Thursday, June 11, 2020

வேரும் கனியும் – 2 : லோசாவை முன்வைத்து – நரோபா

பதாகையில் வெளி வந்தது. முந்தைய பகுதியின் தொடர்ச்சி. 



படைப்புத்திறன் அளிக்கும் அழுத்தம், அதை விட்டு வெளிவர உள்ள வழிமுறைகள், எழுத்தாளனின் பொறுப்பு இவை எப்போதும் பேசச் சுவையானவை. மரியோ வர்கோஸ் லோசா எழுதிய ‘Letter to a Young Novelist’ எனும் நூலை வாசித்து கொண்டிருக்கிறேன். இளம் எழுத்தாளருக்கு லோசா எழுதும் கடிதங்களே இத்தொகுப்பு. ‘நாவல்’ எனும் வடிவம், அதன் சவால்கள் மற்றும் கூறுகளை லோசாவின் கடிதங்கள் விவாதிக்கின்றன. அத்துடன் பொதுவாக எழுத்தைப் பற்றியும் படைப்பாற்றல் பற்றியும் பேசுகின்றன. எழுத்து, எழுத்தாளன் பற்றி பேசும் லோசாவின் புத்தகத்தில் உள்ள முதல் கடிதத்தை மட்டும் கொஞ்சம் விரிவாக எழுதலாம். பிற கடிதங்கள் நாவல் எழுதும் முறைமை பற்றி விவாதிக்கின்றன.

எழுத்தின் பயன்மதிப்பு என்ன எனும் கேள்விக்கு லோசா, எழுத்து அளிக்கக்கூடிய இன்பமே அதன் பயன்மதிப்பு என்கிறார். எழுத்தே தனக்கு வாய்த்த ஆகச்சிறந்த நிகழ்வு என எழுத்தாளன் தன் உள்ளத்தின் ஆழத்தில் உணர்கிறான். எழுத்தையே தனது வாழ்க்கை முறையாக ஏற்கிறான். பிற அங்கீகாரங்கள் எல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஒருவன் எழுத்தாளன் ஆவதற்கு விதியோ கடவுளின் அருளோ அல்லது மரபணு அமைப்போ காரணம் என அவன் நம்புவதில்லை, எனினும் சார்த்தர் முன்வைப்பது போல் அது முழு சுய தேர்வு மட்டுமே என்பதிலும் தனக்கு உடன்பாடில்லை என்கிறார் லோசா. சுய தேர்வு முக்கியம்தான், ஆனால் அடிப்படையில் எழுத்தாளன் ஆவதற்கான சில அகச்சாய்வுகள் பால்ய பருவத்திலோ வளரிளம் பருவத்திலோ தென்படும் என்கிறார் அவர். விதவிதமான மனிதர்களை, சூழல்களை, நிகழ்வுகளை, வெவ்வேறு உலகங்களை அவர்கள் கற்பனை செய்வார்கள். இப்படியான கனவுள்ளவர்கள் பெரும்பான்மையினர் நிகழ் வாழ்வை துறந்து கற்பனையுலகில் வாழ்ந்து கதை படைப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. இங்குதான் சார்த்தர் முன் வைப்பது போல், சுய தேர்வு செயல்படுகிறது. கனவுள்ளம் கொண்டவர்களில் வெகுச் சிலரே தங்களை எழுத்தாளர்களாக ஆக்கி கொள்கிறார்கள் என்ற முடிவுக்கு வருகிறார் லோசா.

ஏன் ஒருவன் கதை புனைய வேண்டும்? இந்தக் கேள்விக்கு ‘எழுத்து என்பதே வாழ்வுக்கு எதிரான கலகச் செயல்பாடு’ எனும் கருத்தை முன்வைக்கிறார். நிகழ் வாழ்க்கையின் போதாமைகளுக்கு எதிராக நிகர் வாழ்வை படைக்கிறான் எழுத்தாளன். பல எழுத்தாளருக்கு இது கலகம் என்றொரு பிரக்ஞைகூட இருக்காது. அப்படிச் சொன்னால் அந்த எழுத்தாளரேகூட மறுக்கலாம். இதைப் படிக்கும்போது எனக்கு சட்டென அசோகமித்திரன் நினைவுக்கு வந்தார். அவரிடம் போய் ‘நீங்கள் ஒரு கலகக்காரர்’ எனக் கூறினால், அதை அவர் ஏற்க மாட்டார்.

மேலும் லோசா, எழுத்து அதை பயின்றவனுக்கு சுகமும் நிறைவும் அளிப்பதில்லை என்கிறார். நிகழ் வாழ்வின் மீதான தீவிர அதிருப்தியின் விளைவாக புனைவுகள் விளைவதால் புனைவுகளும்கூட அசவுகரியங்களுக்கும் அதிருப்திகளுக்கும் காரணமாய் இருக்கின்றன. இந்நிலை எல்லோருக்கும் பொருந்த வேண்டும் என்பதில்லை, நவீனத்துவத்தின் வழியாக நாமடைந்த சிந்தனை போக்குதான் இது எனும் பார்வையை முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

பதினெட்டாம் நூற்றாண்டில் ‘அழகு’ குறித்து நிலவிய கருத்தியல் உருவாகக் காரணமாக இருந்த ஐரோப்பிய பெண்கள் சுய தேர்வாக நாடாபுழுக்களை (tapeworm) உண்டு உடல் மெலிந்து பலியானார்கள், எழுத்தாளனும் அப்படித்தான் என்கிறார் லோசா. எழுத்தை தனது ஊடகமாக தேர்ந்தவர்கள் படைப்பாற்றல் எனும் எஜமானனின் ஏவலாட்கள் மட்டுமே என்கிறார். உடலுக்கு உள்ளிருந்து எல்லாவற்றையும் உண்டு கொழுக்கும் நாடாப்புழுக்களை போல் எழுத்தாள அகத்தின் உள்ளிருக்கும் படைப்பாற்றல் அவனது அனுபவங்கள் எல்லாவற்றையும் உண்டு செரித்து அவனை அழித்து வளர்கிறது என்று எழுதுகிறார் அவர். பிரம்மராஜன் , மிரோஸ்லோவ் ஹோலுப் கவிதைகளுக்கு எழுதிய முன்னுரையில் ஒரு மேற்கோள் சுட்டுகிறார் “Poetry is so important, but I don’t know what for”. படைப்பூக்கம் தன்னை மீறிய ஒன்று என்பது ஏறத்தாழ அனைத்து எழுத்தாளர்களும் ஒப்புகொள்வதாகவே இருக்கிறது.

சதத் ஹசன் மண்டோ, ‘நான் ஏன் எழுதுகிறேன்?’ என்றொரு சிறிய கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் எப்படி தான் குடிக்கு அடிமையோ அதே போல் எழுத்துக்கும் தானொரு அடிமை என்கிறார். ‘எழுதாதபோது நிர்வாணமாக இருப்பது போல், குளிக்காமல் இருப்பது போல், குடிக்காமல் இருப்பது போல் இருக்கிறது’ என்கிறார் அவர்- “பெரிய கல்வித் தகுதி இல்லாத நான் இக்கதைகளை எப்படி எழுதி இருக்க முடியும்? இந்த கதைகளின் ஆபாசங்களுக்கு சிறை செல்ல வேண்டியிருக்கும். இக்கதைகள் தங்களை தாங்களே எழுதி கொள்கின்றன… நான் எழுதும் கதைகள் என் மனதிலோ சிந்தையிலோ இருப்பதில்லை. அவை எப்போதும் எனது பாக்கெட்டில் கவனிப்பாரற்றுக் கிடக்கும்…. அந்த வகையில் நான் என்னை எந்த அளவுக்கு எழுத்தாளன் என நம்புகிறேனோ அதேயளவு பிக்பாக்கெட்காரன் என்றும் கருதுகிறேன். சொந்த ஜெப்பியிலேயே களவாடி அதன் உள்ளடக்கப் பொருட்களை உங்களுக்கு அளிப்பவன்… என்னைப்போல் ஒரு முட்டாளை நீங்கள் பார்த்ததுண்டா?”

லோசா படைப்பாற்றலை நோய்மையுடன் இணை வைப்பதன் வழியாக இரண்டு கருத்துக்களை முன்னிறுத்துகிறார். எழுத்துக்குத் தன்னை முழுமையாக அளிப்பது மற்றும் எழுத்தின் வெம்மையில் உருகி அழிவது. சென்ற கட்டுரையில் பேசியதுதான், எழுத்துக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வது கீழை நாடுகளின் ஆன்மீக மரபுடனும் எழுத்தாற்றலுக்கு பலியாவது நவீன தனிமனித வாதத்துடன் பொருந்துவதாகவும் தோன்றுகிறது. எழுத்தை எஜமானனாக ஏற்க வேண்டும் என்பது சரி, ஆனால் அதன் வெம்மையில் உருகி அழிய வேண்டும் என்பது எழுத்தாள பிம்பத்தைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட நவீன கால ‘கற்பனாவாத’ பிம்பம் என்றே எனக்குப் படுகிறது.

சரி, எழுத்தாளனின் பொறுப்புதான் என்ன? “படைப்பு எழுத்தாளன் வழியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது எனில் இதில் அவனுடைய பொறுப்பென்ன எனும் கேள்விக்கு விடை சிக்கலானதே. எழுத்தின் உன்னதத்திற்கு பொறுப்பேற்கவில்லை எனில் அதன் சிக்கல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டியதில்லை. ஆனால் உன்னதத்திற்கு பொறுப்பேற்கும்போது, ‘ஆய்வு’ செய்யப்பட்டு எழுதப்பட்டதன் உண்மைக்கு புறம்பான அம்சம் சுட்டிக் காட்டப்பட்டால் அதை படைப்பூக்கத்தின் பகுதியாக ஆக்கி பொறுப்பை துறந்து விட முடியுமா? நவீன எழுத்தாளனின் மிக முக்கியமான சிக்கல்களில் இதுவும் ஒன்று என தோன்றுகிறது,” என்று எழுதியிருந்தேன்.

லோசா படைப்பை ஒரு வசதிக்காக இரண்டாய் வகுத்துக் கொள்கிறார்- ‘கருப்பொருள்’ (theme) ‘வெளிப்பாடு ’(presentation- style). பல்வேறு எழுத்தாளர்கள் ஒரே கருப்பொருளை எழுதி இருக்கிறார்கள். ஒரே கருப்பொருள் வெவ்வேறு காலகட்டங்களில் மீண்டும் மீண்டும் எழுதப்படுகிறது. அதில் பிழை ஏதுமில்லை, ஏனெனில் அதுவே எழுத்தாளனுக்கு வாழ்க்கையால் அளிக்கப்பட்டது. ஆனால் அது வெளிப்படும் முறைக்கு எழுத்தாளனே முழுப் பொறுப்பு என்கிறார். புனைவு என்பதே அடிப்படையில் ‘பொய்’ தான் எனும்போது எழுத்தாளனின் நம்பகத்தன்மை என்பது தனக்கு உதித்த கருப்பொருளுக்கு அவன் நியாயம் செய்தானா என்பதைப் பொறுத்தே இருக்கிறது என்ற முடிவை அடைகிறார் லோசா. எழுத்தாளன் எங்கோ அடைந்த அனுபவத்தின் சாரத்தை கதைக்குள் ஒளித்து வைக்கிறான் என்பதை மனதில் கொண்டு லோசா எழுத்தாளனின் படைப்பூக்கச் செயல்பாட்டுக்கு சுவாரசியமான பதத்தைச் சூட்டுகிறார்- “backward stripping”.

ஆம், புனைவு என்பது ஆழ்ந்த உண்மையை மூடியிருக்கும் பொய். வரலாற்றின் மறுபக்கம். எவையெல்லாம் நிகழவில்லையோ அவற்றின் வலைப்பின்னல்.

No comments:

Post a Comment