Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, January 11, 2024

சர்ப்பங்கள், வேதாளங்கள், டைனோசர்கள்- வேணு தயாநிதி கவிதை தொகுப்புக்கான முன்னுரை

 


(வேதாளத்துடன் செல்வதற்கான எளிய விதிகள் எனும் வேணு தயாநிதியின் கவிதை தொகுப்பிற்காக எழுதிய முன்னுரை. பதாகை- யாவரும் வெளியீடாக வெளிவர உள்ளது.) 

புனைவெழுத்தாளனாக அல்ல, ஒரு கவிதை வாசகனாக என்னை நிறுத்திக்கொண்டு நண்பர் வேணு தயாநிதியின் முதல் கவிதை நூலுக்கு என் வாசிப்பை அளிப்பதே நியாயமாக இருக்கும். கவிதை குறித்து எழுதுவது அதன் பேசுபொருள் குறித்து எழுதுவது அல்ல. கம்பன் சொல்லை அம்புக்கு இணைவைத்தபடி இருக்கிறான். இராமனின் அம்பு தன்னை துளைத்துவிட்டது என எதிராளி உணர்ந்து கொள்வதற்கு முன்னரே அவன் உயிரை அரிந்துவிடும். நல்ல கவிதையும் அப்படித்தான்.  அது அர்த்தப்படுத்திக்கொள்வதற்கு  முன்னரே நம்முள் ஏதோ ஒன்றை நிகழ்த்திவிடுகிறது. இது நல்ல கவிதை, இது நல்ல கவிதை, இது என்னை என்னமோ செய்கிறது.  இப்படி  எனக்கு ஏற்படும் பதைப்பை வாசகருக்கு கடத்த முயல்வதே கவிதை குறித்தான எழுத்துக்களின் நோக்கமாக இருக்க முடியும். 


வேணு உயிரியல் / மரபணுவியல் சார்ந்து உயராய்வு செய்து வரும் விஞ்ஞானி. அமேரிக்காவில் வசிக்கிறார். அவரது ‘பீத்தோவனின் ஆவி’ சிறுகதை வெளியாகி கவனம் பெற்ற அதே சமயத்தில் தான் எனது முதல் கதையான ‘வாசுதேவன்’ வெளிவந்தது. ‘சுடோகுயி’ போன்ற அறிவியல் புனைவு கதைகளும் எழுதியுள்ளார். ‘காஸ்மிக் தூசி’ எனும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதி வருகிறார். இந்த முதல் தொகுப்புக்கு அவர் எடுத்துக்கொண்ட காலம் மிக அதிகம் தான். ஆனால் அதற்கான அவரது மெனக்கிடல்களை கவிதை தொகுப்பை வாசிக்கும் போது உணர்ந்துக்கொள்ள முடிந்தது.  


 வேணுவின் கவிதைகளில் முதன்மையாக என்னை வசீகரித்தது அமேரிக்க பனிக்கால சித்தரிப்புகள். “எண்ண முடியாத இலைகளின் வெறுமை” 

என சுட்டப்படும் இலைகள் உதிர்ந்த பிர்ச் மரங்களும், வெண்பனியின் வெறுமையும், தனித்த பறவைகளும், மேப்பிள் மரங்களின் தனிமையும் பல கவிதைகளில் கையாளப்படுகின்றன. குளிர்கால அமெரிக்க நிலக்காட்சிக்கும் ஜனசந்தடி மிக்க மதுரை வீதிகளுக்குமாய் கவிதைகள் அலைபாய்கின்றன. காலமும் வெளியும் மயங்கி மேப்பிள் மர நிழலில் இருந்தபடி ஒரு நொடி மதுரைக்கு சென்று திரும்புகிறார். சுனைநீரில் பால்யகாலத்து கிணற்று குளியலை தேடுகிறார். தூரதேசத்து மலையடி சுனையின் ஒரு துளி இவற்றையெல்லாம் கொண்டு சேர்க்கிறது. புல் வெட்டும் இயந்திரத்தை காணும்போது ஊரிலிருந்த காராம் பசு நினைவுக்கு வருகிறது. “தூய வெண்மையின்/

பொருளின்மையில்,/ எப்படியாவது/

ஒரு துளி அர்த்தத்தை/சேர்த்துவிட/

முயல்வது போல்” என்கிறார். இயற்கை காட்சிகளின் சித்தரிப்பிலிருந்து மீபொருண்மை தளத்திற்கு தாவிட முடிகிறது. இஸ்கான் கீதை பதிப்பில் விஸ்வரூப தரிசன படம் ஒன்றுண்டு. பிரம்மாண்ட விஷ்ணுவைச்சுற்றி கணக்கற்ற குமிழ்கள் மிதக்கும். அவை ஒவ்வொன்றிலும் விஷ்ணு சயனித்திருப்பார். 


 பிரபஞ்ச விளையாட்டு


கரைந்து குழைந்து

காற்றைக் குடிக்கும் 

சோப்புக்குமிழி

வீங்கிப்பெருத்து 

மிதந்தலையும்.


மூப்படைந்து 

துளைகள் தோன்ற 

வெடித்துச் சிதறும்.


உடையாத குமிழியொன்று

உயர்ந்தெழுந்து 

நிறமடர்ந்து

வானவில்லாய் 

விரிவடையும்.


மதிய வெய்யில்

மரத்தடியில் அம்முக்குட்டி

ஊதுகிறாள் 

விளையாட்டாய்.

 

அவள் குழல் முன்

தோன்றி வளர்ந்து 

விரிந்து மறையும்


எண்ணற்ற 

பிரபஞ்சம்.


வேணுவின் கவிதை பிள்ளை விளையாட்டை பிரபஞ்ச விளையாட்டாக உருமாற்றுகிறது. மற்றொரு கவிதையான ‘திருப்பள்ளியெழுச்சி - மினியாப்பொலிஸில்’ உறங்கும் மகளை எழுப்புகிறது. 

“நீ கிறுக்கப்போகும் ஓவியத்தில்

உதிப்பதற்கென்று 

தயாராகி விட்டது சூரியன்

எழுந்துவிடு 

சீக்கிரம்.” எனும் இவ்வரி சட்டென ஒரு மனவெழுச்சியை அளித்தது. 

“இந்த அறைக்கு/ எப்படி வந்தேன்?/ இந்தப் படுக்கையில்/ ஏன் கிடக்கிறேன்?/

நான் யார்?” என முழுக்க மீபொருண்மை தளத்தில் நிகழும் கவிதையும் உண்டு. “சாலையைக் கடந்து/ மறுபுறம் அடைந்தால்/நானும்/ அவன் தானா?” (சிவப்பு விளக்கு) எனும் கவிதையில் காலம் ஒரு சாலையாக ஆகிறது. லிடியா டேவிஸின் ‘ரயிலின் மாயாஜாலம்’ எனும் குறுங்கதை நினைவுக்கு வந்தது. “நம்மை விட்டு அவர்கள் ரயில் பெட்டியில் விலகி, கழிப்பறையின் திறந்த கதவுகளை கடந்து, கடைசியில் இருக்கும் நழுவு கதவின் வழியாக, ரயிலின் ஏதோ ஒரு பகுதிக்குள்  நடந்து செல்லும்போது, நாம் காணும் அவர்களின் பின்புற தோற்றத்தைக்கொண்டு நம்மால் சொல்ல முடியும், இவ்விரு பெண்கள், அவர்களது இறுக்கமான கறுப்பு ஜீன்ஸில், அவர்களது உயர்ந்த குதியணியில், இறுக்கமான ஸ்வெட்டர் மற்றும் ஜீன்ஸ் மேற்சட்டையின் நூதனமான அடுக்குகளில், நிறைந்து வழியும் நீளமான கருப்பு தலைமுடியில், அவர்கள் முன்னே செல்லும் பாங்கில், அவர்கள் ‘டீன்களின்’ இறுதியை சேர்ந்தவர்கள் அல்லது இருபதுகளின் தொடக்கத்திலிருப்பவர்கள் என்று. ஆனால் அவர்கள் நம்மை நோக்கி, முன்னாள் இருக்கும் விந்தையான மாயாஜாலம் நிறைந்த பகுதியில் கொஞ்சநேரம் சுற்றிபார்த்துவிட்டு, அப்போதும் நன்கு அடிவைத்தபடி, மறுபக்கத்திலிருந்து திரும்பி வரும்போது, நம்மால் அவர்களது முகங்களை இப்போது காண முடியும், வெளிறி, கோரமாக, கண்களுக்கு கீழே ஊதா நிழல்கள் படிய, கன்னங்கள்  தோய, பொருத்தமற்ற மச்சங்கள் அங்குமிங்கும் தெரிய, கன்ன கோடுகள் தெரிய, நெற்றியில் காக்கை பாதம் போல் சுருக்கம் விழ, அவர்கள் இருவரும் சற்று மென்மையாக புன்னகைத்தாலும் கூட, ரயிலின் மாயாஜால விளைவின் காரணமாக  அவர்கள் இதற்கிடையே இருபது ஆண்டுகள் முதிர்ந்துவிட்டனர் என்பதை நாம் காணவே செய்கிறோம்”


இவை எதுவும் இல்லாமல் சித்தர் பாடல் போல தொனிக்கும் ஒரு கவிதை சட்டென எங்கிருந்தோ சந்தத்துடன் வந்து சேர்கிறது.  

“இரவி அணைந்து 

இரவு வரக்கண்டு

விடாய் கொண்டு 

விழி அயர்ந்து


கடாவு எழ

அனுட்டானம் எனப் 

பிரக்ஞை கொண்டு

கண் மலர எழுந்தனன் 

யானே இன்று.


எழாவிடின்

உறட்டை சவம்


நிவகம்

எவர்க்கும்

சூதகம்.”

(நிகழ்தகவின் மானுடத்துவம்).



இயற்கை காட்சிகளின் மீபொருண்மை தளம் ஒரு வகை என்றால் வழிபடுதலுக்குரியவை நிகழ் தளத்திற்கு இறங்கி வருவது மற்றொரு வகை. சடாரி, காலபைரவரின் கடைசி பயணம், நவீன சிவபெருமானின் ஒரு ஞாயிறு மதியம்,  புத்த வீர சாமி ஆகிய கவிதைகளை இந்த வகையில் சொல்லலாம். இவ்வகை கவிதைகளில் ‘நந்தி’ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு பிரதோஷ பூஜை கவிதைக்குள் என்னவாக எல்லாம் உருமாறுகிறது என்பதை கவனிக்கலாம். 


நந்தி 


ஆலகால விடம் அருந்தி

அம்மை மடியில் 

மயங்கிக் கிடக்கையில் 

காத்திருக்கும் பக்தர்களின் வரிசைக்கு, காவல்.

தசைச்செழிப்பு புடைத்தெழும்ப

எந்நேரமும் எழுந்துவிடும் ஆயத்தமாய்

பிரகதீஸ்வரர் முன் 

வீற்றிருக்கும் நந்தி.


கயிலாயத்துள் நுழையும்

பக்தகோடிக்கு ஜருகண்டி.

அத்துமீறினால் 

விஷ்ணுவே ஆனாலும் விபரீதம்.

வெறும் மூச்சுக்காற்று போதும்

கருட பகவானை 

தடுமாறி விழவைக்க.

உயிர் பிச்சைக்கு 

அந்த சிவபெருமானே வந்து

சொன்னால்தான் ஆச்சு.


அவதார அதிகார கைலாச

சிறிய பெரிய, மற்றும்

சாதாரண நந்திகள் மத்தியில்

ஓரமாய் எங்கோ உடனுறைகிறார் 

சிவபெருமான்.


காலத்தில் உறைந்த கறுப்பு உலோகம்

விலாப்புறங்கள் சிலிர்த்து திமில் சரிய 

முன்னங்கால் உயர்த்தி

கொம்பசைத்து 

வாலைச்சுழற்றி


கழுத்துப்பட்டையின் மணி ஒலிக்க

எழுந்துவிடக்கூடும், எந்நேரமும். 

என்றாலும், 

நந்திகள் ஏன் எப்போதும்

அமைதியாக 

அமர்ந்திருக்கின்றன?


பிரதோஷ நேரங்களில்

எண்ணற்ற நந்திகளுள்

ஏதோ ஒன்றை தற்செயலாய் தெரிவுசெய்து

அதன் சிரசின்மேல்

தன் ஏழுதாண்டவங்களுள் 

ஏதாவது ஒன்றை

இடக்கால் வீசி 

ஆவேசமாய் நடனமிடுகிறார்

சிவபெருமான்.


நடனம் முடியும்வரை 

ஈட்டி முனை வேய்ந்த வேலிக்குள்

மூச்சைப்பிடித்தபடி

விழிபிதுங்க 

அசையாமல்

அமர்ந்திருப்பதைத் தவிர

வேறு வழியில்லை.


நந்தி 

இம்மி அசைந்தாலும் 

போதும்.


அவரின் 

அடவு 

தப்பிவிடும்.



வேணு இலகுவான விளையாட்டு நிறைந்த கவிதைகளும் எழுதியுள்ளார். “படிமங்கள் செறிந்த/ வரிகளுக்குள்/ ஆழமாகவே/ நுழைந்து சென்றிருந்தது/

தோட்டா./ சிரமம் ஏதுமின்றி. (ஒரு புத்தகத்தின் மரணம் அல்லது

கவிதையைக் கொலை செய்வது எப்படி?). ‘அந்த  சம்பவத்திற்கு பிறகு’ என்றொரு கவிதையில் ஒரு சின்ன விளையாட்டு நிகழ்கிறது. வடையை தொலைத்த காகம் பாட்டு பயிற்சியை நிறுத்திவிட்டு காதலில் விழுகிறது. வடையை வென்று பின்னர் திராட்சையை சாப்பிடமுடியாத நரியோ ஊர் ஊராக அலைந்து கொண்டிருக்கிறது. பாட்டி கதைக்கும் நிதர்சனத்திற்கும் இடையிலான கோட்டை அழிக்கிறாள். இந்த கவிதையின் ஒருவித கால- வெளி விளையாட்டு தொழில்படுகிறது. ‘தக்காளி காதல்’ உணவாகிப்போன தக்காளிக்கான அஞ்சலி குறிப்பு. தனது நல்லியல்புகளை ஈந்து பிறரை மேன்மையாக்கி தன்னை கரைத்துக்கொண்ட தக்காளி நீடுழி வாழட்டும். சிரிக்கும் புத்தரும் குழந்தையின் மென்பாதமும் அதை விவரிக்க பயன்படுத்தப்படும் உவமை. 




வேணுவின் கவிதைகளில் சர்ப்பங்கள், பூனைக்குட்டிகள், டைனோசர்கள், நிழல்கள், வேதாளங்கள் என வெவ்வேறு படிமங்கள்  பயன்படுத்தப்படுகின்றன. பூனைக்குட்டியும் டைனோசர்களும் உறவு சிடுக்குகளை சொல்ல உதவுகின்றன. “வெறும்/சாதாரண/ ஒரு பூனைக்குட்டி./அது இல்லாமல்/ 

வாழவே முடியாது/என்று நினைத்ததுதான்-/எவ்வளவு பெரிய

முட்டாள்தனம்?”. ‘அல்லல் உழப்பது’ என்றொரு கவிதை குடிகாரனுக்கு நண்பனாக இருப்பதைப் பற்றி சொல்கிறது. “இன்றின்/வரஇயலாமையை/ ஏதாவதொரு/ பொய்சொல்லி/ எப்படியாவது/ நிறுவி விடலாம்தான்./

ஆனால்/ இன்றிரவு/அவன் உடலை/ அவன் வீட்டில்/ வேறு யார் /

கையளிப்பார்?” என விசனப்படுகிறது. ‘மயானத்திலிருந்து திரும்பிய பிறகு’ எனும் இறந்து போன முன்னாள் காதலிக்காக வெளிப்படையாக துக்கம் கொண்டாட முடியாத இக்கட்டான துயர நிலையை சுட்டுகிறது.


வேதாளங்கள் நம்மை அசைவுகரியப்படுத்துபவை. நாமாக சென்று தேர்பவை அல்ல. அவை நம்மை வந்து சேர்கின்றன ஆனால் மெல்ல மெல்ல அவற்றை நேசிக்க தொடங்குகிறோம். வேதாளத்திற்கு ஏதோ ஒரு தோள் போதும். நமக்கு தான் வேதாளம் வேண்டியதாய் இருக்கிறது. டைனோசர்கள் பீடிக்க காத்திருக்கின்றன. ‘நிழல்களின் புகலிடம்’ கவிதை வாசிக்கும் போது அவையும் அப்படி காத்திருப்பதை காண முடிகிறது.  “என் இருப்பிலிருந்து/

பிரித்துவிட முடியாதபடிக்கு/ ஒன்றி பதுங்கியிருக்கின்றன/ எனக்குத்தெரியாமல்/ எப்படியோ/ 

எனக்குள் குடியேறிவிட்ட/  நிழல்கள்.” சர்ப்பங்களும் இப்படி நம்முடனேயே வாழ்கின்றன.  “இப்போதுங்கூட ஒன்று/ 

இந்த அறையில் தான்/ 

எங்கோ ஒளிந்திருக்கிறது/ அப்படியே இருக்கட்டும்./ கைதொடு தூரத்தில் இருந்தாலும்/ அவற்றை கண்டு கொள்ளாதீர்./ நீங்கள் / கண்டுகொள்ளாதவரை/

அவைகளும்/  உங்களை / கண்டுகொள்வதில்லை.” முகமூடிகள் முகத்தின் இடத்தை எடுத்துக்கொள்கின்றன. எது முகம் எது முகமூடி என்பது புரியாமலாகிறது. கார்ல் யுங் ‘நிழல்’ நமக்குள் சேகரமாவது என்கிறார். பலவீனமான தருணத்தில் நம்மை ஆட்கொள்ளும் என்கிறார். நிழலை கண்டுகொள்வதும் அதன் இருப்பை அங்கீகரிப்பதும் இன்றியமைதாததென உணர்வதும் என பல்வேறு நிலைகளில் வேணுவின் கவிதை பயணிக்கிறது. இந்த நிழல் தான் வேதாளமாகவும் டைனோசராகவும் பூதகணங்களாகவும் கவிதைக்குள் வருகின்றன. இந்த இருமை ஒரு கற்பிதம்தானோ எனும் பார்வையை ‘பூதகணங்களின் கனவில் வரும் தேவதைகள்’ கவிதை வழி அடைகிறோம். 


“இமைகளுக்குள் 

கருவிழிகள் 

உருளும் ஆழ்துயிலில் 

தேவதைகள் 


தோன்றும் 

கனவில்.


தேவதையின் முகம் கண்டு

குழந்தையைப்போல 

முறுவல் பூக்கும் 

பூத முகம்.


இறுக்கம் அவிழ்ந்து 

புன்னகை இடம் மாறி 

குடிகொள்கையில்


பூதமும் 

தேவதையும் 

ஒன்று.”


தற்கால தமிழ் கவிதைகளின் பரப்பில் வேணு தயாநிதியின் கவிதைகளை எங்கு பொருத்திப்பார்ப்பது எனும் கேள்விக்கு என்னிடம் துலக்கமான பதில் ஏதும் இல்லை. நுண் சித்தரிப்புகள், பகடி, இயற்கை சித்தரிப்பு என பல்வேறு கவிஞர்களின், கவிதை போக்குகளின் தாக்கம் உள்ளதை கவனிக்க முடிகிறது. ஏறத்தாழ பத்துவருட காலம் எழுதிய கவிதைகள் என்பதால் இப்படி வெவ்வேறு தாக்கங்கள் புலப்படுவது இயல்பே. எனினும் ஒரு கவிதை வாசகனாக மிகுந்த நிறைவளித்த தொகுப்பிது என்பதை நிச்சயமாக சொல்ல முடியும். நண்பர் வேணுவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். 


சுனில் கிருஷ்ணன்

22.12.2023










 






 




 









Thursday, April 14, 2022

பேரின்ப ஊஞ்சல்- அக்கம்மாதேவி கவிதைகள்

காலச்சுவடில் வெளிவந்த கட்டுரை. 

பெருந்தேவி மொழியாக்கம் செய்த 'மூச்சே நறுமணமானால்' எனும் அக்கம்மாதேவியின் வசன கவிதை தொகுப்பு,  அக்கம்மாதேவி வீர சைவ மரபின் வழி வந்த முக்கியமான கன்னடப்பெண் கவி. பசவரின் காலத்தில் வாழ்ந்தவர். அவரது வாழ்வு குறித்த சித்திரத்தை பெருந்தேவி இத்தொகை நூலில் அளிக்கிறார். அக்கம்மா வீட்டை விட்டு வெளியேறி ஸ்ரீசைலம் சென்றடைந்த காலகட்டத்தில் எழுதிய வசனங்கள் என நானூறுக்கும் மேற்பட்டவை 'சென்ன மல்லிக்கார்ச்சுன'  எனும் அவரது கவி முத்திரையுடன் காணப்படுகிறது. அவற்றிலிருந்து 120 வசனங்களை வினைய சைதன்யா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அத்தொகுதியின் தமிழ் மொழியாக்கமே இந்நூல். வினயா அக்கம்மாதேவியின் கவிதைகளைப்பற்றி குறிப்பிடும்போது 'எப்போதுமே மென்மையானது என்று சொல்ல இயலாத அவனது பேரன்பு அவளை உடைந்த கத்தியின் தகடெனக் குத்தித் தாக்க, கையறு நிலையில் தனது களிப்பையும் வலியையும் இவ்வசனங்களில் பாடுகிறாள்.' என கூறுகிறார். 



 சரணர்கள் என்றழைக்கப்படும் வீரசைவ துறவிகளுடன் இணைகிறார். பசவர், அல்லாம பிரபு போன்றவர்களை சந்திக்கிறார். பின்னர் தனியே ஸ்ரீசைலம் நோக்கி செல்கிறார். ஆடை களைந்து திசையாடை உடுத்தியவராக துறவுக்குள் அமைகிறார். ஸ்ரீசைலத்தை சென்றடைந்தவர் திரும்பவில்லை. இது ஒரு சுருக்கமான வாழ்க்கைச் சித்திரம். அவரை உள்ளூர் அரசன் மணந்துகொள்ள முயன்றார் என்றும் மணந்துகொண்டார் என்றும் பல கதைகள் உள்ளன. சிவனுக்காக வாழ்வை விட்டு வெளியேறியவர் என்பது மட்டும் தெளிவு. 


பக்தி காலத்து கவிகள் பெரும் பயணிகளும் கூட. இயல்பாகவே அவர்களிடள் ஒருவித நாடோடித்தன்மை உண்டு. வீர சைவத்தைச்சேர்ந்த சரணர்களும் அப்படிதான். ஆயிரமாண்டுகளுக்கு முன் திசையாடை உடுத்திய நாடோடி பெண் கவி எனும் ஆளுமையே அக்கம்மாதேவியின் மீது பெரும் வசீகரத்தை ஏற்படுத்துகிறது. அந்த வசீகரமே அவருக்கு பல இன்னல்களையும் அளிக்கிறது.  


அக்கம்மாதேவியின் வசனங்களிலேயே கூட பலவற்றில் ஒருவித மன்றாடல், எச்சரிக்கை போன்றவை மாறி மாறி ஒலிக்கின்றன. 'அடியார் உடலைக் கொண்டவன்/  தேவனென்று மறை பகர்வதால்/ அடியாரின் சிறு நோவும் சிவனைத் தொடும்' (12) என எச்சரிக்கிறார்.  அண்ணன்களே தந்தைகளே தொல்லை செய்யாதீர் (41) என மன்றாடுகிறார். 'வட்ட முலைகளையும் நிறையிளமையின் அழகையும்/ கண்டு என்னிடம் வந்தாயா அண்ணா?/ அண்ணா நான் பெண்ணல்ல/ அண்ணா நான் வேசியல்ல/ அண்ணா பின்பு என்னைக் கண்டு கண்டு/ யாரென்று வந்தாய் அண்ணா?' (44) என கேட்கிறார்.   சிவனுக்கென்று உள்ளவரை துன்புறுத்தாதே அண்ணா (46) என்கிறார். இக்கவிதைகள் வழியாகவே அவர் சமூகத்துடன் உரையாடி, தனக்கான இடத்தை படிப்படியாக உருவாக்கிக்கொள்கிறார். 




பொதுவாக பக்தி கவிதைகள் வெவ்வேறு உணர்வு நிலைகளில் எழுதப்படுபவை. மாத்ரு பாவம் என்றால் இறைவனை அன்னையாக கருதுவது. வாத்ஸல்ய பாவம் என்றால் இறைவனை குழந்தையாக பாவிப்பது.  சதி- பதி அல்லது பர்த்ரு பாவம் என்று வழங்கப்படும் நாயக நாயகி பாவமே பரவலாக காணப்படுவது. இறைவனை கணவராக, காதலராக கொள்வது. இதன் ஒரு பரிணாமமாக தாஸ்ய பாவம் எனும் இறையடியார் பாவமும் உண்டு. இறைவனை மட்டுமே ஆணாகவும் பிற அனைவரையும் பெண்ணாகவும் காணும் வழக்கம் மறைஞான மரபில் எப்போதும் உள்ளதுதான். 'கபீர் சொல்கிறேன்/ ராமனின் கண்களில்/ நாம் அனைவரும் பெண்களே'  என்கிறார் கபீர். அக்கம்மா 'ஆண்கள் அனைவரையும் பெண்களாக்கி

ஆளும் கொரவனைக் கண்டேன்' என அவர் பங்கிற்கு எழுதுகிறார்.‌  


நாயக நாயகி பாவத்தில் உள்ள ஐக்கிய வேட்கை கவிதைகள் பொதுவாக மூன்று நிலைகளுடையவை. 


நாயகனுக்காக காத்திருத்தல்

நாயகனை அடைந்து ஐக்கியமாதல்

ஐக்கிய அனுபவம் கிட்டிய பிறகு நாயகன் நீங்கிச்செல்வதால் ஏற்படும் பிறிவாற்றாமை.


ஆண்டாள் தொடங்கி மீரா, கபீர் என அத்தனை கவிகளும் இம்மூன்று நிலைகளிலும் கவிதைகள் எழுதியுள்ளார்கள். அக்கம்மாவும் விதிவிலக்கல்ல.


 'பீடத்தையும் பந்தலையும் போட்டு/  

உன் திருவடிகளுக்கு/  இடத்தை 

நிர்மாணித்திருக்கிறேன் ஐயனே/ 

சென்னமல்லிகார்ச்சுனனே எப்போது வருவாயென' (81) என சென்னமல்லிகார்ச்சுனனின் வருகைக்காக காத்திருக்கிறார். காத்திருத்தலின் மற்றொரு பரிணாமம் என்பது காக்க வேண்டும், மீட்க வேண்டும், அருள வேண்டும் என மன்றாடுதல். 'நானற்று நீயாகும் வழியை காட்டு.' (29) என மன்றாடுகிறார். சென்ற பிறவிகள் போகட்டும் இப்போது வழிகாட்டு என்கிறார் (27). பள்ளமும் நதியும் ஏரியும் வலையும் சூழ எங்கும் செல்ல முடியாமல் கொல்ல நினைக்கும் மாயையிடமிருந்து காக்க வேண்டும் என சென்னமல்லிகார்ச்சுனனிடம் வேண்டுகிறார். ஒருவகையில் இவை யாவும் இருத்தலியல் படிமங்கள்தான். ஆன்மீக கவிதைகளும் நவீன கவிதைகளும் இருத்தலியல் படிமங்களை ஒன்றுபோலவே பயன்படுத்துகின்றன. அங்கிருந்து அவை அடையும் அடுத்தக்கட்ட பரிணாமங்களே அவற்றின் தனித்தன்மையை தீர்மானிக்கின்றன என சொல்ல முடியும். ஆகவேதான் நவீன கவிதைகளின் வாசகனுக்கு ஆண்டாளோ அக்கம்மாவோ அந்நியமாக தெரியவில்லை‌. 


காமத்தின் கற்பனையில் கருகி அமர்ந்திருந்தேன் அம்மா

மோகித்து முத்தமிட்டு மடைச்சியானேன் அம்மா

வெளியிடாது விடாது களித்து நம்பினேன்

என் தேவன் சென்னமல்லிகார்ச்சுனன்

என்னை விரும்பாவிட்டால்

என்ன செய்வேன் அம்மா (99). 


வெந்தீயென பற்றி எரியும் காமத்தின் புழுக்கத்தை சொல்கிறது இவ்வசனம். 

 

'தேடிக் காணாத உடலையும்

முயங்கிப் பெறாத சுகத்தையும்

எனக்கருள்க சென்னமல்லிகார்ச்சுனனே. புழுவை போல் வளைந்து நெளிந்தேன்

மணலைப் போல் காற்றில் பரந்தேன்

கனவுகளிலும் வேதனைமில் மிரண்டேன்

ஆவிச்சூட்டைப்போல் சுருள் சுருளாகக வெந்தேன். (100)






'பால் நீர் போல நீயிருப்பதால்

முன்னால் என்ன பின்னால் என்ன என்றறியேன்

யார் செய்வோன் யார் சேவகன் என்றறியேன்

எது கனத்தது எது சிறியது என்றறியேன்

சென்னமல்லிகார்ச்சுனனே

உன்னை விரும்பிக் கொண்டாடினால்

எறும்பும் ருத்ரன் ஆகாதோ

சொல் ஐயனே.(79)


மேலே உள்ள வசனம் ஐக்கிய நிலையின் அனுபவத்தை சொல்கிறது. இரண்டற்ற நிலையில் லயித்திருக்கிறார். 'சென்ன மல்லிகார்ச்சுனனுக்குள் இருப்பவளை என்னவென்று அழைப்பாய் அம்மா?' (78) என கேட்கிறார். 

'சுகமே படுக்கை 

பார்வையே அணிகலன்

ஆலிங்கனமே ஆடை 

முத்தமே ஊட்டம்

காதல் பேச்சு தாம்பூலம்

உணர்ச்சி மோகனம் நறுமணத் தைலம்

சென்னமல்லிகார்ச்சுனனோடு கலத்தல் 

பரம சுகம் அம்மா!' (70) என்பதில் அவரது பரவசம் வெளிப்படுகிறது. இது இரண்டாவது கட்டம். 


'கூட்டத்தில் பிரிந்து அகப்பட்ட யானை

தன் விந்தியாவனத்தை நினைவுகூர்வதைப் போல்

நினைவுகூர்கிறேன் ஐயனே

சிறைப்பட்ட கிளி தன் உறவை நினைவுகூர்வதைப் 

போல் நினைவுகூர்கிறேன் ஐயனே (90)' என பிரிவை எண்ணி வருந்துகிறார். இது மூன்றாம் நிலை. பெரும்பாலான வசனங்களை இம்மூன்று பிரிவுகளுக்குள் அடக்கிவிடலாம். 


'ஐம்பொறிகளால்தொல்லையுற்று

இறுமாந்த இளம் உடல் வீணாய்ப் போனதே!

நறுமணத்தை உண்கையில் 

படபடப்பதை நிறுத்தும் தும்பியாக

இனி என்று என்னை உட்கொள்ளப் போகிறாய்

சென்னமல்லிகார்ச்சுனனே?' (91) 


தும்பிக்கு தேன் குடிக்கும் போது பதட்டமில்லாத நிதானம் கைகூடுகிறது. தேன் ததும்பி காத்திருக்கும் மலரை தும்பி கண்டுகொண்டு அருந்துகிறது. நம் முயற்சிகள் இருந்தாலும் முக்தி என்பது இறையால் அருளப்படுவதென்பது விசிஷ்டாத்வைதத்தின் பார்வை. பக்தி இயக்கம் அத்வைத வேதாந்தத்தின் இறுகிய மெய்யியல் சட்டகத்தை நெகிழ்த்திய மெய்யியல் மரபென விஷிஷ்டாத்வைதத்தை குறிக்க முடியும். 'சிவன் நேசித்தாலன்றி கைகூடாது' (77) என நேரடியாகவே சொல்கிறார். இந்த வசனம் நம்மாழ்வார் பாசுரத்தை எனக்கு நினைவுபடுத்தியது. 


வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று


ஆர்வு உற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்


பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்


கார் ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே


உன்னை எப்போது காண்பேனோ அப்போது வாரி விழுங்கிவிட வேண்டும் என்றிருந்தேன் ஆனால் நீயோ என்னை முந்திக்கொண்டு என்னை முழுதாக விழுங்கிவிட்டாய் என்கிறார் நம்மாழ்வார். 




அக்கம்மாதேவி கவிதைகளின் ஊடாக சில உரையாடல்களை நிகழ்த்துகிறார். அவ்வுரையாடலின் வெவ்வேறு தரப்புகளுடன் முட்டி மோதுவதும், முரண்படுவதுமே அவரை ஞானியாக அல்லாமல் எரியும் தீவிரம் கொண்ட கவியாக நமக்கு காட்டுகிறது. ஞானியரின் சொற்கள் தெள்ளிய நீரோடை என்றால் கவியின் சொற்கள் ஆர்ப்பரிக்கும் அருவி. அவரே ஒரு வசனத்தில் குறிப்பிடுவது போல் 'அஞ்ஞானியுடன் பழகுவது கல் உரசி நெருப்பு உருவாவது போல். ஞானிகளுடனான பழக்கமென்பது தயிர் கடைந்து வெண்ணெய் எடுப்பது போல். ஆனால் அக்கம்மா இவையிரண்டையும் தேர்வு செய்யாமல் 

சரணர்களுடனான உறவை தேர்ந்தெடுக்கிறார் அது 'கற்பூர மலை தீப்பிழம்பாவது போல்.' (23) இந்த உருவகம் அபாரமானது. கல்லிலிருந்து நெருப்பை உண்டாக்க பெரும் முயற்சி வேண்டும். வெண்ணெய் எடுக்கவும் பொறுமை வேண்டும். ஆனால் கற்பூர மலை நெருப்பை தொட்ட உடனேயே தீப்பிழம்பாகி விடும். முயற்சி, பொறுமை என எதுவும் தேவையில்லை அண்மை மட்டுமே போதும். கவியின் பாதை இதுவாகவே இருக்க முடியும். 



குன்றின் மீது வீடு கட்டி விலங்குகளுக்கு அஞ்சுவது, சமுத்திரக்கரையில் வீடு கட்டிவிட்டு நுரைதிரைகளுக்கு அஞ்சுவது, சந்தை மத்தியில் வீடு கட்டிவிட்டு கூச்சலுக்கு நாணுவது அபத்தம் என்கிறார் (7).  இது  உலகவாழ்கையை அச்சமின்றி, ஓடி ஒளியாமல் எதிர்கொள்ள வேண்டும் என சொல்கிறது. அதற்கடுத்த வசனத்திலேயே உலகத்துடன் எப்படி வாழ்வது எனும் கேள்விக்கு விடையும் அளிக்கிறார். பல் பிடுங்கப்பட்ட பாம்பு போல உடல்பந்தம் விடுபட்ட உடலுடன் பிரபஞ்சத்திலிருந்து மாயையை நீக்கி வாழ முடியும் என்கிறார். இதற்கு மாறான எண்ணமும் கவிதையில் வெளிப்படுகிறது. வெளியேறியவர்கள் நியதிகளற்றவர்கள். அவர்களால் மீண்டும் நியதிகளுக்குள் பொருத்திக்கொள்ள முடியாது. 'துன்ப வினைகளில் உழலும் மனிதர்கள் காணாமல் ஒன்றைப்பேசினால் நிட்டையுள்ள சரணர்கள் நிலையற்ற உலகத்துக்கு திரும்புவார்களா?' (13)  என கேட்கிறார். இந்த வசனத்தில் அவர் பயன்படுத்தும் உருவகங்கள் மரபானவை. வெட்டப்பட்ட மூங்கில் மீண்டும் துளிர்காது  ஏனெனில் அது வேரை இழந்து விடுகிறது. சுட்ட மண் சட்டி மண்ணுடன் கலக்குமா? தவம் எனும் நெருப்பால் பக்குவப்பட்டது மீண்டும் எப்படி தன்னியல்பை இழக்கும்? பழுத்த கனி காம்போடு ஒட்டுமா? காம்பு என்பதே உலகியல். கனி பழுக்கும் வரை அதை தாங்கி பிடிப்பதோடு அதன் கடமை நிறைவடைகிறது. 


'மலைக்குச் சாரமில்லை என்கிறார்கள்

பிறகெப்படி மரங்கள் பிறக்கின்றன?

கரிக்குச் சாரமில்லை என்கிறார்கள்

பிறகெப்படி இரும்பு அதில் உருகுகிறது?

தனக்கு உடலில்லை என்கிறார்கள்

பிறகெப்படி சென்னமல்லிகார்ச்சுனன்

காதலித்துக் கூடுவான்? (100)' என கேட்கிறார். அத்வைத வேதாந்தத்தின் உடல் மறுப்பின் மீதான விமர்சனமாக இதை காண முடியும். 

கணவன் கூட இகத்தின் குறியீடாகவே கவிதையில் உருகொள்கிறார். 'இகத்துக்கு ஒரு கணவன்/ பரத்துக்கு ஒரு கணவனா?/ உலகியலுக்கு ஒரு கணவன்/ பரம்பொருளென ஒரு கணவனா?' (64) என கேட்டு சென்னமல்லிகார்ச்சுனேன கணவன் பிற ஆண்கள் எல்லாம் முகில் மறைக்கும் வண்ண பொம்மைகள் போல்வர் என்கிறார்.  மற்றொரு வசனத்தில் 'இந்தச் சாவுற்ற கேடுற்ற கணவர்களை

அடுப்பில் வை தாயே.' (116) என மனமுருக வேண்டிக்கொள்கிறார். தற்காலிகமானதை அல்ல நிரந்தரமானதையே தேர்வு செய்கிறார். ஆனால் அதை தற்காலத்துக்கு கொணர்கிறார். இவ்வகை வசனங்களில் எனக்கு அபாரமானதாக தோன்றியது இவ்வசனம் தான்.


