Saturday, December 30, 2017

அம்புப் படுக்கை சிறுகதை தொகுப்பு வெளியீட்டு விழா - ஏற்புரை

நண்பர்களே,

எனது ‘அம்புப் படுக்கை’ நூலை வெளியிட்ட ஜீவ கரிகாலன் மற்றும் ‘யாவரும்’ நண்பர்களுக்கும், லக்ஷ்மி சரவணகுமாருக்கும், ம. ராசேந்திரன் அவர்களுக்கும், அழைப்பை ஏற்று முதல் பிரதியை பெற்றுக்கொள்ள வந்த நண்பர் ‘நீயா நானா’ அந்தோணி அவர்களுக்கும், மற்றும் உங்களுக்கும் எனது நன்றிகள்.

பத்து சிறுகதைகளை கொண்டது இத்தொகுப்பு. 2013 துவங்கி 2017 வரை எழுதப்பட்டவை. பள்ளியில் ஐந்தாம் வகுப்புடன் எனது முறையான தமிழ்ப் பாடம் நின்று போனது. அதன் பின் இந்தியையும், சமஸ்க்ருதத்தையுமே இரண்டாம் மொழியாக பயின்றிருக்கிறேன். எனது மொழி முழுக்க முழுக்க நவீன தமிழ் இலக்கிய வாசிப்பில் உருவானது. எனது புனைவு மொழியை ஜெயமோகன், அமி, முத்துலிங்கம், யுவன் போன்றவர்கள் அதிகம் பாதித்திருக்கிறார்கள்.


‘அம்புப் படுக்கை’ அச்சாகி எனக்கு கிடைப்பதற்கு முன்பே அதற்கு வாசிப்பும் விமர்சனங்களும் வரத்துவங்கியது உண்மையில் எனக்கு பதட்டத்தை அளிக்கிறது. இந்த மனநிலையில் இருந்து வெளியேறி விரைவில் அடுத்த வேலை பார்க்க வேண்டும். தொகுப்பு வெளியாகவிருந்த அதே நேரத்தில் ‘எழுத்து – கணையாழி அசோகமித்திரன் குறுநாவல் போட்டி’யில் பரிசு கிடைத்ததும் கொஞ்சம் கூடுதல் கவனத்தை அளித்தது.

தமிழில் சிறுகதைகள் முழு பரிமாணம் அடைந்திருக்கின்றன. முன்னோடிகள் மகத்தான சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார்கள். அந்த நிலையிலிருந்து அடுத்து செல்ல வேண்டிய நிர்பந்தம், சவால் நமக்கிருக்கிறது. இணைய வேகம் குறைவாக இருந்து, கணினியில் தமிழில் தட்டச்சு செய்ய முடியும் எனும் சூழல் தமிழகத்தில் நிலவியபோது தமிழின் பல முக்கியமான பெரு நாவல்கள் உருவாயின. கடந்த பத்தாண்டுகளில் எழுத வந்தவர்களில் இதுவரை யாரும் பெருநாவலை எழுதவில்லை என்பதை கவனிக்க வேண்டும். இணைய வேகமும் அதிகரித்திருக்கிறது. நவீன தகவல் தொழில்நுட்பம் நம் நேரத்தை, கவனத்தை, துண்டாடுகிறது. இது flash fiction ன், குறுங்கதைகளின் யுகம். சமகாலத்து எழுத்தாளர்கள் இச்சவாலை எதிர்கொண்டாக வேண்டும். நல்ல சிறுகதை அளிக்கும் திருப்பத்தை, அதிர்ச்சியை அதைவிட செறிவாக குறுங்கதைகள் அளித்துவிட முடியும். எனில் சிறுகதைகளின் முக்கியத்துவம் அல்லது சவால் என்ன?

