காலம் சுருண்டுகொண்டுவிட்டது. பெட்டிக்குள் அடங்கும் சர்ப்பத்தின் நாக்கு நுனி மட்டும் இன்னும் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கிறது, நாளை அதுவும் அடங்கிவிடும். ஆயிற்று, மற்றுமொரு வருடம் இதோ தன்னுள் என்னை செரித்துகொண்டுவிட்டது. முடிவற்று நீளும் நதிக்கரையில் நின்று ஒரு சான் நிலமளக்கும் சிறுமி போல் காலத்தை துண்டங்களாக ஆக்கி விட்டிருக்கிறான் மனிதன். முடிவற்ற சாத்தியங்களை தன்னுள் புதைத்துவைத்துக்கொண்டு கைமூடி குறும்பு மின்ன தெற்றுப்பல் தெரிய சிரித்து நிற்கிறாள் காலமெனும் சிறுமி. வேறு அனேக காலதுன்டங்கள் போல் சென்ற ஆண்டும் எனக்கு எல்லாவகையிலும் முக்கியமானதே. வரும் ஆண்டும், ஆண்டுகளும் அப்படித்தான் இருக்கும். ஒரு அற்ப மகிழ்ச்சி, எங்கிருந்தோ எங்கு செல்வதற்கோ ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் போது கடக்கும் தொலைவு ஒன்றும் பெரிதாக தெரிவதில்லை. ஆனால் எங்கோ ஓரிடத்தில் நின்று இளைப்பாறும் கணத்தில் திரும்பி நோக்கும் போது ஒரு பயணம் நிகழ்ந்திருப்பது புலப்படுகிறது.