Tuesday, December 31, 2013

சுருள் நீவி விரியும் காலம்

காலம் சுருண்டுகொண்டுவிட்டது. பெட்டிக்குள் அடங்கும் சர்ப்பத்தின் நாக்கு நுனி மட்டும் இன்னும் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கிறது, நாளை அதுவும் அடங்கிவிடும். ஆயிற்று, மற்றுமொரு வருடம் இதோ தன்னுள் என்னை செரித்துகொண்டுவிட்டது. முடிவற்று நீளும் நதிக்கரையில் நின்று ஒரு சான் நிலமளக்கும் சிறுமி போல் காலத்தை துண்டங்களாக ஆக்கி விட்டிருக்கிறான் மனிதன். முடிவற்ற சாத்தியங்களை தன்னுள் புதைத்துவைத்துக்கொண்டு கைமூடி குறும்பு மின்ன தெற்றுப்பல் தெரிய சிரித்து நிற்கிறாள் காலமெனும் சிறுமி.  வேறு அனேக காலதுன்டங்கள் போல் சென்ற ஆண்டும் எனக்கு எல்லாவகையிலும் முக்கியமானதே. வரும் ஆண்டும், ஆண்டுகளும் அப்படித்தான் இருக்கும். ஒரு அற்ப மகிழ்ச்சி, எங்கிருந்தோ எங்கு செல்வதற்கோ ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் போது கடக்கும் தொலைவு ஒன்றும் பெரிதாக தெரிவதில்லை. ஆனால் எங்கோ ஓரிடத்தில் நின்று இளைப்பாறும் கணத்தில் திரும்பி நோக்கும் போது ஒரு பயணம் நிகழ்ந்திருப்பது புலப்படுகிறது.




ஒருகாலத்தில் எனக்கு திருமணத்தில் ஆர்வமிருந்ததில்லை. மெல்ல மனம் மாறியது. சில அலைகழிப்புகள், அவமானங்கள் எல்லாம் கடந்து 2012 ன் இறுதியில் எனக்கான வாழ்க்கை துணையை கண்டுகொண்டேன். 2013 ஜனவரியில் நிச்சயமும், மே மாதம் திருமணமும் இனிதே நடந்தேறின. இவ்வாண்டின் ஆகச்சிறந்த தருணங்கள் என இவைகளைத்தான் சொல்ல வேண்டும். வற்றாது எம்முள் என்றென்றும் பிரியம் சுரந்துக்கொண்டே இருக்க வேண்டும். வெகு சிலரிடம் மட்டுமே நமக்கு எந்த பூச்சுகளும் அவசியமில்லை. வெறும் பேச்சுக்களும், கிண்டல்களும் பேசிக் காலம் கழிப்பது தான் எத்தனை சுகம்! குறைகளை பலவீனங்களை திரையிட்டு மறைக்க முனைய வேண்டியதில்லை, நான் நானாக மட்டுமே இருக்கலாம். ஆனால் இந்த நான் நானாக தேங்கிவிடுவதில்லை, ஏதோ ஒரு மேம்பட்ட கனவு, அல்லது ஒரு மேலான நான் இருக்கிறான், அவனை நோக்கி செல்ல தொடங்க இன்னும் கூட ஆற்றல் பிறக்கிறது. அன்பு அடைபடுவதல்ல, விடுதலையளிப்பது. மேலும் நுண்ணுணர்வு கொண்டவனாக உணர்கிறேன். மனைவியின் வருகை அம்மாவை எனக்கு இன்னும் கூட நெருக்கமாக காட்டுகிறது. திருமணமும் பின்னர் வரவேற்பும் நான் இத்தனை பெயரால் நேசிக்க படுகிறேன் என்பதை எனக்கு உணர்த்தியது. நேசமும் அன்பும் பாராட்டும் உள்ளங்களுக்கு திருப்பியளிக்க இன்னும் அதிக அன்பு மட்டுமே என்னிடம் இருக்கிறது. மனமார வாழ்த்திய அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.

இணையம் அசல் என வாழ்க்கையே, ஆளுமையும் கூட இரண்டாக பிளந்துகொண்டதாக இவ்வாண்டு  உணர்கிறேன். ஒவ்வொருவருக்கும் தனிவாழ்க்கையில் வேறோர் முகம் இருக்கிறது. இங்கே கோரப்பற்கள் வெட்டருவா சகிதம் அருள்பாலித்தாலும் கூட. இணையத்தில் பொங்கும் அறவுணர்வு வாழ்விலும் வழிந்தோட வேண்டும் என மனமார ப்ரார்த்தித்துகொள்கிறேன். இந்த துண்டுகளை ஒருங்கிணைக்க முடியுமா என பார்க்க வேண்டும். இங்கிருக்கும் சமநிலையும் நிறைவும் அங்கும் பிரதிபலிக்க வேண்டும். அசல் வாழ்க்கையில் அவ்வப்போது நிதி நெருக்கடி வரத்தான் செய்கிறது. ஆனால் அப்போது ஏதோ ஒருவழியும் திறந்துகொள்கிறது. கடன்படாமல் வாழ்வை கழித்தாக வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறேன். ஆனால் என்ன இந்த நெருக்கடிகள் ஆற்றலை களவாடி சென்றுவிடுகிறது. தேர்ந்தெடுத்த தொழில், வசிப்பிடம் என எதுவோ சரியில்லையோ என்று ஒரு கேள்வி எழுந்து குடைந்து தொலைக்கும். எல்லாம் குறைந்த நேரம் தான் ஆனாலும் அதற்குள் ஒரு சோர்வு கவிந்துவிடும்.  பின்னர் தானே மீண்டுவிடும். வரும் நாட்களில் இந்த கவலைகள் பீடிக்காமல் இருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். 

காந்தி இன்று நானூறு இடுகைகளை தொடவிருக்கிறது. அவ்வப்போது சற்று தளர் நடை போட்டாலும், ஆற்றலை சேமித்து அது இன்னும் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. இதுவே பெரும் சாகசம் தான். ஆனால் இன்னும் கடக்க வேண்டிய தொலைவு வெகு அதிகம். ஒரு புதிய செயல்திட்டத்தை நானும் நண்பர் நட்பாசும் உருவாக்கியிருக்கிறோம். அதனடிப்படையில் மேலும் அதிகமாக உழைக்க வேண்டும். சென்ற ஆண்டு இருநூல்கள் வெளிவந்தன. காந்தி எல்லைகளுக்கு அப்பால் கொஞ்சம் மந்தமாக போனதாகவே சொன்னார் பதிப்பாளர் சீனு. ஒப்புநோக்குகையில் க்ஷிதி மோகன் சென்னின் மொழியாக்க நூல் சரிபாதிக்கு சற்று அதிகமாக விற்றதாக சொன்னார். காந்தி தளத்திலிருந்து புத்தகங்களை பதிப்பிக்க வேண்டும் எனும் ஆவல் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது. இணையத்தில் இலவசமாக வாசிக்க கிடைக்கும் போது எவர் பணம் கொடுத்து வாங்க  முன்வருவார்? ஆகவே வேறு திட்டங்களை பரிசீலனை செய்துகொண்டிருக்கிறேன். 

இந்த ஆண்டு நானெழுதிய வாசுதேவன் சிறுகதை ஜெயமோகன் தளத்தில் வந்தது. பாராட்டும் விமர்சனமுமாய் அதற்கொரு நல்ல கவனம் கிட்டியது. உள்ளுறங்கும் புனைவெழுத்தாளனை நானே அடையாளம் கண்டுகொண்ட தருனமது. இன்னுமொரு கதையும் பிரசுரம் ஆனது ஒரு புனைபெயரில். மற்றுமொரு கதை மாற்றி எழுதபடுவதற்காக காத்திருக்கிறது. மற்றுமொரு கதை பாதியில் நிற்கிறது. இரண்டு மூன்று கதைகள் மனதில் கருக்கொண்டுள்ளன. ஆனால் முதலின் நான் என்னை முதன்மை வாசகனாக நிறுவிக்கொள்ள வேண்டியது அவசியம் என எண்ணுகிறேன். ஆம்னிபஸ் தளம் எனக்கு அபப்டியொரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது. தொடர் வாசிப்பிற்கு பழக்கியது.  குறைந்த பட்சம் தமிழ் புனைவுலகின் அத்தனை படைப்பாளிகளின் தலைசிறந்த ஆக்கங்களை வாசித்திருக்க வேண்டும். புனைவெழுத்து என்பதொரு பெரும் போதை தான். அதில் ருசிகண்டு விட்டால் மனம் அதிலேயே லயிக்கும். முட்டி முட்டி எதையாவது உருவாக்க தோன்றும். கனவுகளில் மட்டும் உயிர் பெரும் அற்புத உலகம் அது. என்னை நான்  புனைவு எழுத்தாளன் என்றே உணர்கிறேன். காலம் கனியட்டும். குறைந்தது ஐந்தாறு சிறுகதைகளாவது வருமாண்டில் எழுதிவிட வேண்டும். பார்ப்போம்.   

புனைவாசிரின் ஆகும் முயற்சியின் ஒரு பகுதியாக மொழியாக்கம் செய்ய தொடங்கியுள்ளேன். புனைவுகளை மொழிமாற்றம் செய்வது ஒரு சவால் தான். மொழி வளமடையும். ஜோர்பா எனும் கிரேக்கன் முதல் அத்தியாயம் மொழியாக்கம் செய்து ஜெயமோகனுக்கு அனுப்பியிருந்தேன். மிக சிறப்பாக இருப்பதாக சொன்னார். நண்பர் நட்பாசும் அதையே சொன்னார். கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது. கால எல்லைகள் நிர்ணயிக்காமல் செயலாற்றலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அந்த ஒரு அத்தியாயத்துடன் நின்றுவிட்டது. எதாவது ஒன்று நம்மை விரட்டினால் தான் சரிவரும். இந்தப்பணியை முடிக்க வேண்டும். 

காந்தி தளத்திற்கு ஒரு அங்கீகாரம் கிட்டியது. முதன்முறையாக வழங்கப்பட்ட திருப்பூர் அறம் அறகட்டளை விருதுகளில் காந்தி தளமும் இடம்பெற்றிருந்தது. மகிழ்ச்சிக்குரிய விஷயம் தான். எனினும் இன்னும் தகுதிபடுத்திகொள்ள வேண்டும். பிறகு இரண்டு தொலைக்காட்சி தோன்றல்களும் இவ்வாண்டு நடைபெற்றன. மகாபாரதம் பற்றிய விவாத நிகழ்ச்சி மற்றும் நீயா நானா. கொஞ்சம் பதட்டம் பயம் என இருந்தாலும். ஏதோ ஒன்றை அந்த ஊடகத்தின் வழி என்னால் சொல்ல முடிந்தது என்றே எண்ணுகிறேன். மகாபாரத தோன்றலை காட்டிலும் நீயா நானா மேலானதாக இருந்தது என்றே எண்ணுகிறேன். வரும் ஆண்டுகளில் மேலும் ஆக்கபூர்வமாக இத்தகைய தளங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

சமூக அளவில் பலவற்றை கவனித்துவருகிறேன். சச்சினின் விடைபெறுதல் தொடங்கி நான் கண்ட சினிமாக்கள் பற்றி எல்லாம் பேச விரும்பவில்லை. ஆனாலும் சில நல்ல தமிழ் திரைப்படங்களை இவ்வாண்டு கண்டேன் என சொல்ல முடியும். அரசியலிலும் பல நல்ல மாற்றங்கள் நம்பிக்கை ஊட்டும் விதமாக தென்படுகின்றன. நேற்றிரவு நம்மாழ்வார் அவர்களின் மரண செய்தி கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. 

ஏமாற்றங்கள், வருத்தங்கள், கோபங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இவ்வாண்டு கொஞ்சம் நுட்பமாக அவைகளை கவனிக்க தொடங்கியிருக்கிறேன். எல்லாவற்றையும் கடந்து நம்பிக்கையும் நிறைவுமே இப்போது எஞ்சியிருக்கிறது. எப்போதும் அப்படியே இருக்க வேண்டும். உடனிருந்த அத்தனை நண்பர்களுக்கும், நலம்விரும்பிகளுக்கும், பிரியத்திற்குரியவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. எல்லாவற்றிற்கும், எப்போதும்.         

நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment