Friday, March 30, 2018

சம்பை ஊற்று பாதுகாப்பு

நேற்று (29/3/18) கண்ணதாசன் மணிமண்டபத்தில் சம்பை ஊற்று மற்றும் சமூக பாதுகாப்பு இயக்கம் நடத்திய இரண்டாம் ஆண்டு உலக தண்ணீர் தின கருந்தரங்கில் பார்வையாளாராக கலந்துகொண்டேன். 

சம்பை ஊற்று காரைக்குடியின் முக்கியமான நீராதாரம். artesian spring என்று சொல்வார்கள், அவ்வகையான இயற்கை ஊற்று. அரியவகையிலான இவ்வகை ஊற்று இந்தியாவிலேயே இப்பகுதியில் மட்டுமே உள்ளது என்கிறார்கள். சம்பை ஊற்று தாழ்வான பகுதியில் உள்ளது. அதை மையமாக கொண்ட பதினைந்து கிமீ வட்டம் மேடான பகுதிகள். மழைநீர் வந்து சேரும் பகுதியாகவும் உள்ளது. சம்பை ஊற்றை ஒட்டி மூன்று கண்மாய்கள் உள்ளன. அவை வேளாண்மைக்கு பாசன நீர் அளிக்கின்றன. பல வருடங்களுக்கு முன் கடப்பாரை வைத்து குத்தினாலே நீர் பீறிடுமாம். இப்போது சுமார் முன்னூறு அடி ஆழத்திலிருந்து நீர் உறிஞ்சி காரைக்குடிக்கு அளிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு சுமார் ஒருலட்சம் லிட்டர் நீர் இரண்டு லட்சம் பேர் வசிக்கும்  காரைக்குடியின் தேவைக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது. 

அண்மையில் மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் நிகழ்த்திய ஆய்வில் சம்பை ஊற்று நீர் 180 அடிவரை மாசடைந்ததாக அறிக்கை அளித்துள்ளது. இதற்கு இரு முக்கிய காரணிகள் அங்கு பேசியவர்களால் அடையாளம் காட்டப்பட்டன. முதலாவதும் முக்கியமானதுமான காரணம் கோவிலூர் தமிழ்நாடு கெமிக்கல்ஸ் ப்ரைவேட் லிமிடட் எனும் வேதிப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலை. நாளொன்றுக்கு சுமார் இருபது லட்சம் லிட்டர் தண்ணீரை சம்பை ஊற்றிலிருந்து எடுத்துக்கொண்டு கழிவை வெளியே விடுகிறது. அக்கழிவு கோவிலூர் கண்மாயை பாழ்படுத்தி நிலத்தடி நீரையும் மாசாக்கியுள்ளது. அண்மைய ஆண்டுகளில் இரண்டு மூன்று முறை ஏதோ வாய்வு கசிவு ஏற்பட்டு அப்பகுதியில், சுற்றியுள்ள பள்ளிகளில் மூச்சு திணறல் ஏற்பட்டது. கருத்தரங்கில் பேசிய முன்னாள் ஊராட்சி தலைவர் பாதரக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் கோவிலூர் வாசிகளுக்கு நிகழும் உடல் உபாதைகளைப் பற்றி குறிப்பிட்டு பேசினார். குறிப்பாக பெண்களுக்கு கரு சிதைவு அதிக அளவில் ஏற்படுகிறது என்றார். உதயகுமார் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுகிறது என்றார். இவற்றுக்கெல்லாம் போதிய ஆதாரம் உள்ளதா என்பது வேறு விஷயம். ஆனால் இந்த வேதியல் ஆலை சர்வ நிச்சயமாக பெரும் சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை. பசுமை தீர்ப்பாயம், வழக்குகள் என்று அலைந்தும் கூட இந்த ஆலையை மூட இயலவில்லை. காரணம் இது ராமச்சந்திர உடையார் அவர்களின் நிறுவனம். மேலும் ஆலை உள்ள பகுதியை மட்டும் தொகுதி மறுசீரமைப்பின் போது சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவிலூரில் இருந்து பிரித்து சங்கராபுரம் ஊராட்சியில் கொண்டு சேர்த்துள்ளார்கள். இந்த ஆலைக்கு எதிராக இன்று வரை சங்கராபுரம் ஊராட்சி தீர்மானம் இயற்றவில்லை. 

இரண்டாவது காரணம் காரைக்குடி நகராட்சியின் அலட்சியம். காரைக்குடியின் கழிவு நீர் மொத்தமும் ஊற்றுக்கு அருகே உள்ள காரைக்குடி பெரிய கண்மாயில் சென்று சேர்கிறது. இப்போது பாதாள சாக்கடை திட்டம் வேறு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நீரை எங்கே சென்று வெளியேற்ற போகிறார்கள் என தெரியவில்லை? 

ஒட்டுமொத்தமாக தீர்வுகள் என யோசிக்கும் போது கீழ்வரும் புள்ளிகள் முக்கியமாகின்றன 
1. தமிழ்நாடு வேதிப்பொருள் ஆலையை இங்கிருந்து அகற்றுவது. அதற்கு காரைக்குடி முழுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வெகு மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல வேண்டியது அவசியம். 

2. நகராட்சியின் செயல்களை சீர் செய்தல். குறிப்பாக கழிவுகளை திசை  திருப்பி, சுத்திகரித்து, மறு சுழற்சியில் பயன்படுத்த வேண்டியது அவசியம். 

3. சம்பை ஊற்றை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று அரசானை இருந்தும் அது மீறப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 

4. கண்மாய்களை தூர்வார வேண்டும். நீர் வரத்து பகுதிகளை கண்காணித்து சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 

5. காரைக்குடியில் புதிய குடியிருப்புகள் பெருகுகின்றன. தான்தோன்றித்தனமாக ஆழ்துளை கிணறுகளை போட்டுக்கொண்டு செல்கிறார்கள். நிலத்தடி நீரை பாதுகாக்க உடனடியாக புதிய ஆழ்துளை கிணறுக்கு அனுமதி அளிப்பதை நகராட்சி நிர்வாகம் நிறுத்த வேண்டும்.

குடிநீர் ஆதாரம் சார்ந்து மிக முக்கியமான சிக்கலாக இது வரும் நாட்களில் வெடிக்கும். சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும். 

No comments:

Post a Comment