Wednesday, December 31, 2025

2025 நன்றி நவிலல்





என் உடலுக்கு- என்னை தாங்கியதற்காக, செயல்பட அனுமதித்ததற்காக, எனது எல்லைகளை உணர்த்தியதற்காக நன்றி. இன்னும் கொஞ்சம் கூடுதலாக ஒத்துழைத்திருக்கலாம் எனும் வருத்தம் இருந்தாலும், நாற்பதுக்கு உடல் தயாராகிறது என்பதை எனக்கு உணர்த்துகிறது. கொஞ்சம் கூடுதலாக கவனி என அது கோருவதை புரிந்து கொள்கிறேன். நிச்சயம் கவனிக்கிறேன் என்று உறுதியளிக்கிறேன். 


மனதிற்கு- வழக்கத்தை விட அதிக காயங்களை கண்டதற்கும், அவற்றை கடந்து வந்ததற்கும் நன்றி. கவனம் நழுவி பாதாளத்தில் வீழ இருக்கும்போதெல்லாம் எப்படியோ சுதாரித்து மேலெழுந்ததற்கு நன்றி, உணர்ச்சிகளால் ஆட்கொள்ளப்படும்போது அவற்றை உடனடியாக வெளிப்படுத்தி சிக்கலை பெரிதாக ஆக்காத விவேகத்திற்கு நன்றி. நெருக்கடிகளுடன் ஊடாக படைப்பூக்கத்தை எப்படியோ பிடித்து வைத்து கொண்டதற்கு நன்றி. 


குடும்பத்திற்கு-  சுதிர் சந்திரனுக்கும் சபர்மதிக்கும்- இந்த ஆண்டு நான் என்னவாக இருந்தேன் என்று யோசித்தால், மருத்துவராக, எழுத்தாளராக இருந்ததை விட மிக மிக அதிகமாக குழந்தைகளின் தந்தையாக இருந்திருக்கிறேன். பல சமயங்களில் எனது பொறுமையின் எல்லைகளை சோதித்துள்ளார்கள். எனக்கு என்னையே காட்டியிருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாத ஆற்றாமையில் நிறுத்தியிருக்கிறார்கள். அவர்களின் மீதான எனது எதிர்பார்ப்புகளை மட்டுப்படுத்திக்கொள்ள பழக்கினார்கள். அவர்களுடன் பாட்டு வகுப்புகளுக்கும், நடன வகுப்புகளுக்கும், கிரிக்கெட் வகுப்புகளுக்கும் சென்று வருபவனாக ஆனேன். அவர்களின் வழி வேறு வேறு உலகங்கள், அதன் மனிதர்களை கண்டுகொண்டேன். சென்னையில் விளையாடி தோற்று மின்சார ரயிலில் சோர்வுடன் தனது கிரிக்கெட் மூட்டையை தூக்கிக் கொண்டு வந்த சுதிரை கண்டு ஒரு மத்திம வயதுடையவர் இந்தியில் அவனோடு பேசினார். நீ வருங்காலத்தில் இந்தியாவிற்கு விளையாடுவாய் என வாழ்த்தினார். பெற்றோர்களின் உலகம் விசித்திரமானது. இன்பமும் மனவுளைச்சலும் அவர்களால் ஏற்பட்டதே. கிரிக்கெட் பிடிக்கும் தான். இந்த ஆண்டு பல உள்ளூர் போட்டிகளை கண்டேன். கிரிக்கெட் அடிமை எனும் சொல்லும் அளவிற்கு. எழுத்தையும் வாசிப்பையும் பாதிக்கும் அளவிற்கு சென்றுவிட்டது. வருமாண்டு சற்று என்னை நானே விலக்கி வைத்து கொள்ள வேண்டும். இன்னும் கொஞ்சம் பொறுமையாய் இருக்க முயல்கிறேன், எனது எதிர்பார்ப்புகளையும் பிணைப்புகளையும் குறைத்துக்கொள்ளவும், நெகிழ்த்திக் கொள்ளவும் முயல்கிறேன். இன்னும் மேலான அமைதியான சூழலை உங்களுக்கு உருவாக்கித்தர முயல்கிறேன். உங்களுக்கு அவசியமானதை செய்வதற்குரிய பொருளியல் பலம் கூடட்டும்.  



மானஸாவிற்கு- என்னால் என்னை நிர்வகித்துக்கொள்ள முடியும் என நம்பிக்கை ஊட்டியதற்கு, சில கடினமான முடிவுகளை எடுத்ததற்கு, வருடத்தின் முற்பாதியில் நிறைய சண்டைகள். குடும்பத்திற்குள் தனிமனிதர்களின் சுதந்திரத்தின் எல்லை, வெளி சார்ந்ததே இவை. ஆனால் சண்டைகள் எவையும் மோசமாகிவிட இருவரும் அனுமதித்ததில்லை. மூன்று மாத காலம் வேறு ஊரில் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டபோது சற்று கடினமாகத்தான் உணர்ந்தேன். மருத்துவத்துறை சார்ந்த அத்தனை முடிவுகளையும் நிர்வாகத்தையும் ஏற்றுக்கொண்டது எனக்கு பெரும் விடுதலை. எழுத்துக்கள் தான் உனக்கு சொல்லும் நன்றியாக இருக்க முடியும். இன்னும் கொஞ்சம் அனுசரணையோடு, கொஞ்சம் பொறுப்போடு இருக்க முயல்கிறேன். 


அம்மாவிற்கு- நான் சறுக்கும் போதெல்லாம் அவள் தான் என்னை முதலில் கண்டெடுப்பவள், நீ சறுக்கி கொண்டிருக்கிறாய் என்று எச்சரிப்பவள்.  இன்னும் கொஞ்சம் கரிசனத்தோடு, இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருக்க முயல்கிறேன்.


இலக்கிய நண்பர்களுக்கு- சித்ரன், ஜீவ கரிகாலன், போகன், பிரபா, சவுந்தர், லதா, பெருந்தேவி, ரமா சுரேஷ், தாயுமானவன்  மதிகுமார், கண்டனூர் நாராயணன், காளி, ஜாஜா, சுந்து, ராகவ், விக்னேஷ் ஹரிஹரன், சண்முகம் அண்ணாச்சி, காஞ்சி சிவா, அனீஷ் கிருஷ்ணன், ஈரோடு கிருஷ்ணன் ஆகியோருக்கு, பிரியம் குன்றாமல் முரண்படவும் உரையாடவும் இடமளித்ததற்கு. 


இலக்கிய உலகத்திற்கு - குறிப்பாக காலச்சுவடு மற்றும் யாவரும் பதிப்பகங்களை, காந்தி தன்வரலாறு நூலை செம்மையாக கொணர பங்காற்றிய தி.அ. ஸ்ரீனிவாசன், அரவிந்தன், பெருமாள் உட்பட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்த ஆண்டு எதற்காகவேனும் நான் பெருமைப்படலாம் என்றால் அது இவ்விரு நூல்களை வெளியிட்டதற்காக. ‘குருதி வழி’ நாவலை வெளியிட்ட ஜீவாவிற்கும், திருத்தங்கள் செய்த ஸ்ரீதேவிக்கு, வேதாவிற்கும், ஜானகிக்கும் நன்றிகள். முரண்பாடுகள் ஊடாக தொடர்ந்து உரையாடும் சக படைப்பாளி நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து வாசிப்பின் ஊடாக உடன் வரும் வாசகர்களுக்கும் நன்றி. மலேசியா, பாட்னா உட்பட உள்ளூர் வெளியூர் பயணங்களை எழுத்தின் விளைவாகவே ஈட்டினேன். எனது படைப்புகளை கோரிய, பதிப்பித்த இதழ்களுக்கு நன்றி. பிரியத்திற்குரிய யுவன் இருதய நோயிலிருந்து மீண்டதற்காக நன்றி. வருட கடைசியில் சந்தித்து, மிகவும் நெருக்கமாக உணர்ந்த கன்னட எழுத்தாளர் ஜெயந்த் காய்கினி அவர்களுக்கு நன்றி. அவரை போல கசப்பு அண்டாத வாழ்க்கை தகையட்டும். மரப்பாச்சி, சிற்றில் நண்பர்களுக்கு நன்றி. தொடர்ந்து செயல்படுவதே அவர்களின் வழிமுறை. எப்போதும் உரையாடலில் இருக்கும் பெருந்தேவிக்கும், போகனுக்கும், ஜாகிர்ராஜாவிற்கும் நன்றி. ஒவ்வொரு உரையாடலும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு தான் எனக்கு. ஸ்டாலின் ராஜாங்கத்திற்கு, தமிழின் அசல் சிந்தனையாளர்களில் ஒருவராக இருந்தாலும், எப்போதும் நிதானம் தவறாதிருப்பதன் வழி செயல்பட முடியும் என்பதை காட்டியதற்கு. நல்ல கதைகளை, கவிதைகளை, கட்டுரைகளை எழுதிய எழுத்தாளர்களுக்கு நன்றி, மொழிக்கும் கற்பனைக்கும் அவர்கள் பங்காற்றியுள்ளார்கள்.  சுமாரான படைப்புகளை எழுதியவர்களுக்கும் நன்றி, மொழி சூழலை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக. 



மாணவர்களுக்கு- என்னை ஆசிரியராக உணரச் செய்த, நிறைவடைய செய்த ஈரோடு- திருப்பூர் அறக் கல்வி மாணவர்களுக்கும், ஆயுர்வேத வகுப்புகளில் பங்குபெற்ற இந்திய - மலேசிய மாணவர்களுக்கும் நன்றி. எழுதும்போதும் வகுப்பிலிருக்கும் போதும் நான் என்னை முழுமையானவனாக உணர்கிறேன். 


நோயாளிகளுக்கு- நம்பிக்கையுடன் என்னை நாடி வந்ததற்கு நன்றி, உங்கள் வழியாக நான் கற்றுக் கொள்கிறேன், கற்றதை செயல்படுத்துகிறேன். எல்லோரும் நோயின்றி நலமாக வாழ வேண்டிக்கொள்கிறேன். 


இன்னும் பலருக்கு நன்றி, கண்ணுக்கு புலப்படாத ஆரங்களாக என் வாழ்க்கை சக்கரத்தை சுழற்றும் உங்கள் அனைவருக்கும் நன்றி. 


இன்னும் ஆரோக்கியமாக, இன்னும் அதிக மனோதிடத்துடன், இன்னும் தீவிரமாக வாசித்து, எழுதி, செயலாற்ற முனைகிறேன். எனது கலைக்கும் தொழிலுக்கும் எப்போதும் போல உண்மையாக இருக்க உறுதி ஏற்கிறேன். கவன சிதறல்களை தவிர்த்து கொண்டு, எனக்கு அளிக்கப்பட நேரத்தை முழுமையாக பயன்படுத்த முயல்கிறேன். எனது உலகியல் தேவைகள் எப்படியோ ஈடு செய்யப்படும் என மனமார நம்புகிறேன்.  


எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். 

கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடு வயதிற்குள்ள மனத்திடனும், இளைஞருடைய உத்ஸாஹமும், குழந்தையின் ஹிருதயமும், தேவர்களே, எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும் படி அருள் செய்க- பாரதி    


   


No comments:

Post a Comment