Tuesday, June 16, 2020

பற்றி எரியும் தேர்- எம்.கோபாலகிருஷ்ணனின் பிறிதொரு நதிக்கரை சிறுகதை தொகுப்பை முன்வைத்து

(சிற்றில் எம்.கோபாலகிருஷ்ணன் கருத்தரங்கிற்காக எழுதப்பட்ட கட்டுரை)


எம். கோபாலகிருஷ்ணன் முதன்மையாக அவருடைய ‘மணல் கடிகை’ நாவலுக்காகவே அறியப்படுபவர். அண்மையில் வெளிவந்த அவருடைய மனைமாட்சி நாவலும் நல்ல கவனம் பெற்று வருகிறது. நாவலாசிரியராகவே நிலைபெற்ற காரணத்தினால், அவருடைய சிறுகதை உலகம் அதிகமும் கவனிக்கப்படவில்லை இதுவரை மூன்று தொகுதிகள் வெளியாகியுள்ளன. அவருடைய முதல் சிறுகதை தொகுப்பான ‘பிறிதொரு நதிக்கரை’ 15 கதைகளை கொண்டவை. யதார்த்த கதைகள், கனவுத் தன்மை கொண்ட கதைகள், உளவியல் குறியீட்டு கதைகள் என வெவ்வேறு வகை மாதிரிகளை முதல் தொகுப்பிலேயே எழுதியுள்ளார்.



முன்னுரையில் இக்கதைகள் அனைத்துமே ‘ஏதோ ஒருவகையில் நான் அறிந்தவர்களின் கதைகள்தான்’ என சொல்கிறார். இத்தொகுதியின் கதைகளை கூறுமுறை காரணமாக இரண்டாக வகுக்கலாம். ‘இலையுதிர்காலம்’ ‘இருப்பு’ ‘விளிம்பில் நிற்கிறவர்கள்’ ‘மல்லி’ ‘விடுதலை’ ‘ரசவாதம்’ ‘பௌர்ணமி வாக்கு’ ‘லச்சம்’ ஆகிய கதைகள் யதார்த்த வாழ்வை சொல்லும் கதைகள். ‘தேர்’ சற்றே மாறுபட்ட யதார்த்தத்தை சொன்னாலும் கூட அக்கதையையும் இவ்வரிசையிலேயே வைக்கலாம். ‘கோட்டை’ ‘ஒற்றை சிறகு’, ‘பிறழ்வு’, ‘வலியின் நிறம்’, ‘கையில் அடங்காத தாமரை’, ‘பிறிதொரு நதிக்கரை’ போன்ற கதைகள் கனவுத்தன்மையும், அமானுஷ்யமும் கொண்ட கதைகள். இருவிதமான கதைகளுக்கு இடையே ஊசலாடிக்கொண்டிருந்தபோது, ‘மணல் கடிகை’ வழியாக எம். கோபாலகிருஷ்ணன் தன்னை வலுவான யாதார்த்தவாத கதைசொல்லியாக நிறுவிக்கொண்டுவிட்டார், ஆனால் இத்தொகுதியில் யதார்த்தத்தை உதறி அவர் எழுதியிருக்கும் கதைகளே தொகுதியின் சிறந்த கதைகளாக விளங்குகிறது. ‘தேர்ந்தெடுக்காத அந்த சாலையில்’ அவர் பயணித்திருந்தால் என்னவாக இருந்திருக்கும் என்பது சுவாரசியமான கேள்வி. இனியும் கூட அவர் அத்திசையை தேரவேண்டும் வேண்டும் எனும் அவா எனக்கிருக்கிறது.   



