Thursday, November 28, 2019

இந்திரமதம் - சிவமணியன் கடிதம்

ன்புள்ள சுனீல்,


நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.


கால் வைக்கும் தூரத்தில் பள்ளிக்கரணை சதுப்பின் அருகிலேயே என் வீடு இருந்தாலும், வானில் பறக்கும்  பல விதமான வெளிநாட்டு, உள்நாட்டு  பறவைகளையும், சதுப்பினை ஒட்டிய மாநகர் கழித்த குப்பைகளைத் தாங்கி இருக்கும் பெருங்குடி கிடங்கு மட்டுமே என் பார்வையில் இருந்தது. மழைக்காலத்தில் தரையில் பழுப்பு நிறத்தில் காணக் கிடைந்த நீர்பாம்புகளையும், மாம்பழ அளவு ஆமையும், பல விதமான நத்தைகளும், ஒரு சில அட்டைகளையும் பார்த்த நினைவுகளை மீண்டும் நினைக்க வைத்தது இந்தக்கதை. திறமைமிக்க புதியவர்களை கவரும் நோக்கத்துடன் எழுதப்பட்ட கூகுள் எவ்வாறு செயல்படுகிறது?  சமீபத்தில் வாசித்த நூல்.  கூகுள் நிறுவனம் உருவானதன் சுருக்கமான பிண்ணணி மற்றும் அதன் செயல்முறை, எதிர்காலத் திட்டம் போன்ற  தகவல்கள் கொண்டது.   அதில் இணைய எத்தனிக்கும் உறுப்பினர்களுக்கான தகுதி மற்றும் பின்னர் பெறப்போகும் சாத்தியமான வாய்ப்புகளைப் பற்றி முதன்மையாக விவரிக்கும் சந்தைப்படுத்தும் புத்தகம். அதில்  H I P P O (Highest paid person’s opinion) என்கிற ஆர்வமூட்டும்  சுருக்க சொல் ஒரு ‘தீட்டு சொல்’ போல பலமுறை வருகிறது.  அதாவது அலுவலகத்தில் உன்னை விட அதிகமான ஊதியம் பெறும் சக பணியாளரின் அல்லது பலவருட அனுபவம் கொண்டவரின் கருத்து, விவாதத்தின் அறுதிக் கருத்தாக இருக்க வேண்டிய அவசியமில்லை. விவாதங்களின் போது,  அழுத்தங்களின்றி உன்னுடைய புதுமையான யோசனையை, முன் வைத்தால் அதுவே பெரிய திட்டங்களுக்கு முன்மாதிரியாக இருக்கலாம், ஆகவே ஹிப்போ விடம் மோத தயங்காதே.  என பலப் பலமுறை வேறு வேறு பகுதிகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது.  அணுக்கமாக பழக நேரும் குரு , சீடர்களின் உறவு வலிமையாகத் தோன்றினாலும்,  சில உச்ச தருண நுண்ணிய சீண்டல்களால் அறுந்து விடும்  அளவிற்கு நொய்மையானது. ஆனாலும் வேறு வழியில்லை, துறை சார்ந்து, வித்தை கற்றல் சார்ந்து சீடன் குருவுடன் அணுக்கமாக இருந்து, சில சமயம் கருத்துகளை மறுத்து மோத வேண்டியதிருக்கிறது.  ‘இந்திர மதம்’  சேஷாத்ரியே தன் ஆசிரியரிடம் குன்ம நோய் இல்லை என்பதை விவாதித்து மீறி நிறுவுகிறார். அதே போன்ற, ஒரு தருணத்தில் சேஷாத்ரியை மறுக்க முடியாமல் உள்ளுக்குள் உழலும் சிவானந்தனுக்கு நிகழும் தரிசனமே கதையின் மையம். மறு வாசிப்பில், அதே சிக்கலான தருணத்தை இளங்கோ எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பது கதையின் மையத்தோடு ஒட்டிய மற்றொரு முக்கியமான பகுதி எனத் தோன்றுகிறது. 


‘வைத்தியனுக்கும் மகா வைத்தியனுக்கும் உள்ள இடைவெளி இதுதான். மகா வைத்தியன் ஒவ்வொரு, சிறுசிறு தோல்வியையும் தனிப்பட்ட தோல்வியாக உணர்ந்து மனதை உழப்பிக் கொள்வான்’


கதை மொத்தமும் இந்த வரிகளுக்குள் கூர்மையாக குவிவதாக தோன்றுகிறது. 


இருபுறமும் குருதியை உறிஞ்சும் உறுப்பு கொண்ட அட்டையின் குதம் எங்கிருக்கிறது என்பது கதை எழுப்பும் அடுத்த கேள்வி.


அன்புடன்

சிவமணியன்

அன்புள்ள சிவமணியன்,

வாசித்து, நேரம் எடுத்து கடிதம் எழுதியதற்கு நன்றி. இக்கதையைப் பற்றி சில விஷயங்களை சொல்லலாம். ஒன்று, இக்கதையை முழுக்க சித்தரிப்புகள் வழியாக நிகழ்த்திக்காட்ட முயன்றிருக்கிறேன். உரையாடல் மிகக் குறைவாக அதேசமயம் உள்ளத்தையும் நேரடியாக சொல்லாமல் புறச் சித்தரிப்பு வழியாகவே கதையை சொல்ல முயன்றிருக்கிறேன். அவ்வகையில் எனக்கு இக்கதை களியைக் காட்டிலும் சவாலானது நிறைவளிப்பதும் கூட. 

இரண்டாவதாக, இது ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது. சித்த மருத்துவர் சிவராமன்  வாழ்வில் நிகழ்ந்தது. இந்தக் கதை ஆயுர்வேதத்தை அல்லது இந்திய மருத்துவத்தை விமர்சன நோக்கில் அணுகும் கதையாக சுருக்கிவிட முடியாது என்றே எண்ணுகிறேன். ஆயுர்வேதத்தை ஒரு பின்புலமாக மட்டும் கண்டுகொண்டால் எல்லா துறைகளிலும் சேஷாத்ரிகளை கண்டுகொள்ள முடியும். நீங்கள் அதை உங்கள் வாசிப்பின் வழியாக தொட்டுக்காட்டியது நிறைவளித்தது. 

அன்புடன் 
சுனில்  

Monday, November 25, 2019

நீலகண்டம்- கார்த்திக் பாலசுப்பிரமணியன்

(நண்பரும் எழுத்தாளருமான கார்த்திக் பாலசுப்பிரமணியன் நீலகண்டம் குறித்து எழுதிய குறிப்பு. நேற்றிரவு தொலைபேசியிலும் பேசினார். நன்றி கார்த்திக். அவருடைய நாவலும் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது. அவருக்கும் என் வாழ்த்துக்கள். )


இது நாவல்களுக்கான ஆண்டு போலும். இச்சா, ஹிப்பி, பாரிஸ், கடலும் வண்ணத்துப்பூச்சியும், ரூஹ், பிரபஞ்சன் நினைவுப் போட்டியில் வெற்றிபெற்றவை என்று வெளிவந்துவிட்ட நாவல்கள், அறிவிக்கக் காத்திருக்கும் நாவல்கள் என்று கொண்டாட்டமாய்த் தொடங்கவிருக்கிறது இப்புத்தாண்டு. இவ்வரிசையில் நீலகண்டத்தின் வழியே சுனிலும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.

அன்பின் வழியதைப் பேசும் அதே நேரத்தில் இலக்கியம் மனித மனதின் சிடுக்குகளையும், ஆதி விலங்கொன்றின் எச்சமாய் ஊறித் திளைத்திருக்கும் கசப்பையும் பேசத் தலைப்படுகிறது. அன்பிற்கும் வெறுப்புக்குமான ஊசலாட்டத்தின் நடுவே இடைப்பட்டு தவிக்கும் மனிதர்களின் கதையே நீலகண்டம்.

நவீன வாழ்வின் பெரும் சிக்கலாக உருவெடுத்து நிற்கும் குழந்தையின்மை, அதன் பொருட்டு ஆண்-பெண் இருவரிடத்தும் ஏற்படும் மனம் மற்றும் உடல் சார்ந்த அலைக்கழிப்புகள் என்று முக்கியமான இழையைத் தொட்டுத் தொடங்குகிறது நாவல். ஆட்டிஸம் பாதித்தக் குழந்தையினைத் தத்தெடுத்தல், வளர்த்தல் என்று முந்தைய இழையிலிருந்து நகர்ந்து இன்னும் சிக்கலான களத்தினுள் நுழைகிறது. மேலும், ரம்யாவுக்கும் அவள் அம்மாவுக்கும் இடையிலிருக்கும் உறவுச்சிடுக்கு, நாகம்மை வரும் அத்தியாயங்கள், சாயக்காட்டாரின் மகன், முரளி மீரா தம்பதிகள் என்று ஒரு பிரச்சினையின் பல்வேறு கோணங்களை அலசுகிறது இந்நாவல். அதன் பொருட்டு பல்வேறு நிலப்பரப்புகள், காலங்கள், மனிதர்கள், தொன்மம், நம்பிக்கை என்று விரிகிறது.

இத்தனை அடர்த்தியான கதையை சிறிதும் தொய்வின்றி வாசிக்க சுனிலின் மொழியும், அவரின் கதைசொல்லும் முறையும் துணை நிற்கிறது. இது நாவலின் ஆகப்பெரிய பலம். நெகிழ்வும், மிகையுணர்வும் பொங்கிப் பெருகச் சாத்தியமிருந்தும் அவ்விடங்களையெல்லாம் இயல்பாய் அதன் போக்கில் விட்டிருப்பது சிறப்பு.

அன்பின் ஒளியாய், அறத்தின் சுடராய் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் இவ்வுலகம் துரதிர்ஷ்டவசமாய் எல்லோருக்கும் அப்படியிருப்பதில்லை. அதிலும் குறிப்பாக அகத்திலோ புறத்திலோ மெல்லிய பிறழ்வையோ, ஒரு சிறு கோணலையோ கொண்டவர்களிடத்தே இதே உலகம் தன்னுள் திரண்டு நிற்கும் அழுக்கை, இருளை பச்சாதாபமின்றி பாய்ச்சுகிறது. நாவலின் மொத்த சாரமென்று இதில் வரும் கீழ்கண்ட வரிகளைக் கொள்ள முடியும்.

“இவ்வுலகம் நீலகண்டர்களால் ஆனது. அவர்கள் தங்கள் பிரியம் திரிந்து நஞ்சாவதை எப்போதும் காண்பவர்கள். தங்கள் பிரியத்தின், அதன் திரிபின் விளைவுகளை ஏற்பவர்கள். அதன் பொருட்டு பிரியத்தின் முள்ளை எப்போதும் தொண்டையில் பொதித்தவர்கள்”

தான் கொண்ட விலக்கத்தை மீறி வருவின் மேல் செந்திலுக்கு அன்பு முகிழ்க்கும் தருணமும் அதை நோக்கிய பயணமும் நுட்பமாய் வெளிப்பட்ட அளவுக்கு, ரம்யாவுக்கு எற்படும் அன்பின் திரிபுநிலை இங்கு வெளிப்படுவதில்லை. சட்டென்று ஒரு புள்ளியில் நிகழும் அம்மாற்றத்தை வாசகனாய் உள்வாங்கிக்கொள்வதில் பெரும் தயக்கம் மேலிடுகிறது. நாவலின் உச்சமாய் நிகழ வேண்டிய திறப்பு அவ்வாறு நிகழாமல் போவதே இந்நாவலின் மிகப்பெரிய குறை. அதே போல வேதாளம் விக்ரமாதித்தியன் வரும் அத்தியாயங்களும் அதில் சொல்லப்படும் கதைகளின் பரிச்சயத்தால் கதைப் போக்கில் தொய்வை ஏற்படுத்துவதைத் தவிர மேலதிகமாய் எதையும் செய்யாமல் நின்றுவிடுகின்றன. கடைசிப் பக்கத்தில் வந்து சுபம் போட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அதில்லாமல் திறந்த முடிவே இன்னும் பொருத்தமாய் இருந்திருக்கும்.

இதுபோன்ற குறைகளையெல்லாம் தாண்டியும் வாசிப்பின் வழியே கண்டடைவதற்கு தன்னகத்தே செறிவான கதையையும், களத்தையும் கொண்டுவந்திருக்கும் நீலகண்டம் தமிழ் நாவல் பரப்பில் ஒரு முக்கிய வரவு.

Wednesday, November 20, 2019

நீலகண்டம்- சரவணன் மாணிக்கவாசகம்

சரவணன் மாணிக்கவாசகம் என்பவர் நீலகண்டம் நாவல் குறித்து எழுதிய ஃபேஸ்புக் குறிப்பை நண்பர்கள் அனுப்பியிருந்தார்கள். அவருக்கு என்னுடைய நன்றிகள். 

நீலகண்டம்- சுனில் கிருஷ்ணன்:

ஆசிரியர் குறிப்பு:

சிறுகதைகள், நாவல்கள், விமர்சனக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என பல தளங்களில் இலக்கிய உலகில் இயங்குபவர்.  தொழில்முறை ஆயூர்வேத மருத்துவர். அம்புப்படுக்கை எனும் சிறுகதைத் தொகுப்புக்காக சாஹித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது பெற்றவர். 

நீலகண்டம்:

செந்திலும் ரம்யாவும் காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்கின்றனர். எல்லோருக்கும் எளிதாக கிடைக்கின்ற குழந்தைப்பேறு இவர்களுக்கு சிரமமான ஒன்றாகிறது. பல ஆண்டு முயற்சிக்குப்பின் ரம்யா கர்ப்பமாகி ஏழாவது மாதத்தில் வலிப்பு வந்து கரு சிதைகிறது. பெண்குழந்தையை தத்து எடுக்கிறார்கள். அது ஆட்டிஸம் குழந்தை. எந்த சிகிச்சைக்கும் சரிவராமல் அப்படியே இருக்கிறாள். விதி சிரிப்பது போல் ரம்யா குறையேதும் இல்லாத ஆண்குழந்தையைப் பெற்றெடுக்கிறாள்.

என் சிந்தனைகள் :

நீலகண்டம் விசமோ, அமிர்தமோ எதுவாயிருப்பினும் தொண்டையிலேயே தங்கியது போல் இந்நூலும் படித்தவர்கள் மனதில் வெகுகாலம் தங்கப்போகிறது. தனித்துவமான மொழிநடை, வித்தியாசமான யுக்திகள், ஆழமான உளவியல் யாவும் கலந்து இந்நாவலை முக்கியமான நாவலாக்குகிறது. படிப்பவர் மனதில் நிச்சயம் பல கேள்விகளை விதைக்கும் நூல் இது. ஆட்டிஸ குழந்தையின் கதையில், குழந்தைகளுடனான உறவு என்ற விசயம் தீவிரமாக அலசப்படுகிறது. அமைதியான நதியில் போகும் ஓடம் போன்ற மணவாழ்க்கை, காலம் தாண்டி கரை சேரும். புயலடித்த பின் தான் தெரியும் ஓடம் எவ்வளவு பாதுகாப்பற்றதென்று. சம்பந்தமில்லாதது போல் சொல்லப்படும் கிளைக்கதைகளுக்கு மையக்கதையுடன் தொடர்பிருக்கிறது. சாகரின் பிறப்பும் அப்படித்தான். அடிக்கடி சரித்திரம் தலைமுறை தாண்டி திரும்புகிறது. ஆட்டிஸக்குழந்தை மனம் அற்புதமாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது. சோப்புக்குமுழி போல் சிக்கலில் வெடிக்கும் உறவுகள். சிறப்பின்
 பாலால், தாயும் மனம் திரியும். சுனில் கிருஷ்ணனுக்கு ஐம்பது வயதுக்கு மேல் என்று யாரும் சொல்லியிருப்பினும் நம்பியிருப்பேன். தமிழ் நவீன இலக்கியம் இவர் போன்றவர்களால் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து கொண்டு தான் இருக்கும். 

பிரதிக்கு :

யாவரும் பப்ளிசர்ஸ் 90424 61472
முதல்பதிப்பு அக்டோபர் 2019
விலை ரூ 270.
Saravanan manicavasagam

Monday, November 18, 2019

நீலகண்டம் - ஜினுராஜ்

நண்பர் ஜினுராஜ் நீலகண்டம் குறித்து எழுதிய கடிதம் ஜெயமோகன் இணையத்தில் வெளிவந்துள்ளது. நன்றி ஜெயமோகன்.இன் மற்றும் ஜினு. பொதுவெளியில் வந்துள்ள முதல் வாசிப்பு. நேற்று கவிஞர் ந. ஜயபாஸ்கரன் தொலைபேசியில் அழைத்து நாவல் குறித்து நேர்மறையாக தனது அபிப்பிராயத்தை அளித்தார். இயலிசை வல்லபி ஒரேயமர்வில் தொடர்ச்சியாக ஐந்து மணிநேரம் அமர்ந்து வாசித்ததாக சொன்னார். இது வானதி வல்லபிக்கு சமர்ப்பணம் செய்யப்பட படைப்பு. அவருக்கு நாவல் பிடித்திருந்தது நிறைவாக உணரச்செய்தது. வானதி இருந்து வாசித்திருந்தால் என்ன சொல்வார் என யோசித்துக்கொண்டிருந்தேன். அருண்மொழிநங்கை அக்காவும் வாசித்து விட்டார். சிறப்பாக உள்ளது என குறுஞ்செய்தி அனுப்பினார். நண்பர் சித்திரன் நாவலின் வடிவம் சார்ந்து சில விமர்சனங்களை முன்வைத்தார். எது எப்படியோ பொதுவெளியில் நாவல் தனக்கான இடத்தை அடையட்டும். சிலருக்கு பிடிக்கக்கூடும், சிலருக்கு பிடிக்காமல் போகலாம். நான் என்னளவில் முற்றிலும் என்னை நாவலில் இருந்து துண்டித்துக்கொண்டு அடுத்து ஆகவேண்டிய வேலையைப் பார்க்கலாம் என்றிருக்கிறேன்.  ---

சுனில் அண்ணாவின் முதல் நாவல்* வாசித்தேன் ஆசான். சித்தத்தில் பல முறை நிகழ்ந்தபின் சொற்களில் நிகழ்ந்திருப்பதால் முதல் நாவலுக்குரிய எந்த தடுமாற்றமும் காணவில்லை நிச்சியமாக இது சுனில் அண்ணாவின் முதல் நாவல் என்று கூற இயலாது.இங்கு  என்னுடைய வாசிப்பு அனுபவத்தை பகிர்கிறேன்.நீலகண்டம் நாவல் ஒரு குறிப்பிட்ட அரங்கிற்குள் நிகழும் கூத்தை மேலேயிருந்து பார்க்கும் தோற்றத்தை வாசகனுக்கு தருகிறது.அரங்கிற்கு மேலேயிருந்து காணும் பொழுது கூத்தில் கதாநாயகர்கள்,கதாநாயகிகள் கிடையாது யாவரும் நாயகர்கள், நாயகிகள் தான் அதே போல நாவல் வர்ஷினியை சுற்றி நிகழ்ந்தாலும் செந்தில்,ரம்யா,ஹரி என அவர்களின் பார்வையை  கொண்டு நோக்கும் போது அவர்களுக்கே உரிய தனி வாழ்வு எழுகிறது இது நாவலுக்கு பன் முகத்தன்மையை அளிக்கிறது.எடுத்து வளர்த்த குழந்தையின் ஆட்டிச குறைபாட்டை ஒரு குடும்பம் எதிர் கொள்வதையே நாவலின் பெரும்பாலான பக்கங்களில் நிகழ்ந்தாலும் நாவலின் கச்சிதத்தன்மையிலுருந்து நிகழ்வுகளை நெகிழ வைக்கிறது இந்த பன்முகத்தன்மை.இது நாவலுக்கு இலக்கியத்தன்மையை அளிக்கிறது.நேர் பார்வையில் ஒழுங்கான செயல்கள் கூட மேலேயிருந்து நோக்கும் போது ஒழுங்கு கொண்டு நேர் கோட்டில் நிகழ்வதல்ல எனவே நிகழ்வுகளை பின் தொடர்ந்த செல்லும் வாசகனை எதிர்பாரத இடத்திற்கு கொண்டு சென்று அகத்திற்கு அதிர்ச்சியை அளிக்கிறது.அதிர்ச்சியின் வழியே மற்றொரு ஒழுங்ககை சித்தம் சமைக்கிறது.நாவலை வாசிக்கும்பொழுது நான்கு முறைக்கு மேல் இத்துடன் நிறுத்திவிடுவோம் எனத் தோன்றியது ஏனெனில் அக ஆழத்தின் நுட்பமான சில இடங்களை தொட்டு உள அதிர்வை அளித்தது ஆனால் அது சுட்டுவது உண்மை,தவிர்க்க இயலாதது.திடீரென உண்மை முன்னால் தோன்றும் போது நடுக்கத்தை அளிக்கிறது.அந்த உண்மைகளை சொற்களால் நேரடியாக சுட்ட இயலாது நிகழ்வுகளால் அவற்றின் திசை நோக்கி குறிக்க இயலும் ;அது போதும் நான் யாரென அறிவதற்கு.ஒரு கணம் நானும் செந்திலும் , அண்ணாமலையும்,நந்தகோபாலும் ஒன்றென்று உண்மையை உணரும்போது அதிர்ந்தேன் நானல்ல என்று கூறினேன் பிறகு உணர்ந்தேன் நீலகண்டன் தொண்டையில் உள்ள ஆலகால விஷம் என்னுள்ளும் உள்ளது என்று அதை சுட்டையில் உணர்ந்தேன் நானும் விஷமென்று.நாவலில் இடையிடையே வரும் விக்ரமன்,வேதாளம் கதை நாவலுக்கு கதை சொல்லும் தன்மையை அளிக்கிறது.கதைத்தன்மை சித்தத்தை வெளியே விடுவதில்லை மேலும் மேலுமென கதைக்கு ஏங்கச் செய்கிறது.நாவலின் இந்த வடிவமைப்பே அந்த உள அதிர்வுக்கு இடையிலும் நாவலை விடாமல் வாசிக்கச் செய்தது இது இந்த நாவல் அமைப்பின் சிறப்பு எனக் கருதுகிறேன்தொன்மம்,நாட்டார் கதை,ஆன்மீகம்,தத்துவம் ஆகியவற்றை கொண்டு நவீன உலகின் சிக்கலை எதிர்கொண்டு மாறாத எப்போதுமுள்ள சிக்கலை கண்டறிய முயலுகிறது இந்த நாவல் இது தனிப்பட்ட முறையில் என்னோட ரசனைக்கு  மிகவும் அணுக்கமானது அந்த வகையில் இது எனக்கு மிகவும் பிடித்தமான நாவல்.நூலை வாங்குவதற்கு

https://be4books.com/product/நீலகண்டம்/.நன்றி

இப்படிக்கு

தி.ஜினுராஜ்.

Thursday, November 14, 2019

கதை எழுதத் தொடங்கிய கதை

(கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 22,23 இரண்டு நாட்கள் யுவ புரஸ்கார் விருதாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு நிகழ்ந்தது. பேராசிரியர் சித்ரா மற்றும் தங்கமணி ஏற்பாடு செய்திருந்தார்கள். நல்ல முயற்சி. அந்த நிகழ்விற்காக படைப்புலகம் பற்றி ஒரு கட்டுரை எழுதச்சொன்னார்கள். இப்படியான ஒரு கட்டுரையை எழுத உண்மையில் கூச்சமாகத்தான் இருந்தது. எனினும் எழுதிவிட்டேன். அவர்கள் தொகுக்கும் நூலில் இது இடம்பெறும். சற்றே நீண்ட கட்டுரை. என்னை நானே தொகுத்துக்கொள்ள உதவியது. கண் சிகிச்சை செய்து கொண்டதால் இதன் இறுதி பகுதியை என்னால் எழுத முடியவில்லை. சொல்லச்சொல்ல மாமனார் தட்டச்சு செய்து கொடுத்தார். வழக்கம் போல நண்பர் நட்பாஸ் திருத்திக்கொடுத்தார். இருவருக்கும் நன்றிகள்)


கதைகளின் மீதான மயக்கம் நம் அனைவரையும் போல எனக்கும் என் பால்ய காலத்திலிருந்தே தொடங்கியது. எழுத்தாளருக்கும் பிறருக்குமான வேறுபாடு என்பது எழுத்தாளர் கதைகளை தொலைப்பதில்லை, அதன் மீதான மயக்கம் தெளிவதில்லை, ஆனால் பிறருக்கு வயதேற வயதேற வாழ்வின் மர்மங்களின் மீதான ஆர்வமும் ஆச்சரியமும் குறைந்து விடுகிறது. அவர்கள் கதைகளக் கைவிட்டு வெகுதொலைவு சென்றுவிடுகிறார்கள். எழுத்தாளன் கதைகளின் வழியே தன் பால்யத்தை காலாதீதத்திற்கு நீட்டித்துக் கொள்கிறான், காலத்தை எதிர்கொள்ள கதைகளையே ஆயுதமாக தரிக்கிறான். 

அம்மா ஒரு அற்புதமான கதைசொல்லி. அவள் சோறூட்டும்போது சொன்ன தேவதை- கோடரி கதையை இன்றும் முழுமையாக அவளுடைய குரலிலேயே நினைவுகூர முடிகிறது. எங்கள் பூர்வீக வீட்டில் இருந்த பாப்பாயி பாட்டி கதை சொல்லும்போது சொலவடைகளும் சேர்ந்து விழும். எங்கள் வீட்டு உணவு மேஜையில் எப்போதும் புத்தகங்கள் கவிழ்ந்து கிடக்கும். அப்பாவும் அம்மாவும் ஆளுக்கொரு புத்தகத்தை விரித்தபடிதான் உண்பார்கள். அக்கால வாராந்திரிகளில் இருந்து தொடர்கதைகளை சேகரித்து பைண்டு செய்யும் வழக்கம் அவர்களுக்கு உண்டு. இப்போதும் என் புத்தக சேகரிப்பில் கணிசமான பைண்டு புத்தகங்கள் உள்ளன. ‘பொன்னியின் செல்வன்’, ‘சிவகாமியின் சபதம்’, பி.வி. தம்பியின் ‘கிருஷ்ணப் பருந்து’ (இது அந்த வயதில் படித்திருக்கக்கூடாத புத்தகம் என்பதை படித்து முடித்ததும் தெரிந்துகொண்டேன்), நா.  பார்த்தசாரதியின் ‘குறிஞ்சி மலர்’ ஆகிய கதைகளை நான் பள்ளிக் காலத்தில் பைண்டு புத்தகங்களில்தான் வாசித்தேன். வாரமொருமுறை வரும் சிறுவர் மலர் இணைப்பை ஆர்வமாக எதிர்பார்த்தேன். அதில் வரும் படக்கதைகள் மீது பெரும் ஈர்ப்பு. பலமுக மன்னன் ஜோ, எக்ஸ்ரே கண் ரே, சோனிப் பையன் என பல பாத்திரங்களையும் அவர்களின் முகப்பாவங்களையும் மனத்திரையில் இப்போதும் காண முடிகிறது. எனக்காக வீட்டில் ‘கோகுலம்’ வாங்கினார்கள். ஆங்கிலத்தில் ‘சம்பக்’ மற்றும் ‘டிங்கில் டைஜெஸ்ட்’ மாதாந்திரிகள் வாங்குவது வழக்கம். அதன் படக்கதைகள் வேறு உலகத்தை அறிமுகம் செய்தன. வீட்டில் சாவியின் ‘வாஷிங்டனில் திருமணம்’, ‘விசிறி வாழை’, ‘கேரக்டர்ஸ்’ (அதிலொரு பெயர் ஜம்பம் சாரதாம்பாள்!), ஆகியவற்றை வாசித்திருக்கிறேன். 

பள்ளிப் பருவத்தில் என்னை மிகவும் ஈர்த்த எழுத்தாளர் என தேவனையும் கல்கியையும் சொல்வேன். தேவனின் ‘துப்பறியும் சாம்பு’, ‘மல்லாரி ராவ் கதைகள்’, ‘ராஜத்தின் மனோரதம்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’, ஆகியவை என்னை வசீகரித்தன. ஆங்கிலத்தில் ‘ஹாரி பாட்டர்’ கதைகளை பதின்மத்தில் வாசிக்கத் தொடங்கி கல்லூரிப் பருவம் வரை அந்த உலகத்துடனான தொடர்பு நீடித்தது. பாலோ கோயல்ஹோவின் ‘ரசவாதி’யும் ரிச்சர்ட் பாக்கின் ‘ஜோனாதன் லிவிங்க்ஸ்டன் எனும் கடற்புள்ளுவும்’ பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த சமயத்தில் வாசித்தேன். அவை அன்று ஆளுமை உருவாக்கத்தில் பெரும் பங்காற்றிய நூல்கள் என்றே இன்றும் மதிப்பிடுகிறேன். 

கல்லூரிக் காலத்தில் இந்திரா சௌந்தரராஜன் மீது ஒரு ஈடுபாடு பிறந்தது. நான் தேர்ந்த ஆயுர்வேத மருத்துவமும் அந்த ஈடுபாட்டிற்கு ஒரு காரணம். சித்தர்கள், ரசவாதம், மருத்துவம் என வசீகர உலகம். ஆங்கிலத்தில் டான் பிரவுனும் சிட்னி ஷெல்டனும் அறிமுகம் ஆனார்கள். இதுவரையிலான என் வாசிப்பு என்பது பெரும்பாலும் பொழுதுபோக்கு வாசிப்புத் தளத்தை சார்ந்தவை என சொல்லலாம். நான் ஆயுர்வேதம் படித்துக் கொண்டிருந்த அதே கல்லூரியில் சித்த மருத்துவம் பயின்றுவந்த வினோத் எனக்கு நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்தினான். இன்று சித்ரன் எனும் பெயரில் அவனுடைய முதல் சிறுகதை தொகுப்பு ‘கனாத்திறமுரைத்த காதைகள்’ வெளியாகி கவனம் பெற்று வருகிறது. குறிப்பாக பயிற்சி மருத்துவர் காலத்தில் இரவு எங்களுக்கு ஒன்றாக பணி செய்யும் வாய்ப்பு அமைந்தபோது பல கதைகளை, எழுத்தாளர்களை, அறிமுகப்படுத்தினான். 

இலக்கிய உலகம் சார்ந்து எனது முதல் பரிச்சயம் என லக்ஷ்மி சரவணக்குமாரை சொல்லலாம். அப்போதுதான் அவருடைய சில கதைகள் வெளியாகத் தொடங்கி இருந்தன. சித்ரனின் நண்பராகவே எனக்கு அறிமுகம். சித்ரன் வழியாகவே ஜெயமோகன் எனும் பெயரை அறிந்தேன். ஏறத்தாழ அதே சமயத்தில் ஆனந்த விகடனில் ஜெயமோகன் சார்ந்து தொப்பி திலகம் சர்ச்சை ஒன்று உலவிக் கொண்டிருந்தது. அப்படித்தான் அவருடைய இணையதளம் அறிமுகம் ஆனது. 

தொடக்க காலத்தில் அவருடைய இணைய தளத்தில் எனக்கு வாசிக்கக் கிடைத்தவை என்னை வெகுவாக சீண்டின. அவருடைய தளம் வழியாகவே நவீன தமிழ் இலக்கியத்தை தொடர்ந்தேன். முன்னும் பின்னுமாக பலரையும் வாசிக்கத் தொடங்கினேன். 

நான் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே முறையாக தமிழ் கற்றவன். என் தாய்மொழி தெலுங்கு. வீட்டில் பேசுமொழியும் அதுவே. இந்தியும், சமஸ்க்ருதமுமே பள்ளியிலும் பின்னர் கல்லூரியிலும் நான் இரண்டாம் மொழியாக கற்றவை. என் மொழி முழுக்க முழுக்க இலக்கிய வாசிப்பில் உருக்கொண்டதே. அதுவே மரபிலக்கியம், தமிழ் இலக்கணம் சார்ந்து சில எல்லைகளையும் எனக்கு வகுத்தது. வாசிப்பின் வழி எனது சிந்தனை மொழி மற்றும் முதன்மை வெளிப்பாட்டு மொழியாக தமிழ் உருவானது. இந்த மாறுதலை நான் மிக முக்கியமானதாக பார்க்கிறேன். மொழி அகத்தை செழுமை செய்கிறது, அக அடுக்குகளை மாற்றி அமைக்கிறது, உணர்வுத் தளத்துடன் நெருக்கமாக பிணைகிறது. தமிழ் வாழ்விற்கும் அதன் உணர்வுகளுக்கும் தமிழ் மொழி, அதன் உச்சரிப்புடன் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என நம்புகிறேன். மொழி மீதான ஈடுபாடு ஒரே நேரத்தில் உணர்வுத் தளத்திலும் அறிவுத் தளத்திலும் நிகழ்ந்தது என்பதால் மொழி மேட்டிமை அல்லது மொழி அடிப்படைவாத உணர்வுகளில் மனம் ஈடுபடவில்லை. அதே வேளையில் மொழியின் தனித்துவம் மீதும், பண்பாட்டுக் கொடையின் மீதும் அளப்பறியா காதல் ஏற்பட்டது.      

பள்ளி, கல்லூரி காலகட்டத்தில் ஆன்மிகம் மற்றும் சுய முன்னேற்றம் சார்ந்து பல புத்தகங்களை வாசித்ததில் ராபின் ஷர்மாவின் தனது பொக்கிஷத்தை விற்றத் துறவி’ ஓரளவு இப்போதும் நினைவில் இருக்கிறது. பரமஹம்ச யோகானந்தரின் ‘ஒரு யோகியின் சுயசரிதை’ ஒரு காலகட்டத்தில் என்னை ஆட்கொண்ட நூல் என்றே சொல்லலாம். திருவண்ணாமலையில் இருக்கும் பெரியம்மா வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் ரமணாசிரமம் செல்வேன். அங்கு சில புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். குண்டலினி, யோகம், சித்தர்கள் என ஒரு தளத்தில் வாசிப்பும், வாசித்ததைச் சோதிப்பதும் நிகழ்ந்தது. காந்தியின் மீது விருப்பு வெறுப்பற்ற ஒரு மரியாதை சிறுவயதிலிருந்தே உண்டு. ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’ எனக்கு காந்தியை மனதிற்கு நெருக்கமான வகையில் அறிமுகம் செய்தது. அதன் பின்னர் பல காந்திய நூல்களை வாசித்திருக்கிறேன். அவற்றில் குறிப்பிடத்தக்கவை என தரம்பாலின் ‘காந்தியை அறிதல்’ மில்லி கிரகாம் போலாக்கின் ‘காந்தி எனும் மனிதன்’ ஆகியவற்றைச் சொல்லலாம். காந்தி ஒரு தொடக்கமே. குமரப்பா, வினோபா என வாசிப்பு விரிந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலும் கணிசமான அளவு காந்திய வாசிப்பு இன்றுவரை தொடர்கிறது.        

புதுமைப்பித்தன், ஜெயமோகன், அசோகமித்திரன், யுவன் சந்திரசேகர் மற்றும் அ. முத்துலிங்கத்தை எனது ஆதர்ச எழுத்தாளர்கள் எனச் சொல்லலாம். ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’ மற்றும் அவர் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் ‘வெண் முரசு’ வரிசை நாவல்கள் எனக்கு மிகப் பிடித்த நாவல்கள் எனச் சொல்லலாம். அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’, ‘தண்ணீர்’, ‘ஒற்றன்’, ஆகிய நாவல்களும் மனதிற்கு நெருக்கமானவை. பிடித்த எழுத்தாளர்கள் என ஒரு பட்டியல் போட்டால் நாஞ்சில் நாடன், சுரேஷ்குமார இந்திரஜித், சு. வேணுகோபால், ஜோ டி குரூஸ், ஆதவன், எம்.  கோபாலகிருஷ்ணன், இரா. முருகன், பி.ஏ. கிருஷ்ணன், ப. சிங்காரம் என பலரையும் சொல்லலாம். தேவதேவன், தேவதச்சன், ஞானக்கூத்தன், பெருந்தேவி, போகன் ஆகியோர்  கவிதைகளில் ஈடுபாடு உண்டு. சமகால எழுத்தாளர்களில் குணா கந்தசாமி, பாலசுப்பிரமணியன் பொன்ராஜ், கே.என். செந்தில், கார்த்திகை பாண்டியன், போகன் ஆகியோரின் கதைகளை பெருவிருப்புடன் தொடர்ந்து வருகிறேன். உலக இலக்கியத்தைப் பொறுத்தவரை ஒரு எழுத்தாளராக என்னை அதிகம் ஈர்த்தவர் காப்கா. அவருடைய ‘உருமாற்றம்’, ‘விசாரணை’, எனக்கு மிகப் பிடித்தமானவை. சுருள் படிகளில் மெதுவாக இறங்கி அகத்தின் ஆழத்தைத் தீண்டுபவர். ராபர்டோ போலானோ, மிகைல் புல்ககோவ், ஆல்டஸ் ஹக்ஸ்லி, டெட் சியாங், ஜார்ஜ் ஆர்வெல், மரியோ வர்கோஸ் லோசா, சேவியர் செர்காஸ், யு மிங் யி என பலரையும் எனக்கு அணுக்கமான எழுத்தாளர்களாக உணர்ந்திருக்கிறேன். 

ஆயுர்வேத மருத்துவம் இயல்பிலேயே கடின வாசிப்பைக் கோருவது. ஒருபக்கம் சமஸ்க்ருத மூல நூல்கள் மற்றும் அதன் உரைகளை வாசிக்கவேண்டும். மறுபக்கம் நவீன மருத்துவ நூல்களை வாசிக்க வேண்டும். உடற்கூறு, உடல் இயங்கியல், தடயவியல் மருத்துவம், சமூக மருத்துவம், பொது மருத்துவம், அறுவை மருத்துவம், கண் சிகிச்சை, காது மூக்கு தொண்டை மருத்துவம், குழந்தைகள், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம் என அத்தனை நவீன மருத்துவ பாடங்கள் எங்களுக்கும் உண்டு. மருத்துவம் சார்ந்த வாசிப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும் எனது ஆர்வம் மருத்துவ வரலாறு சார்ந்து திரும்பியது. இந்திய மருத்துவ வரலாற்றின் வளர்சிதை மாற்றங்கள், வெவ்வேறு போக்குகள் குறித்து தமிழில் ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்பது என் நெடுநாளைய கனவு. ஆயுர்வேத மருத்துவ தூய்மைவாதிகள் தரப்பும் ஆயுர்வேத மருத்துவத்தை நிராகரிக்கும் தரப்பும் ஒரு புள்ளியில் ஒன்றுபடும் என்றால் அது ‘எல்லாமே நூலில் எப்போதோ சொல்லப்பட்டுவிட்டது’ எனும் கருத்தில்தான். தூய்மைவாதிகள் மருத்துவத்தின் வளர்ச்சிப் போக்குகளை மறுத்து எல்லாவற்றையும் கடந்தகாலத்திற்கு நகர்த்திச் செல்வார்கள். விமர்சகர்கள் இதே காரணத்தைச் சுட்டி அறிவியலுக்கு எதிரானது, ஒரு காலகட்டத்தில் தேங்கி நின்றுவிட்டது, என நிராகரிப்பார்கள். டொமினிக் உஜாஸ்டிக், கென்னத் ஜிஸ்க் போன்றோரை வாசிக்கும்போது எனக்கு கிடைத்த சித்திரம் வேறு. 1850கள் வரையிலும்கூட மற்ற அறிவுத்துறைகளுடன் ஆரோக்கியமான அறிவுப் பரிமாற்றம் நிகழ்ந்து தொடர்ந்து வளர்ச்சியை உள்வாங்கியபடிதான் இருந்தது. பெர்சிய, கிரேக்க, சீன மருத்துவத்துடன் சீரான உறவு இருந்திருக்கிறது. காலனிய தாக்கத்தை எதிர்கொண்டு அதற்குரிய வகையில் மருத்துவமும் மாறி வந்திருக்கிறது. ஆயுர்வேத மருத்துவத்தின் வீழ்ச்சி என்பது இந்த நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்குள் நிகழ்ந்ததுதான். 
             
தோராயமாக தமிழ் இலக்கிய பரப்பை இலக்கியவாதிகள் மற்றும் கதைசொல்லிகள் என இரண்டாக வகுத்தால் புதுமைப்பித்தன், ஜெயமோகன், அசோகமித்திரன் ஆகிய மூவருமே இரண்டு கூறுகளும் ஏறத்தாழ சம அளவு கொண்டவர்கள் எனச் சொல்லலாம். யுவனையும் முத்துலிங்கத்தையும் கதைசொல்லிகள் என்றே வகைப்படுத்தலாம். ஜெயமோகனும் அசோகமித்திரனும் சந்திக்கும் புள்ளியில் எனது புனைவுலகம் நிகழவேண்டும் என்பதே என் கனவு. அகத்திற்கும் புறத்திற்கும், ஒழுங்கிற்கும் ஒழுங்கின்மைக்கும், வரலாற்றுக்கும் தனிவாழ்விற்கும் இடையிலான சமநிலையை அடைய விழைகிறேன் என்றும் சொல்லலாம். 

வாசிப்பின் படிநிலைகளை கவனிக்கும்போது முதலில் சிறார் இலக்கியம், பிறகு பொழுதுபோக்கு இலக்கியம், ஆன்மிகம்- சுயமுன்னேற்ற வாசிப்பு, காந்தி, நவீன தமிழ் இலக்கியம், வரலாறு மற்றும் பண்பாடு சார்ந்த வாசிப்பு என்பதே என் வரிசை என தொகுத்துச் சொல்லமுடியும். அடுத்தக்கட்டமாக மெய்யியல் தளத்தில் வாசிக்கும் ஆர்வம் உண்டாகியுள்ளது.

எட்டாவதோ ஒன்பதாவதோ படித்துக் கொண்டிருக்கையில் ஆண்டு விடுமுறையில் முதன்முறையாக ‘பொன்னியின் செல்வன்’ வாசித்து அதன் தாக்கத்தில் ஒரு கதை எழுதத் தொடங்கினேன். அதையே முதல் எழுத்து முயற்சி என சொல்லலாம். தஞ்சை, கும்பகோண பகுதி கோவில்களுக்கு அம்மாவுடன் செல்லும் வாய்ப்பு அமைந்தது கற்பனைகளை மேலும் விரிவாக்கியது. ‘யாமம்’, ‘புலர்காலை’, ‘அந்தி’, ‘நண்பகல்’ என நாவலின் தலைப்புக்களை பிரித்திருந்தேன். ஒவ்வொரு பகுதியிலும் அந்தப் பொழுதில் நிகழ்பவை மட்டுமே கதை என்பது திட்டம். பெரிதாக எழுதவில்லை என்றாலும்கூட நாவலைப் பற்றி சிந்தனைகளும் கற்பனைகளும் தறிகெட்டு ஓடின. பள்ளியில் ஆண்டுவிழா நாடகங்களில் பிரதான பாத்திரம் ஏற்று பல வருடங்கள் நடித்த அனுபவம் எனக்குண்டு. பதினோராம் வகுப்பில் பாக்கியம் ராமசாமி விகடனில் எழுதிய ‘ப்ளஸ் டூ தியாகிகள்’ எனும் அங்கதக் கட்டுரையைத் தழுவி நானும் எனது வகுப்பு மாணவி ஒருவரும் சேர்ந்து ஆண்டு விழா நாடகத்தை எழுதினோம். அதேயாண்டு பள்ளியின் முதல் ஆண்டு இதழின் ஆசிரியக் குழுவில் இடம்பெற்றது ஒரு அனுபவம். ஒரு ஆங்கிலக் கவிதையும் ஒரு ‘மனிதா முன்னேறிவிடு’ வகை தமிழ்க் கவிதையும்  வெளியானது. ஆங்கிலக் கவிதை காஷ்மீர் சிக்கலைப் பற்றி சிவப்பு வெளுப்பு என்று உருவக ரீதியாக எழுதப்பட்ட கவிதை. இந்தியன் எக்ஸ்ப்ரஸின் சிறுவர் இணைப்பிதழுக்கு ‘ஜோக்கர்’ எனும் தலைப்பில் எழுதிய ஆங்கிலக் கவிதைக்கு பெயரிலியாக ஒரு வாசக கடிதம் பாராட்டி பள்ளி முகவரிக்கு வந்தது முதல் வாசக அங்கீகாரம் எனக் கொள்ளலாம். எனினும் என் நண்பர்களின் குறும்பாக இருக்கலாமோ என்றொரு ஐயம் இன்றுவரை எனக்குண்டு. இப்போது யோசிக்கையில் ஆங்கிலக் கவிதைகள் அன்றைய வயதிற்கு சற்றே முதிர்ந்த உள்ளடக்கம் மற்றும் தொனி கொண்டிருந்தன எனத் தோன்றுகிறது. 

கல்லூரி இறுதியாண்டு காலத்தில் கணினி பழகத் தொடங்கினேன். அப்போது தமிழக அறிவுபுலத்தில் ’வலைதள’ அலை நிலவியது. ‘தமிழ்மணம்’, ‘தமிழ்வெளி’ என வலைப்பூ திரட்டிகள், வலைப்பூ விருதுகள் களைகட்டிய காலம். வலைப்பூ உலகில் நட்சத்திரங்கள் உருவாகி இருந்தார்கள். காரசாரமான விவாதங்கள், சச்சரவுகள் எனத் துடிப்புடன் இயங்கியது. தொடக்கத்தில் ஆங்கிலத்தில்தான் வலைப்பூ எழுதத் தொடங்கினேன். ஒரு பத்து பதினைந்து கட்டுரைகள் எழுதி இருக்கலாம். பின்னர் மெதுவாக தமிழ் வலைப்பூவைத் தொடங்கினேன். இன்றுவரை அந்தத் தளத்தையே பயன்படுத்தி வருகிறேன். வலைப்பூ உலகம் பல்வேறு துறையினரைக் கொண்டது. காப்பீட்டுத் துறையில் உள்ளவர் அவருடைய துறை சார்ந்து தொடர் கட்டுரைகளை எழுதுவார், மருத்துவர்கள் அவர்களுடைய தொழில் சார்ந்து எழுதுவார்கள், சமையல் குறிப்புகள், சட்டச் சிக்கல்கள் என பலகுரல்கள் ஒலித்தன. ஆயுர்வேதம் குறித்து சில கட்டுரைகளை வலைப்பூவில் எழுதினேன். சில சிறுகதைகளும் அக்காலக்கட்டத்தில் எழுதினேன். அவை முதிரா முயற்சிகள் என்றே சொல்லவேண்டும். சில கதைகளை இப்போது வாசிக்கையில் வேடிக்கையாக உள்ளது. அதைவிடவும் அப்போது எழுதிய சில கவிதைகள் பரிதாபகரமானவை. எனினும் கூட ‘அதிமானுடன்’ போன்ற ஒரு கதையை இப்போது கொஞ்சம் சரி செய்து நல்ல கதையாக எழுத முடியும் எனத் தோன்றுகிறது. 

