Friday, August 11, 2023

போபால் பயணம் - 2- சாஞ்சி

 


கன்னட எழுத்தாளர் பத்மநாப பட். இந்த பதிவில் இடம்பெரும் புகைப்படங்கள் யாவும் அவர் எடுத்தவையே. 

3 ஆம் தேதி காலை ஜனாதிபதி நிகழ்வை துவக்கி வைக்க வருகிறார் என எங்களுக்கு சொல்லப்பட்டது. பாதுகாப்பின் பொருட்டு எக்கச்சக்க கெடுபிடிகள். கைபேசியை எடுத்துவரக்கூடாது, பை ஏதும் கொண்டுவரக்கூடாது, 11.30 மணிக்கு எல்லாம் விழா அரங்கில் அமர்ந்திட வேண்டும். எங்களுக்கு வேறொரு திட்டம் இருந்தது. என்னோடு  2018 ஆம் ஆண்டு யுவபுரஸ்கார் விருது பெற்ற  கன்னட எழுத்தாளர் பத்மநாப பட் இங்கு வந்திருந்தார். ஒரு நாவலும் சிறுகதை தொகுப்பும் எழுதியுள்ளார். பிரஜாவாணி எனும் கன்னட துவக்க விழா கேட்டு என்ன புண்ணியம், நாம் கிளம்பி சாஞ்சி செல்வோம் என்றான். சிக்கல் என்னவென்றால், நிகழ்விற்கு சுமார் ஐநூறு எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள் , ஒவ்வொருவரும் போபாலில் ஒவ்வொரு இடத்தில் தங்கியிருந்தோம். கவிஞர் சல்மா "வடநாட்டுல  தனியா போறதுன்னா பயம், என்கைனாலும் கூட்டிட்டு போயிடு தம்பி" என சொல்லியிருந்தார். ஆனால் நாங்கள் ஆளுக்கொரு மூலையில் இருந்தோம். இதற்கிடையே எனது விடுதியில் தங்கியிருந்த மது ராகவேந்திரா எனும் கவி எங்களோடு இணைவதாக இருந்தது. மது தஞ்சாவூர் மராட்டிய பின்புலம் கொண்டவர். வளர்ந்தது கொல்கத்தாவில், மணமுடித்திருப்பது அருணாச்சல பிரதேச பெண்ணை, வசிப்பது அஸ்ஸாமில். 

பத்மநாப பட் ஓலாவில் வண்டியை அமர்த்திக்கொண்டு எனது விடுதிக்கு வந்து சேர்ந்தார். இண்டிகா காரில் பின்னிருக்கையில் முடங்கிக்கொண்டு மூவர் அமர்வது சிரமம் என்பதால் மது வரவில்லை. நகரின் மறுமூலையிலிருந்த சல்மாவை அழைத்துக்கொண்டோம். எனக்கும் பத்மநாப பட்டுக்கும் சுமாரான இந்தி அறிவு உண்டு. ஓட்டுநர் கொஞ்சம் ராங்கித்தனம் செய்தார். எப்படியோ சமாதானம் செய்து சென்று வந்தோம். மையசாலையை விட்டுவிட்டு டோல்கேட் இல்லாத சாலையின் வழி அழைத்து சென்றார். மழை தூறி நிலக்காட்சி வெகு அழகாக இருந்தது. நாங்கள் சென்ற சாலையில் ஓரிடத்தில் இங்கு 'டிராபிக் ஆப் கேன்சர்' கடந்து செல்கிறது என அறிவிப்பு பலகை வைத்திருந்தார்கள். விந்திய மலை தொடர் எங்களுடன் வந்தபடி இருந்தது. பீடா வாயர்கள் பானிப்பூரியான்கள் என நாம் பொதுமைப்படுத்தி நக்கலடிக்கிறோம். நாம் நாகரிகத்தின் உச்சத்தில் உள்ள குடிமை சமூகம் எனும் கற்பிதம் நமக்கு உண்டு. தமிழகத்தில் முக்கியமான தொல்லியல் தலங்களுக்கு சென்றிருக்கிறேன். பீர் புட்டிகளும் பிளாஸ்டிக் கப்புகளும் பிஸ்கட் பாக்கெட்டுகளும் இல்லாத தொல்லியல் இடமே இல்லை என சொல்லலாம். என் ஊருக்கு அருகே இருக்கும் திருமயம், குடுமியான்மலை, சித்தன்னவாசல் அனுபவங்களை கொண்டே என்னால் இதை சொல்லிவிட முடியும். சாஞ்சியிலும் சரி பின்னர் சென்ற பிம்பேட்காவிலும் சரி நான் ஒரேயொரு பிளாஸ்டிக் குப்பையை கூட காணவில்லை. பொது கழிப்பறை வெகு சுத்தமாக பராமரிக்கப்பட்டது. இரண்டு மூன்று கிலோமீட்டருக்கு சிறிய பெட்டிக்கடை கூட இல்லை என்பது மிக முக்கியமான காரணமாக இருக்கலாம். யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது என்பதால் அதற்கென சில நெறிமுறைகள் இருக்கக்கூடும் என எண்ணிக்கொண்டேன். சாஞ்சி சிறிய குன்றின் மீது உள்ளது. தூறலில் நனைந்தபடி, ஈரமான சாஞ்சியை கண்டது அபாரமான அனுபவம். ஒவ்வொரு பகுதியைப் பற்றியும் விளக்கமான தகவல்கள் ஆங்காங்கு அளிக்கப்பட்டுள்ளன. கும்மட்டங்களில் ஏறி செல்ல வழி இருக்கிறது. கும்மட்ட வடிவத்தின் பெயர் 'அண்டம்' அதனுள் புத்தரின் சாம்பல் உள்ளதாக நம்பப்படுகிறது. ஸ்தூபிகள் புத்தர் தொடர்பான ஏதோ ஒரு சின்னத்தை தன்னகத்தே கொண்டவை. சாஞ்சி அசோகர் எழுப்பியது. பனிரெண்டாம் நூற்றாண்டிற்கு பின் புழக்கத்தில் இல்லாமல் ஆனது. பின்னர் ஆங்கிலேயர்கள் காலத்தில் 1818 ஆம் ஆண்டு மீண்டும் கண்டடையப்பட்டு மறுநிர்மாணம் செய்யப்பட்டது. பெரும் கட்டிடங்கள் நிறைந்த கோட்டமாக இருந்திருக்க வேண்டும். அடித்தளங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. மூர்த்தங்கள் ஏதுமற்ற கருவறைகள். அமர்ந்து தியானிக்கும் புத்தர் திருவுரு, தலையுடைக்கப்பட்ட புத்தர் உருவம் என பலவற்றையும் கண்டோம். 

Thursday, August 10, 2023

போபால் பயணக்குறிப்பு - உஜ்ஜயினி

சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் சாகித்ய அகாதமி சர்வதேச இலக்கிய விழாவை சிம்லாவில் ஒருங்கமைத்தது. முதல் முயற்சிக்கே உரிய சிற்சில தடுமாற்றங்கள் இருந்தாலும் கூட அது ஒரு நல்ல அனுபவமாகவே இருந்தது. பல மூத்த எழுத்தாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. வேறு மொழிகளில் எழுதும் சில நண்பர்களை கண்டடைய முடிந்தது. உறவுகளை பேணுவதற்கு என்று மெனக்கெடுவது இல்லை என்பது வேறொரு விஷயம். சிம்லாவில் நான் வெளியே எங்கும் செல்லாமல் அமர்வுகளில் பங்கெடுத்தேன். இம்முறை இரண்டாவது சர்வதேச இலக்கிய விழா 'உன்மேஷம்' மத்திய பிரதேசத்தின் போபாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இம்முறையும் பங்குக்கொள்ளுமாறு அழைப்பு வந்தது. 

இம்முறை ஆகஸ்ட் 3 முதல் 6 ஆம் தேதி வரை என நான்கு நாட்களுக்கு விரிவாக்கப்பட்டிருந்தது. ஒன்றாம் தேதியே மதுரையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு டெல்லி சென்று அங்கிருந்து இன்னொரு விமானம் வழியாக இரவு போபால் விமான நிலையம் சென்று சேர்ந்தேன். மதுரையிலிருந்து தாமதமாகவே புறப்பட்டது. விமானம் ஏறுவதற்கு முன் ஒருமுறை பைகளை சோதனையிடுகிறார்கள். ஆகஸ்ட் மாதம் என்பதாலா அல்லது புதிய வழக்கமா என தெரியவில்லை. சென்னையிலிருந்து கூட போபாலுக்கு நேரடி விமான சேவை இல்லை. ஏன் எனத் தெரியவில்லை. அவல் உப்புமாவின் ஒரு வகையை போஹா என சொல்கிறார்கள். ஏதோ ஒரு விமான பயணத்தின்போது தான் முதல்முறையாக உண்டேன். அதன்பின்னர் ஒவ்வொரு விமான பயணத்திலும் அதையே உண்கிறேன். வயிறை படுத்தாத, ருசியான, லகுவான உணவு.  இப்போது உள்ளூர் விமானங்களில் கூட இருக்கைகளுக்கு தனியாக வசூல் செய்கிறார்கள். இலவச இருக்கையாக எனக்கு கிடைத்தது கடைசி வரிசையின் மத்திய இருக்கை. வேறுவழியில்லை.