‘கோட்டை’ இரண்டு வெவ்வேறு காலங்களிலும், அதையொட்டி அகம்-புறம் என இரண்டு யதார்த்தங்களிலும் ஒருசேர பயணிக்கும் கதை. இவ்வகையான கதைகளில் கோபாலகிருஷ்ணனுக்கு கவிதை பரிச்சயம் கூடுதல் ஆழத்தை அளிக்கிறது. அவருடைய மொழி ஓசைநயத்துடன் அபாரமாக வெளிப்படுகிறது. கடந்தகால அரச  குமாரன் பழி தீர்க்க அதே கோட்டைக்கு வரும்போது அது ஒரு அருங்காட்சியகமாக மாறியிருக்கிறது. சுவாரசியமான கற்பனை. எனினும் ஒரு பரிசோதனை முயற்சி என்ற அளவில் கதை நம்மைப் பெரிய அளவில் தொந்திரவு செய்யாமல் நின்றுவிடுகிறது.  ஆக்ரோஷமான குதிரையின் படத்தை மாற்றி புல்மேயும் குதிரையை மாட்டச் சொல்கிறான் மனோகரன். ஒருவகையில் அந்த படத்தில் உள்ள குறி விறைத்த ஆக்ரோஷமான குதிரைதான் இறுதியில் வருகிறது. யதார்த்தத்திற்கும் புனைவிற்குமான ஊடுபாவு ஒரு வித மயக்கத்தை இக்கதைக்கு அளிக்கிறது.



‘ஒற்றை சிறகு’ இத்தொகுதியின் சிறந்த கதைகளில் ஒன்று. நவீனத்துவ எழுத்தின் தனி மனிதனை, அவனுடைய அக அவசங்களை பேசுவது. மரணத்திற்கு முன் ஒரு பார்வையாளனாக கையறு நிலையில் நிற்கும் மனிதனின் கதை. பறவை, குழந்தை என இரண்டு மரணங்களுக்கு சாட்சியகிறான். மறுபக்கம் அவன் ஒரு குழந்தை பிறக்க காத்திருக்கிறான். இக்கதையில் வரும் கனவுப் பகுதி அபாரமானது. பறவையும் குழந்தையும் முயங்கி அவனுடைய கனவில் எழுகிறார்கள். குப்பைத்தொட்டி குழந்தையின் சித்தரிப்பு வாசகனை மிகவும் தொந்திரவு செய்யக்கூடியது. ஒற்றைச் சிறகு என்பது அவனுள் துடித்து கொண்டிருக்கும் ஒன்றாக, அவனுடைய குற்ற உணர்வாக, அல்லது நுண்ணுணர்வாக பரிணாமம் கொள்கிறது. 



பிறழ்வு’ ஒரு சாபத்தை பின்தொடர்ந்து செல்லும் கதை. ‘கோட்டை’ ‘பிறிதொரு நதிக்கரை’ ஆகிய கதைகளுடன் ஒப்பிட்டு வாசிக்கலாம். இதிலும் நிகழ்கால- கடந்தகால முயக்கம் வெற்றிகரமான உத்தியாக பயன்படுகிறது. ‘ஒற்றை சிறகு’ போலவே குழந்தைகளின் துர்மரணம் நிலையழியச் செய்கிறது. மொழிரீதியாகவும் இக்கதைகளுக்குள் ஒரு ஒற்றுமை உள்ளது.







‘வலியின் நிறம்’ யதார்த்தமும் கனவும் கலக்கும் மற்றொரு அமானுஷ்ய கதை. ‘ஒற்றை சிறகில்’ கனவிற்கு பின்பான விழிப்பில் கையில் சிறகு எஞ்சியிருப்பதை போல் இக்கதையின் இறுதியில் உயிர்பிழைத்து மீண்டதும் சம்பத்தின் மூத்திரம் தோய்ந்த பாயில் அவனுடைய தந்தை அளித்த துவரம் பருப்பு அளவிலான குளிகைகள் உள்ளன. உண்மைக்கும் கனவிற்குமான எல்லைகோட்டை அழிப்பதை இக்கதைகள் நோக்கமாக கொண்டிருக்கின்றன. கதை என்பதை காட்டிலும் ஒரு அனுபவம் என சொல்லலாம். பச்சோந்தி தைலத்தின் விவரிப்பு நுண்மையாக உள்ளது. எம். கோபாலகிருஷ்ணன் இக்கதையிலும் வேறு பல கதைகளிலும் தந்தை மகன் உறவு அழகாக கையாளப்பட்டிருக்கிறது. பெரும் முரண், மோதல் ஏதுமின்றி சீரான உறவு கொண்டவர்களாகவே வருகிறார்கள். மணல் கடிகையில் வரும் திருவின் தந்தைக்கூட அத்தகையவரே.



“கையில் அடங்காத தாமரை” யதார்த்த பாணியில் இருந்து விலகிய உளவியல் அம்சம் கொண்ட கதை. மனிதனுக்கும் தன் நிழலுக்குமான போராட்டம் என்பது உலக இலக்கியத்திலும் தொன்று தொட்டு கையாளப்படும் கரு. ராமாயணத்தில் கடலை கடக்கும் அனுமனின் நிழலை இலங்கையின் காவல் அரக்கி சிம்ஹிகா விழுங்க முனையும் தொன்மம் நாம் அறிந்ததே. தன் ஆளுமையின் ஒரு பகுதியை நிழலாக உருவகித்தல் ஒருவகையில் இதிகாசங்களில் இருந்து துவங்குகிறது. அண்மைய காலங்களில் கார்த்திகை பாண்டியனின் ‘நிழலாட்டம்’ தூயனின் ‘இருமுனை’ போன்ற ஆக்கங்களில் கூட பிளவாளுமையின் சிக்கல் நிழல்களுடன் தொடர்புப்படுத்தப்பட்டு எழுதப் பட்டுள்ளது. இக்கதையை தனித்து காட்டுவது ஒளிரும் தாமரை எனும் படிமம் தான். ஒளிரும் தாமரை இந்திய மெய்யியலில் குறியீட்டு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. கைக்கு அடங்காத தாமரை ஞானத்தின் குறியீடாக சட்டென உருபெறுகிறது. ஏறத்தாழ எதிரியாக தன் நிழலை பாவித்து, அதனிடமிருந்து தன்னை மீட்டுக்கொள்ள போராடும் கதைசொல்லி தனது நிழலின் கருமையை, அதன் இருளை தன்னுடைய இன்றியமையாத அம்சமாக நோக்கத் துவங்குகிறான். நிழலின் வருகைக்காக களித்திருக்கிறான். ஒருவகையான அமானுஷ்ய தளத்தை கதை எட்டுகிறது. இக்கதையிலும் உண்மைக்கும் புனைவுக்குமான விளையாட்டு தொடர்கிறது. ஒருகணம் சாமந்தியாகவும் மறுகணம் தாமரையாகவும் தோன்றி மறைந்து நிழலின் இருப்பை உணர்ந்து கொள்கிறான். கதையின் தலைப்பு மற்றும் அது அளிக்கும் இந்த அமானுஷ்ய அனுபவம் காரணமாக இத்தொகுதியின் சிறந்த கதைகளில் ஒன்றாக தோன்றுகிறது.



‘பிறிதொரு நதிக்கரை’ தந்தை மற்றும் மகனின் இருவேறு காலகட்டங்களின் அமானுஷ்ய அனுபவங்களை கதையாக்குகிறது. இருவருமே நீரில் மூழ்காமல் மீட்கப்பட்டவர்கள். தங்கள் மீட்பரின் முகத்தை நினைவில் எழுப்ப முயல்பவர்கள். நதிக்கரை என்பதும் நதி என்பதும் மரணம் மற்றும் அதற்கு அப்பாலான வாழ்வை குறிப்பதாக இந்திய மரபு கருதுகிறது. கதைக்குரிய முரண் ஏதும் இல்லையென்றாலும் ஆன்மீக அனுபவத்தை அளிக்கிறது. பிறிதொரு நதிக்கரை என்பது கவித்துவமாக பல அடுக்குகளில் பொருள் அளிப்பது. பத்து வயதில் தான் உணர்ந்த அற்புதத்தை முப்பது வயதில் உணர்கிறான் மகன். அவனுடைய மகன் உணர எத்தனை காலம் ஆகுமோ எனும் கேள்வி கதையின் மையம்.



இனி தொகுப்பில் உள்ள யதார்த்த கதைகளை நோக்கலாம். இவ்வரிசையிலான கதைகளில் ‘மல்லி’ மற்றும் ‘பௌர்ணமி வாக்கு’ ஆகிய கதைகளை சிறந்தவை என சொல்லலாம். ‘மல்லி’ திருப்பூருக்கே உரிய கதை. பனியன் நிறுவனத்தில் வேலைக்கு வரும் இளம் பெண்ணுக்கு மாதவிடாய் உதிரப்போக்கு ஏற்படுகிறது. அவள் சந்திக்கும் நிர்பந்தங்களை, எதிர்கொள்ளும் அவமானங்களை, கேலிகளை, நெருக்கடிகளை காட்சிபூர்வமாக சித்தரிக்கிறார். கழிவறையின் அருவருப்பையும் சங்கடங்களையும் கச்சிதமாகக் கடத்தும் சிறந்த கதைகளில் ஒன்று. மல்லியின் தொடர்ச்சியை மணல் கடிகை நாவலில் நாம் கண்டுகொள்ள முடியும். சம்பங்கி கைமடிக்கும் பெண்ணாக அவமானங்களுடன் துவங்கும் அவளுடைய பயணம் விடாப்பிடியான போராட்டத்தால் தன் சாதிய எல்லையை மீறி நேர்மையாக ஒரு கவுரவமான இடத்தை அடைகிறாள்.  பெண்கள் மட்டுமே பணிபுரியும் நிறுவனத்தை கட்டி எழுப்புகிறாள்.



‘பௌர்ணமி வாக்கு’ சாமியாடிக்கும் பம்பை வாத்தியக்காரனுக்கும் இடையிலான நுட்பமான அரசியலை பேசுகிறது. யார் யாரை சார்ந்திருக்கிறார்கள்? யார் யாரை வெல்கிறார்கள்? உண்மையான அதிகாரம் எங்கிருக்கிறது? இப்படியான கேள்விகளை எழுப்பும் கதை. சாமியாடி பாத்திரமும் கூட மணல் கடிகையில் அய்யா ஆவி இறங்கும் கண்ணம்மாவுடன் ஒப்பிடத்தக்கதே. ‘லச்சம்’ எதிர்வீட்டு  கிழவியின் மரணம் தன் வீட்டு அன்றாடத்தை பாதிப்பதைப் பற்றிய கதை. புடவையை நெய்து முடிக்க வேண்டிய நிர்பந்தம் ஆனால் அதை தொடர முடியாத சூழல். இந்த சங்கடத்தை கதையாக்கியிருக்கிறார். பிறரின் மரணம் எப்படி பொருள்படுகிறது எனும் கோணத்தில் இக்கதையை வாசிக்கலாம்.  



தொகுப்பில் மீதமிருக்கும் ‘இலையுதிர் காலம்’, ‘இருப்பு’. ‘விளிம்பில் நிற்கிறவர்கள்’ ‘விடுதலை’  ‘ரசவாதம்’  மற்றும் ‘தேர்’ ஆகிய கதைகளை ஒரே வகையானவையாக அடையாளப்படுத்தலாம். இவை அனைத்துமே வீழ்ச்சியின் சித்திரத்தை சொல்பவை. மனிதர்களின் வீழ்ச்சியை சித்தரிக்கும் கதைகள் இரண்டுவிதமான அடிபப்டை நம்பிக்கைகள் சார்ந்தவை. மனிதன் நல்லவன், நம்பத் தகுந்தவன் எனினும் காலமாற்றமும் தற்செயலும், சூழலும் அவனுடைய வாழ்வில் இடையீடு செய்து அவனை முழுமையாக ஆட்கொண்டு சிதைத்துவிடுகிறது என்பது ஒரு பார்வை. மற்றொரு பார்வை மனிதன் அடிப்படையிலேயே பேராசையும் பொறாமையும் கீழ்மைகளையும் கொண்டவன், ஆகவே நம்பத்தகாதவன். அவனுடைய வீழ்ச்சிக்கு காலமாற்றத்தின் அளவிற்கே அவனுடைய இயல்பும் காரணம். எம். கோபாலகிருஷ்ணனின் கதை மாந்தர்கள் அதிகமும் முதலாம் வகையைச் சேர்ந்தவர்கள். அடிப்படையில் நல்லவர்கள். காலத்தால் வீழ்த்தப்பட்டவர்கள். இவ்வகை கதைகள் சிக்கலான சிடுக்கான கதைப் பின்னல்கள் கொண்டவை அல்ல, நம்மை தொந்திரவு செய்யும் அறக் கேள்விகளை எழுப்புவதில்லை. ஆனால் நேர்மையான சித்தரிப்பின்  வழியாக வலுபெறுகிறார்கள்.  இந்த ஆறு கதைகளும் எதிர் நவீன வாழ்வை விமர்சனபூர்வமாக அணுகுபவை என சொல்லலாம். நவீன வாழ்வின் வசதி பெருக்கம், வாய்ப்பு பெருக்கம், நகர்மயமாதல் ஆகியவற்றின் உப விளைவுகளை பற்றி பேசுபவை.  நவீன வாழ்வு முந்தைய காலத்து பெரும் மனித திரளின் வாழ்வாதராத்தை கால்வாதியாக்கியபடி விசையுடன் பாய்ந்து முன்செல்கிறது. காலத்துடன் பொருத்திக்கொள்ள முடியாமல் காலவதியானவர்களின் கதைகள் என இவற்றை சொல்லலாம். இந்த கதைகள் முந்தைய தலைமுறையினரின் வீழ்ச்சியை கரிசனத்தோடு நோக்குபவை.



 ‘இலையுதிர் காலம்’ திருப்பூர் நகரம் நவீனம் அடைகிறது. சாயப்பட்டறைகள், கம்பனிகள் வருகின்றன. வேளாண்மை நோடிகிறது. மாறி வரும் உலகிற்குள் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியாத குதிரைவண்டி கிழவரின் கதையை சொல்கிறது. நிலமும், கிணறும் பயனற்று பாழாய் போனதைப் போல்,  இறுதியாக பள்ளிக் குழந்தைகளை கொண்டு விடும் குதிரை வண்டியும் பயனற்று போவதுடன் நவீன காலம் முழுவதுமாக நாயக்கரின் வாழ்வின் மீது கவிந்து அவரை காலவதியாக்குகிறது. இரண்டு காலகட்டங்களின், இரண்டு தொழில்களின், இரண்டு விழுமியத் தொகைகளின் போராட்டமாக இக்கதையை வாசிக்கும்போது நம்மால் நாய்க்கரின் இடத்தில் பலரின் முகத்தைப் பொருத்திப்பார்க்க முடியும்.



‘இருப்பு’ வளமான, அமைதியான சூழலில் இருந்து நெரிசலான திருப்பூருக்கு இடம்பெயர்ந்த பாட்டியின் கதை. நிலத்திற்கான ஏக்கம் என வேளாண் குடிக்கும் அதை உதறி நகருக்கு வந்த அடுத்த தலைமுறைக்கும் இடையிலான உறவை சொல்கிறது. இக்கதையில் முக்கியமான இடம் என்பது தான் விட்டுவந்த கைலாசபுரம் தன் நினைவில் மட்டுமே மாறாமல் இருக்க முடியும் எனும் நிதர்சனத்தை பாட்டி உணரும் புள்ளி. அதன் பிறகுதான் தயக்கத்தை மீறி திருப்பூரில் காலாற நடக்கத் தன்னை தயாராக்கிக்கொண்டார். சு.வேணுகோபாலின் ‘நிலம் எனும் நல்லாள்’ இதே சிக்கலை நாவலாக விரித்து எடுத்த ஆக்கம் என்பது நினைவுக்கு வந்தது.



