Thursday, December 31, 2015

கரையடைந்த களிப்பு

புத்தாண்டிற்கு புத்தாண்டு வந்து பிலாக்கணம் வைக்கக்கூடிய இடமாக இது ஆகிவிட்டது. இருந்தாலும் அப்படி உரிமையோடு எழுதவும் புழங்கவும் ஒரு இடம் வேண்டியதாய் இருக்கிறது. நழுவி சென்ற காலதுண்டை கண் சுருக்கி நோக்குவது ஒரு பயிற்சிக்காக என கொள்ளலாம். கொண்டதும் தவறியதும் எதுவென நோக்கலாம், சுமையழித்தும் புதுசுமை சுமந்தும் முன்நகர வேண்டும். ஒரு மருத்துவனாக இந்தாண்டு ஏற்றதாழ்வற்று சென்றது. சென்னையில் நண்பர்களின் உதவியுடன் வருமாண்டு வடபழனியில் மாதாந்திர ஆலோசனை வழங்கும் திட்டமிருக்கிறது. இவ்வாண்டே துவக்கி இருக்க வேண்டும் மழை கொஞ்சம் சோம்பல் கொஞ்சம் என தயங்கி தள்ளி சென்றது. தனிவாழ்வில் நாங்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த நற்செய்தி கிட்டியது எங்கள் இருவருக்கும் மிகப்பெரிய மனநிம்மதி. வருமாண்டு இருவர் மூவராகும் மகிழ்வான ஆண்டாக இருக்கும். 

காந்தி தளத்தில் எழுதுவது வெகுவாக குறைந்துவிட்டது. ராஜ்மோகன் காந்தி அருந்ததி ராய்க்கு எழுதிய மறுப்புரையை சர்வோதயா இலக்கிய பண்ணை நூலாக வெளிக்கொணர்ந்தது. அந்த எழுபது பக்க புத்தகத்தை எழுதியதோடு சரி. ஆனால் அதைத்தவிர எழுதிய ஒன்றிரண்டு கட்டுரைகளும் கூட காத்திரமாக கொஞ்சம் முனைந்து எழுதியது என்ற வகையில் திருப்தியே. தமிழ் தி இந்து, காலச்சுவடு, காலம் என இவ்வாண்டு தான் அச்சில் என் கட்டுரைகள் வரத்துவங்கியுள்ளது. தேவதச்சன் கவிதையுலகம் பற்றி எழுதிய கட்டுரை ஜெயமோகன் அவருக்காக தொகுத்த நூலில் இடம்பெற்றுள்ளது.  ஜெயமோகன் புண்ணியத்தில் புனைபெயர் உடைபட்டது. சுப்பிரமணியம் ராமசாமி என்றிருந்தால் புனைபெயர் வேண்டும், உங்கள் பெயரே புனைப்பெயர் மாதிரித்தான் இருக்கிறது என்றார் ஜெயமோகன். ஆம் அது என்னவோ உண்மைதான். புனைபெயரில் எழுத ஒரு காரணமுண்டு. என் மேல் படிந்திருக்கும் பிம்பங்களை கடந்து என் எழுத்து எப்படி வாசிக்கபடுகிறது என்றறிய முயன்றேன். காந்தி தளத்தில் கட்டுரைகள் எழுதுபவன், ஜெயமோகனுக்கு அணுக்கமானவன், ஆயுர்வேத மருத்துவன் போன்ற பிம்பங்களுக்கு அப்பால் என் புனைவெழுத்து எப்படி செல்கிறது என அறிய விழைந்தேன். நெருங்கிய நண்பர்களுக்கு தெரியும். சிலருக்கு ஆச்சரியம். பலரும் சீந்தவில்லை. போகட்டும் எல்லாம் நன்மைக்கே. எழுதியது குறைவாகினும் ஓரளவு நிறைவாக இருந்ததாகவே எண்ணுகிறேன். பதாகைக்காக எழுத்தாளர் சு.வேணுகோபால் சிறப்பிதழை தொகுத்தது மிக நல்ல அனுபவம். சிறுகதை பொட்டியை ஒருங்கிணைக்க உதவியதும் கூட செறிவான அனுபவம். சுடச்சுட சக படைப்பாளிகளின் படைப்புகளை வாசித்து அதன் நிறைகுறைகளை அறிந்துகொள்ளுதல் வாசிப்பை நுட்பமாக்கியது. நண்பர் ரா.கிரிதரன் எழுதிகொண்டிருக்கும் நாவலின் (அவர் எழுதிய வரையிலான) பகுதிகளை வாசிக்க நேர்ந்தது மிக நல்ல அனுபவம். வருமாண்டில் மிக முக்கியமான நாவலாக அது இருக்கும். நாள் தவறாமல் வெண்முரசு வாசித்து வருகிறேன். கொஞ்சம் பின் தங்கினாலும் அத்தியாயங்களை சேர்த்து வாசித்து விடுகிறேன். என்ன பிரச்சனை என்றால் நூலாக்கம் பெற்ற பிறகு வெண்முரசு நாவல்களை மீள வாசிக்க இயல்வதில்லை. மீள வாசிக்காமல் நாவலை பற்றி எதுவும் எழுத மனம் ஒப்பவில்லை. மீள வாசித்து அது குறித்து சென்ற ஆண்டை காட்டிலும் இவ்வாண்டு வாசித்தது அதிகம். பயணித்தது மிக குறைவு.  பெரும்பாலும் சென்னைக்கு தொலைக்காட்சி நிகழ்சிகளுக்காக சென்றதும், பாண்டிச்சேரிக்கு ஓரிருமுறை சென்றதும், ஒரு சேலம் பயணம், இரு கோவை பயணங்கள். புதிய இடம் என எங்கும் செல்லவில்லை. வரும் வருடம் இது மாற வேண்டும். 
ஆட்டிசத்தை பின்புலமாக கொண்ட ஒரு நாவலை எழுத துவங்கினேன். அதற்கு ‘நீலகண்டம்’ என தலைப்பும் இட்டேன். நூற்றைம்பது பக்கங்கள் எழுதி இருக்கலாம். சில சிக்கல்களால் அதை தொடர முடியாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டியதாகி விட்டது. மேற்கொண்டு எழுத முடியாத அளவிற்கு மனம் சிக்குண்டது, எழுதுவதை நிறுத்தியதும் பெரும் சோர்வை அளித்தது. அந்த நாவலுக்கான காலம் இதுவல்ல என்பதை மட்டும் மனம் உணர்ந்துகொண்டது. எப்போது இந்த நாவலை எழுதும் துணிவு வரவேண்டும் என்றிருக்கிறதோ அப்போது வரட்டும். ஆனால் ஒரு நாவல் எழுதும் மனநிலை என்ன என்பதை அறிந்துகொண்டேன். போதையூட்டும் அனுபவம் இன்னும் இரு நாவல்களுக்கான கரு இருக்கிறது. அதற்கு அதிக ஆய்வுகள் செய்ய வேண்டியது இருக்கிறது. பார்ப்போம். வருமாண்டு அந்த கனவை நோக்கி பயணிக்க வேண்டும். மேலும் நிலுவையில் உள்ள ஆயுர்வேத நூலை முடித்தே ஆக வேண்டும். அதற்கும் அதிகம் படிக்க வேண்டியது இருக்கிறது. கண்ணில் ஒரு சிறிய பிரச்சனை ஆகவே கணினியில் அதிக நேரம் படிக்க முடிவதில்லை. எழுத மட்டுமே கணினியை பயன்படுத்துகிறேன். மேலும் நேர்த்தியுடன் உழைக்க வேண்டும். திட்டமிட வேண்டும். சென்ற ஆண்டு உடலை பேண வேண்டும் என முடிவெடுத்து ஷட்டில் விளையாட துவங்கினேன். ஒரு நல்ல பழக்கமாக அது என்னுடன் தொற்றிக்கொண்டு விட்டது. கிரிக்கெட்டை தவிர வேறு எதையும் உருப்படியாக விளையாடியது இல்லை நான். வியர்க்க வியர்க்க விளையாடுவது சவாலாக இருக்கிறது. பிடித்தும் இருக்கிறது. இது தொடர வேண்டும். இந்த ஆண்டும் தொடர்ந்து டைரி எழுதியிருக்கிறேன். பெரும் அதிசயம் தான். 

வருட இறுதியில் எனது சகோதரனுக்கு இணையாக கருதும் கல்லூரி ஜூனியர் ஆகாஷின் மரணம் நிலைகுலைய செய்தது. மீண்டுவரவே எனக்கு மூன்று நாட்கள் ஆயின. 
வருத்தங்களுக்கும் துக்கங்களுக்கும் அப்பால் நம்பிக்கையுடன் நடக்க இன்னும் எத்தனையோ இருக்கிறது. 

நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் 

Wednesday, January 21, 2015

இருப்பாய் ராமசாமி நெருப்பாய்


‘பேரன்பு மிக்க
ஆம்ப்ளே ராமசாமிகளே
தாயுள்ளம் கொண்ட
பொம்ப்ளே ராமசாமிகளே
அலைகடலென திரண்டிருக்கும்
அத்துனை ராமசாமிகளே’
அகில இந்திய ராமசாமி மக்கள் சம்மேளனத்தின்
113 ஆவது கிளையின் 14 ஆவது உபகிளையின்
செயலர் ‘சிம்மகுரலோன்’ ராமசாமியார் கர்ஜித்தார்.
‘இதோ இன்றொரு ராமசாமி வஞ்சிக்கப்பட்டு
நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டு,
அச்சுறுத்தப்பட்டு, துன்புறுத்தபட்டு, துரத்தப்பட்டு,
ஓடுகிறான் ஓடுகிறான் ஓடுகிறான்
வாழ்க்கையின் எல்லைக்கே ஓடுகிறான்.
‘ராமசாமிகளே, உண்மையில்,
ராமசாமிகள் அப்படிப்பட்டவர்களா?
நான் கேட்கிறேன், இங்கிலாந்திலே, கிரேக்கத்திலே,
ரோமாபுரியிலே, அமெரிக்காவிலே, அரேபியாவிலே.
எங்கேனும் ராமசாமி இப்படி செய்த வரலாறுண்டா?
இதுவே கிட்டினனசாமிகளும் முனுசாமிகளும்
இப்படி செய்ததாக சொல்லும் துணிவுண்டா இவர்களுக்கு?
பொங்கி எழு புரட்டி எடு’
‘இருப்பாய் ராமசாமி நெருப்பாய்’
 ‘அஹம், அஹம்’ செருமிய தொண்டைக்கு
இதமாக ஜோடா உடைத்து கொடுத்தான் ஒரு ராமசாமி
கேப்பில் ஒரு துண்டுசீட்டை பதுங்கியபடி
கொண்டுவந்து கொடுத்தான் மற்றொரு ராமசாமி
‘மக்கழே, ஒரு மகிழ்சிகரமான செய்தி’
அண்மைய நிலவரப்படி அனைந்திந்திய கணேசன் பேரவையும்,
சர்வதேச பாலமுருகன் சமூகமும், ஐக்கிய கோவிந்தராசு கழகமும்,
இந்திய சாந்திராணி அணியும், தமிழக ஜமுனா சமாஜமும்.
நம் கரத்தை வலுபடுத்தி, ஆதரவு நல்கியிருக்கின்றன,’
அப்துல் காதர்ளும், ஜேம்ஸ்களும், கிருஷ்ணன்களும்,
ஆனந்திகளும், ஆறுமுகங்களும்
ஆதரவளிப்பர் என நம்புவோமாக
ஆம் தோழர்களே இப்போது இது
ராமசாமிகளின் பிரச்சினை மட்டுமில்லை.    

 .