Wednesday, December 14, 2016

ஜெயலலிதா

ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் சிறப்பு நீயா நானாவிற்கு அழைப்பு வந்த போது அதை வரிந்துகொள்வதா வேண்டாமா என்றொரு குழப்பம் நேர்ந்தது. ஏனெனில் தமிழக அரசியல் அறிவுலக சூழலில் துருவ படுத்துதலுக்கு குறைவேதுமில்லை. ஆதரவு அல்லது எதிர்ப்பு. ஒன்றை எதிர்த்தாலே மற்றொன்றின் ஆதரவு. நடுநிலை என்பது இந்திய அரசியலில் கேலிக்குரியதாக கருதபடுகிறது. சார்புடையவர்களை கூட மன்னித்து ஏற்கும் சமூகம் ஐயபடுபவர்களை படுத்தி எடுக்கிறது. எனக்கு சிலவற்றில் தீர்மானமாக யாதொரு முடிவும் இல்லை, ஏன் இல்லை என்பதற்கு காரணம், நான் அவை குறித்து சிந்திக்கவில்லை, தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டவில்லை, அறிந்து கொண்டால் ஒரு முடிவை எடுத்தேயாக வேண்டிய நிர்பந்தத்தின் மீதான அச்சம், பச்சோந்தி தனம் என சொல்லலாம் தான். நாம் எல்லோரும் கண்ணிருந்தும் குருடர்களாக சில தருணங்களில் இருக்க தேர்வு செய்து கொள்கிறோம். அது நமது மன அமைதிக்கு உகந்தது. சுயநலமி என்றும் சந்தர்ப்பவாதி என்றும் துணிவற்றவன் என்றும் அடையாளபடுத்தபடுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உண்டு. என்ன செய்ய! சில நேரங்களில் நான் யோசிபப்துண்டு இத்தகைய இருதலை கொல்லி நிலையை நான் விரும்பி ஏற்கிறேனோ என்று.
ஜெயலலிதா குறித்தும் எனக்கு சொல்வதற்கு சில நல்ல விஷயங்கள் உண்டு. அவருடைய மரணத்தின் போது என் மனம் அவருக்காக இறங்கியது. இதை நேர்மையாக ஒப்புகொள்ளத்தான் வேண்டும். ஆகவே ஏனிந்த பரிவுணர்ச்சி எனும் ஆராய்ச்சி என்னை ஒப்புகொள்ள செய்த காரணிகளில் ஒன்று. மற்றொன்று நான் என் வீட்டு பெண்களின் பிரதிநிதியாக அவர்களின் பிரியத்தின் துயரத்தின் தூதுவனாக நிகழ்வில் பங்குபெற முடிவெடுத்தேன்.
விவரமறிந்த நாட்களில் இருந்தே நானொரு ரஜினி ரசிகன். ரஜினிக்கு பிடிக்காத ஜெயலலிதா எனக்கும் பள்ளி நாட்களில் பிடிக்காது. அவ்வளவு தான் எனது அரசியல் அறிவு. பத்து பனிரெண்டு வயதிருந்த போது தொலைகாட்சியில் அவர் வீட்டில் இருந்த புடைவைகளையும் காலணிகளையும் திரும்ப திரும்ப போட்டு காண்பித்தது நன்றாக நினைவிருக்கிறது. கொஞ்சம் விவரமறிந்த பின் எனது பிரியத்துற்குரிய தலைவராக ப.சிதம்பரம் இருந்தார். குறிப்பாக தமாகாவை உடைத்துக்கொண்டு காங்கிரஸ் ஜனநயாக பேரவை துவங்கிய காலகட்டங்களிலும் அதற்கு பின்பான மத்திய அரசில் அவர் பங்கு வகித்த காலகட்டங்களிலும் அவருடைய உரைகளை பொதுவாக கவனித்து கேட்பேன். இங்கே பிரசாரம் செய்ய வந்த போது கூட அவர் இன்ன கட்சிக்கு வாக்களியுங்கள் என அவர் கேட்டதில்லை. சரியான வேட்பாளரை தேர்ந்தெடுங்கள் என பேசியதன் கண்ணியம் என்னை ஈர்த்தது. இன்றும் அவர் எனக்கொரு மதிப்புமிக்க தலைவர் தான். ஆனால் ஏனோ அவர் மீதிருந்த நம்பிக்கையெல்லாம் முந்தைய பாராளுமன்ற தேர்தலோடு முடிந்து விட்டது.
ஜெயலலிதா ஒரு தேர்ந்த நிர்வாகியா என்றால், இல்லை என்றே எண்ணுகிறேன். அவர் அமைச்சர்களை அல்ல அதிகாரிகளையே நம்பினார். ஜெயலலிதா அதிகாரிகளின் முதல்வர் என கூறலாம். காவல் துறையும் பிற உயரதிகாரிகளும் மிகுந்த உற்சாகத்தோடு அவராட்சியை எதிர்நோக்கினார்கள். பொதுவாகவே அவருக்கு அறிவாளிகளை தன்னருகே வைத்திருக்க வேண்டும் என விருப்பிருந்திருக்கிறது. திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் ஜெயலலிதாவின் அறிவுறுத்தலின் பேரில் நிதியமைச்சர் எப்படி அவருடைய பட்ஜெட் மீதான விமர்சனங்களுக்கு சிறப்பு கவனம் எடுத்து விரிவான பதிலுரைத்தார் என குறிப்பிட்டார். ஆனால் அறிவு செயல்பாட்டின் மீது அவருக்கு பெரும் நம்பிக்கை இருந்ததா என தெரியவில்லை. அரசு நூலகங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டதும், அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் காழ்புகளுக்காக முடக்க முனைந்ததும் அவருடைய ஆட்சியில் தான். அமைச்சர்கள் இலாகாவை பற்றி அறிந்து பரிச்சயம் செய்வதற்கு முன்னரே மாற்றப்பட்டு விடுகின்றனர். பிழை செய்தால் பதவி போய்விடும் எனும் அச்சம் அமைச்சர்களை இயக்கியது என்றே எண்ணுகிறேன். ஆனால் அது ஊழலை குறைத்ததா? இந்த பதவி குறுகிய காலம் தன் நீடிக்கும், ஆகவே இயன்றவரை பயன்படுத்திகொள்ள வேண்டும் எனும் எதிர்மறை நிலையை இது அவர்களை எடுக்க செய்தது என சந்தேகிக்கிறேன்.  தொழில் முனைவோர் பலரும் இச்சிக்கல்களை சந்தித்துள்ளார்கள். ஒரு சிறிய கடைநிலை பதவிக்காக அமைச்ச்சஸ்ருக்கு கப்பம் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்ட வேளாண் துறை அதிகாரி கதையெல்லாம் நினைவுக்கு வருகிறது. லஞ்சம் மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு வளர்த்தெடுக்கபட்டது. அரசு பதவிகளுக்கு லஞ்சம் என்பது ஜெயலலிதா கண்டுபிடித்த ஒன்றல்ல. இரு திராவிட கட்சிகளுக்கும், காங்கிரசுக்கும் அதில் பங்குண்டு. முன்பு  பூடகமாக இருந்தவை இங்கு யாவரும் அறிந்த இரகசியமாகி போனது. இவையெல்லாம் ஜெயலலிதா அறிந்து நடந்ததா இல்லையா என தெரியவில்லை. இரண்டில் எதுவாக இருந்தாலும் தேர்ந்த நிர்வாகிக்குரிய முறையல்ல.
ஜெயலலிதா தன்னை பெண் தலைவராக முன்வைத்துகொண்டதில்லை, ஒரு தலைவராகவே முன்வைத்திருக்கிறார். ஆனால் தமிழக பெண்கள் அவரை அப்படித்தான் காண்கிறார்கள், முதலில் அவர் ஒரு பெண், எல்லா வித போராட்டங்களையும் சதிகளையும் சூழ்சிகளையும் மீறி தன்னை நிறுவிக்கொண்ட பெண். ஜெயலலிதாவின் மீது ஒரு மூலையில் அவர்களுக்கு எப்போதும் பரிவுணர்ச்சியும் பெருமிதமும் உண்டு. இதை அவரும் அறிந்திருக்கிறார். அவருடைய நலத்திட்டங்கள் அனைத்துமே பெண்களை மனதில் கொண்டு திட்டமிடப்பட்டவை. தமிழக பெண்களுக்கு அவர் பார்த்து பார்த்து செய்தார் என சொல்வது மிகையாகாது. நாள்தோறும் எளிய கிராமத்து பெண்களை சந்திப்பவன் என்ற வகையில் அவர்களுக்கு அவர் மீதிருக்கும் பிணைப்பை, நம்பிக்கையை, தர்க்கத்தால் வரையறுத்துவிட முடியாது. அந்த பிணைப்பை புரிந்துகொள்ள மட்டுமே முடியும். ஆண்களற்ற ஒரு வெளியில் அவர்கள் உரையாடிக்கொண்டே இருக்கிறார்கள். கணவர்களின் ஆளுமையை சார்ந்தவர்கள் என சொல்லப்படும் கிராமத்து பெண்கள் கூட அவர்களின் விருப்புக்கு மாறாக வாக்களித்து இருக்கிறார்கள். பெண்கள் அவரை விடுதலையின் சின்னமாக, பெண்ணிய தலைவராக, தங்கள் அநீதிகளுக்கு வஞ்சம் தீர்ப்பவராக எல்லாம் கண்டார்களா என சொல்ல தெரியவில்லை. ஆனால் அவர்கள் பாதுகாப்பாக உணர்ந்தார்கள். புள்ளிவிபரங்கள் அவருடைய ஆட்சியில் குற்றங்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றத்தை காட்டுமா என தெரியவில்லை. ஆனால் மனதளவில் அவர்கள் பாதுகாப்பாக உணர்ந்தார்கள். தொட்டில் குழந்தை முதல் தாலிக்கு தங்கம் வரை பெண்களுக்கான திட்டங்கள் ஏராளமானவை.
என்னால் ஜெயலலிதாவை ஒரு விஷயத்திற்காக மன்னிக்கவே முடியாது எனில், அது டாஸ்மாக்கில் தான். குடி அடிமைகளை அன்றாடம் சந்தித்து வருபவன் எனும் வகையில் அவர் பெண்களுக்கு செய்த அனைத்து திட்டங்களும் பொருளற்று போகும் அளவுக்கு மோசமான செயல் இது. பொருளியல் ரீதியாக அரசு மது விற்பனையை ஏற்று நடத்துவது பற்றி பல்வேறு சாதக கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் அது ஒரு அற வீழ்ச்சியே. கடைகளின் எண்ணிக்கையை குறைத்ததும் நேரத்தை சுருக்கியதும் ஒரு நல்ல தொடக்கம். பூரண மதுவிலக்கு கிடக்கட்டும் மது விற்பனையை ஊக்குவிக்காமளாவது இருக்கலாம். குறிப்பாக சசி பெருமாளின் மரணம் என்னை வெகுகாலம் பாதித்த ஓர் விஷயம் (அவரை எவரும் இப்போது நினைவில் கொண்டிருக்கிறார்களா என தெரியவில்லை. அவருடைய பிடிவாதமும் காரணம் என்றாலும்). தர்மபுரி மாணவிகள் கொலைக்கு நேரடியாக ஜெயலலிதா பொறுப்பில்லை எனினும் கண்மூடித்தனமான நம்பிக்கையை மட்டும் நம்பி கட்சியை கட்டி எழுப்பிய கருத்தியலை பொறுப்பிலிருந்து துண்டிக்க இயலாது.
ஜெயலலிதா பலவகையிலும் நிலப்ரபுத்துவ அலல்து மன்னராட்சி கூறுகளை கையாண்டவர். நம்பிக்கையை கோருவதும், அதை சோதிப்பதும் அவரது வழிமுறைகளில் ஒன்று. சொந்த கட்சிகாரர்களை இத்தனை நுட்பமாக உளவறிந்து வைத்திருப்பதும் அந்த கூற்றின் ஒரு பகுதியே. அநேகமாக தமிழக முதல்வர்களில் உளவுத்துறையை அவரளவுக்கு எவரும் பயன்படுத்தியிருபார்களா என தெரியவில்லை. அவருக்கு அபார நினைவாற்றல் இருந்திருக்கிறது. புதியவற்றை கிரகிக்கும் திறனும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு இருந்திருக்கிறது. தனிப்பட்ட முறையில் அனேக உதவிகளை செய்திருக்கிறார். நலத்திட்ட உதவிகள் பெற்றவர்கள் எவ்வித அரசியல் அழுத்தங்கள் அளிக்காமலே பரிவுடன் அனுகபட்டிருக்கிறார்கள். அப்படி ஆட்சியரான சரவணனை பற்றி நான் வாசித்திருக்கிறேன். அரசனும் ஆண்டவனும் சமமாக கருதப்பட்ட நிலமிது. ஜெயலலிதா தன்னையும் அப்படிதான் பொருத்த முயன்றிருக்கிறார். துஷ்ட நிக்ரகம் சிஷ்ட பரிபாலனம். அழிவையும் ஆதரவையும் முகங்களாக கொண்டவர். மன்னிப்பையும் ஏற்பவர். ஷங்கர்ராமசுப்பிரமணியன் தமிழ் தி இந்துவில் எழுதிய கட்டுரையில் இந்திய பெண் அரசியல் தலைவர்கள் துர்க்கையின் பிம்பத்தை விரும்பியோ வலிந்தோ ஏற்க வேண்டியதை இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். நிகழ்வின் போது பாலா நந்தகுமார் ஜெயலலிதாவை சந்திக்கும் அறையை பற்றிய விவரணையை கூறினார். ஏறத்தாழ கருவறையில் கடவுளை காணும் அதே அனுபவம், அதே குறியீடுகளை ஜெயலலிதாவும் பின்பற்றியிருக்கிறார். ஆண்களுடன் இருந்தாலும் ஆண்கள் நெருங்க முடியாத ஒரு உயரத்தில் நின்றாக வேண்டிய நிர்பந்தம் அவருக்கிருக்கிருந்தது. எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதியால் நேரடியாக பல்வேறு அவமானங்களை அடைந்தவர். நடிகை எனும் பிம்பத்தை உடைத்து அன்னை எனும் பிம்பத்தில் புகுந்து கொள்கிறார். அதுவே அவருக்கு பாதுகாப்பும் கூட.

மணல் கொள்ளையை தடுக்க முனைந்தது, லாட்டரி ஒழிப்பு, வீரப்பனை ஒடுக்கியது (கொன்றிருக்க வேண்டியதில்லை, ஆனால் அவர் ஒன்றும் தமிழர் தலைவரோ தியாகியோ அல்ல), புலிகள் எதிர்ப்பு அதே சமயம் ஈழ ஆதரவு எனும் நிலைப்பாடு, மாநில உரிமைகளுக்கு கடுமையாக குரல் கொடுத்தது, இட ஒதுக்கீடுக்கான சட்ட பாதுகாப்பு, நதிநீர் உரிமைகளில் உறுதியான நிலைப்பாடு, மூவர் தூக்குக்கு எதிரான தீர்மானம் (மொத்தமாக மரண தண்டனைக்கு எதிராக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்) அம்மா உணவகம், தொட்டில் குழந்தை, முதல்வர் காப்பீடு திட்டம், சுனாமி சீரமைப்பு, சென்னையை வாகன தொழிபெட்டையாக முனைந்து உருவாக்கியது, தமிழக கோவில்கள் சீரமைப்பு பணி மீதிருந்த சிறப்பு ஆர்வம் போன்றவைகளில் அவருடைய பங்களிப்பு நினைவில் வைத்திருக்கப்படும். ஒட்டு வங்கி குறித்து அஞ்சாமல் சில அதிரடி முடிவுகளை அவர் மேற்கொண்டுள்ளார். அரசூழியர்கள் வேளை நிறுத்தம், ஆட்டோ மீட்டர் மற்றும் கட்டண முறைபடுத்துதலுக்கான முயற்சி. எனினும் அவை எவையும் முழுமையான பலனளிக்கவில்லை. ஜெயலலிதாவின் அன்னை பிம்பம் உறுதிபட அவர் உருவாக்கிய முக்கியமான திட்டங்களில் ஒன்று அம்மா உணவகம், அதற்கு முன்னரே கோவில்களில் அன்னதானம் மிக முக்கியமான திட்டம். தமிழகத்தில் இன்று பசியால் வாடி மறுப்பது என்பது இயற்கையானதல்ல. இதுவே ஜெயலலிதாவின் ஆகப்பெரிய சாதனை என எண்ணுகிறேன்.

அதிகாரம் ஒற்றை புள்ளியில் குவிந்திருக்கிறது. விசுவாசம் இருந்தால் போதும் பெயரற்றவர்களும் முகவரியற்றவர்களும் தலைவர்களாக முடியும். தொண்டர்கள் இக்கட்சியின் மீது பினைப்புகொள்ள இது ஒரு முக்கிய காரணம். தங்கள் பணி எங்கோ இருக்கும் தலைவரால் கவனிக்கபடுகிறது எனும் நம்பிக்கை, நாளை நானும் சட்டமன்றத்தில் காலூன்றலாம் எனும் உணர்வு.
ஒட்டுமொத்தமாக ஜெயலலிதாவும் சரி கருணாநிதியும் சரி ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள், இருவருமே சம அளவில் விமர்சிக்கதக்கவர்கள், சமஅளவில் தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து சென்றவர்களும் கூட.

தலைவர்களின் பிம்பங்களை முன்வைத்து இயங்கிய தமிழக அரசியல் ஜெயலலிதாவின் மரணத்தின் மூலம் தமிழகத்தில் முடிவுக்கு வெகு அருகில் வரலாம். தலைவர்களின் பிம்ப அரசியல் கொள்கை சார் அரசியலை காட்டிலும் இழிவானதாக கருதப்படுகிறது. ஆனால் எனக்கு அது ஏற்புடைய கருத்தல்ல. மக்கள் தலைவர்கள் அடையாளங்களை மீறி செல்பவர்கள். அவர்களால் தான் 'இன்க்ளுசிவ்' ஆட்சியை அளிக்க இயலும் என நம்புகிறேன். விவாதத்தின் போது ஒரு நண்பர் என்டிஆர் - சந்திர பாபு நாயுடு விவாகரத்தை முன்வைத்து சொன்ன விஷயம் முக்கியமானதாக பட்டது. சந்திரபாபு நாயுடு முதல்வராகும் போது அவர் மக்கள் செல்வாக்குடையவர் அல்ல. லட்சுமி சிவ பார்வதிக்கு துரோகம் இழைத்தவர் என கருதப்பட்டார். ஆனால் தேர்ந்த முன்னேற்ற மற்றும் வளர்ச்சி பணிகளின் ஊடாக ஒரு தலைவராக உருவாகிறார். எங்களிடம் இப்போது கவர்ச்சிகரமான தலைவர் இல்லை ஆனால் செயல்திறன் மூலம் ஈடு செய்வோம் என்றார். ஒருவேளை அத்தகைய ஒரு அரசியல் இங்கு மலர்ந்தால் மகிழ்ச்சியே. ஒரு புதிய துவக்கமாக அது இருக்கும். 


இந்து ஆங்கில நாளிதழில் ஒரு செய்தி வந்திருந்தது. 96 தேர்தல் தோல்விக்கு பின்னர் பனிரெண்டு வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கபட்டிருந்த போது அவர் மனமுடைகிறார். அரசியலை விட்டு வெளியேற முடிவெடுக்கிறார். திருநாவுக்கரசர் மூலம் இவ்விஷயம் கருணாநிதிக்கு கொண்டு செல்லபடுகிறது. வழக்குகள் திரும்பபெற பட்டால் அரசியலை விட்டு வெளியேற தயார் எனும் செய்தி சொல்லப்பட்டது. ஆனால் அங்கிருந்து எந்த பதிலும் வரவில்லை. அதன் பின் சிறைவாசம் அவரை உறுதியாக்குகிறது. தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்கிறார். ஒட்டுமொத்தமாகவே அவர் விருப்பில்லாமலே யானை சவாரி செய்தவர். அந்த சவாரியையும் யானையும் அவர் ஒவ்வொரு நொடியும் வெறுத்திருப்பார். அந்த தனிமை. அம்புபடுக்கையில் உறங்கும் பீஷ்மனை போல்.
வெண்முரசில் பீமன் சொல்லும் ஒரு வாக்கியம் உண்டு.
காடேகும் செய்தியை குடிகள் கேட்டால் என்ன நினைப்பார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் கொந்தளிப்பார்கள்என்றார் சௌனகர். பீமன் வெடித்து நகைத்து ஆம், கொந்தளிப்பார்கள். கண்ணீர்விடுவார்கள். ஏனென்றால் அவர்களால் கூட்டாக செய்யத்தக்க எளிய செயல் அது மட்டுமே. வாளாவிருக்கவில்லை, உகந்ததை செய்துவிட்டோம் என்று நிறைவுகொண்டு தங்கள் அன்றாடச் சிறுமைகளுக்கு மீளவும் முடியும்என்றான். கும்பலும் கொந்தளிப்பும் தற்காலிகமானது அதற்கப்பால் மக்களும் பழகி விடுவார்கள் என்கிறான் பீமன். மக்களின் இந்த இயல்பை குறித்து நுட்பமான ஒரு பார்வையை அளிக்கிறான். மந்தா, மக்களை வெறுப்பவன் காலப்போக்கில் அவர்களால் வெறுக்கப்படுவான்என்றார் யுதிஷ்டிரர். இல்லை மூத்தவரே, மக்களை புரிந்துகொண்டவன் அவர்களை வெறுப்பான். அவன் மட்டுமே அவர்களை கட்டுப்படுத்தவும் முடியும். கட்டுப்பாடான ஆட்சியை அளிப்பதனால் அவனை அவர்கள் விரும்புவார்கள்என்றான் பீமன்.- வெண்முரசு, சொல்வளர்காடு
ஜெயலலிதாவிற்கு அஞ்சலி..