Thursday, June 25, 2020

அஞ்சலையும் கங்கணமும்

அண்மையில் மாடியில் வீடு கட்டி இடம்பெயர்ந்தோம். வாசிக்கவும், எழுதவும் தோதாக ஒரு நூலக அறை கட்டியிருக்கிறோம். புத்தகங்களை அங்கு அடுக்குவதற்காக சரி பார்த்தபோதுதான் கவனித்தேன். வாங்கிய நூல்களில் அறுபது சதவிகிதத்திற்கு அதிகமானவற்றை வாசிக்கவில்லை என்பதை. மேலும் தமிழில் நான் இதுவரை வாசித்தே இராத எழுத்தாளர்கள் அதிகமில்லை என்றாலும் கூட சில முக்கியமானவர்களை விடுபட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். இந்த வேகத்தில் வாசித்தவை தான் கண்மணி குணசேகரனின் 'அஞ்சலை' மற்றும் பெருமாள் முருகனின் 'கங்கணம்'.
'அஞ்சலையை' ஒரு பெண்ணின் அல்லது காலகாலமாக பெண்களின் வாழ்வை பாடுகிற காதை என சொல்லலாம். 'கங்கணம்' திருமண வாழ்வில் நுழைய முடியாமல் தவிக்கும் ஆணின் வாழ்க்கையை பேசுகிறது. அஞ்சலை பேசும் சிக்கலுக்கு தொல் நெடுங்கால வரலாறு உண்டு என்றால் கங்கணம் நவீன வாழ்வு கொண்டு வந்து சேர்த்திருக்கும் சிக்கலை பேசுகிறது. 

இரண்டு கதைகளுக்கும் உள்ள பொது சரடுகள் என சிலவற்றை சொல்லமுடியும். மனிதன் ஒரு பகுத்தறிவற்ற ஜீவன். இழுபடும் விசைகளுக்கு ஆட்படுவது மட்டுமே அவனால் இயலும் எனும் தத்துவ பார்வையை தான் இரண்டும் கொண்டிருக்கின்றன. தளைகளை அறுத்து எறியும் முனைப்பில் மேலும் மேலும் என சிடுக்குகளுக்குள் சிக்குகிறான். திருமணத்தை செய்தே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் மாரிமுத்து அவன் எண்ணியது போல் திருமண வாழ்க்கை அத்தனை எளிதானதல்ல என்பதை பந்தத்திற்குள் நுழைவதற்கு முன்னே புரிந்து கொள்கிறான். பிழை என தெரிந்தும் வயதான கிழவிக்கு சாராயத்தை ஊற்றி கொடுத்து அவளுடைய மரணத்திற்கு காரணமான குற்ற உணர்ச்சி அவனை வதைக்கிறது. வேலைக்காரரான குப்பன் கிழவி சேகரித்த பணத்திலிருந்து ஒரு பகுதியை தனக்காக எடுத்து கொண்டு, தயக்கங்களை மீறி  அதற்குரிய நியாயங்களை ஏற்படுத்தி கொள்கிறான். நாவலின் உயிர்ப்பான பகுதிகளில் ஒன்று எனமாரிமுத்து-ராமன் நட்பையும், மாரிமுத்து- செல்வராசு அன்பையும் சொல்லலாம். இரண்டிலும் முரண்கள் சுணக்கங்கள் என எல்லாமும் உண்டு. ராமன் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தன்னுடைய சாதி அடையாளத்தை கொண்டு தன்னை விட மேம்பட்ட படிநிலை சாதியான மாரிமுத்துவின் சாதியின் மீது கொடுக்குகளை இறக்குகிறான். ஆனால் தனிப்பட்ட நட்பு எங்கும் கீழிரங்குவதே இல்லை. செல்வராசுக்காக நிலத்தை விட்டுகொடுக்க தயாராக இருக்கிறான் மாரிமுத்து ஆனால் பேரத்தில் அதிக நிலத்தை பெற்றுகொள்கிறான். அவனுடைய மனத்தாங்கலை சமன் செய்ய ராமனுக்காக விட்டு கொடுக்க நினைத்த நிலத்தையும் அவனுக்கே அளிக்க தயாராக இருக்கிறான்.  நாவலின் தீவிர புள்ளி  என்பது பாட்டி பெண்குழந்தையை 'கவுத்தி போட்டு' கொன்றதையும், பாலுடன் நெல்லு கொடுத்து கொல்வதையும் சொல்லும் தருணம் தான் அதை பெருமாள் முருகன் இயல்பாக சொல்லி செல்கிறார். கவுண்டர் சாதியின் வாழ்வியலை சொல்லும்போதே இயல்பாக அதன் மீதான விமர்சனத்தையும் பதிவு செய்கிறார். . 

அஞ்சலைக்கு ஒரு அநீதி நடக்கிறது. ஆனால் அதற்கடுத்து நிகழும் இன்னல்களுக்கு அவளால் எதிலும் எங்கும் அமையாமல் இருக்க முடிவதே. நாவளுள் வாசகராக இடை புகுந்து 'செத்த சும்மா இரேன்மா..புண்ணியமா போகும்' என சொல்ல தோன்றுகிறது. இறுதியில் அவளுக்கு அவளுடைய அன்னை என்னவாக இருந்தாலோ அவளுக்கு அவள் எதை  இழைத்தாலோ அதையே அஞ்சலை தன் மகளான வெண்ணிலாவிற்கு இழைக்கிறாள். நாவலின் உச்ச தருணங்களில் ஒன்று என அஞ்சலையின் அம்மா பாக்கியம் கன்றுக்குட்டியை திரும்ப ஓட்டிச்செல்லும் தருணத்தை சொல்லலாம். பிழைத்து கொள்ளட்டும் என கொடுத்தனுப்பிய கன்று குட்டியை திருட்டு கன்றுகுட்டி என வாதிட்டு அபகரிக்கும் முயற்சியின் போது ஒற்றை ஆளாக அதை ஒட்டிக்கொண்டு போவாள். ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக எரிச்சலுடன் இருக்கும் மண்ணாங்கட்டி கணேசனுடனே திரும்பி சேர்ந்து வாழ்ந்து பிள்ளைகளை பெறுகிறாள். இன்னொரு திருமணத்தில் பிறந்த நிலாவின் மீது கணேசனுக்கு ஒவ்வாமை. ஆனால் அதையும் மீறி நிலாவின் சடங்கு நிகழ்விற்கு வருகிறான். தடம் தெரியாமல் திரும்பியும் செல்கிறான்.  

man is an irrational being என்பது ஒரு யுங்கிய வரி. இவ்விரு நாவல்களும் அதற்கு சான்றாக இருக்கின்றன. ஜார்ஜ் சாண்டர்ஸ் ஒரு நேர்காணலில் சொல்கிறார்- உள்ளதையுள்ளபடி எழுதினாலே இயல்பாக அபத்தத்தை தான் சென்றடையமுடியும்.' எழுத்தாளர்கள் தங்களை மறைத்துக்கொண்டு கூரியநோக்கில் வாழ்க்கையின் யதார்த்தத்தை எழுதும்போதே அது  அபத்தத்திலேயே முட்டிக்கொள்ள முடியும்  என்பதற்கு இவ்விரு நாவல்களையும் உதாரணமாக சொல்லலாம். அதிலும் அஞ்சலை கங்கணத்தை காட்டிலும் மேலான ஆக்கம் என்பது என் அவதானிப்பு. கங்கணம் நாவலின் சிக்கல்,  ஆசிரியர் கூற்றாக வரும் சிந்தனை தெறிப்புகள்/ தத்துவ அவதானிப்புகள். அவை தொடக்கத்தில் ஒருவித மனவிலக்கத்தை அளித்தன. அதுவும் மாரிமுத்துவின் பாத்திர சித்தரிப்பிற்கு பொருந்தாத தத்துவ சிந்தனைகள் எனக்கு உறுத்தலாக இருந்தது. ஆனால் நாவல் செல்லச்செல்ல அவற்றின் தாக்கம் பெரிதாக தொந்திரவு செய்யவில்லை. இரண்டு நாவல்களுமே விவசாயத்திலிருந்து வெளியேறி தொழில்களுக்கு செல்லும் சித்திரத்தை அளிக்கின்றன. கங்கணம் நாவலில் ரிக் வண்டி ஓட்ட செல்கிறார்கள். அஞ்சலையில் டைல்ஸ் தொழிற்சாலைக்கு செல்கிறார்கள். இரண்டிலும் விவசாயத்தை காட்டிலும் அதிக பொருளை ஈட்டி திரும்புகிறார்கள். ஆனால் அதற்கு உடல்நிலையை விலையாக கொடுக்க வேண்டி இருக்கிறது. 

மருத்துவர்களில் இருவகையினராக பிரிக்க முடியும். முதல் வருடத்திலேயே அந்த பிரிவினை புலப்பட்டுவிடும். உடற்கூறியல் (anatomy)மீது ஆர்வம் உள்ளவர்கள் உடலியங்கியல் (physiology) மீது ஆர்வமுள்ளவர்கள். உடற்கூறியல் ஆர்வம் மிகுந்தவர்களுக்கு நல்ல நினைவாற்றல்  இருக்கும். அவர்கள் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களாக திகழ்வார்கள். உடலியங்கியல் ஆர்வமுள்ளவர்கள் நல்ல கிளினிக்கல் மருத்துவர்களாக திகழ்வார்கள். அவர்களுக்கு கோட்பாடுகள் மீதும், மேல் தெரியும் அறிகுறிகளை கொண்டு ஆழத்தில் என்ன நிகழ்கிறது என துப்பறிவதிலும் பெரும் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். வெகு சிலர் இவ்விரண்டின் சம கலவையில் உருவாகி வருவார்கள். இந்த அளவுகோலை இலக்கியத்திலும் போட்டு பார்க்க முடியும் என தோன்றியது. பெருமாள் முருகனும், கண்மணி குணசேகரனும்  தேர்ந்த உடற்கூறியல் எழுத்தாளர்கள் என சொல்லலாம். 


No comments:

Post a Comment