பலநேரங்களில் நம்மை ஏன் மற்றொருவர் ஆள வேண்டும் எனும் வினா மனதில் கடும் அமளியை ஏற்படுத்துவதுண்டு ,ஒரு தேசம் என்பது சமூகங்களின் தொகுப்பு ,சமூகங்களோ குடும்பங்களின் தொகுப்பு ,குடும்பங்கள் தனிமனிதர்களின் தொகுப்பு .இந்த புரிதலில் அமிழ்ந்தோம் எனில் நமக்கு புரிவது தேசம் என்பது பல சமூகங்கள் ,குடும்பங்கள் ,தனிமனிதர்களின் கூட்டு சாத்தியம் .அதே போல் ஒவ்வொரு தனிமனிதனும்,சமூகமும்,குடும்பமும் சிறு சிறு தேசங்களே .தேசத்தை நிர்வகித்தல் என்பது இவை அனைத்தையும் நிர்வகித்தல் ,ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை நிர்வகித்தால் தேசமே நிர்வகிக்கப்படும் ,இது ஏற்கனவே உள்ள கோட்பாடுகள் தான்
சுதந்திரம் என்பது என்ன ? பல சமயங்களில் மூளை முறுக்கி சிந்தித்ததுண்டு .நாம் முற்றிலும் சுதந்திரமாக இயங்க முடியுமா ? உயிர்கள் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்பவை ,சுதந்திரம் என்பது ஒரு வித மாயை ,வண்டலூர் மிருககாட்சி சாலையினுள் சுத்தி திரியும் புலியை போல் நாம் ,நமது உலகம் வண்டலூர் மட்டும் என்று எண்ணுவதால் வரும் குழப்பம் ,independence அல்ல interdependence என்பதே பிரபஞ்ச நியதி .
தன்னை தானே நிர்வகிக்கும் தனிமனிதர்கள் கொண்ட சமூகம் பிறக்கும் பொழுது அரசின் தேவை நமக்கு இல்லை ,இதையே அரசின்மை வாதம் முன்வைக்கிறது ,அத்தகைய நிலையை நாம் எட்டும் வரை அதிகாரமும் அராசங்கமும் மந்தையை கவனித்து ஆக வேண்டும்
சரி இதெல்லாம் இருக்கட்டும் ,இனி தமிழகத்தில் தேர்தல் திருவிழா .தேர்தல் எனும் ஒரு நாள் கூத்திற்கு செலவழிக்க படும் தொகை எவளவு தெரியுமா ? ஒரு தொகுதிக்கு ஆளும் கட்சி .எதிர் கட்சி ,உதிரி கட்சி ,அரசு எல்லாரும் செலவழிப்பது தொரயாமாக குறைந்தபட்சம் பத்து கோடிகள் அல்லது அதற்கு மேல் செலவு ஆகலாம் .அப்படியானால் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்காக 2340 கோடிகள் ஒரே நாளில் விரயமாகப்போகிறது ,இறுதியில் யார் அதிகம் செலவு செய்தார்களோ அவர்களை மக்கள் வெற்றி பெற செய்கின்றனர் .மாதம் முப்பதாயிரம் சம்பளம் வாங்கும் அரசு ஊழியன் ,அல்லது ஆசிரியர்,மென்பொருள் நிறுவனத்தார் இவர்கள் யாரும் செலவு செய்ய துணியாத ஒரு தொகையை அதே முப்பதாயிரம் சம்பளமாக பெரும் ஒரு மக்கள் பிரதிநிதி அந்த பதிவிக்காக தன சம்பாத்தியத்தை விட மூவாயிரம் மடங்கு செலவழிக்க தயாராக இருக்கிறார் எனில் அவர்களுடைய நோக்கம் எத்தகையது என்பதை நாம் அறிய வேண்டும் .
இதிலே மக்கள் சேவை எங்கிருந்து வரும் ?மக்களை கவனிப்பாரா அல்லது போட்ட காசை திருப்பி மீண்டும் அடுத்த தேர்தலுக்கு காசை பிரட்ட முயல்வாரா ?
மக்கள் சேவை எனும் முகமூடி அணிந்து நம் முன் கட்சி கொடிகளை ஏந்தி வரும் இவர்களுக்கு நாமும் வேறு வழி இல்லாமல் ஒட்டு போடுகிறோம் ,இவருக்கு அவர் மேல் அவருக்கு இவர் மேல் இதுவே நம் ஓட்டை நிர்ணயிக்கும் சக்தி !
