Wednesday, January 3, 2018

அம்புப் படுக்கை - விஷ்ணு பிரகாஷின் வாசிப்பு - 1

நண்பர் விஷ்ணு அம்புப் படுக்கை தொகுப்பை வாசித்து அதிலுள்ள சில கதைகளைப் பற்றி தனது பார்வையை எனக்கு எழுதி இருந்தார். அவருடைய அனுமதியின் பேரில் இவை வலையேற்றப் படுகின்றன. 

கூண்டு 


     நான் சிறுவனாக இருந்த போது வாசித்த கதை ஒன்று உண்டு. எல்லா ஊரையும் தன தந்திரத்தால் கெடுத்து விட்ட பிசாசு ஒன்று ஒரு நாட்டை மட்டும் எவ்வளவோ முயற்சித்தும் அதனால் கெடுக்க முடியவில்லை. அந்த நாட்டின் மன்னனும் மந்திரியும் நல்ல மதியூகிகள். ஒருமுறை மாறு வேடமிட்டு பக்கத்துக்கு நாட்டிற்கு மன்னனும் மந்திரியும் சென்ற சமயத்தில் அந்த பிசாசு நாட்டில் இருந்த ஒரே குடிநீர் கிணற்றில் ஒரு மாருந்தை போட்டுவிட்டு சென்று விட்டது. அதிலிருந்து அந்த கிணற்றில் தண்ணீர் குடிக்கும் அனைவரும் பைத்தியமாகி போவார்கள். பக்கத்து நாட்டிற்கு சென்றிருந்த மன்னன் தன் நாட்டிற்கு திரும்ப வரும்போது அத்தனை பெரும் பைத்தியமாகி இருப்பதை கண்டதும் திகைத்து விடுவான். மன்னனும் மந்திரியும் மட்டும் அந்த கிணற்றில் இருந்து நீர் குடித்திருக்க மாட்டார்கள். எப்படி ஒரே நாளில் எல்லோரும் பைத்தியமாவார்கள் என குழம்பி அதன் காரணத்தை அறிய மீண்டும் மாறுவேடமிட்டு நகரத்திற்குள் செல்வான். அங்கு மக்கள் பைத்தியங்களாக அவர்களுக்குள் பேசிக் கொள்வார்கள் நம் மன்னனுக்கும் மந்திரிக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது என. இதை கேட்ட மன்னன் அதிர்ந்து விடுவான். ஒரு வழியாக இது அந்த பிசாசுவின் வேலைதான் என கண்டறிவான். முடிவில் அந்த கிணற்றில் இருந்து ஒரு கோப்பை நீரை அருந்துவான். இப்போது மக்கள் மன்னனுக்கு நல்லவேளையாக பைத்தியம் தெளிந்து விட்டது என மகிழ்ச்சி அடைவார்கள். பைத்தியக் கார நாட்டை ஆள மன்னனும் பைத்தியமாக இருக்க வேண்டும் என கதை முடியும் 



     கூண்டு சிறுகதையை வாசித்தபோது சட்டென மனதில் தோன்றியது அந்த கதை தான்.. குற்றம் செய்யும் மக்களை எவ்வளவு காவல் போட்டு சிறை வைத்தாலும் தப்பித்து விடும் நாட்டில் யாருமே தப்பிக்க முடியாத கூண்டினை தயாரிக்க கொல்லனை கேட்டுக் கொள்கிறான் மன்னன். பதினான்கு ஆண்டுகள் கழித்து ரகசியமாக செய்யப் பட்ட மந்திரக் கூண்டு அன்று காட்டப் பட இருக்கிறது. தவறு செய்யும் அத்தனை பேரையும் கூண்டு தானாகவே தன்னுள் கவர்ந்துகொள்ளும். மக்களெல்லாம் எதிர் பார்ப்புடன் கூடியிருக்கிறார்கள். மன்னனும் அவ்வாறே. தனக்கு இழைக்கப் படும் அத்தனை அநீதிகளுக்கும் அந்த கூண்டு நீதியை தரும் என நினைக்கிறான். ஒவ்வொருவரையாக தனக்குள் இழுத்துக் கொள்ளும் அந்த கூண்டு இறுதியாக மன்னனையும் தன்னுள் இழுத்துக் கொள்கிறது. மக்கள் தங்கள் வாழ்க்கையை அதற்குள் சகஜமாக வாழத்தொடங்கி விட்டார்கள். ஒரே ஒருவன் மட்டும் எந்த தவறும் செய்யாமல் தனித்து விடப் படுகிறான். ஆம் புனிதர்களுக்கு கூண்டிற்குள் மட்டுமல்ல மண்ணிலும்  இடமில்லை அல்லவா… எல்லோரும் தன்னை கூண்டிற்குள் வெளியே நிறுத்திக்கொள்ளும் புனிதர்களாக ஒரு தருணத்தில் பார்த்திருப்பார்கள். அல்லது எல்லோரையும் குற்றவாளியாக்கி கூண்டிற்குள் அடைத்துப் பார்க்க நினைத்திருப்பார்கள் தான். தனித்து விடப்படும் மனிதனுக்கு இந்த உலகமே ஒரு கூண்டாகி விடும் நிதர்சனத்தில் இருந்து தான் வாழ்க்கையின் பலவித வண்ணங்களை காணத்தொடங்குகிறோம். அறம் ஒரு நாள் வந்து இந்த பூமியை வேறு மாதிரி மாற்றி அமைக்கட்டும் மக்கள் அதுவரை இதில் இன்புற்றும் பின்னர் அறம் புதிதாக சமைக்கும் இன்னொரு உலகில் இன்புற்றும் வாழக் கற்றுக் கொள்வார்கள்.  எல்லாவற்றிலும் மனிதன் வாழக் கற்றுக் கொள்வான்.  


