் கவிதைகளை அவருக்கே உரிய முறையில் வாசித்தும் நடித்தும் காட்டினார். அதே பேசு பொருள் உள்ள வெவ்வேறு மொழிக் கவிதைகளை கோர்த்து ஒன்றாக்கி வழங்கிய முறை சிறப்பாக இருந்தது. இத்தகைய நான்கு மொழி திருவிழாவிற்கு அவர் சரியான பிரதிநிதியும் கூட. ‘நீங்கள் ஏன் அரசியல் இல்லாமல் எழுதக்கூடாது’ எனும் கவிதை, பிரெக்டின் ‘பிரமிடுகளை யார் கட்டியது?’ ஆகிய‌ கவிதைகள் வாசிக்கப்பட்டன.  ஸ்ரீ ஸ்ரீயின் தெலுங்கு கவிதையை ஆவேசமாக வாசித்த போது  புல்லரித்தது. போராட்ட கவிதைகளும் அரசியல் கவிதைகளும் இயல்பிலேயே நிகழ்த்துக்கலைக்கு அணுக்கமாக உள்ளதாக  தோன்றியது. தமிழைப் பொறுத்தவரை ரவி சுப்பிரமணியம் சில கவிதைகளுக்கு ராகங்களின் அடிப்படையில் இசையமைத்துள்ளார். கூத்துப்பட்டறை சில கவிதைகளை நடித்திருக்கிறார்கள் என்று அறிந்துகொண்டேன். மேற்சொன்ன பாணியிலான நவீன இசையமைப்பை முயன்று பார்க்கலாம் எனத் தோன்றியது. எல்லா கவிதைகளுக்கும் இசையமைக்க முடியாது. ஆத்மாநாம் கவிதைகளை ஜாஸ் இசைப் பாணியில் கேட்டால் சிறப்பாக இருக்கும் எனும் எண்ணம் தோன்றியது. இரண்டாம் நாள் மாலை ஆர். கே. பத்மநாபா அவர்களின் கர்நாடக இசை கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புரந்தரதாஸர், பாபநாசம் சிவன், தியாகராஜரின் பாடல்களை பாடினார். மயில், குதிரை, மணியோசை என வெவ்வேறு தானங்களை பாடிக்காட்டினார். கலையின் ஊற்று இயற்கையை நகலெடுப்பது தானோ எனும் கேள்வி எழுந்தது. மூன்றாம் நாள் காலையில் பண்டிட் வெங்கடேஷ் குமாரின் இந்துஸ்தானி கச்சேரி சுமார் ஒன்றேகால் மணி நேரம் நடந்தது. இந்த இலக்கிய விழாவின் சிகர அனுபவம் இதுதான். ஆயிரம்பேர் கொள்ளளவு கொண்ட கலையரங்கம் முழுமையாக நிரம்பியிருந்தது. மியாங் கி தோடியையும், ஜான்பூரி ராகத்தையும் விரிவாகப் பாடினார். அக்கா கேளவ்வா எனும் அக்கம்மாதேவி பாடல் நாட்டுப்புற மெட்டில் பாடியபோது மொத்த அரங்கமும் ஆட்கொள்ளப்பட்டது. ‘அக்கா கேளவ்வா மன்சூர் பாடி பிரபலப்படுத்தியது. கொல்கத்தா சென்றபோது அங்கே இந்த பாடலை பாடச்சொல்லி கேட்டார்கள். இசைக்கு மொழி கிடையாது’ என்றார்.‌ வெங்கடேஷ்குமாரை இணையத்தில் நிறைய கேட்டிருக்கிறேன். ஆனால் நேரில் கேட்கும் அனுபவம் என்பது முற்றிலும் வேறு என்பதை உணர்ந்து கொண்டேன். இதுவே நான் நேரில் கேட்கும் முதல் இந்துஸ்தானி கச்சேரி. எங்கெங்கோ அழைத்துச் சென்றது. பாடும்போது வெங்கடேஷ் குமாரின் கை அடவுகளை பார்த்துக்கொண்டிருந்தேன். அவை நடனம் போல இருந்தன. அல்லது அவருடலே மீட்டப்படுவதான எண்ணம் ஏற்பட்டது. நேரில் இசை கேட்கும்போதெல்லாம் நாம் எத்தனைச் சிறியவர்கள் எனும் உணர்வு எப்போதும் ஏற்படும். அப்போது, அங்கே, நாளையற்று நிகழும் இசை எழுத்தை விட மேலானது என தோன்றும். இசையின் தற்காலிகத்தன்மையே அதை அரிதாக ஆக்குகிறது. 



இறுதி நாள் மாலையில் யக்ஷகானம் நடந்தது. கெரெமனே சிவானந்த ஹெக்டே குழுவினர் வழங்கினார்கள். யக்ஷகானமும் கதகளியும் செவ்வியலும் நாட்டார் தன்மையும் கச்சிதமாக முயங்கிய வடிவம் என்றார் ஜெயமோகன். கதகளியை இணையத்தில் பார்க்க முயற்சித்துள்ளேன். நிகழ்த்துக்கலைகள் நேரில் பார்க்காமல் ருசிக்காது. நாட்டுப்புற இசை கலைஞர்களுக்கே உரிய பெரும் வீச்சுடைய குரலில் பாடினார்கள். ராமன், இலட்சுமணன், சீதை தண்டகாரண்யத்தில் குடிலமைத்து வசிக்கும்போது சூர்ப்பணகை ராமனை காமுறுகிறாள். அவன் மறுத்து இலட்சுமணனிடம் அனுப்புகிறான்‌ அவன் கோபப்பட்டு மூக்கை அறுத்துவிடுகிறான். இதுதான் நாடகம். இராமனுக்கும் சீதைக்குமான உரையாடலும் இராமனுக்கும் சூர்ப்பனகைக்குமான உரையாடல்களும் எள்ளல் நிறைந்ததாக இருந்தது. அரக்கியாகவும் அழகியாகவும் வரும் சூர்ப்பணகை பார்வையாளரின் பாராட்டைப் பெற்றார். அரக்கி சூர்ப்பணகையின் நடிப்பை கவனித்தபோது தான் ரஜினியின் வில்லன் நடிப்பு எங்கே வேர்கொண்டுள்ளது என்பதை கவனிக்க முடிந்தத. ரஜினி இளமையில் யக்ஷகானத்தில் நடித்திருக்கிறார். சூர்ப்பனகையின் அட்டகாச சிரிப்பும் நடையும் ரஜினியை எனக்கு நினைவுபடுத்தியது.


 இந்திய அழகியல் பற்றி சொல்லும்போது செவ்வியலுக்குள்  நாட்டார் தன்மையும் நாட்டார் தன்மைக்குள் செவ்வியலும் முயங்கி இருக்க வேண்டும் என்றார். இந்நாடகத்தில் ராமனின் தங்க கிரீடத்தின் உச்சியில் நான்கு மயிற்பீலிகள் இருந்தன. சூர்ப்பனகையின் கிரீடம் முழுக்கவே மயிற்பீலிகளால் ஆனதாக இருந்தது. தங்க மகுடம் செவ்வியல் என்றால் மயிற்பீலி நாட்டார். கண்ணன் சூடும் ஒற்றை மயிற்பீலி அவனை பித்தனாகக் காட்டுகிறது. சமநிலையில் கொஞ்சம் பித்தை அணிந்தவன். யக்ஷ கானத்தைக் காணும் போது வேறு சில எண்ணங்களும் தோன்றியது. சீதை மட்டுமே ராட்சசர்களின் குரல்களை கேட்கிறாள். அஞ்சி அபயம் வேண்டுகிறாள். மொத்த நாடகத்திலும் அசுவாரசியமான பாத்திர வார்ப்பாக உள்ளவள் சீதைதான். ராமனிடம் அபயம் வேண்டும் பேதை . அவ்வளவுதான் அவள் பங்கு. நேர்மாறாக சூர்ப்பணகை கட்டற்றவள். பசியும் வேட்கையும் கொண்டவள். இந்த நாடகத்தில் சூர்ப்பணகையை சீதையின் மாற்று ஆளுமையாக உளவியல் கோணத்தில் காண இடமுள்ளதாக தோன்றியது. சூர்ப்பனகையின் வருகையை சீதையே முன் உணர்கிறாள். சூர்ப்பணகை வந்தபிறகு அவளின் முன் எதையுமே பேசவில்லை. இது பல சாத்தியங்களை கிளர்த்தியது.  அழகியாக மாறிய சூர்ப்பணகை ஏறத்தாழ சீதையின் அதேவிதமான ஆடை அணிகளை அணிகிறார்.  ‘தி.ஜாவின் கதையுலகில் அத்தனை குலபெண்டிருக்குள்ளும் பரத்தையர் இருக்கிறார்கள். ஜி. நாகராஜன் கதையுலகில் அத்தனை பரத்தையரிலும் குலப்பெண்டிர் உள்ளார்கள் என்பதே  என் அவதானிப்பு’ என யுவன் சந்திரசேகர் கூறியது நினைவுக்கு வருகிறது. குரல் கேட்பது, சமூக பொதுவரையறைக்கு பொருந்தாத இச்சைகளையும் நடத்தைகளையும் வெளிப்படுத்துவது ஆகியவை பிளவாளுமையில் முக்கியமான அறிகுறிகள். இந்திய ஆழ்மனதில் இந்த குலப்பெண்டிர் பரத்தையர் இருமை இன்றுவரை வெளிப்படுவதாக தோன்றியது.  சினிமாக்களில் நாணமுடைய பாந்தமான நாயகி கனவுகளில் கவர்ச்சி நடனம் புரிவார். தெலுங்கு சினிமாக்களில் இரண்டு நாயகிகள் உள்ள திரைப்படங்கள் அண்மைய காலம் வரை உண்டு. படையப்பா நீலாம்பரி சூர்ப்பனகை என்றால் சவுந்தர்யா சீதை. சூர்ப்பணகையை சீதையின் இன்னொரு சாத்தியம் என வாசித்தால் புனைவாக வேறொரு கோணத்தில் ராமாயணத்தை எழுத முடியும் எனத் தோன்றியது. 




போபால், சிம்லா, சிங்கப்பூர், டெல்லி என பல்வேறு இலக்கிய விழாக்களில் பங்கேற்றிருக்கிறேன். வெளியிடங்களில் வேற்று மொழி அரங்குகளுக்கு செல்வதே வாடிக்கை. பிற மொழிகளில் என்ன நிகழ்கிறது என்பதை கவனிப்பேன். இது ஒரு கற்றல் அனுபவம் என்பதால் அமர்வுகளைத் தவிர்த்துவிட்டு ஊர் சுற்றவதில் எனக்கு பெரிய நாட்டமிருப்பதில்லை. பல்வேறு மொழியினருடன் உரையாடுவதும் அவர்கள் மொழியில் என்ன நிகழ்கிறது என்பதையும் அரைகுறை இந்தியையும் ஆங்கிலத்தையும் கொண்டு புரிந்துகொள்ள முயற்சிப்பேன். இத்தகைய கூடுகைகளில் சந்திப்பவர்களுடனான உறவை  தொடர்ந்து பேணும் தெம்பு எனக்கு பொதுவாக கிடையாது. மீண்டும் சந்தித்துக்கொண்டால் பேசிக்கொள்வோம். தமிழைப் பொருத்தவரை காளிப்ரஸாத், இரம்யா, கயல், சுரேஷ் பிரதீப் பங்கேற்ற மொழியாக்க அமர்விலும், ஸ்டாலின் ராஜாங்கம், சுகிர்தாராணி, கமலாலயன் பங்கேற்ற தலித் இலக்கியம் தொடர்பான அமர்விலும் பார்வையாளராக பங்கேற்றேன். மொத்தமே 50 நிமிடங்கள் என்பதால் கேள்வி பதில்களுக்கு நேரமில்லை. எங்கள் அமர்வில் இயக்குனர் வசந்தும் பிரகாஷ்ராஜும் பார்வையாளர்களாக பங்கேற்றார்கள். 


‘இந்திய பதிப்புத்துறை நிலவரம்’ பற்றிய அரங்கில் காலச்சுவடு கண்ணன், வசுதேந்திரா, கீதா ராமசாமி. டி சி புக்ஸ் ரவி ஆகியோர் பங்கு கொண்ட அமர்வில் ஒவ்வொரு மொழியிலும் பாதிப்பு நிலவரம் பற்றி பேசப்பட்டது. இளையவர்கள் புத்தங்கள் படிப்பதில்லை என எவரேனும் சொல்லிவிட்டால் அவர்களுக்கு வயதாகிவிட்டது இளையவர்களுடன் தொடர்பில் இல்லாமல் உள்ளார்கள் என்றாகிறது என்றார் கண்ணன். இந்த உரையாடலில் மலையாள சூழலைப் பற்றி டிசி ரவி பேசியவை வியப்பையும் நம்பிக்கையையும் அளிப்பவை. கொரோனா காலத்தில் புத்தக விற்பனையை தக்கவைக்க அவர்கள் எடுத்துக்கொண்ட நூதன முயற்சிகளை பற்றி சொன்னார். ஸ்விக்கியுடன் ஒப்பந்தம் செய்து உணவுடன் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன. புத்தகங்களை ‘அத்தியாவசிய  பொருட்களாக’கேரள அரசு கருதியது என்றார். புத்தகக் கடை, சலூன், வொர்க்ஷாப் ஆகியவை திறந்திருந்தபோது அவை சட்டத்திற்கு புறம்பானவை என மத்தியிலிருந்து அறிவுறுத்தல் வந்தபோது சலூனும் பணிமனையும் மூடப்படுகின்றன. கேரளத்தின் வாசிப்பு பண்பாடு சார்ந்து நமக்கு சிலவற்றை முக்கியமாக உணர்த்துகிறது. ‘இன்றைய மலையாள நாவல்கள்’ அமர்வில் சுபாஷ் சந்திரன் பேசினார். உலகளாவிய கருப்பொருட்கள் மலையாள நாவல்களில் பேசப்படுவதை கூறினார்கள். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு பல படைப்புகள் வந்துள்ளன, பதிலுக்கு இங்கிருந்து மலையாளத்திற்கு படைப்புகள் போகவில்லையே எனும் கேள்விக்கு ‘தமிழே மலையாளத்தின் வேர். ஆனால் தமிழிலிருந்து துண்டித்துக்கொள்ள மலையாள கருத்துலகம் விழைகிறது. அது பிழையானது.’ என்றார் சுபாஷ். கன்னட சிறுகதை விவாத அரங்கில் எங்களால் உரையாடலை  கவனிப்பது சிரமமாக இருந்தது. துளு, கொடவா, கொங்கணி, பியரி மொழி பற்றிய அரங்கிற்கு சென்றேன். சற்று உன்னிப்பாக கவனித்தால் தோராயமாக உரையாடலை புரிந்துகொள்ள முடிந்தது. ‘தெலுங்கில் பெண்களின் சுயசரிதை’ பற்றிய அமர்வு சுவாரசியமாக இருந்தது. மிருணாளினி, காத்யாயனி வித்மஹே, மல்லேஸ்வரி, ஜோதி ஆகியோர் பங்கேற்றார்கள். நல்ல தயாரிப்புடன் செறிவாக இருந்தது. தெலுங்கு இலக்கியத்தை பற்றிய பொது பார்வையை இந்த புக் ப்ரம்மா இலக்கிய விழா மாற்றியுள்ளது. தன்வரலாறில் பெண்கள் எந்த அளவு தணிக்கை செய்துகொள்கிறார்கள், துணிச்சலான  சித்தரிப்புகள் எழுதப்படுவதாலேயே ஒரு நூல் சிறந்ததாக ஆகுமா போன்ற கேள்விகள் விவாதிக்கப்பட்டன. கணவர்களை பற்றி பெண்கள் எழுதும் நினைவு குறிப்புகளில் வரிகளுக்கு இடையே வாசிக்க இடமுண்டு என சில உதாரணங்களை காட்டினார்கள். ‘தெலுங்கில் உள்ள விளிம்புநிலை குரல்கள்’ அமர்வில் ஜெகதீஷ் குமார், ஷெரிப் மற்றும் கோகு ஷ்யாமளா பங்கேற்றார்கள். அண்மையில்  தெலுங்கு எழுத்தாளர் ரமேஷ் நாயக் அமர்வை நடத்தினார். ரமேஷ் நம்பிக்கையூட்டும் கவி.  பழங்குடி இனத்தை சேர்ந்த தெலுங்கு கவிஞர். சீரிய அழகியல் நோக்கும் அரசியல் புரிதலும் கொண்டவர். வருங்காலத்தில் பெரிதாக பேசப்படுவார் என  நம்புகிறேன்.மலைப்பகுதியில் மருந்துகள் வந்து சேர்வதற்கு முன்னர் மது புட்டிகள் வந்துவிட்டன என தனது அங்கலாய்ப்பை பதிவுசெய்தார். தன்  மண்ணையும் மக்களையும் எழுதுவதே தன் கடைமை என்றார். ஜெயமோகனின் அறம் ‘நெம்மி நீலம்’ எனும் தலைப்பில் அவினேனி பாஸ்கர் மொழியாக்கத்தில் சாயா  பதிப்பகத்தால் தெலுங்கில் வெளியிடப்பட்டது. விவேக் ஷான்பாக், வசுதேந்திரா, மிருணாளினி பேசினார்கள்.  எதிர்பாராத அளவிற்கு தெலுங்கில் இந்த தொகுப்பு வரவேற்பை பெற்று வருகிறது. தெலுங்கு எழுத்தாளர்களும் வாசகர்களும் எப்போதும் அவரை சூழ்ந்து உரையாடினர். வெளியீட்டிற்கு கொண்டுவந்திருந்த ஐம்பது பிரதிகளும் விற்றுப்போயின என்றார் பாஸ்கர்.    


தொடக்கவிழாவில் ஹெச்.எஸ். ஷிவப்ரகாஷ், விவேக் ஷான்பேக், ஜெயமோகன், வோல்கா ஆகியோர் பங்கேற்ற அமர்வில் சுருக்கமாக தமிழில் நிகழும் இரு போக்குகள் குறித்து ஜெயமோகன் பேசினார். அவரது அவதானிப்பையொட்டி மறுநாள் சிறுகதை அரங்கில் பேசினோம். இக்காலகட்டத்தின் முதன்மை சிக்கல் என்பது வெறுமை. ஆனால் அது எழுபது எண்பதுகளின் பற்றாக்குறையால் விளைந்த வெறுமையல்ல. மாறாக எல்லாவற்றின் மிகையால் விளைந்த வெறுமை. Problem of plenty. இந்த வெறுமையே இன்றைய காலத்தின் தத்துவ சிக்கல். அதை நேர்கொண்டு எழுதுவது ஒரு போக்கு என்றால் அங்கிருந்து ஆன்மிகமான நன்னம்பிக்கையும் லட்சியவாதத்தையும் நோக்கிச் செல்வது இன்னொரு போக்கு. விஷால்ராஜாவின் கதைகளை மானுடத்தின் மீதான நன்னம்பிக்கையை பேசும் கதைகள் என  சொல்லலாம். ரம்யா ஆண்டி சுப்பிரமணியம், பாலாமணி, இடா ஸ்கட்லர் போன்ற கதை மாந்தர்களைக்கொண்டு எழுதிய கதைகளை லட்சியவாத கதைகள் என சொல்லலாம். அஜிதனின் மைத்ரி, அல் கிஸா, மருபூமி போன்றவற்றை மேற்சொன்ன வரிசையில் வைக்க முடியாது. அவை சரத்சந்திரரின் வங்காள நாவல்களின் நவீன வடிவம் என சொல்லத் தோன்றுகிறது. கற்பனாவாதமென்பது எல்லா காலங்களிலும் இணையான மெல்லிய சரடாக உடன் பயணித்து வரும் போக்கு என்பதே என் பார்வை. பாலோ கொயெல்ஹோவின் ரசவாதி, ஜோனாத்தன் லிவிங்ஸ்டன் தி சீ கல் போன்றவை நவீனத்துவ காலகட்டத்தின் போது எழுதப்பட்டவைதான். அஜிதனின் இந்த நவ கற்பனாவாத கதைகளும் கூட ஏதோ ஒருவகையில் அந்த வெறுமையின் பள்ளத்தை  நிரப்பும் முயற்சிதான். அஜிதன் தனித்த பாதையில் செல்கிறார். அது ஒரு தனிப்போக்காக மாற வேண்டுமென்றால் அவரைப்போல மூன்று நான்கு பேர் எழுத வேண்டும். ஜெ முன்வைத்த வாழ்வின் தத்துவமற்ற வாழ்வின் நுன்மையை பேசும் அழகியல் தரப்புக்கு நான் சரியான பிரதிநிதியா எனும் ஐயம் எனக்குள்ளது.  


 ஜெயமோகனுக்கு புக் ப்ரம்மா வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டது மிக மகிழ்ச்சியான தருணம். ஆனால் இந்த விருது அறிவிப்பை இத்தனை ரகசியமாக பேண வேண்டுமா என்பதை பரிசீலிக்க வேண்டும். சுசித்ராவுடன் ஒருமணிநேரம் ஆங்கிலத்தில் தங்குதடையின்றி உரையாடினார். இந்திய ஆங்கில இலக்கியத்தின் மேம்போக்கான தன்மை குறித்து பேசினார். ஜெ தன்னை செவ்வியல் மரபின் தொடர்ச்சியாகவே எப்போதும் முன்வைப்பவர். இம்மேடையில் தன்னை  Bard என்றே முன்வைத்தார். வாழ்க்கையை பாடும் கவி. அவரது கோணத்திலிருந்து காஃப்காவையும் காமுவையும் நிராகரிக்கும் உரிமை அவருக்கு உண்டு. ஆனால் மனிதர்  என்பவர்  குழு என்பதிலிருந்து புத்தொளி காலகட்டத்தின் வழியாக பயணித்து தொழில் புரட்சியையும் முதலீயத்தையும் கடந்து தனது சுயத்தை கண்டடைந்துள்ளார். தனி மனிதர் எனும் கருத்தை வந்தடைய இத்தனை ஆயிரம் ஆண்டுகால பரிணாமத்தை கடந்து வரவேண்டியிருக்கிறது. ஆகவே தனி மனித பிரக்ஞையை அத்தனை எளிதில் விட்டுக்கொடுக்க முடியாது என்றே கருதுகிறேன். தனி சுயத்திற்குள் அடுக்குகளாக புதைந்திருக்கும் பொது சுயத்தை கண்டுகொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அதையே ஜெயமோகன் பேசுகிறார் என்றும் எண்ணுகிறேன். துண்டிக்கப்பட்ட தனி சுயம் என ஏதுமில்லை என்பதே அவரது வாதம். அது உண்மையும் கூட. ஏதேனும் பேரழிவு ஏற்பட்டு சொற்ப மனிதர்கள் மட்டும் எஞ்சியிருந்தால் தனிமனித சுயத்தை விட்டுக்கொடுத்து பிழைத்திருக்கும் வழியை பார்க்கக்கூடும். தனி சுயம் பொது சுயம் இவ்விரு நிலைகளுக்கு இடையேயான சமன்பாடு முக்கியமானது. தனி மனிதர் எனும் கருத்தாக்கம் இருக்கும்வரை அவரை வழிநடத்தவும் நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் அமைப்புகள் இருக்கும்வரை காப்காவும் காமுவும் இருப்பார்கள் என்றே நான் எண்ணுகிறேன். இந்திய அழகியல் பற்றிய உரையாடலின் போது அனந்தமூர்த்தி நல்ல எழுத்தாளர் ஆனால் அவரைவிட பைரப்பாவே சிறந்த எழுத்தாளர் என்றார். மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அசோகமித்திரனை இந்தியத்தன்மை குறைந்த எழுத்தாளர் என சொன்னது எனக்கு ஏற்புடையதாக இல்லை. இந்தியத்த்ன்மையின் மிக முக்கியக்கூறு அதன் ‘உள்ளடக்கும் தன்மை’. இந்தியத்தன்மை என நாம் சொல்வதே பல்வேறு பண்பாட்டுக்களின் தாக்கத்தினால் தொடர்ந்து உருமாறும் பண்பாட்டைத்தான். நவீன இலக்கிய வடிவத்தை நாம் மேற்கத்திய இலக்கியத்திலிருந்து உரையாடி பெற்றுக்கொண்டோம். நமக்கான தனிவழிகளில் பயணிக்கிறோம். ஹெமிங்வேயோ, வுட்ஹவுசோ தமிழ் அகத்துடன் உரையாடி தமிழ் வாழ்க்கையை காணவும் எழுதவும் ஒரு கருவியாக ஆகிறார்கள் என்பதே உண்மை. அசோகமித்திரன் இந்திய ஆங்கில எழுத்தாளர் போல தனக்கு தெரியாத வாழ்க்கையை அந்நியமாக எழுதவில்லை. அவர் பார்த்த, புழங்கிய கீழ் நடுத்தர வர்க்கத்து மனிதர்களின் வாழ்வையே எழுதினார். ஜெ எப்படி தன்னை bard என பிரகடனப்படுத்துகிறாரோ அப்படி அசோகமித்திரன் சாமானிய மனிதர்களின் கதைகளை சொல்லும் bard. முன்னர் ஒரு நேர்காணலில் தனது கதைகள் சாமானியர்களுக்கான புகழஞ்சலி (tribute) என குறிப்பிட்டது நினைவிற்கு வருகிறது. அவரும் இந்திய வாழ்க்கையை, இந்தியர்களின் வாழ்க்கையையே எழுதினார். ‘ஒற்றன்’ ‘18 ஆவது அட்சக்கோடு’ என நாவல்களில் பொதுவாக அவருடன் தொடர்புபடுத்தப்படும் கட்டுக்கோப்பை மீறி வெளிப்பட்ட தருணங்கள் உண்டு. ‘பிரயாணம்’ மாதிரியான மறைஞான கதைகளை எழுதியுள்ளார். அவரது அழகியல் நிலைப்பாடு அவரெழுதிய வாழ்க்கையின் நம்பகத்தன்மையை குலைக்காது. எனது பாதை என்பதை ஜெக்கும் அமிக்கும்  இடைப்பட்ட பாதையாக காண்கிறேன் என்பதால் என்னால் இருவரின் அழகியலையும் புறம் தள்ள முடியாது. 


வயிறை பதம்பார்க்காத எளிய உணவுகள், இனிமையான சூழல், நண்பர்கள், நல்ல நிகழ்ச்சிகள் என மூன்று நாட்கள் கடந்ததே தெரியவில்லை. தமிழ் அமர்வுகளை பாவண்ணன் ஒருங்கிணைத்துள்ளார். அழைக்கப்பட்டவர்கள் பற்றியும் விடுபட்டவர்கள் பற்றியும் பல்வேறு விவாதங்கள் நிகழ்ந்ததை கவனித்தேன். சாகித்ய அகாடமியின் சில கூட்டங்களுக்கு சென்றவன் என்ற முறையில் தமிழ் நவீன இலக்கிய வெளிக்கு வெளியே தொடர்பே அற்று இருப்பவர்கள் பலரை கூட்டங்களில் சந்தித்து வியந்திருக்கிறேன். தமிழ் நவீன இலக்கிய வெளியில் இருந்து எவர் அழைக்கப்பட்டாலும் சரிதான் என்பதே என் நிலைப்பாடு. மொழியை, கருத்துக்களை சரியாக பிரதிநித படுத்துகிறாரா என்பது மட்டுமே கேள்வி.   அழைக்கப்பட்டவர்களில் எனக்கும் சிலரின் மீது விமர்சனங்கள் உண்டு. பொறுப்பாளராக என்னை நியமித்திருந்தால் நான் வேறு எழுத்தாளர்களை அழைத்திருப்பேன். இப்படி ஒவ்வொரு எழுத்தாளரும் சிலரை அழைக்கக்கூடும். இது நாற்பது ஆண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர் பாவண்ணனின் தேர்வு. அதற்கப்பால் விவாதிக்க ஏதுமில்லை. இலக்கிய கூடுகைகளுக்கு  கொஞ்ச நாட்களுக்கு ரத்தம் சூடாகி நாடி நரம்பு முறுக்குடன் இருக்கும். படிக்காமல் விட்ட தடித்தடி புத்தகங்கள் என்னை அழைக்கின்றன. பார்ப்போம்.  


  


Wednesday, June 26, 2024

நீலகண்டம் - சியாம்

 

நன்றி - அகழ்

“இந்நாவல் ‘ஆட்டிசம்’ பற்றிய நாவல் அல்ல. ‘ஆட்டிச’ வாழ்வை ஆவணப்படுத்துவது இதன் முதன்மை நோக்கம் அல்ல. ‘ஆட்டிசம்’ ஒரு பின்புலம் மட்டுமே.” என்று முன்னுரையிலேயே எழுத்தாளர் கூறிவிடுகிறார். நாவலில் வரும் செந்தில் தனக்கு குழந்தை பிறக்காத பொழுதும், தானே தேர்தெடுத்த ஒரு குழந்தை பின்னாளில் ஆட்டிச நிலைபாடு கொண்ட பெண்ணாக மாறும் பொழுதும் தன் வாழ்வில்  தற்செயலை சந்திக்கிறான். அந்த தற்செயலுக்கு அவன் எதிர்வினையாற்றுவதே இந்நாவல் என்று ஒருவகையில் சொல்லலாம். செந்தில் தற்செயலை எதிர்கொள்கையில் அவன் தான் மட்டுமின்றி தன்னை உருவாக்கிய மரபையும் சமூகத்தையும் சேர்த்தே அறம் என்பதற்குள் பொருத்திப் பார்க்கிறான். அவன் சென்றடையும் இடம் அவர்களது மனநிலையை, செயலை, அவர்கள் நம்பும் அறத்தை பரிசீலிக்க செய்கிறது. ஒரு கோணத்தில், தன் அனுபவத்தைக் கொண்டு வரலாற்றை பிளந்து செல்லுதல். அது, தலையில் தேக்கிச் சென்ற மதிப்பீடுகளுடன் முட்டிக்கொள்ளுதல். தத்து எடுத்தல் சாதாரணமாக உள்ள நாட்டுப்புறத்தார் பின்புலம் கொண்ட செந்தில் வேறொருவரின் விந்தணு கொண்டு பிள்ளைப் பெறுதலை மறுப்பதையும், தான் பிராமண குடும்பம் தத்து எடுத்த ஒரு குஜராத்தி பெண் என்று அறிந்தும் ரம்யாவின்(செந்திலின் மனைவி) அம்மா வரலக்ஷ்மி ரம்யாவின் திருமணத்தை எதிர்ப்பதையும் இணையாக பார்க்க முடிகிறது. 


நாவலில் வருவது போல நாம் சதுரங்களை உருவாக்கி அதற்குள் நாம் பத்திரமாக இருக்கும் பொருட்டு சிலவற்றை வெளி நிறுத்துகிறோம். நாம் அச்சதுரத்திற்குள் நின்று வெளி விலக்குபவை ஒரு நொடி பொழுது நீங்காமல் நம்மேல் கனக்கின்றன. காலந்தோறும் அச்சதுரம் மீள் வரையரை செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால் எவ்வளவு முயன்றாலும் நாம் ஏதோ ஒன்றை விலக்க வேண்டியுள்ளது, சிலவற்றை தான் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. அதன் பிறகு நாம் தேர்தெடுக்காதவற்றால் பீடிக்கப்படுகிறது நமது வாழ்வு. நாவலில், தந்தையால் கைவிடப்பட்ட சீராளனும், தன் மகளை காப்பாற்றப் பிற குழந்தைகளை கொன்ற ரயில் ஓட்டியும் அதற்கு பின் தாங்கள் தேர்தெடுக்காதவற்றால் துரத்தப் படுகிறார்கள். இந்நாவலில் வரும் விக்ரமாதித்யன் மேல் தொற்றிக்கொள்ளும் வேதாளம் அவனுக்கு தான் விலக்கப்போகிறவற்றின் கனத்தை சுட்டிக்காட்டுகிறது. அதை முதுகில் சுமந்தலையும் விக்கிரமாதித்யன் ரணப்பட்டுக்கொண்டே அதற்கு செவிசாய்க்க வேண்டியுள்ளது. சதுரங்களை மறு உருவாக்கம் செய்யவேண்டியதைப் பற்றி இந்நாவல் பேசுவதைவிட, அதற்குள் மாட்டிக்கொண்டு ரணமாகும் விக்கிரமாதித்யன் செந்தில் போன்றோர்களை பற்றியே பேசுவதாக தோன்றுகிறது. விக்கிரமாதித்யனுக்கு வேதாளத்தின் கனத்தை விட அது சொல்லும் கதைகளில் உள்ள விலக்கப்படுபவர்களின் கனமே தாங்கமுடியாததாக இருக்கிறது. நாவலில், செந்தில் தன் இளவயதில் பார்த்த சமூகம் விலக்கிய இயல்பு நிலை தவறியர்கள் முதல் தன் மூதாதை அண்ணாமலை விலக்கிய நாகம்மை வரை அவன் மேல் தொற்றிக்கொள்கின்றனர். தன் மூதாதை அண்ணாமலை புறக்கணித்த பச்சை பாவாடை அணிந்த நாகம்மை, தற்போது பச்சை பிராக் அணிந்த வர்ஷினியாக செந்திலிடம் திரும்பிவந்துள்ளாள். நாவலில், ஓரிடத்தில் செந்தில் தனது மரபையும், அது தந்த மதிப்பீடுகளையும் தீராப் பசியுடன் உண்ணும் சிதல் என வருகிறான். அப்பகுதி பின்பு தனிச் சிறுகதையாக வளர்ந்துள்ளது. நாவலுள் நாடக வடிவில் சுடலைக்கும் மெடியாவிற்குமான உரையாடல் வருகிறது. தங்களது ஆணவத்திற்காக பிள்ளைகளை பலி கொடுத்த அவர்களையும், பிறருக்கு முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற சமூக அந்தஸ்துக்காக வர்ஷினியை தத்து எடுத்த இரம்யாவையும், வேறொருவரின் விந்தணு கொண்டு குழந்தை பெற்றுக்கொள்வதை மனதிற்குள் வைத்து அல்லற்பட்டு வர்ஷினியை தத்து எடுத்த செந்திலையும் ஒன்றாக பார்க்க முடிகிறது. 


தேவர் அசுரராவதும், அசுரர் தேவராவதும், மூத்தோள் அமங்கலை ஆவதும், நஞ்சை விழுங்குவதும் உமிழ்வதும் தேர்வுகள் தான். தேர்வுகளை காட்டிலும் கைவிடப்பட்டவையே நம்மை கனவுகளில் வேட்டையாடுகின்றன. கைவிடப்பட்டவை நம் கண்டத்திலேயே உறைந்து விடுகின்றன, நம்மால் வெளிக்கொட்டவும் செரிக்கவும் முடியாத நஞ்சென உறைகின்றன. அந்நஞ்சை வெளிக்கொட்டவும் செரிக்கவும் முடியாது தத்தளிப்பவர்களே சதுரங்களை மீள்வரையறை செய்கிறார்கள். இறுதியாக நாவல், “விக்கிரமா! ஒரு நிமிடம், நோக்கமற்ற கிறுக்குத்தனத்தை ஊழ் என்றும் கதையென்றும், கலையென்றும் எப்படியும் அழைக்கலாம். ஆகவே எதிர்கொள்க, நிலைகொள்க, அமைதியுறுக. ” என்ற கட்டத்தை அடைகிறது.  


நாவலில் கையாளப்பட்டுள்ள புனைவுக்குள் புனைவு, பல கதைசொல்லிகள், பல கோணங்களில் ஒன்றை புனைவது, நேர்கோட்டில் நிகழ்வுகள் இல்லாதது பின் நவீனத்துவ கூறுகளாக இருந்தாலும், அவற்றுக்கு நமது காவிய, நாட்டார் மரபுகளிலும் இடம் உண்டு என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். இந்த விதமான கதைக்கூறல் முறையே ஒரு புனைவுக்கும் மற்றொரு புனைவுக்கும், ஒருவரின் கோணத்திற்கும் மற்றொருவரின் கோணத்திற்கும், ஒரு கதாபாத்திரத்திற்கும் மற்றொரு கதாபாத்திரத்திற்கும் இடையில் உள்ள எல்லைக்கோடுகளை அழிக்கிறது. சிறுத்தொண்ட நாயனார் கதை பண்பாட்டு தலைகீழாக்கமாக மட்டுமே இல்லாமல் நாவலின் ஓட்டத்துடன் இணைந்து தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நாவலின் இறுதி பக்கத்தில் மொத்த நாவலுமே வர்ஷினி எழுதியது என்று சொல்லப்படுகிறது. நாவலுக்கிடையில் வர்ஷினியின் பார்வையில் வரும் சோட்டா பீம், நீமோ, நீல யானை பொம்மை போன்ற அத்தியாயங்களை இது நியாயப்படுத்துகிறது(அது நியாயப்படுத்தப்பட வேண்டுமா என்பதும் கேள்வியே), ஆனால் இது நாவலை மேலும் விஸ்தரிக்கிறதா வேறு தளம் நோக்கி நகர்த்துகிறதா என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். நாவலில் வரும் ஹரி, நந்தகோபால் கதாபாத்திரங்கள் அவை நாவலுள் வந்துவிட்டன என்ற காரணத்தினாலேயே அவற்றுக்கு ஒரு கதை அளிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றியும் யோசிக்கவேண்டும். ‘ஒரு புனைவில் எழுப்பப்படும் எல்லா எதிர்பார்ப்புகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அந்த படைப்பில் திருப்தி செய்யப்பட வேண்டும்’ என்பதற்காக அவற்றின் கதைகள் எழுதப்பட்டுள்ளனவா என்பதும் கேள்விக்குரியதே. 


இரண்டு வாசிப்புகளுக்கு பிறகு மிகவும் அணுக்கமாக உணர்ந்த நாவல் நீலகண்டம். “The last temptation of Christ’ நாவலில், ஜூடாஸ் இயேசுவை கொல்ல கத்தியுடன் நிற்க இயேசு அவரது கழுத்தை அவன் முன் காட்டுவார். ஜூடாஸ் அவரைக் கண்டு அருவருத்து, “இப்படிப்பட்ட ஒருவரை எப்படி ஒரு மனிதன் துன்புறுத்துவான்? ” என்பான். அதற்கு இயேசு, “ஆம், மனிதனால் முடிவதில்லை. ஆனால் கடவுளால் முடிகிறது.” என்பார். உலகில் இத்தனை வல்லமை வாய்ந்த மலைகளும், கடல்களும், காடுகளும், உயிரினங்களும் இருக்கையில் மனிதன் மட்டுமே வேதாளத்தை சுமக்க விதிக்கப்பட்டவன்.


யாவரும் பதிப்பக வெளியீடு


– சியாம்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.

Monday, March 4, 2024

நாவல்: சில விவாதங்கள்

(24.2.2024 & 25.2.2024 ஆகிய தேதிகளில் எழுத்தாளர் பா. வெங்கடேசன் ஏலகிரியில் ஏற்பாடு செய்த ‘புரவி’ கூடுகையில் நாவல் அமர்வுக்காக எழுதிய கட்டுரை. இந்த கட்டுரை அகழ் இணைய இதழில் வெளியானது. மொழிபெயர்ப்பாளர் சுபத்ரா மெய்ப்பு நோக்கி அளித்தார். நன்றி. 'புரவி' கூடுகை சார்ந்து சில அவதானிப்புகளை எழுத வேண்டும். ஏலகிரியின் அரவமற்ற சுற்றத்தில் நல்லுணவுடன் நட்பார்ந்த சூழலில் இரண்டு நாட்கள் தீவிர விவாதங்கள் நடைபெற்றன. விஷ்ணுபுரம் காவிய முகாம்களில் கிடைக்கும் அதே விதமான தீவிர அனுபவம். உணவு இடைவேளைகளில், தேநீர் குடிக்க, காலை கடைகளில் என அலுக்காமல் உரையாடினோம். மயிலன், ஷஹிதா, தூயனுடன் ஊர் திரும்பும் பயணத்தின் போதும் பேச்சு தொடர்ந்தது.  சனிக்கிழமை இரவு உறங்கமுடியாமல் மண்டை முழுக்க சிந்தனைகள் முண்டிக்கொண்டிருந்தன.  மூளை நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தது. அமைதிப்படுத்தி வசத்திற்குள் கொண்டுவருவதற்குள் பெரும்பாடு ஆனது. பா.வெவுடன் நிறைய உரையாடும் வாய்ப்பு கிடைத்தது நல்ல கற்றல் அனுபவம். புனைவு குறித்தும் இலக்கியம் குறித்தும் அவர் கொண்டுள்ள பார்வைகளில் இருந்து என்னுடையவை வேறென்றாலும் எனக்குள் விவாதித்துக்கொள்ள, எனது புரிதல்களை பரிசீலினை செய்துகொள்ள, கூர்தீட்டி கொள்ள நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. அமர்வுகளில் 15 எழுத்தாளர்கள் பங்கேற்றார்கள் என்றால் பார்வையாளர்களில் அதே எண்ணிக்கையில் எழுத்தாளர்கள் பங்கு பெற்றார்கள். இலக்கியத்தின் மீதான நம்பிக்கையே ஒன்றிணைக்கும் ஆற்றல்.  வெகு மக்களுக்கான இலக்கிய விழாக்களின் நோக்கம் வேறு. அவற்றில் அரிதாகவே புதியவற்றை நாம் கண்டடைய முடியும். இத்தகைய கூடுகைகளே அடிக்கடி நிகழ வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் 'யாவரும்' ஜீவ கரிகாலன் இரண்டு 'ஐந்திணை' கூடுகைகளை ஒருங்கிணைத்தார். சமகால எழுத்தாளர்கள் கூடி சமகால தொகுப்புக்கள் குறித்து உரையாடினோம். இவை தொடர வேண்டும்.  )




Monday, February 5, 2024

என்னை நானறிய என்பதே எழுத்து

 

(சந்தியா பதிப்பக வெளியீடாக நண்பர் கே.பி. நாகராஜன் தொகுத்துள்ள 'ஏன் எழுதுகிறேன்' நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை. 'எதற்காக எழுதுகிறேன்' எனும் சிறிய நூலை சந்தியா முன்னரே கொண்டு வந்திருந்தது. தி.ஜா, ஜெயகாந்தன், சிசு. செல்லப்பா போன்றோர் அதில் எழுதியிருப்பார்கள். ஒரு காலகட்டத்தில் இயங்கும் படைப்பாளிகளின் மாறுபட்ட பார்வைகளை அறிந்துகொள்ள உதவுவது.)


 

ஏன் எழுதுகிறேன் எனும் கேள்வி எப்படி எழுத வந்தேன் என்பதுடன் நுட்பமாக தொடர்புடையது என நம்புகிறேன். 2012 ஆம் ஆண்டு எனது முதல் கதை 'வாசுதேவன்; வெளியானது. ஆயுர்வேத பயிற்சி மருத்துவராக இருந்த காலகட்டத்தில் நிகழ்ந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. விபத்துக்கு பின் பிரக்ஞையற்ற நிலையில் வருடக்கணக்காக கிடந்த  இளைஞனுக்கு எங்களுடைய பேராசிரியரின் அறிவுறுத்தலின் பேரில் நாங்கள் சிகிச்சையளிக்க  சென்றோம். தினமும் எண்ணெய் தேய்ப்பது, ஆசனவாயில் மருந்து செலுத்துவது, மூக்கில் உள்ள குழாய் வழியாக கஷாயம் கொடுப்பது, ஒத்தடமளிப்பது என  சாத்தியமான எல்லா சிகிச்சைகளையும் அளித்தோம். வீட்டில் உள்ளவர்கள் அற்புதத்திற்காக காத்திருக்கையில் ஏதும் பெரிதாக நடந்துவிடாது என்பதை நான்கு நன்கு உணர்ந்திருந்தோம்.  ஒருமாதத்திற்கு பின் சிகிச்சை நிறுத்தப்பட்டது. பொருளாதாரம் உட்பட பலகாரணிகள்.  அதன் பின்னர் சில நாட்களிலேயே அவன் இறந்து போனான். அவனது மரணம் என்னை கடுமையாக பாதித்தது. பல ஆண்டுகளுக்கு அவனது மண்டையோடு பகுதி நீக்கப்பட்ட தலையும், குச்சி போன்ற கைகால்களும், அந்தர வெறிப்பும் என்னை நிம்மதியிழக்க செய்துள்ளன. அவனது மரணம் என்னை பாதித்தது என்பதைவிட, அவன் வாழ்வான் எனும் போலி நம்பிக்கையை அவர்கள் வீட்டிற்கு நாங்கள் கொடுத்தோம் எனும் குற்ற உணர்வே என்னை ஆட்டுவித்தது. ஒருவகையான நம்பிக்கை துரோகம். அப்படி நடக்காமல் இருந்திருந்தால் ஒருவேளை அவன் பிரக்ஞையின்றி என்றாலும் உயிரோடு இருந்திருப்பானோ? 


காஃப்காவின் உருமாற்றத்தை வாசித்தபோது எனது வாசுதேவனை நான் புரிந்துகொண்டேன்.  அதுவரை நேசிக்கப்பட்டவன் , ஒருவிடிகாலையில் சட்டென பூச்சியாக மாறிவிடுகிறான். நேசம் பரிவாகவும், அது பரிதாபமாகவும் வெறுப்பாகவும் மெல்லமெல்லத் திரிந்து போன ஒரு நாளில் அவன் உயிரை விடுகிறான். இது கிரேகர் சம்சாவின் கதை வாசுதேவனின் கதையும் கூட.  


 பீடிக்கப்பட்டவனைப் போல அந்த கதையை ஒரேயமர்வில் எழுதிமுடித்தேன். அன்றைய இரவுக்கு பிறகு இன்றுவரை அவன் என் கனவுகளில் வருவதில்லை. அவனது வாழ்விற்கும் மரணத்திற்கும் என்னாலான நியாயத்தை செய்துவிட்டேன் எனும் உணர்வா, அல்லது அந்த மரணத்திற்கு நான் பொறுப்பில்லை எனும் கண்டடைந்தலா எது என்னை அவனிடமிருந்து விடுவித்தது என என்னால் துல்லியமாக வரையறுத்து சொல்ல இயலவில்லை. அப்போது முதல் வாசிப்பையும் எழுத்தையும் இறுகப் பற்றிக்கொண்டேன். எளிதில் விடை காண முடியாத ஒரு கேள்வியை வாசுதேவன் எனக்களித்தான். தனக்கான சரியான கேள்வியை கண்டுகொள்வதே தீராத படைப்பூக்கத்திற்கான அடிப்படை. அதுவே நம் படைப்பை தீர்மானிக்கும். நாம் ஒரு உயிரை எப்படி மதிப்பிடுகிறோம்? பயனுள்ளவரிலிருந்து பயனற்றவறாக ஒருவர் உருமாறும் புள்ளி எது? பயன் பயனின்மை என்பதற்கு அப்பால் நம்மிடம் வேறு அளவுகோல்களே இல்லையா?  பயனற்றவர்களும் தோல்வியுற்றவர்களும் தானே இலக்கியத்தின் செல்லப்பிள்ளைகள். ஏன் இந்த வியர்த்த வேலையை இலக்கியம் செய்கிறது? 



ஏன் எழுதுகிறேன் எனும் கேள்வியை எனக்கு நானே வெவ்வேறு காலகட்டத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறேன், வெவ்வேறு பதில்களை கண்டடைந்திருக்கிறேன்.  பொருளீட்டவா? எழுத்தில் பொருள் ஈட்ட முடிந்தால் மகிழ்ச்சிதான், ஆனால் அது முதன்மை இயங்குவிசையா?  எனது மருத்துவ தொழிலில் ஈட்டுவதை விட வெகு சொற்பமாகவே இதில் ஈட்டுகிறேன், அதற்கென அளிக்கும் நேரத்தை விட கூடுதல் நேரத்தை இலக்கியத்திற்கென அளிக்கிறேன். இது ஒரு லாபகரமான தொழிலில்லை. 


மனித வரலாற்றை வடிவமைத்த அடிப்படை விசைகளில் ஒன்று என அங்கீகார விழைவை சொல்கிறார் ஃபிரான்ஸிஸ் ஃபுக்குயாமா. தைமோஸை நிறைவடையச்செய்வது சாமான்யமல்ல. அங்கீகாரம் புகழ் போன்றவை கிடைத்தால் சரிதான்‌. ஆனால் எழுத்தாளராக நான் விரும்புவது இம்மையின் அங்கீகாரங்களை அல்ல. ரோபர்ட்டோ போலொன்யோவின் சேவேஜ் டிடெக்டிவ்ஸ் நாவலில் இரண்டு இளம் எழுத்தாளர்கள் முன்னோடியான மூத்த பெண் எழுத்தாளரை தேடி கண்டுபிடிக்க செல்வார்கள். தன்னை மறைத்துக்கொண்டு எங்கோ ஒடுங்கி எழுதிக்கொண்டே இருப்பார்.‌ ப. சிங்காரம் 60-70 களில் எழுதிய நாவலை அவர் காலத்தில் எவருமே வாசித்து அங்கீகரிக்கவில்லை. தனியராக வயதேறி எழுத்தை கைவிட்டு மரணமடைந்தார். ஆனால் இன்று அது தமிழில் ஒரு கிளாசிக். நவீன இலக்கியத்திற்குள் அறிமுகமாகும் எவரும் படித்தேயாக வேண்டிய நூல்கள். எவரோ ஒருவர் நாளை, நம் காலத்திற்கு பின் நம்மை கண்டடைவார் எனும் குருட்டு நம்பிக்கை மட்டுமே விசை. ஆனால் அந்த நம்பிக்கை பெரும்பாலான சமயங்களில் பொய்த்து போவதையே வரலாறு நமக்கு உணர்த்துகிறது. நிச்சயம் இந்த ஆக்கம் காலம்கடந்து நிற்கும் என சமகாலத்தில் கொண்டாடப்பட்ட ஆக்கங்கள் பத்தாண்டுகளில் மறைந்துவிடுவதை காண்கிறோம். எது காலத்தை கடக்கும் எது தேங்கும் என எவராலும் உய்த்துணர முடியாது. காலத்துடனான சூதாட்டத்தில் எப்போதும் நாம் தான் தோற்போம்.  அமரத்துவத்தின் மீதான விழைவு இல்லாத படைப்பூக்கமே இருக்காது என எண்ணுகிறேன். அது எனக்கும் உண்டு. அந்த விழைவை எழுத்தாளர் இழந்துவிடக்கூடாது என்றே எண்ணுகிறேன். அதுவே தரமான படைப்புகளை மட்டுமே நாம் அளிக்க வேண்டும் என்பதற்கான உந்துவிசையாக இருக்க முடியும்.   


எழுத்து என்னை விடுவித்தது என்பதே நான் வாசுதேவனை எழுதியபோது கண்டடைந்த பதில். பின்னர் நான் காந்தியை வாசிக்கவும் மொழியாக்கவும் செய்யத் தொடங்கினேன். காந்தி எனக்கு அரசியல்வாதி மட்டுமல்ல,  உரையாடவும் மறுக்கவும் இடமளிக்கும் மெய்யியலாளர். தீராத அறக்கேள்விகளை நம்முள் எழுப்பிக்கொண்டே இருப்பவர் காந்தி. அக்கேள்விகள் வாழ்வுடன் பொருதும் போது புனைவுகளாக பரிணாமம் அடைந்தன. 


எழுதுவதற்கான உந்துதலை மூன்று கேள்விகளிலிருந்தே நாம் பெரும்பாலும் பெறுகிறோம் என ஒரு உரையாடலில் எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிட்டார். நான் யார், ஏன் இருக்கிறேன்?  மனிதர்கள் ஏனிப்படி இருக்கிறார்கள்?  இந்த உலகம் ஏனிப்படி இருக்கிறது? இவற்றை தனித்த கேள்விகளாக காண முடியாது. ஒன்றுடன் ஒன்று தொடர்பும் தொடர்ச்சியும் கொள்கின்றன என்றே எண்ணுகிறேன். 



இரண்டாவது முறை இக்கேள்வியை எழுப்பிக்கொண்டபோது நான் கண்டடைந்த பதில், என்னை நானறிய என்பதே. எழுத்து எனது கபடங்களை, போலித்தனங்களை எனக்கு காட்டிக்கொண்டே இருக்கிறது . அதன் வழியாக சமூகத்தின் தீராத பிளவுகளை கண்டுகொண்டபடி இருக்கிறேன். இந்த முரண்களும் மதிப்பீடுகளும் ஒன்றையொன்று  உரசுகின்றன. 


 எனது முதல் நாவலான 'நீலகண்டத்தையும்' 'விஷக்கிணறு' கதையையும் எழுதிய பின்னர் இதே கேள்வியை எழுப்பிக்கொண்டேன். இப்போது எனக்கு வேறோரு பதில் புலப்படுகிறது. கார்ல் யுங் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் நிழலைப்பற்றி குறிப்பிடுகிறார். ஒளியின் அடர்வு கூடக்கூட நிழலின் கருமை கூடியபடியேதான் இருக்கும். அரவிந்தர் இதை வேறு சொற்களில் சொல்கிறார்‌. நீங்கள் ஒளியை நோக்கி மேலேற மேலேற இருளுக்குள்ளும் அதே ஆழத்திற்குள் இறங்கியபடியே இருப்பீர்கள். கதை எனது இருளை, எனது நிழலை எனக்கு அறியத்தருகிறது. ஒரு மத்திய காலத்து ஐரோப்பிய பயணியைப்போல் புதிய கண்டடைதல் பெரும் போதையும் சாகசமும் அளிப்பதாக உள்ளது. எழுதுவதென்பது தெரிந்ததை பகிர்வதற்கல்ல, புதியதை கண்டுபிடிப்பதற்காக என பரிணாமம் அடைகிறது. ஒரு சமூகமாக நாம் நம் இருளை கண்டுகொள்ளவும் வெளியேற்றவும் பாதுகாப்பான வழியாகவே கலை இலக்கியத்தை வளர்த்தெடுத்துள்ளோம் என்று கூட எனக்கு இப்போது தோன்றுகிறது.   வலுவான இலக்கியப் பண்பாடு நம்முள் இருக்கும் இருளை நமக்கு உணர்த்தும், அது இச்சமூகத்தையும் தேசத்தையும் காக்கவும் கூட செய்யும். 


எழுத்து என் உயிர் எழுதாமல் உயிர்வாழ முடியாது என்றெல்லாம் என்னால் சொல்ல முடியாது. ஆனால் எழுத்தும் வாசிப்பும் அற்ற வாழ்வு ருசியற்றதாக மந்தமானதாகவே இருக்கும்.   ஒரு சிறிய பொறி அல்லது காட்சி அல்லது கனவு வருடக்கணக்காக ஆழத்தில் துயில் கொள்ளும், ஏதோ ஒன்று விழித்து மேலெழும்பி என்னை வெளிக்கொணர் என கோருகிறது. அதை மட்டுமே வழித்துணையாக கொண்டு, தீர்மானமான இலக்கற்ற வெளியில் துழாவிச் சென்று எங்கோ ஒரு புள்ளியில் இருள் நீங்கும் ஒளியை கண்டு கொள்கிறேன். எழுதி முடித்த பின்னரே நான் கதையாக்குகிறேன். நினைவில் அமிழ்ந்த ஒரு மனிதரைப் பற்றி எழுதத் துவங்கி அவர் மீது வேறு பல மனிதர்களின் சாயை கவிந்து முற்றிலும் வேறொருவராக உருமாறுவதை ஆச்சரியத்துடன் காண்கிறேன்.  ஒரு மனிதனுக்குரிய தோற்றமும், வெவ்வேறு மனிதர்களின் இயல்புகளும் எப்படி ஒரு பாத்திரத்தில் உருக்கொள்கிறது என்பது பெரும் புதிர். தொடர்பற்றவையும் தொடர்புள்ளவையும் என எதையெதையோ மனித அகம் தொடுத்து விளையாடுகிறது. இந்த சுவாரசியம், இந்த விளையாட்டு, இந்தப் புதுமை என்னை எழுத வைக்கிறது. கதைகள் வாசிப்பதும் எழுதுவதும் வாழ்வை சுவாரசியமாக ஆக்குகின்றன. வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்ள எனக்கு கதைகளை விட மேலான வேறு காரணங்கள் ஏதும் அகப்படவும் இல்லை.


பஞ்சதந்திர கதைகளில், பூ பாதங்கள் கொண்ட பிரம்மராக்ஷசன் ஒருவன் தோளில் ஏறியமர்ந்த கதை ஒன்றுண்டு. எழுத்தை அப்படி என்னை பீடித்த பிரம்மராக்ஷசனாக கற்பனை செய்வது நன்றாக உள்ளது. தன்னை ஆக்கிரமித்தவனின் மீதே மையல் கொள்ளும் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோமா என்னவோ தெரியவில்லை. திருவாளர். பிரம்மராக்ஷசரே, உனக்கு வேண்டியதை எடுத்துக்கொள். எம்மை கைவிடாமல் எம்முடனேயே எப்போதும் இரும் என்பது மட்டுமே எனது கோரிக்கை. 



புவியெனும் கொலைக்களம் – கர்ட் வோன்னுகாட் ‘ஸ்லாட்டர் ஹவுஸ் 5’ சித்திர நாவலை முன்வைத்து


 


'யாவரும்' சித்திர நாவல் சிறப்பிதழில் வெளிவந்தது. 

சிறுவயது முதல் படக்கதைகள் காமிக்ஸ்கள்  வாசித்து வந்திருந்தாலும் சித்திர நாவல் உலகிற்கு நான் புதியவன். அவற்றை வாசிக்க முதல் தடை அவற்றின் விலை, மேலும் அவை சிறுவர்களுக்குரியது எனும் மனப்பதிவு. எழுத்தாளராகச் சொற்களின் இடத்தை காட்சிகள் எடுத்துக்கொள்வது என்பது சொற்களின் போதாமையைச் சுட்டுவது எனும் எண்ணம் கூட எனக்கு உண்டு. எனக்கு காணக் கிடைத்த பெரும்பாலான கிராஃபிக் நாவல்கள் வெகுமக்கள் ரசனைக்குரிய மிகு புனைவாகவே இருந்தது. ஆகவே எப்போதாவது யதார்த்தம் அலுக்கும்போது சாய்ந்துகொள்ளும் சாய்மானம் எனும் எண்ணமே எனக்கிருந்தது. சிங்கப்பூர் வாசத்தின்போதுதான் நான் சித்திர நாவல்களை வாசிக்க தொடங்கினேன். வாசித்துப் பார்க்க வேண்டும் எனும் ஆர்வம், அவை நூலகங்களில் இலவசமாக வாசிக்கக் கிடைத்தது என்பவைதான் காரணங்கள். சித்திர நாவல்கள் வாசிப்பதில் உள்ள பெரும் சவால் நல்ல நாவலை / நமக்கான நாவலைக் கண்டடைவதுதான். ஏனெனில் சந்தையில் பதின்ம வயதினருக்கான சித்திர நாவல்கள் காமிக்ஸ்கள் அநேகம் காணக் கிடைக்கின்றன. சித்திர நாவல்கள் மெல்ல என்னை ஈர்த்துக் கொண்டன. ஒவ்வொரு முறை நூலகம் செல்லும்போதும் அங்கேயே ஒன்று அல்லது இரண்டு நாவல்களை வாசித்துவிட்டு வீடு திரும்புவதை வழக்கமாக்கிக் கொண்டேன். சித்திர நாவல்கள் வாசிக்கவே நூலகம் செல்வது எனும் நிலையை நோக்கி வெகு விரைவிலேயே நகர்ந்தேன்.

Thursday, January 11, 2024

சர்ப்பங்கள், வேதாளங்கள், டைனோசர்கள்- வேணு தயாநிதி கவிதை தொகுப்புக்கான முன்னுரை

 


(வேதாளத்துடன் செல்வதற்கான எளிய விதிகள் எனும் வேணு தயாநிதியின் கவிதை தொகுப்பிற்காக எழுதிய முன்னுரை. பதாகை- யாவரும் வெளியீடாக வெளிவர உள்ளது.) 

புனைவெழுத்தாளனாக அல்ல, ஒரு கவிதை வாசகனாக என்னை நிறுத்திக்கொண்டு நண்பர் வேணு தயாநிதியின் முதல் கவிதை நூலுக்கு என் வாசிப்பை அளிப்பதே நியாயமாக இருக்கும். கவிதை குறித்து எழுதுவது அதன் பேசுபொருள் குறித்து எழுதுவது அல்ல. கம்பன் சொல்லை அம்புக்கு இணைவைத்தபடி இருக்கிறான். இராமனின் அம்பு தன்னை துளைத்துவிட்டது என எதிராளி உணர்ந்து கொள்வதற்கு முன்னரே அவன் உயிரை அரிந்துவிடும். நல்ல கவிதையும் அப்படித்தான்.  அது அர்த்தப்படுத்திக்கொள்வதற்கு  முன்னரே நம்முள் ஏதோ ஒன்றை நிகழ்த்திவிடுகிறது. இது நல்ல கவிதை, இது நல்ல கவிதை, இது என்னை என்னமோ செய்கிறது.  இப்படி  எனக்கு ஏற்படும் பதைப்பை வாசகருக்கு கடத்த முயல்வதே கவிதை குறித்தான எழுத்துக்களின் நோக்கமாக இருக்க முடியும். 


வேணு உயிரியல் / மரபணுவியல் சார்ந்து உயராய்வு செய்து வரும் விஞ்ஞானி. அமேரிக்காவில் வசிக்கிறார். அவரது ‘பீத்தோவனின் ஆவி’ சிறுகதை வெளியாகி கவனம் பெற்ற அதே சமயத்தில் தான் எனது முதல் கதையான ‘வாசுதேவன்’ வெளிவந்தது. ‘சுடோகுயி’ போன்ற அறிவியல் புனைவு கதைகளும் எழுதியுள்ளார். ‘காஸ்மிக் தூசி’ எனும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதி வருகிறார். இந்த முதல் தொகுப்புக்கு அவர் எடுத்துக்கொண்ட காலம் மிக அதிகம் தான். ஆனால் அதற்கான அவரது மெனக்கிடல்களை கவிதை தொகுப்பை வாசிக்கும் போது உணர்ந்துக்கொள்ள முடிந்தது.  


 வேணுவின் கவிதைகளில் முதன்மையாக என்னை வசீகரித்தது அமேரிக்க பனிக்கால சித்தரிப்புகள். “எண்ண முடியாத இலைகளின் வெறுமை” 

என சுட்டப்படும் இலைகள் உதிர்ந்த பிர்ச் மரங்களும், வெண்பனியின் வெறுமையும், தனித்த பறவைகளும், மேப்பிள் மரங்களின் தனிமையும் பல கவிதைகளில் கையாளப்படுகின்றன. குளிர்கால அமெரிக்க நிலக்காட்சிக்கும் ஜனசந்தடி மிக்க மதுரை வீதிகளுக்குமாய் கவிதைகள் அலைபாய்கின்றன. காலமும் வெளியும் மயங்கி மேப்பிள் மர நிழலில் இருந்தபடி ஒரு நொடி மதுரைக்கு சென்று திரும்புகிறார். சுனைநீரில் பால்யகாலத்து கிணற்று குளியலை தேடுகிறார். தூரதேசத்து மலையடி சுனையின் ஒரு துளி இவற்றையெல்லாம் கொண்டு சேர்க்கிறது. புல் வெட்டும் இயந்திரத்தை காணும்போது ஊரிலிருந்த காராம் பசு நினைவுக்கு வருகிறது. “தூய வெண்மையின்/

பொருளின்மையில்,/ எப்படியாவது/

ஒரு துளி அர்த்தத்தை/சேர்த்துவிட/

முயல்வது போல்” என்கிறார். இயற்கை காட்சிகளின் சித்தரிப்பிலிருந்து மீபொருண்மை தளத்திற்கு தாவிட முடிகிறது. இஸ்கான் கீதை பதிப்பில் விஸ்வரூப தரிசன படம் ஒன்றுண்டு. பிரம்மாண்ட விஷ்ணுவைச்சுற்றி கணக்கற்ற குமிழ்கள் மிதக்கும். அவை ஒவ்வொன்றிலும் விஷ்ணு சயனித்திருப்பார். 


