Saturday, December 31, 2022

2022 நினைவுப்பாதை

 

                                                            


வழக்கம் போல் வருடக் கடைசியில் கொஞ்சம் நினைவுகளை ஓட்டிப்பார்க்கும் நேரம். பெரிதாக ஏதும் கதைகள் எழுதவில்லை, புதிய புத்தகங்கள் எதையும் வாசிக்கவில்லை. இது  பயணங்களின் ஆண்டு. ஜெயமோகனின் அறுபதாம் ஆண்டு நிறைவு, அதையொட்டி சியமந்தகம் வெளியீடு. தமிழ் விக்கி என தொடர் செயல்பாடுகளின் காலம். 2022 எனது இதுவரையிலான வாழ்வில் முக்கியமான ஆண்டு என கருதுகிறேன்.மூன்று பெரிய பயணங்கள் செய்து வந்தேன். மூன்று பெரும் ஆளுமைகளை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த ஆண்டு. ஜூனில் சிம்லா இலக்கிய விழாவில் இந்திய இலக்கிய முன்னோடிகளின் ஒருவரான எஸ். எல். பைரப்பாவை சந்தித்தேன், நவம்பர் மாதத்தில் சிங்கப்பூரில் எனது ஆதர்சங்களில் ஒருவரான டெட் சியாங்கின் உரையை நேரில்  கேட்டேன். எல்லாவற்றிற்கும் மேலாக செப்டம்பரில் தரம்சாலாவிற்கு சென்று தலாய் லாமாவை சந்தித்ததை இப்பிறவி பேறாக கருதுகிறேன். அவருடன் இருந்த இருபது நிமிடங்களை என் வாழ்வின் ஆக சிறந்த தருணமாக கருதுகிறேன். இலக்கியத்தில் இனி எனக்கு எந்த விருது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், இதில் இயங்கியதற்காக பயன்மதிப்பை அடைந்துவிட்டேன். 


Shyam Pakhre, Ramesh Oza, Jegadeesh Lkkani, Dalai Lama, Shodang Rinpoche

காந்திக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்தான் என்னை தலாய் லாமாவரை கொண்டுவந்து விட்டார். இதை இப்போது எழுதும்போது கூட அவரது  தொடுகையின் சிலிர்ப்பை, அவரது உரத்த சிரிப்பை நினைவுகூர்கிறேன். அவருடைய ஆசிகளுக்கு நான் தகுதியுடையவனா என தெரியவில்லை. ஆனால் அதை ஈட்டிக்கொள்ள வேண்டும். அதுவே எஞ்சிய வாழ்வின் இலட்சியமாக இருக்க வேண்டும்.  சிம்லா பயணத்தைப் பற்றி அங்கு சந்தித்த பிற மொழி எழுத்தாளர்களை பற்றி எழுத வேண்டும் என எண்ணியிருந்தேன். நேரம் வாய்க்கவில்லை. தலாய் லாமாவிடம் ஆசிபெற்றதைப்பற்றி என்னால் எழுத முடியுமா எனத்தெரியவில்லை. சொற்களாகாத பகுதியிலேயே அது சேகரமாகட்டும்.  இந்த ஆண்டு ஒண்ணெயோன்னு கண்ணே கண்ணு என ஒரேயொரு சிறுகதைதான் எழுதினேன். அதுவும் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் தீபாவளி மலருக்காக கேட்டதனால். நெடுநாட்களுக்கு பின் எழுதினாலும் கதையெழுதும் ஆற்றல் நம்மை கைவிடவில்லை எனும் நிறைவை தக்கவைத்துக்கொண்டேன்.  முதலில், நாமெல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அந்த நற்செய்தியை (நற்செய்தியா- தெரியவில்லை, ஆவலோடு எதிர்பார்க்கிறார்களா என்ன- சும்மா சொல்லிப்பார்ப்பதுதான்) இயம்பி- ஆம் நாவல் எழுதத் தொடங்கியிருக்கிறேன்.  நிதானமாக நகர்கிறது, எத்தனை அத்தியாயங்கள், எத்தனை பக்கங்கள் என ஏதும் தெரியவில்லை.  விஷ்ணுபுரம் விழாவில் ஜெயமோகனிடம் 'புனைவு எழுத வருமா என்றே எனக்கு ஐயம் வந்துவிட்டது. அதைத் தவிர்க்க அடுத்தடுத்து ஏதோ செய்துகொண்டே இருக்கிறேன். இப்போது நான் என்ன செய்ய?' என கேட்டேன். அவர் என்ன சொல்வார் என்பது எனக்கு தெரியும். ஆனாலும் அவரிடமிருந்து அந்த சொல்லை பெறுவது நல்லது. பிடிவாதமாக எழுதவும் என்பதே ஜெ எனக்கு சொன்ன ஆலோசனை. விடாமல் பத்துநாட்கள் எழுதவும், தானாக சரியாக வரும் என்றார். விழா முடித்து மறுநாள் எழுத தொடங்கினேன். 

Kanishka Gupta, Mamang Dai, Jey, Ramkumar, Senthil


இரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதிய நீள்கதையை நாவலாக மாற்ற முடியும் என தோன்றியது. அந்தக் கதையை ஜெ பலிக்கல் எழுதுவதற்கு முன்னரே எழுதியிருந்தேன்.  நிறைய ஒற்றுமைகள். கதையை கைவிட மனமில்லை. வேறொரு புள்ளியிலிருந்து வேறொரு கேள்வியுடன் அணுக முடியுமா என பார்க்கிறேன்.  ஆகவே எழுத தொடங்கியுள்ளேன். முதல் சில நாட்கள் ஏனோதானோவென சில வரிகள் எழுதினேன். பழகிய தடங்களில் , வசதி வட்டத்திற்குள் மனம் உழன்றபடி இருந்தது. 

Siyamanthakam release. first moment


நாவல் எழுதுவது என்பது மிகவும் மகிழ்ச்சிகரமான அனுபவம். ஒரேமனநிலையில் நீண்டகாலம் திளைத்திருப்பது.  புதிதாக ஏதோ ஒன்றை கண்டறிவது. நாம் நன்கறிந்த பொருளையே புதிய ஒளியில் காண்பது. மொழியும் போதமும் கூராகும். சிலவகையான இசை, சில வகையான புத்தகங்கள் மட்டுமே வாசிப்பது என அந்த மனநிலையிலேயே நீடிப்பது ஒரு போதை. பார்க்கும், படிக்கும், கேட்கும் விஷயங்கள் எல்லாம் நாவலின் ஒரு பகுதியா இல்லையா எனும் அளவையைக் கொண்டே அளக்கப்படும். கடந்த திங்கள்கிழமை இதுதான் நாவலின் முதல் அத்தியாயம் என கருதத்தக்க ஒரு புள்ளி அகப்பட்டது. அதுவரை இருளில் துழாவிக்கொண்டுதான் இருந்தேன். இந்த தூரத்து வெளிச்சம் போதும். நாவலை எழுதிவிட இயலும் எனும் நம்பிக்கையை எனக்களிக்கிறது. தொன்மத்தில் இருந்து வரலாற்றுக்கு என்னை இட்டுச் சென்றுள்ளது. தொடர்பான வாசிப்புகளையும் தேடல்களையும் நிகழ்த்தி வருகிறேன். எப்படி வருகிறது என பார்ப்போம். 

S. Suresh, S.L.Bhyrappa at Simla


கடந்த ஆண்டு இறுதியில் மொத்தம் ஐந்து நூல்கள் வெளியாகின (நண்பர் பழுவேட்டையரையும் சேர்த்து). பழுவேட்டையர் அவருக்கென ரகசிய வாசிப்பு வட்டத்தை அடைந்துள்ளார். அவரிடம் கூறியபோது "சந்தோஷப்பட முடியல தம்பி" என கண்ணாடியை கழட்டிவிட்டு கண்ணை துடைத்துக்கொண்டார். "நம்ம கதைங்களுக்கு ஏற்பு இருக்குதுன்னா இந்த இலக்கிய சூழல் எம்புட்டு ஆபத்தான நிலைமையில இருக்குன்னு கவனிக்கணும்." என்றார். "எல்லாம் சேர்ந்தது தான் இலக்கிய சூழல்" என ஆறுதல் படுத்திவிட்டு வந்தேன். 

Joe D Cruz, Kalyana Raman


இந்த வருடம் உருப்படியாக செய்தவற்றில் ஒன்று கம்பராமாயண கற்றல். நேற்றோடு ஆரண்யகாண்டம் முடித்தோம். இம்பர்வாரி குழுமத்தில் வாரம் மூன்று நாட்கள் சேர்ந்து கம்பனை வாசிக்கிறோம். பிரபு, பார்கவி, சுந்தரவடிவேலனோடு சேர்ந்து கம்பனுக்கு உரிய மாசிமாத அஸ்த திருநாள் அன்று நாட்டரசன்கோட்டை கம்பர் சமாதிக்கு சென்றோம். உள்ளேயே அமர்ந்து சில பாடல்களை பாடினோம்.  பரவசமான அனுபவம். மீண்டும் போகனை அங்கே அழைத்துச் சென்றேன். சத்திய சோதனை வேலையில் பலநாள் இடையில் கம்பன் அமர்வுகளில் பங்குபெறாமல் இருந்தேன். இப்போது ஓரளவு தொடர்ச்சியாக பங்குபெறுகிறேன். ஸ்ரீனிவாசனும் பார்கவியும் அலுப்பில்லாமல் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். ஐநூறு, ஆயிரம், காண்டம் நிறைவு என முற்றோதல்கள் செய்கிறோம். முற்றோதல்கள் பெரும் கொண்டாட்டமானவை. விதவிதமான மெட்டுக்கள், என ஒருவாரம் முன்பிருந்தே தயாராவோம். ரம்யா தாடகைக்காக பிரத்யேக மேக்கப் எல்லாம் செய்து வந்தார். கூனிக்கு என தனிக்குரல் கொடுத்தார் பார்க்கவி. ஜமீலாவும் பார்க்கவியும் அபாரமான பாடகர்கள். கம்பனை கற்பதில் நான் இன்னும் கொஞ்சம் உழைப்பு போட வேண்டும் என எண்ணிக்கொண்டேன். காந்தியர்களைப் பற்றிய 'ஆயிரம் காந்திகள்' நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பதிப்பு முடிந்ததாக அறிகிறேன். நீலகண்டம், அன்புள்ள புல்புல், அம்புப்படுக்கை ஆகியவை புதிய பதிப்பை கண்டதாக ஜீவ கரிகாலன் சொன்னார். 'நீலகண்டம்' 'அம்புப்படுக்கை' ஆகியவற்றுக்கு புதிய வாசிப்புகள் வந்தவண்ணம் உள்ளன. 'அம்புப்படுக்கை' விருது பெற்ற நூல் என்பதால் கவனிக்கப்படுவதில் ஆச்சரியம் இல்லை. நீலகண்டம் வெளியான காலத்தில் கலவையான ஏற்பையே பெற்றிருந்தது. நாம் ஏதும் செய்வதற்கு இல்லை என்றாலும், இப்போது கூடுதல்  ஏற்பை பெறுவது மகிழ்வளிப்பதாக உள்ளது. பரிசல் வெளியிட்ட 'காந்தியை  சுமப்பவர்கள்' தொகை நூலும் ஓரளவு கவனம் பெற்றது என்றே எண்ணுகிறேன். ஆயுர்வேத மருத்துவர் டாக்டர். இல. மகாதேவனுடனான நேர்காணல் நூலான 'முதற்கால்' பற்றி பெரிய எதிர்வினை ஏதும் வரவில்லை. 

இந்த ஆண்டு எனது நேரத்தின் பெரும்பகுதியை எடுத்துக்கொண்ட பணி 'சத்தியத்துடனான எனது சோதனைகளின் கதை' (சத்திய சோதனைக்கு உள்ள அசல் தலைப்பு) மொழியாக்கம் தான்.  அடிக்குறிப்புகளுடன் ஆயிரம் பக்கங்கள் வரும். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இழுத்த வேலை. இந்த ஆண்டு முடித்தே ஆகவேண்டும் எனும் முனைப்புடன் ஈடுபட்டேன். அக்டொபர் மாதம்தான் மொழியாக்கம் நிறைவானது. இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு வந்துவிடும் என எதிர்பார்த்தேன். ஆனால் மீள்வாசிப்பிற்கு உட்படுத்தப்படுவதாக அறிகிறேன். வரும் ஆண்டில் 'காலச்சுவடு'  வெளியீடாக வெளிவரும் என நம்புகிறேன். 

Prabhu, Sundara Vadivelan Bharkavi


இந்த நூலின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நூலை முடித்த கையோடு 'இனி மொழியாக்கம் செய்வதில்லை' எனும் முடிவுக்கு வந்துள்ளேன். எப்போதாவது எனது தேர்வின் பேரில் நானே ஏதேனும் செய்தால் உண்டு. புனைவற்ற எழுத்துக்களை மொழியாக்கம் செய்வதில்லை என்பதே தீர்மானம். மொழியாக்கம் தேவையில்லை என்றோ அல்லது இழிவானது என்றோ கருதவில்லை. எனது ஆற்றலை அதிகமும் அதற்கு அளிக்க விரும்பவில்லை. அதேப்போல் மற்றொரு தீர்மானமும் உண்டு. கடந்த ஆண்டு உள்ளூர் வெளியூர் என எக்கச்சக்க மேடையுரைகள். என்னால் அத்தனை எளிதில் 'மறுப்பு' சொல்ல முடியாது எனும் பலவீனத்தினால் விளைந்தது. இனி கொஞ்ச நாட்களுக்கு மேடையுரைகள் நிகழ்த்தக்கூடாது என முடிவெடுத்த நேரத்திலேயே. அஜியின் மைத்ரி நாவல் விமர்சன கூட்டத்தில் பேச ஒப்புக்கொண்டுள்ளேன். கொல்கத்தாவில் சாஹித்ய அகாதமி ஏற்பாடு செய்யும் இளம் எழுத்தாளர் கூடுகையில் பங்குபெற ஒப்புக்கொண்டுள்ளேன். சமூக ஊடகங்களிலும் நான் இல்லை என்பதால் இத்தகைய நிகழ்வுகளைத் தவிர்த்தால் முற்றிலும் இப்படியான ஒரு ஆள் இருப்பதையே தமிழில் மறந்துவிடுவார்களோ எனும் குழப்பமும் உண்டு. மறந்தால் என்னவாம்? எனும் பதில் கேள்விக்கு என்னிடம் விடையில்லை. மேடையுரைகள் அல்லது நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக்கொள்வது அத்தனை எளிதான காரியம் இல்லை. வண்ணநிலவன் படைப்புலகம்  குறித்தோ அழகிரிசாமி கதைகள்  குறித்தோ உரையாற்ற வேண்டும் என்றால் எனக்கு ஒரு மாதம் ஆகும். மொத்தமாக வாசித்து, குறிப்பெடுத்து, கட்டுரையாக்கி, மேடைக்கு தகுந்த வடிவில் சுருக்கி. ஆனால் இந்த வகை முயற்சிகள் பலனளிப்பவையும் கூட. ஏனெனில் இப்படியான ஒரு நிர்பந்தம் இல்லையென்றால் அழகிரிசாமியையோ வண்ணநிலவனையோ முழுமையாக வாசிக்க மாட்டேன். பொது தலைப்புகளில், காந்தி உரைகள் ஆற்றும்போது முடிந்தவரை திரும்ப சொல்வதை தவிர்க்க விரும்புகிறேன். மூன்று நாட்களாவது ஆகும். கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டால் அங்கே வரும் அத்தனை எழுத்தாளர்களையும்  வாசித்திருக்க வேண்டும் என்பது எனக்கு நானே விதித்துக்கொண்டது. பல சமயங்களில் இதையெல்லாம் ஏன் செய்கிறோம் என தோன்றும். அன்பு,பொருளியல் வரவு,  மரியாதை என இவற்றில் ஏதேனும் ஒன்றாவது இருக்க வேண்டும்.  இந்த ஆண்டு சத்திய சோதனைக்கு இட்ட மற்றொரு பலி மரப்பாச்சி கூடுகைகள். மொத்தமேமூன்றோ நான்கோ தான்  நடத்தினோம். மயிலன் பங்குபெற்ற மார்ச் மாத கூடுகை மிக சிறப்பாக நடந்தது. அதற்கு பின்னர் எழுத்தாளரை அழைத்து நடத்தவே இல்லை. வரும் ஆண்டில் மீண்டும் ஒழுங்காக நடத்த வேண்டும். 

மரப்பாச்சி இலக்கிய வட்ட கூடுகை, மயிலனுடன் 


புத்தக கண்காட்சிக்காக இரண்டு நூல்கள் வெளியாகவுள்ளன. இரண்டுமே யாவரும் பதிப்பக வெளியீடு. 'சமகால சிறுகதைகளின் செல்நெறி & பிற கட்டுரைகள்' சிறுகதைகள் பற்றி எழுதிய விமர்சன கட்டுரைகளின் தொகுப்பு. விமர்சன கட்டுரைகளில் சில அசலான கண்டுபிடிப்புகளை தொட்டறியும்போது புனைவின் அதே திளைப்பை என்னால்  அடைய முடிகிறது. 'மரணமின்மை எனும் மானுடக்   கனவு' ஆயுர்வேத கட்டுரைகளின் தொகுப்பு. இதற்கு இன்னொரு பகுதி வரும் என எண்ணுகிறேன். 

Thuyan, Mayilan


ஜெ அறுபது நிகழ்வு முடிந்த கையேடு அங்கிருந்தே விமானம் ஏறி அமிர்தசரஸ் சென்று சேர்ந்தேன். விழா அன்று காலையில் பேரூர் சிவன் கோவிலில் ஜெயும் அருணா அக்காவும் மாலை மாற்றிக்கொண்டது மனதை பொங்க செய்தது. நண்பர்கள் சேர்ந்து கொண்டு வந்த சியமந்தகம் நூலை பார்த்தபோது நிறைவாக உணர்ந்தேன். அழிசி ஸ்ரீனிவாசன் இந்நூல் உருவாக்கத்திற்கு மிக முக்கியமான பங்களிப்பை ஆற்றியுள்ளார். நூல்வனம் மணிகண்டன் அற்புதமாக அச்சாக்கி கொடுத்தார். முன்மாதிரியற்ற மணிவிழா மலர். 

With Bogan at Kambar Samadhi


இந்தவருடம் மற்றொரு மிக முக்கியமான தொடக்கம் 'தமிழ் விக்கி'. காளிபிரசாத் ஒருமுறை ஜெயை விஸ்வாமித்ரனோடு ஒப்பிட்டு பேசினான். நீ என்னடா எனக்கு சொர்க்கத்தை கொடுக்கிறது, நானே எனக்கான சொர்க்கத்தை உருவாக்குகிறேன் என திரிசங்கை உருவாக்கிய முனி.  'வாயில் காப்பாளர்களை' எரிச்சல்  படுத்தும். ஏனெனில் அவர்கள் தங்களுக்கு வரம்பற்ற அதிகாரம் உள்ளதாக கற்பிதம் செய்கிறார்கள். ஜெ அவற்றை தகர்க்க மாற்று அமைப்புகளை உருவாக்கியபடி இருக்கிறார். உரியநேரத்தில் நாஞ்சில் நாடனுக்கும், வண்ணதாசனுக்கும் சாகித்திய அகாதமி கொடுக்கப்பட்டிருந்தால் விஷ்ணுபுரம் விருதே தேவைப்பட்டிருக்காது என எண்ணிக்கொள்வேன். பல்வேறு சர்ச்சைகள், எதிர் கருத்துக்கள் என தமிழ் விக்கி நெருப்பாறை நீந்தி நிலைக்கொண்டுவிட்டது. இதில் எனது பங்களிப்பு என்பது 'மக்கள் தொடர்பு அதிகாரி' என்ற அளவில் தான். அதிக எண்ணிக்கையில் கட்டுரைகளை எழுதவில்லை. ஆசிரியர் பொறுப்பிற்கு உகந்தபடி வரும் ஆண்டில் மேலும் முனைப்புடன் எழுத வேண்டும். 'நித்ய வனத்தில்' செம்பக மரத்தை நட்டபோது வெகுவாக உணர்ச்சி வயப்பட்டிருந்தேன். 2019 ஆம் ஆண்டு ' Mahathma Gandhi in Tamil' நூலை தொகுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மிக குறுகிய காலத்தில் வேண்டும் என கேட்டதால், மூன்று மாதத்தில் தொகுத்துக்கொடுத்தேன். நண்பர் த. கண்ணன் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். 2020 ஆம் ஆண்டில் எங்கள் கைப்பிரதியை ஒப்படைத்துவிட்டோம். கொரோனா காரணங்களால் அது பதிப்பிக்கப்பட்ட தாமதம் ஆனது. இந்த ஆண்டு பாரதிய வித்யா பவன் அந்நூலை நல்லவிதமாக வெளியிட்டது. இந்திய மொழிகளில் இப்படியான ஒரு வரிசையை கொண்டு வரும் முயற்சியில் பாரதிய வித்யா பவன் உள்ளது. வங்காளம், கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழி தொகுதிகளை தரம்சாலாவில் தலாய்லாமா வெளியிட்டார். அங்கு ஷோடங் ரின்போச்சே அவர்களையும் சந்தித்த்தோம். ரமேஷ் ஓசா, ஜெகதீஷ் லக்கானி , ஷியாம் பக்ரே, மற்றும் அவரது கல்லூரி முதல்வர், ஆகியோருடன் நானும் சென்றேன். அம்ரிஸ்தர் தங்கக்கோவிலை பார்த்துவிட்டு அங்கிருந்து சாலைவழி மாலையில் சென்று சேர்ந்தோம். என் வாழ்நாளில் அத்தனை அழகான சூரிய அஸ்தமனத்தை நான் பார்த்ததில்லை. எழுத்தாளர் கணேஷ் தேவிக்கு நன்றி சொல்ல வேண்டும். ஷ்யாம் தான் எடிட் செய்த இம்மூன்று தொகுதிகளில் தமிழே முதன்மையானது என சொன்னது மிகுந்த நிறைவை அளித்தது. புத்தகத்தை தலாய்லாமா வெளியிடவுள்ளார் என்பதை தகவலாகத்தான் சொன்னார்கள். நான்தான் இதை விட்டால் வாய்ப்பு கிடைக்காது என வண்டியில் ஏறிக்கொண்டேன். பலமுறை திட்டமிடப்பட்டு தள்ளி போனது. மொழியாக்கம் செய்த கண்ணன் தண்டபாணியையும் இழுத்துக்கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் நானே வேண்டா விருந்தாளி  என்பதால் கண்ணனுக்காக என்னால் குரல் கொடுக்க முடியவில்லை எனும் குற்ற உணர்வு எனக்கு உண்டு. ஷியாம் இந்த பயணத்தின் ஊடே நல்ல நண்பராக ஆனார். 
இந்த ஆண்டு நிறைய வெளிமாநில/ வெளிநாட்டு எழுத்தாளர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டியது. சிம்லாவில் சம வயது எழுத்தாளர்களின் நட்பு கிட்டியது. குஜராத்தியில் சம்விதி எனும் அமைப்பை நடத்திவரும் தர்ஷினி தாதாவாலா, வங்காள எழுத்தாளர்களான நபணீதா தாஸ் சென்குப்தா, அமித் ஷங்கர் சஹா, நீலோத்பல், அருணி சவுரப் ஆகிய இந்தி எழுத்தாளர்கள். மொழிபெயர்ப்பாளர் கல்யாணராமன். சிங்கப்பூரில் சந்தித்த அமெரிக்க இந்திய எழுத்தாளரான அகில் சர்மா. சிங்கப்பூர் எழுத்தாளர்களான கிளாரா சோ, போயே கிம் செங், பதிப்பாளர் எட்மண்ட் வீ என பெரும் பட்டியலை போடலாம். இறுதியாக மமங் தாய் எனும் அருணாச்சல பிரதேச எழுத்தாளரையும் ரைட்டர் சைடு கனிஸ்கா குப்தாவையும் விஷ்ணுபுர விழாவில் சந்தித்தேன். .


                                

வருமாண்டில் எழுதிக்கொண்டிருக்கும் நாவலை நிறைவு செய்ய வேண்டும். கொஞ்சம் குறுங்கதைகள் எழுத வேண்டும். இரண்டோ மூன்றோ மொத்த படைப்புலக கட்டுரைகளை எழுத வேண்டும். நிறைய வாசிக்க வேண்டும். உருப்படியான பயணங்களில் ஈடுபட வேண்டும். உடலும் மனமும் ஒத்துழைக்க வேண்டும். ஆயிரம் மணிநேர வாசிப்பு போட்டியை நடத்துகிறோம். அதை நிறைவு செய்ய முயல வேண்டும். படைப்பூக்கம் மிக்க ஆண்டாக அமைய வேண்டும் என்பது மட்டுமே கனவு. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 


Sunday, December 25, 2022

காயா கோப்பியுடன் சில கதைகள் - சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2022 – சில நினைவுகள்


(நண்பர் சிவானந்தம் நீலகண்டன் கேட்டுக்கொண்டதன் பேரில் சிராங்கூன் டயம்ஸ் இதழில் எழுதிய குறிப்பு. இந்த பயணத்தை இனிமையாக்கிய நண்பர்கள் சரவணன், சித்துராஜ், சத்யா, ராம், சுஜா, ஷானவாஸ், லதா, இன்பா, சித்ரா, அயிலிஷா, லோஷினி, சிவானந்தம், மகேஷ் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. கிருத்திகா, பொன். சுந்தரராசு, மணிமாலா மதியழகன் ஆகிய படைப்பாளிகளை சந்திக்க முடிந்தது மகிழ்ச்சியளித்தது. ) 

With Haneefa, Celine Chow, William Phuan of Singapore book council இது எனது மூன்றாவது சிங்கப்பூர்ப் பயணம்.  முதலிரண்டு முறை இருந்த ஊர்சுற்றும் பரபரப்பும், ஊருக்கு ஏதேனும் வாங்கிச்செல்ல வேண்டிய ஆர்வமும் இம்முறை வடிந்துவிட்டன. அனைத்துலக  இலக்கிய விழாவான ‘சிங்கப்பூர் எழுத்தாளர் விழா’ நிகழ்ச்சிகளில் முடிந்தவரை பங்கேற்று அனுபவத்தைச் செறிவாக்கிக்கொள்ள வேண்டும் என விரும்பினேன். ஏனெனில் நான் அழைக்கப்பட்டிருந்தாலும் அது என் ஒருவனுக்கான தனிப்பட்ட அழைப்பு அல்ல. ஒரு மொழியின், நவீனத் தமிழ் இலக்கிய மரபின் பிரதிநிதிக்கான அழைப்பு. 


நவம்பர் 4 தொடங்கி 21 வரை நீடித்த 25-ஆவது சிங்கப்பூர் விழாவிற்கு ஆசிய படைப்பூக்க எழுத்து செயல்திட்டத்தின் மூலமாக அழைக்கப்பட்டேன். எழுத்தாளர் எம்.டி. முத்துக்குமாரசாமி, ஓவியர் மருது ஆகியோர் நான் செல்வதற்கு முந்தைய வாரம் அழைக்கப்பட்டிருந்தனர். விழா நடக்கும் ‘ஆர்ட்ஸ் ஹவுஸ்’ வளாகத்திற்கு அருகிலேயே எனக்குத் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  நண்பர் சரவணன்  எனக்காக விடுதியில் காத்திருந்தார். எனக்கு ஒதுக்கப்பட்ட அறையின் எண் 420. "நம்பரே சரியில்லையே" என சிரித்துக்கொண்டோம். 


நானும் சரவணனும் விடுதியிலிருந்து ‘மிண்ட்’ (Moment of Imagination and Nostalgia with Toys) அருங்காட்சியகத்திற்கு சென்றோம். விடுதி அருகிலேயே என்பதால் நடந்தே சென்றோம். ஐந்து தளங்கள் கொண்ட அருங்காட்சியகம். தொல்காலத்திலிருந்து பொம்மைகள் அடைந்துள்ள பரிணாமத்தைக் குறித்து ஒரு சித்திரம் கிட்டியது. பொம்மைகளின் உருவாக்கத்தில் பொதிந்துள்ள வணிகம், அரசியல் என மிக சுவாரசியமான தகவல்கள். இரண்டாம் உலகப்போர்ப் பின்புலத்தில் உருவான ராணுவ வீரர்கள், சீனக் கலாச்சாரப் புரட்சியைக் குறிக்கும் பொம்மைகள், விண்கலங்கள், வேற்றுகிரக வாசிகள், ‘பார்பி’க்கள், ‘பாப்பாய் தி செய்லர்’ என ஒவ்வொன்றுக்கும் பின்னுள்ள வரலாறு காட்டப்பட்டிருந்தது. 


மைக்கேல் லீ எனும் பொம்மை வடிவமைப்பாளரை அறிந்துகொண்டேன். ஹாங்காங் அகதிகளை மையமாகக் கொண்டு கையாலேயே பொம்மைகள் செய்தவர். புனைவுக்குரிய வாழ்க்கை. பொம்மைகளின் வடிவமைப்பும் இடுபொருட்களும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நிலபரப்பில் எப்படி மாறிவந்திருக்கின்றன எனப் பறவைக் கோணத்தில் பார்க்கமுடிந்தது. இன்று அத்தகைய பண்பாட்டுத் தனித்துவங்கள் பொம்மைகளில் இல்லை என்றே தோன்றுகிறது. மி யிங் யீ எனும் தைவான் எழுத்தாளரின் 'ஸ்டோலன் பைசைக்கிள்' நாவலில் சைக்கிள் வடிவங்களின் பரிணாமம் வழியாகவே ஒரு வரலாறு சொல்லப்படும். இப்படி நாம் புழங்கும் எந்த ஒன்றையும் வரலாற்று நோக்கில் பார்த்தால் அதிலிருந்து கதையாக ஆக்க முடியும் எனத் தோன்றியது. 

With Pattukottai Prabakaran, Chitra 


மாலையில், விழா நடக்கும் ஆர்ட்ஸ் ஹவுஸ் வளாகத்திலிருந்த, தற்காலிகப் புத்தகக்கடையில் என் புத்தகங்களைக் கொடுத்துத் திரும்பினேன். இரவு விளக்கில் சிங்கப்பூர் நதியையொட்டிய நகர்ப்பகுதியைக் காண்பது ஒரு தனி அனுபவம். 


அடுத்தநாள், முற்பகலில் எனக்கான அரங்கு ஆசிய நாகரிக அருங்காட்சியகத்தில் இருந்தது. எழுத்தாளர்கள் அகில் சர்மா, போயெ கிம் செங், கிளாரா சோ, சோபியா மரியா மா ஆகியோருடன் நானும் பங்கேற்ற ஆங்கில அமர்வு அது. எங்கள் அமர்வின் தலைப்பு ‘Glocalized Identity’. தோராயமாகத் தமிழில் ‘உலகவுள்ளூர் அடையாளம்’ எனலாம். ஆங்கிலம் அன்றாடம் புழங்கும் சூழலில் நான் இல்லை என்பதால் நாக்கு புரண்டு சிந்திப்பது சரியாக வெளியே வரவேண்டுமே என்ற பதட்டம் எனக்கிருந்தது. மற்ற அனைவருமே நேரடியாக ஆங்கிலத்தில் எழுதுகிறவர்கள். கிளாரா சோ சீனத்திலும் எழுதுகிறார். 


கிளாரா சோவின் 'Bare bones' கதை எனக்குப் பிடித்திருந்தது. சிங்கப்பூரில் டைனோசர் எலும்பு கண்டடையப்பட்ட பின்புலத்தில் எழுதப்பட்ட கதை. நுகர்வுப் பண்பாட்டை நுண்மையாக விமர்சிக்கிறது. சோபியா மரியா மா இளம் எழுத்தாளர். இரண்டோ மூன்றோதான் கதைகள் எழுதியுள்ளார். பருவநிலை மாற்றம் பற்றிய சுவாரசியமான புனைவு. போயெ ஒரு கவிஞர். ஏழெட்டுக் கவிதைகளை வாசித்த அளவிலேயே எனக்கு மிகவும் பிடித்துப்போனார். அமையமுடியாமை, அமைதிக்கான ஏக்கம் ஆகியவற்றை அவரது கவிதைகளில் உணர்ந்தேன். நகரத்திற்குள் இருந்தபடி அங்கிருந்து சதா தப்பித்துப் போக நினைப்பவர், தப்பிக்கும் கனவுகளைக் கொண்டவர். அகில் சர்மா இந்திய வம்சாவளி அமெரிக்க எழுத்தாளர். அவரது An Obedient Father நாவல், தந்தை மகள் பிறழ் உறவை மையமாகக் கொண்டது. அதை அவர் எழுதியிருந்தவிதம் உண்மையில் பெரும் வியப்பை  அளித்தது. கதை நாயகனின் மீது நமக்கு ஏற்படும் அசூயையே அவரது நாவலின் வெற்றி. 

With Inba


“உங்கள் எல்லோரையும் படித்து என் வீட்டுப்பாடத்தை முடித்துவிட்டுதான் வந்தேன். ஆனால் உங்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டாது. ஏனெனில் எனது எந்தக் கதையும் ஆங்கிலத்தில் இல்லை” எனத் தொடங்கினேன். உண்மையில் நான் என் நிலத்தின் உலகளாவிய குரலா? என்ற கேள்வியை எனக்குள் எழுப்பிக்கொண்டபோது சற்றுப் பொருத்தமற்றவனாக உணர்ந்தேன். ஆனால் அவர்களுடையதைவிட சற்றும் என் எழுத்தைக் குறைவாக உணரவில்லை.  


அறிவியல் புனைவு எழுத்தாளராக அறிமுகப்படுத்தப்பட்டேன். எத்தனை அறிவியல் புனைவுக் கதைகள் எழுதியிருக்கிறேன் எனக் கேட்கப்பட்டபோது ஒவ்வொரு சிறுகதைத் தொகுப்பிலும் இரண்டு கதைகள் எனச் சொன்னதை அதிர்ச்சியுடன் எதிர்கொண்டார்கள். மேற்கைப்போலத் தனித்த வகைமைகளாக (genres) அல்லாமல் தமிழில் ஒரேதொகுப்பில் பல்வேறுவகைக் கதைகள் அமைவதை விளக்கினேன். என்னுடைய 'இமாம் பசந்த்' கதையிலிருந்து ஒரு பகுதியை  நண்பர் நம்பி மொழிபெயர்ப்பு செய்து கொடுத்திருந்தார். அதை வாசித்தேன். ஒரளவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றது. 


சில கேள்விகளுக்கு உருப்படியாக பதில் சொன்னேன் என்றே நினைவு. “நான் உலகத்தை நோக்கிப் பேசவேண்டும் என்பதில்லை, எனது கதையில் லேய்ஸ் சிப்ஸோ, சாம்ஸங் கைபேசியோ வருகிறது எனில் உலகம் என்னை நோக்கி என் கதைக்குள் வந்துவிட்டது எனப் பொருள். படைப்பூக்கம் உலகளாவியப் பொதுத்தன்மையுடையது. சிவன் தலை கங்கையைப் போல், மண்ணுக்கு இறங்கி நிலப் பரப்புக்கு ஏற்ப மாறி வருகிறது. பண்பாடும் சூழலும் உலகளாவியப் பொதுத்தன்மைகளுக்குச் சில திசைவழிகளை உருவாக்குகிறது” என்றேன். அமெரிக்கவாசிகளுக்காக இந்தியர்களின் வாழ்வை எழுதுகிறேன் என்றார் அகில். ஆகவே அந்த பிரக்ஞை கதையின் பேசுபொருள், விவரிப்பு என எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்றார். நல்ல வேளையாக நமக்கு அத்தகைய இக்கட்டு ஏதுமில்லை. தமிழில் நாம் வருங்கால வாசகர்களுக்காக அல்லவா எழுதுகிறோம்! ஏனோ அந்த அமர்வு எடுத்துக்கொண்ட பேசுபொருளை சரியாக விவாதிக்கவில்லை எனும் எண்ணம் ஏற்பட்டது. சம்பந்தமில்லாத கேள்விகளால் அகில் சற்றுக் கடுப்பானார். 


அவ்வமர்வு முடிந்ததும் நானும் நண்பர் சத்யாவும் கணினி விளையாட்டுக்கு எழுதுவது பற்றிய அமர்வுக்குச் சென்று அமர்ந்தோம். பெரும் எண்ணிக்கையில் இளைஞர்கள் கூடியிருந்தார்கள். விளையாட்டு எழுதுதல், விளையாட்டுக் கதையாடல் வடிவாக்கம் (Game writing, Narrative design) என இரண்டு தளங்கள் உள்ளன. கதையாடல் வடிவாக்கம் செய்பவர் ஏறத்தாழ ஒரு திரைக்கதை ஆசிரியர்தான். ஒரு திரைக்கதையாசிரியர் தான் உத்தேசிக்கும் அதே உணர்வைப் பார்வையாளருக்குக் கடத்திவிட்டால் போதும். ஆனால் விளையாட்டுக் கதையாடல் வடிவமைப்பாளரின் நிலை சிக்கலானது. இதில் பார்வையாளரைப் போலன்றி விளையாடுபவர் கதைக்குள்ளேயே உள்ளவர். அவருக்குக் கதைக்குள் சில தேர்வுகள் சாத்தியம். மிக நல்ல அமர்வு. வழக்கமான இலக்கிய விழாக்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் சாத்தியமில்லை.  


அன்று பிற்பகல் 4 மணிக்கு எழுத்தாளர் ஷாநவாஸ், முகமது அலி, வசுந்தரா ஆகியோர் பங்குபெற்ற உணவுக்கும் இலக்கியத்திற்குமான உறவைப்பற்றிய உரையாடல் அரங்கு ஏற்பாடாகியிருந்தது. பதினைந்து இருபது பார்வையாளர்கள் இருந்திருக்கலாம். ஷாநவாஸ் அருமையான உரையாடல்காரர். சிங்கையில் லோட்டா நிரம்பக் காபி குடித்துப் பழகியவர்கள் சென்னையில் தக்குனூண்டு டம்ப்ளரில் குடிக்க நேரும்போது ஒரு ஆளுக்கு நாலு காபி ஆர்டர் செய்யும் வழக்கத்தைப் பற்றி ஷாநவாஸ் வேடிக்கையாகச் சொன்னார். அவர் பேசுவதைக் கேட்டே நாம் சில கதைகளை எழுதிவிடலாம். முதல்முறை சிங்கப்பூர் வந்தபோது நாளைக்கு மூன்றுமுறை மைலோ குடித்து தலைசுற்றிய அனுபவத்தை நினைத்துக்கொண்டேன்‌. வசுந்தரா தகவல்களுடன் செறிவாகப் பேசினார். சிங்கப்பூர் உணவென்பது எப்படி வெவ்வேறு பண்பாடுகளின் கலவையில் உருவானது என்பதைக் குறித்து அறிந்துகொள்ள முடிந்தது. உரையாடல் செறிவாக இல்லாமல் அலைபாய்ந்ததாக ஓர் உணர்வு எனக்கு. 


அந்த அமர்வு முடிந்தவுடனேயே எனது அமர்வு தொடங்கியது. கவிஞர் இன்பா நெறியாள்கை செய்தார். ஒன்றரை மணிநேரம் காந்தி குறித்துப் பேசினோம். அதிகம் பேர் கலந்துகொள்ளவில்லை எனினும் நான் எழுத்தாளர், பேச்சாளர் அல்ல. பேச்சாளர்கள் கூட்டத்திலிருந்து தங்கள் ஆற்றலைப் பெற்றுக்கொள்பவர்கள். எழுத்தாளருக்கு அப்படி ஏதுமில்லை. ஒருவர் இருந்தாலும் ஆயிரம்பேர் இருந்தாலும் என் உரைக்கு பாதிப்பு ஏற்படாது. எனது சிறந்த உரைகளுள் ஒன்றாக நான் கருதுவது தென்காசி புத்தகத்திருவிழாவில் ஆயிரம் காலி இருக்கைகளும் பத்துப் பதினைந்து மனிதர்களும் இருந்த சபையில் ஆற்றியதுதான். 


அடுத்தநாள், எழுத்தாளர் விழாவின் இயக்குனர் பூஜா நான்சியுடன் காலையுணவுக்கு அழைப்பு வந்திருந்தது. ‘காயா டோஸ்ட்’ உண்டோம். அவர்‌ எல்லோருடனும் ஓரிரு நிமிடங்கள் பேசியாக வேண்டும். என்னருகே அமர்ந்த இருவருடன் பேசினேன். ஒருவர் இஸ் யுனியாத்தோ (Is Yuniarto). இந்தோனேசிய வரைகதை (காமிக்ஸ்) கலைஞர். The Grand Legend of Ramayana என்ற ஒரு வரைகதைத் தொடரை ஜப்பானிய ‘மாங்கா’ பாணியில் உருவாக்கியுள்ளார். இராமனும் இலட்சுமணனும் கோட்டு சூட்டுடன் இருந்தார்கள். சீதையின் கற்பெல்லாம் அங்கு சிக்கல் இல்லை. அவளிடம் இருக்கும் அபூர்வ ஆற்றலைக் கவர முயல்கிறான் இராவணன். தான் வரைந்திருந்த சில ‘பேனல்’களைக் காட்டினார். படைப்பூக்கம் மிகுந்திருந்தது.  


இஸ் யுனியாத்தோ, 'கருடாயன' என்று இன்னொரு வரைகதைத் தொடரும் செய்துள்ளார். கடோத்கஜன்தான் அதில் நாயகன். இந்தோனேசியாவில் கடோத்கஜன் பெரும் ஆளுமை என்றார். குட்டி கருடனை பாண்டவர்களும் கடோத்கஜனும் அசுர சக்திகளிடமிருந்து காப்பதே கதை. அது ஒரு விளையாட்டாகவும் பெரிய வெற்றிபெற்றுள்ளது. ஆய்வாளார் அ.கா. பெருமாளின் இராமாயண, மகாபாரதக் கதைகள் சிலவற்றை அவருக்குச் சொன்னேன். 


ஜெஸ்ஸிகா வில்கின்சன் எனும் ஆஸ்திரேலியக் கவிஞரை சந்தித்தேன். அவர் வாழ்க்கை வரலாற்றுக் கவிதைகளை எழுதுபவர். ஆஸ்திரேலியாவின் ஒரு நடிகை, ஓர் இசைக்கலைஞர், ஓர் ஓவியர் என மூவரின் வாழ்க்கை வரலாறுகளையும் கவிதையில் எழுதியுள்ளார். நம்மூரில் மரபிலக்கியத்தில் இந்தவகை உண்டு. காந்திக்கு அசலாம்பிகை, அரங்க சீனிவாசன் போன்றோர் அப்படியான காவியங்கள் எழுதியுள்ளனர். சிங்கப்பூரிலும் லீ குவான் இயூவிற்கு அ.கி. வரதராசன் ஒரு பிள்ளைத்தமிழ் எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். நவீன கவிதையில் கணிதமேதை இராமானுஜம் பற்றி சபரி எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. ஆனால் முழுநூலாக ஆக்குவதற்கு நாம் யோசித்ததில்லை. கவிஞர் பெருந்தேவியிடம் இதைச் சொன்னபோது புதுமைப்பித்தனும் ஆத்மாநாமும் அப்படி எழுதப்பட வேண்டியவர்கள் என்றார். 


சிங்கையில் கலாச்சார விருதாளர் படைப்புகள் வாசிக்கப்பட்ட அரங்கிற்குச் சென்றோம். சீன எழுத்தாளர் ஒருவரின் கவிதை வாசிக்கப்பட்டது. மலாய் எழுத்தாளர் ஒருவரும் வந்திருந்தார். தமிழ்க் கவிஞர் இக்பால் தன்னுடைய கால்களுக்கு நன்றி சொல்லுதல் பற்றிய கவிதையை வாசித்தபோது சட்டென உணர்ச்சிவசப்பட்டார். இத்தனை நாளாக என்னைச் சுமந்து சென்ற கால்களே, நன்றிக்கடனாக உன்னை என்றேனும் என் நண்பர்கள் தங்கள் தோள்களில் சுமந்துசெல்வார்கள் என்பதாகச் செல்லும் மரணத்தைப்பற்றிய நேரடியான கவிதை. அவர் வயதும், அவர் வாசித்த விதமும் சேர்ந்து அவரது உணர்ச்சி எனக்கும் தொற்றிக்கொண்டது. மலாய், சீனம், தமிழ் என மூன்று தரப்பினருமே ஆங்கிலம் தங்கள் இடத்தை எடுத்துக்கொள்கிறது எனக் கவலை தெரிவித்தார்கள். இது ஓர் உலகளாவிய சிக்கல்தான். 


இந்த விழாவிற்கு டெட் சியாங் (Ted Chiang) வருகிறார் என்பதை அறிந்தேன். அவருடைய Story of Life and Others, Exhalation தொகுப்புகளைப் பெரும் பரவசத்துடன் வாசித்திருக்கிறேன். அறிவியல் புனைவின் முகத்தையே மாற்றியவர் என அவரைச்சொல்வேன். ஆசிய ஆன்மீக மரபு, குறிப்பாக பவுத்தத்தின் ஊடுருவல் அறிவியல் புனைவுகளில் அவர் வழியாகவே நிகழ்ந்தது. சிக்சின் லியு, கென் லியு, சார்லஸ் யூ எனப் பலரும் தொடர்கிறார்கள். எனது அமர்வு மூன்று மணிக்கு. பாதியில் எழுந்து வருவதாக இருந்தால் அதில் பங்கேற்கலாம் என்றார்கள். 


மிகச்சரியாக 2 மணிக்கு உரையைத் தொடங்கினார் டெட் சியாங். ‘காலயந்திரமும் மனிதனின் தன்விருப்பும்’ என்பது தலைப்பு. காலப் பயணத்தில் கடந்தகாலத்தை அறிவியல் ரீதியாக மாற்ற இயலாது என்றாலும் மனிதன் தன் தன்விருப்பைப் பயன்படுத்தி மாற்ற முடியும் என்பது எத்தனை வலுவான கற்பனை! எதற்காகக் கால இயந்திரம் வரும்வரை காத்திருக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார். பல்வேறு உதாரணங்களுடன் 40 நிமிடம் நீண்டது அவ்வுரை. கலந்துரையாடலுக்கு என்னால் இருக்கவியலாத சூழல். டெட் சியாங் அரங்கில் பாதியில் எழுந்து வந்தவன் நான் ஒருவன் மட்டும்தான். டெட் சியாங் அரங்கில்கூட காணொளிப் பதிவு செய்யப்படவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. பெரும் எழுத்தாளுமைகளின் அமர்வைப் பதிவுசெய்து இணையத்தில் ஏற்ற வேண்டுகோள் விடுக்கிறேன். 


பட்டுக்கோட்டை பிரபாகருடன்  3 மணிக்கு  தீவிர இலக்கியம், பரப்பிலக்கியம் பற்றி விவாதிக்கும் ஒரு அரங்கு. சித்ரா ரமேஷ் நெறியாள்கை செய்தார். எனக்கு இந்த அமர்வில் பங்குகொள்ள முதலில் தயக்கமிருந்தது. பரப்பிலக்கியம் முக்கியமில்லாதது என நான் கருதவில்லை. ஆனால் ஒரு விவாதமாக கசப்பின்றி இது முடியுமா என்ற சந்தேக உணர்வு இருந்தது. ஆகவே இயன்றவரை கவனமாக விவாதிக்க எண்ணினேன்.  நல்லவேளையாக விவாதம் நன்றாகத்தான் போனது. பரப்பிலக்கியம், தீவிர இலக்கியம் என்று எப்படி வகைப்படுத்துவது, அப்படி வகைப்படுத்தத்தான் வேண்டுமா எனப் பல்வேறு அடிப்படைக் கேள்விகளில் தொடங்கி, தீவிர இலக்கியம் யாருக்காக எழுதப்படுகிறது, எழுத்தாளரின் தேர்வு, வாசகரின் ரசனையும் தேர்வும் என விரிந்து சென்றது. 


சிங்கையின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான அருண் மகிழ்நனை அன்றுமாலையில் சந்தித்து சிங்கைத் தமிழ் இலக்கியச் சூழலைப்பற்றிப் பேசினோம். தமிழகச் சூழலில் இருந்து சிங்கை வேறுபடும் புள்ளிகள் குறித்து ஒரு சித்திரம் கிடைத்தது. இவ்வாண்டு சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்கான நடுவராகச் செயல்பட்டிருந்ததால் சிங்கப்பூர் புத்தக மன்றத்துக்கு ஒரு சம்பிரதாயமற்ற சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். வில்லியம், செலின், ஹனீஸ் ஆகியோரை ஒரு கஃபேயில் சந்தித்து உரையாடினேன். புத்தக மன்றத்தின் பணிகள் குறித்து தெரிந்து கொண்டேன். சிங்கையின் பிறமொழி இலக்கியச் சூழல் குறித்த பரிச்சயம் எற்பட்டது. சிங்கையில் இலக்கியம் சார்ந்த ஒவ்வொன்றுக்குமே பணம் கொடுத்து மக்கள் பங்குபெற வேண்டும். தமிழகத்தில் அத்தகைய பண்பாடே இல்லை. ஜெயமோகனின் கட்டண உரைகள் அந்தத் திசையில் ஒரு முன்னோடி முயற்சி. 


சிங்கப்பூர்ப் பயணத்தில் மிக முக்கியமான சந்திப்பு என ‘எபிக்ராம்’ பதிப்பக உரிமையாளர் எட்மண்ட் வீயுடனான சந்திப்பை சொல்லலாம். எபிக்ராம் சிங்கப்பூரின் மிக முக்கியமான ஆங்கிலப் பதிப்பகம். மொழியாக்கம், வரைகலை நாவல்கள், வரைகதைகள், குழந்தைக் கதைகள் எனப் பல தளங்களில் புத்தகங்களை வெளியிடுகிறது. குறிப்பாக சிங்கப்பூர் இலக்கியத்தை முன்வைத்துச் செயல்படுகிறது. பத்தாயிரம் சிங்கப்பூர் வெள்ளிப் பரிசுக்கு வருடாவருடம் நாவல் போட்டி நடத்துகிறது. இந்தாண்டு எழுபது நாவல்கள் வந்துள்ளதாகச் சொன்னார்! படைப்பாளர் சுதந்திரம், இலக்கியத்தின் சிக்கல் என சுமார் இரண்டுமணி நேரம் அவருடன் உரையாடினேன். அவர் பதிப்பித்த / பரிந்துரைத்த புத்தகங்கள் சிலவற்றை வாங்கிக்கொண்டேன். சிங்கப்பூரின் லட்சுமண ரேகைகள் குறித்துச் சில தெளிவுகளைப் பெற்றேன்.


வெள்ளிக்கிழமை காலையில் சாங்கி விமான நிலையத்தில் வந்திறங்கியது முதல் திங்கட்கிழமை மீண்டும் திரும்பியதுவரை உறங்கும் நேரம் தவிர்த்துப் பிற சமயங்களில் எல்லாம் எவருடனோ உரையாடியபடியேதான் இருந்தேன். நம் மரபின் அத்தனை படைப்பாளிகளின் தோள்களின்மீதும் ஏறிநின்றுதான் நான் சிங்கப்பூர் சென்றேன் எனும் தன்னுணர்வு எனக்கு உண்டு. ஆகவே அப்பெரும் தொடர்ச்சியின் ஆகச்சிறந்த அம்சங்களை முன்வைக்க வேண்டிய கடமை எனக்கிருந்தது. மேலும், இங்கிருந்து அளிக்கவேண்டியதை அளித்து அங்கிருந்து பெறவேண்டியதைப் பெற்றுவர வேண்டியதும் என் நோக்கமாக இருந்தது. நிறைய சந்திப்புகள், உரையாடல்கள் வழியாக அந்நோக்கம் ஓரளவு ஈடேறியது என்றே சொல்லவேண்டும்.
Thursday, December 22, 2022

ஆயிரம் மணிநேர வாசிப்பு - 2023


சில ஆண்டுகளுக்கு முன் முதல்முறை ஓராண்டில் ஆயிரம் மணிநேரம் வாசிக்க வேண்டும் எனும் சவாலை அறிவித்தோம். சிலரே அதை நிறைவு செய்தார்கள் எனினும், தொடக்கத்தில் நிறைய பேர் சேர்ந்தார்கள். வாசிக்கும் முறையில் உள்ள சிக்கல்களையும் எல்லைகளையும் உணர்ந்துகொள்ள உதவியது. சாந்தமூர்த்தி அவர்கள் இன்னமும் அந்த பக்கத்தில் நிமிடங்களை நிரப்பிக்கொண்டிருக்கிறார். 7000, 8000 என சென்று கொண்டிருக்கிறது. புத்தாண்டு பிறக்க உள்ளது. ஆகவே ஆயிரம் மணிநேர வாசிப்பு சவாலை மீண்டும் தொடங்கலாம் என எண்ணம். நண்பர் மயிலாடுதுறை பிரபுவின் தூண்டுதல் முக்கிய காரணம். அவரது ஆலோசனைகள் சிலவற்றை பரிசீலித்து இந்த ஆண்டில் அவற்றையும் கணக்கில் கொள்ளலாம் என எண்ணினேன். இந்த ஆண்டு சில புதிய / எளிய விதிமுறைகளையும் வசதிகளையும் சேர்த்துள்ளோம். 


விதிமுறைகள் 


இந்த ஆண்டு நட்சத்திர குறி அளிக்கலாம் என திட்டம். நாளைக்கு ஒருமணிநேரம் என 365 மணிநேரம் வாசிப்பை நிறைவு செய்பவருக்கு ஒற்றை நட்சத்திரம். 555 மணிநேரத்தை கடப்பவருக்கு 2, 777 மணிநேரத்தை கடப்பவருக்கு 3, 1000 மணிநேரத்தை கடப்பவருக்கு 4, 1111 மணிநேரத்தை கடப்பவருக்கு 5. 


இந்த ஆண்டு ஐந்து நட்சத்திரத்தை முதலில் பெறுபவருக்கோ, அல்லது ஐந்து நட்சத்திரங்களை பெறும் அனைவருக்குமோ போட்டி காலம் முடிந்த பிறகு புத்தக பரிசளிக்கலாம் என முடிவு. என் யோசனை 2000 ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள். புரவலர்கள் கிட்டுவார்கள் என நம்புகிறேன். 


சவால் ஜனவரி 1, 2023 அன்று தொடங்கி டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியது. ஜனவரி 10 வரை மட்டுமே புதிய பங்கேற்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 


நாள்தோறும் குறைந்தது ஒருமணிநேரமாவது வாசிக்க வேண்டும். 


இதற்கென பகிரப்படும் கூகிள் ஷீட்டில், அவரவர் பேருக்கு நேராக  நாள்தோறும் நிமிடங்களை பதிவு செய்ய வேண்டும்.   


இன்னொரு ஷீட்டில் புத்தக தலைப்புகளை பகிர வேண்டும்.


இம்முறை 365, 555, 777 என நண்பர்கள் அவர்களுக்கு உகந்த இலக்கை நிர்ணயித்துக்கொள்ளலாம்.  பரவலான பங்கேற்பை உறுதி செய்யத்தான். முன்னரே தெரிவித்துவிட வேண்டும். 


புத்தகம், கிண்டில், கைப்பேசி, மடிக்கணினி என எதிலும் வாசிக்கலாம். புனைவு, அபுனைவு, துறை சார்ந்த நூல்கள், இணைய இதழ்கள், தமிழ் விக்கி என எதையும் வாசிக்கலாம். கவனம் சிதறாமல் வாசிக்க வேண்டும்.  நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளக்கூடாது. 


இம்முறை புத்தக பரிந்துரைக்கு என ஒரு ஷீட் போடலாம் என யோசனை. அதில் பிறருக்கு வாசித்த நல்ல புத்தகங்களை பரிந்துரைக்கலாம். 


ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்க 

forgandhitoday@gmail.com 

other links 
 


Thursday, December 1, 2022

உடலின் தாண்டவம்- எம்.வி.வி குறுநாவல்கள்.

 

மொழி வெளிப்பாடு மற்றும் நிகழ்வுகளின் முரண் என இரண்டு கூறுகளை பொதுவாக இலக்கிய ஆக்கங்களின் இரு அடிப்படை கட்டமைப்புகளாக காண முடியும். ஒரு பிரதி  முதன்மையாக எதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது? மொழி வெளிப்பாடு தான் நோக்கம் எனில் மொழி ஒரு திறவுகோலாக புறத்தை அகத்துக்கு திறந்து வைக்கிறது. அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பது போல மொழியால் அள்ளப்படுவது யாவும் மொழிக்கு சிக்காத அக ஓட்டத்தின் தடையங்களைக் குறிக்கின்றன. புறத்தில் உள்ள ஒவ்வொன்றும் அகத்தில் உள்ள ஒவ்வொன்றையும் பிரதிபலிக்கின்றன. மொழியை முதன்மை ஊடகமாக கொள்பவர்களை இலக்கியவாதி என சொல்லலாம். இலக்கியவாதியின் கதை வாசிக்க உகந்தது சொல்வதற்குகந்தது அல்ல. மொழியின் வலுவில் நிற்பது. 


நிகழ்வுகளின் முரணை பேசுபவை கதைசொல்லிகளால் எழுதப்படுபவை. வாய்மொழியாக சொல்வதற்கு உகந்தவை.  இவ்விரு போக்குகளும் ஒருங்கமைந்த எழுத்துகளும் அரிதாக அமைவதுண்டு. எழுத்து மரபு வாய்மொழி மரபு என பொதுவாக வகைப்படுத்தலாம். வாய்மொழி மரபு நெடுங்கால வரலாறுடையது. எழுத்து மரபுக்கு முந்தையது. நவீன உரைநடை உருவாகிவந்த போது அது வாய்மொழி மரபின் நீட்சியாகவே திகழ்ந்தது. நவீனத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய பங்களிப்பு என்பது வாய்மொழி மரபுக்கு மாற்றாக எழுத்து மரபை வலுவாக முன்னெடுத்தது என்பதே. விளைவாக கதைசொல்லல் சற்றே குறைவானது எனும் கருத்து வலுப்பெற்றது. எழுத்து மரபு நிகழ்வுகளை விட அக வெளிப்பாட்டுக்கே அதிக முக்கியத்துவம் அளித்தது. கதையிலிருந்து நம்மால் பொருள் செறிந்த மேற்கோள்களை தனித்து எடுத்துக்காட்ட முடிந்தால் அது எழுத்து மரபின் ஆக்கம் என சொல்லலாம். நவீன இலக்கியத்தின் பெரும்போக்கு நம்பிக்கை இத்திசையில் இருந்தாலும் இதன் எல்லையை உணர்ந்து அதை விரிவுபடுத்தி கதைசொல்லலையும் அனுமதிக்கும் பாணிக்கான தேடலும் தொடங்கியது. புதுமைப்பித்தன் வெற்றிகரமாக இந்த இரண்டு போக்குகளையும் ஒருங்கிணைத்தார். ஆனாலும் அது பொது போக்காக மாறவில்லை.   பின்நவீனத்துவத்தின் அறிமுகம் நவீனத்துவத்தின் மதிப்பீடுகளை கேள்விக்குள்ளாக்கியது. கதைசொல்லல், வாசிப்பின்பம், சரளம் போன்றவை எல்லாம் வெகுமக்கள் இலக்கியத்துக்கு உரியது ஆகவே  நவீன இலக்கியத்துக்கு எதிரானது எனும் நம்பிக்கை மறு பரிசீலனைக்கு உள்ளானது. 


இந்த பின்புலத்திலிருந்து எம்.வி.வியுடைய படைப்புலகத்தை அணுகும் போது அவர் எழுத்து மரபை உள்வாங்கிக்கொண்ட ஒரு கதைசொல்லி எனும் எண்ணமே ஏற்பட்டது. ஒப்பு நோக்க 'குற்றமும் தண்டனையும்' மற்றும் 'உயிரின் யாத்திரை' கதைகளில் மட்டுமே சில மேற்கோள்களை தனித்து பிரித்து எடுக்க முடியும். என் வாசிப்பின் எல்லைக்குள், இதுவரை நான் வாசித்த எம்.வி.வியின் ஆக்கங்கள் ஒன்று கூட

 வாசிப்பதற்கு அயர்ச்சியாக இல்லை என்பதையே அவருடைய முதன்மை கலைவெற்றியாக கருதுகிறேன். 'வாசிப்பின்பத்தை' அளவுகோலாக முன்வைப்பதில் உள்ள சிக்கல் யாதெனில் வெகுமக்கள் இலக்கியத்திற்கும் தீவிர இலக்கியத்திற்கும் இடையேயான வேறுபாடை அழிப்பதாகும். அகவயமான அளவுகோலை மட்டும் முன்வைப்பதின் சிக்கலும் சேர்ந்துகொள்ளும். ஆனால் இலக்கிய மதிப்பீடு ஒரு எல்லைக்கு அப்பால் அகவயமானதாகவே இருக்க இயலும். எம்.வி.வியின் 'குற்றமும் தண்டனையும்', 'அம்மையே! அப்பா' போன்ற குறுநாவல்கள் சற்று பிறழ்ந்தாலும் வெகுமக்கள் கதையாக புரிந்துகொள்ளப்பட்டிருக்க கூடும். ஒரு கதை வெகு மக்கள் பிரதியா தீவிர இலக்கியப் பிரதியா என்பதை பேசு பொருளோ, அதன் எழுத்து மொழியோ  முடிவு செய்வதில்லை. அது தேய்வழக்கா என்பதுதான் முதன்மை அளவுகோல். தேய் வழக்கு என்பது முதன்மையாக கூறுமுறை சார்ந்ததே. 'உயிரின் யாத்திரை' குறுநாவலைத் தவிர்த்து பிற ஆறு குறுநாவல்களுமே வலுவான கதையமைப்பு கொண்டவை. 'அம்மையே அப்பா' ஒரு குடும்பஸ்தன் திடீரென்று முருகன் அருளால் கொஞ்ச காலத்துக்கு பெண்ணாக மாறிவிட்டு மீண்டும் ஆணாகிறான். பெண்ணாக இருக்கும்போது பிறக்கும் குழந்தையை என்ன செய்வது என குழப்பமாக இருக்கிறது. பல்வேறு புனைவு சாத்தியங்கள் விரிகின்றன. 'குற்றமும் தண்டனையும்' மனோகரன் எனும் ஒரு மணிதனின் மூன்று கட்ட வாழ்வை சொல்வது. பெரும் பணக்காரனாக பிறந்து சொத்துக்காக சகோதரனை கொன்று விபத்தில் தன்னை இழக்கிறான். நினைவுகளை இழந்தவன் வேறொரு குடும்பத்தில் தன்னை பொருத்திக்கொள்கிறான். மீண்டும் ஒரு விபத்தில் முந்தைய நினைவுகளை மீட்கிறான். அப்போது எழும் அறச்சிக்கலே கதை. மனோகரன் நமக்கு பொய்த்தேவு சோமு முதலியையும் பசித்த மானுடம் கனேசனையும் நினைவுறுத்தக்கூடும்.  'அப்பாவும் பிள்ளையும்' சற்று வெள்ளந்தியான கடன்கார தந்தைக்கும் சாமார்த்தியசாலியான சுயமையம் கொண்ட மகனுக்குமான‌‌ உறவை சித்தரிக்கும் கதை. ஜப்தி ஆணை வாங்கிக்கொண்டு வரு தந்தையின் கடன்காரனை எப்படிச் சமாளிக்ககறான் என்பதை  சுவாரசியமாக சொல்கிறது. 'மாய்ஃபாப்' தத்தெடுத்துக்கொண்ட பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே உறவில் உள்ள கண்ணாடி சாளரத்தை சுட்டிக்காட்டுகிறது. 'பெட்கி' ஒரு வயதடைதல் கதை. சற்றே அதிக வயதுடைய உறவினர் பெண்ணுடன் உள்ள உறவுச் சிடுக்கை பேசுகிறது. 'நானும் உன்னோடு' மணமாகி சென்ற வீட்டில் பெண் எதிர்கொள்ளும் அக வன்முறையை உணர்வுப்பூர்வமாக சித்தரிக்கும் கதை. சொல்லால் சுடும் மாமியார் நழுவிச்செல்லும் கணவன் என அழுத்தங்களை சந்தித்துக்கொண்டிருக்கும்போது பிறந்த வீட்டுக்கு பிரசவத்திற்கு சென்று இளைப்பார எண்ணுகிறாள். சரியாக அதை தகர்க்க மாமியார் திட்டமிடும்போது தன் முடிவை நிலைநாட்ட எந்த எல்லைவரை செல்கிறாள் என்பதே கதைதான். நன்கு அறிந்த கதையாக இருந்தாலும் அதன் உண்மைத்தன்மை மற்றும் தொனி காரணமாகவும், கதைமாந்தரோடு நமக்கு ஏறபடும் தொடர்புறுத்தல் காரணமாகவும் அதன் வலுவில் கதை நிற்கிறது. இந்த ஆறு கதைகளுமே வலுவான கதை முடிச்சுகளை கொண்டது. நிகழ்வுகளின் முரண்கள் வழியாக கதையை இறுக்கி செறிவாக்குகிறார். சில கதைகளில் இந்த முரணை சரியாக எதிர்கொள்ளாமல் வழுவிடவும் செய்கிறார். உதாரணமாக பெண்ணாக மாறிய வெங்கட்ராமனுக்கு பிறக்கும் குழந்தையை மீண்டும் ஆணாக மாறிய பின் என்ன செய்வது, குடும்பத்திற்கு அவரை எப்படி அறிமுகம் செய்வது போன்றவை மிக முக்கியமான முரணாக உருவாகும்போது குழுந்தை சட்டென ஓரிரு நாள் சீக்கில் இறந்துவிடுகிறது. இந்த மரணம் ஒரு தப்பிப்பும் கூட. 


எம்.வி.வியின் கதைகளில் தானொரு எழுத்தாளர் எனும் தன் உணர்வு வலுவாக வெளிப்படுகிறது. 'உயிரின் யாத்திரையில்' கனவின் முக்கியத்துவம் பற்றி ஒரு எழுத்தாளராக தனக்கு தெரியாதா என கதைசொல்லி வினவிக்கொள்கிறான். 'அம்மையே! அப்பா' கதை தொடங்குவதே ஒரு கதைக்கான அலைக்கழிப்பில் தான். 'மாஃப்பாப்' மற்றும் 'பெட்கி' ஆகிய கதைகளில் வடூவுர் துரைசாமி ஐயங்கார் பாதிப்பில் கதைகளை எழுதித்தள்ளும் பதின்ம வயது எழுத்தாளரே கதைசொல்லி. 'அப்பாவும் பிள்ளையும்' கதையில் எம்.வி.வி ஒரு கதைமாந்தராக வருகிறார். எழுத்தாளர் என்பதற்காக கதைசொல்லியிடம் வசையும் வாங்கிக்கட்டிக்கொள்கிறார். 'குற்றமும் தண்டனையும்' மற்றும் 'நானும் உன்னோடு' ஆகிய கதைகள் ஓரளவு பெண் மைய கதைகள் என்பதாலேயோ என்னவோ எழுத்தாளர் எம்விவி கதைக்குள் பாத்திரமாகவில்லை. 


கதைகளின் மற்றொரு பொதுத்தன்மை என்பது 'குற்றமும் தண்டனையும்' தவிர பிற அனைத்து கதைகளுமே சவுராஷ்டிர பட்டுநூல் நெசவாளர்களின் வாழ்க்கையை பின்புலமாக கொண்டவைதான். கதைக்களமும் கும்பகோணமும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகள்தான். மிகச்சரளமாக சவுராஷ்டிர மொழியை உரையாடல்களிலும் கதைகளின் தலைப்புகளிலும் பயன்படுத்தியுள்ளார். கும்பகோண சவுராஷ்டிரர்களுக்கும் மதுரைக்காரர்களுக்கும் இடையேயான புடவை கச்சத்தில் உள்ள வேறுபாடு தொடங்கி புதிதாக திருமணமான மாப்பிள்ளைக்கு மாமனார் வீட்டில் ஒரு வருடம் வரை நான்கு வேளை விருந்திடவேண்டும் எனும் பழக்கம் வரை பல சுவாரசியமான தகவல்களை கதைகளின் ஊடாக சொல்லிச்செல்கிறார் எம்விவி. 


'மாய்ஃபாப்' மற்றும் 'பெட்கி' ஆகிய இரண்டு கதைகளுமே பள்ளி பருவத்து நினைவுகளை அடிப்படையாக கொண்டவை. இரண்டிலும் வெங்கட்ராம் சொன்னா எனும் பதின்ம வயது பையனாக வருகிறான். வளர்ப்பு தாய், தந்தையர் விதவையான அத்தை லட்சுமி பாய் ஆகியோரின் சித்தரிப்பு மற்றும் கதை களத்தின் சித்தரிப்பு  ஓன்றே.  தன்வரலாற்றுத்தன்மை கொண்டவை. சவுராஷ்டிர சொற்களை தலைப்பாக கொண்டவை. 'மாய்ஃபாப்' கதை சிடுக்கென்பது எம்.வி.வியின் சொற்களில் சொல்வதானால் 'நான் அவர்கள் பெற்ற பிள்ளை அல்ல, வளர்ப்புப் பிள்ளை.' என்பதுதான். ஐந்து வயதுவரை மாமா மாமி என்று அழைத்தவர்களை அப்பா அம்மா என்றழைக்க மனம் பழகவில்லை. அப்பா அம்மா என மனமார கருதினாலும் கூட கூச்சமும், கூச்சத்துடன் பிடிவாதமும் சேர்ந்து கொண்டது. சற்றே எள்ளல் கலந்த தொனியில் பதின்ம அனுபவத்தை நினைவுகூரும் வடிவத்தில் கதை நகர்கிறது. வளர்ப்பு பெற்றோரின் குழுந்தைகள் பிறந்திறந்து போகும் சித்தினத்தை ஒரு பத்தியில் அளித்திருப்பார். ஆனாலும் அது மனதை தொந்திரவு செய்வதுதான். அம்மா அப்பாவென அவனை அழைக்கவைக்க அவர்கள் மேற்கொள்ளும் சில விபரீதமான நடவடிக்கைகள் வேடிக்கையாக உள்ளன. குளித்து முடித்துவிட்டு ஆடையை பெற தூணில் ஒளிந்துகொண்டு உடைகளை எடுக்க அலமாரி சாவியை கேட்கும்போது அப்பாவென கூப்பிடு என்கிறார். பிறகு சாவியை அம்மாவிடம் வீசிவிட்டு அங்கும் இதே கதைதான். வளர்த்தவர்கள் திட்டியதும் நேராக அவன் கால்கள் அசல் பெற்றோரின் வீட்டை நோக்கிச் செல்கிறது‌. அவனே இயல்புக்கு திரும்பிவிட்டாலும் அவ்வுறவில் உள்ள 'எளிதாக உடையும்' தன்மை புலப்படுகிறது. எப்போதும் நிரூபணம் கோரும் உறவு நிலையானதாக இருக்க முடியாது. தற்கொலை முயற்சி என எண்ணி மாமாங்க குளத்திற்கு ஆளனுப்பி தேடிக்கொண்டிருக்கும்போது சொன்னா கூச்சத்துடன் வீடு திரும்புகிறான். லகுவான மொழியில் நுட்பமான உணர்வுகளை பேசும் கதை. 'பெட்கி' ஒரு பதின்ம வயது உறவுக்கார அக்காவுடனான பாலியல் அனுபவத்தைப் பற்றி பேசும் கதை. பெட்கியின் வாழ்க்கைச் சித்தரிப்பு கூர்மையானதாக வந்துள்ளது. பொதுவாக எம்.வி.வி கதைகளில் பெண்கள் வேட்கை கொண்டவர்களாக, துணிந்தவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். 'உயிரின் யாத்திரை' லீலா, 'குற்றமும் தண்டனையும்' நீலா, 'அம்மையே அப்பாவில்' பெண்ணாக தோற்றமெடுக்கும் ராணி என இவர்களின் உச்ச வடிவம்தான் 'காதுகள்' நாவலில் மாலியின் மீது பாயும் நாசகாளி. வேட்கையுள்ள சவுந்தர்யத்தின் மறுபுறம் மாபெரும் கோரம் உள்ளது எனும் சித்தரிப்பை தொடர்ச்சியாக காணமுடிகிறது. ஏறத்தாழ உருமாறும் சூணியக்கார கிழவி எனும் தொல்படிமம். அழகு ஆபத்தானது என எச்சரிக்கைக்கொள்ளும் மனதின் பதிவு. மறு எல்லையில் நிறைவான குடும்ப வாழ்க்கை வாழும் பெண்களும் சித்தரிக்கப்படுகிறார்கள். 


எம்.வி.வி அடிப்படையில் ஒரு மறைஞான எழுத்தாளர். அவருடைய ஆகப்பெரும் கேள்வி என்பது செறிவான ஆன்மீக வாழ்க்கைக்கும் மறைஞான அனுபவத்திற்கும் குறுக்கே உள்ள சதையுடலின் காம வேட்கையை என்னச் செய்வது என்பதுதான். 'அப்பாவும் பிள்ளையும்' சாமி தொடங்கி, 'அம்மையே அப்பா' ராணி, 'குற்றமும் தண்டனையும்' நீலா என அனைவரும் கண்ணாடி முன் தங்களை ரசிப்பவர்களாகவே இருக்கிறார்கள். நீலா உடலை வழிபடுபவள். சாமி தன் தோற்றத்தை முதலீடாக கொண்டவன். 'அம்மையே அப்பாவில்' முருகக் கடவுளுடன் எழுத்தாளர் வெங்கட்ராமனுக்கு ஒரு சுவாரசியமான உரையாடல் நிகழ்கிறது. முருகன் கேட்கிறார் 'உடலாசை இப்படி உன்னைப் பேச வைக்கிறது. உடலை ஒழிப்பதென்றால் உனக்கு அச்சமாக இருக்கிறது. உன் கதைகளில் உடல்தானே தாண்டவமாடுகிறது! இல்லையா?' என. கிட்டத்தட்ட இது எம்விவி தன் படைப்புலகைப் பற்றி அவரே வைக்கும் அவதானிப்பு. முருகன் ஒரு வரமளிக்க முன்வரும்போது, ஆணாகவும் பெண்ணாகவும் ஏழு பிறவிகள் எடுத்து இடையீடற்ற இன்பத்தை நுகர வேண்டும் என வரம் வேண்டுகிறார். அதற்கு மாற்றாக பதினெட்டு மாதங்கள் பெண்ணாக வாழ்ந்து இன்பத்தை துய்ந்தபின் மீளும் வரம் ஒன்றை அளிக்கிறார் முருகன். பெண்ணாக தன் உருவின் மீதே பிரேமை கொள்கிறான். அவனுக்குள் உள்ள ஆண் மனம் 'இந்தப் பெண்மையைத் தானே நுகர முடியாதே என்கிற தாபம் சற்று நிழலாடிவிட்டு மறைந்தது.' என மருகுகிறது. கதைகளின் ஊடாக அவருடைய கேள்வியுடன் அவர் ஃபிராய்டை எதிர்கொள்கிறார். அவருடைய படைப்பில் நிகழ்ந்த முக்கியமான இடையீடு என இதைச்சொல்வேன். ஒரு மரபான மனம் ஃபிராய்டை எதிர்கொள்ளும் போது நேரும் உராய்வும் அதனூடாக அவருக்கு ஏற்படும் அறிதலும் கவனிக்கத்தக்கது. உடல் வேட்கையை புரிந்து கொள்ள ஃபிராய்டை அணுகுகிறார். 'உயிரின் யாத்திரை' மற்றும் 'அம்மையே அப்பா' ஆகிய இருகதைகளிலும் பிரம்மச்சாரிகள் காமத்தில் வீழும் ஏமாற்றுக்காரர்களாக வருகிறார்கள் என்பதும் கூட ஒரு ஃப்ராய்டிய கோணம்தான். 'குற்றமும் தண்டனையும்' கதை கணவனின் வருகைக்காக காத்திருக்கும் நேரத்தில் மனைவி ஹரிணி ஃபிராய்டை வாசித்தும் அது குறித்து சிந்தித்தும் கழிக்கும் சித்திரத்துடன் தொடங்குகிறது. எல்லா செயல்களுக்கும் அடியில் பாலுணர்வு தொழிற்படுகிறது எனும் ஃபிராய்டிய சிந்தனையைப் பற்றி ஹரிணி 'வக்கிரமாகவும் விபரீதமாகவும் ஏதாவது சொல்வதுதான் அறிவாளியின் லட்சணம் போலும்' என எண்ணுகிறாள். ஆனால் அதை தவறென சொல்லிவிட இயலுமா என குழம்புகிறாள். 'கணவனைத் தவிர யாரையும் மனதான நினைத்ததில்லை- இந்த மன நலன் உடைய பெண்மணியைத்தான் பதிவிரதை என்கிறோம் இல்லையா? ஆனால் இந்தப் பெருமைக்கு அடிப்படை உடலின்பம் என்பது கொடுமையாகத் தோன்றலாம், அதற்காக, வேறு காரணங்களை கற்பனை செய்து கொள்ளலாம். ஆனால் அவளுடைய உடலோடு புத்தியும் மனமும் கணவனிடம் அடைக்கலம் ஆவதற்கு இதுதான் அதிகாரணம்' என ஒரு முடிவுக்கு வருகிறாள். 

 

மேலும் இயற்கையை வெல்வதே மனிதனுடைய வெற்றி என்றால் பிறவி முதல் தொடரும் பாலுணர்வை வென்றடக்கும் முறையாக இந்து மதம் வகுத்த பதிவிரதா தர்மத்தை காண முடியும் என எண்ணுகிறாள் ஹரிணி. இத்தகைய 'தர்ம விசாரம்' கூட  பாலுணர்வை சுற்றியே சுழல்வதை உணர்கிறாள். கணவன் காணாமல் போய் சில ஆண்டுகளுக்கு பின் திரும்பி வரும் காலகட்டத்திற்குள் அவளிடம் சில மாறுதல்கள் ஏறபடுகிறது. அப்போது அவள் 'ஃபிராய்டு போன்ற அறிஞர்களின் நூல்களை அணுகி பாலுணர்ச்சியின் ஆதியை ஆராய்வதில்லை. பாலுணர்ச்சியை மட்டும் அல்ல; எல்லா உணர்ச்சிகளையும் ஒழுங்குபடுத்துவது எப்படி என்று விளக்கும் இந்நாட்டு நூல்களோடு பழகலானாள். மனிதப் பிறவி எடுப்பவர்கள் தங்கள் வாழ்க்கை விதியை வகுத்துக்கொண்டு பிறக்கிறார்கள். வாழும் முறையால் விதியை வகுத்துக்கொள்கிறார்கள். அவர்களுடைய உணர்ச்சிகளும் இயல்புகளும் அவர்கள் வகுத்துக்கொண்ட விதிக்கு ஏற்பத்தான் அமைகின்றன; ஃபிராய்டு போன்ற அறிவாளிகளின் அளவுகோலுக்கு எந்த உணர்ச்சியும் இயல்பும் அடங்காது என்று அவள் தெளிவு செய்துகொண்டாள்.' என அவள் மனநிலை விவரிக்கப்படுகிறது. திருமணம் மற்றும் இந்திய குடும்ப அமைப்பை ஃபிராய்டிய நோக்கில் மறு பரிசீலனை செய்கிறது அவரது கதை. 'உடலுறவும் மனவுறவும் ஆத்மீக அடிப்படையில் வைப்பதால் இந்துக்களின் மணவினை பல்லாயிரம் ஆண்டுகளாய் ஒழுங்காக ஓடுகிறது.' என மனோகர் நீலாவுக்கு இடையேயான உறவைக்குறித்து விவரிக்கும்போது எழுதுகிறார்.  'பெட்கி' கதையில் இரவு முழுவதும் பெட்கி அளிக்கும் பாலியல் அழைப்புக்கு தன்னை ஒப்புகொடுக்காமல் கட்டுப்படுத்திக்கொள்வதையொட்டி 'தீனி தந்துதான் காமத்தை அடக்க வேண்டும் என்ற அவருடைய (ஃபிராய்டிய) சித்தாந்தம் தவறானது என்பதை அன்றிரவு நான் நிலைநாட்டிவிட்டேன் என்று அப்போது எனக்குத் தெரியாது.' என எழுதுகிறார். கட்டற்று இன்பத்தை நுகர்தலுக்கும் கட்டுப்பாடுக்கும் இடையிலான தேர்வு சார்ந்து ஒரு ஊசலை அவர் கதைகளில் காண முடிகிறது. மனோகர் ஹரிணியிடம் தனது வாதத்தை வைக்கிறான் 'வரையறுக்கப்பட்ட எந்த சுகமும் சுகமாய்த் தோன்றவில்லை. 

தன்னை மறக்கும் போதுதான் ஒருவனால் இன்பத்தை முழுமையாக நுகர முடிகிறது.' மேலும் பாவத்திற்கு அஞ்சுவது கோழைத்தனம் என கருதுகிறான் 'பாவம் என்பது என்ன? ஒரு வெறும் கருத்துதானே? கருத்துக்கள்தான் உலகத்தை அழிக்கின்றன.' விபத்துக்கு பின் நீலாவின் கணவனாக முந்தைய நினைவுகள் அழிந்தபின் இதற்கு நேரெதிரான நிலைப்பாடிற்குச் செல்கிறான். முன்பு கோழைத்தனத்தை இழிவாக கருதியவன்   அப்போது அதை மனிதத்தன்மையின் லட்சணமென கருதினான். கதை நாயகர்கள் மீண்டும் காமத்தை எதிர்கொள்கிறார்கள். அதற்கு ஆட்படாமல் தப்புகிறார்கள். 'காதுகள்' மற்றும் 'உயிரின் யாத்திரை' ஆகிய இரண்டு கதைகளிலும் காமத்தை கிளர்த்தும் பெண் உரு விடுதலையை மறைக்கும் மாயையின் உருவமாக மேல்நிலையாக்கம் அடைகிறதது. நவீனத்துவ எழுத்துலகை கட்டமைத்ததில் ஃபிராய்டுக்கு மிக முக்கிய பங்களிப்பு உண்டு. எம்விவி எழுதிய காலகட்டம் நவீனத்துவம் உச்சத்தில் இருந்த காலகட்டம். ஃபிராய்டிய பகுப்பாய்வு எனும் புதிய கருவியை இந்திய எழுத்தாளர்கள் ஊக்கத்துடன் அனைத்து தளங்களிலும் பயன்படுத்தி உலகையும் வாழ்க்கையும் புரிந்துகொள்ள முற்பட்டிருக்க வேண்டும். எம்விவி இந்திய மெய்யியலில் காலூன்றியபடி ஃபிராய்டை எதிர்கொள்கிறார். ஃபிராய்டை முழுமையாக ஏற்கும்போது அவர் நம்பிய, அனுபவப்பூர்வமாக உணர்ந்த இந்திய ஆன்மீகத்திற்கு அங்கு இடமில்லை. ஆகவே அவர் அதை அதற்குரிய மதிப்பை அளித்துவிட்டு மறுத்தும் கடந்தும் செல்கிறார். சவுந்தர்யத்தின் மறு எல்லை கோரம் என்பது போலவே காமத்தின் மறு எல்லை இறையனுபவம் என்பதை எம்விவி உணர்த்துகிறார். 'அம்மையே அப்பாவில்' 'ஆணுக்காயினும் பெண்ணுக்காயினும் இன்பம் வலிக்கத்தான் செய்கிறது. வலியில் பல சாயல்கள் இருக்கின்றன, இந்தச் சாயல்களில் தான் மனிதன் இன்பம் தேடிக்காண்கிறான் என்கிற உண்மை அவனுக்கு தெளிவாக புரிந்தது.ஆனால் இன்பம் தேடும் ஆர்வம் என்னவோ புரிந்து பின்னும் குன்றிவிடவில்லை.' என எழுதுகிறார். இன்பமும் வலியும் தவிர்க்க முடியாத இருமை எனும் தரிசனத்தை முன்வைக்கிறார்.  

 இறையனுபவத்திற்கும் காமத்திற்கும் இன்றியமையாத உறவிருப்பதை கண்டுகொள்கிறார். காமத்திலிருந்து கடவுளுக்கு என்பது இந்திய பண்பாட்டில் தொன்றுதொட்டு வழங்கப்படும் வழிமுறை. எம்.வி.வி முதன்மையாக ஒரு மறைஞான எழுத்தாளர் என குறிப்பிட்டிருந்தேன்.  காதுகளை அத்வைத வேதாந்த நாவலாக வாசிக்க இடமுண்டு. 'உயிரின் யாத்திரையையும்' அந்த வகையில்தான் வாசிக்க வேண்டும். அவருடைய அறிதல் புலத்திலிருந்து அரிய அனுபவங்கறளையும் கற்பனைகளையும் கதையாக்க அவர் தயங்குவதில்லை. பகுத்தறிவுக்கு அது உவப்பானதா பிழையாக புரிந்துகொள்ளப்படுமா, பிரச்சாரம் என கருதப்படுமா என்று தயங்குவதில்லை. உயிரின் யாத்திரை கதையில் வரும் சதாசிவம் இரண்டைக் கடந்தவன் என்கிறார். இரண்டை கடந்த தன்னை வெளிப்படுத்தாத முழு மனிதனை சித்தரிக்க முயல்கிறார். மோகமுள் நாவலில் பாபுவின் தந்தைக்கு குருவான ராஜூவின் சித்தரிப்பின் சாயலை காண முடியும். 'உயிரின் யாத்திரை' கதைசொல்லி ராஜாவால் தன்னிலையில் சொல்லப்படுகிறது. மணமாகி சில ஆண்டுகளே ஆன பிரியத்துற்குரிய மனைவியின் மரணப்படுக்கையை சித்தரிப்பதில் தொடங்குகிறது கதை. கிட்டத்தட்ட தெய்வத்தை பழித்து பிலாக்கணம் வைக்கிறான் ராஜா. 'மரணத்தை வரவேற்பதற்கு மனிதர் கூறும் முகமன் மௌனம் போலும்.' என படுக்கையில் படுத்துக்கிடக்கும் மனைவியை சுற்றி நிலவும் அமைதியைப்பற்றி எண்ணுகிறான். ஆடாது அசையாது எரியும் தழல் போலிருக்கும் சதாசிவம் அருமருந்தை அளிக்கிறார். ராணியின் மரணத்தை நெருங்கி அனுபவம் நவீனத் தமிழ் இலக்கியத்தில்  எனக்கு தெரிந்து முதன்முதலாக பதிவான மரணத்தை அணுகும் அனுபவம் (Near death experience) என்று ஊகிக்கிறேன். மரணத்தருவாயில் இருந்து பிழைத்து வந்தவள் வெள்ளமாய் ஓடும் ஆற்றுள் மூழ்குவது போலும் பிறகு எவரோ பிடித்து மேலே இழுத்து வருவதை போலவும் உணர்ந்ததாகச் சொல்கிறாள். ஆனால் அந்த சமயத்தில் அவள் துளி கூட அச்சத்தை உணரவில்லை. அவளால் எதிர்வினையாற்ற முடியவில்லை என்றாலும் தன்னைச் சுற்றி நிகழும் அனைத்தையும் முழு பிரக்ஞையுடன் காண்கிறாள். 

 சதாசிவத்துக்கும் ராஜாவுக்கும் இடையேயான முற்பிறவி உறவு ராஜாவுக்கு கனவெனும் ஊடகம் வழியாக துலங்குகிறது. 


'கனவுதானே, அர்த்தம் இருந்துதான் ஆக வேண்டுமா என்று லேசாக அதைத் தள்ளிவிட முடியவில்லை என்னால் வாழ்க்கை ஒரு கனவு என்கிறார்கள்; கனவுக்குள் இக்கனவு. வாழ்க்கை என்னும் கனவு காரணகாரியச் சுழலுக்குக் கட்டுப்பட்டது என்றால், கனவில் கண்ட கனவும் அதற்கு உள்பட்டதுதானே?' என கர்ம கோட்பாடையும் அத்வைத வேதாந்த விசாரனையும் மேற்கொள்கிறார்.‌ 

 மறைஞான அனுபவத்தை   சொல்லாக்கி கடத்துவது மிகச்சவாலான விஷயம். சற்று தப்பினாலும் கேலியாகிவிடும். இந்திரா சவுந்தரராஜன் இத்தகைய கருவில் பலகதைகளை எழுதியருக்கிறார்.  ஒன்பதாவது அத்தியாயமான 'உயிரின் விழிப்பில்' வரும் விவரனையின் வெம்மையே இக்கதையை பிற வெகுமக்கள் படைப்புகளில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. 'காதுகளில்' நாசகாளியின் பேருருவிற்கு இணையான பகுதி லீலாவின் மாயைத்தோற்றம். சதாசிவத்தை காண விடாமல் மரித்து நிற்கிறாள். முதலில் மயக்கவும் பின்னன் அச்சுறுத்தவும் செய்கிறாள். திண்ணமான ஒரு உட்குரல் அப்போது அவனை வழிநடத்துகிறது. 'காதுகள்' இத்தகைய வழிநடத்தும் குரல்களால் ஆனதே. 'குற்றமும் தண்டனையும்' கதையில்  மனோகர் நீலாவை கொல்லும்போதும் துல்லியமான குரல் அவனை வழிநடத்துகிறது. அதன் பின் அவனுக்கு வினோதமான அனுபவம் ஏற்படுகிது. 'என் தலையுச்சியில் யாரோ ஒரு சொடுக்கு சொடுக்கி விட்டாற் போல் டப் என்றோர் ஓசை உண்டாகிறது.' உடல் முழுவதும் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அவனே அவனுக்கு சாட்சியாகிறான்.

அச்சுறுத்தும் பேயுரு கொண்ட பயங்கரியிடம் 'அண்டங்களையும் அகிலாண்டங்களையும் ப்ரமாண்டங்களையும் உண்டாக்கி உண்டு உமிழும் சதாசிவம் நான். ஞானவாளுருவி எறிவேன்.' என திடமோடு அவன் பேசுவதை அவனே கேட்கிறான். போர்ஹேஸின் 'அலெஃப்' பற்றி நாம் பேசுகிறோம். அவ்வனுபவத்துடன் இணைத்து பார்க்க வேண்டிய கதை இது. 


கடந்த ஆண்டு முதன்முறையாக அவருடைய 'காதுகள்' நாவலை வாசித்தபோது, இப்படி ஒரு நாவலை எழுத அபார மன திண்மையும் தன்னுணர்வும் வேண்டும் எனத்தோன்றியது. எம்.வி.வியே குறிப்பிடுவது போல் இது ஒரு தன்வரலாற்று நாவல். மெல்லிய புகைச் சங்கிலிக்கு அப்பால் நின்று தனது பித்து நிலையை சாடசியாக  நோக்குவது, அதுவும் பல வருடங்கள் தொடர்ச்சியாக உள்ளுக்குள் பித்துநிலை நுரைத்து கொண்டிருந்தாலும், வெளியே இயல்பு வாழ்க்கை வாழ்ந்து புத்தகங்களும் கதைகளும் எழுதி பிள்ளைகளை வளர்த்தபடி இருப்பது என்பதை கற்பனை செய்வது கூட சாத்தியமில்லை. எம்.வி.வி பெரும் வீரர்தான். 


இந்திய மெய்யியல் மொழியில் சொல்வது என்றால் தனது கனவு நிலையை விழிப்பு நிலையை சாட்சியாக கொண்டு காண்பதும் அதை சொல்லாக வடிப்பதும் அரிய சாதனை. கவிதைகளின் இத்தெறிப்புகளை அவ்வப்போது காண முடியும். எல்லா பெருங்கவிகளும் ஓரிரு கவிதைகளிலாவது இப்படி வெளிப்படுவார்கள். பிரமிளின் கவிதைகள் நினைவுக்கு வருகின்றன. உரைநடை இலக்கியத்தில் இத்தகைய பித்து வெளிப்படுவது வெகு அரிது என்றே எண்ணுகிறேன். புயலிலே ஒரு தோனியில் வரும் மதுக்கூட உரையாடல், ஜெயமோகனின் பின் தொடரும் நிழலின் குரல் இறுதியில் வரும் அபத்த நாடகம்,   ஆகியவை இவ்வகையான எழுத்து தன்மையை கொண்டவை என சட்டென நினைவில் எழுகின்றன.  


நவீன உளவியல் கோணத்தில் நோக்கினால் உளச் சிதைவு எனும் ஸ்கீசோப்ரினியாவின் இலக்கியப் பதிவு என சொல்லலாம். தாந்த்ரீகத்தில் பரிச்சயம் உள்ளவர்கள் இது ஒரு குண்டலினி கோளாறின் முதன்மை பதிவு என சொல்லக்கூடும். இத்தகைய கணமான அனுபவத்தை எழுதும்போதும் அதை தலைகீழாக்கும், கேலி செய்யும் பகடியை அவர் கைவிடாதிருப்பது பெரும் வியப்புதான். இதே போன்று இறையருளைப் பேசு பொருளாக கொண்ட கதை 'அம்மையே! அப்பா!' பழனியாண்டவர் சட்டென ஓரிரவு வெங்கட்ராமனுக்கு முன் தோன்றி பெண்ணாக மாறும் வரத்தை அளிக்கிறார். பெண்ணாக மாறியதும் முருகனையே மணக்க விரும்புவதாக சொல்லும் இடமும் குறத்தி திட்டுவாள் என முருகன் மறுக்கும் இடமும் புன்னகைக்க வைப்பவை. கதையிறுதியில் பதினெட்டு மாத பெண் அனுபவம் போதவில்லை என்பதால் அடுத்து ஒரு பிறவி மட்டும் பெண்ணாக பிறந்து சுகம் அனுபவிக்க முருகனிடம் அருள் கோருகிறார்.  'காதுகள்' நாவலில் பல இடங்கள் தன்னிச்சையாக கூர்மையான பகடி வெளிப்படுகிறது. அதுவும் இருண்ட நகைச்சுவை பகுதிகள். உதாரணமாக மாலியின் மகள் இறந்துவிட்டதாக குழப்பும் பிரமை நிலையில் ஒப்பாரி பாடல்கள் ஒலிக்கின்றன. மாலி நடுங்கிக் கொண்டிருக்கிறான். அதன் முடிவில் ஒரு குரல் சொல்கிறது. 'பாட்டு அருமை எல்லாரும் கைத்தட்டுங்க'. என்று. கந்தர் அனுபூதியை சொல்லிக்கொண்டே பிரமையை கடக்க முற்படுகிறான். அப்போது ஒரு குரல் 'இலக்கண பிழைகள் மலிந்த நூல். என் சிற்றறிவுக்கு எட்டியவரை இருபத்தியாறு பிழைகள் புலப்பட்டுள்ளன. மேலும் ஆய்வு செய்து..' என சொல்கிறது. இத்தகைய இரண்ட நகைச்சுவைக்கு தமிழில் எம்.விவிக்கு ஒரு தொடர்ச்சி உண்டு என்றால் அது இரா. முருகனின் 'அரசூர் வம்ச' நாவல் வரிசையில் தான். இதேபோல் சட்டென புன்னகைக்க வைக்கும் சில தருணங்களையும் விவரணைகளையும் சுட்டிக்காட்ட முடியும். உதாரணமாக 'மாய்பாஃப்' கதையில் வரும் ஒரு பகுதி‌ 'என்ன அறியா வயசு? கலியாணம் பண்ணினா ரெண்டு பிள்ளை பெறுகிற வயசாச்சு…'

சத்தியமாய்ச் சொல்கிறேன், எனக்கு அப்போது அந்தப் பாவம் தெரியாது. கலியாணம் செய்திருந்தால் ஒரு குழந்தையை கூட எனக்கு பெறத் தெரியாது. ஆனால் அப்பாவே குற்றம் சாட்டும்போது நான் எப்படி மறுக்க முடியும்.' அதேகதையில் எலிவால் எனும் பாத்திரம் பற்றிய விவரனை இது 'சட்டைக்குள் கைவிட்டுத் தேடினால்தான் அவன் உடம்பு கையில் கிடைக்கும்.' அப்பாவும் பிள்ளையும் கதையில் வரும் வக்கீல் குமாஸ்தா  ஆராவமுதுவின் இயல்பை நிறுத்த இந்த ஒரு விவரனை போதும். 'எதுகை மோனை பிசகாமல் சம்பிரதாயப் பூர்வமாக சாப்பிட்டார்‌.'எம்.வி.வியின் கதைகளில் கவனித்த மற்றொன்று அவர் உருவாக்கும் தந்தை மகன் உறவு. 'தந்தையர்கள் எல்லோருமே சர்வாதிகாரிகள் கொடுங்கோலர்கள்.' என ஒரு கதையில் எழுதுகிறார். தாய் தந்தையரை குறைசொல்லக்கூடாதுதான் ஆனால் அவர்கள் ஒழுங்காக நடந்துகொள்ளவில்லை என்றால் என்ன செய்வது என அங்கலாய்க்கிறார். 'மாய்ஃபாப்' மற்றும் 'அப்பாவும் பிள்ளையும்' ஆகிய கதைகள் இரண்டுமே தந்தை மகன் உறவை பேசுபவை. 'குற்றமும் தண்டனை' ராமநாதன் இரும்பு மனிதராக வருகிறார். இழப்புகள் வழியாக வாழ்க்கை பாடத்தை கற்கிறார். உயிரின் யாத்திரை சதாசிவம் முற்பிறவியில் தந்தையாக இருந்தவர். அப்போது ஈட்டிய கர்மக் கடனை கழிக்க இவர்களுக்கு உதவுகிறார். 'அப்பாவும் பிள்ளையும்' ஒரு சீரழிந்த குடும்பத்தை காட்டுகிறது. தாயும் தந்தையும் பேசிக்கொள்ளாமலேயே பல ஆண்டுகள் கடந்தவர்கள். தந்தை சாமார்த்தியமின்மையால் பூர்வீக சொத்தை இழந்தவர். மகன் அந்த பொறுப்பின்மையின் சுமையை சுமக்க வேண்டியிருந்தது. மகன் தந்தையின் பாத்திரத்தை ஏற்கிறான். தந்தையிடம் தன்னை நிறுவும் உந்துதலும் அவரை மட்டம் தட்டும் விழைவும் அவனை இயக்குகிறது. அவருடைய கடனை ஏற்க மறுக்கிறான். ஜப்தி வரை வந்தபின்னரும் அதை தவிர்க்க முயல்கிறான். சிக்கலில் இருந்து தற்காலிகமாக மீண்ட பின்னர் தந்தையை கைவிடுகிறான். எழுத்தாளருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி என்பது அவரை வாசிப்பதுதான். வாசிக்கப்படும்வரை எழுத்தாளர் உயிர்த்திருக்கிறார். இந்த தருணத்தில் எம்.வி.வெங்கட்ராமின் முழுத்தொகுதி பெரும் உழைப்பில் நேர்த்தியுடன் வெளிவந்திருப்பது மிக முக்கியமான விஷயம். தொகுப்பாசிரியர்கள் ரவி சுப்பிரமணியம் மற்றும் கல்யாணராமனுக்கும் வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்திற்கும் நன்றி. எம்.விவி மீண்டும் வாசிக்க இது ஓரு முகாந்தரம். மறுவாசிப்பில் மேலும் முக்கியத்துவம் வாய்ந்தவராகவே எம்விவி எழுந்துவருகிறார். 


சுனில் கிருஷ்ணன் 
 


வீழ்ச்சியும் மீட்சியும் - வண்ணநிலவனின் சிறுகதைகளை முன்வைத்து

 
1

ஒரு பந்தென இருக்கிறோம்

கடவுளின் கைகளில்

அவரதைத் தவறவிடுகிறார்

தொப்பென வீழ்ந்து விடாதபடிக்குத்

தன் பாதத்தால் தடுத்து

முழங்காலால் எற்றி

புஜங்களில் உந்தி

உச்சந்தலை கொண்டு முட்டி

இரு கைகளுக்கு இடையே

மாறி மாறித் தட்டி விளையாடுகிறார்

மறுபடியும் பாதத்திற்கு விட்டு

கைகளுக்கு வரவழைக்கிறார்

‘' நான் உன்னை விட்டு

விலகுவதுமில்லை;உன்னைக் கைவிடுவதுமில்லை''

பிதாவே தயவு பண்ணி எம்மைக் கைவிடும்.

