Friday, April 14, 2017

வாசுதேவன் - சிறுகதை குறித்து

அண்மையில் நான் எழுதிய சிறுகதை ஜெயமோகன் தளத்தில் வெளியாகி உள்ளது. வாசுதேவன் நான்கைந்து ஆண்டுகளுக்கு மேலாக மனதின் மூலையில் உறங்கிக்கொண்டிருப்பவன். அவன் விழித்தெழும் போதெல்லாம் அவன் மவுனத்தின் வழியாக எனக்குள் கேள்விகளை எழுப்பியபடியே இருப்பான். யுகம் யுகமாக மனிதர்கள் விடை காண முயன்று அலுத்து சோர்ந்து விழும் கேள்விகள். எனக்கு மட்டும் அத்தனை எளிதில் விடைக் கிடைத்து விடுமா என்ன? 

எழுத தொடங்கிய காலகட்டத்தில், நான் வாசுதேவனை பற்றி எழுதி இருக்கிறேன். பின்னர் மீண்டும் கொஞ்ச காலத்திற்கு முன்னர் காப்காவின் உருமாற்றம் பற்றி ஆம்னியில் எழுதும் போது மீண்டும் வந்து சென்றான். ஆனால் முழுவதுமாக அவனை என் அகத்திலிருந்து இறக்கி வைக்க முடியவில்லை. இப்போது வாசுதேவனாக அவன் என்னைவிட்டு இறங்கி சென்றுவிட்டான். ஏதோ ஒருவகையில் அவனுடைய நினைவுகளுக்கு நான் நியாயம் செய்துவிட்டதாக ஒரு நிறைவு. அவனுக்கு நீதி கிடைத்துவிட்டதாக எனக்கொரு நிம்மதி. இனி அடுத்த வேலையை பார்க்க செல்லலாம். மீண்டும் அவன் என் அகத்தில் துயில் எழ மாட்டான் என்பது எனக்கு உறுதியாக தெரிகிறது. 

இது ஒரு அனுபவப் பகிர்வாக நின்றுவிடுகிறது, தரிசனம் என ஏதுமில்லை என பல நுண்மையான வாசகர்கள் சொன்னார்கள். வேறு பலர் தாங்கள் இக்கதையின் வழியாக உணர்ந்து கொண்டதையும் சொன்னார்கள். பல விஷயங்கள் தொக்கி நிற்பதாகவும், வலிய திணிக்கபட்டதாகவும், நெகிழ்வான தருணங்கள் இன்னும் இறுக்கமானதாகவும் இருக்க வேண்டும் என்று சில வாசக விமர்சகர்கள் சொன்னார்கள். இன்னும் கொஞ்சம் பூடகமாக சொல்லவேண்டும் என்றார்கள். இறுதி வரிகள் தெலுங்கில் இருப்பது வாசிப்பிற்கு தடையாக இருப்பதாக சொன்னார்கள். தெலுங்கில் அவ்வரிகள் வரவேண்டும் என்பதை முன்கூட்டியே யோசித்து இடையில் உள்ள உரையாடல்கள் தெலுங்கில் அமைத்ததாக சொன்னார்கள்.ஜெ மொழி நடையை பின்பற்றுவதாக சொன்னார்கள். ஒவ்வொரு விமர்சினத்தையும் கவனித்து வருகிறேன். சரியாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். எனக்கும் இவைகளுக்கு விடையளிக்க இப்போது இயலவில்லை. ஒவ்வொன்றைப் பற்றியும் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். நடையைப் பொருத்தவரை மீண்டும் மீண்டும் எனது நண்பர்களும் நலம் விரும்பிகளும் என்னை எச்சரித்த வண்ணமிருக்கிறார்கள்.முழுமையாக புரிந்துகொள்கிறேன். ஒவ்வொரு ஆரம்ப எழுத்தாளருமே அவருடைய ஆதர்ச எழுத்தாளர் நடையில் தான் எழுத துவங்குவார்கள். ஜெ மாதிரி எழுத வேண்டும் என வலிந்து இப்படி எழுதுவதில்லை எனும் நம்பிக்கையை மட்டுமாவது நான் கோருகிறேன். அதுவே என் அகமொழியாக இருக்கும் போது வேறு என்ன செய்ய இயலும்? காலபோக்கில் இது மாறிவிடும என நம்புவோமாக என்பதைத்தவிர வேறெதுவும் சொல்லுவதற்கில்லை.  

இது வடிவ போதத்துடன், சிறுகதை பிரக்ஞையுடன் எழுதப்பட்ட கதையா எனும் கேள்வி எனக்கும் உண்டு. ஏனெனில் சேலம் வானவன் மாதேவி - வல்லபி சகோதரிகளையும் அங்கு வேறு பல தசை சிதைவு அன்பர்களையும் சந்தித்துவிட்டு வந்த பின்னர் ஒரே மூச்சில், மிக குறுகிய காலத்தில் ஒருவித உணர்வெழுச்சியில் எழுதப்பட்ட கதை.  ஆனால் இது அனுபவ பகிர்வாக நின்றுவிடுகிறதா? தரிசனம் என ஏதுமில்லையா? என்னளவில் இக்கதையில் தரிசனம் இருக்கிறது. ஒரு  கண்டடைதல் இருக்கிறது. வாழ்வைப் பற்றிய மிக முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. அதற்கானவிடை காணும் திசையில் பயணிக்கிறது. ஒருகால் சரிவர உணர்த்தப்படாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் இருக்கிறது. அதுவே இந்த அனுபவத்தை புனைவாக்கியது. ஏனெனில் இது எங்கோ நடந்ததை அப்படியே மீள் பதிவு செய்யவில்லை. வேறுவகையில் நிகழ்வுகளையும் நினைவுகளையும் மாற்றி களைத்து அடுக்கியிருக்கிறது. இம்முறை வாசுதேவன் அவனுடைய முழு உருவத்துடன் தன்னை வெளிக்காட்டி இருக்கிறான் என்றே எண்ணுகிறேன். ஒன்றிரண்டு கதைகளை எழுதிவிட்டு அவை சரியாக வாசிக்க படவில்லை என  எண்ணுவது முட்டாள் தனம் தான். அதுவும் ஆரம்ப நிலையில்.



-சுகி 

No comments:

Post a Comment