Showing posts with label கொவிட் 19. Show all posts
Showing posts with label கொவிட் 19. Show all posts

Thursday, May 6, 2021

விஷாத யோகம்


(தமிழினி இணைய இதழில் வெளிவந்தது)

சென்ற ஆண்டு கொரோனா தொற்று பரவி வீடடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன், நோயாளிகளையும் அவர்களுடன் தொடர்புடையவர்களையும் துப்பறிவாளர்களாக அரசு தேடித் தேடிப் பரிசோதித்துக்கொண்டிருந்த காலத்தில், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் நோயாளிகள் மருத்துவமனையில் இடமின்றி, செயற்கை சுவாசக் கருவியின்றி, சாலையில் மரித்துக்கொண்டிருந்த போது, இங்கோ காரைக்குடியில் சின்ன முத்துமாரியம்மனுக்கு மாசி மாதக் காப்புகட்டும் திருவிழா நடந்துகொண்டிருந்தது. சோதனையோட்டமாக அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை வீடடங்கிற்கு நான்கு நாட்கள் முன்னர் முத்துமாரியம்மனுக்கு இலட்சக்கணக்கான மக்கள் பால்குடமும், அக்கினிச் சட்டியும், காவடியும், வேலும் சுமந்துகொண்டு, பூக்குழி இறங்கி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள். கூட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முகக்கவசங்கள் (எங்கள் ஊரில் முகக்கவசத்திற்கு வாக்கூடு- வாய்க்கூடு எனும் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். நாம் பயன்படுத்தும் முறைக்குப் பொருந்தி வருவதாகவே தோன்றுகிறது) தென்பட அச்சத்துடன், கூடுமானவரை தொலைவில் நின்று பால்குடத்தை வேடிக்கைப் பார்த்து வந்தோம். சென்றாண்டு ஆலயங்கள் பக்தர்களுக்கு மூடப்பட்டன.  திருவிழாக்கள் நின்றுபோயின. இப்போது இந்த ஆண்டும் சித்திரை மாதத் திருவிழாக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மரணச் செய்திகளை நாள்தோறும் செவியுறுகிறோம். துயரமோ மகிழ்ச்சியோ அவை நமக்கு கொண்டாட்டம்தான். கொரோனாவில் மரண அச்சம் என்பது ஒருபுறம் என்றாலும் அதில் நம்மால் நம் வழமையான முறையில் துக்கம் கொண்டாட இயலவில்லை என்பது மிகப்பெரிய மன பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஓர் உரையாடலில் நண்பர் ஒருவர் இந்தக் கொரோனா காலகட்டத்தில் கடவுள் நம்பிக்கை நிச்சயம் குறையும் என ஆரூடம் சொன்னார். நெருங்கியவர்களின் மரணத்தைக் கண்ணுற்ற குடும்பங்களில் நிச்சயம் கடவுள் மீது வைத்திருந்த நம்பிக்கை பரிசீலனைக்கு உள்ளாகும் என்றார். 

இந்த ஆண்டின் முற்பகுதியில் தொற்று குறைந்து சற்று இயல்பான சூழலில் மீண்டும் மாசி மாத சின்ன முத்துமாரியம்மன் திருவிழா நிகழ்ந்தது. அதேயளவு கூட்டம். சென்றாண்டு தென்பட்ட முகக்கவசம் மேலும் அருகியிருந்தது. அத்தனை மரணங்களைக் கண்ணுற்ற பிறகும் எஞ்சியிருப்பதன் நன்றிக்கடனாக இவ்வாண்டு தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தியவர்களே பெரும்பாலானோர் எனத் தோன்றியது. நெருக்கடிகளில் நாம் ஏன் கடவுளைக் கைவிடுவதில்லை? பெரும்பாலானோர் மேலும் இறுக்கமாக கடவுளைப் பற்றிக்கொள்கிறோம். 

அறிவொளி கால எழுச்சியில் மானுட அறிதல் விரிந்து அதுவரையிலான புதிர்த்தன்மைகள் விலகுவதைக் கண்ட நீட்ஷே ‘கடவுள் இறந்துவிட்டார்’ எனப் பிரகடனப்படுத்தினார். மனிதனின் அறிவாயுதம் அவரைக் கொன்றது. அவருடைய இருப்பைக் கேள்விக்குள்ளாக்கியது. கடவுளால் அல்ல, இயற்பியல் நியதிகளால் உலகம் இயக்கப்படுகிறது என உணரத் தொடங்கிய காலகட்டத்தில் நீட்ஷே இதை அறிவித்தார். பிரபஞ்ச இயக்கத்தின் மர்மங்கள் விலகுகின்றன. எனினும் அவ்விடத்தில் முன்பைவிட நுட்பமான புதியதொரு மர்மம் தோன்றுகிறது. மர்மங்களின் சுழலடுக்கில் நாம் பயணிக்கிறோம். அறிதலுக்கு முடிவென்பதே இல்லை‌. கடவுள் கொல்லப்பட்டுவிட்டாரா? கொல்லப்பட்ட கடவுள் யார்? எஞ்சியிருப்பது யார்?

பைரப்பாவின் கன்னட நாவலான ‘ஒரு குடும்பம் சிதைகிறது’, தாராசங்கர் பந்தோபாத்யாயவின் வங்க நாவலான ‘ஆரோக்கிய நிகேதனம்’, தகழி சிவசங்கரன் பிள்ளையின் ‘தோட்டியின் மகன்’ ஆகியவை கொள்ளை நோய்கள் பற்றிய நுண்ணிய சித்திரங்களை அளிப்பவை. பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலில் உள்ள மிகவும் உணர்ச்சிகரமான ஒரு பகுதியைச் சற்று கவனிக்க வேண்டும். நஞ்சம்மாவின் மகள் பார்வதியையும் மகன் ராமண்ணாவையும் ப்ளேக் பீடித்துவிடும். நஞ்சம்மா ஒரு கனவு காண்பாள். கர்ப்பக் கிரகத்தில் கிராம தேவதையான காளம்மன் மடியில் பார்வதியும் ராமண்ணாவும் வெற்றுடம்போடு கிடப்பார்கள். அவர்களுக்குக் குளிருமே எனக் கம்பளியைப் போர்த்த முயலும்போது அம்மன் அவளை உள்ளே அனுமதிக்கவில்லை. அதை அர்த்தப்படுத்திக்கொள்ள முயல்வாள். குழம்பித் தவிப்பாள். அவளுக்கு உதவியாக இருக்கும் பெரியவர் மாதேவய்யாவிடம் கனவைச் சொல்வாள். அவருக்கு உள்ளூர இது அபசகுனம் எனத் தோன்றினாலும், ஆறுதலாக, அவள் பிள்ளைகள் கடவுளின் மடியில் பாதுகாப்பாக உள்ளதால் அம்மனே காப்பாள் என்பார். அம்மன் காப்பாற்ற எண்ணும் பிள்ளைக்கு மருந்து கொடுத்தால் அது அவளுக்குக் கோபத்தை ஏற்படுத்துமோ என நஞ்சம்மாவிற்கு ஐயம் எழுகிறது. சற்று நேரம் குழப்பத்துடன் யோசித்த பிறகு மாதேவய்யா ஒரு யோசனை சொல்கிறார். “அம்மா சொறி வந்தப்ப நாக பூசை செஞ்சா குணமாச்சு? ஊசி போட்டு வந்தப்புறம்தான குணமாச்சு? இப்பவும் அப்படியே செய்.” அவர்கள் பலவீனமடையும் தோறும் நஞ்சம்மா குழம்புகிறாள். இரவில் “என் வீட்டிற்குத்தான் முதலில் வந்திருக்கிறதோ? கோவிலுக்குப் புதிதாகக் கல்யாணம் ஆன பெண்ணைக் கூட்டிக்கொண்டு போனேன். அதனால் அம்மனின் பார்வை அவள் மீது விழுந்துவிட்டதோ? ஆனால் கிராம தேவதை காளம்மனும் ப்ளேக் தேவதை சுங்கலம்மாவும் வெவ்வேறுதானே? சுங்கலம்மாவைத் தடுக்கத்தானே காளம்மா இருக்கிறாள்? இதெல்லாம் உண்மையா பொய்யா? ஏன் இந்தப் பிளேக் நோய் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வந்து தொல்லை கொடுக்கிறது? இதைக் குணப்படுத்த மருந்து கிடையாதா?” என்று அவள் சிந்தனை ஓடுகிறது. வளத்தையும் வாழ்வையும் வழங்க கடவுள்கள் உள்ளது போலவே நோய்களையும் அழிவுகளையும் அளிக்கும் கடவுள்கள் நம் மரபில் வேதங்கள் தொட்டே பேசப்படும் ஒன்றுதான். இன்ன நோய்களுக்கு இந்தக் கடவுள்கள் பொறுப்பு என்கிறது வேதம். வேதக் கடவுள்கள் பெரும்பாலும் இயற்கை ஆற்றல்களின் தெய்வ வடிவங்கள். இக்கடவுள்களை நிறைவுசெய்வதன் வழியாக நோயைத் தவிர்க்கவும் அதிலிருந்து மீளவும் முடியும் எனும் வேதகால நம்பிக்கை இன்றுவரை நீள்வதை நாம் காண முடிகிறது. 

கடவுளை முழுமையாக நம்பிக்கொண்டிருந்த நஞ்சம்மா இப்போது கடவுள், மருத்துவம் என இரண்டையும் நம்புகிறாள். கடவுளை நம்பிக்கொண்டு சும்மா இருக்க முடியாது என்பதை உணர்கிறாள். இந்நிலையை எப்படி புரிந்துகொள்ள முடியும்? கடவுள் நேரடியாகச் சங்கும் சக்கரமும் பாசமும் ஏந்தி குழந்தையைக் காக்கப் போவதில்லை. அந்த மருந்து கடவுள் வழியாக, அது கடவுளின் அருள் வழியாக காக்கப் போகிறது. கடவுளாகவே இருந்தாலும் அவர் கையில் அமுத கலயம் ஏந்தியிருக்கிறார். நவீன மருத்துவமும் மருந்துகளும் இங்கே கடவுளின் திட்டத்திற்கு உதவ வந்தவையாக உருமாறுகின்றன. அடுத்து ஒரு கேள்வி எழ வேண்டும். மருந்துதான் வேலை செய்யக்கூடும். கடவுள் நேரடியாக நம்மைக் காக்கப் போவதில்லை என உணர்ந்தாலும் ஏன் நஞ்சம்மாவால் முழுவதுமாக கடவுளைக் கைவிட முடியவில்லை? நாம் மருத்துவமனை வரவேற்புப் பகுதிகளில் இப்படியொரு வாசகப் பலகையைப் பார்த்திருப்போம். ‘மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறோம். ஆண்டவர் குணப்படுத்துகிறார்.’ சரியான முறையில் நோயைக் கண்டுபிடித்து சரியான சிகிச்சையை அளிக்கும்போது நோயாளி குணமாக வேண்டும் என்பதே சிகிச்சை சூத்திரம். ஆனால் மருத்துவர்கள் அறிவர், இவை எல்லாம் சரியாக இருந்தும் நோயாளியைக் குணப்படுத்த முடியாமல் போன தருணங்கள் உண்டு. பிழைக்கச் சாத்தியமில்லை என எண்ணுபவர் பிழைத்ததும் உண்டு. ஒரே நிலையில் இருக்கும் இரண்டு நோயாளிகளுக்கு ஒரே மாதிரி சிகிச்சை அளிக்கும் போது ஒருவர் பிழைப்பதும் மற்றவர் இறப்பதும் ஏன்? சூத்திரத்தை மீறும் தர்க்கமின்மைக்கு யார் பொறுப்பேற்பது? ஆகவேதான் நஞ்சம்மாவோ ஆயிரம் அறுவை சிகிச்சைகளைச் செய்த நிபுணரோ கடவுளை முற்றிலும் துறந்துவிட முடிவதில்லை. வாழ்க்கையில் தர்க்கமின்மையின் புதிர் இருக்கும் வரை கடவுளும் இருப்பார். முன்னைக் காட்டிலும் உரு சுருங்கியவராக, ஆற்றல் குன்றியவராக இருக்கக்கூடும் ஆனால் முற்றழிய மாட்டார். ஏனெனில் கடவுள் நம் பண்பாட்டுடன், ஆழ்மனதுடன் தொடர்புடைய கருத்துருவும்கூட. 

இப்போது மேற்சொன்ன நஞ்சம்மா நிகழ்வைக் கொண்டு, கடவுளும் பகுத்தறிவு அறிவியலும் எதிரெதிர் துருவங்கள் எனக் கருதப்படும் சூழலில் இந்திய மனம் இவற்றுக்கு இடையே சமரசப் புள்ளியை எளிதாக அடைந்துவிட்டதை நம்மால் உய்த்துணர முடிகிறது‌. அறிவியலும் தொழில்நுட்பமும் கடவுளின் திட்டத்தின் பகுதி எனும்போது எந்த முரண்பாடும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆயுத பூஜைக்கு சாட்டிலைட்டுக்குப் பொட்டு வைக்கிறார்கள் என நாம் கேலி செய்தாலும், இந்திய மனம் முரண்பாடுகளை சமரசம் செய்துகொள்ள செய்த ஏற்பாடு இது என்பதைப் புரிந்துகொண்டால் நாம் எதையும் இழக்காமல் எல்லாவற்றையும் அனுபவிக்க எடுத்த முயற்சி பலனளிப்பதை உணர முடிகிறது. 

நெய்ல் கெய்மானின் ‘அமேரிக்கக் கடவுள்களில்’ பழைய கடவுள்களுக்கும் புதிய கடவுள்களுக்குமான போராட்டம் நிகழும். புதிய கடவுள் என்பது சந்தைதான். அவருக்கு ஒரு உருவமும் வடிவமும் உண்டு. ஆயுதங்களும் பரிவாரத் தேவதைகளும்கூட உண்டு. புதிய கடவுள் பழைய கடவுளான வெட்னஸ்டேயிடம் கேட்பார். ‘எங்களால் அளிக்க முடியாத ஒன்றை உங்களால் அளிக்க முடியும் என்கிறாயே அது என்ன?’, ‘வாழ்க்கைக்கான பொருள்’ என்பார் வெட்னஸ்டே‌. இந்தக் கற்பனை சுவாரசியமானது. நீட்ஷே கடவுள்களின் இறப்பு எனச் சொன்னபோது அது ஆளுமையுள்ள கடவுளின் (personal god) இறப்பு மட்டுமே‌ என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. யுவால் நோவா ஹராரி மானுடத்துவம், முதலாளித்துவம், பொதுவுடமைத்துவம் ஆகியவற்றைப் புதிய மதங்கள் என வகுக்கிறார். இவை மதங்கள் எனில் இவற்றுக்கு வாழ்க்கை விதிகள், எய்த வேண்டிய இறுதி இலக்கு, பணிய வேண்டிய திருவுரு எல்லாம் உள்ளன. அப்படியானால் அறிவொளிக் காலம் கடவுள் எனும் கருத்தியலை அழிக்கவில்லை‌. அந்தப் பீடத்தில் புதிய கடவுள்களை அமர்த்துகிறது. ஆனால் இவை வாழ்க்கைக்கு என்ன பொருளும் காரணமும் கற்பிக்கின்றன? கடவுள் கொல்லப்பட்டதும் அறமும் வாழ்க்கை நோக்கமும் இல்லாமலாகும் என ஊகித்த நீட்ஷே, மனிதனுக்கு ‘ubermansh’ எனும் வாழ்க்கை நோக்கத்தைக் கற்பிக்கிறார். என்றேனும் ஒருநாள் பரிணாமப் படியில் உச்சத் திறனுடைய அதிமானுடன் உருவாவான். அந்த நிலையை அடைவதற்கான பரிணாமக் கன்னிகள் மட்டும் நாம் என்பது அவருடைய வாதம். இருத்தலியல் கேள்விகள் எழும்போது கடவுளைக் கொன்ற மனிதன் என்ன செய்வான் என்பது நீட்ஷேவின் கவலையாக இருந்தது. அதே கவலையே தஸ்தாயேவ்ஸ்கியை ‘the grand inquisitor’ எழுத வைத்தது. அதே கவலையே தல்ஸ்தோயின் பிற்கால இலக்கியங்களுக்கு முகாந்திரமாக அமைந்தது. 

உலக வரலாறைப் போலவே இலக்கிய வரலாறில் இரண்டாம் உலகப் போருக்கு மிக முக்கியமான இடமுண்டு. அதன் ஆறாத வடுக்களிலிருந்து இன்றுவரை உதிரம் ஊறி, மேற்கத்திய எழுத்தாளர்களின் எழுத்துக்கு மையாகி, தாள்களை நிறைக்கிறது. இரண்டாம் உலகப்போர் என்பது போர்க்களத்தில் நிகழ்ந்த போர் மட்டுமல்ல. வங்காளத்தில் பட்டினிச் சாவு நிகழ்ந்திருக்க, கப்பலில் போர்முனைக்கு அரிசியைக் கொண்டு போனார்கள். நன்மை தீமைக்கு இடையேயான கொடு என்ன? அறத்தின் பேரால் நிகழ்த்தப்படும் அழிவுக்கு யார் பொறுப்பு? அத்தனை அறிவியலும் தொழில்நுட்பமும் இந்த இனம் தன்னைத்தானே அழித்துக்கொள்ளத்தானா? தீராத அறக்கேள்விகள். பிடிமானத்திற்கிருந்த கடவுளும் இல்லை. ஸ்வெட்லனா அலெக்சிவிச் சோவியத்தில் புரட்சி வந்த புதிதில் சில தேவாலயங்கள் இடிக்கப்பட்டு கழிப்பிடங்களாக ஆனதைப் பதிவுசெய்கிறார். அதே நூலில் சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் தேவாலயங்களில் அத்தனை ஆண்டுகளாக இல்லாத வழிபாட்டுக்கும் சேர்த்து பெரும் கூட்டம் திரள்வதையும் சொல்கிறார். கம்யூனிச நிலத்தில் கடவுள் மிக வலுவாகவே மீள் வருகையைப் புரிந்துள்ளார். முதலாளித்துவமா கம்யூனிசமா யார் கடவுளுக்கு வலுவான எதிரி என நோக்கினால், முதலாளித்துவம்தான். முதலாளித்துவம் எதையும் முற்றழிப்பதில்லை. அதன் முக்கியத்துவத்தை மட்டுமே அழிக்கிறது. கடவுளை நோக்கித் திரும்புவதற்கான மன அவகாசத்தை அது அளிப்பதில்லை. சந்தைக்கான சாத்தியத்தைக் கண்டுகொண்டால் கடவுளையும் நல்லதொரு சந்தைச் சரக்காக  பயன்படுத்திக்கொள்கிறது. அப்படிச் செய்வதன் வழியாக கடவுளை நீர்க்கச்செய்து நாளடைவில் அந்த அனுபவத்தைப் பொருளற்றதாக ஆக்கிவிடுகிறது. 

இரண்டாம் உலகப்போர் அளவுக்கே அல்லது அதையும் கடந்ததொரு காலம் எனக் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தைக் காண்கிறேன். இந்த ஓராண்டில் நம் அகமும், புறமும், வாழ்க்கை முறையும் எத்தனை மாறியிருக்கிறது! எத்தனை தொழில்கள் முற்றழிந்து, எத்தனை புதிய தொழில்கள் பெருகியுள்ளன. காரைக்குடி போன்ற சிறு நகரில் நூறு ஜோமோட்டோ வண்டிகள் ஓடுவதை 2019-ல் கற்பனை செய்திருக்க முடியாது.

மெல்ல மெல்லப் படர்ந்து மேவிய அச்சத்தை மீம்களாக எதிர்கொண்டோம். மரணங்கள் நம் அண்மையில் நிகழ்ந்து அதன் மூச்சுக்காற்றை நாம் உணரத்தொடங்கியதும் பாதுகாப்புக் குமிழ்கள் உடைந்தன. பகவத் கீதையின் முதல் அத்தியாயம் ‘அர்ஜுன விஷாத யோகம்’. அந்த அத்தியாயத்தில் கிருஷ்ணன் வாய் திறக்கவில்லை. அவனுடைய உபதேசம் என ஏதுமில்லை. ஆனாலும் அவ்வத்தியாயத்திற்கு யோகம் எனப் பெயர். அர்ஜூனன் உடல் நடுங்க, மனம் பதற, கலங்கிய உள்ளத்துடன் காண்டீபத்தை நழுவவிட்டு போரிலிருந்து பின்னடைகிறான். எவ்விதக் கேள்வியுமின்றி காண்டீபத்துடன் போரிடுபவனுக்கு கீதை தேவையில்லை‌. அர்ஜூனன் அதற்கு முன்பும் போரிட்டிருக்கிறான். இதே தாத்தாக்களுக்கும் சகோதரர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எதிராக வாளுயர்த்தியிருக்கிறான். ஆனால் அப்போது அவனுக்கு எவ்விதக் குழப்பமும் இல்லை. தனிமனிதனாக நம் அன்றாட வாழ்க்கையில் எல்லாம் வழமைபோல் அதனதன் போக்கில் சென்றுகொண்டிருக்கும் வரை நமக்கு கடவுளின், ஆன்மீகத்தின் துணை தேவையில்லை.

அன்றாடத்தில் ஒரு இலயப் பிறழ்வு நேரும்போது, நம் திட்டங்கள் கடக்கப்பட்டு அங்கே வேறொன்று நிகழும்போது, அனைத்தும் தர்க்க ஒழுங்கின்படி ஒழுகிச்செல்லும் எனும் நம்பிக்கை நழுவும்போது, நிகழ்வுகளின் தர்க்கமின்மையைக் கண்ணுறும்போது நாம் என்ன செய்கிறோம்? ஆன்மீகத்தைப் பற்றிக்கொள்கிறோம். இவற்றுக்கு ஏதாவதொரு தர்க்கம் இருந்தாக வேண்டும் என நம் மனம் பதற்றம் கொள்கிறது. அந்தத் தர்க்கம் கர்மக் கோட்பாடாகவோ அல்லது நியதிகளை நிர்வகிக்கும் ஒரு கடவுளாகவோ இருந்தாக வேண்டியுள்ளது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் அப்படி நமக்குப் புலப்படாத மேலானதொரு தர்க்கம் இருப்பதாக ஒப்புக்கொள்வதும் அதற்கு நம்மை ஒப்புக்கொடுப்பதும் மட்டும்தான். அதுவே நமக்குப் பெரும் ஆசுவாசத்தை அளித்துவிடும். சாமானியர்கள் வாழ்வு மீண்டும் அன்றாடத்திற்குள் தங்களைப் புதைத்துக்கொள்ளும்வரை இந்த நம்பிக்கையை இறுகப் பற்றிக்கொள்வார்கள். கலைஞர்களின் வழி அதுவல்ல. அவர்கள் இந்தத் தர்க்கமின்மையைக் கலையால் எதிர்கொள்வார்கள் அல்லது தர்க்கமின்மைக்கு அடியே நிழலாடுவதாக நம்பப்படும் தர்க்கத்தை அறிய முழுமையாக முயல்வார்கள். முன்னவர்கள் தன்னையழித்து கலை வளர்ப்பவர்கள். பின்னவர்கள் ஏதேனும் ஒரு புள்ளியில் கலையைக் கைவிட நேரும் அல்லது கலையை அலகிலா விளையாட்டின் ஒரு பகுதியாக ஆக்கிக்கொள்வர். அவர்கள் கலையில் திளைப்பவர்கள். 

இரண்டாம் உலகப் போருக்குப் பின்பான காலத்தில் மேற்கில் வேதாந்தமும் பவுத்தமும் பிரபலமடைந்தது. இரண்டிலும் மகத்தான ஆளுமை வரிசை ஒன்று மேற்கில் உண்டு. கடவுளை நாம் நிராகரிக்கலாம். ஆனால் தர்க்கமின்மையை வழிநடத்துவது எது எனும் கேள்விக்கு ஒரு பேரொழுங்கு எனும் பதிலைச் சென்றடைய முடியும். கடவுளின் மரணத்தை இந்திய மதங்களுக்கு அப்படியே தரவிறக்கிப் பொருத்துவது பிழை. கர்மக் கோட்பாட்டின்படி இங்கே நம் வாழ்விற்கு நாமே பொறுப்பாகிறோம். நம் பாவங்களைச் சுமக்கும் மீட்பர்கள் எவருமில்லை. கடவுளை விடுங்கள், கர்மம் நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சிக்கும் துயரத்திற்கும் காரணமாகிறது. கடவுளை விட்டுவிட்டுகூட அறத்தின் முக்கியத்துவத்தைக் கர்மக் கோட்பாடு வலியுறுத்துகிறது. கடவுளற்ற, ஆனால், கர்மக் கோட்பாடு கொண்டுள்ள பவுத்தம் மேற்கின் ‘இன்மைவாதத்திற்கு’ (nihilistic) மிகச்சிறந்த மாற்றாக மேற்கில் தன்னை‌ நிலைநிறுத்திக்கொள்கிறது. கடவுள் என்பது யாவற்றையும் வழிநடத்தும் பேரறம் என்றாகிறது. வேதாந்தம் பிரம்மைவ சத்யம் ஜகந் மித்யை என்கிறது‌. பிரம்மம் ஒன்றே மெய், இவ்வுலகு மித்யை. பவுத்தமும் அத்வைத வேதாந்தமும் நெருங்கியவை. பவுத்தத்திலிருந்து மேலதிகமாக ஒரு மாறா மைய அச்சாக பிரம்மத்தை முன்வைக்கிறது. மித்யையின் வேதாந்த விளக்கத்திற்குள் இப்போது செல்ல வேண்டியதில்லை. பிரம்மனே சத்தியம் என்பதை உணர்ந்துகொண்ட நிலையில் தனக்குத் தோதான அல்லது விழைந்த வாழ்க்கை பாவனைகளை சாதகன் உருவாக்கிக்கொள்ள முடியும். இறைவனின் விஷ்வரூபத்தைக் காண்பது என்பது அடுத்த நிலை. பேருருக் கொண்டு கண் முன் எழுவதல்ல விஷ்வரூபம். முழுப் பிரபஞ்சத்தையும் இறைவனாக, சேதன அசேதன பாகுபாடின்றிக் காண்பதே விஷ்வரூப தரிசனம்‌.

இங்கே மித்யை என்றும் மாயை என்றும் எதுவும் நிராகரிக்கப்பட இயலாது. நம்மை நாம் ஹீலராகவோ, போர் வீரனாகவோ, அரசியல்வாதியாகவோ, பிச்சைக்காரனாகவோ, சித்தனாகவோ, பாலியல் தொழிலாளியாகவோ- எதுவாக இருந்தாலும் முரண்பாடற்ற முழுமையுடன், விதியறிந்த விளையாட்டு வீரனாக வாழ்க்கையை அணுக முடியும். வாழ்க்கை வெற்றியும் தோல்வியும் பொருள்படாத அலகிலா விளையாட்டுக்கான களம் மட்டுமே. அதிமானுட சாகசங்களுக்கான சாத்தியங்களை வேதாந்தியாக இப்படியே காண்கிறேன். இயற்கை விதிகளை அனுசரிப்பது ஒரு பாவனை என்றால் சற்றே பயிற்சிசெய்து இயற்கை விதிகளை மீறுவதும் ஒரு பாவனையாகிறது. உண்மைக்கு ஒரு வழிதான். கற்பனைக்கும் புனைவுக்கும் பொய்க்கும் கணக்கற்ற வழிகள் சாத்தியம்தானே‌? உருவ வழிபாட்டையும், சடங்குகளையும், சடங்கின்மைகளையும், நியதிகளையும், மீறல்களையும் என எல்லாவற்றையும் அரவணைத்துக்கொள்ள வேதாந்தத்தால் இயலும். வேதாந்த அறிதலுடன் ஒருவர் எந்த ஆலயத்திற்கும் செல்லாமல் வாழலாம் அல்லது தினப்பூசைகளையும் விரதங்களையும் கடைபிடிக்கலாம்‌. எண்ணற்ற சாத்தியங்கள்‌. ஒரே ஒரு மெய்மையை ஏற்பதால் முரண்பட்ட தனித்த அகவயமான உண்மைகளை ஏற்பதில் வேதாந்திக்குச் சிக்கலில்லை. மாட்டுக்கறி சாப்பிடுபவர் வேதாந்தியாக இருக்க முடியாது என ஜெயமோகனை நிராகரிக்கும்போது வேதாந்தத்தின் முழுவீச்சை நாம் உணரவில்லை என்பதே நிதர்சனம். புற உலகத்தில் ஒற்றை உண்மைகள் ஏற்படுத்தும் வன்முறைகளையும் அதிகாரக் குவிப்புகளையும் வேதாந்தம் இந்த அகவயமான உண்மைகள் வழியாகவே எதிர்கொள்கிறது. 

கொரோனா வீடடங்கின் முற்பகுதியில் என்னால் புனைவுகளை வாசிக்க முடியவில்லை. எக்கார் டோலேயின் ‘A new earth’ நூலைப் பழைய புத்தகக் கடையில் வாங்கி பல காலமாகியும் தொடாமல் இருந்தேன். இயல்பாக அந்தப் புத்தகத்தையே தேர்ந்தது என் மனம். டோலே துயரங்கள் நம்மை திறந்துவிடுபவை என்கிறார். உயிரச்சமும் துயரங்களும் ஆன்மீகத்திற்கான திறவுகோல்கள் என்கிறார். அங்கிருந்து அரவிந்தரை வாசித்தேன். தொடர்ந்து கபீர், ரூமி எனக் கவிதைகளில் திளைத்தேன். அத்வைதத்தில் கலைக்கான இடம் சற்று குழப்பமானது. கலையை அகங்கார வெளிப்பாடாகக் கொள்ளும் அபாயம் உள்ளதால் சாதகர்களுக்கு கலை சார்ந்து சில தயக்கங்கள் எப்போதும் உடனிருப்பவை. எனினும் ரூமி, கலில் கிப்ரான், கபீர் போன்றோரை வாசிக்கும்போது கலை என்பது திசைகாட்டியாக இருக்க முடியும் என்பதை மனம் உணர்கிறது. அத்வைத நோக்கிலிருந்து மொத்த இலக்கியத்தையும் எச்சரிக்கைப் பதாகைகளாகவும் திசைகாட்டிப் பதாகைகளாகவும் காண இடமுண்டு. ஹெச்.எஸ். சிவப்பிரகாஷின் குரு எனத் தொடர்ந்தது வாசிப்பு. ஓ.ரா.ந கிருஷ்ணனின் ‘பௌத்த தியானம்’ நம்மால் எளிதில் பின்பற்ற முடிகின்ற தியானப் பயிற்சிகளை அறிமுகம் செய்கிறது. ‘அமைதி என்பது நாமே’ அவ்வகையில் குறிப்பிடத்தக்க செயலூக்கத்தை அளிக்கிறது. தனிமனிதனாக நாம் ஒரு துயரத்தை எதிர்கொண்டு ஆன்மீகத்தில் விடை தேடுவதற்கும் ஒரு காலகட்டத்தின் துயரத்திற்கு சாட்சியாக இருந்து ஆன்மீகத்தில் விடைதேடுவதற்கும் அடிப்படையில் வேறுபாடுள்ளது. தனது துயரமும் அச்சமும் ஒட்டுமொத்த மானுட குலத்திற்கானது என உணரச் சாத்தியமானது. கடவுள்களைவிட வாழ்ந்து மறைந்த ஞானியர்களைத் தொடரவே மனம் விழைந்தது. ஏனெனில் அறுதி உண்மை எதுவாக இருப்பினும், அல்லது அப்படி எதுவுமே இல்லாது இருப்பினும், வாழும் காலத்தை எதிர்கொள்ள அவர்களிடம் சில சூத்திரங்கள் உள்ளன என மனம் நம்பியது. அவை மனதைப் பழக்கித் தகவமைப்பது வழியாக சாத்தியமாகக்கூடும். வழிபாடுகளைக் காட்டிலும் சாதனைகளில் நாட்டம் ஏற்பட்டது.

இருத்தலியல் கேள்விகளுக்குத் தூலமான புறக்கடவுள்களும் வழிபாட்டுச் சடங்குகளும் எந்த அளவிற்குப் போதுமானதாக இருக்கும் என்பது தெரியவில்லை. தன்னையறிதலே இக்காலகட்டத்திற்கு உரிய ஆன்மீகமாக இருக்க முடியும். வழிபாடுகள் இயல்பான காலகட்டத்திற்கு உரியவை. என்றேனும் ஒருநாள் வழிபாடு நிகழ்த்தினால் போதும். அதுவும் நாம் வேண்டுவது ‘இப்போதிருக்கும் நிலை மேம்பட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அப்படியேயாவது நீடிக்க வேண்டும்’ என்பதுதான். இருத்தலியல் கேள்விகளை எதிர்கொள்ளும்போது நமக்கு அன்றாடம் அவநம்பிக்கைகளுக்குத் தீர்வு வேண்டியதாயிருக்கிறது. தினமும் நாம் நம்மை எதிர்கொள்ளவும் நம்முடன் நாமே உரையாடியாகவும் வேண்டும். இதைப் பெரும்பாலான நவீன குருநிலைகளும் ஆன்மீக அமைப்புகளும் உணர்ந்துகொண்டன. மக்கள் திரளை இணையம் வழி தொட தங்களைத் திறந்துகொண்டனர். பீகார் யோகப் பள்ளி தங்களது தியான முறைகளையும் பயிற்சி முறைகளையும் இலவசமாகப் பயன்படுத்த அனுமதித்தார்கள். நண்பர் சவுந்தர் வழியாக அறிந்துகொண்டு அதிலுள்ள தியான முறைகளைத் தினமும் பயின்றேன். ஈஷா யோக மைய மருத்துவர்கள், முன்களப் பணியாளர்களுக்கான ஒருவாரப் பயிற்சி முகாமை இணையம் வழி இலவசமாக வழங்கினார்கள். அதையும் பயன்படுத்திக்கொண்டேன். எனினும் அதிலிருந்து தொடர்ந்து செய்யும் பயிற்சிகள் என எதுவுமில்லை. சின்மயா மிஷனின் சுவாமி பரமாத்மானந்தரின் அத்வைத உரைகள் கேட்கத் தொடங்கினேன். ஆதி சங்கரரின் ‘தத்வ போதா’ பற்றி இருபது மணிநேர உரை கேட்டு முடித்து, இப்போது 275 மணிநேரம் வகுப்பெடுத்த பகவத் கீதை உரையைப் பாதிவரை கேட்டிருக்கிறேன். மிக முக்கியமான கற்றல். மற்றொரு நண்பர் மூலம் ஒரு ஆச்சாரியரின் துணையோடு முறையாக விஷிஷ்டாத்வைதம் அறிமுகம் செய்துகொண்டு, ராமானுஜரின் பிரம்மசூத்திர உரையான ஸ்ரீ பாஷ்யத்தை ஒவ்வொரு சனிக்கிழமையும் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கற்றுவருகிறேன். 

மரணம் எப்போதும் ஞானத்தின் வாயிலைத் திறந்துவைக்கிறது. சித்தார்த்தன் தொடங்கி ரமணர் வரை மரணம் எனும் இன்மை எழுப்பும் இருத்தலியல் கேள்வியை எதிர்கொள்கிறார்கள். ‘விஷாதம்’ எனும் நிலை மரணத்தைக் கண்டு மருகுவது எனச் சொன்னால் அது நம் அனைவருக்கும் பொது. அந்நிலைக்கு நம் எதிர்வினை என்பதே நம் பாதையைத் தீர்மானிக்கிறது. நாம் இருத்தலியலுக்குச் செல்கிறோமா அல்லது ஆன்மீகத்திற்குச் செல்கிறோமா? இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ‘விஷாதம்’ பெரும்பாலானவர்களுக்கான ஆன்மீக நுழைவுவாயில் எனினும் அது மட்டுமே அதற்கான ஒரே நுழைவுவாயில் அல்ல என்பதையும் மனதில் கொள்ளாக வேண்டும். ஒரு மரணச் செய்தியைக் கேட்கும்போது நம் மரணம் நமக்கு நினைவூட்டப்படுகிறது. பிறரின் மரணத்திற்குத் துயர்கொள்கிறோம் என்பதைவிட நம் மரணத்தைப் பற்றிய கற்பனைகள் நம்மைத் துயர்கொள்ள வைக்கின்றன. ஆகவே நமக்கொரு மறுமை தேவைப்படுகிறது. 

விஷாதத்திலிருந்து அச்சத்தின் வழியாக செயலின்மைக்குள் எளிதாக விழுந்துவிடலாம். வாழ்வை எதிர்கொள்ளத் துணிவில்லாமல் அந்நிலையை ஆன்மீக அனுபூதி என வேடமிட்டுக்கொள்ளலாம். முற்றிலும் தன்னலமும் துணிவின்மையும் மட்டுமே இந்நிலைக்குக் காரணம். ஆன்மீகவாதிகளின் மீதான பெரும்பாலான விமர்சனங்கள் இந்தத் தளத்திலிருந்தே எழுகின்றன. ஆனால் மெய்யான ஆன்மீகத்தில் துணிவின்மைக்கு இடமில்லை. தன்னலத்திற்கும் வேலையில்லை. வள்ளலார், அய்யா வைகுண்டர் போன்றோரின் பங்களிப்பையும் அவர்கள் வாழ்ந்த காலத்தையும் காணும்போது பஞ்சமும் கொள்ளை நோய்களும் நிறைந்த காலகட்டம் என்பது புலப்படுகிறது. நுண்ணுணர்வு கொண்ட மனம் இயல்பாகவே ஆன்மீக நெருக்கடிக்கு உள்ளாகும். மேற்கில் ‘விடுதலை இறையியல்’ என்பது புகழ்பெற்று, ஒடுக்கப்படுபவருக்கு ஆற்றலாக கிறித்தவ ஆன்மீகம் திகழ முடியும் என்கிறது. ஆசை மொழிபெயர்த்த ‘அமைதி என்பது நாமே’ வியட்நாம் போரில் அமைதியை ஏற்படுத்தப் போராடிய திக் நாட் ஹானின் படைப்பு. அவர் ‘ஈடுபடும் பவுத்தம்’ எனும் கருத்தியலை முன்வைக்கிறார். வள்ளலாரும் வைகுண்டரும் சமய, சமூக மேம்பாட்டு நோக்கில் ஆன்மீகத்தைப் பயன்படுத்த முயன்றனர். காந்தி அரசியல் தளத்தில் ஆன்மீக ஆற்றலைத் துணைக்கு அழைத்தார். அரசியல் சமூக மாற்றங்களுக்காக ஆன்மீகத்தைப் பயன்படுத்துவது ஒரு வழி. முற்றிலும் அவற்றிலிருந்து ஒதுங்கியிருந்த ரமணர் வேறொரு வழியில் பங்காற்றினார். திக் நாட் ஹான் எதுவுமே செய்யாதிருத்தல் இவ்வுலகிற்கு நீங்கள் செய்யும் மிக முக்கியப் பங்களிப்பாக இருக்கலாம் எனச் சொல்கிறார்‌. கடலில் கொந்தளித்துக்கொண்டிருக்கும் ஓடத்தில் பயணிப்பவர்கள் அனைவரும் பதற்றத்துடன் இருக்கும்போது ஒரேயொருவர் அமைதியாக இருந்தால்கூட சிலரையாவது காக்க முடியும் எனும் உதாரணத்தை அளிக்கிறார். ஆகவே ஆன்மீகத்தில் இவை இரண்டுமே வெவ்வேறு வகையில் செயல்படும் முக்கிய வழிமுறைகள்தான். 

காந்தியின் உருவகத்தைக் கடன்பெறுவதாக இருந்தால், பெருந்தொற்று என்பது ஒரு கலங்கிய நதி. தெளிவடைவதற்கு முன்பான இன்றியமையாத படியில் உள்ளோம். இந்த ‘விஷாத’ நிலையைத் தனி மனிதர்களாக எதிர்கொண்டிருப்போம், மானுட குலமாக இயற்கைப் பேரிடர்களின் போதும் போர்களின் போதும் அடைந்திருப்போம். ஆனால் ஒட்டுமொத்த மனித குலமே தொடர்ச்சியாக இத்தனை நீண்டதொரு காலத்திற்கு விஷாத நிலையில் இதற்கு முன் நீடித்திருக்குமா எனத் தெரியவில்லை. மரணத்தின் தர்க்கப்படுத்திக்கொள்ளும் முயற்சியிலேயே மனிதன் ஆன்மீகத்தை நோக்கித் திரும்பியிருக்கக்கூடும். மரணத்தை ஏற்கும் மனச் சமாதானத்தை மதங்கள் தங்களுக்கே உரிய முறையில் உருவாக்கி அளித்துள்ளன. பெருந்தொற்றும் அதையொட்டிய வீடடங்கு காலமும் நம் அன்றாடத்தின் சக்கரச் சுழற்சியைத் தற்காலிகமாகவேனும் நிதானப்படுத்தியிருக்கிறது. இந்த நிதானமே நம்மை அச்சுறுத்துகிறது. அந்தரங்கமாகக் கேள்விகளற்ற ஓட்டத்தையே நாம் விழைகிறோம். இந்த விஷாத நிலை நிச்சயம் கலையும். இப்படிச் சொல்வது ஆறுதலுக்காகச் சொல்லப்படும் வெற்று நம்பிக்கை வார்த்தைகள் அல்ல. ஆனால் அதற்குள் நாம் எவற்றை எல்லாம் இழந்திருப்போம்? எத்தனை காலமாகும்? மனித குலத்தின் ஒளிக்கீற்றுகள் குன்றி அவற்றின் உள்ளடுக்குகளில் இருந்து இருள் எழுந்து வரும்போது நாம் அவற்றின் சாட்சிகளாகத் திகழ வேண்டியிருக்கலாம். அந்த இருண்மையில் பங்கேற்பாளர்களாக நாமிருக்க நமக்கு இப்போது ஆன்மீகத் தன்னறிவு வேண்டியதாய் இருக்கிறது. விஷாதத்தில் தொடங்குவது ஞானத்திலேயே முடிவுறும். இந்நிலையைக் கடந்துசெல்லும் துணிவு நம் ஒவ்வொருவருக்கும் வாய்க்கட்டும். 

