மனிதர்கள் வாழும் பொருட்டு, பிழைத்திருப்பதற்காக நகரங்களுக்கு பெயர்வதே வழமை. காசி மட்டும் விதிவிலக்கு. வாழ்வை விட்டு விலக விரும்புபவர்களுக்காக உருவான நகரம் தான் வாரணாசி. மேற்பரப்பில் மினுங்கும் நியான் விளக்குகளுக்கு கீழ் எல்லா நகரங்களுக்கும் இருண்ட அடிநகரம் ஒன்றுண்டு. காசிக்கு அடிநகரம் மேற்பரப்பு என்ற இருமை இல்லை. ஒரே சமயத்தில் பல நூற்றாண்டுகளில் வாழும் நகரம். ஈசனின் உடுக்கை போல அதிர்ந்து கொண்டே இருக்கும் நகரமாகிறது காசி.
டமரு
திரிசூலத்தின் கூர்முனைகளில் நிற்கும்
இந்நகரம் சதா அதிர்ந்து கொண்டிருப்பது
இரத்தம் கொதி நிலை அடையச் செய்திடும்
ஒரே ஒரு ஆதி இசைக்கு தானே
பம் பம் பம் பம் டம டம டம் டம டம டம்
அண்டங்கள் ஜனித்து மோதிடும் இப்போரோசையின் தாளத்திற்கு இடைவிடாது நில்லாது ஆடும் இவ்வுடலை இப்போதே துறந்து விடுவது
மிக நல்லது இல்லையா…?!
என
ஏதேதோ பிதற்றுகிறாய்
கேடகி மலரே…!
தாழம்பூவே…!
ஒன்றும் அறிகிலேன் யான்.
நானோ….
சிவனின் வலிய கை- இறுகப் பற்றியிருக்கும்
பேரானந்தத்தில்
எதையும் உணராது மயங்கியிருக்கும்
இடை குறுகிய சிறு உடுக்கை அன்றோ…!!
நகரம் எப்படி அதிரும் உடுக்கையோ அப்படி சுயமும் ஈசனின் வலிய கை இறுகப் பற்றியிருக்கும் சிறு உடுக்கையாக உணர்கிறது. ஜோர்பா எனும் கிரேக்கன் நாவலில் வரும் ஒரு உரையாடல் நினைவுக்கு வருகிறது. கடவுளின் கரம் எனும் வெண்கல சிலையை காணும் ஒரு பெண்னுடன் ஒரு உரையாடல் நிகழ்கிறது.எனக்கு பிடித்த பகுதிகளில் ஒன்று. வேறு பல கட்டுரைகளிலும் மேற்கோள் காட்டியிருக்கிறேன். “என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?”
“நாம் இதிலிருந்து தப்ப முடிந்தால் ..” வெறுப்புடன் முணுமுணுத்தாள்.
“தப்பித்து எங்கே செல்வது? கடவுளின் கரம் எங்கும் உள்ளது. விடுபட முடியாது. நீ வருந்துகிறாயா?”
‘இல்லை, இவ்வுலகில் மிக உன்னதமான மகிழ்ச்சி என்பது அன்பாகவே இருக்கக்கூடும். ஆனால் நான் இப்போது அந்த வெண்கலக் கரத்தை கண்டுவிட்டேன், நான் தப்பிக்க விழைகிறேன்.”
பாதுகாப்பை விட சுதந்திரத்தை தேர்வு செய்கிறது ஜோர்பாவின் கதாபாத்திரம். கீழைத்தேய மனம் சமர்ப்பித்தல் வழி பாதுகாப்பை தேர்வு செய்கிறதா? சமர்ப்பித்தல் வழி உண்மையில் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் தேர்வு செய்கிறது என்று தோன்றியது. மாயாவின் கவிதைகளில் இந்த கூற்றை காண முடிகிறது.
எனக்கு பிடித்த சம்யுக்தா மாயாவின் கவிதைகளில் ஒன்று ‘பஸ்மம் ஏந்திய கலயம்'.
