Tuesday, June 9, 2020

திருமிகு. பரிசுத்தம்- குறுங்கதை

(பதாகையில் வெளிவந்த குறுங்கதை. மீள் பிரசுரம்)

ஒவ்வொரு முறையும் இது இப்படிதான் நிகழ்கிறது. எப்போது வரிசையில் நின்றாலும், எங்கிருந்தோ வரும் நபர் அவருக்கு முன் உரிமையுடன் வந்து நிற்பார்.

பதவி உயர்வு கிடைக்காததற்கும், கார் வாங்காததற்கும், மனைவியுடன் சேர்ந்து மாமனாரின் சொத்துக்கு மல்லுக்கு நிற்காததற்கும் என்ன காரணமிருக்க முடியும் என ஆராய்ந்து பார்த்ததில் அவருக்கு ‘வெல்லும் விசை’ இல்லை எனக் கண்டறிந்து சொன்னார் உளவியல் நிபுணர். ஆகவே ‘வெல்லும் விசை பெருக்கி ஆலோசகர்’ திருமிகு. பரிசுத்தத்தை அவரது அலுவலகத்தில் சந்திக்க வந்தார்கள்.

திருமிகு. பரிசுத்தம் எழுதிய “வெறுப்பெனும் ஏணியில் ஏறி வெற்றிக்கனியை ருசி” எனும் புத்தகம் மாண்டரின், பைசாசிகம், ப்ராக்ருதம், பாலி, மைதிலி, சமஸ்க்ருதம், போஜ்புரி, உருது உட்பட 82 உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ட்யூஷனுக்கு விட வேண்டும் எனக் கோரிய பதின்ம வயது பெண்ணையும் அவள் தந்தையையும் கோரிக்கையின் நியாயத்தின் பொருட்டு வரிசையில் அவருக்கு முன் அமர இடமளித்தார். பின்னர் அவர்களுடன் ஒட்டிக்கொண்டு வந்த, சட்டைக்கு பொருந்தாத நிறத்தில் டை கட்டியிருந்தவரையும் அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பதில் அவர் மனைவிக்கு வருத்தம். “இத நிறுத்தத்தானே வந்திருக்கோம்” என முணுமுணுத்தாள்.

ஆனால், நொடிக்கு மூணு முறை செருமிக்கொண்டிருந்த அந்த முதியவர் அவர்கள் இருந்த நாற்காலிக்கு அருகே வந்தபோது அவள் அத்தனை கடுமை காட்டியிருக்க வேண்டிய தேவையில்லை. “இவருக்கு சுகர்… மயக்கம் வந்துடும்,” என்றாள் அவரைக் காண்பித்து. முதியவர் சற்று நேரம் செருமிவிட்டு வரிசையின் கடைசிக்குச் சென்றார்.

திருமிகு. பரிசுத்தம் அவர்களின் அறைக்குள் நுழைந்ததும் ஒரு புராதன நெடி நாசியில் நுழைந்தது.  திருமிகு. பரிசுத்தம் கார்ல் மார்க்ஸ், மாஜினி, முசோலினி, ஹிட்லர், புஷ், ஒபாமா, செங்கிஸ்கான், ஒசாமா மற்றும் நான்கைந்து அடையாளம் தெரியாத கனவான்கள் உட்பட பலருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சுவற்றை அலங்கரித்தன. பனிமலையில் வைகிங் உடையில் ஒரு மாமூத்தின் தலை மீது அவரும் அவருடைய சகாவும் கால் வைத்தபடி நின்றிருந்த புகைப்படம் அவருடைய நாற்காலிக்கு நேர் பின்னே மாட்டப்பட்டிருந்தது. அப்பழுக்கற்ற வெள்ளுடை அணிந்திருந்த திருமிகு. பரிசுத்தம், தனது கண்ணாடியை மூக்கின் மீது விரலால் தள்ளிவிட்டுவிட்டு, அவரது கோப்பை ஆராய்ந்து நோக்கினார். அவரது பெயரின் பொருட்டு வேறு பலரும் குழம்பியது போல், திருமிகு. பரிசுத்தமும் குழம்பியிருக்க வேண்டும்.

“இந்துவா? முசல்மானா?’

“பவுத்தன்”

“ரொம்ப வசதி… குறைய ஒப்ஷன்ஸ் உண்டு” என்றார் தனது டைரியில் குறித்தபடி.

“கிரிக்கெட் பாப்பீகளா?”

“பாப்பேன்”

“ஆராக்கும் பிடிச்ச பிளேயர்?”

“இன்சமாமும் டிசில்வாவும்”

சற்றுநேரம் யோசித்த பின்னர் தனது கட்டை மீசையை நீவியபடி “எந்த சினிமா நடிகர பிடிக்கும்? ரஜினியா கமலா? இல்ல எம்ஜிஆர், சிவாஜி, விஜய், அஜித்… இப்புடி யார வேணாலும் சொல்லலாம்” என்றார்.

“மார்கன் ஃப்ரீமேன்”

மெல்ல டைரியிலிருந்து தலை தூக்கி கண்ணாடிக்கு மேலிருந்து நோக்கினார். அவர் மனைவியிடம் திரும்பி,

“உங்களுக்குள்ள சண்ட ஏதும் உண்டா?”

“நான் போடுவேன், ஆனா அவர் எப்போதும் போட்டதில்ல… நகந்து போயிடவும் மாட்டார்… முழுசா திட்டுறத பொறுமையா கேட்டுட்டுதான் நகர்வார்” என்றாள்.

“வயசு பருவத்துல ஏதும் காதல் தோல்வி, விரக்தி, கோபம்? ஏதுமுண்டா?”

“அப்போ நான் அனுமார் உபாசகன்”

“அப்ப இந்த கல்யாணத்த பண்ணதுக்காக அப்பன் மேல கோபமுண்டோ?”

“இல்ல. அவரு நல்லதுக்குத்தான செய்வார்”

“ஆபீஸ்ல குற ஏதும் உண்டோ? மேலதிகாரியோட தொந்தரவு… சகாக்களோட பிணக்கம் ஏதும்?”



“நான் உண்டு என் வேலையுண்டுன்னு இருப்பேன் சார்”

“பேஸ்புக்ல உண்டோ?”

“இருக்கேன்”

முகம் பிரகாசமானது.

“என்ன செய்வீங்க?”

“தினமும் பூ படம், இல்லைன்னா அழகான குழந்தைங்க படம் போட்ட குட் மார்னிங், குட் நைட் மெசேஜ் போடுறதோட சரி”

திருமிகு. பரிசுத்தத்தின் முகத்தில் எரிச்சலின் ரேகை படர்ந்தது.

“சார் உங்க வண்டிய வேகமா இடிச்சிட்டு, இண்டிகேட்டர ஒடச்சிட்டு, இல்லன்னா கண்ணாடிய ஒடச்சிட்டு போறவங்க கிட்ட சண்ட போட்டதில்லையா?’ என்றார் சற்றே வேகமாக.

“இல்ல சார்… நான் நடந்துதான் போவேன்… நடந்துதான் வருவேன்”

“சில்லற தராம போகும்போது, பஸ்ல இடிக்கும்போதுகூட கடுப்பானதில்லையா?” அவருடைய குரல் மேலும் உயர்ந்தது. முகம் சிவந்து வியர்க்க எழுந்து நின்றார்.

“இல்லையே சார்… பாவம் அவுங்களுக்கு என்ன கஷ்டமோ”

வேகமாக எழுந்து அவரது சட்டையை உலுக்கியபடி, “எழவெடுத்தவனே, உனக்கு எது மேலையும் வெறுப்பே இல்லையா?”

அவரது மனைவியின் உடல் நடுங்க துவங்கியது.

“இல்லையே சார்” என்றார் பாவமாக.

அந்நொடியில் அறையிலிருந்த செவ்வொளி மறைந்து எங்கும் நீல நிறம் சூழ்ந்தது. திருமிகு. பரிசுத்தம் சட்டென ஒரு அழகிய பெண்ணாக உருமாறினார். “ஆதிமூலமே பரம சோதியே, உலகிற்கெல்லாம் காரணப்பொருளாய் இருப்பவனே… தீர்ந்தது எமது சாபம்,” என்று கூறிவிட்டு சாளரத்தின் வழியே வானத்தில் பறந்து கொண்டிருந்தவளை நோக்கியபடி திகைத்து அமர்ந்திருந்தார் அவர்.

No comments:

Post a Comment