நவீன தமிழ் இலக்கியம் எப்போதும் சிற்றிதழ் மரபின் வழியாகவே அடையாளப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மணிக்கொடி யுகம், எழுத்து யுகம், கசடதபற யுகம், மீட்சி யுகம், நிறப்பிரிகை யுகம், தமிழினி யுகம் எனத் தோராயமாக சொல்லலாம். இன்றைய நிலையில் ‘மணல் வீடு’ மற்றும் ‘கல்குதிரையை’ சிற்றிதழ் மரபின் தற்காலத்திய குரல் என சொல்லலாம். சிற்றிதழ்கள் சார்ந்து ஒரு காலகட்டத்தை வகுக்கும்போது அந்த காலகட்டத்து அழகியல், அரசியல் பின்புலத்தையும் சேர்த்தே வகைப்படுத்துகிறோம். 2005க்கு பின்பான இந்த பதினைந்து ஆண்டுகளை இணைய யுகம் என்றே வரையறை செய்ய முடியும். இணையத்தின் வருகை தீவிர இலக்கியம், பரப்பியல் இலக்கியம், எனும் பாகுபாடை ஊடகம் சார்ந்த அளவில் அழித்தது. எழுத்தின் தன்மையில் இந்த வேறுபாடு இப்போதும் உள்ளதே. ஒரு படைப்பு அதன் வெளியீட்டு ஊடகம் வழியாக தீவிர இலக்கியம், பரப்பியல் இலக்கியம் என வரையறை செய்யப்பட முடியாது என்பதே இதன் பொருள். மாறாக அப்படியொரு பகுப்பே மறைந்துவிட்டது என்பதல்ல. முந்தைய காலங்களில் நவீனத் தமிழ் எழுத்தாளர் சிற்றிதழ் வழியாகவே அறிமுகம் ஆகி வந்தார். இணைய யுகத்தில் தான் இது மாறியது. 
இணைய யுகத்தையும் கூகுள் குழும யுகம், வலைப்பூ யுகம், ஃபேஸ்புக் யுகம், ட்விட்டர் யுகம் என மேலும் நுணுக்கமாக வகைப்படுத்தலாம். ஒவ்வொரு சமூக ஊடகத்தின் வெளிப்பாட்டு முறையும் வேறு. வலைப்பூவின் நட்சத்திரங்கள் ஃபேஸ்புக்கில் பிரகாசிக்கவில்லை. அங்கே வேறு சிலர் உருவாகி வந்தார்கள். ட்விட்டர் வேறு சிலரை நட்சத்திரங்களாக ஆக்கியது. என்னை வலைப்பூ யுகத்தின் எழுத்தாளர் என்றே வகைப்படுத்திக்கொள்வேன். அதே நேரத்தில் எனது சிந்தனை மற்றும் வாசிப்பை கூகுள் குழுமங்கள் வழியாகவே செழுமைப் படுத்திக்கொண்டேன். ஜெயமோகன் வாசகர்களுக்கான சொல்புதிது குழுமம் மிகச் சூடான விவாதக் களம். ஆம்னிபஸ் மற்றும் பதாகை நண்பர்கள் குழுமம் பல வகையிலும் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. வலைப்பூ போல் அல்லாமல் ஒரு இணக்கமான நட்பு சூழல் மூடிய குழுமங்களில் சாத்தியமானது. இன்றுவரை இந்த குழுமங்களில் வழி கண்டடைந்த ஒத்த மனமுடையவர்களே எனது நெருங்கிய நண்பர்களாகவும் தொடர்கிறார்கள். நட்பார்ந்த சூழலில் எழும் விமர்சனம் நன்னம்பிக்கையின் பேரில் எழுவது என்பதால் வெறுப்பின்றி அணுக இயலும். மூடிய குழுமம் என்பதால் முட்டாள்தனமாக இருந்துகொள்ளத் தயங்கியதில்லை. முட்டாள்தனத்தை அறிவித்துக்கொள்ள முடியாமல் ஆகும்போதே போலியான பாவனைகள் வந்து சேர்கின்றன. அது முட்டாள்தனத்தை விட ஆபத்தானது. கற்றுக்கொள்ளும் வாயில்களை அடைப்பது. 

என் சொந்த வலைப்பூ எழுத்தின் பெறுமதி குறித்து எனக்கு பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. இன்று என் வலைதளம் நான் எழுதியவற்றை சேமிக்க உதவுகிறது. ஆனால் நாங்கள் நண்பர்களாக சேர்ந்து இயங்கிய வலைதளங்கள்  தமிழ் இணையத்தில் நிலவிய ஒரு வெற்றிடத்தை நிரப்பிய அளவில் முக்கியமானவை. அண்ணா ஹசாரே இயக்கம் வலுவாகத் தொடங்கிய காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து அவர் மீதான அவதூறுகளுக்கு பதில் சொல்லும் விதமாக ஒரு வலைதளத்தை தொடங்கினோம். அதில் ராலேகான் சித்தியில் அண்ணா ஹசாரே நிகழ்த்திய மாற்றங்கள் குறித்த கட்டுரையை மொழியாக்கம் செய்தேன். அரவிந்த் கேஜிரிவாலின் நீண்ட நேர்காணல் ஒன்றையும் மொழியாக்கம் செய்தேன். சுமார் இருபது முப்பது கட்டுரைகள் அண்ணா ஹசாரே குறித்து தளத்தில் வெளியாயின. வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதியவற்றையும் தொகுத்து வெளியிட்டோம். அண்ணா ஹசாரேவின் இயக்கம் தொய்வடைந்தபோது நண்பர்கள் ஆர்வமிழந்தனர். அண்ணா ஹசாரே மீதான அவதூறுகள், விமர்சனங்கள், காந்தியின் மீதான முன்முடிவுகளில் இருந்து பிறந்தவை என்பதை உணர்ந்துகொண்டேன். மேலும் அவருடைய இயக்கம் ஏன் முழு வெற்றி பெறாமல் வலுவிழந்தது என்று யோசிக்கும்போது அவருக்கும் காந்திக்கும் இடையிலான தூரம் புலப்படத் தொடங்கியது. அப்படித்தான் அண்ணா ஹசாரேவிற்காக இயங்கிய தளம் காந்திக்கான தளமாக உருமாறியது. இணையத்தில் காந்திக்கென ஒரு அறிவுத் தரப்பு உருவாகாத சூழலில் அடிப்படையற்ற அவதூறுகளுக்கு காந்தியே எளிதான இலக்கானார். ஏறத்தாழ இதே சமயத்தில் நண்பர் ‘ராட்டை’ ஃபேஸ்புக்கில் காந்தி குறித்தான அவதூறுகளுக்கு தரவுகளோடு மறுப்பு தெரிவிக்கத் தொடங்கினார். 

காந்தி-இன்று இணையதளம் இன்றும் இயங்கி வருகிறது. ஐநூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் அதில் உள்ளன. ஆஷிஷ் நந்தி, ராமச்சந்திர குகா, அனந்தமூர்த்தி என பலருடைய காந்தி குறித்தான கட்டுரைகளும் அதில் இடம்பெற்றுள்ளன. வினோபா, குமரப்பா, கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன், ஆங் சண் சூகி, மண்டேலா, மார்டின் லூதர் கிங், சுந்தர்லால் பகுகுணா, பாபா ஆம்தே, லாரி பேக்கர், தரம்பால் என பல காந்திய ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. நேர்காணல்கள், கட்டுரை மொழியாக்கங்கள், நேரடி கட்டுரைகள், புத்தக மதிப்புரைகள், காந்திய புனைவுகள் என பலவும் இடம்பெற்றுள்ளன. நான் உற்சாகம் இழக்கும்போது நட்பாஸ் செயல்பட்டு ஊக்கமளிப்பார். அவர் தொய்வடையும்போது நான் பங்களிக்கத் தொடங்கினேன். தொடக்கத்தில் இருந்த தீவிரம் மெதுவாக குறைந்தது. ‘பகத்சிங்கின் தூக்கிடலை காந்தி ஆதரித்தாரா?’, ‘பாகிஸ்தானுக்கு ஐம்பத்தி ஐந்து கோடி அளிக்க உண்ணாவிரதம் இருந்தாரா?’, ‘பிரிவினைக்கு காந்திதான் காரணமா?’, ‘அம்பேத்கரும் காந்தியும் எதிரிகளா?’, ‘காந்திதான் அரசியலுக்கும் மதத்தை கொண்டுவந்தவரா?’, இப்படியான பல கேள்விகளை தளத்தின் கட்டுரைகள் எதிர்கொண்டு தரவுகளோடு கூடிய பதிலை அளித்தன. ஆனால் ஒருகட்டத்தில் இது சலிப்பை அளித்தது. இந்த பதில்கள் எவரை திருப்திபடுத்த? முன்முடிவுகள் கொண்டவர்களோடு முட்டிமோதி விவாதிப்பதால் என்ன பயன்? இத்தனை மெனக்கெட்டு புனைவற்ற எழுத்துக்களை ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கு மொழியாக்கம் செய்யத்தான் வேண்டுமா என்றொரு கேள்வி எழுந்தது. காந்தி தளம் தொடங்கி இரண்டு வருடங்களில் என் நாட்டம் புனைவிலக்கியம் சார்ந்து நகர்ந்தது. ஆகவே காந்தி இன்று தளத்திற்கு மொழியாக்கங்கள் செய்வதை நிறுத்திவிட்டேன். அசலான கட்டுரைகளை மட்டுமே எழுதுவது என தீர்மானித்துக் கொண்டேன். 

தற்காலத்தில் காந்திய கருத்துத் தரப்பை வலுப்படுத்தியதில் காந்தி- இன்று தளத்திற்கு மிகமுக்கிய பங்கு உண்டு என்றே எண்ணுகிறேன். 2012 ஆம் ஆண்டு காந்தி இன்று தளத்தில் நூறு கட்டுரைகளைக் கடந்தபோது ஒரு சிறிய தொகை நூலை நண்பர் கடலூர் சீனு தொடங்கிய சொல் புதிது பதிப்பகம் வழியாக வெளியிட்டோம். ‘காந்தி எல்லைகளுக்கு அப்பால்’ எனும் அந்நூலில் மைக்கேல் பிளாட்கின் மற்றும் ஜீன் ஷார்ப் எழுதிய கட்டுரைகளை நான் மொழியாக்கம் செய்திருந்தேன். நண்பர் சிவாத்மா பிரித்தானிய சிற்பி (Claire Sheridan) காந்தியை இங்கிலாந்தில் சந்தித்ததைப் பற்றி எழுதிய குறிப்பை மொழியாக்கம் செய்திருந்தார். அர.சு. ராமையா லாயிட் ஐ ருடால்ப் எழுதிய ‘பின்நவீனத்துவ காந்தி’ நூலின் மீது விரிவான வாசிப்பை அளித்து எழுதிய கட்டுரையும் இடம்பெற்றிருந்தது. இந்தியாவிற்கு வெளியே காந்தி எப்படி பொருள் கொள்ளப்படுகிறார் என்பதே பொதுவான வரையறை. காந்தி –இன்று தளத்திலிருந்து இதுவரை நான்கு நூல்கள் உருவாகியுள்ளன. நண்பர் கார்த்திகேயன் கரையாண்டி மில்லி கிரகாம் போலாக்கின் ‘காந்தி எனும் மனிதன்’ நூலை அத்தியாயம் வாரியாக மொழியாக்கம் செய்தார். காந்தி –இன்று தளத்தில் மொத்த நூலும் வலையேறியுள்ளது. பின்னர் அந்நூல் எனது முன்னுரையுடன் சர்வோதயா இலக்கிய பண்ணை வெளியீடாக வெளிவந்தது. காந்தியை அவருடைய தென்னாப்பிரிக்கா காலத்தில் அணுக்கமாக நோக்கிய பெண்ணால் எழுதப்பட்ட கூர்மையான நிகழ்வுக் குறிப்புகள் கொண்ட நூல். மகாத்மா என்ற ஒளிவட்டம் இல்லாத காலத்தில், அறக் குழப்பங்களும் தடுமாற்றங்களும் கொண்ட காந்தி நம் மனதிற்கு இன்னும் நெருக்கமானவர். 

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நாராயண் தேசாய் காந்தி கதை நிகழ்த்துவதற்காக வந்திருந்தார். ‘காந்தி கதை’ மரபான ஹரிகதை பாணியில் பாடல்களுடன் சேர்த்து காந்தியின் வாழ்க்கைச் சரித்திரத்தை கதையாக சொல்வது. நாராயண் தேசாய் காந்தியின் செயலராக இருந்த மகாதேவ் தேசாயின் புதல்வர். அவரைப் பார்க்கச் சென்றபோதே அவருக்கு எண்பது வயதிற்கு மேல். ஆனால் அபாரமான உரையாடல்காரர். காந்திய நண்பர் த. கண்ணன் அவரை விரிவாக ஒரு நேர்காணல் செய்தார். அந்த நேர்காணலும் என்னுடைய அனுபவக் கட்டுரையும் சேர்ந்து சர்வோதயா வெளியிட்ட ‘காந்திய காலத்திற்கொரு பாலம்’ எனும் சிறிய வெளியீடாக வந்தது. என் கட்டுரையை விடவும் த. கண்ணன் எடுத்த நேர்காணல் முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த ஆண்டு காந்தி-இன்று தளத்திலிருந்து நான் எழுதிய பதினெட்டு கட்டுரைகள் ‘அன்புள்ள புல்புல்’ எனும் தலைப்பின் கீழ் ‘யாவரும்’ பதிப்பக வெளியீடாக தொகுக்கப்பட்டு வெளிவந்தது. 

காந்தி எனும் மனிதர், காந்தி எனும் குறியீடு என இரு தளங்களில் காந்தியை வகுத்துக் கொள்ளலாம். காந்தியை மறுப்பவர்கள்கூட காந்தி எனும் குறியீட்டை ஏற்பவர்கள்தான். நவீன நுகர்வு வாழ்க்கையின் விமர்சகராக காந்தியின் இடம் முக்கியமானது என்கிறார் ஆஷிஸ் நந்தி. காந்தி எனும் குறியீடு காந்தி எனும் மனிதரின் தனிமனித ஆற்றலின் மீது எழுப்பப்பட்டதே. ஒன்றை அழித்து மற்றொன்றை வாழ்விக்க இயலாது. காந்தியின் நடைமுறை தளங்கள், பங்களிப்புகள் சார்ந்து சில கட்டுரைகளும் காந்தி எனும் ஆளுமையின் வீச்சை, அவரின் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ளும்விதமாக சில கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. தேசிய பதிப்புப் பிரிவிற்காக காந்தி மரணமடைந்தபோது பேசப்பட்ட வானொலி அஞ்சலி உரைகளின் தொகுப்பை மொழியாக்கம் செய்திருக்கிறேன். இந்த ஆண்டு வெளியாகியுள்ளது. ஒரு உணர்ச்சிகரமான தருணத்தின் முதல் ஆவணப்பதிவு. நேரு, படேல், சரோஜினி நாயுடு தொடங்கி பலருடைய உரைகள் கொண்ட தொகுப்பு. காந்தியின் மரணம் அவர்களை எப்படி பாதித்தது என்பதை வாசிக்க முடிகிறது. காந்தியின் வாழ்விற்கு பொருள் அளிப்பதே அவருடைய மரணம்தான் எனச் சில வேளைகளில் தோன்றும். ‘என் வாழ்வே என் செய்தி’ எனச் சொன்னவர். அவருடைய மரணமும் வாழ்விற்கு இணையான ஒரு செய்திதான். உருக்கமான, நெகிழ்ச்சியான நினைவுகளும், அவருடைய பங்களிப்பை புறவயமாக மதிப்பிட முயலும் குரல்களும் கொண்ட அரிய தொகைநூல். இதைத்தவிர பாரதிய வித்யா பவனுக்காக ‘தமிழில் காந்தி’ எனும் தொகைநூலை உருவாக்கி அளித்திருக்கிறேன். பிரசுரத்திற்கு காத்திருக்கிறது. பாரதி தொடங்கி விஷ்ணு வரதராஜன் வரை வெவ்வேறு தலைமுறையினரின் பார்வையில் காந்தியைப் பற்றிய பார்வை அடங்கிய நூல். ஒரு பறவை கோணத்தில் தமிழக அறிவுத் தளத்தில் காந்தியின் இருப்பை காட்டும் முயற்சி. இந்த நூலை உருவாக்க புதுகோட்டை ஞானாலயா மற்றும் தக்கர் பாபா நூலகத்திற்கு சென்று வந்தேன். பல அரிய நூல்கள் வாசிக்கக் கிடைத்தன. முப்பதுகளில் பெ. கோ. சுந்தர்ராஜன் (சிட்டி என தமிழ் இலக்கிய உலகில் அறியப்படுபவர்) எழுதிய ‘வார்தா கல்வித்திட்டம்’ எனும் நூல், சுப்பிரமணிய சிவா திலகரையும் காந்தியையும் மையமாக கொண்டு எழுதிய நாடகம், வெ. சாமிநாத சர்மா காந்தியையும் விவேகானந்தரையும் ஒப்பிட்டு எழுதிய சிறு பிரசுரம், எஸ். அம்புஜம்மாள் எழுதிய ‘காந்தி நினைவு மாலை’ என சுவாரசியமான பல நூல்களை கண்டடைந்தேன். காந்திய புனைவுகள், புனைவற்றவை என இரு பகுதிகள் கொண்ட தொகை நூல் இது. சிறுகதைகள், மரபுக் கவிதைகள், நவீன கவிதைகள், நாவல் பகுதிகள், சிறார் இலக்கியங்கள் என புனைவு பகுதியில் பல உபதலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. புனைவற்ற பகுதியில் கட்டுரைகள், அஞ்சலிகள், நினைவு குறிப்புகள் எனும் உபதலைப்புகளின் கீழ் பல்வேறு ஆளுமைகளின் எழுத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தற்போது காந்தியின் சுயசரிதையான சத்திய சோதனையின் புதிய திருத்தப்பட்ட செம்பதிப்பை மொழியாக்கம் செய்து வருகிறேன். பல்வேறு அடிக்குறிப்புகளுடன் வெளிவந்துள்ள முக்கியமான நூல். 

காந்தி- இன்று தளத்தின் இணையாசிரியர் நட்பாஸ் என்னை கிரி ராமசுப்பிரமணியத்திடம் அறிமுகப்படுத்தினார்.இணைய தளம் தொடங்கி சில காலத்தில் வேறு நண்பர்கள் எட்டு பேர் சேர்ந்து ‘ஆம்னிபஸ்’ என்றொரு இணையதளத்தைத் தொடங்கினோம். ‘ஆம்னிபஸ்’ காலத்தையே என் வாசிப்பு வேகமெடுத்த காலம் எனச் சொல்வேன். பெரும் நம்பிக்கையுடன் தொடங்கிய வலைப்பூ யுகம் எதிர்பார்த்த அளவிற்கு தரமான படைப்புகளை அளிக்கவில்லை. ‘ஆம்னிபஸ்’ வலைப்பூ யுகத்தின் இறுதியில் உருவான கூட்டு முயற்சி. ஏழு பேரும் வாரம் ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்தி ஒவ்வொரு நாள் எழுத வேண்டும். ஒரு வருடம் முழுக்க அதாவது 365 நாட்களுக்கு தொடர்ச்சியாக புத்தக அறிமுகங்கள் எழுத வேண்டும் என்பதே சவால். முப்பதிற்கும் மேற்பட்ட நூல்கள் குறித்து மதிப்புரைகளை அப்போது எழுதினேன். ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாக வாசித்து, கட்டுரை எழுதுவது நல்ல பயிற்சியாக இருந்தது.  ‘ஆம்னிபஸ்’ அது உத்தேசித்த இலக்கை ஒரு வருடத்தில் எட்டியது. இன்றும் தமிழில் மிக அதிகமாக புத்தக மதிப்புரைகள் கொண்ட தளமாக அதுவே நீடிக்கிறது. ஆம்னிபஸ் முயற்சிக்கு பிறகு மீண்டும்  சில நண்பர்கள் சேர்ந்து ‘பதாகை’ இணைய இதழை தொடங்கினோம். இணைய இதழ்கள் சென்றகாலத்து சிற்றிதழ்களின் நீட்சி அதே வேளையில் சில நுண்மையான வேறுபாடுகளும் உண்டு. சிற்றிதழ்கள் போலவே இவையும் ஒரு தனி மனிதர் அல்லது மிகச் சிறிய குழுவின் ஊக்கத்தில் மட்டுமே தொடர்ந்து வெளிவர முடியும். சிற்றிதழைப் போல் பொருட்செலவு ஆவதில்லை, நேரத்தை மட்டுமே அளிக்க வேண்டும் என்பது மிக முக்கியமான வசதி. சிற்றிதழ்கள் போல் இணைய இதழ்கள் ஒரு இயக்கமாக பரிணமிக்கவில்லை. மின்னிதழ்கள் மிகப்பெரிய வாசக சாத்தியத்தை கொண்டவை, ஆனால் நிதர்சனத்தில் அதன் வாசகபரப்பும் மிகச் சிறியதே. எனது சிறுகதைகள், விமர்சன கட்டுரைகள், கட்டுரைகள், ‘பதாகை’ மற்றும் ‘சொல்வனம்’ இணைய இதழ்களிலேயே வெளியாகின. இன்றைய தினத்தில் ஒரு கதையையோ கட்டுரையையோ பதிப்பிப்பது எளிது. பொதுவெளியில் அது வாசிக்கக் கிடைக்கும், ஆனால் அதை எவரேனும் வாசிப்பார்களா என்றால் அதற்கு விமர்சக வழிகாட்டல் தேவையை இருக்கிறது. ‘பதாகை’ அடிப்படையில் புதிய எழுத்துக்களை ஊக்குவிக்கும் முயற்சி எழுத்தாளருக்கு தேவையான எதிர்வினையை அளிக்கும். மு. வெங்கடேஷ், கமலதேவி, பானுமதி ஆகியோர் பதாகை வழி வெளிவந்த எழுத்தாளர்கள். என்னையும் பதாகை எழுத்தாளர் என்றே சொல்லலாம். 

வலைப்பூவில் எழுதிய ஆரம்ப கால கதைகளை தவிர்த்துவிட்டு உருப்படியான முதல் சிறுகதை முயற்சி என்றால் ‘வாசுதேவன்’ தான். ஜெயமோகன் இணையதளத்தில் புதியவர்கள் கதைகளை அனுப்பலாம் என்றொரு அறிவிப்பு வந்ததும் நான் ஊக்கம் பெற்று கதை எழுதினேன். ‘வாசுதேவன்’ ஜெயமோகன் இணைய தளத்தில் வெளியானது. பின்னர் நற்றிணை தொகுத்த ‘புதிய வாசல்’ தொகுப்பிலும் பன்னிரண்டு கதைகளில் ஒன்றாக தேர்வாகி இருந்தது. 2013 தொடங்கி சீரான இடைவெளிகளில் சிறுகதைகளை எழுதி வருகிறேன். 2017 ஆம் ஆண்டு இவை ‘அம்புப் படுக்கை’ என ஒரு நூலாக தொகுக்கப்பட்டன. தொகுக்கப்பட்ட பத்து கதைகளுக்கு வெளியே நான்கைந்து கதைகள் உள்ளன. ‘அம்புப் படுக்கை’ தொகுதியில் இடம்பெற்றுள்ள ஒருகதை கூட அச்சிதழ்களில் வெளியானவை அல்ல. ‘யாவரும்’ பதிப்பக வெளியீடாக வெளியானவுடனேயே தொகுப்பிற்கு நல்ல கவனம் கிடைத்தது. 2017 ஆம் ஆண்டு கணையாழி- எழுத்து நடத்திய அசோகமித்திரன் குறுநாவல் போட்டியில் ‘பேசும் பூனை’ முதற் பரிசு வென்றது. ஓரளவு நல்ல கவனத்தைப் பெற்றது. 2018 ஆம் ஆண்டில் என்னுடைய முதல் சிறுகதை தொகுப்பான ‘அம்புப் படுக்கைக்கு’ யுவ புரஸ்கார் அறிவிக்கப்பட்டபோது சிறிய அளவில் எதிர்ப்பும் சலசலப்பும் எழுந்தது. முக்கிய காரணம் நான் சிற்றிதழ் வழி இயங்கியவன் அல்ல. ஆகவே நானும் என் எழுத்துக்களும் அவர்களுக்கு பரிச்சயமில்லை. அதற்கு முன்பு விருதுபெற்ற அனைத்து யுவ புரஸ்கார் எழுத்தாளர்களும் சிற்றிதழ் வழி நவீன இலக்கிய பரப்பிற்கு வந்தவர்கள். 

‘யுவ புரஸ்கார்’ அளித்த கவனம் ஒருவகையில் எனக்கு சுமைதான். ‘ஒப்பந்த எழுத்தாளர்’ என சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நிலைமை மாறியது. என் வேகத்திற்கும் என் ரசனைக்கும் ஏற்ப புத்தங்களை தேர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். விருதுக்குப் பின் வெகு அரிதாகவே நான் என்ன வாசிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்பவனாக இருந்தேன். பெரும்பாலும் கூட்டங்களுக்கு தயார் செய்துகொள்ளவும், கட்டுரை கேட்பவர்களுக்கு அதை அளிப்பதற்காகவும் என என் வாசிப்பு வடிவமைக்கப்பட்டது. எனினும் என் வாசிப்பும் செயல்பாடும் பன்மடங்கு அதிகமானதை இந்த மாதங்களில் உணர்ந்தேன். முன்னைக் காட்டிலும் முனைப்போடு வாசித்தேன். விருதிற்கு பின்பான இந்த வருடமே இதுவரையிலான என்வாழ்நாளில் மிக அதிக பயணங்கள் சென்ற   வருடம். அவை புதிய அனுபவங்களை அளித்தன. 

விருது வழி கிடைத்த அங்கீகாரம் எனக்கு வீட்டில் சில சலுகைகளை அளித்திருக்கிறது. குற்ற உணர்வின்றி புத்தகங்களை வாங்க முடிகிறது, நான் நேரத்தை வீணாக்கவில்லை, ஏதோ ஒன்றை உருப்படியாகச் செய்கிறேன், எனும் நம்பிக்கையை குடும்பத்திற்குள் ஏற்படுத்தி இருக்கிறது. முன்னமும் எந்த தடையும் இருந்ததில்லை என்றாலும்கூட ஒரு விடுதலையை உணர முடிகிறது. மற்றபடி விருதின் பொருட்டு பெருமிதம் கொள்ள ஏதுமில்லை. நெடுந்தூர பயணத்தின் ஒரு மைல்கல். விருதிற்கும் அங்கீகாரத்திற்கும் ஏங்கக் கூடாது என்றே எண்ணுகிறேன். எழுத்தாளருக்கு வாசிக்கப்படுவதே அங்கீகாரம். கலை என்பதொரு கொடை. அளிப்பதில் உள்ள மகிழ்ச்சியும் திருப்தியுமே பின்னிருந்து இயக்குகிறது. அதன்வழி கலைஞன் எதையும் பெற்றுக்கொள்ள விழையவேண்டியதில்லை. 

ஒரு எழுத்தாளனாக நான் ஏன் எழுதுகிறேன் என கேட்டுக் கொண்டதுண்டு. வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பதில்களை வந்தடைந்திருக்கிறேன். வாழ்வையே அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது எனும்போது கலைக்கு என்ன நோக்கம் இருக்க முடியும்? நோக்கத்திற்கு அப்பாற்பட்ட பெரும் களியாட்டத்தை லீலை எனச் சொல்லலாம். லீலைக்கு நோக்கமும் இலக்கும் பொருளும் கிடையாது. கட்டற்ற களி. அந்த களியாட்டின் ஒரு பகுதியே படைப்புச் செயல்பாடு. மாரியம்மன் கோவில்களில் வெள்ளி அல்லது எவர்சில்வர் தகடுகளில் உரு செய்து உண்டியலில் நேர்த்தி செலுத்துவது வழக்கம். உபாதைகளில் இருந்து மீட்டதற்காக அம்மனுக்கு நன்றி செலுத்துவார்கள். குறிப்பிட்ட உறுப்புகளை அல்லது மொத்த மனித உடலின் மீச்சிறு வடிவத்தை காணிக்கையாக்குவார்கள். படைப்பும் பிரபஞ்சத்தின் கொடைக்கு நன்றி செலுத்தும் விதமாக அதன் சிக்கலான அமைப்பிலிருந்து ஒரு சிறு துண்டை மட்டும் உருவியெடுத்து, அதைப் போலவே செய்து படைப்பாளன் தன்னுடைய நன்றியைத் தெரிவிப்பது. சமூக மாற்றத்தை இலக்காகக் கொண்டு என்னால் கதையெழுத முடியாது. ஒருவேளை கதைகளுக்கு அந்த ஆற்றல் இருந்தால் அது தன்னியல்பிலேயே நிகழும். கதைகள் ஆற்றுப்படுத்தும், எழுதுபவரையும் வாசிப்பவரையும். ‘வாசுதேவன்’ என் கல்லூரி காலத்தில் நிகழ்ந்த உண்மை நிகழ்வின் சாயலைக் கொண்ட கதை. வாழ்க்கையின் பொருளின்மையை நேரடியாக உணர்ந்த கணம். இங்கே உயிர்களை பயன்மதிப்பைக் கொண்டே அளக்கிறோம். எந்த புள்ளியில் மனிதர்கள் தேவையற்றவர்கள் ஆகிறார்கள் என்பதை கவனிக்கத் தோன்றுகிறது. ‘வாசுதேவனின்’ முகம் என் கனவுகளில் ஊடுருவி திடுக்கிட்டு எழச் செய்திருக்கிறது. காப்காவின் ‘உருமாற்றம்’ வாசிக்கும்போது வாசுதேவனை புரிந்து கொண்டேன். அவனும் ஒரு க்ரேகர் சம்சாதான். உழைத்துக் களைத்து ஓரிரவில் எவருக்கும் பயனற்ற மாபெரும் பூச்சியாகிப் போனவன். ‘வாசுதேவனுக்கு’ அவனுடைய நினைவுகளுக்கு நான் செலுத்தும் அஞ்சலி, அவனுடைய வாழ்விற்கு நான் செய்யும் நியாயம் என எப்படியும் கொள்ளலாம். அந்தக் கதையை எழுதிய பின்னர் அவனுடைய முகம் என் கனவுகளில் வருவதில்லை. ஓர் ஆறா காக்யத்தை கதைகள் ஆற்றக்கூடும். 

என் கதைகளில் ஓவியத் தன்மை உண்டு. நான் ஒரு ஓவியனாய் இருந்திருந்தால் அவற்றைக் கதைகளாக எழுதியிருக்க மாட்டேன். ‘ஆரோஹனம்’ கதையில் வரும் காந்திகளால் நிரம்பிய உலகு, ‘காலிங்க நர்த்தனம்’ கதையில் வரும் கனவுக் காட்சி போன்றவை மனதில் ஒரு ஓவியமாகவே உதித்தன. எனது ‘யுவ  புரஸ்கர்’ ஏற்புரையில் நானொரு ஹைபோக்ரிட் என்று குறிப்பிட்டிருந்தேன். ஒரு வகையில் எனது படைபூக்கத்தையும் அதிலிருந்தே பெறுகிறேன். காந்தி எனது ஆதர்சம், ஆனால் புனைவுகளில் நேரெதிரான நிலைகளையும் எவ்வித தயக்கமும் இன்றி கைகொள்ள முடியும். எப்போதும் ஒரு எழுத்தாளர் சமகாலத்தைப் பிரதிபலித்து எழுத வேண்டுமா அல்லது காலாதீதத்தை எழுத வேண்டுமா என்றொரு விவாதம் நிகழ்வதுண்டு. சமகாலத்தை செய்தியறிக்கையாக இல்லாமல் அதை மெய்யியல் நோக்கில் அணுகி, ஒற்றைக் கரப்பாகச் சுருக்காமல், பல பரிமாணங்களை உள்ளடக்கியதாக எழுதும் முறையே சரி என தோன்றியது.

எழுத்தாளன் ஒரு வகையில் திரிவிக்ரமன், உலகளந்த பெருமாள் என்று சொல்லலாம். அல்லது, ஆடலரசன், நடராசன் என்று சொல்லலாம். அவனது ஒரு கால் தரையில் ஊன்றியிருக்க அவனது மற்றொரு கால் வானத்தை அளந்தபடி இருக்கிறது. வரலாற்று பிரக்ஞை, அல்லது நிகழ்காலத்தின் மீது ஒரு கால் ஆழப் பதிந்திருக்க வேண்டும், ஆனால் மற்றொரு கால், காலாதீதத்தை எட்டும்போதே அது ஒரு சிறந்த நடனமாக, சிறந்த படைப்பாக விளங்க முடியும் என்று தோன்றுகிறது. 

‘அம்புப்படுக்கை’யின் பொதுவான பேசுபொருள் என்று ஒன்றை வரையறை செய்யலாமெனில், அது மரணத்தின் முன் வாழ்வின் பெறுமதி என்ன என்ற விசாரணையை மேற்கொள்கிறது என்று சொல்லலாம். இது ஒன்றும் புதிய பேசுபோருளோ, அரிய பேசுபொருளோ அல்ல. தமிழ் இலக்கியத்திலும் பிற இலக்கியத்திலும் தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் பேசப்பட்டுக் கொண்டே வருகிறது. ஆனாலும் இந்தக் கேள்வி அந்தரங்கமானது, தொந்தரவு செய்வது. ஆகவே, ஒரு எழுத்தாளனாக இந்தக் கேள்வியை நோக்கிய ஒரு பயணம், அதற்கு விடை காணும் முயற்சிகளே படைப்புகளாக வெளி வருகின்றன. அதை ‘அம்புப்படுக்கை’ கதைகளின் வழியாக சென்று தொட முயன்றிருக்கிறேன் என்று சொல்லலாம். ‘ வாசுதேவன்’, ‘அம்புப்படுக்கை’, ‘காலிங்க நர்த்தனம்’, ‘பொன்முகத்தைப் பார்ப்பதற்கும்’’,  இந்தக் கதைகள் எல்லாம் யதார்த்த தளத்தில் நிகழ்பவை எனக் கொள்ளலாம்.  அடுத்த பகுதியில் உள்ள ‘2016’, ‘திமிங்கலம்’, ‘கூண்டு’, ‘ஆரோகணம்’, ‘பேசும் பூனை’, இவ்வகையான கதைகள் யதார்த்த தளத்தை மீறிய கதைகள் என வரையறை செய்யலாம். உண்மையில் நான் எழுதிய காலத்தில் இவை இவ்வாறே அமைந்தவையல்ல. மாறி மாறி யதார்த்த தளத்திலும் யதார்த்தத்தை மீறிய தளத்திலும் படைப்புலகம் பயணித்துக் கொண்டுதான் இருந்தது. ஆனால் ஒரு தொகுப்பாக இதை தொகுக்கும்போது இவ்வகையான வரிசை சிலவற்றைச் சுட்டுவதாக எனக்கு தோன்றியது.  

‘அம்புப்படுக்கை’யில் இடம் பெற்ற இவ்விருவகை, முதல் ஐந்து கதைகள், மற்றும் அடுத்த ஐந்து கதைகளுக்கு தனித்த வாசகர்கள் உண்டு. முதல் ஐந்து கதைகள்  பிடித்தவர்களுக்கு அடுத்த ஐந்து கதைகள் மீது பெரிய ஈடுபாடு இல்லாமல் போனது உண்டு. இறுதி ஐந்து கதைகள்  பிடித்தவர்களுக்கு அடுத்த ஐந்து கதைகள் மீது பெரிய ஈடுபாடு இல்லாமல் ஆனதும் உண்டு. எனினும், எனது கதைகள் ஒரு பக்கம் நிலத்திலும் நிகழ வேண்டும், மறுபக்கம் நிலமற்ற வெளியிலும் நிகழ வேண்டும். உறுதியான மனச்சாய்வு எதுவும் எனக்கு அவ்வகையில் இல்லை. எனக்கு நாஞ்சில் நாடனை எப்படி பிடிக்குமோ அப்படித்தான் காப்காவையும் பிடிக்கும். இதில் எனக்கு எந்த குழப்பமும் நேர்ந்ததில்லை. ‘அம்புப்படுக்கை’க்கு பின்பான கதைகள் சற்றே வேறு வகையானவை என்று சொல்லலாம். 

அடுத்த தொகுப்பாக வரக்கூடிய கதைகள் பகடித்தன்மை கொண்டவை. முற்றிலும் வேறு நிறம் கொண்டவை. பழுவேட்டையர் என்று பாத்திரத்தை பிரதானமாக கொண்ட கதைகள் இவை. சிறுகதைகள் என்பதைவிட குறுங்கதைகள் என்றே வகைப்படும். இலக்கிய உலகிற்குள் நிகழக்கூடிய ஒருசில அபத்த தருணங்களைக் கொண்டு அதை பகடியாக நோக்கும் பாத்திரங்கள் இருவர்தான் பழுவேட்டையரும் கிடாரம் கொண்டானும். இவை ‘அம்புப்படுக்கை’யிலிருந்து முற்றிலும் வேறு மனநிலையில், வேறொருவர் உள்ளிருந்து எழுதியவை போல் தோன்றும். பெர்னாண்டோ பெஸ்ஸோவா அளவிற்கு பல புனைப்பெயர்கள் பயன்படுத்தியவர் இல்லை– அவர் புனைப்பெயர் என்றுகூட சொல்வதில்லை, இணை ஆளுமை என்று சொல்கிறார், அவருக்குள் இருக்கக்கூடிய பல ஆளுமைகள் சேர்ந்து புனைந்த படைப்பு ‘The Book of Disquiet’. ஒரு எழுத்தாளருக்குள் வேறு சில குரல்கள், வேறு சில ஆளுமைகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பழுவேட்டையரும் கிடாரம் கொண்டானும் அப்படிப்பட்டவர்கள் என்று நான் நம்புகிறேன். 

படைப்பினுடைய வசீகரம் என்பது நம் அனுபவங்கள், பொதுவாக ஒரு எல்லைக்கு உட்பட்டவை, ஆனால் புனைவாக ஒரு கலையாக ஆகும்போது அதில் வந்து படியும் வெவ்வேறு சாயல்கள்- ஒரு மனிதரைப் பற்றி நாம் எழுதத் தொடங்கும்போது இயல்பாகவே அந்த மனிதர் நாமறிந்த வேறு நான்கு மனிதர்களின் கூட்டாக வெளிவருகிறார். அதை எழுதி முடித்த பின்பு வாசிக்கும்போது எந்தெந்த இயல்புகள் எவரிடமிருந்து என்று எழுத்தாளன் கண்டுகொள்ள முடியும். ஏன் இந்த ரசவாதம் நிகழ்கிறது, இது எப்படி நிகழ்கிறது என்பது படைப்பின் மீதான ஒரு பெரும் போதையாக இருக்கிறது. அவ்வகையில் ஒரு படைப்பு என்பது ஒழுக்கமான, பிரக்ஞைபூர்வமான செயல்பாடாக இருக்கக்கூடாது என்று நான் நம்புகிறேன். 

ஒரு தேர்ந்த எழுத்தாளன், அல்லது ஒரு கலைஞன் ஒரே சமயத்தில் பேரறிஞனாகவும் பெரும் பேதையாகவும் இருக்க வேண்டும். அவன் பேரறிஞனாக இருப்பதற்கு என்ன பொருள் என்றால், ஒருவன் தொடர்ச்சியாக வாசித்து வாசித்து தனது மொழியைக் கூர்மைப்படுத்தி, தனது அறிவை விசாலப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும், உணர்வுகளை ஆழப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.  அதே சமயம் ஒரு புனைவில் இயங்கும்போது அவன் கற்றவை அவன் புனைவில் ஈடுபடும்போது அவனையும் மீறி புனைவில் வெளிப்படுவதை தடுப்பவையாக இருக்கக்கூடாது. கற்றவையனைத்தும் அவனை மீறி பீரிட்டு வருபவற்றை அனுமதிக்கும் தன்மை கொண்டதாக, ஒதுங்கி வழி விடுவதாக, இருக்க வேண்டும். அப்படி தன்னை மீறி ஒன்று ஒரு கதையில் நிகழும்போது அது ஒரு நல்ல கலையாக ஆவதற்கான வாய்ப்புகள் உண்டு. 

முழுக்க பிரக்ஞைபூர்வமான கதைகள் இல்லையா என்றால், உள்ளன. இவை இரண்டும் சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று நான் நம்புகிறேன். 

மொழியோ கற்றலோ இல்லாமல் வெளிப்பாடு என்பது சாத்தியமில்லை. தொடர்ச்சியாக ஒரு எழுத்தாளன் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அதே வேளையில் அவன் கற்றவற்றை மீறி தன் எல்லைகளை உடைத்துக்கொண்டு வெளிப்படுவதற்காக பணிவுடன் தன்னை மீறிய ஆற்றலுக்கு அர்ப்பணித்துக் கொண்டு வழி விட்டு ஒதுங்க வேண்டும். 

எழுத்தில் என்னென்ன செய்ய வேண்டுமென்பதில் பல திட்டங்கள் எனக்குண்டு. தற்பொழுது ஒரு நாவல் எழுதி முடித்திருக்கிறேன். ‘நீலகண்டம்’ என்பது அதன் பெயர். நியாயப்படி பார்த்தால் இந்த நாவலே முதலில் வெளிவந்திருக்க வேண்டும். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் எழுதத் தொடங்கியது. பின்னர் தொடர்ச்சியாக சில சூழ்நிலைச் சிக்கல்கள் காரணமாக இந்த நாவல் தொடர முடியாமல் போனது. இதற்கிடையிலான காலகட்டத்தில் எனது மொழியும் வாசிப்பும் பரந்து விரிந்து சென்றது.  மீண்டும் இந்த நாவலை இந்த ஆண்டு துவக்கத்தில் எழுதத் துவங்கி முதல் வடிவை ஒன்றரை மாதத்தில் எழுதி முடித்தேன்.

‘நீலகண்டம்’ ஆட்டிசம் என்ற குறைபாடுள்ள பெண் குழந்தையை மையமாகக் கொண்டது. எனினும் இதை ஆட்டிசம் தொடர்பான நாவல் என்று வரையறை செய்ய முடியாது. ஆட்டிசத்தை பின்புலமாகக் கொண்ட, குழந்தைப்பேறு, குழந்தைப் பேறின்மை, குறிப்பாக நவீன காலத்தில் எத்தகைய சவால்களை எதிர்கொண்டு வருகிறது, இதன் சிக்கல்கள் என்ன, தொன்றுதொட்டு நம் சமூகம் குழந்தைப்பேற்றுக்கு அளித்து வரும் முக்கியத்துவம் மற்றும் அழுத்தம் அதன் பின்பான உளவியல் காரணிகள், அது தற்காலத்தில் எந்தவகையான மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது, தற்காலத்தில் இதன் சிக்கல் எவ்வகை பரிமாணங்கள் கொண்டுள்ளது, இதுவே இந்த நாவலினுடைய மையக் கேள்வி. இதில் இந்த நாவல் பலபொருள் தன்மை கொண்ட நாவல் என்று சொல்லலாம். பல்வேறு பாத்திரங்கள் கதைகளைச் சொல்கிறார்கள். கொஞ்சம் தேவதை கதைச் சாயல் கொண்டதும்கூட. அற்புதத்தன்மை ஊடுருவிய கதையும்கூட. எல்லாவற்றையும் காட்டிலும் உண்மையில் இது உணர்வுபூர்வமான மையம் கொண்ட கதை என்று சொல்லலாம்.

நாவலுக்குப்பின்  வேறு சில திட்டங்கள எனக்கு உள்ளன. வேறு நாவல்கள் எழுதுவதற்கான திட்டங்கள், உந்துதல்கள், உள்ளன. ஒன்று ஆயுர்வேத, மருத்துவ பின்புலம் ஒன்டது. அதனுடைய மருத்துவ வரலாறு சொல்லும் விதமாக இரண்டாயிரம் மூன்றாயிரம் ஆண்டு கால பரிமாணத்தை அடக்கி, வேத காலத்திலிருந்து பௌத்த காலம், அதற்குப் பின்பு சம்ஹிதைகளின் காலம், பிறகு தாந்திரீகம், ரச சாஸ்திரம், முகலாய காலம், காலனிய காலம், பின்னை-காலனிய காலம் என்று இரண்டாயிரம் மூன்றாயிரம் ஆண்டு கால அறிவுத் தொடர்ச்சியை சுட்டும் விதமாக ஒரு பெருநாவல், ஆயிரம் பக்கத்துக்கு மேல் சொல்லக்கூடிய நாவல் ஒன்று, அதற்கான கடின உழைப்பு கோருகிறது. அதை எழுத வேண்டுமென்று என் வாழ்வின் மிகப்பெரிய கனவு. 
அதே போல் நான் வசிக்கும் செட்டிநாட்டின் வரலாற்றை மையமாகக் கொண்டு, குறிப்பாக 1870களிலிருந்து 1950 வரையுமான எழுபது எண்பது வருட கால அளவில்- அது மிக முக்கியமான ஆளுமைகள் வாழ்ந்த காலகட்டம்–, ஏ.கே. செட்டியார் ஆகட்டும், அழகப்பர் ஆகட்டும், ராஜா சர். அண்ணாமலை செட்டியார் ஆகட்டும், இந்த காலகட்டம் இந்தப் பகுதியில் ஒரு மிக முக்கியமான காலகட்டம். இதில் இயங்கிய விசைகள், இதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும், மையமாகக் கொண்ட வரலாற்று நாவல் எழுத வேண்டுமென்பது மற்றொரு கனவு. 

ஒரு அறிவியல் புனைவு, ஊகப்புனைவு, speculative fiction என்று சொல்லக்கூடிய புனைவு, அனேகமாக இதுவே என்னுடைய அடுத்த நாவலாக இருக்கக்கூடும். காந்திய டிஸ்டோப்பிய நாவல் என்று சொல்லலாம், ஒரு அறுநூறு எழுநூறு ஆண்டு கால பரிணாமத்தைச் சொல்ல முயலும் நாவல். இன்றிலிருந்து அறுநூறு எழுநூறு ஆண்டுகளுக்குப் பின் வாழ்க்கையை நாம் எப்படி பார்க்கிறோம் என்று பேசும். speculative fiction என்பது ஊகப்புனைவு என்று சொல்கிறோம். வரலாற்றில் ஒரு நிகழ்வு வேறு மாதிரி நிகழ்ந்திருந்தால் அது என்ன வகையான  மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் என்று ஊகிப்பது counterfactual historical fiction என்பதன் அடிப்படை. இது ஒரு சுவாரசியமான ஊகத்தின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட ஒரு நாவல், இதற்கும் நிறைய வாசிப்பு தேவைப்படுகிறது. இவற்றை விரைவில் எழுதத் தொடங்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன்.

தொடர்ச்சியாக விமரிசனங்கள் எழுதி வருகிறேன். தமிழ்ச் சூழலில் விமரிசனம் என்பது ஒருபக்கச் சார்புடையதாக அல்லது படைப்பாளனுடைய ஆளுமையைச் சிதைப்பதை நோக்கமாகக் கொண்டதாக இயங்கி வருகிறது. ஆனால் உண்மையில் ஒரு விமரிசகனாக எனக்கு, சக படைப்பாளியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு என்ன இருக்கிறது, அவருடைய பலம் என்ன, பலவீனங்கள் என்ன, இவற்றை அடையாளம் காட்டி, வாசகனுக்கு அவரை எப்படி வாசிப்பது, என்று அடையாளப்படுத்துவதே விமரிசன முறை என்று கூறுவேன். அதை விட்டுவிட்டு எழுத்தாளனை மொத்தமாக புறந்தள்ளுவது அல்லது அவரை வீழ்த்த முயல்வது என்பது அல்ல விமரிசனத்தின் நோக்கம். ஆகவே, ஒரு ஆக்கப்பூர்வமான விமரிசனச் சூழலை உருவாக்க வேண்டியுள்ளது, அரசியல் காரணிகளுக்கு அப்பால் செல்ல வேண்டிய ஒரு சூழல் இன்று தேவைப்படுகிறது. அவ்வகையில் தொடர்ச்சியாக என்னுடைய சக படைப்பாளிகள், முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் என அனைவரையும் வாசித்து விமரிசனக் கட்டுரைகளை எழுதி வருகிறேன். ‘வளரொளி’ என்னும் பெயரில் யாவரும் பதிப்பக வெளியீடாக ஒரு தொகுப்பு வெளியாகியுள்ளது. அதில் என் சக படைப்பாளிகள் ஒன்பது பேருடன் நான் எடுத்த நேர்காணல்களும் அவர்களுடைய புனைவு, நாவலோ சிறுகதை தொகுப்போ,  அதைப் பற்றிய விமரிசனக் கட்டுரையும் சேர்ந்து ஒரு புதிய வடிவில் வெளியாகியுள்ளது. 

எழுத்தாளனுக்கு, அல்லது, பொதுவாகவே ஒரு கலைஞனுக்கு, அவனுடைய குடும்பம் முக்கியமானது, அவனது படைப்புகளில் அது முக்கியமான பங்களிப்பு கொண்டது. எழுத்தாளனின் படைப்புச் செயல்பாடு மீது ஆக்கப்பூர்வமான, நேர்மறையான நம்பிக்கை, மற்றும் மரியாதை அவனுடைய அணுக்க மனிதர்களின் மனதில் இல்லையென்றால் எழுத்தாளன் தன்னை மிகவும் இழிவாகவும் தன்மதிப்பு அற்றவனாகவும் உணரக்கூடும். அவ்வகையில், எனது மனைவி டாக்டர் மானசா, அம்மா ரமா தேவி, இவர்கள் இருவருமே எனது படைப்புச் செயல்பாட்டின் மீது மரியாதையும் நம்பிக்கையும்  கொண்டவர்களாக இருக்கிறார்கள், முதன்மை  வாசகர்களாகவும் தோழர்களாகவும் இருக்கிறார்கள். கதைகளை அவர்கள் வாசிக்க வேண்டும் என்பது அல்ல, கதை குறித்து அவர்களுடன் நான் விவாதிக்கிறேன், அது பற்றி அவர்களுடன் பேசுகிறேன். சில நேரங்களில் எனக்குத் தோன்றாத சில கோணங்கள் அந்த உரையாடலில் எனக்குப் புலப்படுவதுண்டு. இனி வரும் காலங்களில் அவர்களுடைய ஆதரவும் இருப்பும் எனது படைப்புச் செயல்பாட்டுக்கு இன்றியமையாத துணை என்றே நான் நம்புகிறேன். 


Wednesday, November 13, 2019

களி- சிவமணியன் கடிதம்

அன்புள்ள சுனீலுக்கு,


நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். ஒரு இலக்கிய படைப்பினை முதன் முறையாக வாசிப்பது என்பதை ஒரு புதிய ஊருக்கு செல்லும் களிப்பூட்டும் பயணம் எனக் கொண்டால், அந்தப் பயணத்தின் சரியான வழிகாட்டும் பதாகைகளாக அந்தக் கதையின் போக்கில் பொருத்தமான தருணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் படிமங்களையும் உவமைகளையும் சொல்லலாம். நல்ல படைப்புகளில் மட்டுமே அந்த மைல்கல்களும் பாதைகாட்டிகளும் அந்தக் கதைக்கான நோக்கத்தோடு ஒத்திசையும் வகையில் அமைந்திருக்கும். அப்படிப்பட்ட கதைகளில் களியும்  ஒன்று. ‘நாள்முழுக்க புது கத்தியைப் போல் எவரையேனும் பதம் பார்க்கத் துடிக்கும்’


‘கோட்ட நாச்சி சல்லட சதங்கையோட இறங்கி ஆடுற மாதிர’


‘மெல்ல மெல்ல இரையைச் சுற்றி வரும் புலியைப் போல’


போன்ற உவமைகள் கதைத்தருணங்களை மேலும் சில முறை ஆழ்ந்து வாசிக்க வைத்தன. ‘சுவர்க்கோழிகள் சென்றுகொண்டிருக்கும் இரவை கத்தி பிடித்து இழுத்து வைத்திருந்தன’


‘விளையாட்டு வீரனால் எந்த விளையாட்டையும் விளையாட முடியும்’போன்ற அவதானிப்புகளும் கதைக்கு மேலும் வலு சேர்த்தது. விளையாட்டின் பின்புலம் படைப்புகளுக்கு எப்போதுமே புதிய வாசல்களை திறக்கும். இறகுப் பந்து விளையாட்டின் பின்புலத்தில் தமிழில் நான் வாசித்த முதல் சிறுகதை இதுதான்.   விளையாட்டு எந்த அளவிற்கு களிப்பினை தருமோ, அந்த அளவிற்கு கடுமையான தோல்வி கசப்பினையும், மீளமுடியாத மனக்காயத்தையும் ஏற்படுத்தும். விளையாட்டு வாழ்க்கையின் மாதிரிதான்,  ஆட்டத்தினை வெல்வதற்கு கேம், செட்களின் இறுதிப்புள்ளியை சீராக வென்றால் போதும், எல்லாப் புள்ளிகளையும் வெல்ல வேண்டியதில்லை.   சில தேவையில்லாத புள்ளிகளை விட்டுக்கொடுத்து கடந்து செல்லலாம்.  கணேசன், சுந்தர் உறவு ஊடுபாயும் பல பாத்திரங்களின் நிழல் மோதல்களுக்கு அடியில் ஒரு மர்மமாக புனையப்பட்டிருக்கிறது .  கதையில் வாசக கற்பனைக்கு வாயப்பிருக்கும்  இடைவெளிகள் விடப்பட்டிருக்கிறது, சுந்தருக்கும் கணேசனுக்குமான மனவிலக்கத்தின் காரணம் என்ன? சந்திரனின் மீது சுந்தருக்கு  கசப்பு ஏன்?  பூரணிக்கும் கணேசனுக்குமான உறவு என்ன?நிதானமான பாத்திரமாக புனையப்பட்டிருக்கும் சந்திரனின் மரணம் ஏன் நிகழ்ந்து?இதில் சந்திரனின் மரணம் பற்றிய இடைவிடலில்தான் என் கவனம் சென்றது.  சந்திரன் விளையாடும்போது இறந்திருக்கிறார். அதுநாள் வரை இணைஜோடியாக விளையாடிய கணேசனும், சந்திரனும், ஏதேச்சையான ஒரு நாளில் எதிராளிகளாக விளையாட தூண்டப்பட்டிருக்கலாம். ‘தேவையற்ற அசைவு என எதுவுமே இரல்லாமல்  எப்போதும் ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில்’ வைத்திருக்கும் சந்திரனுக்கு , ஆட்ட உச்ச தருணத்தில் பழகியிராத கணேசனின் எதிர் மூர்க்கத் தாக்குதல் ஒரு உச்ச தருணத்தில் மனக்காயத்தை (mental injury) ஏற்படுத்தி  எங்கோ முட்டி மோத மீளவழியில்லாமல் மார் உறைந்து இறந்திருக்கலாம். எப்போதுமே கட்டற்று ஆடினாலும், இறுதிப் புள்ளியை தன் வசப்படுத்தும் கணேசனுக்கு,  முன்னர் சந்திரனால், இப்போது சுந்தரினால் மனக்காயம் பெற்றாலும், வேறு விளையாட்டிற்கு தன்னை மாற்றிக்கொண்டு மீள்வார் எனத் தோன்றுகிறது. 


அன்புடன்,

சிவமணியன்

அன்புள்ள சிவமணியன்,

நலம். கடிதத்திற்கு நன்றி. சந்திரனின் மரணம் குறித்து சுவாரசியமான அவதானிப்பு. இதை இன்னொரு கதையாக எழுதிப்பார்க்கலாம். ஆனால் இந்தக்கதைக்குள் அவர் எதிரே விளையாடியதற்காக தடம் ஏதுமில்லை என்றே எண்ணுகிறேன். 

அன்புடன் 
சுனில் 

Sunday, November 10, 2019

களி - பிரபு முருகானந்தம் வாசிப்பு

(பிரபு முருகானந்தம் எழுதிய கடிதம்)

களி சிறுகதை வாசித்தேன்.  காரைக்குடியில் நீங்கள் கூறக் கேட்கையில் பிடிபடாத தளங்கள் கதையை வாசிக்கையில் திறந்து கொண்டது.  நந்தவனத்தில் தந்தையின் உயிர் பிரியும் கணம் சுந்தர் கண்டங்கள் தாண்டி வசிக்கின்றான். அவரது மரணம் அவனை ஊர் திரும்ப வைக்கின்றது. வந்ததும் தந்தையின் தொழிலைச் தொடரச் செய்கிறது. தொழிலில் தந்தையை விடவும் சாமர்த்தியக்காரன் சுந்தர். வசந்த மாளிகையை கிட்டத்தட்ட முற்றிலுமாக புதுப்பின்கின்றான். வருமானம் பெருகுகின்றது. கொஞ்சம் கொஞ்சமாக அவன் தந்தையின் தடையங்கள் வசந்த மாளிகையில் இருந்து மறைந்து விடுகின்றது. ஆனால் அவன் மனம் தந்தையை தேடும் களம் வசந்தை மாளிகை அல்ல. நந்தவனம். அதுதான் சந்திரனின் இயல்பான களம். அவரது இறுதிச் சாயலாக அங்கு எஞ்சியிருப்பது கணேசன் மட்டும் தான்.  அவன் தந்தையின் மரணம் மனதில் ஏற்படுத்தியிருக்கும் வெறுமையை கணேசன் ஒரு கணமேனும் நிரப்ப மாட்டாறா என சுந்தரின் மனம் தவிக்கின்றது. அவன் கணேசனை சந்திரனாக கற்பனை செய்ய முயற்சிகின்றான். அது கணேசனுக்கும் அது தெரியும்.  இளமையிலியே மைந்தனை இழந்த கணேசனின் மனமும் சுந்தரை மகனாகச் சென்று அறவனைக்கத் துடிக்கின்றது.  ஏனோ சுந்தர் வாங்கித் தந்த ‘ஆஷ்பி’ ராக்கெட்டை மடியில் அமர்த்தி குழந்தையாக பாவிக்க முடிந்த கணேசனால் சுந்தரைச் மைந்தனாகக் தழுவிக்கொள்ள இயலவில்லை.  இவ்விரு மனங்களின் அன்பும், அகங்காரமும் ஆடும் ஆட்டம் களி.   

Wednesday, November 6, 2019

களி – சுசித்ரா, கார்த்திக்- எதிர்வினைகள்


அன்புள்ள சுனீல்,

கதையை இன்று தான் வாசிக்க நேரம் அமைந்தது, தாமதத்துக்கு மன்னிக்கவும். 

கதை மிகச்சிறப்பாக இருந்தது. உங்கள் கதைகளிலேயே மிகவும் நுண்ணுய தளங்களை தொட்டவற்றில் ஒன்று என சொல்லலாம். அவை எல்லாம் பின்னியிருந்த விதம், பல அடுக்குகளை கோத்து வைக்கும்போது உருவாகும் மயக்கம், எல்லாம் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. 

ஒரு பக்கம் கணேசன் - சந்திரனுக்கு இடையேயான முந்தைய தலைமுறைபாணி உறவு. ஒரு வழியில் அந்தஸ்து பார்க்காத நட்பு. அதன் அடியில் அவர்களுடைய வெவ்வேறு ஆளுமைகள், அதன் வெளிப்பாடு. 

இருவருக்கும் அடிப்படையாக வாய்த்த அதிர்ஷ்டத்தில் ஒரு சமமின்மை உள்ளது - வாழ்க்கையில் பொதிந்துள்ள ஆதார அநீதி என்று அதனை சொல்லலாம். பிறப்பில் ஆரம்பித்து தொடர்கிறது. ஆனால் அவர்களுடைய ஆளுமைப்பண்புகளே விதி போட்ட புள்ளிகளை கோலமாக்கி அவ்வாழ்க்கைகளை தீர்மானிக்கிறது. உதாரணம் கணேசன் படிக்காமல் போவது, அவன் தென்காசிக்கு போய் மாட்டிக்கொள்ளும் இக்கட்டு இத்யாதி. 

இவர்கள் இருவருக்கிடையேயான முரண் கதைக்குள் தெளிவாக இருந்தாலும் அவர்களது உறவும் நெருக்கமும் சற்று பூடகமாக சொல்லப்படுகிறது. என்னை மிகக்கவர்ந்த பகுதி இது. குறிப்பாக கணேசன் குடித்து விட்டு படுத்திருக்கையில் சந்திரன் அவன் முன்னால் தோன்றும் இடம். இறுதிக்களத்தில் கணேசன் கிட்டத்தட்ட சந்திரனாகவே மாறுவது.  கணேசன், சந்திரன், இருவரும் அவரவர்கள் விதத்தில் அகங்காரிகள். அவர்களுக்கிடையேயான உறவில் சமநிலை என்பது என்பது எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்று யோசிக்க வைத்தது.

இன்னொரு திரி இறந்துபோன சந்திரனுக்கும் அவன் மகன் சுந்தருக்குமான உறவு. ஒரு விதத்தில் மொத்தக்கதையையும் இந்த ஒரு உறவுச்சிக்கலின் விரிவாக்கம் என்று படிப்பதற்க்கான இடம் கதைக்குள் இருக்கிறது.

மூன்றாவது கணேசனுக்கும் சுந்தருக்குமான உறவு. சமூகப்படிநிலை, அந்தஸ்து, என்பதைத்தாண்டி அப்பாவின் நண்பர் என்ற அகங்காரமோதலையும் தாண்டி ஒரு மாற்று அப்பா உறு என்ற இடம் வரை வாசிக்க வைத்தது.

சாதி, கல்வி, அந்தஸ்து, உறவுகள், அன்பு, என்று மனிதர்களுக்கிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளையும் அதில் விளையும் அகங்காரத்தையும் கதை பல தளங்களில் தொட்டு விரிக்கிறது. இந்தகக்தையை ஷட்டில் விளையாட்டு போன்ற வித்தியாசமான கதைகளத்தின் பின்னணியில் அமைத்தது இன்னும் வலு சேர்க்கிறது. இறகுப்பந்து மென்மையானது, ஆனால் அதை அடித்து அடித்து மட்டையாடுகிறார்கள். அகங்காரத்தை எவோக் பண்ண நல்ல குறியீடு. 

தமிழகத்துச் சிற்றூர்களில் வெவ்வேறு விளையாட்டுகளுக்கு இப்படி குழு உருவாக்கி கேம் ஆடி ஊருஊராகச்சென்று கப் அடித்து வரும் ஒரு subculture உள்ளது. எங்கள் ஊர் பக்கம் ஹாக்கி அப்படியான ஒரு விளையாட்டு. என் நண்பன் ஒருவன் கல்லூரி படிக்கையில் யோகா சேம்பியன்ஷிப் என்று சொல்லி இந்தியா முழுவதும் சுற்றியிருக்கிறான் - பெரும்பாலும் சிற்றூர்கள், கிராமங்கள். இலக்கியத்தில் இதெல்லம் அதிகம் எழுதப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. உங்கள் கதையில் அந்த பின்னணி மிக இயல்பாக வந்திருக்கிறது.

மிகச்சிறப்பான கதை சுனீல். வாசித்து உடனே எழுதுகிறேன். கொஞ்சம் அசைபோட்டால் வேறு வகைகளிலும் கதை திறந்துகொள்ளும் என்று நினைக்கிறேன்.

வாழ்த்துக்கள்.

சுசித்ரா

----

மூன்று ஆண்கள் தனிப்பட்ட முறையில் வெவ்வேறு ஆளுமைகள் , வெவ்வேறு காலகட்டங்கள் அவர்களிடையேயான தனிப்பட்ட உறவுகள்.அந்தரங்கமான உறவுகள் - பள்ளி கால நண்பன் , பாட்மிண்டன் சொல்லி தரும்
ஆசிரியன் ,அப்பாவின் நண்பர் .

குடும்ப அமைப்பில் ஒரு லேயர் , குடும்பத்தில் அவர்களின்  பங்களிப்பு , அவர்களின் மேல் குடும்பத்தின் பாதிப்பு (சுந்தர் படிப்பு குறித்து அப்பா தக்க இடத்தில் மடை மாற்றி விடுதல் ) குடும்பத்தில் அவர்களின் இடம் , அணுகுமுறை அதில் காணக்கிடைக்கும் பேதங்கள்.
குடும்ப ரீதியான உறவு முறைகள் ( மாமா , தாத்தா , தங்கச்சி ) 

சமூக அமைப்பில் அவரவர்களின் இடம் , அது சார்ந்த privilege , அது அளிக்கும் பாதுகாப்பு ( சுமூகமான காதல் திருமணம் vs கைகலப்பில் முடியும் காதல் ) அதன் அடுக்குமுறை ( முதலாளி /தொழிலாளி , நட்பு vs மரியாதை)

இதையெல்லாம் இணைத்து லாவகமாக ,உறுத்தாமல மிக அழகாக பின்னப்பட்டதும் தான் கதையின் ஹைலைட்டே.

Badminton game என்பது ஒரு proxy, அகத்தில் அந்தரங்கமாக நடக்கும் விஷயம் புறத்தில் ஒரு ஆட்டமாக உருக்கொள்கிறது .

இதிலிருந்தும் முளைத்துச்  செல்லும்
பல்வேறு கிளைகள் , சுந்தரின் அப்பா மீதான கோபம் , சுந்தரோடு இணைந்து ஆட என்னும்
கணேசனின் விழைவு ...அதை மூர்க்கமாக மறுக்கும் சுந்தர் மனநிலை ..மற்றவர்களிடம் தோற்றாலும் சுந்தரிடம் தோற்றுவிட முடியாத / கூடாத ஒரு மனநிலை ..

தன்னாலும் சங்கரனைப்போல ஆட முடியும் என்று அறிவிக்கும் புள்ளி இன்னும் நுட்பமா இருக்கு ..
i can be him , i could have been him , நண்பனை அந்தரங்கமாகவும் , புறவயமாகவும் internalise செய்ய முடிகின்ற ஒரு புள்ளி .

இந்த ஊடுபாவுகளை subtle ஆக சொல்லியிருந்தது சிறப்பு.- 

கார்த்திக் 

Sunday, November 3, 2019

களி


(2019 ஆண்டு தினகரன் தீபாவளி மலரில் வெளியான கதை. சற்றே தணிக்கை செய்யப்பட்டு இந்தக்கதை மலரில் வெளியானது. இங்கே தணிக்கை எய்யாமல் அளிக்கிறேன்) 

விசையுடன் சுந்தரின் அடிவயிற்றை நோக்கி சீறி வந்த இறகுப் பந்தை தடுப்பதற்கு முடியவில்லை. அடிவயிறு சுரீர் என எரிந்தது. கணேசன் எகிறிக் குதித்து ஸ்மாஷ் அடித்து முடித்ததும் முதுகை வளைத்து ஷட்டில் ராக்கெட்டை அவருடைய ஆண்குறிக்கு நேராக ஆட்டி “ஒம்மால..” என்றார். ஒவ்வொருமுறை புள்ளி எடுக்கும்போதும் இப்படிச் சரளமாக ஏதோ ஒரு ஆபாச வசை வந்து விழும்.  வியர்த்து சோர்ந்து தலைக் கவிழ்ந்து நடந்தான். நெஞ்சுக்கூட்டில் இதயம் அதிவேகமாக அதிர்ந்தபடி இருந்தது. உடல்முழுவதும் அதன் துடிப்பை உணர்ந்து கொண்டிருந்தான். ஆழ்ந்து மூச்சிழுத்து ஆசுவாசிக்க முயன்றான். இப்போதெல்லாம் வழமைக்கு மீறி இதயம் துடிக்கும்போது அச்சத்தால் உடல் மேலும் வியர்த்து ஒழுகுகிறது. அண்மைய சில மாதங்களாக ஆடுகளத்தில் மட்டுமே அவன் இந்த பதட்டத்தை உணர்கிறான். ஏழு மாதங்களுக்கு முன் ஒரு ஞாயிற்றுக் கிழமை அவனுடைய தந்தை சந்திரன் இதே ‘நந்தவனம்’ இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கில் ஆட்டத்தின் உச்சக் கணத்தில்  மயங்கிச் சரிந்தார். மருத்துவமனைக்குள் நுழைந்தபோதே சடலம் என அறிவித்தார்கள் மாரடைப்பு உயிரை நிறுத்தியிருந்தது. அதன்  பின் ஒவ்வொருமுறை ஆடுகளத்தில் இதயம் கட்டு மீறும் தோறும் சுந்தர் அச்சத்தால் பீடிக்கப்பட்டான். ஆவேசமும் ஆற்றாமையும் சேர்ந்துக்கொள்ளும். நெற்றிப்பொட்டில் நாளத் துடிப்பை உணர்வான். அப்போது அவனுடைய முகமும் கரங்களும் சில்லிட்டு உணர்வற்று போகும்.  

தனித்து தளும்பிக் கொண்டிருக்கும் கீழ் ரப்பைகளும் ரத்தச் சிவப்பு சிடுக்குவரிகள் பாயும் கண்களும் கணேசனை பெரும் குடியன் என நிறுவும். பனியனைக் கழட்டி வியர்வையைப் பிழிந்தார். “என்ன சார் நைட்டு குடிச்ச பீரெல்லாம் வேர்வையா ஊத்துதா” சிரித்துக்கொண்டே கேட்டான் ராஜேஷ், விளையாட்டில் சில மாதங்களாக அவருடைய இணை. மெலிந்த தேகம். அவர் உடல் சற்றே கூடுகட்டி விலா எலும்புகள் ஆர்மோனியக் கட்டைகள் போல் மேலும் கீழுமாக துருத்திக்கொண்டிருந்தன. குடியர்களுக்கே உரிய பானை வயிறு. “ராஜேஷு அதெல்லாம் ஒன்னுக்கு வரதாவைங்க குடிக்கிறது. நமக்கு எதுக்கு அந்த கருமம். எப்பவுமே ஹாட் தான்”. சுந்தர் நிலைக்காற்றாடிக்கு முன் தன்னை உலர்த்திக் கொண்டிருந்தான். இதயத் துடிப்பு இன்னும் சமனடையவில்லை. விளையாட்டு அரங்கத்தின் கூரைத் தகரத்தில் விழுந்த தூறல் பேரோசையாக உள்ளே எதிரொலித்துக் கொண்டிருந்தது. ஷட்டில் ராக்கெட்டை எரிச்சலில் அசட்டையாக நாற்காலியின் மீது வீசினான். கணேசன் நமுட்டுச் சிரிப்புடன் அவனைக் கடந்தார். 

ஒரேயொருமுறை ஒருமுறை இந்தக் கிறுக்குக் கிழவனை வென்றாக வேண்டும். இத்தனை மாதங்களில் ஒருமுறை கூட அது இயலவில்லை எனும் எண்ணம் ஆற்றமையாக அவனுள்ளிருந்து குமைந்தது. முன்பைப்போல் அவர் இப்போது ஒன்றும் வெல்ல முடியாதவர் அல்ல. மற்ற இரண்டு இணையர்களிடம் அவ்வப்போது தோற்றிருக்கிறார். அவரை வென்றவர்களை சுந்தர் பலமுறை வென்றிருக்கிறான். இன்று என்றும் இல்லாத அளவிற்கு வெற்றிக்கு வெகு அண்மையில் இருந்தான். எப்போதும் வலையை சீய்த்துக்கொண்டு வரும் கணேசனின் ஸ்மாஷ்கள் வலையைக் கடக்க முடியாமல் திணறின. வெகு அரிதாகவே அவர் அடிப்பது களத்திற்கு வெளியே விழும். அன்று ஏதோ லயப் பிசகு போல் நான்கைந்து முறை இறகுப்பந்து வெளியே சென்று விழுந்தது. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே சுந்தரும் சந்தானமும் முன்னிலையில் இருந்தார்கள். ஒருகட்டத்தில் 19-13 என்ற புள்ளிக் கணக்கில் ஏறத்தாழ வென்றுவிட்ட மதர்ப்புடன் இருந்தபோது கணேசன் தொடர்ச்சியாக எட்டுப்புள்ளிகள் எடுத்து ஒற்றை ஆளாக அவர்களை மூச்சிறைக்கச் செய்து வென்றார். அவர் வயதிற்கு சந்நதம் கொண்டவர் போல் ஆடினார். ஆடுகளத்தின் எல்லா மூலைகளுக்கும் முழு விசையுடன் ஓடினார். டிராப்பும் ஸ்மாஷும் மாறி மாறி விழுந்தன. இறுதி புள்ளிக்காக மட்டும் இரண்டு நிமிடம் போராடினார்கள். ஆனால் எல்லாம் வீண். 

கணேசன் அணிந்திருந்த விளையாட்டு சப்பாத்துக்களில் இருந்து இரண்டு கால்களின் கட்டைவிரல்களும் கிழிசலை மீறி எட்டிப்பார்த்தன. அவர் காலுறை அணிவதில்லை. அவை சந்திரனுடைய பழைய சப்பாத்துக்கள்.   ‘நந்தவனத்தில்’ கணேசன் விளையாடுவதற்கான வருடச் சந்தாவை சந்திரன் தான் அளிப்பார். ‘வசந்த மாளிகை’ அணியின் வரவு செலவுகளை அவரே பார்ப்பார் என்பதால் கணேசனிடம் அவர் எந்தத் தொகையும் கேட்டதில்லை. 
முப்பது வருடங்களுக்கு முன் முதன்முறையாக பச்சைநிற அம்பாசிடர் கார் வாங்கியது முதல் கணேசன்தான் சந்திரனுடைய காரோட்டி. அதற்கும் முன்பு அவர்கள் பத்தாம்  வகுப்புவரை வகுப்புத் தோழர்கள். அப்போது அவர்கள் வேலங்குடி ‘போல் ஸ்டார்’ கால்பந்து அணியின் நட்சத்திரங்களாக ஊர் ஊராக பயணித்தார்கள். சுற்றித்திரிந்த சந்திரனை பொடனியில் போட்டு அவருடைய தந்தை ராமநாதன் கல்லூரிக்கு அனுப்பினார். கல்லூரி முடித்து வந்ததும் சந்திரன் அவருடைய அப்பாவின் நகைக்கடையை நிர்வகிக்கத் தொடங்கினார். கணேசன் அப்போது கால்பந்து வட்டாரத்தில் பிரபலமான கோலி. பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு ஊர் ஊராக விளையாடச் சென்றார். தென்காசிக்கு விளையாடச் சென்ற இடத்தில் ஒரு கள்ளவீட்டுப் பெண்ணை காதலித்து, அவளை தனித்து சந்திக்க முயன்று வகையாக சிக்கினார். “பறப் பயலுக்கு எங்கூட்டு பொண்ணு கேக்குதோ” என மூன்று நாட்கள் அன்ன ஆகாரம் இன்றி கட்டிவைத்து அடித்தார்கள். செய்தியறிந்து ராமநாதன் தான் மெய்யப்பன் அம்பலத்தையும் கூட்டிக்கொண்டு நேரில் பேசி அழைத்து வந்தார்.  மொட்டைத்தலையுடன் ஊருக்கு வந்த கணேசன் மனம் கசந்து விளையாட்டை நிறுத்திவிட்டு, சிங்கப்பூருக்கு பிழைக்கச் சென்றார். சந்திரனுக்கும் பூரணிக்கும் திருமணம் ஆகி மூன்றாண்டுகளுக்கு பின்னர் கணேசனுக்கு மணமானது. அதுவும் ஒரு துரதிஷ்ட நிகழ்வுதான். ஊருக்கு வந்திருந்த கொஞ்ச காலத்தில் சித்தாள் ஒருத்தி அவரால் கர்ப்பமானதாக பஞ்சாயத்து கூடியது. ஒரேசாதி என்பதால் பெரியவர்கள் பேசி முடித்து வைத்தார்கள். திருமணம் முடித்த கையோடு சிங்கப்பூருக்குத் திரும்பினார். அவருடைய ஒரே மகன் ஒன்றரை வயது கடந்தும் தவழவில்லை என்பதால் ஊர்த் திரும்பியவர் பின்னர் சிங்கப்பூர் செல்லவில்லை. ஆறேழு வருடங்கள் அவனைச் சுமந்துகொண்டு ஆசுபத்திரி ஆசுபத்திரியாகத் திரிந்தார். வலிப்பும் சேர்ந்துகொண்டது. ஒரு மழைநாள் இரவில் அவன் மூச்சுத் திணறி இறந்தும் போனான். கட்டற்று குடித்தார். வைத்தியச் செலவிற்கு வாங்கிய கடன் வேறு அவர்களை நெருக்கியது. ஆறேழு மாதங்கள் பொறுத்துப்பார்த்த அவருடைய மனைவி “உன் சங்காத்தமே வேணாம்... அத்துவிடுங்க” என்று பிறந்த வீட்டிற்கே போய்விட்டார். எலி மருந்து குடித்து ஆசுபத்திரியில் கிடந்தவரை  சந்திரன்தான் மெதுவாக மீட்டு கூடவே வைத்துக்கொண்டார். மண் தரையின் மீது உயரமான ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் போட்டு, மூலைக்கு ஒரு குழல் விளக்கை நட்டு ‘நந்தவனத்தை’ உருவாக்கிய  தொண்ணூறுகளின் மத்தியில் இருந்தே இணைந்து இறகுப்பந்து விளையாடத் தொடங்கினார்கள். இருவருமே இறகுப்பந்திற்கு புதியவர்கள். ஆனால் குறுகிய காலத்தில் அதன் நுண்மைகளை பழகினார்கள். விளையாட்டு வீரனால் எந்த விளையாட்டையும் விளையாட முடியும், ஏனெனில் எல்லா விளையாட்டின் அடிப்படைகளும் ஒன்றே என்று உணர்ந்தார்கள். ‘வசந்த மாளிகை’ எனும் பெயரில் எட்டு பேர் கொண்ட அணியை உருவாக்கினார்கள். ‘நந்தவனத்தின்’ சிறந்த ஆட்டக்காரர்கள் மட்டுமே அவ்வணியில் விளையாட முடியும். ஒவ்வொரு வருடமும் மாவட்டத்தில் நடக்கும் மூன்று டோர்னமென்ட்களில் பங்கேற்றார்கள். எப்போதுமே வெற்றியாளர்கள் அல்லது இரண்டாம் இடம். 

நாளடைவில் அவர்களுக்கு காலை ஒருமணிநேர விளையாட்டு பெரும் போதையென ஆனது. ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து உடற்பயிற்சி செய்து ஐந்தரைக்கு எல்லாம் ‘நந்தவனத்தில்’ விளையாடத் தொடங்கினார்கள். ஒருநாள் விளையாடவில்லை என்றால் கூட சோர்வு தொற்றிக்கொள்ளும். நாள்முழுக்க புது கத்தியைப் போல் எவரையேனும் பதம் பார்க்கத் துடிக்கும். சந்திரனின் ஆட்டத்தில் தேவையற்ற அசைவு என எதுவுமே இருக்காது. எப்போதும் ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். வயதிற்கும் உடல்வாகிற்கும் சம்பந்தமில்லாமல் உடல் வளையும். பரபரப்பு ஏதுமின்றி நிதானமாக ஆடுவார். எதிராளியின் ஆற்றலை வற்றச் செய்வதே அவர் வழிமுறை. முழுவதும் சோர்ந்ததும் எளிதாக கவனத்தை குலைத்து, போக்கு காட்டி வெல்வார். மெல்ல மெல்ல இரையைச் சுற்றி வரும் புலியைப் போல. கணேசன் நேரெதிராக மின்னலைப் போல் விளையாடுவார். அவருடைய ஆட்டம் ஆக்ரோஷமும் அளப்பறியா வேகமும் கொண்டது. கட்டற்றவர். பல நேரங்களில் அவர் எப்படி இப்படி அடித்தார், எப்படி இந்தப் பந்தை எடுத்தார் என தர்க்கப்பூர்வமாக விளக்கிக்கொள்ள முடியாது. சந்திரனின் மொழியில் சொல்வதானால் “கோட்ட நாச்சி சல்லட சதங்கையோட இறங்கி ஆடுற மாதிரி”. ஒருவரையொருவர் நிரப்பினார்கள். விளையாட்டின் இந்த இயல்புகள் அவர்களுடைய தனிவாழ்விலும் தொடர்ந்தன. செருப்பை வாயிலில் கழட்டி வைக்கும் முறையிலிருந்து, மது அருந்துவது வரை எல்லாவற்றிலும் சந்திரன் நிதானம் கடைப்பிடித்தார். கணேசனுக்கு எல்லாமும் மீறல்தான். கணேசன் நாள் முழுக்க சந்திரனுடனேயே திரிவார். 

வெளியே தூறல் வலுக்கத் தொடங்கியது. அவர்களுடைய களத்தில் அடுத்து ஆட வேண்டிய இஞ்சினியர்கள் அணி சரியாக காலை 6.30 க்கு வந்து ‘டச்சு’ ஆடத் தொடங்கியிருந்தார்கள். கணேசன் மழைக்கு ஒதுங்கி புகையிழுத்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். இரவெல்லாம் தூறி பாதையில் சிறு சிறு செம்மண் குட்டைகள் தோன்றின. இரவுக்கு முந்தைய கணம் போல் அந்தக் காலையில் வானம் கறுத்திருந்தது. சுவர்க்கோழிகள் சென்றுகொண்டிருக்கும் இரவை கத்தி பிடித்து இழுத்து வைத்திருந்தன. கணேசன் புகைத்து முடிக்கும் வரை சுந்தர் காத்திருந்தான். சிகரெட்டின் இறுதி கனல்துண்டு தேங்கிய நீரில் சீறி அணைந்தது. கணேசன் ஓடிச்சென்று சற்று தொலைவில் இருந்த சாம்பல்நிற ஸ்கோடா காரை எடுத்துக்கொண்டு வந்தார். கறுப்புச் சக்கரங்களில் செம்மண் சேறு படிந்திருந்தது. சுந்தர் ஏறிக்கொண்டான். அவர்கள் இருவருக்கும் இடையே உறைந்த மௌனம் அவர்களை வெகுதொலைவில் நிறுத்தியது. மகரநோன்பு பொட்டலைக் கடந்து செல்லும்போது சுந்தரை இளம் வயது நினைவுகள் சூழ்ந்தன. சிறுவனாக இருக்கும்போது கணேசன் அவனை சைக்கிளில் அமர்த்தி இந்தப் பொட்டலைக் கடந்ததும் உள்ள ஆனந்த் டாக்கீஸில் “ராஜா சின்ன ரோஜா” பார்க்க அழைத்து வந்தார். ஏற்காட்டு உண்டு உறைவிட பள்ளியில்  படித்துக்கொண்டிருந்தபோது விடுமுறை காலங்களில் அவனுக்கு இறகுப் பந்தை பழக்கியவர் அவர்தான். பிலானியிலிருந்து கல்லூரி விடுமுறைகளில் ஊருக்கு வரும்போது அவருடன்தான் விளையாடுவான். சந்திரன் எப்போதும் அவனுடன் சேர்ந்து விளையாட மாட்டார். “ஒரு குடும்பத்துக்காரங்க ஒண்ணா வெளாடக் கூடாது” என்பார். கணேசனின் இணையாக சுந்தர் எத்தனையோ முறை விளையாடி வென்றிருக்கிறார்கள். “தம்பி நம்மள விடவும் நல்ல ஆட்டக்காரன்” என்று சந்திரனிடமே கணேசன் சொன்னதுண்டு.  

வீட்டிற்கு வந்து வண்டியை நிறுத்திவிட்டு இறங்கியதும். “இந்தாங்க அண்ணே காபி” என்று பூரணி கணேசனிடம் லோட்டாவை நீட்டினார். சுவரில் சாய்ந்து மடிப்பு குலையாத நாளிதழை விரித்துக்கொண்டு ஆற அமர குடித்தார். சுந்தரின் குழந்தைகள் அஜயும் ஆராதனாவும் இரவுடைகளோடு வெளியே வந்து உற்சாகமாக தாத்தாவின் அருகே அமர்ந்தார்கள். தாளை மடித்துவிட்டு அவரும் வாயால் பீப்பி ஊதுவது, வாத்து போல் ஓசை எழுப்பது, காசை காணாமல் ஆக்கும் வித்தையை செய்வது என உற்சாகமாக விளையாட ஆரம்பித்தார். சுந்தர் சிறுவயதில் இருந்தபோது அவனுக்கு செய்து காட்டிய அதே வித்தைகள்தான். கடுப்புடன் “ஸ்கூலுக்கு கெளம்பனும்” என்று சொல்லி அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றான். ராஜியிடம் எரிச்சலுடன் “அந்தக் கிழவரிடம் குழந்தைகளை அனுப்பாதே என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்” என ஆங்கிலத்தில் கடிந்தான். ஒன்றும் சொல்லாமல் பிள்ளைகளை முறைத்தபடி அவர்களை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள். இரவாடையில் இருந்தாள். கோபித்து கடந்து சென்றபோது உள்ளுக்குள் கிளர்ந்தான். திருமணம் ஆகி ஒன்பது ஆண்டுகளில் அவள் மேலும் மேலும் என அழகாகிக் கொண்டிருப்பதாக எண்ணினான். அவர்களுடையது காதல் திருமணம் இருவீட்டு சம்மதத்துடன் நிகழ்ந்தது.    

குளித்து தந்தநிற சட்டை கால்சட்டையை அணிந்து வந்தான். அது சந்திரனின் பாணி. பூரணியின் கால்தொட்டு வணங்கினான் “இன்னிக்கு ரெஜிஸ்ட்ரேஷன்” என்றான். “ஒன்னும் ஓராயிரமா இருப்ப... அப்பாட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கப்பா” என்றார். படமாகத் தொங்கிக்கொண்டிருந்த தந்தையை கண்மூடி வணங்கும்போது ஏனோ உள்ளே ஒரு கடும் கசப்பை உணர்ந்தான். உணவு மேஜையில் உண்டுகொண்டிருக்கும்போது பூரணி அவனருகே அமர்ந்து 

“தம்பி..கணேசண்ணன் பணம் கேட்டிருந்துச்சே” என்றார்.
“எதுக்கு?”
“ஓடு மாத்தணும்னு சொன்னாருன்னு அன்னிக்கே சொன்னேனப்பா”
“ம்”
“ஐப்பசிக்கு இன்னும் ஒருவாரம் தான இருக்கு..இப்பவே ஒழுகுதாம்”
“ம்.. பாப்போம். காசு கொடுத்தா குடிச்சு அழிக்கிறது. அந்தாளு குடிச்சது பத்தாதுன்னு உம்புருசனயும் குடிக்க வெச்சு கொண்ணேப்புட்டாரு”
“விடுப்பா, அதெல்லாம் பழய கத, உங்கப்பாரு எப்பவுமே அளவு தாண்ட மாட்டாரு. எல்லாம் விதி!” 

“சரி. ஏன் இத அவரு வாயத்தொறந்து கேக்க மாட்டாராமா?”
“என்கிட்டே கேட்டா என்ன.. உன்கிட்ட கேட்டா என்ன.. எல்லாம் ஒண்ணுதானே”

“நிச்சயம் ஒண்ணு இல்ல. மொதலாளி விசுவாசம் கூட கெடயாது அந்த ஆளுக்கு. காலேல ஆட்டத்துல ஜெயிச்சுட்டு எவ்வளோ அசிங்கமா செஞ்சாரு தெரியுமா? நிதம் இதேமாதிரி தான். வாயதொறந்தாலே நாராசம். அந்த ஆளால நமக்கு சல்லிக்காசு பிரயோஜனம் இல்ல.” இதயத் துடிப்பு தாறுமாறாக எகிறியதை உணர்ந்தான். 

பூரணி மெளனமாக அகன்றாள். சுந்தர் தயாராகி வரும்போது பூரணி கணேசனிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். சுந்தர் அவர்களைக் கடந்து காருக்குச் சென்றான். உரையாடலை விட்டுவிட்டு வேகவேகமாக அவனுக்கு முன் காருக்குள் ஏறினார் கணேசன். ‘வசந்த மாளிகையை’ நிர்வகிக்க சுந்தர் அவனுடைய லண்டன் வேலையை விட்டுவிட்டு வர வேண்டி இருந்தது. வந்த சில மாதங்களில் கடையின் அமைப்பை மாற்றினான். சென்னையிலிருந்து விளம்பர நடிகர்களை அழைத்து புதிய விளம்பரப்படம் ஒன்றை படமாக்கினான். முழுவதும் குளிர்சாதன வசதி செய்து, சீருடை அணிந்த இளம் பெண்களை வேலைக்கு அமர்த்தினான். சந்திரன் செய்துகொண்டிருந்ததைக் காட்டிலும் இருமடங்கு அதிக வியாபாரத்தை ஆடி சீசனில் செய்து காட்டினான். அப்பாவின் ஆட்கள் எவரையும் அவனாக வேலையை விட்டு நீக்கவில்லை என்றாலும் மாறிவரும் சூழலை உணர்ந்தவர்கள் இனியும் தங்கள் அழுக்கு வேட்டியுடன் சைக்கிளில் கடைக்கு வரமுடியாது என்பதை புரிந்துகொண்டார்கள். தங்களைப் பொருத்திக்கொள்ள முடியாத திகைப்பில் ஒவ்வொருவராக சொல்லிக்கொண்டு வெளியேறினார்கள்.  

கடையில் நாள் முழுக்க சுந்தரின் கண் பார்வை படும் இடத்திலேயே கணேசன் நின்றிருந்தார். வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் இல்லாத வகையில் நாற்காலிகளை இழுத்துப் போட்டார். கண்காணிப்பு கேமரா அறையில் அமர்ந்து கடையின் நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டிருந்தபோது கதவைத்தட்டி காபி கொண்டு வந்து கொடுத்தார். முகம் பார்த்து சிரிக்கக் கூட செய்தார். சுந்தர் அவற்றை கவனித்தாலும் ஒருவித அசட்டையுடன் அவரைக் கடந்தான். இரவு கணக்குப் பார்த்து முடித்ததும் சுந்தர் கிளம்பியபோது மழை தூறிக்கொண்டே இருந்தது.
“தம்பி..” கணேசனின் தயக்கமான குரல் ஒலித்தது. கண்ணாடி வழி அவனைப் பார்த்தார். என்ன என்பது போல் தலையுயர்த்தினான். 

“வீட்டுல ஒழுகுதுப்பா, ஓடு மாத்தோனும், தங்கச்சிக்கிட்ட காசு கேட்டிருந்தேன்” என்றார் தயங்கித்தயங்கி. கணங்கள் நீடித்த மௌனம் கணேசனுக்கு பெரும் வாதையாக இருந்தது. சிலைந்து அமர்ந்திருந்தவன் சில கணங்களுக்கு பிறகு   
“மாமா வண்டிய உங்க வீட்டுக்கு விடுங்க” என்றான்.
நான்கைந்து மாதங்களாக அவன் கணேசனை மாமா என்று அழைப்பதில்லை. அவர்களுக்குள் மிகத் தேவையான ஓரிரு சொற்களுக்கு அப்பால் எதுவுமே இந்த மாதங்களில் பரிமாறிக்கொள்ளப்படவில்லை எனும் சூழலில் சுந்தர் அப்படி அழைத்தது அவரை நெகிழச் செய்தது. “இருக்கட்டும் தம்பி, இருட்டிருச்சு, இப்ப வேணாம் இன்னொருநாள் போவோம்”       
  
“உங்க வீட்டுக்கு ஓட்டுங்க” என்றான் தீர்மானமாக. 

வண்டி ஒரு குறுகிய சந்தின் முனையில் நின்றது. வண்டியைவிட்டு இறங்கி இருவரும் நடந்தார்கள். சற்றே பெரிய நீர் மொட்டுக்கள் மண்ணில் தெறித்துக்கொண்டிருந்தன. கீழே ஓடிக்கொண்டிருந்த கால்வாயில் இருந்து அழுகிய நாற்றம் வீசியது. சிறிய பாலத்தைக் கடந்ததும் இறங்கிய சரிவில் மூன்றாவது வீட்டிற்குள் நுழைந்தார்கள். உள்ளே போய் விளக்கைப் போட்டார். மது புட்டிகளும், புகையிலை பாக்கெட்டுகளும், சிகரெட் துண்டுகளும் இறைந்து கிடந்தன. நிறம் உதிர்ந்த பச்சைச் சுவரில் அவருடைய ‘ஆஷ்பி’ ஷட்டில் ராக்கெட்டை ஒரு ஆணியில் மாட்டியிருந்தார். அதையே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தான். சுந்தர்தான் அவருக்காக ஒருமுறை லண்டனில் இருந்து அதை வாங்கிக்கொண்டு வந்திருந்தான். கணேசனும் சந்திரனும் அரைக்கால் சட்டையில் தங்கள் ராக்கெட்டுகளுடன் ஒரு கோப்பையை கையில் ஏந்தி வாய்கொள்ளா சிரிப்புடன் நின்றிருக்கும் புகைப்படம் ஒன்று சட்டமடிக்கப்பட்டு சுவரில் தொங்கிக்கொண்டிருந்தது. தரையில் ஐந்தாறு பாத்திரங்களை வைத்திருந்தார். அவற்றில் நீர் சொட்டிக்கொண்டிருந்தது. அதைத்தவிர இன்னும் மூன்று நான்கு இடங்களில் தரையில் நீர் வினோத உருவங்களில் பரவியிருந்தது. வீட்டில் இருந்த ஒரே பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்துவந்து “உக்காருங்க தம்பி” என்றார். “இருக்கட்டும் மாமா. உள்ளார ரொம்ப வாடகாத்து வருதே.” என்றான். பிறகு சுற்றிமுற்றிப் பார்த்துவிட்டு “ஓடு மாத்த வேணாம், நம்ம கண்ணன் கிட்ட சொல்றேன், குரோமியம் தகடு போடச் சொல்லுவோம், வெய்யக் காலத்துலயும் நல்லா குளுகுளுன்னு இருக்குமாம். நாளைக்கே ஆள வரச்சொல்றேன்” என்று சொல்லியபடியே புதர் மண்டிய வெளிப்புறத்தை கடந்து வண்டிக்கு நடந்தான். கணேசன் வீட்டைப் பூட்டிக்கொண்டு பின்னாடியே வந்தார். வண்டியைக் கிளப்பிக்கொண்டு சுந்தரின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். கணேசனுக்குள் உணர்வுகள் தளும்பிக் கொண்டிருந்தன. அவர் முகத்தில் குடிகொண்ட நிலையின்மையை பார்த்தபோது சுந்தருக்கு உள்ளுக்குள் நிறைவாக இருந்தது. சொற்களை பற்களுக்கு நடுவே இறுக்கி கிட்டித்து வைத்திருந்தார். சுந்தர் வீட்டிற்குள் நுழையும் முன் “தம்பி ராஜேஷ வேணாம் சந்தானத்தோட ஆடச்சொல்லுவோமா? நா உன் கூட வாரேன்” என்றார். சொல்லி முடித்ததும், அன்றைய நாள் முழுவதும் இருந்த இறுக்கம் அகன்று முகம் தளர்வதைக் கண்டான். பொங்கிய எரிச்சலை கட்டுப்படுத்திக்கொண்டு, வேண்டியதில்லை என்பதுபோல சைகை செய்தபடி “காலேல பாப்போம்” என்று சொல்லிவிட்டு  வீட்டிற்குள் சென்றான். சந்திரன் இறந்தபிறகு சுந்தர் விளையாட வந்தபோது, சுந்தர்தான் தன்னுடைய இணையாக விளையாட வருவான் என அவர் எதிர்பார்த்தார்.  ஆனால் அவன் ஏன் எதிரணிக்குச் சென்றான் என்பதை இப்போதுவரை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. வீட்டிற்கு செல்லும்போதே வி.எஸ்.ஒ.பி இரண்டு புட்டிகளை வாங்கிக்கொண்டுதான் போனார். இரவெல்லாம் குடித்தார். மழை புதிய பொத்தல்கள் வழியாக தரையை நிறைத்தது. கண்ணீர் பெருகியது. எதற்கென்று இல்லாமல் எல்லாவற்றுக்காகவும் அழுதார். அவருடைய ‘ஆஷ்பி’ ராக்கெட்டை எடுத்து மடியில் ஒரு குழந்தையைப் போல் கிடத்தி அரற்றினார். இறுதித் துளி மது உள்ளே சென்றபோது உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையிலான நிலையில் அவருடைய உருவம் உடலுக்கு வெளியே நீர்பிம்பம் போல் தளும்பிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அப்போது சந்திரனின் குரலை அவரால் வெகு அணுக்கமாக கேட்க முடிந்தது.   
காலை ஐந்தேகால் ஆகியும் கணேசன் வரவில்லை என்பதால் சுந்தர் தொலைபேசியில் அவரை அழைத்தான். “நீங்க போங்க தம்பி, நா நேரா வந்துர்றேன்” என்று சொன்னபோது அவருடைய நா குழறியது. சுந்தர் விளையாடத் தொடங்கினான். ஆனால் அவனுடைய மனதில் கணேசன் வராதது உறுத்திக்கொண்டே இருந்தது. ஆறு மணிக்கு மேல் கணேசன் வந்தபோது முந்தைய இரவின் மது நெடி காற்றில் பரவியது. வழமைக்கு மாறாக, ‘வார்ம் அப்’ செய்யாமல், டச்சு போடாமல் வெறுமே அமர்ந்துவிட்டு நேரடியாக களத்திற்கு விளையாட வந்தார். முதல் மூன்று புள்ளிகள் சுந்தர் அணியினர் எடுத்தார்கள். அவருடைய ஆட்டத்தில் தடுமாற்றம் தெரிந்தது. ஆட்டத்தை நிறுத்தி கழிவறைக்கு சென்றுவிட்டு வந்தார். இடது மூலைக்கும் வலது மூலைக்கும் வலையை ஒட்டியும் என மாறி மாறி ஆடினார். சுந்தருக்கு இது அவருடைய வழமையான ஆட்டம் இல்லை என்பது நன்றாக புரிந்தது. ஒருவகையில் அது சந்திரனின் ஆட்டப் பாணியை ஒத்திருந்தது. சலிக்காமல் மாறி மாறி ஆடிக்கொண்டே இருந்தார். வேகத்தைக் கட்டுபடுத்தி, கவனத்தை திசைத்திருப்பி  புள்ளிகளை வென்றார். ஒருகணம் சுந்தர் தான் யாருடன் விளையாடுகிறோம் என குழம்பினான். போட்டி கடுமையானது. சுந்தர் அடித்த இரண்டு ஸ்மாஷ்கள் காற்றைக் கிழித்துக்கொண்டு சென்றன. முதன்முறையாக அவனுக்குள் ஒருவித சிலிர்ப்பு நேர்ந்தது. வியர்வையை வழித்துக்கொண்டு நீர் அருந்திவிட்டு வந்தார். எப்போதும் இருக்கும் அதிரடித்தன்மை இல்லை. புள்ளிகளுக்கு இடையே வந்து விழும் வசை சொற்களும் இல்லை. அவருடைய பதட்டமின்மை சுந்தருக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. கால்கள் எப்போதையும் போல் வேகம் கொள்ளவில்லை. சற்றே பின்னித் தடுமாறியது. இரண்டு அணிகளும் 17 புள்ளிகள் எடுத்து சமமாக ஆடிக்கொண்டிருந்தார்கள். சுந்தர் சளைக்காமல் ஆடினான். கணேசன் ஆடிய அதே முறையை அவனும் கைக்கொண்டான். சந்தானமும் ஈடுகொடுத்தான். 6.30 தாண்டியும் ஆட்டம் நீண்டு கொண்டிருந்தது. அடுத்த செட் ஆட்டக்காரர்கள் களத்திற்கு வெளியே இவர்களின் உக்கிரமான ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தார்கள். சுந்தர் சட்டென பொறுமை இழந்து ஸ்மாஷ் அடித்து புள்ளிகளில் முந்தினான். அதற்கு அடுத்து தூக்கி போட்ட சர்வீசை ராஜேஷ் ஸ்மாஷால் எதிர்கொண்டு புள்ளிகளை சமமாக்கினான். இழுத்துக்கொண்டே போனது. ஒரு சமயத்தில் கணேசன் எகிறிக் குதித்து அடித்த அடி சுந்தரின் காது நுனியில் உரசிச் சென்றது. தீக்காயம் போல் கனன்றது. நிமிர்ந்து அவர் முகம் நோக்க முயன்றபோது அவர் தலைக்கவிழ்ந்து அவன் பார்வையைத் தவிர்த்தார். சந்தானம் அடித்தது வலைக்குள்ளேயே விழுந்தது. ஒரேயொரு புள்ளி. கணேசனின் சர்வீசை எதிர்கொண்டு சுந்தர் அவர் தலைக்கு மேலே தூக்கி போட்டான். களத்தின் முற்பகுதியிலிருந்து அவர் கால்கள் பரபரத்து பின்னால் ஓடியது. எகிறி அடித்தபோது சுந்தர் வெறும் பார்வையாளனாக ஆற்றாமையுடன் அதன் விசையை வேடிக்கைப் பார்த்தபடி நின்றான். ராஜேஷ் உற்சாகமாக கூவிய அதே கணத்தில் கணேசன் தனது ராக்கெட்டை ஆவேசமாக பக்கச் சுவரில் வீசி எறிந்தார். தலை நசுங்கி அகோரமாக கிடந்தது. தன் வலக்கையை சுவரில் ஓங்கி குத்திவிட்டு கையை உதறியபடி விழுந்துக் கிடக்கும் ராக்கெட்டின் அருகே குந்தியமர்ந்து தலையில் கைவைத்தப்படி விசும்பினார். 
  
    
இந்திர மதம்
1

மூடிய கண்ணாடி சாளரத்திற்குள் மழை ஓசையாக மட்டும் விரவிக் கிடந்தது. மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டு நண்பகல் மழையிருளில் மூழ்கியது. மின்விசிறி எங்கிருந்தோ வந்து காற்றுக்கு கட்டுப்பட்டு சுழன்றுக் கொண்டிருந்தது. சேஷாத்ரி சூழ இருந்த மாணவர்களை விலக்கிக் கொண்டு விடுவிடுவென சென்று வகுப்பறையின் கதவை இழுத்து தாழிட்டு வந்தார். கதவை அடைக்கும் சில நொடிகளுக்குள் சாரல் அவருடைய வேஷ்டிக்கு சில ஈர வட்டங்களை தெளித்திருந்தது. ஆனாலும் வெளியே ஒலிக்கும் மழையின் சந்தடியை நிறுத்திவிட்டதாக நிம்மதி அடைந்தார். இனி அவருடைய குரல் எல்லோருக்கும் கேட்கும் எனும் ஆசுவாசமும்கூட.

 சேஷாத்ரி கண்களுக்கு மையிட்டிருந்தார். அது அவரே தயாரித்ததும் கூட. தினமும் முகத்தை மழித்துக்கொண்டு வருவார். தலைமுடி வளர்த்து குடுமியிட்டுக் கொண்டிருப்பார். பிரம்மச்சாரி. அவருடைய தசைத் திரட்சியை அவர் அணியும் கதர் ஜிப்பாவை மீறி சாதாரணமாக எவரும் பார்த்துவிட முடியும். எந்த நவீன கல்வி கூடத்திலும் இப்படியான ஒரு மனிதர் கேலிப் பொருளாக ஆகியிருப்பார் ஆனால் அந்த ஆயுர்வேத கல்லூரியில் அவர் ஒரு மாபெரும் நாயகனாகவே பார்க்கப்பட்டார். செத்துக் கொண்டிருக்கும் மருத்துவமுறையை மீட்க தன்னையே அளித்தவர். ஆயுர்வேதத்தின் வாழும் அடையாளம்.  

நாற்பதுகளின் மத்தியில் இருக்கும் அவர் கண்ணாடி அணிவதில்லை, ஒரு முடி கூட நரைக்கவில்லை. கல்லூரியில் அவரைப் பற்றிய தொன்மங்களுக்கு அளவே இல்லை. பல கதைகளும் அமானுடத் தன்மை கொண்டவை. மூத்த வைத்தியர் பத்ம விபூஷன் சங்கரன் வாரியார் ஒருமுறை ஒரு நோயாளியின் குன்மத்திற்கு செய்து வந்த சிகிச்சை பலனளிக்காமல் இருந்தபோது அவருக்கு மிகுந்த மனக் குழப்பம் உண்டாகி தன்னுடைய மாணவனான சேஷாத்ரியிடம் புலம்பியிருக்கிறார். சேஷாத்ரி பொறுமையாக புலம்பல்களைக் கேட்டுக்கொண்டப் பிறகு, வைத்தியனுக்கும் மகா வைத்தியனுக்கும் உள்ள இடைவெளி இதுதான். மகா வைத்தியன் ஒவ்வொரு, சிறுசிறு தோல்வியையும் தனிப்பட்ட தோல்வியாக உணர்ந்து மனதை உழப்பிக் கொள்வான் என்று சொல்லிவிட்டு, முதலில் அது ஏன் குன்மம் இல்லை என தன் ஆசிரியரிடம் நிறுவினார் என்பது அப்படி உலவும் ஒரு கதை. அதன்  பின் தான் சங்கரன் வாரியார் “சுசுருதர் சொல்றது இருக்கட்டும், சேஷாத்ரி என்ன சொல்றான்?” என கேட்டதாகச் சொல்வார்கள். மற்றொருமுறை ஒரு  ஆய்வரங்கில் மஞ்சளில் இருந்து எடுக்கப்பப்டும் குர்குமின் எப்படி புற்று நோயைக் கட்டுபடுத்துகிறது, இது ஆயுர்வேதத்தின் வெற்றி என ஒரு அறிஞர் ஆய்வுக் கட்டுரை வாசித்துக்கொண்டிருந்தபோது எழுந்து குறுக்கிட்டு “இதனால் ஆயுர்வேதத்திற்கு என்ன லாபம்? இதிலிருந்து உங்களுக்கு தேவையான நவீன அறிவியலை நீங்கள் வெட்டி எடுத்துக் கொள்கிறீர்கள். அறிவுச் சுரண்டல். போகட்டும். ஆனால் அதற்கும் ஆயுர்வேதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை”  என ஆவேசமாக கத்தி ஆய்வறிக்கையை கிழித்து எறிந்த நிகழ்வு ஏறத்தாழ ஒவ்வொரு கருத்தரங்கின்போதும் ஒரு சடங்கைப்போல் உணவு இடைவேளையின் போது அதிருப்தியில் உழலும் மாணவர்களால் தீர்க்கத்தரிசனமாக உணரப்பட்டு உணர்ச்சிபூர்வமாக நினைவுக்கூரப்படும். நவீன மருத்துவத்தின் எந்தக் கூறுகளையும் நோயறிதலுக்கோ சிகிச்சைக்கோ பயன்படுத்த மாட்டார். சக பேராசிரியரான நசிகேத ராவ் எத்தனையோ முறை கிண்டல் செய்வார். “இப்படி இருக்காதய்யா..நீ ஒரு ஹிப்போக்ரைட்யா ..  புல்லட் ஓட்டுற, லேப்டாப் செல்போன் எல்லாம் வெச்சிருக்க, வீட்ல கரண்ட் கனெக்ஷன் இருக்கா?  இல்ல வேணாம்னு இருட்டுல உக்காந்திருக்கியா? இதெல்லாம் டெக்னாலஜிதான, அதையும் பயன்படுத்து நம்ம மருந்தையும் கொடு, முடியலையா நல்ல டாக்டர்கிட்ட அனுப்பிவிடு” என கிண்டலுக்கு அப்பால் அவ்வப்போது நட்பாக எச்சரிப்பார். சிரித்துக்கொண்டே “போதும் அய்யா. இதெல்லாம் வித்தையில் நம்பிக்கை இல்லாதவர்கள் பேசும் பேச்சு இந்த டாக்டருக்கு தரகராக இருக்கும்  வேலையைச் செய்வதற்குத்தான் இத்தனைப் பேர் உள்ளீர்களே. நான் வேற எதுக்கு?” என்பார். இந்தமாதிரியான பதில்களை பல நேரங்களில் கோர்வையான சமஸ்கிருதத்தில் அளிப்பார் என்பதால் எதிராளிகள் கூர்ந்து பொருள் உணர்ந்து பின்னர் சொற்களைத திரட்டி பதில் சொல்வதற்கு சும்மா இருந்துவிடலாம் என விட்டுவிடுவார்கள். 

மழை இரைச்சலும் காற்றும் தொலைவில் எங்கோ என நிகழ்ந்தது போல் அவர்கள் அந்த மூடிய சிறிய அறைக்குள் மேஜையைச் சுற்றி குழுமி இருந்தார்கள். மேஜையின் முன் வந்து, அதன் மையத்தில் நின்று நாற்காலியில் அமர்ந்திருந்த சிவானந்தனை நோக்கினார். ஆவலும் குறுகுறுப்பும் மின்னும் விழிகள் அவர்களை சூழ்ந்திருந்தன. அவனிடம் “வலிக்கிறதா?” என வினவியதும் இல்லை என்பதாக தலையசைத்தான். வகுப்பில் அன்று அட்டை விடுதல் செய்முறை பயிற்சிக்கு எவரேனும் சுய விருப்புடன் பங்குகொள்ள சம்மதமா என சென்ற வார வகுப்பிலேயே அவர் கேட்டிருந்தார். அவர் எதிர்பார்த்த மாதிரியே அதிகமும் பெண்கள் உள்ள அவ்வகுப்பில் எவரும் முன்வராதபோது அவருடைய பார்வை இயல்பாக சிவானந்தனை சென்று முட்டியது. அவன் ஏன் தன்னிச்சையாக முன்வரவில்லை எனும் கேள்வியை அப்பார்வை சுமந்து நின்றது. மற்றுமொருமுறை தன் முதன்மைச் சீடன் என்றும் தன் வாரிசு என்றும் எண்ணியவன் தன் எதிர்பார்ப்பை நிறைவு செய்யவில்லை எனும் மெல்லிய அதிருப்தி அவர் முகத்தில் படர்ந்தது. சிவானந்தன் தயங்கித் தயங்கி எழுந்து நின்று சம்மதம் தெரிவித்தான். 
ஒருநாள் காலை சரியாக ஐந்து மணிக்கு புழுதிவாக்கம் பாலாஜி நகர் விரிவாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு தன்னுடைய சைக்கிளில் சென்று சேர்ந்தான் சிவானந்தன். இரவெல்லாம் மழை பெய்து ஈரம் இருளை கனக்கச் செய்தது. வெற்றுடலுடன் வாயிலில் அமர்ந்து வெண்கலப் பானையை விறகடுப்பில் வைத்து அதன் முன் குந்தி அமர்ந்து ஊதிக் கொண்டிருந்தார். உலை கொதித்துக் கொண்டிருந்தது. சிவானந்தனைப் பார்த்ததும் ஊதுகுழாயை அவன் கையில்கொடுத்துவிட்டு “பத்து நிமிஷம்” என உள்ளே சென்றார். முந்தைய இரவு மழையில் கறி நமுத்துப் போயிருந்தது. இருந்தாலும் விடாமல் ஊதிக் கொண்டிருந்தான். சிவந்த நெற்றியில் திருமண் துலங்க வெளியே வந்தார். கையில் ஒரு இறுக சுற்றிய பிளாஸ்டிக் பை இருந்தது.  இன்னொரு துணிப் பையை அவனிடம் கொடுத்தார். அவருடைய நீலநிற என்பீல்டை துடைத்துவிட்டு இருவருமாக புறப்பட்டார்கள்.  

சிவானந்தனின் முகத்தில் குளிர்ந்த காற்று அம்மியது. தும்மலை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒவ்வொரு காலகட்டத்திலும் சேஷாத்ரிக்கு வெவ்வேறு அணுக்க சீடர்கள் இருப்பார்கள். நவீனக் கல்விக் கூடங்களில் குரு சீட உறவு முறைக்கு கிட்டத்தட்ட எந்த பொருளுமில்லை தான் ஆனால் இதற்கும் ஆயுர்வேத கல்லூரி ஒரு விதிவிலக்கு. அங்கே பெரும்பாலும் எல்லா ஆளுமைமிக்க ஆசிரியர்களுக்கும் தனித்த சீடர் நிரை உண்டு. கல்லூரிக்கு உள்ளேயும், வெளியேயும் கூட அது நீளும். சேஷாத்ரியிடம் சீடனாக கடும் போட்டி நிலவும். அவரே தனது சீடனைத் தேர்வு செய்வார். கல்லூரி முடித்து வெளியேறிய  பின்னரும் அவர்கள் உறவு நீடிக்கும். சேஷாத்ரியின் சீடர்களுக்கும் நசிகேத ராவின் மாணவர்களுக்கும் எப்போதும் உரசல் உண்டு. இருவருக்கும் தங்கள் தரப்பை தர்க்க நியாயத்துடன் நிறுவியாக வேண்டும் எனும் துடிப்பு தத்தமது ஆசிரியர்களைக் காட்டிலும் அதிகம். கருத்தரங்கங்களில், விவாத மேடைகளில் பொறி பறக்கும். இரு பக்கமும் கைத்தட்டும் ஆதரவாளர்கள் தங்கள் முழு ஆற்றலைக் காட்டுவார்கள். எப்போதும் கல்லூரி முடித்து வெளியேறிச் செல்லும் ராவின் மாணவர்கள் சேஷாத்ரியின் சீடர்களைக் காட்டிலும் நன்றாக பொருளீட்டுபவர்களாகவே இருப்பார்கள். ஆனால் சேஷாத்ரி தெளிவாக தன் சீடர்களிடம் கூறிவிடுவார். “நான் உங்களுக்கு ஒரு வாழ்க்கை முறையை அறிமுகம் செய்கிறேன். அதற்கு உண்மையாக இருப்பதற்கு பொருளாதார பலன் கிட்டுமா என சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் கற்றவர்கள் எனும் பெருமிதத்தையும், உங்கள் அறிவு முழுமையானது எனும் நம்பிக்கையையும் என்னால் கொடுக்கமுடியும்.”.

பள்ளிக்கரணை ஏரிக்கு சென்றார்கள். தெருவிளக்குகள் மெளனமாக தலைகவிழ்ந்து தன் சிறு ஒளிப் பரப்பை நோக்கிக் கொண்டிருந்தன. அங்கே சதுப்பின் கரையோரம் வெளிச்சமற்ற ஓரிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு பிளாஸ்டிக் பையில் இருந்த ஆட்டுக் குடலை கையில் எடுத்து வேட்டியை மடித்து தன் இரு கால்களிலும் அரக்கித் தேய்த்தார். சிவானந்தனுக்கு வயிறு குமைந்தது. “இன்னும் உன் வயித்துப் புண் ஆறலையா? கஷாயம் குடிக்கிறியா?” என்று கேட்டபடி அவனிடம் வேண்டுமா என்பதுபோல் நீட்டியபோது அவன் தயங்கியதைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தார். சதுப்பில் வேட்டியை மடித்துக்கொண்டு இறங்கி நடந்தார்.  சிவானந்தனும் கால்சட்டையை மடித்துக்கொண்டு தொடர்ந்தான். குளிரில் மயிர்கால்கள் நட்டுக்கொண்டு உடல் சிலிர்த்தது. நீர் தாவரங்கள் மண்டிய ஏரியில் ஒருவித அழுகல் நாற்றம் மூக்கை நிரடியது. கருக்கிருட்டில் சாம்பல் நிற கலங்கல் நீரில் ஏதேதோ அவன் காலில் ஊறிச் சென்றன. ஒரு தவளை அவன் காலிலிருந்து தத்தியது. பாம்பா அல்லது ஏதேனும் தாவரக் கொடியா என்றறிய முடியாத வழவழப்பு ஒன்று அவன் காலைத் தீண்டியதும் சற்றே அதிர்ந்து பின்னகர்ந்தான். “தன்வந்தரி கையில என்ன இருக்குன்னு பாத்திருக்கியா?” மெல்ல அவனிடம் கேட்டபடி நீரை அளைந்து நடந்தார். “அமுத கலயம்” என்றான். “ம்..இன்னொரு கையில?” பதில் ஏதும் சொல்லாமல் யோசித்தான். பின்னர் அவரே “ஜலூகம்..அதாவது அட்டை. ஏன் தெரியுமா?” மெளனமாக பின் தொடர்ந்தான். “அவன் உன் ரத்தத்த உறிஞ்சு உன்னை சுத்தப் படுத்துறான், அதுக்கப்புறம் தான் உனக்கு இன்னொரு கையில இருக்குற அமுதம் கிடைக்கும். கலசம் தான் நம்ம உடம்பு. உன் அசுத்தம் வெளியேறிட்டா மிச்சமிருக்கிறது என்ன? அமுதம் தான. சுத்தமான ரத்தம் தான் அமுதம். புரியுதா?” என்றார்.  அவன் பத்தாம் வகுப்பு படிக்கும்போது பவித்ராவிற்கு ரத்தத்தில் காதல் கடிதம் எழுதிக் கொடுத்தது நினைவுக்கு வந்தது. நீர் தாவரங்கள் மண்டியிராத ஒரு பகுதிக்கு வந்ததும் சற்று நேரம் அங்கேயே நின்றார். வான இருள் மெல்ல விலகி பூக்கத் துலங்கியது. நீர்காகங்கள் தலையை சிலுப்பிப் பறந்தன. வர்ண வேறுபாடுகள் கண்ணுக்குத் துலங்கத் துவங்கின. பின்னர் மெல்ல சிவானந்தனின் தோளைப் பிடித்துக்கொண்டு ஒரு காலைத் தூக்கினார். அவர் காலில் கத்தை கத்தையாக அட்டைகள் ஒட்டியிருந்தன. சிவானந்தன் துணிப்பையில் இருந்த மூன்று ஹார்லிக்ஸ் கண்ணாடி பாட்டில்களில் பாதி பங்கு நீர் நிரப்பினான். இப்போது மறு காலையும் தூக்கினார் அதிலும் அட்டைகள் மொய்த்தன. குருதிப் பசிகொண்ட அட்டைகள் இறைச்சியின் வாடையால் ஈர்க்கப்பட்டு அம்மின. சில மீன்களும் இப்போது காலைச் சுற்றி கடிக்கத் துவங்கின. இருவருமாக வேகமாக கடந்து கரையேறினர். கரையோரப் புதரில் இருந்து ஒரு பாம்பு நீரில் பாய்ந்து நீந்திச் சென்றது. “விரியன்” என்றார் சேஷாத்ரி. சிவானந்தனின் காலையும் சில அட்டைகள் கவ்வியிருந்தன. அவற்றை உதறித் தள்ளினான். அப்போதும் அவை உதிரவில்லை. துணிப்பைக்குள் கிடந்த பொட்டலத்தில் இருந்த மஞ்சள் பொடியை எடுத்து அட்டைகள் கவ்வியிருந்த வாய்ப்பகுதியில் லேசாக தூவினார். அவை சுருண்டு விழந்தன. பின்னர் விழுந்தவற்றை வால் பகுதியில் வைத்து தூக்கி ஹார்லிக்ஸ் பாட்டிலில் போட்டார். சற்று நேரம் வெறுமே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சிவானந்தன் சேஷாத்ரி அவனைத் திரும்பி நோக்கியதை பார்த்ததும் அவனும் உதவினான். வீட்டிற்கு திரும்பியதும் ஹார்லிக்ஸ் பாட்டிலின் மூடிகளில் பழுக்க காய்ச்சிய கம்பியைக் கொண்டு சிறு சிறு துளைகளை இட்டான் சிவானந்தன். மூன்று பாட்டில்களிலும் உள்ள அட்டைகளை எண்ணிப் பார்த்தான் மொத்தம் முப்பத்தியாறு. எனினும் அவனுக்கு குழப்பமாக இருந்தது. அட்டைகள் அனைத்தும் ஒரே மாதிரி இருந்தன. அவை நீந்திக்கொண்டே இருந்தன. ஒரே அட்டையைத் தான் திரும்ப திரும்ப எண்ணுகிறோமோ என குழம்பினான். சேஷாத்ரி பக்கவாட்டில் இருந்த கிணற்றில் நீர் வாரி இறைத்து கால்களைக் கழுவிக்கொண்டார். மயிர் மழிக்கப்பட்ட வழவழப்பான கெண்டை கால்களில் ஆங்காங்கு உதிரத் திட்டுக்கள் இருந்தன. குப்பைமேனி இலையை கசக்கி கடித் தடங்களில் தேய்த்துக்கொண்டார். “சார் இதுல விஷமுள்ளது விஷம் இல்லாததுன்னு எப்புடி பிரிச்சு பாக்குறது? சுசுருதர் விஷமுள்ள ஆறு வகைகளைச் சொல்றாரே” என கேட்டதும். “நானும் நீயும் இன்னும் உயிரோடத்தான இருக்கோம். எதுக்கும் விஷமில்லதான. அதிருக்கட்டும். முதல்ல இதுக்கு வாய் எது ஆசனவாய் எதுன்னு கண்டுபிடி. அதுதான் முக்கியம்” எனச் சொல்லி புன்னகைத்தார்.    

சிவானந்தனின் தந்தை ஆறுமுகத்திற்கு சொரியாசிஸ். தோல் மருத்துவர்கள், ஹோமியோ, சித்தா, ஆயுர்வேதம், அக்குபஞ்சர் என எல்லாவற்றையும் முயற்சித்துப் பார்த்தார். தற்காலிக நிவாரணங்களை அளித்தனவே ஒழிய எதுவும் அவருடைய நோயை நிரந்தரமாக தீர்க்கவில்லை. தனது ஃபினான்ஸ் கடையில் வாடிக்கையாளருக்கு முன் அமர்ந்து காலை சொறிந்துக்கொள்ளும் வேட்கையை அடக்கிக்கொள்வது பெரும் சவாலாக ஆனது. முழுக்கைச் சட்டையைப் போட்டு கழுத்துப்பட்டை பட்டனையும் போட்டுக்கொண்டு  இருக்கையில் அமர்ந்திருப்பார். மெல்லிய பச்சை ஊண் வாடை அவரிடமிருந்து எழும். செதில் செதிலாக தோல் பெயர்ந்து உதிரும். வெளியே செல்வது குறையத் துவங்கியதும் வசூலும் குறைந்தது. தொழிலே பாதித்தது. சேஷாத்ரியின் மருத்துவ அற்புதங்கள் பற்றிய தொன்மங்கள் கல்லூரிக்கு வெளியேயும் எப்படியோ கசிந்தது. மற்ற நாட்களில் மந்தமாக இருக்கும் கல்லூரி புற நோயாளிப் பிரிவு சேஷாத்ரி வரும் வியாழக் கிழமைகளில் கடும் நெரிசலைச் சந்திக்கும். சேஷாத்ரி கல்லூரியைத் தவிர்த்து வெளியே எங்கும் வைத்தியம் பார்ப்பதுமில்லை. அவரைச் சென்று பார்த்து அவருடைய ஆலோசனைப்படி  வாந்தி, பேதி, என குடலை சுத்தம் செய்து மருந்துகளையும் கடும் பத்தியங்களையும் பின்பற்றி முழுக்க குணமானார். ஏறத்தாழ அது மாயவித்தைப் போல இருந்தது. நன்றிக்கடனாக பெரும் பணத்தை செலவழித்து சிவானந்தனை ஆயுர்வேதம் படிக்க அனுப்பினார். அவனும் இயல்பாகவே சேஷாத்ரியின் பால் ஈர்க்கப்பட்டான். இவனை விடவும் தகுதியான இருவர் சேஷாத்ரியின் மீது இவன் அளவிற்கே அல்லது இவனை விடவும் பற்று கொண்டிருந்தார்கள். கேரளாவில் பேர்போன மருத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சேஷாத்ரியின் மீதிருக்கும் மரியாதையின் பொருட்டே இந்த கல்லூரிக்கு வந்தவர்கள். அவர் கேட்பதற்கு முன்பே பதில்களைத் தெரிந்து சொல்பவர்கள். மூலிகைகளை சரியாக அடையாளம் காண்பவர்கள். மருந்து செய்து பழகியவர்கள். ஆனால் சேஷாத்ரி ஏனோ சிவானந்தனையே தேர்ந்தெடுத்தார். பிறகுதான் அவருடைய முதன்மை சீடர் வரிசை எந்தவித மருத்துவ பின்புலமும் இல்லாதவர்களால் ஆனது என்பதைத் தெரிந்துகொண்டான். மேலும் அதீத அறிவாற்றல் உடையவர்கள் முன்பே தங்கள் கோப்பைகளை நிரப்பியவர்கள். இவனைப்போன்ற காலி கோப்பை தான் அவருக்கு தோதானது என அவன் புரிந்துகொள்ள மேலும் சில ஆண்டுகள் ஆயின. சேஷாத்ரியின் சீடர் நிரையில் ஒரு பெண் கூட இல்லை என்பது ஏன் என எண்ணிப் பார்த்திருக்கிறான். இத்தனைக்கும் அவர் மாணவர்களைக் காட்டிலும் அதிகம் மாணவிகள் மத்தியிலேயே பெரும் ஈர்ப்பைப் பெற்றவர். சேஷாத்ரியின் சீடன் என்பது பிற ஆசிரியர்களின் எரிச்சலை ஈட்டுவதும் தான். ஒவ்வொரு வகுப்பிலும் இதுகூட தெரியவில்லையா வகை கேள்விகளால் அவனை மீண்டும் மீண்டும் உடைக்கும் முயற்சிகளில் சளைக்காமல் ஈடுபட்டார்கள். குருட்டு பற்று அல்லது வீம்பு ஏதோ ஒன்று அவனை அதுவரை காப்பாற்றியது.                
சிவானந்தன் காலில் ஒட்டியிருந்த அட்டை சட்டென சுருண்டு கீழே விழுந்ததும் அருகிலிருந்த பெண்கள் வீரிட்டு விலகினார்கள். “பாத்து மிதிச்சுடாதீங்க” என்று சொல்லிக் கொண்டே நிதானமாக குருதி குடித்து கொழுத்த அட்டையை கையில் பிடித்து தூக்கினார். அதற்குள் வேடிக்கைப் பார்த்திருந்த கௌசல்யா மயக்கமுற்றாள். “இவ எப்படி பிசியாலஜி பாஸ் செஞ்சா?” என்று கிண்டல் செய்தார். அவளை இருவர் தூக்கி பெஞ்சில் படுக்க வைத்து நீர் தெளித்து அமைதிப் படுத்தினார்கள். “நாம எல்லாரும் அட்டையைப் பத்தி என்ன நெனைச்சோம்? ரத்தம் உறிஞ்சும் அட்டைன்னு எல்லாம் திட்டுவோம் இல்லியா, ஆனா அட்டை தன் பசிக்கு கொஞ்சூண்டு ரத்தத்தை உறிஞ்சதும், அதுவும் கெட்ட ரத்தத்த மட்டும்தான், அதுவே வாய எடுத்துரும்” சிவானந்தன் மெல்ல நெளிந்தான். “அரிக்குதா?” என்றதும் ஆம் என தலையசைத்தான். “அப்ப கெட்ட ரத்தம் ஸ்டாக் தீந்துடுச்சு. நீ சுத்தமாயிட்ட” எனச் சிரித்தபடி மீதமிருந்த ஐந்து அட்டைகளின் கவ்விய வாயின் மீது லேசாக மஞ்சள் பொடியை உதிர்த்தார். அவை சுருண்டு விழுந்தன.  

அவற்றை கையில் எடுத்து கவனமாக மேஜை மீதிருந்த நீர் நிறைந்த பீங்கான் பேசினுக்குள் போட்டார். அருகே மற்றொரு பேசினில் அட்டைகள் நீந்திக் கொண்டிருந்தன. ஒவ்வொரு அட்டையின் வாயருகேயும் மஞ்சள் பொடியை தூவியதும் அவை உறிஞ்சிய உதிரத்தை வாயுமிழ்ந்தன. நீர் முதலில் மஞ்சளாகவும் பின்னர் உதிரச் சிவப்பாகவும் மாறியது. குருதி நதியில் ஏறத்தாழ அதே நிறத்து அட்டைப் பூச்சிகள் நீந்தின. ஒரேயொரு அட்டை மட்டும் நீந்தாமல் பேசினின் அடியில் சுருண்டிருந்தது. மெல்ல அதை உசுப்பினார். ஆனால் அது நகரவில்லை. அதைத்தூக்கி இடக்கையில் பிடித்துக்கொண்டார். வால் நுனியிலிருந்து மெதுவாக வலக்கையின் கட்டைவிரல்-ஆள்காட்டி விரல் இடைவெளியில் அழுத்தி உருவிவிட்டார். அப்போதும் அது ரத்தத்தை உமிழவில்லை. வெறுமே முகம் பிதுங்கியது. துடிதுடித்து மீண்டும் சுருண்டுக் கொண்டது. அதன் வினோத நடத்தை எல்லோருக்கும் குறுகுறுப்பை ஏற்படுத்தியது. “ம்..இந்திர மதம்” என்றார். யாரோ ஒரு மாணவன் “அப்படின்னா?” என்று கேட்டதும் “யோசிங்க” என்றார். இளங்கோ “இந்திரனோட மதம்..அவர் இந்து தான சார்” என்றான். எல்லோரும் சிரித்தார்கள். மரியா “மதம் ன காம, குரோத, மத, மாச்சரியம்- அந்த மதம், ஒரு மாதிரி பித்து, யானைக்கு பிடிக்குமே அந்த மாதிரி மதம். சரிதானே சார்?” என்றாள். “நெருங்கிட்ட” என்றார். ஜிஷா “சார் இந்திரம்ன கடவுள் மட்டுமில்ல நம்ம புலன்களும் தான..இந்திரியங்கள்னு சொல்வோமே” என்றாள் குறுகுறுப்புடன். “நல்லது. நாளைக்கு வரும்போது முழுசா தேடிப் படிச்சிட்டு வாங்க. காலேல வந்ததும் ஏழாம் நம்பர் ஸ்ரீநிவாசனுக்கு இருக்குற நெஞ்சு கட்டிக்கு அட்டை விடுறோம். சிவானந்தன் அவரை ரெடி செஞ்சு கூட்டிட்டு வர வேண்டியது உன் பொறுப்பு. நீ தான் நாளைக்கு அவருக்கு செய்யப்போற” என்று கூறிவிட்டு சென்றார். காலைத் துடைத்துக்கொண்டு எழுந்த சிவா ஒன்றும் சொல்லாமல் நின்றான்.

2
சேஷாத்ரி வெளியே சென்றவுடன் சிவா மூடியிருந்த சாளரங்களைத் திறந்தான். மழை வலுக் குறைந்திருந்தது. எனினும் சீராக தூறிக் கொண்டிருந்தது. வகுப்பறையின் சாளரத்தில் இருந்து கல்லூரியின் மூலிகைத் தோட்டத்தை காண முடியும். ஒரு தொட்டியில் கரு ஊமத்தைப் பூத்திருந்தது. அதன் அடர் ஊதா நிறத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் தோள்மீது கைபோட்டு இளங்கோ “ஊமத்தைக்கு பால் ஊத்தி வளக்குற மோத பேமிலி நம்ம பேமிலி தான் மாப்ள” என்றான். இருவருமாக சிரித்துக்கொண்டே கேண்டீனுக்கு நடந்தார்கள். “இன்னிக்கி வெயிட் காட்டுன மாப்ள..லிஜி வெச்சக் கண்ணு எடுக்காம உன்னையே பாத்தாடா..காதலுக்காக காலுல அட்டைப்பூச்சி விட்ட மொத ஆள் நீதாண்டா” என்றான். பிறகு அவர்கள் இருவருமாக மருத்துவமனைக்கு சென்றார்கள். ஏழாம் எண் படுக்கையில் இருக்கும் ஸ்ரீனிவாசனைப் போய் பார்த்தார்கள். இரண்டு வருடங்களுக்கு முன் சிகிச்சை அறையில் ஆசனவாயில் மருந்து செலுத்தத் துவங்கியபோது அங்கேயே மயங்கி திடிரென்று ஒருவர் இறந்ததில் இருந்து எந்த சிகிச்சை செய்வதற்கு முன்பும் நோயாளிகளிடம் முழு ஒப்புதல் என சாட்சிகளுடன் சான்று எழுதி வாங்கிக்கொள்வது வாடிக்கை. கைலி கட்டிக்கொண்டு கூடு கட்டிய வெற்று மார்புடன் ஸ்ரீனிவாசன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தார். சரியாக நெஞ்சு மத்தியில் ஒரு சிறு புடைப்பு.  அன்று காலைதான் ஸ்ரீனிவாசன் மருத்துமனையின் உள்நோயாளி பிரிவில் சேர்க்கப்பட்டார். லேசாக தலை சுற்றல்,  தொண்டை கட்டிக்கொண்டது போல் குரலில் ஏதோ மாற்றம் இவையே அவருடைய அறிகுறிகள். நெஞ்சுகட்டியால் அவருக்கு ஒன்றும் பெரிய தொந்திரவு இல்லை என்றார். அவ்வப்போது முதுகு வலிக்கிறது என்றார். சேஷாத்ரியின் நோயாளிகளை வேறு எவரும் அணுகுவதில்லை. அவருடைய ஆணையும், அவருடைய மாணவர்களின் மேற்பார்வையும் மட்டுமே உண்டு. நாளை அவருக்கு அட்டை விடுதல் சிகிச்சை செய்ய இருப்பதாக தெரிவித்து அதன் முறைமைகளை விளக்கினான். தன் காலில் இன்று அட்டைக் கடித்த தடத்தைக் காண்பித்தான். “தம்பி என்ன சொல்றியோ செய்றேன். எங்க கையெழுத்து போடணுமோ போடறேன். எல்லாம் சார நம்பி வந்தாச்சு. ஆனா எனக்கு இந்த கட்டி ஒன்னும் தொந்தரவு இல்லப்பா. இருந்தாலும் சார் சொல்றாரு..நமக்கு ஒகே” என்று கையெழுத்துப் போட்டு கொடுத்தார். மார்மத்தியில் இருக்கும் புடைப்பை இளங்கோ வெறித்துக்கொண்டே இருந்தான். பின்னர் மெதுவாக அதைத் தொட்டுப் பார்த்தான். துடித்தது. சுதர்சனின் காதில் கிசுகிசுத்தான் “மாப்ள தொட்டுப் பாத்துரு” கயிறு கட்டி இழுபடும் பட்டாம்பூச்சியைப் போல் அந்த புடைப்பு துடித்தமைந்தது. அதன் துடிப்பை வெறும் கண்ணாலேயே பார்க்க முடிந்தது. அறையை விட்டு வெளியே வந்ததும் இளங்கோ “மாப்ள இது ஏதோ கட்டி மாறி தெரியல. ஒரு எக்ஸ்ரே பாப்போமாடா?” என்றான். “சாருக்குத் தெரிஞ்சா அவ்ளோதான். அவரு பாத்துப்பாருடா”. 
இளங்கோ வேகவேகமாக நூலகத்திற்குள் அவனை இழுத்துச் சென்று நவீன மருத்துவ பிரிவில் உள்ள தடித்த டோர்லாண்ட்ஸ் மருத்துவ அகராதியைப் புரட்டினான். அயோர்டிக் அன்யுரிசம் (aortic aneurysm) பக்கத்தை எடுத்துக் காண்பித்தான். பிறகு இருவருமாக அறுவை சிகிச்சை புத்தகத்தைப் புரட்டி அதைப் பற்றி வாசித்தார்கள். அக்குறிப்புகளை புகைப்படம் எடுத்துக்கொண்டான். அவனுக்கு சில்லென வியர்க்கத் துவங்கியது. இருதயத்தில் இருந்து வெளியே வரும் முக்கியமான தமனி வீங்கி இருக்கும் நிலையைத்தான் அயோர்டிக் அன்யுரிசம் என்பார்கள். ஒருவேளை அது வெடித்தால் பெரிய அளவில் ரத்தக் கசிவு ஏற்பட்டு நோயாளி மரணிக்கவும் கூடும். அதில் சின்னக் கீறல் விழுந்தால் கூட ரத்தம் பீய்ச்சி அடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. வேகவேகமாக பேராசிரியர் அறைக்கு ஓடினார்கள். அங்கே சேஷாத்ரியை காணவில்லை. மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார்கள். சேஷாத்ரி உள் நோயாளிகளை மேற்பார்வையிட வந்திருந்தார். அவரருகே சென்று தயங்கித் தயங்கி நின்றான். என்ன என்பது போல் நிமிர்ந்து நோக்கினார். “சார் ஸ்ரீனிவாசன் பேஷண்டுக்கு அயோர்டிக் அன்யுரிசமாக இருக்கும்னு இளங்கோ சொல்றான்”. அவன் கைப்பேசியில் எடுத்திருந்த புகைப்படங்களை அவருக்கு காண்பிக்க நீட்டினான். அதை அவர் வாங்காமலே “உனக்கு யாரு வாத்தியார்? நானா, இளங்கோவா?” எனக் கேட்டுவிட்டு அடுத்த நோயாளியை நோக்கி நகர்ந்தார். “சார் நீங்க இன்னொரு தடவ பாத்தீங்கன்னா பரவால்ல. ஒரு எக்ஸ்ரே..இல்லன்ன ஸ்கேன் எடுத்தா நம்ம சந்தேகம் எல்லாம் போய்டும். அதுல துடிப்பு இருக்கு” என்றான். தொங்கிக் கொண்டிருந்த உள்நோயாளி அட்டையை கீழே விட்டுவிட்டு நேராக அவனை நோக்கிச் சொன்னார். “ அது வித்ரதி. பழுக்குற நிலையில பித்தம் இருக்கும். அப்பா துடிப்பும் இருக்கும். சுசுருதர் சொல்லியிருக்கிறத பாரு. போய் முதல்ல அட்டைக்கு வாய் எங்க இருக்கு ஆசனவாய் எங்க இருக்குன்னு கண்டுபிடி..ஏன்னா அத உன்னோட சுசுருதரோ இல்ல டோர்லாண்டோ சொல்லிக்கொடுக்கமாட்டாங்க” என்றார் தீர்க்கமாக. 
“மாப்ள, சத்தம் போடாம அவர ரேடியாலஜி ரூமுக்குள்ள கூட்டிப் போயிடுவோம்.” என்றான் இளங்கோ. சிவா மெளனமாக அமர்ந்திருந்தான். “சொல்றத சொல்லிட்டேன் உன் இஷ்டம்” என அவனை விட்டுவிட்டு அகன்றான். சிவாவிற்கு தலையிலிருந்த நாளங்கள் வலியில் துடித்தன. வீட்டிற்கு சென்றதும் உண்ணாமல் அறைக்குள் உறங்கச் சென்றான். நெற்றியில் பற்றுப் போட்டுக்கொண்டு, வயிற்றுப் புண்ணுக்கு எப்போதும் குடிக்கும் இந்துகாந்தம் கஷாயத்தைக் குடித்துவிட்டு கண்மூடினான். மிகுந்த தாகமாக இருந்தது. அவன் அப்போது கவ்வி எதையோ குடித்துக் கொண்டிருந்தான். வயிறு நிறைந்து அவனுடைய ஆசனவாய் திறந்துக் கொண்டது. அவன் குடிக்கக் குடிக்க அவை ஆசனவாய் வழியாக அப்படியே வெளியேறியது. தலைத் தூக்கி விழித்தபோது அவன் வாய் மயிர் மழித்த கெண்டைக் காலை கவ்வியிருந்தது. தலை சுற்றி உதிர்ந்து கீழே விழுந்தான். படுக்கையை விட்டு எழுந்து கழுவு தொட்டிக்கு செல்லும் முன்னரே வாயுமிழ்ந்தான். விளக்கொளியில் வெள்ளை பளிங்குத் தரையில் அவனுடைய வாந்தி விரவிக் கிடந்தது. அதில் மையமாக இரண்டு சொட்டு புதுக்குருதி தென்பட்டது. வயிறு, தொண்டை, வாய் என எல்லாம் எரிந்தது. ஏதோ பித்துப் பிடித்தவனைப் போல் அந்த நள்ளிரவில் புத்தக அலமாரியில் இருந்து சுசுருத சம்ஹிதையை துழாவி எடுத்தான். பக்கங்களை தன்னிச்சையாக ஓட்டினான். இந்திரமதம் – அட்டைகளுக்கு வரும் நோய். குருதி குடித்துக் குடித்து, பின்னர் அதுவே போதையாக மாறி, குடித்த ரத்தம் செறிக்காமல், வெளியேறவும் செய்யாமல் உள்ளேயே இருக்கும். மெல்ல அட்டை உணவு உண்ணும் நாட்டத்தை இழந்து, உட்சுருங்கி, உணர்வு மரத்து உயிர்விடும். உடல் வியர்த்து குளிர்ந்தது. உறங்காமல் அறையின் நீலநிற இரவுவிளக்கை வெறித்தபடி அமர்ந்திருந்தான்.     
3
      
ஐந்தரை ஆண்டு முடிந்து பிரிவுபச்சார விழா நிகழ்ந்தது. ஆடல் பாடல் என எல்லாமும் நடந்தது. ஒவ்வொருவராக மேடையில் சென்று நன்றி தெரிவித்தார்கள், நினைவுகளைப் பகிர்ந்தார்கள். சேஷாத்ரி நிமிர்ந்த முதுகுடன் முதல் வரிசையில் அமர்ந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார். இளங்கோ சிரிக்க சிரிக்க தான் இடைநீக்கம் செய்யப்பட நிகழ்வை நினைவுகூர்ந்துக் கொண்டிருந்தான். ஒன்றரை வருடங்களுக்கு முன் ஸ்ரீநிவாசனுக்கு சிகிச்சையளிக்க வேண்டிய நாளன்று சிவானந்தன் கல்லூரிக்கு வரவில்லை. ஏறத்தாழ ஒருவாரம் கடும் காய்ச்சல், வாந்தி. ஆகவே அன்றுகாலை இளங்கோ தனியாளாக ஸ்ரீனிவாசனை உசுப்பி ரேடியாலஜி அறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறான். ஆனால் அங்கே சேஷாத்ரி கையெழுத்து இல்லாமல் எதுவும் செய்யமுடியாது என கைவிரித்துவிட்டார்கள். கல்லூரி திறப்பதற்கு முன்பாகவே அவரை வண்டியில் அமர வைத்து தாம்பரத்தில் உள்ள தனியார் சோதனைக் கூடத்திற்கு அழைத்துச் செல்ல முனைந்திருக்கிறான். ஆனால் அதற்குள்ளாக சேஷாத்ரி அவர்களை கண்டுவிட்டார். வேறுவழியின்றி சிகிச்சை அறைக்கு வந்தார்கள். சிவானந்தன் இல்லாத சூழலில் வேறு எவரும் முன்வராத நிலையில் சேஷாத்ரியே சிகிச்சையை செய்தார். அட்டையை புடைப்பின் மீது விட்டபோது அது கவ்வ மறுத்ததும். சிறிய கீறலை புடைப்பின் மீது கிழிக்க முயன்றார். லேசாக கீறியதும் ரத்தம் பீரிட்டு சேஷாத்ரியின் முகத்தில் வழிந்தது. ரத்தத்தை நிறுத்துவதற்குள் ஸ்ரீனிவாசன் அங்கேயே மயங்கி விழுந்து உடனே இறந்து போனார். அனுமதியின்றி வெளியே அழைத்துச் செல்ல முயன்ற இளங்கோ தான் காரணம் என குற்றம் சுமத்தப்பட்டு ஒருவாரம் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டான். சிவானந்தன் நினைவுகளில் சுழன்றான். அவன் கல்லூரிக்கு திரும்பியபோதே எல்லாம் இயல்பாகி விட்டிருந்தது. அவனுடைய ஆசிரியனின் அணுக்கச் சீடனாக தொடர்ந்தான். இறுதி பரீட்சை முடிந்து பயிற்சி மருத்துவராக இருந்த காலத்தில் சேஷாத்ரியிடம் இருந்து பலவற்றைக் கற்றுக்கொண்டான். சேஷாத்ரி எந்த நோய்க்கு எந்த நிலையில் எந்த மருந்து அளிப்பார் என்பதை முன் ஊகிக்கும் அளவிற்கு நெருக்கமாக ஆனான். அவனுடைய ஊகம் பெரும்பாலும் தவறியதும் இல்லை. அப்போது சிவாவின் முறை. “சேஷாத்ரியின் சீடரே வருக, சிவகங்கைச் சிங்கமே வருக, சீக்கு சிவாவே வருக” என கைத்தட்டல்களின் ஊடே பேசத் தொங்கினான். நேராக சேஷாத்ரியை நோக்கி வணங்கினான். “உங்களிடம் ஒன்றே ஒன்று சொல்ல வேண்டும்” என்றான். சேஷாத்ரி புன்முறுவலுடன் சொல்க என்பது போல் கையசைத்தார். “சார், நான் அட்டையின் வாயையும் குதத்தையும் துல்லியமாக கண்டுபிடித்துவிட்டேன். நன்றி. வணக்கம்” என்று திருத்தமாக சொல்லிவிட்டு அரங்கை விட்டு வெளியேறினான். வெளியே பெய்துகொண்டிருந்த மென்மழையில் நடப்பது அவனுக்கு பெரும் ஆசுவாசமாய் இருந்தது. 
௯நந்ட்ரி- தமிழ் இந்து திசை தீபாவளி மலர் 2019. சிறந்த ஓவியங்கள் அளித்த ஓவியர் செல்வத்துக்கும் நன்றி)