தற்கால சிறுகதைகள் ஒன்று நாவலின் தன்மையை கொண்டிருக்கின்றன. பல்வேறு உள்ளடுக்குகளை, சரடுகளை, பிசிறுகளை கொண்டுள்ளன. ஒன்றுக்கும் மேற்பட்ட உருவகங்களை பயன்படுத்துகின்றன. நாவலைப் போன்று தரிசனங்களை கைகொள்ள முயல்கின்றன. வழமையான சிறுகதை இலக்கணத்தில் சிக்காமல் உருச்சிதைந்து காணப்படுவதாக தோன்றினாலும், இது ஒரு புதிய அழகியலாக உருவாகி வருகிறது என்றே எண்ணுகிறேன். இரண்டாம் வகையாக தற்கால சிறுகதைகள் கவிதைக்கு நெருக்கமாக பயணிக்கின்றன. வாழ்க்கைக் கேள்விகள், திருப்பங்கள், போன்றவற்றிற்கு மாறாக கவித்துவ தரிசனங்களை முன்வைக்கிறது. 

இத்தொகுப்பின் கதைகளின் ஊடாக என்ன முயன்றிருக்கிறேன் என்பதை சொல்ல வேண்டும். அடுக்குகளை பொதித்து விரித்தெடுக்கக்கூடிய தன்மை கொண்ட கதைகளை எழுதி இருக்கிறேன். தூயன், விஷால் ராஜா போன்றவர்களின் கதைகளிலும் இதை கவனித்திருக்கிறேன். காளிங்க நர்த்தனம், ஆரோகணம் போன்ற சில கதைகள் கனவுத்தன்மை கொண்டவை. ஒரு கனவை சுற்றி பின்னப்பட்டவை. ஒருகால் நான் ஓவியனாக இருந்திருந்தால் இவை நல்ல ஓவியமாக வந்திருக்கக்கூடும். ‘குருதி சோறு’ தெலுங்கு பேசும் பிராமண குடும்பத்தை சேர்ந்த நாங்கள் எப்படி சித்த மருத்துவ பரம்பரையாக ஆனோம் எனும் கேள்வியை தேடி நிகழ்த்திய பயணத்தின் விளைவு, எங்கள் குடும்பத்திற்கு வாழ்வளித்த முகமறியாத அந்த மூதாதையருக்கு செலுத்தும் எளிய நன்றிக்கடன். அக்கதையின் தொன்மம் முழுக்க புனையப்பட்டது. ‘பேசும் பூனை’ ப்ளு வேல் விளையாட்டை உத்தேசித்து அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்த எழுதப்பட்ட கதை அல்ல. ப்ளு வேல் என்றொன்று  இருக்கிறது என நான் அறிவதற்கு முன்பே எழுதி முடித்தது. அந்த தொடர்பு எனக்கே ஆச்சரியம்தான். வேண்டுமானால், திமிங்கிலம் என்ன, பூனை போதும் நம்மை அடிமையாக்க என சொல்லிக்கொள்ளலாம்.   

