Thursday, June 4, 2020

தந்தையைக் கொல்ல ஒரு பனிக்கத்தி - குறுங்கதை

பதாகையில் வெளியான குறுங்கதை. மீள்பிரசுரம் 


பூமியின் நிழல் இருளாக கவிந்த, துணை வரும் நிழலும்கூட கைவிட்டு அகன்ற அந்தியின் காரிருளில் தனித்து நடக்கையில், அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்.  உடலற்றவர்கள். அல்லது உடலை புதைத்து வைத்துக்கொண்டு தங்கள் நிழலை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அனுப்பியவர்கள்.

நிழல்களுக்கு குரல் உண்டு. ‘உன் தந்தையைக் கொல்’, ரகசிய கிசுகிசுப்பாய் காதருகே முணுமுணுத்தவன் உடல் மெலிந்தவனாக இருக்க வேண்டும். ரகசியங்களை மறுப்பது அத்தனை எளிதில்லை. அதற்கு நாம் வேறோர் ரகசியத்தை அறிந்திருக்க வேண்டும். ‘தந்தையைக் கொல்ல ஆர்வமில்லை’ என்று முணுமுணுத்தேன்.

அழுகிய பழங்களும், பொறியில் சிக்கி  மரித்த எலியும், தூமைத் துணிகளும், இன்னும் பல நூற்றாண்டு கால குப்பைகளும் குமையும், வெள்ளியாக இருளில் மினுங்கிய, நகராட்சியின் தகர குப்பைத் தொட்டிக்கு என்னை இட்டுச் சென்றார்கள்.

உள்ளிருந்து கிளறிக் குடைந்து தந்தையின் வயிற்றில் சொருகி குடலைச் சரிக்க எனக்கொரு  பனிக்கத்தியை உதிரம் காய்ந்து பழுப்பேறிய துணியில் பொதித்துக் கொடுத்தான், ஊமையன் ஒருவன்.

எரியாத மின்விளக்கு கம்பத்தின் பாதி உயரத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. அவன் நெடியவனாக இருக்க வேண்டும். “ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கோடான கோடி தந்தைகளின் குருதி குடித்த கத்தி’, என்றவனின் குரலில் உறுதி தொனித்தது.

உறுதியான குரல்கள் ஐயமற்றவை. அல்லது ஐயத்தை மறைக்கக் கற்றவை. ஆகவே ஆபத்தானவை. நாம் அவை முன் சென்று மண்டியிட்டு எமை வழி நடத்துக, எனக் கோரத் தகுந்த குரல்கள். எண்ணெய் பிசுக்காக அக்குரல் மனதை மூடி பரவிப் படியச் செய்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் பழக்கம். கீழ்படிந்துவிட வேண்டியதுதான். ஏதோ ஒன்று பரப்பைக் கீறிக் கிழித்து வெளிவந்தது. உறுதியான குரலில் அவனிடம், “எப்படியும் தந்தைதான் இறந்து விடுவாரே” என்றேன்

முழங்காலுக்குக் கீழேயொரு நகைப்பொலி- ஏறத்தாழ கழுதைப்புலியின் கனைப்பை ஒத்தது. “ஆம். ஆனாலும் அது நம் கையால்தான் நிகழ வேண்டும்,” என்று சொல்லிச் சிரித்தான் சித்திரக் குள்ளன்.

பகடி கல்லறையில் அறையப்படும் கடைசி ஆணி. நாம் தனித்திருக்கையில் மட்டும் வெளிப்படும் நச்சுப்பல். பகடி நம்மை அச்சுறுத்துவது. தனிமைப்படுத்துவது. பகைக்கு பணியாதவரும் பகடிக்கு பணிவார். வியர்த்திருந்தது. லேசாகச் சிரித்துக்கொண்டே அவனிடம் சொன்னேன்.

‘மேலும்… நாளை நானுமொரு தந்தையாவேனே’

சொல்லி முடித்த நொடியில் மூக்கை உரசியபடி ஆக்ரோஷமாகக் கத்தினான் ஒரு தடியன், “ஆம். அப்போது உன் குடலும் சரிக்கப்படும்”
“கண்ணே, உன் தந்தையை நீ கொல்லத்தான் வேண்டும், எனக்காகவேணும், நான் பட்ட துயரங்களை நீ அறிவாய்” எனக் கெஞ்சியது ஒரு பெண் குரல். உடல் விதிர்த்தது. அது அன்னையின் குரல். ஒருவேளை உரக்க ஆணையிட்டிருந்தால் அதையே தவிர்த்திருக்கலாம். ஆனால் இந்தக் குரல் இரைந்து கேட்கிறது. அறுக்க முடியாத பிணைப்பு மறுக்க முடியாமல் ஒப்புக்கொள்ள செய்கிறது. கண்களில் பெருகிய நீர் கன்னத்தில் உருண்டு நிலத்தை அடைந்தது. கத்தியை இறுகப் பற்றினேன். விம்மியுடைந்த குரலில், “உன் வஞ்சத்தை நான் சுமக்கிறேன். ஆனாலும் எதன் பொருட்டும் என்னால் அவரைக் கொல்ல இயலாது”, என்றேன்.

என் கையில் கனத்து குளிர்ந்த பனிக்கத்தியை மீண்டும் வாய் பிளந்து கிடக்கும் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தேன். பெருமூச்சுகளும், உச்சு கொட்டல்களும், முனகல்களும் எழுந்தன. நீள் கையன் தொட்டியில் துழாவிக் கொண்டிருந்தான். அதற்குள் அது எங்கோ ஆழத்தில் சென்று மறைந்திருக்க வேண்டும்.

“அட…முட்டாளே” வாய்விட்டுக் கூவினாள் அந்தப் பெண்..

சிற்றகலாக மஞ்சள் ஒளியுமிழும் ஒற்றை குண்டுவிளக்கை சூடிய என் அறையை கனவு கண்டபடி அங்கிருந்து விலகினேன்.

எனை எப்போதும் காக்கும் அவர்கள் அறியாத ரகசியம் ஒன்றுண்டு.  தந்தையைக் குத்திக் கிழிக்கும் ஆவேசம் புகும் ஒவ்வொரு முறையும், தந்தையின் ஆசி இவ்வாழ்வு என்றெண்ணிக் கொள்வேன். அப்போது நீலச் சுவற்றில் ஆடும் மரச்சட்டத்தின் வெற்றுக் கண்ணாடியில் தந்தையின் உருவத்திற்கு மேலும் ஒரு பிக்சல்  கூடித் துலங்குகிறது
x

1 comment:

  1. தொடக்கத்தில் இருந்த பீதி, கடைசி வரைக்கும் வந்துக்கொண்டே இருக்கிறது....

    ReplyDelete