Tuesday, February 1, 2011

காண்டேசா கனவுகள்-சிறுகதை

"கிருஷ்ணா ..".."அப்பா சிங்கப்பூருலேந்து வந்துருக்காக ,எனக்கு இம்புட்டு ஜாமாங்க வாங்கியாந்துருக்காறு " ,தனது பையை மெதுவாக திறந்து காட்டினான் மணி .ஒரு பெரிய ரிமோட் கண்ட்ரோல் போலீஸ் கார்,இரண்டு குட்டி ஜீப்புகள் ,சிவப்பு அட்டையும் தங்க பேப்பர் சுற்றிய சாக்கலேட்டுகள் ,அப்புறம் -அந்த சிறிய நீல நிற ஹாட் வீல்ஸ் காரை பார்த்த உடன் கிருஷ்ணாவின் முகம் பிரகாசித்தது ."மணி ,அது கான்டசா கார் தானே ?".கிருஷ்ணாவிற்கு காண்டேசாவின் மீது ஒரு வித பாசம்,அவனுக்கு அந்த வண்டி மிகவும் பிடிக்கும் ,பேப்பரில் வந்த காண்டேசா படங்களை கத்தரித்து புத்தகத்தின் நடுவே பதுக்கி வைத்துருப்பான் .அப்பா செட்டியார் அய்யாவோட அம்பாசடர் கார் ஓட்டுவார் ,ஆனாலும் அந்த காண்டேசா காதல் அவனுக்கு ஓயாது ."அப்பா ,இந்த தகர டப்பாவை குடுத்துட்டு கான்டசா ஓட்டுப்பா " என்று அப்பாவை நச்சரித்த காலம் உண்டு .தெரு கோடியில் இருக்கும் மாடி வீட்டு முத்து அங்கிளின் மெரூன் காண்டேசா கார் கிருஷ்ணாவிற்கு மிகவும் பிடித்தது .மண்டை வீங்கிய அந்த கருப்பு அம்பாசடர் -பார்க்கும் பொழுது அவனை திட்டி தீர்க்கும் ,அவனது பள்ளி கணக்கு டீச்சர் அவனுக்கு நினைவுக்கு வரும் .முத்து அங்கிளின் காரை அவரில்லாத பொழுது, யாருக்கும் தெரியாமல் காரை தொட்டு தொட்டு பார்ப்பான் .ஒருமுறையாவது அவன் அந்த வண்டியில் ஏறிவிட வேண்டும் என்று முடிவு செய்து இருந்தான் .
மாமாவும் ராமு தாத்தாவும் அன்று பனிரெண்டு மணி அளவிற்கு பள்ளிக்கு வந்து ஆசிரியரிடம் ஏதோ பேசி கொண்டிருந்தனர் .கிருஷ்ணாவை அவனது மூன்றாம் வகுப்பு எ பிரிவிலிருந்து அழைத்து வந்தனர் .ஏதோ கையெழுத்து போட்டு "மனச தேத்திக்கிங்க " என்று சொல்லி ஆசிரியர் மாமாவிடம் கிருஷ்ணாவை அனுப்பி வைத்தார் .கிருஷ்ணாவிற்கு -பரிச்சையில் பெயில் ஆகி அழுது அடி வாங்கியது போல் இருந்தது ராமு தாத்தாவின் முகமும் ,மாமாவின் முகமும் .இன்று என்ன சீக்கிரமாக அழைத்து கொண்டு போகிறார்கள் என்று புரியவில்லை ,பொதுவாக அப்படி அழைத்து போக அம்மாவோ ,அப்பாவோ தான் வருவார்கள் ."மாமா ,எப்ப வந்தீக ? அத்த வரலியா ,எங்க போறோம் ? அப்பா ,அம்மா வரலையா ?" முகத்தை தொங்கவிட்டு கொண்டு அமைதியாக நடந்து வந்தார் மாமா.ராமு தாத்தா" எல்லாம் வந்த்ருகாக ,அப்பாரு வெளிநாடு போறாரு ,அதான் டாட்டா சொல்லனும்ல உன்னையும் கூட்டியாறோம் " என்று தழுதழுத்தார் ."சிங்கப்பூரா?" "ஆமா " கிருஷ்ணாவிற்கு மனதில் சந்தோஷம் -அப்பாவிடம் சொல்லி மணி அப்பா போல் வரும் போது தனக்கும் காண்டேசா கார் வாங்கி வர சொல்ல வேண்டும் .

வீடே வீங்கி வெடித்து விடும் போல இருந்தது .அந்த சின்ன ஓட்டு வீட்டிற்குள் பெரும் கூட்டம் நெருக்கி அடித்து கொண்டு நுழைந்து கொண்டே இருந்தது .சுவற்றில் சாய்ந்து வெறித்து பார்த்து கொண்டிருந்தார் அந்த பெரியவர் ,கண்களில் நீர் இல்லை .யார் யாரோ வருவதும் ,கையை பிடிப்பதும் ,அழுவதும் ,ஆறுதல் கூறுவதும் சம்பிரதாயமாக நடந்து கொண்டிருந்தன .அவர் காதுகளுக்கு எந்த அழுகுரலும் கேட்கவில்லை ,அங்கு வரும் யாரையும் அவருக்கு தெரியவில்லை .எண்ணங்களும் ,நினைவுகளும் சுற்றி சுற்றி வருகின்றன ,முடிவற்ற எண்ண சுழற்ச்சியின் மத்தியில் தன்னை மறந்து நின்று இருந்தார் .மனமுருக தனக்கு மறதியை வழங்க கூடாதா என்று அவரது ஆழ் மனம் வேண்டியது .நினைவுகள் எத்தனை கொடிய வியாதி.தன் மகனின் இழப்பின் நிதரிசனம் அவருக்கு பிடிபடவில்லை ,வெறுமையும் விரக்க்தியும் மனதை கவ்வி நிறைந்துள்ளது .அழு அழு என ஆழ் மனம் அழுத்துகிறது ஆனால் அவர் அழவே இல்லை .

ரோஜாவும் ,சம்பங்கியும் ,சாமந்தியும் வீடெங்கும் ஓடும் கண்ணீர் நதியில் சிறு சிறு தோணிகளாக மிதந்தன .மனித வியர்வையின் உப்பும்,மலர்களின் சுகந்தமும் ,ஊதுபத்தியின் தீக்குளிப்பால் வரும் வாசம் எல்லாம் கலவையாக காற்றில் கலந்து நாசிக்குள் நிறைந்தது .இந்திய கிரிக்கட் அணி வீரர்களின் 'ஹடுள்' போல வீட்டின் மையத்தில் ,அம்மாவை சுற்றி தலை விரி கோலத்துடன் அமர்ந்து எழுப்பும் அழுகுரல்கள் ,புதிதாக ஒரு அத்தையோ ,ஆயாவோ உள்ளே வந்தால், விஸ்வரூபம் எடுக்கும் ஆள் கண்ட சமுத்திரம் போல் ,கண்ணீரும் அழுகுரலும் புதிய உச்சத்தை தொட்டு கீழ் இறங்கும் .
சாயங்காலம் மணியின் அம்மாவும் அப்பாவும் மணியோடு வீட்டுக்கு வந்தார்கள் ."கிருஷ்ணா ,உங்க அப்பா செத்துட்டாரா டா ?" மௌனமாக மணியிடம் வந்த கிருஷ்ணா "அவரு சிங்கப்பூரு போறாரு ""வாடா ஆடலாம்" என்று சொல்லி வீட்டு வாசலில் உள்ள கொட்டகையை தாண்டி ரோட்டிற்கு வந்து ஒரு அரச மரத்து குச்சியை உடைத்து ,வட்டம் போட்டு "அண்டர் ,ஓவர் ,பிடிக்க முடிஞ்சா பிடிச்சுக்கோ " என்று தூக்கி போட்டு விளையாட்டை துவங்கினார்கள் .

எல்லாம் முடிந்துவிட்டது ,இப்பொழுதும் அவர் அழவில்லை ,கிருஷ்ணாவிற்கு அம்மாவை பார்க்க பிடிக்கவில்லை ,அவள் அழுத வண்ணம் இருந்தாள் ,அவள் அழுவதை பார்த்தால் இவனுக்கும் அழுகை வரும் ,எல்லாரும் அழுதால் அப்பா தனது சிங்கப்பூரு பயணத்தை ரத்து செய்து விடலாம் ,தனக்கு காண்டேசா கார் கிடைக்காது .அதனால் அவளை பார்க்காமல் தவிர்த்தான் .ராமு தாத்தா பெரியவரிடம் ஏதோ சொன்னார் "போயிட்டு வந்துரட்டும் ,சடங்கு முக்கியமாச்சே ,தம்பி இங்கனயே இருக்கட்டும் -இங்க தம்பிக்கு சடங்கு இருக்கு " என்றார் ,பெரியவர் ஒன்றும் சொல்லாமல் நின்றார் .அம்மா காரைக்காலில் உள்ள ஆயா வீட்டிற்கு சென்று ஒரே நாளில் திரும்ப வேண்டும் ,அவரோடு மாமாவும் செல்வதாக முடிவானது .வாசலில் நின்ற முத்து அங்கிள் பெரியவரிடம் " பாருங்க ,சந்துரு எனக்கு எவளவோ செஞ்சுருக்கான் ,தம்பி மாறி,தப்பா எடுத்துக்கலனா ,என் வண்டியையும் டிரைவரையும் அனுப்புறேன் ,தங்கச்சியும் ,அவரும் சட்டுன்னு போயிட்டு திரும்பிடலாம் ,பஸ் எல்லாம் ஏறி இறங்கி நேரத்தோட வர்றது சிரமம் ,இப்ப இருக்குற நெலமைக்கு நல்லதில்ல " பெரியவர் ஏதும் பேசவில்லை ,ராமு தாத்தா "உங்களுக்கு சங்கடம் இல்லையே ?" என்று மெதுவாக கேட்டார் "அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க " என்று சொல்லி வண்டியை கொண்டு வந்து நிறுத்த சொன்னார் .

அந்த மெரூன் கலர் கான்டசா வந்து நின்றது ,கிருஷ்ணாவின் அம்மாவும் மாமாவும் வண்டியில் ஏறினார்கள் ,அதுவரை அழாதிருந்த கிருஷ்ணா குபிரென்று அழுதான் ,பெரும் கூச்சலோடு வெளியே ஓடி வந்தான் ,"அம்மா !! போகாத !!" அழுது வற்றிய அவளின் கண்கள் மீண்டும் குளமாகின ,"வந்துருவேண்டா கிருஷ்ணா " என்று வாஞ்சையும் ,வருத்தமும் கலந்த குரலில் உச்சி முகர்ந்து ,வண்டியில் ஏறினாள் .அவள் மாமாவுடன் காண்டேசாவில் தெருவை கடந்து செல்வதை வாசலிலே நின்று அழுதபடி பார்த்து கொண்டிருந்தான் ."பாவம் அப்பா போனதுக்காக குழந்த அழறது " என்று பச்சாதாப பேச்சுகளும் ,"அழாதே அம்மா வந்துடுவா " என்று தேற்றல்களும் அவன் காதில் விழுந்த வண்ணம் இருந்தன .அழுகை நின்றபாடில்லை .அழுது கொண்டே உள்ளே ஓடி வந்து ,ஓரமாய் ஒடுங்கி வார்த்தை இழந்த அந்த பெரியவரின் வேட்டியை உலுக்கி "தா ..த்..தா ....கா ...கான் ...டேசா..கான்டசா ..அ..ம்மா ..போறா ..என்ன...ய..வி..ட்டு..ட்டு..." என்று தேம்பி தேம்பி அழுதான் .உயிரற்ற ஜடமாக அத்தனை நாட்களும் உறைந்து நின்றிருந்த பெரியவர் ,பெரும் தூக்கத்திலிருந்து விடுபட்டது போல் "சந்திரா ..." என்று அடக்க முடியாமல் கண்களில் வழிந்து ஓடும் நீரை துடைத்து கொண்டு ,தேக்கி வைத்த பெரும் துக்கம் அவரது குரலிலிருந்து பெரும் ஓலமாக புறப்பட்டது .கிருஷ்ணாவை வாரி அனைத்து ,அவனை தூக்கி கொண்டு கண்களில் நீர் பெருக வீட்டுக்குள் இருக்கும் சந்துருவின் படத்தை நோக்கி ஓடினார் .

7 comments:

  1. மனதை உருக்கும் கதைங்க....

    ReplyDelete
  2. "எனக்கு இதுல முக்கால்வாசி புனைய பட்ட கதை மாதிரி தெரியல :-)"

    ReplyDelete
  3. நன்றி சித்ரா மேடம்
    தீபக்
    சொந்த கதை சோக கத :)

    ReplyDelete
  4. nalla karpanai.
    vaazhthukkal.
    mullaiamuthan.
    http://kaatruveli-ithazh.blogspot.com/

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முல்லை அமுதன்,கோமா :)

    ReplyDelete
  7. திருத்தம் மனதை உலுக்கி விட்டது

    ReplyDelete