'உள்ளே கணவன் வெளியே காதலன் 

இரண்டையும் நடத்த முடியவில்லை அம்மா

சென்னமல்லிகார்ச்சுனனே

வில்லையும் விளாம்பழத்தையும்

ஒன்றாய்ப் பிடிக்க முடியவில்லை ஐயா.' (33) 


பல்வேறு வாசிப்பு சாத்தியங்கள் கொண்ட வசனம் இது. கணவர் - வில்

விளாம்பழம்- காதலர். வில்லின் நாண் நேரானது, அம்பு இலக்கை சென்று நேராக தாக்குவது, கவனத்துடன் கையாளப்பட வேண்டியது. நியதிகள் உடையது. விளாம்பழம் கடின ஓட்டுக்குள் இருக்கும் இனிமை.  பொதுவாக உள்ளே காதலன் வெளியே கணவன் என்பதை நம்மால் எளிதில் வகுத்துக்கொள்ள முடியும். ஆனால் இங்கே அது தலைகீழாகிறது. உள்ளே, தனித்திருக்கும் போது அதிகாரம் செலுத்தும் கணவனாக உள்ள அவனே வெளியே தொலைவுக்கு செல்லும்தோறும் ஏக்கமளிக்கும் காதலனாகவும் இருக்கிறான் என வாசிக்க முடியும். விளாம்பழம் கொழகொழ என ஒட்டிக்கொள்வது. அதை தொட்ட கையால் வில்லை பற்ற முடியாது. வழுக்கும். எப்போது அவன் காதலன் எப்போது அவன் கணவன் என சட்டென அறியமுடியாது. 






'மூச்சே நறுமணமானால் யாருக்குப் பூ வேண்டும்?

பொறுதியும் கருணையும்

சாந்தமும் சகிப்பும் இருந்தால் 

சமாதிக்குத் தேவையென்ன? 

உலகமே தானான பின் 

ஏகாந்தத்துக்கு அவசியமென்ன

சென்னமல்லிகார்ச்சுனனே?'


ஆன்மீகம் என்பது எங்கோ உள்ளதல்ல. அதை அன்றாடத்தளத்திற்கு, பயன்பாட்டிற்கு கொணரும் மெய்யியலை அக்கம்மா முன் வைக்கிறார். 'காயகமே கைலாசா' என்பது பசவரின் வாக்கு. பரத்துக்காக இகத்தை கைவிடும் போக்கை சரணர்கள் ஏற்கவில்லை. 'சென்னமல்லிகார்ச்சுன தேவனின் சரணருக்கோ/ 

இகபரம் இரண்டும் உண்டு' (76) என்கிறார். 


அக்கம்மா முறையாக மெய்யியல்  பயின்றவர் என்றறிகிறோம். பஞ்ச பூதங்கள், சக்கரங்கள், மாயை போன்ற சொற்களை பயன்படுத்துகிறார். ஒருவகையில் பிற பக்தி கால கவிகளிடமிருந்து இது அவரை தனித்து காட்டுகிறது.  'சூரியனைப் போன்றது ஞானம்

சூரியக் கதிர்கள் போன்றது பக்தி

சூரியனின்றி கதிர்களில்லை

கதிர்களின்றி சூரியனில்லை.' (85) என ஞானத்துக்கும் பக்திக்குமான உறவை சொல்கிறார். ஞானம் தொலைவில் உள்ளது. ஆனால் நாம் உணர்வது  அதன் வெம்மையையும் ஒளியையும் கொண்டுவரும் கதிர்களை. ஞானத்தின் இருப்பை நமக்கு உணர்த்துவது பக்தி என்பதாக புரிந்நுகொள்ளலாம்.



  அக்கம்மாவின் வசனங்களில் தென்படும் சில கற்பனைகளும் உருவகங்களும் அவரை நவீன கவிமனதிற்கு நெருக்கமாக்குகிறது. 'நீருக்குள் இறங்கியிருந்தும் வண்ணான் 

தாகித்துச் செத்ததைப் போல' (17) 'உதயம் அஸ்தமனம் எனும் படிகளால்

ஆயுட்குவியல் அளந்து தீர்வதற்கு முன்.'(5) என்பது செறிவான கற்பனை. 'பட்டுப் புழு தன் சிநேகத்தால் கூடுகட்டி

தன் நூல்களாலே தன்னைச் சுற்றி சுற்றி 

மடிவதைப் போல.' (20) இது நவீன கவிதைகளில் பயன்படுத்தப்படும் படிமம். 'பாம்பின் வாயிலிருக்கும் தவளை

ஈயைக் கவ்வக் குதிப்பதைப் போல

ஊட்டத்துக்கான தேடல் விடுவதில்லை.'(30) இதுவும் அபாரமான இருத்தலியல் படிமம். 


'யானை எரிந்து மலை எரிந்து

பொன்னரளி மரம் மிஞ்சும்போது

கீர்த்திமிகு சென்னமல்லிகார்ச்சுனனைக் கலப்பேன்' (51) பொன்னரளி மரம் மட்டும் எஞ்சுவது என்பதொரு அற்புதமான காட்சி. 


நவீன தமிழ் கவியுலகின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான பெருந்தேவியால் கவிதை பிரக்ஞையுடன் இவ்வசனங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன என்பதே இத்தொகுதியை பிறவற்றிலிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. 















 

இன்மையின் இருப்பு - அபியின் கவிதைகள்

நன்றி தமிழினி. அபி 80 க்காக எழுதிய கட்டுரை.  



அந்தி விளையாட்டு

முடிகிறது

வாசற்படிகளில் பிள்ளைகள்

வந்து தளைப்படுகின்றனர்

பேச்சும் சிறு சிரிப்புகளும்

விசிறி மஞ்சளாய்க் கனல்கிறது மாலை

கதை மனிதர்கள் 

ஆழங்களிலிருந்து மின்னிக்கொண்டு 

வருவதும் போவதுமாயிருப்பர்

ஏதேதோ அடுக்குகளிலிருந்து 

ஏதேதோ அரூபங்கள் 

பறந்து படிந்து மறையும்

காலத்துள் நிகழ்ந்திராத 

காலம் தகதகத்து

பிள்ளைகளின் கண்களில் இறங்கும் 

கதைகள் சற்றே வண்ணம் கலங்கி, எனினும் உள்வெளிச் சஞ்சரிப்பில் 

உயிர் சேகரித்துக்கொண்டு

பழைய இருப்பிலேயே 

புதிது புதிதாகும்

எல்லாவற்றுடனும் இழைந்து

இருத்தலே 

காத்திருத்தலாக

நான்

மாலை- கதை, அபி


கவிதையைப் பற்றி  எழுதுவதென்பது பிடித்த கவிதைகளை இதை வாசித்துப்பாருங்கள் என பரிந்துரைப்பதற்காகவும், நமக்கு பூடகமாக விளங்கிய ஏதோ ஒன்றை சக வாசகர்களுக்கு கடத்த முயல்வதற்காகவும், அம்முயற்சியில் கவிதையை நாம் மேலும் நெருங்குவதற்காகவும்தான். எனக்கு பிடித்த அபியின் கவிதையோடே இக்கட்டுரையை தொடங்கியுள்ளேன். 'கவிதைகளில் சூசக இடைவெளிகளைக் காண்பதோடு நிறுத்திக் கொள்வதே நல்லது; அவற்றுக்கு அர்த்தம் தேடும் முயற்சி இடைவெளிகளை பழுதாக்கிவிடும்.' என கவிதையை அர்த்தப்படுத்திக்கொள்வதற்கான நம் அதீத மெனக்கெடல் குறித்த அவரது எச்சரிக்கையை நினைவில் கொள்ள வேண்டும்.



அபியின் கவிதைகளை உள்வாங்கிக்கொள்ள  கவிதைப் பற்றிய அவரது பார்வை பெரும் உதவியாக இருக்கக்கூடும்.  'கவிதை நம் அனுபவங்களைத் தூண்டும் ஒரு தூண்டல் மட்டுமே. அனுபவம் அவரவரிடம் இருப்பது. ஒருவருடையது இன்னொருவருக்கு போகாது.' என எழுதுகிறார. மற்றொரு தருணத்தில் கவிதை, கவிஞன், வாசகன், அனுபவம் இலற்றுக்கு இடையேயான உறவை பேசும்போது கவிதை உருவாவது மற்றும் பொருள்கொள்ளப்படுவது சார்ந்த புரிதலை அளிக்கிறார். 'அழுத்தமான சுய பிரக்ஞை கொண்ட கலைஞனுடைய அனுபவம் ஒரு பொது ஊடகத்தின் வழியாக வாசகனிடம் சேர்ந்து அவனுக்கென்று தனித்த தொனியுடைய சுயப் பிரக்ஞை உருவாகத் தூண்டுகிறது. தனி அனுபவம் > பொது அனுபவம் > மீண்டும் வேறொரு தனி அனுபவம்.' அபியின் அத்தனை கவிதைகளும் என்னால் உள்வாங்க முடிந்தது என நிச்சயம் கூற முடியாது. ஆனால் மேற்சொன்ன வகையில் வாசகனாக எனது தனி அனுபவத்துடன் தொடர்பு கொண்ட கவிதைகளின் மீதான அகவயமான வாசிப்பையே இக்கட்டுரையில் எழுத முயல்கிறேன். 

 


அபியின் கவிதைகளை முதன்முறையாக இரண்டாண்டுகளுக்கு முன்னர் வாசிக்கத் தொடங்கியபோது சற்று திணறித்தான் போனேன். மொழியின் காரணமாகவோ பேசு பொருளின் காரணமாகவோ கவிதை வசப்படாதது ஒரு சிக்கல் என்றால் வசப்பட்ட ஒன்றிரண்டு கவிதைகளும் கடும் அமைதியின்மையை ஏற்படுத்தியது. அமைதியின்மைக்கான‌ காரணத்தை என்னால் அப்போது விளக்கிக்கொள்ள முடியவில்லை. தீய நிகழ்வை முன் உணரும்போது ஏற்படும் மனத்தொந்தரவை ஒத்திருந்தது. 

என்ற ஒன்று 


சூன்யம் இருந்தவரை 

எல்லாம் சரியாயிருந்தது 


இதன் இல்லாமையையும் 

சூன்யத்தில் அடக்கிச் 

சமாதானப்பட முடிந்தது 


ஏழுகடல் எழுதீவு எழுவானம் கதைக்கேட்கும் 

குழந்தைகளுக்கு 

இறுதியில் கிடைத்தேவிடும் சூன்யம் 

என்ற 

குறுகுறுப்பு இருந்தது 


நாமும் 

நீ நான் என்ற 

அடையாளச் சிக்களைப் 

புறமொதுக்கிவிட்டு 

நிம்மதியாயிருக்க முடிந்தது 


கேள்விகள் வந்து 

கொத்தித்த தின்ன நின்றால் 

நம்மைக் கொடுத்துவிட முடிந்தது 

இல்லாமலாவது இருப்போமல்லவா 

என்று 


எதிர்மறைகளின் 

இரைச்சலை 

அமைதியாய் 

ரசிக்க முடிந்தது 


பூமியைத் தொடும் அடிவானத்திடம் 

அலட்சியம் காட்ட முடிந்தது 


தைரியமாக 

விஷயங்களைப் 

பகைத்துக் கொள்ள முடிந்தது 

எப்படி இருப்பினும் 

இவை போகமுடியாத இடம் 

நாம் போக இருக்கிறது என்ற 

நம்பிக்கையில் 


சூன்யம் என்ற ஒன்று 

இருந்தவரை

எல்லாம் சரியாயிருந்தது

சாரத்திற்கும் சூன்யத்திற்குமான முரண்கள் நூற்றாண்டுகளாக இருந்துவரும் விவாதம். சூன்யவாதிகள் இன்மையை அஞ்சியே சாரத்தை கற்பிதமாக உருவகிக்கிறோம் என குற்றம் சாட்டுகிறார்கள். அறிவியலும் பகுத்தறிவும் சாரவாதத்திலிருந்து நம்மை படிப்படியாக சூன்யவாதத்தை நோக்கி நகர்த்தியுள்ளது. தாஸ்தாவெஸ்கி சாரமிழப்பின் அச்சுறுத்தலையே அதிகமும் பேசினார். வாழ்வின் பொருளையும் அறவுணர்வையும் சூன்யவாதம் எப்படி பதிலீடு செய்யும் என்ற கேள்வி அவரை ஆட்கொண்டது. ஆனால் இந்த நூற்றாண்டில் நாம் சூன்யத்திற்கு மெல்ல பழகியுள்ளோம். அதுவே நமக்கு ஆசுவாசம் அளிப்பதாகவும் உள்ளது. பொறுப்பிலிருந்து நமக்கு பெரும் விடுதலையை அளிக்கிறது. அபியின் மேற்சொன்ன கவிதை சூன்யத்தை மறுதலிக்கிறது. அப்படியானால் சாரமுள்ளது என சொல்கிறதா என்றால் அதுவும் இல்லை. சூன்யமே நம் வாழ்க்கைக்கு ஆதாரமாகிப்போன தலைகீழ் நிலையில் அதையும் துணிக்கிறார். அவரே சொல்வது போல் 'வாழ்க்கையின் இருண்மை கவிதையை எளிதில் தொற்றிக் கொள்கிறது.' இருமைகளை கட்டமைக்காத இருண்மை தான் அபியின் கவிதையில் உணரும் அமைதியின்மைக்கான காரணம். ஏனெனில் நமக்கு இது பழக்கமில்லை. இன்மையின் இன்மை இருப்பல்ல என உணரும்போது ஏற்படும் திடுக்கிடல். 

'படிமங்கள் அரூப நிலைகளை நோக்கியாவை. மௌனத்தைத் தொட முயல்பவை.' என படிமங்கள் குறித்து அபி குறிப்பிடுகிறார். மிகத்தீவிரமான படிமங்கள் கவிதையில் எழுந்து வரும்போதும் மனம் படபடப்பை உணர்கிறது. 

எலும்புகளின் நூலகம்


பாழடைந்த சிற்றூர் அது விளையாட்டாய் 

ஒரு கல்லைப் பெயர்க்க 

அடியில் ஊர்ந்தன 

நூறு வயது

விஷப்பூச்சிகள்

வெறும்

முள்செடி விரிப்பின் மீது 

வெயில் கிழிந்து கொண்டிருந்தது

எரிந்த குழந்தைகளின் 

உடல் விறைப்பைப் 

பார்த்துக் கொண்டிருந்தன 

கரிந்த சுவர்கள்

மொழிகளை மறந்துவிட்ட மனசுக்குள் 

தூரதூர தேசங்களின் 

ரத்தம் வந்து 

பாய்ந்து கொண்டிருந்தது

விளையாட்டாய்

வீதிகளைப் புரட்டியபோது

அடியில்

நரபலி தேவதைகளின்

நடன மண்டபம்

நீச்சல் குளம்

ஆமைமுதுகுபோல் சாலை

எலும்புகளின்

மிகப்பெரிய நூலகம்...

'எலும்புகளின் நூலகம்' 'நரபலி தேவதைகளின் நடன மண்டபம்' போன்ற இரண்மை நிறைந்த படிமங்கள் அடர்த்தியை கூட்டுகிறது. 


அபியின் சில கவிதைகளில் தலைகீழாக்கம் நிகழ்கிறது. இரவின் இருளை போக்க கதிரொளி பாய்ச்சும் ஆதவன் என்பது ஒரு பொது உருவகம். இங்கே அது தலைகீழாகிறது. 

காலம்- கறுப்புச் சூரியன் 

இந்த 

ஒளியின் பயங்கரத்தில் 

வழிகண்டு போக 

கண் மறைத்துப் போக 

ஒரு கறுப்புச் சூரியன் 

உண்டு 

ஒவ்வொருவரிடமும் 


தெளிவு எனும் கவிதையில் இப்படியான ஓரு தலைகீழாக்கம் நிகழ்கிறது. சிந்தையிலும் செயலிலும் தெளிவென்பது நாம் விரும்பத்தக்க, வளர்த்தெடுக்க வேண்டிய நல்லியல்பாக காண்கிறோம். அதற்காக அயராது முயல்கிறோம். 'தெளிவு என்பது பொய்/ என அறியாது/  தெளிவைத் தேடிப்  பிடிவாதம் ஏறிப்/  பாமரப் பயிற்சிகளால் களைத்து மகிழ்ந்த/  பழைய நாட்களை நினைத்துக் கொண்டேன்'. தெளிவு பொய்யாகிறது, அதற்கான விழைவு பாமரத்தனமான அறியாமையின் வெளிப்பாடாகிறது.  


கால்பந்து இருத்தலியல் சிக்கலை சார்ந்து மிக முக்கியமான படிமமாக பயன்படுத்தப்படுகிறது. விதி மற்றும் தன்னை மீறிய ஆற்றல்கள், நியதிகளுக்கும் சுயேச்சைத்தன்மைக்கும் இடையேயான முரணை சித்தரிக்க கால்பந்து எனும் படிமம் பயன்படுத்தப்படுவது வழக்கம். அபியின் கால்பந்தும் இதே உரையாடலை கவிதையில் நிகழ்த்துகிறார். 

கால்பந்து


வெற்றியும் தோல்வியும் 

எல்லாம் விளையாட்டு 

அடிபடும் பத்துக்கோ 

அத்தனையும் வினை


குதிக்கட்டும். 

காற்றிருக்கும் வரை; 

குதித்துக் குதித்து 

வானை உரசத் தாவி மண்ணிலேயே விழுந்து 

குரலிட்டுக் 

குதிக்கட்டும்


வெளிக்காற்றினலைகள் 

எதிலும் அடைபடாத ஜீவன்கள் இன்னும் பிறக்காதவை. 

இதை அலைத்து இழுத்து உயர்த்திச் சரிக்கையில்


உள்ளிருப்பது.

அடைபட்டதற்கு ஏங்கித் 

தன் தோல்சிறையை 

உருட்டி உருட்டிப் பார்க்கும்...


ஏதேதோ புழுதிக் கால்கள் அத்தனையும்

ஒருகாலின் 

இடம் வேறுபடும் சாயைகள்

எட்டி எட்டி உதைக்க

இது

தப்பி ஓடும்; இன்றேல்

எதிர்த்துப் பாயும்.


முடிவில்

கால் கொடுத்த

கண்ணைக் கொண்டு

கால் காட்டிய திசைநோக்கி

அழுதழுது ஓடும்


காலன்றி வேறறியாமல்

காலின் கடும்உதைகொண்டோ 

காலின் மெல்லணைப்புக் கொண்டோ

காலுக்குரிய முகத்தைக் 

கற்பனை செய்து கொள்ளும் நிமிஷத்துக்கு நிமிஷம்


அதுவே ஜெயிக்க

அதுவே தோற்க, 

பந்துக்கு என்ன கிடைக்கிறது?


பந்தும் ஆடும்

காலும் ஆடும்

யாரை யார் ஆட்டுவிப்பது?

இக்கவிதையின் இறுதி வரிகளில் அபி எழுப்பும் கேள்வியின் வழியாக கவிதை மற்றொரு பரிமாணத்தை அடைகிறது. தலைகீழாக்கம் என்பது நேர்மறையில் தொடங்கி எதிர்மறையில் முடிவது மட்டுமல்ல, எதிர்மறை நேர்மறையாக உருமாறுவதும் தான். அபியின் 'தோல்வி' அத்தகைய ஒரு முயற்சி. 

