Showing posts with label உளவியல். Show all posts
Showing posts with label உளவியல். Show all posts

Sunday, December 5, 2010

பெற்றால் மட்டும் போதுமா-2


ஒரு குழந்தை தன்னை பற்றிய ஒரு நிலைப்பாடை எட்டு வயதிலிருந்து பத்து வயதிற்குள் எடுத்து விடுகிறது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள் .தன்னை பற்றிய ஒரு நிலை பாடும் அதன் புற சூழல்,உலகம் பற்றிய ஒரு நிலைப்பாடும் அது இந்த வயதில் அடைந்து விடுகிறது .அப்பொழுது எடுக்கும் அந்த முடிவு,அதன் குணாதிசயங்களை முடிவு செய்து அதற்கேற்ற ஒரு பாத்திரத்தை ஏற்று கொண்டு வாழ்க்கையை நடத்தும் .இதை 'ஸ்கிரிப்ட் ' என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள் .நாம் எல்லோரும் ஒரு பாத்திரத்தை உருவாக்கி அதற்கேற்ற வாறு நடித்து கொண்டு இருக்கிறோம்,அதையே நாம் திரும்ப திரும்ப செய்கிறோம்.
குழந்தைகள் எடுக்கும் நிலைபாடை நான்காக வகுக்கலாம்
நான் சரி ,உலகமும் சரியானதே -(i'm ok.you are ok-positive)- இது ஒரு ஆரோக்கியமான மன நிலையாக வளர்ச்சி பெரும் ,வாழ்க்கையின் பால் நம்பிக்கை இருக்கும்,மனிதர்கள் மீது நம்பிக்கை ,அன்பு இருக்கும்,வாழ்க்கை வாழ்வதற்கே எனும் மனப்பான்மை இருக்கும் .
நான் சரி ஆனால் உலகம் சரி இல்லை -(i am ok,you are not ok-projective) -இது குற்றம் சுமத்தும் மனம் ,நான் மட்டுமே சரி ஆனவன் ,வாழும் தகுதி உள்ளவன் ,நீ தகுதி அற்றவன்,மதிப்பில்லாதவன் ,தனது செயல்களின் விளைவிற்கு இன்னொருவன் மேல் பழி போடுவது .அடக்கி ஆள முயல்வது,அதிகார மையமாக செயல் படுவது

நான் சரி இல்லை, உலகம் சரியானது -(i am not ok,you are ok-introjective)- இத்தகைய மனப்பான்மை கொண்டவர்கள் ,தன்னம்பிக்கை இன்றி தவிப்பர் ,தளர்ச்சி அடைவர் ,மன அழுத்தத்தால் பாதிப்பு ஏற்படும் .உற்சாகமின்மை ,மன சோர்வு .நான் இந்த உலகத்தில் வாழ தகுதி அற்றவன் என்று நம்புவர் ,உச்சகட்டமாக தற்கொலை நடக்கலாம் .

நானும் சரி இல்லை உலகமும் சரி இல்லை -(ii am not ok you are also not ok-futile)-வாழ்கை இவர்களுக்கு ருசிப்பதில்லை ,வாழ்க்கை ஒரு திக்கற்ற,நோக்கமற்ற ஒரு பயணம் ,எந்த சுவாரசியங்களும் இதில் இல்லை ,வாழ்க்கைக்கு மதிப்பே இல்லை ,வாழ்வதில் ஒரு பிடிமானம் இல்லாமல் தற்கொலைக்கு செல்லலாம் .

இந்த நிலைபாடுகளால் அரங்கேறுவது தான் வாழ்க்கை எனும் நாடகம் ,எட்டு வயதிலே நாம் நம் கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து விடுவோம்,இந்த பாத்திரங்களை குழந்தைகள் தனதாக்கிகொள்ள முக்கிய காரணம் பெற்றோர்கள் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை
இனி என்ன ? அந்த பாத்திரமாக வாழ்வது தான் பாக்கி .
உலகில் வசிக்கும் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான ஒரு எதிர்பார்ப்பு எது தெரியுமா ? நமது இருப்பின் மீதான கவனம் , நமது இருப்பை நாம் ஆழ படுத்துகிறோம் ,அதை பிறர் அங்கீகரிக்க வேண்டும் என்று எண்ணுகிறோம் .இது மிகவும் அடிப்படையான உணர்வு .இந்த அங்கீகாரம் ஒரு மென் சிரிப்பாகவும் இருக்கலாம், இல்லை கண் அசைவாகவும் இருக்கலாம் இல்லை முதுகில் விழும் அடியாகவும் இருக்கலாம், இல்லை கன்னத்தில் விழும் அறையாகவும் இருக்கலாம் .

