Monday, April 29, 2019

வெள்ளை யானை - சில வருடங்களுக்கு பின்

கடந்த ஞாயிறு 28.4.19 அன்று தஞ்சை இலக்கிய கூடல் நிகழ்வின் 25 ஆம் நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக வெள்ளை யானை நாவல் குறித்து உரையாற்ற  அழைக்கப்பட்டிருந்தேன். கே.ஜெ. அசோக் குமார் ஒருங்கிணைத்தார். நண்பர்கள் சுரேஷ் பிரதீப், கதிரேசன், கவியரசன், ஸ்ரீ சங்கர் கிருஷ்ணா, ராஜீவ் ஆகியோரும் நிகழ்விற்கு வந்திருந்தார்கள். கலியமூர்த்தி, சுரேஷ்பிரதீப், அருள் கண்ணன் ஆகியோர் நாவல் குறித்து உரையாற்றினார்கள். சுரேஷ் தன் உரையில் வரலாற்றின்மையை உருவாக்குவது எப்படி என்பது குறித்து பேசினார். வாய்மொழி மற்றும் எழுத்து மரபு சார்ந்து டி.தர்மராஜின் கருத்துக்கள் சார்ந்து அவருடைய உரை இருந்தது. படிமங்கள் வழி இந்நாவலை வாசிப்பது குறித்தும் பேசினார். குறிப்பாக தொப்பி, பங்கா போன்றவை எப்படியெல்லாம் உருமாறி வருகிறது. வெள்ளையானை எப்படி வாழ்க்கை பதிவு மற்றும் வரலாற்று நிகழ்வு எனும் இரண்டு வடிவங்களுக்கும் இடையிலான சமரச புள்ளியில் உருவாகி தலித் இலக்கிய பரப்பில் முக்கியத்துவம் பெறுகிறது என்றார். அருள் கண்ணன் வரலாறு மற்றும் புனைவு சார்ந்து சில கேள்விகளை எழுப்பினார். நாவலின் வடிவம் குறித்து சில அவதானிப்புகளை வைத்தார். 
இந்நாவலை மூன்றாம் முறையாக இந்த அரங்கிர்காக வாசித்தேன். முதல் முறை இந்நாவலை ஜெயமோகன் எழுதி முடித்து 'சொல்புதிது' குழுமத்தில் மொத்த நாவலையும் இரண்டு கோப்புகளாக ஏற்றி எல்லோருக்கும் வாசிக்க அனுப்பினார். பிறகு புத்தகமாக ஒருமுறை. ஏறத்தாழ ஒரு வருடம் இப்புத்தகத்தை உருவாக்க அலெக்ஸ் உழைத்தார். வெள்ளை யானை அவருடைய நினைவுகளை கிளர்த்தியது. இன்றும் கட்டு குலையாத சிறந்த புத்தகமாக இறுக்கியது. அதனுள் அவர் பயன்படுத்திய புகைப்படங்கள், அட்டைப்படம் என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தார். ஒரு அக்டோபர் இரண்டாம் தேதி இந்த புத்தகத்தை எனக்கு அலெக்ஸ் கொடுத்தார். 2013 அக்டோபர் சொல்வனம் இதழில் இந்நாவலைப் பற்றிய முதல் மதிப்புரையை நான் எழுதினேன். அப்போது நாவல் பரவலாக வெளிசந்தையை அடைந்திருக்கவில்லை. பின்னர் பாரி செழியன் வெள்ளையானை நாவலுக்காக காரைக்குடியில் ஒரு அரங்கை ஒருங்கிணைத்தார். ஜெயமோகனும் வந்திருந்தார். வெ. அலெக்சின் நினைவுகளுடன் ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு பின் இந்நாவலையும் வாசித்து அக்கட்டுரையையும் திரும்ப வாசித்தேன். 


இது பழைய கட்டுரை. பெரிதும் மாறுபடவில்லை என்றாலும் சில மேலதிக புள்ளிகள் துலக்கமாயின. 

சுரேஷ் பிரதீப் தன் உரையில் கூறியது போல் படிமங்களின் பயன்பாட்டை நானும் இந்த வாசிப்பில் கவனித்தேன். தொப்பி, பங்கா, குதிரை, சாரட் வண்டி என எயடனின் மனநிலையை விளக்குபவையாக அவை நாவலில் உலா வருகின்றன.

யார் அல்லது எது வெள்ளை யானை எனும் கேள்வியில் இருந்து இந்நாவலை வாசிக்கலாம். நேரடியாக சொல்வது போல் அந்த ஐஸ் கட்டி வெள்ளையானை என்பது ஆரம்பக்கட்ட வாசிப்பு. ஒரு வகையில் எடனும் கூட ஒரு வெள்ளையானை தான். மொத்த ஆங்கிலேய காலனிய அரசும் வெள்ளை யானை தான் என வாசிப்பை விரித்து கொள்ளலாம். 

இந்த நாவலை அதிகாரங்களுக்கு இடையிலான போராக வாசித்திருந்தேன். இன்று வாசிக்கையில் இது சுய கண்டடைதல் நாவலாக தோன்றுகிறது. அல்லது கடவுள்களை தொலைத்த கதை. காத்தவராயன் முரஹரி ஐயங்காரை அவன் வணங்கும் பெருமாளின் வடிவில் கண்டு கொண்டதும் வைணவத்திலிருந்து வெளியேறுகிறான். கிறிஸ்துவின் முகம் ரோமானிய சீசரின் முகம் என உணர்ந்து, ஆதிக்கத்தின் முகத்தை கொண்ட கிறிஸ்துவை ஏடன் கைவிடுகிறான். அவனுடைய இயேசுவை ஒரு வெள்ளையானை நசுக்கி கொன்றது என சொல்கிறான். ஒரு பெரும் மாயை அழிவு அவர்களுக்கு நிகழ்கிறது. இதுவே இந்நாவலின் ஆன்மீக ஆதாரப்புள்ளி என தோன்றுகிறது. ஒரு ரஷ்ய நாவல் தன்மையை வெள்ளை யானை அடைகிறது. ஆனால் அங்கிருந்து ஒரு நவீனத்துவ ஆக்கமாக தன்னை வேறுபடுத்தி நிலைநிறுத்தும் புள்ளி என்பது மரிசாவின் பாத்திரத்தினால். குற்ற உணர்வில் ஏடன் மரிசாவை நாடிச் செல்கிறான். ஒருவேளை அவள் அவனை அரவணைத்து மீட்டிருந்தால் இது ரஷ்ய நாவல் தன்மை கொண்டதாக இருந்திருக்கும், அவளுடைய நிராகரிப்பு இந்நாவலின் தனித்துவம் என தோன்றுகிறது. 

எடனின் முதன்மை சிக்கல் தான் ஷெல்லி அல்ல என உணர்ந்து கொள்வது தான். ஷேல்லியாக தன்னை கற்பனை செய்து, அதுவாக ஆக முயன்று தோற்றவன் என்றே எனக்கு பொருள் படுகிறான்.  ஷெல்லி இம்மண்ணில் காலூன்ற முடியாது என உணரும் தருணத்திலேயே அவனிடம் நுண்ணிய மாற்றங்கள் நேர்கிறது. ஆண்ட்ரூ உணவு பெட்டியை வீசிவிட்டு இறங்கி செல்கிறான். ஏடன் திரும்பும் போது மொத்த மானுட இறப்பையும் புள்ளி விவரங்களாக, எண்ணிக்கைகளாக, தகவல்களாக தொகுத்து கொள்ளத் துவங்கிவிடுவான். ஷெல்லி - ஆந்தி கிறிஸ்து ஒப்புமை கவனிக்கத்தக்கது. 

பஞ்ச விவரணை முடிந்ததும் அதற்கு அடுத்த அத்தியாயம் விரிவாக டியுக்கின் அலுவலகத்தை, அவர்களின் ஆடம்பரத்தை சித்தரிப்பதாக அமைந்துள்ளதை இம்முறையே கவனித்தேன். இந்த முரண் மிகச் சிறந்த கதை யுத்தி. 

இரண்டு நெருடல்கள் இந்நாவலில் இருப்பதாக உணர்ந்தேன். ஒன்று, காத்தவராயனை ஏடன் சந்திக்கும்போது இது ஒரு சைவப் பெயர் ஆச்சே, நீர் வைணவர் என்கிறீரே என ஏடன் வினவுவது அவனுடைய பாத்திர வார்ப்பிற்கு முரணானது என தோன்றியது. அவன் இந்திய சமூக அமைப்பை புரிந்து கொள்ள முடிபவனாக இருக்கிறான் எனும் சூழலில் இத்தகைய அறிதல் ஒரு நெருடலை உருவாக்குகிறது. 

ஏடன், பார்மர், ஆண்ட்ரு, பிராண்ணன், போன்றோர் ஆங்கிலேய தரப்பில் மனித நேய பண்பு கொண்டவர்கள். மறு தரப்பாக மெக்கென்சி, டியுக், ரஸ்ஸல் ஆகியோரைச் சொல்லலாம். இந்திய ஆதிக்க சாதியின் முகமாக வரும் முரஹரி ஐயங்கார் மற்றும் நீலமேகம் போன்றோர் ஒரு தரப்பு. சாதி இந்துக்களின் சீர்திருத்தவாத முகமாக எவரும் நாவலில் இடம்பெறாதது ஒரு சமநிலை குறைபாடு என்றே இப்போது வாசிக்கையில் தோன்றுகிறது. 

இவை கடந்து இந்நாவல் ஆறு வருடங்களுக்கு பின்னர் மீள் வாசிப்பு செய்யும்போதும் புதிய தளங்களை திறக்கும் தன்மை கொண்டதாகவே இருக்கிறது. 


Sunday, April 21, 2019

குருதிச் சோறு

பூம்... பூம்பூம்... பூம்...பூம்பூம்... சீரான நிதானத்துடன் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது உடுக்கையொலி. மெல்லிய எதிரொலியாக தூரத்து பறையோசை ஒலித்தது. மருலாளி கண்களை மூடி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவரைப் போல் வேப்பமரத்தடி மேடையில் அமர்ந்திருந்தார். நரைத்த வெள்ளி தலைமயிர், வறண்டு மெலிந்த தேகம். அடர் கருப்பு தேகத்தில் சிறு கீறல்களாக பழுப்பு ரேகைகள் வயிற்றில் ஓடின. காவி வேட்டியும் செவ்வரளி மாலையும் அணிந்திருந்தார். காலுக்கு கீழே நான்கைந்து பிரம்மாண்டமான வெட்டருவாள்கள் கூர்மூக்குடன், அவர் கால்களைத் தீண்டக் காத்திருந்தன. சிவந்த நாக்கை நீட்டி எதையோ விழுங்க காத்திருக்கும் தீ, பந்தத்தின் நுனியில் நின்றுகொண்டு காற்றில் இரை தேடித் துழாவிக் கொண்டிருந்தது.

சபரி கண்களை அகல விரித்து கண்கொட்டாமல் அந்தச் சுடரையே  பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய விழிப்படலத்து ஈரத்தில் தீயொளி மினுங்கிக் கொண்டிருந்தது. பந்தத்திலிருந்து எண்ணெய் வடிந்து சபரியின் காலில் சொட்டியது. ஏதோ ஒரு கெட்ட கனாவிலிருந்து திடுக்கிட்டு விழித்தெழுவது போல் துணுக்குற்றான். காலைத் துடைத்துக் கொண்டான். தோல் சிவந்து எரிந்தது. அங்கே கும்பலில் சூழ்ந்து நோக்கும்  ஒவ்வொரு கண்ணிலும்  அந்தச் சுடர் எரிந்துக் கொண்டிருப்பது போலிருந்தது. 

பக்கத்தில் கைகட்டி கண்மூடி நெகிழ்ந்து பரவசத்தில் விசும்பிக் கொண்டிருந்தார் ராஜம் மாமா. திருநீற்றுப் பட்டை வியர்வையில் கருத்திருந்தது. ஓரத்தில் நின்று கொண்டிருந்த சுப்புணியின் அக்கா ஒருமாதிரி குழைந்து உருகிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் ஏதோ ஒரு ஆணுருவம் ஒரு கையை அக்காவின் பின்னால் கொண்டு சென்றதைப் பார்த்தான். சில நொடிகள் நிலைத்த பார்வையை சபரி அவசரமாக விலக்கிக் கொண்டான். சுடலை ஓரமாக நின்று ஐஸ் சப்பிக்கொண்டிருந்தான்.

கொஞ்சம் காற்று வீசி புழுக்கத்தை துடைத்தெடுத்தது. மரத்தில் கட்டப் பட்டிருந்த இரண்டு கரிய ஆட்டுக் குட்டிகள் கயிற்றை பலம் கொண்ட மட்டும் இழுத்துப் பார்த்து முட்டி மோதிக் கொண்டிருந்தன. இருளில் ஆட்டுக்குட்டிகளின் கண்களும் சுடர்ந்து கொண்டிருந்தன.

“இங்கேர்ரா சபரி... வேணுமா?” சுடலை ஐஸை நீட்டினான்.

சபரி சைகையில் வேண்டாம் என மறுத்தான் . “டே வீட்டுக்கு போவோமா?”
“என்னா பயந்து வருதா… பயந்தாங்கொள்ளி பக்கோடா” கெக்கலித்துச் சிரித்தான்.

மெல்ல பூம் பூம் தாளம் வேகம் பிடிக்கத் தொடங்கியது. பறையொலியும் இப்போது வெகு அண்மையில் ஒலிப்பது போலிருந்தது. மருலாளியின் உடல் மெல்ல ஆடத் தொடங்கியது. மூடிய திரைக்கு அப்பால் கண்கள் குறுக்கும் நெடுக்கும் அலைந்து கொண்டிருந்தன.

“இதெல்லாம் எனக்கென்ன பயம்? எங்கூர்ல நாங்க பாக்காததா...  நேரமாகுதுல அதான்... பாட்டி திட்டும் “

“இன்னும் ஒரு பத்து நிமிஷம் நில்லுடா... நாடகம் பாக்கக்கூட நிக்க வேணாம்... இனிமே தான் இருக்கு சீனே... மருலாளி ஆட்டத்த இனிமேதான பாக்கப்போற...”

சிங்க வாகனத்தில் ஒரு காலை மண்ணில் ஊன்றி, நாக்கை வெளிநீட்டி, கோரைப் பற்கள் தெரிய உக்கிரமாக சிரித்திருந்தாள் காளி. காலுக்கு கீழே ஏதோ ஒரு அரக்கன். கரங்களில் விதவிதமான ஆயுதங்கள். ஒரு கரத்தில் மட்டும் துண்டிக்கப்பட்ட நான்கு தலைகளை மயிரோடு கொத்தாக பிடித்துக் கொண்டிருந்தாள்.  சிமிண்ட் சிற்பத்தில் ஆங்காங்கு மேல்பூச்சு உதிர்ந்திருந்தது. சிங்கத்தின் ஒரு காலில் சிமிண்ட் பெயர்ந்து துரு ஏறிய கம்பிக்கட்டுகூட தென்பட்டது.

பறையோசையுடன் ஊரணியைச் சுற்றி ஊர்வலமாக பானைகளில் அரிசி சுமந்து வந்த மஞ்சள் சேலைப் பெண்கள் சிரமட்டார் காளியின் சன்னதியில் உள்ள மரக்களனில் அரிசியைக் கொட்டிவிட்டு அதிலிருந்து ஆளுக்கு ஒரு கைப்பிடி மட்டும் அள்ளி மருலாளியின் எதிரே கொதித்துக் கொண்டிருந்த உலையில் குலவையிட்டபடி போட்டுவிட்டு நகர்ந்தார்கள். மரக்களனில் சேரும் அரிசியைக் கொண்டு மறுநாள் கஞ்சியும் கறிசோறு படையலும் உண்டு. படையலுக்குப் பின்னர் ஊர் மக்களுக்கு அன்னதானம் செய்வது வழக்கம்.

“முன்ன எல்லாம்... இப்ப மாறி கிடையாது… தீட்டு நின்னுபோன கிளவிங்க மட்டும்தான் கோவிலுக்கு வரலாம். திருழாக்கு மட்டும்தான் அம்புட்டு ஆளுகளும் உள்ளேயே வர முடியும். அப்ப எல்லாம் சோத்துக் களையத்துல வீட்டு பெண்டுக எல்லாம் ஆத்தாவுக்கு ரெண்டு சொட்டு ரத்தம் விடுறது வழக்கம்... குடிக்கிற கூழும் கஞ்சியும் ஆத்தா போட்ட பிச்சையில்ல... எம்புட்டு திருப்புனாலும் கடனை அடைச்சிற முடியுமா என்ன? ஒரு பயபத்தி உண்டா? ஆட்டிக்கிட்டு வந்து அரிசிய போட்டா போதுமா?” ராஜம் மாமாவிற்கு பின்புறம் நின்று கொண்டிருந்த வயசாளிகள் புலம்பிக் கொண்டிருந்தது சபரியின் காதில் விழுந்தது. எவனோ ஒருவன் “பெருசு, கண்ணு நொள்ள ஆனப்புறம்கூட சாமிய பாக்காம ஆட்டிக்கிட்டு வாரத எதுக்கு பாக்குற” என்று உரக்கச் சொன்னதும் இளவட்டங்கள் சிரித்தனர்.

மருலாளியின் உடல் தாளகதிக்கு ஏற்ப ஆடத் தொடங்கியது. மருலாளிக்கு எத்தனை வயது என்று யாருக்கும் தெரியாது. சபரியின் தாத்தாவிற்கு விவரம் தெரிந்த நாட்களிலிருந்தே அவருக்கு தலை மயிர் நரைத்துதான் இருந்ததாம். பல வருடங்களுக்கு முன்னர் ஒருநாள் திடீரென்று அவராகவே ஊருக்குள் வந்து இனி இந்தக் கோவிலை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னதாகவும், குலம் கோத்திரம் ஏதும் தெரியாததால் ஊர் பெரியவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்தபோது பெரிய வைத்தியர் கனவில் ஆத்தா வந்து மருலாளியை அனுமதிக்கச் சொன்னதாகவும் ஊரில் ஒரு கதையுண்டு.

அவர் ஒரு மர்மமான மனிதராகவே அறியப்பட்டார். யாரிடமும் அவராகச் சென்று பேசுவதில்லை. அவ்வப்போது பன்னீர் புகையிலையை வாயில் அதக்கி குதப்பிக் கொண்டிருப்பார். கிராமத்து வயசாளிகள் சிலருடன் அவர் பேசிய காலமெல்லாம் போய் முப்பது நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. குழந்தைகளுக்கு சோறூட்டும்போதுகூட அவர் பெயரைச் சொல்லி பயமுறுத்துவதுதான் வாடிக்கை. ஊர் எல்லையில் இருக்கும் காளியம்மன் திடலுக்கு யாரும் பொதுவாக விளையாடக்கூட போவதில்லை. இந்தப் புறமிருக்கும் மாரியம்மன் திடலுடன் விளையாட்டெல்லாம் முடிந்துவிடும்.  மருலாளி விளையாட்டுதான் அவர்களுக்குப் பிடித்தமான விளையாட்டாக இருக்கும். இளவட்டக் கல் மீதேறி ஒருவர் மாறி ஒருவர் மருலாளியாக நின்று அதிகாரம் செய்து கொண்டிருப்பார்கள். தலையில் வெள்ளைத் துண்டை போட்டுக்கொண்டு பயம் காண்பிப்பார்கள். ஆட்டுக்குட்டிகளை துரத்திப் பிடிப்பார்கள்.

அவருடைய குடும்பத்தைப் பற்றியெல்லாம் இப்போது ஊருக்குள் இருப்பவர்களுக்கு யாருக்கும் எதுவுமே தெரியாது. மாதமொரு முறை ஜான்சி வண்டியில் ஏறி புதுக்கோட்டைக்கு செல்வார் என்பது மட்டும் எல்லோரும் அறிவர். அன்று மட்டுமே அவர் மேல்சட்டை அணிந்து செல்வார். மற்ற நாட்களெல்லாம் ஒரு அழுக்கு வேட்டியைக் கட்டிக்கொண்டு காளியம்மன் கோவில் திடலில் உள்ள வேப்பமரத்தடி மேடையில் படுத்துக் கிடப்பார். அங்கேயே சோறாக்கி சாப்பிட்டுக் கொள்வார். ஊருக்குள் அரிதாகவே வருவார். புதுக்கோட்டையில் அவருடைய சந்ததிகள் இருப்பதாக ஒரு பேச்சுண்டு. ஆனால் அவரைத் தேடி யாரும் ஊருக்குள் வந்ததில்லை. எங்கோ தவசு மலை சித்தர் பீடத்திற்கு அருகே அவரை பார்த்ததாகவும் சிலர் சொல்லக் கேட்டதுண்டு. ஓரிருமுறை ஊரின் இளவட்டங்கள் புதுக்கோட்டையில் அவர் எங்கு செல்கிறார் என ஆராய அவரைப் பின்தொடர முயன்றார்கள். ஆனால் ஜான்சியை விட்டு இறங்கியதுதான் தெரியும் மாயமாய் மறைந்து போவார். விடாப்பிடியாக அவரைத் துரத்தி பிடிக்க முயன்ற ஊர் தலைவரின் மகன் பூவரசனும் அவனுடைய சகாவும் சில வருடங்களுக்கு முன்னர் கோவிலுக்கருகில் இருக்கும் பாம்பாத்து பாலத்தின் அருகே சாலையோரம் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். என்ன நடந்தது என்பது இன்றுவரை பெரும் புதிர்தான்.  அவனிறந்த மறுநாள் அவர்களின் வீட்டு தோட்டத்தில் உடைந்த முட்டையோடுகளையும் கோழி இறகுகளையும் கண்டதாக ஊரார் பேசிக் கொண்டனர். அதன் பின்னர் யாரும் அவரைப் பின்தொடர துணியவில்லை.