தோல்வி


தோல்விக்குப்பின் வந்த நாட்கள் கலவரப்படாமல் கடக்கின்றன


அலையடங்கிய நீர்ப்பெருக்கின்

மேலாக

மெல்ல நடந்து செல்வதில் சுகம்


பழக்கமில்லாத தாவரங்களுடன்

ஜீவராசிகளுடன் 

வழக்கில் இல்லாத வார்த்தைகளுடன் 

தனியே விடப்பட்டிருப்பதில் ஆறுதல்


வாசனை எதுவும் இல்லை

சுவாசம் சிணுங்காமல் போய்வருகிறது 


சாம்பல் நிறம் மட்டும்

மெருகேறியிருக்கிறது

வேறு நிறங்கள் இல்லை 


பார்ப்பவைகளுடன்

பார்க்க முடியாதவைகள் பிரித்துணர முடியாதவை ஆகிவிட்டன

மனசின் மேய்ச்சல் நின்றுவிட்டது

இந்தத் தருணங்களின் விளிம்பிலிருந்து 

எட்டிப் பார்க்கையில் 

செய்தி ஒன்றும் தெரிவிக்காத அமைதிப் பள்ளத்தாக்கு

அபி இக்கவிதைகளில் நவீனத்துவ, இருத்தலியல் போக்குகளை வெளிப்படுத்துகிறார். சித்திரக் கூடம் கவிதையில் வரும் இவ்வரிகள் நவீனத்துவத்தின் சிறந்த உருவகம் 'பூரணத்துவத்தைத்/ தோண்டியெடுக்க/ வெட்டிய பள்ளங்கள்/  எங்கும்.'  செயலில் இருக்கும்போது ஓய்விற்கு செயலின்மைக்கும், ஓய்விலிருக்கும்போது இயக்கத்திற்குமான ஏக்கம் மாறி மாறி அலைக்கழிக்கிறது ஒய்வு எனும் கவிதையில்.  'சாயைகளைத் தின்கிறாய்'  நிழலை நோக்கி பேசும் கவிதை. நவீனத்துவத்தில் நிழல் மிக முக்கியமான பேசு பொருளாக தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. 'எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?' எனும் மௌனியின் கேள்வி நினைவுக்கு வருகிறது. 





இருண்மை இல்லாத சில அபாரமான கவிதைகளும் அபி எழுதியுள்ளார். 

இவ்வளவு மின்னல்களும் 

மேய்ந்துதானோ

என் வானம்

இவ்வளவு சுத்தமாயிருக்கிறது? 

எனும் வரிகளில் நிறைந்துள்ள கற்பனை அபார மன எழுச்சியை அளித்தது. 'இடைவெளிகள்' பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் தன் கற்பனையின் ஆற்றலுடன் சித்தரிக்கிறது. 


இடைவெளிகள் 

யாரும் கவனியாதிருந்தபோது 

இடைவெளிகள் 

விழித்துக்கொண்டு 

விரிவடைந்தது 

நட்சத்திரத்திற்கும் நட்சத்திரத்திற்கும் 

அர்த்தத்திற்கும் அர்த்தத்திற்கும் 

உனக்கும் உனக்கும் 

வினாடிக்கு வினாடிக்கு 

இடைவெளிக்கு இடைவெளிக்கு 

என்று 

இடைவெளிகள் விரிவடைந்தது 

வெறியூறி வியாபித்தன 

வியாபகத்தின் உச்சத்தில் 

மற்றெல்லாம் சுருங்கிப்போயின 

ஆங்காங்கிருந்து 

இடைவெளிகள் ஒருங்கு திரண்டு 

அண்டவட்டமாயின 

வட்டத்தின் விளிம்பைச் சுற்றிலும் 

சிற்றெறும்புகளாய் 

வாழ்க்கைத் துகள் 

வட்டத்தின் சுழற்சியில் 

நடுவே தோன்றி வளர்ந்தது 

பேரொளி 

அதற்குப் பேச்சு வரவில்லை

சைகைகளும் இல்லை 

எனினும் அதனிடம் 

அடக்கமாய் வீற்றிருந்தது 

நோக்கமற்ற ஒரு 

மகத்துவம் 

பேரொளியாக அமர்ந்திருக்கும் ஒரு 'நோக்கமற்ற மகத்துவம்' எனும் சொல் பயன்பாடு மனதை சிறகடிக்கவைத்த சொற்றொடர். 

மாலை -- காலியிடம்

உண்மை

தன் பழைய இடத்துக்குத்

திரும்பி வந்து விட்டது

எப்போதும் காலியாயிருக்கும் இடம்


அது இல்லாத இடம் எது

என்பது பெரியோர் வாதம்.

வாதம் தெரியாமல்

எவர் பேச்சையும் கவனிக்காமல்

இதையே கவனித்திருக்க நேர்கிறது,

திரும்புவதை, திரும்புவதை மட்டும்.


புழுதிப் படலத்தோடு மிதந்துபோகும்

இடைச்சிறுவர்கள்

பசியின் பார்வையில் எரியும் விறகு

கடைசி மஞ்சள் கிரணத்தின்

தயங்கிய மூச்சு

--எதுவாயினும்

என்மீது பட்டவுடன்

விலகிப் போகின்றன, கவனம் கவராமல்.


இடம் இல்லாதிருந்ததில்

இடம் பரவிக்கொண்டது,

காலியிடம்


வாசலில் தொடங்கி

வானம் அடங்கி

தான் இன்றி இருண்டு கிடக்கும்

மனசின் வெளிவரை

எங்கும்

காலியிடம் காலியிடம்

அன்றாடங்களில் இருந்து சத்தியத்தை அறிவதையும் அதை கவிதைகளில் வெளிப்படுத்துவதைப்பற்றியும் அபி இப்படிச்சொல்கிறார். 'அவனைச் சுற்றி இருக்கும் எந்த பொருளிலும் அவனுக்கு தரிசனம் கிட்டலாம். எந்தச்  சாதாரணச் சிறு பொருளையும் பற்றித் தொற்றிக்கொண்டு சத்தியம் பளீரெனத் தோன்றிவிடலாம்.' காலியிடம் காலியிடம் என ஒரு உச்சாடனம் போல் முடியும் இக்கவிதை இன்னதென்று விளக்க முடியாத மன எழுச்சியை அளித்தது. விரி மணல் பொட்டல் வெளியை வான் கூரைக்கு அடியில் நின்று நோக்கும் போது ஏற்படும் நிச்சலனம்.  



இருப்பும் இன்மையும் அபியின் கவிதைகளில் தொடர்ந்து பேசப்படுகிறது. 

அதுதான் சரி 


எல்லாம் தெரிவதும் 

ஏதும் அறியாததும் 

ஒன்றேதானென்று 

தெருவிலொரு பேச்சு 

காதில் விழுந்தது 


ஏதும் அறியாமல் 

இருப்பதுவே சரி 

என்று தோன்றிற்று 


இருந்தால் 

இருப்பதை அறியாமல் 

இருப்பது 

எப்படி 


அதனால் இல்லாதிருப்பதே 

சரியென்று பட்டது 


இல்லாதிருந்தல் 

ஒருவசதி 

தெருப்பக்கம் 

போகவேண்டியதில்லை 

இல்லாதிருப்பதும் 

இருப்பதும் ஒன்றே 

என்றொரு பேச்சைக் 

கேட்டு குழம்பும் 

குழப்பம் இல்லை


இருப்பு- இன்மை சார்ந்த கவிதைகளில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் தாக்கம் தென்படுவதாக தோன்றியது. இருத்தல் எனும் கவிதையில் 'பின் இருத்தல் என்னதான்?/ இல்லாதிருத்தலே/ இருத்தல்' என கேள்வியை எழுப்பி பதிலையும் சொல்கிறது. நெருங்குவது என்றொரு கவிதையில் இருப்பை கைவிடாமல் நெருங்க முடியாது, இருப்பை விட்டுவிட்டால் நெருக்கத்திற்கும் விலக்கத்திற்கும் பொருளேது எனும் கேள்வியை எழுப்புகிறது. 

நெருங்காதிருப்பதன் விளைவு 

நெருங்கியிருக்கிறோம் என்று 

நினைப்பது 


ஓரொரு சமயம் 

பின்வாசல் வழி 

கற்பனை வந்து 

உண்மையைச் சொல்லிப் போகும் 


நாம் நெருங்கியதில்லை 


அவரவர் இருப்பில் 

அவரவர் இருக்க 

நெருங்குவதெப்படி 


இருப்பை நீத்து நெருங்குவதென்றால் 

அவரவர் என்பதில்லாமல் 

யார் யார் நெருங்கியது 

நெருங்கியவர் இல்லாது 

நெருக்கம் என்ன 


நாம் நெருங்கியதில்லை

மனிதனின் தனியிருப்பை அபி கவிதைகளின் ஊடாக கேள்விக்குள்ளாக்குகிறார். 'ஏற்பாடு' கவிதையில் 'பாவனைகளில் மிக மூத்த நான் என்ற பாவனை' என சொல்கிறார்.  மாற்றல் எனும் கவிதையில், பின்னணிகளை, இடைப் பொழுதுகளை, பின்னணித் தளங்களை, அதன் நடமாட்டங்களை, சூழலை, சாயைகளை என ஒவ்வொன்றையும் மாற்றிக்கொள்வதன் உச்சமாக 'மாற்றல் நிரந்தரப்  படுகிறதா/ உடனே/ மாற்றிக்கொள்வோம்/ மாற்றல்களை' என எழுதுகிறார். பவுத்தத்தின் மகாதர்மம் போல தனியடையாளம் அற்ற பேரியக்கத்தை சொல்கிறது அவரது கவிதைகள். 'பொதுமை' எனும் கவிதையில் 'நான் சொல்ல துடிப்பது/  ஏன் அலைக்கழிகிறாய்/  உனது இருப்பின்/  அசைவற்ற பொதுமையை/  ஏன் கலைக்கப் பார்க்கிறாய்?' தனித்துவத்தின் மீதான விழைவு அலைகழிப்பாகிறது. தனித்தன்மைகளை இழந்து ஒற்றையாக ஆகும் கணங்களை கவிதைகளில் தொடர்ந்து காண முடிகிறது. 'உருவினுள் மறைந்து உருவிழந்த மாலையை' 'ஊர் மேடிட்டுக் கொள்கிறது/  யாதும் ஊர் ஆகிறது.' ஒரு பறவை பார்த்திருக்க இன்னொரு பறவை உண்கிறது எனும் உபநிட வரியை நினைவுறுத்துகிறது 'இதயத்தில் நித்திய கருவாக வளரும் இன்னொரு நான்' எனும் வரி.  ‘புகைமூட்டத்தை புணர்ந்து கருத்தரிக்கத் தைரியம் கொள்கிறான் கவிஞன்.’  கவிதையும் கூட உருவற்று திகழ்கிறது.  




இந்திய தத்துவ மரபுகளில் ஆறு தரிசனங்கள் முதன்மையானவையாக குறிக்கப்படுகின்றன. ''வைசேடிகம்' அவற்றுள் ஒன்று. வைசேடிகம் ஒருவிதமான அணு கொள்கையை முன்வைக்கிறது. அபியின் கவிதைகள் வைசேடிக தரிசனத்துடன் சேர்த்து காணத்தக்கவை எனும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது. வைசேடிகம் 'அபாவம்' எனும் இன்மையையும் ஒரு இருப்பாக கணக்கில் கொள்கிறது. மேலும் உருவும் அரூவமும் அணுக்களால் ஆனவை என கருதுகிறது. இவ்விரு கூறுகளையும் அபியின் கவிதைகளில் காண முடிகிறது. இன்மையையே ஒரு இருப்பாக அவரது கவிதைகள் மீள மீள காட்டுகின்றன. அந்தர நடை கவிதையில் 'உன் சூழல் அணுக்களோ/ உருக்காட்டுமுன்/  உருமாறும்/ ஓயாமாறிகள்' என எழுதுகிறார். ஓயாமறியாக உருமாறிக்கொண்டே உள்ளன சூழல் அணுக்கள். புள்ளியைப்பற்றி எழுதும்போது அதில் அனந்தகோடி அணுக்கள் என எழுதுகிறார். அபியின் தனித்தன்மை என்பது அரூபத்தின் இருப்பை ரூபத்தின் இருப்பை போல் உணர்த்துவது என சொல்லலாம். இவ்வகை கவிதைகளில் எனக்கு மிகப்பிடித்த கவிதை என்பது 'விடைகள்' எனும் கவிதை‌. விடைகளின் முக்கியத்துவம் தலைகீழாக்கப்படுகிறது.

விடைகள் 

விடைகள் 

மிகவும் மெலிந்தவை 

ஏதோ சுமந்து வருவன போல 

முக்கி முனகி வியர்வை துளித்து 

நம் முகத்தில் 

திருப்தி தேடுபவை 


தரையில் கால்பாவாது 

நடக்கவும் 

நீரில் நனையாமல் 

நீந்தவும் 

அறிந்தவை 


முந்தாநாள் 

ஒரு விடையை 

எதிர்ப்பட்டேன் 


என்னைப்  பார்த்தவுடன் 

அது 

உடையணிந்து 

உருவுகொண்டது 


தன்னை ஒருமுறை 

சரிபார்த்துக் கொண்டதும் 

எங்களை சுற்றி 

ஒரு அசட்டுமணம்  பரப்பிவிட்டு 

என்னை நேர்கொண்டது

நான் 

ஒன்றும் சொல்லவில்லை 

நெளிந்தது 

கலைந்து மங்கும்தன்   

உருவை 

ஒருமித்துக் கொள்ளக் 

கவலையோடு முயன்றது 

சுற்றிலும் பார்த்துவிட்டு 

ஒருமுறை 

என்னைத் தொட முயன்றது 

நான் 

எதுவுமறியாத 

பாவனை காட்டியதில் 

ஆறுதலுற்றுக் 

கொஞ்சம் நிமிர்ந்தது 

எதிர்பாராது வீசிய காற்றில் 

இருவரும் 

வேறுவேறு திசைகளில் 

வீசப்பட்டோம் 

திரும்பப்போய்த் 

தேடிப்பார்த்த போது 

சாமந்திப்பூ இதழ்கள் போல் 

பிய்ந்து கிடந்தன 

சில 

சாகசங்கள் மட்டும் 

 உளவாளிகள் எனும் கவிதையில் 'இயக்கங்கள் விலகி நிமிஷங்கள் மட்டும் மொய்த்துக் கிடக்கும் என் உருவங்களை' என்றொரு வரி வருகிறது. 'வயது' எனும் கவிதையில் 'நீ நீத்துவந்த வயதுகள்/  வினாடிகள் மொய்த்து/  விட்ட இடத்தில்தான் மிதக்கும்/  போய்க் கூடிக்கொள்.'  நிமிடங்கள், விநாடிகள் போன்றவை ஈக்களை போல கொசுக்களை மொய்க்கின்றன.  வியர்த்தம் கவிதையில் 'நம் முயற்சிகளின்/  உள்  ஆவி/  கெஞ்சிக் கூடவே வந்து/  வியர்த்து விளிம்புவரை/  புலம்பிப் பார்த்து/ முணுமுணுத்துப்/  பின்தங்கிப்/  புள்ளியாய் மறையும்' முயற்சி எனும் வினைக்கு உள் ஆவி உள்ளது, வியர்க்கிறது, முணுமுணுக்கிறது. 

வினை 

விதைத்த வினை 

விளைந்தது 


விளைத்தவை உதிர்ந்து 

மீண்டும் பெருகின 

மீண்டும் பெருகின 

மீண்டும்...


வினை அறுப்போர் 

எவருமில்லை 

எங்கும் எங்கும் வினைமயம் 


உலகெங்கும் நிறைந்தன 

யுகங்களில் நிரம்பி வழிந்தன 

அண்டம் தன்  

தையல் பிரித்து 

அவதியுற்றது 


இந்தப் பிரளயத்தில் 

மிதந்தவர்களைப் பற்றி ஒரு 

நிச்சயம் பிறந்தது 


மூழ்கிக் 

காணாமல் போனவர்கள் 

கண்டுபிடிப்பார்கள் 

என்றும் 

வதந்தி பிறந்தது

இங்கே 'வினை' என்பது ஒரு பொருளாகி உலகை நிறைக்கிறது. 'அசதி'க்கும் மனித வடிவம் அளிக்கப்படுகிறது இவ்வரிகளில். 'காலையில்/ இவ்வழியே போனவர்கள்/  திரும்பி வருகிறார்கள்/  தோற்றமின்றி/ வெறும் அசதியாக.' 'எஞ்சிய பகுதி' எனும் கவிதையில் துர்கனவுக்கு உரு துலங்குகிறது. 

எஞ்சிய பகுதி

அந்தக் கொடூரக் கனவின் 

ஒரு பகுதியின் மிச்சம்

இன்று பகல் சுண்ணயர்வில் தலையாட்டிப் போனது

இருள் கவ்வியிருந்த 

அதன் ஓரங்கள் பற்றிய நினைவுகூட்டல் 

தோல்வியில் முடிந்து 

அசதி தந்தது

அதன் கூரிய துகள்கள் சில 

மாலை உலாவின் போது செருப்பினுள் நுழைந்திருந்தன

அதன் கொலைநிழல் 

மங்கி மயங்கி 

என்னைச் சூழ்ந்து வந்துகொண்டேயிருந்தது

போக்குவரத்து அடர்த்தியின் நடுவே 

கூடிநின்ற கூட்டத்திற்குள்

எட்டிப் பார்த்தபோது 

கனவின் 

விலாப்பகுதி நைந்து 

ரத்த வெள்ளத்தில் குடல்சரிந்து கிடந்தது

கனவில் வந்தறியாத அதன்

எஞ்சிய பகுதி

இப்படிச் சுற்றித் திரிந்துகொண்டிருந்தது

 

அபி தனது கவிதையின் மொழியைப்பற்றி குறிப்பிடும்போது 'ஒழுங்குபடுத்தப்பட்ட மொழியின் சர்வாதிகாரத்தை ஏற்கனவே உதறியிருந்தன என் கவிதைகள்.' என எழுதுகிறார். அவரைப் பொருத்தவரை கவிதை என்பது மொழியல்ல. 'மனிதனால் படைக்கப்பட்டது மொழி: ஆனால் மனிதனிலிருந்து கவிஞனைப்  படைப்பது கவிதை. மொழி, கருவி, கவிதையே படைப்பாளி.' கவிதை எனும் அரூபம் கவிஞன் எனும் உருவை பிரசவிக்கிறது. படைத்தலுக்கும், படைப்பாளிக்கும், படைப்புக்கும் இடையேயான உறவை பற்றி எழுதும்போது 'பாவனையில் ஆழ்த்திப் படைப்பாளிகளைப்  படைக்கிறது படைத்தல். படைப்பாளி படைக்கப்படுவதில் இருக்குமளவு பூரணமும் எழிலும் அவனுடைய படைப்பு படைக்கப் படுவதில் இல்லை.' என குறிப்பிடுகிறார்.‌ 


நானும் இந்தக் கவிதையும்


நானும் இந்தக் கவிதையும் நண்பர்களே அல்ல 

அப்படித் தோன்றக் கூடும்.


சேர்ந்திருப்பதும் 

ஒரே மூச்சைப் 

பகிர்ந்து சுவாசிப்பதும் விஷயங்களிலிருந்து 

வெளியேறி வெளியேறிக் கலைவதும் காரணமாக 

அப்படித் தோன்றலாம்


இந்தக் கவிதை

ரொம்பவும் எளிமையானது ஒன்றும் சொல்லாதிருக்கிற ஒன்றும் இல்லாதிருக்கிற

 எளிமை


எனது எளிமையோ

இல்லாமையின் இருப்பை, சொல்லாமையின் சொல்லைச்

சுமந்து திரிவது


எனக்கு

நுழையவும் வெளியேறவும் வாசல்கள் இருக்கின்றன


இந்தக் கவிதைக்கு மட்டும் 

எல்லாச் சுவர்களும்

திறந்து மூடித் தருவன


எனது தோழர்கள்

என் சூழலின் விளம்புகளைத்

தொற்றி ஏறி

விரைகிறார்கள் 

எனது பிரதேசப் பகல் நிலங்களின் ஊடாக


இதன் தோழர்கள் 

பிரயாணமற்ற இதனை 

விட்டுப் போனவர்களுமில்லை சுற்றிக் கிடப்பவர்களுமில்லை


நானும் இந்தக் கவிதையும் நண்பர்களே அல்ல 

அப்படித் தோன்றக் கூடும்


பொதுவாக கவிதைகள் குறித்தும், குறிப்பாக தனது கவிதைகள் குறித்தும் அவருக்கு மிகத்தெளிவான புரிதலிருந்தது. "ஓவியமும் இசையும் மௌனத்தில் வேர்பாய்ச்சி நிற்பவை. சொல்லையும் பொருளையும் விட்டு வெளியேறியவை. கவிதையையும் இந்த மௌன நிலைக்கு கொண்டுவர கவிஞன் தீவிர படுகிறான்." என கவிதையின் இலக்கை குறித்து எழுதுகிறார். மேலும் "ஓசை, எழுத்து, சொல், வாக்கியம் என்ற மொழியின் அடையாளங்களில் நின்று கொண்டே மொழியை எதிர்க்கும் கலகமாக அமைவது கவிதை. மொழியின் சொல்லைக்கொண்டே மொழியின் அர்த்தத்தை மீறுகிறது கவிதை" என கவிதையின் இயல்பு குறித்து எழுதுகிறார். கவிதையின் இலக்கு சொல்லின்மை என்பது புதிய பார்வை அல்ல. ந. பிச்சமூர்த்தி அவரது நேர்காணலிலும் இதைக் குறிப்பிடுகிறார். 'என் வார்த்தைகள்' என்றொரு கவிதையில் மொழிக்கும் கவிஞனுக்கும், கவிதைக்குமான உறவு பேசப்படுகிறது.  'என் வார்த்தைகளை நான்/ இழந்து விட்டதாகச்/  சொன்னார் அவர்/  என் ஆசை அது ஆனால்/  உண்மையில்லை ...அர்த்த மாயையில்/ சிக்கிக் கொண்ட என் வார்த்தைகளைத்/  தப்பிப்போக முயன்ற முயற்சிகள்/  வீணாகின/  மனசின் சங்கீதம் புரிந்து/  தவிதவித்துத் தொடர்கின்றன/  வார்த்தைகள்'


‘பிரபஞ்சத்தை அளாவிச் செல்லுகிற பேராறு கவிதை, அதன் கரையில் ஏதோ ஒரு புள்ளியிலியிலிருந்து குதித்து சில அலைகளை எழுப்புகிறேன்.’ என்கிறார் அபி. அபியின் கவிதைகள் சொற்களிலிருந்து பொருளை வளைத்து, சொல்லின்மைக்கு பயணிக்க முயல்கிறது, அவ்வகையில் இயற்கையின் மொழியுடன், பிரபஞ்சத்தின் மொழியுடன் இயைய முயல்கிறது. 

சுனில் கிருஷ்ணன்  

 










Tuesday, November 16, 2021

கடவுளைக் காதலிப்பது



(கோவையில் 'ஆன்மீக கவிதைகள்' பற்றி ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம். நேற்று ஜெ தளத்தில் வெளியான கட்டுரையை அவருக்கு அனுப்பிய பின்னரும் இக்கட்டுரை வளர்ந்தபடியே இருந்தது. இன்னும் வாசிக்க வேண்டிய பல கவிகள் உள்ளனர்.‌ இதை ஒரு தொடராக விரித்தெழுத வேண்டும். குணங்குடி மஸ்தான் சாகிபு, புனித ஜான், செங்கோட்டை ஆவுடையக்கா, துளசிதாசர், ஹபீஸ் என பலரை தொட்டு எழுத வேண்டும்.‌ பாரதியில் சென்று முடியவேண்டும். நன்றி - https://www.jeyamohan.in/159263/.  சாரு தனது  தளத்தில் கட்டுரைக்கான சுட்டியை அளித்திருக்கிறார். நன்றி சாரு http://charuonline.com/blog/?p=10998. 

 1


கவிஞர்  என்பவர் உலகின் முதல் மனிதர் என்றும், நாவலாசிரியர் என்பவர் உலகின் கடைசி மனிதர் என்றும் எழுத்தாளர் கோணங்கி ஒரு உரையாடலின் போது குறிப்பிட்டார். முதல் மனிதர் ஒரு குழந்தையின் குறுகுறுப்பைக்கொண்டவர், யாவற்றையும் அறியத்துடிப்பவர், அவருக்கு இவ்வுலகின் ஒவ்வொரு துளியும் வியப்பின் பெருவெளி. கடைசி மனிதர் கனவுகளை இழந்தவர். அனைத்தும் தலைகீழாகவும் பொருளற்றும் திரிந்தும் போவதை கண்ணுறுபவர். நாவலாசிரியருக்கு அல்லது பொதுவாகவே புனைவெழுத்தாளருக்கு கவிதையின் மீதிருக்கும் மையல் இங்கிருந்தே தொடங்குகிறது. தூயதும், அரியதுமான வெகுளித்தனத்தின் மீதான, மூர்க்கமான பிரேமையின் மீதான ஈடுபாடு. ஏக்கம். தொலைந்த பால்யத்தை போல மீள முடியாத ஆனால் பரவசமளிக்கும் வெளியை கவிதையே அவருக்கு அளிக்கிறது. இன்றைய என் வாசிப்பில் கவிதையை தன்னகத்தே கொண்ட சிறுகதையோ நாவலோ ஒருபோதும் சோடைபோவதில்லை என்பதை காண்கிறேன். 


'ஆன்மீக கவிதைகள்' என்பது மிகவும் பரந்த தலைப்பு. திருக்குறளும் தேவாரமும் பிரபந்தமும் செழித்த மொழி தமிழ். இந்த கட்டுரைக்கு நான்  கவிதைகளைத் தேர்ந்தெடுக்க வைத்துக்கொண்ட முதன்மையான அளவுகோள் ஆன்மீகவாதிகளின் கவிதை வெளிப்பாடு என்பதே. அதிலும் கூட, சமய எல்லைகளுக்கு அப்பால் மத்தியகாலத்து மறைஞானிகளின் கவிதைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளித்துள்ளேன். பிற கவிதை வகைகளை அவ்வப்போது தொட்டுக்காட்டியுள்ளேன். கவிஞர்களின் ஆன்மீக‌ வெளிப்பாடு என வரயறையை சற்று மாற்றியமைத்தால் பாரதி தொடங்கி தேவதேவன் வரை பலருடைய கவிதைகளை பேச இயலும். ஆனால் அவை வேறொரு சந்தர்ப்பத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை. அவை எப்படி இக்கவிதைகளுடன் நீட்சிகொள்கின்றன என்பதை கவனிக்க இயலும். 


கவிதையை மொழியின் முதலும் உச்சமுமான வெளிப்பாடு என கொள்ளலாம். இதன் காரணமாகவே மிக எளிதாக நகலெடுக்கப்படத்தக்கதாகவும் உள்ளது. கவிதைகள் எழுதப்படும் அளவிற்கு வாசிக்கப்படுவதில்லை என்பது மற்றொரு சுவாரசியமான முரண்.  காலங்காலமாக கவிதையே ஆன்மீக வெளிப்பாட்டுக்கான ஊடகமாக திகழ்ந்து வருகிறது. ஜெயதேவரை பற்றிய ஒரு தொன்மக்கதை ஒன்றுண்டு. ராதை கண்ணனின் சென்னி மீது கால் வைப்பதாக ஒரு பகுதியை எழுத உந்துதல் பிறக்கிறது. ஆனால் எழுத தயங்குகிறார். யோசனையுடன் குளிக்க சென்றவருக்கு அவ்வரி எழுதப்பட்டிருந்ததை காண வியப்பாக இருக்கிறது. அது கண்ணனே எழுதியது. சாட்சியாக பத்மாவதி இருந்தார். ஒரு வகையில் கவியின் கற்பனைக்கு தடை ஏதுமில்லை, அது கடவுளால் அங்கீகரிக்கப்பட்டது. அதனளவில் அது புனிதமானது என்பதை இக்கதை உணர்த்துவதாக வாசிக்க இடமுண்டு. கீத கோவிந்தம் மொழியாக்கத்துக்கு சுதீப்தா கவிராஜா எழுதிய முன்னுரையில் சாமான்ய புழங்கு மொழியால் வெளிப்படுத்த இயலாத உணர்வு நிலையை பக்தர்  அடையுமாபோது, அந்த உணர்வை வெளிப்படுத்த கவிதையே உகந்ததாக ஆகிறது என சுட்டுகிறார். உயர் கவித்துவமே கடவுளுக்கு அருகே அழைத்துச்செல்லும் ஊடகம். பண்டைய கவிதைகள் சந்தத்தில் இயங்குபவை.  பாடல்களாக இசைக்கப்படுகின்றன. கீத கோவிந்தம் நிகழ்த்து கலையாக இசையுடன் நாட்டியமும் சேர்ந்தே நிகழ்த்தப்படுகிறது. 

ஜெயதேவரின் அஷ்டபதியில் ஒவ்வொரு பாடல்களுக்கும் உகந்த உணர்வு நிலைக்கு ஏற்ப ராகங்கள் வகுக்கப்படுகின்றன. மொழியால் கடத்த முடியாததை இசை கொண்டு நிரப்ப முயல்கிறது. கவிதை கீதமாவதன் வழியாக சொல்லின்மையை எட்ட முயல்கிறது. 

சங்கரரின் சவுந்தர்ய லகரியைப் பற்றி நடராஜ குரு குறிப்பிடும்போது அது எப்படி படிமம் மற்றும் காட்சி ஏற்படுத்தும் அதிர்வு வழியாக தொடர்புறுத்தும் ஆதி மொழியை (proto language) கையாள்கிறது என விளக்குகிறார். ஆதி மொழி தான் இப்போது வரை நீடிக்கும் ஆகப்பழமையான மொழி அமைப்பு, மீமொழி (meta language) அறிவார்ந்த உரையாடலுக்கு உரியது. ஆதிமொழி வடிவவியல் பிரக்ஞை (geometric orientation) கொண்டது. கவிதை, இசை மற்றும் குறியீடுகளை பயன்படுத்தும் கலை வடிவங்களுக்கான தொல்கால விதைநிலம் அதுதான். ஆதி மொழி எழுதப்பட்டதிலிருந்து எழுதப்பட முடியாததற்கு நம்மை இட்டுச்செல்லும்  வாகனம் என சொல்லலாம். சவுந்தர்ய லகரிக்கு பொருந்துவது பொதுவாக ஆன்மீக கவிதைகளுக்கும், ஒரு எல்லையில் மொத்த கவிதைகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம். கவிதை, மொழியில் உள்ள சொல்லுக்கும் பொருளுக்கான பிணைப்பை தளர்த்தி பொருள்கோடல் சாத்தியங்களை பெருக்குகிறது. கவிதைகளில் வரும் மலையும் நிலவும் கடலும் வெறும் மலையும் நிலவும் கடலும் அல்ல. கவிதையின் கள்ளமின்மை அல்லது குழந்தைமை என நாம் சுட்டுவது இந்த ஆதி மொழியைத்தான். கவிதை சுடு சரமென  நம்மை கிழித்து உட்புகுவதற்கு என தனிப்பாதையை தேர்ந்துகொள்ளும். நவீன கவிகளில் கூட பெரும்பாலான கவிகள் ஏதோ ஒரு புள்ளியில் ஆன்மீகத்தை தொட்டு மீள்கிறார்கள். ஞானிகள் படிபடியாக ஏறிச்சென்று காண்பதை  கவிகள் ஒரு கணத்தில் எல்லைகளை கடந்து காணும் பேறு பெற்றவர்கள். பண்டைய காலத்தில் ஊழ்கத்தில் அமர்ந்து ஞானத்தில் திளைத்த ரிஷிகளையும் கவி என்றழைத்தார்கள். ரிக்வேதத்தின் சிருஷ்டி கீதத்தை கவிதையாகவே வாசிக்க முடியும். 



சிருஷ்டி கீதம்


அப்போது அசத் இருக்கவில்லை

சத்தும் இருக்கவில்லை

உலகம் இருக்கவில்லை

அதற்கப்பால்

வானமும் இருக்கவில்லை



ஒளிந்துகிடந்தது என்ன?

எங்கே?

யாருடைய ஆட்சியில்?

அடியற்ற ஆழமுடையதும்

மகத்தானதுமான நீர்வெளியோ?

மரணமிருந்ததோ

மரணமற்ற நிரந்தரமோ?

அப்போது இரவுபகல்கள் இல்லை

ஒன்றேயான அது

தன் அகச்சக்தியினால்

மூச்சுவிட்டது

அதுவன்றி ஏதுமிருக்கவில்லை


இருட்டால் போர்த்தப்பட்ட வெளி

வேறுபடுத்தலின்மையால்

ஏதுமின்மையாக ஆகிய வெளி

அது நீராக இருந்தது

அதன் பிறப்பு

வெறுமையால் மூடப்பட்டிருந்தது!

தன் முடிவற்ற தவத்தால்

அது சத்தாக ஆகியது



அந்த ஒருமையில்

முதலில் இச்சை பிறந்தது

பின்னர் பீஜம் பிறந்தது

அவ்வாறாக அசத் உருவாயிற்று!


ரிஷிகள்

தங்கள் இதயங்களை சோதித்து

அசத்தில் சத்தைக் கண்டடைந்தனர்

அதன் கதிர்கள்

இருளில் பரந்தன


ஆனால் ஒருமையான அது

மேலே உள்ளதா?

அல்லது கீழே உள்ளதா?

அங்கு படைப்புசக்தி உண்டா?

அதன் மகிமைகள் என்ன?

அது முன்னால் உள்ளதா?

அல்லது பின்னால் உள்ளதா?

திட்டவட்டமாக யாரறிவார்?



அதன் மூலக்காரணம் என்ன?

தேவர்களோ

சிருஷ்டிக்குப் பின்னர் வந்தவர்கள்!

அப்படியானால் அது எப்படிப்பிறந்தது?

யாருக்குத்தெரியும் அது?



அதை யார் உண்டுபண்ணினார்கள்

அல்லது உண்டுபண்ணவில்லை?

ஆகாய வடிவான அதுவே அறியும்

அல்லது


அதுவும் அறியாது!



'முதல் மனிதனின்' அறிதலின் வெகுளித்தனமும் வியப்புமே கவிதையாக வெளிப்படுகிறது.  கபீரின் இவ்வரிகள் சிருஷ்டி கீதத்தின் அதே உணர்வின் நீட்சி என சொல்லலாம். 'சகோதரனே சொல்/ ஆகாயத்தை விரிகுடையெனச்/ செங்குத்தாக நிறுத்தி வைத்தது யார்? நீலப்பெருந்திரையில் / விண்மீன்களை மினுங்கவைத்தவர் யார்? அதைத் தீட்டிய/ அபாரமான தூரிகையாளன் எவன்?' இயங்கிக்கொண்டிருக்கும் இவ்வுலகை முதன்முறையாக புலன் விழித்து நோக்கும்போது ஏற்படும் வியப்பும் திடுக்கிடலுமே கவிதையை பிறப்பிக்கிறது. அவன் காணும் ஒவ்வொன்றும் அவனுக்கு வியப்பை அளிக்கிறது. 

  புலர் பொழுது உலக இயக்கத்தை தொடங்கி வைக்கும் பெருவியப்பு உஷை சூக்தமாகிறது. உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அல்லும் பகலும் அயராமல் வந்து கொண்டிருக்கிறார்கள். சோர்ந்து அமரவோ சோம்பல் கொள்ளவோ ஏதுமில்லை. இரவையும் பகலையும் பற்றிய கவிதை மரணத்தை பற்றியும் மறுபிறப்பைப் பற்றியும், காலாதீதத்தை பற்றியும் பேசும் புள்ளியில் சட்டென வேறொரு தளத்திற்குச் செல்கிறது. பகலும் இரவையும் போல் பிறப்பும் மரணமும் இயல்பாகிறது. மரணத்தின் துக்கமும் அச்சமும் விலகுகிறது. 

உஷை

(ரிக் வேதம் முதல் மண்டலம், 113வது சூக்தம்)

வந்தது ஒளிகளிற் சிறந்த இவ்வொளி

பிறந்தது  எங்கும் பரவும் பிரகாசம்

செங்கதிர்த் தேவன் எழ

வெளிச்சென்ற ராத்ரி

உஷைக்குப் பிறப்பிடம் ஈன்றாள்.

தன் வெண்மகவுடன் வந்தாள் சுடர்ப்பெண்

கரியவள் தன் இல்லத்தை அவளுக்களித்தாள்

ஒன்றான இவ்வுறவுகள்

நிறம் மாறி

ஒருவரையொருவர் தொடர்கின்றனர்

அழிவற்று.

முடிவற்றது

ஒன்றேயானது

சகோதரிகளின் பாதை

மாறிமாறி அதில் பயணிக்கின்றனர்

இந்த தேவியர்

இரு நிறமும் ஒரு மனமும் கொண்ட

பகலும் இரவும்

முறைதவறுவதில்லை

மோதிக் கொள்வதுமில்லை.

இன்னொளிசேர் சோதித் தலைவியைக்

காண்கின்றன எம் கண்கள்

கதவுகளைத் திறந்தாள்

பொலிவுடன்

உலகை சிலிர்க்கச் செய்து

செல்வங்களைக் காட்டினாள்

உஷை

புவனத்தின் ஒவ்வொரு உயிரையும்

எழுப்பினாள்.

உறக்கத்தில் சுருண்டு கிடந்தோரை

சுகவாழ்விற்கென

வேள்விக்கென

பொருள் தேடலுக்கென

எழுந்தோடச் செய்தாள்

சிறிதே கண்டோர் பெரிதாய்க் காண

உஷை

புவனத்தின் ஒவ்வொரு உயிரையும்

எழுப்பினாள்.

வீரச்செயலுக்கென ஒருவனை

புகழுக்கென ஒருவனை

மகத்தான வேள்விக்கென ஒருவனை

பலனுக்கென ஒருவனை

உழைப்பிற்கென ஒருவனை

தொழிலுக்கென அனைவரையும் என

உஷை

புவனத்தின் ஒவ்வொரு உயிரையும்

எழுப்பினாள்.

யுவதி வெண்துகிலினள் வான்மகள்

மண்மீது காணும் செல்வங்களின் தலைவி

இதோ வருகிறாள் உஷை

மங்கல நல்லொளியினளே

இந்தக் காலையில்

எமக்காகத் துலங்குக.

கடந்து சென்ற காலைகளின் வழிச்செல்பவள்

இனிவரும் முடிவற்ற காலைகளின் முதல்வி

உஷை

உயிருள்ளவை அனைத்தையும்

உந்திச் செலுத்துகிறாள்

மரித்தவற்றையும் உணர்விக்கிறாள்.

உஷையே

நீயே அக்னி சுடரத் தூண்டுவித்தவள்

கதிரோனின் கண்வழி உலகைப் புலப்படுத்தியவள்

வேள்வி செய்யவேண்டி மானுடரை எழுப்பியவள்

தெய்வீக நற்செயல்கள் புரிபவள்.

எத்தனை காலமாக

எழுகிறார்கள் உஷைகள்?

நமக்கு இன்னொளி தர

இன்னும் எத்தனை காலம்

எழுவார்கள்?

கடந்து சென்ற வைகறைகளுக்காக ஏங்கி

வரப்போகும் வைகறைகளுடன்

மகிழ்ச்சியாகச் செல்கிறாள்

உஷை.

போய்விட்டனர்

முன்னாட்களில்

உஷையின் உதயம் கண்ட மானிடர்

நாம்

இன்று வாழும் நாம்

அவளது நல்லொளி காண்கிறோம்

வரும் நாட்களில் அவளைக் காண

நமது பின்னோர் வருகிறார்கள்.

எதிர்ப்போரைத் துரத்துபவள்

பிரபஞ்சலயத்தில் தோன்றியவள்

பிரபஞ்சலயத்தைக் காப்பவள்

உவகையூட்டுபவள்

இன்னொலிகளை விழிப்புறச் செய்பவள்

சுமங்கலி

தேவர் விரும்பும் வேள்வியை ஏந்திவருபவள்

பெரும்புகழ் கொண்ட உஷை

இன்று எமக்காக உதித்திடுக.

உஷை

முற்காலங்களில்

இடையறாது உதித்தாள்

செல்வம்சேர் தேவி

இன்றும் தன் ஒளி காட்டுகிறாள்

வரும் நாட்களிலும் உதிப்பாள்

தன்னாற்றலால் இயங்குகிறாள்

அந்த அமுதப் பெண்

அழிவற்று.

வான் விளிம்புகளைத் தன்னொளியால்

சுடர்வித்தாள்

தேவி தன் கருந்திரையை

வீசிஎறிந்து விட்டாள்

உஷையின்

செம்பரிகள் பூட்டிய தேர் கண்டு

உலகம் விழித்தெழுகிறது.

உயிர்வளர்க்கும் செல்வங்கள் ஏந்தி

உணர்வளித்து

அற்புத எழிலொளி பரப்பி

கடந்து சென்ற பல வைகறைகளின் இறுதியாக

வரப்போகும் ஒளிமிகு வைகறைகளின் முதலாக

இன்று உஷை எழுந்தாள்.

எழுவீர்

வந்தது மீண்டும் வாழ்வும் உயிரும்

சென்றது இருள்

தோன்றுகிறது ஒளி

கதிரவனுக்காக

வழிதிறந்தாள் உஷை

நம் ஆயுளும் உணவும் செழிக்கும் இனி.

(தமிழாக்கம்- ஜடாயு)


2


 கவிதை எங்கிருந்து ஊற்றெடுக்கிறது எனும் கேள்விக்கு எனக்கு அரவிந்தரின் கோட்பாடு நெருக்கமாக உள்ளது. குறிப்பாக ஆன்மீக கவிதைகளுக்கு பொருத்திக்கொள்ள முடிகிறது. கவிதையைப் பற்றிய அறுதியான கோட்பாடாக இதை காண வேண்டியதில்லை.‌ ஆன்மீக ரீதியில் கவிதையை புரிந்துகொள்ள ஒரு வழிமுறை எனும் எல்லையுடன் இந்த புள்ளிகளை அணுக வேண்டும். மனித ஆன்மா பிரபஞ்ச பேரிருப்புடன் கொள்ளும் தொடர்பின் அடையாளமாக கவிதையை காண்கிறார் அரவிந்தர். சாமானிய மனம் (ordinary mind), உயர் மனம் (higher mind), ஒளிர் மனம் (illumined mind), உள்ளுணர்வு மனம் (intuitive mind) மற்றும் மேலான மனம் (over mind) என  ஐந்து பரிணாம படிநிலைகளை குறிப்பிடுகிறார். இதை தவிர்த்து   பிரபஞ்ச மனம் (universal mind), அதி பிரக்ஞை இருப்பும் (super conscient being) உள்ளது.  ஒவ்வொரு அடுக்கிற்கும் அதற்குகந்த படைப்பூக்கம் சொல்லப்படுகிறது. சாமானிய மனதில் படைப்பூக்கத்திற்கு பெரிதாக வேலையில்லை. ஒளி ஊடுருவ இயலாத அளவிற்கு இறுக்கமும் கணதியும் கொண்டது. உயர் மனம் சற்றே தெளிந்தது. தத்துவவியலாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் இந்த நிலையிலிருந்து செயல்படுவார்கள்.‌ மீ மொழியின் தளம் என சொல்லலாம். ஒளி சில புள்ளிகளில் இருந்து ஊடுருவும். அசல் சிந்தனைகள் தோன்றும். எனினும் தர்க்க சட்டகத்தை கடக்க இயலாது. இந்த நிலையிலிருந்து அமைதி கைகூடி வரும்போது இயல்பாக ஒளிர் மன அடுக்கை சென்றடையும். பெரும் முயற்சிகள் ஏதுமின்றியே சத்தியத்தையும் ஆனந்தத்தையும் உணர இயலும். சிறு புள்ளிகளில் ஊடுருவிய ஒளி இப்போது வெள்ளமாக பொழியும். கவிதைகளுக்கான வெளி இதுவே. மனம் இந்நிலையை அடைந்ததற்கான அறிகுறிகளில் ஒன்று கவிதை சட்டென ஊறி பிறப்பெடுப்பது என்கிறார் அரவிந்தர்.  கவிதையே மனதின் உயர் அடுக்குகளை பற்றி சொல்வதற்கு உகந்த ஊடகம் எனவும் அவர் சொல்கிறார். சொற்களின் பொருளை கடந்து அதன் ஒலிக்குறிப்பு மற்றும் ஒலிச் சேர்க்கையே அதன் அதிர்வுகளை கடத்த வல்லது. சொற்கள் அதிர்வுகள் உடுத்தும் ஆடைகள் மட்டுமே என்பது அவர் கருத்து. ஆதிமொழியின் வல்லமை ஒலி அதிர்வுகளின் ஊடாக தொடர்புறுத்தும் எனும் நடராஜ குருவின் கருத்தையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் இந்த தளத்தில் படைப்பூக்கத்தை தொடர்ந்து தக்கவைப்பது கடினம். ஒரே ஆக்கத்தில் சில வரிகளில் தாக்கம் தென்பட்டு பிற இடங்களில் சாதாரணமாக கடந்து செல்லும். இந்நிலையில் தொடர்பற்ற சீரற்ற படிமங்களையும் அறிதல்களையும் காண முடியும். இதற்கடுத்த நிலையில் எல்லாம் தெளிவடைகிறது. சொற்கள் தனது அலங்காரங்களை துறக்கிறது. உள்ளுனர்வு மனம் எனும் தளம் சத்தியத்தைப்பற்றிய நினைவு களன் என்கிறார். ஒளி வெளியிலிருந்து வருவதில்லை. இயல்பாக எப்போதும் யாவற்றையும் ஒளி சூழ்ந்திருக்கிறது. தர்க்கத்தின் பிடியிலிருந்த தன்னை முழுமையாக விடுவித்து கொண்டது. மேலான மனம் மனித பிரக்ஞையின் உச்சம். அது பிரபஞ்சமளாவிய பிரக்ஞை ஆனால் தனியிருப்பும் தொடர்கிறது. இதுவே கடவுளர்களின் வெளி. உலகின் மதங்கள் அனைத்தும் இங்கே உதித்தவை. கால வெளி எல்லைகளை கடந்த நிலை. கவிதை மந்திரமாவது இத்தளத்தில்தான். துண்டுபடாத தொடர் ஒளி சூழ்ந்து இருக்கும்.


   அமைதியும் நிலைபேறும் கொண்ட மனதில் காற்றில்லா வானத்தை பறந்து கடக்கும் பறவைகளை போல எண்ணங்கள் சுவடின்றி கடந்து மறையும். அத்தகைய மனதில் பிரபஞ்ச மனம் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். புனித நூல்களில் காலம் கடந்து நிற்பவை ஆகச்சிறந்த கவிதை வரிகள். அவை மந்திரத்தன்மையை எழுப்புபவை. உதாரணமாக  'வானத்து பறவைகளை பாருங்கள்‌, அவை விதைப்பதும் இல்லை அறுப்பதும் இல்லை' எனும் விவிலிய வசனம் ஒரு கவித்துவ வாக்கு (poetic utterance). ஹெரால்ட் ப்ளூம் விவிலியத்தை புனைவு நூலாக வாசிக்க இயலும் என சொஆகல்கிறார். குறிப்பாக பழைய ஏற்பாட்டை. ஜெ எனும் பெண் எழுத்தாளர் எழுதியிருக்கக்கூடும் எனும் ஊகமும் அவருக்கு உண்டு. இந்த வரிசையில் மத நூல்களையும் புனித நூல்களையும் கவிதைகளாகவும் வாசிக்க இடமுண்டு என்பதாலேயே இந்த கட்டுரையை ரிக்வேத பாடலோடு தொடங்கினேன்.  


முண்டக உபநிஷத்தின் தொடக்கத்தில் வரும்

 'இரு பறவைகள்

இணைபிரியாத் தோழர்கள்

ஒரே மரத்தில்.

ஒன்று கனிகளை உண்கிறது

மற்றொன்றோ

உண்ணாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது.'  

இதுவும் ஒரு கவித்துவ வாக்குதான். கவி ஊடகம் கவிதை அவன் வழியாக வெளிப்படுகிறது என்பது ஒரு பார்வை. ஆனால் இதன் அடுத்த கட்டமாக கவிதையையும் கூட ஒரு ஊடகமாக காண முடியும்.  காலாதீத சத்தியம் சொற்களாக திரண்டு கவிஞன் வழியாக கவிதையாக கனிந்து வெளிப்படுகிறது என்றும் கொள்ளலாம். 

இந்திய மரபில் தியான சுலோகங்கள் என ஒவ்வொரு இறைவனுக்கும் அவரை விவரிக்கும் துதிகள் உண்டு. உதாரணமாக விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 'க்ஷிரோ தன்வத்..' என தொடங்கும் துதி உண்மையில் திருமால் பாற்கடலில் அணிகளுடன் படுத்திருக்கும் காட்சியை விவரிப்பது. அவருடைய முகம், அகம், அமர்ந்திருக்கும் முறை, அணிந்திருக்கும் ஆடை அணிகள் என துல்லியமான விவரனைகள். இவை புலன் நிகர் அனுபவத்தை அளிப்பவை.  தியானத்திற்குரியவை. வேதாந்தம் நிதித்யாசன மந்திரங்கள் என சிலவற்றை வரையறை செய்கிறது.  சங்கரரின் நிர்வாண ஷடகம் இத்தகையது. அடிப்படையில் தியான சுலோகங்களும் நிதித்யாசன மந்திரங்களும்  கவிதைகளே. நிதித்யாசனத்திற்கு உரியவை கருத்தை அடிப்படையாக கொண்டவை எனும் போது படிமத்தை அல்லது காட்சி அனுபவத்தை அடிப்படையாக கொண்ட தியான சுலோகங்கள் நவீன கவிதைக்கு சற்று கூடுதல் நெருக்கமானவை என சொல்லலாம்.


ஆழியின் துளி

துளிகள் கலந்து ஆழி ஆவதை

அறிவர் எல்லாரும்

ஆழி உலர்ந்து

ஒரு துளியாவதை அறிபவனோ

ஆயிரத்தில் ஒருவன்.


கபீரின் இவ்வரிகள் தியான சுலோகமாக கருதத்தக்கது. தேவதேவன், தேவதச்சன் ஆகியோரின் பல கவிதைகளை தியானத்திற்குரியதாக கருத இயலும்.  கபீரின் 'பிரசவம்' எனும்  கவிதையை நவீன கவிதை என்றே சொல்லிவிட முடியும்.  புறத்தை அவதானித்து அகவயப்படுத்திக்கொள்கிறது. 


வானம்பார்த்து மல்லாந்து

அலையில் மிதக்கும் சிப்பி

தவிப்புடன் காத்திருக்கிறது

சுவாதி மழைத்துளிக்காக

வெறும் வயிற்றில் துளிநீர் விழுந்ததுமே

உடல் புரண்டு முத்தை சூல் கொள்ளப் பயணிக்கிறது

கடல் ஆழத்தை நோக்கி


ரூமியின் ஒரு கவிதையில் உள்ள வரிகள் தேவதச்சனின் ஓரு கவிதையில் ஷூ லேஸ் கட்டும் குண்டு பெண்மணியை நினைவுப்படுத்தியது. 'அவ்வுலகும்/ இவ்வுலகும்/ தொட்டு உறவாடும்/ வாயிலின் வழியாக/ மனிதர்கள் பயணித்தவண்ணம் இருக்கின்றனர்./ வட்டவடிவான அவ்வாயிலோ/ திறந்து கிடக்கிறது இப்போது/ துயிலச் சென்றுவிடாதே மீண்டும்.' 

உறக்கச்சடவு என்பது விழிப்பு நிலைக்கும் கனவு நிலைக்கும் இடையில் நொறுங்கிக்கொண்டிருக்கும் சிறிய மேடை. இணை பிரபஞ்சங்களுக்கு இடையிலான  வாயில் உறைவதற்கு முன்னாலான நீர்மை நிலை. 


கவிதையைப் பற்றி சொல்வதற்கு கருத்துக்களை சார்ந்திருப்பதை விட கவிதைகளே உகந்தது. ஒரு கவிதையே மற்றொரு கவிதைக்கான திசை சுட்டி. ஆகவே கவிதை குறித்தான கட்டுரையில் அதிக கவிதைகளை மேற்கோள்காட்டுவது இயல்பானது.ன் 


3



கவிதையின் பேசுபொருள் மற்றும் தன்மை சார்ந்து தோராயமாக ஆன்மீக கவிதைகளை மறைஞான கவிதை, மெய்யியல் கவிதை, விழிப்புணர்வு நிலை கவிதை (mindfulness) ஐக்கிய வேட்கை கவிதை மற்றும் கண்டன கவிதை என ஐந்தாக வகுக்கலாம். மெய்யியல் கவிதைக்கு சிறந்த உதாரணம்  'இது' எனும் தாவோ கவிதை. கிட்டத்தட்ட தத்துவ கோட்பாடு இங்கு கவிதையாக உருகொள்கிறது. சாமான்ய மொழியில் செல்லும் போது 'இதைப் பின் தொடர்கையில் இதற்கு முதுகு இல்லை

இதை எதிர்கொள்கையில் இதற்கு முகம் இல்லை' 

எனும் பயன்பாடு வழியாக கவித்துவமான ஆதிமொழிக்குள் வழுக்கி செல்கிறது. இதுவே இதை கவிதையாக்குகிறது.



இது


பார்த்தாலும் இதைப் பார்க்க முடியாது

இது உருவத்திற்கும் சிறியது:

கவனித்தாலும் இதைக் கேட்க முடியாது;

இது ஒலியிலும் மெல்லியது;

ஊகிக்கலாம் ஆனால் தொட்டுவிட முடியாது;

இது, உணர்வுகளுக்கு அடியில் உள்ளது;

மேலான பொருட்கள்

இவைகள்தான் என்று வரையறை

செய்வதற்குள் தப்பிவிடுகின்றன. 

மேலும் இவை கலந்து ஒற்றைப்புதிராய் உள்ளது

இது எழும்போது அங்கே ஒளியில்லை

இது விழும்போது அங்கே இருளில்லை

இது விளக்கத்திற்கும் அப்பாற்பட்ட

ஒரு தொடர்ச்சியான மெல்லிழை

வெளிப்பட முடியாத உள்வலை

வடிவமில்லாதது இதன் வடிவம்

ஒன்றுமில்லாதது இதன் உருவம்

மௌனம் இதன் பெயர்;

இதைப் பின் தொடர்கையில் இதற்கு முதுகு இல்லை

இதை எதிர்கொள்கையில் இதற்கு முகம் இல்லை

இதற்கு முன்னும் இல்லை, பின்னும் இல்லை

போனதைப் புரிந்துகொள்ள இருப்பதைக் கவனியுங்கள்

ஆக உங்களுக்கு இயற்கை வழியின்

தொடரைப் பிடிக்க முடியும்

நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்

என்று சற்று உணர்ந்து பாருங்கள்

இதுவே இதன் ஞானரசம்





விழிப்புணர்வு நிலை கவிதைக்கு சிறந்த உதாரணம் ஜென் மற்றும் வேதாந்த கவிதைகள்.  போகன் மொழியாக்கம் செய்துள்ள சீன கவிதைகள் நல்ல உதாரணம்.  


லஸ்டர் கணவாயில் இரவு மழை..


பள்ளத்தாக்கு நதியின்வெற்றிடத் தெளிவைத் தகர்த்துக்கொண்டுமழை உள்ளே வருகிறது.கூதல் காற்று கிசுகிசுப்புகள் இரவின் பின்பகுதியில் தொடக்கம்..பத்தாயிரம் முத்துகள் ஒரே தட்டில் விழுந்து ஒலி எழுப்புகின்றனஒவ்வொன்றின் ஒலியும் என் எலும்புகளைத் துளைக்கும் துல்லியம். நான் கனவில் என் தலையைச் சொரிகிறேன்எழுந்து விடியும்வரை கூர்ந்து  கேட்கிறேன்.ஒவ்வொரு சப்தமும் தோன்றுவதை,மறைவதை..

என் வாழ்க்கை முழுவதும் நான் மழையைக் கேட்டிருக்கிறேன்என் முடி இப்போது வெளுத்திருக்கிறது.இருந்தாலும் வசந்த கால நதி மீது பெய்யும்இரவு மழையை நான் அறிந்திருக்கவில்லை.


இக்கவிதையில் எப்போதும் இருப்பவற்றை விழிப்படைந்த மனம் நோக்கும்போது ஏற்படும் திடுக்கிடலை  பதிவு செய்கிறது. ஒருவகையில் கவிதை கதை இன்னும் சற்று விரிவாக சொல்வதானால் கலை, அறிவியல் கண்டுபிடிப்புகள் போன்றவை  கூட இத்தகைய அகம் விழிக்கும் தருணங்களால் ஆனதே. ஆர்கிமெடீஸ் தத்துவம், கனவில் தோன்றிய பென்சீன் வடிவம், நியூட்டன் தலையில் விழுந்த ஆப்பிள் பழம் என பல உதாரணங்களைச் சொல்ல முடியும். சட்டென வேறொரு நிதர்சனத்தில் விழித்தெழுவது. பொருள்முதல்வாதிகள் ஒட்டுமொத்த மானுட வரலாறையும் புறவயமான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் தருணங்களாக காண்பதற்கு மாற்றாக கருத்துமுதல்வாதிகள் ஒட்டுமொத்த மானுட வரலாறையும் இத்தகைய விழிப்புணர்வின் தருணங்களாக மட்டும் காண முடியும். ஆதி மொழி என்பதே பிரபஞ்சம் தங்களுக்குள்ளாக உரையாடிக்கொண்டிருக்கும் மொழி. விழித்தெழும் மனம் அந்த மொழியையும் உரையாடலையும் கவனிக்கத்தொடங்குகிறது. உரையாடத் தொடங்குகிறது. தானறிந்த மொழியில் அதை பிரதிசெய்ய மானுட மனம் யத்தனிக்கிறது. கவி காளிதாசனின் நாக்கில் அன்னை எழுதியது முதல் மூங்கையான் கவிஞனானான். அன்னையென்பது சக்தி, பிரகிருதி, கட்டற்ற இயற்கையின் வடிவம். சாமான்ய மொழியில் உழன்றவனை ஆதி மொழி நோக்கி விழிக்க செய்தாள் அவள். சூரிய ஒளியில் ஒளிரும் ஒற்றை புழு நீடுழி வாழ்க எனும் செய்தியை எப்படி ஜெயமோகனுக்கு சொல்லியிருக்க இயலும்? கவி ஆதிமொழி வழியாக சொல்லின்மையின் அனுபவத்தை கடத்த முயல்கிறார். 


போகன் மொழியாக்கம் செய்த மற்றோரு கவிதை அன்றாடத்தின் உறைகணம் அளிக்கும் திறப்பைச் சொல்கிறது. 


ஏரியைக் கடந்து செல்லுதல்.


ஒரு மீனவன் தனது படகை வெகுதூரம்ஏரியினுள் ஓட்டிச் செல்கிறான்.எனது முதிய கண்கள் அவன் வழியைக் கடைசிவரை பின் தொடர்கின்றன.காட்சிக்குள் துல்லியமாக அவன் வருவதும் போவதுமான நெசவை..

பிறகு இது வினோதமடைகிறதுசட்டென்று அவன்  நாணலின் மீது சம நிலையுடன் நிற்கும்ஒரு நீர்ப்பறவை ஆகிவிட்டான்


 


 நித்ய சைதன்ய யதியின் ஒரு கவிதையை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.


காலைப்பனியை நான் முத்தமிடுவதில்லை

நீ ஒரு மலர்

வண்டெதுவும் முத்தமிடாத  மலர்

நீ ஒரு பாடல்

மறையக்கூடிய உதடுகளால் இசைக்கப்படாத பாடல்

என் அகத்தை தூய்மையாக்கும்

இறைகூறும் இரகசியம் நீ

பேரின்பப் பரவசம் நல்கும்

இன்னிசைப் பாடல் நீ

நிலவை நான் கைகளில் அள்ளுவதில்லை

காலைப்பனியை முத்தமிடுவதுமில்லை

உன்னை என் கனவுகளில் காண்பதும்

நிலைபேற்றின் இன்னிசையை என

உன்னிடம் அன்பு பாராட்டுவதும் ஒழிய

வேறொன்றையும் நான் விழையவில்லை

 

கால்களை சேறாக்கிக் கொள்ளாமல்

மண்ணில் நடக்கும் ரகசியத்தை

உன்னிடமிருந்து கற்கவேண்டும் நான் 


இக்கவிதையின் இறுதிவரிகளை 

'அவன் 

வனத்தில் நுழையும்போது

புற்கள் நசுங்குவதில்லை

நீரில் இறங்குகையில் 

சிற்றலையும் எழுவதில்லை' (பெயரற்ற யாத்ரீகன், ஜென் கவிதைகள், தமிழில் எம்.யுவன்) எனும்  ஜென் கவிதையுடன் சேர்த்து வாசிக்க இயலும். 


மறை ஞான கவிதைகள் பண்பாட்டு கூறுகளில் இருந்து சில குறியீடுகளை பயன்படுத்தி கவிதையை சமைத்துக்கொள்ளும். மீமொழியின் கூற்றுகளை பயன்படுத்திக்கொள்ளும்.  கபீரின் இந்த கவிதையை உதாரணமாக சொல்லலாம். 


வெண்பட்டாடை


மெல்லிய

மிக மெல்லிய வெண்பட்டாடையை

அவன் நெய்கிறான்

அவனுக்கு வாய்த்த ஊடு இழை எது?

பாவு இழை எது?

ஆடையை நெய்ய

தேர்ந்த நூல் எது?

இங்கலத்தை தறியாக்கி

பிங்கலத்தை கயிறாக்கி

சூக்குமத்தை நூலாக்கி

வெண்பட்டாடையை

அவன் நெய்கிறான்

எண்ணிதழ் தாமரையைத் 

தகளியாக்கி

ஐம்பூதங்களையும் முக்குணங்களையும்

நூல்புரியாக்கி

அவன் ஆடை நெய்கிறான்

தறியை அசைத்தசைத்து

ஒவ்வொரு நூலையும் சரிபார்த்து

அன்னையின் கருப்பையில் பத்து மாதங்கள்

நெய்கிறான்

எடுத்தணிந்த தேவரும் முனிவரும்

மனிதரும் அதைக் கறையாக்கி நிற்க

சேவகன் கபீரோ

அழுக்கின்றி

அப்படியே வைத்திருக்கிறான்

அந்த வெண்பட்டாடையை. 


இடம், பிங்கலம், சுழுமுனை போன்ற தாந்திரிக குறியீடுகள் இக்கவிதையில் பயன்படுத்தப்பட்டுள்ளதை கவனிக்க முடியும். மற்றொரு கவிதையில் கபீர் பிரபஞ்சமளாவிய சித்திரத்தை அளிக்கிறார். 'நானோ/ எனது தறியின்/

ஊடு இழைக்கான நூல்களைப்/ பிணைத்துக்கொண்டிருந்தேன்/ பூமியையும் / ஆகாயத்தையும் பூட்டி/

அவன் தறியைச் செய்கிறான்/ சூரியனையும் சந்திரனையும்/ 

சட்டங்களாக்கி/ ஒருசேர/ அசைக்கிறான்.'


திருமந்திரம், சித்தர்பாடல்கள் போன்றவை இந்த வகைப்பாட்டிற்கு உதாரணமாக சொல்லலாம். அக்கம்மாதேவியும் 'அத்தை மாயை/ மாமன் பிறவி/

மூன்று இளைய மைத்துனர்கள் புலி போன்றவர்கள்/ நான்கு நாத்திகள்/ கேள் தோழி/ ஐந்து மூத்த மைத்துனர்களுக்குத் தெய்வமில்லை/ 

ஆறு ஓரகத்திகளை மீறமுடியவில்லை/, தாயே/ ஏழு பணிப்பெண்கள் என்னைக் காவல் காக்கிறார்கள்/ கர்ம வினையான என் கணவனின் வாயில் அறைந்து/  

சிவனோடு சோரம் போவேன்/ மனமென்ற சுகப் பிரசாதத்தால்/

சிவனோடு கலந்து அனுபாவத்தைக் கற்றேன்/ ஸ்ரீசைல மலையின் உடலழகிய/ சென்னமல்லிகார்ச்சுனனைக்/

கூடுகையில்/

நல்ல கணவனைச் /சேர்ந்திருக்கிறேன்.'


நேரடி பொருளுக்கு அப்பால் பல மறைபொருளை கொண்டவை. அண்மைய காலத்தில் வந்த சிறந்த மற்றும் சிக்கலான மறைஞான கவிதை காவியம் அரவிந்தரின் சாவித்திரி. மறைஞான கவிதைகளின் மிக முக்கியமான இயல்பு அக - புற ஒத்திசைவு. அண்டத்திலும் பிண்டத்திலும் உள்ளவற்றை இணைவைத்தல். இயற்கைக்கும் மனிதனுக்குமான (அப்படிச்சொல்வதே அபத்தமாக தோன்றும்) நீட்சியை, உறவை, ஒத்திசைவை பேசுபவை. இவை நவீன கவிதைகளிலும் தொடர்வதை கவனிக்க முடியும். 


'ஐக்கிய வேட்கை கவிதை' ஆன்மீக கவிதைகளில் இவையே மிகப்பெரும்பாலானவை. உணர்ச்சிகரமானவை. காதலர்-கணவர், தோழர், அடிமை,  தாய் - தந்தையர், பிள்ளை போன்ற பாவங்களை சூடிக்கொள்பவை. நாயக நாயகி பாவம் , தாஸ பாவம் ஆகியவையே பெரும்போக்கானவை. பொதுவாக இக்கவிதைகள்  மூன்று உணர்வு நிலைகளில் செயல்படுவதை கவனிக்க முடியும். பெருங்காதலின் காத்திருப்பை தவிப்பை சொல்பவை முதல் நிலை, அடைதலின், இயையதலின் உவகையை சொல்பவை இரண்டாம் நிலை, அடைந்தது கைவிட்டுபோகும் பிரிவாற்றாமை நிலையை அரற்றுவது மூன்றாம் நிலை.  காம வேட்கையை உன்னதமாக்கி ஆன்மீக அனுபவத்தை அளிப்பவை. தூய காதல் கவிதைகளாக இவற்றை வாசிக்க இடமுண்டு. தமிழில் ஆண்டாள், மாணிக்கவாசகர் காரைக்கால் அம்மையார் ஆகியோர் தமிழின் முதன்மை கவிகள். சூஃபி கவிகளையும் இவ்வரிசையிலேயே வைக்க முடியும். 



பற்றியெரியும் நகரம்


தீப்பற்றியெரிகிறது!

விறகேதுமின்றி எரியும் அதை

அணைக்கும் சக்தி படைத்த

மனிதன் எவரும் இங்கில்லை

எனக்குத் தெரியும்

அது உன்னிடமிருந்துதான்

பரவியது!

அந்தத் தீ

உலகம் முழுவதையும்

எரிக்கின்றது

அந்தப் பொறி

துவங்கியது

நீரிலிருந்துதான்

எரிய எரிய அது 

நீரை அவிக்கின்றது

முடிவின்றி எரியும் அது

கண்ணியர் ஒன்பது பேரையும்

எரிக்கின்றது

அதை அவிக்கும்

நீர் யாருக்கும் அகப்படவில்லை

நகரம் பற்றியெரிகிறது

காவலரோ உறங்குகின்றனர்

அவர்களது கனவில்

அவரவர்களின் வீடுகள்

பத்திரமாய் இருக்கின்றன

ஓ இராமா

உனது நிறங்கள் எரிகின்றன

துடிக்கின்றன.

முடவன்

அறிவை நம்பி இருக்கிறான் 

அதை மீறி

அவன் யோசிக்கலாகாது.

அதை எண்ணியே

வாழ்நாள் முழுதும் வீண் போய்விட்டது

உடலோ

தணியாத தாகத்தோடு தவிக்கிறது

பிறர் முன் நடிப்பவனை விடப்

பெரிய முட்டாள்

வேறெவருமில்லை

அவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறான்.


கபீர் சொல்கிறேன்

ராமனின் கண்களில்

நாம் அனைவரும் பெண்களே



இது கபீரின் கவிதை‌.  'ராமனின் கண்களில்

நாம் அனைவரும் பெண்களே'. ஏறத்தாழ இதே வரியை அக்கம்மாதேவி சென்ன மல்லிகார்ச்சுனனுக்கும் மீரா கண்ணனுக்கும் பொருத்திச்சொல்கிறார்கள். மீரா பாடுகிறாள்


போகாதே போகாதே


போகாதே போகாதே என

நின்பாதம் பணிகிறேன்.

நான் உனக்கானவள்.

பக்தியின் பாதை எங்குள்ளது என எவரறிவர்

எங்கு செல்வதென நீயே வழிகாட்டு

என் உடல் பத்தியாகட்டும்,  சந்தனமாகட்டும். 

அது உன்னால் கொளுத்தப்படட்டும்.

வெறும் சாம்பலாக நான் உதிர்ந்த பின்

உன் தோளிலும் மாரிலும் எனை பூசிக்கொள்.

மீரா சொல்கிறாள்- கிரிதரனே என்னிடம் துளி ஒளியுண்டு

எனக்கதை நின்னுடையதுடன் கலக்க வேண்டும்.



 'காதலின் நுனிநாக்கால் தீண்டப்பட்டவனே அறிவான் என் அரற்றலை' எனும் கபீரின் வாக்கு ரூமிக்கும் அக்கம்மாதேவிக்கும் ஆண்டாளுக்கும் மீராவுக்கும் துல்லியமாக பொருந்தும். இக்கவிதைகள் பெரும்பாலும் கடல், நிலவு பறவை போன்ற பழக்கப்பட்ட அன்றாட படிமங்களை சரளமாக பயன்படுத்துபவை. அவற்றின் ஆற்றல்  முழுக்க முழுக்க உணர்வுநிலையிலிருந்து வருபவை. பெரும் பித்து நம்மைப்பற்றி கொள்ளும். 'என் உடல் பத்தியாகட்டும்,  சந்தனமாகட்டும். 

அது உன்னால் கொளுத்தப்படட்டும்.

வெறும் சாம்பலாக நான் உதிர்ந்த பின்

உன் தோளிலும் மாரிலும் எனை பூசிக்கொள்.' என அனத்துகிறாள் மீரா. உன்னை எப்போது காண்பேனோ அப்போது வாரி விழுங்கிவிட வேண்டும் என்றிருந்தேன் ஆனால் நீயோ என்னை முந்திக்கொண்டு என்னை முழுதாக விழுங்கிவிட்டாய் என்கிறாள் ஆண்டாள்1. மேலும் நாளுக்கு நாள் உயிரையும் உண்டு என்னை முழுவதும் உண்டான் என்கிறாள் அவள்2. பதினாறாயிரம் பேர் பாத்திருக்க பொதுவில் மாதவனின் வாயமுதத்தை நீ மட்டும் பருகுகிறாயே அதை நிறுத்து என வெண்சங்கிடம் சினந்து கொள்கிறாள்3. 'சுகமே படுக்கை பார்வையே அணிகலன்

ஆலிங்கனமே ஆடை முத்தமே ஊட்டம்

காதல் பேச்சு தாம்பூலம்

உணர்ச்சி மோகனம் நறுமணத் தைலம்

சென்னமல்லிகார்ச்சுனனோடு கலத்தல் பரமசுகம் அம்மா!' என்கிறாள் அக்கம்மாதேவி. 

'வாழ்வைத் துறந்தபோது நான்/ கடவுளின் உறைவிடம் ஆனேன்/ என்னை நான் எரித்தபோது/ என்னவானேன் என சொல்லக்கூடுமோ?/

உலகில் அனைவரும் தொடர்ந்து வாழ விரும்புகிறார்கள்/ 

ஆனால் என் நண்பனே, நான்/ மரணத்தில் எரிக்கப்பட விழைகிறேன்/ 

ஓ மொய்ன், காதலனோடு/ இணைவதற்கு உயிரை அளிக்க வேண்டும்/ 

வாழ்வை இழப்பது காதலில்/ அடைவதென்றாகும் அக்கணமே' இவ்வரிகள் க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி எனும் சூஃபியின் வரிகள். இவை அனைத்துமே தன்னை இழந்து காதலை பெற விரும்புபவை. சிறிய பாதுகாக்கப்பட்ட சுயமழிந்து பெரிய கட்டற்ற சுயத்துடன் தன்னை தொடர்புறுத்திக்கொள்ளுதல் எனும் நிலையையே இவை சுட்டுகின்றன. 




காதலின் வழி


நுட்பமான விவாதமல்ல

பிரளயமே

அங்கு செல்வதற்கான

வாயில்

தங்களது சுதந்திரத்தைப் 

பெருவானில் வட்டமிட்டுக்

களிப்பெய்துகின்றன

பறவைகள்

அவை எப்படிப்

பயில்கின்றன பறத்தலை?

அவை விழுகின்றன

அவ்வீழ்தலில்

வழங்கப்படுகின்றன

சிறகுகள்



இது ரூமியின் கவிதை‌. வீழ்தலில் வழங்கப்படும் சிறகு என்பது ஒருவகையில் சரணடைதல் எனும் நிலையை சொல்கிறது. மனிதன் தனக்கு அளிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் தன்னிச்சையை (freewill) அவனை விட பெரிய ஆற்றலிடம் ஒப்படைப்பதன் வழி விடுதலை அடைகிறான் என்பதே சரணாகதி நிலை. ஆட்கொள்ளுதல் நிகழும்போது அவன் எதற்கும் பொறுப்பேற்க வேண்டியதில்லை. ஒரு வகையில் இது முழுமையாக அகம் விழித்த தருணமும் கூட.



இழிந்து இழிந்து உய்வடைவது இவ்வகை கவிதைகளின் மற்றொரு பொது இயல்பு. 

'வீடு வீடாகப் போய்க் கைநீட்டி வேண்ட வை ஐயனே

வேண்டினாலும் கொடுக்காதபடி செய் ஐயனே

கொடுத்தாலும் நிலத்தில் விழச் செய் ஐயனே

நிலத்தில் விழுந்தாலும் நான் எடுத்துக்கொள்ளும் முன்பே

நாயை எடுக்கச் செய் 

சென்னமல்லிகார்ச்சுனனே.' என்கிறாள் அக்கம்மாதேவி. அகந்தையை முழுமையாக கடக்க அவள் கண்ட வழிமுறை இது. காரைக்கால் அம்மையார் 

'பிறையும் புனலும் அனல் அரவும் சூடும்

இறைவர் எமக்கிரங்கா ரேனும் - கறைமிடற்ற

எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே

எந்தையா வுள்ள மிது⁠' (அற்புத திருவந்தாதி 23). 

எனும் பாடலில் ஈசன் தன் அன்புக்கு மனமிரங்கவில்லை என்றாலும் அவருக்கு ஆட்பட்டவள் என்றவரையில் உவகை கொள்கிறாள். கடவுளை கணவனாகவும் காதலனாகவும் கைக்கொள்வது பெரும் இன்னல். பித்தின் பேரன்பை அவன் புரிந்துகொள்வதில்லை. பாராமுகத்துடன் கடந்து செல்கிறான். ஆனால் இந்த இம்சையே பெரும் சுகமும் கூட. 


அந்தவொரு முத்தத்திற்காக


வாழ்வெல்லாம் 

வேண்டிக் காத்திருக்கிறோம்

மெய்தீண்டி ஊன் உருகும்

அந்தவொரு முத்தத்திற்காக


கடல் அலை

யாசிக்கிறது முத்திடம்

சிப்பியை உடைத்து வெளிவர


எவ்வளவு தீவிர உத்வேகத்துடன் 

தேடுகிறது அல்லிமலர்

கட்டுக்கடங்காத

காதலன் ஒருவனை!


இரவில், 

சாளரத்தைத் திறந்து

நிலவை அழைப்பேன்

அதன் முகத்தே

என் முகத்தோடு

நெருக்கமாகப் பொருந்த

உயிர்முச்சை எனக்கு வழங்க


மொழியெனும் வாசல் அடைபட்டு

காதலின் சாளரம் திறக்கட்டும்

நிலவுக்கு வழி

வாசல் அல்ல

சாளரமே


இது ரூமியின் கவிதை. பேரனுபவத்திற்கான, பெருங்காதலின் தீண்டலுக்கான காத்திருப்பின் தகிப்பை சொல்கிறது. கவிதை உள்ளத்திலிருந்து பெருகியபடி இருக்கிறது.


க்வாஜா மொய்னுதீன் சிஷ்டியின் ஒரு கவிதை வாசிக்கும்போது மனம் அமைதியையும் ஆறுதலையும் உணர்கிறது. அருகிருந்து தேற்றும் நண்பனின், காதலரின் குரல். கவிதையில் சிடுக்காக ஏதுமில்லை. கவித்துவமான படிமங்களோ புதிய திறப்புகளோ இல்லை. ஆனாலும் அதன் எளிமையின் வலு வாசகரை ஆட்கொள்கிறது. 


என்னிடம் வருக நண்பனே 

எப்போதும் உண்மையாயிருப்பேன் 

நீ என்ன கொண்டு வந்தாலும்

அதை வாங்கிக்கொள்வேன்... நான்.


நீ உளம் மகிழ்ந்து 

அற்புதத்தைப் பார்க்க விரும்பினால் அருகில் வருக: 

தோட்டமாய், மலர்விரிப்பாய், மலராய் 

இருக்கிறேன் நான்.


உன் பாவங்களை நினைத்து 

இதயம் வருந்தினால் என்னிடம் வருக  

நோய்கொண்ட இதயங்களின்  

மருத்துவன் நான்.   


பலிபீடத்தில் இரகசிய இடங்களில் 

வணங்கப்படுபவன் மட்டுமல்ல: 

குடிகாரர்களின் இசைக்கலைஞன் நான், 

மதுவறைகளில் மதுஊற்றுபவன் நான். 


மடாலயங்களின் ஏகாந்தத்தில்

எனைத் தேடுபவனே வெளியே வருக 

சந்தை வெளியில் உனை அடைந்திட 

அலைந்து திரிகிறேன் நான்.


ஓட்டுபோடப்பட்ட சூஃபி மேலாடைக்கும்  

பொன்மகுடத்துக்குமான ஆசையை விட்டுவிடு 

என் தொப்பியையும் மேலங்கியையும்  

உனக்கு வழங்குகிறேன் நான்.

 

உன் இயலாமையைக் கண்டு 

மனம் தளரவோ கலங்கவோ வேண்டாம்... 

ஒவ்வொரு இடத்திலும் துணையாகவும், 

இதயத்தில் அன்பாகவும், இருக்கிறேன் நான்.


துன்பத்துடன் உன் இதய ரகசியங்களை சொல்ல வேண்டாம் 

உன் ஆத்மாவின் தனித்த அறையில் 

அதற்குத் துணைநின்ற சதிகாரனாக 

இருக்கிறேன் நான்.


உனைச் சுற்றி வட்டங்களை

எவ்வளவு காலம் வரைவாய்?

மையப் புள்ளியாக அமைக

உனைச் சுற்றி வருவது நான்.. 


நீ ஒரு முத்தென மயங்கும் களிமண்: பயனற்றது! 

தெய்வீகப் பெருங்கடலின் 

விலைமதிப்பற்ற முத்தை 

கண்டுதருகிறேன் நான்!


காதலின் நெருப்பால் எரிக்கப்பட்ட 

மொய்னின் உலர்ந்த விறகான உடல்  

ஒரு தீப்பொறியாக மாறியது 

அவர் தன்னிடம் சொன்னார் நெருப்பாகிறேன் நான்!

 

நாயக நாயகி பாவம் என்பது ஓருவகையில் சங்க இலக்கியத்தின் தலைவன் தலைவி பாவத்துடன் ஒப்பிடத்தக்கது. நாயக நாயகி பாவமாக இவ்வுணர்வு மேல்நிலையாக்கத்தை அடைகிறது. கீத கோவிந்தத்தை இரு மரபுகள் முதன்மை நூலாக கருதுகின்றன. சைதன்யரின் வழி வந்தவர்கள் உலகியல் தளத்தின் விளக்கங்களை பொருட்படுத்தாமல் ராதா மாதவத்தை கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையிலான ஜக்கிய வேட்கையின் குறியீடாக மட்டும் கண்டார்கள். இதற்கு மாறாக‌ சஹஜிய மார்க்கம் எனும் தந்திர மரபு கிருஷ்ணனாகவும் ராதையாகவும் தன்னை உணர்ந்து இயல்பாக கூடுவது என விளக்கிக்கொண்டனர். வங்காளத்து பால் மரபு இதன் நீட்சியே. காதலரை கடவுளாக காண்பதா, கடவுளை காதலராக காண்பதா, இவற்றில் எது சரியானது, எது உத்தேசிக்கப்பட்டது என தீரா விவாதங்களை நடத்தினாலும் தீர்மானமான முடிவை எட்ட இயலாது. ஆனால் காதலில் மனிதர் கடவுளின் முத்தத்தின் ஈரத்தை உணர முடியும் என்பதே இக்கவிதைகளின் சாரம். கடவுளுக்கு நெருக்கமாக இருக்கும் நிலை அதுவே. புலனும் அகமும் விழித்து மலர்ந்து கிடக்கும். 




இந்த நாயக நாயகி உறவு தலைகீழாகி பக்தன் ஆணாகவும் கடவுள் பெண்னாகவும் ஆவது அரிது. அபிராமி அந்தாதியும் சவுந்தர்ய லகரியுமே சட்டேன நினைவுக்கு வருகிறது. 


என் பிதற்றல்களெல்லாம்  ஜபமாகட்டும். 

என் செய்கைகள் எல்லாம் உன்னை வழிபடுவதற்கான முத்திரைகளாகட்டும். 

என் நடையெல்லாம் உன்னை வலம் வருவதாகட்டும்

என் உணவெல்லாம் உன் வேள்விப் படையலாகட்டும்

நான்  படுத்துக்கொள்வது உன்னை வீழ்ந்து வணங்குவதாக இருக்கட்டும்.

இன்னும் சுகமாக, எனது தனி முயற்சி ஏதுமின்றி எவையெல்லாம் செய்கிறேனோ அவை எல்லாம் உனை வணங்கும் முறையாகட்டும். 

-சவுந்தர்ய லகரி 27. 


சங்கரரின் சவுந்தர்ய லகரியில் வரும் இக்கவிதை ஒரு மந்திரமும் கூட. எளிமையும் செறிவும் ஒரு சேர உள்ள அரிய நிலை. முழு விழிப்படைந்த நிலையில் செய்யப்படும் செயல்யாவும் இறையின் பொருட்டே என்றாகிறது. வேதாந்தம் நமக்கு நிகழும் அனைத்தையும் ஈஸ்வர பிரசாதம் என நன்மை தீமை எனும் இருமைக்கு அப்பால் முழுமையாக பணிந்து ஏற்கச்சொல்கிறது. புரியும் அனைத்து செயல்களையும் ஈஸ்வர அர்ப்பணம் என கர்ம பலனை துறந்து நடக்க சொல்கிறது. இக்கவிதை அந்நிலைக்கான இறைஞ்சுதல்.




இக்கவிதைகள் நேரடியானவை, எளிமையானவை, உயிர்ப்புடைவையும் கூட. இந்த குரல்களின் இன்றைய நீட்சியை ஸ்ரீவள்ளி கவிதைகளிலும் ஜெயமோகனின் நீலத்திலும் காண முடியும். நீலத்தை நீள் கவிதையாக அல்லது வசன கவிதையாக கருதுவது உகந்தது. 'ஐக்கிய வேட்கை' கவிதைகள் வேதாந்த அனுபவத்தை அடித்தளமாக கொண்டவை. பிரம்மத்தை சத்தியமாக கண்டு பிற அனைத்தையும் மாயையாக காணும் நோக்கு அத்வைத வேதாந்தத்தினுடையது என்றால் விசிஷ்டாத்வைதம் மாயை என ஒதுக்கவதை மறுதலிக்கிறது. உருவும் அருவும் இறையின் வடிவமே என்கிறது. மெய்யியலுக்கும் கலைக்கும் இடையிலான உறவை ஆராய்வதற்கு விசிஷ்டாத்வைதம் ஒரு நல்வாய்ப்பை அளிக்கிறது. மெய்யியலுக்கு எதிர்வினையாக அதையொட்டி கலை ஒழுகுவது ஒருவகை என்றால் கலை ஒரு மெய்யியல் பள்ளிக்கான விதையாக ஆவது கலையின் மகத்துவத்தை பறைசாற்றுவது. ஆண்டாளின் வழியாகவும் ஆழ்வார்களின் வழியாகவும் பெருகியோடிய கவிதையே ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத்திற்கு அடிப்படை. 


மீரா,  கபீர், அக்கம்மாதேவி என அனைவருக்கும் உள்ள மற்றொரு பொதுத்தன்மை என்பது அவர்கள் கலகக்காரர்களும் கூட. வைதிக மரபு, சடங்குகள், தகுதிகள் சார்ந்து விடாமல் கேள்விகளை எழுப்புபவர்கள். தெலுங்கு கவி வேமனரின் பாடல்கள் பெரும்பாலும் இவ்வகையிலானவை.  'எச்சில் எச்சில் என்று சொல்லும் அந்த வாயினாலேயே வேதங்களைப் படிக்கும் பைத்தியக்காரர்களே! யோசித்துப்பார்த்தால், வாயிலிருந்து வரும் அதுவும் எச்சில் தானே! விஸ்வதாபிராமா கேளடா வேமனை'. 

 நம் சித்தர் பாடல்களிலும் இத்தகையத்தன்மை உண்டு. ஆன்மீகத்தை அமைப்பாக்கம் செய்வதற்கு எதிரான கலகக்குரல்களாக இக்கவிதைகள் சமூக முக்கியத்துவம் பெறுகின்றன. இவர்களுடைய கலகம் பெரும்பாலும் செரிந்த அக வாழ்விற்கு தடையாக புற வாழ்வு உள்ளது எனும் உணர்விலிருந்து எழுகிறது. உருகி உருகி காதல் மொழி பேசும் இவர்களால் கடுமையாக நிராகரிக்கவும் வெறுத்து ஓதுக்கவும் இயல்வது சுவாரசியமான முரண்தான். பட்டினத்தாரின் கவிதைகளில் உள்ள பெண் வெறுப்பை நினைவில் கொள்ளலாம். ஐக்கிய வேட்கை கவிதைகளும் மறைஞான கவிதைகளும் நாணயத்தின் ஒரு பக்கம் என்றால் அதன் மறுபக்கம் கண்டன கவிதைகள். இந்த முரணியக்கத்தை நவீன  கவிதைகளுக்கும் நீட்டித்து காண முடியும். கண்டன கவிதைகள் உரக்க ஒலிப்பவை, பொருத்தமற்ற உணர்வுநிலை என தோன்றினாலும் கூட ஆன்மீக கவிதைகளின் இன்றியமையாத பகுதியாக காண வேண்டியுள்ளது. கவிஞரின் அகம் முடிவற்ற ஊசலில் ஆடிக்கொண்டிருப்பதை உணர்த்துகிறது. 


சந்தனத்தை அறுத்துத் துளைத்துத் தேய்த்தால்

துக்கத்தில் வாசனையைத் துறக்குமா?

தங்கத்தைத் தட்டியுருக்கினால்

வேதனையில் வெந்து களங்கப்படுமா?

கணுக்கணுவாக வெட்டி கரும்பைக் கொணர்ந்து 

செக்கிலரைத்து வேகவைத்து 

பாகாக்கி சர்க்கரை செய்தால்

நொந்தேன் என இனிப்பதைத் துறக்குமா?

முன்னர் நான் செய்த இழிவுகளை

முன்னிலைப்படுத்தினால் உனக்கே கேடு!

என் தந்தை சென்னமல்லிகார்ச்சுனனே,

கொன்றாலும் சரணமெனாமல் உயிர்த்தரிக்க மாட்டேன்.


இது அக்கம்மாதேவியின் வசனம். முந்தைய இழிவுகளும், வாழ்வின் அன்றாட இக்கட்டுகளும் வருத்திய பின்னும் கூட கவிதையையும் சென்ன மல்லிகார்ச்சுனனையும் இறுக பற்றிக்கொள்கிறாள். தன் நிலைக்காக எவரையும் பழிக்கவில்லை. தன் இயல்பில் முழுக்க லயித்துக்கிடப்பதே சுகம். கண்டன போக்கிலிருந்து அரவணைக்கும் மன இயல்பிற்கு கவிதை பயணிக்கிறது. 


ஆன்மீகவாதிகளின் கவிதை வெளிப்பாட்டிற்கும் கவிஞர்களின் ஆன்மீக வெளிப்பாட்டிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்ன என்பதை ரூமியின் 'கொடி மீதல்ல' கவிதையை கொண்டு புரிந்து கொள்ள முடியுமா என பார்க்கலாம். ஆன்மீகவாதி சொல்லின்மையை இலக்காக்கிக்கொண்டு சொற்களின் ஊடாக பயணிக்கிறார். உரிய உயரத்தை எட்டியதும் அவர் சொற்களை உதிர்த்து மேலெழெவார். கவிஞருக்கு கவிதை உபாசனை மார்க்கம் மட்டுமல்ல உபாசனை மூர்த்தியும் கூடதான். நாத யோகம், லய யோகம் போல ஆதி மொழி வழியாக பிரபஞ்சத்துடன் ஒன்றுவதை கனவு காண்கிறார். ரூமியின் இந்த கவிதை சொற்களின் நிறைவின்மையை சுட்டுகிறது. 



கொடி மீதல்ல


எனது வார்த்தைகளை

வாங்குபவர்களுக்காக

விழைந்த காலம்

ஒன்றுண்டு


இப்போதோ

வார்த்தைகளிலிருந்து என்னை

யாரேனும் விடுவிக்கமாட்டார்களா

என ஏங்குகிறேன்


வசீகரமும் ஆழமும் கொண்ட

படிமங்கள் பலவற்றை

நான் புனைந்திருக்கிறேன்

ஆபிரஹாமைப் பற்றியும்

பிரதிமைகளுக்கு பெயர்போன

ஆபிரஹாமின் தந்தை அஜாரைப்

பற்றியுமான காட்சிகள்

நான் புனைந்தவற்றின் மீது 

மிகவும் சலிப்புற்றேன்


பின்னர்

உருவமற்றதொரு படிமம் வந்தது

விட்டுவெளியேறினேன் நான்

இனி வேறொருவரைத் தேடிக்கொள்ளுங்கள்

படிமங்கள் வடிவமைக்கும் வேலையிலிருந்து 

விலகிவிட்டேன்


ஒருவழியாகப்

பித்துநிலையின் சுதந்திரத்தைப்

புரிந்துகொண்டேன் நான்


ஏதோவொரு படிமம் வருகிறது

அலறுகிறேன் நான்

'வெளியே செல்!'

சிதறி மறைகிறது அது.


காற்றுக்குக் காதல்

கொடி தாங்கும் கம்பத்தின் மீதே

கொடி மீதல்ல

காதலின் சாரம் 

அதுவே



நவீன கவிதைகளில் ஆன்மீகத்தை பேசியவர்கள் என பாரதி தொடங்கி  ந. பிச்சமூர்த்தி, பிரமிள், தேவதேவன், ஸ்ரீ வள்ளி என ஒரு வரிசையை சுட்டிக்காட்ட இயலும்‌. நவீன கவிதை  தன்னை ஆன்மீகத்திலிருந்து விடுவித்துக்கொள்ள முயல்கிறது. அதன் வழி பல புதிய திசைகளில் பல்வேறு சாத்தியங்களுடன் தொடர்ந்து பயணிக்கிறது. இது ஒரு இன்றியமையாத இயல்பான மாற்றம். எனினும் ஆன்மீக கவிதைகள் ஓரு சரடாக எப்போதும் உயிர்த்திருக்கும் என்றே எண்ணுகிறேன். 


  • சுனில் கிருஷ்ணன்


1. வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று

ஆர்வு உற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்

பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்

கார் ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே


 2. கோளுண்டானன்றிவந்து என்னுயிர்தானுண்டான்


நாளுநாள் வந்து என்னை முற்றவுந்தானுண்டான்


காளநீர்மேகத் தென்காட்கரையென்னப்பற்கு


ஆளன்றேபட்டது என்னாருயிர்பட்டதே.


3.  பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப

மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன்

வாயமுதம் பொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால்

சிதையாரோ வுன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே



கட்டுரைக்கு உதவிய நூல்கள்


தாகங்கொண்ட மீனொன்று, ரூமி, தமிழில்- என். சத்தியமூர்த்தி.


புன்னகைக்கும் பிரபஞ்சம்- கபீர்- தமிழில் செங்கதிர்


மூச்சே நறுமணமானால் - அக்கம்மாதேவி- ஆங்கில மொழியாக்கம் வினய சைதன்யா. தமிழில் - பெருந்தேவி. (விரைவில் காலச்சுவடு வெளியீடாக வெளிவர உள்ளது)


பெயரற்ற யாத்ரீகன் - ஜென் கவிதைகள்- தமிழில் எம்.யுவன்- மறுபிரசுரம் விரைவில் நூல்வனம் வெளியிட உள்ளது.


வேமனர் மாலை- தமிழில் மதுமிதா. தமிழினி.‌


Mira bhai ecstatic poems- மூலத்திலிருந்து ஆங்கிலம் ராபர்ட் ப்ளை. தமிழில் - சுனில் கிருஷ்ணன். 



இருளுக்குள் ஒளிந்திருக்கும் இருள், தாவோ தே ஜிங், லாவோசி. தமிழில்- மலர்ச்சி பிரபாகரன். வெளியீடு- எழுத்து.



https://www.jeyamohan.in/1333 - சிருஷ்டி கீதம் மொழியாக்கம்.


இந்து ஞானம் ஒரு எளிய அறிமுகம். க்ஷிதி மோகன் சென். சுனில் கிருஷ்ணன், சூக்தம் மொழியாக்கம் ஜடாயு. 


Shri aurobindo or adventurer of consciousness - satprem.


நாச்சியார் திருமொழி - dravidavedam.org


அற்புத திருவந்தாதி காரைக்கல் அம்மையார்


The saundarya lahari- Nitya chatanya yati commentary. 


https://gurunitya.wordpress.com/2021/08/30/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/


க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி கவிதைகள் தமிழில் சுபஸ்ரீ. 


Gita govindam - Love songs of krishna a radha- translated by Lee SIegel. Clay sanskrit



நன்றி 

பெருந்தேவி, போகன், ஜா. ராஜகோபால், சுந்தர வடிவேலன், மதுமிதா.