Sunday, May 6, 2018

நானும் என் படைப்பும் - ஏன் எழுதுகிறேன்?

(இந்த மாத கணையாழியில் வந்த கட்டுரை)

பள்ளிக்கு செல்லத் துவங்கிய முதல் நாளில் இருந்தே அன்றைய நிகழ்வுகளை அம்மாவிடம் ஒப்புவிக்கும் வழக்கம் எனக்குண்டு. நிகழ்வுகளின் ஊடாக கதைகளும் இயல்பாக எப்படியோ நெய்யப்படும். சித்ரா மிஸ்சும் ஹனி மிஸ்சும் பாத்திரங்களாக இருக்கும் தினத்தில் நடனமிடும் பல்லிகளும் பேசும் மேசைகளும் கூடச் சேர்ந்துகொள்ளும். அம்மாவிடம் சொல்லும் கதைகள் திட்டமிட்டு யோசித்து உருவாக்கியவை அல்ல. சொல்லச் சொல்ல ஊற்றெடுப்பவை. இன்றுவரை என் கதையின் வடிவம் என இதையே சொல்லலாம். ஒரு சிறிய பொறி அல்லது காட்சி அல்லது கனவு வருடக்கணக்காக ஆழத்தில் துயில் கொள்ளும், ஏதோ ஒன்று விழித்து மேலெழும்பி என்னை வெளிக்கொணர் என கோருகிறது. அதை மட்டுமே வழித்துணையாக கொண்டு, தீர்மானமான இலக்கற்ற வெளியில் துழாவிச் சென்று எங்கோ ஒரு புள்ளியில் இருள் நீங்கும் ஒளியை கண்டு கொள்கிறேன். எழுதி முடித்த பின்னரே நான் கதையாக்குகிறேன். 

நினைவில் அமிழ்ந்த ஒரு மனிதரைப் பற்றி எழுதத் துவங்கி அவர் மீது வேறு பல மனிதர்களின் சாயை கவிந்து முற்றிலும் வேறொருவராக உருமாறுவதை ஆச்சரியத்துடன் காண்கிறேன். ‘அம்புப் படுக்கை’ கதையில் வரும் வைத்தியர் தாத்தா- எனது அப்பா வழி தாத்தாவிற்கு துண்ணூறு கொடுத்து நோய் தீர்க்கும் வழக்கம் எல்லாம் இல்லை. அடிகளார் போல் நீண்ட தாடியுடன் மந்திரித்து துண்ணூறு பூசியவர் அம்மா வழி தாத்தா. ‘காளிங்க நர்த்தனத்தின்’ மாணிக்கம் நானறிந்த நான்கு நபர்களின் கலவை. ஒரு மனிதனுக்குரிய தோற்றமும், வெவ்வேறு மனிதர்களின் இயல்புகளும் எப்படி ஒரு பாத்திரத்தில் உருக்கொள்கிறது என்பது பெரும் புதிர். தொடர்பற்றவையும் தொடர்புள்ளவையும் என எதையெதையோ மனித அகம் தொடுத்து விளையாடுகிறது. இந்த சுவாரசியம், இந்த விளையாட்டு, இந்தப் புதுமை என்னை எழுத வைக்கிறது. கதைகள் வாசிப்பதும் எழுதுவதும் வாழ்வை சுவாரசியமாக ஆக்குகின்றன. வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்ள எனக்கு கதைகளை விட மேலான வேறு காரணங்கள் ஏதும் அகப்படவும் இல்லை.   

வாழ்க்கையும் இலக்கியமும் என்னை சம அளவில் பாதிக்கின்றன. அப்படிச் சொல்வதேகூட அபத்தம்தான், தாக்கம் நிகழ வேண்டும், நிகர் வாழ்வு வாழ வேண்டும் எனும் விழைவுதானே வாசிக்கவே வைக்கிறது. ‘வாசுதேவன்’ என்னை எழுத்தாளன் ஆக்கிய கதை. என்னை என் கனவுகளில் துரத்திய ‘வாசுதேவனின்’ முகத்தை எழுதித்தான் கடந்தேன். காஃப்காவின் க்ரேகர் சம்சாவை அறிந்து கொண்ட பிறகுதான், அவன் கனவிலிருந்து கதைக்குள் குதித்து எனக்கு மீட்பளித்தான். அவனை உயிர் பிழைக்க வைக்க முடியவில்லை என்றாலும் கதை வழியாக வெளிப்பட்டு தன்னை அவன் ‘அமரனாக’ ஆக்கிக் கொண்டான். புனத்தில் குஞ்சத்துல்லா எழுதிய நாவல் ‘கன்யா வனம்’, அதன் முன்னுரையில் ‘காலமும் காமமும் மனிதர்களை எப்போதும் அலைக்கழிக்கின்றன’ என்று எப்போதோ வாசித்தது, அரியக்குடி கோவிலில் புடைப்புச் சிற்பமாக பிணைந்து கிடக்கும் ரெட்டை நாகங்களை கண்டதும் நினைவில் எழுந்தது. இந்திய குறியீட்டுவியலில் காலமும் காமமும் நாகமாகின்றன. அந்த நாகத்தில் ஏற முயன்று வழுக்கியவர்கள் வாசலில் இருக்க, நாகத்தில் உறங்குபவன் உள்ளிருக்கிறான், ஒரு கள்ளம் கபடமற்ற பாலகன் காலமற்ற வெளியில் அதன் தலையில் ஏறி நின்று ஆடுகிறான். காமம் பிரபஞ்சத்தின் அளவுக்கே, பிறிதொருவர் இல்லாத நிலைக்கு விரியும்போது காமமற்றவனாகவும் ஆகிறான். அந்தக் கதை அங்கேயே உருபெற்றது. கதைமாந்தர்கள் எல்லோரும் பின்னர் சேர்ந்து கொண்டார்கள். ஆர்வெல்லின் 1984 நாவலுக்கு நூதன முறையில் புத்தக அறிமுகம் எழுதலாம் என்று எழுத ஆரம்பித்து இரண்டாவது பக்கத்தில் கதைசொல்லியின் குணாதிசயம் புலப்பட துவங்கியதுமே கதையாக மாறிவிட்ட கதை தான் 2016. 

நானும் என் அண்ணனும் எங்கள் சொந்த ஊர் திண்ணையில் அமர்ந்து ‘ட்ரேட்’ ஆடியபோது தாய உருளையில் ‘ஆறு’ விழுந்த போதிலும், ஐந்துதான் விழுந்தது என்று சிரமட்டார் காளி மீது பொய் சத்தியம் செய்து பயந்து நடுங்கிய கதையை எழுத வேண்டும் என துவங்கியதே ‘குருதிச் சோறு’ ஆனால் இரண்டாம் பத்தியிலேயே கதை தன் போக்கில் வளர்ந்து கட்டற்று சென்றது. முதல் மற்றும் மூன்றாம் பகுதியை ஒரே நாளில் எழுதி முடித்தேன். ஏறக்குறைய ஓராண்டிற்கு பின் இரண்டாம் பகுதியை எழுதினேன். வாழ்வளித்த முகமறியாத மூதாதைக்கு செலுத்தும் நன்றியாக கதை மாறிவிட்டிருந்தது. 

‘பொன் முகத்தை பார்ப்பதற்கும்...’ ஏறத்தாழ என் கதைதான். எனக்கும் என் பிள்ளைக்குமான பிணைப்பை ஊடறுக்கும் கைபேசியின் மீதான வருத்தம். பெரியவர் அழுவதோடு முடிந்திருக்க வேண்டிய கதை, மன்னை சாதிக், கல்பனா அக்கா, சாம் ஆண்டர்சன்களின் புண்ணியத்தால் வேறொரு முடிவை எட்டியது. தொழில்நுட்ப படையெடுப்பை திறன் கொண்டும் எதிர்கொள்ளலாம், அல்லது கோமாளியாக்கியும் தன் இருப்பை தக்க வைத்துகொள்ளலாம். ‘திமிங்கிலம்’ ஒரு போட்டிக்காக ஆங்கிலத்தில் எழுதிய அறிவியல் புனைவு. மனிதர்கள் எரிபொருளாக ஆகும் சாத்தியத்தை அச்சத்தை மையமாகக் கொண்ட ஒரு கனவின் மீது எழுதப்பட்ட கதை. ஆனால் எங்கோ நிறைவடையாமல் தொக்கி நின்றது. எழுதி முடிக்காத மற்றொரு கதையில் இருந்து ஜெமீமா எனும் பாத்திரமும், பிராகிருதிஸ்தான் எனும் கற்பனை நிலப்பரப்பும் இந்தக் கதையுடன் கலந்ததும் இதன் வண்ணமும் வீச்சும் மாறியது. தொன்மங்கள் மீது பெரும் காதல் உண்டு. தொன்மங்கள் மனித மனங்களின் கூட்டு நெசவு. மகாபாரதத்தின் ‘சுவர்க்க ஆரோகண பருவத்தின்’ தாகத்தில் உருவான கதை ஆரோகணம். ‘குருதி சோறு’ கதையின் தொன்மம் நானறிந்த பல்வேறு நாட்டார் கதைகளின் கலவையில் உருவானது. ‘காளிங்க நர்த்தனமும்’ கூட ஒரு தொன்மத்தை சமகாலத்தில் பொருள் கொள்ளும் முயற்சி என சொல்லலாம். ‘பேசும் பூனையை’ கூட ஒரு தேவதை கதையாக வாசிக்க முடியும். 

என் கதைகளில் சில கேள்விகளை பின்தொடர்ந்து செல்கிறேன். எது விடுதலை? அதை அடைவது எப்படி? தீர்மானமான விடைகளை அடையவில்லை என்றாலும் பயணம் தொடர்கிறது. வஞ்சமும் குரூரமும், பேரன்பும், தியாகமும் என எல்லாமும் ஒரே மனிதனுள் எப்படி குடிபுகுகிறது? கணக்கற்ற ஆச்சரியங்கள் நிறைந்த வாழ்வில் சிலவற்றை புனைவுகளாக்கி விசாரணைக்கு உட்படுத்துகிறேன், அல்லது அந்த விந்தைக்கும் குரூரத்திற்கும் சாட்சியாகிறேன். ஒரு வாசகனாக நிலமற்ற காஃப்காவையும் நிலத்தின் கரிப்பை உணர்த்தும் கி.ரா.வையும் நேசிக்கிறேன். கதைக்காரனாகவும் நான் என்னை குறுக்கிக் கொள்ள விரும்பவில்லை. நிலத்தின், அதன் மாந்தர்களை கதையாக்கும் அதே நேரத்தில் புதிய நிலத்தை கற்பனையில் உருவாக்கியோ அல்லது நிலமே அற்ற வெளியிலோ கதைகளை உலவ விட விழைகிறேன். 

முதல் தொகுப்பிற்கு பின்பான கதைகள், ‘அம்புப் படுக்கை’ தொகுப்பின் பொதுவான விசனங்களில் இருந்து தற்காலிகமாகவேனும் திசை மாறி இருக்கிறது. அதிகமும் குறுங்கதைகள், அதுவும் எழுத்து வாழ்வின் அபத்தங்களைச் சொல்லும் பகடி கதைகளை எழுதி வருகிறேன். இவை ஏதோ ஒரு வகையில் அகச் சமநிலையை ஏற்படுத்த முயல்கிறது. கவிதைக்கு நெருக்கமான வடிவில் உள்ள கதைகள் எனச் சிலவற்றை குறிப்பிடலாம். அல்லது கவிதையாக முடியாமல் தோற்றவை என்றும்கூட. 

கதைகளே அதிகாரத்தை உருவாக்குபவை, நிலைநிறுத்துபவை, அவை நிறுவிய அதிகாரத்தை கதைகளைக் கொண்டுதான் எதிர்கொள்ள முடியும். கதைகளே அதிகாரத்தை உருக்குபவை, நிலைகுலையச் செய்பவையும் கூட. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் கதை ஓர் அரசியல் செயல்பாடு. ஆகவே கதை எழுதுவது எனக்கு சமூக கடப்பாடாகவும் ஆகிறது. அவை நம் நனவிலியில் பலவீனமாகவேனும் அலையெழுப்பிச் செல்கின்றன. 
கதை ஒரு ஆன்மீகச் சாதனையும்கூட. எல்லாவற்றினிலும் மேலாக, கதைகளினூடாக நான் அமரனாகிறேன் எனும் நம்பிக்கை எனை எழுதச் செய்கிறது. என்றேனும் கதைகளில் முழு பூஜ்ஜியத்தை எழுதி விட வேண்டும், ஒருவேளை அதற்கு பிறகு கதை எழுதாமல் போகவும் கூடும். 
அதுவரை எனக்கு நானே சொல்லிகொள்வது. 
ஆகவே கதை புனைக. 

No comments:

Post a Comment