தாளம் அடுத்த கட்ட வேகத்தை எட்டியது. விளங்கியம்மன் கோவில் பூசாரி பாண்டியண்ணன் உடுக்கையை  அடித்துக்கொண்டே ஆட தொடங்கினார். சபரியின் கால்கள் அவனை மீறி தாள கதிக்கு ஏற்ப ஆடுவது போலிருந்தன. கண்ணுக்கு எதிரே குளிர்ந்த நதியோன்று சபரியைப் வசீகரித்து அழைத்தது. ஒரு அங்குலம், ஒரு புள்ளி, ஒரு கணம், அல்லது ஒரு மிக மெல்லிய திரை ஏதோ ஒன்று அவனை அந்த நதியில் இறங்க விடவில்லை. மிக அருகில் நின்று கொண்டிருந்தான். நதியின் தெறிப்புகள் உள்ளங்காலில் சிதறி சில்லிடச் செய்தன. கால்களிலும் கரங்களிலும் படர்ந்திருக்கும் பூனை மயிர்கள் குத்திட்டு நின்றன. அதன் ஆழமும் வேகமும் குளுமையும் கருமையும் அவனை ஈர்க்கிற அதே வேளை அவை அவனை அச்சமுறவும் செய்தன. ராஜம் மாமாவின் விசும்பல் கூடிக்கொண்டே போனது. யாரோ இரு பெண்கள் உடலை முறுக்கிக்கொண்டு ஆடத் தொடங்கினார்கள். ஊஊஊய் என அடிவயிற்றிலிருந்து ஒரு கேவல் எழுந்தது. நதி ஒரு சுழிப்பில் பலரையும் வாரிச் சுருட்டிக் கொண்டுவிட்டது.

சுடலை ஓசை நயத்துக்கேற்ப ஆடத் தொடங்கினான். மேலும் பல சுள்ளான்களும் காளையர்களும் நாக்கைத் துருத்தி கண்ணை உருட்டி தாளத்திற்கு ஏற்ப ஆடத் தொடங்கினார்கள்.

“டே...வா... வந்து ஆடுறா” பக்கத்தில் நின்றிருந்த சபரியை நோக்கி உச்ச குரலில் கத்தினான் சுடலை. அவனுடைய குரலும் அதன் தோரணையும் அவனை வேறு ஒருவனாக சபரிக்குக் காட்டியது. சபரி வெளிறி நின்றான்.

“அடிங்க... போடா... போய் சிவன் கோவில்ல கொண்டக் கடலைய தின்னுட்டு நல்லா குசு விடு” சுடலைக் கத்திக்கொண்டே மையத்தில் பறைக்கு முன்னர் ஆடிக்கொண்டிருக்கும் சுள்ளான்களில் ஐக்கியமானான்.

பசிகொண்ட மிருகம் ஒன்று கண் திறந்ததைப் போலிருந்தது. கட்டியிருந்த ஆட்டுக்குட்டியை யாரோ இழுத்துக்கொண்டு வந்தார்கள். சின்னஞ்சிறிய குட்டிகள். குட்டிகளில் ஒன்று “மேமேய்” என்று தீன சுவரத்தில் இழுத்தது. மருலாளி தடுமாறி எழுந்து நின்றார். காலுக்குக் கீழே கிடந்த வெட்டருவாக்களை வரிசையாக அமர்ந்து ஒரு ஏழெட்டு பேர் இரு பக்கமும் பிடித்து அழுத்தினர். பாண்டியண்ணன் ஆட்டுக்குட்டிகளின் முகத்தில் மஞ்சள் நீரை தெளித்தபோது ‘மேய்ய்’ என இரண்டு குட்டிகளுமே மஞ்சள் நீர் கண்ணில் பட்ட எரிச்சலில் தலையை உலுப்பின. தலையை ஒரு சிலுப்பு சிலுப்பி, ஒரு ஆட்டுக் குட்டியை மட்டும் தூக்கி கழுத்தில் போட்டுக்கொண்டு வெட்டருவாக்கள் மீதேறி முன்னும் பின்னுமாக ஆடத் தொடங்கினார் மருலாளி.

கருப்பன் சந்நிதியில் கொளுத்திய சாம்பிராணிப் புகை காற்றில் மந்தமாக கலந்து வந்தது. கிழவர் ஆட்டுக்குட்டியை கழுத்தில் போட்டுக்கொண்டு அதன் கால்களை இறுகப் பற்றிக்கொண்டு கால் மாறி கால் மாறி அருவாள்கள் மீது வெறியாட்டம் போட்டார். ஒரு துளி ரத்தம் வரவில்லை... சபரிக்கு கால்கள் நடுங்கின. ஆனால் வீட்டுக்குப் போகவும் மனமில்லை. நின்ற இடத்தில் அப்படியே நின்று கொண்டிருந்தான். தாளம் அதன் உச்ச கதியை எட்டியபோது, சடாரென்று ஒரு திருப்பில் கழுத்திலிருந்த ஆட்டுக்குட்டியை அப்படியே வாயருகே கொண்டு வந்து ஆட்டின் குரல்வளையில் ஒரே கடி. குருதி பீறிட்டு வழிந்தது. அப்படியே அழுத்தி உறிஞ்சினார். குலவையொலி விண்ணைப் பிளந்தது. குட்டியின் கால்கள் மட்டும் கொஞ்ச நேரம் அந்தரத்தில் காற்றை உதைத்துக் கொண்டிருந்தன. கிழவரின் நரை முடியில் எங்கும் குங்குமச் சிவப்பாக ரத்தம் திட்டு திட்டாக படிந்திருந்தது. பாண்டியண்ணன் அப்படியே அந்தக் குட்டியை வாங்கி கழுத்தறுத்து கொட்டிக்கொண்டிருந்த குருதியை உலையில் கொதிக்கின்ற அரிசிக் கலயத்தில் ஊற்றினான். கொட கொடவென்று ரத்தம் கொட்டி வடிந்தது.  மருலாளி ஆட்டத்தை நிறுத்தவில்லை. ஆனால் வேகம் குறைந்தது. வெட்டருவாக்களை விட்டு குதித்து இறங்கினார். ரத்தச் சிவப்பு கண்களுடன் வெறித்துப் பார்த்தபடி ஆடிக் கொண்டிருந்தார். ஆனால் அவரிடமிருந்து எந்தக் கூச்சலும் எழவில்லை. மிகவும் பரிச்சயமான நதியில் நிதமும் நீந்திக் கொண்டிருப்பவனைப் போல் ஏதோ ஒரு லாகவம். கூடியிருந்த பெண்கள் எல்லாம் அவரை வணங்கிவிட்டு அங்கிருந்து மெல்லக் கலைந்து செல்ல தொடங்கினர். பாண்டியண்ணன் கரண்டியை வைத்து சோற்றைக் கிண்டிக் கொண்டிருந்தார்.

சுடலை களைத்துப் போய் வந்தான். “டே வாடா போவோம்...”
“முடிஞ்சிருச்சா?” ஒருமாதிரி நிதானத்துடன் சபரி கேட்டான்.
“இனியொன்னும் இருக்கு, ஆனா நாம யாருமே பாக்கக் கூடாது... அப்பா சொல்லுவாரு... அதான் கிளம்பி நிக்கறாரு... எல்லாரும் மாரியம்மன் திடல்ல நாடகம் பாக்கப் போறோம்”. திடலின் கோடியில் சைக்கிளில் சுடலையின் தங்கையை முன்கூடையில் அமர்த்திவிட்டு சுடலையின் அம்மாவுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.

“அதையும் பாத்துட்டு போவோம்டா..”
“வேணாம் சாமி... சொன்னா கேளு... நீ பயந்தாங்கொள்ளி இல்லைன்னு ஏத்துக்குறேன்..”
“சரி நீ வேணா போ.. நா பாத்துட்டுதான் போவப் போறேன்,” என்றான் சபரி உறுதியுடன். சுடலை அவனையே முறைத்துப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

சுடலையின் அப்பா வண்டியை தள்ளிக்கொண்டே வந்தார். “அய்யாவு... நீங்க வைத்தியர் வீட்டு பேரனில்ல... இந்நேரத்துல இங்கென வந்தது அப்பத்தாவுக்கு தெரியுமா? உங்க முற கடைசி நாள்தான? இங்க எல்லாம் இப்ப நீங்க நிக்கக் கூடாது. கிளம்புங்க. சுடலை, கொண்டு போய் வீட்டுல விட்டுட்டு ஒழுங்கா பத்து நிமிஷத்துல திடலுக்கு வந்து சேரு. இங்க நிக்கப்பிடாது,” என்று சொல்லிவிட்டு சைக்கிளில் சுடலையின் அம்மா மற்றும் தங்கையுடன் கிளம்பிச் சென்றார்.

கூட்டம் கலைந்தது. பெண்களும் குழந்தைகளும் மட்டுமின்றி அவர்களுக்கு பாதுகாப்பாக வந்த ஆண்களும் அவர்களுடன் சென்றுவிட்டார்கள். சொற்ப எண்ணிக்கையிலான வயசாளிகள் மட்டுமே எஞ்சியிருந்தனர். அவர்களும் ஆங்காங்கு அப்படியே பழங்கதை பேசி உறங்கிப் போவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தனர்.

“பாத்துட்டு தான் போகணும்... வா” சபரி பிடிவாதம் பிடித்தான்.
“டே வேணாம்டா ரெண்டு திருழாக்கு முன்ன சோடாக்கடை வீரமுத்து அண்ணே வீட்டுக்கு விருந்துக்கு வந்த பய இப்படிதான் திருட்டுத்தனமா பாத்தானாம். பேயறஞ்ச மாறி திரியிரானாம். ஆத்தா கோவத்துல அடிச்சிப்புட்டா... இது ஆத்தா சோறு திங்குற நேரம்... வருஷத்துல ஒருநாள் தான் அவ திம்பா…”

சபரி சுடலையின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனான்.
“சரிடா நான் நின்னு தொலையுறேன் ஆனா பாக்க மாட்டேன். நீ பாரு.”
பாண்டியண்ணனும் இன்னும் இருவரும் சூடான சோற்றுக் கலயத்தை சாக்கில் பிடித்து வேப்ப மரத்துக்கு பின்புறம், திடலின் தெற்கு மூலைக்கு கொண்டு சென்றனர். சபரியும் சுடலையும் திடலை சுற்றிக்கொண்டு ஊரணியோரம் சென்று திடலின் மறுகோடியில் இருக்கும் எரழிஞ்சில் மரத்துக்குப் பின்புறம் பதுங்கிக் கொண்டனர். விழாக்கால விளக்குகளின் வெளிச்சத்தில் அங்கிருந்து ஒரு இருபதடி தூரத்தில் நடப்பதை துல்லியமாக பார்க்க முடியும்.

ஐந்தாறு பேர் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். தெற்கு மூலையில் கற்கள் வரிசையாக நின்றன. நடுவாக ஒரு பெரிய கல். இருபுறமும் சிறு கற்கள். கரிய வழுவழுப்பான கற்கள். கருமை என்றாலும் அந்த இருளின் விளக்கொளியில் அதிலொரு லேசான கரும்பச்சை சாயலிருந்ததாக சபரியின் பார்வைக்குப் பட்டது. நடுக் கல்லிலும் இடது பக்கம் உள்ள கற்களிலும் கொஞ்சம் மஞ்சள் பூசியிருந்தது. எல்லா கற்களிலுமே சந்தனமும் குங்குமமும் வைக்கப்பட்டிருந்தன. சுடலை எத்தனை கற்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தான். நீள்வட்ட வடிவிலான நடுக் கல்லில் மட்டும் மேல் பகுதியில் ஒரு சிறிய பிளவு தென்பட்டது. நீள்வட்டத்தின் வளைவில் எவரோ ஒருவர் நுள்ளி எடுத்தது போலிருந்தது.

பாண்டியண்ணன் மணியடித்துக் கொண்டே கற்களின் மீது செவ்வரளிப் பூக்களைத் தூவி, தேங்காய் உடைத்து அதில் குங்குமத்தை தடவி வைத்தார். அதன் பின்னர் அவர் குழைந்த சோற்றைக் கரண்டியில் கிண்டி எடுத்து பெரிய தாம்பாளத்தில் போட்டார். அதுவரை எதுவுமே பேசியிராமல் இறுகியிருந்த மருலாளி ஒருவிதமான ஆவேசம் வந்தவராக நெஞ்சில் அடித்து கூவினார். “ஆத்தா... பசியாறு… ஆத்தா...” அவர் குரல் உடைந்து அழுவது போலிருந்தது. குருதி கலந்த சோறு சட்டென்று பார்க்க கவுனி அரிசி பாயாசம் போலிருந்தது. அதிலிருந்து ஒரு உக்கிர ரத்த வாடை கிளம்பியது. சபரிக்கு குடலைப் பிரட்டிக்கொண்டு வந்தது. சுடலையின் கால்கள் நடுங்கின. 

மருலாளி சோற்றை அள்ளி உதிரியாக்கி வானத்தை நோக்கி வீசி எறிந்தார். கண்ணுக்குப் புலப்படாத பெரும் கரிய இருள் படலமாக ஒரு நாக்கு அப்படியே வாரிச் சுருட்டிக் கொண்டுவிட்டது போலிருந்தது. மணியோசை அன்றி வேறெந்த அரவமும் அங்கு கேட்கவில்லை. “ஆத்தா... பசியாறு… ஆத்தா... எல்லாரையும் சுகம வைய்யி... ஆத்தா... என்ன கூப்பிட்டுக்க ஆத்தா...” ஆவேசமாகக் கூவியபடி இரு கரங்களாலும் சோற்றை அள்ளி வானத்தில் வீசினார்.

ஆகாயமும் நட்சத்திரமும் அசையவில்லை. மரத்து இலைகள்கூட அசங்கவில்லை. முழுவதுமாக துடைத்து எடுத்துக் கொண்டது போலிருந்தது. சபரியும் சுடலையும் உறைந்துப் போனார்கள். சபரிக்கு வயிற்றைப் பிரட்டி எடுத்தது. தலையெல்லாம் கனத்து வலித்தது. தலைக்கும் புடறிக்கும் ஏதோ ஒன்று குறுக்கையும் நெடுக்கையும் ஓடியது போலிருந்தது. இனி ஒரு கணம்கூட நிற்க முடியாது. இருவரும் அங்கிருந்து ஓட்டம் எடுத்தார்கள். அந்த சலசலப்புக்களை அங்கு நின்ற எவரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை.

ஆனால் சபரி மருலாளியின் நோக்கு அவன் முதுகில் நிலைத்திருந்ததாக உணர்ந்தான். 

2
பாலாயி என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். தன்னைக் கைவிட்டுச் சென்ற காத்தமுத்துவை ஆசைதீர வைய வேண்டும் என்பதுதான் உடனடியாக அவளுக்கு தோன்றித் தொலைத்தது. ஆறேழு மாதங்கள் இருக்கலாம். வெள்ளாமை பொய்த்து காடு கழனி போகாமல் அவதிப்பட்ட காலம் அது. பிள்ளைகளுக்கு எப்படியோ ஒருவேளை கேப்பை கஞ்சி காய்ச்சிக் கொடுத்து கொண்டிருந்தாள். கையில் இருந்தது எல்லாம் கரைந்து கொண்டிருந்தது. பிள்ளைகளும் பிள்ளைத்தாய்ச்சியுமான தானும் சீரழிந்து கொண்டிருப்பது தெரியாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் அவனை நினைத்து ஆத்திரப்பட்டாள். வழக்கம் போல் அன்றைய சண்டையும் அவள் அடி வாங்கி அழுவதில் முடிந்தது. அந்த இரவு ஆத்திரத்துடன் கள்ளுக்கடைக்குப் போனவன் திரும்பியே வரவில்லை. என்ன ஆனான் என்று ஒரு சேதியும் இல்லை. ஓரிரு மாதங்கள் ஊருக்குள் இருந்துவிட்டு, பிறகு புதுக்கோட்டை ராஸ்தாவை ஒட்டியிருந்த கம்மாயில் கொஞ்சம் தோண்டினால் ஊற்று நீர் வரும் என்பதாலும், ஊருக்குள் மாரியாத்தா சூறையாடிக் கொண்டிருக்கிறாள் என்பதாலும் குடும்பம் குடும்பமாக கம்மாய் அருகில் குடில் போட்டுக்கொண்டு தங்கினார்கள்.

பெரியவனுக்கும், அடுத்தவனுக்கும், மூத்தவளுக்கும் காய்ச்சல் வந்து விட்டது. ஊரெங்கும் ஊழித் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த மாரியாத்தா அவள் வீட்டிற்கும் வந்து விட்டாள். பெரியவனுக்கு காய்ச்சலுடன் கழிசலும் சேர்ந்து கொண்டது. தாய்ப்பால்தான் கடைசியில் கரிய திரவமாக, குருதி கலந்த காட்டுப்பீயாக வரும் என்று சொல்வார்கள். உடல் வெளிறி ரத்தம் வடிந்து வெயிலில் உலர்ந்த இளம் தளிராகக் கிடந்தான். பெரியவளும் மயங்கி விட்டிருந்தாள். நான்காண்டுகளுக்கு முன் பெய்த பெருமழைக்குப் பின்னர் பசியோடு ஊர் புகுந்த மாரியாத்தா அவளின் மூன்று பிள்ளைகளின் குருதியைக் குடித்து கொண்டு போயிருந்தாள். இன்னும் அவளின் தாகம் தீரவில்லை போலும்.

குழந்தை ஓயாமல் வீரிட்டு பாலுக்கு அழுகிறான். பிள்ளைகளின் காய்ச்சல் முனகல்கள் வேறு. ராஸ்தாவை ஒட்டி இடம் பெயர்ந்ததும் நன்மைக்குதான். ராஸ்தாவைக் கடந்து செல்லும் வண்டிகளில் இருந்து சில நேரங்கள் ஏதாவது கிடைக்கும். அரிதாக அப்பக்கம் கோச்சு வண்டிகளில் துரைமார்களும் வருவதுண்டு. தானிய மூட்டைகள் ஏற்றிக்கொண்டு வரும் வண்டிக்காரர்கள் அவ்வப்போது மனம் கனிவதுமுண்டு. நெல்லு மூட்டைகள் எல்லாம் நாகப்பட்டினம் செல்வதாகப் பேசிக்கொண்டனர். அதைக் கொண்டுதான் அவளும் அவளுடைய பிள்ளைகளும் தாக்கு பிடித்துக் கொண்டிருந்தனர். ஊருக்குள் தினமும் பிணங்கள் விழுந்த வண்ணமிருந்தன. கூட்டம் கூட்டமாக மக்கள் எங்கோ சென்றுகொண்டே தானிருந்தார்கள். 

பாலாயி அழுது கொண்டிருந்தாள். பெரியவன் மேல்மூச்சும் கீழ்மூச்சும் வாங்கிக் கொண்டிருந்தான். கண்கள் சொருகி, கைகால்கள் உதறி அப்படியே உறைந்து போனான். கண்ணீர் பொங்கி வந்தது. அவளுக்கு அதிக நேரமில்லை. பெரியவனை உலர்ந்த பனைமட்டையில் சாய்த்து இழுத்துச் சென்று வறண்ட கம்மாயின் ஓரம் கிடத்திவிட்டு ஓடி வந்தாள். குழந்தை அழுது கொண்டிருந்தான். அவளுடைய முலைகள் காய்ந்த சுரைக்குடுவை போல் உலர்ந்திருந்தன. பாலூறவில்லை. அதற்குள் பெரியவளும் மூச்சு வாங்க தொடங்கினாள். கண்கள் சொருகின. அருகில் சென்றமர்ந்து அவளுக்கு வாய் நீர் அளித்தாள். நீர்க் கொப்பளங்கள் வெடித்து வழிந்ததுடன் இறுதி மூச்சும் விட்டகன்றது.

மாரிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதாள். அவளையும் இழுத்து சென்று கம்மாயில் மகனுக்கு அருகே கிடத்தச் சென்றாள். அவள் காலடி கேட்டவுடன் குறுங்காட்டுக்குள் சலசலப்பு ஏற்பட்டு மறைந்தது. மணி வெளிச்சத்தில் ஒளிச் சுடர்களாக புதருக்கு அப்பால் சில விழிகள் தென்பட்டன. சுள்ளிகளைப் பொருக்கி எரியூட்ட வேண்டும். உலர்ந்த மரங்களை வெட்டி விறகு எடுக்கலாம். குடிலுக்கு திரும்பி வெட்டருவா கொண்டு வருவதற்குள் பெரியவனின் பிணத்தைக் கவ்வி இழுத்துச் செல்ல இரண்டு நாய்கள் வந்துவிட்டன. ஊன் பற்கள் தெரிய அவளைப் பார்த்து உறுமின. மேலும் இரண்டு மெலிந்த நாய்கள் புதரிலிருந்து ஓடி வந்தன. கீழே கிடந்த கற்களை எடுத்து வீசினாள். ஆனால் அவை சற்றே பின்வாங்கி மீண்டும் முன்னால் ஓடிவந்தன. அவள் சற்று பின்னகர்ந்தவுடன் இன்னும் இரண்டு மூன்று மூச்சொலிகள் கேட்டன. கண்ணீர் பொங்கி வழிந்தது. கற்களை வீசினாள். தலையில் அடித்துக்கொண்டு அழுது அரற்றினாள்.