- பிதாவே, இசை 


வண்ணநிலவனின் சிறுகதைகள் வாசித்து முடித்தபோது இசையின் இக்கவிதை மனதை அறுவியபடி இருந்தது. இக்கவிதையில் தொனிப்பது ஆத்திரமா? ஆற்றாமையா? அல்லது மன்றாடலா? திண்ணமாக வரையறுத்துவிட இயலவில்லை. அதுவே அதன்மீதான வசீகரத்தை அதிகரித்தது. வண்ணநிலவனை வாசித்து முடித்த மனநிலையில் எனக்கது மறைமுக மன்றாடலாகவே தொனித்தது. வண்ணநிலவன் படைப்புகளின் ஊடே எழுப்ப விரும்பும் கேள்வியெது? படைப்புகளின் ஊடே  மீண்டும் மீண்டும் சென்று முட்டிமோதி திறக்க/ விடுவிக்க முயலும் புதிர் எது? இக் கேள்விகளை தொடர்வதே இக்கட்டுரையின் நோக்கம்     


நவீன இலக்கிய கதைகளுக்கும் மரபிலக்கிய கதைபாடல்களுக்கும் இடையேயான வேறுபாடுகள் என்னென்ன? பல சமயங்களில் மரபிலக்கியங்களில் பாடலுக்குரிய கதை நாயகர் நாம் தலைமுறைகளை கடந்து நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டிய ஏதோ ஒரு விழுமியத்தின் பிரதிநிதி. நாட்டார் தெய்வங்களின் கதை பாடல்கள் சாமானியர்களின் கதைகளை சொன்னாலும் அவர்களை தெய்வ நிலைக்கு உயர்த்தித்தான் சொல்கிறது. நேர்மாறாக நவீன இலக்கியம், சாமானியர்களின் கதைகளை சாமானிய தளத்திலேயே பேசுகிறது. காவிய, வரலாற்று நாயகர்களைப் பற்றி பேசும்போது கூட அவர்களை சாமானியனாக காட்டவே முற்படுகிறது. அவர்களது உன்னதங்களுக்கு மாறாக வீழ்ச்சிகளையும் பலவீனங்களையும் சித்தரிக்கிறது. 


உதாரணத்திற்கு வண்ணநிலவனின் 'வார்த்தை' எனும் சிறுகதையை எடுத்துக்கொள்ளலாம். பிலாத்துவின் மனைவியின் பார்வையிலிருந்து இயேசு கிறிஸ்து சித்தரிக்கப்படுகிறார். பிலாத்துவுக்குமே கூட அவரை தண்டிக்க பெரிய விருப்பமில்லை. ராணி தன் தோழியான எஸ்தர் வழி அவனை அறிந்தவள். விசாரணையை உப்பரிகையிலிருந்து காண்கிறாள். சுற்றி இருப்பவர்கள் கேலி செய்து வசைப்பாட, தலை குனிந்து அதை கேட்டுக்கொண்டிருக்கிறார்.  தனது அன்னை மேரியை தேடுகிறார். அவளை சந்திக்க முடியாததற்காக வருந்தி குற்ற உணர்வு கொள்கிறார். அனைவரும் வெறுத்து முகத்தில் எச்சில் உமிழும் போது உப்பரிகையில் காணும் பெண்னின் மெல்லிய தலையசைப்பு அவருக்கு பெரும் ஆறுதலை அளிக்கிறது.  'தீங்கு நேராமல் பார்த்துக்கொள்ளவும்' எனும் வார்த்தை வழியாக அளவற்ற பிரியத்தை தெரிவிப்பது போதுமானதாக உள்ளது. எனக்குத்தெரிய வண்ணநிலவன் எழுதிய ஒரே தொன்ம கதை இதுதான். அதிலும் இயேசு கையறு நிலையில் இருக்கும் சாமானியனாக வருகிறார். வண்ணநிலவனின் சிறுகதையுலகின் சில பொதுத்தன்மைகளை இக்கதையைக் கொண்டே புரிந்து கொள்ளலாம். 

1. வீழ்ச்சியின் சித்திரம் -  கையறு நிலையில் தவிப்பது- இயேசுவின் நிலை 

2. மீட்சி-  ஆறுதல் அளிக்கும் ஒரு மாயக்கரம்- பிலாத்துவின் மனைவியின் தலையசைப்பும், சொல்லும்  'வீழ்ச்சியின் பாணன்' என வண்ணநிலவனை சொல்லலாம். பல்வேறு வகைகளில், ஆழங்களில் விதவிதமான வீழ்ச்சிகளையும் சிதைவுகளையும் காட்டியபடி இருக்கிறார். வாழ்க்கையின் நிறங்கள் பலவகையானவை ஆனால் சிதைவின் நிறம் என்னவோ சாம்பல் மட்டும் தான். அவர் காட்டும் எல்லா வீழ்ச்சிகளுக்கும் மீட்சி இருப்பதில்லை. பல கதைகளில் சிதைவை மட்டுமே காண்பித்து நகர்கிறார். குறிப்பாக தொடக்கக்கால கதைகளில் இந்த போக்கை தீர்க்கமாக காண முடிகிறது. 


வண்ணநிலவனின் கதை மாந்தர்களின் வீழ்ச்சிக்கு பெரும்பாலும் வெளியிலிருந்து எவரும் காரணமில்லை‌. சமூகத்தை நோக்கி ஆவேசத்துடன் விரல் சுட்டுவதில்லை. 'அழைக்கிறவர்கள்' கதையில் வரும் சீக்காளி கணவன் போல அவர்கள் மவுனமாக தங்களைத்தாங்களே ஆடியில் நோக்கி நொந்துக்கொள்பவர்கள். இரண்டு விதமான வீழ்ச்சிகளை அவருடைய கதைகள் சித்தரிக்கின்றன. சில சமயங்களில் அவர்களின் வீழ்ச்சிக்கு அவர்களே பொறுப்பு வேறு பல சமயங்களில் மேலிருக்கும் ராட்டின இருக்கை கீழேயிறங்குவது எப்படி சக்கரச் சுழற்சியில் தவிர்க்கமுடியாத விதியோ அப்படித்தான் இந்த வீழ்ச்சியும் நிகழ்கிறது. 


2


'விமோசனம்' கதையில் மதிப்பாக இருந்த சமையல்காரர் முத்தையா பிள்ளை குடியில் வீழ்கிறார். 'தலையில் சுழிதான் சரியில்லை' என அவர் நிலை குறித்து குறிப்பிடப்படுகிறது. 'ராஜாவும் வாரிசுகளும்' கதையில் பொருளியல் நிலைக்காக குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு செல்லும் சிவனு செட்டியார். 'அன்று' கதையில் தேருக்கு சக்கை போடுவதில் நிபுனத்துவம் பெற்ற மாரியப்பன் குடியில் மூழ்குகிறான்.  'துன்பக் கேணி' கதையில் கணவன் சிறையிலிருக்க வயிற்றுப்பிள்ளையோடு வண்டி மலைச்சி சாராயம் கடத்த வந்த முதல் இரவிலேயே சிக்கிக்கொள்வதை காலத்தின் கோலம் என்பதைத் தவிர வேறெப்படி சொல்ல முடியும். சிதைவை முழு தீவிரத்தில் சித்தரித்து எழுதப்பட்ட மிக முக்கியமான கதைகளில் ஒன்று  'மிருகம்'. ஒரு வகையில் 'எஸ்தரின்' தொடர்ச்சியாக, அவர்கள் இடம்பெயர்ந்து சென்ற பின்பு எஞ்சும் சூனியத்தை துலக்கமுறச்செய்யும் கதையாக வாசிக்க இடமுண்டு. கவிதைக்கு நெருக்கமான மொழியமைப்பு கொண்டது. ஆழத்தின் வன்மம் வெளிப்பட ஏந்த காரண காரியமும் இல்லை. யார் மிருகம்? எது மிருகத்தின் இயல்பு? எனும் முக்கியமான கேள்வியை இக்கதை எழுப்பியது. 

 வண்ணநிலவனின் கதைகள் மனித அகத்தின் சாம்பல் நிற அடர்வுகளை காட்டும்போது மேலும் மேலுமென ஆழமும் நுட்பமும் பூணுகின்றன. 'பிழைப்பு' ரத்தினம் பிள்ளை எனும் முன்னாள் சண்டியரின் கதை. 'பாம்பும் பிடாரனும்' உருவகமாக நமக்களிக்கும் அதே தரிசனத்தை நிகழ்வுகள் வழியாக இக்கதையும் முன்வைக்கிறது. ரத்தினம் பிள்ளை அறிமுகமாகும்போதே வயதான, பழைய கீர்த்திகள் மட்டுமே எஞ்சும், மதிப்பற்ற முன்னாள் சண்டியராகத்தான் அறிமுகமாகிறார். வாடகையை நம்பி வாழும் பரிச்சயமான பெண் வாடகையளிக்காத குடித்தனக்காரர்களை காலி செய்வதற்கு ரத்தினம் பிள்ளையின் உதவியை நாடுகிறாள். அவருக்கு இந்த பாவம் இனியும் செய்ய வேண்டுமா எனும் எண்ணம் எழுகிறது. 'பல மாசமாக ஒருத்தன் வாடகை கொடுக்க முடியாமல் குடியிருக்கிறான் என்றால் அவன் எவ்வளவு கஷ்டப்பட்டவனாக இருக்க வேண்டும். ஆனாலும் அவர் அந்த குடும்பத்தை மிரட்டுகிறார். வக்கற்ற அந்த குடும்பத்தை பாடாகப்படுத்தி வளவுகாரர்கள் முன் தலைகுனியச்செய்ததற்காக வருந்துகிறார். அறமின்மை என்றறிந்தும் அவரால் அதை தவிர்க்க முடியவில்லை. எவர் பிழை? எது அறம்? எதையும் வரையறுக்க இயலாது. 


இலக்கியபிரதி எதையும் இரு துருவங்களாக அணுகாமல் அதை சிடுக்காகவும் சிக்கலாகவும் ஆக்கும்போது முழுமையை நோக்கி நகர்கிறது. வாழ்க்கையை எளிய சமன்பாடுகளுக்குள் வகுத்துவிடக்கூடாது என்பதே இலக்கியத்தின் நியதியாக இருக்க முடியும்.  'மீண்டும்' இத்தகைய சரி தவறுகளுக்கு இடையேயான வெளியில் ஊடாடும் கதை. ஜமக்காள விற்பனை பிரதிநிதியான தண்டபாணியிடம் ஜமுக்காளம் வாங்குவதற்காக முன்பணம் கொடுத்தவன் ஜெகன். ஜமக்காளம் ஜெகன் வீட்டுக்கு வந்த நாளில் அவன் வீட்டில் இல்லை. வந்த தபால் எங்கு சென்றது என தெரியவில்லை. ஜெகனைப் பொருத்தவரை இதற்கு தண்டபாணி பொறுப்பு, தண்டபாணியை பொருத்தவரை இது தன் பொறுப்பல்ல. குடித்துவிட்டு முன்பணமாக அளித்த காசை திரும்பி கேட்கிறான் ஜெகன். 'அன்று' கதையை அறச்சிக்கல் என சொல்லிவிட. முடியாது, எனினும் தேருக்கு சக்கை போடும் மாரியப்பனை அழைக்க சென்ற இடத்தில் அவனுடைய நிர்பந்தத்தின் பேரில் ஈஸ்வரனும் குடிக்கும் போது இனி தன்னை நம்பி தர்மகர்த்தா ஒரு காரியத்தையும் ஒப்படைக்க மாட்டார் என்று உணர்கிறான். நம்பிக்கை உடைவினால் ஏற்படும் தர்ம சங்கடம் அவனை பீடிக்கிறது. 


விளைவுகளை நன்கு உணர்ந்தும் உளத்திடமின்மையால் தீமையை தவிர்க்க முடியாதவர்களாகவும்  சூழல் கொண்டு வந்து சேர்த்த இக்கட்டை தங்களது உள சலனத்தையும்  மீறி  கடப்பவர்களாகவும் என இரண்டு விதமான பாத்திர வார்ப்புகளையும் வண்ணநிலவன் உருவாக்கி இருக்கிறார். வீழ்பவர்களாலும் மீள்பவர்களாலும் நிறைந்தது அவரது கதையுலகம்.  


'நட்சத்திரங்களுக்கு கீழே' கதையில் ஞானப்பிரகாசம் முதலாளியின் ஆணையின பேரில் பாலையாவை பராமரித்துக்கொண்டிருந்தான். பாலையாவின் நிலத்தை எழுதி வாங்குவதற்கான தந்திரம் என ஞானம் உணர்ந்துகொண்டதும் பழிபாவத்தின் மீதான அச்சத்திற்கும் நன்றியுணர்வுக்குமிடையே ஊசலாடுகிறான். நட்சத்திரங்கள் அவனுக்கே அவனுக்கென ஏதோ ஒரு செய்தியை அறிவிக்கிறது. பாவத்திற்கு உடன்படாமல் தப்புகிறான். 


3


வண்ணநிலவனின் சிறுகதையில் வரும் பெரும்பாலான கதை மாந்தர்கள் தனித்தவர்கள். மனைவியையோ கணவரையோ தந்தையையோ என எவரையோ இழந்தவர்கள் அல்லது பிரிந்தவர்கள். அல்லது முடங்கிப்போனவர்கள். அன்றாட வாழ்க்கையை நடத்துவதே அவர்களுக்கு பெரும்பாடு. எனும் அளவிற்கு வறுமையில் உழல்பவர்கள். மான அவமானங்களால் அலைக்கழிபவர்கள். ஆகவே சமயங்களில் சந்தர்ப்பவாதிகளும் கூட. மனித இயல்புகளின் நம்பகமற்றத்தன்மையை பிரதிபலிப்பவர்கள். 


உறவுகளுக்குள், வன்முறையும், மனிதர்களின் போலித்தனங்களின் மீதான அசூயையும் என நவீனத்துவ அழகியலின் பல்வேறு கூறுகள் மிகக் கூர்மையாக பல கதைகளில் வெளிப்படுகின்றன. மொத்தமாக இந்த சிறுகதைகளை வாசித்து முடித்த போது வண்ணநிலவனின் கதைமாந்தர்கள் எதிர்கொள்ளும் முதன்மை சிக்கல் என்பது உறுதுணையின்மை என தோன்றுகிறது. வீழ்ச்சி தவிர்க்க முடியாததாக இருக்கலாம் ஆனால் அதை எதிர்கொள்ளவும் கடந்து செல்லவும் உறுதுணையிருந்தால் கூட போதும். வீழ்ச்சியின் ஒரு பகுதியாக உறுதுணையை இழக்கிறார்கள் அல்லது உறுதுணையின்மையாலே கூட வீழ்ச்சியை எதிர்கொள்கிறார்கள்.


மனித உறவுகளுக்குள் உள்ளோடும் வன்மத்தையும், கணக்குகளையும், சுரண்டல்களையும் கதையாக்குகிறார். 'விடுதலை' கதையில் வயதில் மூத்த கோபால் பிள்ளை பெரிய முதலாளியிடம் அற்ப பொய் சொன்னதற்காக வசை வாங்குகிறார். அவமானத்தில் புழுங்கி தூக்கில் தொங்கி மரணிக்கிறார். பொதுவாக அவமானங்களை சகித்துக்கொண்டு வாழும் நடுத்தர வர்க்கத்தினரின் சித்தரிப்பிலிருந்து விலகிச் செல்லும் பாத்திர வார்ப்பு. தற்கொலையை பற்றிய கதைக்கு விடுதலைஎன தலைப்பு. 'இரண்டு பெண்கள்' 'மைத்துனி' போன்ற கதைகள் பெண்களுக்குள்ளேயே இருக்கும் உரசல்களை சித்தரிப்பவை. 'மனைவி' கதையில் குழந்தைக்கு காய்ச்சல். மருந்துவாங்கக்கூட காசில்லை. கணவன் நண்பனை வீட்டுக்கு அழைத்துவருகிறான். அந்த நண்பன் மனைவியையே நோக்குகிறான். முலையில் கைபட குழந்தையை வாங்குகிறான். இது எதுவுமே தனக்கு புதிதில்லை என மனைவி உணர்கிறாள். கணவருக்கு இதெல்லாம் புரியாது என எண்ணுகிறாள். அங்கிருந்து கிளம்பிச்செல்லும் போது நண்பனிடம்  தனது பிள்ளைக்காக இரண்டு ரூபாய் கடன் கேட்கிறான். ஒருவகையில் தன் மனைவியை காட்சிபொருளாக்கி சூதாடுவதுதான் இது. 'விமோசனம்' மீனா குடிகார தகப்பனால் தொந்திரவுக்கு உள்ளாகிறாள். 'மல்லிகா' வை அவனது சொந்த மாமனே சுரண்டுகிறான். அவளுக்கு ஒரு வாழ்க்கை அமையாமல் பார்த்துக்கொள்கிறான். 'துருவங்கள்' பிடிக்காத திருமண வாழ்வில் அகப்பட்டுக்கொண்டு மீள முடியாதவளின் அகக்குரலாக ஒலிக்கும் கதை. 'பேச்சி' சாமார்த்தியசாலியின் கதை. யார் யாரை ஏய்க்கிறார்கள் என்பதை கவனிப்பத ஒரு வேடிக்கை. 'துக்கம்' சிறுவயதிலேயே இறந்து போன மருமகன் பொருட்டு மகள் அழுது தீர்க்கவில்லை, அவனுக்காக அளிக்கப்படும் தொகையை இளைய மகளின் திருமணத்திற்கு பயன்படுத்தும் எண்ணத்தில் இருக்கிறாள் இறந்தவனின் மாமியார். குரூரம் என சொல்லலாம்தான் ஆனால் அது நடைமுறையும் கூட. பிறர் அவளிடம் அந்த யோசனையை கூறும்போது புதிதாக வியப்படைவதுபோல காட்டிக்கொள்கிறாள். 'குடும்ப சித்திரம்' குடும்பம் குறித்த எந்த கற்பிதமும் இல்லாமல் அதற்குள் இருக்கும் பிணக்கங்ளை காட்டிச்செல்கிறது.  


'ஒரே ஒரு நாள்' எனும் அவரது குறுநாவல் அவரது ஆகப்பெரிய கதை. இதையும் எஸ்தரையும் தவிர்த்து பார்த்தால் அனைத்து கதைகளுமே ஆறேழு பக்கங்கள் நீள்பவைதான். நகரத்து வேலையற்ற பட்டதாரி வாழ்க்கையின் சித்தரிப்பு. நவீனத்துவ அழகியலை முழுமையாக பறைசாற்றும் ஆக்கம் என சொல்லலாம். அக்காலகட்டத்தின் வெறுமையையும் விரக்தியையும் ஆழமாக விவரிக்கிறது. நன்மையின் மீது அவநம்பிக்கை வெளிப்படும், அனைத்தின் மீதும் எரிச்சலும் வெறுப்பும் படர்கிறது. தான் தனித்தவன் எனும் நம்பிக்கை, அனைத்தும் போலி எனும் உணர்வு என 70-80 களின் இருத்தலியல் கேள்விகளை சுமக்கும் கோபக்கார இளைஞனின் அத்தனை இயல்புகளும் கொண்டவன் கதை நாயகன் ராதா. ஒரு நாள் என்பது எத்தனை சுமை மிக்கது? அந்த நாளின் இறுக்கத்தையும் சுமையையும் வாசகருக்கு கடத்துகிறார்.  ஒளியின் மீதான எரிச்சலும் கோபமும் அபாரமாக வெளிப்பட்ட கதை என 'வெளிச்சம்' கதையை சொல்லலாம். இரவெல்லாம் தெருவில் எரியும் மெர்க்குரி வெளிச்சம் ஆபாசமாக வீட்டிற்குள் விழுகிறது. அந்த ஒளி வெள்ளத்தில் வாழ பழகிக்கொள்வதைத்தவிர வேறு வழியில்லை. ஆனால் அது அவனை தொந்திரவு செய்கிறது. தெருவில் எரிந்த மெர்க்குரி விளக்கை கல்லெறிந்து உடைக்கிறான். தெருவிளக்கைப் பற்றிய கதையாக மட்டும் இதை சுருக்கி புரிந்து கொள்ளாமல் அவரது அக்காலகட்டத்து பிற கதைகளுடன் மொத்தமாக காணும் போது இக்கதை குறியீட்டு ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. கு. அழகிரிசாமியின் 'இரவு' எனும் சிறுகதை நினைவுக்கு வந்தது. நவீன எழுத்தாளனுக்கு இருளின் மீது பெரும் ஈர்ப்பு எல்லா காலத்திலும் உண்டு. 


