(வாசகசாலை வெளியீடாக வந்திருக்கும் கமலதேவியின் 'சக்யை' தொகுப்பிற்கு எழுதிய முன்னுரை. நூலை பெறுவதற்கு - https://www.commonfolks.in/books/d/sakyai)
இணைய இதழ்களில், சமூக ஊடகங்களில் மட்டுமே எழுதி பிரசுரமாகும் போக்கு சில ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. அப்படி உருவாகும் தொகுப்புக்களில் அரிதாகவே நல்ல மொழியும் களமும் கூறுமுறையும் கொண்ட கதைகள் திகழ்கின்றன. அண்மைய ஆண்டுகளில் அப்படி தொய்வின்றி ‘பதாகை’ ‘சொல்வனம்’ இதழ்களில் எழுதி கவனத்தைப் பெற்று வருபவர் கமல தேவி. ‘வாசகசாலை’ வழியாக அவருடைய 16 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு வெளியாவது மிகுந்த மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கிறது. மென்மேலும் சிறந்த கதைகளை அவரிடமிருந்து எதிர்நோக்குகிறேன்.
ஒரு எழுத்தாளரின் ஆக்கங்கள் வழியாக நாம் அடியாழத்தில் அவருக்கு ஒரு ஆளுமையை உருவாக்க முயல்வோம். அவரைப் பற்றிய புற தகவல்கள் வழியாக அந்த ஆளுமை உருவாக்கம் முழுமை பெரும். அவருடைய கதைகளை மதிப்பிடும்போது தவிர்க்கவியலாமல் எழுத்தாளனின் வாழ்வும் ஆளுமையும் குறுக்கீடு செய்யும். கதைகளின் வழியாக வாசகன் எழுத்தாளனின் அக உலகிற்குள் செல்கிறான். அவர் காட்டும் வாழ்வுடனும், அவருடைய வாழ்க்கை கேள்வியுடனும் தனக்கொரு தொடர்பு ஏற்படும்போது வாசகன் எழுத்தாளனின் அக அலைகழிப்பை தனதாகவும் உணர்கிறான். உண்மையில் இதற்கப்பால் ஒரு எழுத்தாளனைப் பற்றி அவனுடைய தனிவாழ்வைப் பற்றி அறியவேண்டியதில்லை. கமல தேவி அவருடைய கதைகளின் வழியாக மட்டுமே பரிச்சயமானவர். அவர் யார், என்ன வயது, என்ன பணி, எங்கு வசிக்கிறார் எனும் எந்த வாழ்க்கைத் தகவல்களும் எனக்குத் தெரியாது. ஆனால் அவர் காட்டும் அக உலகம் அவரை எனக்கு நெருக்கமாக ஆக்குகிறது.
அவருடைய கதைகளின் நிலம் என்பது அதிகமும் திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளைச் சார்ந்தது. காவேரி நதி ஒரு முக்கியமான பாத்திரமாக பல கதைகளில் ஊடாடுகிறது. அவருடைய கதை மாந்தர்கள் பெரும்பாலும் 2000 களில் பதின்மத்தை கழித்தவர்கள். அவருடைய ‘சொல்பேச்சு கேட்காத கரங்கள்’ கதை தொடுகைக்கான ஏக்கத்தையும் தொடுவதில் உள்ள தயக்கத்தையும் பற்றி பேசுகிறது. ஒருவகையில் இதை அவருடைய கதையுலகின் மைய இழையாக விரித்தெடுக்கலாம். அன்பிற்கான ஏக்கமும் அன்பின் ஆதிக்கம் மீதான அவநம்பிக்கையும் அவரை அலைக்கழிக்கும் கேள்வி. இக்கேள்வியை வெவ்வேறு கதைகளின் ஊடாக, வெவ்வேறு உறவு நிலைகளின் வெளிச்சத்தில் பரிசீலனை செய்து பார்க்கிறார். எதிலும் முழுக்க நனைந்துவிடக் கூடாது எனும் கூரிய சுயப் பிரக்ஞை கதைகளில் வெளிப்படுகிறது. குற்றால அருவியில் குளிக்க விரும்பும் அதே வேளையில் தனக்கென ஒரு சிறு குடையை விரித்துக்கொண்டு அருவிக்கு செல்பவர் எனும் மனச் சித்திரம் தோன்றியது. இந்த உருவகமேகூட அவருடைய ஒரு கதையில் ஆடி மழையில் நனைவதைப் பற்றி அவர் எழுதியதன் நீட்சிதான். “குடைக்குள் அடங்காத காத்தும் மழையும்.எந்தத் திசையில் நின்றாலும் நனைந்து விடுவோம்.” உறவை முறித்துக்கொள்ள முடிவு செய்துகொண்ட காதலர்கள் அப்போது மீண்டும் நெருங்குகிறார்கள்.
கமல தேவியின் கதைகளில் வெளிப்படும் மாந்தர்கள் ஒருவகையில் தாஸ்தாவெஸ்கி கதை மாந்தர்களுடன் ஒப்பிடத் தக்கவர்கள். கூர்மையான சுயப் பிரக்ஞையே பிணியாகவும் வதைக்கும் தன்மை கொண்டவர்கள். திருமணம், பணி என பிடிவாதமாக சமூக அழுத்தங்களில் தங்களின் தேர்வுகளின் பக்கம் நிற்பவர்கள். மறுபுறம் அவர்கள் பார்த்து வளரும் பாட்டிகள், தாத்தாக்கள் மற்றும் வாசிப்பு பரிச்சயம் அற்ற தோழிகள் போல் உள் முரண்களற்ற வாழ்வு வாய்க்காதா என ஏங்குபவர்கள். அவ்வகையில் கமல தேவியின் பாத்திரங்கள் நவீனத்துவ இலக்கிய போக்கு உருவாக்கிய பாத்திரங்களின் நீட்சி. ஆனால் கமல தேவியின் பாத்திரங்கள் சுய வெறுப்பு அல்லது சமூக வெறுப்பை நோக்கி பயணிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அதற்கு மிக முக்கியமான காரணம் அவர் கதை மாந்தர்களில் வெளிப்படும் தீவிர விலகல் மனப்பாங்கு எனச் சொல்லலாம். உணர்சிகள் மீதும் ஐயம் கொண்டு அதையும் ஒரு ஜானுக்கு அப்பால் விலக்கி நிறுத்துவது. ஜெயகாந்தனின், தி. ஜானகிராமனின் பெண் பாத்திரங்களின் நீட்சியை தாக்கத்தை கமல தேவியின் பாத்திரங்களில் காணமுடியும். ஒரு வகையில் அவர்கள் ‘சிந்திக்கும் கதைசொல்லிகள்’. அவர்களின் தாக்கத்தின் வழி வெறுப்பைக் கடந்து மானுட இணக்கம் மற்றும் மானுட அன்பு ஆகியவற்றை நோக்கி அவருடைய கதைகள் பயணிக்கின்றன. ஆனால் அந்த பயணத்தில் எந்த நாடகீய அம்சமும் இல்லை என்பதால் அவரிடம் வண்ணதாசனிடம் வெளிப்படும் அன்பின் நெகிழ்ச்சி புலப்படுவதில்லை. “இந்த மனுசங்க அன்புக்கு பயப்படுற கூட்டம்” ஆனால் அது ஏன், எப்படி அதைக் கடப்பது என்பதே அவருடைய தலையாய கதைபோக்காக இருக்கிறது. வாழ்க்கை என்பது வெறும் வன்பொருளாக (hardware) சார்ந்ததாக மென்பொருள் (software) அற்றதாக மாறிக்கொண்டிருக்கிறதே என எழுதுகிறார்.
வாழ்வின் சின்னச்சின்ன அசைவுகளை, மனச் சலனங்களை, நுட்பமான கண்டடைதல்களை கதையாக்கும்போது உள்ள சவால் என்பது சில நேரங்களில் கதையில் எதுவுமே நிகழாமல் ஆகிவிடும் அபாயம் உண்டு. ‘இப்படிக்கு’ போன்ற கதைகளை அப்படியான முயற்சியாக கொள்ளலாம். வேறு சில கதைகளிலும் இந்த சிக்கல் உண்டு என்றாலும் பல கதைகளில் இதை அடைய முனைந்திருக்கிறார். கதை மாந்தர்கள் பெரும்பாலும் ஒரே வார்ப்பில் உள்ளார்கள். அல்லது ஒரு சுயத்தின் வெவ்வேறு பிரதிநிதிகள் பாத்திரமாக உள்ளார்கள். ஒரு கதையில் விரிசலான ஆடியில் இருவேறு பிம்பங்களாக கதைசொல்லி பிளவுபடுவார். ஒன்றில் மகிழ்ச்சியாகும் மற்றொன்றில் துயரமாகவும் (கிரகண பொழுது). இவற்றைக்கொண்டு கமலதேவி கதைகளை தன்னுள் நிகழ்த்தும் உரையாடலின் ஒரு பகுதியாக எழுதுகிறார் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
கமலதேவியின் மொழி செதுக்கப்பட்ட மொழி. குறிப்பாக உரையாடல்கள் அவருடைய மிகப்பெரிய பலம். இயல்பான உரையாடல்களில் கூட ஒருவித பூடகத் தன்மையை கொண்டு வர அவரால் முடிகிறது. “ஒத்த ஊத்தும் அத்துப்போன கிணறு என ஏதுமில்லை” எனும் வரி தொடுகையை சார்ந்த பின்புலத்தில் முற்றிலும் வேறோர் தளத்தில் பொருள் கொள்கிறது. அகத்தை எழுதும்போது புறம் அகத்திற்கான வாயிலாக இருக்க வேண்டும் என விழைகிறார். நீல. பத்மநாபனின் ‘பள்ளிகொண்டபுரம்’ நாவலைப் பற்றி ஜெயமோகன் எழுதும்போது அகத்தின் தூல குறியீடுகளாக முழு நகரமும் உருவானதை சுட்டிக் காட்டுகிறார். எந்த புற விவரணையும் கமல தேவியின் கதையில் வெறும் விவரணையாக நின்றுவிடுவதில்லை. குளிரும், மழையும், வெயிலும், வறட்சியும், கிரகணமும், இருளும், ஒளியும் அக அடுக்குகளுக்கான கரவு பாதைகள். குளம் சலனமற்று கிடக்கிறது ஆனால் அது மொத்தமும் நீராவியாகிக் கொண்டிருக்கிறது என்றொரு வரியை உறவுச் சிக்கலின் பின்புலத்தில் புரிந்துகொள்ளும்போது அபார வாசிப்பை அளிக்கிறது. உரையாடல்களில் வெளிப்படும் அறிவுக்கூர்மை அவருடைய பலமும் பலவீனமும் கூட. உரையாடல், புற விவரணை ஆகிய இரண்டையுமே அகத்தை சுட்டுவதற்கான வழிமுறையாகவே கமல தேவி கதைகளில் கையாள்கிறார்.
இத்தொகுதியில் இரண்டு கதைகள் தொன்மம் சார்ந்த பின்புலத்தில் எழுதப்பட்டவை. இவற்றில் வெளிப்படும் அவருடைய மொழி வேறு கதைகளில் இருந்து தனித்து மிளிர்கிறது. ஆண்டாள் பாசுரங்களும், கம்ப ராமாயணமும், திருவாசக பதிகங்களும் வெவ்வேறு கதைகளில் கதையின் அடர்வை கூட்டுவதற்கு பயன்பட்டுள்ளன. அவருடைய மரபு இலக்கிய வாசிப்பை சுட்டுவதாக உள்ளன. பள்ளி, கல்லூரி, பணியிடம், பேருந்து பயணம் என அன்றாடம் சார்ந்து உருவாகக் கூடிய சின்னஞ்சிறிய உலகில் வசிக்கும் கையளவு மனிதர்களுடனான உறவும், உறவுச் சிக்கலும் கதைகளின் பேசு பொருளாகின்றன. இத்தொகுதியில் ‘மித்ரா’ ‘சொல்பேச்சு கேட்காத கரங்கள்’, ‘சுழலில் மிதக்கும் பூ’ ‘சக்யை’ ஆகிய கதைகள் எனக்கு பிடித்திருந்தன. ஒவ்வொரு கதைகளைப் பற்றியும் விரிவாக விமர்சன நோக்கில் எழுத வேண்டும். இரண்டு மூன்று கதைகளைத் தவிர்த்து பிற கதைகள் அனைத்துமே நல்ல வாசிப்பை அளித்தன. உலகின் மீதான தயக்கமும், அச்சமும், ஐயமும் கொண்ட கதைகளின் வழியாக கமல தேவி இவ்வுலகம் ஒன்றும் அத்தனை இருண்மை ஆனது அல்ல எனும் நிலைக்கு பயணப் பட்டிருக்கிறார். அடுத்தடுத்த கதைகளின் வழியே கவனிக்கப்படும் எழுத்தாளராக பரிணமிப்பார் எனும் நம்பிக்கை எனக்குண்டு.
சுனில் கிருஷ்ணன்
1.1.19