Wednesday, March 14, 2018

காமமெனும் வாதை – லோலிதாவும் அபிதாவும்


Lolita, light of my life, fire of my loins. My sin, my soul. Lo-lee-ta: the tip of the tongue taking a trip of three steps down the palate to tap, at three, on the teeth. Lo. Lee. Ta. – Lolita, Vladimir Nabokov
அபிதா, அ – சிமிழ் போன்ற வாயின் லேசான குமிழ்வில், பி- உதடுகளின் சந்திப்பில், தா- நாக்கின் தெறிப்பில். – அபிதா, லாசரா.
இரு முன்னோடிகள், இருவரும் மொழியின் அழகியலை முன்னெடுத்தவர்கள், அதன் இசைத்தன்மையை, லயத்தை நம்பியவர்கள். நபகோவ் ருஷ்ய எழுத்தாளர். லா. ச. ரா தமிழகத்தின் லால்குடியில் பிறந்தவர். நபகோவ் 78 ஆண்டுகளும் லா. ச. ரா 91 ஆண்டுகளும் வாழ்ந்தவர்கள். நபகோவின் லோலிதா 1955 ஆம் ஆண்டு வெளியானது. இன்றுவரை மிக முக்கியமான ஆக்கமாக விமர்சகர்களால் அடையாளப்படுத்தப்படுகிறது. லா.ச.ராவின் அபிதா 1970 ஆம் ஆண்டு வெளியானது தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இன்றுவரை வாசிக்கவும் படுகிறது. அபிதாவின் மொழி இன்று வாசிக்கையில் கூட காலாவதி ஆகாமல் புதிதாகவே இருக்கிறது.
சாலமன் அரசனின் இளமையை மீட்க/ தக்கவைத்துக்கொள்ள இளம் கன்னியர்களை அவருடன் உறங்க செய்யும் கதை பைபிளில் உள்ளது. இதன் நேர் நீட்சியாக லோலிதாவையும் அபிதாவையும் காண முடியும். அபிதாவை ஒரு காயகல்பம் என்றே ஓரிடத்தில் சுட்டுகிறார்.
இரு நாவலிலும் 'தன்மையில்' கதை சொல்கிறார்கள். லோலிதாவின் நாயகன் ஹம்பர்ட் அன்னையை இழந்தவன், பெரும் செல்வந்தரின் குடும்பம். தந்தையை அவ்வப்போது தான் காண்கிறான். கண்டிப்பான உறவினர் வீட்டில் தான் வளர்கிறான். அபிதாவின் கதை சொல்லி ஏழை பிராமணன். தந்தை திருமணம் செய்தவுடன் நகையை தூக்கிக்கொண்டு மனைவியையும் வயிற்றில் வளரும் பிள்ளையையும் கைவிட்டு ஓடிவிடுகிறான். தனியாளாக அம்மாவிடம் வளரும் போது அவளும் மரணிக்கிறாள். விதிவசமாக உறவினர் வீட்டில் வளர்கிறான். ஹம்பர்ட்டுக்கு ஒரு அண்ண பெல் என்றால் இவனுக்கொரு ‘சகுந்தலை’. இழந்த காதல்கள். அண்ண பெல் அவளுடைய பன்னிரெண்டாம் வயதிலேயே டைபஸ் காய்ச்சல் வந்து இறக்கிறாள். ஹம்பர்டின் பதின் பருவ பெண்களுக்கான வேட்கையை இதைக்கொண்டே புரிந்து கொள்ள முடியும். பிற்காலத்தில் லோலிதாவிடம் அவன் ஈர்க்கப்படவும் இது தான் காரணம். அவன் அவளிடமும் அண்ண பெல்லைத்தான் தேடுகிறான். லோலிதாவில் அண்ணபெல் மிக சிறிய பாத்திரம். ஓரு அத்தியாயத்திற்கு மேல் அவளுக்கு இடமில்லை. ஆனால் அபிதாவின் சக்கு என்கிற சகுந்தலை பெரும் பாத்திரமாக வளர்கிறாள். நொண்டி குருக்கள் பெண்ணாக அவளுடைய குறுகுறுப்பும், திருமண வாழ்வும், திருவேல நாதனை தழுவிக்கொண்டு இறக்கும் அவளுடைய மரணமும் என விரிகிறாள். லோலிதாவிடம் அண்ணபெல்லின் சாயலைத்தான் தேடுகிறான் ஹம்பர்ட். அபிதா சக்குவின் மகளாக, இழந்த நினைவுகளின், கடந்த வாழ்வின் உருவாக அப்படியே வருகிறாள். ஹம்பர்ட் லோலிதாவை அடையும் முயற்சியில் அவளுடைய அன்னையும், அழகியும், செல்வந்தருமான சார்லட்டை திருமணம் செய்து கொள்கிறான். அபிதாவில் முதலாளியின் மகள் ‘சாவித்திரியை’ திருமணம் செய்து புலிக்கூண்டுக்குள் வாழ்வது போல் இருவரும் வாழ்கிறார்கள். சார்லடின் மரணத்திற்கு கூட ஏதோ ஒரு வகையில் ஹம்பர்ட் காரணமாயிருக்கிறான். அவனுக்கு அவளுடைய பணத்தை பயன்படுத்துவதிலோ செலவழிப்பதிலோ எந்த நாணமும் இல்லை. ஆனால் அபிதாவின் நாயகன் முதலாளியின் மகளை திருமணம் செய்து கொண்டதை எண்ணி வெட்கி தலை குனிகிறான். அவனுக்கு ‘நாணயம்’ பறிபோன உணர்வே மேலிடுகிறது.
சார்லட் ஹம்பர்ட்டின் பிறழ் காமத்தை அறிந்து முகாமில் இருக்கும் மகளை எச்சரிக்க முயல்கிறாள். சாவித்திரி தனது கணவனின் பிறழ் காமத்தை அறிந்து ஆத்திரம் கொள்கிறாள். தொடுத்த பூக்களை எல்லாம் அபிதாவிற்கு சூட்டி மகிழ்கிறாள். இரு நாவல்களிலும் ஊழின் நெசவு வலுவாக வெளிப்படுகிறது. ஹம்பர்ட்டின் மீது ஆத்திரம் கொண்டு மகளை எச்சரிக்க கிளம்பும் போது விதிவசத்தால் விபத்தில் இறந்து போகிறாள் சார்லட். நாவலின் இறுதியில் பூவிதழ் விழ விபத்தில் அபிதா இறந்து போகிறாள்.  
ஒரு பொறி, தன் மகளை ஒத்த வயதுடைய பெண்ணின் மீதான காமத்தை எப்படி எதிர்கொள்வது? இதுவே இருவரையும் கிளர்த்துகிறது. நவீன மனமும், இந்திய தத்துவங்களில் திளைத்த மரபான மனமும் இப்படி உதித்த அசந்தர்ப்பான காமத்தை எப்படி எதிர்கொள்கின்றன. லோலிதாவுடன் பயணிக்கிறான், வாழ்கிறான், உறவு கொள்கிறான், அவளை தன் கட்டுபாட்டில் வைத்துகொள்ள முயல்கிறான். லோலிதா அவனிடமிருந்து தப்பி க்வில்டியை அடைகிறாள். அவன் விதவிதமான பாலியல் தேவைகளுக்கு அவளை நிர்பந்திக்கிறான். லோலிதாவை மீட்க வரும் மீட்பரான க்வில்டி ஹம்பர்டை விட இழிவானவனாக இருக்கிறான். ஆனால் அபிதாவின் இரட்சகனான அம்பியோ பெரு மதிப்பிற்குரியவன், உழைப்பால் உயர்ந்தவன், தன்னை போல் ஒருவன் அல்லது தன்னை விடவும் மேலானவன், அபிதாவிற்கு உகந்தவன் எனும் எண்ணம் கதை சொல்லிக்கு திகழ்கிறது. சிற்றன்னையும் தந்தையும் சம்மதிக்க அம்பியுடன் மோட்டார் சைக்கிளில் செல்வதே அவளுக்கு கிடைத்த உச்சபட்ச கிளர்ச்சி.
ஹம்பர்ட் – லோலிதா உறவு ஐயமும், வன்முறையும், சுரண்டலும் நிறைந்தது. அவள் அவனிடமிருந்து தப்ப விழைகிறாள். தப்பவும் செய்கிறாள். அவளை தேடி அலைகிறான். இறுதியில் மிக சாதாரண வாழ்வில் அவளுடைய பதின்மத்தை இழந்து, அழகை இழந்து வயிற்றில் பிள்ளையோடு வாழ்கிறாள். லோலிதா நாவலின் உயரத்திற்கு இந்த பகுதி மிக முக்கியமான காரணம். அத்தனை அலைச்சலுக்கு பின் அவனுக்கு காத்திருப்பது ஒரு பெரும் கனவின் கலைதல். அந்த கனவு கலைந்த பின்னும் காதல் எஞ்சியிருக்கிறது என்று புரிந்து கொள்கிறான். அந்த கனவை அவனிடமிருந்து தட்டிப்பறித்த க்வில்டியைத் தேடி பழி தீர்க்கிறான் ஹம்பர்ட். அபிதாவில் கதைசொல்லியின் கனவு கலைத்துவிடாமல் ஊழால் பாதுகாக்கப் படுகிறது. அழகின்மையை, அதன் வீழ்ச்சியை, சாதாரணத்தை அறிவதற்கு இடமின்றி அபிதா மரித்துபோகிறாள். கற்பனாவாத உச்சம். லோலிதா ஒரு பாரபோலா என்றால் அபிதா ஒரு வட்டம். இங்கே சக்குவிற்கு நிகழ்ந்தது அபிதாவிற்கும் நிகழ்கிறது. கதை சொல்லியும் அம்பி, அபிதாவின் மாமனும் அம்பி என்றொரு இணை வைப்பு வருகிறது. இரு அம்பிகளுமே நினைவுகளின் கரிசனத்தில் எஞ்சிய நாட்களை உயிருடன் கழிக்க சபிக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள்.  
லோலிதாவில் ஹம்பர்ட் லோலிதாவின் அழகை இழந்த பின்னும் தன்னுள் அவள் மீதான காதல் எஞ்சி இருக்கிறது என்று உணரும் தருணம் முக்கியமானது. அதன் பொருட்டே அவன் பழி தீர்க்க போகிறான். அவனுடைய காமம் காதலாக உன்னதமாகிறது. அபிதாவில் அபிதா கடந்தகால சக்குவாக ஆகி, சக்கு அபிதா, சாவித்திரி என எல்லாம் மறைந்து அன்னையின் வடிவாகிறார்கள். ஒரு கட்டத்தில் அவருடைய காமத்திற்கு அபிதாவே தேவையில்லை என உணர்கிறார். கண்ணிக்குளம், எண்ணெய் குளியல் என மீள் பிறப்பெடுத்து வருகிறார். இவ்விடங்கள் அபிதாவிற்கு ஒரு இந்தியத்தன்மையை, ஆன்மீக பிரதியாக வேறு பொருளையும் அளிக்கிறது. கரடிமலை, சிவலிங்கத்தை கட்டிக்கொண்டு மரணித்த சக்கு, நொண்டிக் குருக்கள் என எல்லாமே குறியீடுகளாக வாசிக்க சன்னமான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி அளிக்கிறது.
நபகோவின் கேள்வியை தனதாக்கிக்கொண்டு நபகோவ் அளித்த விடையிலிருந்து, தனது பண்பாட்டு பின்புலத்தில் முற்றிலும் வேறோர் விடையை நோக்கிப் பயணித்திருக்கிறார் லா.ச.ரா. ஆனால் ஒரு இலக்கிய ஆக்கமாக எனக்கு லோலிதா அபிதாவைக் காட்டிலும் பலவகையில் மேம்பட்டதாக தோன்றுகிறது. பண்பாட்டு காரணிகள், நெருக்கடிகள் கூட காரணமாய் இருக்கலாம். காமம் கொண்ட மனதின் தீவிரம், கதை முடிச்சு, காமத்தின் அலைக்கழிப்பு, லோலிதாவின் சித்தரிப்பு என்று பெரும் வாழ்வை சித்தரித்து காட்டி இருப்பார். ஆனால் க்வில்டியை அதீத பிறழ்வு கொண்டவனாக காட்டி தனது பிறழ்வை சிறிதாக்கி நியாயபடுத்தி தப்பிக்கும் யுத்தி நெருடலாக இருக்கிறது. அவ்விதத்தில் லா.ச.ராவின் கற்பனாவாத முடிவு, ஒருவகையில் தப்பித்தல் என்று தோன்றினாலும் கூட, நேர்மையாக உள்ளதாக தோன்றுகிறது.

1 comment:

  1. 1)கட்டுரை நன்றாக வந்திருக்கிறது, இது மாதிரி ஒப்பிட்டு பேசும்போது இன்னும் நெருங்கி பார்க்க பெரிய லென்ஸ் கிடைத்துவிடுகிறது.

    2) Razor - Nabokov
    Just Lather, That's All- Hernando Tellez
    One of These Days- Marquez இந்த மூன்று சிறுகதைகளையும் வாய்ப்பிருந்தால் வாசித்துப்பாருங்கள்,

    ReplyDelete