Showing posts with label யுவ புரஸ்கார். Show all posts
Showing posts with label யுவ புரஸ்கார். Show all posts

Friday, November 23, 2018

இம்பால் குறிப்புகள்

ஹோட்டல் கிளாசிக் கிராண்ட். அறை எண் 2005 ற்கு நாங்கள் சென்று சேர்ந்த அன்றே மாலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இங்கே யார் நம்மை அழைக்கப்போகிறார்கள் என்று எடுத்தபோது. கீழே வரவேற்பில் இருந்து 'என்னுடன் அங்கு வந்திருக்கும் விருந்தினர் ஒருவர் பேச விரும்புவதாக' சொன்னார். அப்போது நிற்காத ரயில்நிலையத்தை கடக்கும் வேகத்துடன் ஹிந்தியில் ஒருவர் பேசினார். பெசியவரையில் புரிந்தது ஒன்றேயொன்றுதான் லாபிக்கு வருகிறீர்களா, கொஞ்சம் பேசிக்கொண்டிருக்கலாம். 
உருது எழுத்தாளர், கபிமோ, குர்மீத், நான்,  அமல், தீபா நசீர். ஷானாஸ்  ரெஹ்மான்
--
அக்டோபர் 26 மாலை விருது விழா இம்பால் 'பழங்குடி ஆய்வு மையத்தில்' ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 25 மாலையே நாங்கள் வந்து சேர்ந்துவிட்டதால் காலை எங்கவாது சுற்றிப்பார்க்கலாம் என முடிவு செய்திருந்தோம். ஜெயமோகன் பிரம்மாண்ட சிவனும் சிவ கணங்களும் இருக்கும் உணகொட்டி எனும் இடத்தைப் பற்றி சொல்லியிருந்தார். அவசியம் சென்று வாருங்கள் பார்க்க வேண்டிய இடம் என்றார். பிறகுதான் அது திரிபுராவில், இம்பாலில் இருந்து ஆயிரத்தி முன்னூறு கிலோமீட்டர் தொலைவில் இருப்பது தெரிந்தது. 
--
இம்பாலுக்கு செல்வதற்கு முன் நாங்கள் ஒருநாள் கொல்கத்தாவில் இருந்தோம். அங்கே அரிமளத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பம் வசிக்கிறது. பெரியப்பாவிற்கு நெருக்கமானவர்கள். ஒரு வண்டியில் எங்களை மொத்த கொல்கத்தாவையும் அழைத்து சென்று ஒருநாளில் காண்பித்தார் ஜெயந்தி. பிரமாதமான வீட்டுச் சாப்பாடு அங்கிருந்த மூன்று வேளையும். கொல்கத்தாவின் ஆகச்சிறந்த அனுபவம் என்பது வியேன் என்றொரு கடையில் சுடச்சுட ரசகுல்லா, சந்தேஷ், சம்சம் உண்டதுதான். இவை எல்லாவற்றையும் விட 'மிஷ்டி தோய்' என்றொரு இனிப்பு உண்டு. வாழ்நாள் அனுபவம். லசி என்பது தயிரான பின் இனிப்பு சேர்ப்பது. மிஷ்டி தோய் திரட்டுப்பால் போல வெல்லமிட்டு காய்ச்சி அதை உறைக்கு ஊற்றி தயிராக்குதல். எங்களுக்கு கொடுத்துவிட்ட ஒரு பானை மிஷ்டி தோயை விமானத்திற்கு கொண்டு செல்லக்கூடாது என்று செக்யுரிட்டியில் தடுத்ததால் விமான நிலையத்திலேயே அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்தோம்.
--
அக்டோபர் 27 யுவ புரஸ்கார் விருதாளர்கள் ஏற்புரை நிகழ்ச்சி சிறிய அரங்கில் நிகழ்ந்தது. ஏற்கனவே அனுப்பி, சரிபார்க்கப்பட்ட உரையை வாசிக்க வேண்டும். அவ்வுரைகள் அங்கே அமர்ந்த அனைவருக்கும் நகலெடுத்து அளிக்கப்பட்டன. சரிபாதி உரைகள் ஆங்கிலத்திலும் மீதி உரைகள் ஹிந்தியிலும் இருந்தன. என்னருகே அமர்ந்திருந்த கன்னட எழுத்தாளர்களிடம் திரண்ட கருத்தை கேட்டுத் தெரிந்துகொண்டேன். சிலர் எழுதி வைத்த உரையை மாற்றியபோது முடிந்த வரை எழுதியதையே வாசியுங்கள் என அறிவுறுத்தப்பட்டார்கள். இது ஒருவகையான சென்சார்ஷிப் என்றே பட்டது.  
--
முதல்நாள் தொலைபேசியில் என்னை அழைத்தவர் குர்மீத் எனும் பஞ்சாபி எழுத்தாளர். இதுவரை ஏழு நாவல்கள் எழுதியுள்ளார். திரைத்துறையிலும் பணியாற்றுகிறார். எப்படியோ பேசிக்கொண்டோம். பிறகு அவர் நேபாளி, உருது, காஷ்மீரி மொழிகளில் விருது பெற்றவர்களையும் அழைத்திருந்தார். குர்மீத் உங்கள் சிறந்த கதைகளை கூறுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். ஒவ்வொருவரும் உணர்ச்சிபூர்வமாக தத்தமது கதைகளை ஹிந்தியில் சொல்லத் துவங்கினார்கள். பெரும்பாலும் அவர்கள் தங்கள் கதைகளை என் விழி நோக்கி சொல்லத் துவங்கினார்கள். மொழி புரியாதபோதும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உன்னிப்பாக கவனிப்பதாக பாவனை செய்ததுடன் நிறுத்திக்கொண்டிருக்கலாம். அந்தக் கதையில் நுட்பங்களை சுட்டிக்காட்டி அவர்களை மேலும் குஷிபடுத்த முயன்றிருக்கக் கூடாது என்பதை இப்போது உணர்கிறேன். ஒருவகையில் அவ்வை ஷண்முகி டெல்லி கணேஷ் போல் அவர்கள் என்னை பார்த்திருப்பார்கள்.
--
அமல் நானும், கே.எல். தேசிய பூங்காவில்
லோக்டக் மிதக்கும் ஏரிகளை காணச் செல்லும் வழியில் கேபுள் லாம்ஜா தேசிய பூங்காவிற்கு (Keibul Lamajao National park) இந்தியாவின் கிழக்கு எல்லையில் இருக்கும் தேசிய பூங்கா. இங்கு சங்காய் எனும் அரிய மானினம் முற்றிலும் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் மீட்டு பாதுகாக்கப் படுகிறது. நாற்பது சதுர கிமி பரப்பளவு கொண்டது. ஒரு சிறிய குன்றின் மீதேறி சென்றால், அங்கு அமைக்கப்பட்ட பார்வை மேடையில் நின்று மான்களை நோக்கலாம். கீழே சிறிய படகும் உண்டு. அதில் கொஞ்சம் தொலைவு சென்றுவரலாம். நாங்கள் அங்கு சென்று சேர்ந்தபோது காலை பத்துமணி இருக்கலாம். அப்போது எங்கள் கண் முன் பரந்த புல்வெளி விரிந்திருந்தது. அங்கிருந்த வழிகாட்டி இளைஞர் தொலைநோக்கி வழி பார்க்கச் சொன்னார். அப்போது புல் மறைப்பிற்கு அப்பால் ஒரேயொரு காதை மட்டும் காண முடிந்தது. அது எல்லா மான்களின், நாய்களின், கன்றுகளின் காதுகளைப் போன்றே இருந்தது. 
--
இலங்கை பயணத்தின்போது அற்புதமான ஒளியமைப்பில், அழகுணர்வுடன் அலங்கரிக்கப்பட்ட உணவகங்களில் சாப்பிடக் கிடைத்தது என்னவோ கட்டை கட்டையான பரோட்டாவும் கெட்டித்தயிரும் தான். நல்லவேளையாக இம்பாலில் அப்படியொன்றும் நிகழவில்லை. தாவ்ரத்தின்னிகளின் பாடு கொஞ்சம் கடினம்தான். எனினும் நாம் இங்கு நன்கு பழகிய வட இந்திய உணவுகளை அங்கும் பரிமாறினார்கள். ஒருநாள் மதியம் மட்டும் விழா அரங்கிலேயே மணிப்பூரி மதிய உணவு பரிமாறினார்கள். அங்கும் கூட செட்டிநாட்டில் செய்யப்படும் கவுணி அரிசி போன்ற ஒன்றை சிறிய பேப்பர் கோப்பைகளில் வைத்தார்கள். ரசவடை போன்ற ஒன்றும் மிகச் சுவையாக இருந்தது. குலாப் ஜாமூன் ஊடுருவல் வரவேற்கத்தக்கது என்றாலும் தடுத்து நிறுத்தவே முடியாது போலும். 
--
சாலைகளில் சர்வ சாதாரணமாக துப்பாக்கி ஏந்திய ராணுவவீரர்கள் நடமாடினார்கள். அவர்களை இயல்பாக கடந்து செல்வதற்கு மக்கள் முயன்றபடி இருக்கிறார்கள். நண்பர் கார்த்திக் புகழேந்தியின் உறவினர் இம்பாலில் ராணுவத்தில் நல்ல பதவியில் இருக்கிறார். அவரும் அவரது மனைவியும் அங்குதான் தங்கினார்கள். விமானநிலையத்தில் இருந்தே துப்பாக்கி சூழ தான் வலம்வந்ததாக சொன்னார். இம்பாலை விட்டு சற்று வெளியே வந்தால் கூட அதன் சாலைகள் தரம் மிக மோசமாக இருக்கின்றன. இப்போது விரிவாக்கம் செய்கிறார்கள். லோக்டக் செல்லும்வழி இருபுறமும் தகர குடிசைகள் அவர்களின் ஏழ்மையின் அடையாளமாக காண முடிந்தது. 
--
ஏற்புரையில் இந்தி மொழிக்கு விருது பெற்றவரின் உரை துணிச்சலாக இருந்தது என பலரும் அபிப்பிராயப்பட்டனர். இந்தி மொழிக்கு விருது பெற்ற ஆஸ்திக் வாஜ்பெயியுடைய தந்தை உத்யயன் வாஜ்பேயியும் ஒரு கவிஞர். மத்திய பிரதேசத்தில், போபாலில் வங்கிப் பணியில் உள்ளார் ஆஸ்திக். சாகித்திய அகாதமியின் பாரபட்சம் மற்றும் அரசியல்தான் அவருடைய ஏற்புரையின் பேசுபொருள். அவருடைய உரைக்கு மட்டும் சாகித்திய அகாதமியின் துணைத் தலைவர் மாதவ் பதினைந்து நிமிடம் விளக்கம் அளித்தார். வேறென்ன, சம்பிரதாயமாக, ஒரு அமைப்பின் பொறுப்பில் இருப்பவர் என்ன சொல்ல முடியுமோ அதைச் சொன்னார்.
துணைத்தலைவர் மாதவ் 
--
குர்மீத் மற்றும் குழாமுடன் திணறிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு மலையாள குரல் அருகில் கேட்டது. உண்மையில் அந்த நொடி நானடைந்த ஆசுவாசமும் மகிழ்ச்சியும் அளப்பறியாதது. மலையாளத்தில் நாவல் பிரிவில் விருது பெற்றவர் பெயர் அமல். சமூக யதார்த்தவாத கதைகளை எழுதுவதாக அவருடைய ஏற்புரையில் சொன்னார். மறுநாள் நாங்கள் லோக்டக் செல்லும்போது வண்டியில் ஒரு இடம் இருந்ததால் அவரையும் ஏற்றிக்கொண்டோம். சுதீர் அமலுடன் ஒட்டிக்கொண்டான். இப்போதும் அமல் கூறியது போலவே அவ்வப்போது 'ஆண ஆண' எனக் கூறுவான். அமல் சுவாரசியமான மனிதர். அவருடைய எளிமையையும் தயக்கத்தையும் கண்டு பலரும் 'இவன் எழுதி இருப்பான்?' என அவநம்பிக்கையுடன் பார்த்திருக்கக்  கூடும். ஆனால் என் கணிப்பு வேராக இருந்தது. இங்கே வந்திருப்பதிலேயே காத்திரமாக வாசித்திருக்கக் கூடியவர், எழுதியிருக்கக் கூடியவர் அமலாகத்தான் இருக்கும். கேரள எல்லையில் உள்ள தமிழக ஊர் ஒன்றில் தான் பொறியியல் படித்தார். பின்னர் சாந்தி நிகேதனில் கலை வரலாறு கற்று. அங்கே பரிச்சயமான ஜப்பானிய பெண்ணை காதலித்து சென்ற ஆண்டு திருமணம் செய்துகொண்டு தற்போது டோக்கியோவில் வசிக்கிறார். இதுவரை மூன்று நாவல்கள் மூன்று சிறுகதை தொகுப்புகள், மூன்று கிராபிக் நாவல்கள் வெளிவந்துள்ளன. விருது கிடைத்த நாவலின் கதைச் சுருக்கம் சுவாரசியமானது. சமூக ஊடகம் கிராம அளவில் செலுத்தும் தாக்கம் தான் அதன் மையம். அவர் வாழ்வில் நிகழ்ந்த உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதி இருக்கிறார். 
--
குர்மீத், துஷ்யந்த், ராணி முர்மு, பூஜா, நான், பாலசுதாகர் 
இரவு பத்து மணிக்கு உறங்கிக் கொண்டிருக்கும்போது அறையின் அழைப்புமணி ஒலித்தது. பாலசுதாகர் மவுலி, தெலுங்கு மொழிக்காக விருது பெற்றவர் அவருடைய தம்பியுடன் வந்து நின்றார். மவுலி உயிரியல் ஆசிரியர். கவிதைகள் எழுதுகிறார். சிறுகதைகளும் உண்டு. குடும்பத்துடன் இரவுணவு அருந்தும்போது தெலுங்கு போன்ற ஒன்றை நாங்கள் பேசுவதை கேட்டு ஆர்வமாகி என்னுடன் பேசுவதற்காக வந்தார். 'அவன் காட்டை வென்றான்' தமிழில் உள்ளது என்றேன். அவருக்கு ஜெயகாந்தனை தெரிந்திருக்கிறது. பல்வேறு ஊர்களில் நிகழும் கவிதை கூடுகைகளுக்கு சென்று வந்திருக்கிறார். சிற்பி, சேரன் ஆகியோரை அறிந்துள்ளார். கிளம்பும்போது அவருடைய இரு கவிதை நூல்களை அளித்தார். தெலுங்கு பேசத் தெரிந்தும் படிக்கதெரியாத பாவியாகிய நான் அதை என் மாமியாருக்கு அளித்துவிட்டேன். அவருக்கு தெலுகு வாசிக்கவும் எழுதவும் தெரியும்.    
--
யுவ புரஸ்கார் ஏற்புரை நிகழ்வின்போது சமரக்னி பானர்ஜி (அல்லது பந்த்யோபாத்ய) ஒரு விஷயத்தை சொன்னார். சாகித்திய அகாதமி இளம் எழுத்தாளருக்கான பயணப் படியை பெற்றிருக்கிறேன் என்றார். அப்போதுதான் சாகித்திய அகாதமி அப்படியொரு நிதியை அளிக்கிறது என்பதே தெரிய வந்தது. இப்போதும் அதை பெறுவதற்கான வழிமுறை என்னவென்று தெரியவில்லை. 
--
இந்த பயணத்தின் மிகச் சிறந்த அனுபவம் என்பது லோக்டக் பயணம் தான். இருபுறமும் சமவெளியில் கதிர்கள், அப்பால் மலைத் தொடர்கள். சென்றா எனும் சிறு தீவிற்கு சென்றோம். அங்கிருந்து மிகப்பெரிய நீர்நிலையான லோக்டக்கின் விரிவை காண முடிந்தது. துல்லிய நீலத்தில் வானும் அதை பிரதிபலிக்கும் நீரும், தூரத்து மலைகளும் ஒரு ஓவியத்திற்குள் இருப்பதான பிரமிப்பை அளித்தது. ஒரு படகு பயணம் சென்று மிதக்கும் தீவு ஒன்றில் இறங்கினோம். நிலம் நழுவுவதை ஒரு உவமையாக வாசித்திருக்கிறேன் அன்றுதான் அதை உணர முடிந்தது. நீர் மேல் மிதக்கும் தெர்மோகோல் மீது கால் வைப்பது போன்ற உணர்வு. நீர் தாவரங்களின் அடர்ந்த வேர் பரப்புகளால் பின்னப்பட்ட தரை. அதன் மீது சிறிய குடில் அமைத்து வாழ்கிறார்கள். எங்களுக்கு சுடச்சுட எலுமிச்சை தேநீர் கொடுத்தார்கள். நீரை கிழித்துக்கொண்டு படகு திரும்பியபோது பின்னால் எழுந்த நீர் கோடுகள் ஒரு மாபெரும் யானையின் மத்தகத்தை ஒத்திருந்தது. மொத்த ஏரியையும் உடலாக சூடிய நீலயானை, அதன் மத்தகத்தில் வெள்ளியலை பட்டை.
லோக்டக் - சென்றா தீவிலிருந்து 
--
பஞ்சாபி குர்மீத்திடம் கர்த்தார் சிங் துக்கலைப் பற்றி சொன்னேன்.அ வருடைய பவுர்ணமி இரவுகள் தமிழில் கிடைக்கிறது என்றேன். மனிதர் உற்சாகமானார். பெங்காலி சமரக்னியிடம் தாகூரைத் தவிர்த்து, விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய, தாரா சங்கர் பானர்ஜி, சுனில் கங்கோபாத்யாய ஆகியோர் எழுத்துக்கள் தமிழில் கிடைக்கிறது என்றேன். வியப்படைந்தார். கன்னட எழுத்தாளர் பத்மநாப பட் மற்றும் விக்கிரம ஹத்வாராவிடம் சிவராம் காரந்த், பைரப்பா, அனந்தமூர்த்தி, மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், தேவனூரு மகாதேவா, விவேக் ஷான்பாக் என பலரும் தமிழுக்கு அறிமுகம் என்றேன். அதுவும் விவேக் ஷான்பாகின் காச்சர் கோச்சர் இங்கு நன்கு கவனிக்கப்படுகிறது என்றேன். அவர்களின் முகங்களில் மகிழ்ச்சியைக் காண முடிந்தது. சென்ற ஆண்டு எச்.எஸ். சிவபிரகாஷ் அவர்களை சந்தித்தையும் சொல்லிக்கொண்டிருந்தேன். மலையாள எழுத்தாளர் அமலிடம் தகழி, எம்.டிவி, சக்காரியா, பஷீர் எனத் துவங்கி கே.ஆர்.மீரா வரை தமிழுக்கு வந்ததை சொன்னேன். அவர் அசோகமித்திரனின் தண்ணீரை வாசித்திருக்கிறார். ஜெயமோகனின் நூறு நாற்காலிகள், யானை டாக்டர் ஆகியவற்றை வாசித்திருக்கிறார். சாருவை அறிந்துள்ளார். நம் புதுமைபித்தன் கூட வேறு மாநிலங்களுக்கு சென்ற சேரவில்லை எனும் நிதர்சனம் என்னை வெகுவாக அலைக்கழிக்கிறது.

--
பஞ்சாபி குர்மீத் பார்ப்பதற்கு மிகுந்த வயதானவராக தோற்றமளித்தார். ஆனால் ஒல்லியான நெடிய உருவம்.கசன்சாகிசின் ஜோர்பாவிற்கு பொருத்தம். என் பிறந்த வருடத்தை கேட்டார். 1986 என்றேன். தான் 1989 என்று சொன்னார். நீங்கள் எல்லாம் என்னைவிட வயதில் மூத்தவர் ஆசியளியுங்கள் என கிண்டல் செய்தார். ஆனால் விருதாளர்கள் பற்றிய சிறிய தகவல் குறிப்பு உள்ள புத்தகம் எல்லோருக்கும் அளிக்கப்பட்டது. அதில் விருதாளர் பற்றிய தகவல், புத்தகத்தைப் பற்றிய குறிப்புகள் மற்றும் தொடர்பு தகவல்கள் உள்ளன. அதில் குர்மீத் 1985 ஆம் ஆண்டு பிறந்தவர் என்றிருந்தது.
--
புதுவை வெண் முரசு கூடுகைக்கு சென்றபோது நண்பர்கள் வைத்துக்கொடுத்த ராம்ராஜ் வேட்டி சட்டையை போடுவதென்று தீர்மானித்திருந்தேன். வேட்டியை கட்டும்போதுதான் தெரிந்தது அது நான்கு முழம் என்று.
-


லோக்டக் ஏரியின் மத்தியில் குடும்பத்துடன். 



