Monday, February 20, 2017

காரைக்குடி புத்தக கண்காட்சி அனுபவங்கள்


ஃபிப்ரவரி பத்தாம் தேதி துவங்கி பத்தொன்பதாம் தேதி வரை காரைக்குடி கம்பன் அரங்கில் வருடாந்திர புத்தககண்காட்சி நிகழ்ந்தது. இது பதினைந்தாவது ஆண்டு என நினைவு. முதல் சில ஆண்டுகள் மத்திய மின் வேதியல் ஆய்வகம் காரைக்குடி கண்காட்சியை எடுத்து நடத்தியது. இன்றும் கூட அது மிக நேர்த்தியாக நடத்தப்பட்டதை பதிப்பத்தார் நினைவு கூர்கிறார்கள். சென்றாண்டு முதன்முறையாக ஒரு அரங்கை எடுத்தேன். நவீன இலக்கிய பதிப்பகங்கள் பெரிதாக ஏதும் இங்கு வருவதில்லை. அவர்களுக்கு கட்டுபடி ஆவதில்லை என்பதே முக்கிய காரணம். எனினும் ஒரு ஆர்வத்தில் சென்ற ஆண்டு நண்பர்கள் துணையோடு ஈடுபட்டேன். லாபமில்லை என்றாலும் நட்டமில்லை எனும் நிலையில் இருந்தது. இந்த ஆண்டு கடிதம் அனுப்புவோம் என்றார்கள். ஆனால் எந்த தகவலும் வரவில்லை. ஃபிப்ரவரி மூன்றாம் தேதி வாக்கில் தமிழினி வசந்தகுமார் அழைத்து “உங்க ஊர்ல பத்தாம் தேதி லேந்து புத்தக கண்காட்சியாமே? கட போடலையா?” என்றார். நிர்வாகிகளிடம் கேட்டால் “லெட்டர் வரலையா?” என்கிறார்கள். ஸ்டால் மீதி இருந்ததால் ஒன்றை பதிந்து கொண்டேன். ஒரு புத்தக கண்காட்சியை ஜனநாயக நாட்டில் இத்தனை ரகசியமாக ஏன் நடத்த வேண்டும் என புரியவில்லை.


தமிழினி, வம்சி, சொல்புதிது, சர்வோதயா பதிப்பகங்கள் சென்ற ஆண்டை போலவே இவ்வாண்டும் ஆதரித்தனர். வெ.அலெக்ஸ் உடல்நிலை குன்றி இருப்பதால் அவரை தொந்திரவு செய்ய வேண்டாம் என ‘எழுத்து’ பதிப்பகத்தை தொடர்புகொள்ளவில்லை. ‘சந்தியா’ இவ்வாண்டு முன்பணம் கேட்டார்கள். காசு போட்டு வாங்கி விற்கும் அளவுக்கு எல்லாம் இங்கே ஒன்றும் இல்லை என்பதால் அவர்களின் புத்தகங்களும் வரவில்லை. ‘இயல்வாகை’க்கு மிக தாமதமாக தெரியபடுத்தியதால் அவர்களும் புத்தகங்களை அனுப்ப முடியவில்லை. ஆள் பற்றாக்குறை, திருப்பூர் கண்காட்சியில் வேறு பிசியாக இருந்தார்கள். ‘காந்தி இலக்கிய சங்கம்’ இவ்வாண்டு அதிக புத்தகங்களை அனுப்பி வைத்தார்கள். சர்வோதயம் அனுப்பிய சில நூல்களை அவர்களும் அனுப்பி இருந்தார்கள் என்பதால் இப்போது திருப்பி அனுப்பும் போது கொஞ்சம் கவனமாக பார்க்க வேண்டும். இயற்கை மருத்துவம் பற்றி அனேக தலைப்புகளில் சிறு சிறு கையேடுகளை அனுப்பி இருந்தார்கள். எதிர்பார்த்தது போலவே அவை தான் ஓரளவுக்காவது விற்றன. நாட்டில் நிறைய பேருக்கு மலச்சிக்கலும், குடல் புண்ணும் இருக்கின்றன போலும். பத்து ரூபாய் பனிரெண்டு ரூபாய் கையேடுகளுக்கு ரசீதும் கழிவும் அளித்து மாளவில்லை. நண்பர் தூயன் மூலம் ‘யாவரும்’ ஜீவ கரிகாலன் அறிமுகம் ஆனார். அவரும் புத்தகங்களை அனுப்பி உதவினார். புத்தக கண்காட்சியின் போது ஒரு நாள் இங்கு வந்துமிருந்தார். பல இளம் எழுத்தாளர்களை ‘யாவரும்’ அறிமுகம் செய்ருதிக்கிறது. நல்ல வடிவமைப்புடனும், வசீகரமான அட்டைபடங்களுடனும் ‘யாவரும்’ புத்தகங்கள் தனித்து தெரிந்தன. வருங்காலங்களில் இதில் அறிமுகமான சில எழுத்தாளர்கள் கவனம் பெறுவார்கள் என நம்புகிறேன். ‘மணல் வீடு’ ஹரிகிருஷ்ணன் அவர்களை ஓரிரு முறை கோவையில் சந்தித்திருக்கிறேன். ஃபேஸ்புக்கில் பேசியதும் உண்டு. தூயன் வழியாக அவரை தொடர்பு கொண்டேன். அவரும் புத்தகங்களை அனுப்பி ஊக்குவித்தார். எழுத்தாளர் ஜனநேசன் தனது சொந்த முயற்சியில் பாரதி புத்தகாலயத்திலிருந்து சில புத்தகங்களை தருவித்தார். இரும்பு அலமாரி, கம்ப்யுடர் டேபிள், இரண்டு நாற்காலிகள், இரண்டு நீள பெஞ்சுகள் மற்றும் புத்தக பெட்டிகளுடன் இனிதே துவங்கியது புத்தக கண்காட்சி.