நண்பர் ஆசை அவருடைய வாசிப்புக் குறிப்பில், ‘தனக்குச் சாத்தியமானதையே செய்து கொண்டிருக்கிறாரோ என்று தோன்றுகிறது’ என்று எழுதி இருந்தார். அப்படி தோன்றுவதற்கு ஒரு காரணம் உண்டு. இத்தொகுதி ஒரு கேள்வியை பின் தொடர்ந்து செல்லும் கதைகளை கொண்டவை. ஆனால் அக்கேள்வியை வெவ்வேறு மனிதர்கள், வெவ்வேறு சூழலில், வெவ்வேறு வகையில் எழுப்பிக் கொள்கிறார்கள் என்றே நம்புகிறேன். 
கசன்ஜாக்கிசின் ‘ஜோர்பா எனும் கிரேக்கன்’ நாவலில் ஒரு பகுதியில் கதைசொல்லி அருங்காட்சியகத்தில் நின்று ‘கடவுளின் கரம்’ எனும் வெண்கல சிலையொன்றை பார்த்து கொண்டிருப்பான். பெரிய கரத்தின் உள்ளங்கையில் ஆணும் பெண்ணும் முயங்கிக் கிடப்பார்கள். அப்போது அவனருகே அதே சிலையை காண வரும் ஒரு பெண் ‘இங்கிருந்து வெளியேற முடிந்தால்..’ என்பாள். ‘கடவுளின் கரம், பாதுகாப்பானது, ஏன் வெளியேற வேண்டும் என்கிறாய்?’ என்று அவன் கேட்பான். ‘கடவுளின் கரமே என்றாலும் வெளியேறித்தான் ஆக வேண்டும்’ என்று கூறிவிட்டுச் செல்வாள். ஏடன் தோட்டத்தில் தடுக்கப்பட்ட கனியை உண்டபோதே கடவுளின் பாதுகாப்பிலிருந்து மனிதன் வெளியேற துவங்கிவிட்டான். மனிதன் அவன் ஒப்புக்கொண்டாலும் இல்லை என்றாலும் தன்னளவில் ஒரு போராளிதான். வாழ்வும் அழிவும் இதன் விளைவேதான். விடுதலை என்பது மானுட குலத்தைப் பித்தாக்கும், இயக்கும் பெரும்  கனவு. விஷ்ணுபுர விழாவில் ஒரு முறை கவிஞர் தேவதச்சன் நேர்ப்பேச்சில் “இதுவரை அன்பே எல்லாவற்றிலும் உன்னதமானது என்று நம்பி இருந்தேன், ஆனால் அன்பைக் காட்டிலும் வேறொன்று உள்ளது, அது விடுதலை என்பதே எனது கண்டடைதல்” என்றார்.

விடுதலை, சுதந்திரம் பற்றிய கேள்விகள் என்னை விடாமல் துரத்துகின்றன. எனது கதைகளின் ஊடாக நான் அக்கேள்வியை பின் தொடர்கிறேன். வெவ்வேறு விதமான சமாதானங்களை போட்டுப் பார்க்கிறேன். விடைகளை பொருத்திப் பார்க்கிறேன். எனினும் கேள்வியே எப்போதும் எஞ்சுகிறது. மனிதன் விடுதலையை விழைகிறான், ஆனால் அதை அஞ்சவும் செய்கிறான். எது விடுதலை எனும் குழப்பம் எப்போதும் அவனை துரத்துகிறது. விடுதலை என்பது வெறும் கற்பிதம் தானா? இரண்டு சிறைகளுக்கு இடையிலான இடைவெளி மட்டுமா?

காப்காவின் கிரேகர் சம்சா உருமாற்றம் அடைகிறான். ஆனால் பூச்சியாக நின்றுவிடுகிறான். அந்த உருமாற்றம் ஏன் முழுமையடைந்து அவனுக்கு சிறகுகள் முளைத்து பறக்கத் துவங்கவில்லை எனும் கேள்வி என்னை வாட்டுகிறது. வாசுதேவனும் கிரேகர் சம்சாவும் வேறு வேறல்ல. வாழ்வின் வண்டிச் சக்கரத்தில் சிக்கி வலுவிழந்து வாழ்விழந்தவர்கள். மரணம் தான் விடுதலையா? மரணம்தான் விடுதலை எனில் ‘அம்புப் படுக்கையில்’ வதைபடும்போதுகூட செட்டியார் உயிரை இறுக்கி பிடித்துக் கொண்டிருக்கிறார். அப்பால் இருக்கும் இருள், அறியாமை அவனை இருத்துகிறது. வாழ்வது தான் உயிரின் இயல்பு. வாழும் வேட்கையே நம்மை இத்தனை ஆண்டுகளாக இவ்வுலகில் இருத்தி வைத்திருக்கிறது.  வாழும்போதே விடுதலையை எப்படி சுவைக்க முடியும்? நம்பிக்கை, மறுமை குறித்த நம்பிக்கை மதங்களின் ஊடே ஆசுவாசம் அளிக்கின்றன, அவை விடுதலையை அளிக்குமா என காளிங்க நர்த்தனத்தில் மாணிக்கம் தேடுகிறான். 

அவநம்பிக்கைவாதி எங்கு போவான்? ஐயம் கொண்ட மனம் உறுதியை, நிரூபணங்களை கோருகிறது. அறிவியலும் தொழில்நுட்பமும் அதை நிகழ்த்த இயலுமா என கேட்டு கொள்கிறேன். ‘திமிங்கலமும்’ ‘பேசும் பூனையும்’ அதன் சாத்தியங்களை நோக்கிப் பயணித்து சுவற்றில் முட்டி திரும்பி வந்து கைவிரிக்கிறார்கள்.  அரசியலுக்கு கட்டுப்பட்டே அறிவியல் இயங்க முடியும். அரசியலின் பல்வேறு படைக்கலங்களில் ஒன்றாகத்தான் அறிவியலும் இருக்கிறது. ஆகவே அரசியல் அவ்விடுதலையை மனிதனுக்கு பெற்றுத்தர முடியுமா என்று கேட்டு பார்க்கிறேன். 2016, கூண்டு, ஆரோகணம் வழியாக எனது இந்த சுய விசாரணை தொடர்கிறது. ஆரோகணத்தில் நான் கண்டடையும் விடை ஓரளவு எனக்கு மனச் சமாதானம் அளித்தது. இப்போது எனது அக்கறை வேறு திசையில் பயணப்படுகிறது. அந்த கதையின் வழியாக நான் ஆன்மீகத்திற்குள் விடை தேடத் துவங்கி இருக்கிறேன். ‘பொன் முகத்தை..’ கதை அவ்வகையில் ஒரு புதிய திசைக்கான பயணம். ஒருகால் நான் ஏற்குமளவுக்கு தீர்மானமான விடையை மெய்யியல் மற்றும் ஆன்மீகத்தில் பெற முடியும்.  ஏடன் தோட்டத்தில் தடைசெய்யப்பட்ட  ஆப்பிள் இங்கே  ஞானப்பழமாக ஈசனால் பிள்ளைகளுக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் நான் இந்த கேள்வியை இழந்துவிடுவேன். வாழ்க்கை மீதான ஆச்சரியங்கள் குறைந்து போய்விடக்கூடும் எனும் அச்சமும் என்னை பீடிக்கிறது. ஆகவே இந்த தெங்கம்பழத்தை உருட்டி உருட்டி விளையாடிக் கொண்டிருக்கிறேன்.

ஜெயமோகனின் அறம் தொகுப்பில் ‘உலகம் யாவையும்’கதையின் நாயகன் காரி டேவிஸ் உச்சிக்கு சென்று உலகையே ஓர் அறையாக கண்டு மூச்சு திணறும் திகைப்பையே இக்கதைகள் ஒவ்வொன்றின் ஊடாக நான் மீள மீள அடைகிறேன். கழுத்தில் சுருக்கிடும் கயிற்றை அறுத்துக்கொண்டு போகும் தோறும் மேலும் நுண்மையான சற்றே நீளமான கயிறு நம்மை பிணைக்கிறது என்பதை அறிந்ததன் திகைப்பு.  ‘கூண்டு’ இதை அப்பட்டமாக உருவகமாக்குகிறது.

நண்பர்களே நாம் மீறி உடைத்துச் செல்லவும் நமக்கு ஆசுவாசம் அளிக்கவும்  நமக்கொரு கூண்டு தேவையாக இருக்கிறது.

நன்றி

1 comment:

  1. बढ़िया कोशिश और श्रद्धा. बधाइयां . பெரும் முயற்சிக்கு கிடைத்த பெரும் வெற்றி .
    மேலும் சாஹித்ய அகடமி விருந்துபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete