வாசு முருகவேலின் ‘மணிபல்லவம்’ அறுபது எழுபது பக்கங்கள் உள்ள சிறிய நாவல்தான். கடந்த ஆண்டு வெளிவந்த ‘அன்னா’ போன்றதே இதுவும். சிறிய நாவல்களின் வலுவும் எல்லையும் அதன் வடிவம் தான். அலைந்து திரிந்தபிறகு நேரும் உளைச்சலை சிறிய நாவல்கள் கடத்த முடியாது. ஆனால் கூர்மையான சொல்முறையாலும் கதை மாந்தர்களின் நுணுக்கமான சித்தரிப்புகளாலும் வாசக பங்கேற்பை அதிகரிக்கும். மனதிற்குள் விரியும். அவ்வகையில் வாசுவின் முந்தைய நாவலான ‘அன்னாவை’ காட்டிலும் ‘மணிபல்லவம்’ கூடுதல் தேர்ச்சியுடன் வெளிப்பட்டிருக்கிறதாக உணர்கிறேன். தொல்தமிழ் இலக்கியங்களில் மணிபல்லவம் என்று குறிக்கப்படும் ‘நயினாத் தீவு’ தான் நாவலின் களம். எண்பதுகளின் மத்தியில் நடந்த படுகொலைக்கும் முன்னும் பின்னுமான வாழ்வை தான் நாவல் பேசுகிறது.
ஷோபா, சித்தானந்தன், சுவாமிநாதன் போன்ற தமிழ் கதைமாந்தர்களுக்கு இணையாகவே பண்டாரா, கொத்தலாவ, பந்துலு தேரர் ஆகிய சிங்கள கதை மாந்தர்களுக்கு இந்நாவலில் இடமுண்டு. சிங்களர்கள், பவுத்தர்கள் என ஒற்றைத்திறளாக ஆக்கி சித்தரிப்பது எளிது. எளிமைப்படுத்துதலுக்கு எதிராகவே கலை இருக்க முடியும். சிங்களர்கள், பவுத்தர்கள் எனும் பொது அடையாளத்திற்கு உள்ளே சிக்கிக்கிடக்கும் உதிரிகளை, தனி மனிதர்களை வாசு இந்த நாவலில் சித்தரித்த விதத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
சிங்கள இனவாதத்தின் இருந்து புத்தரை மீட்டு தனித்து நோக்கும் பார்வையும் இந்நாவலில் வெளிப்பட்டிருக்கிறது. “புத்தரின் பாதம் பட்ட நிலம் என்று தேடி வந்தவர்கள் யாருக்குத்தான் வேறுபடுத்தும் எண்ணம் வரும்!. ஆனால் வேறுபடுத்துகிறவர்கள் வந்தார்கள். அவர்கள் சிங்களவரில் இருந்துதான் வந்தார்கள். பவுத்தர்களில் இருந்து வந்திருக்க முடியாது இல்லையா!” கடற்படையின் கட்டுப்பாட்டிற்குள் தீவு வந்தவுடன் புத்தருக்கு அருகே இருந்த மும்மூர்த்தி சிலைகள் அகற்றப்படுகின்றன. “புத்தருக்கு இத்தனை காலமும் மும்மூர்த்திகள் சூழ இருந்ததில் சங்கடம் ஏதும் நேர்ந்திருக்கவில்லை” என்று எழுதுகிறார். புத்தரை இன்னபிற தெய்வங்களோடு சேர்த்து வணங்கும் பழக்கம் தமிழர்களின் மத்தியில் இயல்பாக இருந்ததை நாவல் பேசுகிறது. அதேபோல் நயினா தீவின் அம்மாள் கோவிலுக்கு நேர்ந்து கொண்டு பச்சை கயிறு கட்டிக்கொள்ளும் சிங்கள ராணுவ வீரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். புத்த விகாரையில் தேரர் கட்டிவிடும் வெள்ளை நூலை அணிந்தபடிதான் சுவாமிநாதன் வலம் வருகிறான். அதிகார வெறி மக்களை திரட்டுவதற்கு எந்த அடையாளத்தை வேண்டுமானாலும் தனது முகப்பாக ஏந்திக் கொள்ளும். உன்னத அடையாளங்களை பண்பாட்டு கூறுகளை நாம் நம்மிலிருந்து அந்நியப்படுத்தி விடக்கூடாது. அவர்களை நமதாக்கிக்கொள்ள வேண்டும். புத்தரை இனவாதிகளுக்கு எப்படி விட்டுக்கொடுத்துவிட முடியும்? மரண பயமே மனிதர்களை ஒன்றிணைக்கும் மாபெரும் ஆற்றல்.
நிலத்தில் பாடுபட்டு சாமானிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த பண்டாரா போன்ற பலரும் இனவாத அரசியலால் போருக்கு இழுத்து வரப்பட்டவர்கள். பண்டார ஏன் போர்க்களத்திற்கு வருகிறான்? ‘அம்மாவை அக்காவும், அக்காவை அவனும் பாதுகாத்திருந்த காலமும் அக்காவின் மூப்பு நோக்கிய கால ஓட்டத்தில் காணாமல் போனது. இராணுவத்துக்கு போகும் எண்ணம் எதுவும் பண்டாரவுக்கு ஒரு போதும் இருந்ததில்லை. ஒரு போதும் போர்க்களம் போக வேண்டிய அவசியம் இல்லாத சனாதிபதிதான் பண்டாரவை போர்க்களத்துக்கு அனுப்பி வைத்தார்’ என்று எழுதிறார் வாசு. காவலுக்கு நிற்கும் காவல் கோபுரமே கொத்தலாவவிற்கு காவலாய் இருக்கிறது. பயணசீட்டு பரிசோதகரான சுவாமிநாதன் சிங்களத்தை கற்றாக வேண்டும் எனும் நிர்பந்தத்தினால் வாழ்வாதாரத்தை இழந்து ராணுவத்தினருக்கு சமையல் செய்பவராக ஆகிறார். பள்ளி ஆசிரியராக இருந்த சித்தானந்தன் ஏன் கர்னல் விக்கியாக ஆகிறான் என்பதை நுட்பமாக சித்தரிக்கிறார் வாசு.
நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் கொண்டுவரும் விஜயகுமாரதுங்க போன்றோரின் குரல்கள் ஒலிக்காமல் போகும் கெடுநிலையை நாவல் வெவ்வேறு தருணங்களில் பேசுகிறது. ஷோபா சித்தானந்தனை காண்பதற்காக செல்லும் பகுதியில், உறவும் துணையும் இல்லாமல் தனித்து இருக்கும் பெண்களும் குடும்பமும் வேறொரு போராட்டத்தில் உள்ளார்கள் என்பதை உணர்த்துகிறது. வீடா நாடா என்றொரு கேள்வி எல்லா காலத்திலும் உள்ளதுதான் என்றாலும் வீட்டின் இழப்பை சன்னமான முனகலாகவேனும் பதிவு செய்கிறது நாவல். நாவலின் மைய பாத்திரம் ஷோபா கதைகளால் பின்னப்பட்டவள். துலக்கமாக தெரியாமல் மறைந்து திரிகிறாள் என்பதாலேயே இன்னும் வசீகரமானவளாக திகழ்கிறாள். உணர்வு உச்சத்தில் நாவலை நிறுத்துவதற்கான எல்லா வாய்ப்பிருந்தும் வாசு உணர்வு விலக்கத்தோடு அணுகிய விதம் என்னை ஆழமாக தொந்திரவு செய்தது. பண்டாராவிற்கு ஷோபாவும் அவனது அன்னை மாலினியும் கழல் ஏந்திய கண்ணகியும் ஒன்றென ஆகும் தருணம் நாவலின் உச்சம். வாசு தனது அரசியல் சார்பை மறுப்பவர் அல்ல. ஆனால் அதைத்தாண்டி மனிதர்களை நோக்கும் தன்மையே அவரை கலைஞராக ஆக்குகிறது. இத்தனை இறுக்கமான நாவலுக்குள் சற்றே இலகுவான உயிர்ப்பான பகுதிகள் என இரண்டு அத்தியாயங்களை குறிப்பிட வேண்டும். தீவிற்குள் எப்படி காதல் திருமணம் புரிவது? வெளியே தப்பிச் சென்றால் எளிதில் கண்டுபிடித்துவிட முடியும் எனும்போது எப்படியாவது ஓரிரவு ஒன்றாக இருந்தோம் என்பதை உலகிற்கு உணர்த்திவிட்டால் திருமணத்தில் முடிந்துவிடும் என்பதே ஊரின் வழக்கம். அதற்காக காதலர்கள் சில நூதன வழிமுறைகளை கடைபிடிக்கிறார்கள். அம்மாள் கோவில் தேர் திருவிழாவின் போது நிகழும் ‘அழகுராணி’ போட்டியும் சுவாரசியமான பகுதி. காகித மலர்கள் சொரியும் இரும்பு கதவு, கடல் பார்க்க உயர்ந்திருக்கும் இரும்பு காவல் கோபுரம், ஐநூறு குடும்பங்களே வாழும் சிறிய தீவு என சொற்களின் வழி நல்ல காட்சி அனுபவத்தை கடத்துகிறார் வாசு.
‘மணிபல்லவம்’ எனக்குள் சில அசவுகரியமான கேள்விகளை எழுப்பியது. உண்மையில் அநீதிக்கு பிழையீடு என்பது சாத்தியமா? நியாயம் என்று ஏதேனும் உண்டா? பழிக்கு பழி என்பதைத்தான் நாம் நீதி என்கிறோமோ? அநீதி இழைத்தவர் அகாலமாக அல்லது வயதேறி காலமாவதைத்தான் நாம் நீதி என்று நம்புகிறோமோ? அநீதிக்கு எதிராக கலை என்ன செய்ய முடியும்? நாம் கோரும் நீதிக்கு பதிலாக நமக்கு கிடைப்பது என்னவோ ஆறுதல் தான். விடையற்ற கேள்விகள். அல்லது தீர்மானமான ஒற்றைப்பதில் இல்லாத கேள்விகள். கலையால் நீதியை நிலைநாட்ட முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் கதைகளாக அவற்றை நினைவில் வைத்துக்கொள்ளும். நமது நாட்டார் தெய்வ கதைகள் பலவும் அநீதியை நினைவுகூர்பவை என்று எனக்கு தோன்றுவதுண்டு. ‘மணிபல்லவம்’ நயினா தீவில் வாழ்ந்தவர்களுக்கு மறைந்தவர்களுக்கும் எழுத்தாளர் எழுப்பி இருக்கும் நினைவுச்சின்னம் என்று கூட சொல்லலாம்.
சுனில் கிருஷ்ணன்
28.11.25
மணிபல்லவம்
நாவல்
நீலம் வெளியீடு
No comments:
Post a Comment