 பிரபஞ்ச விளையாட்டு


கரைந்து குழைந்து

காற்றைக் குடிக்கும் 

சோப்புக்குமிழி

வீங்கிப்பெருத்து 

மிதந்தலையும்.


மூப்படைந்து 

துளைகள் தோன்ற 

வெடித்துச் சிதறும்.


உடையாத குமிழியொன்று

உயர்ந்தெழுந்து 

நிறமடர்ந்து

வானவில்லாய் 

விரிவடையும்.


மதிய வெய்யில்

மரத்தடியில் அம்முக்குட்டி

ஊதுகிறாள் 

விளையாட்டாய்.

 

அவள் குழல் முன்

தோன்றி வளர்ந்து 

விரிந்து மறையும்


எண்ணற்ற 

பிரபஞ்சம்.


வேணுவின் கவிதை பிள்ளை விளையாட்டை பிரபஞ்ச விளையாட்டாக உருமாற்றுகிறது. மற்றொரு கவிதையான ‘திருப்பள்ளியெழுச்சி - மினியாப்பொலிஸில்’ உறங்கும் மகளை எழுப்புகிறது. 

“நீ கிறுக்கப்போகும் ஓவியத்தில்

உதிப்பதற்கென்று 

தயாராகி விட்டது சூரியன்

எழுந்துவிடு 

சீக்கிரம்.” எனும் இவ்வரி சட்டென ஒரு மனவெழுச்சியை அளித்தது. 

“இந்த அறைக்கு/ எப்படி வந்தேன்?/ இந்தப் படுக்கையில்/ ஏன் கிடக்கிறேன்?/

நான் யார்?” என முழுக்க மீபொருண்மை தளத்தில் நிகழும் கவிதையும் உண்டு. “சாலையைக் கடந்து/ மறுபுறம் அடைந்தால்/நானும்/ அவன் தானா?” (சிவப்பு விளக்கு) எனும் கவிதையில் காலம் ஒரு சாலையாக ஆகிறது. லிடியா டேவிஸின் ‘ரயிலின் மாயாஜாலம்’ எனும் குறுங்கதை நினைவுக்கு வந்தது. “நம்மை விட்டு அவர்கள் ரயில் பெட்டியில் விலகி, கழிப்பறையின் திறந்த கதவுகளை கடந்து, கடைசியில் இருக்கும் நழுவு கதவின் வழியாக, ரயிலின் ஏதோ ஒரு பகுதிக்குள்  நடந்து செல்லும்போது, நாம் காணும் அவர்களின் பின்புற தோற்றத்தைக்கொண்டு நம்மால் சொல்ல முடியும், இவ்விரு பெண்கள், அவர்களது இறுக்கமான கறுப்பு ஜீன்ஸில், அவர்களது உயர்ந்த குதியணியில், இறுக்கமான ஸ்வெட்டர் மற்றும் ஜீன்ஸ் மேற்சட்டையின் நூதனமான அடுக்குகளில், நிறைந்து வழியும் நீளமான கருப்பு தலைமுடியில், அவர்கள் முன்னே செல்லும் பாங்கில், அவர்கள் ‘டீன்களின்’ இறுதியை சேர்ந்தவர்கள் அல்லது இருபதுகளின் தொடக்கத்திலிருப்பவர்கள் என்று. ஆனால் அவர்கள் நம்மை நோக்கி, முன்னாள் இருக்கும் விந்தையான மாயாஜாலம் நிறைந்த பகுதியில் கொஞ்சநேரம் சுற்றிபார்த்துவிட்டு, அப்போதும் நன்கு அடிவைத்தபடி, மறுபக்கத்திலிருந்து திரும்பி வரும்போது, நம்மால் அவர்களது முகங்களை இப்போது காண முடியும், வெளிறி, கோரமாக, கண்களுக்கு கீழே ஊதா நிழல்கள் படிய, கன்னங்கள்  தோய, பொருத்தமற்ற மச்சங்கள் அங்குமிங்கும் தெரிய, கன்ன கோடுகள் தெரிய, நெற்றியில் காக்கை பாதம் போல் சுருக்கம் விழ, அவர்கள் இருவரும் சற்று மென்மையாக புன்னகைத்தாலும் கூட, ரயிலின் மாயாஜால விளைவின் காரணமாக  அவர்கள் இதற்கிடையே இருபது ஆண்டுகள் முதிர்ந்துவிட்டனர் என்பதை நாம் காணவே செய்கிறோம்”


இவை எதுவும் இல்லாமல் சித்தர் பாடல் போல தொனிக்கும் ஒரு கவிதை சட்டென எங்கிருந்தோ சந்தத்துடன் வந்து சேர்கிறது.  

“இரவி அணைந்து 

இரவு வரக்கண்டு

விடாய் கொண்டு 

விழி அயர்ந்து


கடாவு எழ

அனுட்டானம் எனப் 

பிரக்ஞை கொண்டு

கண் மலர எழுந்தனன் 

யானே இன்று.


எழாவிடின்

உறட்டை சவம்


நிவகம்

எவர்க்கும்

சூதகம்.”

(நிகழ்தகவின் மானுடத்துவம்).



இயற்கை காட்சிகளின் மீபொருண்மை தளம் ஒரு வகை என்றால் வழிபடுதலுக்குரியவை நிகழ் தளத்திற்கு இறங்கி வருவது மற்றொரு வகை. சடாரி, காலபைரவரின் கடைசி பயணம், நவீன சிவபெருமானின் ஒரு ஞாயிறு மதியம்,  புத்த வீர சாமி ஆகிய கவிதைகளை இந்த வகையில் சொல்லலாம். இவ்வகை கவிதைகளில் ‘நந்தி’ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு பிரதோஷ பூஜை கவிதைக்குள் என்னவாக எல்லாம் உருமாறுகிறது என்பதை கவனிக்கலாம். 


நந்தி 


ஆலகால விடம் அருந்தி

அம்மை மடியில் 

மயங்கிக் கிடக்கையில் 

காத்திருக்கும் பக்தர்களின் வரிசைக்கு, காவல்.

தசைச்செழிப்பு புடைத்தெழும்ப

எந்நேரமும் எழுந்துவிடும் ஆயத்தமாய்

பிரகதீஸ்வரர் முன் 

வீற்றிருக்கும் நந்தி.


கயிலாயத்துள் நுழையும்

பக்தகோடிக்கு ஜருகண்டி.

அத்துமீறினால் 

விஷ்ணுவே ஆனாலும் விபரீதம்.

வெறும் மூச்சுக்காற்று போதும்

கருட பகவானை 

தடுமாறி விழவைக்க.

உயிர் பிச்சைக்கு 

அந்த சிவபெருமானே வந்து

சொன்னால்தான் ஆச்சு.


அவதார அதிகார கைலாச

சிறிய பெரிய, மற்றும்

சாதாரண நந்திகள் மத்தியில்

ஓரமாய் எங்கோ உடனுறைகிறார் 

சிவபெருமான்.


காலத்தில் உறைந்த கறுப்பு உலோகம்

விலாப்புறங்கள் சிலிர்த்து திமில் சரிய 

முன்னங்கால் உயர்த்தி

கொம்பசைத்து 

வாலைச்சுழற்றி


கழுத்துப்பட்டையின் மணி ஒலிக்க

எழுந்துவிடக்கூடும், எந்நேரமும். 

என்றாலும், 

நந்திகள் ஏன் எப்போதும்

அமைதியாக 

அமர்ந்திருக்கின்றன?


பிரதோஷ நேரங்களில்

எண்ணற்ற நந்திகளுள்

ஏதோ ஒன்றை தற்செயலாய் தெரிவுசெய்து

அதன் சிரசின்மேல்

தன் ஏழுதாண்டவங்களுள் 

ஏதாவது ஒன்றை

இடக்கால் வீசி 

ஆவேசமாய் நடனமிடுகிறார்

சிவபெருமான்.


நடனம் முடியும்வரை 

ஈட்டி முனை வேய்ந்த வேலிக்குள்

மூச்சைப்பிடித்தபடி

விழிபிதுங்க 

அசையாமல்

அமர்ந்திருப்பதைத் தவிர

வேறு வழியில்லை.


நந்தி 

இம்மி அசைந்தாலும் 

போதும்.


அவரின் 

அடவு 

தப்பிவிடும்.



வேணு இலகுவான விளையாட்டு நிறைந்த கவிதைகளும் எழுதியுள்ளார். “படிமங்கள் செறிந்த/ வரிகளுக்குள்/ ஆழமாகவே/ நுழைந்து சென்றிருந்தது/

தோட்டா./ சிரமம் ஏதுமின்றி. (ஒரு புத்தகத்தின் மரணம் அல்லது

கவிதையைக் கொலை செய்வது எப்படி?). ‘அந்த  சம்பவத்திற்கு பிறகு’ என்றொரு கவிதையில் ஒரு சின்ன விளையாட்டு நிகழ்கிறது. வடையை தொலைத்த காகம் பாட்டு பயிற்சியை நிறுத்திவிட்டு காதலில் விழுகிறது. வடையை வென்று பின்னர் திராட்சையை சாப்பிடமுடியாத நரியோ ஊர் ஊராக அலைந்து கொண்டிருக்கிறது. பாட்டி கதைக்கும் நிதர்சனத்திற்கும் இடையிலான கோட்டை அழிக்கிறாள். இந்த கவிதையின் ஒருவித கால- வெளி விளையாட்டு தொழில்படுகிறது. ‘தக்காளி காதல்’ உணவாகிப்போன தக்காளிக்கான அஞ்சலி குறிப்பு. தனது நல்லியல்புகளை ஈந்து பிறரை மேன்மையாக்கி தன்னை கரைத்துக்கொண்ட தக்காளி நீடுழி வாழட்டும். சிரிக்கும் புத்தரும் குழந்தையின் மென்பாதமும் அதை விவரிக்க பயன்படுத்தப்படும் உவமை. 




