Monday, April 20, 2020

இந்நாட்களில்

கொரோனா இந்தியாவிற்கு வருவதற்கு முன் வைரஸ் எனும் பொது தலைப்பில் மூன்று குறுங்கதைகளை எழுதினேன். தொடர்ச்சியாக எழுத எண்ணியிருந்தேன். ஆனால் மனம் குவியவில்லை. வீட்டில் முழுநேரம் இருப்பதால் சுதிரையும் சபர்மதியையும் கொஞ்சம் கூடுதலாக கவனித்து கொள்கிறேன். அதிலும் சுதீருக்கு யு.கே.ஜி வீட்டுப்பாடங்கள் கற்றுக்கொடுப்பது எழுதவைப்பது என் பொறுப்பு. நான் முழு ஆன்மீகவாதியாககனிந்துவிடுவேன் போலிருக்கிறது. உண்மையில் எத்தனை கவனச் சிதைவு. அவனை ஒரு இடத்தில் இருத்தி ஒரு வார்த்தை எழுத வைக்க ஒருமணி நேரம் ஆகிறது. கிளினிக் அடைத்துவிட்டு வீட்டிற்கே மருந்துகளை கொண்டு வந்து விட்டதால் மருந்து வாங்க வருபவர்களை நானே கவனித்து கொள்கிறேன். 

நாள் தவறாமல் காலையில் பன்னிரண்டு சுற்று சூர்ய நமஸ்காரம் செய்கிறேன். எடை மூன்று கிலோ குறைந்தது கூடுதல் பலன். முக்கிய காரணம் வெளியுணவு இல்லை என்பது தான். ஏறத்தாழ இரண்டு வருடங்களாக வாரயிறுதிகள் முழுக்க பெரும்பாலும் பயணத்தில் இருந்திருக்கிறேன். மாலையில் சற்று நேரம் சுதீர் சைக்கிள் பழகுகிறான். உடன் நானும் நடந்து வருகிறேன். எங்கள் வீடிருக்கும் பகுதி எப்போதும் ஆளரவமற்றது. இப்போது அதனினும் துல்லிய நிசப்தம். வீட்டு தோட்டத்திற்கு மயில்கள் வருகின்றன. மாடியில் இருந்து கிளி கூட்டங்களை காண முடிகிறது. அந்தி வானத்தை மாடியிலிருந்து காண்பது பெரும் நிறைவை அளிக்கிறது. 

இதற்கிடையே தான் எழுத்தும் வாசிப்பும். சத்திய சோதனை மொழியாக்கம் தொடர்ந்து வருகிறேன். நாளுக்கு ஒரு அத்தியாயம் செய்து முடிக்க வேண்டும் என எனக்கு நானே உறுதி எடுத்துக்கொண்டுள்ளேன். சில நாட்களில் கணினியில் அமர்ந்து எழுதும் மன அமைப்பு வருவதில்லை. இந்த ஊரடங்கு காலக்கட்டத்திற்குள் இரண்டாம் பாகத்தை முடிப்பேன் என எண்ணுகிறேன். ஒவ்வொரு ஞாயிறும் சக எழுத்தாளர் நண்பர்கள் சிலருடன் சிறுகதை விவாதங்களை ஸ்கைப் வழி செய்கிறோம். இரண்டு மணிநேரங்களுக்கு மேல் நீளும் அமர்வுகள் பெரும் உற்சாகத்தை அளிக்கின்றன. இது இப்போது ஐந்தாறு வாரங்களாக தொடர்ந்து வருகிறது. ஞாயிறு சந்திப்பு இப்போது நான் பெரிதும் எதிர்பார்க்கும் ஒன்றாக ஆகிவிட்டது. ஒவ்வொருமுறையும் புதியவற்றை கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு.

இந்த காலக்கட்டங்களில் தினமும் கொஞ்சமாவது வாசிக்கிறேன்.

அன்னையும் அரவிந்தரும் எழுதிய integral healing 1001 arabian nights, அமர் சித்ரகதா படக்கதைகள், மீரா பெண் எழுதிய 'beethoven's mystical vision', Eckhart Tolle 's  a new earth, சத்தியமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த ரூமியின் கவிதைகள்  டாக்டர். வேணு வெட்ராயனின் அலகில் அலகு கவிதை தொகுப்பு ஆகிய நூல்களை வாசித்தேன். இப்போது grimm's fairy tales வாசித்து வருகிறேன். அனைத்து நூல்களும் நிறைவான வாசிப்பனுபவத்தை அளித்தன. குறிப்பாக அரேபிய இரவுகளும் க்ரிம் தேவதைக்கதைகளும் இத்தனை ஆழமானவை என எனக்கு தெரிந்திருக்கவில்லை. பல கதைகளின் கற்பனையின் ஆழம் பிரமிக்க வைத்தன. அதே போல் மதரின் நூல் எனக்கு தனிப்பட்ட முறையில் சில திறப்புகளை அளித்தன எக்கார்ட் டோல் புத்தகமும் சில புரிதல்களை அளித்தன. அசரடித்த நூல் என்றால் மீரா பெண் எழுதிய பீத்தோவன் நூல் தான். ஒருவகையில் அது பீத்தோவனின் ஆன்மீக வாழ்க்கையின் வரலாறு என சொல்லலாம். கலை மனம் வெளிப்படும் சில இடங்களை தெரிவு செய்து வெளியிட்டிருக்கிறார்.. சர்வோதயம் வெளியிடு. நண்பர்கள் அவசியம் வாசிக்க வேண்டும் என பரிந்துரைக்கிறேன். 

திரைப்படங்கள் பெரிதாக பார்க்கவில்லை. தினமும் அரைமணிநேரம் அல்லது ஒருமணிநேரம் இரவு உறங்கும் முன் கொஞ்சம் பார்க்கிறேன். பெரும்பாலும் மார்வல் படங்கள். ப்ரைமில் குங்க்பூ பாண்டா தொடர் உள்ளது. நண்பர்கள் காணலாம். எனக்கு பிடித்திருந்தது. சுதீருடனும் மானசாவுடனும் சேர்ந்து எட்டு நாட்களுக்கு மதியம் தொடர்ச்சியாக ஹாரி பாட்டர் திரைப்படங்களை பார்த்தோம். 

தினமும் சில நண்பர்களுக்கு தொலைபேசுகிறேன். காய்கறிகள் மளிகை பொருட்கள் வாங்க நான் மட்டுமே வெளியே சென்று வருகிறேன். முக கவசம் அணிந்து காரைக்குடி வெயிலில் சென்று வருவது பெரும் கொடுமை. எவரேனும் வந்து சென்றாலோ அல்லது வெளியே சென்று விட்டு வந்தாலோ மெல்லிய பதட்டம் தொற்றி கொள்கிறது. நோய் என்னை எதுவும் செய்யாது ஆனால் வீட்டிற்குள் கொண்டு வந்துவிடக்கூடாது எனும் அச்சம் தான் காரணம். மருத்துவ நண்பர்களிடம் உரையாடியபோது நம்மூரில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் செல்லக்கூடும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். நமது நோய் எதிர்ப்பு ஆற்றல் இதை நன்றாக எதிர்கொள்ளக்கூடும் என்பது அவர்களின் ஊகம். அது மெய்யாக வேண்டும். 

கொரோனா பல விஷயங்களை நிரந்தரமாக மாற்றிவிடும். இதன் பொருளாதார பின்விளைவுகள் பாரதூரமனாவை. வாழ்க்கைமுறையில் சில நிரந்தர மாற்றங்களை கோருவது. காந்தி மீண்டும் மீண்டும் நினைவுக்கு வரக்கூடிய காலகட்டம் இது. தொடக்கத்தில் ஒரு டிஸ்டோபிய உலகம் அளிக்கும் கிளர்ச்சியுடன் தான் கொரோனாவை கண்டேன். ஆர்வமாக எல்லா செய்திகளையும் தொடர்ந்தேன். நாளடைவில் ஆர்வம் வடிந்தது. கொஞ்சம்  நானே என்னை நோக்கி கொள்ள பரிசீலித்து கொள்ள உகந்த காலம். katyar kajat ghusli என்றொரு மராத்தி படம்- அதன் இசை மிகவும் பிடித்துவிட்டது. தினமும் கேட்கிறேன். இந்துஸ்தானி, தும்ரி, கவாலி இசை கேட்கிறேன். செய்திகளில் இருந்து நம்மை விலக்கிக்கொண்டு அன்றைக்கு அன்று என வாழ்ந்தால் எந்த குறையும் இன்றி தான் செல்கிறது வாழ்க்கை. ஆனால் இந்த பாதுகாப்பு முட்டையை உடைத்துக்கொண்டு விழும் செய்திகளும் தகவல்களும் வருங்காலம் குறித்தும் கோடிக்கணக்கான மக்கள் குறித்தும் இனம்புரியாத அச்சத்தை எழுப்புகின்றன. 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சொல்லப்படும் வரிதான் என் பிரார்த்தனை. நம் அனைவருக்காகவும்..

பொய்மை நீங்கி மெய்ம்மை வரட்டும் 
இருள் நீங்கி ஒளி வரட்டும் 
மரணம் நீங்கி அமுதம் வரட்டும். 





Thursday, April 16, 2020

நீலகண்டம் : முதல் வாசிப்பின் சிறுகுறிப்பு.- கடலூர் சீனு

(நண்பர் கடலூர் சீனு - என் முதல் பதிப்பாளரும் கூட, நீலகண்டம் குறித்து ஒரு சிறுகுறிப்பை அனுப்பி இருந்தார். விரிவாக பேசவும் செய்தார். இந்த நாவலின் வடிவம் பற்றி அவர் கூறியவை இதுவரையிலான வாசிப்புகளில் சிறந்த ஒரு கோணம். அதை அவர் நேரமிருக்கும் போது விரித்து எழுதுவதாக சொன்னார். சீனுவிற்கு நன்றி)




ஒரு புனைவின் உலகினுள் ஒரு வாசகன் முதல் முறை நுழைந்து அது அளிக்கும் அனுபவத்தில் திளைப்பது மிக முக்கியமான ஒன்று. தேர்ந்த வாசகர் என்றாலுமே கூட வாசிப்பில் அவர் முன்னனுபவத்தை தோற்கடிக்கும் தனித்துவம் கொண்ட கலை, வடிவக் கூறு ஒன்றினை தேடும் வாசக ஆழ்மனம் அந்த முதல் வாசிப்பில் விழிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும்.

மறுவாசிப்பு என்பது அப்படிப் புனைவின் art, craft என முதல் வாசிப்பில் கண்டடைந்த தனித்துவமான அம்சம் அந்த புனைவுஉலகின் நெடுக்க எவ்வாறு இழைந்து நிற்கிறது என்பதை அனுபவிப்பதாக அமையும். 

அந்த வகையில், இந்த உள்ளிருப்பு நாட்களில் இரா முருகன் கோபிகிருஷ்ணன் என மருவாசிப்பு
நிகழ்த்திக்கொண்டிருந்த சூழலில், முதல் வாசிப்புக்கு என காத்திருந்த வரிசையில் முதல் நூலாக நின்ற நீலகண்டம் நாவலுக்கு ஒரு இரவை ஒதுக்கினேன்.

ஆட்டிசக் குழந்தையான வரு. அவள் வாழும் யதார்த்தம். அவளை தத்தெடுத்த தந்தையான செந்தில். அவன் வாழும் யதார்த்தம். இந்த இரு யதார்த்தங்களும் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ள இயலாமல் உறவு எனும் பெயரில் முறிந்த இரு கண்ணாடி முனைகள் போல ஒன்றை ஒன்று கீறிக் கிழித்துக் கொள்கின்றன. இரு யதார்த்தங்களும் இடையே உள்ள மெல்லிய ஆனால் கடக்கவே இயலாக் கோடு எங்கணம்
கரைந்து அழிந்தது என்பதை வரு எழுதிக்காட்டும் நாவலே நீலகண்டம்.

பாற்கடல் கடைகையில் எழும் நஞ்சைத் தாக்கும் சிவனின் கதை முதல், சிவனுக்கு பிள்ளைக்கறி என்றாகும் சீராளன் தொடர்ந்து, பிள்ளையைக் கொல்லும் சுடலைமாடன் வரை வரு சொல்லும் கதையில் வரும் எல்லாமே செந்தில் போன்ற 'நார்மல்' மனிதர்கள் வாழும் உலகின் யதார்த்தம். பாக்மான், நிமோ, நிஞ்சா டர்டில், என வருவின் டோலக் பூர் உலகிலோ மகிழ்ச்சி தவிர வேறு எதுவுமே இல்லை. செந்திலின் யதாதார்த்த உலகில் செத்துப்போகும் வான்மதி, வருவின் யதார்த்தத்தில் தேவதையாக இருக்கிறாள்.

இந்த தேவதை உலக யதார்த்தத்தை, செத்துப் போகும் உடல்கள் அடங்கிய யதார்த்தம் எங்கனம் புரிந்து கொள்ளும்? வரு உலகின் சிறகுகள் கொண்ட தேவதையை பிணமாக்கி மண்ணில் புதைக்க முயலும் நவீன மருத்துவம். அந்த நவீன மருத்துவ உலகின் உதவியுடன் தேவதையை மண்ணில் இறக்க முயலுகின்றனர் செந்தில் ரம்யா தம்பதி.

இந்த மையக் கதை ஓட்டத்தில் செந்திலின் குடும்ப பின்புலம், ரம்யாவின் குடும்ப பின்புலம், ஹரி நந்தகோபால் போன்ற மனிதர்கள், வருவை ஒத்த கொரில்லா, வள்ளி, போன்றவர்கள், தாய்மை, தந்தைமை, சகோதர உறவு,  காமம் குரோதம் சமூக அந்தஸ்து, குடும்ப அமைப்பு, என அனைத்தும் புராணக் கதைகள், தொன்மக் கதைகள், நாட்டார் கதைகள் என விரிவான பகைப்புலத்தில் இவற்றின் சாராம்சம் உடைத்துப் பரிசீலிக்கப்படுகிறது. 

மெல்ல மெல்ல செந்திலின் அகத்தில் இரு யதார்த்தங்களும் இடையியலான மெல்லிய புகைத்திரை கலைவது இந்த நாவலின் அழகிய சித்தறிப்புகளில் ஒன்று. மெல்லிய மது மயக்கில் சீராளனைக் காணும் செந்தில், கடற்கரையில் வருவை விட்டு விலக முடிவு செய்த கணம், அவன் குல தெய்வமான நாகம்மனை பார்க்கிறான். நாகம்மனின் இருப்பு வரு செந்தில் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள எவ்வாறு துணை நிற்கிறது என்பது நாவலின் கவித்துவ சித்தரிப்பு.

கற்பனையில் வித விதமான கதை உலகம் வழியே எழுந்து பறக்கும் இந்தப் புனைவு, தர்க்கப் பூர்வமாக வரு எனும் ஆட்டிச நிலையாளரின் பார்வை நோக்கில் சொல்லப்படுகிறது. உணர்வுகள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையால் மட்டுமே கொள்ள இயன்ற கொந்தளிப்பு தனித்துவமான வாசிப்பு அனுபவம் அளிப்பது. குறிப்பாக வருவை குழந்தையாக ஒப்படைத்து விட்டு கண் கலங்கும் மாமன், தன்னை முரட்டுத் தனமாக கையாள வேண்டாம் என்று விண்ணப்பித்து அதன் காரணம் சொல்லும் விபச்சாரி, நஞ்சு அமுதம் என கணத்தில் மாற நந்தகோபால் காலில் விழும் செந்தில் என பல சித்திரங்களை சொல்லலாம்.

'இந்த' யதார்த்த உலகில் வாழும் மனிதர்கள் குடும்பம் என்றும் சமூமம் என்றும், உறவுகள் என்றும்,  தியாகம் என்றும் அன்பென்றும், அத்மீகம் என்றும் அமைப்புகள் கட்டி வைத்து அதில் சிக்கி உழலும் வாழ்வை, அதன் அடிப்படைகளை  'அந்த' யதார்த்த உலகில் வாழும் வரு, இந்த உலகுக்கு 'அந்நியனான' 'அந்த' வரு எப்படி  வினவுகிறாள். எங்கணம் பரஸ்பரம் இரு உலகும் ஒன்றை ஒன்று அறிந்து தகவமைகிறது
என்பதன் மீதான கலா ஸ்ருஷ்டியே இந்த நீலகண்டம் நாவல். இருள் கவிந்த இந்த நாட்களில், எனக்கான சுடரொளி வாசிப்பு. அந்த வரிசையில் மற்றொரு தண்ணொளி மென்சுடர் இந்தப் புனைவின் வாசிப்பு அனுபவம்.

Tuesday, April 7, 2020

1000 மணிநேர வாசிப்பு- அருண்மொழி நங்கை அவர்களுக்கு வாழ்த்துக்கள்


அமுதும் நஞ்சும் அணைந்ததொரு காதை ...
அன்புள்ள சுனீல்,
  நலமா? நாங்கள் நலமே.

ஒரு சிறிய நற்செய்தி. நான் நேற்றுடன் 1000 மணிநேர வாசிப்பு சவாலை நிறைவு செய்தேன். மகிழ்ச்சியும், உற்சாகமும் என்னை நிறைத்தது. ஏதோ சாதனை போலவே உணர்ந்தேன். என்னை நினைத்து பெருமிதம் கொண்ட மிக ச் சில தருணங்களில் ஒன்று. 
இதற்கான முழுமுதல் காரணம் நீங்கள். சென்ற வருடம் இச்சவாலை தொடங்கி வைத்து ஏராளமான ஆட்களை இதில் பங்குபெற செய்திருக்கிறீர்கள். 
    இச்சவால் இல்லாமலும் வாசிப்பவள் தான் நான் என்றாலும் இத்தனை மணி நேரத்தை இவ்வளவு முனைப்புடனும் ஒருங்கிணைப்புடனும் வாசித்திருக்க முடியாது என்றே கருதுகிறேன். உதாரணமாக இதற்குமுந்தைய  வருடம் நான் வாசித்த புத்தகங்கள் சுமார் 50-55. இந்த வருடம் அது இரு மடங்காகி இருக்கிறது.
  
 இந்த மாதிரி  சிறு சிறு இலக்குகள்தான்  வாழ்க்கையை மேலும் சுவாரஸ்யபடுத்துகின்றன. ஒரு சிறிய இலக்கை எய்தும்போது நிறைவு. பிறகு அடுத்த இலக்கு.இது ஒரு காந்திய வழியும் கூட. நம் சலிப்புற்ற அன்றாடத்தை சுவையூட்டுபவை இவையே என  நினைக்கிறேன்.  இந்த மடைமாற்றத்தை ஏற்படுத்தி தந்த உங்களுக்கு என் நன்றி.
    வெளிநாடு [3 பயணங்கள்] , சொந்த ஊர் சென்ற நாட்கள் தவிர பிற அனைத்து நாட்களும் வாசித்திருக்கிறேன்.

      இப்போது தற்சமயம் இதிலிருந்து விலகுகிறேன். பிறகு அடுத்த சவாலில் இணைந்து கொள்கிறேன். சில தனிப்பட்ட முயற்சிகள் செய்யப் போகிறேன். அதில் வெற்றி பெறும் பட்சத்தில் உங்களுக்கு அறிவிப்பேன்.

    சாந்தமூர்த்தி சார்  இரண்டாயிரத்தை நெருங்கப் போகிறார்.  ஒரு அசுர  சாதனை. அவருக்கு என் வணக்கமும் வாழ்த்தும். 

    ஓட்டத்தில் பங்கு பெறும் பிற அனைத்து வாசக நண்பர்களுக்கும் என் அன்பும் , வாழ்த்தும்.

வாசித்த புத்தக பட்டியல் அந்த அட்டவணையிலேயே இருக்கிறது.வேண்டுமென்றால் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
அன்புடன், 

அருண்மொழி நங்கை.

அன்புள்ள அருணா அக்கா, 

ஏப்ரல் பதினாலு வந்தால் சவால் தொடங்கி ஒரு வருடம் நிறைவுறுகிறது. நான் இதை தொடங்கிய போது சராசரியாக நம்மால் நாளுக்கு மூன்று மணிநேரம் வாசிக்க முடிந்தால் ஒரு வருடத்தில் 1000 மணிநேரத்தை கடக்க முடியும் என நம்பினேன். உங்கள் விஷயத்தில் அது சரியாகவே நடந்திருக்கிறது. அதற்கு முன்னரே வெற்றிகரமாக இந்த சவாலில் வென்றுள்ளீர்கள். சாந்தமூர்த்தி அவர்களுக்கு பின்னர் இரண்டாவாதாக நிறைவு செய்திருப்பவர் நீங்களே. அதற்காக உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 

இதை தொடங்கிய நான் இன்னும் ஐநூறு மணிநேரங்களை தொடவில்லை. நண்பர்கள் சுரேஷ் பிரதீப், லாவண்யா, பாலசுப்பிரமணியன், சரவணக்குமார், ராதா மற்றும் கமலதேவி  ஆகியோர் ஐநூறை கடந்து விட்டிருக்கிறார்கள். அதை விட சாந்தமூர்த்தி ஒரு ஆயிரம் முடித்து இரண்டாவது ஆயிரத்தை நிறைவு செய்து, சின்ன பயக்கலா ஆருகிட்ட என மார்தட்டி கொண்டிருக்கிறார்.  நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

இதில் பங்கு பெற்ற அனைவருக்கும் ஏதோ ஒருவகையில் பலனளித்திருக்கும் என நம்புகிறேன். தொடக்க நிலையில் விட்டவர்களுக்கு தங்கள் வாசிப்பின் குவியமின்மையை காட்டியிருக்கும். பலருக்கு தங்கள் ஆற்றல் மற்றும் கவனம் கூடியிருக்கிருப்பதை உணர முடியும். ஒரு பழக்கமாக வெவ்வேறு சூழலுக்கு இடையே வாசிக்க உதவியிருக்க கூடும். ஏதோ ஒருவகையில் எல்லோருக்கும் இது உதவியிருக்கும் என நம்புகிறேன். இந்த யோசனை என் வழியாக விதைக்கப்பட்டது என்பதில் சிறிய பெருமிதமும் மகிழ்ச்சியும் கொள்கிறேன். 
அடுத்து நீங்கள் தொடங்க விருக்கும் பணிக்கும் வாழ்த்துக்கள். 

சாந்தமூர்த்தி அவர்கள் தன வலைப்பூவில் அருண்மொழி அக்காவை  வாழ்த்தி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் இந்த போட்டியின் ஒரு சம்மரி இருக்கிறது. நண்பர்கள் வாசிக்க வேண்டும். 

கீழே அருண்மொழி நங்கை வாசித்த புத்தகங்களின் பட்டியல் உள்ளது. மொத்தம் நூற்றி பதிமூன்று நூல்கள். சில ஆங்கில நூல்கள், கணிசமான மொழியாக்க கிளாசிக்குகள், மறுவாசிப்புகள், வளரும் எழுத்தாளர்களின் ஆக்கங்கள், தமிழ் கிளாசிக்குகள் என பரந்துபட்ட வகையில் அமைந்திருக்கிறது. 

இந்த கொரோனா காலத்தில் நண்பர்கள் வாய்ப்பிருக்கும் போதெல்லாம் ஆக்கப்பூர்வமாக வாசிக்க வேண்டும் என கோருகிறேன். 


1.கான்சாகிப்-சிறுகதைதொகுப்பு-நாஞ்சில் நாடன்
2.பஷீர் நாவல்கள்- மறுவாசிப்பு
3.எழுதாப்பயணம்-லக்‌ஷ்மி பாலக்ருஷ்ணன்
4.புனைவும் நினைவும்-சமயவேல்
5.மண்ணும் மனிதரும்-சிவராம காரந்த்-மறு வாசிப்பு
6.கோரா- டாகூர்
7.என் சரித்திரம்-உ.வே.சா
8.வெளிச்சமும் வெயிலும்-சிவா க்ரிஷ்ணமூர்த்தி
9.பிராது- கண்மணி குணசேகரன்
10. ஒற்றன் -அசோகமித்ரன் மறுவாசிப்பு
11.சுபிட்ச முருகன் -சரவணன் சந்திரன்
12.பச்சை நரம்பு-அனோஜன் பாலக்ரிஷ்ணன்
13.கரைந்த நிழல்கள்-அசோகமித்ரன் -மறு வாசிப்பு
14.18 வது அட்சக்கோடு-அசோகமித்ரன்
15.உருமால் கட்டு-சு. வேணுகோபால்
16.புதிய ஜார்- சாம்ராஜ்
17.சீர்மை-அர்விந்த் கருணாகரன் மறு வாசிப்பு
18.பிரபல கொலைவழக்குகள்-சொக்கலிங்கம்
19.எனது தேசத்தை மீளப்பெறுகிறேன் -ஆப்பிரிக்க உலக சிறுகதைகள்
20.எஞ்சும் சொற்கள்-சுரேஷ் ப்ரதீப்
21.வண்ண கழுத்து-தன்கோபால் முகர்ஜி
22.நிழலின் தனிமை-தேவி பாரதி
23.யுகாந்தா- ஐராவதி கார்வே
24.குவெம்புவின் சிறுகதைகள்-கன்னட சிறுகதைகள்
25. outlaw- by roy maxham
26.வனவாசி-விபூதிபூஷன்
27. அக்னி நதி- குல் அதுல் ஐன் ஹைதர் மறுவாசிப்பு
28. தம்மம் தந்தவன் -விலாஸ் சாரங்
29.பௌத்தத் தத்துவ இயல் -ராகுல் சாங்கிருத்யாயன்
30.இன்று- அசோகமித்ரன்
31.இனி நான் உறங்கட்டும்- பி.கே.பாலகிருஷ்னன்
32.பங்கர்வாடி-வெங்கடேஷ் மாட்கூல்கர்
33.கலாதீபம் லொட்ஜ்- வாசு முருகவேல்
34.கன்னி- ஃப்ரான்சிஸ் கிருபா
35.ஒரு குடும்பம் சிதைகிறது- எஸ்.எல். பைரப்பா
36.LIFE ON EARTH- DAVID ATTENBOROUGH
37.புத்தரின் புகழ்மிகு வாழ்க்கை- ஆர்தர் லில்லி
38.Sidhartha- Herman Hesse
39.இரண்டாம் இடம்-எம்.டி.வாசுதேவன் நாயர்
40. மானசரோவர்- அசோகமித்ரன்
41.நரசிம்மராவ்-இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி-வினய் சீதாபதி
42.காந்தி வாழ்க்கை-லூயி ஃபிஷர்
43.Fontamara-Ignazio silone
44.பாரிஸுக்கு போ- ஜெயகாந்தன்
45.தீயின் எடை- ஜெயமோகன் -30 அத்யாயங்கள்
46.அவரவர் பாடு- க.நா.சு
47.புனலும் மணலும்-ஆ.மாதவன்
48. மனோதிடம்- பன்னாலால் படேல்[ குஜராத்தி நாவல்]
49.கசாக்கின் இதிகாசம்-ஓ.வி. விஜயன் தமிழில்-யூமா.வாசுகி
50.ஒற்றை வைக்கோல் புரட்சி-மசானபு ஃபுகுவோகா
51.நீலகண்ட பறவையைத்தேடி-அதீன் பந்தோபாத்யாய-வங்க நாவல்- மறு வாசிப்பு
52.யுகாதி -கன்னட சிறுகதைகள்-நஞ்சுண்டன்
53. வேங்கைச் சவாரி- விவேக் ஷன்பாக்
54. யாமம்- எஸ். ராமகிருஷ்ணன்
55.சில நேரங்களில் சில மனிதர்கள்- ஜெயகாந்தன்
56.பயணக்கதை-யுவன் சந்திரசேகர்
57.சிலுவைராஜ் சரித்திரம்-ராஜ் கௌதமன்
58.குள்ள சித்தன்சரித்திரம்-யுவன் சந்திரசேகர்-மறு வாசிப்பு
59.நீல கண்டம்-சுனில் கிருஷ்ணன்
60..ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை-ஸொராண்டினோ-தமிழில் எம்.எஸ்
61. நிலாக்கள் தூர தூரமாக-பாரத தேவி
62.தக்கர் கொள்ளையர்கள்-வரதராசன்
63. தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்-மாரி செல்வராஜ்
64. ஏற்கனவே-சிறுகதை தொகுப்பு-யுவன் சந்திரசேகர்
65. நான்,சரவணன்வித்யா-லிவிங் ஸ்மைல் வித்யா
66.கானுறை வேங்கை- கே. உல்லாஸ் கரந்த்
67. தென்னாப்பிரிக்காவில் காந்தி-ராம சந்திரகுஹா
68.இன்றைய காந்திகள்- பாலசுப்ரமணியம் முத்துசாமி
69.பேய்ச்சி- நாவல்- ம.நவீன்
70.அங்கே இப்ப என்ன நேரம்- அ.முத்துலிங்கம். மறுவாசிப்பு
71. எனது இந்தியா- ஜிம் கார்பெட்- தமிழில் யுவன் சந்திரசேகர்
72. அனல் ஹக்- பஷீர்- தமிழில் யூசுப்
73.மீஸான் கற்கள்-புனத்தில் குஞ்ஞப்துல்லா-தமிழில் யூசுப்
74. ஆப்பிளுக்கு முன் - சரவண கார்த்திகேயன்
75. சுமித்ரா-கல்பற்றா நாராயணன்
76.கஸ்தூரி திலகம்-பரணீதரன்
77.போயாக்- ம. நவீன்
78..ராஜீவ் கொலைவழக்கு- ரகோத்தமன்
79.சதுரங்க குதிரைகள்-ஹிந்தி நாவல்- கிரிராஜ் கிஷோர்
80.ஒளி- சுசித்ரா
81.கூண்டுக்குள் பெண்கள்-விலாஸ் சராங்-சீனிவாசன்
82. மண்டை ஓடி- ம.நவீன்
83. நீல கண்டம்-சுனீல் கிருஷ்ணன் -மறு வாசிப்பு
84.களிற்றியானை நிரை-ஜெயமோகன் -25 அத்யாயங்கள்
85.கொல்லப்படுவதில்லை- வங்க நாவல்-மைத்ரேயி தேவி
86.காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை- ரா. கிரிதரன்
87.எழுதித் தீராப் பக்கங்கள்- செல்வம் அருளானந்தம்
88. பிறகு- நாவல்- பூமணி
89. வெக்கை- நாவல்- பூமணி
90.சொற்களில் சுழலும் உலகம்- செல்வம் அருளானந்தம்
91.அகதி- சா. ராம்குமார்
92.பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ- அ.கா. பெருமாள்
93.மனை மாட்சி-எம்.கோபால க்ரிஷ்ணன்

94.வெளியேற்றம்-யுவன் சந்திரசேகர்

95. இறுதி யாத்திரை- எம்.டி. வாசுதேவன் நாயர்
96.பிரேம்சந்த் சிறுகதைகள்- தமிழாக்கம் சௌரி
97. கொங்கு தேர் வாழ்க்கை- நாஞ்சில் நாடன்

98. Mirror images- novel by Linda grey sexton

99.விழித்திருப்பவனின் கனவு- கே.என். செந்தில்
100.உப்பு வேலி-ராய் மாக்ஸம்- தமிழில் சிரில் அலெக்ஸ்
101.பதிமூணாவது மையவாடி- நாவல்- சோ. தர்மன்

102.தஞ்சை சிறுகதை பட்டறைக்கான சிறுகதைகள்

103.அசோகமித்திரன் சிறுகதைகள்-தொகுதி 1
104. என் கதை- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை
105. வானமே எல்லை-கேப்டன் கோபிநாத்
106. கங்கை எங்கே போகிறாள்- ஜெயகாந்தன்
107.ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்- ஜெயகாந்தன்

108.ஆங்காரம்-நாவல்- ஏக்நாத்
109.திருநங்கையர்-சமூக வரைவியல்- பத்மபாரதி
110.சோளகர் தொட்டி- பாலமுருகன் -நாவல்

111.இருபது வருஷங்கள்- நாவல்-எம்.எஸ்.கல்யாணசுந்தரம்
112.ஜெயகாந்தன் குறுநாவல்கள்- தொகுதி ஒன்று

113.நான் பூலான் தேவி- மரிய தெரஸ்கூன், பால் ராம்பாலி