Tuesday, January 7, 2020

மன்றம் நிகழ்வு

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரையில் 'மன்றம்' அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்ற சென்றிருந்தேன். கடந்த ஆண்டு மன்றம் அமைப்பு தொடங்கப்பட்டது. அப்போது இதன் நிறுவனர்களில் ஒருவரான வெங்கட்ராமனை சங்கீதா ஸ்ரீராம் அறிமுகப்படுத்தினார். சென்னையில் மூன்று நான்கு நிகழ்வுகள் நடத்தி இருக்கிறார்கள், பெங்களுரு மற்றும் கோவையிலும் நிகழ்வுகள் நடத்தி இருக்கிறார்கள். தமிழில் டெட் உரை போன்ற செறிவான முயற்சி என சொல்லலாம். துறை வல்லுனர்களை அழைத்து இருபது இருபத்தி ஐந்து நிமிடங்கள் பேச வைக்கிறார்கள். பார்வையாளர்கள் அதிகபட்சம் நூறு பேர் இருக்கலாம். உரைக்கு பின் சிறிய கேள்வி பதில் அமர்வும் உண்டு. யூ ட்யூபில் உரைகள் வலையேற்றப்படும். 'மன்றத்தை' நிறுவிய இன்னொருவர் மரகதவள்ளி. எங்கள் ஊர்க்காரர். எனது ஆசிரியரின் மகள், பள்ளியின் வகுப்பு தோழியின் மூத்த சகோதரி. இந்நிகழ்வில் தான் அவரை முதன்முறையாக சந்தித்தேன். மேடைகள் எனக்கு இப்போது எந்த பதட்டத்தையும் அளிப்பதில்லை. எதிர்கொண்டு பழகிவிட்டேன். ஜெயமோகன் முன் மேடையில் பேசுவது மட்டும் கொஞ்சம் பதட்டமளிக்கும் விஷயம். அதையும் கூட இப்போது ஓரளவு கடந்துவிட்டேன் என்றே சொல்ல வேண்டும். மரகதவள்ளி முந்தைய நாள் எனக்கு அழைப்பை வாட்சப் செய்தபோது சக பேச்சாளர்கள் குறித்து பெரிதாக எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை.

காலை மரகதவள்ளி குடும்பத்துடன் நானும் காரில் சேர்ந்துக்கொண்டு மதுரையை வந்தடைந்தேன். பத்து மணிக்கு எங்களைத் தவிர எவருமே இல்லை. எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு ஆட்கள் வர காத்திருந்தோம். சேம்பர் ஆப் காமர்சில் மாடி மெப்கோ அரங்கில் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனக்கு காந்தி குறித்து பேசுவதா அல்லது ஆயுர்வேதம் குறித்து பேசுவதா என்றொரு குழப்பம் இருந்தது. ஒருவழியாக ஆயுர்வேதம் குறித்தே பேசலாம் எனும் முடிவுக்கு வந்தேன். சமீபத்தில் தான் பாலசுப்பிரமணியம் முத்துச்சாமியின் 'இன்றைய காந்திகள்' வாசித்திருந்தேன். அதில் அரவிந்த் கண் மருத்துவமனை சார்ந்து எழுதப்பட்ட கட்டுரை எனக்கு மிகப்பிடித்த ஒன்று. 

எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் மற்றும் நண்பர் டாக்டர். ரவிச்சந்திரன் வந்திருந்தார்கள். எழுத்தாளர் சுசித்ரா வந்திருந்தார் என்று அறிந்து கொண்டேன். தாமதமாக துவங்கிய அரங்கில் முதலாவதாக பறவையியல் ஆர்வலர் ரவீந்திரன் பேசினார். மதுரை மற்றும் சுற்று வட்டாரத்தில் 281 வகை பறவை இனங்கள் உள்ளன என்றார். பறவைகளின் தமிழ் பெயர்கள், அவற்றின் வாழிட நெருக்கடிகள் என செறிவான உரை.

அடுத்ததாக அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனர் டாக்டர். வெங்கிடசாமியின் தங்கை டாக்டர். நாச்சியார் பேசினார். அரவிந்த் மருத்துவமனையின் செயல்பாடு குறித்து அவர் ஆற்றிய உரை உண்மையில் இப்போது வரை என்னை சிந்திக்க செய்தபடி இருக்கிறது. இதன் தாக்கம் நெடுநாள் இருக்கும் என்றே நம்புகிறேன். ஒரு நிறுவனம் நல்ல நோக்கத்திற்காக மக்களுக்காக தொடங்கப்பட்டால் அது மக்களால் நடத்தப்படும். அவர்கள் அதை தங்களுடையதாக ஏற்றுக்கொள்வார்கள் என்றார்.எங்களுக்கு தங்க பதக்கங்கள் பெற்றவர்கள் தேவையில்லை. நாங்கள் வேலைக்கு எடுக்கும் மனிதர்கள் சமூகத்துடனும் குடும்பத்துடனும் நல்லுறவில் இருக்கிறார்களா என்பதே எங்களுக்கு முக்கியம் என்றார். அபார மன எழுச்சி அளித்த உரை. ஆயுர்வேதத்தில் இப்படியான ஒன்றை எப்படிச் சாத்தியமாக்குவது என்பதை யோசித்து கொண்டிருக்கிறேன். தெரியவில்லை. 

அடுத்து பேசிய செந்தில்குமார் தொழில்நுட்ப வல்லுநர். பழங்குடி மக்களின் பேறுகால சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் ஒரு தொழில்நுட்ப கருவியை உருவாக்கியுள்ளார். செலவற்ற எளிய தொழில்நுட்பம்தான் ஆனால் நூதனமான பங்களிப்பு. அநேகமாக அவருக்கு என் வயதிருக்கலாம். ஆனால் அதற்குள்ளாக அவர் செய்திருக்கும் சாதனை அளப்பறியாதது. உணவு இடைவெளிக்கு பிறகு நான் பேச வேண்டும். முதன்முறையாக இத்தகைய ஒரு மேடையில் இருத்தலியல் கேள்விகளை கொண்ட அற்பனாக நின்று பேசுவது கூச்சத்தை அளிப்பதாக இருந்தது. காந்தியை செயல்வழியாக அல்ல அறிவார்ந்த தளத்திலேயே என்னால் அணுக முடிந்திருக்கிறது. இந்த நிகழ்வின் ஊடாக காந்தியை தான் நான் பல்வேறு பரிமாணங்களில் கண்டேன். எனக்கு பின் பாமயன் அறம் சார் வணிகம் பற்றியும் வேளாண்மை சமூகத்தை கட்டமைப்பது பற்றியும் பேசினார். இறுதியாக மதுரை துணை ஆணையர் லில்லி கிரேஸ் காவலர்- மக்கள் உறவு பற்றி செறிவான சிறிய உரை ஆற்றினார். எனது உரை விரைவில் வலையேற்றப்படும். 

நிகழ்விலிருந்து எனக்கு பெற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருந்தன. செறிவாக சரியான மனிதர்களை கொண்டு, உரிய நேரத்தில் சிதைவின்றி, உரிய தலைப்பில் நிகழ்ந்த உரைகள் என்பதால் மன்றம் அமைப்பின் மீது எனக்கு நம்பிக்கையும் மதிப்பும் கூடியது. அவர்கள் இதை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

https://www.youtube.com/channel/UCHoyxwXV_MwBgGCCcIJG2FQ  இத்தகைய முயற்சியை நண்பர்கள் ஆதரிக்க வேண்டும். 



No comments:

Post a Comment