Friday, August 19, 2011

அண்ணா ஹசாரே -சில விமரிசனங்களும் அதற்கு எதிர்வினைகளும்

இன்று இந்தியா முழுவதும் பரவலாக ஊழலுக்கு எதிரான பேரும் கொந்தளிப்புகள் நம் மக்களின் மனதில் உருவாகி பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது ,ஆனால் தமிழகத்தில் இது ஒரு பெறும் தீயாக பற்றிக்கொள்ளவில்லை .நம் மக்களுக்கு அடி ஆழத்தில் இருக்கும் சந்தேகமே இதற்கு காரணம் என்று சொல்லலாம் .மேலும் இந்த போராட்டம் குறித்து தமிழகத்தின் எந்த ஒரு பெரிய அரசியல் தலைவர்களும் ,இயக்கங்களும் வாய் திறக்காமல் கள்ள மௌனம் சாதித்து வருகிறது .திருடனுக்கு தேள் கொட்டியது போல் இருக்கிறார்கள் என்று எண்ண தோன்றுகிறது.மேலும் வெகு சிலரை தவிர நமது அறிவு சமூகமும்,ஊடகங்களும் இதற்கு போதிய முக்கியத்துவம் அளிக்காமல் இதை வெற்று விளம்பர உத்தி என்று புறம் தள்ளுவதில் பெரும் முனைப்புகளோடு செயலாற்றுகின்றனர் .
இந்த விளம்பரங்களினால் அவருக்கு ஆக போவது என்ன ? அவர் ஒன்றும் பிரதமராகவோ குறைந்த பட்சம் வார்ட் தலைவராக கூட ஆகபோவதில்லை .
அண்ணா -ஒரு விளம்பர விரும்பி ,அவர் செய்யும் உண்ணாவிரதம் என்பது ஒரு விளம்பர 'ஸ்டன்ட்'


துக்ளக் சோ உட்பட பலர் முன்வைக்கும் பார்வை இது தான் .சரி , அப்படியானால் ஒரு போராட்டத்தை எவ்வாறு வெகுஜனபடுத்த முடியும் ? எவ்வாறு மக்களை தெருவில் வந்து நின்று குரல் எழுப்ப செய்ய முடியும்? .மக்களின் பங்களிப்பே ஒரு போராட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது .ஊடகம் என்பது அவருக்கு ஒரு வாகனம் ,பல கோடி மக்களை அவர் ஒரே நேரத்தில் சென்று சேர அதை அவர் பயன்படுத்துகிறார் .இணையம் இன்னும் சென்றடையாத நடுத்தர வர்க்கம் -இன்றும் இந்தியாவில் கணிசமானவர்கள் இருக்கிறார்கள் .சரி ,ஒரு காஷ்மீரத்து பிரச்சனையோ ,இல்லை ஈழத்து கொலைவெறியோ ,ஒரு அறைக்குள் நாலு மெத்த படித்த மேதாவிகள் பேசி பேசி இதுவரை என்ன சாதித்தனர் ? இல்லை ஊழலுக்கு எதிராக இதே சி .என் .என் ,என் .டி.டி .வி ,போன்ற ஆங்கில ஊடகங்கள் ஒரு மாதத்திற்கு ஒரு நிகழ்ச்சி ஏனும் நடத்துகின்றனர் ஏன் அவையெல்லாம் மக்களின் மனதில் போராட்ட விதைகளை விதைக்கவில்லை ?
இவர் உண்ணாவிரதம் இருந்தால் ஊழல் ஒழிந்துவிடுமா ?

இது நடைமுறைவாதியின் அவநம்பிக்கையின் குரல் .ஒரு போராட்டத்தின் போக்குகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும் .கடலிலிருந்து உப்பெடுத்தால் சுதந்திரம் கிடைத்துவிடுமா ? என்று காந்தியின் காலத்தில் ஒலித்த குரல் .இதன் பின்னணியில் இருக்கும் எக்களிப்பு நம்மை எந்த வளர்ச்சி பாதையிலும் அழைத்து செல்லாது .உண்ணாவிரதம் என்பது நுட்பமான குறியீடு ,உப்பை போல் .உப்பு என்பது எங்கள் வளம் ,இயற்கையின் வளம் அதற்கு வரிவிதிப்பது என்பது அராஜகம் ,இங்கே உப்பு என்பது அதிகாரத்தின் குறியீடு ,உப்பை அள்ளுவதும் மூலம் நுட்பமாக தங்களது வளங்களின் மேலான அதிகாரத்தை தகர்த்து எறிகிறார் காந்தி.மேலும் ஒரு போராட்டம் என்பதின் நோக்கம் என்ன? இங்கே அண்ணாவின் போராட்டம் கோருவது ஒரு வலிமையான லோக்பால் மசோதாவை ,அதன் மூலம் அவர் செய்ய நினைப்பது என்ன ? ஊழலை ஒழித்தல் .ஊழல் என்பது எப்படி நிகழ்கிறது ? யார் நிகழ்த்துகிறார் ? இன்று ஊழல் ,லஞ்சம் என்பது வணிக நிறுவனங்கள் மட்டுமோ ,கொழுத்த அரசியவாதிகள் மட்டுமோ செய்வது இல்லை ,நாமும் அந்த ஊழலின் சமுத்திரத்தில் ,ஜன திரளில் சிறு சிறு துளிகளாக கலந்து வருகிறோம் .சிறுக சிறுக ஊழலும் ,லஞ்சமும் ஒரு பெரிய குற்றம் இல்லை எனும் மனநிலையை நாம் அடைந்து கொண்டு உள்ளோம் ,நமது முனைகள் மழுங்கி ,குற்ற உணர்வுகள் மரித்து கொண்டிருக்கின்றன .'எல்லாரும் செய்றான் ,நானும் செய்றேன்,அவன் ஆயிரம் கொடி ,லட்சம் கோடியில் செய்கிறான் நான் ஐம்பதுகளிலும் ,நூறுகளில் செய்கிறேன்'.அவன் செய்தால் பொருள் சேர்க்கும் பாவி,நான் செய்தால் "வேற என்ன சார் செய்ய முடியும்" ,எனும் சப்பை கட்டு .

இந்த ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது நமது அறத்திற்கும்,வாழ்கையின் விழுமியங்களுக்கும் ,நமது அடி ஆழத்தில் எஞ்சி இருக்கும் மானுட அறத்திற்கும் நமது இன்றைய முனை மழுங்கிய வாழ்க்கைக்கும் எதிரான போராட்டம் ,அண்ணா விடுக்கும் அறைகூவல் நமது மனசாட்சியின் அடி ஆழத்தில் இன்னமும் மூச்சு திணறி எஞ்சி நிற்கும் அந்த அறத்தை தட்டி எழுப்ப ,நமது ஊழல்களுக்கு எதிராக நாம் சமரசமின்றி இருந்திட விடுக்கும் அறைக்கூவல் .இதை தான் காந்தியும் அன்று செய்தார் ,ப்ரிடிஷார்களின் மனசாட்சியை உரசுவது .

அண்ணா அரசுக்கு எதிராக செயல்படுகிறார் ,வீண் பிடிவாதம் பிடிக்கிறார் ,அவருக்கு பின்னால் அந்நிய நாடு சதி இருக்கிறது ,அமெரிக்க ஏகாதிபத்தியம் இருக்கிறது ,சீன இருக்கிறது ,மாவோயிஸ்ட் இருக்கிறார்கள் ,ஆர் .எஸ்.எஸ். இருக்கிறது ,அவர் பி.ஜெ.பி கையாள்,இல்லுமிநாடி ,அரசின்மைவாதி etc etc.. ..


அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு என்பது கால் சங்கிலிக்கும் அதில் கட்டுண்டதாக எண்ணும் யானைக்கும் உண்டான உறவை போல .யானை தன் பலத்தை அறிந்தால் கால் சங்கிலி அதற்கு ஒரு பொருட்டே அல்ல ,அரசும் அதிகாரமும் உண்மையில் அதிகாரம் இல்லை ,அவை நம்மை பழக்கும் பாவ்லாக்கள் .இதை எந்த நாட்டு மக்களும் உணர்வதை அரசு விரும்பாது ,ஏனெனில் அது மொத்த ஒழுங்கையும் சீர்குலைத்துவிடும் ,நம் இந்திய அரசு பயப்படுவதும் அதுவே ,சுதந்திர போரின் சமயம் ஆங்கில அரசு உணர்ந்ததும் அதுவே .
இந்த கட்டுகோப்பு நிச்சயம் அவசியம் ,ஜனநாயக அரசு எந்திரத்தில் சில கோளாறுகள் இருக்கத்தான் செய்யும் ,அதை மறுக்க முடிவதில்லை ,ஆனால் அதற்காக அதை தூக்கி எறிந்துவிட்டு அதற்கு நாம் வைக்கும் மாற்றுகள் ஏதும் அதீத உதிர பலிகள் இன்றி சாத்தியமில்லை ,அதனால் மக்களுக்கு இந்த அரசும் ,அரசிற்கு இந்த மக்களும் பரஸ்பரம் உயிர்த்து ஆபத்து இல்லாமல் பிழைத்து ,வாழ்ந்து இருக்க தேவை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் .

ஒரு மிகபெரிய மாற்றம் நமக்கு தேவையெனில் அரசை அந்த விளிம்பு நிலைக்கு கொண்டு சென்று உங்களின் மக்களின் மீதான அதிகாரம் என்பது ஒரு மாயை என்பதை நினைவுகூர செய்ய வேண்டும் ,அதில் உதிரபலிகள் இல்லாமல் நிகழ்த்த வேண்டும் ,இதற்கு காந்தியத்தை விட்டால் எது சிறந்த வழி ? அரசு அதை உணர்ந்துவிட்டால் தனது நம்பகத்தன்மையை காத்துக்கொள்ள அது மக்களின் பால் வந்தே ஆக வேண்டும் .
ஒரு அமைப்புக்குளிருந்து கொண்டே அதை பொறுமையாக திருத்த வேண்டும் ,அது சில குறியீட்டு விதி மீறல்கள் மூலமே சாத்தியம் .
உண்ணாவிரதம் என்பது ஒரு மிக பெரிய குறியீடு ,உங்களுக்காக ,மக்களின் துயரங்களுக்காக மக்களின் ஒருவரான நான் என் இன்னுயிரை பணயம் வைக்கிறேன் .இது நம மக்களின் மனதில் ஒரு கீறலையாவது ஏற்படுத்தும் .

அண்ணாவின் முயற்சிகளை கேலி செய்யும் நாம் ,இந்த ஊழல் லஞ்சத்திற்கு எதிராக தனிப்பட்டமுறையில் என்ன செய்துள்ளோம் என்பதை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் ! நாமும் அதன் ஒரு பகுதியாக மாறி நம்மை நாமே காத்துக்கொள்ள ,சமரசம் செய்து கொள்ள தர்கங்களை கட்டமைக்கிரோமா என்று உணர வேண்டும் ! நமது அறிவு சமூகம் பிளவு படுத்துதலை மையமாக கொண்டு செயல்படுகிறது ,இனி வருங்காலங்களில் உலக ஜனநாயகம் தோன்றுவது தான் மிக சிறந்த வழி பிளவு என்பது மிக பெரிய சுமை இந்த யதார்த்தத்தை நாம் உணர வேண்டும் .
அண்ணாவின் அறகட்டளை மேல் வைக்க படும் ஊழல் குற்ற சாட்டுக்கள்

எளிய புரிதல்கள் மூலமே நாம் புரிந்துகொள்ள முடியும் ,இவை கட்டமைக்கப்பட்டது என்று .இது நம் கிராமங்களில் இருக்கும் பழக்கம் தான் "உன் பொண்டாட்டி என்ன யோக்யமா ?" வகை வசைகள் .அண்ணாவை அறிந்தால் இந்த கேள்விகளுக்கு வேலையே இல்லை .இது ஒரு முக்கிய காரணமாக நாம் முன்வைப்பது என்பது ,நமது கோழை தனத்துக்கு அல்லது ஆர்வமின்மைக்கு ஒரு முகாந்திரம் கொடுக்க அல்லது நமது சுயத்தை சமாதன படுத்த நமக்கு நாமே சொல்லிகொள்ளும் காரணம் .


அவர் முன்வைக்கும் லோக்பாலில் அவரே தன்னை பிரதிநித்துவபடுத்திகொள்கிறார்../ லோக்பாலினால் ஊழல் ஒழிந்திடுமா

அண்ணா தன்னை சட்ட நிபுணராக கருதவில்லை ,அதற்குரிய ஆட்களின் மூலமே இந்த சட்ட வரையறை வந்துள்ளது ,இது ஒரு தொடக்கமே .காந்திய வழிமுறை சமரசங்களை கோர்வது ,இரு தரப்பினருக்கும் ஏதேனும் ஒரு ஆதாயத்தை கொடுப்பது .அரசு இத்தனை தயங்குவதற்கு என்ன காரணம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும் ,ஒரு சட்டத்தால் ஊழலை ஒழிக்க முடியாது தான் ,பிறகென்ன அப்படியே அந்த சட்டத்தை நிறைவேற்றலாமே ?
லோக்பாலின் மேல் நமக்கு சில கருத்து வேற்றுமைகள் இருக்கலாம் ,அதெல்லாம் வரும் நாட்களில் பார்த்துகொள்ளலாம் .

நேற்று திரு.ராமதாஸ் சொல்லி இருக்கிறார் "அண்ணா யாரென்றே தெரியாது என்று ?" எத்தனை பொறுப்பற்ற பதில் ? கழுவுகிற மீனில் நழுவுவது போல .அடுத்த விமரிசனம் " இத்தனை வருடம் எங்கிருந்தார் அண்ணா ?" "திடிரென்று எங்கிருந்து முளைத்தார் ?"

நமக்கு தெரியவில்லை என்பதால் அவருக்கு சமூக வாழ்க்கை என்பதே இல்லை என்று ஆகாது .ராலேகான் சித்தி பற்றியும் ,தகவல் அறியும் உரிமை சட்ட உருவாக்கத்தில் அவரது பங்கை பற்றியும் இன்று பரவலாக அனைவரும் அறிந்து இருக்கிறார்கள் . அவர் பிற அறிவு ஜீவிகள் போல் புத்தகம் புத்தகமாக எழுதி குவிக்கவில்லை ,மாநாடுகளுக்கு சென்று பேசிகொண்டே செயல்புரியாமல் இருந்ததில்லை ,அவர் காந்தியை போல் ஒரு களப்பணி செய்தவர் .மக்களோடு மக்களாக அவரது மனநிலைகளை உணர்ந்தவர் ,அவர்களது மொழியில் பேசுபவர் .இது வெகு முக்கியம் .

ஜன திரள் என்பது எப்போதும் அத்தனை சீக்கிரம் எதற்கும் வெகுண்டு எழாது .தற்காப்பு தான் அதற்கு முக்கியம் ,முடிந்த வரை அலட்சியமாக இருக்கவே முயலும் .மானுட மனம் ஆழத்தில் நமக்கு ஒரு கூட்டு மனம் இருக்கிறது ,வெறும் உணர்வுகளால் ஆன தீவிர மனம் ,mob culture என்று கூட சொல்லலாம் ,விசித்திரமனாதும் அதே சமயம் கொஞ்சம் உக்கிரமானதும் கூட .இந்த கூட்டு மனம் பெறும் அழிவுகளையும் பெறும் மாற்றங்களையும் கொடுக்கவல்லது .இப்பொழுது மாற்றங்களுக்காக வன்முறையற்ற ஒரு போராட்டத்திற்கு நம் ஆழ்மனம் தயாராக வேண்டும் .அதற்கு நமது தர்கங்களை சற்றே புறம் தள்ள வேண்டும் .இது வரை எழுதியது கூட ஒரு தர்க்கத்தை உடைக்க எழுதப்பட்ட மற்றொரு தர்க்கமே .ஆழத்தில் நோக்கினால் நிச்சயம் அண்ணாவின் நோக்கத்தில் உள்ள நேர்மை புலப்படும் ,அவரை சி.ஐ .எ கைக்கூலி என்று வாய்கூசாமல் சொல்ல வராது .
பாபா ராம்தேவை இவரோடு குழப்ப வேண்டாம் ,அவரின் பால் எனக்கு தொடக்கத்திலிருந்து நம்பகம் இல்லை.
இந்த போராட்டத்தில் சில வேண்டாத தலைகள் தென்படலாம் ,நமக்கு பிடிக்காத சிலர் இதை ஆதரிக்கலாம் ,ஆனால் மக்களே ஆழத்தில் இந்த போராட்டத்தின் தேவையை உணர வேண்டும் .நமக்கான மீட்பு இதோ காத்திருக்கிறது .
களபோராட்டம் வேண்டாம் ,குறைந்த பட்சம் மானசீக ஆதரவையாவது நாம் கொடுக்க வேண்டும் .குறைந்த பட்சம் இதற்கு குரல் கொடுப்பவர்களை எளிய அரசியல் சாயலில் காண்பதை நிறுத்திக்கொள்ளவேண்டும் .ஜனநாயகத்தின் அதிக பட்ச சாத்திய கூறு இதுவே .



6 comments:

  1. .நம் மக்களுக்கு அடி ஆழத்தில் இருக்கும் சந்தேகமே இதற்கு காரணம் என்று சொல்லலாம் .மேலும் இந்த போராட்டம் குறித்து தமிழகத்தின் எந்த ஒரு பெரிய அரசியல் தலைவர்களும் ,இயக்கங்களும் வாய் திறக்காமல் கள்ள மௌனம் சாதித்து வருகிறது .திருடனுக்கு தேள் கொட்டியது போல் இருக்கிறார்கள் என்று எண்ண தோன்றுகிறது.

    நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

    ReplyDelete
  2. அருமையான மற்றும் தேவையான பதிவு சகோ. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. ரத்னவேல் அய்யா மற்றும் வேங்கட ஸ்ரீநிவாசன் -நன்றிகள்

    ReplyDelete
  4. ஊழலை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். ஊழலை ஒழிக்க ஒருவர் கிளம்பினால் - ஊழலை விமர்சிப்பதை விட, ஊழலை ஒழிப்பதை விட - அவரை ஒழிப்பதில் ஆர்வங்காட்டுகிறார்கள். ஊழலுக்கு கடிவாளமிட அருமையான சந்தர்ப்பம். பயன்படுத்தி கொண்டால் நன்மை மக்களுக்கே. ஆரோக்யமான பதிவு.

    ReplyDelete
  5. The Rulers will not worry killing any number of activists ,
    Only power of people can shake them. Let all citizens come together to support anna hazare now

    ReplyDelete
  6. தமிழ் உதயம் ரமேஷ்
    எல்லா நல்லதையும் நானே செய்ய வேண்டும் ,அப்படி செய்தால் மட்டுமே அது நல்லவை நல்ல விஷயங்கள் வேறு யாரேனும் செய்தால் அது தவறு ,இலங்கை தமிழர் விவகாரத்தில் நடந்தது இதுவே
    நன்றி கார்த்திக்

    ReplyDelete