Tuesday, January 24, 2017

சிரிக்க கற்றுகொடுத்தவள்

பிரியத்துற்குரிய வானவன் மாதேவியைப்பற்றி சொல்வதற்கும் எழுதுவதற்கும் எனக்கு அனேக விஷயங்கள் உண்டு. எழுதும் மனநிலை எனக்கில்லை. வானதியை எப்போது சந்தித்துவிட்டு வந்தாலும் “சார் எழுதிடிங்களா?” என கேட்பார். கேட்க அவரில்லை என்பதற்காக எழுதாமல் இருக்க முடியாதே. 

Image result for வானவன் மாதேவி


 வானதி என்னைக்காட்டிலும் ஆறேழு வயது மூத்தவர் ஆனாலும் ஒருநாளும் ஒருமையில் விளித்ததில்லை. நானும் அவரை அக்காவென அழைத்ததுமில்லை. எனக்கு அம்மாக்கள், அக்காக்கள், தங்கைகள் நிறைய உண்டு. இப்போது யோசித்து பார்க்கையில், பள்ளி கல்லூரிக்கு அப்பால் எனக்கு கிடைத்த ஒரே தோழி அவர் தான் என தோன்றுகிறது. வாரமொருமுறையாவது பேசி கொள்வோம். இந்த ஜனவரி பதினைந்துக்கு நான்கைந்து நாட்கள் முன்னரும் கூட பேசினோம். ஈரோட்டிலிருந்து ஒருவரை அங்கே அனுப்புவதன் தொடர்பாக. பயங்கரமாக மூச்சிரைத்தது. அவர் பேசிய சொற்கள் எனக்கு பாதிக்கு மேல் விளங்கவே இல்லை. “புரியல வானதி” என மூன்று நான்குமுறை சொன்னேன். “என் ஃபோன்ல ஏதோ பிரச்சனையோ இல்ல காது போயிருச்சோ தெரியல” என்ற போது “அங்க இல்ல..என் குரல் தான் சார்..பேச முடியல” என்றார். ஒவ்வொரு சொல்லும் போராடித்தான் அவரிடமிருந்து வெளிவந்தது. அப்படி போராடி வந்த சொல் புரியாமல் போனால் எத்தகைய ஏமாற்றமாக இருந்திருக்கும்?

அதற்கு முன் பிறந்தநாளை ஒட்டி பேசினேன். டிசம்பர் 25 பிறந்தநாள். அன்று விஷ்ணுபுர விருது என்பதால் அவரிடம் பேச இயலவில்லை. ஒரு குறுஞ்செய்தி மட்டும் அனுப்பியிருந்தேன். மறுநாள் பேசும்போது “எங்க மறந்துடிங்களோன்னு நெனச்சேன்” என்றார் சிரித்துக்கொண்டே. எப்படியாவது இந்த ஆண்டு விஷ்ணுபுர விழாவிற்கு வரவேண்டும் என திட்டமிட்டிருந்தது நிறைவேறவில்லை என வருந்தினார். இதேபோல ஒரு டிசம்பர் 25 அன்று ஜெ வானதியை அழைத்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லி தான் வெண்முரசு எனும் நாவல் வரிசையை துவங்க இருந்ததை பற்றி சொன்னதை பரவசத்தோடு எனக்கு சொன்னார். அவ்வப்போது வெண்முரசு நயம் பாராட்டுதல் தொலைபேசி உரையாடல்கள் நிகழும்.
புதிய கட்டிடத்தின் துவக்க விழாவிற்கு என்னால் செல்ல முடியவில்லை. ஆகவே ஒருமுறை லாரி பேக்கர் முறையில் கட்டிடத்திற்கு வர்ணம் தீட்ட தன்னார்வலர்களை வரசொல்லி ஃபேஸ்புக்கில் அழைப்பு விடுத்திருந்தார். ஆகவே சென்ற ஆண்டின் ஒரு ஞாயிற்று கிழமையில் அங்கு சென்று வந்தேன். மலையும் மரங்களும் சூழ்ந்த அவ்விடம் அமைதியாக, அழகாக இருந்தது. சரளை கற்கள் மீது சாம்பல்நிற கட்டிடம் எழுந்திருந்தது. செம்மண்ணை சிமிண்டோடு குழைத்து வெளிச்சுவருக்கு வர்ணம் பூசினோம். பாதி நேரம் பேசியும் மீதி நேரம் பூசியும் கழிந்தது. காந்தியின் மீது தீவிர பற்றுண்டு அவருக்கு. மதிய இடைவேளையின் போது “விக்கிக்கு காந்தின்னா பிடிக்காது..கொஞ்சம் என்னன்னு கேளுங்க” என்று சொல்ல. ஒருமணிநேரம் நண்பர்களோடு உரையாடல் நீண்டது.
காந்தியை வெறுமே வாசிப்பவரும் போற்றுபவருமாக மட்டும் அவர் இருந்ததில்லை. இக்கட்டான சூழலிலும் காந்தியையும் அறத்தையும் கைவிடாதவராக இருந்திருக்கிறார். அவர்கள் ஒருபோதும் திருட்டு சி.டிக்களில் எதையும் பார்த்ததில்லை. அது அறமில்லை என ஆணித்தரமாக நம்பினார் என நேற்று விஜயராகவன் கூறினார். வானதி – வல்லபி அனைத்து அரசு அலுவல்களுக்கு அவர்களே நேரில் செல்வார்கள். லஞ்சம் மிகுந்து கிடக்கும் அலுவலங்களில் அவர்கள் நேரில் சென்று கோரும்போது எவரும் அவர்களை மறுக்க முடியாது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால் அதனையும் மீறி சில தருணங்களில் நான்கைந்து முறை ஏறி இறங்கிய சம்பவங்களை நானறிவேன். புதிய கட்டிடத்திற்கு மின் இணைப்பு கோரியபோது அப்படிதான் நிகழ்ந்தது. கொடுத்தால் தான் வேலையாகும் என்பது நடைமுறை. எத்தனை முறை அலைவீர்கள், வேலை கிடப்பில் இருக்கிறதே என அறிவுருத்தியபோதும் கூட விடாப்பிடியாக மீண்டும் மீண்டும் படியேறி அதனை சாதித்தார். நானறிந்தவரை ஒரு நயா பைசா கூட லஞ்சமாக அவர் எவருக்கும் ஏதும் அளித்ததில்லை. வானதி ஒன்றை உரிமையோடு நம்மிடம் கேட்கிறார் எனில் நம்மால் அதை ஒருபோதும் மறுக்க முடியாது. அவர் நம்மிடம் கேட்கும் போது அதில் அதிகாரமோ, பரிதாபமோ இருக்கவே இருக்காது. 
 இந்த பிடிவாதம் தான் வானதி ! ஆனால் இந்த இலட்சியவாதமும் பிடிவாதமும் கொண்டவர்களுக்கே இருக்கும் இறுக்கம் அவரிடம் ஒருபோதும் இருந்ததில்லை. “இதுல என்ன இருக்கு” என்பது போல் புன்னகையால் அதை தாண்டி செல்வார். அவருக்கு அவருடைய உடல்நிலையை பற்றி நன்றாக தெரியும். மரணத்தை பற்றியும், மரணத்திற்கு பின்பாக அவருடைய அமைப்பை பற்றியும் நிதானமாக பேசுவார். அவருடைய அந்த நிதானம் என்னை எப்போதும் பதற செய்யும். 25 ன்னாங்க, முப்பதுன்னாங்க, முப்பத்தஞ்சு வந்தாச்சு..விடாதிங்க வானதி..இதெல்லாம் யோசிக்காதிங்க என்பேன். அட நீங்க வேற சார் காமடி பண்ணிக்கிட்டு என்பார். வானதி இறுதிவரை தனக்குள் இருந்த உற்சாகம் துள்ளும் பதின்ம வயது பெண்ணை உயிர்ப்புடன் வைத்திருந்தார். அந்த பெண்ணுக்கு உடல் நாள்தோறும் சுருங்கி கொண்டிருப்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. கிண்டலும் கேலியும், கோபமும், வருத்தமும், பிடிவாதமும், சிரிப்பும், எரிச்சலும் என எல்லாமும் கொண்ட பதின்ம பெண் அவர். உற்சாகம் துள்ளும் அந்த பெண் இலட்சியவாதத்தின் இறுக்கத்திலிருந்தும் உலகியல் துன்பங்களில் இருந்தும் அவளை காத்தாள். அதுவே அவருக்கு நெருக்கமான நண்பர் வட்டத்தை அமைத்து கொடுத்தது. எனக்கு நெருக்கமானவர் என நான் எண்ணுவது போல் பல நூறு பேர் வானதியை தங்களுக்கு மட்டுமே நெருக்கமானவர் என உணர்ந்தவர்கள். அன்பை அள்ளி அள்ளி கொடுப்பார் ஆனால் அந்த அன்பை அதிகாரமாககி தன்னை எவரும் கட்டுபடுத்த அவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை. நம் சூழலில் அன்பும் அதிகாரமும் சேர்ந்தே தான் நமக்கு அறிமுகமாகின்றன. பிடிவாதம் என்றும் மரியாதையின்மை என்றும் அறியாமை என்றும் அவை சூட்டபடுகின்றன. ஆனால் அதை சுய நிர்ணயம் என்றும் தன் வாழ்வுக்கு தானே பொறுப்பேற்றல் என்றும் கூட சொல்லலாம். இதன் காரணமாக அவரிடமிருந்து சற்றே விலகிய நண்பர்களையும் நானறிவேன். பல்வேறு இக்கட்டான சூழல்களில் நான் அவரோடு தொடர்பில் இருந்திருக்கிறேன். அவர் எல்லோருக்கும் அளித்த அன்பையும் நம்பிக்கையையும் காட்டிலும் அந்நிலையிலும் தனது சுதந்திரத்தின் வெளியை தக்க வைத்துகொண்டது எனக்கு முக்கியமாக படுகிறது. அவர் உடல்நிலைக்கு அன்பும் கருணையும் அதிகமாக வேண்டும், அது எளிதாக கிடைக்கவும் கூடும். அது அவருக்கு நம்பிக்கையை அளிக்கும். ஆனால் அன்பின் பிடியை மீறி தன் வாழ்வை நிர்ணயித்துக்கொள்ள அதீத தன்னம்பிக்கை வேண்டும்.

மூன்று வருடங்களில் சுமார் ஒரு கோடி ரூபாய் சேர்த்து இந்த கட்டிடத்தை முடித்திருப்பது என்பது மிகப்பெரிய சாதனை. முழுவதுமாக முடிந்த அந்த கட்டிடத்தை நேற்று பார்த்தபோது மலைப்பாக இருந்தது. பண நெருக்கடிகள், மன கஷ்டங்கள் என அவர்கள் இக்காலகட்டத்தில் சந்தித்த சவால்கள் ஏராளம். அதை பற்றி நீங்கள் எழுத வேண்டும் என வானதியிடம் பார்க்கும்போதெல்லாம் சொல்வேன். ஆடியோ மெசஜ் அனுப்புங்க, நான் எழுதி தரேன் என்று கூட சொல்லியிருக்கேன். “சார் சுயசரிதை எழுதுனா அதுல நேர்மை இருக்கணும்..நேர்மையா இருந்தா அது நெறைய பேருக்கு கஷ்டமா இருக்கும்..எதுக்கு சார் தேவையில்லாம காயபடுத்திகிட்டு” என்பார்.
இந்த நான்காண்டு பழக்கத்தில் எத்தனையோ முறை சந்தித்து இருக்கிறோம், எத்தனையோ முறை பேசி இருக்கிறோம். இங்கே எல்லாவற்றையும் எழுதிவிட முடியாது. நேற்று அங்கே பூக்கள் உதிர்ந்த சிறு மணல் குன்றாக அவரிருந்ததை பார்க்க சகிக்கவில்லை. நினைவுகளால் மனம் நிலையிழக்கிறது. வாழ்வில் சிரிக்கவும், வாழ்வை பார்த்து சிரிக்கவும் கற்றுகொடுத்தவர் நீங்கள் வானதி. ஒவ்வொருமுறை நான் சிரிக்கும்போதும் உங்களை எண்ணிகொள்வேன். அதுவே என் ஒரேயொரு தோழிக்கு நான் செலுத்தும் அஞ்சலி. 

No comments:

Post a Comment