Tuesday, February 9, 2021

எப்போதும் முடிவிலே இன்பம்- சிறுகதை


 சுு

நஞ்சு குறுங்கதையின் தொடர்ச்சி

சாம்பல் வானம் ஒளிரத் தொடங்கிய காலைப்பொழுதில் தொலைவிலிருந்து அந்த நீல தகட்டு கூரையை வைரவன் கண்டபோது அங்கு தெய்வீகமான அமைதி நிலவுவதாக அவனுக்கு தோன்றியது. திட்டிலிருந்து மெதுவாக இறங்கி நீலக்கூரையை நெருங்கத் தொடங்கினான். காற்றில் மிகச் சன்னமாக கொட்டு முழக்குகளின் தாளம் சீராகக் கேட்டன. ரோமக்கால்கள் சிலிர்த்து அடங்கின. நெருங்க நெருங்க எறும்புகள் போல மனிதர்கள் கண்ணுக்கு தென்பட்டார்கள். ஒலித்துக்கொண்டிருந்த இசையின் பிற சரடுகள் துலக்கமடையத் தொடங்கின. இதயம் அதிர்ந்து அடங்கியது. 

அந்த விடிகாலையில் பெரும் மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்ததை அவனால் காண முடிந்தது. நீலத் தகர கொட்டகையின் வாயிலில் வீடற்ற புனித ஜானின் ஆலயம் என்று எழுதப்பட்டிருந்தது. இரவெல்லாம் நடந்த சோர்வை மீறி வைரவன் வேகவேகமாக நெருங்கினான். கொட்டிலைச் சுற்றி கம்பி வேலியும் கதவும் போடப்பட்டிருந்தன. வைரவன் இரும்புக்கதவை நெருங்கியதும் அக்கூட்டத்தில் ஆடிக்கொண்டிருந்த வாட்டசாட்டமான வெள்ளையர் அவனை நோக்கி வந்தார். ‘வருக சகோதரரே’ என வாயிலை திறந்துவிட்டு அவனை ஆரத்தழுவிக்கொண்டார். பல மாதங்களாக அன்னியரின் தொடுகையை அறிந்திராத உடல் கூசியது. ஆண்களும் பெண்களுமாக ஆடிக்கொண்டிருந்த அனைவரும் அவனை தழுவிக்கொண்டார்கள். சிலர் கன்னத்தில் முத்தமிட்டார்கள். பெரும் வட்டமாக தோளோடு தோள் சேர்ந்து ஆடியபோது அவனையும் வட்டத்தில் சேர்த்துக்கொண்டார்கள். ஆட்டத்தில் பங்கேற்காத சிலர் ஆங்காங்கு மரத்தடியில் அமர்ந்து வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள். உறைந்த புன்முறுவலுடன் கண்மூடி சிலர் நீலத் தகரத்தின் கீழ் அதன் மையத்தில் நிறுவப்பட்டிருந்த  வீடற்ற புனித ஜானின் திருவுருவுக்கு முன் அமர்ந்து தியானித்துக் கொண்டிருந்தார்கள். 

இசையின் தாளகதி மாறியது. அனைவரும் மீண்டும் தழுவிக்கொண்டு பிரிந்தனர். கழுத்தில் பலவர்ண மணிமாலை அணிந்த பொன்னிற குழல் கொண்ட மத்திய வயது பெண் ஒருவர் இன்முகத்துடன் கூட்டத்தின் மத்தியில் நடந்து வந்தார். வைரவன் அவருடைய வான் நீலக் கண்களை நோக்கிக்கொண்டிருந்தான். பைகளுடன் புறப்பட்டு வந்தவர்கள் அவரை தழுவிவிட்டு பக்கவாட்டில் நின்றார்கள். வைரவன் அருகிருந்த நெடிய கறுப்பனிடம் ‘இவர் யார்?’ எனக் கேட்டான். ‘இவரைத் தெரியாமலா  சகோதரா நீ இங்கு வந்தாய்? வியப்புதான், இவர் தான் அன்னை ரஃபெல்லா. நம் சமூகத்தின் தலைவர், வீடற்ற புனித ஜானிடமிருந்து வைரஸ் நேரடியாக இவருக்கே உவந்தளிக்கப்பட்டது.’ 

ரஃபெல்லா கையை உயர்த்தி அனைவரையும் அமைதியாக இருக்கச் சொன்னார். ‘இன்று இங்கிருந்து செல்லும் நம் சகோதர சகோதரிகள் அவர்கள் அடைந்த களிப்பை பகிர்ந்தளிக்கட்டும். சென்று வாருங்கள். புதிதாக வந்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு இங்குள்ள நடைமுறையைப் புரிந்து கொள்வதில் உங்களுக்கு எந்த குழப்பமும் இருக்காது என நம்புகிறேன், இங்குள்ள எவரை வேண்டுமானாலும் எந்த சந்தேகத்துடனும் தொடர்பு கொள்ளலாம். நண்பகல் பன்னிரண்டு மணிக்கு கொடை நிகழவிருக்கிறது. தயாராக வரவும்’ எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றார். 

வைரவன் தெற்றுப்பல்லுடன் அவனையொத்த நிறத்திலிருந்த ஒரு பெண்ணிடம் சென்று ‘நீங்கள் இந்திய வம்சாவளியா?’ என்றான். புன்னகைத்தபடி ‘இல்லை நான் தென் அமெரிக்கர்’ என்றார் அவர். ‘நன்றி. இந்த கொடை நிகழ்விற்கு எப்படி தயாராக வேண்டும்?’ சற்று தொலைவில் தெரியும் சேற்றுக்குட்டையை சுட்டிக்காட்டி ‘நீங்கள் எல்லோரும் அதில் புரண்டு எழ வேண்டும். இப்போது தொற்று உச்சத்தில் இருக்கும் அனைவரும் அவ்வப்போது அதில் எச்சில் துப்புவார்கள். பின்னர் தொற்று உள்ள பதிமூன்று சகோதரசகோதரிகளின் எச்சில்களைப் பெற்று முகம் கைகால்களில் பூசிக்கொள்ள வேண்டும். இந்த இரண்டும் தான் முக்கிய சடங்கு. இறுதியாக அன்னை ரஃபெல்லா முகத்தில் காறியுமிழ்வார். இது ஒருவகையில் குறியீட்டு ரீதியான ஒன்று தான்’ என்றாள். அவன் உடலில் எச்சிலின் அருவருப்பை உணர்ந்தான். ‘அதன் பிறகு என்னவாகும்.’ ‘ஓரிரு நாட்களில் காய்ச்சல் வரும், அது உச்சத்தை எட்டிப் பின்னர் குறைந்து இயல்பு நிலைக்கு வரும்வரை இங்கேயே தங்கியிருக்க வேண்டும்.’ என தகரக் கொட்டகைகளை காண்பித்தாள். 

சுவர்களில் அன்னை ரஃபெல்லாவின் படம் ஒளிவட்டத்துடன் வரையப்பட்டிருந்தது. அடுத்த சுவரில், வீடற்ற புனித ஜான் பூர்வாசிரமத்தில் செவிலியாக இருந்த அன்னையின் மீது காறியுமிழ்ந்தது சித்தரிக்கப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு கடும் காய்ச்சலில் சுயமிழந்த ரஃபெல்லாவின் சித்திரம். மருத்துவமனையில் சோர்வுடன் கண்மூடி உறங்கிக்கொண்டிருந்தார். சுற்றி நிற்கும் மருத்துவர்கள் விரக்தியில் அவரை நோக்கிக்கொண்டிருந்தார்கள். சுவாச இயந்திரத்தை அகற்றிவிட்டால் எந்நேரத்திலும் இறந்துவிடுவார் என்பதே நிலை என்று ஓவியத்தின் விளக்கக் குறிப்பு கூறியது. பதிமூன்றாம் நாள் ரஃபெல்லா இனிய கனவிலிருந்து விழித்து எழுவது போல் இன்முகத்துடன் துயில் எழுகிறார். அதற்கு முன் வாழ்க்கையில் அறிந்திடாத  நிறைவையும் முழுமையான ஆனந்தத்தையும் உணர்கிறார். தொடக்கத்தில் அரசாங்கம் இதைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. நகரத்தில் ரஃபெல்லாவைக் காண கூட்டம் நாளுக்கு நாள் அதிகமானதும் அரசு அவருக்கு தடைவிதித்தது. அங்கிருந்து தப்பி இந்த ரகசிய இடத்திற்கு வந்து இரண்டு மாதங்களாக ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு வைரசை அருளி வருகிறார் என அன்னை ரஃபெல்லாவின் அகல விரித்த கரங்களுக்குள் ஆயிரக்கணக்கான மனித முகங்கள் தெரியும் கடைசி ஓவியத்திற்கு கீழ் எழுதப்பட்டிருந்தது. 

வைரவன் இவற்றையெல்லாம் அரையும்குறையுமாக கேள்விப்பட்டு தான் இங்கு வந்திருந்தான். ஒரு வைரஸ் முழுமையான மகிழ்ச்சியை அளித்திட முடியுமா? எனும் குழப்பம் அவனுக்கு இருந்தது. மற்றொரு சுவரில் ரஃபெல்லாவின் ரத்த மாதிரியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் மற்றும் அதன் முடிவுகளை குறிப்பிட்டிருந்தார்கள். அறிவியலாளர்கள் கூற்றின்படி புனித ஜானின் உடலில் இருந்த வைரசுக்கு வினோதமான மரபணு பிறழ்ச்சி ஏற்பட்டது. விளைவாக அது மூளையை, அதிலும் குறிப்பாக அதன் லிம்பிக் அமைப்பில் சென்று ஹைப்போதலாமஸ், ஹிப்போகேம்பஸ், அமிக்தலா ஆகிய பகுதிகளில் நிரந்தர மாற்றங்களைச் செய்கிறது. விளைவாக தொற்றில் இருந்து விடுபடுபவர் பிரபஞ்சமளாவிய பேரன்பையும் ஒருமை உணர்வையும் அடைகிறார் என ஆராய்ச்சிகள் வழியாக நிறுவியது. முழுவதுமாக நலம் மீண்ட அன்னை பணியைத் துறந்து வீடற்ற ஜானின் செய்தியை உலகம் முழுக்க அறிவிக்கப் புறப்பட்டார். ஜானின் அழுகாத உடல் ஆராய்ச்சிக்காக இன்னும் தலைநகரத்தில் பாதுகாக்கப்படுகிறது. 

காலையில் அவனை வரவேற்ற வெள்ளையன் அவனருகே வந்து நின்றான் ‘என் பெயர் கேப்ரியல். எல்லாவற்றையும் பார்த்தாயா..எனக்கு தொற்று பூரணமடைந்து மூளையில் மாற்றம் அடைந்துவிட்டது.. நாளை இங்கிருந்து புறப்படுகிறேன்.’ என்றான். ‘மெய்யாகவே ஆனந்தத்தை உணர்கிறாயா?’ ‘ஆம். முழு ஆனந்தத்தை. ஒருபோதும் இப்படியான ஒரு மகிழ்ச்சியை நான் உணர்ந்ததில்லை. திளைத்தல் என சொல்வார்களே. அது இதுதான்.’

தயங்கித் தயங்கி கேட்டான் ‘ஒரு வைரசால் மெய்ஞானத்தை அளித்துவிட முடியும் என நம்புகிறாயா?’ கேப்ரியல் புன்னகைத்தபடி சொன்னான் ‘உனக்கு இப்போது நான் என்ன சொன்னாலும் புரியாது. ஒன்றை மட்டும் சொல்கிறேன் கேள், ஒரு வைரசால் உன்னை சுயமிழக்க செய்ய முடியும், உனக்கு மரணத்தை அளிக்க முடியும் என்றால் அதனால் மெய்ஞானத்தை பேரானந்தத்தை ஏன் அளிக்க முடியாது? யோசித்துப் பார். சரி உன் சடங்கிற்கு தயாராகு.’ என்றான் கேப்ரியல். 

அன்று அவனுடன் சேர்த்து மொத்தம் அறுபத்தி மூன்று பேர். குட்டையை சூழ்ந்து நின்று நூற்றுக்கணக்கானவர்கள் கை தட்டி உற்சாகப்படுத்தினர். கொதிக்கும் காய்ச்சலில் வெளிறி வதங்கிய சருகாக இருந்த பதிமூன்று பேர் அழைத்து வரப்பட்டனர். அறைகளில் இருந்து நாற்காலியில் அவர்களை சுமந்து வந்தார்கள். சிலரால் கண்களை வாயை திறக்கக்கூட முடியவில்லை. தன்னார்வலர் அவர்களுடைய வாயைத்திறந்து எச்சிலை பூசிவிட்டார். இறுதியாக ரஃபெல்லாவிற்கு முன் சென்று நின்றான். ‘அளப்பறியா ஆனந்தத்தை தாங்க நீ தயாரா?’ என அவனிடம் கனிவுடன் கேட்டார். தலை குனிந்து ‘ஆம்’ என்றான். அவன் முகத்தில் எச்சில் வழிந்தது. 

அன்றிரவு நான்கு படுக்கைகள் கொண்ட அவனுடைய அறையில் உறங்கிப்போனான். மறுநாள் காலை வைரசின் அறிகுறிகள் லேசாக தெரியத்தொடங்கின. பிறர் உற்சாகமாக தினசரி சடங்குகளில் கலந்துகொண்டது போல் அவனால் இயலவில்லை. நான்கு பக்கமும் சூழ இருக்கும் மலையைக் கண்டான். அடிவாரத்தில் செறிந்திருந்த பசும் காடுகள். விந்தையான ஒரு மலைச்சிகரத்தை பார்த்துக்கொண்டிருந்தபோது அவனுடைய தோளைத் தொட்டு ‘அது ஒரு எரிமலை, நீ காண்பது அதன் வாயை, இப்போது காடு அதை மூடிவிட்டது. எவர் கண்டார் அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்.’ என்றார் அன்னை ரஃபெல்லா புன்னகை அரும்பிய முகத்துடன். ‘நீ ஏன் எதிலும் முனைப்புடன் பங்குகொள்ளவில்லை? எச்சில் குட்டிக்கு வரவும் இல்லை? கவனித்துக்கொண்டு தானிருக்கிறேன். அஞ்சுகிறாயா?.’ என அவனிடம் கேட்டார். ஒன்றும் சொல்லாமல் தொலைவில் தெரிந்த மலையை நோக்கிக் கொண்டிருந்தான். இந்த எரிமலை ஒருவேளை இப்போது வெடித்தால் என்ன செய்வீர்கள்?’ 

‘கையை அகல விரித்து அதில் நீந்துவேன்.’

தலைதூக்கி மிரட்சியுடன் அவரை நோக்கினான். 

‘முட்டாள், நிச்சயம் தப்பி ஓடவே முயல்வேன்’ என்றார் சிரித்துக்கொண்டே. ’ஆனால் மரணமடையும் போது எவ்வித வருத்தமும் இன்றி நிறைவுடன் மடிவேன். வாழ்க்கையை வாழ்பவருக்கு வருந்த ஏதுமில்லை. நீ மரணத்தை கண்டு அஞ்சுகிறாயா?.’

‘இல்லை, உங்கள் ஆனந்தத்தை கண்டு அஞ்சுகிறேன்.’

‘ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் இனம் இதை அடையத்தான் போராடி வருகிறது அது இங்கே உனக்கு வெகு எளிதில் வாய்த்திருக்கிறது. எல்லாம் மாறிவிடும்.’ என அவனை இயல்பாக தொடுவதற்கு கை நீண்டது. சட்டென தன்னிச்சையாக அவன் உடல் தொடுகையைத் தவிர்த்து விலகியது அவனுக்கே வியப்பாக இருந்தது. ஒருகணம் அவனை புன்னகையுடன் நோக்கிவிட்டு அங்கிருந்து சென்றார். 

மூன்றாம் நாளிலிருந்து காய்ச்சல் அடிக்கத் தொடங்கியது. அவன் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தான். அன்னை மட்டும் தினமும் ஒருமுறை அவனை காணவந்தார். அவனருகே அமர்ந்து மெல்ல தலையை வருடிக்கொடுப்பார். அவருடைய தொடுகை அவனை சிணுங்கச் செய்யும்.  

ஆர்ப்பரிப்பு அற்ற நீலக்கடலில் அவன் சிறிய படகு ஒன்றை வலித்துக்கொண்டிருந்தான். மேகமற்ற தெள்ளிய நீலவானம் அவனுக்கு கூரை. நீர் கொதித்து குமிழிடுகிறது. நிறம் மாறுகிறது. மொத்தமும் எரிமலை குழம்பாகிறது. அன்னை ரஃபெல்லா சிறகுகளுடன் ஒரு தேவதையைப் போல் அவனைக் கொத்திப் பறந்து செல்கிறார். வெண் மேகங்களில் புன்னகை தவழும் அவர்  முகத்தைக் காண்கிறான். அவர் கண்களில் அனல் தெறிக்கிறது. நேராக நெருப்பு உமிழும் எரிமலை வாயில் அவனை இடுகிறாள். பள்ளம் நீண்டுகொண்டே இருக்கிறது. விழுந்துகொண்டே இருக்கிறான். நா வறண்டு உடல் வியர்த்து கண்விழித்தபோது அன்னை அவனருகே அமர்ந்திருந்தார். கனவிலிருந்து சறுக்கி நினைவுக்கும் நினைவிலிருந்து வழுக்கி  கனவிற்கும் என மாறி மாறி நழுவிச் சென்றான்.  

‘இவனுடைய முகம் ஏன் இத்தனை துயர் மிகுந்ததாக இருக்கிறது? இவனுடைய கனவுகள் கோராமாக இருக்கின்றன என எண்ணுகிறேன். ஆச்சரியம். இதுவரையில் இங்கிருந்தவர்கள் இன்ப கனாக்களையே கண்டுள்ளார்கள்.’ பெருமூச்சு விட்டார். ‘நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள். பழச்சாறு மணிக்கொருமுறை அளியுங்கள்.’ என அவனருகே நின்று பேசியது கனவுக்கும் நினைவுக்கும் இடையிலான பள்ளத்தாக்கில் அவனுக்கு கேட்டது. காய்ச்சல் உச்சத்திற்கு சென்றபோது கண் திறவாமல் பிதற்றினான். அவனுடைய கனவுகள் அழகாகத்தான் தொடங்கின. பலவர்ண பூக்களின் வெளியில் அவனொரு திறந்த வண்டியில் அவற்றைப் பார்த்தபடி செல்கிறான். குலுங்கிக்குலுங்கி செல்லும் அவ்வண்டியை நா நீர் சொட்டச் சொட்ட நான்கு நாய்கள் இழுத்துச் செல்வதைப் பார்த்ததும் சட்டென அவனுக்கு விழிப்பு வந்தது. 

விழித்திருந்த ஒரு சமயத்தில் அன்னை ரஃபெல்லா அவனிடம் கனவுகளைப்பற்றி கேட்டார். தன்னுடைய கொடுங்கனாக்களை ஒப்பித்தான். ‘கனவுகள் இத்தனை தூரம் நினைவில் இருக்கிறது என்றால் நீயும் அதை சேர்ந்து புனைகிறாய் என்று அர்த்தம். உனக்கு இந்த கோர கனவுகள் ஏன் வேண்டியதாய் இருக்கிறது என யோசி. மீண்டுவிடலாம்.’ என நிதானமாக சொல்லிவிட்டுச் சென்றார். 

மெல்ல காய்ச்சலில் இருந்து மீண்டான். கனவுகளும் நின்றன. எனினும் சடங்குகளில் கலந்து கொள்ளாமல் அறைக்குள்ளேயே கிடந்தான்  அவர்களின் பாடலும் உற்சாகமும் அவனை மேலும் மேலுமென எரிச்சல் கொள்ளச் செய்தது. மெதுவாக எழுந்து நடக்கச் சென்றான். மறுநாள் அவன் புறப்படலாம் என சொல்லப்பட்ட இரவு சாளரத்தின் வழியே தெரிந்த புகை வெளியை பார்த்தான். தூங்கும் எரிமலையிலிருந்து அந்தப் புகை எழுவது போல் அவனுக்கு தோன்றியதும் அவன் வயிற்றுள் ஒரு பிசைவை உணர்ந்தான். வெளியே சட்டென வலுத்த மழை பொழிந்ததும் புகை மறைந்ததைப் பார்த்தான். 