யுவ புரஸ்கார் விருதையொட்டி இளம் எழுத்தாளர்கள் சந்திப்பும் நிகழ்ந்தது. அதற்காக கொங்கனி எழுத்தாளர் ஒருவர் வந்திருந்தார். கர்நாடகாவில் கொங்கனி கன்னட எழுத்துருவில் புழங்குகிறது, கோவாவில் ஆங்கில எழுத்துரு பயன்பாடும் உண்டு, மகாராஷ்டிரத்தில் தேவநாகரி எழுத்துருவில் கொங்கனி புழங்குகிறது என்றார். உங்கள் ஊர் இலக்கியம் வளமாக உள்ளது. நாங்கள் இறந்து கொண்டிருக்கும் மொழியை இறுக்கி பிடித்து கொண்டிருக்கிறோம் என்றார். ஒரேயொரு கொங்கனி நாளிதழ் மட்டுமே உண்டு. சில வாராந்திரிகள், இலக்கிய சஞ்சிகைகள் உண்டு என்றார்.
--
நாங்கள் காங்க்லா கோட்டைக்கு சென்றபோது எங்களுடன் கார்த்திக் புகழேந்தியும் அவருடைய மனைவி சுபாவும் இணைந்து கொண்டார்கள். காங்க்லா கோட்டையில் நம் கேரள படகைப்போன்று நீளமான படகு மூன்று  சங்காய் மான் தலை போன்ற முகப்புடன் இருந்தன. பெரும் பச்சை புல்வெளி. மெல்லிய தூறலுடன் சற்று தொலைவு நடந்துவிட்டு திரும்பினோம்.
--
குஜராத்தி மொழிக்கு ஈஷா என்றொரு கவிஞருக்கு கிடைத்தது. அவர் தொலைக்காட்சி தொகுப்பாளர், நாடக நடிகையும் கூட. குஜராத்தை சேர்ந்த பூஜா என்பவருக்கு நாடகத்திற்காக சிந்தி மொழிக்கான யுவ புரஸ்கார் கிடைத்தது. இவரும் தொலைக்காட்சி தொகுப்பாளர், மேடை நாடக நடிகர். அனால் இருவருக்கும் மற்றொருவரை தெரிந்திருக்கவில்லை. கொங்கனிக்கு விருது பெற்ற வில்மா மங்களூரில் இருக்கிறார். கன்னட எழுத்தாளர்களுக்கும் அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
--
காஷ்மீரி எழுத்தாளர் தீபா நசீருடைய கணவர் கடைசி நேரத்தில் வரவில்லை. அவருடைய மகனுக்கு ஏறத்தாழ சுதீர் வயதிருக்கும். ஒற்றையாளாக சமாளிக்க மிகவும் சிரமப்பட்டார். சுதீருக்கும் அவனுக்கும் வேறு அவ்வப்போது தள்ளுமுள்ளு. விருது நிகழ்வு முடிந்தவுடன் வாயிலில் யுவ புரஸ்கார் விருது பெற்றவர்களின் புகைப்படங்கள் ஒட்டியிருந்த பதாகையில் இருந்து அவருடைய கருப்பு வெள்ளை புகைப்படத்தை பிய்த்து கொண்டிருந்தார். அப்போது நான் மட்டுமே கீழே இருந்தேன். என்னிடம் 'நீங்களும் உங்களுடையதை எடுத்துக் கொள்ளுங்கள்' என்றார். 'நன்றி.பிறகு' என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்துவிட்டேன்.
--
உருது எழுத்தாளர் அலிகார் பல்கலைகழகத்தில் முனைவர் ஆய்வு செய்து வருகிறார். 1991 ஆம் ஆண்டு பிறந்தவர். இந்திய உருது இலக்கியத்தைக் காட்டிலும் பாகிஸ்தானிய உருது இலக்கியம் அபார வளர்ச்சி அடைந்து வருவதாக சொன்னார். சிறுகதைகளுக்காக விருது கிடைத்தபோதும் அவர் விமர்சன கட்டுரைகளும் எழுதி வருகிறார். அவருடைய பெயரைக் கொண்டு ஷானாஸ் ரெஹ்மான் ஆண் என்று எண்ணியிருந்தேன்.
ஜெயத்ரத் ஷுணா, அமல், நான் 
--
விழா அரங்கில் சாகித்திய அகாதமி புத்தகங்கள் விற்பனைக்கு இருந்தன. எண்ணியது போலவே பிறருக்கு சுட்டிக்காட்டும் படியான தமிழ் மொழியாக்கங்கள் ஏதுமில்லை. சுனில் கங்கோபாத்யாய அவர்களின் பெரு நாவல் ஒன்று இரு பாகங்களில் மலிவான விலையில் ஆங்கில மொழியாக்கத்தில் கிடைத்தது. அதைத் தவிர இராமாயண, மகாபாரத மருவுகள் பற்றிய தொகுப்புக்கள் வாங்கிக்கொண்டேன்.
--
லோக்டக் செல்லும் வழியில் ஜப்பான் போர் நினைவகம் ஒன்றுள்ளது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் தோற்ற போர் முனைகளில் ஒன்று. ஜப்பான் அரசு கட்டிக் கொடுத்தது. மூன்று பெரும் செந்நிற பாறைகளை வைத்திருக்கிறார்கள். ஜப்பான், இந்தியா மற்றும் பிரித்தானியாவை குறிப்பவை என ஓட்டுனர் சொன்னார். நினைவுநாளில் அந்த அந்த குடும்பத்தினர் அந்த தேசத்திருகுரிய கல்லில் மலர் அஞ்சலி செலுத்துவார்கள் என்றார்.
--
நேபாளி எழுத்தாளர் சுடேன் கபிமோ அவர் மொழிக்கான சாகித்திய அகாதமி பொறுப்பாளர் அவரை அழைத்து விருது பற்றி சொல்லவில்லை என வருந்தினார். அப்போது காஷ்மீரி எழுத்தாளரும் சேர்ந்து வருந்தினார். காரணம் காஷ்மீரி பொறுப்பாளருக்கு வேண்டப்பட்டவருக்கு கொடுக்காமல் தனக்கு கிடைத்ததினால் வருத்தம் என்றார். அப்போதுதான் சாகித்திய அகாதமி தமிழக பொறுப்பாளர் நம்மையும் அழைக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. ஆனால் இதில் வருந்துவதற்கு என்ன இருக்கிறது என்பதுதான் விளங்கவில்லை.
--
எல்லா எழுத்தாளர்களும் ஹோட்டலில் சந்தித்து பேசலாம் என முடிவு செய்தோம். இரண்டு நாளும் அது சாத்தியமாகவில்லை. எப்படியோ அதற்குள் ஒரு சிறிய குழுக்கள் உண்டாகிவிட்டதை உணர முடிந்தது. இப்போது வாட்சப் குழு ஒன்று உள்ளது. அதிலும் பெரும்பாலும் யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மொழி, பிராந்தியம், சாதி என நுட்பமான ஏதோ ஒன்று மனிதர்களை பிணைக்கவும் பிரிக்கவும் செய்கிறது.
--
இந்தி எழுத்தாளர் ஆஸ்திக் என் ஏற்புரை நன்று எனச் சொல்லி ஏதேனும் படைப்புகளை அனுப்ப முடியுமா எங்களுக்கு ஒரு இந்தி இதழ் உள்ளது அதில் மொழியாக்கம் செய்து வெளியிடலாம் என்றார். ஆஸ்திக் மற்றும் கன்னட எழுத்தாளருடன் ஆங்கிலத்தில் பேச முடிந்தது. மலையாளி மற்றும் தெலுங்கு எழுத்தாளர்களுடன் சரளமாக அவர்களுடைய மொழியிலேயே பேச முடிந்தது.
விக்கிரம ஹத்வாரா, நான், பத்மநாப பட் 
--
அமல் ஒரு ரஜினி ரசிகர். காலாவை ரஜினி ரசிகர்கள் சூழ ஜப்பானில் பார்த்ததாக சொன்னார். கன்னட எழுத்தாளர் விக்ரம் தமிழ் திரைப்படங்களை நேரடியாக பார்ப்பதாக சொன்னார். தமிழ் வெகுமக்கள் திரைப்படங்களின் வீச்சு நம்ப முடியாத அளவிற்கு இருக்கிறது. தென்னிந்தியா மொழிகளில் அதன் வீச்சு தெரிந்ததே. ஆனால் நேபாளி எழுத்தாளரும், ஹிந்தி எழுத்தாளரும் தமிழ் திரைப்படங்கள் பார்ப்பதாக சொல்வது எனக்கே வியப்பாக இருந்தது.
--
ஏற்புரை நிகழ்ச்சிக்கு நன்றி தெரிவித்து சாகித்திய அகாதமி செயலர் சீனிவாச ராவ் பேசும்போது தமிழில் இருந்து வந்த ஏற்புரை சர்ச்சைக்குரியதாக உள்ளது என அலுவலகத்தில் ஒரு சிறிய பரபரப்பு ஏற்பட்டதாக சொன்னார். காரணம் ஏற்புரையின் முதல் சில வரிகள். மொத்தமாக படிக்கும்போது உரையும் பொருளும் தளமும் மேலானதாக இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.
--
இளம் எழுத்தாளர் சந்திப்பிற்கு வந்திருந்த காஷ்மீரி கவி நல்ல உயரம் சிவப்பு. கார்த்திக் புகழேந்தி அவருடன் பேசிக்கொண்டிருந்தார். அவர்  ராஜீவ் மேனன் இயக்கும் சர்வம் தாளமயம் திரைப்படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளதாக சொன்னார்.
--
மலையாள மொழியிலிருந்து சிறுகதை வாசிக்க வந்திருந்த ஷிகாப் தீவிர கிரிக்கெட் வெறியர். இந்தியா மேற்கிந்திய தீவுகள் போட்டியை பார்த்துக்கொண்டு 96 உலககோப்பை நினைவுகளை பேசிக்கொண்டிருந்தோம். அரைநாள் பேசிவிட்டு ஒரு ஸ்லாம் புக்கை நீட்டி என்னைப்பற்றி எதாவது எழுதி கையெழுத்து இட்டு கொடு என்றார். வாழ்க வளமுடன்.
விக்கிரம ஹத்வாராவுடன் 
--
கன்னட எழுத்தாளர் விக்கிரம ஹத்வாராவுடன் உரையாடிய நேரம் முக்கியமானது என எண்ணுகிறேன். நம் நற்றிணையில் வந்திருந்த அவருடைய காரணம் கதை எனக்கு பிடித்திருந்தது. அதைப் பற்றியும் பொதுவாக இலக்கியத்தைப் பற்றியும் பேசினோம். ஏறத்தாழ எங்கள் பார்வைகள் ஒரேமாதிரி இருந்ததை உணர்ந்து கொண்டோம்.
--
பத்மநாப பட் கன்னட பிரஜாவாணி இதழின் சினிமா பக்கத்திற்கு பொறுப்பாக உள்ளார். சுருதி ஹரிஹரன் அர்ஜுன் மீது மீ டூ குற்றசாட்டு சூட்டி பரப்பரப்பானது. அதை வெளிகொணர்ந்த நிருபர் அவரே. ஏறத்தாழ சின்மயி வைரமுத்து விவகாரத்தில் சின்மயி எப்படியெல்லாம் பழிக்கப்பட்டாரோ அதுவே சுருதிக்கும் நிகழ்ந்ததாக சொல்லிக்கொண்டிருந்தார்.
--
சமஸ்க்ருதத்தில் யுவ புரஸ்கார் பெற்ற முனி ராஜ சுந்தர் விஜய்க்கு என் வயதுதான். அவர் விழாவிற்கு வரவில்லை. விசாரித்தபோதுதான் அவர் சமணத் துறவி என்பதை தெரிந்துகொண்டேன்.
--
மாமியார், அம்மா, மனைவி,சுதீர்- காங்க்லா கோட்டை ரோஸ் கார்டனில்- p.c karthik pugazhendhi
மணிப்பூரில் வைணவம் அதிகம் பின்பற்றப்படுவதாக சொன்னார்கள். அங்கே கோவிந்தாஜி கோவிலுக்கு சென்றோம். சரியாக நாங்கள் சென்ற நேரத்திற்கு அங்கு ஆரத்தி நிகழ்ந்தது. மூன்று சந்நிதிகள். ராதே கிருஷ்ணா, பூரி ஜகந்நாதர் மற்றும் கிருஷ்ணர் என அடுத்தடுத்து இருந்தன. அந்த கோவில் பூசகர்கள் தீவிர ஆசாரவாதிகள். அது ஏதோ ஒரு ஒவ்வாமையை அளித்தது. பிரசாதமாக ஒரு மலரை ஒரு பெண்ணிற்கு கொடுக்க அவளருகே வீசிவிட்டு சென்றார் பூசகர்.
--
யுவ புரஸ்காரர்களில் அநியாயத்திற்கு யுவர் 1994 ஆம் ஆண்டு பிறந்த ராஜஸ்தானி எழுத்தாளர் துஷ்யந்த் ஜோஷி. அவருடைய தந்தை முன்னரே சாகித்திய அகாதமி வாங்கியவராம். தனுஷ் பட பணக்கார அமுல்பேபி வில்லன்களில் ஒருவரைப் போல் தோற்றமளித்தார்.
--
காலை ஐந்து மணிக்கு எல்லாம் புலர்ந்து, மாலை ஐந்து மணிக்கெல்லாம் இருட்டி விடுகிறது. இரவுகளில் நல்ல குளிர். பகல்களில் வெப்பம் அதிகமில்லை. ஒருவித ஐரோப்பிய பருவநிலை எனச் சொல்லலாம்.
--
கிளம்புவதற்கு முன் கார்த்திக் புகழேந்தி உரையை கேட்டுவிட்டுத்தான் சென்றேன். மராத்தி, வங்காளி மற்றும் தமிழ் எழுத்தாளர்கள் தாங்கள் ஏன் எழுதுகிறோம் என்பதைக் குறித்து பேசினார்கள். மூன்றுமே வெவ்வேறு வகையானவை. மராத்தி மொழியை சார்ந்தவர் பேசியது எனக்குப் பிடித்திருந்தது. கார்த்திக் புகழேந்தி உக்கிரமான உணர்வுகளை கடத்துவதாக இருந்தது.
--
விழா மேடை அழகாக இருந்தது. ஆனால் விழா அரங்கு படுமோசம். பழைய திரையரங்க நாற்காலிகள் போல் ஓட்டை உடைசல் நாற்காலிகள். வாசகசாலை அரங்குகள் இதைவிட நன்றாக இருக்கும் என கார்த்திக் சொன்னார்.
--
எஸ்தர் டேவிட் 
சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட எஸ்தர் டேவிட் எனும் பெண் எழுத்தாளர் நங்கள் பயணித்த விமானத்தில்தான் இம்பால் வந்தார். அவரைக் கண்டதுமே மானசாவிடாம் இவர் நிச்சயம் எங்கள் கோஷ்டியாகத்தான் இருக்க வேண்டும் எனக் கூறினேன். என் ஐயம் உறுதியானது. எழுத்தாளர்கள் எப்படியோ சக எழுத்தாளர்களை மோப்பம் பிடித்துவிடுவார்கள். இந்திய யூத பின்புலம் கொண்ட எழுத்தாளர் என கூகிள் சொல்கிறது. வாசித்து பார்க்க வேண்டும்.
--
சாகித்திய அகாதமி தலைவர் வராததால் துணைத்தலைவர் நிகழ்வை முன்னின்று நடத்தினார். ஏற்புரை நிகழ்வின்போது அவராற்றிய உரை மிக முக்கியமானது என விக்கிரம ஹத்வாரா விளக்கினார். நாற்பதுகளில் எழுத்து நம்மை விட்டு அகலும் அபாயம் உண்டு. அந்த பருவத்தில் கலையை இறுகப் பற்றிக்கொண்டு கடந்துவிடுங்கள் என ஆலோசனை சொன்னார். உலகியல் வாழ்வு சுழற்றி வீசும் பருவம் அதுவே.
--
தங்கியிருந்த ஹோட்டலில் பப்பே உண்டு. தயிர் வடை போன்று ஒன்றை வைத்திருந்தனர். ஆனால் அதன் மீது இனிப்பு ஊற்றியிருன்தனர். இப்போது இதை எழுதும்போது கூட அதன் வாடை குமட்டுகிறது. டோஸ்டரில் ப்ரெட் டோஸ்ட் செய்து நிறைய வெண்ணைத் தடவி சமாளித்தோம். இந்தப் பயணத்தின் மாபெரும் வெற்றி என்பது ஊருக்கு சென்ற அறுவரில் எவருக்கும் ஒருநாள் கூட எந்த உடலுபாதையும் வரவில்லை என்பதே.
--
ஒட்டுமொத்தமாக இலக்கியம் உயிர்ப்புடன் திகழும் மொழிகள் என தென்னிந்திய நான்கு மொழிகள், வங்காளி மற்றும் ஹிந்தியைச் சொல்லலாம் எனத் தோன்றுகிறது. பிற மொழிகளில் எழுதும் ஆட்கள் குறைந்து வருகிறார்கள்.
--
தேர்ந்த எழுத்துக்காரராக மட்டுமில்லாமல் இருமொழி புலமை மேலதிகமாக தேவைப்படுகிறது. இனி வரும் காலம் அப்படிப்பட்டதுதான் என்றொரு எண்ணம் கன்னட, வங்காள எழுத்தாளர்களை காணும்போது தோன்றியது. ஆனால் இதெல்லாம் யார் பொறுப்பு? எப்படி தமிழில் நிகழ்வதை பிறருக்கு கொண்டு சேர்க்கப் போகிறோம்? தெரியவில்லை. பேசியவரை பிற மொழிகளில் யதார்த்தவாதமே பெரும் போக்காக திகழ்கிறது. இந்திய மொழிகளில் தமிழின் இடம் நிச்சயம் நல்ல நிலையில் உள்ளதாக தோன்றியது.
--
புத்தக விற்பனைப் பற்றி பேச்சு வந்தது. நேபாளி எழுத்தாளர் கபிமோ அவருடைய நூல் நேபாளில் பத்தாயிரம் பிரதிகள் விற்றதாக சொன்னார். பஞ்சாபியும் ஏழாயிரம் பிரதிகள் விற்றுள்ளன என்றார். நான் வாயை மூடிக்கொண்டு இருந்தேன். இங்கே முதன்மை எழுத்தாளருக்கே ஆயிரம் பிரதிகள் விற்க மூன்று ஆண்டுகள் ஆகும் எனும் பரிதாப நிலையை எப்படிச் சொல்வது.
--
இம்பாலில் அதே நாட்களில் நரம்பியல் மாநாடும் நிகழ்ந்தது. அதற்கு வந்தவர்களும் எங்கள் ஹோட்டலில் தான் தங்கியிருந்தார்கள். கோவை கே.ஜி மருத்துவமனை நரம்பியல் மருத்துவர்கள் இருவர் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். தமிழ் பேச்சைக் கேட்டதும் போய் பேசினோம்.
--
இம்பாலில் இருந்து கொல்கத்தாவந்து அங்கிருந்து உடனடியாக சென்னைக்கு விமானம் பிடிக்க வேண்டும். பரபரப்புடன் வந்தோம். இறுதி நேரத்தில் வண்டி ஏறினோம். எப்போதும் விமானத்தில் தூங்கிவிடும் சுதீர் அன்று நசநசத்துக்கொண்டே இருந்தான். எங்கள் இருக்கைக்கு பின்னிருக்கையில் இருக்கும் பெண் பயணி விமான பணிப்பெண்ணிடம் புகார் சொன்னார். நாங்களும் அமைதியாக்க முயற்சித்தோம் ஆனால் படுதோல்வி. பின்னர் அவரே ஒருகட்டத்தில் கோபமாக சுதீரைப் பார்த்து கத்தினார். நல்ல பயணம் இப்படியான கசப்புடன் முடிவுற்றது.
--
மணிப்பூரி உள்ளூர் தொலைகாட்சியில் அவர்கள் ஊரின் ஆல்பம் இசை கேட்டேன். பெரும்பாலான பாடல்கள் பிரமாதமான மெலடிக்கள்.
--
ஒட்டுமொத்தமாக இந்த பயணம், பயணக் காட்சிகள் என்றென்றைக்கும் நினைவிலிருக்கும். சிலர் நீண்டகால நண்பர்களாக தொடரவும் வாய்ப்புண்டு.
--
இன்று, ஏறத்தாழ ஒருமாதத்திற்கு பின் திடிரென்று நினைவுகளை எழுதக் காரணம் கன்னட எழுத்தாளர் பத்மநாப பட் அனுப்பிய புகைப்படங்கள். இந்த நினைவுக் குறிப்புகள் என்றேனும் அசோகமித்திரனின் ஒற்றனைப் போல் ஒரு நாவலாக விரியவும் வாய்ப்புண்டு.














Tuesday, July 3, 2018

யுவ புரஸ்கார் பாராட்டு விழா

இப்படியான விழா ஏற்பாடு செய்யலாம் என்று நண்பர் ஜீவ கரிகாலன் கூறியபோது அதை வேண்டாம் என்று மறுத்தேன். அவசியமற்ற கவனச்சிதைவு என்றே எண்ணினேன். பிறகு 'அம்புப் படுக்கை' மீதான விமர்சன கூட்டமாக இதை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். ஆனால் ஜீவ கரிகாலன், குடும்பத்தினர் மற்றும் எஸ்.ராவின் வலியுறுத்தல் இதை பாராட்டு விழாவாக ஆக்கியது. தமிழிலக்கிய பரப்பில் பறக்கும் பறவைகள் எந்த மரத்திலிருந்து வருபவை என்பது முக்கியமல்ல என எஸ்.ரா பேசியது மிக நல்ல உரை. அவரே ஆர்வமுடன் கேள்வி பதில் அமர்வை ஒருங்கிணைத்தார். மண்குதிரை ஜெயகுமார் உரையை முதன்முறையாக இப்போதுதான் கேட்கிறேன். அவருடைய கட்டுரைகளை வாசித்ததுண்டு. செறிவாக பேசினார். பாராட்டு விழா என்பதால் எதிர்மறை விமர்சனங்களை வைக்கவில்லை. அதை கெட்டு தெரிந்துகொள்ள வேண்டும். அகரமுதல்வன் பேச்சின் மொழியும் வீச்சும் கேட்க நன்றாக இருந்தது. கார்த்திக் புகழேந்தி பேசியதை அரங்கில் உள்ளோர் அனைவரும் ரசித்து கேட்டனர். எல்லோரையும் ஈர்க்கும் விதமாக இருந்தது. நண்பர் சிறில் விரிவாக பல்வேறு விஷயங்களை தொட்டுக் காட்டி உரையாற்றினார். என்னை நீண்ட காலமாக அறிந்த நண்பர் அவர். கணையாழி ஆசிரியர் ம.ரா ஆச்சரியமான தொடர்ச்சி. பேசும் பூனை பரிசு மேடை, புத்தக வெளியீட்டு மேடை பிறகு இப்போது யுவ புரஸ்கார் மேடை என அவருடைய இருப்பும் வாழ்த்தும் தொடர்கிறது. 

ஏற்புரையில் சிலவற்றை சொல்லவேண்டும் என்றிருந்தேன். ஆனால் காலதாமதம் ஆகிவிட்டதால் அதிகம் பேசவில்லை. ஜீவ கரிகாலன், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், நட்பாஸ் என யாருக்கும் நன்றிகள் சொல்லவில்லை. ஸ்ருதி டிவிக்கு ஒரு நன்றி சொல்ல எண்ணியிருந்தேன் ஆனால் அதுவும் சொல்லவில்லை. சிறப்பாக ஒருங்கிணைத்த ஜீவ கரிகாலன் மற்றும் யாவரும் நண்பர்களுக்கும், தொகுத்த பிகு, வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 

எஸ்.ரா உரை 

https://www.youtube.com/watch?v=BkPCznjGtBA&t=10s

கார்த்திக் புகழேந்தி உரை 

https://www.youtube.com/watch?v=kBK-T17OZLw&t=4s

சிறில் அலெக்ஸ் உரை 


https://www.youtube.com/watch?v=FsjR5qN1xv4&t=4s

அகரமுதல்வன் உரை 

https://www.youtube.com/watch?v=82wn5Z8ZbjU&t=4s

மண்குதிரை உரை 

https://www.youtube.com/watch?v=LXJsWCM51ps&t=8s

ம.ராஜேந்திரன் உரை 

https://www.youtube.com/watch?v=g7lXSB5DugE

கலந்துரையாடல் 

https://www.youtube.com/watch?v=qELZ9jIPrJs&t=1446s

நேர்காணல்கள்

யுவ புரஸ்கார் விருதையொட்டி தொலை பேசி வழியாகவும் நேரிலும் சில நேர்காணல்கள் நிகழ்ந்தன. 

டி.டி பொதிகை தொலைகாட்சியில் பணிபுரியும் நண்பர் விஜயன் காந்தி- இன்று தளத்தின் தொடர் வாசகர். ஜெயமோகன் தலம் வழியாக காந்தி இன்று தளத்தை கண்டுகொண்டவர். அவருடைய அழைப்பின் பேரில் சனிக்கிழமை காலைத்தென்றல் நம் விருந்தினர் பகுதியில் ஒரு நேர்காணல் அளித்தேன். விஜயன் தற்காலிகமாக இந்த நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்று இருந்தார். ஆகவே வரவேண்டும் என கேட்டுக்கொண்டார். அவரே ஜெயமோகன் தளங்களில் இருந்தும், வெளியே இருந்தும் ஒன்றரை நிமிடம் ஓடக்கூடிய குறும்படத்தை தொகுத்திருந்தார். நேரலை நேர்காணல் என்பது புதிய அனுபவமாக இருந்தது. விஜயன் மற்றும் பூர்ணிமா ஆகியோருக்கு நன்றி. 

https://www.youtube.com/watch?v=AEY6b8QezeE&t=26s

விகடன் சார்பாக அழகு சுப்பையா தொலைபேசி நேர்காணல் ஒன்று செய்தார். ஏறத்தாழ எல்லா கேள்விகளும் யாக்கர் பந்துகள். ஒருமாதிரி சமாளித்து பதில் அளித்தேன். 

https://www.vikatan.com/news/india/129152-interview-with-yuvapuraskar-winner-sunil-krishnan.html\

நண்பர் கவிமணி தொலைபேசி வழி எடுத்த நேர்காணல். அவரோடு கொஞ்ச நேரம் அரட்டை அடித்து கொண்டிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். விடியோ பதிவு ஒன்றும் செய்ய வேண்டும் என்றார். ஆனால் நேரமின்மை காரணமாக அதை செய்யவில்லை. நன்றி நூல்வெளி மற்றும் கவிமணி. 

http://www.noolveli.com/detail.php?id=788

நட்பாஸ் வாழ்த்து

'அம்புப் படுக்கை' தொகுப்பை நான் இருவருக்கு சமர்ப்பணம் செய்திருப்பேன். ஒருவர் தந்தைக்கு நிகரான ஜெயமோகன். மற்றொருவர் ஆசிரியருக்கு நிகரான நட்பாஸ் என்றே குறிப்பிட்டு இருப்பேன். இன்றுவரை நான் எழுதும் எதையும் எழுதி முடித்தவுடன், (சில நேரங்களில் எழுதிக் கொண்டிருக்கும்போதேகூட) அவருக்கு அனுப்புவதே என் வழக்கம். மொழியை சிந்தனையை செம்மையாக்குவதில் பங்களிப்பு ஆற்றியவர். காந்தி- இன்று, ஆம்னிபஸ், பதாகை, சொல்வனம் என அவருடன் இணைந்து பயணித்திருக்கிறேன். சில நேரங்களில் கடுமையாக அவருடன் முரண்படவும் கோபித்துகொள்ளவும் நேர்ந்திருக்கிறது. பெரும்பாலான சமயங்களில் நியாயம் அவர் பக்கம் இருக்கும். ஆனால் ஒருமாதிரி சமாதானம் அடைந்து எங்கள் பயணம் தொடர்கிறது. தமிழ் இணைய உலகை மேம்படுத்தியதில் பாஸ்கரின் பங்களிப்பு முக்கியமானது. என்னைப்போன்ற பல எழுத்தாளர்கள் தங்கள் முதல் டிராப்டை அனுப்பி கருத்து கேட்கும் நபராக இன்றளவும் பாஸ்கரே உள்ளார். தனிப்பட்ட நம்பிக்களுக்கு அப்பால் சென்று படைப்பை மதிப்பிடும் பண்பு அவரிடம் உள்ளது. தன்னை ஒருபோதும் அவர் முன்னிறுத்திக் கொண்டதில்லை. என்றாவது ஒருநாள் பாஸ்கரைப் பற்றி விரிவாக எழுத வேண்டும். இந்த வாழ்த்துக்கு நன்றி. 
--
ஒரு சிறு வாழ்த்துரை 
நன்றி - https://livelyplanet.wordpress.com/2018/06/22/yuva-puraskar/

நண்பர் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனுக்கு ‘யுவ புரஸ்கார் விருது’ கொடுக்கப் போகிறார்கள் என்ற செய்தி படித்தேன். மிக மகிழ்ச்சியான விஷயம்.

சுனில் கிருஷ்ணன் பொது புள்ளியைக் கண்டடைந்து உரையாடுபவர், பொறுமை மிக்கவர். இதைச் சொல்ல வேண்டுமா என்றால், ஆமாம். ஒன்றுமில்லாத விஷயத்துக்கு எல்லாம் சிலிர்த்துக் கொண்டு அதற்கு தார்மீக நியாயம், அறச் சீற்றம் என்றெல்லாம் முத்திரை குத்தி நட்பை முறித்துக் கொள்ளும் சூழலில் இந்த இரு குணங்களும் மிக முக்கியமாக இருக்கின்றன, அதுவும் இளைஞர்களுக்கு. அவ்வகையில் அவர் ஒரு முன்மாதிரி.

இரண்டாவதாக, சுனில் கிருஷ்ணன் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாதவர். பதாகை இதழில் வந்த ‘புதிய குரல்கள்‘ தொடரின் நேர்முகங்கள் மற்றும் நூல் வாசிப்பு அத்தனையும் அவரது பங்களிப்பு மட்டுமே. எந்த ஒரு ஊக்குவிப்பும் இல்லாமல் தன்னார்வம் கொண்டு மட்டுமே அதைத் தொடர்ந்து செய்து வந்தார். “உங்களிடம் ஒரு நேர்முகம் வேண்டும்,” என்று கேட்கும் ஒவ்வொரு சமயமும் “இப்போது வேண்டாம்,” என்று மறுத்தே வந்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒருவருக்கு யுவ புரஸ்கார் அளிக்கும் அடையாளம் இன்னும் பல இளம் எழுத்தாளர்கள் வெளிச்சத்துக்கு வரவும் அங்கீகாரம் பெறவும்  சிறிதளவேனும் உதவும் என்று நம்புகிறேன். இதுவும் சாதாரண விஷயமில்லை. காந்தியானாலும் சரி, தன் கதையானாலும் சரி, அதில் எல்லாம் எவ்வளவு முனைப்பு காட்டினாரோ அதே முனைப்பை பிறர் எழுத்தை முன்னிலைப்படுத்துவதிலும் காட்டி வந்திருக்கிறார். அந்த வகையில், இவ்வாண்டு, யுவ புரஸ்கார், சரியான நபரிடமே சென்று சேர்ந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

நண்பர் சுனில் கிருஷ்ணன் நீண்ட பயணத்தின் துவக்கத்தில் இருக்கிறார். அவருக்கு இந்த விருது இப்போதே கிடைத்திருப்பது பெரும்பேறு. இதற்கு மட்டுமல்ல, இன்னும் பல உயர்ந்த விருதுகளுக்கும் தகுதி கொண்டவர்தான் என்று தன்னை நிலைநிறுத்திக் கொள்ளக்கூடிய அர்ப்பணிப்பும் உழைப்பும் அவரிடம் உண்டு. அவை தொய்வின்றி தொடர என் பிரார்த்தனைகள்.

oOo

23.6.2018 8:20 AM:

கண்ணன் தண்டபாணி - யுவ புரஸ்கார் வாழ்த்து

நண்பர் கண்ணன் தண்டபாணி நான் பெருமதிப்பு கொண்டிருக்கும் காந்திய நண்பர். தீவிர வாசிப்பு வழக்கம் உள்ளவர். காந்தியை வெறுமே வாசிப்பதோடு நிற்காமல் காந்திய வாழ்க்கை வாழ்பவர். 'அம்புப் படுக்கை' தொகுப்பிற்கு என்பதைவிட ஒட்டுமொத்த பங்களிப்பிற்கு அளித்த விருது என மதிப்பிட முடியும் என சொல்கிறார். என்னளவில் சிறுகதை தொகுப்பிற்காக என்றே மதிப்பிடுவேன். புனைவின் பங்களிப்பை பின்னுக்கு தள்ளுவதாக ஆகிவிடக் கூடும்.  எனது வலைப்பூவில் மிக துவக்க காலத்தில் எழுதிய கதைகளை கூட தோண்டி எடுத்து வாசித்து மதிப்பிட்டுள்ளார். அவருடன் இணைந்து சில பணிகளை செய்து கொண்டிருக்கிறேன். எங்கள் நட்பு வருங்காலங்களிலும் தொடரும். நன்றி கண்ணன். 

--
நன்றி- https://urakkacholven.wordpress.com/2018/07/01/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/
சுனில் கிருஷ்ணன்[சுனில் கிருஷ்ணன் ‘காந்தி இன்று’ தளத்தைப் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். அதில் காந்தியுடைய ஆக்கங்கள், காந்தி காந்தியம் பற்றிய படைப்புகள் பலவும் மொழிபெயர்க்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. காந்தி குறித்த பல புதிய கட்டுரைகளும் உள்ளன. படைப்பிலக்கியத்திலும் தொடர்ந்து செயல்பட்டுவரும் சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. சுனில் கிருஷ்ணன் காரைக்குடியில் ஆயுர்வேத மருத்துவராக உள்ளார்.]நண்பர் சுனில் கிருஷ்ணனுக்கு விருது என்று சென்ற வாரம் அறிந்த போது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தது. மறுபுறம், விருதுவாங்குபவர்களுக்கென்றே உள்ள பிரத்யேகமான சிகிச்சையும் அவருக்குக் கிடைக்குமே என்ற ஒரு அச்சமும் இருந்தது.சுனிலின் ஒருசில கதைகளைத்தான் நான் முன்பு படித்திருக்கிறேன். நம்ம சுனில் தானே என்கிற உரிமையிலோ என்னவோ, முழுமையாகப் படிக்காமல் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன். இவ்விருது தந்த புது உற்சாகத்தில் இணையத்தில் உள்ள அவரது கதைகளில் பெரும்பாலானவற்றைப் படித்துவிட்டேன்.பேசும் பூனை, அம்புப் படுக்கை ஆகிய இரண்டு கதைகளும் குறிப்பிடத்தக்கவை என்று பட்டது.காந்தியவாதிகள் நல்ல இலக்கியம் படைக்கமாட்டார்கள் என்கிற ஒரு முன்முடிவோடு நாம் சுனிலை அணுகவேண்டியதில்லை. (சாரு நிவேதிதா மிகவும் விதந்தோதிய ‘மண்ணில் தெரியுது வானம்’ என்கிற காந்திய நாவலே சற்று தட்டையாகத்தான் எனக்குத் தெரிந்தது. சுனிலின் பாராட்டுவிழாவில் எஸ்.ரா. காந்திக்கு புனைவிலக்கியங்கள் மீதும், இயற்கையின் மீதும்கூட அதிக ஆர்வமில்லை என்று பேசியுள்ளார். அதில் ஓரளவு உண்மையும் (சில தகவல் பிழைகளும்) இருந்தாலும், காந்தி ஹோமர் முதல் கதே வரை படித்திருக்கிறார். எட்வின் ஆர்னால்டின் கவித்துவமான மொழியின் மூலமாகத்தான் அவர் கீதைக்குள் நுழைந்தார். காந்தியின் எழுத்தின் கூர்மையும் தெளிவும் எந்த எழுத்தாளருக்கும் குறைவானதல்ல. ஆனால் அவரது முதன்மையான அக்கறை வேறாக இருந்தது). சுனில் காந்திய ஆர்வலராக இருந்தாலும் தன்னை காந்தியவாதி என்பதையே ஏற்றுக்கொள்வதில்லை என்று நினைக்கிறேன். உண்மையில் ‘காந்தியும் நானும்’, ‘ஆரோகணம்’ என்ற அவரது இரண்டு காந்தி கதைகளுமே முன்வைக்கும் காந்தி பற்றிய சில சித்திரங்களும் கேள்விகளும் விவாதத்திற்குரியவை. காந்தியின் கண்முன் ஐந்து வயதுப் பெண் வன்புணர்ச்சி செய்யப்பட்டிருந்தால் அவர் காந்தியவாதியாக இருந்திருப்பாரா என்பது காந்தியை அறிய முனையும் நம் எல்லோரின் ஆரம்பகட்ட கேள்வி. இக்கதை எழுதி 8 வருடங்களுக்கு மேல் இருக்கவேண்டும். சுனில் இப்போது இக்கேள்வியை வேறு விதமாக அணுகக்கூடும். ஆரோகணம் கதையில் காந்தி ஹரிலால் பற்றி ‘தனது அன்பும் கருணையும் அவனை ரணப்படுத்தியது’ என்று எண்ணுவதாக வருவதற்கு நேர்மாறாகத்தான் எண்ணியிருப்பார் என்பது என் கணிப்பு. ஹரிலாலுக்கு குழந்தைப்பருவம் முதலே தனது அன்பும் கருணையும் கண்காணிப்பும் போதிய அளவு கிடைக்கவில்லை, அதனாலேயே ஹரிலால் பாதை தவறிவிட்டார் என்கிற எண்ணம் காந்திக்கு உண்டு. ஆனால், ஆரோகணம் கதையின் முடிவில், காந்தி மகிழ்ச்சி நிறைந்த சொர்க்கத்தை மறுத்து இன்னல் நிறைந்த நரகத்தைத் தேர்ந்தெடுப்பதாக வரும் சித்திரம் முதலில் சில ஐயங்களை எழுப்பினாலும், அதிலுள்ள உண்மை மறுக்கமுடியாமல் மேலெழுகிறது. சுதந்திரம் பெறும் தறுவாயிலும், சுதந்திரம் பெற்ற பின்னரும் வெற்றிக்களிப்புக்கு ஒரு கணநேரமும் இடங்கொடாது நவகாளி, கல்கத்தா, பிகார், டில்லி (பின்னர் மேற்கு பாக்கிஸ்தான் செல்லும் திட்டம்) என்று கலவரப் பகுதிகளாகத் தேடிச் சென்று பணியாற்றிய காந்தி நினைவுக்கு வருகிறார்.காந்தியப் பணியையும் படைப்பிலக்கியச் செயல்பாட்டினையும் சுனில் தனித்தனியாகப் பார்க்க விரும்புவதாகத் தெரிகிறது. ஆனால் அவரது படைப்புகளில் காந்தியக் கரிசனம் தலைதூக்காமல் இல்லை. அதில் தவறொன்றும் இல்லை, சுனில். பேசும் பூனை கதையை நவீன அறிவியல் பொருளாதார மாற்றங்கள் நம் வாழ்க்கைமீது செலுத்துகிற ஆதிக்கம் குறித்த கதையாக நான் பார்க்கிறேன். நம்மை அறியாமல் நுகர்வு கலாச்சாரமும், அரசாங்க தனியார் கண்காணிப்பும் நம் வாழ்க்கையில் எப்படி ஊடுறுவுகின்றன என்பதை மாய யதார்த்த முறையில் பேசுகிற கதையாகவும் பார்க்கலாம். காந்தியின் வழியே பயணித்துவந்த கரிசனங்கள் தாமே இவை.அம்புப் படுக்கை கதையும் இம்மண்ணின் அறிவியல் மரபுக்கும் நவீன அறிவியல் போக்குகளுக்கும் உள்ள உரசலை மையமாகக் கொண்டுள்ளது. மரபைப் பின்பற்றுகிறவர்கள் மீது சமூகம் முன்வைக்கிற விமர்சனங்களைத் தாண்டி, அவர்களுக்கே தம்மீதும் தமது மரபின் மீது தோன்றுகிற ஐயமும், தெளிவும், தெளிவின்மையும் நன்றாக வெளிப்பட்டுள்ளன. தன் மருத்துவ அறிவை நிலைநாட்டுவதைவிடவும் நாயகனிடம் மானுட நேயம் மேலோங்கி வருவதையும் காணலாம். அதே போல், நக்ர ரேதஸ் கதையில் மருத்துவ நெறிகளுக்கும் தனிப்பட்ட விழுமியங்களுக்கும் ஏற்படுகிற மோதல் கதைப்பொருளாகிறது.வேறு சில கதைகள் எனக்குப் பெரிய திருப்தி தரவில்லை. இணையத்தில் கிடைக்காத ஒரு சில கதைகளை இன்னும் படிக்கவில்லை. குருதிச் சோறு தன்னளவில் நன்றாக இருந்தாலும், தொன்மங்கள் உருவாவது பற்றி நிறைய எழுதியிருக்கும் ஜெயமோகனின் நேரடி பாதிப்பு மேலோங்கியிருக்கிறது. ஜெயமோகனின் பாதிப்பு குறித்து சுனிலுக்கு வருத்தம் எதுவுமில்லை. அவரது வளர்ச்சியில் ஜெயமோகனுக்குப் பெரும் பங்கு இருந்திருக்கிறது. தனிப்பேச்சின்போதும் எழுத்திலும், அசோகமித்திரனும், யுவனும் தன் எழுத்தின்மீது சமமான தாக்கம் செலுத்தியுள்ளார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் பேசும் பூனை போன்ற கதையில் ஜெயமோகனின் தாக்கத்தைத் தாண்டிவந்து அக்கதைக்கென ஒரு மொழியை அடைந்துவிட்டார் என்றே தோன்றுகிறது.இலக்கியம் ஒருபோதும் ஒரு சுழியத்தொகை விளையாட்டு (zero-sum game) அல்ல. ஆனால் விருதுகள் நம்மை அக்குறுகிய வீதிக்குள் தள்ளுகின்றன. சுனிலுக்கு இணையான, சுனிலை விட மேலான இளம் படைப்பாளிகள் இருக்கலாம் – சமகாலப் புனைவுகளை நான் அதிகமாக உடனுக்குடன் படித்துவிடுகிறவன் இல்லை என்பதால் அது குறித்துக்கூற எனக்கு அதிகமில்லை. ஆனால் சுனிலின் பங்களிப்பு, இக்கதைகளையும் தாண்டி இன்னும் பெரிய பரப்பில் உள்ளது. எவராலும் தவிர்க்கமுடியாதது. (இதைச் சொல்வது அவரது இலக்கிய மனதுக்கு அவ்வளவு உவப்பாக இல்லாமற்போகலாம். உண்மையில் விருது அவரது சிறுகதைத் தொகுப்புக்காக மட்டுமே கொடுக்கவும்பட்டிருக்கலாம்.) பொதுவாக சாகித்ய அகாதெமி விருது தமிழில் ஒரு தனிப்பட்ட படைப்புக்குக் கொடுக்கப்பட்டாலும், ஒற்றைப் படைப்பு என்பது ஒரு proxyதான். பெரும்பாலும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கே அளிக்கப்பட்டுவருகிறது. யுவ பரஸ்கார் விருதும் அவ்வாறு தரப்பட்டால் அதில் தவறெதுவும் இல்லை. எழுத்துலகில் வாழ்நாள் சாதனை செய்தவர்கள் என்று சொல்லக்கூடிய இளைஞர்கள் அதிகம் இருக்கமுடியாது. சுனில் அத்தகைய ஓர் அரிய இளைஞர். காந்தி குறித்தும், காந்தியம் குறித்தும், மாற்று அரசியல் பொருளாதாரம் கல்வி குறித்தும் ஒரு மறுவாசிப்பையும், புது ஆர்வத்தையும் பல தமிழ் இளைஞர்கள் மத்தியில் உருவாக்கியதில் சுனில் கிரூஷ்ணன், ராட்டை ரகு போன்றவர்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இவர்கள் ஒரு மிகப்பெரிய பொக்கிஷத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஓரிடத்தில் தொகுத்திருக்கிறார்கள். தீவிர புனைவிலக்கியம் என்கிற சிறிய வட்டத்தைத் தாண்டி, தமிழ் எழுத்துலகுக்கும், தமிழ் அறிவுலகுக்கும் இது ஒரு மாபெரும் பங்களிப்பு. மாற்று குறித்துப் பேசுகிறவர்கள் மத்தியிலும் சுனில் அதை ஒரு மூர்க்கமான கொள்கையாக முன்வைக்காமல், அமைதியாக தர்க்கப்பூர்வமாக அணுகுகிறார். எனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்தே சொன்னால், சுனில் மூலமாகத்தான் நாராயண் தேசாய், க.மு.நடராஜன், சங்கீதா ஸ்ரீராம் போன்றவர்களுடனான தொடர்பினை என்னால் ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது. சுனில் தந்த அழுத்தத்தால் தான் நாராயண் தேசாயுடனான நேர்காணலை நான் எழுதியும் பதிப்பிக்கவும் முடிந்தது. இவை மேலும் பல புதிய பயணங்களுக்கு இட்டுச்சென்றன. (எக்குத்தப்பான ஒரு நிகழ்ச்சியில் மாட்டியும் விட்டிருக்கிறார்.) இதுபோல் பலருக்கும் பல திறப்புகள் நிகழக் காரணமாக இருந்திருக்கிறார், இருப்பார்.ஆயுர்வேதம் குறித்த அவரது கட்டுரைகளும் ஆழ்ந்த வாசிப்பைக் கோருபவை. பதாகை இதழில் பாஸ்கரோடு சேர்ந்து அவரது பங்களிப்பு கணிசமானது என்பதை நாஞ்சில் நாடன், சு.வேணுகோபால் ஆகியோருடன் கோவையில் நண்பர்களோடு நடத்திய நீண்ட நேர்காணல்களின் போது உணர்ந்தேன். சுனில் பற்றிய பாஸ்கரின் குறிப்பிலும் அதைக் காணலாம்.இதற்கு முந்தைய பல ஆண்டுகளில் யுவ புரஸ்கார் (அல்லது சாகித்ய அகாதெமி) விருது பெற்ற பலரும் தொடர்ந்து தீவிரமாக எழுதாமற் போயிருக்கலாம். ஆனால் இன்னும் பல ஆண்டுகளுக்கு தமிழ் எழுத்துலகுக்குப் பங்களிக்கக்கூடிய ஆற்றலும் ஆர்வமும் சுனிலுக்கு இருப்பதாய் நினைக்கிறேன். இப்போது அவர் தொகுத்துவரும் தமிழ் இலக்கியத்தில் காந்தி குறித்த பதிவுகள் முக்கியமான ஒரு முயற்சி. (நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறேன் என்பதால் மட்டும் சொல்லவில்லை.)அவரது இலக்கிய, காந்தியப் பணிகள் மென்மேலும் கவனம் பெற இந்த விருது உதவும் என்பதால் இது மிகவும் முக்கியமானதே. சுனில் கிருஷ்ணனுக்கு ஒரு வாசகனாகவும், மூத்த நண்பனாகவும், சக பயணியாகவும் எனது வாழ்த்துகள்.

அம்புப் படுக்கை விமர்சனம் - ரா. கிரிதரன்

நண்பர் கிரி இணைய உலகின் நெடுநாள் நண்பர். இந்தியாவிற்கு வரும்போது நிச்சயம் சந்தித்துகொள்வோம். காலம் இதழுக்காக அவர் எழுதிய அம்புப் படுக்கை விமர்சனம் மற்றும் வாழ்த்துரையை இணைத்திருக்கிறேன். பதாகை, ஆம்னிபஸ், சொல்புதிது குழுமங்களில் தொடர்ந்து கிரியுடன் விவாதித்து வந்திருக்கிறேன். ஸ்ரீதர், அஜய், நம்பி, எஸ். சுரேஷ் ஆகியோருடன் சேர்ந்து பாஸ்கரும் கிரியும் எனக்கு அனேக எழுத்தாளர்களை அறிமுகப் படுத்தியுள்ளார்கள். தொடர்ந்து பயணிப்போம். கிரி இதுவரை தனது சிறுகதைகளை தொகுப்பாக்கவில்லை. நானறிந்த வரை கிரி, சிவா கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீதர் மற்றும் அஜய் ஆகியோர் சிறந்த சிறுகதைகளை எழுதியிருக்கிறார்கள் ஆனால் இவை தொகுப்பாகவில்லை. தொகுப்பாக வரும்போது அவை கவனிக்கப்படும். 

---
நன்றி - http://asaichol.blogspot.com/2018/07/blog-post.html

எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் இலக்கிய உலகில் எனக்கிருக்கும் மிகச் சில நண்பர்களில் ஒருவர். நண்பர் நட்பாஸ் கூறியது போல, சுனில் பிறருடனான பொதுவான அடையாளங்களைக் கண்டடைந்து உரையாடுபவர். இலக்கிய செயல்பாடுகளில் தணியாத ஆர்வமும் தீவிரமும் கொண்டவர். அவருக்கு இந்த வருடத்தின் சாஹித்திய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது கிடைத்திருப்பது எனக்கே கிடைத்தது போல மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.



சுனில் எழுதத் தொடங்கிய காலம் முதல் தொடர்ந்து நாங்கள் உரையாடியபடி இருக்கிறோம். ஆம்னிபஸ் தளத்தில் இணைந்து பணியாற்றினோம். சொல்புதிது, பதாகை என பல குழுக்களில் தொடர்ந்து ஒன்றாய் பயணம் செய்திருக்கிறோம். ஆம்னிபஸ் செயல்பட்ட ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட தினமும் நாங்கள் மடலில் உரையாடியிருக்கிறோம், விவாதம் செய்திருக்கிறோம். நான் எழுதும் ஒவ்வொன்றையும் நண்பர் நட்பாஸும், சுனிலும் உடனடியாகப் படித்துக் கருத்து சொல்வார்கள். இன்று வாட்ஸப்பிலும் அது தொடர்கிறது. இத்தனை வருடத்தில் சுனிலின்  செயல் வேகம் குறையவில்லை; அதிகமாகியபடி இருந்திருக்கிறது. இன்று குறிப்பிடத்தக்க எழுத்தாளராக, விமர்சகராக அவர் மாறியிருப்பதைப் பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன். இந்த விருது அவரை மேலும் சிறப்பானதொரு பயணத்துக்குத் தயார் செய்திருக்கிறது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அதற்கான சான்றுகளை சமீபத்தில் அவர் தந்த தொலைக்காட்சி பேட்டியிலும், விருது பாராட்டு விழாவின் காணொளிகளிலும் பார்க்க முடிகிறது.

சுனில் கிருஷ்ணனுக்கு என் மனம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

காலம் இதழில் வெளியான அம்புப் படுக்கை சிறுகதைத் தொகுப்பின் விமர்சனக்கட்டுரையைக் கீழே படிக்கலாம்.

**




சுனில் கிருஷ்ணனின் - “அம்புப்படுக்கை” - சிறுகதைத் தொகுப்பு
யாவரும் பதிப்பகம் வெளியீடு

மானிடப்பூச்சிகளின் வாழ்க்கை ஒரு கனவினும் கனவாம்

பத்து கதைகள் கொண்ட சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை சிறுகதைத் தொகுப்பு “வாசுதேவன்” எனும் கதையில் தொடங்குகிறது. காலவரிசைப்படி இத்தொகுப்பில் இடம்பெறும் கதைகளில் முதலில் எழுதப்பட்டது. ஒரு தொகுப்பில் சேர்க்கப்படும் முதல் கதைக்கு என ஒரு தனி உயிர் உண்டு என எனக்குத் தோன்றும். பள்ளிக்கூடத்தில் எல்லா கேள்விகளுக்கும் விடைதெரிந்தும்  முன்னால் வரத்துடிக்காத மாணவனும் இருப்பான். ஆனால் சிறந்தவன் என நினைப்பவன் முன்னே நிற்பான். எல்லா தொகுப்புகளிலும் இப்படி முந்தி நிற்கும் கதைகளிலும் கவிதைகளிலும் நான் ஆசிரியரைப் பார்ப்பேன். அதுவும் முதல் தொகுப்பின் முதல் கதை என்பது ஒரு பிரகடனம். ஏனோ எழுதப்பட்ட முதல் கதை எனும் நிலையைத் தாண்டி என் படைப்பின் முதல் வாசற்படி இதோ இங்கே இருக்கு. இதுதான் நான் எனும் பிரகடனம் அதில் தெரியும். எழுத்தாளன் முன்னெடுக்கப்போகும் தேடலின் முதல் அடி. வணிக நோக்கின்படி முதல் சில கதைகளின் வாசிப்புத்தன்மையைப் பொறுத்துதான் புத்தகத்தின் விற்பனை இருக்கும் எனும் விதிகளுக்குள் நான் போகவில்லை. தமிழ் இலக்கியத்தில் அப்படிப்பட்ட வணிக யுத்திகள் எடுபடாது என்றே நினைக்கிறேன்.

“வாசுதேவன்” எல்லாவிதத்திலும் சுனில் கிருஷ்ணனின் முத்திரைக் கதை. மரணம் என்பதை ஒரு ஊசலாட்டமாகவும், உயிர் இச்சையை நிரந்த்ரமாகவும் நினைக்கக்கூடிய மனப்பான்மை பற்றிய கதை. உலகத்திலேயே சிரிப்புக்கு உரியது என்ன தெரியுமா, மரணம் நிச்சயம் எனத் தெரிந்தும் மனிதன் தான் மரணமில்லாதவன் என்பதுபோலொரு பாவனையில் வாழ்வது எனும் தருமனின் சிந்தனையை ஒட்டிய கதை. வாசுதேவன், அண்டத்தில் உயிர்களை ரட்சிப்பவன். வாசுதேவன் எனும் இளைஞன் உயிர் மட்டும் ஒட்டிக்கொண்டிருக்கும் உடலோடு நாட்களைக் கடத்துபவன். அவனது அப்பாவின் வேண்டுகோளுக்கு இணங்க சிகிச்சை கொடுக்க வரும் கதைசொல்லியும் அவனது இணங்கநண்பன் இளங்கோவும் முதலில் வேண்டாவெறுப்பாக ஆயுர்வேத உடல்பிழிசல் செய்கிறார்கள். அவர்கள் தொழில் தர்மத்துக்கு எதிரான மனோபாவம் கொண்டவனாகக் காட்டப்படும் இவர்கள் கடமையென சிகிச்சையைச் செய்கிறார்கள். உடல் சிகிச்சை மீறி மருத்துவரின் நம்பிக்கையும் நோயாளியின் மனத்திடமுமே வியாதிலிருந்து நம்மை குணப்படுத்துகின்றன. எந்தவிதமான சுரணையுமில்லாது கிடக்கும் வாசுதேவனுக்குள் கங்குபோல உயிர் இச்சை துடிக்கிறது. ஒவ்வொரு நாளும் அவர்களது சிகிச்சையின்மூலம் சிறு மாற்றங்களை அடைகிறான். அதே சமயம் இதற்கு நிரந்தரமான விடுதலை அல்ல என்பதும் எல்லாரும் அறிந்ததே. பிரக்ஞை ஒவ்வொரு கணத்திலும் உடல் உறைந்துபோன கணத்திலும் கிடக்கின்றது. 

ஒருவிதத்தில் மரபும் நவீனமும் இணைந்த சுனில் கிருஷ்ணனின் நடையில் நாம் எதிர்பாராத இடங்களை அடைய முடியாததும் இயல்பானதே. நவீனத்தின் எதிர்மறைப்பண்பான மரபு மீதான உதாசீனத்தை அவர் நாட்டார் கதைகளின் மூலம் கடக்கிறார். அதே சமயத்தில் மரபு மீதான எதிர்மறை நிலைப்பாடுகளைக் கவனமாகக் களைய முற்படுகிறார். அதில் அவர் முழுமையாக வெற்றியடைகிறார் எனச் சொல்ல முடியாது. உதாரணமாக காளிங்க நர்த்தனம் கதையில் வரும் யோகக்குறியீடுகள் காளிங்க நடனமாக இருப்பதும் அதுவே தலைமுறைகளை விழுங்க வரும் சாபமாக அமைவதையும் சொல்லலாம். யுகம் யுகமாகத் தொடரும் ஒரு சுழற்சியை நம்முன் காட்டும் கதை விடுதலையற்ற நிலையாக ஆகிவிடுவதும் ஒரு எதிர்மறை அம்சமே.

“பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்” மற்றும் “பேசும் பூனை” கதைகள் நவீன வாழ்வின் சிக்கல்களைப் பற்றி இரக்கமற்ற முறையில் குறிப்பிடும் கதைகள். நவீன வாழ்வு தரும் செளகரியங்கள் நமக்கு அதிக நேரத்தை அளித்திருக்கின்றது. உபரியாகக் கிடைக்கும் நேரம் நம் எண்ணங்களில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துகின்றது. மனித வாழ்வில் எப்போதுமில்லா உளவியல் நெருக்கடியை நாம் அன்றாடம் சந்திக்கிறோம். கால் இன்சு அன்பு கூட இல்லாத உலகத்தை நோக்கி நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோம். இயற்கை வளங்கள் மீது அலட்சியம்,  சக மனிதனின் மீது கரிசனமற்றத்தன்மை, நாடுகளுக்கிடையே பலநிலைகளில் நெருக்கடி நிலைமைகள் என சகலமும் விரியும் அண்டத்தத்துவம் போல ஒன்றை ஒன்று விலகிச்சென்றபடி உள்ளது. இதில் கணவன் மனைவி உறவோ, மகன் தந்தை உறவோ விலக்கல்ல. “பொன் முகத்தை” கதை நம் உறவுக்குள்ளே இயங்கும் ஊசலாட்டத்தைப் பற்றியது. நடைமுறையில்  உறவுகளுக்குள் இருக்கும் நெகிழ்வுத்தன்மை நம் மன இயல்புகளோடு நெருக்கமான தொடர்புகொள்ளும் ஒன்று. கீழே பிளந்து செல்லும் வேர் மண்ணின் நெகிழ்வுத்தன்மையைப் பொருத்து தனது இயல்பை வெளிப்படுத்துவதுபோல நம் மன அமைப்பு சூழ்நிலைக்குத்தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் இயல்புடையது. தொழில்நுட்ப வளர்ச்சியினால் உறவுகளுக்குள் உருவாகும் நெருக்கங்களும் தூரங்களும் நம் காலத்தின் புதிய விதி. 

வாசுதேவன் கதையில் அவனது அக்காள் குழந்தையுடன் திரும்ப வீட்டுக்கு வந்துவிடுவது ஒரு திருப்பம் தரும் தருணம். ஒன்று - கையிலிருக்கும் உயிரை பாதுகாப்பதில் வரும் சுணக்கம் என்பதைவிட நம் கண் முன் ஒரு உயிரின் வதையைப் பார்க்கத் திராணியற்ற உள்ளத்தின் குமுறலாக அவனது அப்பா அம்மாவின் குரல் கேட்கிறது. மற்றொன்று - புதிதாக வந்திருக்கும் குழந்தைக்கு நாம் காட்டக்கூடிய வாழ்க்கை எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் எனும் சிறு மனோகிலேசம். இது ஒரு கையாலாகத்தனம் என்றாலும் நம் மதிப்பீடுகளை அவர்கள் மேல் போட்டுப்பார்க்க முடியாது என்பதே உண்மை. சதுப்பு நிலப்பகுதிகளிலும், பசுமைக்காடுகளிலும் காயல்களில் காணப்படும் பூச்சி உயிர் போராட்டங்களில் கருவறையும் பிணவறையும் ஒரே குழியாக அமைவதுதான் இயற்கை. பூச்சிகளின் வாழ்வில் இருக்கும் இந்த உண்மை ஒரு இயற்கையின் ஒரு பகுதியே.

