Tuesday, December 31, 2013

சுருள் நீவி விரியும் காலம்

காலம் சுருண்டுகொண்டுவிட்டது. பெட்டிக்குள் அடங்கும் சர்ப்பத்தின் நாக்கு நுனி மட்டும் இன்னும் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கிறது, நாளை அதுவும் அடங்கிவிடும். ஆயிற்று, மற்றுமொரு வருடம் இதோ தன்னுள் என்னை செரித்துகொண்டுவிட்டது. முடிவற்று நீளும் நதிக்கரையில் நின்று ஒரு சான் நிலமளக்கும் சிறுமி போல் காலத்தை துண்டங்களாக ஆக்கி விட்டிருக்கிறான் மனிதன். முடிவற்ற சாத்தியங்களை தன்னுள் புதைத்துவைத்துக்கொண்டு கைமூடி குறும்பு மின்ன தெற்றுப்பல் தெரிய சிரித்து நிற்கிறாள் காலமெனும் சிறுமி.  வேறு அனேக காலதுன்டங்கள் போல் சென்ற ஆண்டும் எனக்கு எல்லாவகையிலும் முக்கியமானதே. வரும் ஆண்டும், ஆண்டுகளும் அப்படித்தான் இருக்கும். ஒரு அற்ப மகிழ்ச்சி, எங்கிருந்தோ எங்கு செல்வதற்கோ ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் போது கடக்கும் தொலைவு ஒன்றும் பெரிதாக தெரிவதில்லை. ஆனால் எங்கோ ஓரிடத்தில் நின்று இளைப்பாறும் கணத்தில் திரும்பி நோக்கும் போது ஒரு பயணம் நிகழ்ந்திருப்பது புலப்படுகிறது.


Friday, December 20, 2013

ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் – ஜெயகாந்தன்

ஆம்னிபஸ் தளத்தில் எழுதிய கட்டுரையின் மீள் பிரசுரம் 

கல்கி, தேவன், சேத்தன் பகத், ஹாரி பாட்டர் எனும் வட்டத்தில் புழங்கிக்கொண்டிருந்த காலகட்டத்தில் நவீன தமிழ் இலக்கிய உலகை அறிமுகம் செய்த நண்பன் அவன். இணையத்தில் அவன் புழங்குவதில்லை என்றாலும் சிற்றிதழ் வட்டத்தில் முனைப்புடன் இயங்கிக்கொண்டு தானிருக்கிறான். நீண்ட நாட்களுக்கு பிறகு அண்மையில் அவனை நண்பனின் திருமணத்தில் சந்திக்க நேர்ந்தது. ஏதேதோ இலக்கிய அரட்டைகள் என சுகமாக கழிந்துக்கொண்டிருந்த எங்கள் உரையாடல் மெல்ல காந்தியை பற்றியும் அண்மைய காலத்து அரசியல் நிகழ்வுகள் பற்றியும் திரும்பியது. சில நிகழ்வுகளில் எனது அரசியல் நிலைப்பாடை தெளிவு படுத்த வேண்டும் என்று கோரினான் ஒவ்வொரு விஷயத்திலும் நான் ஒரு நிலைபாட்டை எடுத்துத்தான் ஆக வேண்டுமா? ..இது சார்ந்து நான் எந்தவொரு நிலைப்பாடையும் எடுக்கவில்லை..நான் எழுதுவதும் வாசிப்பதும் உண்மையில் எனக்கொரு ஆன்மீக அனுபவம் அவ்வளவே..அரசியல் சர்ச்சைகளை பற்றி அதிகம் அலட்டிகொள்வதில்லை’ என்றேன். ‘ காந்தியின் பெயரை சொல்லிக்கொண்டு திரிகிறாயே தவிர அவரின் நேர்மை உன்னிடம் இல்லை’ என்று கோபமாக சொல்லிவிட்டு அகன்று சென்றான். அவன் சென்றபிறகு யோசித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் எனக்கு நேர்மை இல்லையா? சிந்தனைகள் சுழற்றியடித்தன. வேறு பலரைப்போல் நானும் காந்தியின் பிம்பத்து நிழலில், ஒளிபுகாத இருளில் என் அகத்தை மறைத்து வைக்கிறேனா? கொஞ்சம் சுய விமர்சனங்களுக்கு பின்னர் இறுதியாக இப்படியொரு முடிவுக்கு வந்தேன், காந்தியின் அளவுக்கு இல்லையென்றாலும், ஓரளவு நேர்மை இருக்கவே செய்கிறது. ஆனால் காந்திக்கு இருந்த துணிவில் கால் பங்கு கூட எனக்கில்லை.


