Friday, April 10, 2026

வாழும் தமிழ் இலக்கிய விழா நினைவுகள்- 2


Courtyard Marriot, where we stayed
பாலாஜியும் பத்மநாப பிள்ளையும் வேலைகளை இழுத்து போட்டு செய்தார்கள். காபி, காலை உணவு வாங்கி வருவது தொடங்கி நிறைய பணிகள். விடுதியருகே இருந்த ஸ்டார்பக்ஸுக்கு பிரபு அழைத்து சென்றான். ஏறத்தாழ கசாயம் போலிருந்த மின்ட் தேநீர் அந்த ஊர் குளிருக்கு இதமாக இருந்தது. அமெரிக்கர்கள் செல்வது போல் ஜாக்கெட் மட்டும் அணிந்து கொண்டு ஹட்ஸன் நதிக்கரையோரம் இருந்த ஸ்டார் பக்ஸ் கடைக்கு சென்றேன். கைகள் குளிரில் விறைத்து விட்டது. எதற்கும் இருக்கட்டும் என எடுத்து வந்திருந்த கையுறையை அணிந்து கொண்டேன். சிதம்பர ரகசியத்தின் டெல்லி கணேஷ் கொலை செய்வதற்கு அணிவாரே அத்தகைய கையுறை. காலை பொங்கல் இட்லி வடை கொடுத்தார்கள். அறையில் ஓவன் இருந்ததால் சூடு செய்து உண்டோம்.

Thursday, April 9, 2026

வாழும் தமிழ் இலக்கிய விழா நினைவுகள்-1





A Church at NewYork 



நியூயார்க் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் ஏப்ரல் 3, 4 தேதிகளில் நிகழ்ந்த வாழும் தமிழ் இலக்கியத் திருவிழாவின் கதையை எங்கிருந்து தொடங்குவது? உடலும் மனமும் அமெரிக்க நேர இயைவிலிருந்து விடுபடவில்லை. அநேக தருணங்கள் மனத் திரையில் ஒடியபடி உள்ளன. எத்தனை முகங்கள், எத்தனை இடங்கள்! சரியாக சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்காவிற்கு விசா பெற தூதரகத்திற்கு சென்றதிலிருந்து இந்த கதையை தொடங்க வேண்டும். ஜனவரி 8 ஆம் தேதி எனக்கும் சாம்ராஜுக்கும் திருச்செந்தாழைக்கும் விசா நேர்காணல். சாம் எங்களுக்கு அரைமணிநேரம் முன்னரே சென்று விட்டார். நானும் செந்தாழையும் பையை லாக்கரில் வைத்துவிட்டு தூதரகம் சென்றோம். புத்தகங்கள், அழைப்பு கடிதம் , வங்கி விவரங்கள், ஆவணங்கள் என என்னென்ன கொண்டு வரவேண்டும் என ஒரு பட்டியலை மகேஷ்வரி முன்னரே அளித்திருந்தார். நான் ஒரே ஒரு கோப்பை தூக்கிக்கொண்டு வந்தால் செந்தாழை ஒரு பெரிய பை நிறைய தாள்களோடு  வந்தார். மூன்று மாத வங்கி வரவு செலவு கணக்கு மட்டும் முன்னூறு பக்கமிருக்கும். செந்தாழை தமிழில் நேர்காணல் கோரியிருந்தார் அவரை காத்திருக்கச் சொன்னார்கள். எதற்காக போகிறீர்கள், எங்கு தங்குவீர்கள், எத்தனை நாட்கள், யார் செலவு செய்கிறார்கள், நீங்கள் மருத்துவரா, என்னென்ன எழுதியிருக்கிறீர்கள், செலவை யார் ஏற்கிறார்கள் போன்ற கேள்விகளை கேட்டார்கள். நற்பயணம் வாய்க்கட்டும் எனும் வாழ்த்தோடு ஐந்து நிமிடத்தில் நேர்காணல் நிறைவடைந்தது.