வார நாட்களில் மாலை நான்கரை முதல் இரவு ஒன்பது வரையும், வார இறுதிகளில் காலை பதினோரு மணி முதல் இரவு ஒன்பது மணிவரையும் கண்காட்சி நடந்தது. மணியம்மாவும் நானும் ஸ்டாலில் அமர்ந்தோம். மானசாவும் அம்மாவும் மாறி மாறி கிளினிக்கையும் சுதீரையும் கவனித்து கொண்டார்கள். பெரும்பாலான நேரம் சும்மாவே அமர்ந்திருந்தோம். கிருஷ்ணமூர்த்தியின் ‘சாத்தானின் சதை துணுக்கு’ ஜீவ கரிகாலனின் ட்ரங்கு பெட்டி கதைகள்’, ரமேஷ் ரக்ஷனின் ‘ 16’, விஜய் மகேந்திரனின் ‘நகரத்திற்கு வெளியே’ ராமன் சுகுமாரின் ‘என்றும் யானைகள்’ ஜானகி லெனினின் ‘ என் கணவரும் ஏனைய விலங்குகளும்’, மணல் வீடு இதழ்கள், சீனத்தில் ஜெ.சி.குமரப்பா, வம்சி வெளியிட்டுள்ள முரகாமி மொழியாக்கங்கள் என பலவற்றையும் வாசித்து பொழுதை கழித்தேன். முக தாட்சண்யத்திற்காக வாங்க வந்தவர்கள் எல்லாம் ‘நலம் தரும் செம்பு;, ‘சுகப்ரசவ வழிகாட்டி’ ‘நெல்லிக்கனி’ என பத்துரூபாய் பனிரெண்டு ரூபாய் பிரசுரங்களை வாங்கி திருப்தியுற்று என்னையும் திருப்தியுற செய்ததாக நம்பினர். அவர்களை சொல்லி குற்றமில்லை.  

பக்கத்து ஸ்டால் ‘புக் வோர்ல்டில்’ சில நல்ல பயன்படுத்திய புத்தகங்கள் தேடி எடுத்தேன். Isabelle Allende எழுதிய ‘japanese lover’ காலித் ஹுசையினியில் ‘kite runner’ john updike எழுதிய ‘due considerations’ வாங்கினேன்.

சென்ற ஆண்டை காட்டிலும் கொஞ்சம் கூடுதல் திட்டமிடலுடன் பணிச்சுமையை குறைத்து கொண்டேன். சென்ற ஆண்டின் விற்பனையில் பாதிக்கு சற்று மேலே விற்றுள்ளது. அதுவும் கடைசி இரண்டு நாட்களின் புண்ணியத்தில். கைக்காசு மூவாயிரம் போட வேண்டியிருக்கும் போல இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்த மாதிரி கிறுக்கு தனங்களில் ஈடுபட கூடாது என உறுதி பூண்டுள்ளேன்.

காரைக்குடி புத்தக கண்காட்சியில் பல விஷயங்கள் சீர் செய்யப்பட வேண்டும்.
பள்ளியை ஒட்டியே அரங்கு இருப்பதால், பள்ளி வேலை நேரத்தை அனுசரித்தே கண்காட்சியை நடத்துகிறார்கள். வார நாட்களில் மாலை நான்கரைக்கு தான் தொடங்குகிறது. இதை மாற்றலாம்.

மிக முக்கியமாக போதிய விளமபரம் இல்லை. பள்ளி மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகளுக்காக ஒவ்வொரு நாள் மாலையும் மேடையை ஒதுக்குகிறார்கள். இது வேலைக்காகாத உத்தி. அதை காண வருபவர்களுக்கு இது புத்தக கண்காட்சி என்று கூட தெரியவில்லை. அப்படியே வருகிறார்கள், அப்படியே செல்கிறார்கள். முதலில் இந்த வெட்டி கேளிக்கைகளை குறைத்து ‘தீவிர தன்மையை’ கொண்டு வர வேண்டும். இதை ஒரு ‘அறிவு திருவிழாவாக’ ‘இலக்கிய விழாவாக ‘ எழுத்தாளர்களை கவுரவிக்கும் விதமாக, புதிய சிந்தனைகளை விதைக்கும் விதமாக நடத்த வேண்டும். கூட்டம் குறையத்தான் செய்யும். ஆனால் நாளடைவில் தனக்கென ஒரு திரளை அது உருவாக்கும்.

மாணவர்களை கேளிக்கை வழியாக கொண்டு வர முடியாது. ஒவ்வொரு நாளும் பள்ளிகளுக்கென நேரம் ஒதுக்கலாம். பள்ளிகள் முன்னரே வீட்டுக்கு சுற்றறிக்கை அனுப்பி அனுமதியுடன் அழைத்து வர வேண்டும். வெளியே விற்கும் 30 ரூபாய் பாப்கார்ன் வாங்கி தர முடிந்தவர்களுக்கு 25 ரூபாய்க்கு புத்தகம் வாங்கித்தர மனமில்லை. வாசிப்பின் மீதான சமூக அக்கரையின்மையைத்தான் காட்டுகிறது. (வாசிப்பால் என்ன மாறி விட போகிறது என கேட்பவர்களுக்கு என்னிடம் பதிலில்லை)

உள்ளே புத்தகங்களை தவிர பிறருக்கு கடை அளிக்க கூடாது. பத்து நாட்களும் தமிழ் மழலையர் பாடல்களையும், கணினி வகுப்பெடுக்கும் குறுந்தகடுகளையும் திரும்ப திரும்ப கேட்டு ஏறத்தாழ பைத்தியம் பிடித்துவிட்டது. சலிப்பே இல்லாமல் ஒரே சிடியை எப்படித்தான் ஓட விடுகிறார்களோ? ஒரு மடத்திற்கு வேறு ஸ்டால் ஒதுங்கி இருந்தார்கள். அவர்கள் ஒருபக்கம் தென்னாடுடைய சிவனே போற்றி என கூவி களைத்தார்கள். குறைந்த பட்சம் அவர்களின் நிதி முக்கியம் என்றால் வெளியே அவர்களுக்கு இடம் ஒதுக்கலாம்.

உள் பகுதிகளில் போதிய வெளிச்சம் இல்லை. வயதான வாசகர் ஸ்டால் ஸ்டாலாக டார்ச் லைட்டுடன் புத்தகங்களை தேடினார்.

பத்து நாட்கள் வைக்க வேண்டுமா என யோசிக்கலாம். நன்றாக விளம்பரம் செய்து ஐந்து நாட்கள் நடத்தினால் போதும்.

ஸ்டாலுக்கு 5500 என்பது காரைக்குடிக்கு அதிகம் தான். பிற செலவுகள் ஒரு ஐந்தாயிரம் பிடிக்கும். பத்தாயிரத்தை எடுக்க இங்கு ஐம்பதாயிரத்திற்கு விற்பனை செய்ய வேண்டும். அதாவது நாளொன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்க வேண்டும். இதற்கான வாய்ப்பே இங்கு இல்லை. அண்டைய ஸ்டால் காரர்கள் பலரிடம் பேசும் போது, இங்கு வி,கே,என் புண்ணியத்தில் தங்குமிடம் இலவசமாக அளிப்பதால் மட்டுமே வந்து கொண்டிருக்கிறோம் என்றார்கள். மேலும் கம்பன் அரங்கு இலவசமாக அளிக்கபடுகிறது. இரண்டே இரண்டு புத்தக ஸ்டாண்டுகள், ஸ்டாலை பிரிக்க இரண்டு கழிகள் மண் மூட்டையில்  நடபட்டுள்ளன, ஸ்டாலுக்கு இரண்டு குழல் விளக்குகள், கண்காட்சியின் கடைசி நாளுக்கு முதல் நாள் ஸ்டாலுக்கு இருவர் என இரவுணவு, இவ்வளவு தான் அவர்களின் செலவு. வெளியே அமைக்கப்பட்ட மேடை, ஃப்ளேக்ஸ் தட்டிகள் எல்லாம் முழுக்க விளம்பரதார்கள் வைப்பவை. ஐம்பது ஸ்டாலில் வசூலாகும் சுமார் இரண்டே முக்கால் லட்சத்தை என்னதான் செய்கிறார்கள் என தெரியவில்லை.  

தொடர் செயல்பாடுகள், ஆர்வம், கவனம் எல்லாம் இருந்தால் நடந்துங்கள். நாங்களும் நடத்துகிறோம் என ‘ஏனோ தானோவென’ நடத்துவதாக இருந்தால் நடத்தவே வேண்டாம். மனதுக்கு உகந்த சில நண்பர்களை சந்தித்தது மட்டுமே ஒரே ஆறுதல். 

No comments:

Post a Comment