Thursday, October 19, 2017

நிலவேம்பு குடிநீர் - விவாதம்

நிலவேம்பு குடிநீர் பற்றிய விவாதம் காரசாரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சிலவற்றை தெளிவு படுத்த/படுத்திக்கொள்ள இதை எழுதுகிறேன். இந்திய மருத்துவ முறைகள் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என பி.ஏ.கே போன்றவர்கள் சொல்வதில் நியாயமில்லாமல் இல்லை. குறைந்தபட்சம் இத்தகைய குரல்கள் வெகுமக்களின் நன்மை/பாதுகாப்பை பொருட்டே எழுகின்றன. ஆனால் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதும் அறிவியல்பூர்வமானது அல்ல என்பதும் ஒன்றல்ல. ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதற்கு அரசியல் காரணிகள் இருக்கக்கூடும். அவர்களிடம் விவாதித்து எந்தப்பயனும் இல்லை. 

1. இந்திய மருந்துகளின் அறிவியல் நிரூபணம்.
பாரம்பரிய மருந்துகளை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து நிறுவ வேண்டும். அதன் பின்னரே பயன்படுத்த வேண்டும் எனும் வாதம் வைக்கப்படுகிறது. நவீன மருந்து உற்பத்தி பாணியில் பாரம்பரிய மருந்துகளை சோதிப்பதில் நடைமுறை சிக்கல்கள் பல உள்ளன. செயல்திறன் மற்றும் ஒப்பீட்டு செயல்திறன் சோதனைகள் செய்வது ஒருபுறம் இருக்கட்டும். விரிவாக பேச வேண்டிய விஷயம்.  அதைவிட முக்கியம் ஒவ்வொரு தனி மருந்துக்கும், செவ்வியல் மருந்து கலவைகளுக்கும் பாதுகாப்பான அளவு, ஆபத்தான அளவு, செயல்படத்தேவையான குறைந்தபட்ச அளவு ஆகிய பரிசோதனைகள் செய்தே தீர வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. 

2. நிலவேம்பும் மலட்டுத்தன்மையும் 
நிலவேம்பு குடிநீர் நிலவேம்பு மற்றும் மேலும் பல மருந்துகள் சேர்ந்து தயாரிக்கப் படுகின்றது. ஒற்றை மூலிகையாக நிலவேம்பு மற்றும் இன்னபிற கசப்பு மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தும்போது ஏற்படும் விளைவுகளை மட்டும் வைத்துக்கொண்டு எந்த முடிவுக்கும் வர இயலாது. நிலவேம்பு தினமும் உட்கொள்ள உரிய மருந்து அல்ல. ஆகவே மலட்டுத்தன்மை பற்றிய அச்சம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. 

3. நிலவேம்பு குடிநீரும் நோய்த்தடுப்பும்
நிலவேம்பு குடிநீருக்கு காய்ச்சலை சீராக்கும் குணம் உண்டு என்பதில் எவ்விதகுழப்பமும் இல்லை. ஆனால் நோய் தடுப்புக்கு எப்படி உதவும் என்பதைப் பற்றிய குழப்பங்கள் தீர்ந்தபாடில்லை. இது சார்ந்து எழுப்பப்படும் கேள்விகள் நியாயமானதே. டெங்கு மழைகால நோய் என்பது போய், பருவ மாற்றத்தால் ஏறத்தாழ ஒன்பது மாதங்கள் நீடிக்கிறது. இச்சூழலில் எத்தனை முறை நிலவேம்பு குடிநீர் எடுத்துகொள்ள வேண்டும்? எத்தனை நாட்கள் வரை நோய் எதிர்ப்பு ஆற்றலை வழங்கும்? எத்தனை நாட்களுக்கொரு முறை நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு தெளிவான விடையில்லை. கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கலாமா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். நிலவேம்பு குடிநீர் உட்கொண்டவர்களுக்கும் டெங்கு வருவதை காண முடிகிறது. ஆனால் எளிதாக நோயிலிருந்து மீள்கிறார்கள் என்பது மற்றுமொரு தனிப்பட்ட அவதானிப்பு. இதை ஆய்வுகள் மூலம் உறுதிபடுத்த முயல வேண்டும். 

4. நிலவேம்பு குடிநீரின் அரசியல் 
நிலவேம்பு குடிநீர் ஒரு மருந்து என்பதைத்தாண்டி மரபு மருத்துவத்தின் குறியீடாக மாறிவிட்டது. மரபு மருத்துவம்அரசிடமும் மக்களிடமும் மதிப்பின்றி இருந்த சூழலில் நிலவேம்பு குடிநீர் புதிய சாத்தியங்களை உருவாக்கியது. பாரம்பரிய மருத்துவத்தின் மறுமலர்ச்சிக்கான விதையாக கருதப்பட்டது. ஆனால் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று. சித்த மருத்துவமே நிலவேம்பாக சுருக்கிக் கட்டமைக்கபடுகிறது. நீர்மோர் பந்தலைப் போல் நிலவேம்பு குடிநீரும் ஒரு சடங்காக மாறிவிட்டது. சித்த மருத்துவர்களுக்கோ மருந்துகளுக்கோ எந்த அங்கீகாரமும் இல்லாமல்,நிலவேம்பு குடிநீரை  மட்டும் ஆரம்ப சுகாதார நிலையம் வரை எடுத்து சென்றார்கள். நிலவேம்பு குடிநீரின் செயல் திறனை நிறுவுவது இந்திய மருத்துவர்களுக்கு மிக முக்கியம்.ஏறத்தாழ இது ஒரு  புனித பிம்பமாக இன்று மாறிவிட்டது. மக்களின் நம்பிக்கையை பெற ஒரு இறுதி ஆயுதம் என கூட கூறலாம்.  நிலவேம்பின் மீதான தாக்குதல் என்பது இந்திய மருத்துவத்துறை மீதான தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது. இந்த குறியீட்டு தன்மை காரணமாகவே நவீன அறிவியலின் விமர்சனத்தையும் எதிர்கொள்ள நேர்கிறது. வெகுமக்களின் உடலை யார் கைப்பற்றுவது எனும் அதிகார போட்டியாக இது மாறிவிட்டது. நிலவேம்புக்கு சாதக பாதக பிரசாரங்களை இந்த பின்புலத்தின் கொண்டே காண வேண்டும். 

5. நிலவேம்பு குடிநீர் வெகுமக்கள் விநியோகம் 
இந்திய மருத்துவம் என்பதே ஒவ்வொரு மனிதரையும் தனிப்பட்ட அளவில் கணக்கில்கொண்டு மருத்துவம் அளிக்கும் முறை என்பதால் இப்படி வெகுமக்களுக்கு வேறுபாடின்றி விநியோகம் செய்வது அதன் அடிப்படைகளுக்கு விரோதமானது என்றொரு விமர்சனத்தை சில அறிஞர்கள் வைக்கிறார்கள். இது கவனத்தில் கொள்ள வேண்டிய விமர்சனம் என்றே நானும் எண்ணுகிறேன். ஆனால் இந்திய மருத்துவ முறைகள் 'முழுமைவாத' மருந்துகள் நோய்க்குறிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை, அது ஒரு இழிவானமுறை என்பது போன்ற கருத்துக்களில் எனக்கு ஏற்பில்லை. இந்திய மருத்துவம் பல்வேறு அடுக்குகளை கொண்டது. நோய்க்குறி சார்ந்து மருத்துவம் ஒரு சரடாக செவ்வியல் நூல்களில் எப்போதும் தொடர்ந்து வருகிறது. ஆகவே இந்த சித்தாந்த ரீதியான எதிர்ப்பு என்னளவில் பொருட்டல்ல.

6. ஆய்வு சாத்தியங்கள்
தேசிய சித்த மருத்துவ மையம் போன்ற நிறுவனங்களில் விரிவான கள ஆய்வுகளை இத்தனை ஆண்டுகளில் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் இது நிகழவில்லை. இனி வரும் ஆண்டுகளில் ஐயத்திற்கு இடமின்றி செயல்பட வேண்டும். இதுவரையிலான ஆய்வுகள் எதிர்மறையாக எதையும் அளிக்கவில்லை. நோய்தடுப்பு சார்ந்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவரின் கட்டுபாட்டில் இருப்பது வரை விளைவுகளுக்கு மருத்துவர் பொறுப்பாவர். ஆனால் நிலவேம்பு குடிநீர் இன்று பரவலாக பல்வேறு அமைப்புகளால் விநியோகிக்கப்படுகிறது. மருந்தின் தரம், காய்ச்சும் முறை போன்றவை எல்லாம் உரிய முறையில் இருப்பதில்லை. இத்தகைய சூழலில் இதை முறைப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தையே சாரும்.

உணர்வுகளை தள்ளிவைத்துவிட்டு சற்று நிதானமாக என்ன செய்யலாம் என்பதை விவாதித்து பார்க்கலாம்.