Saturday, November 22, 2025

நாவல் உருவான கதை - குருதி வழி



எங்கள் நெருங்கிய குடும்ப நண்பர் ஒருவருக்கு நிகழ்ந்த சம்பவம்தான் இந்த நாவலின் கரு. கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தை அடையாளம் கண்டுகொண்டாலும் அவரால் நெருங்க முடியவில்லை. இன்னொரு வகையான தீர்வை நாடினார் என்பது வேறு விஷயம். ஆனாலும் மூதாதையர்களின் செயலுக்கும் வாழ்விற்கும் நாம் பொறுப்பேற்க முடியுமா? வேண்டுமா? போன்ற கேள்விகள் என்னைத் தொந்தரவு செய்தபடி இருந்தன. முதலில் சற்றுப் பெரிய சிறுகதையாக கொரோனா காலத்தில் எழுதினேன். ஆனால் அப்போது வெளியிடவில்லை. ஜெயமோகன் எழுதிய கொரோனா காலக் கதைகளில் ஒன்றான ‘பலிக்கல்’ கதையின் முடிவுடன் ‘வேல்’ எனத் தலைப்பிட்டு இருந்த அந்தச் சிறுகதையின் முடிவு நெருக்கமாக ஒத்திருந்தது. மன்னிப்பு வழங்குவது யார்? தெய்வமா? மனிதரா? திறந்த முடிவுடன் நிறைவுபெற்ற கதை. கதையைக் கைவிட மனதின்றி அப்போதைய சமயத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே வைத்துவிட்டேன். உள்ளுக்குள் அந்தக் கதை உறுத்திக்கொண்டே இருந்தது. பின்னொரு சமயத்தில் ஜெயமோகனிடம் நான் எழுதிய சிறுகதையைப் பற்றிக் கூற நேர்ந்தது. மையக் கேள்வியை இன்னும் பெரிதாக விரித்தெடுத்தால் இந்தக் கதைக்கு நாவலாக வளரும் சாத்தியம் உள்ளதாகக் கூறினார். அப்படி உருவானதுதான் இந்த நாவல். மூதாதையர் செயல் என்பது கடந்த காலம், வரலாறு என விரிந்தது. அவை நமது இன்றைய வாழ்வில் செய்யும் குறுக்கீடுகள் என்ன? அந்தச் சுமையை நாம் சுமக்க வேண்டுமா? கடந்த காலத்திலிருந்தும் வரலாற்றிலிருந்தும் விடுபட வேண்டுமா? முடியுமா?   


நாவல் எழுதுவதில் உள்ள லாகிரி என்பது நாமறியாத புதிய தளங்களைச் சென்று முட்டித் திறப்பது தான். என்னால் எந்தப் புனைவையும் தீர்மானமான திட்டத்துடன் தொடங்க முடியாது. திட்டமின்மை அளிக்கும் வியப்புதான் நாவலைத் தொடர்ந்து எழுதுவதற்கான எரிபொருள். கொல்லப்பட்டவர் சிறு தெய்வமாக ஆனார் எனும் இடத்தைத் தொட்டவுடன் நாவல் எனக்குத் திறந்து கொண்டது. அங்கிருந்து 1942ஆம் ஆண்டின் ஆகஸ்ட் போராட்டத்தின் பகுதிகளுக்குச் சென்றது, காந்தியின் தமிழக வருகை, ‘சதக் சதக்’ எனும் அறிவியல் புனைவு எனத் தன் போக்கில் பல்வேறு அடுக்குகளோடு வளர்ந்து சென்றது. 


இந்த நாவலை நான் எழுத எடுத்துக்கொண்ட காலம் அதிகம். காந்தி-                  தன்வரலாறு மொழியாக்கப் பணி என்னை ஆக்கிரமித்திருந்த நேரம். தொடர்ச்சியாக எழுதி முடிக்க முடியாத சூழல். ஏறத்தாழ இரண்டு வருடங்கள் சிறுகதைகள் எழுதாமல் இருந்தேன். எனது புனைவாற்றல் மீது எனக்கு மெல்லிய ஐயம் எழுந்த நாட்கள் அவை. இனி கதை எழுதுவேனா, எழுத வருமா என்றெல்லாம் ஐயத்துடன் இருந்த நாட்கள்கூட உண்டு. விமர்சகராகவும் மொழிபெயர்ப்பாளாராகவும் காலம் தள்ள வேண்டியதுதானா (இவற்றின் மீது உள்ளார்ந்த பெருமதிப்பு உண்டு என்பதாலேயே ஈடுபடுகிறேன்) என்று குழம்பிய காலத்தில் பிள்ளையார்பட்டிக்குச் சென்றிருந்தேன். வருடத்திற்கு மூன்று நான்கு முறை செல்வது வழக்கம்தான். எப்போதும் பொன்அங்கியிலோ வெள்ளி அங்கியிலோ காட்சியளிப்பார். அன்று கரும்பாறை உருவத்துடன் விளக்கொளியில் மிளிர்ந்து கொண்டிருந்ததை சிலிர்ப்புடன் பார்த்து நின்றதை நினைவுகூர்கிறேன். கற்பக விநாயகரிடம் மனமுருக வேண்டினேன். இந்த நாவலை முடிப்பதற்கு எனக்கு உறுதுணையாக இரு உனக்கிதை சமர்ப்பிக்கிறேன் என்று உறுதி அளித்தேன். இந்த நாவலின் செல்திசையோ பேசுபொருளோ திட்டவட்டமாக உருவாகாத நாட்கள் அவை. நாற்பது பக்கங்களில் நின்றிருந்த நாவல் கற்பக விநாயகருக்கு சமர்ப்பணம் என்று தலைப்பிற்கு கீழ் எழுதிய பிறகே நகரத் தொடங்கியதாக நான் நம்புகிறேன். அவருக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றியிருக்கிறேன். நாவல் இன்னொருவருக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. சமீபகாலங்களில் நான் திரும்பத்திரும்ப வாசிப்பது அவரைத்தான். யுவன் சந்திரசேகர் கதைகள் மீது தீரா மயக்கம் தொடர்கிறது. 



நாவல் எழுத முடியாத நாட்களிலும் அதனுடனான எனது தொடர்பை நான் துண்டித்துக்கொள்ளவில்லை. நாளின் கடைசியிலும் தொடக்கத்திலும் நாவல்குறித்து ஏதோ ஒன்றை தியானிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இந்த உத்தி என்னை நாவலிலிருந்து விலகாமல் காத்தது. 


முன்னுரை எழுதுவதில் எனக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. நாவல் உருவான விதத்தைப் பகிர்ந்து கொள்வதற்கே இந்தப் பின்னுரை. 


எனது முதல் நாவல் எழுதிய மனநிலைக்கும் இந்த நாவலை எழுதிய மனநிலைக்கும் இடையேயான வேறுபாட்டைக் கவனிக்கிறேன். ‘நீலகண்டம்’ இடுகலான இருண்ட ஆழ்துளைக்குள் தீக்குச்சி வெளிச்சத்தில் ஊர்ந்து சென்ற பயணம். எழுத அஞ்சி மனம் சுருண்டு கொள்ளும். ஆழத்து இருளை எதிர்கொள்வதன் அச்சம் வெருட்டும். நாவலை முடித்தபோது நான் அடைந்தது பெரும் விடுதலை உணர்வு. 


‘குருதி வழி’யை ஒரு சாகசக்காரனின் மனநிலையோடு ஒப்பிட வேண்டும். குறிப்பாக ’சதக் சதக்’ போன்ற அறிவியல் புனைகதை எல்லாம் பெரும் ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் எழுதினேன். எல்லாவற்றையும் அறிந்துகொள்ளும் சாகசக்காரனின் துடிப்பும் ஈடுபாடும்தான் இதன் ஆதார உணர்வு. சாகசக்காரன் விரும்பத்தகாத ஏதோ ஒன்றை அறிய நேரும்போது என்ன  நிகழும்? ‘குருதி வழி’ எழுதும்போது இந்த உற்சாகம் மறைந்து வலியும் வேதனையும் கொண்டேன். மனித மனத்தின் இருண்ட சாத்தியங்கள் என்னை அச்சுறுத்தின. ஆவணங்கள் வழி கிடைத்த சில பகுதிகளை எழுதுவதா வேண்டாமா என்றொரு உளப்போராட்டம் வேறு என்னை ஆட்கொண்டது.     


யதார்த்தவாத எழுத்தாளர்களைப்போல உரையாடலோ புறச்சித்தரிப்போ எழுதுவதற்கு அவ்வளவாக முனைந்ததில்லை. அவ்வகையில் வசதி வட்டத்திலிருந்து வெளியேறி, நானாக உருவகித்து வைத்திருந்த எனது எல்லைகளைக் கடக்க முயற்சித்துள்ளேன். என்னளவில் இந்த நாவலுக்கும் அதன் கதை மாந்தர்களுக்கும் சமரசமின்றி உண்மையாக இருக்க முயன்றிருக்கிறேன். எனக்குள்ளாக எழுப்பிக்கொண்ட கேள்விகளை இயன்றவரை தீவிரமாகப் பின்தொடர்ந்திருக்கிறேன். 


நாவலில் சித்தரிக்கப்படும் 1942 தேவகோட்டை- திருவாடானை கிளர்ச்சி சார்ந்த பகுதியைப் பற்றி மட்டும் சில வார்த்தைகள் சொல்ல வேண்டும்.                 ஆ.சிவசுப்பிரமணியனின் ‘ஆகஸ்ட் போராட்டம்’, சின்ன அண்ணாமலையின் ‘சொன்னால் நம்பமாட்டீர்கள். பி. ஆர். சந்திரன் எழுதிய  ‘தேரும் போரும்’ அகத்தியலிங்கம், ஸ்டாலின் குணசேகரன் போன்றோர் எழுதிய விடுதலை வரலாறு சார்ந்த நூல்கள், பாலபாரதி செல்லத்துரையின் பேரனான துரை கருணாநிதியுடனான நேர்காணல்  போன்றவை எனக்கு இந்தப் பகுதியை எழுத உதவின. காந்தியின் 1934 ஹரிஜன் யாத்திரை பற்றித் தமிழ்நாட்டில் காந்தி என்றொரு நூலை தி.செ.சௌ ராஜன் எழுதியுள்ளார். அதிலிருந்து ஒரு பகுதியைப் புனைவாக ஆக்கியிருக்கிறேன். ஆங்கிலேயர்கள் பின்பற்றிய வதை முறைகள் எவையும் மிகையாகச் சொல்லப்படவில்லை.                            ஆ.சிவசுப்பிரமணியன் மேற்கோள் காட்டும் வழக்குத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.  


‘குருதி வழி’ பகுதியில் வரும் பெருமாள் பீட்டர் பற்றிய சித்திரம்,  ‘எழுத்து’ வே. அலெக்ஸ் வெளியிட்ட ‘கரிசலில் ஒரு ஊருணி’ எனும் நூலை அடிப்படையாகக் கொண்டது. பெருமாள் பீட்டர் குறித்து இன்னும் விரிவான நூல் எழுதப்பட வேண்டும் எனும் எண்ணம் அந்த நூலை வாசித்தபோது ஏற்பட்டது.  பி.ஆர். சந்திரனின் ‘தேரும் போரும்’ நூலில்தான் பெருமாள் பீட்டர் குறித்து முதல்முறை அறிந்து கொண்டேன். சட்டை கட்சி கலவரம், சித்தானுர் பூச்சி படுகொலை பற்றிய தகவல்களும் அவருடைய நூலில் பெற்றவைதான். ‘கிளர்ந்தெழுகிறது கிழக்கு முகவை’ சிவகங்கை, ராமநாதபுர மாவட்டத்தின் தலித் மக்கள் எழுச்சியை ஆவணப்படுத்தும் மிகச் சிறிய நூல் வழி பல புதிய தகவல்களை அறிந்துகொண்டேன். ரோஜா முத்தையா நூலகத்தில் கிடைத்த திருவேகம்பத்து ஏகாம்பரநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேக மலரில் 1942 கலவரம் குறித்துப் பல தகவல்கள் கிடைத்தன. அத்தனை தகவல்களையும் அடுக்கிக் காட்டுவது புனைவாசிரியனின் வேலையல்ல. இவற்றை எங்கெல்லாம் புனைவுக்குப் பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் சேர்த்திருக்கிறேன். தரவுகள் அடிப்படையாக கொண்டாலும் இது புனைவு என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். வரலாறாக கருத வேண்டியதில்லை. சில அசல் ஆளுமைகள், அசல் ஆளுமைகளின் சாயல் கொண்ட புனைவாளுமைகள், புனைவுப் பாத்திரங்கள் என புனைவுகளுக்கு உரிய சுதந்திரத்துடன் இப்பிரதி அணுகப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். நாவலின் எல்லாப் பகுதிகளிலும் ஏதோ ஒருவகையில் காந்தி ஊடுருவிக் கிடக்கிறார். 


தடைபட்டிருந்த நாவலை மீண்டும் தொடங்குவதற்கு காலச்சுவடு பதிப்பகம் வழங்கிய எழுத்தாளர் வசிப்பிடத் திட்டம் வெகுவாக உதவியது. ஆனைக்கட்டியில் இருந்தவரை நாளுக்கொரு அத்தியாயம் எழுதினேன். 


இந்த நாவல் எழுதிய காலகட்டத்தில் என்மீது தாக்கம் செலுத்தியவர்களில் யுவன் சந்திரசேகர், ஸ்டாலின் ராஜாங்கம், பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் ஆகியோரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று எண்ணுகிறேன். ஏதோ ஒருவகையில் இவர்களுடனும் இவர்களின் படைப்புகளுடனுமான உரையாடல் இந்நாவலின் தரிசனமாக வெளிப்பட்டுள்ளது என்று உணர்கிறேன். இந்த நாவலை பிரியத்திற்குரிய யுவனுக்கும் சமர்ப்பித்திருக்கிறேன். வரலாற்றை இரும்புத்தூண்களாகக் கற்பனை செய்வதற்கு மாறாக ரப்பர் பொம்மைகளாகக் கற்பனை செய்ய முடியும் என்பதை யுவன் எனக்குக் காட்டிக்கொடுத்தார். ஜெயமோகனின் வரலாற்றுப் பார்வையும் யுவனின் வரலாற்று நிராகரிப்பும் சந்திக்கும் புள்ளியில் இந்நாவல் நிகழ்வதாக நான் எண்ணிக்கொள்கிறேன். 



ஸ்டாலின் ராஜாங்கத்திற்கு நன்றி சொல்ல நிறைய காரணங்கள் உண்டு. நாவல் எழுதப்படும் காலத்தில் நேர் பேச்சில் அவருடன் நிறைய உரையாடினேன். பெருமாள் பீட்டர் குறித்த விரிவான சித்திரத்தை அவர்தான் அளித்தார். அவரது மாணவர் முத்துப்பாண்டிதான் அலெக்ஸ் எழுதிய நூலை அனுப்பித் தந்தார். ஸ்டாலின் வழியாக எனக்கு அறிமுகமான அயோத்திதாச பண்டிதர் மிகவும் அணுக்கமாக மாறிப்போனார். முகவை மண்டல தலித் வரலாறு குறித்து அவர் அளித்து உதவிய நூல்களும் பார்வைகளும் முக்கியமானவை. 


‘வேல்’ சிறுகதையின் இறுதி தருணம் என்பது சன்னதம் கொண்டு அருளப்படும் வேலை பெருமாள் பெற்றுக் கொள்வதுதான். நாவலின் முடிவுடன் ஒப்பிட்டு நோக்கும்போது ஸ்டாலினும் பண்டிதரும் செலுத்திய தாக்கத்தை உணர்ந்து கொள்கிறேன். சன்னதம் கொண்டு அருளப்படும் வேல் ஒன்றும் அவ்வளவு முக்கியமானதாக சோலைக்குத் தோன்றவில்லை. நாவலின் வரைவு வடிவத்தை தனது வேலைகளுக்கு நடுவே வாசித்து சில முக்கியமான கருத்துக்களை ஸ்டாலின் கூறினார். அவை எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தன.  


பாலாவின் ’சீமுர்க்’ தொகுப்பும் அவருடனான உரையாடல்களும் வரலாறு குறித்த பார்வையை தீர்க்கமாக்கியது. 


தற்கூற்றாக வெளிப்படும் பகுதியின் மொழிநடையை நான் கண்டடைய ஏதோ ஒருவகையில் நண்பன் சித்திரனின் ‘விசுவாசத்தின் மறைபொருள்’ சிறுகதை உதவியது. அவனது அருகாமையும் தீராத இலக்கிய உரையாடல்களும் உதவியிருக்கிறது. இந்த நாவலின் மனநிலைக்கு பிரெக்டின் கவிதைகள் மிகவும் நெருக்கமானவையாக இருந்தன. நாவல் எழுதிய காலகட்டத்தில் பலமுறை பிரம்மராஜன் மொழியாக்கம் செய்த பிரெக்டின் கவிதைகளை வாசித்தேன். 


சிங்கப்பூர் நூலகம், அங்கிருந்தபோது வாசித்தவை இந்நாவலுக்கு முக்கியமான உந்துசக்தி. சிங்கப்பூர் நண்பர்களை எண்ணிக்கொள்கிறேன். லதா, விக்னேஷ் ஹரிஹரன், காளி, ஜீவகரிகாலன், திருக்காட்டுப்பள்ளி அரவிந்தன் போன்ற நண்பர்களுக்கு அவ்வப்போது எழுத எழுத அத்தியாயங்களை அனுப்பினேன். பலருடன் நாவல் குறித்து உரையாடி இருக்கிறேன். அனைவருக்கும் எனது நன்றிகள். 


பிள்ளைகள் வளர்ந்து வருகிறார்கள். எனது தொழில், பயணம், பிள்ளைகளுடன் நேரப் பகிர்வு என எல்லாவற்றையும் சமநிலையில் வைத்துக்கொள்வதில் எனக்கு நிறைய சவால்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் உறுதுணையாக இருக்கும் மனைவி மானசாவிற்கு நன்றி. நான் எழுத முக்கியக் காரணியான அம்மாவிற்கு வணக்கம். எனது எல்லைகளை எனக்கு உணர்த்தும் அப்பனுக்குப் பாடம் சொல்லும் சுப்பிரமணிகளான சுதிருக்கும் சபர்மதிக்கும் அன்பு. 

 



சுனில் கிருஷ்ணன் 

ஆகஸ்ட் 5, 2025 


No comments:

Post a Comment