Showing posts with label தெளிவத்தை ஜோசப். Show all posts
Showing posts with label தெளிவத்தை ஜோசப். Show all posts

Thursday, June 26, 2014

மனம்வெளுக்க காத்திருத்தல் - தெளிவத்தை ஜோசப்பின் படைப்புலகம்

 (2013 ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் விருது தெளிவத்தை ஜோசெப் அவர்களுக்கு அளிக்கப்பட்டதை ஒட்டி ஜெயமோகன் தளத்தில் வெளியான கட்டுரை)

மலையகத் தமிழ் எழுத்தின் முன்னோடி தெளிவத்தை ஜோசப் அவர்களின் படைப்புலக வாசல் எனக்கு திறந்து கொண்டது என்னவோ அண்மைய விஷ்ணுபுர விருது அறிவிப்பிற்கு பின்னர் தான். எனக்கு வாசிக்கக் கிடைத்த ஏழு சிறுகதைகள், மூன்று குறுநாவல்கள், சுப்பையா கமலதாசன் அவருடைய இலக்கிய வாழ்வைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரை, மற்றும் ஒரு நாவல் ஆகியவை அளித்த சித்திரத்தை தொகுக்கும் முயற்சியே இக்கட்டுரை.


என்வரையில் அவருடைய படைப்புகள் இரு களங்களில் இயங்குகின்றன. ஒன்று மலையக தோட்ட வாழ்க்கை மற்றொன்று மலையகத்திலிருந்து கொழும்பு போன்ற பெருநகருக்கு புலம்பெயர்ந்த நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கை. அவருடைய மூன்று குறுநாவல்கள், மீன்கள், கத்தியின்றி ரத்தமின்றி போன்ற சிறுகதைகள் தேயிலைத் தோட்டப் பின்புலத்தில் உருவாகியுள்ளன. அவருடைய நாவலான குடைநிழல், சிறுகதைகளான அம்மா, மழலை, பயணம், மனிதர்கள் நல்லவர்கள், இருப்பியல் போன்றவைகள் நகரத்து பின்புலத்தில் உருவாகியுள்ளன.