4


பிற இருத்தலியல் எழுத்துக்களிடமிருந்து வண்ணநிலவன் வேறுபடும் புள்ளி என ஒன்றைச் சுட்ட வேண்டும் எனில் உறுதுணையற்றதாக தோன்றும் சூழலில் எதிர்பாராத திசையிலிருந்து கரிசனத்துடன் நீண்டு இறுகப் பற்றிக்கொள்ளும் கரம் ஒன்றை பல கதைகளில் நாம் காண முடியும். தொடக்கக்கால கதைகளிலிருந்து அவரது பிற்கால கதைகளை நோக்கி நகரும் தோறும் இந்த மாற்றம் தெளிவாகவே புலப்படுகிறது. அவரது 'ஒரு நாள்' குறுநாவலுக்கு பின்னர் இருண்மையை மட்டும் அப்பட்டமாக சித்தரிக்கும் கதைகள் அருகி, அறச்சிக்கலை பேசு பொருளாக கொண்ட கதைகளை நோக்கி நகர்கிறது. 
உறவுக்குள் இழையோடும் வன்மத்தை சித்தரிப்பது துலாத்தட்டின் ஒரு பக்கம் என்றால் உறவுக்குள் தனது இணையின் தேவையை குறிப்புணர்ந்து கணக்கு வழக்குகளுக்கு அப்பால் பெருந்தன்மையுடன் நடந்துகொள்வது என்பது மற்றொரு எல்லை. வண்ணநிலவன் கதைகளில் உடைமை உணர்வு நீத்த பெண்/ஆண் பாத்திரங்கள் மீண்டும் மீண்டும் ஆராதிக்கப்படுவதை நம்மால் காண முடியும். உறவின் ஆதாரமே உடைமையுணர்வுதான் எனும் நம்பிக்கை இங்கு உண்டு. உடைமையுணர்வு நீங்கும்போது உறவுக்குள் முகிழும் மெல்லிய மலர்ச்சியை வண்ணநிலவன் வனைகிறார். 


'அயோத்தி' 'மனைவியின் நண்பர்' 'வார்த்தை தவறிவிட்டாய்' போன்ற கதைகளை குறிப்பிட்டுச் சொல்லலாம். பெண்களின் உளவியலை எழுதிய அளவிற்கே ஆண்களின் அக விஸ்தீரனத்தை பேசியவை வண்ணநிலவனின் கதைகள். 'அயோத்தியில்' சந்திரா திருமணத்தை சிறையாக உணர்கிறாள். கணவன் புத்தகம் படிக்கும், பிள்ளைக்கு பால் டின் வாங்கிவரக்கூட வக்கற்ற உலகியல் சாமார்த்தியமற்றவன். தன்னை புரிந்துகொள்ளவில்லை எனும்  வருத்தம் எப்போதும் அவளுக்கு உண்டு. 

திருமணம் செய்துகொள்ள விரும்பிய முறைமாமனை எண்ணி ஏங்குகிறாள். 

பெரும்பாலான மனைவிகளைப் போலவே கணவனோடு எப்படியாவது தன்னைப் பின்னிக்கொள்ள வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டாள். அவளுடைய அத்தானை மறக்க எவ்வளவோ பிரயாசைப்பட்டும் ஒன்றும் முடியவில்லை. உணர்வுகளை புரிந்து கொள்ளாத புத்தகப்புழு கணவன் அவளுடைய தவிப்பை எப்படியோ உணர்ந்து கொண்டு அத்தானை காண அழைத்துச்செல்லும் புள்ளியில் கதை நிறைவுறுகிறது. கதையின் தலைப்பு 'அயோத்தி'. ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி எனும் வழக்கிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. 


'வார்த்தை தவறிவிட்டாய்' காதலித்து கைவிட்ட பெண்னை திருமணத்திற்கு பின் சந்திக்கும்போது அவள் தனது மனைவியுடன் நெருங்கி நட்பாக பழகுவதை கண்டு பதறுகிறான். கடந்தகாலத்தைப் பற்றி ஏதேனும் சொல்லிவிடுவாளோ எனும் அச்சம் அவனுக்கு. ஆனால் அவள் அப்படி எதையும் சொல்லிவிடவில்லை. அவள் சொல்லிவிடக்கூடும் என அவன் எண்ணியதே கூட அவளை சீற்றமடையச்செய்கிறது. 'ராதா அக்கா' இந்த வரிசையில் வரவேண்டிய மற்றொரு கதை. வீட்டைவிட்டு வெளியேறி ஏற்கனவே திருமணமான கோபால் வீட்டிற்கு அவனுடனேயே வாழும் நோக்கில் செல்கிறாள் ராதா. ராதாவை அவர்களுடைய வீட்டார் தேடிவரும்போதுதான் கோபாலின் முதல் மனைவி லீலாமதினி சிக்கலை உணர்ந்துகொள்கிறாள். 'தஞ்சம்ன்னு வந்துட்டா .. இன்னமே அவ என் தங்கச்சிதான், ஏங்கூடத்தான் இருப்பா' என அவளை முழுமையாக ஏற்றுக்கொள்கிறாள். 'அவன் அவள் அவன்' பரிமளா குடியில் சீரழியும் தனது கணவரின் மூத்த சகோதனை கவனித்துக்கொள்கிறாள். 'அனுசரனை' அல்லது 'கரிசனம்' எனும் சொல் நினைவுக்கு வந்தபடியுள்ளது. 

'மெஹ்ருன்னிசா' ஒரு நல்ல ஆளுமை சித்திரம். வீழ்ச்சியின் கதைதான் சொல்லப்படுகிறது. வீட்டைச் சித்தரிக்கும் போது முன்பக்கம் வளமாகவும் பின்பக்கம் சிதைந்தும் காணப்படுகிறது என்பதே சிதைவை நமக்கு அறிவிக்கிறது. மச்சில் அமர்ந்து தனியாக ஃபிடில் வாசிக்கக்கூடியவள். தன் வழி கணவருக்கு பிள்ளை வாய்க்காது என்றுணர்ந்தவள் அவளே முன்நின்று கணவருக்கு சுலைகாவுடன் திருமணம் நடத்தி தனியே குடித்தனம் அமைத்துக்கொடுக்கிறாள். அவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைக்கு மெஹ்ருன்னிசா என்றே சுலைகா பெயரிடுகிறாள். 


5


வண்ணநிலவன் கதைகளை எளிய இருமைகளுக்கு அப்பாலான வெளியில் நகர்த்துமாபோது கதைகளின் கணம் கூடுவதை உணர்கிறோம். 'அந்திக் கருக்கல்' கதையில் மருமகள் ரெஜினாளின் துயரத்தை கண்டு மகன் சேர்த்துக்கொண்டு வாழும் பரிமளாவின் வீட்டிற்கு நியாயம் கேட்கச் செல்கிறார். அங்கே அவள் மிக பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறாள். சரி தவறுகளுக்கு அப்பால் அவரவர் நியாயங்களை பேசுகிறது. காலில் விழும் பரிமளாவிற்கு ஆசியளித்துவிட்டு நகர்கிறார் பெரியவர். 'மனைவியின் நண்பர்' கத்தி மீது நடப்பதான கவனத்துடன் எழுதப்பட்ட கதை. ஈர்ப்பு, நட்பு, காதல் என எதுவாகவும் வரையறுக்கப்படாத எல்லையில் நிகழ்கிறது. கணவனின் மனநிலை மிக லேசாக தொட்டுக்காட்டப்படுகிறது. பரந்த மனமா அல்லது வேறு வழியில்லாமல் அனுமதிக்கிறானா? ஐயம் கொள்கிறானா?  'அவன் அவள் அவன்' கதையில் கணவன் பொறாமை கொள்வது வெளிப்படையாகவே பதிவாகியிருக்கும். 'மனைவி' மற்றும் 'மனைவியின் நண்பர்' கதைகளில் கணவன் பலவீனத்தை பயன்படுத்திககொள்ளும் சந்தர்ப்பவாதியாகவே தோன்றுகிறான். 'அழைக்கிறவர்கள்' சற்றே சிக்கலான, அமைதியிழக்கச்செய்யும் கதை. சீக்காளியாகிவிட்ட கணவரைக் கொண்டு குடும்பமே பிச்சை எடுக்க வைத்து வாழ்கிறது. மனைவி, குழந்தைகள் என அனைவரும் நாடக பாணியில் தயாராகிறார்கள். கணவனை தயார்படுத்துகிறார்கள். குடும்ப அமைப்பின் உறவின் சுரண்டலைச் சித்தரிக்கிறது என வாசிக்க முடியும். இன்னோரு பக்கம் மனைவியை விட்டு வெளியே கஸ்தூரி எனம் பெண்னுடன் கொண்ட உறவின் வழி மொத்தத்தையும் இழந்த கணவன் குற்ற உணர்வில் பிழைநிகர் செய்ய முழு கரிசனத்தோடு ஒத்துழைக்கிறான் என்றும் வாசிக்க முடியும். இதே வரிசையில் வைக்கத்தக்க மற்றொரு கதை 'அரெஸ்ட்' அலுவலக பணத்தை எடுத்துவிட்டு வீட்டுக்குள் ஒளிந்திருப்பதால் குடும்பத்தினருக்கு ஏற்படும் இக்கட்டுகளை பேசுகிறதே. ஒரு கட்டத்தில் தன் தவறுக்கு தான் பொறுப்பேற்று குடும்பத்தை விடுவிக்க முயல்கிறான். 'அழைக்கிறவர்கள்' கதையைப்போலவே சுரண்டல் என்றும் கரிசனம் என்றும் இரண்டு கோணங்களில் இருந்தும் காண இயலும். 'கடன்' குற்ற உணர்வை பேசும் கதை தான். 'பிழைப்பு' கதையை போலவே இங்கேயும் தன் செயலின் இழிவு குறித்து முழு ஓர்மை உள்ளது. யாருக்கும் தெரியாமல் கடன் கொடுத்த அத்தை இறந்து போகிறாள். அதை திரும்ப செலுத்துவதா வேண்டாமா எனும் ஊசலாட்டத்தில் உள்ளான் பாலையா. மனைவி லீலா அவர்களாக கேட்டால் பார்க்கலாம், பேசாமல் இருங்கள் என சொல்லிவிடுகிறாள். லீலா அறிவுறுத்தியது அவனுக்கு ஏற்புடையதாக இருந்ததாலேயே அதை மவுனமாக பின்பற்றினான். லீலாவுக்கு எந்த குழப்பமும் இல்லை. இவன்தான் உறக்கம் வராமல் தவிக்கிறான். 


வீழ்ச்சியும், அற ஊசலாட்டமும், அரவணைக்கும் பெண்னின் பெருந்தன்மையும், அகத்திற்கும் புறத்திற்குமான முரண்பாடும் என வண்ணநிலவனின் முக்கிய புனைவியல்புகளின் அற்புதமான கலவையில் உருவாகி வந்துள்ள கதைதான் 'எஸ்தர்'. தமிழில் அதிகம் கொண்டாடப்பட்ட, பரவலாக பேசப்பட்ட கதைகளில் ஒன்று. அரிசி சோறிலிருந்து கம்புஞ்சோறுக்கு சென்றுவிட்டதை சொல்லும்போதே வீழ்ச்சியின் சித்திரமும் இடப்பெயர்வக்கான காரணமும் துலங்கி வருகிறது. நெருப்புக்குச்சி கூட இல்லாத அளவு வறுமை. ஊரே காலியாகிக்கிடக்கிறது. தந்தையின் ஒன்றுவிட்ட சகோதரியான எஸ்தர் சித்தி மகன் முறையிலான சகோதரர்களால் தத்தமது மனைவிகளைக் காட்டிலும் அதிகமாக நேசிக்கப்பட்டவள். எல்லாவற்றையும் நிர்வகிக்கிறாள். இரண்டு மருமகள்களின் எதிரெதிர் இயல்புகள் கோடிட்டுக்காட்டப்படுகின்றன. பெரிய அமலத்திற்கு மனதை துக்கத்தில் ஆழ்த்திக்கொள்வதே மகிழ்வளிப்பதாக உள்ளது. இருட்டை அழிப்பது வீடுகளிலிருந்து கேட்ட பேச்சு குரல்களும் நடமாட்டமுமே. இருட்டின் முனுமுனுப்பை எஸ்தர் கேட்கிறாள். பாட்டிக்காக நல்ல வேலைக்காரனான ஈசாக்கை விட்டுச்செல்ல முடியாது என முடிவெடுக்கிறாள் எஸ்தர். ஈரமற்ற வறண்ட காற்று வீசுகிறது எஸ்தரின் உள்ளத்தைபோலவே. பாட்டியின் மரணத்தை பெருங்கருணையின் பாற்பட்டு எடுத்த முடிவா அல்லது சுயநலமா? முடிவற்ற நியாயங்களை உற்பத்தி செய்யும் கதை. மொழியும் கூறுமுறையும் பேசு பொருளும் என அனைத்தும் இயைந்து வந்ததே இக்கதையின் வீச்சுக்கு முக்கிய காரணம்.


6


படைப்பு என்பதே காலத்துக்கு எதிராக தனி மனிதன் தனது நினைவுகளை தக்கவைக்கப் பிடிக்கும் முரண்டு என எனக்கு தோன்றுவதுண்டு. 'மனச்சிற்பங்கள்' ஒரு அக உரையாடல் தன்மை கொண்டது. 'கடந்த காலத்துடன் வாழ்வது பிணத்துடன் வாழ்வது போல' எனும் சுற்றத்தாரின் கூற்றை மறுத்து உரையாடல் நகர்கிறது. 'பச்சோந்தி போல காலத்துக்கு காலம் அவ்வக்காலத்து நடையுடை பாவனைகளில் தங்களைப் பறிகொடுத்துத் திரிந்தது அவனுக்கு கஷ்டமாக இருந்தது.' புதுமையின் மீதும் மாற்றத்தின் மீதும் சலிப்பு கொள்கிறான். 'சலனமே இல்லாமல் காலமும் சம்பவங்களும் உறைந்து போகக்கூடாதா?' என ஏங்குகிறான். வண்ணநிலவனின் படைப்புலகை புரிந்துகொள்ள இவையாவும் உதவும். 'ஒரு வேனில் காலத்திலே' ஏறத்தாழ ஒரு நினைவுக்குறிப்பின் தன்மையை கொண்டது. நிர்மலா எனும் பெயருக்கே ஈர்ப்பு இருப்பதாக வண்ணநிலவன் தோன்றச்செய்கிறார். 'விதி' எனும் கதையில் நண்பரின் காதலியை (என்றுதான் எண்ணுகிறேன்) சந்திக்கிறான். அவள் திருமணத்திற்கு பின்பான தனது வாழ்க்கை கதையை சகஜமாக பேசுவாள். நண்பன் மரணமடைந்துவிட்ட செய்தியை அவளுக்கு சொல்ல வேண்டும் என துடிப்பான். ஆனால் அவனைப்பற்றி எதுவுமே கேட்காமல் உரையாடுவாள். பேசிக்கொண்டே அவள் சாலையை கடந்து செல்வாள். அவனோ கடக்க முடியாமல் சாலையின் குறுக்கே நெடுக்கே போகும் வண்டிகளை பார்த்தபடி நிற்பான். அவன் கடந்த காலத்தில் உறைந்தவன். அவளோ போய் கொண்டே இருப்பவள். 'மழை' கதையில் தீபாவளியையொட்டி தனக்கு பிடித்த நண்பனை காணச்செல்கிறான். அவனை தேடியலைந்த பின் அவன் மரணமடைந்துவிட்ட செய்தியை அறிகிறான். நண்பன் மரணமடைந்து கொஞ்ச காலமாகியிருந்தாலும் கூட அந்த செய்தியை கேட்கும் வரை அவனளவில் அவர் வாழ்ந்துகொண்டுதான் இருந்தார். மரணமடைந்துவிட்ட நண்பனின் ஃபேஸ்புக் பக்கம் மரணத்திற்கு பின் அப்படியே இருக்கிறது எனும்போது அண்மையில் இருப்பவர்களைத் தவிர பிறருக்கு இன்மை பொருள்படுவதில்லை.‌ 


அகம் புறம் என காலமாற்றம் இரண்டு தளங்களை கொண்டது. 'யுக தர்மம்' போன்ற கதை புற காலமாற்றத்தை வரவேற்கிறது. வேறு சில இடங்களில் பெண்களின் உடைமாற்றம் குறித்து கதையில் கவவை வெளிப்படுகிறது (நல்ல வேளையாக இன்னும் பெண்கள் சல்வார் கமீஸ் அணிய ஆரம்பிக்கவில்லை- இரண்டு பெண்கள்). மேம்பட்ட சமூகம் எனும் கனவை நல்ல இலக்கியம் ஒருபோதும் மறுதலிக்காது. பெண்னுக்கு திருமணம் முடித்து வைக்க வழியில்லாத குமாஸ்தா பிள்ளை மூத்த மகள் எப்படியாவது தனது வழியைத்தேடிக்கொண்டால் சரி என எண்ணுகிறார். அவளும் வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறாள். பேருந்திற்காக நிற்கும் பெண்னிற்கு வாங்கி வந்த ரிப்பனை இளைய மகள் வழி கொடுத்தனுப்பும் தருணம் அபாரமான இடம். அவரது ஏற்பு, ஆசுவாசம், ஆசிர்வாதம், கையறுநிலை என எல்லாவற்றையும் அந்த ஒற்றை சமிக்ஞை நமக்கு கடத்திவிடுகிறது. எனக்கு கதை அந்த புள்ளியில் நிறைவடைந்துவிட்டதாக தோன்றியது. ஏறத்தாழ இதேகதையின் வேறொரு சாத்தியத்தை அல்லது தொடர்ச்சியை 'தாசன்கடை வழியாக அவர் செல்வதில்லை' காட்டுவதாக எனக்கு தோன்றியது. மரணத்திற்கு முன் எல்லாம் அற்ப சச்சரவுகளாகிவிடுவதை சொல்லும் கதை. 


'எதனாலோ ஒரு விஷயம் மனசுக்கு பிடித்துவிட்டால் அதை லேசில் விட்டுவிட முடிவதில்லை. ஆனால் அதுவே மற்றவர்களுக்கு ரொம்ப அற்பமாகப் படலாம். இதையா இவ்வளவு பிரமாதப்படுத்தினான் என்று தோன்றும்.' (ராதா அக்கா) தனிமனிதனாக தனது நினைவை காலத்தை கடந்து நிறுத்தும் முயற்சி கலைக்கான ஆதார விசைகளில் ஒன்று. 'எஸ். ஆர். கே' கதையில் வரும் அவர் காலமாற்றத்திற்கு எதிராக மார்க்கண்டேயன் காலனுக்கு எதிராக லிங்கத்தை இறுக தழுவிக்கொள்வதுபோல தனது கடந்த காலத்தை இறுக தழுவிக்கொள்கிறார். 'ஆடிய கால்கள்' சினிமா புகழ் சிதம்பரம் பிடிவாதமாக தனது பழைய காலத்தில் உறைபவன். 'பயில்வான்' குத்துச்சண்டை வீரரையும் 'ஒர்க்ஷாப்' அருணாசலத்தையும் இந்த வரிசையில் வைக்கலாம். 'குணச்சித்திர நடிகர்' கதையில் காலஞ்சென்ற கே.எஸ் ராஜகோபால் எனும் நடிகனை நினைவில் நிறுத்த ஏன் கே.எஸ் ராமன் இத்தனை போராடுகிறான். நன்றியா? அன்பா? கடமையுணர்வா? அல்லது அதன் வழி அவனுக்கு கிடைக்கும் அடையாளமா? திண்ணமாக தெரியவில்லை. காலத்துடன் பொருத்திக்கொள்ள இயலாதவர்கள். மனநிலை பிறழ்ந்தவர்களாக, சாமார்த்தியமற்றவர்களாக, கேலிக்குரியவர்களாகவே சமூகம் அவர்களை நோக்குகிறது. சமூகத்தால் நகையாடப்படுபவர்களின் மீது இயல்பாகவே கலைஞனுக்கு ஒரு கரிசனம் உண்டு. அவர்களை தம்மவர்களாகவே நோக்குகிறான். காலம் குறித்து தனக்கிருக்கும் பதட்டமே அவர்களிடமும் உள்ளது என்பதை உணர்கிறான். 'தோல்வியுற்ற கலைஞன்' என்பது ஒரு ஆழ்படிமம். அத்தனை எழுத்தாளர்களும் ஒரு கதையாவது இதை தொட்டு எழுதியிருப்பார்கள். 'சிற்பியின் நரகம்' தொடங்கி 'புலி கலைஞன்' 'முருகேசனும் முழுக்கை சட்டை போட்டவரும்' 'அம்மையப்பம்' 'கானல் நதி' என பல கதைகளும் நினைவில் எழும்பி அமைகின்றன. தன் காலத்திற்கு பின் தான் யார்? உடல் நீத்த பின் தன் ஆயுள் என்ன? கலைஞனை அலைக்கழிக்கும் கேள்வி. 'தேடித்தேடி' இலக்கிய ஆர்வத்தில் வீட்டை விட்டு அடிக்கடி வெளியேறிச்செல்பவனைப் பற்றி குடும்பத்திற்கு இருக்கும் பதட்டத்தை பற்றிய கதை.‌ 'அயோத்தி' 'உள்ளும் புறமும்' கதைகளின் நாயகனின் அதே வார்ப்புடையவன்.


7


'பலாப்பழம்' இவரது கதை மாந்தர்கள் பலருக்கு பொருந்தும் உருவகம் என தோன்றியது. புறத்தில் முள்ளும் உள்ளே கனிவும் கொண்டவர்கள். 'உள்ளும் புறமும்' நீலாவையம் சங்கரனையும் கவனித்தால் நீலாவிற்கு புறத்தில் சலிப்பும் உள்ளே அன்பும் உள்ளது, சங்கரனுக்கு உள்ளே அன்பும் புறத்தில் அக்கரையின்மையும் உள்ளது. இதற்கு நேர் எதிரான சித்தரிப்புகளும் கூட உண்டு.‌ வண்ணநிலவன் தொடர்ந்து மனிதனின் கபடங்களையும் போலித்தனங்களையும் சித்தரித்தபடி உள்ளார். உன்னதங்களுக்கு அடியில் ஒளிந்திருக்கும் வன்மத்தை தொட்டுகாட்ட முயல்கிறார். மனித இயல்புகளின் இந்த அக புற இசைவின்மையில் எழும் முரண்கள் மீது அவருடைய கதைகள் உருக்கொள்கின்றன. 'சமத்துவம் சகோதரத்துவம்' இஸ்லாமிய சமூகத்திற்குள் அதன் லட்சியத்திற்கும் நடைமுறைக்கும் இடையே உள்ள முரண்பாடை சுட்டிக்காட்டுகிறது. மார்க்கத்திற்குள் இருக்கும் ஏழை இஸ்லாமியருக்கு ஜமாஅத் உதவுவதைவிட புதிதாக மாறி வருபவர்களுக்கு கூடுதல் மதிப்பும் மரியாதையும் அளிக்கப்படும் முரண்பாடை பேசகிறது. 


வண்ணநிலவனை கோபுரங்களின் சுதை சிற்பி அல்லது கோட்டோவியக்காரர் என சொல்லலாம். நுண்மையே அவரது பலம். குறைவான சித்தரிப்பின் வழியே ஆழத்தின் அலுங்கல்களை சித்தரிக்க முயல்கிறார். 'பலாப்பழம்' போன்ற கதை எனக்கு முழுதாக பிடிகிட்டியதா என சொல்வதற்கில்லை. அந்த பூடகத்தன்மையே மீண்டும் மீண்டும் அக்கதையை நாட வைக்கிறது. 'பெண்ணின் தலையும் பாம்பின் உடலும்' எனும் தலைப்பில் உள்ள பூடகமும் வசீகரமும் அந்த கதையை மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டுகிறது. புழக்கத்தில் உள்ள நாகக்கன்னி எனும் சொல்லை தவிர்த்து இத்தகைய தலைப்பை தேரும்போது அதன் அர்த்த சாத்தியங்கள் பெருகுவதை கண்கூடாக காண முடிகிறது. சில உவமைகள் நினைவைவிட்டு அகலவில்லை. 'வண்டி மை மாதிரி இருட்டு அப்பிக்கிடந்தது- (அந்த இரவில்).' பல இடங்களில் நுண்ணிய புலன் அனுபவங்களை அளிக்கிறார். உதாரணமாக 'ஏக்கம்' கதையில் உள்ள ஒரு பத்தியை இங்கு அளிக்கிறேன். 'குத்து விளக்கு மாடத்துக்கு முன்னால் வாழைப் பழத்தில் குத்தி வைத்திருந்த ஊதுபத்தி எரிந்து முடிந்திருந்தது. சிவப்புச் சாயம் தோய்த்த அந்த வெறும் குச்சி மட்டும் பழத்துக்கு மேலே கொஞ்சம் நீட்டிக்கொண்டிருந்தது. அந்தக் குச்சியை உருவினால், பழத்துவாரத்தின் வட்ட விளிம்பில் குச்சியின் சிவப்புச் சாயம் ஏறியிருக்கும். சில சமயம் பழத்தினுள்கூட அந்தச் சாயம் இறங்கியிருக்கும். சாயம் இறங்கிய பழப் பகுதியைச் சாப்பிடும்போது, அதன் சுவையும் மணமும் வித்தியாசமாக இருக்கும்.'


நுண்மையாக்கத்தின் உச்சம் என 'பாம்பும் பிடாரனும்' கதையை கூறலாம். தமிழ் சிறுகதை வரலாறில் இக்கதைக்கென ஒரு இடம் நிச்சயம் உண்டு. இது ஒரு முழு உருவக கதை. சிறந்த உருவக கதை காலந்தோறும் தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கும். புதிய புதிய பொருள் அடுக்குகளை அளிக்கும். வண்ணநிலவனின் படைப்புலகுடன் பொருத்திப் பார்க்கும்போது குடும்ப அமைப்புக்கும் பெண்னுக்கும் இடையிலான உறவைப் பற்றிய கதை என முதல் வாசிப்பில் தோன்றியது. 'யுக தர்மம்' போன்ற கதையில் மாறிவரும் காலகட்டத்தைப் பற்றிய பிரக்ஞை வெளிப்படுகிறது. காலனி ஆட்சிக்கு, ஒடுக்கப்பட்டவர்களுக்கு என பல்வேறு அரசியல் தளங்களுக்கு இக்கதையை பொருத்திப்பார்க்க இயலும். எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் தனக்கு மிகப்பிடித்த, தான் மீது தாக்கம் செலுத்திய கதைகளில் ஒன்றாக பாம்பும் பிடாரனைக் குறிப்பிடுகிறார். 


வண்ணநிலவனின் அதிகம் கவனிக்கப்படாத வேறு இரண்டு தனித்தன்மைகளையும் கவனப்படுத்த வேண்டும். கதைகளில் அவர் சித்தரிக்கும் விதவிதமான வாழ்க்கைப் பிண்ணனி அவரெழுதிய காலத்தில் அரிது. 'எஸ்தர்' போன்ற கிறித்தவ பிண்ணனி கதைகள் புகழ்பெற்றவை. பிராமண பின்புலத்தில் எழுதப்பட்ட 'சாரதா' ஒரு எல்லை என்றால் வெட்டியானின் வாழ்வை விவரிக்கும் 'மயான காண்டம்' மற்றொரு எல்லை. பிணம் விழாத காலத்தில் குலதெய்வமான சுடலைமாடனின் சந்நிதியில் நின்று சங்கூதி மாடனின் உண்டியல் காசை எடுத்துச்செல்கிறான். 'பிணத்துக்காரர்கள்' பிணத்தைக் காட்டி பிச்சை எடுக்கும் சகோதரர்களின் கதை. பெண் பிணத்துக்காக அலைகிறார்கள். காடு இக்கதையில் உருவகத்தன்மையை அடைந்திருந்தாலும் ''காட்டில் ஒருவன்' கதையை ஒரு எம்.எல் காரனின் கதை என வாசிக்க இயலும். 'குழந்தைகள் ஆண்டில்' 'நரகமும் சொர்ககமும்' 'அவனுடைய நாட்கள்' போன்றவை குழந்தை தொழிலாளர்கள் வாழ்வை பேசுபவை. 'பயில்வான்' 'சமத்துவம் சகோதரத்துவம்' 'மெஹ்ருன்னிசா' போன்ற கதைகள் இஸ்லாமிய வாழ்க்கைப்புலத்தை பேசுபவை.'குணச்சித்திர நடிகர்' மரணமடைந்த நடிகரின் மேலாளரின் கதை. 'பெண்ணின் தலையும் பாம்பின் உடலும்' ஊர்ஊராக பொருட்காட்சி போடும் குழுவினரின் வாழ்க்கையை பின்புலமாக கொண்டது. 'இரண்டு உலகங்கள்' திருவிழாவில் ராட்டினம் போடுபவர்களைப் பற்றிய கதை. 'தர்மம்' கூலிப்படையினர் பற்றிய கதை. ரிக்கார்டு டான்ஸர்களான சினிமா புகழ் சிதம்பரம் மற்றும் ரஞ்சிதத்தின் வீழ்ச்சியின் கதையை சொல்லும் கதை 'ஆடிய கால்கள்'. 'ஹரியின் புத்திரி' சாதி கலவரத்தினூடே பாதிக்கப்படும் பெண்களின் கதையை சொல்வது. 8


வண்ணநிலவனின் கதைகளில் அவ்வளவாக கவனிக்கப்படாத இரண்டாவது பகுதி என்பது அவரது பகடிக்கதைகள்தான். இலக்கிய உலகம் சார்ந்த கதைகளில் அபாரமான பகடி கைக்கூடி வருகிறது. 'இதோ இன்னோரு விடியல்' என்பது சிற்றிதழ் சூழலின் மீதான பகடி. பாலச்சந்திரன் சுள்ளிக்காடு முகச்சாயல் உள்ளதாக கற்பனை செய்துகொண்ட பஞ்சுமிட்டாய் விற்கும் ராஜூ தனது பேருக்குமுன் முள்ளுக்காடு எனும் பெயரை சேர்ந்துககொண்டான். 'தென்பொருநைத் தென்றல்' இதழின் ஆசிரியர் முகிலுக்கு 'ஜன்னல் இல்லாமல் கவிதை எழுத வராது.' 'கதாப்பாத்திரங்களின் பெயர் வராதவாறு, 'அவன் இவன்' என்று எழுதினால் போதும் அந்தக் கதை இலக்கியத்தரம் ஆகிவிடும் என்பது முகிலின் திடமான இலக்கியக்கொள்கை.' 'தீவிரவாதிகள் செய்த திருக்கூத்து' பரபரப்புகளை நுகரும் மக்களின் மனப்போக்கு எள்ளுகிறது. 'பேச்சுத்துணை' பேச ஆள்பிடிக்க காத்திருக்கும் வயோதிகரைப் பற்றி மென்மையான பகடி. 'ஞாயிற்றுக்கிழமை' நல்ல நுட்பமான பகடி கதை. தங்கக்கனி மிஸ்ரா, அம்ருதவர்ஷனும் அவனது மனைவியும், ஜோன்பூர் இருசப்ப பிள்ளை என வினோதமான ஆளுமைகளைப் பற்றிய விவரனைகள் புன்னகைக்க வைக்கும். தங்கக்கனி மிஸ்ராவைப் பற்றி இப்படி எழுதுகிறார் 'தங்கக்கனி மிஸ்ரா திருநெல்வேலியில்தான் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என பத்து பதினைந்து வருஷங்களாகக் கோரிக்கை வைத்து பேசிவந்தான். அவனுடைய கோரிக்கை மீது ஆவன செய்யப்படாமலேயே இருந்தது. ஆவன செய்யக்கூடிய கோரிக்கை எதுவென்று யோசித்தான். பிறகுதான் 'வீடுதோறும் முருங்கை மரம்' இயக்கம் ஒன்றை ஆரம்பித்தான்.' தனது அலுவலக சகாவின் மனைவி பற்றி தனஞ்செயனுக்குள்ள அபிப்ராயம் 'அவள் ஒரு செமினாரினி. உலகெங்கும் நடந்த நூற்றுக்கணக்கான செமினார்களில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக கலந்துக்கொண்டு இன்னும் சிறப்பித்து வருபவள்.' பிச்சாண்டி பானர்ஜியும்' அபாரமான பகடி மிளிர்ந்த கதை. இன்றைய காலகட்டத்து புண்படுதல் பண்பாட்டுடன் இயைந்து வரும் கதை. எந்த கதை எழுதினாலும் ஏதோ ஒரு சங்கத்துக்காரர்கள் கொடி பிடித்து மிரட்ட வருகிறார்கள். எல்லா சங்கங்களுமே அனைத்திந்திய என்றுவேறு சேர்த்துக்கொள்கிறார்கள். சங்கத்துக்காரர்களிடமிருந்து தப்பிக்க எழுத்தாளர் ராமையா கண்டடையும் வழிமுறை இதுதான். 'கதைகளில் கதாபாத்திரங்களின் தமிழ்ப்பெயர்களுடன் வடநாட்டுக்காரர்களின் பெயரையும் சேர்த்து எழுதினால் என்ன' ராமையாவிற்கு பிச்சாண்டி என்றொரு மாமா. அவரை மேற்சொன்ன சூத்திரத்தின்படி பிச்சாண்டி பானர்ஜியாக ஆக்குகிறான் ராமையா. 


 'பதில் வராத கேள்விகள்' 'அசந்தர்ப்பம்' ஆகிய இரண்டு கதைகளுமே குழந்தைகளின் குறுக்குகேள்விகள் ஊடே வரும் வடிவில் எழுதப்பட்ட கதைகள்தான். ஆனால் அசந்தர்ப்பம் இலகுவான 'அந்த இரவில்' ஒரு கலவரத்தைப்பற்றி கனவு கண்டு விழிக்கும் கதை என்றால் 'பகல் கனவு' கதையில் இழுத்துக்கொண்டிருக்கும் உயிரை பறிப்பதற்காக எமன் உடலெடுத்து வந்து திண்ணையில் அமர்ந்து இருக்கிறான் என சாகக்கிடப்பவரின் தங்கை ராமாச்சி ஆச்சி காண்கிறான். அவனை உள்ளே விடாமல் தடுத்து அனுப்புவது என்பதே அவளுக்கு யோசனை. கடைசியில் அது ஒரு பகல் கனவு என முடிகிறது. இழுத்துக்கொண்டிருக்கும் பரிபூரணத்தம்மாள் போய்ச்சேர மாட்டாளா எனும் ஏக்கத்தின் தூல வடிவம். 

 


9நவீனத்துவ அழகியலில் ஃபிராய்டியம் கனிசமான செல்வாக்கை செலுத்தியது. ஆதவன் போன்றோரிடம் ஃபிராய்டியத்தின் தாக்கத்தை காண முடியும். மனிதர்களுக்கு இடையேயான அத்தனை உறவுகளையும் பாலியல் கோணத்தில் மட்டும் அணுகுவது என்பது எத்தனை அபத்தம் என இன்று நாம் உணர்கிறோம். ஆனால் ஃபிராய்டியம் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த காலத்தில் எல்லா உறவுகளுக்கும் பாலியல் உள்நோக்கத்தை கற்பிக்காமல் பாலியல் குறுக்கல்வாதத்துக்கு எதிரான வலுவான மறுப்பை பதிவு செய்யும் கதைகளாக வண்ணநிலவன் கதைகளை காண முடியும். 'சரஸ்வதி' கதையில் திருமணமாக இருக்கும் சரஸ்வதிக்கும் தம்பியென வரிந்துகொண்ட பதிமூன்று வயது தெய்வுக்கும் இடையேயான உறவு பேசப்படுகிறது. வீழ்ச்சியின் சித்திரத்தை அளிக்கும் 'கெட்டாலும் மேன்மக்கள்' கதையில் தன் முதலாளி அரிகிருஷ்ணன் மரணித்த பிறகு நிர்வாகத்தை எடுத்து நடத்தும் சந்திராவிற்கு விசுவாசமாக இருக்கும் சுப்பையா ஒரு நல்ல உதாரணம். சுப்பையாவிற்கு திருமணமாகவில்லை. சந்திரா இளம் விதவை. ஊர் இவர்கள் உறவை எந்த கோணத்தில் காணும் எனும் எச்சரிக்கையும் கதையில் விடுக்கப்படுகிறது. ஆனால் பாலியல் உறவு எனும் வரையறைக்கு அப்பாலான உறவை தொடர்கிறார்கள்.


'கெட்டாலும் மேன்மக்களின்' சுப்பையாவும் 'வெள்ளித்திரையின்' பாபுவம் ஒரே வார்ப்பு. 'வெள்ளித்திரையின்' நாயகனாக வரும் பாண்டுவும் 'குணச்சித்திர நடிகரின்' கே.எஸ் ராஜகோபாலும் ஒரே வார்ப்பு. பாபுவின் வயோதிக வடிவம்தான் கே. எஸ். ராமன். பாண்டு எனும் நடிகனின் சீரழிவையும் அவனை இறுக பற்றியிருக்கும் பாபு எனும் சாமானியனின் கனிவையும் 'வெள்ளித்திரை' பேசுகிறது.


இருண்மை, ஊசலாடுதல் ஆகிய இரு நிலைகளை கடந்து ஒளியில் நிலைபெறும் கதைகள் எழுதியுள்ளார். இந்த மூன்று நிலைகளையும் நேர்கோட்டு படிநிலையென கொள்ள முடியாது என்றாலும் அவற்றில் ஒரு வடிவத்தை காண முடிகிறது. 'மேட்டு வயல்' கதையில் எட்வர்டின் வயலில் பரம்பரை பரம்பரையாக வெள்ளாமை பார்த்துக்கொண்டிருந்த செல்லையாவிடமிருந்து வேறொருவருக்கு உரிமை மாற்றி அளிக்கப்பட்ட போது அவன் அதற்கு எதிராக முறையிடுகிறான். எட்வர்டின் மனைவி ரோஸலின் அவன் மீது பரிவு கொண்டு அவனுக்கான உரிமையை மீட்டு அளிக்கிறாள். 'அறம்' ஆச்சியை நினைவூட்டும் பாத்திரம். 'திருடன்' கதையில் வரும் அமலி பிடிபட்டு வதைபடும் திருடனிடம் கருணை காட்டி யாருமில்லாதபோது அவனை விடுவிக்கிறாள். விவிலிய வசனங்கள் கதைகளுக்கு ஆழத்தை அளிக்கின்றன. அமலி ஒரு மெய்யான கிறித்தவர், இயேசு இத்தகைய சூழலில் என்ன செய்திருப்பாரோ அதையே செய்தாள்.'பிணந்தூக்கி' ஒருவகையில் ஜெயமோகனின் 'சோற்றுக்கணக்கை' நினைவுபடுத்தும் கதை. ஸ்டூடியோ வைத்திருந்த பாப்பு பிள்ளையை பிணமாக கிடத்தியிருக்கிறார்கள். அவரை தூக்கிச் செல்ல நால்வர் அழைக்கப்படுகிறார்கள். தங்களுக்குரிய முறையை சரியாக செய்துவிடவேண்டும் என எண்ணியிருக்க ரங்கன் மட்டும் பாப்பு பிள்ளைக்கும் தனக்குமான உறவை எண்ணி உருகுகிறான். பிணத்தை இறக்கிவைத்துவிட்டு அதற்கான பலன் ஏதையும் எதிர்நோக்காமல் அங்கிருந்து செல்கிறான். அவனால் சாத்தியமான வழியில் கணக்கை நேர் செய்து கொண்டான். நன்றியை தெரிவித்தான். எவருக்கும் தெரிய வேண்டியதில்லை. இறந்து போன பாப்பு பிள்ளைக்கும் தெரியபோவதில்லை ஆனாலும் ஒரு சிறிய உளமார்ந்த செயல். 


சமயங்களில் இத்தகைய கரிசனத்துடன் நான் வாழும் நிதர்சனத்தில் மனிதர்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என ஏக்கம் தோன்றியதுண்டு. பிற உயிரினங்களிலிருந்து மனிதன் வேறுபடும்   மிக முக்கியமான புள்ளி என  மனித இனத்தின் 'தன் விருப்பு' திறனை அறிவியல் கருதுகிறது. எனினும் இந்த தன் விருப்பு எத்தனைக்கு எத்தனை ஆக்கப்பூர்வ விசையாக திகழ்கிறதோ அத்தனைக்கு அத்தனை மனிதன் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் ஆற்றலாகவும் இருக்கிறது. இருத்தலியல் கேள்விகள் மனித இனத்தின் தர்க்கமற்ற செயல்களின் மீதெழும் திகைப்பு என்று கூட சொல்ல முடியும். வண்ணநிலவன் அவ்வகையில் மனிதர்களின் வீழ்ச்சியை அதன் வெவ்வேறு சாயைகளுடன் சித்தரித்துள்ள மிக முக்கியமான எழுத்தாளர். மிக குறைவான ஆனால் கூர்மையான சொற்களில் மனித அகத்தின் ஆழங்களை காட்டிச்செல்கிறார். தங்கள் எல்லைகளை கடந்து பரந்து விரியும் எளிய மனிதர்கள் உயிர்ப்புடன் வருகிறார்கள்.