தமிழில் ‘cult status’ அனுபவித்த கொண்டாடப்பட்ட/ கொண்டாடப்படும் எழுத்தாளர்கள் மிகக் குறைவு. ஒட்டுமொத்தமாகவே வாசிக்கும் விகிதாச்சாரம் குறைவு என்பது முக்கிய காரணமாக இருக்கலாம். ஜெயகாந்தன், சுஜாதா இருவரையுமே இவ்வகையில் முன்னோடிகள் என வரையறுக்கலாம். மக்கள் இவர்களை பின்தொடர்ந்தார்கள், அவர்களுடைய கருத்துக்களை வாழ்வில் பொருத்தி பார்த்தார்கள், எழுத்தாளர்கள் வாசகர்களுடைய அந்தரங்கமான மனவெளியை ஆக்கிரமித்தார்கள். அதுவும் குறிப்பாக ஜெயகாந்தன் எழுத்துலகில் ஒரு நாயகராகவே உலா வந்தவர். எழுபது எண்பதுகளில் பிறந்தவர்களில் ஊருக்கு ஒருவரின் பெயராவது ஜெயகாந்தன் என்று இருக்கும்.

ஜெயகாந்தனின் சில சிறுகதைகளை தான் நான் முதன்முதலில் வாசித்தேன். உண்மையில் பெருத்த ஏமாற்றமே எஞ்சியது. அதன் பின்னர் மீண்டும் கொஞ்ச காலம் கழிந்து அவருடைய சில நாவல்களை வாசிக்க நேர்ந்தது. ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ உண்மையில் ஒரு நல்ல படைப்பாக என்னை கவர்ந்தது என்று தான் சொல்லவேண்டும். ஆனாலும் அக்காலக் கட்டத்தை சேர்ந்த, அவரைக்காட்டிலும் அபார மொழித்திறன் கொண்ட கதை சொல்லிகளை நான் வாசித்திருக்கிறேன். அவருக்கிருந்த வசீகரத்திற்கான காரணம் எனக்கு விளங்காமலே இருந்தது, ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவத்தை வாசிக்கும் வரை. ஏனெனில் ஜெ.கேவைப் பொருத்தவரை எழுத்து என்பதை தாண்டி எழுத்தாளர் எனும் ஆளுமையின் மீதான ஈர்ப்பு. தான் அவரை அத்தனை பிரம்மாண்டமாக ஆக்கியது என தோன்றுகிறது. படைப்பாளி எனும் திமிரும், உச்சபட்ச நேர்மையும் அவரை இன்றும் வாசகர்கள் கொண்டாடும் ஒரு படைப்பாளியாக ஆக்கியுள்ளது.

ஜெ.கே இளமை காலத்தில் காந்தியின் பால் ஈர்க்கப்பட்டு, கம்யுனிச பின்னணியில் வளர்ந்து, நேரு, காமராஜர் காட்டிய சோசியலிச சமூக கனவை தனதாக சுவீகரித்து கொண்டவர். 1971 முதல் மூன்றாண்டுகளுக்கு துக்ளக் இதழில் வெளிவந்த தொடர் தான் இந்த நூல். அதன் பின்னர் எத்தனையோ மாற்றங்கள் நேர்ந்துவிட்டன. எமெர்ஜென்சி, காமராஜரின் மரணம், இந்திராவின் மரணம், எம்.ஜி.ஆரின் எழுச்சி மற்றும் மரணம், இன்னும் என்னென்னவோ. தி.மு.க தலைவர் கருணாநிதியையும், அண்ணாவையும், ஒட்டுமொத்தமாக தி.மு.கவின் கொள்கைகளையும் கடுமையாக இந்நூலில் விமர்சித்து எழுதியிருக்கும் ஜெ.கே கூட தி.மு.க தலைவருடன் ஒரே மேடையில் அமர்ந்து சில காலத்திற்கு முன்பு உரையாற்றியது சிலருக்கு கடும் அதிருப்தியை அளித்தது. நான் அதை தவறென்று சொல்ல மாட்டேன்.. உக்கிரமும் கொதிப்பும் அடங்கி முதுமையில் பேரமைதியை நெருங்கும் தருணத்தில் கடந்த கால சில்லறை சர்ச்சைகள் எல்லாம் பொருளிழந்து போகக்கூடும் அல்லது வழி தவறிய சாதாரண வாய்ப்புகள் கூட அதி பிரம்மாண்டமாக மீண்டெழுந்து விரக்தியை அளிக்கக்கூடும். ஜெ.கே அவ்வகையில் மனவிரிவுடன் அமைதிக்கு அருகாமையில் இருக்கிறார் என்று மகிழ்ச்சியடைய வேண்டும். ஒருகால் இந்த நூலை ஜெ.கே இன்று எழுதியிருந்தால் இது இன்னும் பல உள் அடுக்குகளை கொண்டதாக இருந்திருக்கும்.

பொது வாழ்வில் நேர்மையும் துணிவும் கொண்ட நுட்பமான படைப்பிலக்கியவாதியின் வழியாக வரலாற்றை வாசிப்பது ஒரு அனுபவம். அதுவும் ஜெ.கே போன்று அக்கால அரசியல் ஆளுமைகளுடன் பழகிய, அரசியல் மேடைகளில் புழங்கியவர் முன்வைக்கும் விமர்சனங்களும் பார்வைகளும் கூர்மையானவை. காந்தி, நேரு, காமராஜர் ஆகிய மூன்று ஆளுமைகள் மீது மிகப்பெரிய அளவில் மரியாதை கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக காமராஜரைப் பற்றி இவரளிக்கும் சித்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. எனக்கு தெரிந்து காமராஜரை மட்டுமே அவர் தலைவர் காமராஜர் என்று விளிக்கிறார். காந்தியை நெருங்கி அறிய முற்பட்ட தொடக்க காலத்தில் நேருவின் மீது எனக்கொரு விளக்க முடியாத வெறுப்பு இருந்ததுண்டு.. ஆனால் அண்மைய காலத்து வாசிப்புகள் வழியாக அவருடைய அத்தனை பலவீனங்களுடனும் நேரு எனும் மகத்தான மக்கள் தலைவரை என்னால் நெருங்கி புரிந்துகொள்ள முடிகிறது. இந்நூல் அப்புரிதலை உறுதிப் படுத்தி விரிவு படுத்துகிறது என்று நிச்சயம் சொல்வேன்.

ஒட்டுமொத்தமாக இந்நூலின் உள்ளடக்கத்தை இப்படி தொகுத்து சொல்லலாம், மானுடத்தை மீட்டு சமதர்ம சோசியலிச சமூகத்தை கட்டமைக்க நமக்கிருக்கும் ஒற்றை பெரும் வாய்ப்பாக ஜெ.கேவிற்கு கம்யூனிசத்தின் மீதிருந்த நம்பிக்கை, மற்றும் அவர் அனுபவம் வழியாக இந்தியாவில் நடைமுறையில் அது அடைந்த வீழ்ச்சி. இந்தப் புள்ளியை சுற்றியே அவருடைய அரசியல் செயல்பாடுகள் மற்றும் பார்வைகள் இருந்தன. ஒரு இயக்கம் அல்லது அமைப்பிற்கு ஒரு பொது செயல்திட்டமிருக்கும், அவ்வியக்கத்தில் பங்கு வகிக்கும் தனிமனிதனுக்கு அந்த செயல்திட்டத்தின் பால் மாற்று கருத்து இல்லையென்றால் சந்தோஷம். ஆனால் தனி மனிதனாக தான் பங்கு வகிக்கும் இயக்கம் தான் அறமென்று நம்பும் ஒரு திசைக்கு நேரெதிர் திசையில் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் பயணித்தால் தனி நபராக நாம் அங்கு என்ன செய்ய இயலும்? நாமும் அந்த சுழலில் நம்மை பொருத்திக்கொண்டு கரையேறலாம் அல்லது நாம் சரி என்று நம்பும் திசையை நோக்கி எதிர்த்து நீந்தலாம் அல்லது போதும் நமக்கேன் வம்பு என்று கரை ஒதுங்கலாம். ஜெ.கே தான் நம்பும் கம்யுநிசத்திற்கு விசுவாசமாக இருக்கும் அதேவேளையில் கட்சி எதிரி என அரசியல் காரணங்களுக்காக கட்டம் கட்டும் நபர்களை அப்படியே எதிரி என்று ஏற்றுக் கொள்பவர் அல்ல. காந்தியையும் நேருவையும் காமராஜரையும் வெவ்வேறு காலகட்டத்தில் எதிரிகளாக கட்டமைத்த கட்சியின் நிலைபாட்டிற்கு உடன்பட மறுக்கிறார். சோசியலிச நாடாக தன்னை பிரகடனப் படுத்திக்கொண்ட சீனா இந்தியாவை ஆக்கிரமிக்க தொடங்கியபோது கம்யுனிஸ்டுகளில் இரு பிரிவுகள் தோன்றின. சீனாவின் நாடுபிடிக்கும் வேட்கையை ஆதரிக்கும் ஒரு கோஷ்டியும் அதை எதிர்த்து நிற்கும் மற்றொரு பிரிவும். (CPI க்கும் CPM க்கும் உள்ள வேறுபாடு இப்போது தான் புரிந்தது) ஜெ.கே பால தண்டாயுதபாணி, மோகன் குமாரமங்கலம் வழியில் நேருவின் இந்தியாவிற்கு துணையாக நின்றார்.

ஜெ.கேவிற்கு இருந்த சில நுட்பமான அரசியல் புரிதல்கள் உண்மையில் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. ஜீன் ஷார்ப், எரிக்கா போன்ற அரசியல் ஆய்வாளர்கள் அகிம்சை மற்றும் வன்முறை போராட்டங்களை பற்றி ஆராய்ந்து அண்மைய காலங்களில் கண்டடைந்த முடிவுகளை ஐம்பதுகளின் தொடக்கத்திலேயே அதாவது அவருடைய பதின்ம வயதினிலேயே அடைந்துவிடுகிறார் ஜெ.கே.

சுதந்திரத்திற்கு பின்பான இந்தியாவில் நேருவுக்கு ஆதரவாக இருந்த ஜோஷியின் தலைமை அகன்று ரனதிவே அப்பதவியை அடைந்தவுடன் அரைக்குறையாக புரட்சிக்கு அறைக்கூவல் விடுக்கப்பட்டு, அரசால் கம்யுனிஸ்டுகள் ஒடுக்கப்பட்டனர். சில காலம் கம்யுனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. அந்த கால கட்டத்தில் ரகசிய நடவடிக்கைகளில் பங்கு வகித்த ஜெ.கே சொல்லும் மிக நுட்பமான அவதானிப்பு ஒன்றை சூட்டுகிறேன்.
“ஒரு இயக்கம் தனது லட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ள ரகசியமான வழிகளையும், பலாத்காரமான முறைகளையும் கைக்கொள்ளும்போது அந்த இயக்கம் சம்பந்தப்பட்ட தனி மனிதர்களிடம் ஒளிந்துக் கொண்டிருக்கிற பலவீனங்களும் தனிமனிதக் குறைபாடுகளும் இந்த ரகசிய முறையைப் பயன்படுத்திக்கொண்டு வெளிபடுகிற விபரீதங்களை நான் கண்டதால் ரகசிய முறைகளை வெறுத்தேன்”.

ஜெ.கேயின் மேடை பேச்சை கேட்டு வளராத தலைமுறையை சேர்ந்தவன் என்றாலும் கூட அவர் உரையாற்றிய காலகட்டம் மற்றும் சூழலை கணக்கில் கொண்டு அவர் உரை எத்தகையதாக இருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது. உதாரணமாக திருச்சியில் நடைபெற்ற எழுத்தாளர்கள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த பெரியாரின் முன்னிலையில் அவராற்றிய உரை http://www.thoguppukal.in/2011/02/blog-post_2364.htmlஒரு உதாரணம். சென்னை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றதற்கு பிராமணர்கள் ராஜாஜியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு வாக்களித்தது தான் என்றொரு பேச்சு கிளம்பியிருந்த சூழலில் சென்னை வாழ் பிராமண இளைஞர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு, “யார் பிராமணன்?” என்று அவராற்றிய உரை அவருடைய துணிச்சலுக்கு எடுத்துக்காட்டு. அண்ணாவின் மரணத்திற்கு பின்பான காலகட்டத்தில் கண்ணதாசன் ஏற்பாடு செய்திருந்த அஞ்சலி கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை மற்றொரு உதாரணம். இறந்துவிட்டார் என்பதில் வருத்தம் தான் என்றாலும், அதற்காக அவரை விமர்சிக்காமல் இருக்க முடியாது என்று கடுமையாகவே உரையாற்றுகிறார். பண்பாட்டு சீரழிவுக்கு காரணம் தி.க / தி.மு.க அல்ல மாறாக சீர்கேட்ட பண்பாட்டின் விளைவே அது என்கிறார். அண்ணாவின் மரணத்திற்கு கூடிய கும்பலை பற்றி பலரும் வியந்து பெசிக்கொண்டிருத சூழலில் கும்பலுக்கும் (mob) கூட்டத்திற்கும் (gathering) உள்ள வேற்றுமையை கோடிட்டு காட்டுகிறார். இளமை பருவத்தில் அமெரிக்க தூதரகத்தின் மீது கல்லெறியும் போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டு இறுதியில் தவறாக நூலகத்தின் மீது கல் எறிந்தனர். அவர் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று. இவர் திட்டமிட்ட எண்ணிக்கையை காட்டிலும் , சம்பந்தமில்லாத நபர்கள் கூட கல் எறிந்துவிட்டு சென்றதை கவனித்து இத்தகைய கும்பல் கலாச்சாரத்தின் அழிவு தன்மையை உணர்ந்ததாக சொல்கிறார். “காந்திஜியைப் பற்றியும் சாத்வீகப் புரட்சி பற்றியும் பெரிய நினைப்புகள் வைத்திருந்த எனக்கு இந்தப் பேதைத்தனம் எப்படி வந்தது? மனிதர்களை பலாத்காரம் எவ்வளவு வேகமாக பற்றிப் பிடித்துகொள்கிறது? தங்களுக்கு சொந்தமில்லாதவற்றை எல்லாம் அழித்து விடுவதிலே அவன் எவ்வளவு மும்முரமாக நிற்கிறான்!”

தோழர் ஜீவானந்தத்துடன் பழகியவர் ஜெ.கே. அவருடைய மரணத்திற்கு பின்னர் எழுதிய டைரிக் குறிப்பின் சில பகுதிகள் இந்நூலில் உள்ளது. தன்னை தானே அந்த துக்கத்திலிருந்து மீட்டுக்கொள்ளும் அற்புதமான எழுத்துக்கள். மார்க்சிய அரசியலில் அவர் ஆசானாக கருதும் பால தண்டாயுதபாணி காமராஜுக்கு எதிரான நிலைப்பாடை எடுத்தபோது அத்தனை ஆண்டுகால நட்பில் விரிசல் வந்து பிரிய நேர்கிறது. உணர்ச்சிகரமான பிரிவுக்கு பின்னரும் அவர்களுடைய நட்பு நீடித்தது. பாலன், எஸ்.ராமகிருஷ்ணன், மோகன் குமாரமங்கலம், ஆர்.கே.கண்ணன் போன்ற அக்காலத்திய கம்யுனிச தலைவர்களைப் பற்றி விரிவாகவே பேசுகிறார். அதேப்போல் திமுக விலிருந்து விலகிய ஈ.வி.கே சம்பத் பற்றியும் மதிப்புடன் பேசுகிறார். 

“ராஜாஜியின் தோல்விகளுக்கெல்லாம் கரணம் அவர் காந்தியாக முயன்றது தான். காந்திஜியின் தத்துவங்களையும் லட்சியங்களையும் அவர் சித்த சுத்தியுடன் ஏற்றுக்கொண்டாலும் அவர் காந்திஜிக்கு இணையானவராக இல்லை. காந்திஜி வர்ணாசிரம தர்மத்தை மந்திரிசபைகள் நிறைவேற்றும் சட்டங்களின் துணைக் கொண்டு நாட்டில் புகுத்த நினைக்கவோ முயலவோ இல்லை.” என்று ராஜாஜிக்கு உரிய மரியாதையை அளித்த பின்னர் தான் கடுமையாக விமர்சிக்கிறார். மற்றொரு தருணத்தில் காமராஜரை வீழ்த்த ராஜாஜி தி.மு.க துணை நாடிய சல்லிசான அரசியலை கடுமையாக விமர்சிக்கிறார். அவ்வகையான கொள்கையற்ற கூட்டணிகள் அமைவதற்கு இந்திய அளவில் ராஜாஜியே வழிகாட்டினார் என்கிறார். சுதந்திரா கட்சியின் உதயத்தை தேசிய அரசியலின் மிக முக்கியமான கட்டம் என கருதும் ஜெ.கே, அதற்கான காரணங்களை பட்டியலிடுகிறார்- சோசியலிச இடது சாரி சார்புடைய, சோவியத்துக்கு அணுக்கமான காங்கிரஸ் கட்சிக்கு நேரெதிராக காந்திய, அமெரிக்காவுக்கு அணுக்கமான, வலது சாரி சார்புடைய சுதந்திரா கட்சி உருவாவதன் மூலம் அது ஒரு வலுவான எதிர்தரப்பாக இருக்க முடியும் என்று கருதுகிறார். ஆனால் அக்கட்சியும் வீழ்ந்தது. 
     
துணைப் பிரதமராக திகழ்ந்த மொரார்ஜி தேசாயை விமர்சித்து எழுதிய தலையங்கம் இப்படி தொடங்குகிறது – ‘நேருவைப் போல் தொப்பி அணிந்துள்ள மொரார்ஜி அவர்களே’. தி.க/தி.மு.க, அண்ணாதுரை, கருணாநிதி ஆகியவர்களின் மீது ஜெ.கே வைக்கும் கடுமையான விமர்சனங்கள் இன்றைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு கவனப்படுத்தாமல் செல்வது இந்நூலுக்கும் ஜெ.கேவிற்கும் செய்யும் அவமரியாதை. தேசிய ஒருமைப்பாடை குலைக்கும் குறுகிய இன/மொழி/ பிராந்திய வாதத்தை முன்மொழியும் ஃபாசிச கூறுகள் கொண்ட இயக்கம் தான் தி.க/தி.மு.க என்பதே அவருடைய கருத்தாக இருந்திருக்கிறது. தெளிவாக தி.க/ தி.மு.க தனது எதிரி என்பதை அறிவித்துவிட்டு, அவர்களுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடையே தொடர்ந்து எடுக்கிறார். மேம்போக்கான கடவுள் மறுப்பு, பிராமண த்வேஷம், அதீத தமிழ் பற்று போன்றவை திராவிட கட்சி ஏற்படுத்திய மாயைகள். நாத்திக வாதம் ஒன்றும் இந்திய மரபிற்கு புதிதல்ல மாறாக ஆத்திக வாதத்தின் அளவிற்கே இந்திய பண்பாட்டில் தொன்மையாக வேரூன்றிய மாற்று தரப்பு என்பதே அவருடைய கருத்தாக இருக்கிறது. கருணாநிதி வலிந்து உருவாக்கிய அண்ணா மாயைக்கு அவரே பலியானார் என்கிறார் ஜெ.கே. அவரை பொருத்தவரை கருணாநிதி அண்ணாதுரையை காட்டிலும் திறன் மிகுந்தவர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும் மிகக் கடுமையாக எதிர்க்கிறார். அண்ணாவை அறிஞர் என்று அழைப்பதை கூட கடுமையாக பகடி செய்கிறார்.

அவருடைய விமர்சனத்திற்கு உள்ளாகும் மற்றொரு இயக்கம் அவர் சார்ந்த கம்யுனிஸ்ட் கட்சி. கம்யுனிஸ்டுகளின் கனவான சோசியலிச சமூகத்திற்கான மாற்றம் நேருவின் அரசால் மிக இயல்பாக மலர்ந்து கொண்டிருந்தது. எந்த வன்முறையும் இல்லை. நேருவின் அரசிற்கு தோள்கொடுத்து வலதுசாரிகளின் ஆதிக்கத்தை கட்டுபடுத்த வேண்டிய கம்யுனிஸ்ட் கட்சி அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது அவருக்கு ஆழ்ந்த வருத்தத்தை அளித்தது. தமிழகத்திலும் காமராஜர் விரோத சக்திகளுடன் கம்யுனிஸ்ட் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துக்கொண்டு ஒரு ‘பெட்டி பூர்ஷ்வா’ இயக்கமாக மாறியதை எண்ணி வருந்துகிறார். சோசியலிச நாடாக மலர்ந்த சீனா இந்தியாவை ஆக்கிரமிக்க முயன்ற போது மா செ துங்கை விமர்சிக்கிறார். இது சித்தாந்த வீழ்ச்சியல்ல மாறாக தனி ஒரு மனிதரின் அதிகார வேட்கை. காந்திக்கும் காங்கிரசுக்கும் உள்ள தொடர்பு என்னவோ, இந்து தர்மத்திற்கும் இன்றைய சமூக இந்துவிற்கும் என்ன தொடர்போ அதுவே மார்க்சியதிற்கும் கம்யுனிஸ்ட் கட்சிக்கும் உள்ள தொடர்பு என்கிறார். சோவியத்தின் வீழ்ச்சியை அவர் எப்படி எதிர்கொண்டிருப்பார் என்று தெரியவில்லை. ஏனெனில் சோவியத் மீது ஆழ்ந்த பக்தியும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறார். மார்க்ச, லெனின் என்றில்லை ஸ்டாலின் மீதும் அவருக்கு அபார நம்பிக்கை இருந்தது. ஸ்டாலினின் சோவியத் களையெடுப்புகள் பற்றி அரசால புரசலாக அப்போதே எழுந்த குற்றசாட்டுகளை முதாளித்துவ தேசங்களின் கட்டுக்கதை என்று ஏற்க மறுக்கிறார். கம்யுனிச தேசங்களில் நடைபெறும் தவறுகளுக்கு கம்யுனிச சித்தாந்தம் பொறுப்பாகாது மாறாக அதைக்கொண்டு அதிகாரத்தை அடைந்த தனிநபர்களின் பலவீனம் மட்டுமே எனும் பார்வை நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருவதாகவே எனக்கு தோன்றுகிறது. ஒரு முற்றதிகார நபருக்கு மாற்றாக அந்த இடத்தில் ஒரு சித்தாந்தம் வந்து அமர்கிறது என்பதே கம்யுநிசத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் உள்ள வேறுபாடு எனும் எண்ணமே மேலிடுகிறது. 

ஒரு காலகட்டத்தின் அரசியல் நிகழ்வுகளின் மீது தனது தனித்த பார்வைகளை முன்வைத்து அதன் வழியாக வரலாற்றை காட்டி செல்லும் இந்நூல் மிக முக்கியமானது என்பதில் மாற்றுகருத்து இல்லை.

“ஒன்றின் மீது நம்பிக்கையற்று போவதற்கு நாம் மட்டும் காரணமல்ல; அந்த ஒன்றும் சம அளவோ அல்லது பெருமளவோ காரணமாகும். இருந்த நம்பிக்கை அற்றுப் போனால் அதற்கு அவநம்பிக்கை என்று பொருளல்ல. ஒன்றின் மீது அவநம்பிக்கை கொண்டவர்களாவது பின்னொரு காலத்தில் அதன் மீது நம்பிக்கை கொல்வதற்கு இடமிருக்கிறது. ஆனால் நம்பியவர்கள் ஒருபோதும் அவநம்பிக்கை கொள்வதில்லை. வேறு வேறு காரணங்களால் அவர்கள் நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள். ஆனால் தீமையும் வீழ்ச்சியும் எங்கு எப்படி ஏற்படுகிறது தெரியுமா? நமது நம்பிக்கையின்மையை நாம் மறைத்து கொள்கிற பொழுது; நம்புவதாக வேஷம் போடுகிற பொழுது.”

ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்
ஜெயகாந்தன்
தமிழ்/ அபுனைவு/ அரசியல்/ சுய சரிதை
மீனாட்சி புத்தகாலயம்