எதையாவது செய்து பிள்ளைகளைக் காப்பாற்றியாக வேண்டும். அது மட்டுமே அவளுடைய மனதை முழுவதுமாக நிறைத்தது. இரவு நெஞ்சுக்குள் சூழ்ந்த இருளையும் அடர்த்தியாக்கியது. ராஸ்தாவைப் பார்த்து அமர்ந்திருந்தாள். ராஸ்தாவில் மாட்டுவண்டிகள் வருவதை கேட்க முடிந்தது. சில ஒளி பொட்டுக்கள் தொலைவில் தென்பட்டன. தன்னுள் ஆழ்ந்து இருந்தாள். எப்போதும் போல் வண்டியோட்டிகளை இறைஞ்சுவதற்கு அவளுக்கு விருப்பமில்லை. விதியை எண்ணி மருகி கொண்டிருந்தாள். தூரத்தில் நாய்கள் குரைத்து கொண்டிருந்தன. நாய் ஒன்று எதையோ கவ்விக்கொண்டு குறுக்கே ஓடி சென்றது. அதை துரத்திய நாய்களுக்கு பிடி கொடுக்காமல் புதருக்குள் சென்று மறைந்தது.

நெல்லு மூட்டைகளை அடுக்கிக்கொண்டு வரிசையாக ஏழெட்டு மாட்டு வண்டிகள் வந்து கொண்டிருந்தன. சில காலடிகள் கேட்டன. முதல் வண்டியில் செல்லும் வண்டியோட்டியிடம் சிலர் கெஞ்சிக் கொண்டிருந்தனர். சட்டென்று அவள் உடல் பரபரத்தது. புதரோரம் இருளில் நடந்து கடைசி மாட்டு வண்டி மேல் சத்தமின்றி ஏறினாள். வண்டிக்காரர்கள் அரைத் தூக்கத்தில் இருந்தார்கள். இரண்டு மூட்டைகளை சேர்த்து வேகவேகமாக கயிற்றால் பிணைந்தாள். சத்தமின்றி குதித்திறங்கி பக்கவாட்டில் இருந்த வாகை மரக்கிளையில் கயிற்றை வீசி அதன் மறு நுனியை பலம் கொண்ட மட்டும் இழுத்தாள். அவ்விரண்டு மூட்டைகள் அந்தரத்தில் தொங்கின. கைகள் மரத்து மூட்டை கனத்து கீழே விழுந்தன. வண்டிகள் தூரத்து ஒளிப் பொட்டுகளாக எங்கோ சென்று கொண்டிருந்தன.

oOo

மழை பொய்த்து ஆண்டுகள் மூன்றாகிவிட்டன. எச்சிலைச் சப்பிச் சப்பி உலர்ந்த உதடுகளை ஈரப்படுத்திக் கொள்ள பிள்ளைகளும் இந்த நாட்களில் பழகிவிட்டார்கள் என்று எண்ணிக் கொண்டார் வைத்தியநாதன். நான்கு பிள்ளைகளையும் பாரியாள் கமலத்தையும் அழைத்துக் கொண்டு, அவர்களின் ஒற்றைக் கறவை பசுவான பாக்கியத்தையும் இழுத்துக்கொண்டு நாவலூரில் இருந்து புறப்பட்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. எத்தனையோ ஆண்டுகளாக வாழ்ந்து வந்த முன்னோர் பூமியை விட்டகன்று வருவது அத்தனை எளிதாக இருக்கும் என்று அவர் எண்ணியிருக்கவில்லை. ஆனால் அவருடைய முதிய தந்தை சதாசிவம் வேறு முடிவை எடுத்துவிட்டிருந்தார். “ராஸ்தால அனாதையா சாக எனக்கு முடியாது... இந்த மண்ணுலேயே உரமாகிப் போறேன்… என்ன விட்டுடு” என்று தழுதழுத்தபடி பிடிவாதமாகச் சொன்னார். ஒருபோதும் தன்னால் இப்படி பிடிவாதமாக இருந்துவிட முடியாது என்பதை வைத்தி உணர்ந்தார். அதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும்.

புதுக்கோட்டை மகாராஜாவின் சமஸ்தானத்தில் காரியதரிசியாக இருக்கும் மைத்துனன் பஞ்சாபகேசன் அங்கு கோவில் காரியம் பெற்றுத் தருவதாக எழுதி இருந்தான். அரிசி மாவையும் பொடித்த பனை வெல்லத்தையும் கட்டிக்கொண்டு கிளம்பினார்கள். ஊரெங்கும் விஷக் காய்ச்சலுக்கு பலி விழுந்து கொண்டிருந்தது. கிராமங்களைக் காலி செய்துகொண்டு மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறினார்கள். ராமேஸ்வரம் ராஸ்தாவில் ஆங்காங்கு மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் எங்கோ பெயர்ந்து சென்று கொண்டிருப்பதை காண முடிந்தது. அவ்வப்போது கடந்து செல்லும் கோச்சு வண்டிகளும் குதிரை வண்டிகளும் எதையும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை.

பாக்கியம் மேய்வதற்கு காய்ந்த சருகுகள்கூட வழியில் அகப்படவில்லை. மெலிந்து வற்றிக் கொண்டிருந்தாள். நெஞ்செலும்புகள் துருத்தி தெறிந்தன. வயிறு பக்கவாட்டில் புடைத்துச் சரிந்திருந்தது. வாயில் நுரை ததும்ப நடந்து வந்தாள். பிள்ளைகள் சோர்ந்து தள்ளாடி நடந்து வந்தனர். சின்னவளுக்கு உடல் காந்தத் தொடங்கியது. அவளைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு நடக்க வேண்டியிருந்தது. வரும் வழியில் இருந்த இரண்டு நகரத்தார் அன்ன சத்திரங்களும் நிரம்பி வழிந்தன. அரிசி மாவைக் குழந்தைகளுக்கு எப்படியோ பங்கிட்டு அதுவரை சமாளித்தாகி விட்டது. யாசித்த குடிநீரைக் கொண்டு வைத்தியநாதனும் கமலமும் இழுத்துப் பிடித்து கொண்டு வந்தார்கள். பாக்கியம் காலையில் நீர் வைத்தபோது அருந்தவில்லை என்றபோதே அவர் அஞ்சத் தொடங்கினார். பாக்கியம் கால் நொடிந்து கீழே சாய்ந்து விழிகள் மருண்டு எதையோ நோக்கிக் கொண்டிருந்தாள். உரக்க ஓலமிடக்கூட அவளிடம் தெம்பில்லை. புட்டத்தில் தட்டி அதை எழுப்ப முயன்றார். ஆனால் நகரக்கூட இயலவில்லை. வயிறு மட்டும் மேலேயும் கீழேயுமாக ஏறி இறங்கியது. குழந்தை அழத் தொடங்கினாள். கமலத்தின் கன்னத்தில் வழிந்திறங்கிய நீர்த் திவலைகள் பெரியவனின் தலையில் சொட்டின.

காத்திருக்கலாமா எனும் குழப்பத்தில் கமலத்தை நோக்கினார் வைத்தியநாதன். “வேண்டியதில்ல… போவோம்” என்றாள் கண்ணீரை துடைத்து கொண்டு. பாக்கியத்தின் மருள் விழி எங்கோ நிலைத்திருக்க அவளை அங்கேயே விட்டுவிட்டு நகர்ந்து சென்றார்கள். வைத்தியநாதனுக்கு சதாசிவத்தின் நினைவுதான் வந்தது. 

வெயில் தாழ்ந்து நிழல்கள் நீளத் துவங்கின. விடிந்தால் எப்படியும் புதுக்கோட்டையை அடைந்துவிடலாம். மெல்ல நம்பிக்கை ஊறத் தொடங்கியது. இரவு எங்காவது ஒடுங்கிக் கொள்ள வேண்டும். குழந்தைகள் அழத்தொடங்கியபோதுதான் கமலம் கவனித்தாள், அரிசி மாவு சம்புடத்தை காணவில்லை என்பதை. அவளுக்குள் திகில் பரவியது. இந்த அத்துவானக் காட்டில் என்ன செய்வது, எங்கு செல்வது என்று தெரியாமல் பயம் அவளை கவ்வியது. வைத்தியநாதன் குழந்தைகள் விடாமல் அழுவதைக் கேட்டவுடன் ஏதோ ஒன்று தப்பாகி விட்டது என்பதை உணர்ந்துகொண்டார். கமலம் அழுதபடியே நடந்ததை சொன்னாள். அநேகமாக ஏதோ ஒரு அன்னச் சத்திரத்தில்தான் அது களவு போயிருக்க வேண்டும். இனி செய்வதற்கு ஏதுமில்லை. ஏற்கனவே அப்பிள்ளைகள் அரை வயிறும் கால்வயிறும்தான் உண்டு வருகிறார்கள். இன்றிரவு பட்டினியை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாமல் போகலாம். யாசகம் கேட்கக் கூட எவருமில்லை.

கொஞ்சம் தொலைவில் ஏதோ வெளிச்சம் தென்பட்டது. மனிதர்கள் நடமாட்டத்தைக் காண முடிந்தது. ஏதோ ஒரு நம்பிக்கை அவருக்குள் பிறந்தது. கால்கள் இயல்பாகவே வேகம் கொண்டன. குழந்தைகள் அழுதழுது சோர்ந்திருந்தன.

oOo

பாலாயியின் பிள்ளைகள் எப்படியோ பிழைத்துக் கொண்டார்கள். தனக்கு தேவையானது போக மீதியை அக்கம்பக்கத்தில் பகிர்ந்து கொண்டாள். செய்தி ஆங்காங்கு பரவி ஐந்தும் பத்துமாக ஜனம் இருளில் அவளைத் தேடி வந்தனர். அவளும் இல்லை என்று சொல்லாமல் ஒருபடியோ அரை படியோ, இருப்பதைக் கொடுத்தனுப்பினாள். ஏழெட்டு இரவுகள் அவளுடைய வேட்டை தொடர்ந்தது. எங்கிருந்து வருகிறது, அவளுக்கு எப்படி இது கிடைத்தது போன்ற கேள்விகளை எவரும் எழுப்பவில்லை. எதையோ தின்று அன்று பிழைத்திருந்தால் போதும் என்றானது. வேறு குடிகளும்கூட அவளுதவியை நாட துவங்கினார்கள். இருளில்தான் இப்பரிவர்த்தனைகள் நடந்தேறின.

ஒன்பது நாட்கள் வரையும் எதுவும் பிரச்சனை இல்லை. அதற்கு பின்னர் ஊர் முழுக்க பேச்சு பரவியதும்தான் சிக்கல் வந்தது. புதுகோட்டைக்கு செல்லும் சில வழிப்போக்கர்களும் காற்று வாக்கில் அவளைப் பற்றி அறிந்து கொண்டு அவளிடம் கஞ்சி குடித்து வாழ்த்திவிட்டுச் சென்றார்கள். வாரத்திற்கு ஒருமுறை அரசாங்க கிட்டங்கியில் கணக்கெடுக்கும்போது மூட்டைகள் குறைந்திருப்பதை கவனித்து கலங்காப்புலி ரங்கசாமி அம்பலத்திற்கு அவசர கடிதம் கொடுத்தனுப்பினார் கப்பல்கார துரை. அம்பலம் வண்டிக்காரர்களிடம் விசாரித்தால் எவருக்கும் ஒன்றும் தெரியவில்லை. அம்பலம் வடிவேலுவை காவலுக்கு அனுப்பினார். வடிவேலுவும் அவனுடைய சகாவும் வண்டிகளை கொஞ்சம் தொலைவிலிருந்து கண்காணித்தபடி குதிரையில் வந்தார்கள்.

oOo
வைத்தியநாதனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பிராமணர்கள் அன்றி பிறரிடம் உணவு யாசித்ததும் இல்லை உண்டதும் இல்லை. இந்தப் பெண்ணிடம் எப்படி கேட்பது என்று அவருக்கு குழப்பம். ஆனால் குழந்தைகள் அரை மயக்கத்தில் இருந்தன. எவரும் எதுவும் அறியப் போவதில்லை. அக்குடிலின் வாயிலில் நின்று நாலைந்து பேர் சேலையிலும் வேட்டியிலும் எதையோ முடிந்து கொண்டு போவதை பார்த்தார், கமலம் சொன்னாள், “அன்னம் கொடுக்குறவள் அம்பாள் மாதிரி. குழப்பிக்க வேண்டாம்”. கண நேர தயக்கத்திற்கு பின்னர் சாலை கடந்து இருளுடன் நிழலாக அவள் குடில் வாயிலுக்கு வந்தார். “அம்மா...” என்றவர் அழைத்தபோது கடைக்குட்டிக்கு பாலூட்டிக் கொண்டிருந்தாள். மெல்ல எழுந்து வெளிய வந்தாள். “அம்மா… குழந்தை…” அவர் குரல் உடைந்து மேற்கொண்டு பேசாமல் நின்ற கோலத்தை பார்த்தவுடன் அவளுக்கு எல்லாம் புரிந்தது. எதிர்சாரியில் நின்றிருந்த கமலத்தையும் பிள்ளைகளையும் பார்த்தாள். எதையும் சொல்லாமல் குடிலுக்குள் கிடந்த மூட்டை ஒன்றை இழுத்து வந்து போட்டாள்.

“சாமி... எவ்வளவு வேணுமோ எடுத்துக்குங்க… நான் உள்ள தொடலை. தீட்டு இல்லை. நீங்களே எடுத்துக்குங்க” என்று பிரிக்காத மூட்டையை காண்பித்தாள். அவருக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. “அம்மா சாப்ட்டு நாளாறது” அவள் சட்டென்று, “கஞ்சிதான் கெடக்கு சாமி, நீங்க அதெல்லாம் பசியாறுவிகளா?” என்றாள் தயங்கிக்கொண்டே. பதிலேதும் சொல்லாமல் கைகட்டி தலைகுனிந்து கை மடக்கி நின்றார். உள்ளே சென்றவள் ஒரு மண் கலயம் நிறைய கஞ்சி கொண்டு வந்தாள். தேங்காய் சிரட்டையை எடுத்து கொடுத்துவிட்டு “பசியாறுங்க சாமி” என்றாள்.

oOo
வடிவேலுவும் அக்கம்பக்கத்தில் கவனித்து விசாரித்து கொண்டே வந்தான். பாலாயி குடிலில் பலரும் தானியத்தை வாங்கிச் சென்றதைப் பற்றி அறிந்தவுடன் அவனுடைய ஐயம் வலுவடைந்து கொண்டே இருந்தது. பிராமண குடும்பம் அவளிடம் கஞ்சி வாங்கி குழந்தைகளுக்கு ஊட்டியதை மறைவில் இருந்து கவனித்தான். பாலாயி கைக்குழந்தையை கொண்டு போய் பக்கத்தில் கொண்டு விட்டு வந்தாள். அன்றிரவு அவள் கயிற்றுடன் வண்டியில் ஏறி மூட்டைகளை இழுத்துக்கொண்டு குடிலுக்குச் செல்வதை புதரில் மறைந்து கவனித்தான். அங்கு ஆட்கள் வந்து போவதையும் உளவு பார்த்தான். அவள் இல்லாதபோது அவளுடைய குடிலுக்குள் சென்ற வடிவேலு அங்கு ஒரு நெல்லு மூட்டை பிரிக்கப்படாமல் உள்ளதைக் கண்டதும் எல்லாவற்றையும் உறுதிப்படுத்தி கொண்டான். அவளுடைய நான்கு பிள்ளைகளும் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

வடிவேலுவும் அவனுடைய சகாவும் அவள் வீட்டிற்குள் செல்லும்வரை மறைந்திருந்தனர். அவள் உள்ளே சென்றதும் பந்தத்தில் நெருப்பு கொளுத்தி கூரையில் வீசி எறிந்துவிட்டு வாயிலுக்கருகில் காத்திருந்தான். உலர்ந்த கீற்று காற்றுடன் சேர்ந்து திகுதிகுவென எரிந்தது. வாயிலுக்கு அவள் ஓடி வந்ததும் “திருடி திங்கிரியா? சிறுக்கி முண்டை. தருமம் வேற?” என்று கத்தியபடி குதிரைச் சவுக்கால் கழுத்தை இறுக்கி உள்ளே தூக்கிப் போட்டார்கள். தீ சுற்றிப் படர்ந்து ஏறி எல்லாவற்றையும் உண்டு செரித்தது.
பெருமழையோசையுடன்தான் மறுநாள் பொழுது விடிந்தது. நள்ளிரவில் தொடங்கிய மழை ஓயவே இல்லை. மேகங்கள் திரண்டு கருத்து உச்சியில் நின்றன. காற்றும் இடியும் இல்லாத சீரான மழை. மழை நீரில் குடிலின் சாம்பல் கரைந்து நீரில் கருமை ஏறி இருந்தது. அத்தனை நாள் பெய்யாத மழை. ஊழிக் காலத்து பெருமழை. கடவுளின் கருணையா கோபமா என்றறிய முடியாமல் பெய்தது.

3
அன்று சிரமட்டார் காளியம்மன் திருவிழாவின் கடைசி நாள், பிராமண மண்டகப்படி. வைத்தியர் வீடு அதகளப்பட்டது. வைத்தியர் குடும்பத்து பங்காளிகள் எந்த மூலையில் இருந்தாலும் ஆடிக் கிருத்திகை அன்று ஊருக்கு வந்துவிட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஏனெனில் அன்று அவர்கள் குடும்ப தெய்வமான அன்ன சௌரக்ஷாம்பிகைக்கு நோன்பு கொண்டாடுவது வழக்கம். அதன் பின்னர் அனைவரும் கலந்துகொள்ளும் சமபந்தி விருந்தில் வீட்டாரே சமைத்து தங்கள் கையால் பரிமாற வேண்டும். அதிசயமாக இந்த முறை இரண்டு திருநாள்களும் ஒரே நேரத்தில் வந்துவிட்டன. மற்ற நாட்களில் மடிப் பைத்தியங்களாக திரியும் குடும்பத்தார் அன்றொரு நாள் மட்டும் நடிப்பது சபரிக்கு வேடிக்கையாக இருக்கும். 

சபரிக்கு முழுமையாக நினைவு திரும்பி அன்றோடு நான்கு நாட்கள் ஆகின்றன. சுடலைக்கு வாந்தி பேதியாகி வைத்தியரிடம் மருந்து சாப்பிட்டு கொஞ்சமாக தேறியிருந்தான். சபரி அவ்வப்போது கண்விழித்துப் பார்த்தான். ஏதேதோ அரற்றினான். சபரியின் அப்பா முதல் நாள் வந்து அவனைக் கொஞ்சியதுகூட அவனுக்கு மங்கலான நினைவுகளாக எஞ்சியிருந்தன.

மெட்ராஸ், ஆஸ்திரேலியா, சவுதி, புதுக்கோட்டை என உலகின் வெவ்வேறு கோடிகளில் வாழும் அத்தனை பங்காளி குடும்பங்களும் ஒன்று கூடியிருந்தார்கள். பூஜை முடிந்து சமபந்தி விருந்து தொடங்குவதற்கு முன்னர் சபரியின் தாத்தா மருலாளிக்கு மரியாதை செய்வது வழக்கம். புது வேட்டியும் துண்டும் நூறு ரூபாயும் கொடுப்பார். ஒரு காலத்தில் நெல்லு மூட்டை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். வைத்தியர் விவசாயத்தைக் கைவிட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. மேலும் ஏழாம் திருநாளில் சேகரிக்கப்படும் அரிசியில் மறுநாள் அன்னதானத்திற்கு போக ஓராள் ஒரு வருடம் வைத்து சாப்பிட போதுமானதாக இருக்கும்.

சபரிக்கு விடாமல் காய்ச்சல் அடித்துக் கொண்டிருந்தது. சுதர்சன குளிகையும் அம்ருதாரிஷ்டமும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுக்கச் சொல்லியிருந்தார் வைத்தியர். அரிஷ்டம் உள்ளே இறங்கியவுடன் காய்ச்சல் குறைந்து வியர்த்து விழிப்பான். மீண்டும் காய்ச்சல் ஏறிவிடும். சபரி விழிப்புக்கும் உறக்கத்திற்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருந்தான்.  லலிதா சகஸ்ரநாமம் அவன் காதில் விழுந்தது. ஏதேதோ அம்மன் பாடல்கள் பாடப்பட்டன. அன்னரக்ஷாம்பிகை அஷ்டோத்தர நாமாவளியை தாத்தா வாய்விட்டு சொல்லிக் கொண்டிருந்ததை அவனால் கேட்க முடிந்தது.

அக்கரையில் உள்ள அம்மா அழைக்கிறாள். குளிர்ந்த கரிய நதி நீரின் மீது கால் நனையாமல் தரையில் நடப்பதுபோல் நடக்கிறான். பாதி வழியைக் கடக்கும்போது சடாரென்று ஒரு சுழல் வாய் பிளந்து அவனை விழுங்கிச் சுருட்டிக் கொண்டது போல் ஒரு கனவு. உடலெல்லாம் ஈரமாகியிருந்தது. மணியோசை கேட்டது. சபரியின் அப்பா அவனை மெதுவாக அமர செய்தார். கண்ணில் தீபத்தை ஒற்றி எடுத்தார். நெற்றியில் வழிந்த வியர்வையை புறங்கையால் வழித்து விட்டார்.

“வேர்த்திருக்கு. ஜுரம் விட்டுடுத்து” என்றார்.

“சபரி கண்ணா… வா… செத்த நாழி உக்காந்து கதை கேளு, அம்பாளுக்கு நமஸ்காரம் பண்ணு, எல்லாம் சரியாயிடும். வாடா கண்ணா…” சபரியின் பாட்டி அவனை அழைத்தார்.

சபரி தலை தூக்கி எழுந்து நின்று நான்கு நாட்கள் ஆனதாலோ என்னவோ தலைக்குள் வீர் வீர் என்று ஒரே சமயத்தில் நான்கைந்து ரயில்கள் பாய்ந்து கொண்டிருந்தது போலிருந்தது.

“அவன் அங்கேயே உக்காரட்டும், கதை சொல்லி முடிஞ்சப்புறம் நமஸ்காரம் பண்ணும்போ கூட்டீட்டு வந்துக்கலாம். குழந்த எழுந்து உக்காந்து நாளாறது இல்லையா, தலையெல்லாம் கிண்ணுன்னு இருக்கும்” என்றார் சபரியின் தாத்தா.

சபரியின் பாட்டி கதை சொல்ல ஆயத்தமானாள். சபரி பலமுறை கேட்ட கதைதான். ஆனால் இம்முறை சரியாக கண் திறக்க முடியாததாலோ என்னவோ கதை அவன் கண்ணுக்கு முன்னர் காட்சிகளாக ஓடத் துவங்கின.
அனைவரும் சுற்றி அமர்ந்திருக்க பாட்டி தொண்டையை இருமுறை செருமிக்கொண்டு, அம்பிகையை மனமார வணங்கி, குடும்பத்தின் மூத்த சுமங்கலியான பாட்டி  நோன்பு கதை சொல்லத் தொடங்கினாள்

“மனுஷாள் எல்லாம் சண்டை சச்சரவு இல்லாம, அரச வாக்கை தெய்வ வாக்கா ஏத்துண்டு தெய்வ நம்பிக்கையும் தர்ம சிந்தனையும் எல்லா மனுஷாளுக்கும் இருந்த ஏதோ ஒரு யுகத்துல”
“உம்”
“அழகாபுரி அழகாபுரி பட்டணம்ன்னு ஒரு ஊரு, அத அழகேச மகராஜன் நெறி தவறாம ஆண்டு வந்தான்”
“உம்”
“பகவானின் அனுக்ரகத்தினாலே மாதம் மும்மாரி பொழிஞ்சு, மனுஷாள் மனசெல்லாம் நெறஞ்சு சந்தோஷமா இருந்தா… நாடும் மக்களும் சுபமாகவும் சுபிக்ஷமாகவும் இருந்துண்டு இருக்கறச்சே”
“உம்”

oOo
(சுவாமி ஸ்வபோதானந்தர் எழுதிய “ஸ்ரீ அன்ன சௌரக்ஷாம்பிகை ரத்ன மாலா” நூலிலிருந்து)  

முன்பொரு காலத்தில் பூலோகத்து மானுடர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக வாழ்ந்த பரத கண்டத்தைக் கடந்து ஆகாய மார்க்கமாகச் சென்றான் நாரதன். மனிதர்கள் மகிழ்ச்சியாக இருப்பது அவனை நெருடியது. மகிழ்ச்சியில் திளைக்கும் வரை மானுடர்களுக்கு பரம்பொருள் நினைப்பு வருவதில்லை. துக்கம் அல்லவா அவர்களுக்கு தாம் யாரென்றும், பிறவியின் நோக்கம் எதுவென்றும் நினைவூட்டுகிறது? நாரதன் சிந்தித்தான். ஒரு திட்டத்தை மனம் புனைந்தது. பாற்கடலில் ஆதிசேடனின்மீது துயில் கொண்டிருக்கும் நாராயணனிடம் சென்றான்.

‘நாராயண ஹரி நாராயண, பூவுலகத்தை காப்பவனே, பரத கண்டத்தில் மனிதர்கள் எல்லாம் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். உன் நாமம் அல்லவா உன்னை உயிர்ப்பிக்கிறது, அது அல்லவா உயிர் ஆற்றல்? துயரத்தை உணராத மானுட மனம் அகங்காரம் கொள்கிறது. எல்லாவற்றிற்கும் தானே காரணம் என இருமாந்திருக்கிறது. தான் பிரபஞ்ச பேரியக்கத்தின் சிறு துளி என உணர்ந்து உம்மை சரணாகதி அடைய வேண்டும். அதுதானே மனித வாழ்வின் நோக்கம்? அவர்களுக்கு துயரத்தின் வலியை உணர்த்த வேண்டிய காலம் வந்துவிட்டது.’          

மௌனித்து கண்மூடி முடிவற்ற காலத்தின் மீது சயனித்திருந்த மகாவிஷ்ணுவிற்கு முன் காலம் ஒரு படலமாக தன்னை விரித்து காட்டியது. முக்காலத்தையும் உணர்ந்த யோகியான மகாவிஷ்ணு செம்பவள இதழைக் குவித்து சிறிய புன்முறுவல் பூத்தார். அந்த ஒற்றை மர்மப் புன்னகை விளக்கிக்கொள்ள இயலாத ஓராயிரம் அர்த்தங்களை அளிக்கவல்லது. உலகையே மாற்றப்போகும் தொடர்நிகழ்வுகளின் தொடக்க கண்ணியாக அது மாறியது.

பரத கண்டத்து அழகாபுரி பட்டணத்தில் விஸ்வக்சேணன் என்றொரு நெறி பிறழாத பிராமணன் வாழ்ந்து வந்தான். அவனது தர்ம பத்தினி அன்னபூரணி மங்கையர்க்கரசியாக மாதர் குல திலகமாக வாழ்ந்து வந்தாள். இறைவன் அருளால் அவர்களுக்கு ஐந்து ஆண் குழந்தைகளும் ஐந்து பெண் குழந்தைகளும் பிறந்தன. பதினோராவது குழந்தையையும் வயிற்றில் சுமந்து நின்றாள். மூன்று வேளையும் தீ வளர்த்து தன் அந்தன அறத்தைப் பேணி வந்த விஸ்வக்சேனன் மனதில் இறைவனின் சித்தப்படி வாயு பகவான் எங்கோ அவனுள் உயிர்த்திருந்த அவநம்பிக்கை எனும்  சிறு பொறியை ஊதி பெருக்கினான். அது வளர்ந்து பெரு நெருப்பாகி ஒவ்வொரு நாளும் அவனை உண்டு செரித்து படர்ந்தது.

‘இந்த வேதங்கள் எனக்கு என்ன அளித்தன? ஒரு பிராமணனாக வாழ்ந்து நான் கண்ட பலன் தான் என்ன? கண்ணுக்கு தெரியாத மறுமைக்காக வருத்திகொள்வதில் என்ன அர்த்தமிருக்கிறது? பொருள் சேர்த்து வளமுடன் வாழ்வதில் என்ன தவறிருக்க முடியும்?’

கேள்விகள் அவனை அலைக்கழித்தன. குழம்பித் திரிந்தான். அப்போது நாரதன் பகட்டு ஆடைகள் அணிந்து செல்வச் செழிப்பான ஒரு தன வணிகனாக, கவலையுற்றிருந்த விஸ்வக்சேனன் முன் தோன்றினான். ஏழு கடலுக்கு அப்பால் உள்ள ஸ்வர்ணகிரியில் வாணிபம் செய்ததால்தான் தன்னால்  இத்தனை செல்வத்தை ஈட்ட முடிந்தது என்றான். ஸ்வர்ணகிரியின் மாட மாளிகைகளைப் பற்றியும், அழகு மிளிரும் மங்கையர்களைப் பற்றியும், கொட்டிக் கிடக்கும் செல்வத்தைப் பற்றியும் கதைகதையாகக் கூறினான்.

ஆசை உடலெங்கும் தணலென கொதித்தது. விஸ்வக்சேனன் ஒரு முடிவுக்கு வந்தான். இனியும் இந்த பயனற்ற வாழ்க்கை வாழக்கூடாது. மகிழ்ச்சியாக வாழ வேண்டும் அல்லது அம்முயற்சியில் மரணிக்க வேண்டும் எனும் உறுதி பூண்டு, ஓரிரவு மனைவி மக்களை தவிக்கவிட்டு கடல் கடந்து பயணிக்க புறப்பட்டான். அந்தன அறத்தை மீறிவிட்டான். தர்மம் நியதிகளால் கட்டப்பட்ட பெருஞ்சுவர், அதன் ஒற்றை கல் உருவபட்டால்கூட போதும் அது குலைந்துவிடும். ஊரெங்கும் ஒரே பேச்சாக இருந்தது. அழகேச மகராஜன் செவிகளையும் அது எட்டியது. சாத்திர விற்பன்னர்களின் ஆலோசனைப்படி தர்மத்தை காக்கும் பொறுப்புள்ள மகராஜன் விஸ்வக்சேனனின் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டும் என ஆணையிட்டான்.                    
பத்து பிள்ளைகளையும், வயிற்றில் ஒரு பிள்ளையையும் சுமந்து கொண்டு, கணவனும் கைவிட்டு நிர்கதியாக நிற்கும் அன்னபூரணி மன்னனிடம் சென்று முறையிட்டாள். “வேந்தே, கணவன் புத்தி பேதலித்து நெறி பிரண்டு போனதற்கு ஏதுமறியா நானும் என் பிள்ளைகளும் எப்படி பொறுப்பாவோம்? பத்தினி அறத்தை அன்றாடம் கடைபிடிக்கும் என்னை தண்டிக்கலாமா? ஒன்றுமறியாத இப்பிள்ளைகளை தண்டிப்பது நியாயமா?  என்று கதறி அழுதாள். 

 “தர்மமே எல்லாவற்றையும் ஆட்டுவிக்கிறது, அரசன் அதன் பாவை  மட்டுமே, பிரபஞ்சத்தை இயக்கும் பெரும் நியதி அது, விளைவுகளாலும் எதிர்விளைவுகளாலும் இயங்குவதே இவ்வுலகு, ஆகவே தர்மத்தைக் காக்க வேண்டி நெறி தவறிய உன் கணவனை தண்டிக்க உன்னையும் உன் பிள்ளைகளையும் ஒதுக்கி வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. அறமே இத்தேசதத்தை இதுவரையில் அழிவிலிருந்து காத்து வருகிறது” என்றான் அரசன்.      

நீதி மறுக்கப்பட்டதால் விதியை எண்ணி அனுதினமும் இறைவனிடம் புலம்பி அழுதாள். ஊரின் எல்லைக்கப்பால் ஆற்றங்கரையோரம் ஒரு சிறிய குடிலை கட்டிக்கொண்டு பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தாள்.

வறியவனை காப்பதல்லவா மேலான அறம்? அரசன் நெறி பிறழ்ந்தான். மழை பொய்த்தது. நிலம் வறண்டு பிளந்தது. நோய்கள் பெருகின. பசுக்கள் மெலிந்து மடிந்தன. மனிதர்கள் பசியால் வாடினர். களவும் கொலையும் மலிந்தன. குலப் பெண்டிர் சோரம் போயினர். மன்னன் செய்வதறியாது திகைத்தான். வெறுமையே எல்லாவற்றையும் நிறைத்திருந்தது. சான்றோர்களையும் அந்தணர்களையும் ஆலோசித்தான். தங்களுக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை அந்தணர்கள் சரிவர பின்பற்றுவதில்லை என்பதே இத்தகைய சீரழிவுக்குக் காரணம் என அவர்கள் கருதினார்கள். தேவர்களுக்குரிய அவிசை சரிவர செலுத்தாததால் அவர்கள் அளித்த சாபம் என்றனர். பரிகாரமாக பெரும் வேள்வி வளர்த்து அவர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்றார்கள். மன்னன் அந்த வேள்விக்கான ஏற்பாடுகளை முன்நின்று செய்தான். அனைத்து தேவர்களுக்கும் அவிசு அளிக்கப்பட்டது. பதினோரு நாட்கள் பெரும் பொருட்செலவில் தொடர்ந்து நடைபெற்ற வேள்வி எவ்வித பலனையும் அளிக்கவில்லை. மன்னன் மனம் சோர்ந்தான். மக்கள் அஞ்சினார்கள். இடைவிடாது இறைவனின் திருநாமத்தை உச்சரித்தனர். வீட்டையும் நிலத்தையும் துறந்து குடும்பத்தையும், கால்நடைகளையும் அழைத்துக்கொண்டு பிழைக்க வேண்டி ஊர் ஊராகச் சென்றனர். பஞ்சமும் பசியும் பட்டினியும் நோயும் சென்ற இடங்களில் எல்லாம் உயிர்களை வாரி வழித்தன.

இதற்கிடையில் கர்ப்பவதி அன்னபூரணி அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அத்தனை இடர்களையும் கடந்து பிள்ளைகளை வளர்த்து வந்தாள். மக்கள் திரள் ஊர் ஊராக பிழைக்க வழி தேடி சென்றனர். குழந்தைகளும், முதியவர்களும், பசுக்களும், ஆடுகளும், ஆண்களும் பெண்களும் அணிவகுத்து சென்றனர். கண்ணில் படும் இல்லங்களில் எல்லாம் உணவை யாசித்தனர். செல்வந்தர்கள்கூட தங்களுக்கு தானியம் தீர்ந்துவிடுமோ என அஞ்சி யாசகம் அளிக்க மறுத்து உணவை பதுக்கிக் கொண்டனர். அன்னமின்றி மனிதர்கள் அவதிப்பட்டனர். குழந்தைகள் ஏங்கி அழுதன, நரிகளும் வல்லூறுகளும் மனிதர்கள் செத்து விழுவதற்காக காத்திருந்தன. நீரின்றி வறண்ட ஆற்றில் கூடிய ஜனம் இரவெல்லாம் மன்றாடி அழுது தீர்த்தது.            

 “வயிற்றில் தணல் எரிகிறதே! அக்னிக்கு பாரபட்சம் இல்லை, உணவில்லை எனில் வசிக்கும் உடலையே விருந்தாடுகிறது. பரந்தாமா... பிள்ளைகளின் அழுகுரல் உனக்கு கேட்கவில்லையா? மரணம் அங்குலம் அங்குலமாய் ஊர்ந்து கொண்டிருக்கிறது... நொடியில் அழைத்துக்கொள்ள அருள் செய்ய வேண்டும் தாயே...”

இரவெல்லாம் அழுகுரல்கள் மன்றாடல்கள் புலம்பல்கள் எங்கும் எதிரொலித்தன.

அவர்களின் அழுகுரலும் மன்றாடல்களும் குடிலில் வசித்த அன்னபூரணியின் செவிகளில் வந்து மோதின. அவள் மனம் உடைந்து போனாள். “ஜெகத்பிரபு!  நானும் என் பிள்ளைகளும்கூட உணவின்றி தவித்துக் கொண்டிருக்கிறோம். இவர்களுக்கு நான் எப்படி உதவுவது? என் கரங்களால் இவர்களுக்கு அன்னமிடும் சக்தி கொடு. தாயே உன் பிள்ளைகள் கரைந்து அழுவது உனக்குக் கூடவா கேட்கவில்லை?” விசும்பி அழுது மனமுருகி வேண்டினாள்.

திருமாலின் இதயக் கமலத்தில் வசிக்கும் தாயாரை அவளின் அழுகுரலும் மன்றாடலும் அசைத்துப் பார்த்தன. திருமாலிடம் சென்று “போதும் இந்த விளையாட்டு. பிள்ளைகள் பசியால் அழுது துடிக்கின்றனவே. உம் மனம் இரங்கவில்லையா? இன்னும் என்ன சயனம்?” என்று கடிந்து கொண்டாள்.

 “தேவி, பொறுமை, காரணமின்றி காரியமில்லை, மாயையின் கரங்கள் உன் கண்களையும் மறித்தனவோ? இவை அனைத்தும் எம் பிரம்மாண்டமான லீலையின் ஒரு பகுதி என்பதை நீ அறியவில்லையா? நம்பிக்கை கொள், நான் கூறும் வகையில் அவளுக்கொரு வரம் அளி” என்று பெருமாள் தாயாரிடம் ரகசியம் சொன்னார். தாயார் மனம் பூரித்து புன்முறுவல் பூத்தாள். அழுதுகொண்டே உறங்கிப்போன அன்னபூரணியின் கனவில் தோன்றினாள். 
“மகளே... உன் அழுகுரல் கேட்டு ஓடோடி வந்தேன். என்ன வரம் வேண்டும் கேள்” என்று தன் முழு உருவத்தை அவளுக்குக் காட்டி எழுந்தருளினாள் தேவி. தாயாரைக் கண்ட அக்கணம் அவளுக்கு பேச நா எழவில்லை, மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. விக்கித்து நின்றாள். காலில் வீழ்ந்து வணங்கினாள். “அம்மா... பசியால் வாடும் இந்த உயிர்களுக்கு என் கையால் அன்னமிட வேண்டும், வேறொன்றும் தேவையில்லை”. தாயார் அவளை மெல்ல நிறுத்தி “மகளே, நீ கோரும் வரம் அளிப்பேன். ஆனால்...” என்று தயங்கி, பின் தொடர்ந்தாள் “மகளே பிரபஞ்ச நியதி என்று ஒன்றிருக்கிறது. கர்மச் சுழல் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது. ஏதோ ஒன்று பெறப்படும் தோறும் ஏதோ ஒன்று வழங்கப்படுகிறது. தேவர்களும் அந்த நியதிக்கு உட்பட்டவர்களே”

“உலகின் செல்வமெல்லாம் உன்னிடம் உறைந்திருக்கும்போது இந்த ஏழை பெண்ணால் உனக்கு என்ன கொடுத்துவிட முடியும்? எனது பிள்ளைகள் மட்டும்தானே என் சொத்து”

“அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரத்தை உனக்களிக்கிறேன். எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு அன்னமிடு. ஆனால் அதற்கு ஈடாக ஒவ்வொரு நாளும் உன் பிள்ளைகளில் ஒருவரை எம்மிடம் அனுப்பி வைப்பாய்” என்றாள் தாயார்.

இடி இறங்கியது போல் அதிர்ந்தாள். அவளுடைய பச்சிளம் குழந்தை பாலுக்காக அழுதது. ஒற்றைப் பெரும் ஓலமாக ஆயிரக்கணக்கான ஜனங்களின் குரல்கள் அதிர்ந்தன. கண்களில் நீர் பெருகியது. தன்னை மீறிய தீரச் செயல்களே இவ்வுலகத்தை இயக்குகின்றன. அவளுடைய அன்னை மனம் பொங்கியது. ஏதோ ஒரு தீர்மானத்திற்கு வந்தவளாக, கண்ணீரைத் துடைத்துக்கொண்டு உறுதியுடன் சொன்னாள் “இதுதான் உன் சித்தம் எனில், அப்படியே ஆகட்டும்”

தங்கத்தினால் ஆன அட்சய பாத்திரத்தை வரவழைத்து அவளுக்களித்து ஆசீர்வதித்து மறைந்தாள் தாயார். திடுக்கிட்டு விழித்தெழுந்த அன்னபூரணிக்கு இவை எல்லாம் கனவா இல்லை நனவா என குழப்பம் ஏற்பட்டது. குழந்தைகள் உறங்கிக்கொண்டிருந்தன. அருகில் தங்க பாத்திரம் விளக்கொளியில் மினுங்கியது. மனதார தாயாரை வணங்கினாள். விடிந்தது. எல்லோரையும் கூவி அழைத்தாள். களியும், கூழும், அன்னமும், கூட்டும், பாயசமும், போளியும் விதவிதமான உணவு வகைகளை வயிறு நிறைய பரிமாறினாள். செய்தி அறிந்து உணவு கேட்டு வந்த அனைவருக்கும் எவ்வித பேதமுமமின்றி அன்னம் இட்டாள். மக்கள் நெகிழ்ந்து மனதார வாழ்த்தினர். சூரியன் அடங்கி இருள் பரப்பியது. மூத்தவனை எழுப்பி கண்களில் நீர் வழிய உச்சி முகர்ந்து முத்தம் கொஞ்சினாள். அவனுடைய உடல் மரகதப் பச்சையாக மின்னியது. சிறகடிக்கும் அரவம் வெளியே கேட்டது. கருடன் வாயிலில் காத்து நின்றான். “அழ வேண்டாம் அன்னையே சென்று வருகிறேன். எம்பெருமானே என் தகப்பன்” என அவள் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறி திட சித்தத்துடன் கருடனில் ஏறி பறந்து சென்றான். இரவெல்லாம் அழுதாள். பொழுது புலர்ந்தது. இருளின் வலிகள் எல்லாம் விடியலில் எதிர்கொண்ட ஆவல் மிகுந்த கண்களில் மறந்து போனாள். சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வந்த பெரும் ஜனத்திரள் விடியலுக்காக அவள் குடிலின் வாயிலில் காத்திருந்தது. சோர்வின்றி உற்சாகத்துடன் அனைவருக்கும் அன்னமிட்டாள்.

இரவு மெல்ல ஒளியை மூடியது. வாயிலில் சிறகடிப்பின் ஓசையை கேட்டாள். மூத்த மகள் மரகதப் பச்சை நிறத்தில் மின்னிக் கொண்டிருந்தாள். கண்ணீர் பொங்கி வந்தது. “அழ வேண்டாம் அன்னையே, நம் தந்தையிடமே செல்கிறேன்.” என்று கருடனில் அமர்ந்து பறந்து சென்றாள். இரவெல்லாம் அண்ணாந்து வானத்தை நோக்கி விசும்பிக் கொண்டிருந்தாள். விடிந்ததும் மக்களுக்கு அன்னமிடுவதும் இரவில் பிள்ளைகளை பறிகொடுப்பதும் அதற்காக விசும்பி அழுவதும் ஒன்பது நாட்களுக்கு தொடர்ந்தன.

பஞ்சம் அரசனின் கையிருப்பை கரைத்திருந்தது. அரண்மனையிலும் அந்தப்புரத்திலும்கூட அன்னமில்லை. யானைகள் இளைத்து குதிரைகள் ஆயின. குதிரைகள் சுருங்கி ஆடுகள் ஆகின. செய்வதறியாது மன்னன் திகைத்திருந்த வேளையில், அன்னமிடும் செய்தி அரசனை சென்று சேர்ந்தது. எஞ்சி இருக்கும் படை பரிவாரங்களைத் திரட்டிக்கொண்டு வேறு வழியின்றி அன்னம் யாசிக்க அரசன் புறப்பட்டு வந்தான். பத்தாம் நாள் காலை அன்னப்பூரணி அம்மையின் குடில் வாயிலில் நின்று “அம்மையே, என்னை மன்னிக்க வேண்டும், மதி கெட்டு நான் செய்த பெரும்பிழை பொறுத்தருள வேண்டும்” என அவள் முன் பணிந்தான்.   

அன்னபூரணி மனம் பூரித்தாள். “கொடுத்துச் சிவந்த மன்னரின் கரங்கள் ஒருபோதும் தாழக் கூடாது. சக்கரம் சுழன்றுக் கொண்டே இருக்கும். மேலிருப்பவன் கீழும். கீழிருப்பவன் மேலும். உள்ளிருப்பவன் வெளியிலும். வெளியிலிருப்பவன் உள்ளேயும் போவான். அதுவே வாழ்கையின் நியதி. ஆகையினாலே நீங்களே உங்களுக்கும் உங்கள் படை பரிவாரங்களுக்கும் என்ன வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்” என்று பெருந்தன்மையுடன் அட்சய பாத்திரத்தை மன்னனிடம் நீட்டினாள்.

மன்னன் கூனிக் குறுகினான். கண்களில் நீர் தளும்பியது. அவனுடைய படை பரிவாரங்களுக்கு தேவையான உணவை அதிலிருந்து எடுத்துகொண்டான். ஆனால் அவன் உண்ணவில்லை. அன்றிரவு பத்தாவது பிள்ளையும் பிரிந்து சென்ற துக்கத்தில் அழுது கொண்டிருந்தாள். திடீரென்று உடலெங்கும் அச்சம் பரவியது. கள்ளம் கபடமற்று சிரித்து கொண்டிருக்கும் பச்சிளம் குழந்தையைக் கண்டாள். மனம் நடுங்கியது. விடிந்ததும் அன்னம் யாசித்து அரசன் நிற்பான். மனம் வெருண்டது. அந்த குழந்தையை கையில் எடுத்தாள். முத்தமிட்டாள். ‘உன் விதி எதுவோ அதுபடி ஆகட்டும்’ என்று கூறிவிட்டு தன்னையே தீக்கு இரையாக்கினாள். குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது. பூரணமாக எரிந்து சாம்பலானாள். குழந்தை அமுது வேண்டி அழுதது. உடலை உகுத்து அருவ வடிவாய் குழந்தைக்கு அருகில் தவித்து நின்றிருந்தாள். “ஊரார் பசி போக்கினேன், என் பிள்ளை பசி போக்க வழியில்லையா?” என்று மனம் பதறினாள். அன்னப்பூரணியின் அழுகுரல் கேட்டு உறங்கிக்கொண்டிருந்த திருமகள் கண்விழித்து ஓடோடி வந்தாள். அவளுடைய தியாகச் செயலை கண்டு ஒருகணம் பிரமித்து உறைந்தாள். அன்னையின் மனம் கரைந்தது. அன்னப்பூரனியின் உருவத்தில் அவளே அக்குழந்தைக்கு அமுதூட்டினாள்.   

“மகளே, உன் தியாகம் மெச்சினேன். உனது ஐந்து பெண் குழந்தைகளும் ரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமை, மிஸ்ரகேசி ஆகிய ஐந்து அப்சரஸ்கள், உனது ஐந்து ஆண் குழந்தைகள் சித்ராங்கதன், தாராசுதன், வித்யாதரன், மதாத்யயன், காஷ்டஸ்வரன் எனும் ஐந்து கந்தர்வர்கள் ஆவார்கள், ஆங்கிரச மகரிஷியின் தவம் கலைத்ததால் சாபம் பெற்று உன் வயிற்றில் பிறந்தவர்கள்.  அவர்கள் என் கருணையால் விமோசனம் பெற்று அமராவதி திரும்பினார்கள். காசி அன்னபூரணியின் அம்சமான நீயும் திரும்ப வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.”  

அப்போது அந்த இருளில் ஆயிரம் கோடி சூரியனின் பிரகாசத்துடன், பேரியும் சங்கமும், யாழும், முழவும் முழங்க சங்கும் சக்கரமும் தரித்த மகா விஷ்ணு தாயார் உடனிருக்க  விண்ணுக்கும் மண்ணுக்குமாக எழுந்து நின்று அன்னப்பூரணிக்குக் காட்சியளித்தார். கோடி கோடி அண்டங்கள் சிறு சிறு திவளைகளாக அவனுள் இயங்கின. அன்னப்பூரணி சிலிர்த்து பேச்சற்று நின்றாள். அவன் தாள் பணிந்தாள். “மகளே, உன் தியாகம் மெச்சினேன். ஊரார் பிள்ளைகளையெல்லாம் உன் பிள்ளையாக எண்ணி அமுதூட்டினாய். உன் பிள்ளையை இனி ஊரார் வளர்க்கட்டும். உன் வம்சம் விளங்க இவனொருவன் இருக்கட்டும். இந்த மக்களுக்கு எல்லாம் அன்னம் வழங்கி துயர் துடைத்த நீ அன்ன சௌரக்ஷாம்பிகை என வழங்கப்படுவாய். உன்னை வேண்டி ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் நோன்பிருப்பவர்கள் வீட்டில் அன்னம் என்றும் குன்றாதிருக்கட்டும். நோய் நொடிகள் அண்டாதிருக்கட்டும். திருமகளின் அருள் என்றும் நிறைந்து செல்வம் கொழிக்கட்டும்... ஆயுள் பெருகட்டும்... பூரண சௌபாக்கியம் கிட்டி, அஷ்ட ஐஸ்வர்யங்களுடன் வாழ்வாங்கு வாழட்டும் ”

“பிரபு, அரசன் தவறை உணர்ந்து கொண்டான், தர்மம் அதன் பாதையில் பயணிக்கிறது, மனிதர்கள் விடாமல் உமது திருநாமத்தை உச்சரித்து சரணடைந்து விட்டார்கள். போதும் உமது சோதனைகள். அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டி பஞ்சப் பிணியை போக்கி அருள் செய்ய வேண்டும்” என்று கைகூப்பி வேண்டினாள் அன்னபூரணி.

“அப்படியே ஆகட்டும்” என்று ஆசியளித்து அன்னப்பூரணியை அவர்களின் ஹம்ச விமானத்தில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றார்கள். விடியலுக்கு பின்னர் கூடிய மக்கள் அன்னப்பூரணியையும் அட்சய பாத்திரத்தையும் காணவில்லை என்றதும் குழம்பினர். குழந்தை மட்டும் குடிலில் உறங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது வான்வெளியிலிருந்து அன்னப்பூரணியின் குரல் கேட்டது. தன் கதையை கூறிய பின்னர்,. ‘தர்மம் நிலை திரும்பிவிட்டது, உங்கள் அன்ன பாத்திரங்களில் உணவு எப்போதும் நிறைந்திருக்கும், நாடும் வீடும் செழிக்கும்’ என்று ஆசி கூறி அக்குரல் மறைந்தது. அரசன் தன் படைபரிவாரங்களுடன் மண்ணில் வீழ்ந்து வணங்கினான். இனி உன் பிள்ளை என் பிள்ளை என அக்குழந்தையை தூக்கிக்கொண்டு அரண்மனைக்கு சென்றான்

oOo
“அம்பாள் ஒரு நா நம்ம முப்பாட்டன் மேல வந்து, எரிஞ்சு மிச்சமிருக்குற கால் கட்டவிரல மட்டும் எடுத்துண்டு வந்து பூஜ பன்னுங்கோன்னு சொன்னா” 
கரிய கால் கட்டை விரல் என கூறிய பாட்டியின் குரல் கேட்டதும்  சபரிக்கு சடாரென்று விழிப்பு தட்டியது. ஒருகணம் பார்க்கும் அனைத்தும் ரத்த சிவப்பாக, குருதிப் படலமாக காட்சியளித்தது அவனுக்கு. தலை கனம் குறைந்து லகுவாக இருந்தது. வியர்வை வடிந்து உடல் சில்லிட்டு இருந்தது. பாட்டி கதையை முடிக்கவிருந்தாள்.

“குல பித்ருக்கள் சொன்ன பலன் கேட்ட பலன்... முன்னோர்களும் பெரியோர்களும் சொன்ன பலன் கேட்ட பலன்... நான் உங்களுக்கு சொன்ன பலன் கேட்ட பலன்ன்னு எல்லோர் பலனும் இதை கேட்ட உங்களுக்கும் உங்க சந்ததிக்கும் கிடைக்கட்டும்... அவ அருள் பூரணமா நிரம்பி வழியட்டும்...”

“உம்”
“ஓம் அன்ன சௌரக்ஷாம்பிகே நமஹா”
எல்லோரும் அம்பிகைக்கு பூப்போட்டு வணங்கி கையில் தோரம் கட்டிக்கொண்டார்கள். சபரி கண் விழித்திருந்தான். வியர்வை வடிந்து உடல் சில்லிட்டிருந்தது.
“தாத்தா மருலாளி வந்துருக்கார்...” ஓடி வந்து சொன்னாள் சபரியின் சித்தப்பா மகள்.

“சபரி கண்ணா… இங்க வா...” தாத்தா அவனை அழைத்தார். சபரி மெல்ல நடந்து வந்தான். அவனை மெதுவாக கூட்டிக்கொண்டு வெளித் திண்ணைக்கு வந்தார். அங்கே மருலாளி நின்றுக் கொண்டிருந்தார். அன்று கோவிலில் பார்த்த மருலாளிக்கும் இன்று திண்ணையில் பார்க்கும் மருலாளிக்கும் சம்பந்தமே இல்லை என்று சபரிக்கு தோன்றியது. முகத்தில் அமைதி தோய்ந்திருந்தது. வைத்தியர் அவருக்கு செய்ய வேண்டிய முறையை செய்தார். மருலாளி சபரியையே பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது.

“தம்பிக்கு கொஞ்சம் விபூதி இட்டு விடுங்க...” வைத்தியர் மருலாளியிடம் சொன்னார்.

மருலாளி வேட்டி மடிப்பில் முடிந்து வைத்திருந்த துன்னூறை எடுத்து, சில நொடிகள் கண்களை மூடிக்கொண்டிருந்துவிட்டு முணுமுணுத்தபடி சபரியின் நெற்றியில் பூசிவிட்டார். அவர் ஏதாவது சொல்லக்கூடும் என சபரிக்குத் தோன்றியது, ஆனால் வந்த வழியில் திரும்பிச்சென்றார். 

உள்ளே சென்று அம்பிகைக்கு பூப்போட்டு வணங்கினான். பின்கட்டில் சமபந்தி விருந்திற்காக பெரும் பந்தலிடப்பட்டிருந்தது. சுடலையும் வந்திருந்தான். கையசைத்தான். வைத்தியர் பார்த்துக் கொண்டிருந்தார்.

“ரசஞ்சாதம் மட்டும் சாப்பிடு. போ சுடலைகூட உக்காரு” என்று சபரியை அனுப்பி வைத்தார்.
சுடலையும் அவனும் பழையபடி உற்சாகமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“என்றா… ஆத்தா அப்புன அப்புல ஆளே எந்திரிக்கல போல...” சிரித்தான் சுடலை. இலையில் என்னென்னவோ பரிமாறிக்கொண்டிருந்தார்கள்.

“உனக்கு ஆத்தா வவுத்துலப் பிளக்க பிடுங்கிடான்னு சொன்னாக...” சபரியும் சிரித்தான். அம்பிகையின் நைவேத்திய பிரசாதங்களை கொண்டு வந்தார்கள். ஏதோ நினைவு வந்தவனாக சுடலையிடம் சபரி கேட்டான்.

“ஆமா, அன்னிக்கி எண்ணும்போது எத்தன கல்லுடா இருந்துச்சு?”
பாயசத்தை உறிஞ்சியபடியே சுடலை சொன்னான். “ஓ அதுவா… பெரிய கல்லையும் சேத்து மொத்தம் பதினோரு கல்லுடா..”
எல்லா பக்கங்களிலுருந்தும் ஒரு உக்கிரமான  ரத்த வாடை அவனைச் சூழ்வதை சபரி உணர்ந்தான். 

Saturday, April 13, 2019

1000 மணிநேர வாசிப்பு சவால்

நண்பர் சிவா கிருஷ்ணமூர்த்தியின் சிறுகதை தொகுப்பு 'வெளிச்சமும் வெயிலும்' ஜெயமோகன் முன்னுரைக்காக காத்திருந்தது. புத்தகம் அச்சுக்கு செல்ல இன்னும் ஓரிரு நாட்களே எஞ்சியிருந்தபோது மீண்டும் ஜெயமோகனுக்கு நினைவூட்டினேன். அன்றே அனுப்பி வைத்தார். நேர்பேச்சில் சுமார் 150 பக்கங்கள் கொண்ட அந்த சிறுகதை தொகுதியை ஒரே மூச்சில் வாசித்து கையோடு முன்னுரையும் எழுதி அனுப்ப ஒன்றரை மணிநேரம்தான் ஆனது என்றார். ஆச்சரியமாக இருந்தது. ஜெயமோகன் என்றில்லை பல மூத்த தலைமுறை எழுத்தாளர்கள் மணிக்கணக்காக வாசிக்கக்கூடியவர்கள். நம் தலைமுறையின் மிக முக்கியமான சிக்கல் என்பது தொடர் வாசிப்பு நிகழாமல் கவனம் சிதைவதே. என்னால் தொடர்ச்சியாக ஒரேயமர்வில் எத்தனை மணிநேரம் வாசிக்க முடியும் எனும் குழப்பம் இருந்தது. மீண்டும் ஈரோடு விவாத அரங்கில் இரவு பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு துறையில் நிபுணத்துவம் பெற ஆறு வருடங்கள் (சுமார் 10,000 மணிநேரம்) முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என்றார். இளமை காலத்தில் தான் அயராது செலுத்திய அறிவுழைப்புகளைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். நான் அத்தகைய அறிவுழைப்பிற்கு தயாராக இருக்கிறேனா என்றொரு கேள்வி என்னை வாட்டியது. வாங்கி அடுக்கிய புத்தகங்கள் சரிபாதி பிரிக்கப்படாமல் நூலகத்தில் உறங்குவது பெரும் குற்றவுணர்வாக இருந்தது.

இன்று ஒரு சிறிய சோதனை செய்து பார்த்தேன். வாசிக்கும்போது செல்போனில் ஸ்டாப் வாட்ச் பயன்படுத்தினேன். எத்தனை நேரம் நம்மால் தொடர்ச்சியாக வாசிக்க முடிகிறது என்பதை நோக்க முயன்றேன். காலையில் அதிகபட்சம் 21 நிமிடங்கள். பின்னர் 17, 10, 6, 4 இப்படியாக துண்டு துண்டாக வாசிக்க முடிந்தது ஒருவகையில் அதிர்ச்சியாக இருந்தது. மதியம் வீட்டிற்கு வந்ததும் மீண்டும் வாசிக்கத் துவங்கினேன் தொடர்ச்சியாக 55 நிமிடங்கள் வாசிக்க முடிந்தது. பிறகு இதைப்பற்றி நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது இப்படியொரு போட்டியை துவங்கலாம் எனத் தோன்றியது. 

இப்போட்டிக்கு விதிமுறைகள் என பெரிதாக ஏதுமில்லை. நாம் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்திகொள்வது மட்டுமே நோக்கம் ஆகவே இலக்கடைந்த நிறைவும், அதற்காக தேர்ந்தெடுக்கும் பாதை அளிக்கும் மகிழ்விற்கு அப்பால் பரிசு என ஏதுமில்லை. 

நாளை சித்திரை 1 இந்த புதிய வருடத்திலிருந்து இப்போட்டி துவங்கும். 

ஒவ்வொருநாளும் stop watch பயன்படுத்தி வாசிப்பு நேரத்தை கணக்கிட்டு இணைய படிவத்தில் ஏற்ற வேண்டும். அவரவர் மனச்சான்றுப்படி நேர்மையாக கணக்கிட்டால் போதும். முதலில் யார் 1000 மணிநேர வாசிப்பை நிறைவு செய்கிறோம் என்பதே சவால். மரத்தானைப் போலத்தான் முதல் இடம் என்பதை விட பந்தயத்தை நிறைவு செய்வதே வெற்றிதான். 

வார இதழ்கள், நாளிதழ்களை கணக்கில் கொள்ள வேண்டாம்.

இலக்கியம் என்றில்லை துறை ரீதியான புத்தகங்களையும் வாசிக்கலாம் 

எத்தனை புத்தகங்கள், எத்தனை பக்கங்கள், என்னவகையான புத்தகங்கள் போன்றவை இரண்டாம்பட்சம். ஏனெனில் வாசிப்பு வேகத்தை காட்டிலும் அறுபடாத தொடர் வாசிப்பிற்கான பயிற்சியாகவே இதை கொள்ள வேண்டும். என்னென்ன புத்தகங்கள் என்பதை படிவத்தில் தனியாக குறிக்கலாம். பிறருக்கு உதவியாக இருக்கும். இது அவரவர் விருபத்தின் பேரில் மட்டுமே. 

புத்தகம், கிண்டில், கிண்டில் ஆப் போன்றவற்றில் வாசிக்கலாம். 

கணினி- செல்போன்- இணைய வாசிப்பை கணக்கில் கொள்வதை தவிர்க்க வேண்டும். காரணம் நாம் பிற பக்கங்களை மேய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். 

போட்டிக்கு தயார் என்றால் உங்கள் மின் அஞ்சல் முகவரியை அனுப்புங்கள் கூகுள் படிவத்தை அனுப்புகிறேன்.  

Tuesday, April 9, 2019

பெத்தம்மா

ஞாயிற்றுக் கிழமை குடும்ப நிகழ்விற்காக பாண்டிச்சேரி சென்றிருந்தேன். எங்கள் வீட்டில் எங்களோடு ஏறத்தாழ 20 வருடங்களாக வசித்து வந்த பெரியம்மா காலை 11.15 க்கு மண் நீங்கினார் என அழைத்து சொன்னார்கள். இரண்டு நாட்களுக்கு முன் தான் அவரை காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து விடுவித்து வீட்டிற்கு அழைத்து வந்தோம். ஏறத்தாழ பெரும்பாலான சோதனைகள் இயல்பான நிலையை சூட்டின. மருத்துவரும் ஆபத்து ஏதுமில்லை என்றே சொல்லியனுப்பினார். முந்தைய சில முறைகள் மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டவர்.

பத்மா பெத்தம்மா என்று தான் அவரை அழைப்பேன். எனக்கு மட்டுமல்ல என் நண்பர்கள் அனைவருக்கும் அவர் பெத்தம்மா தான். அம்மாவின் உடன் பிறந்த அக்கா. அவருக்கு பிள்ளைகள் கிடையாது. நாத்தனாரின் மகளை அவர் எடுத்து வளர்த்தார். நாத்தனாரின் பிள்ளைகள் பலருக்கு திருமணம் செய்து வைத்தார். பள்ளி கால கோடை விடுமுறைகளின் போது சென்னைக்கு செல்வேன். அப்பா வழி பெரியப்பா வீடும் பெத்தம்மா வீடும் மாம்பலம் ரயில் நிலையத்தின் இருபுறமும் இருந்தன. அதிகமும் அப்பாவழி பெரியப்பா வீட்டில் இருக்கவே விரும்புவேன். காரணம் அண்ணனும் அக்காவும் அங்கு இருந்தார்கள். ஆனால் சென்னையை சுற்றிப் பார்த்தது பெத்தம்மாவுடன் தான்.

 பெத்தம்மா திருமணம் செய்துகொண்டு போன வீடு பட்டுகோட்டையில் வளமான குடும்பங்களில் ஒன்று. ஆனால் காலப்போக்கில் மெல்ல நொடிந்து எல்லாவற்றையும் விட்டுவிட்டு தொண்ணூறுகளின் மத்தியில் சென்னைக்கு இடம் பெயர்ந்தார்கள். பெரியப்பா டாக்டர் ரங்கபாஷ்யம் ஆஸ்பத்திரி மருந்துகடையில் வேலை செய்தார். தினமும் சைக்கிளில் சென்று வருவார். மாம்பலம் ஒண்டு குடித்தனகளில் ஒன்று தான் அவர்களின் வீடு. வீட்டு பின்னால் இருக்கும் அடிப் பம்பில் நீர் இறைத்து இறைத்து கரங்கள் இரண்டு மட்டும் கரனைகரனையாக திரண்டிருக்கும். அதை எப்போதும் கிண்டல் செய்து கொண்டிருப்பேன். நாரதகான சபை, கிருஷ்ணகான சபை போன்றவற்றில் நிகழும் நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைத்து செல்வார். தவறாமல் மெரீனா சென்று வருவோம். சிறிய சைக்கிள் வாடகை எடுத்து மாம்பலம் வீதிகளில் ஒட்டியிருக்கிறேன். அவருடைய வருமானத்திற்கு மீறிய செலவை ஏற்படுத்தியிருக்கிறேன். மூன்று வருடங்கள் அவரோடு சபரிமலை சென்று வந்திருக்கிறேன். 

பெத்தம்மா மரபான நம்பிக்கைகள் கொண்டவர். பொதுவாக அத்தகையவர்களை நாம் பழமைவாதிகள், பிற்போக்கானவர்கள் என முத்திரை குத்திவிடுவோம். இப்போது யோசிக்கையில் அவருடன் கடுமையாக முரண்பட்ட, சண்டையிட்ட தருணங்கள் அத்தகையவை. ஆனால் மரபான மனம் கொண்டு அவர் வேறு பலர் தாண்ட தயங்கிய எல்லைகளை கடந்திருக்கிறார். எங்கள் வீட்டு காதல் கலப்பு திருமணங்களில் முதல் ஆளாக நின்று பேசி முடித்திருக்கிறார். எல்லோரையும் ஏற்கும், அரவணைக்கும் கனிவை அடைந்தார். பலரும் தங்கள் அந்தரங்க துயரங்களை அவரிடம் இறக்கி வைத்திருக்கிறார்கள். இறுதிவரை அவர்களின் ரகசியங்களை காப்பாற்றி ஆறுதல் அளிப்பவராகவே இருந்திருக்கிறார். இப்படி அவர் செல்லும் ஊர்களில் எல்லாம் அடைந்த நட்புகள் ஏராளம். பட்டுகோட்டை, சென்னை என அவர் நீங்கி வந்த ஊர்களில் இருந்தெல்லாம் அவரிடம் அரைநாள் பேசுவதற்காக வந்து செல்வார்கள். என் திருமணத்தை எப்படிச் செய்ய வேண்டும் என வழிமுறைகளைப் பற்றிய அவருடைய விரிவான குறிப்புகள் பின்னர் பலருக்கு பயனுள்ளதாய் இருந்திருக்கிறது. நாடகங்கள் திரைப்படங்கள் எதையும் அவர் விரும்பி பார்த்ததில்லை. சமையல் அறையில் சமைக்கும்போது தினமும் பாடிக்கொண்டே சமைப்பார். பெரும்பாலும் நாம சங்கீர்த்தன பஜனைகள், பழைய தமிழ் திரைப்பட பாடல்கள். 'நீல வண்ண கண்ணா வாடா' அவர் பாடி கேட்கும்போது எனக்கு கண்கள் எத்தனையோ முறை கலங்கியுள்ளது. காரைக்குடியில் நிகழும் ராதா கல்யாண சீதா கல்யாண நிகழ்வுகளில் தவறாமல் பங்குபெறுவார். ஜெயகிருஷ்ண தீக்ஷிதரின், ஹரிதாஸ் கிரி சுவாமிகளின் பாடல்களின் மீது மிகுந்த ஈடுபாடு. எனக்கு அவர் வழியே அபங்குகளின் மீது நாட்டம் ஏற்பட்டது. ஏறத்தாழ 65 வயதிற்கு பின் அஷ்டபதி பாடல்களை முறையாக பயின்றார். 'கோபிகா பஜனை மண்டலி' என்று அவர்களுடைய குழுவிற்கு அவரே பெயர் சூட்டினார். பாட்டிகள் பஜனை மண்டலி என்றல்லவா பெயர் வைத்திருக்க வேண்டும் என கிண்டல் செய்வேன். ஒருவகையில் பார்த்தால் தன்னை பக்தி பாவத்தில் கரைத்துகொள்ளவே முயன்றார். காரைக்குடி முழுக்க நடந்தே செல்வார். வண்டியில் ஏறி அமர்வதற்கு பயம். அதீத எச்சரிக்கை குணம் உண்டு அதன் காரணமாகவே ஏமாந்த நிகழ்வுகளும் பல. தேங்காய் அரைத்த பிட்ல, வெங்காய சாம்பார், மைசூர் ரசம் மிகப் பிரமாதமாக இருக்கும். உடல் நலிவடையும் வரை அவரே சமையல். இறுதி காலங்களில் கூட பெரியப்பாவிற்கு மட்டுமாவது ஏதாவது செய்து போடுவார். அவரிடம் சில விந்தையான வழக்கங்கள் உண்டு. வாரமலர் புதிர்களை முழுவதுமாக போட்டு முடிப்பார். மங்கையர் மலர், வாரமலர், என எல்லாவற்றிலும் உள்ள புகைப்படங்களுக்கு சிறு பிள்ளை போல் கண்ணாடி, தாடி, மீசை வரைந்து நாமம் அல்லது பட்டை போடுவார். பெரியம்மா அந்த இதழை படித்திருக்கிறார் என்பதற்கு அது ஒரு அடையாளம். 

அவருடைய ஆச்சாரங்கள் என்னை எப்போதும் சீண்டியிருக்கின்றன. எனது அரைவேக்காட்டுத்தனத்திற்கு இன்று நாணவும் செய்கிறேன். அவருடைய நம்பிக்கைகளை முடிந்த வரை மோதி உடைக்கப் பார்த்திருக்கிறேன். சில நொடிகளில் அத்தகைய உரையாடல்கள் அவருடைய கண்ணீருடன் முடிவுக்கு வரும். மனம் விட்டு அழவெல்லாம் மாட்டார்.லேசாக கண்ணீர் விடுவார். என்னிடம் இரண்டு மூன்று முறை மறுபிறப்பு, மரணத்திற்கு பின்பான வாழ்க்கை பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். அவருக்கு எந்த நம்பிக்கையையும் நான் அளித்ததில்லை. அவை வெறும் நம்பிக்கை என கடுமையாக வாதிட்டிருக்கிறேன். அவருடைய முதன்மை கவலைகளில் ஒன்று பெரியப்பாவை அனுப்பிவிட்டு தான் போக வேண்டும். தானில்லாமல் அவரால் வாழ முடியாது என்பதே. இப்போதுவரை சிகரெட் பிடிக்கும் அவர் தான் முதலில் போவார் என்றே எல்லோரும் கணித்திருந்தோம். பழைய காலத்து மனிதர். அனுசரித்து போக மாட்டார். தட்டில் சாப்பாடு வந்தாக வேண்டும். பெத்தம்மா நடை தளர்ந்த காலத்திலும் கொண்டு போய் வைத்து பரிமாறுவார். எனக்கெல்லாம் எரிச்சலாக இருக்கும். நீங்கள் தான் அவரை கெடுத்து வைத்தீர்கள் என திட்டினால்,'என்னால் முடிகிறது செய்கிறேன்' என்பார். இரண்டு வருடங்களுக்கு முன் அவர்களுடைய ஐம்பதாவது திருமணநாள் கொண்டாடினார்கள். அப்போது தான் சிறுநீரக பாதிப்பு கண்டறியப்பட்டது. இரண்டு வருடங்களாக வாரம் இரண்டு நாட்கள் டயாலிசிஸ் செய்து வருகிறார். குடல் வால் வெடித்து நோய் தொற்று பரவியது. அப்போதும் மீண்டார். இந்த பத்து நாட்களில் அவருக்கு என்ன ஆனதென்றே தெரியவில்லை. மெல்ல இயக்கம் குறையத் துவங்கியது. முகம் அமைதி அடைந்தது. பெரும் நேரம் உறக்கத்திலேயே கழித்தார்.போதத்துடன் இருந்த நாட்களில் எனது புத்தக அலமாரியில் இருந்து ஒரு புத்தகத்தை நீட்டி, இதில் என்ன இருக்கிறதென்று படித்து சொல்ல வேண்டும் என்றார். அவர் காட்டிய புத்தகம் "Life after death- Neville Randall'. செகண்ட் ஹான்ட் புத்தக கடையில் வாங்கியது. நான் வாசித்திருக்கவில்லை. அவசியம் சொல்கிறேன் என்றேன். அரைமயக்கத்தில் அவர் வீட்டிற்கு திரும்பி வந்த போது அவருடைய மரணத் தருவாய் நெருங்கிவிட்டதை உணர்ந்தேன். அவருக்காக அப்போது நான் செய்ய முடிந்தது இது மட்டுமே. இந்த புத்தகத்தை படிக்கத் துவங்கினேன். ஆவி தொடர்பாளர் வழியாக ஆவிகள் பேசியதன் குரல் பதிவுகளை அடிப்படையாக கொண்டு 70 களில் வெளியான புத்தகம். ஒரு மாதிரி கிறிஸ்தவ மறுமையை சொல்வது. நல்ல கட்டுக்கதை என எண்ணிக்கொண்டேன். ஆனால் அவர் கட்டிலருகே அமர்ந்து  நீங்கள் வாசிக்கச்சொன்ன நூலை வாசித்தேன். அதில் மறுமை உண்டு என சொல்லியிருக்கிறார்கள். அங்கே துன்பமும் துயரமும் இல்லாத ஆனந்தம் நிறைந்த உலகு நமக்காக காத்திருக்கிறது என்பதை ஆதரங்களோடு எழுதி உள்ளார்கள். அஞ்ச வேண்டாம் என்றேன். பாண்டிச்சேரி சென்று வருகிறேன் என சொன்னபோது ம் என்றொரு பதில் மட்டும் வந்தது.

 அவருடைய மரணச் செய்தி கேட்டவுடன் எனக்குள்  பிரார்த்தனையாக எழுந்த சொற்கள் என்பது 'என் தன்முனைப்பின் காரணமாக அறிந்தோ அறியாமலோ உங்களை காயப்படுத்தி இருக்கிறேன். அதற்காக என்னை முழுமையாக மன்னியுங்கள்.' பாண்டிச்சேரியில் இருந்து வீடு வந்து சேரும்வரை மனதுள் இதையே சொல்லிக்கொண்டிருந்தேன். 



எங்கள் வீட்டிற்கு அவர்கள் வந்தபோது அவர்கள் சைதாப்பேட்டையில் சுயமாக துவங்கிய மருந்து கடை நட்டமடைந்திருந்தது. தாத்தாவிற்கு உடல் தளர்ந்திருந்தது. இந்த வீட்டில் என் அப்பா துவங்கி, இரண்டு பாட்டிகள், தாத்தா, இப்போது பெரியம்மா என நான் எங்கள் வீட்டில் காணும் ஐந்தாவது மரணம். ஒருவகையில் என் வாழ்க்கை கேள்விகளை நான் இம்மரணங்களில் இருந்தே பெறுகிறேன். என்னை உருவாக்கியதில் இவர்கள் அனைவரின் பங்கும், என் அம்மாவின் பங்கும் உண்டு. என் வாழ்வு அவர்கள் அளித்த கொடை. எத்தனையோ சமரசங்களின் ஊடாக, அவமானங்களின் ஊடாகத்தான் நான் வளர்ந்திருக்கிறேன். வாழ்வை ஒரு வலியாக, பெரும் சுரண்டலாக உணர்ந்து நம்பிக்கையிழந்து நிற்கும் தருணங்கள் உண்டு. ஆனால் அதை கடந்து வர எவருடைய ஆசியோ, பரிவோ, கனிவோ தான் உதவியிருக்கிறது. எங்கிருந்தோ நீளும் மீட்பரின் கரம் என இவர்களைப் பற்றி எண்ணி கொள்வேன். அவர்களே இப்போது வரை இறுகப் பற்றியிருக்கிறார்கள். சில நேரங்களில் இவர்களின் அன்பிற்கு நான் தகுதியுடையவனா எனும் ஐயம் எனக்குண்டு. பெத்தம்மா உட்பட எங்கள் வீட்டில் வாழ்ந்து உயிர்விட்டவர்களை எண்ணும் போது என் வாழ்விற்காக அவர்கள் தங்கள் தன்னலத்தையும், தன்முனைப்பையும் அன்பின் பொருட்டு  தாண்டிய தருணங்களை நான் நினைவில் வைத்திருக்கிறேன். நவீன வாழ்வின் அன்றாடத்தில் அவை அசாத்தியமான துணிவினால் அல்லது அசட்டுத்தனத்தால் மட்டுமே சாத்தியமாகும். தியாகங்களின் ஊடாக திளைத்தது என் வாழ்க்கை. அவர்களுக்கு திருப்பியளிக்கும் ஆற்றல் எனக்கில்லை. ஆனால் அவர்கள் எனக்களித்ததை எனது முழுதுள்ளத்தால் பன்மடங்கு பெருக்கி எல்லோருக்கும் அளிப்பதன் வழியாக அவர்களை நிறைவுறச் செய்யும் வாழ்க்கை எனக்கு அமைய வேண்டும்.

பெத்தம்மா நிறைவுறுக..
உங்களுக்காக உங்களுக்கு பிடித்த உடையாளூர் கல்யானராம பாகவதரின் வனமாலி வாசுதேவா 

https://www.youtube.com/watch?v=-PocXk1-U_I  

Thursday, April 4, 2019

2016- சிறுகதை


ஜார்ஜ் ஆர்வெல் எனும் பிரபல எழுத்தாளரின் 1984 நாவலின் பிரதான கதாபாத்திரம் வின்ஸ்டன் ஸ்மித்தை பதாகைக்காக நேர்காணல் செய்திருக்கிறார் நரோபா. ஆங்கிலத்தில் நிகழ்ந்த நேர்காணல் தமிழ் இலக்கியச் சூழலுக்கு ஏற்ப கொஞ்சம் தகவமைக்கப்பட்டு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.  

வின்ஸ்டன் ஸ்மித் ஒரு சிறிய அறிமுக குறிப்பு

ஸ்மித் ஓசியானியா ராஜ்ஜியத்தின் ஏர்ஸ்ட்ரிப் 1 (பரவலாக பிரித்தானிய ராஜ்ஜியத்தில் லண்டன் என அறியப்படுகிறது) எனும் நகரில் வாழ்ந்தவர். இளமையிலேயே புரட்சியின் பொருட்டோ அல்லது எதிர்த்ததை பொருட்டோ அல்லது எதிர்க்கக்கூடிய சாத்தியமிருந்ததன் பொருட்டோ தந்தையையும், பின்னர் அசாதாரணமான சூழலில் தாயையும் தங்கையையும் இழந்தவர் (இழந்தவர் என்பதை கவனமாக வாசிக்க வேண்டும்).

பின்னர் கட்சியில் சேர்ந்து ‘வாய்மைத்துறை அமைச்சகத்தில்’ வரலாற்றை திருத்தி எழுதும் கணக்கற்ற பணியாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். மிகுந்த நுண்ணறிவும் கவனமும் கோரும் சவாலான பணி அது. முதல் மனைவியுடனான திருமண உறவு தோல்வியுற்று அவர் பிரிந்து சென்று பதினோரு ஆண்டுகளுக்குப் பின்னர் அமைச்சகத்தின் சக ஊழியரான ஜூலியாவும் அவரும் அரசாங்க விதிகளுக்கு முரணாக காதல் கொண்டனர். “சிந்தைக் குற்றத்திற்காக” பிடிபட்டு, அரசுக்கு எதிராக சதிச் செயல் உட்பட அனேக குற்றங்களை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டு ஓ பிரையன் தலைமையிலான குழு அவரது கோணல் மனோபாவங்களை நேராக்கி பரிவுடன் சீராக்கி விடுதலை செய்தது. ஒரு நன்னாளின் நற்தருணத்தில் ஓசியானியா ராஜ்ஜியத்தின் மரபிற்கிணங்க பின்னாலிருந்து மூளை சிதறச் சுடப்பட்டு உலகிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் மறைந்தார்- ஆசிரியர் குழு.
வின்ஸ்டன் ஸ்மித் மிக சுவாரசியமான ஆளுமை. அவருடைய அலுவலகச் சூழலில் நமக்கு அவர் அறிமுகப்படுத்தப்படும் முதல் நொடியில் அதை உணர முடிந்தது. அத்தனை இரைச்சலுக்கு இடையிலும், தனக்குள் ஆழ்ந்து தனிமையில் இருந்தார். இறுதிவரை தெளிந்த போதத்துடன் இருக்க முயன்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேர்காணலுக்காக அவரைத் துண்டு சீட்டு வழியாக தொடர்புகொண்டபோது (இனி இப்படி ரகசியம் காக்க வேண்டியதில்லை என்று பதில் எழுதி இருந்தார்) செஸ்ட்நட் மரத்தடி கஃபெயில் சாவகாசமாக சந்திப்பதாக முடிவு செய்து கொண்டோம். அவருக்கு ஒரு சின்னக் குழப்பம் இருந்தது. “நீங்கள் எந்த காலகட்டத்து ஸ்மித்தைச் சந்திக்க விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டு எழுதி இருந்தார். “சுடப்படுவதற்கு சற்று முந்தைய ஸ்மித்” என்பதே எனது பதில். ஆம், அவரையே நான் சந்திக்க விழைந்தேன்.

கோடை காலத்து அஸ்தமன சூரியன் இதமான வெம்மையுடன் தொலைதூரத்து மலை முகடுகளுக்குக் கீழ் இறங்கி கொண்டிருந்தான். மேகங்கள் தங்களுக்குள் அனல் சுடரை பொத்தி வைத்திருந்தது போல் விளிம்புகளில் செம்மை படர்ந்திருந்தன. ‘தொலைதிரையில் நாடி நரம்புகளை முறுக்கேற்றும் தேசபக்தி பாடல் ஒன்று ஒலித்துக்கொண்டிருந்தது. பெரும்பாலான இருக்கைகள் காலியாகிக் கிடந்தன. மூலையில் இருந்த மேஜையில் மூவர் ஒருவரை ஒருவர் வெறித்தபடி அமர்ந்திருந்தனர். ஆரோன், ரூதர்ஃபோர்ட், ஜோன்சாக இருக்கக்கூடும். தனது கனத்த உடலை தூக்கியபடி தனக்குள் முனங்குவதாக எண்ணிக்கொண்டு சற்றே உரத்த குரலில் “இருக்காது... எதுவும் நடக்காது... அஞ்ச வேண்டியதில்லை” என முனகியபடி நிலையிழந்து கஃபேக்கு வெளியே நடந்து கொண்டிருந்தவர் திருவாளர் பார்சனாக இருக்கவேண்டும்.

வெட்டவெளியை நோக்கி திறந்திருந்த சாளரத்துக்கு அருகிலிருந்த மேஜையில் முதுகை காட்டியபடி அமர்ந்திருந்தார் ஒருவர். அவர்தான் வின்ஸ்டன் ஸ்மித்தாக இருக்க வேண்டும் என தோன்றியது. அருகே சென்று நோக்குகையில் உறுதி செய்து கொண்டேன். அவரை நெருங்கியபோது அவருக்கு எதிரிருக்கையில் அமர்ந்திருந்த சிறிய மஞ்சள் முகமும், கோரை தலைமயிரும் உடையவன் எழுந்து  என்னைப் பார்த்து புன்னகைத்தபடி கடந்து சென்றான். அவனைக் காட்டி “திபெத்தியன்” என்றார்.  அவருடைய மேஜையின் மேலிருந்த சதுரங்கப் பலகையில் வெள்ளையும் கருப்புமாக பாதி விளையாடிய நிலையில் காய்கள் பரவிக் கிடந்தன. சற்று கிழடு தட்டிப் போயிருந்தார். காதுக்கும் தாடைக்கும் இடையிலான பகுதி தழும்பேறிக் கிடந்தது. சற்று கூர்ந்து கவனித்தால் உடலின் ஒவ்வொரு அங்கத்திலும் சென்ற காலத்து வடுக்களை கண்டுகொள்ள முடியும் என தோன்றியது. வடுக்களை துழாவிய என் கண்கள் அவர் பற்களில் வந்து ஒருநொடி திகைத்து நின்றன.

வி – புதிய செயற்கைப் பல் வரிசை பொருத்தப்பட்டிருக்கிறது. நினைவிருக்கும் என எண்ணுகிறேன்...

ந- ஆம், இப்போது நினைவுக்கு வருகிறது...

ஸ்மித் நாற்காலியில் அமரும்படி வலது கையால் சைகை காட்டினார். தலையில் அணிந்திருந்த எனது தொப்பியை மரியாதை நிமித்தம் மேஜையில் வைத்துவிட்டு நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்தேன்.

வி- முதலாளிகளின் தொப்பி...

என்றபடி மெல்ல எதையோ எண்ணி நகைத்தார் .

வி- இது உங்கள் ஊர் வழக்கமில்லையே ?

ந- இல்லை தான்... ஆனால் ஏனோ உங்களைச் சந்திக்க வரும்போது இதை அணிந்து கொண்டு வரவேண்டும் எனத் தோன்றியது.
ஏனோ எனக்கு அந்த பதிலில் நிறைவில்லை.
இரு நொடி நீண்ட அசவுகரியமான மவுனத்திற்குப் பிறகு,

ந- சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் உங்களுக்காகவே கொண்டு வந்தேன். உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என தோன்றியது. நீங்கள் சுடப்படும்போது இதை அணிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.
என்றேன் தயங்கியபடி

வி- நன்றி. மெல்லிய துணியால் ஆன தொப்பி... குண்டை எவ்வகையிலும் நிறுத்தாது (சிறிய புன்னகை முகத்தில் விரிந்தது). எனக்கு தொப்பியின் மீது யாதொரு நாட்டமும் இல்லை. ஆனால் வேண்டியவர்கள் அணிந்து கொண்டு போகும்போது பிடுங்கி வீசி எறிய மாட்டேன். அவ்வளவுதான்.

அலுமினிய லோட்டாவில் இருந்த திரவத்தை இரண்டு லோட்டாக்களில் ஊற்றிவிட்டு ஒன்றை என்னிடம் நீட்டினார்.

வி- விக்டரி ஜின்?

ந- நன்றி. வேண்டியதில்லை.

பரவாயில்லை என்ற மாதிரி தலையசைத்து மொத்தத்தையும் மளமளவென குடித்தபின் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார்.

வி- நாம் இப்போது பேசலாம்.

எனது பார்வை எதிரே இருந்த தொலைதிரையின் மீது விழுந்தது. செவி கூர்ந்து விழி நோக்கி பெரியண்ணன் எங்களுக்காக எங்கோ அமர்ந்திருக்கக் கூடும்.

வி- அஞ்ச வேண்டியதில்லை. என்னிடம் அவர்கள் பெறுவதற்கு இனி எதுவும் இல்லை. அவர்கள் கனிவுடன் என்னை சகித்துக் கொள்வார்கள். பேரன்பின் கணத்தில் பெரியண்ணன் மீது மூத்திரம் பெய்தால்கூட அவர்களுக்கு இப்போது நான் ஒரு பொருட்டல்ல.

நானும் புன்னகைத்தேன்.

ந- உண்மையிலேயே பெரியண்ணன் இருக்கிறாரா? நீங்கள் பார்த்ததுண்டா?

வி- நான் ஓ பிரையனை அறிவேன். கோல்ட்பெர்க்கை திரையில் கண்டாலே கோபத்தில் பிதற்றும் கோரைக் கூந்தல் சக பெண் அலுவலகரை அறிவேன். நான் பார்க்க வேண்டும் என்பதில்லை. அவர் இருக்கிறார். எஞ்சியிருக்கும் எனது ஒவ்வொரு உயிரணுவும் அவரது இருப்பை உணர்கிறது.

ந- அப்படியானால் கோல்ட்பெர்க்?

வி- அவரும்தான் இருக்கிறார். பெரியண்ணன் இருக்கும் வரை கோல்ட்பெர்க்கும் இருப்பார். கோல்ட்பெர்க் இல்லாமல் பெரியண்ணன் எப்படி இருக்க முடியும்? வலுவான எதிரி வேண்டும் தோழரே, மக்கள் அஞ்சும் வலுவான எதிரி, அஞ்சி அடைக்கலம் கோரும் அளவுக்கு ஆற்றல் மிகுந்த எதிரி, துரோகிகளை இனம் காண ஒரு எதிரி, நாயகர்களை போல் எதிரிகளும் அமரர்களே. பெரியண்ணன் எத்தனைக்கு எத்தனை உண்மையோ அத்தனைக்கு அத்தனை கோல்ட்பெர்க்கும் உண்மை.

ந- அல்லது எத்தனைக்கு எத்தனை பொய்யோ அத்தனைக்கத்தனை பொய்.
வி- இன்னும் உங்கள் நாட்டில் புரட்சி வரவில்லை என எண்ணுகிறேன். வந்திருந்தால் இந்நேரம் நாம் நிச்சயம் பேசிக்கொண்டிருந்திருக்க மாட்டோம் தோழரே.

ந- (நகைத்தேன்) நீங்கள் அதிகம் நகைக்கும் தருணங்கள் வாய்க்கவில்லை என்றாலும், உங்களுக்கு கூரிய நகைச்சுவை உணர்வு இருக்கும் என ஊகித்தேன். கலகக்காரர்கள் அரசுக்கு எதிராக நகைப்பவர்களாகவே இருக்க முடியும்.

வி- நான் கலகக்காரன் இல்லை தோழர். ஒருவேளை நானே அப்படி ஏதேனும் சொல்லியிருந்தாலும்கூட நம்ப வேண்டியதில்லை. நான் விரும்பிய வாழ்வை வாழ ஆசைப்பட்டேன். அது நன்மையா தீமையா என்றுகூட  பகுத்தறிய முடியாத மிகச் சாதாரண சுயநலமி நான்.

ந- இல்லை திரு.ஸ்மித், தொலைதூர நடைபயணம்கூட எங்கே தனிமையில் சிந்தனையை தூண்டிவிடுமோ என ஐயப்படும் தேசத்தில் வசிப்பவர் நீங்கள், கலவிகூட அமைப்பிற்கு எதிரான கலகமாகத்தான் இருக்க முடியும் எனும் சூழலில் வாழ்பவர் நீங்கள். முழுக்க முழுக்க அபத்தமும் கயமையும் நிறைந்த ஓருலகில் ஒரு துளி என்றாலும் வாய்மையைச் சிந்தையில் சுமந்தாலும்கூட அவர்கள் கலககாரர்கள் தான்.

வி- சிந்தையில் வாய்மையைச் சுமப்பது- ஆஹ்... இதை அவர்களும் அறிந்திருக்கிறார்கள். (லேசாக சிரிக்கிறார்) கண்டுகொண்டு களையெடுக்கவும் பயின்றிருக்கிறார்கள் சிந்தைக் காவலர்கள், பாவம் பார்சன்ஸ்... அவரை மீறி அவர் அகத்திற்குள் நுழைந்த ஒன்றுக்காக வருந்திக் கொண்டுள்ளார். ஒருவேளை கைதாவதற்கு முன்பான ஸ்மித்தை, குறைந்தது அறை எண் 101 க்கு செல்வதற்கு முன்பான ஸ்மித்தை நீங்கள் சந்தித்திருந்தால் ஆம் என மகிழ்வோடு ஒப்புக்கொண்டிருப்பேன்.

ந- ஒரு வேளை அடிப்படைவாதிகள் அரசாளும் காலம் வரலாம். அன்று நான் என்னவாக இருப்பேன் என தெரியவில்லை. உங்களைப்போல்தான்  இருப்பேன் என நினைக்கிறேன். அரசு தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளக் கதைகளைதான் நம்பியிருக்கிறது, கதைகளை கதைகளால்தான் எதிர்கொள்ள முடியும் ஸ்மித். உங்கள் ஒப்புதல் எனக்கு முக்கியமில்லை. உங்கள் கரங்களை அகத்திற்குள் இறுக பற்றியபடி கடந்து செல்லவே முயல்வேன்.

ஸ்மித் பதிலேதும் கூறாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். கீழே குனிந்து அவரது கெண்டைக் கால்களை நோக்கிக் கொண்டிருந்தார்.

எனது கோட்டு பாக்கெட்டில் இருந்து தாளில் பொதிந்திருந்த சிறிய பொருளை எடுத்து மேஜை மீது பிரித்து அவரிடம் காட்டினேன். தந்தத்தால் செய்யப்பட்ட சிறிய கப்பல் ஒன்று கண்ணாடி உருளைக்குள் மிதந்து கொண்டிருந்தது. அதை கையில் எடுத்து உற்று பார்த்துக் கொண்டிருந்தார் ஸ்மித். 

வி- குறைந்தது நீங்கள் வேறு ஏதாவது ஒன்றை எடுத்து வந்திருக்கலாம். என்னே ஒரு கற்பனை வறட்சி...

ந- இல்லை... இதில் ஒரு வசீகரம் உண்டு. உங்களை அறிந்துகொள்வதற்கு முன்னரே இதை வைத்திருந்தேன் என பொய் கூற மாட்டேன். தேடிச் சென்று வாங்கினேன். எப்போதும் எனக்கு நான் வாழ நினைக்கும் வாழ்வை இது நினைவுறுத்தும். நானும் கூட எண்ணுவதுண்டு... இதோ எனக்கே எனக்கான பிரபஞ்சம்... நான் தனித்திருக்க, தப்பித்துகொள்ள, மறைந்துகொள்ள, மகிழ்ந்திருக்க.

வி- (பாதியில் இடைமறித்து) அப்படி ஒன்றில்லை... அது வெறும் கற்பனை… கற்பனை மட்டுமே..

என்றபடி சட்டென அதை மேஜையின் மறு எல்லைக்கு உருட்டிவிட்டார். கண்ணாடி உருளைக்குள் கப்பல் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தது.
இல்லை அப்படியில்லை என மறுத்து வாதிட வேண்டும் என ஏதோ ஒன்று உந்தி தள்ளியது.

ந- இல்லை ஸ்மித்... நிச்சயம்
மீண்டும் வேகமாக இடைமறித்து பேச துவங்கினார்..

வி- இல்லை நண்பரே. நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள், நீங்கள் எண்ணுவது போல் எங்கிருந்தும் மறைந்துகொள்ள முடியாது, ரகசியமும் அந்தரங்கமும் எவருக்கும் இங்கு இல்லை. உங்கள் ரகசியங்களை நானறிவேன்’ என எவரும் உங்களிடம் சொல்லாதவரை நீங்கள் நம்பப் போவதில்லை.

என்னை நோக்காமல் எங்கோ அப்பால் நோக்கி பேசிக் கொண்டிருந்தார். சினம் தலைக்கேற உரத்த குரலில் பேசத் துவங்கினேன்..

ந- ஒருநிமிடம்... திருவாளர். ஸ்மித்... ஆர்வெல் உங்களைப் படைத்த சூழலைப் பற்றி நீங்கள் அறிவீர்களா? அணுகுண்டு வெடித்து பலர் இறந்த இரண்டாம் உலகப்போர் முடிந்த பின், அச்சமும் அவநம்பிக்கையும் நிறைந்த பனிப்போர் காலகட்டமது. அவர் அஞ்சியது போல் உலகம் மூன்று துண்டங்களாக பிரிந்து போய்விடவில்லை. முன்பை விட போர்கள் வெகுவாக அருகிவிட்டன. பொருளாதாரமும் மனித வளமும்தான் இன்று ஆற்றலையும் அதிகாரத்தையும் நிர்ணயிக்கிறது. நீங்கள் காலாவதி ஆகிவிட்டீர்கள் ஸ்மித். உங்கள் படைப்பிற்கு எந்த பொருளும் இல்லை. பிறரின் நம்பிக்கை கோட்டைகளை சரித்து அழிப்பதற்கு முன், வெறும் வீணச்சம் உருவாக்கிய வறட்டு பாத்திரம் நீங்கள் ஸ்மித். உங்கள் எல்லையை நீங்கள் புரிந்துகொள்ளத்தான் வேண்டும்.
மூச்சு வாங்கியது.

மெதுவாக மற்றொரு லோட்டாவில் ஜின்னை நிரப்பிக்கொண்டிருந்தார்.

வி- இருக்கலாம், நீங்கள் கூறுவது உண்மையாகவும் இருக்கலாம், காலாவதியான என்னை நீங்கள் சந்திக்க இத்தனை முயற்சித்திருக்க வேண்டியதில்லை. எனது சிறுபகுதி உங்களுள் எப்படியோ புகுந்துகொண்டது தோழரே. நான் உங்களின் ஒரு பகுதியாக, உங்கள் மொழியை பேசிக்கொண்டிருக்கிறேன். எனக்கு எவ்வித நோக்கங்களும் இல்லை. எனது உலகிற்கு அப்பால் சென்று ஆர்வெலின் நோக்கங்களை ஆராயும் ஆற்றல் எனக்கில்லை. ஆனால் ஒன்றுண்டு... போர்கள் அருகி இருக்கலாம், போரச்சம் இல்லாமல் ஆகிவிட்டதா என்ன?

என் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. இறுக்கமாக அமர்ந்திருந்தேன்.

வி- நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் நண்பரே. எவரும் தப்ப முடியாது. நீங்கள் உண்ணும் உணவிலிருந்து, உடுத்தும் உள்ளாடையின் நிறம் வரை எல்லாமும் அவர்களுக்குத் தெரியும். அவ்வளவு ஏன்? உங்கள் பிறப்புறுப்பின் கரிய மச்சம்கூட அவர்கள் அறிந்து வைத்திருப்பார்கள். ஒருவேளை உங்கள் வாழ்வில் எதுவும் நிகழாமல் போகலாம். உங்களால் உங்கள் சிந்தனைகளால் ஆபத்தில்லை என்பது வரை நீங்கள் நிம்மதியாக வாழ்ந்து மறைய அனுமதிக்கப்படுவீர்கள், உங்கள் பிறழ்வுகளும் புரட்சிகளும் முன் தீர்மானிக்கப்பட்டவை தோழரே, பழகிய தடத்தில் அனுமதிக்கப்பட்ட எல்லைவரை சென்று வரலாம். அதற்கப்பால் செல்ல முனைந்தால் சுவடின்றி அழிக்கப்படுவீர்கள்.

சன்னதம் போல் அவர் குரல் உயர்ந்து அடங்கி சட்டென மவுனத்திற்குள் புதைந்து கொண்டது.

என்னுடல் இன்னமும் நடுங்கிக்கொண்டிருந்தது. மூச்சை சீராக்க முயன்றேன்.

வெளியே இருள் கவியத் துவங்கியது. செந்நிற தீற்றல் தூரத்து நினைவாக எங்கோ ஒடுங்கிக் கொண்டிருந்தது.

ந- மன்னிக்க வேண்டும் ஸ்மித், நான் சற்று நிதானம் தவறிவிட்டேன்.
மாறா மெல்லியப் புன்னகையுடன் மவுனமாக அமர்ந்திருந்தார்.

‘தொலைதிரையில்’ ‘வெற்றி’ ‘வெற்றி’ என ஒரு பெண் குரல் பிளிறியது. ஆங்காங்கு அமர்ந்திருந்த மக்கள் உற்சாகமாகக் குரல் எழுப்பினர்.

வி- இந்த நாகரீகமற்ற செயலுக்கு மன்னிக்கவும். இந்த வெரிகோஸ் புண்..
என்றபடி குனிந்து கெண்டைக்கால் அருகே லேசாக சொறிந்துக் கொண்டார்.

ந- பரவாயில்லை. நீங்கள் நிலையழிந்து உள்ளீர்கள் எனப் புரிந்து கொள்கிறேன். அப்படி இருக்கும் ஒவ்வொரு முறையும் இந்த வெரிக்கோஸ் புண் அரிப்பு அதிகமாவதை கவனித்திருக்கிறேன்.

ஸ்மித் சாளரத்தின் வழியே எதையோ வெறித்து நோக்கினார். அவர் கண்களில் எவ்வித சலனமும் இல்லை. தொலைவில் யாரோ ஒரு பெண் குழந்தையை தூக்கியபடி இசைத்துக் கொண்டிருந்தாள். அந்த பாடல் மிக சன்னமாக ஒலித்துக் கொண்டிருந்தது.

சட்டென திரும்பி நேராக என் கண்ணை நோக்கியபடி

வி – நீங்கள் ஜூலியாவை பற்றி என்ன எண்ணுகிறீர்கள்?
கணநேர யோசனைக்குப் பின்னர்

ந- உங்கள் அளவுக்கு அவருக்கு அறச்சிக்கல் இருந்திருக்காது. நீங்கள் அவசியத்திற்கு மேல் அறிந்து கொண்டீர்கள். அவரைப் பொறுத்தவரை விதிமுறை என்றால் அதை மீற வேண்டும். அதனால் ஏற்படும் கிளர்ச்சியை அனுபவிக்க வேண்டும். அவ்வளவுதான்.

வி- இல்லை... நீங்கள் எண்ணுவது போல் அத்தனை எளிதல்ல. நான் எனது உணர்வுகளுக்கு தேவையான ஆதாரங்களை நியாயங்களைத் தேடி அலைந்தேன். அவளுக்கு அவையெல்லாம் தேவைப்படவில்லை. இயல்பிலேயே அறிந்திருந்தாள். கச்சிதமாக தன்னை மறைத்து கொண்டாள், ஒருவகையில் எனது முட்டாள்தனத்தால் அவளும் சிக்கிக்கொண்டாள். ஆனால் அவள் அதை எதிர்பார்த்திருப்பாள். அதிலும் தனது மீறலை வெளிப்படுத்த முயன்றிருப்பாள்.

வாயிலில் ஆராவாரம் குறைந்தது. தொலைதிரை சட்டென மௌனித்தது.
வி- உங்களுக்கு அதிக நேரமில்லை... அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இறுதியாக ஏதாவது கேட்க வேண்டுமானால் கேட்கலாம்.

ந- ஏதேதோ கேட்க எண்ணியிருந்தேன். உங்கள் அன்னையைப் பற்றி, தங்கையைப் பற்றி, முதல் மனைவியைப் பற்றி, பிறகு காதலைப் பற்றி, முழுமையடையாத அந்தப் பாடலை பற்றி… ஆனால் இப்போது முடியுமா எனத் தெரியவில்லை.

வி- ஏன்?

ந- தெரியவில்லை. உங்களுக்கு ஓ பிரையன் மீதிருந்த விளக்கிக் கொள்ள முடியாத பிரேமையைப் போல் ஏதோ ஒன்று... உங்களிடம் என்னால் பேச முடியும். ஏதோ ஒரு வகையில் எனக்கு அணுக்கமானவர் என தோன்றியது. நீங்கள் எனக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதை ஏற்கனவே சொல்லிவிட்டதாகத் தோன்றுகிறது.

சீரான காலடியோசையை அருகிலென கேட்க முடிந்தது. இதற்காகவே காத்திருந்தது போல் எவ்வித மறுப்பும் இன்றி எழுந்தார். வாழ்வை உறிஞ்சி உயிர் மட்டும் எஞ்சியிருக்கும் வெட்டவெளி என அவர் உடல் இலகுவாக எழுந்தது.

வி- உங்களைச்’ சந்தித்தது மகிழ்ச்சி தோழரே, உங்கள் நாள் இனிதாகுக.
என போகிற போக்கில் மேஜையின் மூலையில் கிடந்த கண்ணாடி உருளையை என்னை நோக்கித் தள்ளிவிட்டு சலனமின்றி வெளியேறினார்.

கருப்புடை அணிந்த காவலன் அவரை வாய்மைத் துறை அமைச்சகத்துக்கு அழைத்து செல்வான். அதன் தூய இருளற்ற வெண்பளிங்கு வளாகத்தில் அமைதியாக எவ்வித வன்மமும் இன்றி நடந்து கொண்டிருப்பார். இப்போது பின்னாலிருந்து தோட்டா தலையில் பாய்ந்திருக்கும். இரு துளி கண்ணீர். வருத்தங்களும் குரோதங்களும் அற்ற தூய்மையான கண்ணீர் வடித்திருப்பார். முழு மனதோடு பெரியண்ணனை நேசித்தபடி மூளை சிதற மரித்திருப்பார்.

எங்கள் மேஜையைத் துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தான் ஒருவன். இரு லோட்டாக்களையும் கால்வாசி நிரம்பியிருந்த ஜின் புட்டியையும் எடுத்துச் சென்றான். இனி இங்கிருக்க வேண்டியதில்லை. காலடிகள் கனக்க மெல்ல நடந்தேன். திரும்பி நோக்கியபோது, மூலையில் சாளரத்துக்கருகே இருக்கும் மேஜையில் எவரோ ஒருவர் அமர்ந்திருந்தார். அருகே சிதறிய காய்கள் கொண்ட சதுரங்கப் பலகையும் பெரியண்ணனின் விசால முகம் நிறைந்த விக்டரி ஜின் புட்டியும் இரண்டு அலுமினிய லோட்டாக்களும் இருந்தன. எதிரே எவனோ ஒருவன் அமர்ந்திருந்தான். நல்ல உயரம். ஆப்ரிக்க- அமெரிக்கன். தலையில் கருப்புத் துணியை புது மாதிரியாக கட்டியிருந்தான். கழுத்தில் ஏகப்பட்ட சங்கிலிகள் தொங்கிக் கொண்டிருந்தன. கையில்லாத சட்டையிலிருந்து அவன் புஜங்கள் புடைத்து எழுந்தன. அலுமினிய லோட்டாவிலிருந்த ஜின்னை ஒரே மடக்கில் குடித்துவிட்டு கையை ஆட்டி ஆட்டி பேசிக் கொண்டிருந்தான். அங்கிருந்தபடியே என்னை நோக்கிப் புன்னகைத்தான். நானும் புன்னகைத்தேன். கோட்டு பாக்கெட்டில் இருந்த கண்ணாடி உருளையை உருட்டியபடி கஃபெயை விட்டு வெளியேறினேன். காற்றில் ஈரம் கூடியிருந்தது. ஒருவேளை இன்று மழைவரக்கூடும்.

அம்புப் படுக்கை - சிறுகதை

துருவேறிப்போன தர்மாவின் பச்சை நிற ஹெர்குலஸ் சைக்கிள் ஒத்துழைக்க மறுத்து முரண்டு பிடித்தது. அவன் அழுத்துவதற்கு சம்பந்தமில்லாமல் பிடிவாதமாக இறுக்கிக்கொண்டு முனகியபடி மெதுவாக முன்னகர்ந்து வருவதை சுதர்சனின் காதுகள் தொலைவிலேயே உணர்ந்துகொண்டன. தர்மாவின் சைக்கிளுக்கென்றே இருக்கும் ஓசை, பசையற்று உலர்ந்த எலும்புகள் ஒன்றையொன்று உரசிக் கொள்ளும் ஓசை. 

மூச்சிரைக்க காலூன்றி அவனிடம் நின்ற தர்மாவை நோக்கி, “இன்னமும் இந்த சைக்கிள விடலையாண்ணே?”  என்றான். “வேற போக்கில்லையே தம்பு” என்றபோது வழக்கமாக காதுகளைத் தொட முனையும் உதட்டோரக் கோடுகள் தயங்கி பாதி வழியில், கறைபடிந்து மழுங்கிய முன்பற்களைக் காட்டுவதோடு நின்றன. “தம்பு.. நம்ம ஆனாரூனா செட்டியாருக்கு சொகமில்ல. ஒரு எட்டு வந்து பாத்துட்டு போவச் சொல்லி ஆச்சி தாக்க சொல்லிவிட்டாக”.

மாலைச் சூரியன் மேகங்களுக்குள் மறைந்து மேக முனைகளை மட்டும் ஒளியேற்றியது. கிரிக்கெட் பேட்டை கவ்வியிருக்கும் கேரியரை இழுத்துச் சரிசெய்தபடியே, “அம்மா உள்ளதான் இருக்காங்க... சொல்லிருங்க” என்றான்.

“அப்பச்சி ஒன்னையத்தான் பாக்கணுமாம்”
அவர் பேரனும் சுதர்சனும் பள்ளித் தோழர்கள். அவன் இப்போதெல்லாம் இங்கு வருவதில்லை எனும் வருத்தம் இருக்கலாம். அவனை வரவழைக்க உதவி தேவையாய் இருக்கும் என எண்ணிக்கொண்டான்.
“நாச்சி இருக்கானா?’
“எல்லாரும் இங்கேயேதான் ரெண்டு நாளா இருக்காக”
“நானும் அம்மாவும் வர்றோம்” என்றபடி சைக்கிளை மீண்டும் வீட்டுக்குள் நிறுத்தினான்.

ஆனாரூனா ஊரின் முக்கியஸ்தர்களில் ஒருவர். ஒரு காலத்தில் அவருடைய பாத்திரக்கடை மிகப் பிரபலம். இப்போது கவனிக்க ஆளில்லை. டவுனில் நான்கைந்து காம்ப்ளெக்ஸ்கள் அவருடையவை. வாடகையில் நல்ல வரும்படி. தர்மா அவருடன் பட்டறையில் இருந்தவன்தான். அது இதுவென்று எல்லா வேலையும் செய்வான். ஆள் தேவை என்றால் மருந்து இடிக்கவும் வருவான்.

தாத்தா மரணக் குறிகளில் தேர்ந்தவர். முதன்முறையாக அவர்கள் சந்தித்துக் கொண்டது பல வருடங்களுக்கு முன்னர். ஆனாரூனாவின் மூத்த மகன் பதினாலு நாள் காய்ச்சலில் துவண்டு கிடந்தான். மிஷன் ஆஸ்பத்திரி துரை டாக்டர் ஊசிக்குக்கூட மட்டுப்படவில்லை. நினைவிழந்து அரற்ற ஆரம்பித்தவுடன் பங்காளிகள் வைத்தியரைப் பற்றி கூறி அழைத்து வந்தார்கள். நாடி பார்த்து “யான நடதான்... மெதுவான்னாலும் வலுவா இருக்கு... பொழச்சிக்கிடுவான்” என்று அவர் சொன்னபடியே இரண்டொரு நாளில் மீண்டெழுந்தான். மூச்சிழுத்துக் கொண்டிருந்த பெரியாச்சியின் நாடியைப பார்த்துவிட்டு “தளந்துருச்சு... ஆனாலும் ஆத்தா கடிவாளத்த இறுக்கமா பிடிச்சிருக்கா. பொறுக்காம போதும்னு விட கொஞ்சம் நாழியாகும்... ரெண்டு நாள் கழிச்சிதான் ஆகும்” என்றார். அவர் வாக்கைக் காக்கவே மூச்சைப் பிடித்துக் கொண்டிருந்தவள் போல் மூன்றாம் நாள் உதயத்தில் உயிர்விட்டாள் பெரியாச்சி.

அதன் பின்னர் ஆனாரூனா வைத்தியரைப் பார்க்க அடிக்கடி வரத் துவங்கினார். வாயு குத்தல் கால் குடைச்சல் என ஏதாவது மருந்து வாங்கிக்கொண்டு போவார். ஒவ்வொரு முறையும் பர்மாவிலிருந்து தான் தப்பிவந்த கதையை தவறாமல் புதுப்புது கிளைக் கதைகளோடும் கதாபாத்திரங்களோடும் சொல்வார். தாத்தாவும் பொழுது போக வேண்டுமே எனக் கேட்டுக் கொண்டிருப்பார். கிண்டல் செய்வதுகூட பிடிபடாத அளவுக்கு ஆனாரூனா ஒரு வெள்ளந்தி.

“நெலம சரியில்லன்னு பட்டவுடனே பணத்த தங்கமா மாத்தி கப்பல பிடிச்சு வந்துட்டேன்ல… எல்லாம் அந்த ஆறுமுகசாமி அருள். வாங்கடான்னு சொன்னேன்... என் வார்த்தைய நம்பாத பயலுக எல்லாம் ஓட்டாண்டி ஆயிட்டாய்ங்க” என்று ஒருமுறை சொன்னபோது “கப்பல்ல ஏற முன்ன ஒரு ஃபைட் சீனு உண்டுங்கானும் மறந்துட்டீர்” என தாத்தா எடுத்துக் கொடுத்தார். “சப்பான்காரன் போட்டாம் பாரு குண்டு. மொத்தமும் காலி. நானும் பாகனேரி சம்முகமும் மட்டும் கெடச்சத சுருட்டிகிட்டு ஊருக்கு ஓடியாந்தோம்… போக்கு தெரியாம லாத்திகிட்டு கிடந்தோம். சோத்துக்கு வழியில்ல... இங்கிலிஷ்காரன் இங்கிலிஷ்காரன் தான்... அவம்புட்டு டாங்கு வண்டியில ஏத்தி இந்த லக்குல கொண்டாந்து விட்டுட்டான்” என்றால் “வழியில டாங்கு சக்கரத்துல காத்து போயிருக்குமே?” என்பார் தாத்தா.

ஒருமுறை பர்மாவிலிருந்து தன் தலைமையில் ஒரு படையை நடத்தியே ஊருக்குக் கூட்டிவந்த பிரதாபத்தைக் கூறினார். இவருடைய வீரச்செயலை பாராட்டி நேதாஜி வங்காளத்தில் எழுதிய நன்றிக் கடிதத்தைதான் காணவில்லை என்றும்  கிடைத்தவுடன் காண்பிப்பதாகவும் சொன்னார்.

ஆனாரூனா கதைகளில் மாறாதது ஒன்றுண்டு. ஒவ்வொரு முறையும் அவர் மயிரிழையில் தப்பிப் பிழைப்பார். புறங்கழுத்தில் மூச்சுவிட்டுக் கொண்டிருந்த மரண தேவதையை மூச்சு வாங்கச் செய்து தப்பித்து வந்தார். “குண்டு போடுறான் போடுறான்னு கத்திகிட்டு சனமெல்லாம் தெருவுல ஓடுதுங்க. பிளேனு சத்தம் கேட்டாலே வயித்துல அரளும். அவென் என்னத்துக்கு வாரான்னு தெரியாது. ஒருநா ராத்திரில பொண்டு புள்ளைகளோட ரங்கூன் கேம்புக்குள்ள உறங்கிட்டு கெடந்த சனம் மேல குண்டு போட்டான். ஒரு யுத்த தர்மம் வேணாம்? தண்ணி மோள எந்திருச்சு வெளிய வந்தவேன், தெகச்சு நின்னுட்டேன்... டமார்ன்னு பெருஞ்சத்தம்... அப்பிடியே தரையோட தரையா மட்டமா படுத்துக்கிட்டேன்... கண்ணு முன்னாடி கேம்ப் பத்தி எரியுது. இந்தக் காது மந்தமானது அன்னிலேந்துதான். நீங்க கூட கேப்பீகளே” என்றார்.

“எப்படியோ எவென் கையிலும் ஆப்படாம இந்தப் பக்கட்டு வந்து சேந்து நிம்மதி மூச்சு விட்டா அந்த பகவானுக்குப் பொறுக்கல. பெரிய ஆறு... முழங்கால் மட்டு தண்ணில சனம் இறங்கி நடக்க ஆரம்பிக்குது. எங்கையோ மலைக்கு அங்குட்டு மழ கொட்டி திடுமுன்னு தண்ணி. சுதாரிக்க முடியல... அடிச்சுக் கொண்டே போயிடுச்சு... கண்ணு முன்னாடி பாத்தேன்... இவளுக்கு முள்ளு குத்துனதால நெம்பிகிட்டு கிடந்தேனோ பொழச்சேன்... ரெண்டு நிமிஷம்தான்”. ஒருமுறை ஆற்றில் கண்ணாடி விரியன் தன்னுடன் வந்தவரைக் கடித்து சாகடித்ததாக சொல்வார். பழனிக்கு நடக்கும்போது திருடர்களிடம் மாட்டி கவரிங் கடுக்கனை கொடுத்து தப்பியதைச் சொல்வார்.

கர்னல் சாமுவேல் மிகக்கறாரான பேர்வழி. சுதேசி எனச் சந்தேகம் வந்தால்கூட போதும், லாடம் கட்டிவிடுவார். விசாரணைக்குச் சென்ற பலரும் ஊமைக் காயங்களால் இரண்டு மூன்று நாட்களில் ரத்த பேதியாகி இறந்து போவார்கள். சுதேசி போராட்டத்திற்கு நிதி சேகரித்த வகையில் செட்டியாரும் மாட்டிக் கொண்டாராம். “என்னிக்கி இருந்தாலும் அவுகதான பாதுகாப்பு, நீங்க போயிருவீக... நாளைக்கு எங்கள அவுக ஒதுக்கிடப்பிடாது பாருங்க” என நைச்சியமாக கர்னலிடம் நிலைமையை எடுத்துச்சொல்லி சரிக்கட்டி தப்பித்தாராம். அவருக்கு எப்போதும் மரணம் தன்னை வேட்டையாடுவதாக ஒரு பயம். தப்பித்ததில் பெருமிதம் வேறு உண்டு. 

தாத்தா நல்ல அறிவுத் தெளிவோடு இருந்த கடைசி நாட்களில் ஒரு நாள் அவரும் ஆனாரூனாவும் பேசிக்கொண்டிருந்தது சுதர்சனுக்கு நன்றாகவே நினைவில் இருந்தது. ஆனாரூனா, “நம்மள குறி வெச்சுகிட்டே இருக்கு... எப்படியோ ஆறுமுகசாமி அருளால இம்புட்டு நாளா இன்னும் தல தப்பி இருக்கேன்” என்றபோது தாத்தா “குறி வெக்குற அளவுக்கெல்லாம் பகவானுக்கு பொறும இருக்காது ஓய்… நாம என்ன ராவணனா கம்சனா... அதுக்கும் ஒரு ஆகிருதி வேணும்... குத்துமதிப்பா மொத்தமா அம்பு மாரி தான்... அதிஷ்டம் இருந்தா பொழச்சிக்கலாம்... நீர் சொல்லிட்டீர்... ஒவ்வொரு நாளும் எல்லாருக்கும் இதே கததான்…” என்றார்.

பாம்புகளிடமும் தோட்டாக்களிடமும், திருடர்களிடமும், இராணுவத்திடமும், கிளர்ச்சியாளர்களிடமும், குண்டுகளிடமும், தப்பித்து பிழைத்திருக்கிறார் ஆனாரூனா. “ஒங்க தாத்தா நல்லா ஜேம்ஸ்பாண்ட் பட சீனெல்லாம் அடிச்சு விடுறார்” என சுதர்சன் நாச்சியிடம் சொன்னதற்காக கொஞ்சகாலம் கோபித்துக் கொண்டு பேசாமலிருந்தான்.

எது உண்மை என்று எவரும் தோண்டித் துருவியதில்லை. தேவையுமில்லை. பர்மாவில் இருந்தார். பர்மிய மனைவிமார்களை வேறு வழியின்றி உதறிவிட்டு, குழந்தைகளை மட்டும் தூக்கி வந்த அப்போதைய வழமைக்கு மாறாக தன் வாரிசைச் சுமந்த பர்மிய ஆச்சியையும் அத்தனை இக்கட்டுகளை மீறி ஊருக்கு கூட்டிக்கொண்டு வந்தார் என்பதும். அன்றைய தினத்தில் பேரழகியாக அறியப்பட்ட, தன்னை விட பல வருடங்கள் இளமையான, ஆச்சியின் பூர்வாசிரம வரலாற்றைப் பாதுகாக்க பெரும்பாடு பட்டார் என்பதும். பர்மாவிலிருந்து வரும் வழியில் காலில் அடிபட்டு எலும்பு முறிந்ததில் கெந்தி கெந்தித்தான் நடக்கிறார் என்பதும். இன்றும் பர்மிய முகச்சாயல்கொண்ட பேரன் பேத்திகள் புழங்குகிறார்கள் என்பதும் மூத்த ஆச்சியும் அவர் வழி வந்தவர்களும் இவரோடு புழங்குவதில்லை என்பதும் தீர்மானமான உண்மைகள். ஆச்சியைப் பார்க்கும்போதெல்லாம் எங்கிருந்தோ வந்தவர் தன்னை எப்படி முழுவதுமாக இந்த மண்ணில் கரைத்துக் கொண்டார் என்பது சுதர்சனுக்கு வியப்பாய் இருக்கும். தர்மாதான் ஏதாவது கதைகளைச் சொல்வான். “கேட்டுக்க தம்பு ஆச்சி ரொம்ப ராங்கி அப்பல்லாம், அப்பச்சிக்கும் எடுத்ததுக்கெல்லாம் சந்தேகம். ஆருட்டையும் பேச மாட்டாக பொழங்க மாட்டாக. மெதுமெதுவா எல்லாமுமா ஆய்ட்டாக... மீனாச்சி ராச்சியம்தான்” எனச் சொல்லிச் சிரித்தான்.

இரும்புக் கட்டிலில் எவர் முகமும் காணப் பிடிக்காதவர் போல் ஜன்னலைப் பார்த்து வலது புறமாக கண்மூடி ஒருக்களித்து படுத்திருந்தார் ஆனாரூனா. உடல் முழுவதும் அடர்ந்திருந்த ரோமம் வெள்ளி புற்களாக நீண்டிருந்தன. வேட்டி நெகிழ்வின் ஊடாக மூத்திரப்பை நாளம் வெளித்தெரிந்தது. நாச்சியும் வேறு பலரும் நின்று கொண்டிருந்தார்கள். “ஐயா நீ நாடி பிடிச்சு பாக்கனும்னு சொல்றாரு. தாத்தா இருந்த வரைக்கும் அவருதான் பாப்பாரு. தாங்குமா தாங்காதான்னு பாத்து சொல்லுப்பா” சொற்கள் முடிவதற்குள் ஆச்சிக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்தது.

சுதர்சனுக்கு எரிச்சலாக இருந்தது. நாடியில் என்ன இழவைப் பார்த்துவிட முடியும்? இன்னமும் இதை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் விஜயதசமிக்கு ஆயுர்வேத கல்லூரியில் சேர்ந்தவன் தீபாவளிக்கு திரும்பி வந்திருக்கும்போது அவனுக்கு என்ன புரிந்திருக்கக்கூடும்? வேண்டா வெறுப்புடன் முதல்நாள் முதல் வகுப்பில் சென்று அமர்ந்தவுடன் பேராசிரியர் ஸ்ரீகாந்த ரெட்டி “இது ஒரு கல்லூரி அல்ல, செத்த காலேஜ்... நீங்கள் படிப்பது மருத்துவ அறிவியல் அல்ல வெறும் வரலாறு” என்று இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் உருவிச் சென்றிருந்தார்.

தாத்தாவினால்தான் இந்த கதி. அவருக்குப் பிறகு சுதர்சன்தான் மருத்துவனாக, அதுவும் ஆயுர்வேத மருத்துவனாக, வரவேண்டும் என்பதே தனது ஆசை என திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். அவனுக்காக மூட்டை நிறைய சுவடிகளையும் ட்ரங்க் பெட்டி நிறைய மருத்துவ நூல்களையும் சொத்தாக விட்டுச் சென்றார். எத்தனையோ முறை அவர் வாத பித்த கபம் என வகுப்பெடுக்க முயலும்போதெல்லாம் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி விடுவான். கடைசி காலங்களில் நினைவு தப்பத் துவங்கியதும் மருந்துகள் மறந்து அனைவருக்கும் நிரந்தர புன்னகையுடன் திருநீறு அளித்துக் கொண்டிருந்தார். அதற்கும் நோய் சரியாகிவிட்டது என காலில் விழுந்து கொண்டிருந்தார்கள். சாய்ந்து உறங்கிக்கொண்டிருப்பவர் திடுமென்று விழித்து “ஆரட்டியம்... சீ ச்சீ... போயிரனும் சீக்கிரம் போயிரனும் “ எனப் புலம்புவார்.

தாத்தாவிற்கு தண்டுவட டி.பி. மிகக்கொடூரமான வலி. “அம்புப் படுக்கைன்னா என்னன்னு கிருஷ்ணன் எனக்கு காட்டுறான்... போதும் கண்ணா” எனப் புலம்புவார். தண்டுவடம் முழுக்க ஆயிரம் கூர்வாட்கள் குத்திக்கொண்டிருப்பது போல வலி. உச்சகட்ட வலிக்கு அப்பால் வாழ எப்படியோ பழகிக் கொண்டார். அங்கே அவர் என்னவாக இருந்தார் என்பது யாருக்கும் தெரியாது. பெரும்பாலும் புன்சிரிப்புடன் கண்மூடிக் கிடந்தார். மனம் அதிலிருந்து வழுவி போதம் திரும்பும்போதுதான் வலி அவரால் தாங்கிக்கொள்ள முடியாமல் ஆனது. “என்னக் கொண்டுபோ... கொன்னுடு” என அரற்றுவார். மரணக் குறிகள் மட்டும் நினைவில் எழுந்தன. “இன்னும் சக்கரவட்டம் வரல” என்பார். மரணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் “காட்டுப்பீ...” என புன்னகைத்தார். கடைசியில் நேராகப் படுக்கக்கூட முடியாத நிலை. வலியின் தீவிரத்தில் ஒருநாள் இதயம் ஸ்தம்பித்து மரித்தார்.
“ஆச்சி நாடில ஒன்னும் தெரியாது”

“அதெல்லாம் நீ பாத்து சொல்லுப்பா... தாக்க சொல்லிவிடனும்” என்றாள் ஆச்சி. சுதர்சனைக் காட்டிலும் அவன் மீது அவளுக்கு அதீத நம்பிக்கை.

“ரிபோர்ட்ஸ் கொடுங்க” எனக் கேட்டு ஃபைலை பிரித்து பார்த்தான். சுதர்சனின் சங்கடத்தைப் புரிந்துகொண்டது போல் செட்டியாரின் இளைய மகன் அருகில் வந்து காதில் கிசுகிசுத்தார் “இஸ்கீமிக் ஹார்ட் டிசீஸ்னு சொன்னாங்க தம்பு. இப்ப தண்ணி கோத்துகிட்டு கெடக்கு... ஒன்னும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க” என்றார். தெத்துப்பல்லும், பென்சில் மீசையுமாக இருந்தார். ஊரிலேயே இருந்து செட்டியாரைப் பார்த்துக் கொள்பவர் அவர்தான். டவுனில் ஹார்ட்வேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.

செட்டியார் அருகே ஸ்டூலில் அமர்ந்தான். மூடிய திரைகளுக்கு அப்பால் விழிகள் துடித்துக் கொண்டிருந்தன. உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன. தொண்டையைக் கடக்கும் காற்றின் ஒலி புறா அகவல் போல் வெளியே கேட்க முடிந்தது. ஆவல் மின்னும் விழிகள் சூழ சுதர்சன் அமர்ந்திருந்தான்.

“அய்யா... நல்லா இருக்கீகளா... நாடி பாக்க வைத்தியர் பேரன் வந்திருக்காரு... தெரியுதா?” என கூட்டத்திலிருந்த முன் வழுக்கையர்களில் ஒருவர் உரக்கக் கூவினார். பெரிய சலனமேதும் இல்லை. “அய்யா சுதர்சன் வந்திருக்கான்” என்று நாச்சி காதருகே குனிந்து சொன்னான்.

தலைமாட்டில் செட்டியாரின் மூத்த மருமகள் மூச்சிரைக்க லோட்டா பாலில் நெய்க் கரண்டியுடன் தயாராக இருந்தார். கங்கை நீர் நிரப்பிய தாமிரச் சொம்பை வைத்துக்கொண்டு இரண்டாம் மருமகள் நின்றிருந்தார். கோயம்பத்தூரிலிருந்து வந்திருந்த பெரிய மகன் எவரிடமோ “காரியம் முடிச்சு நாலாம் நாள் வந்து கையெழுத்து போடலன்ன ஏன்னு கேளுங்க” என உணர்ச்சிகரமாக கிணற்றடியில் மன்றாடிக் கொண்டிருந்தது அசாதாரண நிசப்தத்தை கீறிக்கொண்டு அறையை நிறைத்தது. 

மெதுவாக இடக்கரம் தொட்டு நாடியை நோக்கினான். ஆள்காட்டி விரல் வாதம், நடுவிரல் பித்தம், மோதிரவிரல் கபம். வாதம் – பித்தம் – கபம் மனதிற்குள் சொல்லிக்கொண்டே இருந்தான். நாடி ஒரு அலை போல எழுந்து மூன்று விரல்களையும் தொடுவது போலிருந்தது. வாதம் – பித்தம் – கபம். மோதிரவிரலையும் நடுவிரலையும் தீண்டாமல் வளைந்து சென்ற ஒரு பாம்பு விருட்டென ஆள்காட்டி விரலைக் கொத்தியது. சிற்றலைகள் எழுந்தன தாமரை மிதக்கிறது. ஆழத்திலிருந்து ஒரு கடலாமை நிதானமாக மேலெழுந்து வருகிறது. அதன் ஓடு மோதிரவிரலை தொட்டு மூச்சிழுத்து மீண்டும் ஆழத்திற்கு சென்றது. மெல்லச் சலனமற்று அடங்கியது. பதட்டத்தில் கனவு கலைந்து எழுந்த சுதர்சன் கண் விழித்து நோக்கினான். மீண்டும் பேரலை விரல்களை தொட்டுச் சென்றது.

எழ முற்பட்டபோது அவர் விரல்கள் அவனைத் தீண்ட முனைவது போலிருந்தது. மீறி எழுந்தான். நாசி வளைவு கண்ணீரின் ஈரத்தில் மின்னியது. உதடுகள் துடித்து எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தன. சொல்லிவிடு, சொல்லிவிடு, என மன்றாடித் துடிக்கும் கண்கள் அவனுக்கு மிகப் பரிச்சயமானவை என தோன்றியது. சுதர்சன் எழுந்தான். அவனையும் மீறி உதட்டில் ஒரு சிரிப்பு எழுந்தது. “அய்யா உங்களுக்கு ஒண்ணுமில்ல. நாடி எல்லாம் நல்லா இருக்கு. பழைய மாதிரி ஆயிடலாம். கவலப்படாதீங்க. நீங்க சொல்ல இன்னுமொரு கத பாக்கியிருக்கு” எனக் கையை இறுகப் பற்றி உரக்கச் சொல்லிவிட்டு, “வர்றேன்,” என்றபடி வெளியே வந்தான்.

“என்ன தம்பு ஆளுகளுக்கு தாக்க சொல்லிவிடலாமா?” என்றார் இளையவர்.
“அவசியம் இருக்காது“ என்றபடி சைக்கிளில் ஏறிக் கிளம்பியபோது வாயிலில் புங்கை மர நிழலில் தன்னுடைய சைக்கிளைச் சாய்த்துக்கொண்டு அமர்ந்திருந்த தர்மா, “வாங்க தம்பு” என உதட்டோர கோடுகள் காது தொட வழக்கம் போல் சிரித்தான்.

சைக்கிள் தெரு முக்கைக் கடப்பதற்கு முன்பே ஆச்சியின் பெருங்குரல் ஓலம் கேட்டது. நிற்க விடாமல் சைக்கிள் அவனை உந்திக் கொண்டு போனது.