Thursday, November 14, 2019

கதை எழுதத் தொடங்கிய கதை

(கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 22,23 இரண்டு நாட்கள் யுவ புரஸ்கார் விருதாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு நிகழ்ந்தது. பேராசிரியர் சித்ரா மற்றும் தங்கமணி ஏற்பாடு செய்திருந்தார்கள். நல்ல முயற்சி. அந்த நிகழ்விற்காக படைப்புலகம் பற்றி ஒரு கட்டுரை எழுதச்சொன்னார்கள். இப்படியான ஒரு கட்டுரையை எழுத உண்மையில் கூச்சமாகத்தான் இருந்தது. எனினும் எழுதிவிட்டேன். அவர்கள் தொகுக்கும் நூலில் இது இடம்பெறும். சற்றே நீண்ட கட்டுரை. என்னை நானே தொகுத்துக்கொள்ள உதவியது. கண் சிகிச்சை செய்து கொண்டதால் இதன் இறுதி பகுதியை என்னால் எழுத முடியவில்லை. சொல்லச்சொல்ல மாமனார் தட்டச்சு செய்து கொடுத்தார். வழக்கம் போல நண்பர் நட்பாஸ் திருத்திக்கொடுத்தார். இருவருக்கும் நன்றிகள்)


கதைகளின் மீதான மயக்கம் நம் அனைவரையும் போல எனக்கும் என் பால்ய காலத்திலிருந்தே தொடங்கியது. எழுத்தாளருக்கும் பிறருக்குமான வேறுபாடு என்பது எழுத்தாளர் கதைகளை தொலைப்பதில்லை, அதன் மீதான மயக்கம் தெளிவதில்லை, ஆனால் பிறருக்கு வயதேற வயதேற வாழ்வின் மர்மங்களின் மீதான ஆர்வமும் ஆச்சரியமும் குறைந்து விடுகிறது. அவர்கள் கதைகளக் கைவிட்டு வெகுதொலைவு சென்றுவிடுகிறார்கள். எழுத்தாளன் கதைகளின் வழியே தன் பால்யத்தை காலாதீதத்திற்கு நீட்டித்துக் கொள்கிறான், காலத்தை எதிர்கொள்ள கதைகளையே ஆயுதமாக தரிக்கிறான். 

அம்மா ஒரு அற்புதமான கதைசொல்லி. அவள் சோறூட்டும்போது சொன்ன தேவதை- கோடரி கதையை இன்றும் முழுமையாக அவளுடைய குரலிலேயே நினைவுகூர முடிகிறது. எங்கள் பூர்வீக வீட்டில் இருந்த பாப்பாயி பாட்டி கதை சொல்லும்போது சொலவடைகளும் சேர்ந்து விழும். எங்கள் வீட்டு உணவு மேஜையில் எப்போதும் புத்தகங்கள் கவிழ்ந்து கிடக்கும். அப்பாவும் அம்மாவும் ஆளுக்கொரு புத்தகத்தை விரித்தபடிதான் உண்பார்கள். அக்கால வாராந்திரிகளில் இருந்து தொடர்கதைகளை சேகரித்து பைண்டு செய்யும் வழக்கம் அவர்களுக்கு உண்டு. இப்போதும் என் புத்தக சேகரிப்பில் கணிசமான பைண்டு புத்தகங்கள் உள்ளன. ‘பொன்னியின் செல்வன்’, ‘சிவகாமியின் சபதம்’, பி.வி. தம்பியின் ‘கிருஷ்ணப் பருந்து’ (இது அந்த வயதில் படித்திருக்கக்கூடாத புத்தகம் என்பதை படித்து முடித்ததும் தெரிந்துகொண்டேன்), நா.  பார்த்தசாரதியின் ‘குறிஞ்சி மலர்’ ஆகிய கதைகளை நான் பள்ளிக் காலத்தில் பைண்டு புத்தகங்களில்தான் வாசித்தேன். வாரமொருமுறை வரும் சிறுவர் மலர் இணைப்பை ஆர்வமாக எதிர்பார்த்தேன். அதில் வரும் படக்கதைகள் மீது பெரும் ஈர்ப்பு. பலமுக மன்னன் ஜோ, எக்ஸ்ரே கண் ரே, சோனிப் பையன் என பல பாத்திரங்களையும் அவர்களின் முகப்பாவங்களையும் மனத்திரையில் இப்போதும் காண முடிகிறது. எனக்காக வீட்டில் ‘கோகுலம்’ வாங்கினார்கள். ஆங்கிலத்தில் ‘சம்பக்’ மற்றும் ‘டிங்கில் டைஜெஸ்ட்’ மாதாந்திரிகள் வாங்குவது வழக்கம். அதன் படக்கதைகள் வேறு உலகத்தை அறிமுகம் செய்தன. வீட்டில் சாவியின் ‘வாஷிங்டனில் திருமணம்’, ‘விசிறி வாழை’, ‘கேரக்டர்ஸ்’ (அதிலொரு பெயர் ஜம்பம் சாரதாம்பாள்!), ஆகியவற்றை வாசித்திருக்கிறேன். 

பள்ளிப் பருவத்தில் என்னை மிகவும் ஈர்த்த எழுத்தாளர் என தேவனையும் கல்கியையும் சொல்வேன். தேவனின் ‘துப்பறியும் சாம்பு’, ‘மல்லாரி ராவ் கதைகள்’, ‘ராஜத்தின் மனோரதம்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’, ஆகியவை என்னை வசீகரித்தன. ஆங்கிலத்தில் ‘ஹாரி பாட்டர்’ கதைகளை பதின்மத்தில் வாசிக்கத் தொடங்கி கல்லூரிப் பருவம் வரை அந்த உலகத்துடனான தொடர்பு நீடித்தது. பாலோ கோயல்ஹோவின் ‘ரசவாதி’யும் ரிச்சர்ட் பாக்கின் ‘ஜோனாதன் லிவிங்க்ஸ்டன் எனும் கடற்புள்ளுவும்’ பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த சமயத்தில் வாசித்தேன். அவை அன்று ஆளுமை உருவாக்கத்தில் பெரும் பங்காற்றிய நூல்கள் என்றே இன்றும் மதிப்பிடுகிறேன். 

கல்லூரிக் காலத்தில் இந்திரா சௌந்தரராஜன் மீது ஒரு ஈடுபாடு பிறந்தது. நான் தேர்ந்த ஆயுர்வேத மருத்துவமும் அந்த ஈடுபாட்டிற்கு ஒரு காரணம். சித்தர்கள், ரசவாதம், மருத்துவம் என வசீகர உலகம். ஆங்கிலத்தில் டான் பிரவுனும் சிட்னி ஷெல்டனும் அறிமுகம் ஆனார்கள். இதுவரையிலான என் வாசிப்பு என்பது பெரும்பாலும் பொழுதுபோக்கு வாசிப்புத் தளத்தை சார்ந்தவை என சொல்லலாம். நான் ஆயுர்வேதம் படித்துக் கொண்டிருந்த அதே கல்லூரியில் சித்த மருத்துவம் பயின்றுவந்த வினோத் எனக்கு நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்தினான். இன்று சித்ரன் எனும் பெயரில் அவனுடைய முதல் சிறுகதை தொகுப்பு ‘கனாத்திறமுரைத்த காதைகள்’ வெளியாகி கவனம் பெற்று வருகிறது. குறிப்பாக பயிற்சி மருத்துவர் காலத்தில் இரவு எங்களுக்கு ஒன்றாக பணி செய்யும் வாய்ப்பு அமைந்தபோது பல கதைகளை, எழுத்தாளர்களை, அறிமுகப்படுத்தினான். 

இலக்கிய உலகம் சார்ந்து எனது முதல் பரிச்சயம் என லக்ஷ்மி சரவணக்குமாரை சொல்லலாம். அப்போதுதான் அவருடைய சில கதைகள் வெளியாகத் தொடங்கி இருந்தன. சித்ரனின் நண்பராகவே எனக்கு அறிமுகம். சித்ரன் வழியாகவே ஜெயமோகன் எனும் பெயரை அறிந்தேன். ஏறத்தாழ அதே சமயத்தில் ஆனந்த விகடனில் ஜெயமோகன் சார்ந்து தொப்பி திலகம் சர்ச்சை ஒன்று உலவிக் கொண்டிருந்தது. அப்படித்தான் அவருடைய இணையதளம் அறிமுகம் ஆனது. 

தொடக்க காலத்தில் அவருடைய இணைய தளத்தில் எனக்கு வாசிக்கக் கிடைத்தவை என்னை வெகுவாக சீண்டின. அவருடைய தளம் வழியாகவே நவீன தமிழ் இலக்கியத்தை தொடர்ந்தேன். முன்னும் பின்னுமாக பலரையும் வாசிக்கத் தொடங்கினேன். 

நான் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே முறையாக தமிழ் கற்றவன். என் தாய்மொழி தெலுங்கு. வீட்டில் பேசுமொழியும் அதுவே. இந்தியும், சமஸ்க்ருதமுமே பள்ளியிலும் பின்னர் கல்லூரியிலும் நான் இரண்டாம் மொழியாக கற்றவை. என் மொழி முழுக்க முழுக்க இலக்கிய வாசிப்பில் உருக்கொண்டதே. அதுவே மரபிலக்கியம், தமிழ் இலக்கணம் சார்ந்து சில எல்லைகளையும் எனக்கு வகுத்தது. வாசிப்பின் வழி எனது சிந்தனை மொழி மற்றும் முதன்மை வெளிப்பாட்டு மொழியாக தமிழ் உருவானது. இந்த மாறுதலை நான் மிக முக்கியமானதாக பார்க்கிறேன். மொழி அகத்தை செழுமை செய்கிறது, அக அடுக்குகளை மாற்றி அமைக்கிறது, உணர்வுத் தளத்துடன் நெருக்கமாக பிணைகிறது. தமிழ் வாழ்விற்கும் அதன் உணர்வுகளுக்கும் தமிழ் மொழி, அதன் உச்சரிப்புடன் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என நம்புகிறேன். மொழி மீதான ஈடுபாடு ஒரே நேரத்தில் உணர்வுத் தளத்திலும் அறிவுத் தளத்திலும் நிகழ்ந்தது என்பதால் மொழி மேட்டிமை அல்லது மொழி அடிப்படைவாத உணர்வுகளில் மனம் ஈடுபடவில்லை. அதே வேளையில் மொழியின் தனித்துவம் மீதும், பண்பாட்டுக் கொடையின் மீதும் அளப்பறியா காதல் ஏற்பட்டது.      

பள்ளி, கல்லூரி காலகட்டத்தில் ஆன்மிகம் மற்றும் சுய முன்னேற்றம் சார்ந்து பல புத்தகங்களை வாசித்ததில் ராபின் ஷர்மாவின் தனது பொக்கிஷத்தை விற்றத் துறவி’ ஓரளவு இப்போதும் நினைவில் இருக்கிறது. பரமஹம்ச யோகானந்தரின் ‘ஒரு யோகியின் சுயசரிதை’ ஒரு காலகட்டத்தில் என்னை ஆட்கொண்ட நூல் என்றே சொல்லலாம். திருவண்ணாமலையில் இருக்கும் பெரியம்மா வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் ரமணாசிரமம் செல்வேன். அங்கு சில புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். குண்டலினி, யோகம், சித்தர்கள் என ஒரு தளத்தில் வாசிப்பும், வாசித்ததைச் சோதிப்பதும் நிகழ்ந்தது. காந்தியின் மீது விருப்பு வெறுப்பற்ற ஒரு மரியாதை சிறுவயதிலிருந்தே உண்டு. ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’ எனக்கு காந்தியை மனதிற்கு நெருக்கமான வகையில் அறிமுகம் செய்தது. அதன் பின்னர் பல காந்திய நூல்களை வாசித்திருக்கிறேன். அவற்றில் குறிப்பிடத்தக்கவை என தரம்பாலின் ‘காந்தியை அறிதல்’ மில்லி கிரகாம் போலாக்கின் ‘காந்தி எனும் மனிதன்’ ஆகியவற்றைச் சொல்லலாம். காந்தி ஒரு தொடக்கமே. குமரப்பா, வினோபா என வாசிப்பு விரிந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலும் கணிசமான அளவு காந்திய வாசிப்பு இன்றுவரை தொடர்கிறது.        

புதுமைப்பித்தன், ஜெயமோகன், அசோகமித்திரன், யுவன் சந்திரசேகர் மற்றும் அ. முத்துலிங்கத்தை எனது ஆதர்ச எழுத்தாளர்கள் எனச் சொல்லலாம். ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’ மற்றும் அவர் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் ‘வெண் முரசு’ வரிசை நாவல்கள் எனக்கு மிகப் பிடித்த நாவல்கள் எனச் சொல்லலாம். அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’, ‘தண்ணீர்’, ‘ஒற்றன்’, ஆகிய நாவல்களும் மனதிற்கு நெருக்கமானவை. பிடித்த எழுத்தாளர்கள் என ஒரு பட்டியல் போட்டால் நாஞ்சில் நாடன், சுரேஷ்குமார இந்திரஜித், சு. வேணுகோபால், ஜோ டி குரூஸ், ஆதவன், எம்.  கோபாலகிருஷ்ணன், இரா. முருகன், பி.ஏ. கிருஷ்ணன், ப. சிங்காரம் என பலரையும் சொல்லலாம். தேவதேவன், தேவதச்சன், ஞானக்கூத்தன், பெருந்தேவி, போகன் ஆகியோர்  கவிதைகளில் ஈடுபாடு உண்டு. சமகால எழுத்தாளர்களில் குணா கந்தசாமி, பாலசுப்பிரமணியன் பொன்ராஜ், கே.என். செந்தில், கார்த்திகை பாண்டியன், போகன் ஆகியோரின் கதைகளை பெருவிருப்புடன் தொடர்ந்து வருகிறேன். உலக இலக்கியத்தைப் பொறுத்தவரை ஒரு எழுத்தாளராக என்னை அதிகம் ஈர்த்தவர் காப்கா. அவருடைய ‘உருமாற்றம்’, ‘விசாரணை’, எனக்கு மிகப் பிடித்தமானவை. சுருள் படிகளில் மெதுவாக இறங்கி அகத்தின் ஆழத்தைத் தீண்டுபவர். ராபர்டோ போலானோ, மிகைல் புல்ககோவ், ஆல்டஸ் ஹக்ஸ்லி, டெட் சியாங், ஜார்ஜ் ஆர்வெல், மரியோ வர்கோஸ் லோசா, சேவியர் செர்காஸ், யு மிங் யி என பலரையும் எனக்கு அணுக்கமான எழுத்தாளர்களாக உணர்ந்திருக்கிறேன். 

ஆயுர்வேத மருத்துவம் இயல்பிலேயே கடின வாசிப்பைக் கோருவது. ஒருபக்கம் சமஸ்க்ருத மூல நூல்கள் மற்றும் அதன் உரைகளை வாசிக்கவேண்டும். மறுபக்கம் நவீன மருத்துவ நூல்களை வாசிக்க வேண்டும். உடற்கூறு, உடல் இயங்கியல், தடயவியல் மருத்துவம், சமூக மருத்துவம், பொது மருத்துவம், அறுவை மருத்துவம், கண் சிகிச்சை, காது மூக்கு தொண்டை மருத்துவம், குழந்தைகள், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம் என அத்தனை நவீன மருத்துவ பாடங்கள் எங்களுக்கும் உண்டு. மருத்துவம் சார்ந்த வாசிப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும் எனது ஆர்வம் மருத்துவ வரலாறு சார்ந்து திரும்பியது. இந்திய மருத்துவ வரலாற்றின் வளர்சிதை மாற்றங்கள், வெவ்வேறு போக்குகள் குறித்து தமிழில் ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்பது என் நெடுநாளைய கனவு. ஆயுர்வேத மருத்துவ தூய்மைவாதிகள் தரப்பும் ஆயுர்வேத மருத்துவத்தை நிராகரிக்கும் தரப்பும் ஒரு புள்ளியில் ஒன்றுபடும் என்றால் அது ‘எல்லாமே நூலில் எப்போதோ சொல்லப்பட்டுவிட்டது’ எனும் கருத்தில்தான். தூய்மைவாதிகள் மருத்துவத்தின் வளர்ச்சிப் போக்குகளை மறுத்து எல்லாவற்றையும் கடந்தகாலத்திற்கு நகர்த்திச் செல்வார்கள். விமர்சகர்கள் இதே காரணத்தைச் சுட்டி அறிவியலுக்கு எதிரானது, ஒரு காலகட்டத்தில் தேங்கி நின்றுவிட்டது, என நிராகரிப்பார்கள். டொமினிக் உஜாஸ்டிக், கென்னத் ஜிஸ்க் போன்றோரை வாசிக்கும்போது எனக்கு கிடைத்த சித்திரம் வேறு. 1850கள் வரையிலும்கூட மற்ற அறிவுத்துறைகளுடன் ஆரோக்கியமான அறிவுப் பரிமாற்றம் நிகழ்ந்து தொடர்ந்து வளர்ச்சியை உள்வாங்கியபடிதான் இருந்தது. பெர்சிய, கிரேக்க, சீன மருத்துவத்துடன் சீரான உறவு இருந்திருக்கிறது. காலனிய தாக்கத்தை எதிர்கொண்டு அதற்குரிய வகையில் மருத்துவமும் மாறி வந்திருக்கிறது. ஆயுர்வேத மருத்துவத்தின் வீழ்ச்சி என்பது இந்த நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்குள் நிகழ்ந்ததுதான். 
             
தோராயமாக தமிழ் இலக்கிய பரப்பை இலக்கியவாதிகள் மற்றும் கதைசொல்லிகள் என இரண்டாக வகுத்தால் புதுமைப்பித்தன், ஜெயமோகன், அசோகமித்திரன் ஆகிய மூவருமே இரண்டு கூறுகளும் ஏறத்தாழ சம அளவு கொண்டவர்கள் எனச் சொல்லலாம். யுவனையும் முத்துலிங்கத்தையும் கதைசொல்லிகள் என்றே வகைப்படுத்தலாம். ஜெயமோகனும் அசோகமித்திரனும் சந்திக்கும் புள்ளியில் எனது புனைவுலகம் நிகழவேண்டும் என்பதே என் கனவு. அகத்திற்கும் புறத்திற்கும், ஒழுங்கிற்கும் ஒழுங்கின்மைக்கும், வரலாற்றுக்கும் தனிவாழ்விற்கும் இடையிலான சமநிலையை அடைய விழைகிறேன் என்றும் சொல்லலாம். 

வாசிப்பின் படிநிலைகளை கவனிக்கும்போது முதலில் சிறார் இலக்கியம், பிறகு பொழுதுபோக்கு இலக்கியம், ஆன்மிகம்- சுயமுன்னேற்ற வாசிப்பு, காந்தி, நவீன தமிழ் இலக்கியம், வரலாறு மற்றும் பண்பாடு சார்ந்த வாசிப்பு என்பதே என் வரிசை என தொகுத்துச் சொல்லமுடியும். அடுத்தக்கட்டமாக மெய்யியல் தளத்தில் வாசிக்கும் ஆர்வம் உண்டாகியுள்ளது.

எட்டாவதோ ஒன்பதாவதோ படித்துக் கொண்டிருக்கையில் ஆண்டு விடுமுறையில் முதன்முறையாக ‘பொன்னியின் செல்வன்’ வாசித்து அதன் தாக்கத்தில் ஒரு கதை எழுதத் தொடங்கினேன். அதையே முதல் எழுத்து முயற்சி என சொல்லலாம். தஞ்சை, கும்பகோண பகுதி கோவில்களுக்கு அம்மாவுடன் செல்லும் வாய்ப்பு அமைந்தது கற்பனைகளை மேலும் விரிவாக்கியது. ‘யாமம்’, ‘புலர்காலை’, ‘அந்தி’, ‘நண்பகல்’ என நாவலின் தலைப்புக்களை பிரித்திருந்தேன். ஒவ்வொரு பகுதியிலும் அந்தப் பொழுதில் நிகழ்பவை மட்டுமே கதை என்பது திட்டம். பெரிதாக எழுதவில்லை என்றாலும்கூட நாவலைப் பற்றி சிந்தனைகளும் கற்பனைகளும் தறிகெட்டு ஓடின. பள்ளியில் ஆண்டுவிழா நாடகங்களில் பிரதான பாத்திரம் ஏற்று பல வருடங்கள் நடித்த அனுபவம் எனக்குண்டு. பதினோராம் வகுப்பில் பாக்கியம் ராமசாமி விகடனில் எழுதிய ‘ப்ளஸ் டூ தியாகிகள்’ எனும் அங்கதக் கட்டுரையைத் தழுவி நானும் எனது வகுப்பு மாணவி ஒருவரும் சேர்ந்து ஆண்டு விழா நாடகத்தை எழுதினோம். அதேயாண்டு பள்ளியின் முதல் ஆண்டு இதழின் ஆசிரியக் குழுவில் இடம்பெற்றது ஒரு அனுபவம். ஒரு ஆங்கிலக் கவிதையும் ஒரு ‘மனிதா முன்னேறிவிடு’ வகை தமிழ்க் கவிதையும்  வெளியானது. ஆங்கிலக் கவிதை காஷ்மீர் சிக்கலைப் பற்றி சிவப்பு வெளுப்பு என்று உருவக ரீதியாக எழுதப்பட்ட கவிதை. இந்தியன் எக்ஸ்ப்ரஸின் சிறுவர் இணைப்பிதழுக்கு ‘ஜோக்கர்’ எனும் தலைப்பில் எழுதிய ஆங்கிலக் கவிதைக்கு பெயரிலியாக ஒரு வாசக கடிதம் பாராட்டி பள்ளி முகவரிக்கு வந்தது முதல் வாசக அங்கீகாரம் எனக் கொள்ளலாம். எனினும் என் நண்பர்களின் குறும்பாக இருக்கலாமோ என்றொரு ஐயம் இன்றுவரை எனக்குண்டு. இப்போது யோசிக்கையில் ஆங்கிலக் கவிதைகள் அன்றைய வயதிற்கு சற்றே முதிர்ந்த உள்ளடக்கம் மற்றும் தொனி கொண்டிருந்தன எனத் தோன்றுகிறது. 

கல்லூரி இறுதியாண்டு காலத்தில் கணினி பழகத் தொடங்கினேன். அப்போது தமிழக அறிவுபுலத்தில் ’வலைதள’ அலை நிலவியது. ‘தமிழ்மணம்’, ‘தமிழ்வெளி’ என வலைப்பூ திரட்டிகள், வலைப்பூ விருதுகள் களைகட்டிய காலம். வலைப்பூ உலகில் நட்சத்திரங்கள் உருவாகி இருந்தார்கள். காரசாரமான விவாதங்கள், சச்சரவுகள் எனத் துடிப்புடன் இயங்கியது. தொடக்கத்தில் ஆங்கிலத்தில்தான் வலைப்பூ எழுதத் தொடங்கினேன். ஒரு பத்து பதினைந்து கட்டுரைகள் எழுதி இருக்கலாம். பின்னர் மெதுவாக தமிழ் வலைப்பூவைத் தொடங்கினேன். இன்றுவரை அந்தத் தளத்தையே பயன்படுத்தி வருகிறேன். வலைப்பூ உலகம் பல்வேறு துறையினரைக் கொண்டது. காப்பீட்டுத் துறையில் உள்ளவர் அவருடைய துறை சார்ந்து தொடர் கட்டுரைகளை எழுதுவார், மருத்துவர்கள் அவர்களுடைய தொழில் சார்ந்து எழுதுவார்கள், சமையல் குறிப்புகள், சட்டச் சிக்கல்கள் என பலகுரல்கள் ஒலித்தன. ஆயுர்வேதம் குறித்து சில கட்டுரைகளை வலைப்பூவில் எழுதினேன். சில சிறுகதைகளும் அக்காலக்கட்டத்தில் எழுதினேன். அவை முதிரா முயற்சிகள் என்றே சொல்லவேண்டும். சில கதைகளை இப்போது வாசிக்கையில் வேடிக்கையாக உள்ளது. அதைவிடவும் அப்போது எழுதிய சில கவிதைகள் பரிதாபகரமானவை. எனினும் கூட ‘அதிமானுடன்’ போன்ற ஒரு கதையை இப்போது கொஞ்சம் சரி செய்து நல்ல கதையாக எழுத முடியும் எனத் தோன்றுகிறது. 

நவீன தமிழ் இலக்கியம் எப்போதும் சிற்றிதழ் மரபின் வழியாகவே அடையாளப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மணிக்கொடி யுகம், எழுத்து யுகம், கசடதபற யுகம், மீட்சி யுகம், நிறப்பிரிகை யுகம், தமிழினி யுகம் எனத் தோராயமாக சொல்லலாம். இன்றைய நிலையில் ‘மணல் வீடு’ மற்றும் ‘கல்குதிரையை’ சிற்றிதழ் மரபின் தற்காலத்திய குரல் என சொல்லலாம். சிற்றிதழ்கள் சார்ந்து ஒரு காலகட்டத்தை வகுக்கும்போது அந்த காலகட்டத்து அழகியல், அரசியல் பின்புலத்தையும் சேர்த்தே வகைப்படுத்துகிறோம். 2005க்கு பின்பான இந்த பதினைந்து ஆண்டுகளை இணைய யுகம் என்றே வரையறை செய்ய முடியும். இணையத்தின் வருகை தீவிர இலக்கியம், பரப்பியல் இலக்கியம், எனும் பாகுபாடை ஊடகம் சார்ந்த அளவில் அழித்தது. எழுத்தின் தன்மையில் இந்த வேறுபாடு இப்போதும் உள்ளதே. ஒரு படைப்பு அதன் வெளியீட்டு ஊடகம் வழியாக தீவிர இலக்கியம், பரப்பியல் இலக்கியம் என வரையறை செய்யப்பட முடியாது என்பதே இதன் பொருள். மாறாக அப்படியொரு பகுப்பே மறைந்துவிட்டது என்பதல்ல. முந்தைய காலங்களில் நவீனத் தமிழ் எழுத்தாளர் சிற்றிதழ் வழியாகவே அறிமுகம் ஆகி வந்தார். இணைய யுகத்தில் தான் இது மாறியது. 
இணைய யுகத்தையும் கூகுள் குழும யுகம், வலைப்பூ யுகம், ஃபேஸ்புக் யுகம், ட்விட்டர் யுகம் என மேலும் நுணுக்கமாக வகைப்படுத்தலாம். ஒவ்வொரு சமூக ஊடகத்தின் வெளிப்பாட்டு முறையும் வேறு. வலைப்பூவின் நட்சத்திரங்கள் ஃபேஸ்புக்கில் பிரகாசிக்கவில்லை. அங்கே வேறு சிலர் உருவாகி வந்தார்கள். ட்விட்டர் வேறு சிலரை நட்சத்திரங்களாக ஆக்கியது. என்னை வலைப்பூ யுகத்தின் எழுத்தாளர் என்றே வகைப்படுத்திக்கொள்வேன். அதே நேரத்தில் எனது சிந்தனை மற்றும் வாசிப்பை கூகுள் குழுமங்கள் வழியாகவே செழுமைப் படுத்திக்கொண்டேன். ஜெயமோகன் வாசகர்களுக்கான சொல்புதிது குழுமம் மிகச் சூடான விவாதக் களம். ஆம்னிபஸ் மற்றும் பதாகை நண்பர்கள் குழுமம் பல வகையிலும் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. வலைப்பூ போல் அல்லாமல் ஒரு இணக்கமான நட்பு சூழல் மூடிய குழுமங்களில் சாத்தியமானது. இன்றுவரை இந்த குழுமங்களில் வழி கண்டடைந்த ஒத்த மனமுடையவர்களே எனது நெருங்கிய நண்பர்களாகவும் தொடர்கிறார்கள். நட்பார்ந்த சூழலில் எழும் விமர்சனம் நன்னம்பிக்கையின் பேரில் எழுவது என்பதால் வெறுப்பின்றி அணுக இயலும். மூடிய குழுமம் என்பதால் முட்டாள்தனமாக இருந்துகொள்ளத் தயங்கியதில்லை. முட்டாள்தனத்தை அறிவித்துக்கொள்ள முடியாமல் ஆகும்போதே போலியான பாவனைகள் வந்து சேர்கின்றன. அது முட்டாள்தனத்தை விட ஆபத்தானது. கற்றுக்கொள்ளும் வாயில்களை அடைப்பது. 

என் சொந்த வலைப்பூ எழுத்தின் பெறுமதி குறித்து எனக்கு பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. இன்று என் வலைதளம் நான் எழுதியவற்றை சேமிக்க உதவுகிறது. ஆனால் நாங்கள் நண்பர்களாக சேர்ந்து இயங்கிய வலைதளங்கள்  தமிழ் இணையத்தில் நிலவிய ஒரு வெற்றிடத்தை நிரப்பிய அளவில் முக்கியமானவை. அண்ணா ஹசாரே இயக்கம் வலுவாகத் தொடங்கிய காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து அவர் மீதான அவதூறுகளுக்கு பதில் சொல்லும் விதமாக ஒரு வலைதளத்தை தொடங்கினோம். அதில் ராலேகான் சித்தியில் அண்ணா ஹசாரே நிகழ்த்திய மாற்றங்கள் குறித்த கட்டுரையை மொழியாக்கம் செய்தேன். அரவிந்த் கேஜிரிவாலின் நீண்ட நேர்காணல் ஒன்றையும் மொழியாக்கம் செய்தேன். சுமார் இருபது முப்பது கட்டுரைகள் அண்ணா ஹசாரே குறித்து தளத்தில் வெளியாயின. வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதியவற்றையும் தொகுத்து வெளியிட்டோம். அண்ணா ஹசாரேவின் இயக்கம் தொய்வடைந்தபோது நண்பர்கள் ஆர்வமிழந்தனர். அண்ணா ஹசாரே மீதான அவதூறுகள், விமர்சனங்கள், காந்தியின் மீதான முன்முடிவுகளில் இருந்து பிறந்தவை என்பதை உணர்ந்துகொண்டேன். மேலும் அவருடைய இயக்கம் ஏன் முழு வெற்றி பெறாமல் வலுவிழந்தது என்று யோசிக்கும்போது அவருக்கும் காந்திக்கும் இடையிலான தூரம் புலப்படத் தொடங்கியது. அப்படித்தான் அண்ணா ஹசாரேவிற்காக இயங்கிய தளம் காந்திக்கான தளமாக உருமாறியது. இணையத்தில் காந்திக்கென ஒரு அறிவுத் தரப்பு உருவாகாத சூழலில் அடிப்படையற்ற அவதூறுகளுக்கு காந்தியே எளிதான இலக்கானார். ஏறத்தாழ இதே சமயத்தில் நண்பர் ‘ராட்டை’ ஃபேஸ்புக்கில் காந்தி குறித்தான அவதூறுகளுக்கு தரவுகளோடு மறுப்பு தெரிவிக்கத் தொடங்கினார். 

காந்தி-இன்று இணையதளம் இன்றும் இயங்கி வருகிறது. ஐநூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் அதில் உள்ளன. ஆஷிஷ் நந்தி, ராமச்சந்திர குகா, அனந்தமூர்த்தி என பலருடைய காந்தி குறித்தான கட்டுரைகளும் அதில் இடம்பெற்றுள்ளன. வினோபா, குமரப்பா, கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன், ஆங் சண் சூகி, மண்டேலா, மார்டின் லூதர் கிங், சுந்தர்லால் பகுகுணா, பாபா ஆம்தே, லாரி பேக்கர், தரம்பால் என பல காந்திய ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. நேர்காணல்கள், கட்டுரை மொழியாக்கங்கள், நேரடி கட்டுரைகள், புத்தக மதிப்புரைகள், காந்திய புனைவுகள் என பலவும் இடம்பெற்றுள்ளன. நான் உற்சாகம் இழக்கும்போது நட்பாஸ் செயல்பட்டு ஊக்கமளிப்பார். அவர் தொய்வடையும்போது நான் பங்களிக்கத் தொடங்கினேன். தொடக்கத்தில் இருந்த தீவிரம் மெதுவாக குறைந்தது. ‘பகத்சிங்கின் தூக்கிடலை காந்தி ஆதரித்தாரா?’, ‘பாகிஸ்தானுக்கு ஐம்பத்தி ஐந்து கோடி அளிக்க உண்ணாவிரதம் இருந்தாரா?’, ‘பிரிவினைக்கு காந்திதான் காரணமா?’, ‘அம்பேத்கரும் காந்தியும் எதிரிகளா?’, ‘காந்திதான் அரசியலுக்கும் மதத்தை கொண்டுவந்தவரா?’, இப்படியான பல கேள்விகளை தளத்தின் கட்டுரைகள் எதிர்கொண்டு தரவுகளோடு கூடிய பதிலை அளித்தன. ஆனால் ஒருகட்டத்தில் இது சலிப்பை அளித்தது. இந்த பதில்கள் எவரை திருப்திபடுத்த? முன்முடிவுகள் கொண்டவர்களோடு முட்டிமோதி விவாதிப்பதால் என்ன பயன்? இத்தனை மெனக்கெட்டு புனைவற்ற எழுத்துக்களை ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கு மொழியாக்கம் செய்யத்தான் வேண்டுமா என்றொரு கேள்வி எழுந்தது. காந்தி தளம் தொடங்கி இரண்டு வருடங்களில் என் நாட்டம் புனைவிலக்கியம் சார்ந்து நகர்ந்தது. ஆகவே காந்தி இன்று தளத்திற்கு மொழியாக்கங்கள் செய்வதை நிறுத்திவிட்டேன். அசலான கட்டுரைகளை மட்டுமே எழுதுவது என தீர்மானித்துக் கொண்டேன். 

தற்காலத்தில் காந்திய கருத்துத் தரப்பை வலுப்படுத்தியதில் காந்தி- இன்று தளத்திற்கு மிகமுக்கிய பங்கு உண்டு என்றே எண்ணுகிறேன். 2012 ஆம் ஆண்டு காந்தி இன்று தளத்தில் நூறு கட்டுரைகளைக் கடந்தபோது ஒரு சிறிய தொகை நூலை நண்பர் கடலூர் சீனு தொடங்கிய சொல் புதிது பதிப்பகம் வழியாக வெளியிட்டோம். ‘காந்தி எல்லைகளுக்கு அப்பால்’ எனும் அந்நூலில் மைக்கேல் பிளாட்கின் மற்றும் ஜீன் ஷார்ப் எழுதிய கட்டுரைகளை நான் மொழியாக்கம் செய்திருந்தேன். நண்பர் சிவாத்மா பிரித்தானிய சிற்பி (Claire Sheridan) காந்தியை இங்கிலாந்தில் சந்தித்ததைப் பற்றி எழுதிய குறிப்பை மொழியாக்கம் செய்திருந்தார். அர.சு. ராமையா லாயிட் ஐ ருடால்ப் எழுதிய ‘பின்நவீனத்துவ காந்தி’ நூலின் மீது விரிவான வாசிப்பை அளித்து எழுதிய கட்டுரையும் இடம்பெற்றிருந்தது. இந்தியாவிற்கு வெளியே காந்தி எப்படி பொருள் கொள்ளப்படுகிறார் என்பதே பொதுவான வரையறை. காந்தி –இன்று தளத்திலிருந்து இதுவரை நான்கு நூல்கள் உருவாகியுள்ளன. நண்பர் கார்த்திகேயன் கரையாண்டி மில்லி கிரகாம் போலாக்கின் ‘காந்தி எனும் மனிதன்’ நூலை அத்தியாயம் வாரியாக மொழியாக்கம் செய்தார். காந்தி –இன்று தளத்தில் மொத்த நூலும் வலையேறியுள்ளது. பின்னர் அந்நூல் எனது முன்னுரையுடன் சர்வோதயா இலக்கிய பண்ணை வெளியீடாக வெளிவந்தது. காந்தியை அவருடைய தென்னாப்பிரிக்கா காலத்தில் அணுக்கமாக நோக்கிய பெண்ணால் எழுதப்பட்ட கூர்மையான நிகழ்வுக் குறிப்புகள் கொண்ட நூல். மகாத்மா என்ற ஒளிவட்டம் இல்லாத காலத்தில், அறக் குழப்பங்களும் தடுமாற்றங்களும் கொண்ட காந்தி நம் மனதிற்கு இன்னும் நெருக்கமானவர். 

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நாராயண் தேசாய் காந்தி கதை நிகழ்த்துவதற்காக வந்திருந்தார். ‘காந்தி கதை’ மரபான ஹரிகதை பாணியில் பாடல்களுடன் சேர்த்து காந்தியின் வாழ்க்கைச் சரித்திரத்தை கதையாக சொல்வது. நாராயண் தேசாய் காந்தியின் செயலராக இருந்த மகாதேவ் தேசாயின் புதல்வர். அவரைப் பார்க்கச் சென்றபோதே அவருக்கு எண்பது வயதிற்கு மேல். ஆனால் அபாரமான உரையாடல்காரர். காந்திய நண்பர் த. கண்ணன் அவரை விரிவாக ஒரு நேர்காணல் செய்தார். அந்த நேர்காணலும் என்னுடைய அனுபவக் கட்டுரையும் சேர்ந்து சர்வோதயா வெளியிட்ட ‘காந்திய காலத்திற்கொரு பாலம்’ எனும் சிறிய வெளியீடாக வந்தது. என் கட்டுரையை விடவும் த. கண்ணன் எடுத்த நேர்காணல் முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த ஆண்டு காந்தி-இன்று தளத்திலிருந்து நான் எழுதிய பதினெட்டு கட்டுரைகள் ‘அன்புள்ள புல்புல்’ எனும் தலைப்பின் கீழ் ‘யாவரும்’ பதிப்பக வெளியீடாக தொகுக்கப்பட்டு வெளிவந்தது. 

காந்தி எனும் மனிதர், காந்தி எனும் குறியீடு என இரு தளங்களில் காந்தியை வகுத்துக் கொள்ளலாம். காந்தியை மறுப்பவர்கள்கூட காந்தி எனும் குறியீட்டை ஏற்பவர்கள்தான். நவீன நுகர்வு வாழ்க்கையின் விமர்சகராக காந்தியின் இடம் முக்கியமானது என்கிறார் ஆஷிஸ் நந்தி. காந்தி எனும் குறியீடு காந்தி எனும் மனிதரின் தனிமனித ஆற்றலின் மீது எழுப்பப்பட்டதே. ஒன்றை அழித்து மற்றொன்றை வாழ்விக்க இயலாது. காந்தியின் நடைமுறை தளங்கள், பங்களிப்புகள் சார்ந்து சில கட்டுரைகளும் காந்தி எனும் ஆளுமையின் வீச்சை, அவரின் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ளும்விதமாக சில கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. தேசிய பதிப்புப் பிரிவிற்காக காந்தி மரணமடைந்தபோது பேசப்பட்ட வானொலி அஞ்சலி உரைகளின் தொகுப்பை மொழியாக்கம் செய்திருக்கிறேன். இந்த ஆண்டு வெளியாகியுள்ளது. ஒரு உணர்ச்சிகரமான தருணத்தின் முதல் ஆவணப்பதிவு. நேரு, படேல், சரோஜினி நாயுடு தொடங்கி பலருடைய உரைகள் கொண்ட தொகுப்பு. காந்தியின் மரணம் அவர்களை எப்படி பாதித்தது என்பதை வாசிக்க முடிகிறது. காந்தியின் வாழ்விற்கு பொருள் அளிப்பதே அவருடைய மரணம்தான் எனச் சில வேளைகளில் தோன்றும். ‘என் வாழ்வே என் செய்தி’ எனச் சொன்னவர். அவருடைய மரணமும் வாழ்விற்கு இணையான ஒரு செய்திதான். உருக்கமான, நெகிழ்ச்சியான நினைவுகளும், அவருடைய பங்களிப்பை புறவயமாக மதிப்பிட முயலும் குரல்களும் கொண்ட அரிய தொகைநூல். இதைத்தவிர பாரதிய வித்யா பவனுக்காக ‘தமிழில் காந்தி’ எனும் தொகைநூலை உருவாக்கி அளித்திருக்கிறேன். பிரசுரத்திற்கு காத்திருக்கிறது. பாரதி தொடங்கி விஷ்ணு வரதராஜன் வரை வெவ்வேறு தலைமுறையினரின் பார்வையில் காந்தியைப் பற்றிய பார்வை அடங்கிய நூல். ஒரு பறவை கோணத்தில் தமிழக அறிவுத் தளத்தில் காந்தியின் இருப்பை காட்டும் முயற்சி. இந்த நூலை உருவாக்க புதுகோட்டை ஞானாலயா மற்றும் தக்கர் பாபா நூலகத்திற்கு சென்று வந்தேன். பல அரிய நூல்கள் வாசிக்கக் கிடைத்தன. முப்பதுகளில் பெ. கோ. சுந்தர்ராஜன் (சிட்டி என தமிழ் இலக்கிய உலகில் அறியப்படுபவர்) எழுதிய ‘வார்தா கல்வித்திட்டம்’ எனும் நூல், சுப்பிரமணிய சிவா திலகரையும் காந்தியையும் மையமாக கொண்டு எழுதிய நாடகம், வெ. சாமிநாத சர்மா காந்தியையும் விவேகானந்தரையும் ஒப்பிட்டு எழுதிய சிறு பிரசுரம், எஸ். அம்புஜம்மாள் எழுதிய ‘காந்தி நினைவு மாலை’ என சுவாரசியமான பல நூல்களை கண்டடைந்தேன். காந்திய புனைவுகள், புனைவற்றவை என இரு பகுதிகள் கொண்ட தொகை நூல் இது. சிறுகதைகள், மரபுக் கவிதைகள், நவீன கவிதைகள், நாவல் பகுதிகள், சிறார் இலக்கியங்கள் என புனைவு பகுதியில் பல உபதலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. புனைவற்ற பகுதியில் கட்டுரைகள், அஞ்சலிகள், நினைவு குறிப்புகள் எனும் உபதலைப்புகளின் கீழ் பல்வேறு ஆளுமைகளின் எழுத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தற்போது காந்தியின் சுயசரிதையான சத்திய சோதனையின் புதிய திருத்தப்பட்ட செம்பதிப்பை மொழியாக்கம் செய்து வருகிறேன். பல்வேறு அடிக்குறிப்புகளுடன் வெளிவந்துள்ள முக்கியமான நூல். 

காந்தி- இன்று தளத்தின் இணையாசிரியர் நட்பாஸ் என்னை கிரி ராமசுப்பிரமணியத்திடம் அறிமுகப்படுத்தினார்.இணைய தளம் தொடங்கி சில காலத்தில் வேறு நண்பர்கள் எட்டு பேர் சேர்ந்து ‘ஆம்னிபஸ்’ என்றொரு இணையதளத்தைத் தொடங்கினோம். ‘ஆம்னிபஸ்’ காலத்தையே என் வாசிப்பு வேகமெடுத்த காலம் எனச் சொல்வேன். பெரும் நம்பிக்கையுடன் தொடங்கிய வலைப்பூ யுகம் எதிர்பார்த்த அளவிற்கு தரமான படைப்புகளை அளிக்கவில்லை. ‘ஆம்னிபஸ்’ வலைப்பூ யுகத்தின் இறுதியில் உருவான கூட்டு முயற்சி. ஏழு பேரும் வாரம் ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்தி ஒவ்வொரு நாள் எழுத வேண்டும். ஒரு வருடம் முழுக்க அதாவது 365 நாட்களுக்கு தொடர்ச்சியாக புத்தக அறிமுகங்கள் எழுத வேண்டும் என்பதே சவால். முப்பதிற்கும் மேற்பட்ட நூல்கள் குறித்து மதிப்புரைகளை அப்போது எழுதினேன். ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாக வாசித்து, கட்டுரை எழுதுவது நல்ல பயிற்சியாக இருந்தது.  ‘ஆம்னிபஸ்’ அது உத்தேசித்த இலக்கை ஒரு வருடத்தில் எட்டியது. இன்றும் தமிழில் மிக அதிகமாக புத்தக மதிப்புரைகள் கொண்ட தளமாக அதுவே நீடிக்கிறது. ஆம்னிபஸ் முயற்சிக்கு பிறகு மீண்டும்  சில நண்பர்கள் சேர்ந்து ‘பதாகை’ இணைய இதழை தொடங்கினோம். இணைய இதழ்கள் சென்றகாலத்து சிற்றிதழ்களின் நீட்சி அதே வேளையில் சில நுண்மையான வேறுபாடுகளும் உண்டு. சிற்றிதழ்கள் போலவே இவையும் ஒரு தனி மனிதர் அல்லது மிகச் சிறிய குழுவின் ஊக்கத்தில் மட்டுமே தொடர்ந்து வெளிவர முடியும். சிற்றிதழைப் போல் பொருட்செலவு ஆவதில்லை, நேரத்தை மட்டுமே அளிக்க வேண்டும் என்பது மிக முக்கியமான வசதி. சிற்றிதழ்கள் போல் இணைய இதழ்கள் ஒரு இயக்கமாக பரிணமிக்கவில்லை. மின்னிதழ்கள் மிகப்பெரிய வாசக சாத்தியத்தை கொண்டவை, ஆனால் நிதர்சனத்தில் அதன் வாசகபரப்பும் மிகச் சிறியதே. எனது சிறுகதைகள், விமர்சன கட்டுரைகள், கட்டுரைகள், ‘பதாகை’ மற்றும் ‘சொல்வனம்’ இணைய இதழ்களிலேயே வெளியாகின. இன்றைய தினத்தில் ஒரு கதையையோ கட்டுரையையோ பதிப்பிப்பது எளிது. பொதுவெளியில் அது வாசிக்கக் கிடைக்கும், ஆனால் அதை எவரேனும் வாசிப்பார்களா என்றால் அதற்கு விமர்சக வழிகாட்டல் தேவையை இருக்கிறது. ‘பதாகை’ அடிப்படையில் புதிய எழுத்துக்களை ஊக்குவிக்கும் முயற்சி எழுத்தாளருக்கு தேவையான எதிர்வினையை அளிக்கும். மு. வெங்கடேஷ், கமலதேவி, பானுமதி ஆகியோர் பதாகை வழி வெளிவந்த எழுத்தாளர்கள். என்னையும் பதாகை எழுத்தாளர் என்றே சொல்லலாம். 

வலைப்பூவில் எழுதிய ஆரம்ப கால கதைகளை தவிர்த்துவிட்டு உருப்படியான முதல் சிறுகதை முயற்சி என்றால் ‘வாசுதேவன்’ தான். ஜெயமோகன் இணையதளத்தில் புதியவர்கள் கதைகளை அனுப்பலாம் என்றொரு அறிவிப்பு வந்ததும் நான் ஊக்கம் பெற்று கதை எழுதினேன். ‘வாசுதேவன்’ ஜெயமோகன் இணைய தளத்தில் வெளியானது. பின்னர் நற்றிணை தொகுத்த ‘புதிய வாசல்’ தொகுப்பிலும் பன்னிரண்டு கதைகளில் ஒன்றாக தேர்வாகி இருந்தது. 2013 தொடங்கி சீரான இடைவெளிகளில் சிறுகதைகளை எழுதி வருகிறேன். 2017 ஆம் ஆண்டு இவை ‘அம்புப் படுக்கை’ என ஒரு நூலாக தொகுக்கப்பட்டன. தொகுக்கப்பட்ட பத்து கதைகளுக்கு வெளியே நான்கைந்து கதைகள் உள்ளன. ‘அம்புப் படுக்கை’ தொகுதியில் இடம்பெற்றுள்ள ஒருகதை கூட அச்சிதழ்களில் வெளியானவை அல்ல. ‘யாவரும்’ பதிப்பக வெளியீடாக வெளியானவுடனேயே தொகுப்பிற்கு நல்ல கவனம் கிடைத்தது. 2017 ஆம் ஆண்டு கணையாழி- எழுத்து நடத்திய அசோகமித்திரன் குறுநாவல் போட்டியில் ‘பேசும் பூனை’ முதற் பரிசு வென்றது. ஓரளவு நல்ல கவனத்தைப் பெற்றது. 2018 ஆம் ஆண்டில் என்னுடைய முதல் சிறுகதை தொகுப்பான ‘அம்புப் படுக்கைக்கு’ யுவ புரஸ்கார் அறிவிக்கப்பட்டபோது சிறிய அளவில் எதிர்ப்பும் சலசலப்பும் எழுந்தது. முக்கிய காரணம் நான் சிற்றிதழ் வழி இயங்கியவன் அல்ல. ஆகவே நானும் என் எழுத்துக்களும் அவர்களுக்கு பரிச்சயமில்லை. அதற்கு முன்பு விருதுபெற்ற அனைத்து யுவ புரஸ்கார் எழுத்தாளர்களும் சிற்றிதழ் வழி நவீன இலக்கிய பரப்பிற்கு வந்தவர்கள். 

‘யுவ புரஸ்கார்’ அளித்த கவனம் ஒருவகையில் எனக்கு சுமைதான். ‘ஒப்பந்த எழுத்தாளர்’ என சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நிலைமை மாறியது. என் வேகத்திற்கும் என் ரசனைக்கும் ஏற்ப புத்தங்களை தேர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். விருதுக்குப் பின் வெகு அரிதாகவே நான் என்ன வாசிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்பவனாக இருந்தேன். பெரும்பாலும் கூட்டங்களுக்கு தயார் செய்துகொள்ளவும், கட்டுரை கேட்பவர்களுக்கு அதை அளிப்பதற்காகவும் என என் வாசிப்பு வடிவமைக்கப்பட்டது. எனினும் என் வாசிப்பும் செயல்பாடும் பன்மடங்கு அதிகமானதை இந்த மாதங்களில் உணர்ந்தேன். முன்னைக் காட்டிலும் முனைப்போடு வாசித்தேன். விருதிற்கு பின்பான இந்த வருடமே இதுவரையிலான என்வாழ்நாளில் மிக அதிக பயணங்கள் சென்ற   வருடம். அவை புதிய அனுபவங்களை அளித்தன. 

விருது வழி கிடைத்த அங்கீகாரம் எனக்கு வீட்டில் சில சலுகைகளை அளித்திருக்கிறது. குற்ற உணர்வின்றி புத்தகங்களை வாங்க முடிகிறது, நான் நேரத்தை வீணாக்கவில்லை, ஏதோ ஒன்றை உருப்படியாகச் செய்கிறேன், எனும் நம்பிக்கையை குடும்பத்திற்குள் ஏற்படுத்தி இருக்கிறது. முன்னமும் எந்த தடையும் இருந்ததில்லை என்றாலும்கூட ஒரு விடுதலையை உணர முடிகிறது. மற்றபடி விருதின் பொருட்டு பெருமிதம் கொள்ள ஏதுமில்லை. நெடுந்தூர பயணத்தின் ஒரு மைல்கல். விருதிற்கும் அங்கீகாரத்திற்கும் ஏங்கக் கூடாது என்றே எண்ணுகிறேன். எழுத்தாளருக்கு வாசிக்கப்படுவதே அங்கீகாரம். கலை என்பதொரு கொடை. அளிப்பதில் உள்ள மகிழ்ச்சியும் திருப்தியுமே பின்னிருந்து இயக்குகிறது. அதன்வழி கலைஞன் எதையும் பெற்றுக்கொள்ள விழையவேண்டியதில்லை. 

ஒரு எழுத்தாளனாக நான் ஏன் எழுதுகிறேன் என கேட்டுக் கொண்டதுண்டு. வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பதில்களை வந்தடைந்திருக்கிறேன். வாழ்வையே அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது எனும்போது கலைக்கு என்ன நோக்கம் இருக்க முடியும்? நோக்கத்திற்கு அப்பாற்பட்ட பெரும் களியாட்டத்தை லீலை எனச் சொல்லலாம். லீலைக்கு நோக்கமும் இலக்கும் பொருளும் கிடையாது. கட்டற்ற களி. அந்த களியாட்டின் ஒரு பகுதியே படைப்புச் செயல்பாடு. மாரியம்மன் கோவில்களில் வெள்ளி அல்லது எவர்சில்வர் தகடுகளில் உரு செய்து உண்டியலில் நேர்த்தி செலுத்துவது வழக்கம். உபாதைகளில் இருந்து மீட்டதற்காக அம்மனுக்கு நன்றி செலுத்துவார்கள். குறிப்பிட்ட உறுப்புகளை அல்லது மொத்த மனித உடலின் மீச்சிறு வடிவத்தை காணிக்கையாக்குவார்கள். படைப்பும் பிரபஞ்சத்தின் கொடைக்கு நன்றி செலுத்தும் விதமாக அதன் சிக்கலான அமைப்பிலிருந்து ஒரு சிறு துண்டை மட்டும் உருவியெடுத்து, அதைப் போலவே செய்து படைப்பாளன் தன்னுடைய நன்றியைத் தெரிவிப்பது. சமூக மாற்றத்தை இலக்காகக் கொண்டு என்னால் கதையெழுத முடியாது. ஒருவேளை கதைகளுக்கு அந்த ஆற்றல் இருந்தால் அது தன்னியல்பிலேயே நிகழும். கதைகள் ஆற்றுப்படுத்தும், எழுதுபவரையும் வாசிப்பவரையும். ‘வாசுதேவன்’ என் கல்லூரி காலத்தில் நிகழ்ந்த உண்மை நிகழ்வின் சாயலைக் கொண்ட கதை. வாழ்க்கையின் பொருளின்மையை நேரடியாக உணர்ந்த கணம். இங்கே உயிர்களை பயன்மதிப்பைக் கொண்டே அளக்கிறோம். எந்த புள்ளியில் மனிதர்கள் தேவையற்றவர்கள் ஆகிறார்கள் என்பதை கவனிக்கத் தோன்றுகிறது. ‘வாசுதேவனின்’ முகம் என் கனவுகளில் ஊடுருவி திடுக்கிட்டு எழச் செய்திருக்கிறது. காப்காவின் ‘உருமாற்றம்’ வாசிக்கும்போது வாசுதேவனை புரிந்து கொண்டேன். அவனும் ஒரு க்ரேகர் சம்சாதான். உழைத்துக் களைத்து ஓரிரவில் எவருக்கும் பயனற்ற மாபெரும் பூச்சியாகிப் போனவன். ‘வாசுதேவனுக்கு’ அவனுடைய நினைவுகளுக்கு நான் செலுத்தும் அஞ்சலி, அவனுடைய வாழ்விற்கு நான் செய்யும் நியாயம் என எப்படியும் கொள்ளலாம். அந்தக் கதையை எழுதிய பின்னர் அவனுடைய முகம் என் கனவுகளில் வருவதில்லை. ஓர் ஆறா காக்யத்தை கதைகள் ஆற்றக்கூடும். 

என் கதைகளில் ஓவியத் தன்மை உண்டு. நான் ஒரு ஓவியனாய் இருந்திருந்தால் அவற்றைக் கதைகளாக எழுதியிருக்க மாட்டேன். ‘ஆரோஹனம்’ கதையில் வரும் காந்திகளால் நிரம்பிய உலகு, ‘காலிங்க நர்த்தனம்’ கதையில் வரும் கனவுக் காட்சி போன்றவை மனதில் ஒரு ஓவியமாகவே உதித்தன. எனது ‘யுவ  புரஸ்கர்’ ஏற்புரையில் நானொரு ஹைபோக்ரிட் என்று குறிப்பிட்டிருந்தேன். ஒரு வகையில் எனது படைபூக்கத்தையும் அதிலிருந்தே பெறுகிறேன். காந்தி எனது ஆதர்சம், ஆனால் புனைவுகளில் நேரெதிரான நிலைகளையும் எவ்வித தயக்கமும் இன்றி கைகொள்ள முடியும். எப்போதும் ஒரு எழுத்தாளர் சமகாலத்தைப் பிரதிபலித்து எழுத வேண்டுமா அல்லது காலாதீதத்தை எழுத வேண்டுமா என்றொரு விவாதம் நிகழ்வதுண்டு. சமகாலத்தை செய்தியறிக்கையாக இல்லாமல் அதை மெய்யியல் நோக்கில் அணுகி, ஒற்றைக் கரப்பாகச் சுருக்காமல், பல பரிமாணங்களை உள்ளடக்கியதாக எழுதும் முறையே சரி என தோன்றியது.

எழுத்தாளன் ஒரு வகையில் திரிவிக்ரமன், உலகளந்த பெருமாள் என்று சொல்லலாம். அல்லது, ஆடலரசன், நடராசன் என்று சொல்லலாம். அவனது ஒரு கால் தரையில் ஊன்றியிருக்க அவனது மற்றொரு கால் வானத்தை அளந்தபடி இருக்கிறது. வரலாற்று பிரக்ஞை, அல்லது நிகழ்காலத்தின் மீது ஒரு கால் ஆழப் பதிந்திருக்க வேண்டும், ஆனால் மற்றொரு கால், காலாதீதத்தை எட்டும்போதே அது ஒரு சிறந்த நடனமாக, சிறந்த படைப்பாக விளங்க முடியும் என்று தோன்றுகிறது. 

‘அம்புப்படுக்கை’யின் பொதுவான பேசுபொருள் என்று ஒன்றை வரையறை செய்யலாமெனில், அது மரணத்தின் முன் வாழ்வின் பெறுமதி என்ன என்ற விசாரணையை மேற்கொள்கிறது என்று சொல்லலாம். இது ஒன்றும் புதிய பேசுபோருளோ, அரிய பேசுபொருளோ அல்ல. தமிழ் இலக்கியத்திலும் பிற இலக்கியத்திலும் தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் பேசப்பட்டுக் கொண்டே வருகிறது. ஆனாலும் இந்தக் கேள்வி அந்தரங்கமானது, தொந்தரவு செய்வது. ஆகவே, ஒரு எழுத்தாளனாக இந்தக் கேள்வியை நோக்கிய ஒரு பயணம், அதற்கு விடை காணும் முயற்சிகளே படைப்புகளாக வெளி வருகின்றன. அதை ‘அம்புப்படுக்கை’ கதைகளின் வழியாக சென்று தொட முயன்றிருக்கிறேன் என்று சொல்லலாம். ‘ வாசுதேவன்’, ‘அம்புப்படுக்கை’, ‘காலிங்க நர்த்தனம்’, ‘பொன்முகத்தைப் பார்ப்பதற்கும்’’,  இந்தக் கதைகள் எல்லாம் யதார்த்த தளத்தில் நிகழ்பவை எனக் கொள்ளலாம்.  அடுத்த பகுதியில் உள்ள ‘2016’, ‘திமிங்கலம்’, ‘கூண்டு’, ‘ஆரோகணம்’, ‘பேசும் பூனை’, இவ்வகையான கதைகள் யதார்த்த தளத்தை மீறிய கதைகள் என வரையறை செய்யலாம். உண்மையில் நான் எழுதிய காலத்தில் இவை இவ்வாறே அமைந்தவையல்ல. மாறி மாறி யதார்த்த தளத்திலும் யதார்த்தத்தை மீறிய தளத்திலும் படைப்புலகம் பயணித்துக் கொண்டுதான் இருந்தது. ஆனால் ஒரு தொகுப்பாக இதை தொகுக்கும்போது இவ்வகையான வரிசை சிலவற்றைச் சுட்டுவதாக எனக்கு தோன்றியது.  

‘அம்புப்படுக்கை’யில் இடம் பெற்ற இவ்விருவகை, முதல் ஐந்து கதைகள், மற்றும் அடுத்த ஐந்து கதைகளுக்கு தனித்த வாசகர்கள் உண்டு. முதல் ஐந்து கதைகள்  பிடித்தவர்களுக்கு அடுத்த ஐந்து கதைகள் மீது பெரிய ஈடுபாடு இல்லாமல் போனது உண்டு. இறுதி ஐந்து கதைகள்  பிடித்தவர்களுக்கு அடுத்த ஐந்து கதைகள் மீது பெரிய ஈடுபாடு இல்லாமல் ஆனதும் உண்டு. எனினும், எனது கதைகள் ஒரு பக்கம் நிலத்திலும் நிகழ வேண்டும், மறுபக்கம் நிலமற்ற வெளியிலும் நிகழ வேண்டும். உறுதியான மனச்சாய்வு எதுவும் எனக்கு அவ்வகையில் இல்லை. எனக்கு நாஞ்சில் நாடனை எப்படி பிடிக்குமோ அப்படித்தான் காப்காவையும் பிடிக்கும். இதில் எனக்கு எந்த குழப்பமும் நேர்ந்ததில்லை. ‘அம்புப்படுக்கை’க்கு பின்பான கதைகள் சற்றே வேறு வகையானவை என்று சொல்லலாம். 

அடுத்த தொகுப்பாக வரக்கூடிய கதைகள் பகடித்தன்மை கொண்டவை. முற்றிலும் வேறு நிறம் கொண்டவை. பழுவேட்டையர் என்று பாத்திரத்தை பிரதானமாக கொண்ட கதைகள் இவை. சிறுகதைகள் என்பதைவிட குறுங்கதைகள் என்றே வகைப்படும். இலக்கிய உலகிற்குள் நிகழக்கூடிய ஒருசில அபத்த தருணங்களைக் கொண்டு அதை பகடியாக நோக்கும் பாத்திரங்கள் இருவர்தான் பழுவேட்டையரும் கிடாரம் கொண்டானும். இவை ‘அம்புப்படுக்கை’யிலிருந்து முற்றிலும் வேறு மனநிலையில், வேறொருவர் உள்ளிருந்து எழுதியவை போல் தோன்றும். பெர்னாண்டோ பெஸ்ஸோவா அளவிற்கு பல புனைப்பெயர்கள் பயன்படுத்தியவர் இல்லை– அவர் புனைப்பெயர் என்றுகூட சொல்வதில்லை, இணை ஆளுமை என்று சொல்கிறார், அவருக்குள் இருக்கக்கூடிய பல ஆளுமைகள் சேர்ந்து புனைந்த படைப்பு ‘The Book of Disquiet’. ஒரு எழுத்தாளருக்குள் வேறு சில குரல்கள், வேறு சில ஆளுமைகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பழுவேட்டையரும் கிடாரம் கொண்டானும் அப்படிப்பட்டவர்கள் என்று நான் நம்புகிறேன். 

படைப்பினுடைய வசீகரம் என்பது நம் அனுபவங்கள், பொதுவாக ஒரு எல்லைக்கு உட்பட்டவை, ஆனால் புனைவாக ஒரு கலையாக ஆகும்போது அதில் வந்து படியும் வெவ்வேறு சாயல்கள்- ஒரு மனிதரைப் பற்றி நாம் எழுதத் தொடங்கும்போது இயல்பாகவே அந்த மனிதர் நாமறிந்த வேறு நான்கு மனிதர்களின் கூட்டாக வெளிவருகிறார். அதை எழுதி முடித்த பின்பு வாசிக்கும்போது எந்தெந்த இயல்புகள் எவரிடமிருந்து என்று எழுத்தாளன் கண்டுகொள்ள முடியும். ஏன் இந்த ரசவாதம் நிகழ்கிறது, இது எப்படி நிகழ்கிறது என்பது படைப்பின் மீதான ஒரு பெரும் போதையாக இருக்கிறது. அவ்வகையில் ஒரு படைப்பு என்பது ஒழுக்கமான, பிரக்ஞைபூர்வமான செயல்பாடாக இருக்கக்கூடாது என்று நான் நம்புகிறேன். 

ஒரு தேர்ந்த எழுத்தாளன், அல்லது ஒரு கலைஞன் ஒரே சமயத்தில் பேரறிஞனாகவும் பெரும் பேதையாகவும் இருக்க வேண்டும். அவன் பேரறிஞனாக இருப்பதற்கு என்ன பொருள் என்றால், ஒருவன் தொடர்ச்சியாக வாசித்து வாசித்து தனது மொழியைக் கூர்மைப்படுத்தி, தனது அறிவை விசாலப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும், உணர்வுகளை ஆழப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.  அதே சமயம் ஒரு புனைவில் இயங்கும்போது அவன் கற்றவை அவன் புனைவில் ஈடுபடும்போது அவனையும் மீறி புனைவில் வெளிப்படுவதை தடுப்பவையாக இருக்கக்கூடாது. கற்றவையனைத்தும் அவனை மீறி பீரிட்டு வருபவற்றை அனுமதிக்கும் தன்மை கொண்டதாக, ஒதுங்கி வழி விடுவதாக, இருக்க வேண்டும். அப்படி தன்னை மீறி ஒன்று ஒரு கதையில் நிகழும்போது அது ஒரு நல்ல கலையாக ஆவதற்கான வாய்ப்புகள் உண்டு. 

முழுக்க பிரக்ஞைபூர்வமான கதைகள் இல்லையா என்றால், உள்ளன. இவை இரண்டும் சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று நான் நம்புகிறேன். 

மொழியோ கற்றலோ இல்லாமல் வெளிப்பாடு என்பது சாத்தியமில்லை. தொடர்ச்சியாக ஒரு எழுத்தாளன் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அதே வேளையில் அவன் கற்றவற்றை மீறி தன் எல்லைகளை உடைத்துக்கொண்டு வெளிப்படுவதற்காக பணிவுடன் தன்னை மீறிய ஆற்றலுக்கு அர்ப்பணித்துக் கொண்டு வழி விட்டு ஒதுங்க வேண்டும். 

எழுத்தில் என்னென்ன செய்ய வேண்டுமென்பதில் பல திட்டங்கள் எனக்குண்டு. தற்பொழுது ஒரு நாவல் எழுதி முடித்திருக்கிறேன். ‘நீலகண்டம்’ என்பது அதன் பெயர். நியாயப்படி பார்த்தால் இந்த நாவலே முதலில் வெளிவந்திருக்க வேண்டும். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் எழுதத் தொடங்கியது. பின்னர் தொடர்ச்சியாக சில சூழ்நிலைச் சிக்கல்கள் காரணமாக இந்த நாவல் தொடர முடியாமல் போனது. இதற்கிடையிலான காலகட்டத்தில் எனது மொழியும் வாசிப்பும் பரந்து விரிந்து சென்றது.  மீண்டும் இந்த நாவலை இந்த ஆண்டு துவக்கத்தில் எழுதத் துவங்கி முதல் வடிவை ஒன்றரை மாதத்தில் எழுதி முடித்தேன்.

‘நீலகண்டம்’ ஆட்டிசம் என்ற குறைபாடுள்ள பெண் குழந்தையை மையமாகக் கொண்டது. எனினும் இதை ஆட்டிசம் தொடர்பான நாவல் என்று வரையறை செய்ய முடியாது. ஆட்டிசத்தை பின்புலமாகக் கொண்ட, குழந்தைப்பேறு, குழந்தைப் பேறின்மை, குறிப்பாக நவீன காலத்தில் எத்தகைய சவால்களை எதிர்கொண்டு வருகிறது, இதன் சிக்கல்கள் என்ன, தொன்றுதொட்டு நம் சமூகம் குழந்தைப்பேற்றுக்கு அளித்து வரும் முக்கியத்துவம் மற்றும் அழுத்தம் அதன் பின்பான உளவியல் காரணிகள், அது தற்காலத்தில் எந்தவகையான மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது, தற்காலத்தில் இதன் சிக்கல் எவ்வகை பரிமாணங்கள் கொண்டுள்ளது, இதுவே இந்த நாவலினுடைய மையக் கேள்வி. இதில் இந்த நாவல் பலபொருள் தன்மை கொண்ட நாவல் என்று சொல்லலாம். பல்வேறு பாத்திரங்கள் கதைகளைச் சொல்கிறார்கள். கொஞ்சம் தேவதை கதைச் சாயல் கொண்டதும்கூட. அற்புதத்தன்மை ஊடுருவிய கதையும்கூட. எல்லாவற்றையும் காட்டிலும் உண்மையில் இது உணர்வுபூர்வமான மையம் கொண்ட கதை என்று சொல்லலாம்.

நாவலுக்குப்பின்  வேறு சில திட்டங்கள எனக்கு உள்ளன. வேறு நாவல்கள் எழுதுவதற்கான திட்டங்கள், உந்துதல்கள், உள்ளன. ஒன்று ஆயுர்வேத, மருத்துவ பின்புலம் ஒன்டது. அதனுடைய மருத்துவ வரலாறு சொல்லும் விதமாக இரண்டாயிரம் மூன்றாயிரம் ஆண்டு கால பரிமாணத்தை அடக்கி, வேத காலத்திலிருந்து பௌத்த காலம், அதற்குப் பின்பு சம்ஹிதைகளின் காலம், பிறகு தாந்திரீகம், ரச சாஸ்திரம், முகலாய காலம், காலனிய காலம், பின்னை-காலனிய காலம் என்று இரண்டாயிரம் மூன்றாயிரம் ஆண்டு கால அறிவுத் தொடர்ச்சியை சுட்டும் விதமாக ஒரு பெருநாவல், ஆயிரம் பக்கத்துக்கு மேல் சொல்லக்கூடிய நாவல் ஒன்று, அதற்கான கடின உழைப்பு கோருகிறது. அதை எழுத வேண்டுமென்று என் வாழ்வின் மிகப்பெரிய கனவு. 
அதே போல் நான் வசிக்கும் செட்டிநாட்டின் வரலாற்றை மையமாகக் கொண்டு, குறிப்பாக 1870களிலிருந்து 1950 வரையுமான எழுபது எண்பது வருட கால அளவில்- அது மிக முக்கியமான ஆளுமைகள் வாழ்ந்த காலகட்டம்–, ஏ.கே. செட்டியார் ஆகட்டும், அழகப்பர் ஆகட்டும், ராஜா சர். அண்ணாமலை செட்டியார் ஆகட்டும், இந்த காலகட்டம் இந்தப் பகுதியில் ஒரு மிக முக்கியமான காலகட்டம். இதில் இயங்கிய விசைகள், இதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும், மையமாகக் கொண்ட வரலாற்று நாவல் எழுத வேண்டுமென்பது மற்றொரு கனவு. 

ஒரு அறிவியல் புனைவு, ஊகப்புனைவு, speculative fiction என்று சொல்லக்கூடிய புனைவு, அனேகமாக இதுவே என்னுடைய அடுத்த நாவலாக இருக்கக்கூடும். காந்திய டிஸ்டோப்பிய நாவல் என்று சொல்லலாம், ஒரு அறுநூறு எழுநூறு ஆண்டு கால பரிணாமத்தைச் சொல்ல முயலும் நாவல். இன்றிலிருந்து அறுநூறு எழுநூறு ஆண்டுகளுக்குப் பின் வாழ்க்கையை நாம் எப்படி பார்க்கிறோம் என்று பேசும். speculative fiction என்பது ஊகப்புனைவு என்று சொல்கிறோம். வரலாற்றில் ஒரு நிகழ்வு வேறு மாதிரி நிகழ்ந்திருந்தால் அது என்ன வகையான  மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் என்று ஊகிப்பது counterfactual historical fiction என்பதன் அடிப்படை. இது ஒரு சுவாரசியமான ஊகத்தின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட ஒரு நாவல், இதற்கும் நிறைய வாசிப்பு தேவைப்படுகிறது. இவற்றை விரைவில் எழுதத் தொடங்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன்.

தொடர்ச்சியாக விமரிசனங்கள் எழுதி வருகிறேன். தமிழ்ச் சூழலில் விமரிசனம் என்பது ஒருபக்கச் சார்புடையதாக அல்லது படைப்பாளனுடைய ஆளுமையைச் சிதைப்பதை நோக்கமாகக் கொண்டதாக இயங்கி வருகிறது. ஆனால் உண்மையில் ஒரு விமரிசகனாக எனக்கு, சக படைப்பாளியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு என்ன இருக்கிறது, அவருடைய பலம் என்ன, பலவீனங்கள் என்ன, இவற்றை அடையாளம் காட்டி, வாசகனுக்கு அவரை எப்படி வாசிப்பது, என்று அடையாளப்படுத்துவதே விமரிசன முறை என்று கூறுவேன். அதை விட்டுவிட்டு எழுத்தாளனை மொத்தமாக புறந்தள்ளுவது அல்லது அவரை வீழ்த்த முயல்வது என்பது அல்ல விமரிசனத்தின் நோக்கம். ஆகவே, ஒரு ஆக்கப்பூர்வமான விமரிசனச் சூழலை உருவாக்க வேண்டியுள்ளது, அரசியல் காரணிகளுக்கு அப்பால் செல்ல வேண்டிய ஒரு சூழல் இன்று தேவைப்படுகிறது. அவ்வகையில் தொடர்ச்சியாக என்னுடைய சக படைப்பாளிகள், முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் என அனைவரையும் வாசித்து விமரிசனக் கட்டுரைகளை எழுதி வருகிறேன். ‘வளரொளி’ என்னும் பெயரில் யாவரும் பதிப்பக வெளியீடாக ஒரு தொகுப்பு வெளியாகியுள்ளது. அதில் என் சக படைப்பாளிகள் ஒன்பது பேருடன் நான் எடுத்த நேர்காணல்களும் அவர்களுடைய புனைவு, நாவலோ சிறுகதை தொகுப்போ,  அதைப் பற்றிய விமரிசனக் கட்டுரையும் சேர்ந்து ஒரு புதிய வடிவில் வெளியாகியுள்ளது. 

எழுத்தாளனுக்கு, அல்லது, பொதுவாகவே ஒரு கலைஞனுக்கு, அவனுடைய குடும்பம் முக்கியமானது, அவனது படைப்புகளில் அது முக்கியமான பங்களிப்பு கொண்டது. எழுத்தாளனின் படைப்புச் செயல்பாடு மீது ஆக்கப்பூர்வமான, நேர்மறையான நம்பிக்கை, மற்றும் மரியாதை அவனுடைய அணுக்க மனிதர்களின் மனதில் இல்லையென்றால் எழுத்தாளன் தன்னை மிகவும் இழிவாகவும் தன்மதிப்பு அற்றவனாகவும் உணரக்கூடும். அவ்வகையில், எனது மனைவி டாக்டர் மானசா, அம்மா ரமா தேவி, இவர்கள் இருவருமே எனது படைப்புச் செயல்பாட்டின் மீது மரியாதையும் நம்பிக்கையும்  கொண்டவர்களாக இருக்கிறார்கள், முதன்மை  வாசகர்களாகவும் தோழர்களாகவும் இருக்கிறார்கள். கதைகளை அவர்கள் வாசிக்க வேண்டும் என்பது அல்ல, கதை குறித்து அவர்களுடன் நான் விவாதிக்கிறேன், அது பற்றி அவர்களுடன் பேசுகிறேன். சில நேரங்களில் எனக்குத் தோன்றாத சில கோணங்கள் அந்த உரையாடலில் எனக்குப் புலப்படுவதுண்டு. இனி வரும் காலங்களில் அவர்களுடைய ஆதரவும் இருப்பும் எனது படைப்புச் செயல்பாட்டுக்கு இன்றியமையாத துணை என்றே நான் நம்புகிறேன். 


No comments:

Post a Comment