Monday, February 20, 2017

காரைக்குடி புத்தக கண்காட்சி அனுபவங்கள்


ஃபிப்ரவரி பத்தாம் தேதி துவங்கி பத்தொன்பதாம் தேதி வரை காரைக்குடி கம்பன் அரங்கில் வருடாந்திர புத்தககண்காட்சி நிகழ்ந்தது. இது பதினைந்தாவது ஆண்டு என நினைவு. முதல் சில ஆண்டுகள் மத்திய மின் வேதியல் ஆய்வகம் காரைக்குடி கண்காட்சியை எடுத்து நடத்தியது. இன்றும் கூட அது மிக நேர்த்தியாக நடத்தப்பட்டதை பதிப்பத்தார் நினைவு கூர்கிறார்கள். சென்றாண்டு முதன்முறையாக ஒரு அரங்கை எடுத்தேன். நவீன இலக்கிய பதிப்பகங்கள் பெரிதாக ஏதும் இங்கு வருவதில்லை. அவர்களுக்கு கட்டுபடி ஆவதில்லை என்பதே முக்கிய காரணம். எனினும் ஒரு ஆர்வத்தில் சென்ற ஆண்டு நண்பர்கள் துணையோடு ஈடுபட்டேன். லாபமில்லை என்றாலும் நட்டமில்லை எனும் நிலையில் இருந்தது. இந்த ஆண்டு கடிதம் அனுப்புவோம் என்றார்கள். ஆனால் எந்த தகவலும் வரவில்லை. ஃபிப்ரவரி மூன்றாம் தேதி வாக்கில் தமிழினி வசந்தகுமார் அழைத்து “உங்க ஊர்ல பத்தாம் தேதி லேந்து புத்தக கண்காட்சியாமே? கட போடலையா?” என்றார். நிர்வாகிகளிடம் கேட்டால் “லெட்டர் வரலையா?” என்கிறார்கள். ஸ்டால் மீதி இருந்ததால் ஒன்றை பதிந்து கொண்டேன். ஒரு புத்தக கண்காட்சியை ஜனநாயக நாட்டில் இத்தனை ரகசியமாக ஏன் நடத்த வேண்டும் என புரியவில்லை.