யார் ஒருவர் தன சக்திக்கு மீறி காசை இறைக்கிராரோ அவருக்கு வேறு நோக்கம் உள்ளது என்பதை அறிந்து ,இத்தகைய வேட்ப்பாளர்களை கட்சி ,ஜாதி சார்பின்றி புறக்கணிக்க வேண்டும் .யார் மிக குறைவாக செலவழித்து அதே சமயம் நிறைவாக நமக்காக குரல் கொடுப்பார் என்று தோன்றுகிறதோ அவர் சுயேட்சையாக இருந்தாலும் சரி அவர் வெல்ல மாட்டார் என்றாலும் சரி -அவருக்கு தான் நமது ஒட்டு போய் சேர வேண்டும் .
இதுவே மெய்யான ஜனநாயகத்தின் செயல்பாடு .நாம் ஒட்டு போட்டவர் வெல்வதும் தோற்பதும் அல்ல ,நாம் சரியான மனிதருக்கு வாக்களித்தோம் எனும் மன நிறைவே இங்கு முக்கியம் .இது ஒரு இயக்கமாக நம் மக்கள் முன் மலர வேண்டும் .அப்படி மலர்ந்தால் ஒழிய தேர்தல் நேர அதீத காசு மழை நிற்காது .ஒட்டு மொத்தமாக மக்கள் இவர்களை புறக்கணிக்க தொடங்கினால் ஒழிய இது சாத்தியம் இல்லை .
ஒரு அரசியல் இயக்கம் எப்படி இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும் ,எனக்கும் உண்டு .
ஒரு அரசியல் தலைவனின் பார்வையில் முதல் முக்கியத்துவம் தேசத்துக்கு ,மக்களுக்கு அதன் பின்பு கட்சிக்கும் கொள்கைக்கும் அதன் பின்பே தனக்கும் தனது குடும்பத்துக்கும் என்பதை உறுதியாக கடைபிடிக்க வேண்டும்
கவர்ச்சி திட்டங்கள், இலவசங்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டு .மக்களின் வாழ்க்கை தரம் உயரும் வண்ணம் அவர்களின் சுயமரியாதை பங்கம் விளைவிக்காமல் நல்ல தனி மனிதர்களை உருவாக்க முனைய வேண்டும் .
தங்களது கொள்கைகள்,நம்பிக்கைகள் மேல் பற்று இருக்கலாம் -ஆனால் அது வெறியாகி அதை நிறுவ முயன்று வெறுப்பை விதைக்க கூடாது . அவரவர் கொள்கைகளில் உறுதியாக இருந்தாலும் மாற்று கொள்கைகளை ,நம்பிக்கைகளை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்
வீண் ஆடம்பரங்கள் கூடாது ,நெடுஞ்சாலையை நோண்டி வளைவுகள் வைத்தல் ,ரோட்டை மறித்து மேடை போடுதல் ,பெரும் கூட்டத்தை கடற்கரையில் கூட்டி கடற்பரப்பு எங்கும் கண்ணாடி பீர் குப்பிகளும் ,பாதி குதறிய பிரியாணி பொட்டலங்களும் நிறைந்து கிடக்கும் அவலம் இனி கூடாது .
தனி மனித தாக்குதல்களில் ஈடுபடாத அமைப்பு வேண்டும்.மக்கள் நலன் முன்னிலை வகித்தால் போதும் .நீ டாஸ்மாக்ல உருண்டது தெரியாதா ,நீ திருட்டு ரயில் ஏறியது தெரியாதா ,உனது நடத்தை பற்றி தெரியாதா எனும் சவடால்களும் ,அறைக்கூவல்களும் முதலில் நிற்க வேண்டும் .எதிர் கட்சி நம் எதிரி கட்சி அல்ல ,கருத்துக்களின் ஊடே மோதல்கள் நிலவலாம்,சமரசங்கள் இன்றி பயணிக்கலாம் ஆனால் அடிப்படை மனித உணர்வுகளை பாதிக்காது அவை நிகழ வேண்டும் .அவரும் மக்கள் மீது உள்ள அக்கறையில தான் சொல்லுறாரு என்று உணர வேண்டும் .