Monday, January 5, 2026

சொப்பனங்கள் நிஜமாகும் சொர்ண பூமி - பால பாஸ்கரன் - நூல் அறிமுகம்


4.1.2026 அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் ஆற்றிய உரையின் விரிந்த வடிவம்.




அறிஞர் பால பாஸ்கரன் பற்றிய அறிமுகம் என்பது அவரது நேர்காணல் வழியாக ஏற்பட்டது. மீண்டு நிலைத்த நிழல்கள் எனும் தொகுப்பை வல்லினம் நவீன் வெளியிட்டார். அதில் அவரது நேர்காணலை வாசித்த பொழுது ஒரு அசலான அறிஞரின் குரலை கேட்க முடிந்தது. தமிழின் முதல் சிறுகதை எது என்பது குறித்து நா கோவிந்தசாமி முன்வைத்த மகதும் சாயபு எழுதிய  வினோத சம்பாஷனை சிறுகதையை முதல் சிறுகதையாக ஏன் கொள்ள முடியாது என்று தர்க்கபூர்வமாக முன்வைப்பதோடு, 1924 ஆம் ஆண்டு எழுதியவர் பெயரின்றி வெளியான இன்னொரு கதையை தான் மலாயாவின் முதல்  சிறுகதை என வாதிடுகிறார். 


ஒரு ஆய்வாளருக்கு அடிப்படையான குணம் என்ன? ஏற்கனவே முடிவு செய்த ஒன்றை நிறுவுவதற்காக ஆய்வு செய்யக்கூடாது. திறந்த மனதுடன் ஆய்வு கேள்வியை அணுக வேண்டும், புதிய சாத்தியங்களை ஏற்கும் மனப்பாங்கு இருக்க வேண்டும். சார்பற்ற ஆய்வுகள் பலருக்கு சௌகரியமாக இருக்காது. முகம் சுளிக்க வைக்கும். பாலபாஸ்கரன் சமரசமற்ற ஆய்வாளர். அயலக தமிழர்களுள் முதன்மை ஆய்வாளர்களில் ஒருவர் என கருதுகிறேன்.  


சிங்கப்பூர் சற்றே வினோதமான நாடு. நகரம் தான் நாடு. சென்னை,  மும்பை, ஹாங்காங் போன்ற பிற பெருநகரங்களில் இருந்து சிங்கப்பூர் வேறுபடும் புள்ளி என்பது அங்கே பெரிதாக குற்றங்கள் மலிந்த நிழலுலகம் என ஏதுமில்லை என்பதுதான். இன்றைய சிங்கப்பூர் மிகவும் பாதுகாப்பான நகரம்.‌ முழுக்க கண்காணிக்கப்படுகிறது என்பதொரு காரணம்.  மிக அரிதாக ஞாயிற்று கிழமை மாலைகளில் செராங்கூன் பகுதிகளில் உலாவும்  போது மட்டுமே நான் காவல் வண்டிகளை கண்டிருக்கிறேன். எல்லாமே பட்டவர்த்தனமாக, நிழலுக்கும் கரவுக்கும் இடமில்லாத போது படைப்பூக்கம் தழைப்பது சவாலான விஷயம்.   நிழலை ஏற்று அங்கீகரிக்கும் வழிமுறைகளை நாட்டார் சடங்காக பேணுவது வழக்கம். நம் கலை இலக்கியங்களும் கூட அந்த நோக்கத்தை நிறைவேற்றுகின்றன. ஆர்ச்சர்ட் தெரு கெய்லாங் போன்ற இடங்களில் விலைமாதர்கள் உண்டு. சிங்கப்பூர் நீர் பரப்பில் மிதக்கும் சொகுசு பயணியர் கப்பல்களில் சூதாட்ட விடுதிகள் உண்டு. சிங்கப்பூர் வாசிகளுக்கு சூதாட நிறைய கட்டுப்பாடுகள் உண்டு. வெளிநாட்டவர்கள் அங்கேயே கிடந்து கெட்டு விடலாம். யாதொரு சிக்கலும் இல்லை. 



எழுநூறு ஆண்டுகால சிங்கப்பூர் வரலாற்றை பேசும் ஆங்கில நூலை வாசிக்கும் போது காலனிய வரலாற்றுக்கு வெளியே சிங்கப்பூரின் வரலாற்றை தேடும் ஏக்கம் புலப்பட்டது. சிங்கப்பூரின் முதல் வெளியுறவு துறை அமைச்சராக இருந்த ராஜரத்தினம் சிங்கப்பூர் வரலாற்றை ராஃபிள்சிலிருந்து தான் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சிங்கப்பூர் இன்று அனுபவிக்கும் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் பின்னால் பல சோதனைகளை கடந்து வர வேண்டி இருந்தது என்கிறார் பால பாஸ்கரன். ‘சிங்கப்பூர் சுகப் பிரசவம் அல்ல’ என்பதே ஒரு அத்தியாயத்தின் தலைப்பு. 


பாலபாஸ்கரன் சிங்கப்பூரின் இருண்ட தொடக்கம் குறித்து  சித்திரம் அளிக்கிறார். தொடக்கம் முதலே கடற்கொள்ளையர்கள் சூறையாடும் துறைமுகமாக இருந்துள்ளது. பூகிஸ் கொள்ளையர்கள் மொத்தத்தையும் கொள்ளையடித்து எல்லோரையும் கொன்று கப்பலை எரிப்பதை வாடிக்கையாக கொண்டவர்கள். காலனிய காலகட்டத்தில் ராஃபிள்ஸ் தீர்வையற்ற துறைமுகமாக சிங்கப்பூரை பேண வேண்டும் என்று முடிவெடுத்தார். மறுபக்கம் வருமானத்திற்கு என்ன வழி எனும் யோசனையும் அவர்களை ஆட்கொண்டது. செலவுகளை ஈடுகட்ட சூதாட்டம் கஞ்சா விபச்சாரம் ஆயுத விற்பனை ஆகியவற்றை அனுமதித்து முதலாளிகளை லட்சாதிபதிகளாக ஆக்கி ஏழைகளை பிழிந்து எடுத்த பாவங்கள் மலிந்த நகரமாக ஆனது. Chicago of the east என்று சொல்லத்தக்க நிலையை அடைந்தது.  1825 முதல் 1910 வரை சிங்கப்பூரின் மொத்த வருமானத்தில் கஞ்சா விற்பனை மட்டும் 30 முதல் 55 விழுக்காட்டை வழங்கியது. ஒரு பிரபல சீன கஞ்சா வியாபாரி மாரியம்மன் கோவில் புனரமைப்பிற்காக நிதி வழங்கியதை பதிவு செய்துள்ளார். இந்திய -சீன படகோட்டி களுக்கு இடையே சண்டை சச்சரவு இருந்துள்ளது.  இந்து முஸ்லிம் படகோட்டி களுக்கு இடையே சண்டைகள் நிகழ்ந்துள்ளன. சீனர்கள் இந்திய  கொள்ளையிட்ட  நிகழ்வுகளை குறிப்பிடுகிறார். கத்தோலிக்க மதத்துக்கு மாறிய 500 சீனர்களை ஓட ஓட 1851 ஆம் ஆண்டு விரட்டி கொன்றனர். முதலாம் உலகப்போரில் துருக்கி கலீபாவிற்கு ஆதரவாக ராணுவத்தில் இருந்த இந்திய முஸ்லீம் சிப்பாய்கள் கலகத்தில் ஈடுபட்டு பல ஆங்கிலேய அதிகாரிகளை கொன்றனர்.  


சிங்கப்பூரில் புலி பலரை கொன்றுள்ளது. ஆவணங்களில் சில ஆண்டுகள் 200 பேருக்கு மேல் புலி அடித்து பலியானதாக பாலபாஸ்கரன் பதிவு செய்கிறார். சீன முதலாளிகள் உண்மையான எண்ணிக்கையைச் சொன்னால் வேலைக்கு  வர மாட்டார்கள் என்பதால் எண்ணிக்கையை மறைத்தார்கள் என்கிறார்.  1902 ஆகஸ்டில் சிங்கப்பூர் வருகை புரிந்த வெளிநாட்டு சர்க்கஸ் நிறுவனத்திலிருந்து தப்பி ஓடிய ஒரு புலி ராஃபிள்ஸ் ஹோட்டலில் தேநீர் நேரத்தின் போது பில்லியட்ஸ் விளையாட்டு மேசைக்கு அடியில் பதுங்கிக் கொண்டது. அதனை சுட்டுத் தள்ள பக்கத்தில் குடியிருந்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய தலைமை ஆசிரியர் சால்ஸ் பிலிப்ஸ் வரவழைக்கப்பட்டார். இருட்டில் புலியின் ஒளிவிடும் கூர்மையான விழிகளை மட்டும் கணக்கில் கொண்டு சரியாக நெற்றி பொட்டில் சுட்டு வீழ்த்தினார். புனைவு எழுத்தாளருக்கு இந்நூல் பல அரிய தகவல்களை அளிக்கக்கூடும்.  1904 ஆம் ஆண்டு சிங்கப்பூரின் கடைசி புலியும்  சுட்டுக் கொல்லப்பட்டது.  


கிளாரா சோ எனும் சிங்கப்பூர் ஆங்கில எழுத்தாளர் எழுதிய Dream storeys எனும் அறிவியல் புனைவு நினைவுக்கு வருகிறது. சிங்கப்பூரில் கட்டிடங்களுக்காக அடித்தளம் தோண்டும்போது டைனோசர் எலும்பு கிடைத்தது பெரிய செய்தியாக சில ஆண்டுகளுக்கு முன்னர் பேசப்பட்டது. கிளாரா இந்த செய்தியை கதையாக்குகிறார். புதைபொருள் ஆராய்ச்சிக்கு எல்லாம் இடமோ நேரமோ இல்லாத சூழலில் என்ன செய்ய முடியும்? டைனோசர் எலும்பையும் வணிகமாக ஆக்க முடியுமா? அந்த இடத்தில் டைனோசர் தீம் பார்க் எழுப்பலாமா? என்பதாக செல்லும் கதை. வரலாற்றின் மீதான அசட்டையை பகடி செய்யும் கதை. வெவ்வேறு இனங்கள், பொருளியல் நிலைகள், மதங்கள், பண்பாடுகள் என ஒன்றிணைந்து வாழ்வதற்கு பெரும் சவாலான சூழலை சிங்கப்பூரின் தோற்றுநர்கள் உணர்ந்திருக்க வேண்டும். வரலாறு, பண்பாடு போன்றவை முரண்பாடுகளை அதிகமாக்கும் என எண்ணியிருக்க வேண்டும். பொருளியல் வளம் எனும் ஒற்றை இலக்கை அடைய தேவையற்ற சுமைகளை உதிர்த்து முன்னகர வேண்டும் என்று அவர்கள் யோசித்ததை புரிந்து கொள்ள முடிகிறது. ராஜரத்தினத்தின் நிலைப்பாடை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.  யோசித்து பார்த்தால் ரஷ்ய புரட்சி, சீனாவின் கலாச்சார புரட்சி போன்றவை வரலாற்றின், பண்பாட்டின் சுமையை உதற முற்பட்டவை என்று எனக்கு  தோன்றுகிறது. சிங்கப்பூரில் பொருளியல் தன்னிறைவிற்கு பிறகு வரலாறும் பண்பாடும் கலையும் இலக்கியமும் இல்லாத சூனியத்தை உணரத் தொடங்குகிறார்கள். தேசிய கலை மன்றம் போன்றவை 90 களில் முக்கியத்துவம் பெற தொடங்குகிறது. வரலாற்றின் மீது கவனம் திரும்புகிறது. இனக்குழுக்கள் தங்களது உழைப்பையும் பங்களிப்பையும் வலியுறுத்தும் வரலாற்று கோணங்களை முன்வைக்கிறார்கள். வரலாற்றின் மீதான உதாசீனம் உள்ளே கொந்தளிக்கும் அமைதியின்மையை எதிர்கொள்ள முடியாது. மாறாக வரலாறை புரிந்து கொண்டு, வரலாற்று பங்களிப்புகளை ஏற்றுக்கொண்டு முன் நகர்வதே பல இனங்கள் வாழும் சூழலுக்கு உகந்ததாக இருக்க முடியும். சிங்கப்பூர்- மலாயா உருவாக்கத்தில் தமிழர்கள், இந்தியர்களின் வரலாற்று பங்களிப்பை சரியாக பிரதிநிதிப்படுத்தி உணர்த்துவதே பாலபாஸ்கரன் போன்ற ஆய்வாளர்களின் முதன்மை பங்களிப்பு என்று சொல்ல முடியும்.  சிங்கப்பூர் வரலாற்றை விரிவாக ஆவணப்படுத்திய டர்ன்புல் கூட சிங்கப்பூர் இந்தியரைப் பற்றி மிகக் குறைவாக எழுதியுள்ளார் என தனது ஆதங்கத்தை பதிவு செய்கிறார் பாலபாஸ்கரன். சிங்கப்பூர் இந்தியர்கள் சமூகத்தின் மீது   பெரிய தாக்கத்தை அவர்கள் ஏற்படுத்தவில்லை. தொழிலாளர்கள், படகோட்டிகள், சிறு வியாபாரிகள் போன்றோர் தலைமைத்துவம் ஏதும் இல்லாமல், மொழி மதம் ஆகியவற்றால் பிரிந்து கிடந்தார்கள் என்பதை அவருடைய பார்வை. பால பாஸ்கரன் இத்தகைய மைய நீரோட்ட காலனிய வரலாற்று நோக்கிற்கு மாற்றாக மக்கள் மைய வரலாற்று நோக்கை தமிழர்களின் நோக்கிலிருந்து ஆவணப்படுத்த முயல்கிறார்.  சிங்கப்பூர் நூல் தானே நமக்கு என்ன இருக்கிறது என்று கருத வேண்டியதில்லை. தமிழர்களின் பண்பாட்டு, வரலாற்று பங்களிப்பு சார்ந்து எவ்வகையான போலி மிகைப்படுத்தல்களும் இல்லாத கூர்மையான, சுவாரசியமான மொழியில் எழுதப்பட்ட நூல். 

 

ஜெயந்த் காய்கினியின் ‘பால் மீசை’ கதையில் புண்டலீகன் எனும் பதினோரு வயது சிறுவன் மும்பை ஒற்றை அறை அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்வான்.  குழந்தையை பார்த்து கொள்வான். எல்லா வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டும். தனது பூர்வீக ஊரில் மலர் செடிகளில் இருந்து பூ கொய்வதை பணியாக கொண்டவன். நகரத்தின்  மத்தியில் பூ செடிகளை தொட்டியில் வளர்க்க முயற்சிப்பான். பிழைக்க  இடத்தை தனது ஊராக மாற்றிக்கொள்ளும் முயற்சி எல்லாருக்குமானது. சைனாடவுன் மாரியம்மன் அல்லது சவுத் பிரிட்ஜ் மாரியம்மன் கோவில் அல்லது பழைய சிங்கப்பூர்வாசிகள் குறிப்பிடுவது போல மாரியாத்தா கோவில் அப்படிதான் உருவாயிருக்க வேண்டும். அதற்கு முன்பே ஆர்ச்சர்ட் ரோட் சிவன் கோவில் பினாங்கு தமிழர்களால் கட்டப்பட்டதாக பாலபாஸ்கரன் கூறுகிறார். தற்போது கெலாங் சிவன் கோவில் என்று அறியப்படுகிறது. வட இந்திய பாணியிலான கோபுரம் கொண்ட சிவன் கோவில். சிங்கப்பூரின் தேவாலயம், அரசாங்க கட்டிடங்கள் ஆகியவற்றை எழுப்பியதில் பெரும் பங்கு இந்திய சிறை கைதிகளுடையது தான் என்று ஆவணப்படுத்துகிறார். எண்பதாயிரம் பேருக்கு மேல் நோயிலும் போரிலும் மலாயா சென்ற தமிழர்கள் மடிந்தார்கள். 