நாலுக்கட்டு வீட்டின் செவ்வோடுகளில் இறங்கி வரும் இறக்கமற்ற மழை
நடுமுற்றத்தில்- வெள்ளமென பெருகும் சந்தியாக் காலத்தில்
எதிர்நோக்கியிருந்த ஒரு வருகை
உறுதியாக இரத்தானதை
ஏற்க முயல்கிறேன்
எந்த வருத்தமுமின்றி
பலாமர காட்டுக்குள்
ஈரம் கனத்த தோகையின்
பாரம் தாளாமல்
நிராதரவாக குரலெழுப்பும்
மயில்களின் அகவல்கள்
எதிரொலிக்கின்றன இவ்வீட்டின்
யாருமற்ற எண்ணற்ற அறைகளில்
நான் இந்த தரவாட்டின் வாசலில்
வெளியே செல்லும் முன் தீற்றிக் கொள்ள கூரையின் சரிவில் மாட்டப்பட்டிருக்கும்
பஸ்மம் ஏந்திய எஃகு கலையத்தின் நூற்றாண்டுகள் கடந்த உறுதியை மட்டும் பற்றிக் கொள்கிறேன்
எல்லாம் எரிந்தழிந்த மிச்சம் தான் பஸ்மம். அந்த மிச்சத்தால் பாதிக்கப்படாத உறுதியுடன் அவற்றை தாங்குகிறது பஸ்மத்தை தாங்கும் எஃகு கலயம். நிலையாமையை குறிக்கும் பஸ்மமும் உறுதியை குறிக்கும் எஃகு கலயமும் என இரு முரண்பட்ட உருவகங்கள் பல அர்த்த சாத்தியங்களை அளிக்கிறது. நூற்றாண்டுகள் கடந்த உறுதி எனும் போது மரபின் ஆற்றலை குறிப்பதாகவும் வாசிக்க முடியும். இந்த கவிதையை சம்யுக்தா மாயாவின் பிரிவாற்றாமை கவிதைகளுக்கும் காசி கவிதைகளுக்கும் இடைப்பட்ட புள்ளியாக காண்கிறேன். ‘சேறடர்ந்த காட்டெருமை மீதமர்ந்து/ சிறிது தூரம் செல்லும் ஒரு புள்ளென மரணத்தின் முதுகின் மீது/ தோன்றி மறையும் ஒரு வாழ்வு’ (மணிகர்ணிகா 2) . மேற்கொண்டு எந்த விளக்கமும் தேவைப்படாத அபாரமான வரிகள். நிலையாமை, பாதுகாப்பு அலைக்கழிப்பில் ‘படகு’கவிதைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
‘படகோட்டி இன்னும் பாடிக் கொண்டிருக்கிறான்/
மேகங்கள் சேர்ந்து கலையும் நாடகம் பார்த்தபடி/.
மூழ்கிய படி நீந்திச் சென்ற படகை கவிழ்க்கிறேன்/
படகோட்டி உன் இம்மை மறந்து வா…/
நாம் திரும்புகிறோம் நம் கருவறைகளுக்கு’
விரிந்த கங்கையின் சிறிய படகில் அமர்ந்திருப்பவனை நீரில் கவிழ்த்து விடுகிறார் என்பதோடு எனக்கு கவிதை நிறைவடைந்து வளரத் தொடங்குகிறது.. கடைசி இரண்டு வரிகள் எனக்கு சற்றே பொருந்தாத கணம் கூடிய சொற்களாக தென்பட்டன. அவரது சில கவிதைகளில் இந்த தன்மை உண்டு. ‘தீ நின்ற பாதம்’ கவிதை இப்படி முடிகிறது. ‘நீர்மை நின்ற பாதத்து ஈசா…/ உனை அறிந்த போதிலும் அணையாத/ தீ நின்ற பாதம் எனக்கு’ . அறிந்தபிறகும் அனல் அணையவில்லை. அறிதலும், தேடலும், பிரிவும், ஆற்றாமையும் எல்லாமும் மாறி மாறிவரும் நிலைகளாகின்றன.
தொகுப்பின் முற்பகுதியில் இடம்பெற்றுள்ள ‘வசீகர மலர்’ எனும் கவிதையில் ‘அடைந்திட முடியாத காதலை/ ஒரு வசீகர மலரென சூடிக் கொள்கிறேன்/ அது காய்கிறதுமில்லை /உதிர்கிறதுமில்லை/’ என்று எழுதுகிறார். நெஞ்சுடைதலுக்கு இடமளிக்கும் மனித காதலை விட்டுவிட்டு மனித இடையீடு இல்லாத கடவுள் காதலை ஆண்டாளும் காரைக்கால் அம்மையும் அக்கம்மா தேவியும் கை கொண்டார்கள். ஏறத்தாழ அதே கனவை சம்யுக்தா மாயாவின் கவிதைகளும் நமக்கு காட்டுகிறது. மணிகர்ணிகா கவிதையில் வரும் இவ்வரிகளை ஒரு உதாரணமாக கொள்ளலாம். ‘சிதை நெருப்பின் பிளவுண்ட நாவுகளென/ தாகங் கொண்டு காற்றில் அலைவது/ எரியும் உடலின் நிறைவேறா ஆசைகளா என்கிறேன்/ அவை அவ்வுடலின் மீது பித்தேறி ஆடும்/ சிவனின் செஞ்சடைக் கற்றைகள் அன்றோ என்கிறான் அகோரி’ கலயத்தின் ரசவாதம் பிரிவாற்றாமையை ஆன்மீக அனுபவமாக மாற்றுகிறது. காசி எனும் எரியும் நகரம் தான் இதை சாத்தியப்படுத்தும் உலைக்களம். காசிக்கு இரு முகங்கள். ஒருவகையில் எல்லாவற்றையும் எரித்து பஸ்மம் ஆக்கும் உலைக்களமும் குளிர்ந்த பஸ்மத்தை தாங்கி நிற்கும் எஃகு கலயமும் காசிதான்.
ஒன்றா … வேறா..?
இந்த விளக்கின் நுனியில்
நின்று எரிந்திருக்கிறன்
எண்ணற்ற முறைகள்.
தொடர்ந்து எண்ணெய் ஊற்றி…
திரியை மட்டும்
திரும்ப திரும்ப மாற்றி
ஒவ்வொரு முறையும்
எரியும் சுடர்
ஒன்றே தானா…?
வேறு வேறாக…?
கவிதையை பற்றி எழுதுவதில் உள்ள சிக்கல் அதை பொருள் கொள்ள அல்லது விளக்க பிரயத்தனப்படுவது தான். நல்ல கவிதை நம் அறிவால் விளக்கிக் கொள்வதற்கு முன்னரே நல்ல கவிதை என உணர்த்திவிடும். மேலுள்ள கவிதை அத்தகையது. சுயம் என்பது திட்டமான உடல் எனும் எல்லைக்குள் உறைவதன்று என்பதை சம்யுக்தா மாயாவின் வெவ்வேறு கவிதைகள் பேசுகின்றன. உதாரணமாக ‘புதிர் தெருக்கள்' கவிதையில் ஒரு பகுதி.
‘கூப்பிடும் குரலுக்கு துள்ளி வர காத்திருக்கும் வாசலில் படுத்திருக்கும் வளர்ப்புப் பிராணியை போல்
முனகுவது சிறிதும் கேட்காதபடி - அமைதியாக
உடலுக்கு வெளியே நிற்கிறது அவள் மனம்'
மனம் உடலுக்கு வெளியே இருக்கிறது.
‘நிசப்தம்’ கவிதையிலும் ஏறத்தாழ இதே போல் உடலுக்கு வெளியே மனதை காண்கிறது. ‘என் மனமோ- பனிப்புகை கவிழ்ந்திருக்கும் / அந்த நீல நதியில்- ஆளற்ற/ ஒரு படகில் தனியே மிதக்கிறது'. சிமிழில் அடைப்படாத சுயம். ‘யாதும் …யாவரும் …’ கவிதையில் ஒரு பகுதி இப்படிச் செல்கிறது.
நான் ஒவ்வொரு பருவத்திலும்
வெவ்வேறு திசைகளில்
வலசை செல்லும் பறவை
என் கால்களில் மாயச் சங்கிலிகளை
பிணைத்துக் கொள்ளும்
தந்திரக் கூடுகளை
நான் கட்டிக் கொள்வதில்லை சிறகசைக்காமல் உயிரே
வானில் வட்டமிடுகையில்
நீல ஆகாயமே என் கூடு
எதையும் சுமக்காத, எதனோடும் பிணைப்பு கொள்ளாத சுயம்.
‘அணையா விளக்கு’ கவிதையில். வெளியுலகின் நிர்பந்தங்கள் ஏதுமற்ற பொன்மயமான வெளிச்சம் நிறைந்த அகவுலக ஒளியின் வெளியை பற்றி குறிக்கிறது.
வெளியே கார்த்திகை தீபத்திற்கு ஒளியேற்றி இருக்கும் போது
ஒரு அகல் கூட - நான்
ஏற்றாதது குறித்து வியக்கிறாள்
எதிர் குடியிருப்பின் பெண்
அவசியம் ஏதுமில்லை என்று
தாழிட்டு கொள்கிறேன்
ஏனெனில்
சாத்திய கதவுகளுக்கு பின்
நான் வசிப்பது
பொன்னிற நிலவு
அசையும் பெருவிளக்கென
அலையும் ஒரு வனாந்திரத்தில்
பொன்னிற வெளிச்சம்
நனைந்து ததும்பும்
ஒரு தடாகக் கரையில்
கனவில் அல்லது கவிதையில் வாழ்வது. எனக்கு பிடித்த இன்னொரு கவிதை
‘அம்பாரி’. படைப்பாளியின், கவிஞரின் மெய்யான வீடு எது? அவரை இயக்கும், உற்சாகம் கொள்ளச்செய்யும் விஷயம் என்ன/ படைப்புக்கு திரும்புவது. கவிதை களிறு மீது உலா செல்லுதல். ‘இது என் யானை/ இது என் அம்பாரி’ என உரிமை கொண்டாடுகிறார்.
ஒரு நீண்ட இடைவேளிக்கு பின்
திரும்பிய நாளில்
என் தர்பார்
முற்றிலும் ஆளரவமற்று இருக்கிறது அமைச்சர்களும் ஆலோசகர்களும்
தற்காலிக வேலை தேடி
வெளியூர் போய்விட்டதாக தகவல்
பாணர்கள் யாழ்கள் துடிகளோடு
அண்டை ராஜ்ஜியங்களுக்கு சென்றாயிற்று மெல்ல நடந்து வெளியே வருகிறேன்
என் கவிதை களிறு - வாசலில் கரும்புக்கட்டை சுழற்றியபடி
கம்பீரமாக நிற்கிறது
பாகனைக் காணோம்
அங்குசமும் அவசியமில்லை
நிலமழுந்தத் தாவி- இலகுவாக
அதன் மீதேறி அமர்கிறேன்
என்னைக் கண்ட பரவசத்தில்
சிறு குழந்தையின் குதூகலத்தோடு இராஜபாட்டையில் நடை போடுகிறது அது அவை நிரம்பும் ஓசை
கேட்கிறது பின்புறம்
இது என் யானை
இது என் அம்பாரி
‘ஒரு மெழுகுவர்த்தி அணைந்த பின் அதன் திரியிலிருந்து கவிச்சி மணத்துடன் எழுந்து பரவும் புகையை போல, சில இழப்புகளின் முடிவில் தோன்றும் வலியையும் அதற்கு பின்னேயான விடுதலையான அமைதியை பாடவும், அன்றாடத்தையும் அதன் அழகை அதிகப்படுத்துபவர்களின் அன்பை சொல்லவும் என் மொழியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.’ சம்யுக்தா மாயாவின் ‘தீ நின்ற பாதம்’ தொகுப்பின் முற்பாதி கவிதைகள் மேற்கூறியது போல் பிரிவின் ஏக்கத்தையும் அன்பின் அணைப்பையும் பேசுபவை. அந்த கவிதைகளிலும் சில தனித்தன்மைகள் உண்டு. கவிதைகளின் ஊடாக ஒரு அலைக்கழிப்பை உணர முடிகிறது.
மூன்று கவிதைகளை குறிப்பிட்டு சொல்லலாம். அவற்றுக்குள் ஒரு வகையான உரையாடல் நிகழ்வதாக தோன்றியது.
முன்பொரு காலத்தில்
ஒரு காதல் இருந்தது
அது இருவருக்கிடையில் இருந்தது
பின்பு
இருவருக்கான காதலின்
மொத்த பொறுப்பும்
அதில் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது
அந்த சிற்றெறும்பு தூக்கிச் செல்லும்
அதன் ஆயுளுக்கான
வெல்லத் துண்டு
அதன் முதுகை
ஒடித்துக் கொண்டிருக்கிறது (பாரம்)
நீ
ஒளி சிந்தும் பொன்னிறையால்
வலை பின்னும் சிலந்தி
சூது அறியா
மென்சிறகு பூச்சிகள்
திசை மாறி செல்லட்டும்
எந்த மயக்கமும் இன்றி (அழைப்பு )
சிறு குளத்தில் எளிதாய் அகப்படும்
அயிரை மீனாய் ஜீவித்ததிலிருந்து ஆழ்கடலின் இருளிலும் ஒளிரும்
ஒரு விஷம் கக்கும் ஜெல்லிமீனாய்
அவள் தன்னை மாற்றிக் கொண்டது
இதற்கு சற்று முன்பு தான் (மாற்றம்)
உறவின் அழுத்தம், உறவு குறித்த எச்சரிக்கை, மீண்டு தன்னிலையை உறுதி செய்து கொள்ளுதல் என்று இக்கவிதைகள் ஊடாக ஒரு பயணத்தை காண முடிகிறது. எல்லாம் பொய்த்து போய் மிக எளிய நடைமுறை எதிர்ப்பார்ப்புகளை கவிதை வெளிப்படுத்துகிறது. ‘உயிரெல்லாம் வேண்டாம்/ களைத்துறங்கும் - என்/ உள்ளங்கால்களை/ இரவு முழுதும் அழுத்தி விட/ உன் பத்து விரல்களை மட்டும்/
படுக்கையினோரம்/ வைத்துவிட்டுப் போ’ (உடலோடு கிளத்தல்). எனக்கு அவரது முந்தைய வரிசை கவிதைகளில் மிகப்பிடித்த கவிதை என ‘பிரத்தியேகம்’ கவிதையை சொல்லலாம். இக்கவிதையில் பொதிந்துள்ள கற்பனையும் விளையாட்டும் இதை தனித்து காட்டுகிறது.
இன்று உன்னைத் தேடி
உன் வளாகத்திற்கு வந்திருந்தேன்
உனக்கென வாங்க எண்ணி
வாங்காமலிருந்த மலர்களை
கையில் வைத்திருந்தேன்
அருகில் வரும் உனை நோக்கி
பதைப்பதைப்புடன் அமர்ந்திருந்தேன்
நல்ல வேளை
ஒரு சிறு புன்னகையுடன்
நீ அந்த பிரத்தியேக மலர்களை
கண்டு கொண்டாய்
வாங்கி வந்திருந்தால்
அவை உனக்கானதாய் மட்டுமல்லாமல்
எல்லோருக்குமானதாய் ஆகியிருக்கும்
சம்யுக்தா மாயாவின் மொழியைப் பற்றி சொல்ல வேண்டும். பல கவிதைகளில் இயல்பாக ஒருவித இசைமை கூடி வருகிறது. ‘இழுமென விழுமொரு சிற்றருவியின்’ (படகு) எனும் வரி சட்டென நினைவுக்கு வருகிறது. ‘இலைப் பச்சை’ கவிதையை வாய்விட்டு வாசிக்கும் போது அதன் ஒலிப்பு அழகாக உள்ளதை கவனிக்கலாம்.
‘ஒரு பட்ட மரத்தின்
வெற்றுக் கிளைகளில்
இரு பச்சை கிளிகள்
வந்து அமர்கின்றன
சிறகசைத்து… சிறகசைத்து…
தன் மீது
இலைகள் அசைந்த காலம்
வந்து போகிறது
மரத்தின் நினைவில்’
அதே போல் சில நல்ல உவமைகளை கவிதைகளில் காண முடிந்தது. ‘மரகத இரவு’ கவிதையில் வானம் ‘சூதாட்ட விடுதிகள் நிறைந்த/ நியான்கள் ஒளிரும் கடற்புற/ நகரத்து தெருக்கள் போல/ மின்னத் துவங்குகிறது.’தேன் மெழுகு’ கவிதையில்
‘சிறிய தழல் இக்கடிய குளிரை
விரட்டும் யத்தனத்தில்
தோல்வியை ஏற்க மறுக்கும்
தேசத்தின் கொடியென காற்றில்
படபடப்புடன் அசைகிறது’ என்று மெழுகுச் சுடரை பற்றி எழுதுகிறார். தன்னை சுற்றி வந்தவர்களை விதவிதமாக ‘ சிடுக்கு’ கவிதையின் கற்பனை நன்றாக இருந்தது. மணிக்கணக்காக கதைப்பவன் ஆப்ரிக்க கிளியாகிறான், தலையில் வேப்பம்பூக்கள்உதிர காத்திருந்தவன் காக்டஸ் தொட்டி செடியாகிறான். புலத்தில் பயணிக்கும் யாத்ரீக காதலன் ஜாடியில் சுற்றி சுற்றி வரும் ஞாபக மறதி கொண்ட தங்க மீனாக ஆகிறான்.
அமைதி
குளக்கரைப் படியில்
பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன்
தட்டான்கள் தண்ணீர் பரப்பில் உண்டாக்கும் மெல்லிய நீர் வட்டங்களை.
சாய்ந்த மரக்கிளையிலகருந்து உதிரும் பழுத்த பழுப்பு இலை
மெதுவாக நகர்கிறது
கரை விளிம்பு நோக்கி
ஒரு மஞ்சள் பூ- தான்
ஒரு மஞ்சள் பூவென அறியாது
மெல்ல அசைகிறது
பாறையிடுக்கில் மாலை வெயில்
மேல் பட அசைவின்றி நிற்கிறது
நீண்ட வால் கொண்ட அரணை.
மீன் ஒன்று மேலெழும்பி
உள்புகும் ஓர் அரைவட்ட நொடியில்
காற்று நின்று போகிறது
படியில் பூத்திருக்கும் பாசி
கால் விரலை பச்சையாக்கி கொண்டிருக்கிறது நிதானமாக
நிறைய பேசுவது குறித்து
மிகுந்த மனக்களைப்பு
உண்டாகிறது எனக்கு.
அபாரமான காட்சி அனுபவம் அளிக்கும் சீன கவிதைகளின் சாயலை கொண்டிருக்கும் எனக்கு பிடித்த இந்த கவிதையோடு இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன். 2026 ஆம் ஆண்டு குமரகுருபரன் விருது பெரும் சம்யுக்தா மாயாவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment