Sunday, November 30, 2014

காவியத்தலைவன் - ஒரு அனுபவம்

மாபெரும் வீழ்ச்சிகளுக்கும் தோல்விகளுக்கும் இயல்பாகவே ஒரு காவியத்தன்மை வந்துவிடுகிறது. வெற்றி நம்மை நிலைகுலைய செய்கிறது. அது நிச்சயமற்றது என எண்ண செய்கிறது. இன்றில்லை என்றாலும் என்றேனும் ஒருநாள் வீழ்வோம் எனும் அச்சம் நம்மை துரத்துகிறது. வீழ்ச்சியில் தான் மனிதன் அமைதி கொள்கிறான் என கூட தோன்றுவதுண்டு. வீழ்ச்சி எத்தனைக்கு எத்தனை உயரத்திலிருந்து நிகழ்கிறதோ அத்தனைக்கு அத்தனை மாபெரும் காவியமாகிறது. உலகின் மாபெரும் காவியங்களும் பேரிலக்கியங்களும் வீழ்ச்சியின் ஆழத்தையும் அதை மீறி எஞ்சும் மானிட வாழ்வை பற்றி பேசுவதாகவே இருக்கிறது. 

Saturday, November 22, 2014

நம்பிக்கை மனுஷிகள் ஆவணபடம் குறித்து

பிரியத்துற்குரிய வானவன் மாதேவி - இயலிசை வல்லபி சகோதரிகள் குறித்து கீதா இளங்கோவன் அவர்கள் நம்பிக்கை மனுஷிகள் எனும் தலைப்பில் பதினான்கு நிமிட ஆவணப்படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். அக்கறையுடன் அவர்களின் வாழ்வை ஆவண செய்ய முற்பட்டதற்கும் அதை நிறைவாக செய்ததற்கும் அவருக்கும் அவருடைய குழுவிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். மிக முக்கியமாக இத்தகைய ஆவணப்படங்களில் எங்கிருந்தோ ஒரு மெல்லிய துயரசாயல் வந்துவிடும் (பெரும்பாலும் பின்னணி இசையில் அது உருவாகிவிடும்) ஆனால் இதில் அவர்களை இயல்பாக படமாக்கியிருப்பது மிக சிறப்பு. அவர்களின் சிரிப்பே அவர்கள் வாழ்க்கையின் செய்தியாகிறது. அதுவே நம்பிக்கை மனுஷிகள் எனும் தலைப்பிற்கு நியாயம் செய்வதாகும்.


https://www.youtube.com/watch?v=svH7fYOOnE4

Monday, November 3, 2014

ஆயுர்வேத நூல் குறித்து

ஆயுர்வேதம் குறித்து மருத்துவ தகவல்கள் இல்லாத ஒரு நூலை எழுத வேண்டும் எனும் எண்ணம் கொஞ்ச காலமாகவே எனக்கு உண்டு. மதிப்பிற்குரிய ஆசிரியர் டாக்டர்.மகாதேவன் அவர்களின் தூண்டுதலின் பேரில் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் அதை எழுத ஒப்புக்கொண்டேன். அடிப்படை கோட்பாடுகள் குறித்தான அறிமுகம், ஒட்டுமொத்த வரலாற்று பரிணாமம்,  மருத்துவ அறம், உவமைகள் - படிமங்கள், மரண குறிகள், தொன்மங்கள், நவீன காலத்தில் ஆயுர்வேதம் சந்திக்கும் சிக்கல்கள், சமூகத்துடனான அதன் உறவு  என இன்னின்ன பேசுபொருள் இருக்க வேண்டும் எனும் அடிப்படைகளை வகுத்துக்கொண்டு தேவையானவற்றை தேடி தேடி வாசிக்க துவங்கினேன்.

மேற்கூறிய விஷயங்கள் குறித்து சில கருத்துக்களும் புரிதல்களும் உண்டு, அதையே விரித்து எழுதிவிட முடியும் எனும் அசட்டு அதீத தன்னம்பிக்கை இருந்திருக்கிறது என்பதை இப்போது எண்ணினால் கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது. தினமும் ஐந்து பக்கங்கள் எழுதினால் கூட நாற்பது நாட்களில் புத்தகத்தை முடித்துவிடலாம். நவம்பர் மாத இறுதிக்குள் புத்தகத்தை முழுவதுமாக முடித்து கொடுக்க முடியுமா என கேட்டிருந்தார் டாக்டர். மகாதேவன் 

இத்தனை ஆண்டுகளாக புழங்கிகொண்டிருந்த புத்தகங்கள் தான் ஆனால் இப்போது வாசிக்கையில் முற்றிலும் புதிதாக இருக்கிறது. இவைகளை எல்லாம் நான் கவனித்ததே இல்லை என்பது அப்போது தான் உரைக்கிறது. நான் எடுத்துக்கொண்ட தலைப்புகள் அவ்வளவாக எவராலும் தீண்டபட்டிருக்காது என்று வேறு நம்பிகொண்டிருந்தேன். ஆனால் நவீன மேற்கத்திய இந்தியவியல் ஆய்வாளர்கள் இதில் எத்தனை தூரம் பயணித்திருக்கிறார்கள் என்றறிய வந்த போது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. 

ஆயுர்வேத ஆய்வுகள் இருவகையிலானவை. ஒன்று நிருபனவாத அறிவியல் சட்டகத்திற்குள் ஆயுர்வேத சிகிச்சை முறைகளை கொண்டு வரும் முயற்சிகள். மற்றொன்று வரலாற்று சமூகவியல் கோணத்தில் அணுகும் ஆய்வுகள். முந்தைய ஆய்வுமுறைக்கு அதிக நிதியுதவி கிட்டுகிறது, பரவலாக செய்யபடுகிறது, ஆனால் அதன் நம்பகத்தன்மை குறித்து ஆயுர்வேத மருத்துவர்களும் நவீன ஆய்வாளர்களும் ஐயப்பட்டுகொண்டே தானிருக்கிறார்கள். பிந்தைய வகைப்பாட்டின் ஆய்வுகள் குறித்து ஆயுர்வேத மருத்துவர்கள் கூட பரிச்சயமின்றி இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். ஒருகால் புத்தகம் எழுத வேண்டியது இல்லை என்றால் எனக்கும் கூட இவ்வறிமுகம் சாத்தியமாகி இருக்காது. 

ஆயுர்வேதத்தின் நவீன கால சிக்கல்கள் குறித்து பேசவேண்டும் என்றால் காலனிய தாக்க நீக்கம் குறித்து பேச வேண்டும். காலனியம் மரபறிவு தொடர்ச்சியை எப்படி துண்டித்தது? அதுவரை அரச மருத்துவமாக இருந்த ஆயுர்வேதம் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஆதரிக்கப்பட்ட நவீனமருத்துவத்தை  எப்படி எதிர்கொள்கிறது? எப்படி தன்னை தகவமைத்து கொள்கிறது? அதற்கு முன்னர் செவ்வியல் மருத்துவமாக திகழ்ந்த ஆயுர்வேத மருத்துவம் நாட்டு மருத்துவத்துடன் கொண்ட உறவு எத்தகையது? போன்ற கேள்விகளுக்கு விடை காணவேண்டும்.

ஆயுர்வேதம் ஒரு உறைந்த அறிவியல், மூத்தோர் சொல் எனும் நம்பிக்கை ஆயுர்வேத ஆர்வலர்களால் அதன் பெரும் தகுதியாக முன்வைக்கபடுகிறது ஆனால் அதையே விமர்சகர்கள் திருப்பி சொல்லி அது அறிவியல் அடிப்படை அற்றது என்கிறார்கள். உண்மையில் நூற்றாண்டுகளாக எத்தகைய மாற்றங்கள் அதில் நிகழ்ந்துள்ளன? கலாசார தாக்கங்கள் எவை? அறிவியல் அடிப்படை அற்றது தானா? போன்ற கேள்விகளுக்கு மிக விரிவாக வாசிக்க வேண்டியதாய் இருக்கிறது. எளிய நம்பிக்கைகளை விடையாக சொல்லிவிடக்கூடாது என்பதில் திடமாக இருக்கிறேன். ரசவாதம், பவுத்தம், சமணம், வேதம், தாந்த்ரீகம், சீன - கிரேக்க மருத்துவம், இந்திய மெய்யியல் என ஒன்று மற்றொன்றிற்கு இட்டுசென்றவண்ணம் இருக்கிறது. 

ஒட்டுமொத்தமாக இதற்கான உழைப்பை ஒவ்வொரு கணமும் ழுவதுமாக அனுபவித்து ரசிக்கிறேன், கற்றபடி இருக்கிறேன். இதன் விரிவு பிரமிப்பை அளிக்கிறது.  புனைவுகளுக்கான கருவும் கிட்டிய படியேதான் இருக்கிறது. இந்தியவியலை ஒட்டுமொத்தமாக அறிந்தாலொழிய நான் விரும்பும் தரத்தில் நூலை உருவாக்க முடியாது என்றுணருகிறேன். மிக அதிகமாக வாசித்து களிக்கும் நாட்கள் இவை. மனம் முழுக்க வாசித்தவைகளால் ததும்பி திளைத்து கொண்டிருக்கிறது காந்தியே கூட மனதின் ஒரு மூலையில் சுருண்டுகொண்டுவிட்டார். திட்டமிட்டபடி நூலை இம்மாதத்திற்குள் முடிக்க முடியாது. குறைந்தது மூன்று நான்கு மாதங்கள் ஆகலாம். அல்லது அதற்கு மேலும் ஆகலாம். நான் எண்ணிய தரத்தில் புத்தகத்தை எழுதிவிட முடியும் எனும் நம்பிக்கை மெல்ல துளிர்க்கிறது. ஒருகால் அப்படி எழுதமுடியாமல் போனாலும் ஒன்றும் பாதகமில்லை.