விடைபெறுவதற்காக காலையில் அன்னை ரஃபெல்லாவை தேடிச் சென்றான். அவர் முந்தைய இரவு பொழிந்து ஓய்ந்திருந்த மழையின் சுவடுகளை தொடர்ந்து கொண்டிருந்தார். முதல் முறை அவரை கண்டதிலிருந்து இப்போது வெகுவாக சோர்ந்து இளைத்து ஒடுங்கியிருப்பதாக அவனுக்கு தோன்றியது. ஒரு சிறிய சுனை போல நீர் ஓடிக்கொண்டிருந்தது. அவரருகே சென்றபோது நடுங்கிக்கொண்டிருந்தான். ‘இந்த சுனை எங்கிருந்து வருகிறதென கண்டுபிடிக்க முனைகிறேன்.’ என அவனைப்பார்த்து புன்னகைத்தபடி சொன்னார். ‘இன்று கிளம்புகிறாய் அல்லவா? சென்று வா’ என தொடர்ந்தார். 

‘இதெல்லாம் பொய் தானே? என்னுடைய வேதனை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. ஒவ்வொரு இரவும் கோர கனவுகள். நான் உடைந்துவிடுவேன் போலிருக்கிறது.’ 

சற்றுநேரம் மெளனமாக இருந்த பின் அன்னை அவன் தோளை தொட முயன்றார். சிணுங்கிக்கொண்டு சட்டென விலகினான். 

‘உண்மையை சொல்வதானால, இதுவரை இப்படியொன்று இங்கு நடந்ததில்லை. என்னவாக இருக்கும் என என்னால் யூகிக்க முடியவில்லை.’

‘இப்போதும் கேட்கிறேன், ஒரு வைரசால் உங்களுக்கு மெய் ஞானத்தை  அளித்து விட முடியுமா?’

‘’நீ வைரசை இழிவாக கருதுகிறாய். அது ஒரு கண்ணுக்குத்தெரியாத, அறிவற்ற அற்ப உயிர் என எண்ணுகிறாய். இவ்வுலகம் உனக்கானது மட்டுமே என எண்ணுகிறாய். ஆகவே தான் நீ இந்த கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்கிறாய்.’

‘ஒரு வைரஸ் உங்களுக்கு மெய்ஞானத்தை அளித்துவிட்டது என உண்மையில் நீங்கள் நம்புகிறீர்களா?’ 

‘என்னை நான் பிரம்மாண்டமாக, எல்லையற்றவனாக உணர்கிறேன், ஒரு ஒத்திசைவை உணர முடிகிறது. இது உணர்வு என்று கூட சொல்ல முடியாது. அதையும் கடந்த வேறொன்று. ஒரு நிச்சயம், ஒரு அறிதல் எப்படியும் சொல்லலாம்.’

‘திரும்பவும்.. கேட்கிறேன், வைரஸ் நம்முடன் வாழ்ந்து தன்னை பெருக்கிக்கொள்ள இப்படியான ஒரு உத்தியை ஏன் உருவாக்கியிருக்க கூடாது? இப்போது நாம் எந்த தடையும் இன்றி அதை அனுமதிக்கிறோம்.’ 

பூத்திருந்த வெள்ளை ரோஜாவை கொய்தபடி சொன்னார் ‘இங்கே எல்லாவற்றுக்கும் ஒரு விலையுண்டு.’

‘வைரசுக்கு நம்மை அளிப்பது தான் அந்த விலையா’

கூடையில் சிவப்புநிற அரளிப்பூக்களை சேகரித்தபடி அமைதியாக நகர்ந்தார். ஒரு நீள் மூச்சிற்கு பிறகு சன்னமான குரலில் ‘யோசித்துப் பார், நாம் என்னவிதமான வாழ்க்கையில் இருந்தோம்? சாக்கடைகளில் புரண்டு கொண்டிருந்தோம். பொந்து எலிகள், கரப்பான்கள். அது தான் நம் வாழ்க்கை  இப்போது இதற்கு என்ன விலை கொடுக்கலாம் நீயே சொல்.’

அவன் இதயத் துடிப்பை செவிகளில் கேட்டான். 

‘நீங்கள் வெகுவாக இளைத்திருக்கிறீர்கள்.’

மாறாப்புன்னகையுடன் ‘என் நேரம் முடியப்போகிறது. நான் மரணித்துக்கொண்டிருக்கிறேன். நீயும் தான், இங்கே உள்ள ஒவ்வொருவரும் தான். இது உனக்கு மட்டுமே தெரிந்த, அரிய ரகசியம் என எண்ணிக்கொண்டிருக்கிறாய். நீ ஒரு முட்டாள்.’ என சொல்லி சிரித்தார். இங்கே மகிழ்ச்சியாக வெளியேறிச் செல்லும் அனைவரும் அறிவர்..’ 

‘இது மெய்ஞானம் அல்ல. தற்கொலை.’ உரக்க கத்தினான். 

‘இது மெய்ஞானமா இல்லையா என எனக்குத் தெரியாது. மெய்ஞானம் என நான் சொல்லவும் இல்லை. நீயாகத்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறாய். இது ஆனந்தம், இதுவரை மனிதர் அறிந்திடாத பேரானந்தம். அதை மட்டுமே என்னால் சொல்ல முடியும்’

‘இது வைரஸ் நம்மை வசமாக்கிக்கொண்டு கொன்றழிக்க மேற்கொள்ளும் புத்திசாலித்தனமான உத்தி.’

‘இருக்கலாம். அதற்குத் தேவையான உடலை அளிப்போம், நமக்கு அரிதான ஆனந்தத்தை அது அளிக்கிறது. இது ஒரு லாபகரமான வணிகம் தான்.’

‘நான் இதை நிச்சயம் வெளியே சென்று வெளிப்படுத்துவேன். பிழைத்திருக்கும் நாட்களில் முழுமூச்சுடன் எல்லோருக்கும் சொல்வேன். எவரையும் இங்கு வரவிட மாட்டேன். உங்களை அரசாங்கத்திற்கு காட்டித்தருவேன்.’ அவன் குரல் உரக்க ஒலித்தது.  

அரளிப்பூக்களின் செம்மை ஒரு கணம் அன்னையின் கண்களில் மின்னி மறைந்தது. அவனை ஒருகணம் நோக்கிவிட்டு மீண்டும் பூக்களை பறித்தபடி நிதானமான குரலில் அவனிடம் சொன்னார். ‘யாரும் உன்னை தடுக்கவில்லை. ஆனால்..’

ஆனால்..

’இந்த வைரஸ் உன்னில் தனது புதிய ஆட்டத்தை துவங்கியிருக்கிறது என எண்ணுகிறேன்.’

அவனுடல் அதிர்ந்தது.

‘ஆம், ஆனந்தத்தின் விழைவை விட அதன் மீதான அவநம்பிக்கை அதற்கு உகந்த வாகனமாக இருக்கும் என உன்னில் அது கண்டுகொண்டு விட்டது. நீ பேரழிவை உருவாக்கப்போகிறாய்.’ நேராக அவனுடைய கண்களை நோக்கி சொன்னார். 

அவன் கண்ணில் நீர் பெருகியது. ‘இல்லை, நீங்கள் பொய் சொல்கிறீர்கள். உங்கள் தோல்வியை மறைக்க பழி சுமத்துகிறீர்கள். ஒரு வைரசால் இப்படி எல்லாம் நிகழ்த்த முடியாது.’ 

‘இது நடக்கும். இது நிச்சயம் நடக்கும். இதுதான் உண்மை. ஒரு பேரழிவு சுழற்சியை நீ தொடங்கிவைக்கப் போகிறாய்.’ என உறுதியாக சலனமின்றி சொன்னார் அன்னை.   

‘நிச்சயம் நடக்காது.’ என பிதற்றியபடி அங்கிருந்து வெளியேறிச் சென்றான். ஈரத்தரையில் பதிந்து கடந்து செல்லும் அவனுடைய கால்சுவடுகளை வெறித்தபடி இருந்தார்.  

மூன்று நாட்களுக்குப் பின் மூச்சுவிட சிரமப்பட்டு படுக்கையில் கிடந்த  அன்னை கண்ணை மூடுவதற்கு முன் அவள் அறையிலிருந்த சாளரத்தின் வழியாகத் தெரிந்த எரிமலை வாய்க்கு மேலாகப் பருந்துகள் பறப்பதை பார்த்தார். அவருடைய முகம் அமைதியில் உறைந்திருந்தது.    

  • யாவரும் பதிப்பகம் நடத்திய க.நா. சு சிறுகதை போட்டியில் பரிசு வென்ற கதை.

Saturday, February 6, 2021