Tuesday, July 21, 2020

கொவிட் 19 ம் ஆயுர்வேதமும்


நன்றி கனலி இணைய இதழ். 

(புனர்வசு ஆத்ரேயர் பாஞ்சாலத்தின்  தலைநகரான காம்பில்யத்தில், ஒரு  கோடை காலத்தில், கங்கைக்கரையில் சீடர்களுடன் காட்டில் உலாவிக்  கொண்டிருக்கிறார்) 

ஆத்ரேயர்- (அவருடைய சீடரான அக்னிவேஷரை நோக்கி )-
 ‘ஒ அக்னிவேஷா, நட்சத்திரங்களில், கோள்களில், சூரிய சந்திரன்களில், காற்றில், அனலில் திசைகளில் இயல்பு பிறழ்வதை உணர்கிறேன், இது பருவங்களிலும் பிறழ்வை முன்னறிவிப்பதாகும். 
ஆகவே இப்போதே மூலிகைகளை சேகரியுங்கள். இல்லையேல் அதன் இயல்புகள் பிறழ்ந்து விடும். ‘மூலிகைகளை சரியாக சேகரித்து, சரியாக பாதுகாத்து சரியாக வழங்க முடியும் என்றால் ஜனபதோதுவம்சத்தை  கட்டுப்படுத்துவது ஒன்றும் அத்தனை கடினமல்ல.
அக்னிவேஷர்- பகவான், ஒவ்வொரு மனிதரின் முக்குற்ற நிலை, பிறப்பியல்பு, உணவு பழக்கம், போன்றவை தனித்துவமானவை, அப்படியிருக்க எப்படி எல்லோருக்கும் ஒரே மாதிரி நோய் ஒரே காலகட்டத்தில் நேர்கிறது? 
ஆத்ரேயர்- இவையாவும் தனித்துவமானவை தான் ஆனால் அனைவருக்கும் பொதுவானவை என சில உண்டு. காற்று, நீர், தேசம் மற்றும் காலம்  இவற்றில் மாறுப[டுகள் நேரும்போது தனித்துவங்களுக்கு அப்பால் அனைவரையும் அது பாதிக்கிறது.   
- சரக சம்ஹிதை விமான ஸ்தானம் மூன்றாம் அத்தியாயம்- ஜனப்தோ துவம்சம் 

இந்தக் கட்டுரையையும் காந்தியிடமிருந்தே தொடங்கலாம். பீகார் நிலநடுக்கம் நிகழ்ந்து அதற்காக நிதி திரட்டியபோது, காந்தி ஹரிஜன்களை நாம் நடத்திய விதத்திற்கு தண்டனையகாத்தான் கடவுள் நிலநடுக்கத்தை அனுப்பினார் என கூறியதற்கு தாகூர் ‘இந்த கருத்து பகுத்தறிவுக்கு ஒவ்வாதது’ என கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார். அதற்கு பதிலளித்த காந்தி, இது ஒன்றும் புதிய சிந்தனை அல்ல, உள்ளுணர்வால் உணர்ந்ததையே சொல்கிறேன் என்றதுடன் அந்த விவாதம் முடிவுக்கு வந்தது. காந்தியின் கருத்து பாமரத்தனமானது என இன்றளவும் கூட இந்த நிகழ்வை மேற்கோள் காட்டி சொல்லப்படுவதுண்டு. அறிவியல் நிரூபணம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவர் கூறியது போல இது காந்தியின் சிந்தனை அல்ல, ஒருவகையில் இந்திய அல்லது கிழக்கத்திய சிந்தனை முறை என சொல்லலாம். 
கிழக்கத்திய சிந்தனை முறையில் மனிதன் எதிர் இயற்கை எனும் இருமையை காண முடியாது. இயற்கையின் ஒரு பகுதியாக, அதனுடனான பிணைப்பும், தொடர்பும் கொண்ட உறுப்பு மட்டுமே மனிதன். இந்திய மருத்துவ முறைகளில், ரசவாதத்தில், தாந்த்ரீகத்தில் என இவை அனைத்திலும் அண்டத்தில் உள்ளது பிண்டம்- பிண்டத்தில் உள்ளது அண்டம் எனும் கோட்பாடு கையாளப்படுகிறது. மேற்கிலும் கூட மறை ஞான மரபுகளில், ரசவாதிகளிடம், முந்தைய அணிமிஸ்ட்கள் பாகங்களிடம் இந்த நம்பிக்கை உண்டு. சங்க இலக்கியம் அகத்திணை புறத்திணை பற்றி பேசுகிறது. மனித உடல் நெகிழ்ச்சியற்ற இறுகிய எல்லை உடையது அல்ல. மானுடவியல் ஆய்வாளார் ழான் லாங்க்போர்ட் இந்திய மருத்துவர்கள் உடலை காணும் விதத்தைப்பற்றி எழுதிய நூலுக்கு ‘Fluent bodies’ என தலைப்பிட்டிருந்தது மிகப் பொருத்தம். ரே பிராட்பரியின் ‘இடிமுழக்கம்’ ஒரு சுவாரசியமான அறிவியல் புனைவு. கால இயந்திரத்தில் பயணித்து டைனோசரை வேட்டையாடச் செல்லும் கதைநாயகன் தவறுதலாக ஒரு பட்டாம்பூச்சியை மிதித்து கொன்றுவிட்டு திரும்பும்போது அவர்களுடைய மொழியும் வரலாறும் மாறியிருப்பதை கவனிப்பான். நவீன காலகட்டங்களில் விவாதிக்கப்படும் கேயாஸ் தியரி, பட்டாம்பூச்சி விளைவு போன்றவை புறத்திற்கும் அகத்திற்குமான உறவை சுட்டிக்காட்டுபவை. ஆயுர்வேதத்திலிருந்து ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்றால் சரகர் ‘வாதகலாகலீயம்’ என்றொரு அத்தியாயத்தை இயற்றியுள்ளார். (ஸுத்ர  ஸ்தானம் பன்னிரெண்டாம் அத்தியாயம்). முக்குற்றங்களில் ஒன்றான வாதம் உடலில் என்னவெல்லாம் நிகழ்த்தும் என சொல்லிவிட்டு அடுத்த பத்தியில் உலகை தாங்குகிறது, மேகங்களை அசைக்கிறது என எழுதுகிறார்.  
ஆயுர்வேதம் பொதுவாக கொள்ளை நோய்களை எப்படி பார்க்கிறது என்பதை இந்த பின்புலத்திலிருந்தே புரிந்துகொள்ள முடியும்.  தக்கன் அவமதித்ததில் வெகுண்டெழுந்த ஈசனின் வெஞ்சினமே நோய்களில் முதலாவதாக  தோன்றிய ஜுரத்திற்கு காரணம் என ஆயுர்வேதம் சொல்கிறது. நோய் என்பது மனிதனை காட்டும் பெரும் ஆற்றலின் கோபம் எனும் நம்பிக்கை இன்றுவரை நீடிப்பதை காண முடிகிறது. சர்கரின் ஜனபதோ துவம்சம் அத்தியாயத்தில் கொள்ளை நோய் ஏன் உருவாகிறது என விவாதிக்கிறார். அற பிறழ்வே கொள்ளை நோய்களுக்கு காரணம், அற பிறழ்வுக்கு காரணம் தீய முன்வினைகள், தீய முன்வினைகளுக்கு காரணம் விளைவுகளை அறிந்தும் பிரக்ஞை பூர்வமாக அதை மீறுதல் என ஒரு சங்கிலித்தொடரை அடையாளப்படுத்துகிறார். அறம் என்பது இங்கு பவுத்தம் முன்வைக்கும் பிரபஞ்சமளாவிய பேரொழுங்கு. இந்த பெரோழுங்கில் ஏற்படும் பிறழ்வுகள் பாதிப்புகளை ஏற்படுத்தும். அறப் பிறழ்வினால் ஏற்படுவதாக சொல்லப்பட்ட பின் அதற்கு தீர்வென சரகர் அறம் பேணுதலை முன்வைக்கிறார். அதற்கு அவர் முன்வைக்கும் முறைகள் என ஜெபித்தல், தவம், நோன்பு போன்றவற்றை குறிப்பிடலாம். 
  
பருவநிலை மாற்றத்தை ஒரு நோய்க்காரணியாக ஆயுர்வேதம் அங்கீகரித்திருக்கிறது என்பதை இந்த அத்தியாயத்தில் காண முடிகிறது.. காற்று, நீர், நிலம் மாசுபடுவதன் அறிகுறிகளை சொல்கிறது. நீர் மாசின் அடையாளங்களை சொல்லும்போது, நீர் பறவைகளின் எண்ணிக்கை குறைதல் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்து போவதை சொல்கிறார். இன்றளவும் இதன் பொருத்தப்பாட்டை காண முடிகிறது. நிலம் மாசுபட்டதற்குரிய சில அடையாளங்களை குறிப்பிடுகிறார். உயிரினங்களின் பதபதைப்பு, அச்சம், விதைக்கப்பட்ட தானியங்களின் அழிவு, அடிக்கடி தோன்றும் விண்கற்கள், இடி மற்றும் நிலநடுக்கம், சூரியனும் சந்திரனும் மேகங்களால் சிறைபிடிக்கப்பட்டது போல் காட்சியளிப்பது என அந்த பட்டியல் நீள்கிறது. காற்று, நீர், பருவத்தை விட நிலத்தில் ஏற்படும் மாசுபாடுகள் அதிக பாதிப்பை ஏற்படுத்துவது என்கிறார். ஜனப்தத்தில் வாழும் மக்கள் தங்கள் அறத்தை, சத்தியத்தை, மானத்தை ஒழுக்கத்தை, நன்னடத்தையை இழந்துவிடுவார்கள் என மனிதர்கள் மீது நிகழும் மாற்றங்களை குறிப்பிடுகிறார். . சரகர் ஒரு விஷ சுழலை நுணுக்கமாக படம் பிடித்து காட்டுகிறார். அற பிறழ்ச்சி கொள்ளை நோயை உண்டாக்கும், கொள்ளை நோய்  அதன் பங்கிற்கு அற பிறழ்வை மனிதர்கள் மத்தியில் ஏற்படுத்தும். கொள்ளை நோய்கள் சமூக கட்டமைப்பில் உள்ள ஓட்டைகளை பெரிதாக்கும் என்பதை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம். எவருடைய அற பிறழ்வு அழிவை உண்டாக்கும்? சரகர் இன்னும் துல்லியமாக, ஆள்பவரின் அற பிறழ்வு பெரும் நாசத்தை விளைவிக்கும் என சொல்கிறார். 
ஜனபதோ துவம்சத்தை பொதுவாக ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் epidemic எனும் சொல்லோடு இணை வைப்பார்கள். epidemic ஒரு கிரேக்க சொல், ஹோமர் பயன்படுத்தியது, பின்னர் ஹிப்போக்ரேடஸ் பயன்படுத்தியுள்ளார். ஏறத்தாழ 2500 ஆண்டுகள் பழமையானது. இதன் பொருள் ‘மக்களின் மேலே’ என்பதாகும்.  (epi- 0n, demos- people). பருவகால மாற்றங்களில் ஏற்படும் உடல் தொந்தரவுகளை குறிக்க ஹிப்போக்ரேடஸ் இந்த சொல்லை பயன்படுத்தியுள்ளார். காலப்போக்கில் இந்த சொல் பரிணாமம் அடைந்து கொள்ளை நோயை குறிப்பதாக ஆகிறது. ஜனபதோ துவம்சம் என்றால் ஜனபதங்களின் அதாவது தேசங்களின் அழிவு. சரகர் இந்த அத்தியாயத்தில் அரசரின் நெறி பிறழ்ந்த போர் தேசத்தையே அழிக்கும் என்றும் குறிப்பிடுகிறார். சூழல் சீர்கேட்டினால் விளையும் இயற்கை பேரிடர்கள், போர்கள், கொள்ளை நோய்கள் என மூன்றையும் உள்ளடக்கிய ஒன்றாகவே ஜனபதோ துவம்சத்தை வரையறை செய்ய முடியும்.   

முப்பெரும் நூல்களின் ஆசிரியர்களில் எனக்கு எப்போதும் இணக்கமானவர் சரகர். காலத்தால் முந்தையவர், அதைவிட அவர் மெய்யியலாளர், கவி. சரகர் தேசங்களின் அழிவை பற்றிய அத்தியாயத்தில் தீர்வாக, சிகிச்சையாக ஒரு மருந்தை கூட சொல்லவில்லை. மாறாக அங்கிருந்து வாழ்வின் சில அடிப்படை கேள்விகளை நோக்கி பயணிக்கிறார். மக்கள் ஏன் இப்படி கூட்டம் கூட்டமாக மரிக்கிறார்கள்?  நான்கு யுகங்களின் இயல்பு, அவற்றின் அற வீழ்ச்சி என்றொரு சமாதானத்தை நோக்கி முதலில் செல்கிறார். கண் முன் மரணங்களை காண்பவரின் திகைப்புதான் ஒரு மனிதரின் ஆயுள் எப்படி தீர்மானிக்கப்படுகிறது எனும் கேள்வியை இந்த அத்தியாயத்தில் எழுப்ப வைக்கிறது. சிகிச்சை சிலருக்கு பலனளிப்பதும்  சிலருக்கு பலனளிக்காமல் போவதையும் கண்ட மனம் சென்றடையும் விடை என்பது மனித ஆயுள்  முன் தீர்மானிக்கப்பட்டது என்பதே. பிழைக்க வேண்டும் எனும் ஊழ் இருந்தால அவருக்கு சிகிச்சை பலனளிக்கும் என சொல்கிறார். மனிதரின் ஆயுட்காலம் முன்வினை பலன் (தைவம்) மற்றும் இப்பிறவி வினை (புருஷகாரம்) ஆகியவற்றின் வலுவால் முடிவாகிறது என சொல்லியபின் ஆயுள் முன் தீர்மானிக்கப்பட்டது என்றால் எதற்கும் யாரும் அஞ்ச வேண்டியதில்லை நன்மை தீமைக்கு பொருளில்லை இன்னும் சொல்வதானால் மருத்துவத்திற்கே எந்த பயனும் இல்லை என்றாகிவிடுமே என விவாதித்து, தற்கால செயல்வழியாக முன்வினையின் பலனை மட்டுபடுத்த முடியும் என்பதால் மருத்துவம் முக்கியம் எனும் இடத்தை வந்தடைகிறார். தைவம் எனும் சொல் நாம் தமிழில் கடவுள் எனும் சொல்லுக்கு நிகராக பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக தெய்வம் நின்று கொல்லும் எனும் சொல்வழக்கை அவதானிக்கும்போது கடவுள் என்பதை விட அவ்விடத்தில் முன்வினை பயன் பொருந்தி வருவதாக தோன்றியது  ஆயுர்வேதத்தில் சிகிச்சையை மூன்றாக வகுக்கிறார்கள். தைவ வியாபஸ்ரயம் (முன்வினை சமனாக்குதல்)  யுக்தி வியாபஸ்ரயம் (உத்தியால் சமனாக்குதல்- உணவு, மருந்து இன்னபிற) மற்றும் சத்வாவாஜயம் (மனதை கட்டுப்படுத்துதல்). இதில் முன்வினை சமன்படுத்துதல் சிகிச்சை முழுக்க முழுக்க மந்திரங்கள், வேள்விகள், தவம், உண்ணா நோன்பு போன்ற வழி முறைகளால் ஆனது. ஆயுர்வேதத்தில் நோய்களை இரண்டாக பிரிக்கலாம். உள்ளிருந்து ஏற்படும் நோய், வெளியிலிருந்து ஏற்படும் நோய். உள்ளிருந்து ஏற்படும் நோய் முக்குற்றங்களின் சமநிலை குலைவு ஏற்படுவதன் விளைவு. உணவு, நடத்தை வழியாக ஏற்படும் சிக்கல். வெளியிலிருந்து தோன்றும் நோய்கள் உருக்கொள்ளும் போதே நோயாக வந்துவிடும், உதாரணமாக கீழே விழுந்து எலும்பு முறிதல் – இதிலும் முக்குற்றங்கள் சமநிலை குலையும் ஆனால் நோயின் காரணியாக அல்ல நோயின் விளைவாக. ஜனபதோ துவம்சம் வெளியிலிருந்து வரும் நோய். ஆகவே காரணிகளை தவிர்ப்பதே முதன்மை  சிகிச்சைமுறையாக இருக்க முடியும்.  .   
இந்த அத்தியாயத்தில் சரகர் மருந்துகளை குறிப்பிடவில்லையே தவிர சில சிகிச்சை அடிப்படைகளை பகிர்கிறார். காய்ச்சலுக்கு ஏன் வெந்நீர் பரிந்துரைக்கப்படுகிறது என கொள்ளை நோய் பற்றிய அத்தியாயத்தில் விவாதிக்கப்படுகிறது. பிறகு நோயின் தீவிரம் பொருத்து குறைந்த தீவிரம் உள்ள நிலையில் உடலை இலகுவாக்கும் (லங்கணம்) சிகிச்சை முறை பரிந்துரைக்கப்படுகிறது இலகுவாக்குதலுக்கு உண்ணா நோன்பு, சூரிய ஒளி, மற்றும் காற்றில் வெளிக்காட்டுதல் ஆகியவை எளிய வழிமுறைகள் என சொல்லலாம்.  மத்திம நிலையில் இருக்கும்போது மேற்சொன்ன வழிமுறையுடன் சேர்ந்து மருந்து வழி வயிற்று அனலை ஓம்பச் சொல்கிறது. மிகத்தீவிர நிலையில் முக்குற்றங்களை வெளியேற்றும் சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த சிகிச்சைக்கான நியாயத்தை ஏரியின் கரை உடைக்கப்படாமல் நீரை வற்றவைக்க முடியாது என்றொரு உவமையின் வழி விளக்குகிறார்.  
பிறகு கொள்ளை நோய் காலகட்டத்தில் எவருக்கெல்லாம் முக்குற்றங்களை வெளியேற்றும் சிகிச்சைகளை  அளிக்க கூடாது என ஒரு பட்டியல் இடுகிறார். ஆற்றல் குறைந்தவர்கள், குருதி குறைந்தவர்கள், தீர்க்க முடியாத நோயுடையவர்கள், உடனடியாக மரணிப்பதற்குரிய அறிகுறிகளை கொண்டவர்கள் ஆகியவை அவருடைய பட்டியலில் குறிப்பிடத்தக்கவை. இத்தாலியிலும் அமெரிக்காவிலும் சிகிச்சைக்குரியவர்களை தேர்வு செய்யும் அளவுகோள்கள் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் இதுவும் அவற்றுடன் நெருக்கமாக இருப்பதை உணர முடிகிறது. சிகிச்சையின் கடுமை நோயின் கடுமையை விட அதிகமாகிவிட கூடாது. முக்குற்றங்களை வெளியேற்றும் சிகிச்சையை தாங்குவதற்கு உடலில் ஆற்றல் வேண்டியிருக்கிறது. இவையெல்லாம் முன்னரே சொல்லப்பட்டுவிட்டது என்பதை வலியுறுத்துவதற்கு அல்ல, மாறாக  மனிதகுலம் சுய பாதுகாப்பு என வரும்போது காலம் காலமாக ஒரே திசை  நோக்கி செல்வதை உணர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பு என சொல்லலாம். 
பொதுவாக நோய் எந்த நிலத்தில் அதிகம் வரும்? எந்த பருவத்தில் அதிகம் வரும் போன்ற கேள்விகளை சரகர் எதிர்கொள்கிறார்.   கதிர் ஒளியும் காற்றும் தாராளமாக புழங்கும் வறண்ட பாலை நிலத்தில் நோய்கள் குறைவாகவும் நீர்நிறைந்த காற்றும் கதிர் ஒளியும் குறைவாக கிடைக்கும்  மரங்கள் சூழ்ந்த இடங்களில் நோய் அதிகமாக இருக்கும் என்றும் சொல்கிறார். மற்றொரு அத்தியாயத்தில் விடம் நீரிலிருந்து எழுந்ததால் மழை காலத்தில் அதன் வீரியம் அதிகரிக்கும் என்றும் அதற்கு பின்பான இலையுதிர் காலத்தில் அதன் வீரியம் மட்டுப்படும் என்றும் கூறுகிறார். .

சுசுருதர் நடைமுறைவாதி. தத்துவ கேள்விகளுக்கு எல்லாம் அவரிடம் நேரமில்லை. அறுவை சிகிச்சை நிபுணருக்கு துல்லியம் தான் மிக முக்கியமான தகுதி. சரகரை போல் ஜனபதோ துவம்சம் குறித்து தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதில்லை. ஸுத்ர ஸ்தானத்தில் பருவகால நடத்தை விதிகளை பற்றிய ஆறாம் அத்தியாயத்தில் ஒரு சிறிய பகுதியில் ஜனபதோதுவம்சம் குறித்து சொல்லிச் செல்கிறார். ஆனால் அவருடைய அவதானிப்பு இன்றைய காலத்தில் அச்சுறுத்தும் அளவிற்கு மிகக் துல்லியம். 
‘சில நேரங்களில், பருவங்கள் இயல்பாக இருந்தாலும் கூட, சாபத்தினாலோ, ராக்ஷஸ்களின் கோபத்தினாலோ, அற பிறழ்வின் காரணமாகவோ ஜனப்தம் அழியும். காற்றில் மலரின் சுவாசம் சுமந்து செல்லப்படுவது போல் காற்று சுமந்து செல்லும் விடம் மனிதர்களை பீடிக்கிறது. அப்படி பீடிக்கப்படும் தேசத்தில் முக்குற்ற அமைப்பு, பிறப்பியல்பு போன்றவை பொருட்டல்ல. இருமல், இளைப்பு, வாந்தி, மூக்கில் சளி ஒழுகுதல், தலைவலி, காய்ச்சல் ஆகிய அறிகுறிகளை ஏற்படுத்தி வதைக்கும். இதற்கு கோள்களும் நட்சத்திரங்களும் காரணமாக இருக்கலாம் அல்லது இல்லம், பெண்டிர், படுக்கை, இருக்கை,  வாகனம், மணிகள், ரத்தினங்கள் மற்றும் இன்னபிற பீடிக்கப்பட்ட பொருட்கள் வழியாகவும் நோயுறலாம். .  
விளக்கவுரையில்- மூக்கு துளை வழியாக செல்லும் காற்று இருமல், இளைப்பு, சளி, வாசனை அறியும் திறன் இழப்பு தலை சுற்றல், தலைவலி ஆகியவற்றை உருவாக்குகின்றன. தோலின் வழியாக நோய் பரவும் போது அம்மை போன்ற காய்ச்சல் நோய்கள் வருகின்றன என டல்ஹனர் குறிப்பிடுகிறார். . 
இதற்கு தீர்வு என்ன? சுசுருதர் கூறும் முதல் தீர்வு – ஸ்தான பரித்தியாகம், பாதிக்கப்பட்ட இடத்தை விட்டு அகல்வது. இதைத்தவிர பிற தீர்வுகள் யாவும் சரகர் முன்வினை பலனை சமனாக்க கூறிய மறைஞான சடங்குகள் மற்றும் வழிமுறைகள் தான். 
உண்மையில் சுசுருதரின் அவதானிப்பு இன்றைய சூழலுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. விடமாகிப்போன நீரில் மனிதர்களோ குதிரைகளோ குளித்தால் அவர்களுக்கு வாந்தி, காய்ச்சல், மயக்கம், எரிச்சல் மற்றும் வீக்கம் வரும் என சொல்கிறார். மசூரிகா- அம்மை, விசூசிகா- காலரா போன்ற ஒரு நோய் ஆகிய கொள்ளை நோய்களை பற்றிய பதிவு ஆயுர்வேத நூல்களில் உள்ளன. கென்னத் ஜிஸ்க் வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒரு காய்ச்சல் வகை நோயை மலேரியாவுடன் ஒப்பிட்டு, உலக அளவில் மலேரியா குறித்த முதல் பதிவாக இருக்கும் என சொல்கிறார். ஆயுர்வேதத்தில் கிருமி எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. நோய்க்கு காரணமாக சொல்லப்பட்டும் உள்ளது. ஆனால் ஆயுர்வேதத்தின் கிருமி கண்ணுக்கு தெரியாத நுண் கிருமிகள் அல்ல. அதனுடைய விவரனைகள் புழுக்களை ஒத்திருக்கின்றன..நுண் கிருமிகளை பூதங்கள், ராட்சசர்கள் போன்றவற்றுடன் ஒப்பிட்டு புரிந்து கொள்ள இடமுண்டு. கொள்ளை நோய் குறித்த புரிதல் செவ்வியல் நூல்களை விட நாட்டு மருத்துவத்திலும் மக்களின் பழக்க வழக்கங்களிலும் அதிகமாக இருப்பதை காண முடியும். சின்னம்மை பற்றிய கடவுள்கள். கதைகள், சடங்குகள் நம் வாழ்க்கையின் ஒரு பகுதி என்றே சொல்ல வேண்டும். தனிமைப்படுத்துதல், தூய்மை பேணுதல் போன்றவை ஆன்மீக சடங்குகளாக பரிணாமம் அடைந்தன. 
இத்தனையும் சொன்னாலும், கொள்ளை நோயை வெற்றிகரமாக எதிர்கொள்வதில் நவீன மருத்துவம் ஆயுர்வேதத்தை விட பன்மடங்கு செயல்திறன் வாய்ந்ததே. அதையே நம் காலனிய வரலாறு சுட்டிக்காட்டுகிறது. கொள்ளை நோயை எதிர்கொண்டு வெற்றிகண்ட விதத்தில் தான் நவீன மருத்துவம் இந்தியாவில் வலுவாக காலூன்றியது, உடலின் மீதான அதிகாரத்தை நவீன மருத்துவம் முழுவதுமாக கைகொண்டது  என்பது முற்றிலும் உண்மை. காலனிய காலத்தில் ஆயுர்வேதம் ஏன் கொள்ளை நோய்களை வலுவாக எதிர்கொள்ள முடியவில்லை என்பது மற்றொரு விவாதம். ஆய்விற்கு உரியதும் கூட. இன்றைய சூழலில் நவீன அறிவியலின், நவீன மருத்துவத்தின் கொடையை அனுபவித்தபடி எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயற்கைக்கு திரும்புங்கள் மருத்துவத்தை நம்பாதீர்கள் என பிரசாரம் செய்வது அறியாமையினால் அல்லது அரசியல் உள்நோக்கத்தினால் மட்டுமே. இந்தியாவில் இன்றைய நிலையில் நவீன மருத்துவமே மக்கள்மயப்படுத்தப்பட்ட அமைப்பு. அதன் அத்தனை சிக்கலுடனும் வெகு மக்களுக்கு அவர்களுடைய பாதுகாப்பான வாழ்விற்கு உதவுவது. இயற்கைக்கு திரும்புதலோ அல்லது ஆன்மீக/நம்பிக்கை சார்ந்த குணப்படுத்தும் முறைகளோ தனிப்பட்ட தேர்வுகளாக மட்டுமே இருக்க முடியும். சிக்கலான சமூக அமைப்பில் ஹீலர் பாஸ்கர்களுக்கும் தனிகாச்சலங்களுக்கும் எல்லா காலங்களிலும் ஒரு இடமிருக்கும். ஆனால் ஒருபோதும் மைய மருத்துவமுறையாக ஆக முடியாது. ஒரு வழிமுறையை எத்தனைமுறை பின்பற்றினாலும் ஒரே விளைவை ஏற்படுத்த வேண்டும் என்பதே அறிவியலின் அடிப்படை விதிகளில் ஒன்று. ஒவ்வொரு மனிதரையும் தனித்தனியாக அணுகும் மருத்துவ வழிமுறைகளுக்கு இது பொருந்தாது. .     

 2
ஆயுர்வேத மூல நூல்களில் கூறப்பட்டுள்ள நோய்களின் எண்ணிக்கை குறைவே. .நவீன மருத்துவமும் அறிவியலும், காலமும் பரிணாமம் கொள்ள கொள்ள கணக்கற்ற நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப் படுத்தப்பட்டு  உள்ளன. ஆயுர்வேத நூல்களிலேயே கூட சரகரின் நோய் எண்ணிக்கையை விட சுசுருதரின் எண்ணிக்கை அதிகம், அவரை விட பதிமூன்றாம் நூற்றாண்டு நூலான மாதவ நிதானத்தில் எண்ணிக்கை அதிகம். ஐரோப்பிய காலனியாதிக்கம் நிலைகொண்ட ஒரு நூற்றாண்டிலேயே சிபிலிஸ் நோய் ஃபிரங்கம் என்ற பெயரில் (பறங்கியர் எனும் சொல்லுடன் தொடர்புடையது) ஆயுர்வேத நூல்களில் விவாதிக்கப்படுகிறது. புதிய நோய்களையும் புதிய மருந்துகளையும் உள்வாங்கி கொள்வது ஆயுர்வேதத்தின் உள்ளார்ந்த பண்புகளில் ஒன்று. அதற்கு அவற்றை ஆயுர்வேத சட்டகத்தில் வைத்து புரிந்து கொள்ள முடிந்தால் போதும். நோயின் பெயர் எதுவாகினும் அதன் இயல்புகளை கொண்டு முக்குற்றங்களின் நிலையை அறிந்து கொள்வதே சிகிச்சைக்கு முக்கியம் என்கிறார் சரகர். நோயின் இயல்பு என்ன? நோய் வெளிப்பட காரணங்கள் எவை? நோய் எந்த  பகுதியை/பகுதிகளை பாதிக்கிறது? அதன் அறிகுறிகள் எவை? பின்விளைவுகள் எவை? நோய் அறிகுறிகளை தீவிரப்படுத்தும் காரணிகள் எவை?அதை சமன்படுத்தும் காரணிகள் எவை? இந்த கேள்விகளுக்கு விடை கிடைத்தால் எந்த ஒரு நோயையும் ஆயுர்வேத சட்டகத்தில் கொணர்ந்து வந்து புரிந்து கொள்ள முடியும். இப்படித்தான் புற்றுநோய் தொடங்கி மோட்டார் நியூரான் நோய் வரை எல்லாவற்றையும் நவீன மருத்துவ அறிதலின் துணையுடன் வகுத்துக்கொண்டு தற்காலத்தில் முன்னகர்கிறது. இப்படி ஆயுர்வேத சட்டகத்தில் புரிந்துகொல்வதாலேயே அந்நோயை குணப்படுத்திவிட முடியும் என்பது கிடையாது. ஆயுர்வேதம் இன்றைய போலி மருத்துவர்கள் அறைகூவுவது போல் எல்லா நோய்களையும் தீர்க்க முடியும் என சொல்லவில்லை. சாதாரண நோய்களே கூட குணப்படுத்த முடியாத படிநிலைக்கு சென்றுவிடும் என கணிசமான தருணங்களில் சொல்கிறது. 
கொவிட் சார்ந்து பல்வேறு ஆயுர்வேத நிபுணர்கள் ஆயுர்வேத சட்டகத்தில்  வரையறை செய்ய முயன்றுள்ளார்கள். அதில் நான் ஆசிரியராக கருதும் தெரிசனம்கோப்பு டாக்டர். இல. மகாதேவன் மற்றும் மேலும் இரு மருத்துவர்கள் உருவாக்கியிருக்கும் வரையறை எனக்கு ஏற்புடையதாகவும் நெருக்கமாகவும் உள்ளது. கொரோனாவின் அறிகுறிகள் கப- வாத கூட்டில் வரும் காய்ச்சல் என கருதலாம் என்கிறார்கள். சில நோயாளிகளுக்கு முக்குற்ற இணைவு காய்ச்சலாக பரிணாமம் அடைகிறது. அவர்களுக்கே தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. அஷ்டாங்க ஹ்ருதயத்தில் கப வாத காய்ச்சலின் அறிகுறிகள் என உடல் வெப்பம் குறைதல், ருசியின்மை, மூட்டு வலி, தலை வலி, மூக்கடைப்பு, இளைப்பு, இருமல், மலச்சிக்கல், குளிர், அசதி, கண் இருட்டிக்கொண்டு வருதல், தலை சுற்றல், சோர்வு ஆகியவை  கூறப்பட்டுள்ளன. இதில் சில அறிகுறிகள் கொவிட்டுக்கு பொருந்தி வருவதை கவனிக்க முடியும். லேசான நோய் தொற்று நிலை, நிமோனியா- தீவிர நிமோனியா- கடும் மூச்சிளைப்பு- செப்சிஸ்- செப்டிக் ஷாக்- மரணம். இதைத்தான் படிநிலையாக வகுத்துள்ளனர். 85 சதவிகிதத்தினர் லேசான நிலையிலேயே மீண்டு விடுகின்றனர். இந்த பதினைந்து சதவிகிதத்தினரில் பெரும்பாலும் முதியவர்கள், குறிப்பாக வேறு மருத்துவ சிக்கல்கள் இருப்பவர்கள், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்தவர்களாக இருப்பதால் பாதிப்பு அடுத்த நிலைக்கு செல்கிறது. முக்குற்றகூட்டு காய்ச்சலில் வரும் தாது பாகம் எனும் நிலையை ஒத்திருக்கிறது. பித்தம் அதன் சூட்டின் காரணமாக வறண்டு போக செய்கிறது. இளைப்பு அதிகரிக்கிறது, ஒஜசை அழிக்கிறது. ஒவ்வொரு படிநிலைக்கும் உகந்தது போல மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். மருத்துவமனையில் பின்பற்றத்தக்க வழிமுறை என துணிந்து சொல்லலாம். இது பலனளிக்கவும் கூடும். கொவிட்டை அணுகுவதற்கு செவ்வியல் நூல்களில் காய்ச்சல், காசம் (இருமல்), சுவாசம் (இளைப்பு), ராஜ யக்ஷ்மம் (உடலை உருக்கும் பெரு நோய்) ஆகியவற்றின் சிகிச்சை அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ள மருந்துகள் பலன் தரக்கூடும்.  
சீனாவில் அவர்களுடைய பாரம்பரிய சீன மருத்துவம் லேசான மற்றும் மத்திம அளவிலான நோய் தொற்று நிலைகளுக்கு வெற்றிகரமாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கிடையே டெல்லியில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கொவிட் நோயாளிகளுக்கு முழுக்க முழுக்க ஆயுர்வேத சிகிச்சை அளித்து உள் நோயாளிகளாக கண்காணித்து வருகிறார்கள். இது ஒரு மிக முக்கியமான முயற்சி. மத்திய ஆயுஷ் அமைச்சகம் சில பரிந்துரைகளை நிபுணர்களின் அறிவுறுத்தலின் பேரில் அளித்துள்ளது. தமிழகத்திலும் முதன்முறையாக ஆயுர்வேத மருந்துகள் பரிந்துரைக்கப்பட்ட அரசாணைவெளியாகியுள்ளது. கேரளத்தில ஆயுஷ் மருத்துவமனைகள் திறம்பட செயல்பட்டு வருவது பற்றி செய்திகள் கிடைக்கின்றன. இந்த மருந்துகளின் முக்கியத்துவம் மற்றும் பலனை பற்றியோ அல்லது மருந்துகளின் பட்டியலை அளிப்பதோ இந்த கட்டுரைக்கு பொருந்தாது. அவசியம் ஏற்பட்டாம் அவற்றை பற்றி மற்றொரு கட்டுரையில் விரிவாக விவாதிக்கிறேன். எனினும் கொள்ளை நோய் காலத்தில் ஆயுர்வேத மருந்துகளை கொடுப்பதில் உள்ள சவால் என்பது சரியான மற்றும் தரமான மருந்து பொருட்களை பெறுவதிலும் அதை உரிய முறையில் தயார் செய்து மக்களிடம் பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பதிலும் உள்ளது. புற்றீசல் போல நிறுவனங்கள் மருந்தை தயாரித்து வழங்குகின்றன. வெறும் லாப விளையாட்டாக முடிந்துவிடக்கூடாது. ஒப்பீட்டளவில் ஹோமியோபதி மருத்துவத்திற்கு மருந்து இடுபொருட்கள் மற்றும் தயாரிப்பு சார்ந்து அதிக சிக்கலில்லை.   
கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் ஆயுர்வேதம் மூன்று எல்லைகளில் உதவக்கூடும். முதலாவதாக, நோய் தடுப்பு, நோய் எதிர்ப்பு ஆற்றலை கூறாக்கும் உணவுகள் மற்றும் எளிய மருந்துகள் வழியாக இது சாத்தியம். மஞ்சள், நெல்லிக்காய், துளசி போன்றவை நமக்கு எளிதாக கிடைக்கும் அருமருந்து. இரண்டாவதாக நோய் தொற்று நிலையில் நவீன மருத்துவத்துடன் இணைந்து குணப்படுத்துதலை துரிதமாக்கவும் தீவிர நிலைக்கு செல்வதை தவிர்க்கவும் உதவக்கூடும், உடலே இயல்பாக எதிர்கொண்டு கடந்துவிடக்கூடிய லேசான தொற்று நிலையில் இம்மருந்துகள் இன்னும் அதிகமாக உதவக்கூடும். மூன்றாவதாக  நோயிலிருந்து மீண்டவர்களுக்கு உடல்வலுவை மீட்க மேலதிக உதவியாக இருக்கக்கூடும்.       
இந்திய பாரம்பரிய சிகிச்சைகளை பயன்படுத்துவதில் நமக்கு என்ன தயக்கம்? சிக்கல் இரு பக்கங்களிலும் உள்ளது. கொவிட் என்னவிதமான நோய் என புரிந்து கொள்வதற்கு முன்னரே இங்கு குணப்படுத்தும் அறைக்கூவல்கள் எழுந்து விட்டன. இந்தியாவின் பெரும்பாலான நவீன மருத்துவர்களுக்கு தங்கள் பாரம்பரிய மருத்துவம் சார்ந்து மரியாதையோ புரிதலோ இல்லை. இதற்கு இந்திய மருத்துவமுறை மருத்துவர்களும் ஒரு காரணம். உடல்களின் மீதான அதிகாரத்திற்கு விடப்பட்ட சவாலாகத்தான் நவீன மருத்துவம் காண்கிறதோ எனும் ஐயம் எனக்கிருக்கிறது. பாரம்பரிய மருத்துவர்களும் விட்டுப்போனதை மீட்க அதீத எல்லைக்கு சென்றுவிடுகிறார்கள் என்பதையும் காண முடிகிறது. எது எப்படி ஆயினும் இது நம் வரலாறு அறிந்திராத இக்கட்டு. இத்தருணத்தில் வாய்ப்பிருக்கும் ஆபத்தற்ற அத்தனை வழிமுறைகளையும் நாம் பயன்படுத்தியாக வேண்டும். பரஸ்பர ஐயங்களை களைந்து நல்லெண்ணம் மற்றும் நன்னம்பிக்கையுடன் மக்களின் நன்மைக்காக சாத்தியமான எல்லா வழிகளிலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்திய மருத்துவர்கள் நவீன மருத்துவத்தை ஒரு உலகளாவிய சதி செயலாக சுருக்குவதோ நவீன மருத்துவர்கள் இந்திய மருத்துவத்தை ஒரு ஏமாற்று வித்தையாக மட்டும் கருதுவதோ எவ்வகையிலும் உதவப்போவதில்லை. நவீன அறிவியலாளர்கள் நவீன மருத்துவர்களுடன் சேர்ந்து இந்திய பாரம்பரிய மருத்துவர்களும் தங்களுக்குரிய பங்கை ஆற்ற வேண்டியது காலத்தின் அவசியம். நோயின் தன்மையை அறிந்து அதற்கு உகந்த பாதுகாப்பு முறைகளுடன் இந்திய மருத்துவர்கள் செயல்பட வேண்டும். இந்த போரில் நாமும் முன்வரிசைக்கு அழைக்கபடுவதற்கான எல்லா சாத்தியங்களும் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்த பொறுப்புணர்வு நம்மை இயக்கட்டும்.