Friday, August 19, 2011

அண்ணா ஹசாரே -சில விமரிசனங்களும் அதற்கு எதிர்வினைகளும்

இன்று இந்தியா முழுவதும் பரவலாக ஊழலுக்கு எதிரான பேரும் கொந்தளிப்புகள் நம் மக்களின் மனதில் உருவாகி பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது ,ஆனால் தமிழகத்தில் இது ஒரு பெறும் தீயாக பற்றிக்கொள்ளவில்லை .நம் மக்களுக்கு அடி ஆழத்தில் இருக்கும் சந்தேகமே இதற்கு காரணம் என்று சொல்லலாம் .மேலும் இந்த போராட்டம் குறித்து தமிழகத்தின் எந்த ஒரு பெரிய அரசியல் தலைவர்களும் ,இயக்கங்களும் வாய் திறக்காமல் கள்ள மௌனம் சாதித்து வருகிறது .திருடனுக்கு தேள் கொட்டியது போல் இருக்கிறார்கள் என்று எண்ண தோன்றுகிறது.மேலும் வெகு சிலரை தவிர நமது அறிவு சமூகமும்,ஊடகங்களும் இதற்கு போதிய முக்கியத்துவம் அளிக்காமல் இதை வெற்று விளம்பர உத்தி என்று புறம் தள்ளுவதில் பெரும் முனைப்புகளோடு செயலாற்றுகின்றனர் .
இந்த விளம்பரங்களினால் அவருக்கு ஆக போவது என்ன ? அவர் ஒன்றும் பிரதமராகவோ குறைந்த பட்சம் வார்ட் தலைவராக கூட ஆகபோவதில்லை .
அண்ணா -ஒரு விளம்பர விரும்பி ,அவர் செய்யும் உண்ணாவிரதம் என்பது ஒரு விளம்பர 'ஸ்டன்ட்'

Monday, August 1, 2011

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் - குழந்தைகள் மருத்துவம்-12

மறுக்க முடியாமல் இன்றைய பெரியவர்களும் ,பெரியவர்கள் போல் எண்ணிக்கொள்ளும் அனைவரும் திரும்ப செல்ல நினைக்கும் பிராயம் அந்த பால்ய பிராயம் .எத்தனை ஆனந்தங்கள் ,துள்ளல்கள் ? என்றும் அதிலயே வாழ்த்திட மாட்டோமா என்று ஏக்கம் பிறக்கிறது .அறியாமையின் அறிய வேண்டும் எனும் பரபரப்பு ஒரு ஆனந்தம்,அது அறிந்த பின்பு நீர்த்து அணைந்து விடுகிறது .குழந்தையாய் இருந்த பொழுது வாழ்வில் வண்ணங்களும் ,குறுகுறுப்பும் நிறைந்த நாட்கள் போயி , வாழ்வே சுவைத்து சப்பிய பப்புல் கம் போல சுவையின்றி நிறமின்றி வெளிறி உமிழ முடியாமல் சிக்கி தவிக்கும் நாட்களாய் மாறிவிடுகிறது .எந்த மனதிற்கும் குழந்தையை பார்த்தால் ,வாழ்தலில் ஒரு பிடிப்பும்,அழகும்,ஆசையும் பிறந்து மனம் உற்சாகம் அடைகிறது .அதே ஒரு வீட்டில் அந்த குழந்தைக்கு உடல் சுகமில்லை என்றால் வீடே வெயிலில் வாடிய ரோஜா இதழ் போல் வதங்கி சுருங்கி விடுகிறது ,எல்லோர் மனத்திலும் ஒரு பயம் கவிகிறது .


ஆயுர்வேதத்தின் எட்டு அங்கங்களில் ஒரு முக்கியமான அங்கம் பால சிகிச்சை .இதை கௌமார ப்ருத்யம் அல்லது குமார தந்திரம் என்று ஆயுர்வேத நூல்கள் குறிப்பிடுகின்றன .முழுவதும் கிட்டாவிட்டாலும் காஷ்யப முனிவர் இயற்றிய சம்ஹிதை இன்றளவிலும் குழந்தைகள் நோய்களுக்கு வெகு முக்கியமான நூல் .அஷ்டாங்க ஹ்ருதயத்திலும் விரிவாக பால ரோகங்களை பற்றியும் அதன் சிகிச்சைகளை பற்றியும் பேசுகிறது .

ஆயுர்வேதத்தின் பால சிகிச்சை நவீன மருத்துவத்தின்' பீடியாட்ரிக்ஸ்' துறையிலிருந்து மாறுபாடு கொண்டது .மேலும் இப்பொழுது பீடியாட்ரிக்ஸ் துறை கூட மேலும் வளர்ந்து குழந்தைகள் நல அறுவை சிகிச்சை (pediatrics surgeon), பிறந்த குழந்தையை கவனிக்கும் நியோனடாலஜிஸ்ட் (neonatologist) என்று புதிய துறைகள் அறிவியல் வளர்ச்சி காரணமாக பிறந்துகொண்டே இருக்கின்றன .மாறாக ஆயுர்வேதத்தில் -எதிலும் ஒரு முழுமை நோக்கு இருக்கும் (wholistic approach) .ஆயுர்வேதத்தின் குழந்தை மருத்துவம் குழந்தையின் பிறப்புக்கு முன்பே ,இன்னும் சொல்ல போனால் கருத்தரிப்புக்கு முன்பே குழந்தைகளின் தாய் தந்தையிடமிருந்து தொடங்குகிறது .
ஒரு நல்ல ஆரோகியமான மரம் தான் நல்ல விதையை கொடுக்க முடியும் ,அப்படி கிடைக்கும் நல்ல விதையே உயர்ந்த மரமாக வளர்ந்து தழைக்க முடியும் .இதனால் கருத்தரிப்பதற்கு முன் ,பஞ்ச கர்ம சோதனைகள் வலியுறுத்தபடுகின்றன .அதன் மூலம் தாய் தந்தையர்களின் நோய் நீக்கி ,பீஜங்களில் உள்ள தோஷங்களை நீக்கி நல்ல பிள்ளைகள் பிறக்க வழிவகை செய்கின்றனர் .

ஆயுர்வேதத்தின் பால சிகிச்சை நவீன மருத்துவத்தின் மகபேறு (obstetric medicine) மற்றும் குழந்தைகள் மருத்துவத்தை கூட்டாக கொண்டது .கர்பிணி பரிசர்யா -எனும் பெயரில் ஒவ்வொரு மாதமும் தாய்க்கு என்னென சிகிச்சைகள் செய்ய வேண்டும் , அவர்களுக்கு ஒவ்வொரு மாதங்களிலும் என்ன உணவளிக்க வேண்டும் என்று விரிவாக சொல்கிறது .இன்றும் எனக்கு தெரிந்து சென்னையில் உள்ள ஆயுர்வேத மருத்துவர் டாக்டர்.கிரிஜா ,தனது சஞ்சீவனி ஆயுர்வேத மருத்துவமனையில் இவ்வண்ணம் வெற்றிகரமாக பிரசவம் பார்த்து வருகிறார் .இதில் முக்கியமானது என்னவென்றால் அனேக பிரசவங்கள் சுக பிரசவமே .அவர் முற்றிலுமாக அலோபதி முறையை புறக்கணிக்கிறார் ,அது என்னை பொறுத்தவரை உவப்பானது அல்ல .இதற்கும் அதற்குமான இடையில் ஒரு மைய புள்ளியை கண்டுகொண்டால் அது சரியானதாக இருக்கும் .
கர்பபைய்யில் வளரும் கரு ,ஒவ்வொரு மாதமும் எக்கணம் மாற்றம் கொண்டு வளர்கிறது என்பதை பற்றி ஆயுர்வேத ஆசான்கள் கூறுகின்றனர் .எந்த 'ஸ்கானிங் ' வசதியும் அல்லாத அந்த காலத்தில் கரு கொள்ளும் மாற்றங்களை ஓரளவுக்கு கால பிராமனத்தோடு சரியாகவே சொல்லி இருக்கிறார்கள் .முதல் மாதத்தில் உருவமற்ற ஒரு பிண்டமாக உருவாகி ,பின்னர் அடுத்து கை கால்கள்,தலை ஆகியவைகள் சிறு மொட்டு போன்று வளர்ந்து ,நான்காவது மாதத்தில் இதையா துடிப்பு ,ஆறாவது மாதத்தில் புத்தி என்று செல்கிறது அவர்களது கூற்று .

பிரசவத்தின் சமயத்தில் ஏற்படும் வெவ்வேறு சிக்கல்கள் குறித்தும் அதை எவ்வாறு சரி செய்வதென்றும் விரிவாக பேசுகின்றனர் .கொடி சுற்றிகொள்வது , தலை அல்லாது பிற உறுப்புகள் முதலில் வெளிவருவது,சரியான காலத்திற்கு முன்பே வெளிவருவது இப்படி இன்றைய பல சிக்கல்கள் அன்றும் பேசப்பட்டுள்ளது .ஆயுதம் கொண்டு குழந்தையை வெளியில் இழுப்பது ,மற்றும் இன்றும் பின்பற்றப்படும் பல்வேறு நுட்பங்கள் (maneuvers ) பதிவு செய்யப்பட்டுள்ளது .பின்னர் பிறந்த குழந்தையை சுத்தம் செய்வது ,தாய்க்கு செய்ய வேண்டிய சிகிச்சைகள் ,தாய்ப்பாலின் மகத்துவம்,தாய்ப்பாலுக்கு மாற்று, பால் சுரக்கும் மார்புகளில் வரும் நோய்கள் மற்றும் அதன் தீர்வுகள் என்று பல்வேறு தலைப்புகளை விரிவாக அலசுகிறது .

சில இடங்கள் வாசிக்கும் பொழுது கொஞ்சம் கரடுமுரடாக ,நமது இன்றைய நாகரீக வாழ்விற்கு ஒவ்வாதது போல் தோன்றுகிறது .ஆகினும் கூட ,இது தோல்வி அடைந்த முறை அல்ல, இத்தனை வம்சங்களாக நாம் தழைத்து இருப்பதே இதற்கு மிக சிறந்த உதாரணம் .ஆகினும் சில எளிய மாற்றங்கள் மூலமும் ,கொஞ்சம் விசாலமான பார்வை இருந்தால் இதிலிருந்து சில சாராம்சங்களை நாம் மேலே எடுத்து செல்ல முடியும் .பிறிதொரு சமயம் மகபேறு மற்றும் பெண்கள் மருத்துவத்தை பற்றி விரிவாக எழுதுகிறேன் .

எனது அனுபவத்தில் குழந்தைகளுக்கு மிக உகந்த மற்றும் சிறந்த மருத்துவம் ஆயுர்வேதம் தான் .அன்றாடம் குழந்தைகள் சந்திக்கும் எளிய நோய்களுக்கு ஆயுர்வேதம் மிக சிறந்த தீர்வை முன்வைக்கிறது .சளி ,காய்ச்சல் போன்ற நோய்களுக்கு நவீன மருத்துவத்திற்கு ஈடாக இந்த மருந்துகள் வேகமாக செயலாற்றுகின்றன .அதே போல் பசியின்மை ,மலசிக்கல் ,அதிசாரம் ,பூச்சி ,தோலில் வரும் சிரங்குகள் ,அரிப்பு ஆகியவற்றுக்கும் மிக நல்ல தீர்வை கொடுக்கிறது .

கண்களில் உள்ள பார்வை கோளாறுகளால் சிறு வயதில் கண்ணாடி அணிகின்றனர் ,ஆரம்ப கட்டத்தில் இதை சரியாக கண்டுபிடித்தால் சில பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம் கண்ணாடியை தவிர்க்கலாம் .

மூளை வளர்ச்சி குன்றுதல்,வலிப்பு நோய்கள் ,நினைவாற்றல் குறைதல் ,குன்றிய வளர்ச்சி ஆகிய பிரச்சனைகளில் உடல் தன்னை தானே குணபடுத்தி தனது இயல்பு நிலையை அடைய ஆயுர்வேத மருந்துகள்,சிகிச்சைகள்,பயிற்சிகள் நாளடைவில் உதவும்.

ஆயுர்வேதம் சொல்லும் ஆரோகியமான பிள்ளை வளர்ப்பு முறைகள்

எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவது- லாக்ஷாதி கேர தைலம் என்று ஒரு எண்ணெய் உண்டு ,கேரள ஆயுர்வேத மருந்தகங்களில் கிட்டும் .அதை இளம் சூடாக வாட்டி குழந்தைக்கு தேய்க்க வேண்டும் ,பின்பு சற்று நேரம் இளம் காலை வெயிலில் காண்பித்துவிட்டு சுடுதண்ணீர் வைத்து குளிப்பிக்க வேண்டும் .

தாய்ப்பால் கொடுப்பது -இது மிக முக்கியமாகும் குறைந்தது ஆறு மாதங்களேனும் கொடுக்க வேண்டும் ,பால் சுரத்தளில் பிரச்சனை இருந்தால் - பிரசவ லேஹியம் என்று அறியப்படும் சௌபாக்ய சுண்டி அல்லது சதாவரி குளம் அல்லது பத்மகாதி சூரணம் ஆகியவைகளை தாய் உட்கொள்ள வேண்டும் .பெரும்பாலும் பால் குடியில் இருக்கும் குழந்தைகளுக்கு வயிற்று பொருமல்,மல சிக்கல்,அதிசாரம்,வாந்தி ஆகியவை வர காரணம் தாயின் உணவு பழக்க வழக்கங்களே .அதில் மிகுந்த கவனம் தேவை .
சில குழந்தைகளுக்கு - தாய்ப்பாலிளிருந்து பசும்பாலுக்கு மாறும் பொழுது அல்லது சில சமயம் தாய் பால் குடிக்கும் பொழுதே ,மாந்தம் ஏற்பட்டு பச்சை நிறமாக பேதி போகும் .lactose intolerance கூட காரணாமாக இருக்கலாம் ,இம்மாதிரி சமயங்களில் ரஜன்யாதி சூரணம் என்று ஒரு அற்புத மருந்து ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது .இதுவும் கடைகளில் கிடைக்க கூடியதே .பிறந்த குழந்தை முதல் எல்லா குழந்தைகளுக்கும் ஜீரண உறுப்புகள் தொடர்பாக எந்த கோளாறு வந்தாலும் இதை கண்ணை மூடி கொண்டு கொடுக்கலாம் .அளவு மட்டும் மாறுபடும் .இது குழந்தைகளுக்கான ஒரு சர்வ ரோக நிவாரணி .

அதே போல் குழந்தைகளின் சளி ,ஜலதோஷம் மூக்குற்றுதல் போன்ற பிரச்சனைகளுக்கு மிக சிறந்த மருந்து கர்ப்பூராதி சூரணம் .கஸ்தூரி மாத்திரை ,கோரோச்சனாதி குளிகா ஆகியவையும் நல்ல மருந்துகள் .நீர்கொர்வை மாத்திரை எடுத்து சுடுதண்ணீரில் குழைத்து நெற்றியில் பற்று போட்டால் மூக்குற்றுவது நின்றுவிடும் .

மூன்று வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை வேப்பங்கொழுந்து அரைத்து மஞ்சள் பொடி சேர்த்து இரண்டு உருண்டைகள் கொடுத்தால் ,வயிற்று பூச்சிகள் வராமல் இருக்கும்,மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும் .ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பேதிக்கு கொடுப்பதும் உத்தமம் .

கரப்பான் மற்றும் அனேக தோல் நோய்களுக்கு அருகம்புல் தைலம் நன்றாக கேட்கும் .

சிக்கன்குன்யா போன்ற விஷ காய்ச்சல் சீசன் வந்துவிட்டால் - நில வேம்பு குடிநீர் காய்ச்சி குடும்பமே குடிப்பது நல்லது .இது அனுபவபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நோய் தடுப்பு முறையாகும் .

ஓரளவு நினைவிலிருந்தும் ,அனுபவத்திலிருந்தும் எழுதியது ,உங்களுக்கு ஏதேனும் குறிப்பிட்ட சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்,மேற்கொண்டு பேசலாம் .

அனைவருமே ஒரு மிக சிறந்த தாயாகவோ தந்தையாகவோ இருந்து ஒரு உத்தமமான குழந்தையை பெற்று வளர்த்தெடுக்க கனவு காண்கிறோம் .நம்மை போன்றே ,ஆனால் நம்மை காட்டிலும் மேம்பட்ட,நமது குறைகள் இல்லாத ,அல்லது குறைகளே இல்லாத மனிதர்களை உருவாக்க நாம் ஒரு பெரும் கனவு காண்கிறோம் .சில நேரங்களில் நாம் வாழ துடித்த கனவுகளை அவர்களின் கழுத்தில் எடை கற்களாக கட்டி அவர்களின் சொந்த கனவுகளை நோக்கி தலையை நிமிர்த்த கூடவிடுவத்தில்லை. இங்கே வாழும் யாரை கேட்டாலும் ,நிராசயே பதிலாக எஞ்சுகிறது .அனைத்து கனவுகளும் ,ஆசைகளும் அனைவருக்கும் நிறைவேறாது தான் ,ஆனால் அந்த கனவுகளை நோக்கி செல்ல அவர்களுக்கு வாய்ப்பு மறுக்க படுவது நிச்சயம் ஒரு மானிட கொடூரம் .

உலகிற்கு மிக சிறந்த செல்வங்களாய் நம் பிள்ளைகளை வளர்ப்போம் ,அவர்களோடு சேர்ந்து நாமும் வளர்வோம் .