மலாயாவிற்கும் தமிழகத்திற்கும் உண்டான பண்டைய தொடர்புகள் பற்றி நிறைய தகவல்களை அளிக்கிறார் பால பாஸ்கரன். சிங்கப்பூரின் முந்தைய பெயர் தெமாசிக். 14 15 நூற்றாண்டுகளில் ஒரு இந்து சிற்றரசு தான் தெமாசிக்கை ஆண்டார் என்கிறார். ஒரு ஆய்வாளருக்கு பன்மொழி புலமை அவசியம். பால பாஸ்கரனின் மலாயா அறிவு அவரை பிற தமிழ் ஆய்வாளர்களிடமிருந்து தனித்து காட்டுகிறது. மலாய் அரசர்களின் வம்ச கதையை சொல்லும் நூலிலிருந்து சுல்தான்களின் இந்திய தொடர்பை சுட்டிக் காட்டுகிறார்.  புரம் என்று முடியும் ஊர்களும்,  வர்மன் எனும் பெயரொட்டும்  பல்லவ அரசோடு தொடர்புடையதாக இருக்கலாம் எனும் பார்வையை முன்வைக்கிறார். சஞ்சீவ் சன்யால்  தென்கிழக்கு ஆசிய அரசுகளோடு பல்லவர்களுக்கு இருந்த தொடர்பை சுட்டிக் காட்டுகிறார். பல்லவ அரசின் ஒரு கிளை தான் அவை எனும் வாதத்தை முன்வைக்கிறார். பரமேஷ்வரன் என்பது அரசருக்கும் பரமேஸ்வரி என்பது அரசிக்குமான  பட்டப் பெயர்களாக இருந்தது என்கிறார்.  


குஜராத்தி முஸ்லீம்களும் தமிழ் முஸ்லிம்களும்  மலாக்காவின் வணிகத்தை கையில் வைத்திருந்தார்கள்.  போர்த்துக்கீசியர்களுக்கு மலாக்காவின் ரகசியங்களை கடத்தி அவர்கள் அதை கைப்பற்ற உதவியவன் நைனா சாத்துவன் எனும் ஒரு தமிழ் இந்து. சாத்துவன் தான் மருவி  சாத்தப்பன் என்றானது. நகரத்தார் சமூகம் இன்றும் அப்பெயரை பயன்படுத்துகிறது என்கிறார்.  நாராயண பிள்ளை எனும் தமிழர் பினாங்கிலிருந்து ராபிள்சுக்கு உதவுவதற்காக சிங்கப்பூர் வருகிறார். செங்கல் சூளை அமைப்பதற்காக காமாட்சி பிள்ளை குடி வருகிறார். மலாயாவின் முக்கியமான முதல் இலக்கியகர்த்தாவான முன்ஷி அப்துல்லா மலாய்- தமிழ் கலப்பினத்தவர் என்று சொல்கிறார். ராபிள்ஸ் மணந்த ஒலிவியா மதராஸில் பிறந்தவர். தமிழ் எழுத பேச கற்றவர். அவருடன் தமிழ் தாதியும் மலாயா வருகிறார். சிங்கப்பூரின் தெரு விளக்குகளை ஏற்றியவர் தமிழர்கள் என்கிறார். 


பாலபாஸ்கரனின் நூல் பல புனைவு களங்களுக்கு வித்திடும் வலிமை கொண்டது. இன்னும் சில சுவாரசியமான தமிழ் தொடர்புகளை சுட்டிக் காட்டுகிறார் பாலபாஸ்கரன். லிட்டில் இந்தியா ஆர்கேட்  இந்து மக்களின் முதல் இடுகாடாக பயன்பட்டிருக்கலாம் என்பதற்கான சான்றுகள் உள்ளது என்கிறார். ராபிள்ஸ் காலத்தில் பினாங்கில் கவர்னராக இருந்த கர்னல் பேனர்மேன் தான் வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கில் போட்டவர்.  கடைசியில் காலரா கண்டு பினாங்கில் இறந்து போனார். மலாயா சுல்தான்களின் ஒருவரான துங்க்கு ஆதாம் வாங்கிய கடனுக்காக அவர் மீது அழகப்பா செட்டி வழக்கு போட்டார் எனும் ஒரு வரி செய்தி உள்ளது. குடும்பத்தை விட்டு மலாயா வந்தவர்களுக்கு ஊரிலிருந்து கடிதங்கள் எழுதுகிறார்கள். ஜோகூரில் அஞ்சல் நிலையம் இல்லாததால் 1879 ஆம் ஆண்டு  சுமார் 7400 கடிதங்கள் திரும்ப இந்தியாவுக்கே அனுப்பி வைக்கப்பட்டது . சிராங்கூன் சாலையில்  குடியிருந்த வீராசாமி நாயுடு தைப்பூசத்திற்கு பதிலாக தீபாவளிக்கு பொது விடுமுறை வேண்டும் என்று போராடினார்  அவர் தன் பிள்ளைகளின் காது குத்துச் சடங்கை பெரும் பந்தல் போட்டு நான்கு நாள் விழாவாக நடத்தி ஒவ்வொரு தினமும் சிங்கப்பூரின் ஒவ்வொரு இனத்தவரையும் உயரிய மாலை மரியாதையுடன் வரவேற்று உற்சாகமாக உபசரித்தார் என்று சொல்கிறார். 


மாரியம்மன் கோவில் சார்ந்து பல சுவாரசியமான தகவல்களை அளிக்கிறார். 10 நாள் திருவிழாவின் உபயதாரர்களை மலாய் பத்திரிக்கை ஆர்வத்தோடு அறிவித்தது. மூன்றாம் நாள் கள்ளுக்கடைக்காரர்கள் உபயம். சிங்கப்பூரில்   கள் இறக்குவோர் மொத்தம் 40 பேர். எட்டு  கடைகள் இருந்தன. சுமார் பத்தாயிரம் ஏக்கர் தென்னந்தோப்பு அவர்களுடைய உடைமையாக இருந்தது என்று சொல்கிறார். மாரியம்மன் கோவில் தீமிதி சடங்கில் சிலர் இறந்து விட்டதால் அதை தடை செய்ய வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் வலியுறுத்தினர். ‘தீமிதியை விட மோசமான காட்டுமிராண்டித்தனமான பல வழக்கங்கள் இங்கிலாந்தில் பின்பற்றப்படுகின்றன.  பக்தி என்பது அவரவர் சொந்த விஷயம் என்று தீமிதி தடை செய்வதற்கு வழக்கு தொடுத்த  போது அதை எதிர்த்து தமிழர் சார்பாக வாதிட்டார் ஜான் வால்டர் நேப்பியர் எனும் வழக்கறிஞர்.  இந்தியாவிலிருந்து சிறை கைதியாக வந்து சேர்ந்த கிருஷ்ண ஐயர் என்ற புரோகிதரை சிங்கப்பூர் ஆளுநர் 1839 இல் விடுதலை செய்து மாரியம்மன் கோவிலில் பூஜை நடத்த அனுமதி வழங்கினார். 25 ஆண்டுகள் கோவில் ஊழியம் புரிந்த தருணத்தில் ஒரு சிறுவனை அடித்து துன்பப்படுத்தியதற்காக மறுபடியும்  சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. அவரை விடுவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்ததாக பதிவு செய்கிறார். 



பாலபாஸ்கரன் சித்தரிக்கும் ராபிள்ஸ் வாழ்க்கை ஒரு நாவலுக்குரியது. ராஃபிள்ஸின் முதல் மனைவி ஒலிவியா பலரோடு காதல் வயப்பட்டார். அந்த தொடர்புகள் ராஃபிள்ஸின் வளர்ச்சிக்கு உதவி இருக்கலாம்  எனும் கோணத்தை முன்வைக்கிறார்.  சிங்கப்பூர் உருவாவதற்கு ராபிள்ஸின் சாமர்த்தியம் அல்லது சூழ்ச்சி தான் காரணம் என்கிறார் பால பாஸ்கரன். டச்சுக்காரர்களுக்கு தெரியாமல் மீன்பிடிக்கப் போவதாக சொல்லிவிட்டு சிங்கப்பூரை தாரை வார்த்துவிட்டு செல்கிறார் சுல்தான். சிங்கப்பூரின் உருவாக்கத்திற்கு அவருடைய பங்களிப்பு மிகையாக போற்றப்படுகிறது. உண்மையில் சிங்கப்பூர் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியவர்  ஸ்காட்லாந்தை பூர்வீகமாகக் கொண்ட வில்லியம் ஃபார்க்குவார் தான்  என்று வரலாற்று அறிஞர்கள் சிலர் கருதுகிறார்கள். மிக குறுகிய காலமே ராபிள்ஸ் சிங்கப்பூரில் வாழ்ந்தார். சிங்கப்பூரில்  ராபிள்ஸ்  பெயர் 300க்கும் மேற்பட்ட இடங்களுக்கு சூட்டப்பட்டுள்ளது. ஆனால் ஃபார்க்குவார் மறக்கப்பட்டார். பால பாஸ்கரன் காட்டும் ராபிள்ஸ் ஒரு கனவு ஜீவி. ஃபார்க்குவார் நடைமுறை அறிவும் முதிர்ச்சியும் கொண்ட, உள்ளூர் மக்களோடு நல்லிணக்கம் பேணும் ஒரு போர்படை தளபதி. ராபிள்ஸ்சின் தனி வாழ்க்கையில் ஊடாடும் காவிய சோகம் காரணமாகவே அவர் அதிகமாக நினைவு கூரப்படுகிறார் என தோன்றியது.  ‘என் ஒரே குழந்தை சிங்கப்பூர் தான்’ என்று பெருமிதம் போங்க பேசிய  

ஆறு மாதத்தில் பெண்கூலனில் அவரது மூன்று பிள்ளைகள் அடுத்தடுத்து இறந்து விட்டார்கள். உடல்நலம் குன்றி தனது 43 ஆம்  வயதில் பணியிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டு ஊர் திரும்பும் போது கப்பலில் அவரது தாவர, பிராணிகளின் சேகரங்களும்  சொத்துக்களும் நெருப்புக்கு இரையாகின. கம்பெனி பணத்தை திரும்ப செலுத்தச் சொல்லி கிழக்கிந்திய கம்பெனி நிர்பந்தப்படுத்தியது. கிட்டதட்ட  இறுதி நாட்களை கழித்தார் எனும் சித்திரமே நமக்கு கிடைக்கிறது. மூளையில் ரத்த நாள அடைப்பு ஏற்பட்டு இறந்து போனார்.  

 

பைரப்பாவின் ‘வம்ச விருட்சம்’ நாவலில் சதாசிவ ராவுக்கு பிள்ளைப்பேறு கிடையாது. அவர் அயராமல் உருவாக்கும் பெரும் கலைக்களஞ்சியம் தான் அவரது வாரிசு என்றொரு கோணத்தில் வாசிக்க முடியும். பாலபாஸ்கரனின் ஆவணப்படத்தை வல்லினம் இணைய இதழில் காணலாம். தொண்டையில் புற்று நோய் ஏற்பட்டு இறுதி நாட்களில் பேச முடியாதவராக ஆனார். ஆவணப்படத்தை பார்த்தபோது தன்னை போலவே இல்லை என்பதால் என் வாழ்நாளில் இதை வெளியிட வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டதாக   வல்லினம் கட்டுரை குறிப்பிடுகிறது. பால பாஸ்கரன் போன்ற சமரசமற்ற தமிழ் அறிஞர்கள், அறிவுஜீவிகள் முன்னோடிகளாக நிறுத்தப்பட, நினைவுகூரப்பட  வேண்டும். இன்னும் ஐந்து புத்தகங்கள் போடும் அளவிற்கு தரவுகளை தன்னிடம் தந்துவிட்டு சென்றதாக ஷாநவாஸ் குறிப்பிட்டார். நோய் அவருக்கு அளித்த காலக்கெடுவை இயன்றவரை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி இருக்கிறார். அவருடைய அத்தனை ஆக்கங்களும் நூலாக வேண்டும். ஆகும் என்று நம்புகிறேன். இதை நூலாகிய சிராங்கூன் டயம்ஸ், ஷாநவாஸ், யாவரும் பதிப்பகம் ஆகியோர் நம் நன்றிக்குரியவர்கள்.   


No comments:

Post a Comment