ஒரு மனிதனுக்கு நாம் கொடுக்கும் மிக பெரிய வலி,அவமானம் அவனது இருப்பை நாம் புறக்கணிப்பதே ஆகும், நாம் நம் குழந்தைகளை புறக்கணித்தால் என்ன ஆகும் ?


தொடரும் ...

Wednesday, December 1, 2010

பெற்றால் மட்டும் போதுமா?-1

அண்மையில் பதிவர் கலகலப்ரியா ,தேகா ,மற்றும் பாலா அவர்கள் அவர்களுடைய பதிவுகளில் பிள்ளை வளர்ப்பு பற்றியும் ,அதன் அம்சங்களை பற்றியும் நல்ல விவாதங்களை தொடங்கி வைத்தனர் .அவர்களின் கருத்துக்கள் ,மற்றும் நவீன காலக்கட்டத்தில் இவ்வகை சிந்தனை போக்குகள் மிகவும் முக்கியமானவை .என் கருத்துக்களும் ,நான் சேகரித்த கருத்துக்களையும்,அனுபவங்களையும் இணைத்து ஒரு பதிவாக இடலாம் என்று இந்த முயற்ச்சியை தொடங்குகிறேன் .ஆகினும் கூட இது இன்னொரு தொடராக வருவது போல் நான் உணர்கிறேன் .இத்தகைய விவாதங்கள் சில உதாரணங்கள் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம் .



அடிப்படையாக சில உளவியல் விஷயங்களின் தெளிவு நமக்கு முக்கியம்,அதிலிருந்து தொடங்குவோம் ." போர்ன் டு வின் " (born to win by muriel james and dorothy) எனும் தங்களது உளவியல் புத்தகத்தில் உளவியலாளர்கள் சில அற்புதமான அடிப்படைகளை நமக்கு அளிக்கின்றனர் ,அதை தொகுத்து நமக்கு நம்மை பற்றிய புரிதல் ஏற்ப்படுத்திக்கொள்ள இந்த சிறு முயற்ச்சி .நான் இத்துறை வல்லுநர் அல்ல என்றாலும் எனக்கு தெரிந்ததை கூற முயல்கிறேன்.
மரபு வழி குணங்களும் ,புறசூழலும் ஒரு தனிமனிதனின் குணாதிசயங்களையும் ,ஒரு சூழலுக்கு நாம் ஆற்றும் எதிர்வினையையும் முடிவு செய்வதில் பெரும் பங்கு ஆற்றுகின்றன,ஆயினும் கூட மனிதர்கள் இவைகளின் கருணையில் காலம் தள்ள அவசியம் இல்லை ,இதை நாம் நிச்சயம் நமக்கேற்ற வடிவில் மாற்றலாம் என்று நம்பிக்கை அளிக்கிறார்கள் .
மரபணு வழியாக வரும் குணங்களை பொறுத்த மட்டில் ,முக்கியமாக நாம் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் ,மரபணுக்கள் அப்படியே தந்தை ,தாய்களின் நோய்களை பிள்ளைகளுக்கு பரப்புவது இல்லை ,அந்த நோய் நம்மை எளிதில் ஆட்க்கொள்ளக்கூடிய தன்மையை (susceptiblity)மட்டுமே நமக்கு அளிக்கிறது,இது குணாதிசயங்கள் மற்றும் நடத்தைக்கும் கூட பொருந்தும் .அப்பாவிற்கு சர்க்கரை நோய் இருந்தால் மகனுக்கு அந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் ,அதை அறிந்து நம் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளை நாம் சீர்ப்படுத்திக்கொண்டாலே போதும் ,அந்நோயை தவிர்க்கலாம் .
மனிதர்களின் ஆளுமை மொத்தமாக மூன்று தளங்களில் செயல்படுகிறது என்று கூறலாம் .
பெற்றோர்கள் தளம்
குழந்தை தளம்
சராசரி மானுட தளம் (வளர்ந்த மனிதன் தளம்)
நாம் ஒவ்வொருவரும் இந்த மூன்று தளங்களில் மாறி மாறி பயணிக்கிறோம் ,ஒரு சில தளங்களில் நாம் அதிகமாகவும் வெளிப்படுகிறோம் .
இந்த தளங்களை புரிந்து கொள்ள ஒரு உதாரண சூழல் .
ஒரு மழை கால மாலை பொழுதில் தள்ளு வண்டியில் ஐஸ் கிரீம் உங்களை நோக்கி வருகிறது என்று நினைத்துகொள்ளுங்கள்
பெற்றோர் தளத்தின் சிந்தனை - இதை சாப்பிட கூடாது , சாபிட்டால் ஜுரம் வந்துடும்
குழந்தை - சூப்பர் !!! சாப்பிடனும் !!
சராசரி நிலை - இந்த மழை பொழுதில் நாம் சாப்பிட்டால் நாளை அலுவலகம் செல்வது கடினம் ,வேறு ஒரு முறை பார்க்கலாம் .
நம் வாழ்க்கையை முடிவு செய்யும் பலம் ஓரளவுக்கு நமக்கே இருக்கிறது என்பது உண்மை .ஆனாலும் நாம் மட்டுமே முடிவு செய்யும் வரம் எல்லா சமயங்களிலும் அமைவதில்லை என்பதும் உண்மை .

இந்த மூன்று தளங்களில் நாம் மாறி மாறி பயணிப்பது நமக்கு புரியும் .
பெற்றோர்கள் தளம்- இது நம் பெற்றோர்களிடமிருந்து நாம் பெற்று கொண்டது ,கண்டிப்பு தன்மை ,ஊக்க தன்மை ,முன் முடிவுகள் ,எச்சரிக்கை ,எதிலுமே ஒரு நம்பகமின்மை ஆகியவை இந்த தளத்தில் முக்கியமானது .நமக்குள் இருக்கும் ஒரு பெற்றோர் நமக்குள் இருக்கும் குழந்தையை போஷித்து பாதுகாக்கும் அமைப்பு இது .

குழந்தை தளம் -இது நாம் உணர்வுகள் சார்ந்து இயங்கும் தளம் ,இயற்கையான உந்துதல்கள் இதை வழி நடத்தி செல்கின்றன .சிரித்தல், மகிழ்தல் ,அடம் பிடித்தல் ,பிடிவாதம் இதெல்லாம் இந்த தளத்தின் வெளிப்பாடு .

சராசரி மானுட தளம் -ஒரு முதிர்ச்சியான மனம் கொண்ட ,சிந்திக்கும் தளம் , அறிவு ,அவதானிப்பு,சூழல் ,வாய்ப்புகள் என்று தர்க்கத்தின் அடிப்படையில் ஒரு சூழலை எடை போடும் நிலை .பிரச்சனைகள் மற்றும் அதன் தீர்வு , பகுத்தறிவு ஆகியவை இந்த தளத்தின் செயல்பாடே .

இந்த கட்டமைப்புகள் நம்முள் எப்பொழுது ?எப்படி வருகின்றன ?
முதலில் குழந்தை தளம் ,இந்த தள செயல்பாடுகள் தான் நமக்கு கைகூடும் .உணர்வுகளின் வாயிலாக ,தனது தேவைகள் வாயிலாக இது நடக்கிறது ,பின்னர் ஒன்றரை வயதினிலே பெற்றோர் தளம் உருவாகிவிடுகிறது ! இது பெற்றோர்களை (நடத்தையை)அவதானிப்பது மூலமும், தண்டனை -பரிசு (punish-reward) நடத்தைகள் மூலமும் ஒரு தளத்தை உருவாக்குகிறது ,பிற்பாடு கேள்விகள் மூலம் புரிதல் எட்ட முயலும் பொழுது மானுட அறிவு நிலையை எட்டுகிறது.முக்கியமான இன்னொரு விஷயம் ,இந்த தளங்களுக்கு வயது தடை இல்லை ,குழந்தைகள் பெரிய மனிதர்கள் போலவும், பெற்றோர்கள் போலவும் நடக்கும் ,பெரியவர்கள் -குழந்தை போலவும் ,பெற்றோர்கள் போலவும் நடப்பார்கள் .அதை தான் படங்கள் குறிக்கின்றன

ஒரு குழந்தை தன்னை பற்றிய ஒரு ஆழமான அடிப்படை புரிதலை எப்பொழுது எட்டுகிறது தெரியுமா ?

வளரும் ....
குறிப்பு -நான் உளவியலாளர் அல்ல .எனது துறை உளவியல் அல்ல .ஆயினும் கூட அந்த துறையில் அடிப்படை அறிவு கொஞ்சம் உண்டு ,மேலும் ஆர்வம் உண்டு அவ்வளவே.
.
பட உதவி-கூகிள்