வேணுவின் கவிதைகளில் சர்ப்பங்கள், பூனைக்குட்டிகள், டைனோசர்கள், நிழல்கள், வேதாளங்கள் என வெவ்வேறு படிமங்கள்  பயன்படுத்தப்படுகின்றன. பூனைக்குட்டியும் டைனோசர்களும் உறவு சிடுக்குகளை சொல்ல உதவுகின்றன. “வெறும்/சாதாரண/ ஒரு பூனைக்குட்டி./அது இல்லாமல்/ 

வாழவே முடியாது/என்று நினைத்ததுதான்-/எவ்வளவு பெரிய

முட்டாள்தனம்?”. ‘அல்லல் உழப்பது’ என்றொரு கவிதை குடிகாரனுக்கு நண்பனாக இருப்பதைப் பற்றி சொல்கிறது. “இன்றின்/வரஇயலாமையை/ ஏதாவதொரு/ பொய்சொல்லி/ எப்படியாவது/ நிறுவி விடலாம்தான்./

ஆனால்/ இன்றிரவு/அவன் உடலை/ அவன் வீட்டில்/ வேறு யார் /

கையளிப்பார்?” என விசனப்படுகிறது. ‘மயானத்திலிருந்து திரும்பிய பிறகு’ எனும் இறந்து போன முன்னாள் காதலிக்காக வெளிப்படையாக துக்கம் கொண்டாட முடியாத இக்கட்டான துயர நிலையை சுட்டுகிறது.


வேதாளங்கள் நம்மை அசைவுகரியப்படுத்துபவை. நாமாக சென்று தேர்பவை அல்ல. அவை நம்மை வந்து சேர்கின்றன ஆனால் மெல்ல மெல்ல அவற்றை நேசிக்க தொடங்குகிறோம். வேதாளத்திற்கு ஏதோ ஒரு தோள் போதும். நமக்கு தான் வேதாளம் வேண்டியதாய் இருக்கிறது. டைனோசர்கள் பீடிக்க காத்திருக்கின்றன. ‘நிழல்களின் புகலிடம்’ கவிதை வாசிக்கும் போது அவையும் அப்படி காத்திருப்பதை காண முடிகிறது.  “என் இருப்பிலிருந்து/

பிரித்துவிட முடியாதபடிக்கு/ ஒன்றி பதுங்கியிருக்கின்றன/ எனக்குத்தெரியாமல்/ எப்படியோ/ 

எனக்குள் குடியேறிவிட்ட/  நிழல்கள்.” சர்ப்பங்களும் இப்படி நம்முடனேயே வாழ்கின்றன.  “இப்போதுங்கூட ஒன்று/ 

இந்த அறையில் தான்/ 

எங்கோ ஒளிந்திருக்கிறது/ அப்படியே இருக்கட்டும்./ கைதொடு தூரத்தில் இருந்தாலும்/ அவற்றை கண்டு கொள்ளாதீர்./ நீங்கள் / கண்டுகொள்ளாதவரை/

அவைகளும்/  உங்களை / கண்டுகொள்வதில்லை.” முகமூடிகள் முகத்தின் இடத்தை எடுத்துக்கொள்கின்றன. எது முகம் எது முகமூடி என்பது புரியாமலாகிறது. கார்ல் யுங் ‘நிழல்’ நமக்குள் சேகரமாவது என்கிறார். பலவீனமான தருணத்தில் நம்மை ஆட்கொள்ளும் என்கிறார். நிழலை கண்டுகொள்வதும் அதன் இருப்பை அங்கீகரிப்பதும் இன்றியமைதாததென உணர்வதும் என பல்வேறு நிலைகளில் வேணுவின் கவிதை பயணிக்கிறது. இந்த நிழல் தான் வேதாளமாகவும் டைனோசராகவும் பூதகணங்களாகவும் கவிதைக்குள் வருகின்றன. இந்த இருமை ஒரு கற்பிதம்தானோ எனும் பார்வையை ‘பூதகணங்களின் கனவில் வரும் தேவதைகள்’ கவிதை வழி அடைகிறோம். 


“இமைகளுக்குள் 

கருவிழிகள் 

உருளும் ஆழ்துயிலில் 

தேவதைகள் 


தோன்றும் 

கனவில்.


தேவதையின் முகம் கண்டு

குழந்தையைப்போல 

முறுவல் பூக்கும் 

பூத முகம்.


இறுக்கம் அவிழ்ந்து 

புன்னகை இடம் மாறி 

குடிகொள்கையில்


பூதமும் 

தேவதையும் 

ஒன்று.”


தற்கால தமிழ் கவிதைகளின் பரப்பில் வேணு தயாநிதியின் கவிதைகளை எங்கு பொருத்திப்பார்ப்பது எனும் கேள்விக்கு என்னிடம் துலக்கமான பதில் ஏதும் இல்லை. நுண் சித்தரிப்புகள், பகடி, இயற்கை சித்தரிப்பு என பல்வேறு கவிஞர்களின், கவிதை போக்குகளின் தாக்கம் உள்ளதை கவனிக்க முடிகிறது. ஏறத்தாழ பத்துவருட காலம் எழுதிய கவிதைகள் என்பதால் இப்படி வெவ்வேறு தாக்கங்கள் புலப்படுவது இயல்பே. எனினும் ஒரு கவிதை வாசகனாக மிகுந்த நிறைவளித்த தொகுப்பிது என்பதை நிச்சயமாக சொல்ல முடியும். நண்பர் வேணுவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். 


சுனில் கிருஷ்ணன்

22.12.2023










 






 




 









Saturday, January 6, 2024

சிறுகதை வாசிப்பின் 41 விதிகள்

(சிங்கப்பூரில் சிறுகதை வாசிப்பது பற்றி புங்கோல் வட்டார நூலகத்தில் எடுத்த வகுப்பிற்காக தயார் செய்த குறிப்பு. மயிலனின் ' ஆகுதி' மற்றும் லதாவின் 'பச்சை நிற கண்களுடைய கறுப்பு பூனை'  ஆகிய கதைகளை விவாதிக்க எடுத்துக்கொண்டோம்.)  



Thursday, January 4, 2024

ஈக்களின் பிரபு - மார்கோ டெனெவி- மொழியாக்க குறுங்கதை

 

                                               அர்ஜென்டினா எழுத்தாளர் Marco Denevi PC- Wikipedia



ஈக்கள் தங்களது கடவுளை கற்பனை செய்தன. அதுவும் ஒரு ஈ தான். ஈக்களின் பிரபு ஒரு ஈ. ஒருகணம்  பச்சையாக, ஒருகணம் கருப்பாகவும் பொன்னிறமாகவும், மறுகணம்  இளஞ்சிவப்பாகவும், மறுகணம்  வெள்ளையாகவும், மறுகணம் கத்திரிப்பூ நிறத்திலும் இருக்கிறது.  கற்பனைக்கு எட்டாத ஈ, அழகிய  ஈ, மாபெரும் ஈ, அச்சுறுத்தும் ஈ, கருணை மிக்க ஈ, பழிதீர்க்கும் ஈ, நீதியுணர்வு கொண்ட ஈ, இளமையான ஈ, ஆனால் எப்போதுமே அது ஈ தான். சில அதன் அளவை காளையுடன் ஒப்பிடத்தக்க அளவிற்கு பெருக்கின, பிற காணவே முடியாத அளவிற்கு சிறியதாக கற்பனை செய்தன. சில மதங்களில் அதற்கு  ரெக்கைகள்  கிடையாது (அது பறக்கும் ஆனால் அதற்கு ரெக்கைகள்  தேவையில்லை என வாதிட்டன ), அதேசமயம் வேறு மதங்களில் அதற்கு  எண்ணிலடங்கா ரெக்கைகள் இருந்தன. அதன்  உணர் காம்புகள் கொம்புகளை போல இருந்ததாக இங்கு சொல்லப்பட்டது, அங்கு தலை முழுவதும் கண்களால் சூழப்பட்டதாக சொல்லப்பட்டது. சிலருக்கு அது  எப்போதும் ரீங்கரித்துக்கொண்டே இருந்தது , வேறு சிலருக்கு எப்போதும் மவுனமாக இருந்தது. ஆனால் அப்போதும் அதனால்  அதேபோல தொடர்புறுத்திக்கொள்ள முடியும். எனினும் எல்லாவையும்  நம்பியது- ஈக்கள் இறந்ததும் அது  அவற்றை சொர்க்கத்திற்கு கொண்டு செல்லும்  என்பதை. சொர்க்கம் என்பது கெட்டு நாறும். அழுகிய மாமிசத் துண்டு. அதை உண்டு அழிக்காமல் செத்த ஈக்களின் ஆன்மாக்கள் நித்திய காலத்திற்கு மொய்த்து திரியலாம். ஆம், இந்த திவ்யமான கழிசல்  துண்டு ஈக்களின் குழாமினால் மீண்டும் உற்பத்தி செய்யவும் மீண்டும் பிறப்பிக்கவும் படும். இவை நல்ல ஈக்களுக்குத்தான். கெட்ட ஈக்களும் இருப்பதினால், அவற்றுக்கு நரகம் என ஒன்றும் இருந்தது. சபிக்கப்பட்ட ஈக்களுக்கான நரகம் என்பது மலமற்ற, குப்பைகளற்ற, அழுக்குகளற்ற, துர்நாற்றமற்ற, எதிலும் எதுவுமே இல்லாத, தூய்மையான, பளீரென மின்னும், வெள்ளை விளக்கால் வெளிச்சமடைந்த இடம்தான்; வேறு சொற்களில் சொல்வதானால், கடவுளின் அருகாமையை உணர்த்தாத  இடம்.    


Wednesday, January 3, 2024

லிடியா டேவிஸ் குறுங்கதைகள்

லிடியா டேவிஸ் (Lydia Davis) அமெரிக்க எழுத்தாளர்.‌ ஃபிரெஞ்சிலிருந்து மொழியாக்கங்களும் செய்திருக்கிறார். குறுங்கதைகள் சிறுகதைகள் நாவல்கள் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவரது ‘Cant and Wont’ தொகுப்பிலிருந்து எனக்கு பிடித்த சில குறுங்கதைகளை மொழியாக்கம் செய்துள்ளேன். என் நோக்கில் சமகாலத்தில் குறுங்கதைகளை எழுத எண்ணும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய எழுத்தாளராக லிடியா டேவிஸை கருதுகிறேன். சிறிய சிறுகதைகள், சடுதி கதைகள் (sudden fiction) நுண்கதைகள் (microfiction) மின்னல்வெட்டு கதைகள் (flash fiction) இப்படி பல்வேறு பிரிவுகளாக வடிவம் மற்றும் சொற்களின் எண்ணிக்கை சார்ந்து வகைப்படுத்தப்படுகிறது. தமிழில் ‘குறுங்கதைகள்’ என மொத்தமாக அடையாளப்படுத்துகிறோம். நுண்ணிய அவதானிப்பு, சொற்சிக்கனம், மொழிவளம், அறிவார்ந்த தெறிப்பு, உணர்வுச்சம் என பல இயல்புகள் லிடியாவின் கதைகள் வழி நமக்கு கிடைக்கின்றன. சிங்கப்பூரில் குறுங்கதைகள் அமர்வுக்காக மொழியாக்கம் செய்தவை. அகழ் மின்னிதழில்  வெளியானவை.