அம்புப்படுக்கையில் ஆனாரூனா செட்டியாரின் மீதிருக்கும் மக்களின் எதிர்பார்ப்பும் அத்தகையதே. உயிர் பிழைத்திருப்பது ஒரு வரமென்றாலும் அது சில சந்தர்பங்களில் அதீத இம்சையும் கூட.  பொதுவாக மருத்துவர்கள் மரணத்துக்கும் சீக்குக்கும் பெரியளவு அசைந்துகொடுக்க மாட்டார்கள் என்பது உண்மைதான் என்றாலும் அவற்றின் மீது ஒரு மெல்லிய தருக்கப்போர்வையைக்கொண்டு மூடியிருப்பார்கள். அந்த தருக்கம் அவர்களுக்கு அறிவியல் தந்ததாக இருக்கலாம், அல்லது பொதுவாழ்வில் அவர்கள் அன்றாடம் சந்திக்கும் ஒரு காட்சியினால் இருக்கலாம். மருத்துவரான எழுத்தாளர் சுனில்கிருஷ்ணன் மரணத்தைப் பற்றி எழுதும்போது அதீதமான சமநிலை கைகூடிவிடுகிறது. அதில் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை அதிகம் கலக்காமல் ஒரு இயற்கை நிகழ்வுக்கு சாட்சிமுகமாக நிற்பவனின் முகபாவனையை அவர் மேற்கொண்டுவிடுகிறார். முன்னரே சொன்னது போல, இது அவரே திட்டமிடப்பட்டு அமைத்த பாதையில் முதலிலிருந்து நடக்கப்பழகுவது போன்ற உணர்வினைத் தந்துவிடுகிறது. எங்கே குண்டுங்குழியுமாக இருக்கும் எனத் தெரிந்து அதற்கு ஏற்றார்போல வண்டியை ஓட்டுகிறார். சகஜமான மொழியாக இவை அமைய உதவினாலும், புனைவு எனும் மாயப்புதிரை சிக்கல்படுத்துவதும் அவிழ்ப்பதும் கெட்டித்த பாதையில் பயணிக்கிறது.

குருதிச்சோறு - இத்தொகுப்பின் முக்கியமான கதையாக இதை ஆக்குவது பாலாயி எனும் கதாபாத்திரத்தின் உருவாக்கத்தில். தெய்வங்கள் உருவாகும் கதையே குருதிச்சோறு. குல தெய்வம், சிறு கூட்டத்தினருக்கான தெய்வம் என்றும் அடிப்படையான உணர்வுகளின் உருவகமாகவோ, குலத் தொடர்ச்சிக்குத் தேவையானவற்றை வழங்கும் சாமியாகவோ அமையும். இங்கு குருதிச்சோறு எனும் குல தெய்வ சடங்கு ஒன்று அரங்கேறுகிறது. குருதியில் வடித்த சோற்றை காற்றில் ஏறி நிற்கும் மூதன்னை ஒருத்தி கபளீகரம் செய்யும் காட்சியுடன் கதை தொடங்குகிறது. அவளது பசி அடங்குவதில்லை. பாலாயி என்பவள் அன்னத்தை வழங்கும் அன்னையாக மாறி நின்று அழியச்செல்லும் கூட்டத்தைக் காத்து நிற்பவளாததால் மூதன்னையாக மாறும் சித்திரத்தைக் காட்டும் கதை. குல தெய்வ வழிபாட்டில் தொன்மங்களின் உருவாக்கம் ஒரு புது உலகை சிருஷ்டித்துக் காட்டத் துடிக்கும் கலைஞனின் வழி. இன்றைய பின் தொன்ம காலத்தில் குருதிச்சோறு போன்ற மறு உருவாக்கங்கள் நமது மூதாதையரின் அடிப்படை கேள்விகளை நோக்கி நம் சிந்தனையைத் திருப்பும் முயற்சி. ஒருவிதத்தில் நமக்கும் அவர்களுக்குமான இடைவெளி தொட்டுவிடும் தூரத்தில் உள்ளதைக் காட்டுகிறது.

திமிங்கலம் கதை ஒரு அறிவியல் புனைவுச்சித்திரத்தைக் காட்டும் முயற்சி. apocalypse சித்திரம் இல்லாத சமூகங்களே கிடையாது. மனிதனின் நனவிலிகளில் உயிர் நீட்டிப்பைத் தடுக்கும் சகலவிதமான சித்திரங்களும் சுவரோவியம் போலத் தீட்டப்பட்டிருக்கின்றன. அனுபவமில்லாத அனுபவத்தில் அவை ஒளித்துவைக்கப்பட்டிருக்கின்றன. இக்கதை உலகை அழிக்க வந்திருக்கும் இரு பெரு நிகழ்வுகளின் பின்னணியில் சமூக மாற்றத்தினை காட்டுகிறது. மனித அழிவை நிறுத்தும் பல முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபடும் சமயம். அப்படி மனிதனை அழிவிலிருந்து முழுமையாகக் காக்க முடியுமா எனும் கேள்வி நோக்கிச் செல்லும் பயணம் இக்கதை.

ஆரோகணம் ஒரு சிறு மனிதனின் மகத்தானப் பயணம் பற்றியது. திட்டமிட்ட இலக்குகளை அடைவதில் வெற்றியைப் பெறுவதில் இருக்கும் களிப்பு பற்றியதல்ல. மனித உருவெடுத்த யாருமே இதுவரை செல்லாத பாதையில் செல்லத் துணியும் ஒரு மனிதனின் கதை. மாமனிதன் என வரலாற்றால் பொறிக்கப்பட்டு மனித மனதின சாத்தியங்களை சோதனை செய்துபார்த்தவர். வாழ்வில் எதிர்படும் சங்கடங்களையும், தடைகளையும் எதிர்த்து ஒரு பாதை உருவாக்கக் கைகொள்ளும் விளக்கை வழிநடத்துவது எது? தனக்கு உண்மையாக நடந்துகொள்ள வேண்டும் எனும் எளிய சூத்திரத்தை சோதித்துப்பார்த்து அது அத்தனை சுலபமல்ல என புரியவைத்தவர். ஆனால் ஒவ்வொரு அடியும் பின்னால் சுழித்து சென்ற பதையின் மீது பாவிக்கப்பட்ட திடமான கற்பாதைகள் அல்ல. தேவைக்கேற்ப முந்தியும் பிந்தியும் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு மனதின் வழிநடத்தலுக்கு ஏற்ப முன் செல்ல்லும் பயணம். காந்தியுனுடனே வந்த நாய் அவரது மனசாட்சி மட்டுமே. கடைசிவரை சற்றே பின்னே இரைக்க ஓடிவந்த மனசாட்சி. காந்தியும் காந்தியமும் முன் சென்றபடியே உள்ளனர்.

சுனில் கிருஷ்ணன் எழுத்தில் மேம்படுத்தக்கூடிய அம்சங்கள் சில உள்ளன. 

எழுதப்பட்ட கதைகளில் இருக்கும் அதீத ஒழுங்கு. மொழியின் ஒழுங்கு என்பதைக் குறையாகச் சொல்லவில்லை. மாறாக சிறுகதை சுட்டி நிற்கும் படிமங்களும், கனவுகளாக வரும் மன ஓட்டங்களும் திட்டவட்டமான நோக்கத்தோடு அமைந்துவிட்டதை அதீத ஒழுங்கு என இங்கு குறிப்பிடுகிறேன். உதாரணத்துக்கு, காளிங்க நடனம் பகுதியின் முடிவில் வரும் விவரணைகளைக் குறிப்பிடலாம். புனைவின் மர்மத்தன்மையைக் கூட்டும் விதமான எழுதப்பட்ட இந்தப் பகுதி, ஆசிரியர் செல்ல வேண்டி உத்தேசித்த திசையில் ஒழுங்கு மீறாமல் செல்கிறது. முன்னேற்பாடுகளின்றி புனைவு எழுதக்கூடாதா எனும் கேள்விக்கு இங்கு இடமில்லை. கனவுகளும், படிமங்களும் புனைவின் நிழலாக அமைந்திருப்பது அவற்றின் மாயத்தன்மைக்கு மெருகேற்றும் சாத்தியத்தைத் தொட்டுப்பார்ப்பதற்காகத்தான். அவை புனைவு செல்லும் திசைக்கு எதிர்திசையில் கூட இருக்கலாம் என்பதே அவற்றின் விசேஷம். கச்சிதமான அமைப்பில் சிறு விலகலுக்கான வெளி. வாசுதேவன் கதையில் இது அமைந்துவிடுகிறது. வாசுதேவன் அழிவற்ற பரம்பொருள் எனும் வரும் இடத்தில் இப்புனைவின் சாத்தியத்தை நாம் மறு பார்வை பார்க்கிறோம்.

ஒவ்வொரு கதையிலும் ஒரு மொழி நடை நம்பகத்தன்மையைக் கூட்டியிருக்கிறது. பொதுவான நடையில் வரும் கதைகளில் இருக்கும் நிதானம் நாட்டாரியல் கதைகளைப் பேசும் காளிங்க நர்த்தனம் கதையில் இல்லை. இதையே வேறு விதங்களில் சொல்லப்போனால், யதார்த்தக் கதையின் மொழியிலிருந்து முற்றிலும் விலகிய ஒரு நடையைக் கொண்டு மாயக்கதைகளை எழுதும்போது படிமங்கள் மேலும் கூர்மையான அர்த்தங்களை அடைகின்றன. அதை அடையும் முயற்சியை அவர் அடுத்தடுத்த கதைகளில் அடைவார் என நம்புகிறேன்.

நிகழ்வுகளை படிமங்களாக மாற்றி குறிப்பிட்ட சூழலிலிருந்து பிரித்தெடுத்து அடிப்படை உணர்வுகள் நோக்கி நகரும் தன்மை. ஆரோகணம் கதையில் இந்த நோக்கு இல்லாததன் குறையை உணர முடியும். வாழ்க்கையின் அடிப்படை விழுமியமான மெய்ம்மையை தேடிச்சென்ற இருவேறு காலகட்டத்தில் வாழ்ந்த நாயகர்களை இணைக்கும் கதை. தருமரின் வேதாந்தக் கதையில் காந்தியைப் பொருந்திப்பார்க்கும் கணம். தர்மரின் குழப்பங்களை காந்தியின் கேள்விகள் சென்று தொடாமல் நின்றுவிட்டது. நிகழ்வுகளாக மட்டுமே நின்றுவிட்டதில் மெய்ம்மையைத் தேடும் பயணம் ஒரு படிமமாக மாறவில்லை.

முதல் தொகுதியாக அம்புப்படுக்கையைப் பார்க்கும்போது இளம் எழுத்தாளரின் ஒரு தனித்துவமானத் தொடக்கத்தைப் பார்க்கிறேன். பின்நவீனத்துவ முயற்சிகளும், ஓயாத காம நிழல் போராட்டங்களாகவும், நலிந்தவர்களை முன்னிறுத்துவதான போலியான பாவனைகளும் மலிந்து போன இன்றைய புது எழுத்துகளிடையே மனித வாழ்வைச் சூழ்ந்திருக்கும் அடிப்படை உணர்வுகளை மையமாகக் கொண்டு எழுத வந்திருக்கிறார். சோதனை முயற்சிகளாலும் மேல்பூச்சு தளும்பல்களாலும் எழுத்தின் திசையை மாற்றாதிருக்கவும், புது திசைகளில் தனது ஆழமான பார்வையை கொண்டு நித்தியத் தேடல்களில் திளைத்திருக்கவும் இளம் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனை வாழ்த்துகிறேன்."