ஆரோகணம் 


     ஆரோகணம் கதையை வாசிக்கும் போதே தர்மன் நினைவுக்கு வந்து கொண்டே இருக்கிறார். பாண்டவர்களில் தர்மன் மட்டுமே இறுதிவரை பயணித்து பூத உடலுடன் சுவர்க்கத்திற்கு செல்கிறார். அவருடன் செல்லும் ஒரு நாயும் சொர்க்கம் செல்கிறது. அதற்க்கு முன் அவரும் நரகத்தை காண வேண்டியது இருந்தது. அது ஒரு கன நேரம் தான். இந்த கதையில் உணர்ச்சி சற்றே வெளிப்படுகிறது. மிக நீண்ட பயணத்தில் தன்னந்தனியாக எவரும் உடன் வர முடியாத பயணத்தில் காந்தி தன் வாழ்நாளின் பொருளை தேடி தேடி அதன் வெறுமையின் எடை தாங்க முடியாமல் இறுதியாக மரண தேவனை அடைகிறார். காந்தியின் வாழ்வில் அவரது மூத்த மைந்தன் ஒரு வழி தவறிய ஆட்டுக் குட்டி. ஹரிலாலின் நிலைக்கு தனது இச்சைகளும் கொள்கைகளும் தான் காரணமாக இருந்திருக்கும் என்ற எண்ணம் எப்போதும் காந்தியின் உள்ளத்தில் குத்திக் கொண்டே இருக்கிறது. கஸ்தூரி பாவின் இழப்பும், முதுமையில் எழுந்து வரும் பாலியல் இச்சையும் அதன் காரணமான  தனது பாலியல் பரிசோதனைகளும் வேறுவிதமான  உணர்வுகளை உருவாக்கி இருக்க கூடும். தனது வாழ்நாள் முழுக்க எதை தீவிரமாக பின்பற்றி நடந்தாரோ அது கடைசியில் முடிவற்ற வெறுமையில் அவரை கொண்டு சேர்க்கிறது. காந்தியின் கடைசி காலம் வன்முறைகளும் கொலைகளும் அவநம்பிக்கையும் தலை விரித்தாட அதன் நடுவே மனசஞ்சலத்தொடு பிரிவினையின் கொடும் துயரத்தை தடுக்க முடியாமல் ஊழின் குறுக்கே செயலாற்றிக் கொண்டிருந்தவர். தனது கொள்கைகள் தனக்கு நெருங்கிய சீடர்களாலேயே தோற்கடிக்கப் படுவதைப் பார்த்திருந்து மனதின் பிடிப்பை விட்டிருப்பார். எப்போதும் கீதையின் வெளிச்சத்தில் இன்னும் சற்று தூரம் சென்று விட முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் வந்து விடும். இந்த கதை காந்தியின் முக்கியமான சில சஞ்சலங்களை தனது இறுதிப் பயணத்தின் போது அடைவதாக சித்தரிப்பதில் கவர்கிறது. தர்மனுக்குப் பின் அந்த பாதையில் காந்தி செல்கிறார். தர்மனைப் போலவே அவரும் நரகத்தை தேர்ந்தெடுக்கிறார். ஆனால் அதை காந்தி ஒருபோதும் சொர்க்கத்திற்கான பாதையாக இல்லாமல் தேர்வு கொள்வதில் தான் உச்சத்தை அடைகிறது. அங்கு தான் காந்தியும் தர்மனும் வேறுபாடு அடைகிறார்கள். மறுமையில் கிடைக்கும் ஒரு நல்ல வாழ்விற்காக இம்மையை அதற்கான களமாக கொண்டவரல்ல. அதனால் அடையப் போகும் அத்தனை பலன்களையும் துறந்துவிட்டே செயல் ஒன்றுக்காகவே வேறெதற்காகவும் இல்லாமல் வாழ்வது கீதையின் சாரமோ அல்லது அதையும் தாண்டியோ? அந்த நரகத்தில் தான் அவருக்கான சிறந்த களம் இருக்க முடியும். அங்கு எல்லோரையும் தானாகவே உணர்வது அவரின் பெரும் கருணையால் தான். காந்தியின் நரகம் ஒருபோதும் நரகமல்ல. அது வேறுவிதமான பாதை தனித்து நடப்பவர்களுக்கான பாதை. 

பேசும் பூனை. 


      பொருள் சூழ்ந்த உலகத்தில் நுகர்வின் வெறி அதிகமாக அதிகமாக வாழ்க்கையை வாழாமல் பணம் தேட ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை. சங்க காலத்தில் பொருள் தேடப் கால்வலியும் களவழியும் பிரிந்து சென்ற தலைவனுக்காக காத்திருக்கும் தலைவியின் பிரிவின் துயரம் ஏராளமாக சொல்லப் பட்டிருக்கிறது. திரும்பி வருவானோ மாட்டானோ என்ற உத்திரவாதமற்ற நிலையில் அவள் வாழ்வு இருக்கும். இன்றைய வாழ்க்கையில் அறிவியலும் தொழில்நுட்பங்களும் மனிதர்களை எளிதாக உலகில் எங்கிருந்தாலும் தொடர்புகொள்ள கருவிகளை வழங்கியிருக்கின்றன. இன்றைய உலகின் தலைவனும் தலைவியும் எங்கிருந்தாலும் உரையாடிக் கொள்ள பார்த்துக் கொள்ள முடியும். நுகர்வு முதன்மை படுத்தப் படும் வாழ்க்கையில் கைபேசியும் இன்னும் இன்னும் என நாம் நினைத்திடவே முடியாத சாத்தியக் கூறுகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. 


     எனது சொந்த அனுபவத்தில் நான் ஒரு இணையதளத்திற்கு அடிமையாகி எனது வாழ்வின் சில ஆண்டுகளை தொலைத்திருக்கிறேன். முழுக்க பெண்களுடன் காமம் சார்ந்து உரையாடுவதில் இரவு பகலாக கிடந்திருக்கிறேன். அதிலிருந்து மீள முடியாமல் தவித்திருக்கிறேன். என்னைப் போல எத்தனையோ இளைஞர்கள் பாதிப்பை அடைந்திருக்க கூடும். மனிதர்கள் அருகருகே வாழ்ந்தாலும் இந்த நவீன உலகத்தில் ஒருவரை ஒருவர் நெருக்கமாக அறிந்து கொள்ள முடியாது. அலைபேசியின் துணையுடன் அவர்கள் வேறு ஒரு உலகத்திற்குள் வாழக்கூடும். பேசும் பூனையும் அப்படி ஒரு செயலி தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பலகீனம். நம் எல்லா பலகீனங்களும் சந்தையின் மிக முக்கியமான வாய்ப்புகள் கச்சா பொருள்கள். முற்றிலும் புதிய உலகத்திற்குள் அழைத்துச் சென்று அந்த உலகத்தின் இன்ப துன்பங்களை அனுபவிக்க வைத்து விடும் இது போன்ற செயலிகளும் இணைய தளங்களும். மெய் நிகர் உலகம் தான் என்றாலும் அவை மெய் உலகமில்லை. முற்றிலும் கற்பனையான உலகம் அது. அங்கு நம்மை தவிர யாரும் இல்லை. முற்றிலும் தனித்து விடப்படும் போது வெறுமையில் வீழ்கிறோம். அதன் பின் மெய்யான உலகத்திற்கு திரும்பும் போது அதன் உக்கிரம் இன்னும் அதிகமாகி வாழ்வின் மீதான அத்தனை பிடிப்புகளும் இற்று ஆழமான பள்ளத்தில் வீழ்கிறோம். மனிதனின் துயரம் தான் எத்தனை வகையானது. அறிவியலும் தொழில் நுட்பங்களும் மனித வாழ்வை மேலும் மேலும் எளிமை கொள்ளச் செய்வதாக நினைக்கிறோம். புற உலகில் அது ஒரு வகையில் உண்மையும் கூட. புறஉலகின் இன்பங்கள் ஒரு கண நேரம் மட்டும் தான். மனிதனின் துயரம் முற்றிலும் அகம் சார்ந்தது. அதை ஒருபோதும் நவீன அறிவியலும் தொழில்நுட்பமும் தீர்த்து வைத்து விடுவதில்லை. தீர்த்து வைப்பதாக ஒரு பாவனையை மேற்கொள்கின்றன. சங்க கால தலைவிக்கு ஒரு தோழியாவது இருப்பாள். நவீன காலம் அதையும் பிடுங்கி ஒரு கருவியாய் கொடுத்திருக்கிறது. பேசும் பூனையும் அதை தான் கண் முன்னால் காட்டுகிறது போலும். ஆங்காங்கே சில குறைகள் தென்பட்டாலும் கதை நம்மை அதன் போக்கில் அழைத்துச் சென்று உணர்வுகளின் மெல்லிய படலத்தை அதிர்வுறச் செய்கிறது. அவ்வகையில் இது எனக்குப் பிடித்திருகிறது.

No comments:

Post a Comment