Tuesday, February 2, 2021

விஷக் கிணறு முன்னுரை

விஷக் கிணறு தொகுப்பு வாங்க


‘அம்புப் படுக்கை’ வெளியாகி மூன்றாண்டுக்கு பிறகு வெளியாகும் இரண்டாவது சிறுகதை தொகுப்பு. கடந்த ஆண்டு 'நீலகண்டம்' வெளியானது. பெரிய எண்ணிக்கை என சொல்லிவிட முடியாது. இவ்வாண்டுகளில் நிறைய பயணங்கள், நிறைய வாசிப்பு, தொடர்ச்சியாக விமர்சன கட்டுரைகள் எழுதி இருக்கிறேன் என்பதை உணர்கிறேன். 

முதல் தொகுப்பிலிருந்து சில முன்னகர்வுகள் நிகழ்ந்துள்ளதை என்னால் உணர முடிகிறது. முதன்மையாக, இருத்தலியல் கேள்விகளுடன் தற்காலிக சமரச உடன்படிக்கை எட்டப்பட்டு அவை பின்னுக்கு சென்று வேறுவிதமான கேள்விகளுக்கு வழிவிட்டிருக்கின்றன. அனுபவ வட்டம் விரிந்திருக்கிறது. இக்கதைகள் உருவான விதம் சுவாரசியமானவை. அகத்திற்குள் எழும் சிறிய நலுங்கல் எதிர்பாரா தருணத்தில் வெளிப்பட்டு கதையாக விரியும் வசீகர மர்மமே தொடர்ந்து எழுதுவதற்கான தூண்டுதல். மனைவிக்கு தெரியாமல் மனநோய்க்கு மாத்திரை உட்கொள்ளும் ஒரு மனிதரை சந்தித்தேன். ஒரே மருந்து இருவருக்கு இருவேறாக பயன்படுகிறது. இரு உருவங்களை காட்டுகிறது என்பதே ‘லித்தியம்’. ‘இயல்வாகை’ நெருங்கிய மருத்துவ நண்பர் உரையாடலின்போது ஒருவரி செய்தியாக சொல்லி சென்ற நிகழ்வை உள்ளடக்கமாக கொண்டது. ‘இந்திர மதம்’ புகழ்பெற்ற மரபு மருத்துவரின் கல்லூரிக்கால நினைவை அடிப்படையாகக் கொண்டது. ‘களி’ கணேசன் என்னுடன் விளையாடியவரின் வார்ப்புரு. ‘விஷக் கிணறு’ எனது மலேசிய பயண அனுபவத்தின் தலைகீழாக்கம். 


உண்மை மனிதர்கள் மற்றும் நிகழ்வுகளை கதையாக்குவது சவாலானது. எழுத்தாளரிடம் தன்னை திறந்து வைக்கும் மனிதரை அவமதிக்கும், இழிவு செய்யும், அல்லது பழி தீர்க்கும் வகையில், கதை மாந்தரை பிழையாக பிரதிநிதப்படுத்தும் கதைகள் எழுதுவது சரியல்ல என எண்ணுகிறேன். எல்லா நிகழ்வுகளும் கதையாவதில்லை. எங்கோ ஒரு சிறு உராய்வும் பொறியும் இருக்கும் நிகழ்வுகள், நம்முள் கேள்விகளை எழுப்ப சாத்தியமுள்ள நிகழ்வுகள் மட்டுமே கதையாகின்றன. எந்த நிகழ்வையும் திறமையான எழுத்தாளரால் கதையாக்க முடியும். அந்நிகழ்வில் கதை எது என கண்டுகொள்ள முடிந்தால் போதும். எங்கு எதிரெதிர் விசைகளின் உராய்வுகள் சாத்தியமாகின்றன? எது படிமமாக விரியத்தக்கது? அடிப்படையான கேள்விகள் எவை? உண்மை நிகழ்வுகளை உள்ளது உள்ளபடி எழுதுவது புனைவு எழுத்தாளரின் வேலையல்ல. கற்பனையின் துணைகொண்டு உண்மையின் மீதான விசாரணையை நிகழ்த்துவதே புனைவின் பணி. புனைவென்பது பொய்களால் அணி செய்யப்பட்ட உண்மை என்கிறார் லோசா. ‘விஷக் கிணறு’ கதையில் வரும் ஒப்பன்ஹைமர் பகுதி திட்டமிடப்படாதது. கதையை நிறுத்திவிட்டு சார்லஸ் தோர்ப் எழுதிய ஒப்பன்ஹைமர் வாழ்க்கை வரலாறை வாசித்து முடித்துவிட்டு அந்தப் பகுதியை எழுதி நிறைவு செய்தேன். ஒப்பன்ஹைமருக்குப் பிடித்த கவிஞர் ஜார்ஜ் ஹெர்பர்ட் எனும் ஒருவரி விக்கிபீடியா தகவல் மட்டுமே அவருடைய கவிதைகளை கதைக்குள் பொருத்த எனக்குப் போதுமானதாக இருந்தது.  டெல்லரின் ஒரு மேற்கோள் அவருடைய ஆளுமையை வரையறை செய்யப் போதும். பிறருடைய அனுபவங்களையோ வரலாற்று நிகழ்வுகளையோ எழுத்தாளர் தனது அனுபவ வட்டத்திற்குள் கொணர்ந்து கற்பனையால் வளர்த்து எடுக்க முடியும்போது புதிய பல சாத்தியங்களை நோக்கிப் பயணிக்க முடியும். ‘விஷக் கிணறு’ வடிவம் மற்றும் உள்ளடக்கம் ரீதியாக எனது எழுத்திலிருந்த சில தளைகளை கடந்ததற்கான சாட்சி என்றே நம்புகிறேன். நீலகண்டம் வாசித்தவர்களுக்கு ‘சிதல்’ அதன் ஒருபகுதியின் விரிவாக்கம் என்பது தெரியும். எங்கள் பகுதியில் நான் காணும் பிரம்மாண்ட வீடுகள் மண்ணுக்குள் செல்வதைக் காண்கிறேன். வரலாறின் புதைமணல் சுழியை நேரடியாக கண்ணுறுவதுதான் ‘சிதல்’. ‘வைரஸ் கதைகள்’ ஊரடங்குக்கு முன்னர் எழுதியது. நான் எழுதிய காலத்தில் பயண அனுமதி அல்லது கிராமங்களுக்குப் பரவுதல் போன்றவை எல்லாம் நிகழவில்லை.  கண் முன் ஒரு டிஸ்டோபிய உலகம் மெல்ல மெல்ல சுருள் அவிழ்வதை கண்டுகொண்டிருந்தேன். அடுத்து என்ன எனும் அச்சமும் கிளர்ச்சியும் ஒருசேர உணர முடிந்த காலகட்டம். நிகழ்வு புனைவை விட அசாதாரணமாக உருக்கொண்டு வெருட்டிய காலம். கற்பனை என்றும் டிஸ்டோபியா என்றும் எண்ணி எழுதப்பட்ட கதைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு கொரோனா எல்லா இடங்களிலும் விரவி பரவுகிறது. ஐந்து கதைகளில் மூன்று கதைகள் ஒருவகையான டிஸ்டோபிய புனைவுகள் என்று சொல்லலாம். நான்கு கதைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. 