Sunday, January 11, 2026

முனை காந்திய யாத்திரை ஒரு வாழ்த்து




சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் ‘முனை’ இளையோர் அமைப்பினர் வாக்குக்கு பணம் பெறக்கூடாது எனும் செய்தியை தாங்கி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள காந்தியவாதி லட்சுமண ஐயர் விடுதியில் இருந்து  சென்னைக்கு நடைபயணம் தொடங்கியுள்ளனர். இது தேர்தல் ஆண்டு. தலைநகரம் நோக்கிய பயணம் என்பதால் கூடுதல் சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். கவனமும் கூடுதலாக கிடைக்கும். சென்ற ஆண்டு பயணம் சென்ற சிபி, அனு ஸ்ரீ, சௌமியா ஸ்ரீ, கௌதம், அர்ச்சனா மற்றும் லைலா பானு ஆகிய அறுவரோடு தீபிகாவும் இணைந்துள்ளார். காரைக்குடியில் இருந்து நானும் நாராயணனும் கிளம்புவதாக இருந்தோம். சென்ற ஆண்டு இவர்களை சுதிரும் சந்தித்திருந்ததால் தானும் வர பிரியப்பட்டான். 

Friday, January 9, 2026

வாசு முருகவேலின் ‘மணிபல்லவம்’ - முன்னுரை


 


வாசு முருகவேலின் ‘மணிபல்லவம்’  அறுபது எழுபது பக்கங்கள் உள்ள சிறிய நாவல்தான். கடந்த ஆண்டு வெளிவந்த ‘அன்னா’ போன்றதே இதுவும். சிறிய நாவல்களின் வலுவும் எல்லையும் அதன் வடிவம் தான். அலைந்து திரிந்தபிறகு நேரும் உளைச்சலை சிறிய நாவல்கள் கடத்த முடியாது. ஆனால் கூர்மையான சொல்முறையாலும் கதை மாந்தர்களின் நுணுக்கமான சித்தரிப்புகளாலும் வாசக பங்கேற்பை அதிகரிக்கும். மனதிற்குள் விரியும். அவ்வகையில் வாசுவின் முந்தைய நாவலான ‘அன்னாவை’ காட்டிலும் ‘மணிபல்லவம்’ கூடுதல் தேர்ச்சியுடன் வெளிப்பட்டிருக்கிறதாக உணர்கிறேன். தொல்தமிழ் இலக்கியங்களில் மணிபல்லவம் என்று குறிக்கப்படும் ‘நயினாத் தீவு’ தான் நாவலின் களம். எண்பதுகளின் மத்தியில் நடந்த படுகொலைக்கும் முன்னும் பின்னுமான  வாழ்வை தான் நாவல் பேசுகிறது. 

Thursday, January 8, 2026

‘காந்தியும் ஜவஹரும்’- முன்னுரை

பரிசல் புத்தக நிலையம் வெளியீடாக வெளிவந்திருக்கும் ‘காந்தியும் ஜவகரும்’ எனும் வெ. சாமிநாத சர்மா எழுதிய சிறுநூலுக்கு எழுதிய முன்னுரை. 


“என்ன செய்ய? இந்தியாவை அமிழ்த்தி அழிக்கத் துடிக்கும் இந்தத் தோல்வி மனப்பான்மையும் வறுமையுமான புதைகுழியிலிருந்து இந்தியாவை எவ்வாறு மீட்பது? எம்மக்களின் வரலாற்றில் வெகு சில காலம் மட்டுமே நம்பிக்கையும், உற்சாகமுமாகக், கவலையின்றிக் கழிந்தது, அந்த நாட்களைத் தவிர்த்து எத்தனையோ தலைமுறைகளாக எம் மக்கள் தங்கள் உதிரத்தையும் வியர்வையையும், கண்ணீரையும் இந்த நிலத்திற்காக சிந்தி இருக்கிறார்கள். ஆனால் இந்த செயல்பாடுகள் இந்தியாவின் ஊனுடலையும் ஆன்மாவையும் ஆழமாக ஊடுருவி முழுமையாக அரித்துக் கொண்டிருக்கிறது. நுரையீரலில் மெல்ல பரவி இறுக்கி ஆளைக் கொல்லும் புற்றுநோய் போல எங்கள் நிம்மதியான வாழ்வை அணுவணுவாகப் பரவிய நஞ்சு அழித்துக் கொண்டிருந்தது. சில நேரங்களில் காலரா போலோ பிளேக் போலோ ஏதோ ஒரு நோய் பீடித்து வேகமாகப் பரவி இந்த அவதிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தால்கூட நல்லது என்று எண்ணத் தோன்றியது. எனினும் அது  மனதைக் கடந்து சென்ற ஓர் எண்ணம் மட்டுமே ஏனெனில் முரட்டு சாகசங்கள் நம்மை எங்கும் அழைத்துச் செல்வதில்லை, மேலும் ஆழமாக ஊடுருவி பரவும் நோய்க்கு அதிரடியான போலி வைத்தியம் எந்தவித தீர்வையும் தராது.




Monday, January 5, 2026

சொப்பனங்கள் நிஜமாகும் சொர்ண பூமி - பால பாஸ்கரன் - நூல் அறிமுகம்


4.1.2026 அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் ஆற்றிய உரையின் விரிந்த வடிவம்.




அறிஞர் பால பாஸ்கரன் பற்றிய அறிமுகம் என்பது அவரது நேர்காணல் வழியாக ஏற்பட்டது. மீண்டு நிலைத்த நிழல்கள் எனும் தொகுப்பை வல்லினம் நவீன் வெளியிட்டார். அதில் அவரது நேர்காணலை வாசித்த பொழுது ஒரு அசலான அறிஞரின் குரலை கேட்க முடிந்தது. தமிழின் முதல் சிறுகதை எது என்பது குறித்து நா கோவிந்தசாமி முன்வைத்த மகதும் சாயபு எழுதிய  வினோத சம்பாஷனை சிறுகதையை முதல் சிறுகதையாக ஏன் கொள்ள முடியாது என்று தர்க்கபூர்வமாக முன்வைப்பதோடு, 1924 ஆம் ஆண்டு எழுதியவர் பெயரின்றி வெளியான இன்னொரு கதையை தான் மலாயாவின் முதல்  சிறுகதை என வாதிடுகிறார். 

Wednesday, December 31, 2025

2025 நன்றி நவிலல்





என் உடலுக்கு- என்னை தாங்கியதற்காக, செயல்பட அனுமதித்ததற்காக, எனது எல்லைகளை உணர்த்தியதற்காக நன்றி. இன்னும் கொஞ்சம் கூடுதலாக ஒத்துழைத்திருக்கலாம் எனும் வருத்தம் இருந்தாலும், நாற்பதுக்கு உடல் தயாராகிறது என்பதை எனக்கு உணர்த்துகிறது. கொஞ்சம் கூடுதலாக கவனி என அது கோருவதை புரிந்து கொள்கிறேன். நிச்சயம் கவனிக்கிறேன் என்று உறுதியளிக்கிறேன். 


மனதிற்கு- வழக்கத்தை விட அதிக காயங்களை கண்டதற்கும், அவற்றை கடந்து வந்ததற்கும் நன்றி. கவனம் நழுவி பாதாளத்தில் வீழ இருக்கும்போதெல்லாம் எப்படியோ சுதாரித்து மேலெழுந்ததற்கு நன்றி, உணர்ச்சிகளால் ஆட்கொள்ளப்படும்போது அவற்றை உடனடியாக வெளிப்படுத்தி சிக்கலை பெரிதாக ஆக்காத விவேகத்திற்கு நன்றி. நெருக்கடிகளுடன் ஊடாக படைப்பூக்கத்தை எப்படியோ பிடித்து வைத்து கொண்டதற்கு நன்றி. 


குடும்பத்திற்கு-  சுதிர் சந்திரனுக்கும் சபர்மதிக்கும்- இந்த ஆண்டு நான் என்னவாக இருந்தேன் என்று யோசித்தால், மருத்துவராக, எழுத்தாளராக இருந்ததை விட மிக மிக அதிகமாக குழந்தைகளின் தந்தையாக இருந்திருக்கிறேன். பல சமயங்களில் எனது பொறுமையின் எல்லைகளை சோதித்துள்ளார்கள். எனக்கு என்னையே காட்டியிருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாத ஆற்றாமையில் நிறுத்தியிருக்கிறார்கள். அவர்களின் மீதான எனது எதிர்பார்ப்புகளை மட்டுப்படுத்திக்கொள்ள பழக்கினார்கள். அவர்களுடன் பாட்டு வகுப்புகளுக்கும், நடன வகுப்புகளுக்கும், கிரிக்கெட் வகுப்புகளுக்கும் சென்று வருபவனாக ஆனேன். அவர்களின் வழி வேறு வேறு உலகங்கள், அதன் மனிதர்களை கண்டுகொண்டேன். சென்னையில் விளையாடி தோற்று மின்சார ரயிலில் சோர்வுடன் தனது கிரிக்கெட் மூட்டையை தூக்கிக் கொண்டு வந்த சுதிரை கண்டு ஒரு மத்திம வயதுடையவர் இந்தியில் அவனோடு பேசினார். நீ வருங்காலத்தில் இந்தியாவிற்கு விளையாடுவாய் என வாழ்த்தினார். பெற்றோர்களின் உலகம் விசித்திரமானது. இன்பமும் மனவுளைச்சலும் அவர்களால் ஏற்பட்டதே. கிரிக்கெட் பிடிக்கும் தான். இந்த ஆண்டு பல உள்ளூர் போட்டிகளை கண்டேன். கிரிக்கெட் அடிமை எனும் சொல்லும் அளவிற்கு. எழுத்தையும் வாசிப்பையும் பாதிக்கும் அளவிற்கு சென்றுவிட்டது. வருமாண்டு சற்று என்னை நானே விலக்கி வைத்து கொள்ள வேண்டும். இன்னும் கொஞ்சம் பொறுமையாய் இருக்க முயல்கிறேன், எனது எதிர்பார்ப்புகளையும் பிணைப்புகளையும் குறைத்துக்கொள்ளவும், நெகிழ்த்திக் கொள்ளவும் முயல்கிறேன். இன்னும் மேலான அமைதியான சூழலை உங்களுக்கு உருவாக்கித்தர முயல்கிறேன். உங்களுக்கு அவசியமானதை செய்வதற்குரிய பொருளியல் பலம் கூடட்டும்.  



மானஸாவிற்கு- என்னால் என்னை நிர்வகித்துக்கொள்ள முடியும் என நம்பிக்கை ஊட்டியதற்கு, சில கடினமான முடிவுகளை எடுத்ததற்கு, வருடத்தின் முற்பாதியில் நிறைய சண்டைகள். குடும்பத்திற்குள் தனிமனிதர்களின் சுதந்திரத்தின் எல்லை, வெளி சார்ந்ததே இவை. ஆனால் சண்டைகள் எவையும் மோசமாகிவிட இருவரும் அனுமதித்ததில்லை. மூன்று மாத காலம் வேறு ஊரில் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டபோது சற்று கடினமாகத்தான் உணர்ந்தேன். மருத்துவத்துறை சார்ந்த அத்தனை முடிவுகளையும் நிர்வாகத்தையும் ஏற்றுக்கொண்டது எனக்கு பெரும் விடுதலை. எழுத்துக்கள் தான் உனக்கு சொல்லும் நன்றியாக இருக்க முடியும். இன்னும் கொஞ்சம் அனுசரணையோடு, கொஞ்சம் பொறுப்போடு இருக்க முயல்கிறேன். 


அம்மாவிற்கு- நான் சறுக்கும் போதெல்லாம் அவள் தான் என்னை முதலில் கண்டெடுப்பவள், நீ சறுக்கி கொண்டிருக்கிறாய் என்று எச்சரிப்பவள்.  இன்னும் கொஞ்சம் கரிசனத்தோடு, இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருக்க முயல்கிறேன்.


இலக்கிய நண்பர்களுக்கு- சித்ரன், ஜீவ கரிகாலன், போகன், பிரபா, சவுந்தர், லதா, பெருந்தேவி, ரமா சுரேஷ், தாயுமானவன்  மதிகுமார், கண்டனூர் நாராயணன், காளி, ஜாஜா, சுந்து, ராகவ், விக்னேஷ் ஹரிஹரன், சண்முகம் அண்ணாச்சி, காஞ்சி சிவா, அனீஷ் கிருஷ்ணன், ஈரோடு கிருஷ்ணன் ஆகியோருக்கு, பிரியம் குன்றாமல் முரண்படவும் உரையாடவும் இடமளித்ததற்கு. 


இலக்கிய உலகத்திற்கு - குறிப்பாக காலச்சுவடு மற்றும் யாவரும் பதிப்பகங்களை, காந்தி தன்வரலாறு நூலை செம்மையாக கொணர பங்காற்றிய தி.அ. ஸ்ரீனிவாசன், அரவிந்தன், பெருமாள் உட்பட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்த ஆண்டு எதற்காகவேனும் நான் பெருமைப்படலாம் என்றால் அது இவ்விரு நூல்களை வெளியிட்டதற்காக. ‘குருதி வழி’ நாவலை வெளியிட்ட ஜீவாவிற்கும், திருத்தங்கள் செய்த ஸ்ரீதேவிக்கு, வேதாவிற்கும், ஜானகிக்கும் நன்றிகள். முரண்பாடுகள் ஊடாக தொடர்ந்து உரையாடும் சக படைப்பாளி நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து வாசிப்பின் ஊடாக உடன் வரும் வாசகர்களுக்கும் நன்றி. மலேசியா, பாட்னா உட்பட உள்ளூர் வெளியூர் பயணங்களை எழுத்தின் விளைவாகவே ஈட்டினேன். எனது படைப்புகளை கோரிய, பதிப்பித்த இதழ்களுக்கு நன்றி. பிரியத்திற்குரிய யுவன் இருதய நோயிலிருந்து மீண்டதற்காக நன்றி. வருட கடைசியில் சந்தித்து, மிகவும் நெருக்கமாக உணர்ந்த கன்னட எழுத்தாளர் ஜெயந்த் காய்கினி அவர்களுக்கு நன்றி. அவரை போல கசப்பு அண்டாத வாழ்க்கை தகையட்டும். மரப்பாச்சி, சிற்றில் நண்பர்களுக்கு நன்றி. தொடர்ந்து செயல்படுவதே அவர்களின் வழிமுறை. எப்போதும் உரையாடலில் இருக்கும் பெருந்தேவிக்கும், போகனுக்கும், ஜாகிர்ராஜாவிற்கும் நன்றி. ஒவ்வொரு உரையாடலும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு தான் எனக்கு. ஸ்டாலின் ராஜாங்கத்திற்கு, தமிழின் அசல் சிந்தனையாளர்களில் ஒருவராக இருந்தாலும், எப்போதும் நிதானம் தவறாதிருப்பதன் வழி செயல்பட முடியும் என்பதை காட்டியதற்கு. நல்ல கதைகளை, கவிதைகளை, கட்டுரைகளை எழுதிய எழுத்தாளர்களுக்கு நன்றி, மொழிக்கும் கற்பனைக்கும் அவர்கள் பங்காற்றியுள்ளார்கள்.  சுமாரான படைப்புகளை எழுதியவர்களுக்கும் நன்றி, மொழி சூழலை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக. 



மாணவர்களுக்கு- என்னை ஆசிரியராக உணரச் செய்த, நிறைவடைய செய்த ஈரோடு- திருப்பூர் அறக் கல்வி மாணவர்களுக்கும், ஆயுர்வேத வகுப்புகளில் பங்குபெற்ற இந்திய - மலேசிய மாணவர்களுக்கும் நன்றி. எழுதும்போதும் வகுப்பிலிருக்கும் போதும் நான் என்னை முழுமையானவனாக உணர்கிறேன். 


நோயாளிகளுக்கு- நம்பிக்கையுடன் என்னை நாடி வந்ததற்கு நன்றி, உங்கள் வழியாக நான் கற்றுக் கொள்கிறேன், கற்றதை செயல்படுத்துகிறேன். எல்லோரும் நோயின்றி நலமாக வாழ வேண்டிக்கொள்கிறேன். 


இன்னும் பலருக்கு நன்றி, கண்ணுக்கு புலப்படாத ஆரங்களாக என் வாழ்க்கை சக்கரத்தை சுழற்றும் உங்கள் அனைவருக்கும் நன்றி. 


இன்னும் ஆரோக்கியமாக, இன்னும் அதிக மனோதிடத்துடன், இன்னும் தீவிரமாக வாசித்து, எழுதி, செயலாற்ற முனைகிறேன். எனது கலைக்கும் தொழிலுக்கும் எப்போதும் போல உண்மையாக இருக்க உறுதி ஏற்கிறேன். கவன சிதறல்களை தவிர்த்து கொண்டு, எனக்கு அளிக்கப்பட நேரத்தை முழுமையாக பயன்படுத்த முயல்கிறேன். எனது உலகியல் தேவைகள் எப்படியோ ஈடு செய்யப்படும் என மனமார நம்புகிறேன்.  


எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். 

கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடு வயதிற்குள்ள மனத்திடனும், இளைஞருடைய உத்ஸாஹமும், குழந்தையின் ஹிருதயமும், தேவர்களே, எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும் படி அருள் செய்க- பாரதி    


   


Monday, November 24, 2025

மலேசிய பயணம் 2025








இது எனது இரண்டாவது மலேசிய பயணம். இதற்கு முன் 2019 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்ற போது அங்கிருந்து வல்லினம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்காக மலேசியாவிற்கு வந்தேன். நானும் சரவணன்‌ விவேகானந்தனும் பேருந்தில் கோலாலம்பூர் வந்து சேர்ந்தோம். ‘விஷக் கிணறு’ கதை எனக்கு மலேசியா கொடுத்ததுதான். அந்த பயணத்தில் இன்னும் மனதில் தங்கி இருக்கும் காட்சிகளில் முதன்மையானது  செம்பனைக்கு நடுவே பிரம்மாண்டமாக படுத்திருந்த அங்காளம்மனின் உருவம். 

Saturday, November 22, 2025

நாவல் உருவான கதை - குருதி வழி



எங்கள் நெருங்கிய குடும்ப நண்பர் ஒருவருக்கு நிகழ்ந்த சம்பவம்தான் இந்த நாவலின் கரு. கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தை அடையாளம் கண்டுகொண்டாலும் அவரால் நெருங்க முடியவில்லை. இன்னொரு வகையான தீர்வை நாடினார் என்பது வேறு விஷயம். ஆனாலும் மூதாதையர்களின் செயலுக்கும் வாழ்விற்கும் நாம் பொறுப்பேற்க முடியுமா? வேண்டுமா? போன்ற கேள்விகள் என்னைத் தொந்தரவு செய்தபடி இருந்தன. முதலில் சற்றுப் பெரிய சிறுகதையாக கொரோனா காலத்தில் எழுதினேன். ஆனால் அப்போது வெளியிடவில்லை. ஜெயமோகன் எழுதிய கொரோனா காலக் கதைகளில் ஒன்றான ‘பலிக்கல்’ கதையின் முடிவுடன் ‘வேல்’ எனத் தலைப்பிட்டு இருந்த அந்தச் சிறுகதையின் முடிவு நெருக்கமாக ஒத்திருந்தது. மன்னிப்பு வழங்குவது யார்? தெய்வமா? மனிதரா? திறந்த முடிவுடன் நிறைவுபெற்ற கதை. கதையைக் கைவிட மனதின்றி அப்போதைய சமயத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே வைத்துவிட்டேன். உள்ளுக்குள் அந்தக் கதை உறுத்திக்கொண்டே இருந்தது. பின்னொரு சமயத்தில் ஜெயமோகனிடம் நான் எழுதிய சிறுகதையைப் பற்றிக் கூற நேர்ந்தது. மையக் கேள்வியை இன்னும் பெரிதாக விரித்தெடுத்தால் இந்தக் கதைக்கு நாவலாக வளரும் சாத்தியம் உள்ளதாகக் கூறினார். அப்படி உருவானதுதான் இந்த நாவல். மூதாதையர் செயல் என்பது கடந்த காலம், வரலாறு என விரிந்தது. அவை நமது இன்றைய வாழ்வில் செய்யும் குறுக்கீடுகள் என்ன? அந்தச் சுமையை நாம் சுமக்க வேண்டுமா? கடந்த காலத்திலிருந்தும் வரலாற்றிலிருந்தும் விடுபட வேண்டுமா? முடியுமா?   

Tuesday, September 16, 2025

‘இரவாடிய திருமேனி’- வாசிப்பு

 வேல்முருகன் இளங்கோவின் மூன்றாவது நாவல் ‘இரவாடிய திருமேனி’ எதிர் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. கடந்த சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி வெளியானபோது அதன் தலைப்பும் முன்னட்டையும் வெகுவாக ஈர்த்ததால் வாசிக்க ஆர்வமாக இருந்தேன். பாண்டியர்களுக்குப் பின்பான, முகலாயர்களுக்கு முன்பான நாயக்கர் கால மதுரையைக் களமாகக் கொண்ட கற்பனை நாவல்.



நிறையக் கதை மாந்தர்கள் இருந்தாலும் நாவல் முதன்மையாக நான்கு கதைச் சரடுகளின் பின்னலாக அமைந்துள்ளன. சாம்பன் எனும் கள்வனின் வாழ்க்கை முதல் சரடு. சாம்பனின் தந்தை, ஆசிரியர் சுருளி, சுருளியின் மகன் சங்கன், வனத்தில் சாம்பனை மீட்கும், அவனை வழிநடத்தும் பேய்ச்சியின் வடிவிலான பெண் ஆகியோரைச் சுற்றிக் கதை நிகழ்கிறது. இரண்டாவது சரடு, பண்டிதர் உத்திராபதி எனும் வைத்தியரின் குடும்பத்தைச் சேர்ந்த அவரது மகள் கோதை, மருமகன் பரிதி, சீடரும் சம்பந்தியுமான பெரியசாமி ஆகியோருடையது. மூன்றாவது சரடு ஞான சபையின் தலைவர் ஸ்ரீவத்சர், அவரது சீடரான கோபிலன் ஆகியோரின் கதை. நான்காவது சரடு, அரசர் கிருஷ்ணப்ப நாயக்கர், ராணி, மன்னரின் மெய்க்காவல் படைத் தலைவரான மாறவர்மன் ஆகியோருடைய கதைகள். மன்னருக்குப் பெரிய பங்கு ஏதுமில்லை. மகளை நோயில் இழந்த மாறவர்மன் முக்கியக் கதை மாந்தர் எனச் சொல்லலாம். மன்னரால் புறக்கணிக்கப்பட்ட ராணி வெறுப்பும் கனிவும் என எதிரெதிர் இயல்புகளின் கூட்டில் உருவான கதாபாத்திரம்.