‘விளிம்பில் நிற்கிறவர்கள்’ ஈயம் பூசும் அம்மாசியைப் பற்றிய கதை. அவனுக்கு துணையாக இருந்த மனைவி ஈயம் பூசுவதை விடுத்து கம்பனி வேலைக்கு செய்கிறாள். அதன் காரணமாக அவர்களுக்குள் நேரும் உரசல், அம்மாசி அவமானப்படுத்தப் படுகிறான். மணல்கடிகையில் தூக்கு போசியுடன் வேலைக்கு வரும் பெண்களைப் பற்றிய விரிவான சித்திரம் நினைவுக்கு வந்தது. இக்கதை அம்மாசியின் மீது சன்னமான பரிதாபம் ஏற்படுத்துவதோடு நின்றுவிடுகிறது. தொகுப்பின் பலவீனமான கதைகளில் ஒன்று.  ‘விடுதலை’ சிவமணி நாடார் சுதந்திர போராட்ட தியாகி. போராடிப்பெற்ற விடுதலையின் வெகுமதி பற்றிய கேள்விகளை அவருடைய வாழ்வு எழுப்புகிறது. தொகுப்பின் வலுவற்ற கதைகளில் ஒன்று எனத் தோன்றியது. ‘ரசவாதம்’ வெள்ளியங்கிரி வைத்தியரின் வாழ்வையும் வீழ்ச்சியையும் சொல்கிறது. இக்கதையை எனது தனிப்பட்ட அனுபவங்களுடன் இணைத்து வாசிக்க முடியும். மருத்துவர் மரணத்தின் தூதுவராக சுருங்கிப் போகிறார். வீழ்ச்சியின் அங்கலாய்ப்பு உள்ள கதை.



 “தேர்” ஒரு நல்ல கதைக்கான துவக்கத்தைக் கொண்டிருக்கிறது. கோபாலகிருஷ்ணன் இதுவரையிலான கதை சொல்லும் பாணியில் இருந்து விலகி ஒரு கதை சொல்லியாக பரிணாமம் கொள்கிறார். தேர் தன் வரலாறையும் கடந்தகால பெருமிதங்களையும் சொல்கிறது. ஒப்பிட்டு தற்கால வீழ்ச்சியையும் இழிநிலையையும் பற்றி புலம்பியபடி இருக்கிறது. ஏறத்தாழ ‘தேர்’ சென்ற காலத்து தாத்தாவைப் போல் எல்லாவற்றையும் பற்றி புலம்புகிறது. மேற்சொன்ன கதைகளின் இயல்பான நீட்சியாக ‘தேர்’ நிலைகொள்கிறது. சாராயம் காய்ச்சுபவன் அறங்காவலர் குழு தலைவன் ஆகிறான், கோவில் கணக்குகளை பார்க்கும் சேல்ஸ் டாக்ஸ் ஆபிசர் லஞ்சம் வழி தான் சேர்த்த செல்வத்தை கோவிலுக்குள் பதுக்கி வைத்திருந்ததைப் பற்றி அங்கலாய்க்கிறது, சினிமாவுக்கு பின்னாடி ஓடும் சனத்தை விமர்சிக்கிறது, இயக்குனரை நம்பி ஏமாந்து திரும்பிய சுசீலாவின் கதையை சொல்கிறது, தன்னருகே கஞ்சா விற்கிறார்கள் என நொந்து கொள்கிறது, தேருக்குள் விலைமாது நுழைந்து விடுவது தான் அதை பயங்கரமாக சீண்டுகிறது. இந்த கதையின் சிக்கல் என்னவென்றால், ஒரு அஃறினை கதை சொல்லும்போது கதை சொல்லலின் எல்லை வகுக்கப்படுகிறது. ஒரே இடத்தில் நின்றிருக்கும் தேர், வருடம் ஒருமுறை மட்டும் சுற்றி வரும் தேர் தன் பார்வை புலனுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளைப் பற்றி சொல்லும்போது கதையின் நம்பகத்தன்மையின் மீது கேள்வி எழுகிறது. இக்கதைக்கு என தேர்வு செய்த சட்டகத்திற்குள் கதை நிற்கவில்லை. எங்கேயோ போலீஸ் சாராயம் காய்ச்சுபவனை துரத்துவதையும், அறங்காவலர் குழுவோட தலைவர் பானைபானையாக காய்ச்சுவதையும் நேரடியாக சொல்லும்போது இது தேருக்கு எப்படித் தெரியும் என்றொரு கேள்வி எழவே செய்கிறது. ‘தேரை’ எங்கும் நிறைந்த   கதைசொல்லியாக கொள்ளமுடியாது.



இத்தனை விமர்சனங்கள் சொன்னாலும், இறுதியில் அந்த தேர் பற்றி எரியும் பொது மனம் பதைக்கிறது. பழம் பெருமிதங்களும், கம்பீரமும், பிரம்மாண்டமும் கொண்ட தேர் இறுதியில் பற்றி எரிகிறது. ஏறத்தாழ இந்த ஆறு கதைகளும் பற்றி எரிவதாற்கு முன்பு தேர் கொடுக்கும் வாக்குமூலத்தைப் போலத்தான். இக்கதைகள் எழுத்தாளர் பாவண்ணனின் புனைவுலகிற்கு நெருக்கமானதாக தோன்றியது.



தமிழ் சிறுகதை மரபு வளமானது. இத்தொகுதி 2000 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பின்னர் வாசிக்கும்போது இத்தொகுதி என்னவிதமான அனுபவத்தை அளிக்கிறது? சிறுகதை தொகுப்பு வெளிவந்த காலத்தில் பேசுபொருள், பேசும் முறை சார்ந்து முன்னோடித் தன்மை கொண்ட படைப்புகள் காலப்போக்கில் அதே வரிசையிலான அதே மாதிரியான படைப்புகளால் பின்னுக்குத் தள்ளப்படுவது உண்டு. பிற்கால ஆக்கங்கள் கலைரீதியாக புதிய உயரங்களை எட்டும்போது முன்னோடி முயற்சிகள் எனும் பேருக்கு அப்பால் எதுவும் நிலைப்பதில்லை. முன்னோடி முயற்சிகள் பரிசோதனை அளவில் நின்றுவிடுவதும் உண்டு. முன்னோடி எனும் பதத்திற்கு அப்பால் வேறு சிலவும் காலாதீதமாக ஒரு ஆக்கம் நிலைபெற தேவையாய் இருக்கிறது. இன்றும் புதுமைபித்தனின் ‘சிற்பியின் நரகம்’ ‘கபாடபுரம்’ போன்ற கதைகள் வாசகனுக்கு சவாலாக இருக்கிறது. இத்தொகுதியில் முன்னோடி முயற்சி எனும் அடையாளத்திற்கு அப்பால் நிலைபெறக்கூடிய கதைகள் என குறைந்தது மூன்று கதைகளையாவது சொல்லலாம். நாவல்கள், சிறுகதைகள், மொழியாக்கங்கள், கட்டுரைகள் என கிளைபரப்பி விரியும் எம். கோபாலகிருஷ்ணனின் படைப்புலகத்தின் முதல் விதைகள் இத்தொகுதியில் காணக்கிடைக்கின்றன.

No comments:

Post a Comment