ஒரு குறுநாவல், மூன்று சிறிய கதைகள், ஏழு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு ‘விஷக் கிணறு’. கதைகளை வெளியிட்ட ‘கல்குதிரை’ ;தினகரன் தீபாவளி மலர்’ ‘இந்து தமிழ் திசை தீபாவளி மலர்’ ‘இடைவெளி’ ‘வல்லினம்’ யாவரும்’ ஆகிய இதழ்களுக்கு நன்றி. கதைகளுக்கு வாசிப்பையும் விமர்சனங்களையும் அளித்த ஜெயமோகனுக்கும், ‘விஷ்ணுபுர இலக்கிய வட்டம்’, ‘பதாகை’, ‘சிற்றில்’ நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றிகள்.  ‘எப்போதும் முடிவிலே இன்பம்’ சிறுகதையை க.நா.சு சிறுகதைப் பரிசுக்கு உரியதாக தேர்ந்தெடுத்த ஜீ. முருகனுக்கும், புத்தகத்தைப் பதிப்பிக்கும் நண்பர் ஜீவ கரிகாலன் மற்றும் கண்ணதாசன், மெய்ப்பு நோக்கிய ஸ்ரீதேவி அவர்களுக்கும், வடிவமைப்பாளர் கோபு  ஆகியோருக்கும் நன்றிகள். என்னை எழுத அனுமதிக்கும் சுதீர் மற்றும் சபர்மதிக்கு முத்தங்கள். மருத்துவன் எழுத்தாளன் என இரு வேடங்களில் மாறிமாறி உட்புகுந்துகொள்ளும் என்னை என் குழப்பங்களுடன்  முழுமையாக ஏற்றுக்கொண்ட மானசாவிற்கு அன்பு. எழுத்துப்பயணத்தில் எப்போதும் உடன்வரும் அம்மாவிற்கு வணக்கங்கள். 

இத்தொகுதியை அம்மா, மனைவி மற்றும் மகள் என என் வாழ்வை நிறைத்திருக்கும் மூன்று தலைமுறை பெண்களுக்கு சமர்ப்பித்திருக்கிறேன். இங்கே அவர்களைப் பற்றி எதை எழுதினாலும் தேய்வழக்காகவும் சம்பிரதாயமாகவும் இருக்கும். நெருக்கமானவர்களிடம் இருக்கும் அணுக்கத்தை உலகிற்குப் பறைசாற்றுவது கூச்சமாகவும் இருக்கிறது. அவர்கள் அளித்த / அளிக்கும் அளப்பறியா கொடைக்கு சிறு செய்நன்றி. விஷக் கிணற்றிலிருந்து என்னை மீட்கும் கரங்கள் அவர்களுடையவை. 

சுனில் கிருஷ்ணன் 

4, 7 ஆவது வீதி, வடக்கு விஸ்தரிப்பு, சுப்பிரமணியபுரம், 

காரைக்குடி- 2 

4.11.2020 


1 comment: