மூன்று சிறுகதைகளை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டோம். துரை அறிவழகனின் 'வண்டித்தாத்தாவும் சொரூபராணியும்' ச. பிரபாகரனின் 'ஒளிந்திருக்கும் வானம்' மற்றும் ஜெயமோகனின் 'வரம்'. துரை அறிவழகன் காரைக்குடியில் வசிப்பவர் சிற்றிதழ் சூழலில் இயங்கியவர். உடல் நலம் மீண்டு இயங்கத்தொடங்கியுள்ளார். நினைவொடைத்தன்மை கொண்ட அவருடைய கதை நகர்வு இணைய இதழில் வெளிவந்தது. ச. பிரபாகரன் உருவாகிவரும் இளம் கவி. அரூ போட்டியில் பங்குகொண்டு இறுதி சுற்றுக்கு தேர்வான கதையை விவாதித்தோம். கவித்துவமான மொழியில் எழுதப்பட்ட டிஸ்டோபிய அறிவியல் புனைவு. இவர்கள் இருவருமே மரப்பாச்சியில் பங்களிக்கும் எழுத்தாளர்கள்.
ஜெயமோகனின் கரோனா கால நூறுகதைகளில் இறுதி கதை 'வரம்'. வாழ்க்கைபாதையை தடம் மாற்றும் மந்திரகணத்தை சொல்லும் அபாரமான கதை. இரண்டு கதைகளை நினைவுபடுத்தின. ஒன்று யுவன் சந்திரசேகரின் 'நச்சுப்பொய்கை'. அவருடைய சிறந்த கதைகளில் ஒன்று. உடைந்து விழும் மனிதர்களை தொட்டு மீட்கும் மாயக்கணங்களால் நிறைந்த கதை. 'தர்மன் தான் விரும்பிய வரத்தைக் கேட்ட சப்த அதிர்வில்,அதுவரை நஞ்சாய் இருந்த பொய்கையின் நீர் குடிதண்ணீராய் மாறியதல்லவா? அந்த மந்திரக் கணம் அப்போதைய கணம் மட்டும்தானா,இல்லை கடந்து போகும் எல்லாக் கணங்களுமே மந்திர கணங்கள்தானா?' எனும் வரியே 'வரம்' இத்தகைய ஒரு அமானுட கணத்தை உருவாக்கிக்காட்டுகிறது. இரண்டு கதைகளின் தரிசனமும் ஒன்றே. இரண்டாவது கதை நாஞ்சில் நாடனின் 'பூனைக்கண்ணன்'. ஒரு திருடன் சித்தனாக ஆகும் கதை என சொல்லலாம். பூனைக்கண்ணன் கதையில் சித்தரிக்கப்படும் வழிபாடற்ற கோயில், இழிந்த நிலையில் உள்ள பூசகர், திருடனின் துணைகொண்டு தெய்வம் ஆற்றலை அடைவது என பலபொதுத்தன்மையும் தொடர்ச்சியும் இவ்விரண்டு கதைகளுக்கு இடையே உள்ளன. ஒரு வகையில் பூனைக்கண்ணனுக்கு எழுதப்பட்ட ட்ரிப்யூட் கதையாக 'வரம்' கதையை வாசிக்க முடியும். பூனைக்கண்ணன் விக்கிரகத்தை களவாடிச்செல்லும் திருடன் அறியமுடியாத விசைகளால் ஆட்கொள்ளப்பட்டவனாக கொண்டு போய் சேர்க்க வேண்டிய இடத்திற்கு சேர்க்காமல் எங்கோ மலையடிவாரத்திற்கு செல்கிறான். கதையின் இறுதியில். அம்மன் உரையாடுவது அவனால் மட்டுமே கேட்கமுடிகிறது. 'பூனைக்கண்ணன் அம்மனிடம் ஒருநாள் கேட்டான். “கெட்டவன்னு தெரிஞ்சும் தண்டிக்கலேன்னா நீயெல்லாம் என்ன சாமி?”அம்மன் சொன்னாள் “நல்லவன்னா யாரு? கெட்டவன்னா யாரு?”“போட்டி, புத்திகெட்டவளே” என்றான் பூனைக்கண்ணன். முற்றிலும் மறைஞானத்தன்மை கொண்ட முடிவு.
எது 'வரம்'? அதை யாருக்கு யார் அளிப்பது? இரண்டு கேள்விகளை கேட்டுக்கொள்ளலாம். மேப்பலூர் ஸ்ரீ மங்கல பகவதி பார்கவன் போற்றியின் மகள் ஸ்ரீதேவிக்கு அளித்ததாக நம்பும் வரம். அவளை மரணத்தின் விளிம்பிலிருந்து காக்கிறது. வாழ்வை மீட்டு அளிக்கிறது. மேப்பலூர் பகவதி வழியாக திருடன் ஸ்ரீதேவிக்கு அளித்த வரம் என்பது மற்றொரு வாசிப்பு. ஸ்ரீதேவி நிமிர்ந்து கோயிலை புனரமைத்து பகவதியை மீண்டும் ஆற்றல் கொண்டவளாக நிறுவுகிறாள். கடவுளுக்கு ஸ்ரீதேவி அளித்த வரம். அல்லது ஸ்ரீதேவி வழியாக கடவுளுக்கு திருடன் அளிக்கும் வரம். எது வரம்? எனும் கேள்விக்கு கதையின் இறுதிவரியை பதிலாக கொள்ளலாம். 'அந்த வீட்டிலிருந்து தடமே இல்லாமல் நீங்கும்போது அந்த துயர் நிறைந்த முகத்தில் உலர்ந்த உதடுகளில் அவன் ஒரு முத்தமிட்டிருந்தான்.' அந்த முத்தம் தான் வரம். நல்லூழின், காலத்தின், கனிந்த கடவுளின் முத்தம். காளிதாசனின் நாவில் காளியின் விரல்நுனி தொடுகை நிகழ்ந்த மாயக்கணத்திற்கு இணையானது. கதையில் உறங்கும் இளவரசியை போல் நைந்த நிலையில் உறங்கும் ஸ்ரீதேவியின் உதடுகளில் பதிந்த முத்தமும் பொன்னொளியில் முழுதணிகோலத்தில் நள்ளிரவில் பகவதி ஸ்ரீதேவிக்கு காட்சியளிக்கும் தருணமும் வாழ்நாள் முழுக்க மீட்டுக்கொள்ளத்தக்க அக காட்சி.
பஷீரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பற்றி எம்.டி.வி குறிப்பிடுகிறார். வடநாட்டில் பணத்தை பறிகொடுத்த பஷீர் கொடுக்க பணமில்லாமல் உண்ட குற்றத்துக்காக அவமதிக்கப்படுகிறார். ஆடைகளை களையச்சொல்கிறார்கள். உண்டுக்கொண்டிருந்த மற்றொருவன் அவருக்காக பணம் கொடுக்கிறான். கொடுத்தவன் அவரை அழைத்துக்கொண்டு போய் இதில் எது உங்கள் பணப்பை என பார்த்து எடுத்துக்கொள்ளவும் என சொல்கிறான். ஜெ இந்த கதையில் பஷீரிய கனிவை நோக்கி செல்கிறார். எனினும் இந்த கதை திருடன் மனம் நெகிழ்ந்த மானுட நேய கதை மட்டும் இல்லை. பிற கதை ஆசிரியர்களின் நீட்சியாக வரும் ஜெயமோகன் வேறுபடுவது துலக்கமாக தெரிவது திருடனின் சித்தரிப்பில் தான். உண்மையில் யாரந்த திருடன்? கதை இப்படி தொடங்குகிறது 'திருடனுக்கு எல்லாம் தெரியும் ஏனென்றால் அவன் தன்னந்தனிமையானவன், மறைந்திருப்பவன். அவனை எவரும் பார்க்கமுடியாது. அவன் மிகக்கூர்மையாக பார்த்துக்கொண்டிருக்கிறான். அவனுக்கு எவருடனும் உறவில்லை. அவனை அனைவரும் எவ்வகையிலோ நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.' கதை முழுக்க திருடனுக்கென ஒரு ஆளுமையோ தோற்றமோ துலங்கிவரவே இல்லை. நீல கைலியும் சாம்பல் சட்டையும் அணிந்து நிழலோடு நிழலாக கலந்து விடுபவனாக திகழ்கிறான். கதை முடிவில் கூட அவன் தடமேயில்லாமல் நீங்குபவன் என குறிப்பிடப்படுகிறான். எங்கும் நிறைந்த யாவற்றுக்கும் சாட்சியாய் உள்ள எதனுடனும் உறவுகொள்ளாத ஒன்று நம் மரபில் உண்டு. கண்ணன் கரியவன், கள்ளன். இந்த வரிசையிலேயோ வருக்கை கதையில் கண்ணனின் சாயல் கொண்ட கள்வன் வருகிறான். வேதாந்தத்தில் திருடன் முக்கியமான உருவகம். அருகே புதையல் உண்டு என அறிந்த திருடனின் விழிப்புடன் வேதாந்தி திகழ வேண்டும் என சொல்லப்படுவதுண்டு. இந்த கதைக்குள் அல்லது பொதுவாக இந்த கதைகளுக்குள் ஊடுபாவாக கிடக்கும் வேதாந்த மெய்யியல் நோக்கு கதையை ஆழங்களுக்கு கொண்டு செல்கிறது.